இராவணன் இந்திரசித்தை அழைத்தல்
8441. கரன் மகன் பட்டவாறும், குருதியின் கண்ணன் காலின்
சிரன் நெரிந்து உக்கவாறும், சிங்கனது ஈறும், சேனைப்
பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும், பகரக் கேட்டான்;
வரன்முறை துறந்தான், ‘வல்லைத் தருதிர், என் மகனை!’
என்றான்.
கரன்மகன் பட்டவாறும் – கரனுடைய மகனான மகரக் கண்ணன்
இறந்த வகையினையும்; குருதியின் கண்ணன் காலின் சிரன் நெரிந்து
உக்கவாறும் – இரத்தாட்சன் என்னும் அரக்கன் (நளனது) காலினால்
சிரம் நெரிந்து உயிர்விட்ட வகையினையும்; சிங்கனது ஈறும் –
(பனசனால் ஏற்பட்ட) சிங்கனது முடிவினையும்; சேனைப் பரம்இனி
உலகுக்கு ஆகாது என்பதும் – (தனது) சேனைப் பாரம் இனி உலகில்
இல்லாமல் ஒழிந்ததென்பதையும்; பகரக் கேட்டான் – (தூதர்கள்
அறிந்து) சொல்லக் கேட்டவனாய்; வரன் முறை துறந்தான் –
நீதிநெறியினை நீங்கியவனாகிய இரவணன்; ‘வல்லைத் தருதிர் என்
மகனை’ என்றான் – ‘என் மகனை (இந்திரசித்தை) விரைவில்
அழைத்து வருவீராக’ என (அத்தூதரிடம்) கூறினான்.
——–
8442. ‘கூயினன், நுந்தை’ என்றார்; குன்று எனக் குவிந்த
தோளான்,
‘போயின நிருதர் யாரும் பொன்றினர் போலும்!’
என்றான்;
‘ஏயின பின்னை, மீள்வார் நீ அலாது யாவர்?’ என்னா,
மேயது சொன்னார், தூதர்; தாதைபால் விரைவின்
வந்தான்.–2-
‘கூயினன், நுந்தை’ என்றார் – (இராவணன் பணித்தவாறு
இந்திரசித்தை அணுகிய தூதர்கள்) ‘உமது தந்தையார் (உம்மை)
அழைத்தனர் எனத் தெரிவித்தனர்; குன்று எனக் குவிந்த தோளான்
– குன்று போலத் திரண்ட தோளை உடையவனான இந்திரசித்து;
‘போயின நிருதர் யாரும் பொன்றினர் போலும்!’ என்றான் –
‘(போருக்குச்) சென்ற அரக்கர்கள் யாவரும் இறந்து பட்டனரோ?’
எனக் கேட்டான்; ‘ஏயின பின்னை, மீள்வார் நீ அலாது யாவர்?’
என்னா – ‘(இராவணனால் இம்மனிதர் மீது) போருக்கு என ஏவின
பின்பு (பொருத பின் அப்போர்க்களத்தினின்றும்) மீண்டு திரும்பி
வருபவர் உன்னையல்லால் வேறு யார் இருக்கிறார்கள்?’ எனக் கூறி;
மேயது சொன்னார் தூதர் – (போர்க் களத்தில்) நிகழ்ந்ததனைத்
தூதர்கள் எடுத்துரைத்தனர்; தாதை பால் விரைவின் வந்தான் –
(அதனைக் கேட்ட இந்திரசித்தன்) தந்தையினிடத்தினில் விரைந்து
வந்தான்.
————
தந்தையைத் தேற்றி, இந்திரசித்தன் போர்க்களம் செல்லுதல்
8443.
வணங்கி, ‘நீ, ஐய! “நொய்தின் மாண்டனர் மக்கள்” என்ன
உணங்கலை; இன்று காண்டி, உலப்பு அறு குரங்கை நீக்கி,
பிணங்களின் குப்பை; மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை
கணங் குழைச் சீதைதானும், அமரரும் காண்பர்’ என்றான்.–3-
வணங்கி ‘நீ ஐய!’ “நொய்தின் மாண்டனர் மக்கள்” என்ன
உணங்கலை – (இந்திரசித்து, தன் தந்தையை) வணங்கி, ‘ஐயனே நீ
(வன்மையான) புதல்வர்கள் (பகைவரால்) இறந்தொழிந்தார்கள்’ என
வாடி வருந்துதல் தவிர்க; இன்று காண்டி – (எனது போர்த்திறனை)
இன்றே காண்பாய்; உலப்பறு குரங்கை நீக்கி, பிணங்களின் குப்பை
– அளவற்ற குரங்குச்சேனைகளை (உயிர்) நீக்குவதனால் (அவற்றின்)
பிணக்குவியலையும்; மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை – ஏனை
மனிதராகிய இராம இலக்குவரின் உயிர் நீங்கிய உடம்புகளையும்;
‘கணங்குழைச் சீதைதானும் அமரரும் காண்பர்’ என்றான் – காதணி
அணிபவளான சீதையும், தேவர்களும் காண்பார்கள்” என்று
கூறினான்.
—————
8444.
வலங்கொண்டு வணங்கி, வான் செல் ஆயிரம் மடங்கல்
பூண்ட
பொலங் கொடி நெடுந் தேர் ஏறி, போர்ப் பணை
முழங்கப் போனான்;
அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம்,
யானைக்
குலங்களும், தேரும் மாவும், குழாம் கொளக் குழீஇய
அன்றே.–4-
வலங்கொண்டு வணங்கி – (பின்பு தன் தந்தையை) வலம் வந்து
வணங்கி; வான்செல் ஆயிரம் மடங்கல் பூண்ட – வான் வழியாகச்
செல்ல வல்லதும் ஆயிரம் சிங்கங்கள் பூட்டப்பட்டதும்; பொலங்கொடி
நெடுந்தேர் ஏறி – பொன் மயமான கொடியினை உடையதுமான நீண்ட
தேரின் மேல் அமர்ந்து; போர்ப்பணை முழங்கப் போனான் – போர்
முரசம் முழங்கப் (போர்க்களம் நோக்கி இந்திரசித்து) புறப்பட்டுப்
போனான்; அலங்கல்வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம் –
(அவனுடன்) வெற்றிமாலை அணிந்த வாட்படை தாங்கிய அரக்கர்
சேனை அறுபது வெள்ளமும்; யானைக் குலங்களும் தேரும், மாவும் –
யானைக் கூட்டங்களும், தேர்களும், குதிரைகளும்; குழாம் கொளக்
குழீஇய – கூட்டமாகத் திரண்டு சென்றன.
—————-
8445.
கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, மாப் பேரி கொட்டி,
பம்பை, தார் முரசம், சங்கம், பாண்டில், போர்ப் பணவம்,
தூரி,
கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை, துடி, வேய், கண்டை,
அம்பலி, கணுவை, ஊமை, சகடையோடு ஆர்த்த அன்றே.–5-
கும்பிகை திமிலை செண்டை குறடு – கும்பிகை, திமிலை,
செண்டை குறடு; மாப்பேரி – பெரிய பேரிகை; கொட்டி – கொடு
கொட்டி; பம்பை, தார்முரசம், சங்கம் – பம்பை, தார் அணியப்
பெற்ற முரசம், சங்கம்; பாண்டில், போர்ப்பணவம், தூரி – கஞ்சதாளம், போருக்குரிய பணவம், தூரியம்; கம்பலி, உறுமை,
தக்கை, கரடிகை – கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை; துடி, வேய்,
கண்டை – உடுக்கை, மூங்கிலால் ஆகிய வங்கியம், கண்டை; அம்பலி,
கணுவை, ஊமை சகடையோடு ஆர்த்த – அம்பலி, கணுவை, ஊமை
சகடை இயங்கள் ஆரவாரித்தன.
போர் மேற்செல்லும் வீரர்களுக்குப் போர் வெறி ஊட்டுபவை
இவ்வியங்கள். இவை கவிஞர் காலத்தன எனக் கொள்ளவும்
இடமுண்டு. கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, பம்பை, பணவம்,
உறுமை, தக்கை, கண்டை, அம்பலி, கணுவை, ஊமை, சகடை என்பன
தோற்கருவிகள். சங்கம், தூரி, வேய் என்பன துளைக்கருவிகள்.
கொட்டி – கொடு கொட்டி என்னும் பறை. வேற் – மூங்கிலால் ஆகிய
வங்கியம் என்னும் துளைக் கருவி.
——–
8446.
யானைமேல் பறைசால் ஈட்டத்து அறை மணி ஆர்த்தது
ஆழி,
மான மாப் புரவிப் பொன்-தார்; மாக் கொடி கொண்ட
மானச்
சேனையோர் கழலும் தாரும், சேண் தரப் புலம்ப, மற்றை
வானகத்தோடும் ஆழி அலை என, வளர்ந்த அன்றே.–6-
யானை மேல் பறைசால் ஈட்டத்து – யானை மேல் வைக்கப்
பட்டுள்ள முரசுக் கூட்டத்துடன்; அறை மணி ஆழி ஆர்த்தது –
தேர்ச்சக்கரங்களில் மாறி மாறி ஒலிக்கின்ற மணிகளின் ஆர்ப்பும்;
மானமாப் புரவிப் பொன் தார் – தருக்குடன் கூடிய சிறந்த புரவிகள்
பூண்ட பொன்னாலாகிய கிண்கிணி மாலையும்; மாக்கொடி கொண்ட
மானச் சேனையோர் கழலும் தாரும் – பெரிய கொடிகளை ஏந்திய
குன்றாத மானமுடைய சேனை வீரர்களின் வீரக்கழலும், பொன்னரி
மாலையும் ஆகிய இவற்றின் ஒலிகள்; சேண் தரப் புலம்ப –
சேணளவும் சென்றொலிப்ப; மற்றை வானகத்தோடும் ஆழி
அலைஎன, வளர்ந்த – ஏனை வானிடமளவும் சென்று படரும்
கடலின் அலைகளைப் போன்று விரிந்து உயர்ந்தன.
————–
8447.
சங்கு ஒலி, வயிரின் ஓசை, ஆகுளி, தழங்கு காளம்
பொங்கு ஒலி, வரி கண் பீலிப் பேர் ஒலி, வேயின்
பொம்மல்,
சிங்கத்தின் முழக்கம், வாசிச் சிரிப்பு, தேர் இடிப்பு, திண்
கைம்
மங்குலின் அதிர்வு,-வான மழையொடு மலைந்த அன்றே.–7-
சங்கொலி – சங்கின் ஒலியும்; வயிரின் ஓசை – ஊதுகொம்பின்
ஓசையும்; ஆகுளி – ஆகுளியின் ஒலியும்; தழங்கு காளம் பொங்கு
ஒலி – காளம் என்னும் வாத்தியத்தினின்றும் மிக்குத் தோன்றுகின்ற
ஒலியும்; வரிகண் பீலிப் பேர் ஒலி – மயிற் கண் வரிந்த பீலியென்ற
வாத்தியத்தின் பேரொலியும்; வேயின் பொம்மல் – புல்லாங்குழலின்
ஓசையும்; சிங்கத்தின் முழக்கம் – சிங்கத்தின் முழக்கமும்; வாசிச்
சிரிப்பு – குதிரையின் கனைப்பொலியும்; தேர் இடிப்பு – தேரினின்றும்
தோன்றுகின்ற இடி போன்ற ஒலியும்; திண்கைம் மங்குலின் அதிர்வு –
வலிய துதிக்கையினை உடைய மேகம் போன்ற யானையின் ஒலியும்;
மழையொடு மலைந்த – (ஆகிய இவை) வானத்திலுள்ள மேகங்களின்
ஒலியோடு மாறுபட்டுத் தோன்றின.
————–
8448.
பண் தரு கிளவிச் செவ்விப் பல்லியத்து ஒழுகு தீம் தேன்,
கண்டினின் குயின்ற வீணை நரம்பொடு கமழும் தேறல்,
வண்டினின் பொலியும் நல் யாழ் வழியுறு நறவம், வானத்து
அண்டர்தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய
அன்றே.–8-
பண்தரு கிளவிச் செவ்விப் பல்லியத்து ஒழுகுதீம் தேன் –
பண்ணைத் தோற்றுவிக்கின்ற சொற்களின் தன்மையினை உடைய
பலவகை வாத்தியங்களினின்றும் தோன்றும் இனிய இசையாகிய
தேனும்; கண்டினின் குயின்ற வீணை நரம்பொடு கமழும் தேறல் கற்கண்டு போன்ற இனிய சுவை உடையதாய் அமைந்த வீணை
நரம்பிலிருந்து தோன்றும் (உணர்வு) மணங்கமழும் இசையாகிய
தேனும்; வண்டினின் பொலியும் நல்யாழ் வழியுறு நறவம் – நல்ல
யாழிடத்தினின்று வருவதும் வண்டின் ஒலிபோல விளங்குகின்றதுமான
இசையாகிய தேனும்; வானத்து அண்டர்தம் செவியின் உண்ணும்
அமிழ்து எனல் ஆய – வானுலகத்து வாழ்வாராகிய தேவர்கள் தம்
செவிவாயாகப் பருகி மகிழ்தற்குரிய அமிழ்து என்று சொல்லும்படியாக
(கேட்டார்க்கு) இன்பஞ்செய்வனவாயின.
———
8449.
வில் ஒலி, வயவர் ஆர்க்கும் விளி ஒலி, தெழிப்பின்
ஓங்கும்
ஒல்லொலி, வீரர் பேசும் உரை ஒலி, உரப்பில் தோன்றும்
செல் ஒலி, திரள் தோள் கொட்டும் சேண் ஒலி, நிலத்தில்
செல்லும்
கல்லொலியோடும் கூடக் கடல் ஒலி கரந்தது அன்றே.–9-
வில் ஒலி – வில் நாணின் ஒலியும்; வயவர் ஆர்க்கும் விளி ஒலி
– வீரர் ஆரவாரிக்கும் அறைகூவல் ஒலியும்; தெழிப்பின் ஓங்கும்
ஒல்லொலி – அதட்டுதலால் உயர்ந்து தோன்றும் ஒல்லென்னும்
ஓசையும்; வீரர் பேசும் உரை ஒலி உரப்பில் தோன்றும் செல் ஒலி
– வீரர் பேசுகின்ற பேச்சின் ஒலியும், (அவர்கள்) கனைத்தலால்
உண்டாகிய இடி போன்ற ஒலியும்; திரள்தோள் கொட்டும் சேண்
ஒலி – திரண்ட தோள்களைக் கொட்டுதலால் நெடுந்தூரத்தே
சென்றிசைக்கும் ஆர்ப்பொலியும்; நிலத்தில் செல்லும்
கல்லொலியோடும் – (அவ்வீரர்கள்) நிலத்தில் (விரைந்து) செல்லுதலால்
உண்டாகும் கல்லென்னும் ஓசையுடன்; கூட – ஒருங்கு கூடி ஒலிக்க;
கடல் ஒலி கரந்தது – கடலின் ஒலியானது இப்பேரொலிக்குள் (அடங்கி)
மறைந்தது.
———–
8450.
நாற் கடல் அனைய தானை நடந்திட, கிடந்த பாரின்-
மேல் கடந்து எழுந்த தூளி விசும்பின்மேல் கொழுந்து வீச,
மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர், மானப்
பாற்கடல் அனைய, வாட் கண் பனிக் கடல் படைத்தது
அன்றே.-10-
நாற்கடல் அனைய தானை நடந்திட – நாற் (றிசைக்) கடல்களை
ஒத்த (நால்வகைச்) சேனைகள் இவ்வாறு நடந்து செல்லுவதால்; கிடந்த
பாரின் மேல் கடந்து எழுந்த தூளி – பரந்து கிடந்த பூமியிலிருந்து
மேலே புறப்பட்டு எழுந்த துகள்கள்; விசும்பின்மேல் கொழுந்து வீச
– ஆகாயத்தின் மேற்பரப்பில் முற்பட்டு வீசினமையால்; மால்கடல்
சேனை காணும் வானவர் மகளிர் – பெருங்கடல் போலும்
இந்திரசித்தின் சேனைகளைக் காண வந்த தேவ மகளிரின்; மானப்
பாற்கடல் அனைய வாட்கண் – பெருமை வாய்ந்த பாற்கடலை ஒத்த
ஒளிபொருந்திய அகன்ற கண்கள்; பனிக்கடல் படைத்த – குளிர்ந்த
கடலை (மிக்க கண்ணீரை)த் தோற்றுவித்தன.
———–
8451.
ஆயிர கோடித் திண் தேர், அமரர்கோன் நகரம் என்ன
மேயின சுற்ற, தான் ஓர் கொற்றப் பொன் தேரின் மேலான்,
தூய அச் சுடர்கள் எல்லாம் சுற்றுற, நடுவண் தோன்றும்
நாயகப் பரிதி போன்றான்-தேவரை நடுக்கம் கண்டான்.–11-
தேவரை நடுக்கம் கண்டான் – தேவர்களை நடுக்கமுறச் செய்த
திறலோனாகிய இந்திரசித்து; அமரர்கோன் நகரம் என்ன –
தேவேந்திரனது (அமராவதி) நகரத்தையொத்த அழகும்
பெருமையுமுடைய; ஆயிர கோடி திண்தேர் மேயின சுற்ற –
திண்ணிய ஆயிரங்கோடித் தேர்கள் (தன்னைச்) சூழ்ந்துவர; தான் ஓர்
கொற்றப் பொன் தேரின் மேலான் – தான் ஒப்பற்றதொரு வெற்றி
மிக்க பொன்மயமான தேரின் மேல் அமர்ந்தவனாகி; தூய
அச்சுடர்களெல்லாம் சுற்றுற – தூய்மையான ஒளிக்கற்றைகளை
உடைய கோள்களும் பிறவும் தன்னைச் சுற்றி அமைய; நடுவண்
தோன்றும் நாயகப் பரிதி போன்றான் – (அவற்றின்) நடுவே திகழும்
தலைமை வாய்ந்த சூரியனை ஒப்பத் தோன்றினான்.
———-
இந்திரசித்து நாண் ஒலி செய்தல்
8452.
சென்று வெங் களத்தை எய்தி, சிறையொடு துண்டம்,
செங் கண்,
ஒன்றிய கழுத்து, மேனி, கால், உகிர், வாலோடு ஒப்ப,
பின்றல் இல் வெள்ளத் தானை முறை படப் பரப்பி, பேழ்
வாய்
அன்றிலின் உருவம் ஆய அணி வகுத்து, அமைந்து
நின்றான்.–12-
சென்று வெங்களத்தை எய்தி – (அங்ஙனம் தோற்றியவன்) சென்று
போர்க்களத்தை அடைந்து; பின்றல் இல் வெள்ளத்தானை –
பின்னிடுதல் இல்லாத வெள்ளக்கணக்கினவாகிய சேனைகள்;
சிறையொடு துண்டம் செங்கண் – சிறகு, மூக்கு, சிவந்த கண்;
ஒன்றிய கழுத்து, மேனி, கால், உகிர், வாலொடு, ஒப்ப –
பொருத்திய கழுத்து, உடம்பு, கால், நகம், வால் என்னும்
இவ்வுறுப்புக்களுக்குப் பொருந்தித் தோன்ற; முறைப்படப் பரப்பி,
– முறைமைப் படப் பரப்பி நிறுத்தி; பேழ்வாய் அன்றிலின் உருவம்
ஆய – பிளந்த வாயினை உடைய அன்றிற் பறவையின் உருவ
அமைப்பினை உடையதாக; அணிவகுத்து, அமைந்து நின்றான் –
அணிவகுத்துப் (போர் செயற்கு) பொருந்தி நின்றான்.
———
8453.
புரந்தான் செருவில் தந்து போயது, புணரி ஏழும்
உரம் தவிர்த்து, ஊழி பேரும் காலத்தின் ஒலிக்கும் ஓதை
கரந்தது வயிற்றில், கால வலம்புரி கையின் வாங்கி,
சிரம் பொதிர்ந்து அமரர் அஞ்ச, ஊதினான், திசைகள்
சிந்த.–13-
புரந்தரன் செருவில் தந்து போயது – இந்திரன் போரில்
தோல்வியுற்று திறையாகத்) தந்து சென்றதும்; புணரி ஏழும் உரம்
தவிர்ந்து ஊழி பேருங்காலத்தின் – கடல்கள் ஏழும் (உலகப்
பொருள்களின்) திண்மையைச் சிதைத்துப் பெருகி மேலோங்கும் ஊழி
இறுதி நாளிலே; ஒலிக்கும் ஓதை வயிற்றில் கரந்தது –
ஆரவாரிக்கும் பேரோசையை, தன் வயிற்றினுள் அடக்கி
மறைத்துள்ளதும்; கால வலம்புரி கையின் வாங்கி – காலனது தன்மையினை உடையதுமாகிய வலம்புரிச் சங்கினைக்
கையிலெடுத்து; சிரம் பொதிர்ந்து அமரர் அஞ்ச, திசையும் சிந்த
ஊதினான் – தேவர்கள் தலை நடுக்குற்று அஞ்சவும், திசைகள் நிலை
கெட்டுச் சிதையவும் ஊதினான்.
—————
8454.
சங்கத்தின் முழக்கம் கேட்ட கவிப் பெருந் தானை, தள்ளி
சிங்கத்தின் நாகம் வந்து செவிப் புக விலங்கு சிந்தி,
‘எங்கு உற்ற?’ என்னாவண்ணம் இரிந்த போல் இரிந்த;
ஏழை-
பங்கத்தன் மலை வில் அன்ன சிலை ஒலி பரப்பி,
ஆர்த்தான்.–14-
சங்கத்தின் முழக்கம் கேட்ட கவிப்பெருந்தானை – வலம்புரிச்
சங்கின் முழக்கத்தைக் கேட்ட வானரப் பெருஞ்சேனை,; தள்ளி –
(அச்சத்தால் ஒன்றையொன்று)’ தள்ளிக் கொண்டு; சிங்கத்தின் நாதம்
வந்து செவிப்புக விலங்கு சிந்தி – சிங்கத்தின் முழக்கம் வந்து தம்
செவிகளிற் புக்க அளவில் விலங்குகள் (தாம் இருந்த இடங்களை
விட்டுச்) சிதறி; “எங்கு உற்ற” என்னா வண்ணம் இரிந்த போல்
இரிந்த – ‘எங்கே சென்றன’ என அறிந்து கொள்ள முடியாதவாறு ஓடிப்
போதல்போல ஓடிப்போயின; ஏழை பங்கத்தன் மலைவில் அன்ன
சிலை ஒலி பரப்பி ஆர்த்தான் – (அந்நிலையில் இந்திரசித்து)
பெண்ணொரு பாகனாகிய சிவபெருமானது மேரு மலையாகிய
வில்லினை ஒத்த (தன்னுடைய) வில்லின் நாணொலியைப் பரவச்
செய்து ஆரவாரித்தான்.
———–
வானர சேனையின் ஓட்டம்
8455.
கீண்டன, செவிகள்; நெஞ்சம் கிழிந்தன; கிளர்ந்து செல்லா
மீண்டன, கால்கள், கையின் விழுந்தன, மரனும் வெற்பும்;
பூண்டன, நடுக்கம்; வாய்கள் புலர்ந்தன; மயிரும் பொங்க,
‘மாண்டனம் அன்றோ?’ என்ற-வானரம் எவையும் மாதோ.–15-
வானரம் எவையும் – (இந்திரசித்தின் ஆரவாரங்கேட்ட)
வானரங்கள் யாவும்; கீண்டன செவிகள் – காதுகள் கிழியப் பெற்றன;
நெஞ்சம் கிழிந்தன – மார்பு பிளந்தன; கிளர்ந்து செல்லா மீண்டன
கால்கள் – உற்சாகங்கொண்டு செல்ல முடியாதனவாகக் கால்கள்
திரும்பின; கையின் விழுந்தன மரனும் வெற்பும் – (ஏற்கெனவே
எடுத்திருந்த) மரங்களும் மலைகளும் கைகளினின்றும் (நழுவி) விழப்
பெற்றன; பூண்டன நடுக்கம் – நடுக்கம் மேற்கொண்டன; வாய்கள்
புலர்ந்தன – வாய்கள் உலரப் பெற்றன; மயிரும் பொங்க
‘மாண்டனம் அன்றோ?’ என்ற – (அச்சத்தால்) மயிர்க்கூச்செறிந்து
‘நாமெல்லாம் விரைவில் இறந்தொழிவோமல்லவா?’ என அரற்றி
வருந்தின.
———–
8456.
செங் கதிர்ச் செல்வன் சேயும், சமீரணன் சிறுவன்தானும்,
அங்கதப் பெயரினானும், அண்ணலும், இளைய கோவும்,
வெங் கதிர் மௌலிச் செங் கண் வீடணன், முதல வீரர்
இங்கு இவர் நின்றார் அல்லது, இரிந்தது, சேனை எல்லாம்.–16-
செங்கதிர்ச் செல்வன் சேயும் – செந்நிற ஒளித் தொகுதியை
உடைய செல்வனாகிய சூரியனுடைய மகன் சுக்கிரீவன்; சமீரணன்
சிறுவன் தானும் – வாயுதேவனின் மகனான அனுமன்; அங்கதப்
பெயரினானும் – அங்கதன் என்னும் பெயரை உடையவன்;
அண்ணலும், இளைய கோவும் – இராமன், இலக்குவன்; வெங்கதிர்
மௌலிச் செங்கண் வீடணன் முடிய – வெவ்விய ஒளிக்கற்றையினை
உடைய (மணிகள் இழைத்த) முடியினையும் சிவந்த கண்களையும்
உடைய வீடணன் வரை; வீரர் இங்கு இவர் நின்றார் – முதலாக
உள்ள ஏனைய படை வீரர்களும் ஆகிய இவர்களே (போர்க்களமாகிய)
இவ்விடத்தில் நின்றவர்கள்; அல்லது, இரிந்தது சேனை எல்லாம்
– அல்லாமல் ஏனைய படைஞர்களாகிய குரங்குகள் அனைத்தும்
நிலைகெட்டு ஓடின.
————-
8457.
படைப் பெருந் தலைவர் நிற்க, பல் பெருந் தானை
வேலை,
உடைப்புறு புனலின் ஓட, ஊழிநாள் உவரி ஓதை
கிடைத்திட முழங்கி ஆர்த்துக் கிளர்ந்தது; நிருதர் சேனை,
அடைத்தது, திசைகள் எல்லாம்; அன்னவர் அகத்தர்
ஆனார்.–17-
படைப்பெருந் தலைவர் நிற்க – பெருமை வாய்ந்த (வானரப்)
படைத்தலைவர்கள் மட்டும் (இடம் பெயராது) நிலைத்து நிற்க; பல்
பெருந்தானை வேலை – மிகப்பலவாகிய (குரக்குச்) சேனையாகிய
கடல்; உடைப்புறு புனலின் ஓட – கரைகளை உடைத்துச் செல்லும்
பெரிய நீர்ப்பெருக்கினைப் போல் ஓட; நிருதர் சேனை – (அதுகண்ட)
அரக்கர் சேனையானது; ஊழிநாள் உவரி ஓதை கிடைத்திட முழங்கி
ஆர்த்துக் கிளர்ந்தது – ஊழிக் காலத்தே தோன்றும் கடல்
ஓசையினைப் போன்று பேரொலி உண்டாகுமாறு முழங்கி ஆரவாரித்து
உள்ளக் கிளர்ச்சி உடையதாய்; திசைகள் எல்லாம் அடைத்தது –
திசைகள் எல்லாவற்றையும் (வெற்றிடம் இல்லையாம்படி) அடைத்து
நின்றது; அன்னவர் அகத்தர் ஆனார் – (இடம் பெயராது நின்ற
இராம இலக்குவரும் ஏனைய படைத் தலைவரும்) அரக்கர்
சேனையின் உள்ளிடத்தவராயினார்.
———-
அனுமன் – அங்கதர் தோள்களில் முறையே இராம-இலக்குவர்
8458.
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிரத் தோள்மேல்
வீரனும், வாலி சேய்தன் விறல் கெழு சிகரத் தோள்மேல்
ஆரியற்கு இளைய கோவும், ஏறினர்; அமரர் வாழ்த்தி,
வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர், இடைவிடாமல்.–18-
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிரத்தோள் மேல்
வீரனும் – அனுமனுடைய அசைந்தொளிரும் இயல்பினவாகிய மலர்
மாலையும் மணிகளும் அணிந்த திண்ணிய தோளின் மேல் வீரனாகிய
இராமனும்; வாலி சேய் தன் விறல் கெழு சிகரத் தோள்மேல் –
வாலி மைந்தன் அங்கதனுடைய வெற்றித் திறன் பொருந்திய மலைச்
சிகரத்தை ஒத்த தோளின் மேல்; ஆரியற்கு இளையகோவும் –
(இராமன் என்னும்) பெரியோனுக்குத்தம்பியாகிய இலக்குவனும்; ஏறினர் – (போர் மேற்செல்ல) ஏறி
அமர்ந்தனர்; அமரர் வாழ்த்தி, வேரி அம்பூவின் மாரி
சொரிந்தனர், இடைவிடாமல் – (அதுகண்டு) தேவர்கள்
(அவ்விருவரையும்) வாழ்த்தித் தேன் நிறைந்த அழகிய மலர் மழையினை
இடைவிடாது சொரிந்தார்கள்.
———-
8459.
விடையின்மேல், கலுழன்தன்மேல், வில்லினர் விளங்குகின்ற
கடைஇல் மேல் உயர்ந்த காட்சி இருவரும்
கடுத்தார்-கண்ணுற்று
அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன்
என்றுஇன்னார்,
தொடையின் மேல் மலர்ந்த தாரர், தோளின்மேல்
தோன்றும் வீரர்.–19-
கண்ணுற்று அடையின் – கண்ணுக்குப் புலனாகிப்
பொருந்துமாயின்; மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன்
என்று இன்னார் – மேரு மலையையும் வீழ்த்தும், அனுமன் அங்கதன்
என்ற இவர்களின்; தோளின் மேல் தோன்றும் – தோள்களின் மேல்
காணப்பெறுகின்றவரும்; மேல் மலர்ந்த தொடையின் தாரர் – மேலே
விளங்கும்படியான தொகுக்கப்பெற்ற மாலையினரும்; வில்லினர், வீரர்
– வில் தாங்கியவருமான, இராம இலக்குவர்; விடையின் மேல் கலுழன்
தன்மேல் விளங்குகின்ற – ஆனேற்றின் மீதும், கருடன் மீதும்
விளங்கித் தோன்றுகின்ற; கடைஇல் மேல் உயர்ந்த காட்சி –
முடிவின்றி மேம்பட்டுயர்ந்த காட்சியினை உடைய; இருவரும்
கடுத்தார் – சிவன், திருமால் என்ற இரு மூர்த்திகளையும் ஒத்துத்
தோன்றினர்.
———-
8460.
நீலனை முதலாய் உள்ள நெடும் படைத் தலைவர் நின்றார்,
தாலமும் மலையும் ஏந்தி, தாக்குவான் சமையும் காலை,
ஞாலமும் விசும்பும் காத்த நானிலக் கிழவன் மைந்தன்
மேல் அமர் விளைவை உன்னி, விலக்கினன்,
விளம்பலுற்றான்;–19-
நீலனை முதலாய் உள்ள நெடும்படைத்தலைவர் நின்றார் –
நீலனை முதலாகக் கொண்டு நெடிய பெருஞ்சேனைகட்குத் தலைவராக
அங்கு நின்ற வானரவீரர்கள்; தாலமும் மலையும் ஏந்தி தாக்குவான்
சமையும் காலை – பனை மரங்களையும், மலைகளையும்
பறித்தெடுத்துக்கொண்டு (அரக்கர்களை) தாக்குதற்கு முற்பட்ட பொழுது;
ஞாலமும் விசும்பும் காத்த நானிலக் கிழவன் மைந்தன்
– மண்ணுலகையும் விண்ணுலகையும் காத்த நானில மன்னனாகிய
தசரதன் மைந்தனாகிய இராமன்; மேல் அமர்விளைவை உன்னி,
விலக்கினன், விளம்பலுற்றான் – இனிமேல் நிகழவிருக்கும் போரின்
விளைவை எண்ணி, (அவ்வானர வீரர்களைத்) தடுத்து நிறுத்தியவனாய்ப்
பின்வருமாறு கூறத் தொடங்கினான்.
———-
8461.
‘கடவுளர் படைகள் நும்மேல் வெய்யவன் துரந்தகாலை,
தடை உளஅல்ல; தாங்கும் தன்மையிர் அல்லீர்; தாக்கிற்கு
இடை உளது எம்பால் நல்கி, பின் நிரை நிற்றிர்; ஈண்டு இப்
படைஉளதனையும், இன்று, எம் வில் தொழில் பார்த்திர்’
என்றான்.–21-
“கடவுளர் படைகள் நும்மேல்” வெய்யவன் துரந்தகாலை –
“தெய்வப் படைக்கலங்களை உங்கள்மீது கொடியோனாகிய இந்திரசித்து
செலுத்தும்போது; தடை உள அல்ல – (அவை, மரம், மலை
முதலியவற்றால்) தடுத்தற்குரிய அல்ல; தாங்கும் தன்மையீர் அல்லீர்
– (நீங்களும் அவற்றை ஏற்றுத்) தாங்கக்கூடிய வல்லமை யுடையீரல்லீர்;
தாக்கிற்கு இடை உளது எம்பால் நல்கிப்பின் நிரை நிற்றிர் –
(முன்னின்று) தாக்குதற்கு இடமாய் உள்ள முதலிடத்தினை
எங்களுக்குக் கொடுத்துவிட்டு (எங்களுக்குப் பின்னே) பின் வரிசையில்
நிற்பீராக; ஈண்டு இப்படை உளதனையும் இன்று, எம் வில்தொழில்
பார்த்திர்” என்றான் – இங்கு இந்த அரக்கர் சேனை (உயிரோடு)
உள்ள அளவும் இன்று எம்முடைய வில் தொழில் வல்லமையினை
(உடன் நின்று) காண்பீராக” என்று கூறினான்.
———-
இராம – இலக்குவரின் போர்த் திறன்
8462.
அருள்முறை அவரும் நின்றார்; ஆண் தகை வீரர், ஆழி
உருள் முறை தேரின், மாவின், ஓடை மால் வரையின்,
ஊழி
இருள் முறை நிருதர்தம்மேல், ஏவினர் – இமைப்பிலோரும்,
‘மருள் முறை எய்திற்று’ என்பர்-சிலை வழங்கு அசனி
மாரி.–22-
அருள் முறை அவரும் நின்றார் – (இராமன்) பணித்தருளிய
முறைப்படி (நீலன் முதலாகிய) அப்படைத் தலைவரும் பின்
வரிசையில் சென்று நின்றனர்; ஆண் தகை வீரர் –
ஆண்மைக்குணமுள்ள இராமஇலக்குவராகிய அவ்வீரர்கள்; ஆழி
உருள் முறைத்தேரின் – சக்கரத்துடன் (விரைந்து) உருளும்
முறைமையினை உடைய தேர்கள் மேலும்; மாவின் – குதிரைகள்
மேலும்; ஓடை மால் வரையின் – முகபடாம் அணிந்த பெரிய மலை
போலும் யானைகள் மேலும்; ஊழி இருள் முறை நிருதர் தம்மேல் –
ஊழிக்காலத்து இருளின் தன்மையை உடைய அரக்க வீரர்கள் மேலும்;
ஏவினர் – அம்புகளை ஏவினார்கள்; சிலை வழங்கு அசனிமாரி –
(அவ்விருவருடைய) விற்கள் வெளிப்படுத்தும் இடியேற்றுடன் கூடிய
அம்பு மழையானது; இமைப்பிலோரும் – கண்ணிமைத்தலில்லாத
தேவர்களும்; ‘மருள்முறை எய்திற்று’ என்பர் – (இஃது என்ன
ஊழிக்காலமோ என) மருளும் நிலை அடைந்தது என்பர்.
——-
8463.
இமைப்பதன் முன்னம் வந்த இராக்கத வெள்ளம் தன்னைக்
குமைத்தொழில் புரிந்த வீரர் தனுத் தொழில் குறித்து
இன்று எம்மால்
அமைப்பது என்? பிறிது ஒன்று உண்டோ? மேரு என்று
அமைந்தவில்லான்,
உமைக்கு ஒருபாகன், எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த.–23-
வந்த இராக்கத வெள்ளம் தன்னை – (பொருதற்கு) எதிர் வந்த
வெள்ளக் கணக்கினவாகிய அரக்கர் சேனைகளை; இமைப்பதன்
முன்னம் – இமைப்பொழுதுக்குள்ளாக; குமைத்தொழில் புரிந்த வீரர்
– அழிக்கும் தொழிலைப் புரிந்த வீரர்களாகிய இராம இலக்குவரது;
தனுத்தொழில் குறித்து, இன்று எம்மால் அமைப்பது என்? –
விற்றொழில் வன்மையைக் குறித்து எம்மால் கூறுதற்கு யாதுளது?
உமைக்கு ஒரு பாகன் – உமா தேவியை ஒரு பாகத்துக் கொண்ட
சிவபெருமான்; மேரு என்று அமைந்த வில்லான் – மேரு மலை
என அமைந்த வில்லினால்; எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த –
எய்து அழித்த முப்புரங்களைப் போன்று (அச்சேனைகள் யாவும்)
அழிந்து வீழ்ந்தன; பிறிது ஒன்று உண்டோ? – (என்பதன்றிச்
சொல்லத்தக்க உவமை) வேறொன்றுளதோ?
————
8464.
தேரின்மேல் சிலையின் நின்ற இந்திரசித்து என்று ஓதும்
வீரருள் வீரன் கண்டான்-விழுந்தன விழுந்த என்னும்
பாரின்மேல் நோக்கின் அன்றேல், பட்டன பட்டார்
என்னும்
போரின்மேல் நோக்கு இலாத இருவரும் பொருத பூசல்.–24-
பாரின் மேல் நோக்கின் – (போர்க்களமாகிய) நிலப்பரப்பின் மேல்
நோக்கிய; விழுந்தன விழுந்தன என்னும் அன்றேல் – விழுந்தவை
விழுந்த வண்ணமாக இருந்தன அளவில் காண்பதன்றி; பட்டன
பட்டார் என்னும் போரின்மேல் நோக்க இலாத – போர்
நிகழ்ச்சியை நோக்கி (இன்னவை) இறந்தன (இன்னார்) இறந்தார்கள்
எனப்பிரித்தறிய வொண்ணாதவாறு; இருவரும் பொருத பூசல் –
(இராம இலக்குவராகிய) இருவரும் நிகழ்த்திய போர்த்தொழிலை; தேரின்
மேல் சிலையின் நின்ற – தேரின் மேல் வில்லை ஊன்றி
நின்ற; இந்திரசித்து என்று ஓதும் வீரருள் வீரன் கண்டான் –
‘இந்திரசித்து’ எனப் புகழப் பெறும் வீரர்க்கெல்லாம் வீரனாகிய அவன்
பொருந்த நோக்கினான்.
———-
8465.
‘யானை பட்டனவோ!’ என்றான்; ‘இரதம் இற்றனவோ!’
என்றான்;
‘மான மா வந்த எல்லாம் மறிந்து ஒழிந்தனவோ!’ என்றான்;
‘ஏனை வாள் அரக்கர் யாரும் இல்லையோ, எடுக்க!’
என்றான்-
வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின், மயக்கம்
உற்றான்.–25-
வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின் மயக்கம்
உற்றான் – (இராம இலக்குவரது போர்த்தொழில் நிகழ்ச்சியை
நோக்கிய இந்திரசித்து) ஆகாயம் அளவும் ஓங்கிய பிணத்தின்
குவியல்கள் (போர்க்களத்தை) மறைத்தலால் திகைப்புற்றவனாகி;
‘யானை பட்டனவோ!’ என்றான் – ‘யானைகள் இறந்து பட்டனவோ!’
என ஏங்கினான்; ‘இரதம் இற்றனவோ!’ என்றான் – ‘தேர்கள்
முறிந்தனவோ?’ என வருந்தினான்; ‘மானமா வந்த எல்லாம்
மறித்து ஒழிந்தனவோ!’ என்றான் – ‘வீரத்திற் குறையாத
பெருமை உடையனவாய் வந்த குதிரைகள் யாவும் மாண்டு
ஒழிந்தனவோ’ என இரங்கினான்; ‘ஏனைவாள் அரக்கர் யாரும்
இல்லையோ, எடுக்க!’ என்றான் – (இறந்து வீ்ழ்ந்த பிணங்களை)
எடுத்து அப்பாற்படுத்த மற்றும் இறவாதுள்ள வாள் வீரராகிய அரக்கர்
ஒருவரும் (இங்கு) இல்லையோ என ஏக்கமுற்று வருந்தினான்.
———-
8466.
‘செய்கின்றார் இருவர், வெம் போர்; சிதைகின்ற
சேனை நோக்கின்,
“அய்யம்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக!” என்று,
வய்கின்றார்; அல்லர் ஆக, வரி சிலை வலத்தால் மாள
எய்கின்றார் அல்லர்; ஈது எவ் இந்திரசாலம்?’ என்றான்.–26-
‘செய்கின்றார் இருவர் வெம்போர் – ‘கொடிய போரைச்
செய்கின்றவர்களோ இருவரே; சிதைகின்ற சேனை நோக்கின் –
(இவர்களால்) சிதைந்தொழியும் சேனைகளை எண்ணிப் பார்த்தாலோ;
அய்யம்தான் இல்லா வெள்ளம் அறுபது – ஐயம் அற்றவகையில்
அறுபது வெள்ளம் என்னும் தொகையினவாகும்; ‘அவிக’ என்று
வய்கின்றார் அல்லர் – (இவையாவும் ஒருசேர) அழிந்தொழிக என்று
சபித்துரைக்கின்றவர்களும் அல்லர்; ஆகின் வரிசிலை வலத்தால்
மாள எய்கின்றார் அல்லர் – ஆனால், வரிந்து கட்டப்பெற்ற வில்லின் துணை கொண்டு தம் வன்மை விளங்க
(பகைவர்சேனை) மாளும்படி வலிந்து எய்கின்றவர்களும் அல்லர்; ‘ஈது
எவ் இந்திரசாலம்?’ என்றான் – (இப்பெரும் சேனையை அழித்த)
இச்செயல் எத்ததைய இந்திரசால வித்தையோ?’ என்று வியந்து
கூறினான் (இந்திரசித்து)
————
போர் நிகழ்ச்சியை இந்திரசித்தன் வியந்து நோக்குதல்
8467.
அம்பின் மா மழையை நோக்கம்; உதிரத்தின் ஆற்றை
நோக்கும்;
உம்பரின் அளவும் சென்ற பிணக் குன்றின் உயர்வை
நோக்கும்;
கொம்பு அற உதிர்ந்து முத்தின் குப்பையை நோக்கும்;
தும்பியை நோக்கும்; வீரர் சுந்தரத் தோளை நோக்கும்;–27-
அம்பின் மா மழையை நோக்கும் – (வியப்புற்ற இந்திரசித்து)
அம்பின் பெருமழையை உற்றுப்பார்ப்பான்; உதிரத்தின் ஆற்றை
நோக்கும் – இரத்தப் பெருக்காகிய ஆற்றினைப் பார்ப்பான்; உம்பரின்
அளவும் சென்ற – விண்ணின் உச்சி அளவும் உயர்ந்து ஓங்கிய;
பிணக்குன்றின் உயர்வை நோக்கும் – பிணங்களின் குவியலாகிய
மலையின் உயர்ச்சியைப் பார்ப்பான்; கொம்பு அற உதிர்ந்த முத்தின்
குப்பையை நோக்கும் – அவ்யானைகளின் தந்தங்கள்
அறுபட்டமையால் சிதறிக்கிடக்கும் முத்தின் குவியலைப் பார்ப்பான்;
வீரர் சுந்தரத் தோளை நோக்கும் – வீரர்களாகிய இராம
இலக்குவரின் அழகிய தோள்களை உற்றுப் பார்ப்பான்.
————
8468.
மலைகளை நோக்கும்; மற்று அவ் வான் உறக் குவிந்த
வன் கண்
தலைகளை நோக்கும்; வீரர் சரங்களை நோக்கும்; தாக்கி,
உலை கொள் வெம் பொறியின் உக்க படைக்கலத்து
ஒழுக்கைநோக்கும்;
சிலைகளை நோக்கும்; நாண் ஏற்று இடியினைச் செவியின்
ஏற்கும்;–28-
மலைகளை நோக்கும் – மலைகளைப் பார்ப்பான்; மற்று அவ்
வான் உறக் குவிந்த – (அம்மலைகளைப் போன்று) விண் அளவும்
பொருந்தக் குவிந்துள்ள; வன்கண் தலைகளை நோக்கும் –
தறுகண்மை மிக்க கண்களோடு கூடிய (அரக்கர்களின்) தலைகளைப்
பார்ப்பான்; வீரர் சரங்களை நோக்கும் – (அத்தலைகளைத் துண்டித்த
ஆற்றல் மிக்க) வீரர் (இருவருடைய) அம்புகளின் வன்மையைக் கருதிப்
பார்ப்பான்; தாக்கி உலை கொள்வெம் பொறியின் உக்க –
(அம்புகளால்) தாக்கப்பட்டு உலைக் களத்திலே சிதறிக் கிடக்கும்
அனற் பொறிகளைப் போன்று சிதறியுள்ள; படைக்கலத்து ஒழுங்கை
நோக்கும் – (தன் சேனை வீரர்களின்) ஆயுதங்களின்
தொடர்ச்சியினை உற்றுப் பார்ப்பான்; சிலைகளை நோக்கும் –
(இத்தகைய அம்புகளைச் சொரிந்த இருவருடைய) விற்படைகளை
எண்ணிப் பார்ப்பான்; நாண் ஏற்று இடியினைச் செவியின் ஏற்கும் –
அவ்விற்களில் நாணேற்றுதலால் உண்டாகிய இடி முழக்கத்தினைத் தன்
செவிகளால் ஓர்ந்து நோக்குவான்.
———-
8469.
ஆயிரம் தேரை, ஆடல் ஆனையை, அலங்கல் மாவை,
ஆயிரம் தலையை, ஆழிப் படைகளை, அறுத்தும்,
அப்பால்
போயின பகழி வேகத் தன்மையைப் புரிந்து நோக்கும்;
பாயும் வெம் பகழிக்கு ஒன்றும் கணக்கு இலாப்
பரப்பைப் பார்க்கும்;–29-
ஆயிரம் தேரை, ஆடல் ஆனையை – ஆயிரக்கணக்கான
தேர்களையும், வெற்றியை உடைய யானைகளையும்; அலங்கல் மாவை
– மாலையணிந்த குதிரைகளையும்; ஆயிரம் தலையை ஆழிப்
படைகளை – ஆயிரக்கணக்கான (வீரர்) தலைகளையும், சக்கரப்
படைகளையும்; அறுத்தும் அப்பால் போயின – அறுத்தும் அப்பாற்
சென்ற; பகழி வேகத் தன்மையைப் புரிந்து நோக்கும் – அம்புகளின்
விரைவுத் தன்மையினைப் புரிந்து நோக்குவான்; பாயும் வெம்பகழிக்கு
– பாய்ந்து (ஊடுருவிச்) செல்வனவாகிய அம்புகளுக்கு; ஒன்றும்
கணக்கிலாப் பரப்பைப் பார்க்கும் – சிறிதும் கணக்கிட்டுக்
கூறுவதற்கில்லாத போர்க்களத்தின் பரப்பினை உற்றுப் பார்ப்பான்.
———
8470.
அறுபது வெள்ளம் ஆய அரக்கர்தம் ஆற்றற்கு ஏற்ற,
எறிவன, எய்வ, பெய்வ, எற்றுறு படைகள் யாவும்,
பொறி வனம் வெந்த போலச் சாம்பராய்ப்
போயதுஅல்லால்,
செறிவன இல்லா ஆற்றைச் சிந்தையால் தெரிய நோக்கும்;–30-
அறுபது வெள்ளம் ஆய அரக்கர்தம் ஆற்றற்கு ஏற்ற –
அறுபது வெள்ளம் என்னும் அளவினராகிய அரக்கர்களின் ஆற்றலுக்குப்
பொருந்தியனவாய்; எறிவன, எய்வ, பெய்வ எற்றுறு படைகள்
யாவும் – (நேர் நின்று) எறிவனவும் (சேய்மையில் நின்று வில்லில்
தொடுத்து) எய்வனவும், மிகுதியாகப் பொழிவனவும், எடுத்து வீசுவனவும்
ஆகிய ஆயுதங்கள் யாவும்; பொறிவனம் வெந்த போலச்
சாம்பராய்ப் போயது அல்லால் – தீப்பொறிகளாற் காடு வெந்து
அழிந்தாற் போன்று சாம்பராய் அழிந்ததன்றி; செறிவன இல்லா
ஆற்றைச் சிந்தையால் தெரிய நோக்கும் – (அவற்றுள் எவையும்
பகைவரை) நெருங்கித் தாக்குதலில்லாத் தன்மையினைத் தன் மனத்தால்
விளங்க ஆராய்ந்து நோக்குவான்.
———–
8471.
வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்மேல் மகளிர் மாழ்கி.
குயில் தலத்து உக்க என்னக் குழைகின்ற குழைவை
நோக்கும்;
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய்த் தலைஇலா
ஆக்கை ஈட்டம்
பயிறலை, பறவை பாரில் படிகிலாப் பரப்பை, பார்க்கும்;–31-
வயிறு அலைத்து ஓடிவந்து – அரக்க மகளிர் (தத்தம் கணவர்
இறந்த செய்தி கேட்டு) வயிற்றில் அடித்துக் கொண்டு ஓடிவந்து;
கொழுநர் மேல் மகளிர் மாழ்கி – (தத்தம்) கணவர் மேல் விழுந்து
மனங்கலங்கி; குயில் தலத்து உக்க என்னக் – குயில்கள் நிலத்தில்
வீழ்ந்து அரற்றின என்னும்படி; குழைகின்ற குழைவை நோக்கும் –
மனம் நைந்து இரங்குகின்ற இரங்குதலை நோக்குவான்; எயிலு
அலைத்து இடிக்கும் பேழ்வாய்த்தலை இலா ஆக்கை ஈட்டம் –
பற்களைக் கடித்து இடிபோற் பேரொலி செய்யும் பிளந்த வாயினை
உடையதலைகள் உயிருள்ள காலத்து உடையனவாய் இப்பொழுது
இலாத உடல்களின் தொகுதிகள்; பயிறலை – (போர்க்களம் எங்கும்)
பொருந்தி ஆடுவதனையும்; பறவை பாரில் படிகிலாப் பரப்பை,
பார்க்கும் – (அவற்றை நெருங்குதற்கு அஞ்சிப் பறவைகள் பூமியிற்
படிந்து நிணங்கவர்தற்கு இயலாத (போர்க்களப்) பரப்பினையும்
(ஒருங்கு) நோக்குவான்.
——-
8472.
‘அங்கதர் அனந்த கோடி உளர்’ எனும்; ‘அனுமன்
என்பாற்கு
இங்கு இனி உலகம் யாவும் இடம் இலை போலும்’ என்னும்;
‘எங்கும் இம் மனிதர் என்பார் இருவரேகொல்!’ என்று
உன்னும்;-
சிங்கஏறு அனைய வீரர் கடுமையைத் தெரிகிலாதான்.–32-
அங்கதர் அனந்தகோடி உளர் எனும் – (இலக்குவனைச் சுமந்து
திரியும்) அங்கதராயினார் (ஒருவரன்றிப்) பல கோடி அளவினராக
உள்ளார்’ என்பான்; இங்கு அனுமன் என்பாற்கு – இங்கு (இராமனைச்
சுமந்து திரியும்) அனுமன் என்பவனுக்கு; இனி உலகம் யாவும் இடம்
இலை போலும் என்னும் – எல்லா உலகங்களிலும் இடம் இல்லையாய்
விடுமோ என்பான்; சிங்க ஏறு அனைய வீரர் – ஆண் சிங்கத்தினை
ஒத்த வீரர்களாகிய இராம இலக்குவரது; கடுமையைத் தெரிகிலாதான்
– போரின் விரைவினை அறிந்து கொள்ள இயலாதவனாகிய இந்திரசித்து;
எங்கும் இம்மனிதர் என்பார் இருவரே கொல் என்று உன்னும்
– இம்மனிதர் இருவரே எல்லா இடங்களிலும் நிரம்பி விட்டார்களோ?
என இவ்வாறு எண்ணுவானாயினான்.
———–
8473.
ஆர்க்கின்ற அமரர்தம்மை நோக்கும்; அங்கு அவர்கள்
அள்ளித்
தூர்க்கின்ற பூவை நோக்கும்; துடிக்கின்ற இடத் தோள்
நோக்கும்;
பார்க்கின்ற திசைகள் எங்கும் படும் பிணப் பரப்பை
நோக்கும்;
ஈர்க்கின்ற குருதி ஆற்றின் யானையின் பிணத்தை
நோக்கும்.–33-
ஆர்க்கின்ற அமரர் தம்மை நோக்கும் – (அரக்கர் சேனைகளின்
அழிவுகண்டு) ஆரவாரிக்கின்ற தேவர்களை நோக்குவான்; அங்கு
அவர்கள் – அப்பொழுது அத்தேவர்கள்; அள்ளித் தூர்க்கின்ற
பூவை நோக்கும் – (இராம இலக்குவர் மீது) அள்ளிச் சொரிந்து
நிரப்பும் மலர்களை நோக்குவான்; துடிக்கின்ற இடத்தோள்
நோக்கும் – (பின்னர் நேரவிருக்கும் பெருந்துன்பத்திற்கு அறிகுறியாக)
துடிக்கின்ற தனது இடது தோளை நோக்குவான்; பார்க்கின்ற
திசைகள் எங்கும் – தான் காண்கின்ற திசையிடங்கள் எங்கும்;
படும்பிணப் பரப்பை நோக்கும் – இறந்து வீழ்ந்த பிணங்களின்
மிகுதியை நோக்குவான்; குருதி ஆற்றில் ஈர்க்கின்ற – இரத்த
ஆற்றினால் இழுத்துச் செல்லப்படுகின்ற; யானையின் பிணத்தை
நோக்கும் – யானைகளின் பிணங்களைப் பார்ப்பான்.
————
8474.
ஆயிர கோடித் தேரும் அரக்கரும் ஒழிய, வல்ல
மா இருஞ் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும், வல்லை
போயின குரக்குத் தானை புகுந்திலது அன்றே, பொன்
தேர்த்
தீயவன்தன்மேல் உள்ள பயத்தினால் கலக்கம் தீரா.-34-
வல்லை போயின குரக்குத் தானை – முன்னர் விரைந்து ஓடிய
வானர சேனைகள்; ஆயிரம் கோடித் தேரும் – ஆயிரங்கோடி
என்னும் தொகையினவாகிய தேர்களும்; அரக்கரும் ஒழிய –
(அவற்றில் நின்று பொரும்) அரக்கர்களும் தவிர; அல்லா மா இருஞ்
சேனை எல்லாம் – அவையல்லாத மிகப்பெரிய சேனைகளெல்லாம்;
மாய்ந்தவா கண்டும் – இறந்தொழிந்தமையை நேரிற்கண்டும்; பொன்
தேர்த் தீயவன் தன்மேல் உள்ள – பொன்னால் இயன்ற தேரினை
உடைய கொடுந்தொழிலாளனாகிய இந்திர சித்தன்பால்; பயத்தினால்
கலக்கம் தீரா – தாம் மேற்கொண்ட பேரச்சத்தினால் மனக்கலக்கம் நீங்காதனவாய்; புகுந்திலது அன்றே
– போர்க்களத்தில் மீண்டும் புகாதனவாயின.
————
8475.
தளப் பெருஞ் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக,
அளப்ப அருந் தேரின் உள்ள ஆயிர கோடி ஆக,
துளக்கம் இல் ஆற்றல் வீரர் பொருத போர்த் தொழிலை
நோக்கி,
அளப்ப அருந் தோளைக் கொட்டி, அஞ்சனை மதலை
ஆர்த்தான்.–35-
தளப் பெருஞ் சேனை வெள்ளம் அறுபதும் – போர்க்களத்தில்
பொருது நிற்கும் பெருமையுடைய அறுபது வெள்ளம் அரக்கர்
சேனையும்; தலத்தது ஆக – (அழிவுற்று) நிலத்தின் கண்ணதாய்
மடியவும்; அளப்பருந்தேரின் உள்ள ஆயிரகோடி ஆக – அளந்து
அறிதற்கிலாத தேர்களின் மேலுள்ள (அரக்கர்) சேனை ஆயிரங்கோடி
என்னும் அளவுடையதாய் நிற்கவும்; துளக்கம் இல் ஆற்றல் வீரர் –
மனங்கலங்குதல் இல்லாத ஆற்றல் மிக்க வீரர்களாகிய இராம
இலக்குவர்; பொருத போர்த் தொழிலை நோக்கி – எதிர்த்து நின்ற
போர்ச் செயலைக் கண்ணுற்று; அஞ்சனை மதலை – அஞ்சனை
என்பாளது மகனான அனுமன்; அளப்பருந் தோளைக் கொட்டி
ஆர்த்தான் – அளத்தற்கரிய (தனது) தோளைத் தட்டிக்கொண்டு
பெருமுழக்கம் செய்தான்.
——–
8476.
ஆர் இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி அசனி கேளா,
தேரிடைநின்று வீழ்ந்தார் சிலர்; சிலர் படைகள் சிந்தி,
பாரிடை கிழிந்து போகப் பாரித்தார்; பைம் பொன் இஞ்சி
ஊரிடை நின்றுளாரும், உயிரினோடு உதிரம் கான்றார்.–36-
ஆர்இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி – நெருங்குதற்கரிய
போர் அரங்கில் அனுமன் ஆரவாரம் செய்ததால் எழுந்த பெரு
முழக்கமாகிய; அசனிகேளா – இடியொலியைக் கேட்டு; தேரிடை
நின்று வீழ்ந்தார் சிலர் – (தேரில் உள்ளாராகிய அரக்கர்களில்) சிலர்
தேரில் நின்றபடியே வீழ்ந்து உயிர்துறந்தார்கள்; சிலர் படைகள் சிந்தி – சிலர் தம் கையிலுள்ள படைக்கலங்களைக் கீழே
சிதறவிட்டு; பாரிடை இழிந்து போகப் பாரித்தார் – தேரிலிருந்தும்
கீழே இறங்கித் தப்பி ஓடுதற்குப் பரபரப்புற்றார்கள்; பைம்பொன்
இஞ்சி ஊரிடை நின்றுளாரும் – பசிய பொன்மயமான மதிலாற் சூழப்
பட்ட (இலங்கையாகிய) ஊரினுள்ளே உள்ள அரக்கர்களும்;
உயிரினோடு உதிரம் கான்றார் – உயிருடனே இரத்தத்தைக்
கக்கினார்கள்.
———
இந்திரசித்தன் தனியனாகப் பொருதல்
8477.
‘அஞ்சினிர், போமின்; இன்று, ஓர் ஆர்ப்பு ஒலிக்கு
அழியற்பாலிர்
வெஞ் சமம் விளைப்பது என்னோ? நீரும் இவ் வீரரோடு
துஞ்சினிர் போலும் அன்றே?’ என்று அவர்ச் சுளித்து
நோக்கி,-
மஞ்சினும் கரிய மெய்யான்-இருவர்மேல் ஒருவன் வந்தான்.–37-
மஞ்சினும் கரிய மெய்யான் – மேகத்தினும் கருமையான உடலை
உடையவனாகிய இந்திரசித்து; ‘இன்று, ஓர் ஆர்ப்பு ஒலிக்கு
அழியற்பாலிர் – ‘இப்பொழுது ஓர் ஆரவார ஒலிக்கே மனமழியுந்
தன்மையுடைவர்களாய்; அஞ்சினர் – அஞ்சியவர்களே; போமின் –
இவ்விடத்தை விட்டு) போய் விடுங்கள்; வெஞ்சமம் விளைப்பது
என்னோ – (இத்தகைய அச்சங் கொண்டவர்களாகிய நீங்கள்)
வெம்மையுடைய போர்த்தொழிலை நிகழ்த்துதல் எவ்வாறு முடியும்?
நீரும் இவ்வீரரோடு துஞ்சினீர் போலும் அன்றே? – (உயிருடன்
உள்ள) நீங்களும் (உயிர் நீங்கிப் பிணமாய்க் கிடக்கும்)
இவ்வீரர்களுடன் ஒப்ப இறந்தொழிந்தீர்கள் அல்லவா? என்று அவர்ச்
சுளித்து நோக்கி – என்று கூறி அவர்களைச் சினந்து பார்த்து; இருவர்
மேல் ஒருவன் வந்தான் – (இராம இலக்குவர்) இருவர் மீதும்தான்
ஒருவனாகவே பொருதற்கு வந்தான்.
———-
8478.
அக் கணத்து, ஆர்த்து மண்டி, ஆயிர கோடித் தேரும்
புக்கன-நேமிப் பாட்டில் கிழிந்தன புவனம் என்ன,
திக்கிடை நின்ற யானை சிரம் பொதிர் எறிய, சிந்தி
உக்கன விசும்பின் மீன்கள் உதிர்ந்திட, தேவர் உட்க,–38-
அக்கணத்து – அந்தக் கணத்திலேயே; ஆயிர கோடித் தேரும் –
(மேற்கண்டவாறு இந்திரசித்தன் சினந்து கூறிய அளவில் அரக்க
வீரர்களுடைய) ஆயிரங்கோடித் தேர்களும்; திக்கிடை நின்ற யானை
சிரம் பொதிர் எறிய – எண் திசைகளிற் காவலாக நின்ற யானைகள்
தலை நடுக்கமுற்று அதிரவும்; விசும்பின் மின்கள் சிந்தி உக்கன
உதிர்ந்திட – வானத்திலே உள்ள விண் மீன்கள் சிதறிப் பொடியாய்
உதிரவும்; தேவர் உட்க – தேவர்கள் நெஞ்சங்குலைந்து நடுங்கவும்;
நேமிப்பாட்டில் புவனம் கிழிந்தன என்ன – சக்கரங்கள்
ஆழப்பதிதலால் நிலவுலகம் பிளவுற்றது என்னும்படி; ஆர்த்து
மண்டிப் புக்கன – ஆரவாரித்து நெருங்கிப் (போர்க்களத்தில்)
புகுந்தன.
—————
இலக்குவன் வஞ்சினம்
8479.
மாற்றம் ஒன்று. இளையவன் வளை வில் செங்கரத்து
ஏற்றினை வணங்கி நின்று, இயம்புவான்; ‘“இகல்-
ஆற்றலன் அரவு கொண்டு அசைப்ப, ஆர் அமர்
தோற்றனென்” என்று கொண்டு உலகம் சொல்லுமால்;–39-
இளையவன் – இளையோனாகிய இலக்குவன்; வளைவில்
செங்கரத்து ஏற்றினை வணங்கி நின்று – வளைந்த வில்லினைப்
பிடித்த சிவந்த கையினை உடைய ஆண்சிங்கம் போல்வானாகிய
இராமனை வணங்கி நின்று; மாற்றம் ஒன்று இயம்புவான் –
(பின்வருமாறு) ஒரு வார்த்தையைக் கூறுவானாயினான்; “இகல்
ஆற்றலன் அரவு கொண்டு அசைப்ப – ‘போரில் எதிர் நிற்கும்
ஆற்றலவனாகிய இந்திரசித்து நாகபாசத்தைக் கொண்டு இறுகப்
பிணித்தமையால்; ஆர் அமர் தோற்றனென் என்று கொண்டு –
அரிய போரில் யான் தோல்வியுற்றதாகக் கொண்டு; உலகம் சொல்லும்
– (என்னைக் குறித்து) உலகம் பழி கூறும்.
————
8480.
‘‘காக்கவும் கற்றிலன், காதல் நண்பரை;
போக்கவும் கற்றிலன், ஒருவன்; போய்ப் பிணி
ஆக்கவும் கற்றிலன்; அமரில் ஆர் உயிர்
நீக்கவும் கற்றிலன்” என்று நின்றதால்;–40-
காதல் நண்பரைக் காக்கவும் கற்றிலன் – (தன்பால்) அன்புடைய
நண்பர்களைக் காப்பாற்றவும் (ஆற்றலற்றான்) அறிந்திலன்; ஒருவன்
பொய்ப்பிணி போக்கவும் கற்றிலன் – (பகைவன்) ஒருவன்
வஞ்சனையாற் செய்த (நாகபாசமாகிய) பிணிப்பினைப் போக்குதற்கும்
அறிந்திலன்; வென்றி ஆக்கவும் கற்றிலன் – (பகைவனைத்
தொடர்ந்து பொருது) தனக்கு வெற்றியை உண்டாக்கிக் கொள்ளுதற்கும்
அறிந்திலன்; ஆர் உயிர் நீக்கவும் கற்றிலன் – (இந்நிலையில் தனது
பெருமை நிலைபெற) அரிய உயிரைத் துறப்பதற்கும் அறிந்திலன்;
என்று நின்றது – என்றுள்ள பழி (எனக்கு உலகில்) நிலை பெற்று
விட்டது.
——-
8481.
‘இந்திரன்பகை எனும் இவனை, என் சரம்
அந்தரத்து அருந் தலை அறுக்கலாது எனின்,
வெந் தொழிற் செய்கையன் விருந்தும் ஆய், நெடு
மைந்தரில் கடை எனப் படுவன், வாழியாய்!–41-
வாழியாய் – (யாவரையும்) வாழ்விக்க வல்லவனே! இந்திரன் பகை
எனும் இவனை – இந்திரனுக்குப் பகைவன் எனப் பேசப்படும் இவ்
இந்திரசித்தனை; என் சரம் அந்தரத்து அருந்தலை அறுக்கலாது
எனின் – எனது அம்பு விசும்பின் கண்ணே அரிய தலையினை
அறுத்துத் (தள்ளி) கொல்லாது (வறிது) செல்லுமாயின்; வெந்தொழிற்
செய்கையன் விருந்தும் ஆய் – வெம்மை வாய்ந்த கொலைத் தொழிலைத் தன் இயல்பான செய்கையாகக் கொண்ட
கூற்றுவனுக்குரிய விருந்தினனாக (யான்) ஆகி; நெடு மைந்தரில் கடை
எனப்படுவன் – (இவ்வுலகில் உயர்த்துக் கூறத்தகும்) பெருமை வாய்ந்த
வீரர்களிற் கடையானவன் என இழித்துரைக்கப்படும்
நிலையினனாவேன்.
———-
8482.
நின்னுடை முன்னர், இந் நெறி இல் நீர்மையான்-
தன்னுடைச் சிரத்தை என் சரத்தின் தள்ளினால்,-
பொன்னுடை வனை கழல் பொலம் பொன் தோளினாய்!-
என்னுடை அடிமையும் இசையிற்று ஆம்அரோ.–42-
பொன்னடை வனைகழல் பொலம்பொன் தோளினாய்! –
பொன்னால் அணிநலமுறப் புனைந்த வீரக்கழலினையும்
பொன்னணிகளையுடைய அழகிய தோள்களையும் உடைய
அண்ணலே! நின்னுடை முன்னர் – நினது (கண்) முன்பாக;
இந்நெறியில் நீர்மையன் தன்னுடைச் சிரத்தை – இந்த
அறமுறையற்ற தன்மையனாகிய இந்திரசித்தனது தலையினை; என்
சரத்தின் தள்ளினால் – எனது அம்பினால் அறுத்து
வீழ்த்துவேனாயின்; என்னுடை அடிமையும் இசையிற்று ஆம் – யான்
நின்பாற் கொண்ட அடிமைத்திறமும் போற்றத் தகும் புகழுடையதாகும்.
———-
8483.
‘கடிதினில் உலகு எலாம் கண்டு நிற்க, என்
சுடு சரம் இவன் தலை துணிக்கலாதுஎனின்,
முடிய ஒன்று உணர்த்துவென்; உனக்கு நான் முயல்
அடிமையின் பயன் இகந்து அறுக, ஆழியாய்!’–43-
ஆழியாய் – ஆணைச் சக்கரத்தை உடையவனே! கடிதினில் உலகு
எலாம் கண்டு நிற்க – விரைவினில் உலகம் எல்லாம் நோக்கி நிற்கும்
போழ்தே; என் சுடுசரம் இவன் தலை துணிக்கலாது எனின் –
என்னுடைய சுட்டழிக்க வல்ல அம்பு இந்த இந்திரசித்தனின் தலையை
அறுத்தெறியவில்லை என்றால்; முடிய ஒன்று உணர்த்துவேன் –
முடிவாக ஒரு பொருள் (உனக்கு) மொழிவேன்; உனக்கு நான் முயல்
அடிமையின் பயன் இகந்து அறுக – உனக்காக நான் முயல்கின்ற
அடிமைச் செயலின் பயன் (என்னை விட்டு) நீங்குவதாக;
———-
இராமன் பாராட்டு
8484.
வல்லவன் அவ் உரை வழங்கும் ஏல்வையுள்,
‘அல்லல் நீங்கினம்’ என, அமரர் ஆர்த்தனர்;
எல்லை இல் உலகங்கள் யாவும் ஆர்த்தன;
நல் அறம் ஆர்த்தது; நமனும் ஆர்த்தனன்.–44-
வல்லவன் அவ் உரை வழங்கும் ஏல்வையுள் – (சொல்லிய
வண்ணம் செய்ய) வல்லவனாகிய இலக்குவன் அத்தகைய வஞ்சின
மொழியைக் கூறிய அளவில்; அமரர் ‘அல்லர் நீங்கினம்’ என
ஆர்த்தனர் – வானவர்கள் ‘இனி நாம் துன்பம் நீங்கப் பெற்றேம்’ என
ஆரவாரித்தனர்; எல்லையில் உலகங்கள் யாவும் ஆர்த்தன –
எல்லையில்லாத உலகங்களிலுள்ள எல்லா உயிர்களும் (மகிழ்ச்சியால்)
ஆரவாரித்தன; நல் அறம் ஆர்த்தது – நன்மையை உடைய
அறக்கடவுளும் ஆரவாரித்தது; நமனும் ஆர்த்தனன் – கூற்றுவனும்
ஆரவாரித்தான்.
————-
8485.
முறுவல் வாள் முகத்தினன், முளரிக்கண்ணனும்.
‘அறிவ! நீ, “அடுவல்” என்று அமைதி ஆம்எனின்,
இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும்
வெறுவியர்; வேறு இனி விளைவது யாது?’ என்றான்.–45-
முளரிக் கண்ணனும் – செந்தாமரைக் கண்ணனாகிய இராமனும்;
முறுவல் வாள்முகத்தினன் – (இலக்குவனது வஞ்சினத்தைக் கேட்டு)
புன்சிரிப்போடும் கூடிய ஒளிபெற்ற முகத்தினனாகிய; அறிவ நீ
“அடுவல்” என்று அமைதி ஆம் எனின் – அறிவுடைய தம்பியே நீ
(பகைவரை) கொல்வேன்’ என முடிவு செய்து விட்டாய் எனின்;
இறுதியும், காவலும் இயற்றும் ஈசரும் வெறுவியர் – அழித்தல்
தொழிலையும், காத்தல் தொழிலையும் செய்யும் இரு பெருங்
கடவுளரும் தத்தமக்குரிய தொழிலை இழந்து வெறுமையுறுவர்; வேறு
இனி விளைவது யாது என்றான் – (நின் கருத்திற்கு) மாறாக இனி
இவ்வுலகில் நிகழக்கூடியது யாதுளது? என (இலக்குவனைப் பாராட்டிக்)
கூறினான்.
———
இராமனைத் தொழுது, இலக்குவன் போருக்கு எழுதல்
8486.
சொல் அது கேட்டு, அடி தொழுது, ‘சுற்றிய
பல் பெருந் தேரொடும் அரக்கர் பண்ணையைக்
கொல்வல்; இங்கு அன்னது காண்டிகொல்’ எனா,
ஒல்லையில் எழுந்தனன்-உவகை உள்ளத்தான்.–46-
சொல்வது கேட்டு அடி தொழுது – (இராமபிரான் உளமுவந்து
கூறிய) அம்மொழியினைக் கேட்டு (அப்பிரானுடைய) திருவடிகளை
வணங்கி; சுற்றிய பல் பெருந் தேரொடும் – சுற்றிச் சூழ்ந்த பலவாகிய
தேர்களுடனே; அரக்கர் பண்ணையைக் கொல்வல் – அரக்கர்
தொகுதியை இப்பொழுதே கொன்றொழிப்பேன்; இங்கு அன்னது
காண்டி கொல் – இங்கு அதனைக் காண்பாயாக; எனா – என்று கூறி;
உவகை உள்ளத்தான் – மகிழ்ச்சி நிரம்பிய மனத்தினனாகிய
இலக்குவன்; ஒல்லையில் எழுந்தனன் – விரைந்து போருக்குப்
புறப்பட்டான்.
———
8487.
அங்கதன் ஆர்த்தனன், அசனி ஏறு என,
மங்குல்நின்று அதிர்ந்தன வய வன் தேர் புனை
சிங்கமும் நடுக்குற; திருவின் நாயகன்
சங்கம் ஒன்று ஒலித்தது, கடலும் தள்ளுற.–47-
அங்கதன் ஆர்த்தனன் அசனி ஏறு என – (இலக்குவனைச்
சுமந்து செல்லும்) அங்கதன் இடியேற்றினைப் போலப் போர் முழக்கம்
செய்தான்; மங்குல் நின்று அதிர்ந்தன – (அதனால் விண்ணிடத்தே)
மேகங்கள் நின்று அதிர்ந்தன; வயவன் தேர் புனை சிங்கமும்
நடுக்குற – வீரனாகிய இந்திரசித்தன் தேரில் பூட்டியுள்ள சிங்கங்கள்
நடுக்கமுறவும்; கடலும் தள்ளுற – கடல் ஓசை பின்னிடவும்; திருவின்
நாயகன் சங்கம் ஒன்று ஒலித்தது – திருமகள் கேள்வனாகிய
இராமனது சங்கம் ஒன்று முழங்கியது.
———
8488.
எழு, மழு, சக்கரம், ஈட்டி, தோமரம்,
முழு முரண் தண்டு, வேல், முசுண்டி, மூவிலை,
கழு, அயில் கப்பணம், கவண் கல், கன்னகம்,
விழு மழைக்கு இரட்டி விட்டு, அரக்கர் வீசினார்.–48-
எழு, மழு, சக்கரம், ஈட்டி, தோமரம் – எழுக்கள், மழுக்கள்,
சக்கரங்கள், ஈட்டிகள், தோமரங்கள்; முழு முரண் தண்டு வேல்,
முசுண்டு, மூவிலை கழு – நிறைந்த வன்மை கொண்ட கதாயுதங்கள்,
வேற்படைகள், முசுண்டிகள், மூன்று இலைவடிவமான கழுக்கள்;
அயில் கப்பணம், கவண்கல், கன்னகம் – கூரிய கப்பணங்கள்,
கவணில் அமைத்து வீசுங்கற்கள், கன்னகங்கள் ஆகிய இப்படைகளை;
விழு மழைக்கு இரட்டி விட்டு, அரக்கர் வீசினார் – விண்ணினின்று
சொரியும் மழையைக் காட்டிலும் இரு மடங்காக அரக்கர்கள் வீசி
எறிந்தார்கள்.
———-
8489.
மீன் எலாம் விண்ணின்நின்று ஒருங்கு வீழ்ந்தென,
வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன;
தான் எலாம் துணிந்து போய்த் தகர்ந்து காந்தின;-
வேனிலான் அனையவன் பகழி வெம்மையால்.–49-
வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன – (மழைக்கு
இரட்டிப்பாய் அரக்கரால் வீசப்பெற்று) வான் முழுதும் மண் முழுதும்
மறையுமாறு வந்தனவான படைக்கலன்கள்; வேனிலான் அனையவன்
பகழி வெம்மையால் – வேனிற் காலத்துக்கு உரியவனான மன்மதனை
ஒத்த பேரழகினை உடைய இலக்குவனது அம்புகளின் கடுமையால்;
மீன் எலாம் விண்ணின் நின்று ஒருங்கு வீழ்ந்தென –
விண்மீன்களெல்லாம் விசும்பினின்றும் ஒருசேர வீழ்ந்தன எனும்படி;
தான் எலாம் துணிந்து போய்த் தகர்ந்து காந்தின – அனைத்தும் துண்டுபட்டுப்
பொடியாகச் சிதறி ஒளிவிட்டுக் கிடந்தன.
——–
8490.
ஆயிரம் தேர், ஒரு தொடையின், அச்சு இறும்;
பாய் பரிக் குலம் படும்; பாகர் பொன்றுவர்;
நாயகர் நெடுந் தலை துமியும், நாம் அற;
தீ எழும், புகை எழும், உலகும் தீயுமால்.–50-
ஒரு தொடையின் – (இலக்குவன்) ஒருமுறை தொடுத்த அம்பினால்;
ஆயிரம் தேர் அச்சு இறும் – (அரக்கர்களின்) ஆயிரந் தேர்கள்
அச்சு முறிந்து விழும்; பாய்பரிக் குலம்படும் – (அத்தேர்களிற்
பூட்டிய) தாவிச்செல்லும் குதிரைக் கூட்டங்கள் இறந்து விழும்; பாகர்
பொன்றுவர் – (அத்தேர்களின்) தேரோட்டிகள் இறப்பர்; நாம் அற –
அச்சம் நீங்கும்படி; நாயகர் நெடுந்தலை துமியும் –
(அத்தேர்களுக்குரிய) தலைவர்களின் பெரிய தலைகள் துணிபடும்;
தீயெழும், புகை எழும் – (அம்பு பட்ட இடங்களில்) தீ மேற்கிளம்பும்,
புகைப்படலம் மேல் எழும்; உலகும் தீயும் – (அதனால்) உலகமும்
தீய்ந்து வெதும்பும்.
———
8491.
அடி அறும் தேர்; முரண் ஆழி அச்ச இறும்;
கடி நெடுஞ் சிலை அறும்; கவச மார்பு இறும்;
கொடி அறும்; குடை அறும்; கொற்ற வீரர்தம்
முடி அறும்; முரசு அறும்; முழுதும் சிந்துமால்.–51-
தேர் அடி அறும் – (மற்றும் அவ்இலக்குவன் எய்த
அம்புகளினால்) தேர்களின் அடிப்பகுதி அற்றுச் சிதையும்; முரண்
ஆழி அச்சு இறும் – வலிய தேர்ச்சக்கரங்களின் அச்சு அற்றுச்
சிதையும்; கடி நெடுஞ்சிலை அறும் – வலிய நெடிய விற்கள் முறியும்;
கவச மார்பு இறும் – (வீரர்களின்) கவசம் அணிந்த மார்பு பிளக்கப்
பெறும்; கொடி, அறும், குடை அறும் – கொடிகள் அறுபடும்
(அத்துடன்) குடைகள் முறியும்; கொற்ற வீரர்தம் முடி அறும் –
வெற்றி மிக்க வீரர்கள் (அணிந்த) முடிகள் அறுந்துபோகும்; முரசு
அறும் – (வெற்றிக்கு அறிகுறியாக அடித்தற்கு வைத்துள்ள) வீர முரசு
கிழிந்துபடும்; முழுதும் சிந்துமால் – (இங்ஙனம்) எஞ்சுதல் இன்றி
அனைத்தும் அழிவனவாயின.
———-
8492.
‘இன்னது ஓர் உறுப்பு; இவை இனைய தேர் பரி;
மன்னவர் இவர்; இவர் படைஞர், மற்றுளோர்’
என்ன ஓர் தன்னையும் தெரிந்தது இல்லையால்-
சின்னபின்னங்களாய் மயங்கிச் சிந்தலால்.–52-
சின்ன பின்னங்களாய் மயங்கிச் சிந்தலால் – (போரரங்கில்
அனைவரும்) கண்டதுண்டமாகச் சிதறிக் கலந்து கிடந்தமையால்;
இன்னது ஓர் உறுப்பு – காணப்படும் இது இன்ன உறுப்பு; இவை
இனைய தேர் பரி – இவை இத்தன்மையவாகிய தேர்களும்
குதிரைகளும்; மன்னவர் இவர் – இவர் அரசர்; இவர் படைஞர் –
இவர்கள் படை வீரர்கள்; மற்றுளோர் என்ன – இவர்கள்
அவ்வரசரும். படைஞருமல்லாத தேர்ப்பாகர் முதலானோர் என்று
பகுத்துரைத்தற்கேற்ற; ஓர் தன்மையும் தெரிந்தது இல்லை – ஒரு
தன்மையும் தெரிந்தது இல்லையாம்.
———-
8493.
தந்தையர் தேரிடைத் தனயர் வன் தலை
வந்தன; தாதையர் வயிர வான் சிரம்
சிந்தின, காதலர்க்கு இயைந்த தேரிடை-
அந்தரத்து அம்பொடும் அற்று எழுந்தன.–53-
அந்தரத்து அம்பொடும் அற்று எழுந்தன – (அம்பினால்)
துணிக்கப்பட்டு அம்பொடும் விசும்பின் மேல் எழுந்தனவாகிய
தலைகளில்; தனயர் வன்தலை தந்தையர் தேரிடை வந்தன –
புதல்வர்களின் வலிய தலைகள் (அவருடைய) தந்தையர் தேர்களில்
வந்து வீழ்ந்தன; தாதையர் வயிர வான்சிரம் – தந்தையர்களின்
வலிமை வாய்ந்த தலைகள்; காதலர்க்கு இயைந்த தேரிடை சிந்தின –
(அவர்தம்) புதல்வர்கட்கு அமைந்த தேர்களிற் சிதறி வீழ்ந்தன.
———
8494.
செம் பெருங் குருதியின் திகழ்ந்த, செங் கண் மீன்
கொம்பொடும் பரவையில் திரியும் கொட்பு என-
தும்பை அம் தொடையலர் தடக் கை, தூணி வாங்கு
அம்பொடும் துணிந்தன சிலையொடு அற்றன.–54-
தும்பை அம் தொடையலர் தடக்கை – அழகிய தும்பை
மாலையை அணிந்த அரக்க வீரர்களுடைய பெரிய கைகள்; தூணி
வாங்கு அம்பொடும் துணிந்தன – அம்பறாத் தூணியி னின்றும்
பற்றி எடுக்கும் அம்பினோடும் துணிக்கப்பட்டனவாகி; சிலையொடு
அற்றன – (பற்றிய) வில்லுடன் அறுபட்டன; செங்கண் மீன்
கொம்பொடும் – சிவந்த கண்களை உடைய மீன்கள் கொம்புடன்;
பரவையில் திரியும் கொட்பு என – கடலிடை அலைந்து சுற்றும்
தன்மைக்கு ஒப்பாக; செம்பெருங் குருதியின் திகழ்ந்த – செந்நிறம்
வாய்ந்த குருதிப் பெருவெள்ளத்திலே விளங்கித் தோன்றின.
——–
8495.
தடிவன கொடுஞ் சரம் தள்ள, தள்ளுற
மடிவன கொடிகளும், குடையும், மற்றவும்,
வெடி படு பெரும் பிணக் களத்தில் மொய்த்தன,
படிவன, ஒத்தன, பறவைப் பான்மையா.–55-
தடிவன கொடுஞ்சரம் தள்ள, தள்ளுற மடிவன – வெட்டி
வீழ்த்துந் தன்மையனவாகிய கொடிய அம்புகள் வெட்டித் தள்ளுதலால்
தள்ளப்பட்டு வீழ்ந்து கிடப்பனவாகிய; கொடிகளும் குடையும் மற்றவும்
– கொடிகளும், குடைகளும் ஏனையவும்; வெடிபடு பெரும்பிணக்
களத்தில் மொய்த்தன – அச்சந்தரத்தக்க பெரும்பிணக்
குவியலையுடைய போர்க்களத்திலே நெருங்கியுள்ளவை;
படிவனபான்மையா பறவை ஒத்தன – (பிணங்களை உண்ணுதற்கு)
பறவைகள் பலவாகப் படியுந் தன்மையினை ஒத்தன.
———
8496.
சிந்துரங்களின் பருமமும், பகழியும், தேரும்,
குந்து வல் நெடுஞ் சிலை முதல் படைகளும், கொடியும்,
இந்தனங்களாய், இறந்தவர் விழிக் கனல் இலங்க,
வெந்த வெம் பிணம் விழுங்கின, கழுதுகள் விரும்பி.–56-
சிந்துரங்களின் பருமமும் பகழியும் தேரும் – யானைகளின்
மேல் இடும் தவிசும், அம்புகளும் தேரும்; குந்துவல் நெடுஞ்சிலை
முதல் படைகளும் கொடியும் – வளைந்த வலிய நெடிய வில்
முதலிய படைகளும், கொடியும்; இந்தனங்களாய் – விறகுகளாக
(அமைய) இறந்தவர் விழிக்கனல் இலங்க – இறந்த வீரர்களுடைய (சினம்
மிக்க) கண்களாகிய தீ (கொழுந்து விட்டு) விளங்க; வெந்த வெம்பிணம்
கழுதுகள் விரும்பி விழுங்கின – வெந்தன போன்ற வெம்மையுடைய
பிணங்களைப் பேய்கள் விரும்பி விழுங்கின.
———
8497.
சில்லி ஊடு அறச் சிதறின சில; சில, கோத்த
வல்லி ஊடு அற, மறிந்தன; புரவிகள் மடியப்
புல்லி மண்ணிடைப் புரண்டன சில; சில, போர் ஆள்
வில்லி சாரதியொடும் பட, திரிந்தன வெறிய.–57-
சில சில்லி ஊடு அறச் சிதறின – சில தேர்கள் சக்கரங்கள்
நடுவே முறியச் சிதறின; கோத்த சில வல்லி ஊடு அற மறிந்தன –
(ஒன்றோடு ஒன்று மோதி) பிணைந்த சில தேர்கள் குசைக்கயிறுகள்
இடையில் அறுபட்டொழிய குப்புற வீழ்ந்தன; சில, புரவிகள்
மடியப் புல்லி மண்ணிடைப் புரண்டன – சில தேர்கள் கட்டிய
குதிரைகள் இறந்து விழத் தரையிற் பொருந்தி உருண்டன; சில போர்
ஆள் வில்லி சாரதியொடும் பட வெறிய திரிந்தன – சில தேர்கள்,
போர்த்தொழிலை ஆள்பவனாகிய வில்வீரன் பாகனொடும் இறந்துபட
(யாரும் அமர்வாரின்றி) வெறுமையுடையனவாய்த் திரிந்தன.
—————-
8498.
அலங்கு பல் மணிக் கதிரன, குருதியின் அழுந்தி,
விலங்கு செஞ் சுடர் விடுவன, வெளி இன்றி மிடைந்த,-
குலம் கொள் வெய்யவர் அமர்க் களத் தீயிடைக் குளித்த
இலங்கை மா நகர் மாளிகை நிகர்த்தன-இரதம்.–58-
அலங்கு பல்மணிக் கதிரன – விட்டு விளங்கும் பலவகை
மணிகளின் ஒளிக்கற்றைகளை உடையனவும்; குருதியின் அழுந்தி
விலங்கு செஞ்சுடர் விடுவன – இரத்த வெள்ளத்தில்
அழுந்தினமையால் மேலே பரவிப்பாயும் செந்நிற ஒளியை வீசுவனவும்
ஆகி; வெளி இன்றி மிடைந்த இரதம் – இடைவெளி இன்றி
நெருங்கிய தேர்கள்; குலங்கொள் வெய்யவர் மறுகிடத் – கூட்டமாகப்
பொருந்திய கொடியோராகிய அரக்கர்கள் மனங்கலங்கி வருந்த;
தீயிடைக் குளித்த இலங்கை மாநகர் மாளிகை நிகர்த்தன
– (அநுமனாற் கொளுத்தப்பட்ட) தீயினுள்ளே அழுந்திய இலங்கைப்
பெருநகரத்தினுள்ளேயுள்ள மாளிகைகளை ஒத்துத் தோன்றின.
——-
இராமனும் அம்புசொரிதலால் இந்திரசித்து தனிப்படுதல்
8499.
ஆன காலையில், இராமனும், அயில் முகப் பகழி
சோனை மாரியின் சொரிந்தனன், அனுமனைத் தூண்டி;
வான மானங்கள் மறிந்தெனத் தேர் எலாம் மடிய,
தானும் தேருமே ஆயினன், இராவணன் தனயன்.–59-
ஆன காலையில் இராமனும் அனுமனைத் தூண்டி –
அப்பொழுது இராமபிரானும் (தன்னைத் தாங்கியுள்ள) அநுமனை
(இந்திரசித்தன் முன்னர்ச்) செல்லுமாறு செலுத்தி; அயில்முகப் பகழி
சோனை மாரியிற் சொரிந்தனன் – கூரிய முனையுடன் கூடிய
அம்புகளை விடாப்பெருமழை போற் சொரிந்தான்; (அதனால்) தேர்
எலாம் வானமானங்கள் மறிந்தென மடிய – அரக்கர்களுடைய
தேர்களெல்லாம், வான்வழியே செல்லும் விமானங்கள், குப்புற
வீழ்ந்தாற் போன்று சிதைந்து வீழ்ந்தமையால்; இராவணன் தனயன்
தானும் தேருமே ஆயினன் – இராவணன் மைந்தனாகிய இந்திர சித்து
தானும் தன்னுடைய தேருமேயாகத் தனிப்பட்டான்.
———–
இந்திரசித்து ஒன்று கூறத் தொடங்குதல்
8500.
பல் விலங்கொடு புரவிகள் பூண்ட தேர்ப் பரவை
வல் விலங்கல்போல் அரக்கர்தம் குழாத்தொடு மடிய,
வில் இலங்கிய வீரரை நோக்கினன், வெகுண்டான்,
சொல், விலங்கலன், சொல்லினன்-இராவணன் தோன்றல்.–60-
பல் விலங்கொடு புரவிகள் பூண்ட தேர்ப் பரவை – பல
விலங்குகளுடன் குதிரைகள் பூட்டப்பட்ட தேர்த் தொகுதிகள்; வல்
விலங்கல் போல் அரக்கர் தம் குழாத்தொடு மடிய – வலிய
மலைகளைப் போன்று அரக்கர் கூட்டத்துடன் மடிந்து கிடக்கக்
(கண்ட); இராவணன் தோன்றல் – இராவணன் மைந்தனாகிய
இந்திரசித்து; வில் இலங்கிய வீரரை நோக்கினன் வெகுண்டான் –
(அவற்றை) விற்றொழிலால் அழித்தொழித்த வீரர்களாகிய இராம
இலக்குவர் இருவரையும் நோக்கி வெகுண்டவனாகி; விலங்கலன் சொல்
சொல்லினன் – (போரிற்) பின்னிடாதவனாய் ஒரு சொல்லைச்
சொன்னான்.
———
8501.
‘இருவிர் என்னொடு பொருதிரோ? அன்றுஎனின், ஏற்ற
ஒருவிர் வந்து, உயிர் தருதிரோ? உம் படையோடும்
பொருது பொன்றுதல் புரிதிரோ? உறுவது புகலும்;
தருவல், இன்று உமக்கு ஏற்றுளது யான்’ எனச் சலித்தான்.–61-
இருவிர் என்னொடு பொருதிரோ? – (இராம இலக்குவராகிய)
நீங்கள் இருவரும் (ஒருசேர இயைந்து) என்னுடன் போர்
செய்கின்றீர்களா? அன்று எனின் ஏற்ற ஒருவர் வந்து உயிர்
தருதிரோ? – அன்றேல் (ஒருவிர் ஒருவிராய்த் தனித்து) வந்து
உயிரைத் தருகின்றீர்களா? உம்படையொடும் பொருது பொன்றுதல்
புரிதிரோ? – (அல்லது) நுமக்குரிய (வானர) சேனைகளோடும் கூடி
(என்னுடன்) போர் செய்து இறந்தொழிலைச் செய்கின்றீர்களா? உறுவது
புகலும் – (இவற்றுள் ஆற்றலுக்கும் விருப்பத்திற்கும்) பொருந்துவது
ஒன்றைச் சொல்வீராக; தருவல், இன்று உமக்கு ஏற்றுளது யான்
எனச் சலித்தான் – நுமக்கு ஏற்புடையதொன்றை இன்று யான்
தருகின்றேன் எனச் சிதைந்து கூறினான் (இந்திரசித்து).
————-
இலக்குவன் தன் வஞ்சினம் பற்றிக் கூறுதல்
8502.
‘வாளின், திண் சிலைத் தொழிலினின், மல்லினின், மற்றை
ஆளுற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும், அமரில்
கோளுற்று, உன்னொடு குறித்து, அமர் செய்து,
உயிர் கொள்வான்
சூளுற்றேன்; இது சரதம்’ என்று, இலக்குவன் சொன்னான்.–62-
‘வாளின், திண்சிலைத் தொழிலினின் மல்லினின் – ‘வாள்
கொண்டும், உறுதியான வில்லினாலும், மற்போர் புரிந்தும்; மற்றை
ஆளுற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும் – ஏனைய ஆளுதல்
பொருந்தி எண்ணப்பட்ட போர்க்கருவிகள் எல்லாவற்றாலும்; அமரில்
கோளுற்று – போரில் வலிமையை மேற்கொண்டு; உன்னொடு குறித்து
அமர் செய்து உயிர் கொள்வான் சூளுற்றேன் – ‘உன் நேர் நின்று,
போர் புரிந்து உன் உயிரைக் கொள்ளும் பொருட்டு வஞ்சினம்
கூறினன்; இது சரதம் என்று, இலக்குவன் சொன்னான் – இது உறுதி
என (இந்திரசித்தனை நோக்கி) இலக்குவன் மறுமொழி கூறினான்.
———–
இந்திரசித்தன் மறுமொழி
8503.
‘முன் பிறந்த உன் தம்முனை முறை தவிர்த்து, உனக்குப்
பின்பு இறந்தவன் ஆக்குவென்; பின் பிறந்தோயை
முன்பு இறந்தவன் ஆக்குவென்; இது முடியேனேல்,
என், பிறந்ததனால் பயன் இராவணற்கு?’ என்றான்.–63-
முன் பிறந்த உன்தம் முனை – (உனக்கு) முன்னே பிறந்த உன்
அண்ணனாகிய இராமனை; முறை தவிர்த்து – (கால)
முறைமையினின்றும் நீக்கி; உனக்குப் பின்பு இறந்தவன் ஆக்குவென்
– உனக்குப் பிறகு இறந்தவனாகச் செய்வேன்; பின் பிறந்தோயை
முன்பு இறந்தவன் ஆக்குவென் – பின் பிறந்த தம்பியாகிய உன்னை
(அண்ணனுக்கு) முன்னர் இறந்தவனாகச் செய்வேன்; இது
முடியேனேல் – இதனை நான் செய்து முடிக்காமற் போனால்;
இராவணற்குப் பிறந்ததனால் பயன் என்? என்றான் –
இராவணனுக்கு மகனாகப் பிறந்ததனால் உற்ற பயன் யாது? என
(இலக்குவனை நோக்கி) கூறினான்.
————-
8504.
‘இலக்குவன் எனும் பெயர் உனக்கு இயைவதே என்ன,
இலக்கு வன் கணைக்கு ஆக்குவென்; “இது புகுந்து
இடையே
விலக்குவன்” என விடையவன் விலக்கினும், வீரம்
கலக்குவன்; இது காணும், உன் தமையனும் கண்ணால்.–64-
இலக்குவன் எனும் பெயர் உனக்கு இயைவதே என்ன –
இலக்குவன் எனும் பெயர் உனக்குத் தக்கதே என்று (யாவரும்)
கருதுமாறு; வன் கணைக்கு இலக்கு ஆக்குவென் – (உன்னை
என்னுடைய) வலிய அம்பினுக்கு இலக்கு ஆக்குவென்; “இது புகுந்து
இடையே விலக்குவன்” என விடையவன் விலக்கினும் – (யான்
செய்யும்) “இப்போரினை விலக்குவேன்’ எனக் கூறி எருதினை
வாகனமாக உடைய உருத்திர மூர்த்தியே இடையிற் புகுந்து (பொருது)
விலக்கினாலும்; வீரம் விலக்குவன் – (அவருடைய அத்தகைய)
வீரத்தைத் தடுத்து நீக்குவேன்; உன் தமையனும் கண்ணால் இது
காணும் – இதனை (உனது அழிவினை) உன் அண்ணனான இராமனும்
(செயலற்று) கண்களாற் காண்பான்.
———
8505.
‘அறுபது ஆகிய வெள்ளத்தின் அரக்கரை அம்பால்,
இறுவது ஆக்கிய இரண்டு வில்லீரும் கண்டு இரங்க,
மறுஅது ஆக்கிய எழுபது வெள்ளமும் மாள,
வெறுவிது ஆக்குவென், உலகை இக் கணத்தின் ஓர்
வில்லால்.–65-
அறுபது வெள்ளத்தின் ஆக்கிய அரக்கரை – அறுபது வெள்ளம்
என்னும் தொகையினராய் அணிவகுத்து நிறுத்திய அரக்க
வீரர்களையெல்லாம்; அம்பால் இறுவது ஆக்கிய – அம்புகளினால்
இறந்தொழியும் படி செய்த; இரண்டு வில்லீரும் கண்டு இரங்க – இரு வில்லாளிகளான நீவீர் இருவருங் கண்டு
வருந்துமாறு; மறுவது ஆக்கிய எழுபது வெள்ளமும்மாள –
(எமக்குப்) பழியினை உண்டாக்கிய எழுபது வெள்ள (வானரச்)
சேனையும் இறந்தொழியுமாறு செய்து; உலகை இக்கணத்தின் ஓர்
வில்லால் வெறுவிது ஆக்குவன் – உலகினை இவ்வொரு
கணத்திலேயே (எனது) ஒரு வில்லினால் வெறுமை உடையதாகுமாறு
அழிப்பேன்.
———
8506.
‘கும்பகன்னன் என்று ஒருவன், நீர் அமரிடைக் கொன்ற
தம்பி, அல்லன் நான்; இராவணன் மகன்; ஒரு தமியேன்;
எம்பிமாருக்கும், என் சிறு தாதைக்கும், இருவீர்
செம் புணீர்கொடு கடன் கழிப்பேன்’ எனத் தீர்ந்தான்.–66-
நீர் அமரிடைக் கொன்ற – நீர் போரில் (அங்க அங்கமாகச்)
சிதைத்தழித்த; கும்பகன்னன் என்று – கும்ப கன்னன் என்று பெயர்
படைத்த ஒருவனோ; தம்பி அல்லன் நான் – அல்லது என் தம்பிமார்
போன்றவனோ அல்லேன் நான்; இராவணன் மகன் ஒரு தமியேன் –
இராவணன் மகன் (யான்) ஆனால் (அவன் மக்களான அக்ககுமாரன்,
அதிகாயன் என்பார் போன்று அல்லேன்) (உம்மைக் கொல்லவல்ல)
ஒப்பற்றுத் தனித்த ஆற்றலுடையேன்; எம்பிமாருக்கும் என்சிறு
தாதைக்கும் – (உம்மால் இறந்த) என் தம்பியர்க்கும் என் சிறிய
தந்தையான கும்பகன்னருக்கும்; இருவீர் செம்புணீர் கொடு கடன்
கழிப்பேன் எனத் தீர்ந்தான் – உங்கள் இருவருடைய குருதியாகிய
புனலைக் கொண்டு (நீர்க்கடன்களை) இறுதிக் கடனைச் செய்வேன்
எனக் கூறி முடித்தான்.
————
இலக்குவன் மாற்றுரை
8507.
‘அரக்கர் என்பது ஓர் பெயர் படைத்தீர்க்கு எலாம்
அடுத்த,
புரக்கும் நன் கடன் செய உளன், வீடணன் போந்தான்;
கரக்கும் நுந்தைக்கு நீ செயக் கடவன கடன்கள்,
இரக்கம் உற்று, உனக்கு அவன் செயும்’ என்றனன்,
இளையோன்.–67-
அரக்கர் என்பது ஓர் பெயர் படைத்தீர்க்கு எலாம் – அரக்கர்
என்று கூறப்படுவதோர் பெயருடையீராகிய நும் இனத்தார்க்கெல்லாம்;
அடுத்த புரக்கும் நன்கடன் – நிகழ்வதாக உள்ளதும் (உயிர்)
ஈடேறுவதற்குரியதுமான சிறந்த ஈமக்கடன்களை; செய வீடணன்
போந்தான் உளன் – செய்தற்கு (உன் சிற்றப்பனாகிய) வீடணன்
எம்மை அடைந்துள்ளான்; கரக்கும் நுந்தைக்கு நீ செயக்கடவன
கடன்கள் – (இறந்து) மறையும் நும் தந்தையாகிய இராவணனுக்கு
(மைந்தனாகிய) நீ செய்தற்குரிய (ஈமக்) கடன்களை; இரக்கம் உற்று
உனக்கு அவன் செயும் – (நீ இப்போதே இறக்கப்போகின்றாய்
ஆதலால்) பெரிதும் துயருற்று உனக்கு அவன் செய்யப்போகின்றான்;
என்றனன் இளையோன் – என்று கூறினான் இலக்குவன்.
——–
இந்திரசித்தன் – இலக்குவன் கடும் போர்
8508.
ஆன காலையின், அயில் எயிற்று அரக்கன்
நெஞ்சு அழன்றான்,
வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய,
பால் நல் வேலையைப் பருகுவ சுடர் முகப் பகழி,
சோனை மாரியின் இரு மடி மும் மடி சொரிந்தான்.–68-
ஆன காலையில் அயில் எயிற்று அரக்கன் நெஞ்சு அழன்றான்
– (அவ்வாறு இலக்குவன் கூறிய) அப்பொழுது கூரிய பற்களை உடைய
அரக்கனாகிய இந்திரசித்து மனம் கொதிப்புற்றவனாகி; பால் நல்
வேலையைப் பருகுவ, சுடர்முகப் பகழி – நல்ல பால் போலும்
(வானர சேனைகளாகிய) கடலைப் பருகி வற்றச் செய்யும்
ஆற்றலுடையனவாகிய ஒளி பொருந்திய முனையினையுடைய
அம்புகளை; வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய –
வானிடமும், மண்ணிடமும், திசைகளும் மறையும்படி; சோனை
மாரியின் இருமடி மும்மடி சொரிந்தான் – விடாத பெரு மழையினும்
இரு மடங்கு மும்மடங்கு (மிகுதியாகப்) பொழிந்தான்.
——–
8509.
அங்கதன்தன்மேல் ஆயிரம்; அவற்றினுக்கு இரட்டி,
வெங் கண் மாருதி மேனிமேல்; வேறு உள வீரச்
சிங்கம் அன்னவர் ஆக்கைமேல் உலப்பு இல செலுத்தி,
எங்கும் வெங் கணை ஆக்கினன்-இராவணன் சிறுவன்.–69-
இராவணன் சிறுவன் அங்கதன் தன்மேல் ஆயிரம் – இராவணன்
மகனான இந்திரசித்து அங்கதன் மீது ஆயிரம் அம்புகளையும்;
வெங்கண் மாருதி மேனிமேல் அவற்றினுக்கு இரட்டி – (சினத்தால்)
வெம்மை மிக்க கண்களையுடைய வாயுவின் மகனான அனுமன்
மேனியின் மேல் அவற்றுக்கு இருமடங்கு (ஈராயிரம்) அம்புகளையும்;
வேறு உளவீரச் சிங்கம் அன்னவர் ஆக்கைமேல் உலப்பில
செலுத்தி – அவர்களின் வேறாக உள்ள சிங்க ஏற்றினை
ஒத்தவர்களாகிய வீரர்களின் உடம்பின்மேல் கணக்கிட முடியாத
அம்புகளையும் செலுத்தி; எங்கும் வெங்கணை ஆக்கினன் –
போர்க்களமெங்கும் (தன்னடைய) கொடிய அம்புகளே நிரம்பும்படி
செய்தான்.
———
8510.
இளைய மைந்தன்மேல், இராமன்மேல், இராவணி இகலி,
விளையும் வன் தொழில் வானர வீரர்மேல், மெய் உற்று
உளையும் வெஞ் சரம் சொரிந்தனன்; நாழிகை ஒன்று,
வளையும் மண்டலப் பிறை என நின்றது, அவ் வரி வில்.–70-
இராவணி – இராவணன் மகனான இந்திரசித்து; இளைய மைந்தன்
மேல் இராமன் மேல் – இளையோனாகிய இலக்குவன் மீதும் இராமன்
மீதும்; வன்தொழில் விளையும் வானர வீரர் மேல் – வலிய
போர்த்தொழிலை விளைவிக்கின்ற வானர வீரர்கள் மீதும்; இகலி –
மாறுபாடு கொண்டு; மெய்யுற்று உளையும் வெஞ்சரம் சொரிந்தனன்
– அவர்தம் உடம்புகளில் தைத்து வருத்தும் வண்ணம் வெம்மையுடைய
அம்புகளை (மழை போல் மிகுதியாகச்) சொரிந்தான்; அவ்வரிவில் –
அவ்விந்திரசித்தனுடைய கட்டமைந்த வில்லானது; வளையும்
மண்டலப் பிறை என -வளைந்து தோன்றுகின்ற வான மண்டலத்திலுள்ள பிறைச் சந்திரன்
போல; நாழிகை ஒன்று நின்றது – ஒரு நாழிகை அளவு (அம்புகளைத்
தொடர்ந்து எய்யும் தொழிலில் நிலைத்து) நின்றது.
வடமொழியில் தசரதன் மைந்தன் தாசரதி என்றாற்போலத்
தமிழிலும் இராவணன் மகன் இராவணி என வருமாறு புதிய
வழக்கினைப் புகுத்தினார்.
————
8511.
பச்சிமத்தினும், மருங்கினும், முகத்தினும், பகழி,
உச்சி முற்றிய வெய்யவன் கதிர் என உமிழ,
கச்சம் உற்றவன் கைத் துணைக் கடுமையைக் காணா,
அச்சம் உற்றனர், கண் புதைத்து ஒடுங்கினர், அமரர்.–71-
கச்சமுற்றவன் – (போர்) ஆடையை இறுகக் கட்டிப் போர்
செய்பவனாகிய இந்திரசித்து; உச்சி முற்றிய வெய்யவன் கதிரென –
உச்சிப் பொழுதில் முற்றிய வெம்மை உடையவன் ஆன சூரியனுடைய
கதிர்களைப் போன்று; பச்சிமத்தினும் முகத்தினும் மருங்கினும் பகழி
உமிழ – (இராம இலக்குவர் முதலானோரின்) மேற்புறத்தும், முகத்திலும்
இரு பக்கங்களினும் அம்புகளைச் செலுத்த; கைக்கணைக் கடுந்தொழில்
காண – (அங்ஙனம் செலுத்தப் பெற்ற) (அவனது) கையின் கணிருந்து
புறப்பட்ட அம்புகளின் கொடுந்தொழிலைக் காணுதற்கு; அமரர்
அச்சம் உற்றனர் கண் புதைத்து ஒடுங்கினர் – தேவர்கள்
அச்சமுற்றவர்களாய்க் கண்களைக் (கைகளாற்) பொத்தி மூடிக்கொண்டு
ஒடுங்கி நடுக்கமுற்றார்கள்.
——–
8512.
மெய்யில் பட்டன பட, படாதன எலாம் விலக்கி,
தெய்வப் போர்க் கணைக்கு அத்துணைக்கு அத்துணைச்
செலுத்தி,
ஐயற்கு ஆங்கு இளங் கோளரி, அறிவு இலான் அறைந்த
பொய்யின் போம்படி ஆக்கினன், கடிதினின் புக்கான்.–72-
ஐயற்கு ஆங்கு இளங்கோளரி கடிதினின் புக்கான் –
தலைவனாகிய இராமனுக்கு இளைய வலிய சிங்கம் போன்றவனாகிய
இலக்குவன், விரைந்து போர் செய்ய முற்பட்டவனாகி; மெய்யில்
பட்டன பட, படாதன எலாம் விலக்கி – தன் உடலில் பட்டனவாகிய
அம்புகள் தைத்துத் தோன்ற, தைக்கப் பெறாதனவாகிய அம்புகள்
அனைத்தையும் (தனது அம்புகளால்) தடுத்து நீக்கி; தெய்வப் போர்க்
கணைக்கு அத்துணைக்கு அத்துணை செலுத்தி – (இந்திரசித்தன்
ஏவிய) தெய்வத்தன்மையுள்ள அம்புகளுக்கு அந்தந்த அம்புகளின்
எண்ணிக்கைக்குத் தக அவ்வவற்றைச் செலுத்தி; அறிவிலான் அறைந்த
பொய்யின் போம்படி போக்கினான் – (அவ்வம்புகள் அனைத்தையும்)
அறிவில்லாதவன் கூறிய பொய்மொழிகளை ஒத்து விரைவில்
அழிந்தொழியுமாறு விலக்கிப் போக்கினான்.
———-
8513.
பிறகின் நின்றனன் பெருந்தகை, இளவலைப் பிரியான்;
‘அறன் இது அன்று’ என, அரக்கன்மேல் சரம் துரந்து
அருளான்;
இறவு கண்டிலர் இருவரும், ஒருவரை ஒருவர்;
விறகின் வெந்தன, விசும்பிடைச் செறிந்தன விசிகம்.–73-
பெருந்தகை – பெருந்தகைமையை உடையவனாகிய இராமன்; இது
அறன்று என – (இலக்குவனும், இந்திரசித்தும் தனித்து நின்று
பெரும்போரில் தான் இடையே புகுந்து அம்பு தொடுத்தல்) போர்
அறம் ஆகாதென எண்ணி; அரக்கன் மேல் சரம் துரந்து அருளான்
– அரக்கனாகிய இந்திரசித்தன் மேல் அம்பு தொடுக்காதவனாகி;
இளவலைப் பிரியான் பிறகின் நின்றனன் – இலக்குவனைப்
பிரியாதவனாய் அவன் பின்புறத்திலேயே வாளா நின்றான்; இருவரும்
ஒருவரை ஒருவர் இறவு கண்டிலர் -(இலக்குவன் இந்திரசித்து என்னும்) இருவரும், ஒருவரை ஒருவர்
(வெற்றியினால்) மேம்படுவதை (யாரும்) பார்த்தாரில்லை; விசிகம்
விசும்பிடைச் செரிந்தன விறகின் வெந்தன – (அவ்விருவராலும்
எய்யப்பட்டனவாய்) வானிடத்தே நெருங்கிய அம்புகள்
(தீயிடைப்பட்ட) விறகினையொத்து வெந்து சாம்பராயின.
—————
8514.
மாடு எரிந்து எழுந்து, இருவர் தம் கணைகளும் வழங்க,
காடு எரிந்தன; கன வரை எரிந்தன; கனக
வீடு எரிந்தன; வேலைகள் எரிந்தன; மேகம்
ஊடு எரிந்தன; ஊழியின் எரிந்தன, உலகம்.–74-
இருவர் தம் கணைகளும் – (இலக்குவன், இந்திரசித்து என்ற)
இருவருடைய அம்புகளும்; மாடு எரிந்து எழுந்து வாங்க –
பக்கங்களில் அனல் வீசி எழுந்து (யாண்டும்) பரவிச் செல்லுதலால்;
காடு எரிந்தன, கனவரை எரிந்தன – காடுகள் தீப்பற்றி எரிந்தன.
பருமையுடைய மலைகள் எரிந்தன; கனக வீடு எரிந்தன வேலைகள்
எரிந்தன – பொன்மயமான (இலங்கையின்) வீடுகள் எரிந்தன. கடல்கள்
வெதும்பின; மேகம் ஊடு எரிந்தன ஊழியின் உலகம் எரிந்தன –
மேகங்களின் (நீர் சுவறி) உட்புறமும் எரிந்தன. ஊழிக்காலத்தை ஒத்து
உலகங்களும் எரிந்தன.
———
8515.
படம் கொள் பாம்பு-அணை துறந்தவற்கு இளையவன்,
பகழி,
விடம் கொள் வெள்ளத்தின்மேலன வருவன விலக்கி,
இடங்கர்ஏறு அன எறுழ் வலி அரக்கன் தேர் ஈர்க்கும்
மடங்கல் ஐ-இரு நூற்றையும் கூற்றின்வாய் மடுத்தான்.–75-
படம் கொள் பாம்பு அணை துறந்தவற்கு இளையவன் –
படத்தினைக் கொண்ட (ஆதிசேடன் என்ற) பாம்புப் படுக்கையை
விட்டு (த்தசரதன் மகனாக) அவதரித்த (திருமாலாகிய) இராமனுடைய
தம்பி இலக்குவன்; வெள்ளத்தின் மேலன வருவன – வெள்ளத்தினும்
அதிகமாக வருவனவாகிய; விடங் கொள் பகழி விலக்கி – விடத்தைக்
தன்னிடம் கொண்ட அம்புகளைத் தடுத்து; எறுழ் வலி அரக்கன் தேர்
– மிக்க வலிமையுடைய அரக்கனாகிய இந்திரசித்தன் தேரினை;
இடங்கர் ஏறு என ஈர்க்கும் – (குருதி வெள்ளத்தில்) ஆண்
முதலையினை ஒத்து இழுத்துச் செல்லும்; மடங்கல் ஐ-இருநூற்றையும்
கூற்றின்வாய் மடுத்தான் – சிங்கங்கள் ஆயிரத்தையும் கூற்றுவன்
வாயுட் புகுமாறு கொன்றொழித்தான்.
———-
8516.
தேர் அழிந்திட, சேமத் தேர் பிறிது இலன், செறிந்த
ஊர் அழிந்திடத் தனி நின்ற கதிரவன் ஒத்தான்;
‘பார் அழிந்தது, குரங்கு எனும் பெயர்’ எனப் பகைத்த
சூர் அழிந்திடத் துரந்தனச் சுடு சரம் சொரிந்தான்.–76-
தேர் அழிந்திட சேமத்தேர் பிறி்து இலன் – (தன்) தேர் அழிந்து
பட (ஏறுதற்கு) சேமத்தேர் பிறிதொன்றும் இல்லாதவனாகிய
இந்திரசித்து; செறிந்த ஊர் அழிந்திடத் தனிநின்ற கதிரவன்
ஒத்தான் – நெருங்கியமைந்த ஊர்கோள் அழிந்து மறையத் தனித்து
நின்ற கதிரவனை ஒத்துத் தோன்றியவனாய்; பார் அழிந்தது, குரங்கு
எனும் பெயர் என – பூமியின் கண் குரங்கு என்னும் (இனமேயன்றிப்)
பெயரும் அழிந்தொழிந்தது என்னும் படியாக; பகைத்த சூர்
அழிந்திடத் துரந்து அனச் சுடுகரம் சொரிந்தான் – பகை கொண்டு
எதிர்த்த சூரபதுமன் அழியும் படியாக (முருகப்பெருமானால்)
ஏவப்பெற்ற வேற்படையினை ஒத்த சுட்டழிக்குந்தன்மை வாய்ந்த
அம்புகளை (வானரப் படைமீது) பொழிந்தான்.
——–
8517.
அற்ற தேர்மிசை நின்று போர் அங்கதன் அலங்கல்
கொற்றத் தோளினும், இலக்குவன் புயத்தினும், குளித்து
முற்ற, எண் இலா முரண் கணை தூர்த்தனன்; முரண்
போர்,
ஒற்றைச் சங்கு எடுத்து ஊதினான், உலகு எலாம் உலைய.–77-
அற்ற தேர்மிசை நின்று – (இந்திரசித்து) அறுபட்டுச் சிதைந்த
(தன்) தேரின்மேல் நின்று; போர் அங்கதன் அலங்கல் கொற்றத்
தோளினும் – போர் வலி மிக்க அங்கதனுடைய மாலையணிந்த வெற்றி
பொருந்திய தோளின் மேலும்; இலக்குவன் புயத்தினும் குளித்து
முற்ற – இலக்குவன் தோளிலும் அழுந்தி நிறையுமாறு; எண் இலா
முரண்கணை தூர்த்தனன் – அளவில்லாத வலிய அம்புகளைச்
சொரிந்து நிரப்பினான்; உலகு எலாம் உலைய முரண்போர் ஒற்றைச்
சங்கு எடுத்து ஊதினான் – உலகங்க ளெல்லாம் நடுங்கும்படியாக
(தனது) ஒப்பற்ற சங்கினை எடுத்து ஊதினான்.
———-
8518.
சங்கம் ஊதிய தசமுகன் தனி மகன் தரித்த
கங்கணத்தொடு கவசமும் மூட்டு அறக் கழல,
வெங் கடுங் கணை ஐ-இரண்டு உரும் என வீசி,
சி்ங்கஏறு அன்ன இலக்குவன் சிலையை நாண்எறிந்தான்.–78-
சிங்க ஏறு அன்ன இலக்குவன் – ஆண் சிங்கத்தினை ஒத்த
இலக்குவன்; சங்கம் ஊதிய தசமுகன் தனிமகன் தரித்த – (வெற்றிச்)
சங்கினை ஊதிய இராவணனின் ஒப்பற்ற மகனாகிய இந்திர சித்து
அணிந்திருந்த; கங்கணத்தொடு கவசமும் மூட்டு அறக் கழல – வீர
கங்கணத்துடன் (மார்பிலணிந்த) கவசமும் மூட்டுவாய் விண்டு
கழலும்படி; வெங்கடுங்கணை ஐ-இரட்ணடு உரும் என வீசி –
வெம்மையும் விரைவும் வாய்ந்த அம்புகள் பத்தினை இடியேறு
என்னும்படி எய்து; சிலையை நாண் எறிந்தான் – தன் வில்லின்
நாணைத் தெறித்துப் பேரொலி எழச் செய்தான்.
——–
இலக்குவன் வெற்றிக்கு வானரர் ஆர்த்தல்
8519.
கண்ட கார் முகில் வண்ணனும், கமலக்கண் கலுழ,
துண்ட வெண் பிறை நிலவு என முறுவலும் தோன்ற,
அண்டம் உண்ட தன் வாயினால், ‘ஆர்மின்’ என்று
அருள,
‘விண்டது அண்டம்’ என்று, உலைந்திட ஆர்த்தனர்
வீரர்.–79-
கண்ட கார் முகில் வண்ணனும் கமலக்கண் கலுழ – (தம்பியின்
போர் வன்மையைக்) கண்ட கருமுகில் வண்ணனாகிய இராமனும்,
செந்தாமரை போலும் கண்கள் மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்த; துண்ட
வெண் பிறை நிலவு என முறுவலும் தோன்ற – துண்டமாகிய
வெள்ளிய பிறைச் சந்திரனது நிலவினைப் போன்று (தன் முகத்தில்)
புன்சிரிப்பின் ஒளி தோன்ற! அண்டம் உண்ட தன் வாயினால்
‘ஆர்மின்’ என்று அருள – அண்டத்தை உண்ட தன் வாயினால் (நம்
படை வீரர் அனைவரும்) ‘ஆரவாரம் செய்வீர்களாக’ எனப்
பணித்தருள; விண்டது அண்டம் என்று உலைந்திட வீரர்
ஆர்த்தனர் – ‘இவ்வண்டம் பிளவுற்றது’ என்று உலகத்தார்
நடுங்கும்படியாக (வானர) வீரர்கள் (பேரொலியுண்டாக வாய் விட்டு)
ஆரவாரித்தார்கள்.
———–
இலக்குவன், அயன்படை தொடப்புக இராமன் தடுத்தல்
8520.
கண் இமைப்பதன் முன்பு போய் விசும்பிடைக் கரந்தான்;
அண்ணல், மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் ஆகி,
பண்ணவற்கு, ‘இவன் பிழைக்குமேல், படுக்கும் நம்
படையை;
எண்ணம்மற்று இலை; அயன் படை தொடுப்பென்’ என்று
இசைத்தான்.–80-
கண் இமைப்பதன் முன்பு போய் விசும்பிடைக் கரந்தான் –
(அப்பொழுது இந்திரசித்து) கண்ணிமைக்கும் நேரமாகிய நொடிப்
பொழுதிற்கு முன்பே விரைந்து சென்று ஆகாயத்தில் மறைந்தான்;
அண்ணல், மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் – (அதனை உணர்ந்த)
பெருமை சான்றவனாகிய இலக்குவன், அவ்விந்திரசித்தின்
உடம்பினைக் கண்டறிய இயலாதவனாய்; இவன் பிழைக்கு மேல்
நம் படையைப் படுக்கும் – இவ்விந்திரசித்து இவ்விடத்தை விட்டு
இப்பொழுது தப்பிப் பிழைப்பானாயின் நம் சேனைகளை
அழித்தொழிப்பான்; எண்ணம் மற்று இலை அயன் படை
தொடுப்பல் என்று ஆழிப்பண்ணவற்கு இசைத்தான் – (எனவே)
இப்பொழுது சிந்தித்துச் செய்தக்க செயல் வேறில்லை, பிரமாத்திரத்தை
(இவன் மேல் இப்பொழுதே) தொடுப்பேன் எனச்
சக்கரப்படையோனாகிய திருமாலின் அமிசமாகிய இராமனுக்கு எடுத்துக்
கூறினான்.
——–
8521.
ஆன்றவன் அது பகர்தலும், ‘அறநிலை வழாதாய்!
ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில், இவ்
உலகம்
மூன்றையும் சுடும்; ஒருவனால் முடிகிலது’ என்றான்,
சான்றவன்; அது தவிர்ந்தனன், உணர்வுடைத் தம்பி.–81-
ஆன்றவன் அது பகர்தலும் – (குணங்களால்) நிறைந்தவனாகிய
இலக்குவன் அவ்வாறு கூறிய அளவில்; சான்றவன் – (எவ்வுயிர்க்கும்)
சாட்சியாய் விளங்கும் இறைவனாகிய இராமன்; ‘அறநிலை வழாதாய்!’
– (தன் தம்பியை நோக்கி) அற நெறியின் நிற்பதினின்றும் வழுவாது
ஒழுகுபவனே! ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில் – (நீ
கூறிய வண்ணம்) உலகினைப் படைத்த வேதியனாகிய பிரமனது
படைக்கலத்தைத் தொடுத்து எய்தனை என்றால்; ஒருவனால் முடிகிலது,
இவ்வுலகம் மூன்றையும் சுடும் என்றான் – (அப்பிரமாத்திரம்)
அவ்விந்திரசித்துவாகிய ஒருவனை மட்டும் அழிப்பதோடு நில்லாமல்
(மேல், கீழ், நடு என்னும்) இவ்வுலகங்கள் மூன்றினையும் ஒரு சேரச்
சுட்டழிக்கும் என அறிவுறுத்தினான்; உணர்வுடைத் தம்பி அது
தவிர்ந்தனன் – (அதனைக் கேட்ட) நல்லுணர்வுடைய தம்பியாகிய
இலக்குவன் (பிரம்மாத்திரம் தொடுத்தலாகிய) அச்செயலைச் செய்யா
தொழிந்தான். ஆன்றவன் – (அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் முதலான
குணங்களால்) நிறைந்தவன். சான்றவன் – சாட்சியாய் நிற்கும்
இறைவன் – இங்கு இராமனைக் குறித்தது. உணர்வுடைத் தம்பி –
தானே உணரவல்ல அறிவுடைத்தம்பி. இலக்குவன் இங்கு,
———
இந்திரசித்தன் தெய்வப்படையை விட எண்ணி மறைதல்
8522.
மறைந்துபோய் நின்ற வஞ்சனும், அவருடை மனத்தை
அறிந்து, தெய்வ வான் படைக்கலம் தொடுப்பதற்கு
அமைந்தான்,
‘பிறிந்து போவதே கருமம், இப்பொழுது’ எனப்
பெயர்ந்தான்,
செறிந்த தேவர்கள் ஆவலம் கொட்டினர், சிரித்தார்.–82-
மறைந்து போய் நின்ற வஞ்சனும் – (விரைந்து) மறைந்து போய்
வானில் வந்தவனாகிய இந்திரசித்து; அவருடை மனத்தை அறிந்து –
(இராம இலக்குவர் எனும்) அவ்விருவருடைய மனக்கருத்தை அறிந்து;
தெய்வவான் படைக்கலம் தொடுப்பதற்கு அமைந்தான் – (அவர்கள்
தன்மேல் எய்யாத) தெய்வத்தன்மை வாய்ந்த உயர்ந்த
படைக்கலமாகிய பிரம்மாத்திரத்தை (தான் அவர்கள் மீது)
எய்வதற்குப் பொருந்தியவனாகி; இப்பொழுது பிறிந்து போவதே
கருமம் எனப் பெயர்ந்தான் – ‘இப்பொழுது இவ்விடத்தை விட்டு
நீங்கிச் செல்வதே செய்யத்தக்க செயலாகும்’ எனக்கருதி
(அவ்விடத்தினின்றும்) ப்போயினன்; செறிந்த தேவர்கள் ஆவலம்
கொட்டினர், சிரித்தார் – (போர்ச்செயல் காணத்) திரண்டிருந்த
தேவர்கள் (இந்திரசித்தனின் கருத்தை உணராதவர்களாய்) கை
கொட்டி ஆரவாரித்துச் சிரித்தனர்.
———-
8523.
செஞ் சரத்தொடு செம்மழை விசும்பின்மேல் செல்ல,
மஞ்சின் மா மழை போயினது ஆம் என மாற,
‘அஞ்சினன் அகன்றான்’ என்பது அறிந்தனர் ஆர்த்தார்-
வெஞ் சினம் தரு களிப்பினர், வானர வீரர்.–83-
செஞ்சரத்தொடு செம்மழை விசும்பிடைச் செல்ல – செம்மை
வாய்ந்த (இலக்குவனது) அம்புடன் கூடிய செம்மேகம் வானத்தின்
கண்ணே செல்ல; மஞ்சின் மாமழை போயினது ஆம் என மறைய –
(அங்குள்ள கரிய நிறமுடைய) மழைமேகம் (அவ்விடத்தை விட்டு)
அகன்று சென்றது என்னுமாறு (கருநிறமுடை இந்திரசித்து)
அவ்விடத்தினின்றும் மறைந்துவிட; அஞ்சினன் அகன்றான் என
அறிந்தனர் வானர வீரர் – இந்திரசித்து பொருதற்கு அஞ்சியவனாய்
போர்க்களத்தை விட்டு ஓடினான் என்பதனை அறிந்தவர்களாகிய
வானரவீரர்கள்; வெஞ்சினம் தருகளிப்பினர் ஆர்த்தார் – மிகுந்த
சினமும் அதன் பயனாகிய வெற்றிக்களிப்பும் உடையவர்களாய்
ஆரவாரித்தார்கள்.
——–
8524.
உடைந்த வானரச் சேனையும், ஓத நீர் உவரி
அடைந்தது ஆம் என வந்து, இரைத்து, ஆர்த்து, எழுந்து
ஆடி,
தொடர்ந்து சென்றது; தோற்றவன், யாவர்க்கும் தோற்றான்
கடைந்த வேலைபோல் கலங்குறும் இலங்கையில்
கலந்தான்.–84-
உடைந்த வானரச் சேனையும் – (முன் இந்திரசித்தனின் சங்க
முழக்கங் கேட்டு அஞ்சி) தோற்றுப் பிரிந்து பின்னடைந்த வானர
சேனையும்; ஓதநீர் உவரி அடைந்தது ஆம் என – கடலினின்றும்
புறத்தே சென்ற ஓதமாகிய நீர் மீண்டும் கடலைச் சேர்ந்தாற் போன்று;
இரைந்து, ஆர்த்து, எழுந்து ஆடித் தொடர்ந்து சென்றது –
(திரும்பி வந்து) பேரிரைச்சலுடன் ஆரவாரித்து எழுந்து கூத்தாடி
(ஏனைய வானர சேனையுடன்) தொடர்ந்து சென்றது; தோற்றவன்
யாவர்க்கும் தோற்றான் – தோல்வியுற்றவனாகிய இந்திரசித்து, யாவர்
கண்ணுக்கும் புலப்படாதவனாகி; கடைந்த வேலை போல் கலங்குறும்
இலங்கையில் கலந்தான் – (முன்னம் மந்தர மலையால்)
கடையப்பெற்ற கடலைப் போலக் (பகைவர் தாக்குதலால்) கலங்கிய
இலங்கை மாநகரைச் சேர்ந்தான்.
———
இராவணி கருத்து உணராத இராம-இலக்குவர் போர்க்கோலம் களைதல்
8525.
‘எல் கொள் நான்முகன் படைக்கலம், இவர் என்மேல்
விடா முன்,
முற்கொல்வேன்’ எனும் முயற்சியன், மறை முறை
மொழிந்த
சொல் கொள் வேள்வி போய்த் தொடங்குவான்
அமைந்தவன் துணிவை
மல் கொள் தோளவர் உணர்ந்திலர்; அமர்த் தொழில்
மறந்தார்.–85-
‘இவர் எல்கொள் நான்முகன்’ படைக்கலம் என்மேல்
விடாமுன் – (இராம இலக்குவராகிய) இவர்கள் ஒளி பொருந்திய
அயன்படையை என்மேல் செலுத்துவதற்கு முன்பு; முற்கொள்வேன்
எனும் முயற்சியன் – (அதனை) முற்படக் கொண்டு (இவர்மேற்)
செலுத்துவேன் என்னும் போர்த்தொழில் முயற்சியை உடையவனாய்ச்
சென்று; மறை முறை மொழிந்த சொல்கொள் வேள்வி – வேத
முறைப்படி விதிக்கப்பட்ட மந்திரங்களைக் கொண்ட யாகத்தினை;
போய்த் தொடங்குவான் அமைந்தவன் துணிவை – சென்று
தொடங்குதற்குப் பொருந்திய இந்திரசித்தனின் மனத்துணிவை;
மல்கொள் தோளவர் உணர்ந்திலர் – வலிமை மிக்க புயங்களை
உடையவரான இராம இலக்குவர் உணராதவர்களாய், அவனது
வஞ்சனைத்திறனை (அறவே) மறந்தாராயினர்.
———-
8526.
அனுமன் அங்கதன் தோளின்நின்று இழிந்தனர் ஆகி,
தனுவும், வெங் கணைப் புட்டிலும், கவசமும், தடக்
கைக்கு
இனிய கோதையும், துறந்தனர், இருந்தனர், இமையோர்
பனி மலர் பொழிந்து ஆர்த்தனர்; வாழ்த்தினர்
பல்கால்.–86-
அனுமன் அங்கதன் தோளின் நின்று இழிந்தனர் ஆகி –
(இராம இலக்குவராகிய இருவரும் முறையே) அனுமன், அங்கதன்
என்வர்களுடைய தோள்களினின்றும் (தரையில்) இறங்கியவர்களாய்;
தனுவும், வெங்கணைப் புட்டிலும் கவசமும்,
தடக்கைக்கு இனிய கோதையும், துறந்தனர் இருந்தனர் – வில்லும்,
கொடிய அம்புகளைக் கொண்ட தூணியும், மார்புக் கவசமும், பெரிய
கைகட்கு இனியவாகிய கையுறையும் ஆகியவற்றை நீக்கியவர்களாய் (ப்
போர்க்கோலம் களைந்து) இருந்தார்கள்; இமையோர் பனிமலர்
பொழிந்து வாழ்த்தொலி பரப்பி ஆர்த்தனர் – (அப்பொழுது)
தேவர்கள் குளிர்ந்த மலர்களைச் சொரிந்து வாழ்த்தொலி எங்கணும்
பரவுமாறு ஆரவாரித்தனர்;
——–
8527.
ஆர்த்த சேனையின் அமலை போய் விசும்பினை
அலைக்க,
ஈர்த்த தேரொடும் கடிது சென்றான், அகன்று இரவி;
‘தீர்த்தன்மேல் அவன் திசைமுகன் படைக்கலம் செலுத்தப்
பார்க்கிலேன்; முந்திப் படுவல் என்பான்’ எனப் பட்டான்.–87-
ஆர்த்த சேனையின் அமலை போய் விசும்பினை அலைக்க –
ஆரவாரித்த சேனையில் பேரொலி சென்று வானத்தினைக் கலக்க
முறச் செய்ய; ஈர்த்த தேரொடும் கடிது சென்றான், அகன்று இரவி
– (குதிரைகளால்) இழுக்கப் பெற்ற தேருடனே (அவ்விடத்தை) விட்டு
நீங்கி விரைந்து சென்றவனாகிய கதிரவன்; தீர்த்தன் மேல் அவன்
திசை முகன் படைக்கலம் செலுத்தப் பார்க்கிலேன் -‘தூயோனாகிய
இலக்குவன் மீது (இந்திரசித்தாகிய) அவன் பிரம்மாத்திரத்தைச்
செலுத்தும் (வஞ்சனைச் செயலை) பார்க்க மாட்டேன்; முந்திப் படுவல்
என்பான் எனப்பட்டான் – அதற்கு முந்தியே மறைந்தொழிவேன்
என்பான் போன்று மறைந்தான்.
————-
8528.
‘இரவும் நன் பகலும் பெரு நெடுஞ் செரு இயற்றி,
உரவு நம் படை மெலிந்துளது; அருந்துதற்கு உணவு
வரவு தாழ்த்தது; வீடண! வல்லையின் ஏகி,
தரவு வேண்டினென்’ என்றனன், தாமரைக்கண்ணன்.–88-
இரவும் நன்பகலும் – இரவிலும் நல்ல பகலிலும்; பெருநெடுஞ்
செரு இயற்றி – பெரிய நீண்ட போரினைச் செய்து; உரவு நம்
படை மெலிந்துளது – வலிமை மிக்க நம் சேனை
மெலிவடைந்துள்ளது; அருந்துதற்கு உணவு வரவு தாழ்த்தது –
(சேனை வீரர்கள்)உண்ணுதற்கு உரிய உணவு வரத் தாமதித்தது; வீடண! – வீடணனே!
வல்லையின் ஏகி – (நீ) விரைந்து சென்று; தரவு வேண்டினன் –
(அதனைக் கொணர்ந்து) தருதலை விரும்புகின்றேன்; என்றனன்
தாமரைக் கண்ணன் – என (வீடணனை நோக்கிக்) கூறினான் தாமரை
போலும் கண்களை உடையவனாகிய இராமபிரான்.
————-
8529. ‘இன்னதே கடிது இயற்றுவென்’ எனத் தொழுது எழுந்தான்,
பொன்னின் மௌலியன் வீடணன், தமரொடும் போனான்;
கன்னல் ஒன்றில் ஓர் காலினின் வேலையைக் கடந்தான்;
அன்ன வேலையின் இராமன் ஈது இளையவற்கு அறைந்தான்.–89-
பொன்னின் மௌலியன் வீடணன் – பொன்னாலாகிய முடியினைத்
தரித்தவனாகிய வீடணன்; இன்னதே கடிது இயற்றுவன் – (உணவு
கொணர்தலாகிய) இச்செயலை விரைந்து செய்வேன்; எனத் தொழுது
எழுந்தான் – எனக்கூறி (இராமனை) வணங்கி எழுந்தவனாய்;
தமரொடும் போனான் – தம்மவரோடும் போயினான்; கன்னல்
ஒன்றில் – (அங்ஙனம் போனவன்) ஒரு நாழிகைக்குள்; ஓர்
காலினின் வேலையைக் கடந்தான் – ஒப்பற்ற காற்றினையொத்துக்
கடலினைக் கடந்து சென்றான்; அன்ன வேலையின் – அந்தச்
சமயத்தில்; இராமன் இளையவற்கு ஈது அறைந்தான் – இராமபிரான்
தன் தம்பியாகிய இலக்குவற்குக் (பின்வருமாறு) கூறினான்;.
—————-
8530. ‘தெய்வ வான் பெரும் படைகட்கு வரன்முறை திருந்து
மெய் கொள் பூசனை இயற்றினம் விடும் இது விதியால்;
ஐய! நான் அவை ஆற்றினென் வருவது ஓர் அளவும்,
கை கொள் சேனையைக் கா’ எனப் போர்க்களம் கடந்தான். –90-
தெய்வவான் பெரும் படைகட்கு – தெய்வத்தன்மை வாய்ந்த
உயர்ந்த பெருமை மிக்க ஆயுதங்களுக்கு; வரன் முறை திருந்து
மெய்கொள் பூசனை – வரன் முறையாகத் திருந்திய மெய்ம்மையோடு
பொருந்திய வழிபாடுகளை; இயற்றினம் விடும் இது விதியால் –
செய்தோமாகி (ப்பிறகு அவற்றை) ஏவுகின்ற இதுவே முறையான
செயலாகும்; ஐய! – ஐயனே! நான் அவை ஆற்றினென் வருவது
ஓர் அளவும் – நான் அவ்வழிபாடுகளைச் செய்து முடித்தோனாகி
(இங்கு திரும்பி) வரும் வரையில்; கை கொள் சேனையைக் –
அணி வகுத்தலைக் கொண்ட (நமது) சேனையை; ‘கா’ எனப்
போர்க்களம் கடந்தான் – (இடரின்றி) பாது காத்திருப்பாயாக’
என்று கூறிப் போர்க்களத்தை விட்டு நீங்கிப் புறத்தே சென்றான்.
——-
இந்திரசித்தன் இராவணனுக்குத் தன் திட்டத்தைக் கூறல்
8531. தந்தையைக் கண்டு, புகுந்துள தன்மையும், தன்மேல்
முந்தை நான்முகன் படைக்கலம் தொடுக்குற்ற முறையும்,
சிந்தையுள் புகச் செப்பினன்; அனையவன் திகைத்தான்;
‘எந்தை! என், இனிச் செயத் தக்கது? இசை’ என,
இசைத்தான்.–91-
தந்தையைக் கண்டு – (போர்க்களத்தை விட்டு மறைந்து
இலங்கையை அடைந்த இந்திரசித்து) தந்தையாகிய இராவணனைக்
கண்டு; புகுந்துள தன்மையும் – (போரில்) நிகழ்ந்துள்ள செயலையும்;
தன்மேல் – தன் மீது; முந்தை நான்முகன் படைக்கலம் –
பழையோனாகிய பிரமனது படைக்கலத்தை; தொடுக்குற்ற முறையும் –
(பகைவர்) தொடுத்தற்கு எண்ணிய முறைமையையும்; சிந்தையுள் புகச்
செப்பினன் – (தன் தந்தையின்) மனத்திற்பதியும்படி
எடுத்துரைத்தான்; அனையவன் திகைத்தான் – (அதனைக்
கேட்டுணர்ந்த) அவ் இராவணன் திகைப்புற்றவனாகி; எந்தை! என்
இனிச் செயத்தக்கது – ‘எந்தாய்! இப்பொழுது நம்மாற் செய்யத் தக்கது
யாது?; இசை என, இசைத்தான் – சொல்வாயாக’ எனக் கேட்க
(அவ்விந்திரசித்தனும்) (கீழ்க்கண்டவாறு) சொன்னான்.
————
8532. ‘“தன்னைக் கொல்வது துணிவரேல், தனக்கு அது தகுமேல்,
முன்னர்க் கொல்லிய முயல்க!” என்று அறிஞரே
மொழிந்தார்;
அன்ன போர் அவர் அறிவுறாவகை மறைந்து, அயன்தன்
வெல் நற் போர்ப் படை விடுதலே நலம்; இது விதியால்.–92-
தன்னைக் கொல்வது துணிவரேல் – (பிறர்) தன்னைக்
கொல்லுதற்குத் துணிந்தாராயின்; தனக்கு அது தகுமேல் – தனக்கு
அவ்வாறு தன்னைக் கொல்லத் துணிந்தவரைக் கொல்வதென்பது
இயையுமானால்; முன்னர்க் கொல்லிய முயல்க – (அவர்கள்
அச்செயலைத் தொடங்குதற்கு) முன்பே (அன்னோரைக்) கொல்லுதற்கு
முயலுக; என்று அறிஞரே மொழிந்தார் – என்று அறிஞர்களே
கூறியுள்ளனர்; அன்ன போர் அவர் அறிவுறா வகை மறைந்து –
(அவர்களின் கூற்றினுக்கு ஏற்ப நமக்கு நன்மையை விளைவிக்கின்ற)
அத்தகைய நல்ல போர்த் தொழிலினை (அப்பகைவராகிய) மானுடர்
தெரிந்து கொள்ளாதபடி மறைந்து நின்று; அயன்தன் வெல்நற்
போர்ப்படை விடுதலே நலம் – பிரம்ம தேவனுடைய வெற்றி
தருகின்ற நல்ல போர்ப்படையாகிய பிரம்மாத்திரத்தை விடுவதே
நன்மை தரும் செயலாகும்; இது விதி – இதுவே முறையுமாகும்.
——–
8533. ‘தொடுக்கின்றேன் என்பது உணர்வரேல், அப் படை
தொடுத்தே,
தடுப்பர்; காண்பரேல், கொல்லவும் வல்லர், அத் தவத்தோர்;
இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை; நல் வேள்வியை இயற்றி,
முடிப்பன், அன்னவர் வாழ்வை, ஓர் கணத்து’ என
முடித்தான்.–93-
தொடுக்கின்றேன் என்பது உணர்வரேல் – யான் (பிரம்மாத்
திரத்தை) தொடுக்கின்றேன் என்ற செய்தியை (அப்பகைவர்)
அறிந்தனராயின்; அப்படை தொடுத்தே தடுப்பர் – அதே
பிரம்மாத்திரத்தை (எதிராகத்) தொடுத்து (யான் ஏவியதனை)த் தடுத்து
விடுவார்கள்; அத்தவத்தோர் காண்பரேல் கொல்லவும் வல்லர் –
தவத்திற் சிறந்தோராகிய அவர்கள் (என்னை நேரிற்)
காண்பார்களாயின் (உடனே) கொன்றுவிடவும் வல்லவர்கள்; இடுக்கு
ஒன்று ஆகின்றது இல்லை – (இது பற்றிச்) சங்கடம் ஒன்றும் நேர்ந்து
விடப் போவதில்லை; நல்வேள்வியை இயற்றி – நன்மையைத் தரும்
யாகம் ஒன்றினைச் செய்து; அன்னவர் வாழ்வை ஓர் கணத்து
முடிப்பல் – அம்மனிதர்களது வாழ்வை ஒரு கணப் பொழுதிற்குள்
முடிப்பேன்; என முடித்தான் – என உறுதியாகக் கூறினான்.
(இந்திரசித்து)
———–
8534. ‘என்னை அன்னவர் மறந்தனர் நின்று இகல் இயற்ற,
துன்னு போர்ப் படை முடிவு இலாது அவர்வயின் தூண்டின்,
பின்னை, நின்றது புரிவென்’ என்று அன்னவன் பேச,
மன்னன், முன் நின்ற மகோதரற்கு இம் மொழி வழங்கும்:–94-
அன்னவர் என்னை மறந்தனர் நின்று இகல் இயற்ற – அந்த
இராம இலக்குவர் என்னை அறவே மறந்தவராய் நின்று போர்
செய்யுமாறு; துன்னு போர்ப்படை – நெருங்கிய சேனைகளை;
முடிவிலாது அவர் வயின் தூண்டின் – ஒழிவின்றி அவர்கள் மீது
செலுத்துவாயாயின்; பின்னை நின்றது புரிவென் – பின்பு (நான்
செய்யவேண்டியதாய்) எஞ்சி நின்ற செயலைச் செய்வேன்; என்று
அன்னவன் பேச – என்று அவ் இந்திரசித்து கூறினானாக;
மன்னன், முன் நின்ற மகோதரற்கு இம்மொழி வழங்கும் –
மன்னவனாகிய இராவணன் தன் முன்னால் நின்றிருந்த மகோதரனுக்கு
(பின்வரும்) இம்மொழியினைக் கூறுவானாயினான்.
————
8535. ‘வெள்ளம் நூறுடை வெஞ் சினச் சேனையை, வீர!
அள் இலைப் படை அகம்பனே முதலிய அரக்கர்
எள் இல் எண் இலர்தம்மொடு விரைந்தனை ஏகி,
கொள்ளை வெஞ் செரு இயற்றுதி, மனிதரைக் குறுகி.–95-
வீர! – வீரனே! வெள்ளம் நூறுடை வெஞ்சினச் சேனையை –
நூறு வெள்ளம் வெஞ்சினச் சேனையை உடையையாய்; அள் இலைப்
படை அகம்பனே முதலிய அரக்கர் – கூரிய இலைத்
தொழிலமைந்த வேற்படையை உடைய அகம்பன் முதலாக உள்ள
அரக்கர்கள்; எள் இல் எண் இலர் தம்மொடு – (வீரத்தில்)
இகழ்தல் இல்லாத எண்ணற்றவராயுள்ளவர்களோடு; விரைந்தனை
ஏகி – விரைந்து சென்று; மனிதரைக் குறுகி கொள்ளை
வெஞ்செரு இயற்றுதி – (இராம இலக்குவர் என்னும்) மனிதரை
நெருங்கி வந்து உயிரைக் கவர்ந்து கொள்ளுதற்குரிய கொடிய
போர்ச்செயலை நிகழ்த்துவாயாக.
————
8536. ‘மாயை என்றன, வல்லவை யாவையும், வழங்கி,
தீ இருட் பெரும் பரப்பினைச் செறிவு உறத் திருத்தி,
நீ ஒருத்தனே உலகு ஒரு மூன்றையும் நிமிர்வாய்;
போய் உருத்து, அவர் உயிர் குடித்து உதவு’ எனப்
புகன்றான்.–96-
மாயை என்றன – மாயை என்று கூறப்படுவன; வல்லன –
(பகைவரை வெற்றி கொள்ளுதற்குரிய) தந்திரம் போன்ற பிற மிக்க
செயல்கள்; யாவையும் வழங்கி – ஆகிய அனைத்தையும் செய்து; தீ
இருட் பெரும் பரப்பினை – கொடிய மிக்க இருள் தொகுதியை; உலகு
ஒரு மூன்றையும் செறிவு உறத்திருத்தி – உலகங்கள் மூன்றினையும்
மூடுமாறு நெருக்கமாக உண்டாக்கி; நீ ஒருத்தனே நிமிர்வாய் – நீ
ஒருவனே உயர்ந்தோங்கும் வல்லமை உடையாய்; போய் – (இன்று
பெரும் படையுடன்) (இவ்விடம் விட்டு) நீங்கிச் சென்று; உருத்தவர்
உயிர் குடித்து உதவு எனப் புகன்றான் -நம்மிடம் வெகுண்டவருடைய உயிரை (இந்திரசித்தனுக்கு உறு
துணையாகி) பருகி உதவுவாயாக எனக் கூறினான் (இராவணன்).
————
மகோதரன் போர்க்குச் செல்லல்
8537. என்ற காலையின், ‘என்றுகொல் ஏவுவது?’ என்று
நின்ற வாள் எயிற்று அரக்கனும் உவகையின் நிமிர்ந்தான்;
சென்று தேர்மிசை ஏறினன்; இராக்கதர் செறிந்தார்,
குன்று சுற்றிய மத கரிக் குலம் அன்ன குறியார்.–97-
என்ற காலையின் – என்று இராவணன் கூறியபோது; என்று கொல்
ஏவுவது என்று நின்ற வாள் எயிற்று அரக்கனும் – (மன்னன்
என்னைப் போர் மேல் ஏவுவது எந்தநாளோ? என ஆவலுடன்
எதிர்பார்த்து நின்ற வாள் போலும் (கோரப்) பற்களை உடைய
அரக்கனான மகோதரனும்; உவகையின் நிமிர்ந்தான் – மகிழ்ச்சியினால்
தலை நிமிர்ந்து; சென்ற தேர்மிசை ஏறினான் – போய்த் தேர் மீது ஏறி
அமர்ந்தான்; குன்று சுற்றிய மதகரிக் குலம் அன்ன குறியார் –
மலையைச் சூழ்ந்து நின்ற மதம் செறிந்த யானைக் கூட்டத்தை ஒத்த
தன்மை உடையவரான; இராக்கதர் செறிந்தார் – அரக்கர்கள்
(அம்மகோதரனை) புடை சூழ்ந்து நெருங்கினார்கள்.
————–
8538. கோடி கோடி நூறாயிரம் ஆயிரம் குறித்த
ஆடல் ஆனைகள், அணிதொறும் அணிதொறும்
அமைந்த;
ஓடு தேர்க் குலம். உலப்பு இல, ஓடி வந்து உற்ற;
கேடு இல் வாம் பரி, கணக்கையும் கடந்தன, கிளர்ந்த.–98-
கோடி கோடி நூறாயிரம் ஆயிரம் குறித்த – கோடி கோடி
நூறாயிரம் ஆயிரம் என்னும் தொகையினவாகக் குறித்து
உரைக்கப்படும்; ஆடல் யானைகள் அணிதொறும் அணிதொறும்
அமைந்த – வெற்றி தரும் யானைகள் அணிதோறும், அணிதோறும்
பொருந்தி நின்றன; ஓடு தேர்க்குலம் உலப்பு இல கோடி வந்து
உற்ற – விரைந்து செல்லும் தேர்க் கூட்டங்கள் அளப்பு இல்லனவாகிய
கோடிகள் வந்து சேர்ந்தன; கேடில் வாம்பரி கணக்கையும் கடந்தன
கிளர்ந்த – பழுதில்லாதனவாகிய தாவிச் செல்லும் குதிரைகள்
எண்ணற்றனவாய்க் கிளர்ச்சியுடன் எழுந்தன.
————-
8539. படைக்கலங்களும், பரு மணிப் பூண்களும், பகு வாய்
இடைக் கலந்தன எயிற்று இளம் பிறைகளும், எறிப்ப,
புடைப் பரந்தன வெயில்களும் நிலாக்களும் புரள,
விடைக் குலங்கள்போல், இராக்கதப் பதாதியும் மிடைந்த.–99-
படைக்கலங்களும் – (கையிற் கொண்ட) ஆயுதங்களும்; பருமணிப்
பூண்களும் – பெரிய மணிகள் பொருந்திய அணிகளும்; பகுவாய்
இடைக் கலந்தன எயிற்று இளம் பிறைகளும் – பிளவு பட்ட
வாயினிடையே கலந்துள்ள பற்களாகிய இளம் பிறைகளும்; எறிப்ப –
ஒளி வீசுதலால்; புடைப் பரந்தன, வெயில்களும், நிலாக்களும்
புரள – பக்கத்திற் பரவிய வெயில் ஒளியும் நிலா ஒளியும் மாறி மாறி
விளங்க; விடைக் குலங்கள் போல் இராக்கதப் பதாதியும்
மிடைந்த – வலிமை மிக்க எருதுகளின் தொகுதி போன்று
இராக்கதர்களாகிய காலாட்படையும் மிக்கு நெருங்கின.
———–
8540. கொடிக் குழீஇயின கொழுந்து எடுத்து எழுந்து மேற்கொள்ள,
இடிக் குழீஇ எழு மழைப் பெருங் குலங்களை இரித்த;
அடிக் குழீஇயிடும் இடம்தொறும் பிதிர்ந்து எழுந்து ஆர்த்த
பொடிக் குழீஇ, அண்டம் படைத்தவன் கண்ணையும் புதைத்த.–100-
குழீஇயின கொடி – திரண்டனவாகிய கொடிகள்; கொழுந்து எடுத்து
எழுந்து மேற்கொள்ள – தம்கொழுவிய நுனிப்பாகங்கள் (காற்றினால்)
உயர்ந்து மேலோங்கி மேலிடத்தை அகப் படுத்துவதனால்; இடிக்குழீஇ எழுமழைப் பெருங்குலங்களை இரித்த –
இடி ஏற்றுடன் கூடி எழுந்த பெரிய மேகக் கூட்டங்களை நிலை
குலையைச் செய்தன; அடிக்குழீஇயிடும் இடம்தொறும் –
(சேனைகளின்) கால்கள் பூமியில் ஆழப் பதிய வைக்கும்
இடந்தோறும்; பிதிர்ந்து எழுந்து ஆர்த்த பொடிக் குழீஇ – பிதிர்
பட்டு எழுந்து நிரம்பிய தூளிகள் ஒருசேரத் திரண்டு; அண்டம்
படைத்தவன் கண்ணையும் புதைத்த – (மேற்சென்று) உலகத்தைப்
படைத்தவனாகிய பிரம தேவனுடைய கண்களையும் மறைந்தன.
———-
8541. ஆனை என்னும் மா மலைகளின் இழி மத அருவி
வான யாறுகள், வாசி வாய் நுரையொடு மயங்கி,
கான மா மரம் கல்லொடும் ஈர்த்தன, கடிதில்
போன, போக்க அரும் பெருமைய, புணரியுள் புக்க.–101-
ஆனை என்னும் மா மலைகளின் – யானைகள் என்னும் பெரிய
மலைகளினின்றும்; இழி மத அருவி வானயாறுகள் – விழும் மதநீர்
அருவியாகிய வான நதிகள்; வாசிவாய் நுரையொடு மயங்கி –
குதிரைகளின் வாயிலிருந்து வெளிப்படும் (விலாழி எனப்படும்)
நுரைகளுடன் கலந்து; கான மாமரம் கல்லொடும் ஈர்த்தன –
காட்டிலுள்ள பெருமரங்களைக் கற்களுடன் இழுத்துக் கொண்டு;
கடிதில் போன – விரைந்து ஓடியவை; போக்கரும் பெருமைய
புணரியுள் புக்க – தடுத்தற்கு அரிய பெருக்கத்தை உடையனவாய்க்
கடலினுள்ளே சென்று புகுந்தன.
————
8542. தடித்து மீன்குலம் விசும்பிடைத் தயங்குவ-சலத்தின்
மடித்த வாயினர், வாள் எயிற்று அரக்கர், தம் வலத்தின்
பிடித்த திண் படை விதிர்த்திட விதிர்த்திடப் பிறழ்ந்து,
பொடித்த வெம் பொறி கொதித்து மேல் போவன-போன்ற.–102-
வாள் எயிற்று அரக்கர் சலத்தின் மடித்த வாயினர் – வாள்
போற்கூரிய பற்களையுடைய அரக்கர்கள் வெகுளியால் மடித்த
வாயினை உடையவராய்;தம் வலத்தின் பிடித்த திண் படை – தம்
வலக்கையிலே பற்றிய திண்ணிய ஆயுதங்களை; விதிர்த்திட
விதிர்த்திடப் பிறழ்ந்து – அசைக்குந்தோறும் அசைக்குந்தோறும்
மாறுபட்டு; பொடித்த வெம்பொறி கொதித்து மேல்போவன –
வெளிப்பட்டுத் தோன்றிய வெவ்விய அனற் பொறிகள் கனன்று மேலே
போவன; தடித்து மீன்குலம் விசும்பிடைத் தயங்குவ போன்ற –
மின்னலும் விண்மீன் தொகுதிகளும் வானிடத்தே விளங்குவன
ஒத்தன.
———-
8543. சொன்ன நூறுடை வெள்ளம், அன்று இராவணன் துரந்த
அன்ன சேனையை வாயிலூடு உமிழ்கின்ற அமைதி,
முன்னம் வேலையை முழுவதும் குடித்தது, ‘முறை ஈது’
என்ன, மீட்டு உமிழ் தமிழ்முனி ஒத்தது, அவ் இலங்கை.–103-
நூறுடை வெள்ளம் என்று சொன்ன – நூறு வெள்ளம் என்று
எண்ணிச் சொல்லப்பட்டனவும்; இராவணன் துரந்த அன்ன
சேனையை – இராவணனால் செலுத்தப்பட்டனவும் ஆகிய அத்தகைய
சேனைகளை; வாயிலூடு உமிழ்கின்ற அமைதி – (தன்) வாயிலின்
வழியாக (ஒருங்கே) வெளிவிடுகின்ற தன்மையினால்; முன்னம்
வேலையை முழுவதும் குடித்தது – முற்காலத்தில் கடல்
முழுவதனையும் குடித்திட்டது; முறை ஈது என்ன – இம்முறையே
என்னும்படி; மீட்டு உமிழ் தமிழ் முனி ஒத்தது, அவ் இலங்கை –
அக்கடலினை மீளவும் உமிழ்ந்து வெளிப்படுத்தின தமிழ் முனிவராகிய
அகத்திய முனிவரை ஒத்துத் தோன்றியது அந்த இலங்கை நகரம்.
————
8544. சங்கு பேரியும், காளமும், தாளமும், தலைவர்
சிங்க நாதமும், சிலையின் நாண் ஒலிகளும், சின மாப்
பொங்கும் ஓதையும், புரவியின் அமலையும், பொலந் தேர்
வெங் கண் ஓலமும, மால் என, விழுங்கிய உலகை.–104-
சங்கும், பேரியும், காளமும் தாளமும் – சங்கு, பேரிகை,
எக்காளம், தாளம் முதலானவற்றின் ஒலிகளும்; தலைவர் சிங்க
நாதமும் – படைத்தலைவர்களது சிங்கத்தின் முழக்கத்தை ஒத்த
பெரு முழக்கமும்; சிலையின் நாண் ஒலிகளும் – வில் நாணின்
ஒலிகளும்; சினமாப் பொங்கும் ஓதையும் – வெகுளியுற்ற யானைகள்
கிளர்ந்தெழுப்பிய பிளிற்றொலியும்; புரவியின் அமலையும் –
குதிரைகளின் கனைப்பொலியும்; பொலந் தேர் வெங்கண் ஓலமும் –
பொன்மயமான தேர்களின் சக்கரங்களின்றெழும் ஓசையும்; மால் என
உலகை விழுங்கிய – திருமாலைப் போன்று உலகினை (த்தன்
அகத்திட்டு) விழுங்கின.
———-
அரக்கர்க்கும் வானரர்க்கும் நிகழ்ந்த பெரும் போர்
8545. புக்கதால் பெரும் போர்ப் படை, பறந்தலைப் புறத்தில்;
தொக்கதால், நெடு வானரத் தானையும் துவன்றி,
ஒக்க ஆர்த்தன, உறுக்கின, தெழித்தன, உருமின்
மிக்க வான் படை விடு கணை மா மழை விலக்கி.–105-
பெரும் போர்ப்படை பறந்தலைப் புறத்தில் புக்க – பெரும்
போரை இயற்றுதற்குரிய அந்த (அரக்கர்) சேனை போர்க்களத்துப்
புகுந்தது; நெடுவானரத் தானையும் துவன்றித் தொக்கது –
நெடிய குரங்குப்படையும் நெருங்கிக் கூடிற்று; மிக்க வான் படை
விடுகணை மாமழை விலக்கி – (பிறகு வானரப் படையானது) மிகுதியாக
இருந்த பெரிய அரக்கர் படை ஏவுகின்ற அம்பு மழையினைத்
தடுத்து; உருமின் ஒக்க ஆர்த்தன, உறுக்கின தெழித்தன –
இடி போன்று ஒருங்கே ஆரவாரித்து, தண்டித்து அதட்டினவாய்
வெகுண்டன.
————-
8546. குன்று கோடியும் கோடிமேல் கோடியும் குறித்த
வென்றி வானர வீரர்கள், முகம்தொறும் வீச,
ஒன்றின், நால்வரும் ஐவரும் இராக்கதர் உலந்தார்;
பொன்றி வீ்ழ்ந்தன, பொரு கரி, பாய் பரி, பொலந் தேர்.–106-
கோடியும் கோடிமேல் கோடியும் குன்று – கோடியும், கோடிக்கு
மேற்கோடியும் ஆக மலைகளை; குறித்த வென்றி வானர வீரர்கள் –
இலக்கு நோக்கிய வெற்றித்திறன் வாய்ந்த வானர வீரர்கள்; முகந்
தொறும் வீச – இடந்தோறும் (எடுத்து) வீசுதலால்; ஒன்றின்,
நால்வரும் ஐவரும் இராக்கதர் உலந்தார் – (அங்ஙன் எடுத்து
வீசிய மலை) ஒன்றனுக்கு இராக்கதர் நால்வரும் ஐவரும் என்ற எண்
முறையில் இறந்து பட்டார்கள்; பொருகரி, பாய்பரி பொலந்தேர்
பொன்றி வீழ்ந்தன- (அவ்வரக்கர்களுடைய) போர்த்தொழில் வல்ல
யானை, பாய்ந்து செல்லும் குதிரை, பொன்னாலாகிய தேர்
ஆகியவையும் கெட்டொழிந்தன.
————
8547. மழுவும், சூலமும், வலயமும், நாஞ்சிலும், வாளும்,
எழுவும், ஈட்டியும், தோட்டியும், எழு முனைத் தண்டும்,
தழுவும் வேலொடு கணையமும், பகழியும், தாக்க,
குழுவினோடு பட்டு உருண்டன, வானரக் குலங்கள்.–107-
மழுவும், சூலமும், வலயமும் நாஞ்சிலும் வாளும் –
(அரக்கர்களுடைய) மழுவும், சூலப்படையும், வாகுவலயமும்,
நாஞ்சிலும் வாளும்; எழுவும், ஈட்டியும், தோட்டியும் எழுமுனைத்
தண்டும் – கணைய மரமும், ஈட்டியும், அங்குசமும், மேற்பட்டெழுந்த
கூரிய முனையை உடைய தண்டாயுதமும்; தழுவும் வேலொடு
கணையமும் பகழியும் தாக்க – கையிற் பற்றிய வேற்படையுடன்
கணையமும், அம்பும் தாக்குதலால்; வானரக் குலங்கள் குழுவினோடு
பட்டு உருண்டன – வானரத் தொகுதிகள் தத்தம் குழுவுடன்
கொல்லப்பட்டு (த்தரையில்) உருண்டன.
———
8548. முற்கரங்களும், முசலமும், முசுண்டியும், முளையும்,
சக்கரங்களும், பிண்டிபாலத்தொடு தண்டும்,
கப்பணங்களும், வளையமும், கவண் உமிழ் கல்லும்,
வெற்புஇனங்களை நுறுக்கின; கவிகளை வீழ்த்த.–108-
முற்கரங்களும், முசலமும், முசுண்டியும், முளையும் – (மற்றும்
அரக்கர்கள் விடுத்த) முற்கரங்களும், இருப்புலக்கையும், முசுண்டியும்,
மூங்கிலும்,; சக்கரங்களும் பிண்டிபாலத்தொடு தண்டும் – சக்கரப்
படைகளும், பிண்டி பாலமும், தண்டும்; கப்பணங்களும், வளையமும்
கவண் உமிழ் கல்லும் – கப்பணங்களும், வளையமும், கவண்
வீசுகின்ற கல்லும், ஆகியவை; வெற்பு இனங்களை நுறுக்கின –
(குரங்குகள் வீசிய) மலைத்தொகுதிகளை பொடியாக நொறுக்கின;
கவிகளை வீழ்த்த – (அவற்றை எறிந்த) குரங்குகளைக் கொன்று
வீழ்த்தின.
———-
8549. கதிர் அயில் படைக் குலம் வரன்முறை முறை கடாவ,
அதிர் பிணப் பெருங் குன்றுகள் படப் பட, அழிந்த
உதிரம் உற்ற பேர் ஆறுகள் திசை திசை ஓட,
எதிர் நடக்கில், குரக்குஇனம்; அரக்கரும் இயங்கார்.–109-
கதிர் அயில் படைக்குலம் வரன்முறை முறை கடாவ – ஒளி
பொருந்திய கூர்மையான ஆயுதத் தொகுதிகளை (அரக்கர்கள்)
அடுத்து அடுத்து முறையே செலுத்துதலால்; குரக்கு இனம் எதிர்
நடக்கில – குரங்குத் தொகுதிகள் அரக்கர் எதிரே நடக்கவியலாதவை
ஆயின; அதிர் பிணப்பெருங் குன்றுகள் படப்பட – அதிர்ச்சியுற்று
விழும் பிணங்களாகிய பெருமலைகள் மேலும் மேலும்
உண்டாவதாலும்; அழிந்த உதிரம் உற்ற பேர் ஆறுகள் திசை
திசை ஓட – (ஆயுதங்கள் பட்டு உடல்) சிதைந்தமையால் தோன்றிய
குருதிப் பேராறுகள் (போர்க்களத்தில்) திசைகள் தோறும் ஓடுதலாலும்;
அரக்கரும் இயங்கார் – அரக்கரும் (அப்போர்க்களத்தில்)
மேற்செல்லுதற்கு இயலாதவராயினர்.
————
8550. யாவர் ஆங்கு இகல் வானரம் ஆயினர், எவரும்
தேவர் ஆதலின், அவரொடும் விசும்பிடைத் திரிந்தார்;
மேவு காதலின் மெலிவுறும் அரம்பையர் விரும்பி,
ஆவி ஒன்றிடத் தழுவினர், பிரிவு நோய் அகன்றார்.–110-
யாவர் ஆங்கு இகல் வானரம் ஆயினர் – யார் யார்
அப்போர்க்களத்தில் மாறுபட்டுப் பொருதலை உடைய வானரராகி
வந்துள்ளார்களோ; எவரும் தேவர் ஆதலின் – அவர்கள்
அனைவரும் (முன்னைத் தம் உண்மை நிலையில்) தேவர்களே
ஆதலால்; அவரொடும் விசும்பிடைத் திரிந்தார் – (தாம் உயிர்
துறந்ததால் வானர உடம்பை விடுத்து) அத்தேவர்களோடும் (ஒன்று
கூடி) விண்ணுலகில் உலவுவாராயினர்; மேவு காதலின்
மெலிவுறும் அரம்பையர் – (அங்ஙனம் பிரிந்து சென்ற அவர்களை)
மீண்டும் அடையவேண்டும் என்னும் காதலால் தளர்ந்து மெலியும்
வானுலக மகளிராகிய அரம்பையர்; விரும்பி ஆவி ஒன்றிடத்
தழுவினர் – (அவர்களை) விரும்பி உயிரோடொன்றாக இறுகத்
தழுவியவராய்; பிரிவு நோய் அகன்றார் – பிரிவுத் துன்பம்
தீர்ந்தார்கள்.
———–
8551. கரக்கும் மாயமும், வஞ்சமும், களவுமே, கடனா,
இரக்கமே, முதல் தருமத்தின் நெறி ஒன்றும் இல்லா,
அரக்கரைப் பெருந் தேவர்கள் ஆக்கின அமலன்
சரத்தின், வேறு இனிப் பவித்திரம் உள எனத் தகுமே?–111-
கரக்கும் மாயமும் வஞ்சமும் களவுமே கடனா – ஒளித்துச்
செய்யும் சூழ்வினையும், வஞ்சனையும், களவுத்தன்மையும் ஆகிய
இவற்றையே தம் செயல் முறையாகக் கொண்டு; இரக்கமே முதல்
தருமத்தின் நெறி ஒன்றும் இல்லா – இரக்கம் முதலான அறநெறி
ஏதும் இல்லாத; அரக்கரைப் பெருந்தேவர்கள் ஆக்கின – (கொடிய)
அரக்கர்களையும் பெருமையுடைய தேவர்களாக ஆக்கிய; அமலன்
சரத்தின் – தூயோனான இலக்குவனின் அம்பினைக் காட்டிலும்;
வேறு இனிப் பவித்திரம் உள எனத் தகுமே – தூய்மை
விளைவிப்பன பிற உளவெனல் பொருந்துவதோ?
————-
8552. அந்தகன் பெரும் படைக்கலம் மந்திரத்து அமைந்தான்,
இந்து வெள் எயிற்று அரக்கரும், யானையும், தேரும்,
வந்த வந்தன, வானகம் இடம் பெறாவண்ணம்
சிந்தினான் சரம், இலக்குவன், முகம்தொறும் திரிந்தான்.–112-
இலக்குவன் – இலக்குவன்; அந்தகன் பெரும் படைக்கலம்
மந்திரத்து அமைத்தான் – இயமனது பெரிய அத்திரத்தினை
மந்திரத்தால் அமைத்துக் கொண்டவனாகி; முகம் தொறும் திரிந்தான் –
போர் முகத்தில் எங்கும் திரிந்து; இந்து வெள் எயிற்று அரக்கரும் –
பிறையினை ஒத்த வெள்ளிய பற்களை உடைய அரக்கர்களும்;
யானையும், தேரும் வந்த வந்தன – யானைகளும், தேர்களும் என
அடுத்தடுத்து வந்தன அனைத்தையும்; வானகம் இடம் பெறா
வண்ணம் சிந்தினான் சரம் – (உயிர் துறந்து) வானுலகில் இடம்
கொள்ளாது நெருங்கும்படி அம்புகளைச் சிதறினான்.
————
கும்பகருணன் களத்தில் இட்ட தண்டைக் கொண்டு அனுமன் பொருதல்
8553. கும்பகன்னன் ஆண்டு இட்டது, வயிர வான் குன்றின்
வெம்பு வெஞ் சுடர் விரிப்பது, தேவரை மேல்நாள்
தும்பையின் தலைத் துரந்தது, சுடர் மணித் தண்டு ஒன்று,
இம்பர் ஞாலத்தை நெளிப்பது, மாருதி எடுத்தான்.–113-
கும்பகன்னன் ஆண்டு இட்டது – (இராவணன் தம்பியாகிய)
கும்பகருணன் அப்போர்க்களத்திலே இட்டுச் சென்றதும்; வான் வயிர
குன்றின் வெம்பு வெஞ்சுடர் விரிப்பது – பெரிய வயிர மலையினைப்
போன்று வெதும்பச் செய்யும் கடுங்கதிர்களை விரிப்பதும்; மேல்நாள்
தேவரை தும்பையின் தலைத் துரந்தது – முன்னாளில் (அரக்கரொடு
பொருதற்கு வந்த) தேவர்களைத் தும்பைப்போரில் (தோற்று ஓடும்படி)
துரத்தியதும்; இம்பர் ஞாலத்தை நெளிப்பது – (பொறுத்தற்கரிய
பாரத்தால்) இப்பூமியை நெளியச் செய்வதும் ஆகிய; சுடர்
மணித்தண்டு ஒன்று மாருதி எடுத்தான் – ஒளியுடைய மணிகள்
பதிக்கப்பெற்ற தண்டாயுதம் ஒன்றினை வாயுவின் மகனான அனுமன்
(தன் கையில்) எடுத்துக் கொண்டான்.
————–
8554. ‘காற்று அன்று, இது கனல் அன்று’ என இமையோரிடை
காணா
ஏற்றம் கடு விசையோடு உயர் கொலை நீடிய இயல்பால்,
சீற்றம் தனி உருவாய், இடை தேறாதது ஓர் மாறு ஆய்க்
கூற்றம் கொடு முனை வந்தெனக் கொன்றான், இகல்
நின்றான்.–114-
இகல் நின்றான் – (அரக்கர் மேல்) பகைகொண்டு நின்றவனாகிய
அனுமன்; காற்று அன்று இது கனல் அன்று என – இது காற்றும்
அன்று தீயும் அன்று என்று; இமையோரிடை காணா – தேவர்கள்
(தன்னோடு அக்காற்று தீ ஆகியவற்றிற்கு) வேற்றுமை உணராதவாறு;
ஏற்றம் கடுவிசையோடு உயர் கொலை நீடிய இயல்பால் –
மிகுந்த கடுவேகத்துடனே மிக்க கொலைத் தொழிலில் நிலை பெற்றுள்ள
தன்மையால்; கூற்றம் சீற்றம் தனி உருவாய் – கூற்றுவனாகிய
தெய்வம் சீற்றத்தையே தனது உருவாகக் கொண்டு; இடை தேறாதது
ஓர் மாறு ஆய் – (தன்னை இன்னான் என) வேற்றுமை தெளிந்துணர இயலாத நிலையில் மாறுபட்டு
கொடுமுனை வந்தெனக் கொன்றான் – கொடிய போர் முனைக்கு
வந்தது எனும்படி (கையிலுள்ள தண்டாயுதத்தால் அரக்கரைக்)
கொன்றான்.
—————-
8555. வெங் கண் மதமலைமேல், விரை பரிமேல், விடு தேர்மேல்,
சங்கம் தரு படை வீரர்கள் உடல்மேல், அவர் தலைமேல்,
“எங்கும் உளன் ஒருவன்” என இரு நான் மறை தெரிக்கும்
செங் கண்ணவன் இவனே’ எனத் திரிந்தான்-கலை
தெரிந்தான்.–115-
கலை தெரிந்தான் – பல கலைகளையும் கற்றுணர்ந்தவனாகிய
அனுமன்; வெங்கண் மத மலைமேல் – வெகுளி மிக்க கண்களையும்
மதத்தையுமுடைய மலை போன்ற யானையின் மேலும்; விரை பரிமேல்
விடுதேர் மேல் – விரைந்து பாயும் குதிரையின் மேலும் (வீரர்களால்)
செலுத்தப்படும் தேரின் மேலும்; சங்கம் தரு படை வீரர்கள் உடல்
மேல் அவர் தலை மேல் – திரளாக உள்ள படைவீரர்களின் உடலின்
மீதும், அவர்களின் சிரசின் மேலும்; எங்கும் உளன் ஒருவன் என
இருநான்மறை தெரிக்கும் – எங்கும் நீக்கமற நிறைந்துள்ளவன்
ஒருவனே எனப் பெருமை சான்ற நான்கு வேதங்களால் தெளிந்து
போற்றப்பெறும்; ‘செங்கண்ணவன் இவனே’ எனத் திரிந்தான் –
செந்தாமரைக் கண்ணன் (திருமால்) இவனே என (கண்டோர்)
கருதும்படி (தான் ஒருவனே எங்கும் உள்ளவனாகித்) திரிந்தான்.
———-
8556. கிளர்ந்தாரையும் கிடைத்தாரையும் கிழித்தான், கனல்
விழித்தான்;
களம்தான் ஒரு குழம்பு ஆம் வகை அரைத்தான்;
உருக் கரைத்தான்;
வளர்ந்தான் நிலை உணர்ந்தார், ‘உலகு ஒரு மூன்றையும்
வலத்தால்
அளந்தானும் முன் இவனே?’ என இமையோர்களும்
அயிர்த்தார்.–116-
கிளர்ந்தாரையும், கிடைத்தாரையும் கனல் விழித்தான்
கிழித்தான் – (அனுமன் சினத்தால்) பொங்கி எழுந்தாரையும்,
எதிர்ப்பட்டாரையும் தீப்பொறி தோன்ற (ச்சினந்து) நோக்கியவனாய்
அவர் தம் உடம்பைக் கிழித்தெறிந்தான்; களந்தான் ஒரு குழம்பாம்
வகை அரைத்தான் உருக்கரைத்தான் – போர்க்களம் எங்கும்
(நிணக்) குழம்பாகுமாறு (அரக்கர் உடம்புகளை) அரைத்து
உருவின்றிக் கரைத்தவனாய்; வளர்ந்தான் நிலை உணர்ந்தார் –
பேருருவாக வளர்ந்து தோன்றிய அவனது நிலையை
உணர்ந்தவர்களாகிய; இமையோர்களும் – தேவர்களும்; உலகு ஒரு
மூன்றையும் வலத்தால் அளந்தானும் முன் இவனே – ஒப்பற்ற
மூன்று உலகங்களையும் தனது வலிமையால் முன்னம் அளந்தவனும்
இவன்தானோ? என அயிர்த்தார் – என ஐயுற்று வியந்தார்கள்.
————
8557. மத்தக் கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உக மணி மேல்
முத்தின் பொலி முழு மேனியன், முகில் விண் தொடு
மெய்யான்,
ஒத்தக் கடையுகம் உற்றுழி, உறு கால் பொர, உடு மீன்
தொத்தப் பொலி கனகக் கிரி வெயில் சுற்றியது ஒத்தான்.–117-
மத்தக் கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உக – மதம் பொருந்திய
யானையின் நெடிய மத்தகம் பிளவுபட்டுச் சிந்த; மணிமேல் முத்தின்
பொலி முழுமேனியன் – மணியின் மேல் முத்துக்கள் பொலிந்து
விளங்கினாற் போன்ற முழுவுடம்பினை உடையவனும்; முகில்விண்
தொடு மெய்யன் – மேகந் தவழும் ஆகாயத்தைத் தொடுகின்ற
உடம்பினை உடையவனுமாகிய அனுமன்; ஒத்தக் கடையுகம் உற்றுழி-
(எல்லாப் பொருளும்) ஒருசேர அழியும் அந்த ஊழிக் காலம்
வந்தபோது; உறுகால் பொர, உடுமீன் – பெருங்காற்று மோத
உடுவாகிய விண்மீன்கள்; தொத்தப் பொலி, வெயில் சுற்றியது
கனகக் கிரி ஒத்தான் – தொத்தி நிற்க விளங்குவதும் கதிரவனால்
சூழப் பெறுவதும் ஆகிய பொன் மயமான மேருமலையை ஒத்துத்
தோன்றினான்.
——————-
8558. இடித்தான் நிலம் விசும்போடு என, இட்டான் அடி,
எழுந்தான்;
பொடித்தான், கடற் பெருஞ் சேனையை; பொலந்
தண்டு தன் வலத்தால்
பிடித்தான்; மத கரி, தேர், பரி, பிழம்பு ஆனவை குழம்பா
அடித்தான்; உயிர் குடித்தான்; எடுத்து ஆர்த்தான்;
பகை தீர்த்தான்.–118-
இடித்தான் நிலம் விசும்போடு என – (அவ்அனுமன்) நிலத்தினை
ஆகாயத்துடன் இடித்தான் என்னும்படி; அடி இட்டான் எழுந்தான் –
(பூமியில்) அடி இட்டு (வான முகடளவும்) நிமிர்ந்தான்; பொலந்தண்டு
தன் வலத்தால் பிடித்தான் – பொன் மயமான தண்டாயுதத்தை தன்
வன்மையாற் பற்றியவனாகி; கடற் பெருஞ்சேனையைப் பொடித்தான் –
கடல் போலும் (அரக்கரது) பெருஞ் சேனையைப் பொடியாக்கினான்;
மதகரி. தேர், பரி பிழம்பு ஆனவை – மதம் பொருந்திய யானை,
தேர், குதிரை என்னும் வடிவுள்ளவைற்றை; குழம்பா அடித்தான் –
உருச்சிதைத்துக் குழம்பாகும்படி அடித்தான்; உயிர் குடித்தான், பகை
தீர்த்தான் எடுத்து ஆர்த்தான் – (அவற்றின்) உயிரைக் குடித்துத் தன்
பகையை ஒழித்தவனாகிப் பேர் ஆரவாரஞ் செய்தான்.
——–
8559. நூறாயிரம் மத மால் கரி, ஒரு நாழிகை நுவல்போது,
ஆறாய், நெடுங் கடுஞ் சோரியின் அளறு ஆம் வகை
அரைப்பான்,
ஏறு ஆயிரம் எனலாய் எழு வய வீரரை இடறி,
தேறாது உறு கொலை மேவிய திசை யானையின் திரிந்தான்.–119-
ஒரு நாழிகை நுவல்போது – ஒரு நாழிகை எனக் கூறப்படும் கால
அளவில்; நூறாயிரம் மதமால் கரி – ஒரு நூறாயிரம் மத யானைகளை;
ஆறாய், நெடுங் கடுஞ் சோரியின் – ஆறாகிப் பெருகும் நெடிய கடிய
இரத்த வெள்ளத்தில் இட்டு;அளறு ஆம் வகை அரைப்பான் –
சேறாகும்படி துகைத்து அரைப்பவனாகிய அனுமன்; ஏறு ஆயிரம்
எனலாய் எழு வய வீரரை இடறி – ஆண் சிங்கங்கள் ஆயிரம் எனும்
படி பொங்கி எழுந்த வலிய (அரக்க) வீரர்களை (க்காலினால்) இடறித்தள்ளி; தேறாது உறு கொலை
மேவிய திசை யானையின் திரிந்தான் – (மத மயக்கத்தினின்றும்)
தெளியாது மிகுந்த கொலைத்தொழிலைப் பொருந்திய திசை யானை
போன்று (போர்க்களமெங்கும்) திரிவானாயினான்.
———-
8560. தேர் ஏறினர், பரி ஏறினர், விடை ஏறினர், சின வெங்
கார் ஏறினர், மழை ஏறினர், ‘கலை ஏறினர், பல வெம்
போர் ஏறினர், புகழ் ஏறினர், புகுந்தார் புடை
வளைந்தார்;
நேர் ஏறினர் விசும்பு ஏறிட, நெரித்தான், கதை
திரித்தான்.–120-
தேர் ஏறினர், பரி ஏறினர் விடை ஏறினர் – தேரில்
ஏறியவர்களும், குதிரைமீது ஏறியவர்களும், விடையேற்றினை ஒத்த
(காலாட்படை) வீரர்களும்; சினவெங்கார் ஏறினர் மழை ஏறினர் –
வெகுளி மிக்க கொடிய மேகத்தை ஒத்த யானையின் மேல்
ஏறியவர்களும் (அம்பு) மழையை மிகுதியாகப் பொழிகின்றவரும்;
கலை ஏறினர், பலவெம் போர் ஏறினர் புகழ் ஏறினர் –
போர்க்கலையில் வல்லவரும், பல கொடிய போர்களில் ஈடுபட்டு
வெற்றிப் புகழ் கொண்டவரும் (ஆகிய அரக்கவீரர்கள்); புகுந்தார்
புடை வளைத்தார் – (இப்போது போர்க்களத்திற்) புகுந்து
(அனுமனைச்) சுற்றி வளைத்துக் கொண்டனர்; நேர் ஏறினர்
விசும்பு ஏறிட – (இங்ஙனம்) நேர்பட்டு வந்து வளைத்துக்
கொண்டவர்கள் அனைவரும் விண்ணுலகிற் செல்லுமாறு; கதை
திரித்தான் நெரித்தான் – (அனுமன்) தண்டாயுதத்தைச்
சுழற்றியவனாய் (அவர்களை) நெரித்துக் கொன்றான்.
————
8561. அரி குல மன்னன், நீலன், அங்கதன், குமுதன் சாம்பன்
பரு வலிப் பனசன் என்று இப் படைத் தலை வீரர் யாரும்,
பொரு சினம் திருகி, வென்றிப் போர்க் கள மருங்கில்
புக்கார்;
ஒருவரை ஒருவர் காணார்; உயர் படைக் கடலின் உள்ளார்.–121-
அரிகுல மன்னன், நீலன் அங்கதன், குமுதன், சாம்பன்
பருவலிப் பனசன் – வானர குல மன்னனாகிய சுக்கிரீவன், நீலன்,
அங்கதன், குமுதன், சாம்பன், பெருவன்மை படைத்த பனசன்; என்று
இப்படைத் தலைவீரர் யாரும் – என்று தலைமை பெற்ற இச்சேனை
வீரர்கள் யாவரும்; பொருசினம் திருகி – போர் செய்தற்குரிய
வெகுளியால் மாறுபட்டு; வென்றிப் போர்க்கள மருங்கில் புக்கார்-
வெற்றியை விளைக்கும் போர்க் களத்தின் கண்ணே (தனித்தனியே)
புகுந்தவர்கள்; ஒருவரை ஒருவர் காணார் – ஒருவரை ஒருவர்
சந்தித்துக்) காணாதவர்களாய்; உயர் படைக் கடலின் உள்ளார்-
அரக்கர் படையாகிய பெரிய கடலினுள்ளே (தனித்தனியே)
உள்ளவரானார்கள்.
———–
அனுமன் – அகம்பன் போர்
8562. தொகும் படை அரக்கர் வெள்ளம் துறைதொறும் அள்ளித்
தூவி,
நகம் படை ஆகக் கொல்லும் நரசிங்கம் நடந்தது என்ன,
மிகும் படைக் கடலுள் செல்லும் மாருதி, வீர வாழ்க்கை
அகம்பனைக் கிடைத்தான், தண்டால் அரக்கரை
அரைக்கும் கையான்.–122-
தொகும்படை அரக்கர் வெள்ளம் – கூட்டமாக வந்து கூடிய
சேனைகளாகிய அரக்கர் வெள்ளத்தை; துறை தொறும் அள்ளித்
தூவி – (போர் முனைகளாகிய) துறைகள் தோறும் வாரி வீசி; நகம்
படை ஆகக் கொல்லும் – (தன்னுடைய விரலின்) நகமே படைக்
கலனாகக் கொன்று குவிக்கும்; நரசிங்கம் நடந்தது என்ன – நரசிங்கம்
(ஆகிய திருமால் முன்னர்) நடந்தது போன்று; மிகும் படைக்
கடலுள் செல்லும் மாருதி – மிக்கு நிறைந்த அரக்கர் சேனையாகிய
கடலினுள்ளே செல்லும் அனுமன்; தண்டால் அரக்கரை அரைக்கும்
கையான் – தண்டாயுதத்தினால் அரக்கரை அரைக்கும் கையை உடையவனாகி (ச்செல்லும் போது); வீர வாழ்க்கை
அகம்பனைக்கிடைத்தான் – வீரத் திறத்துடன் வாழ்பவனாகிய
அகம்பன் என்னும் அரக்கனை எதிர்ப்பட்டான்.
———–
8563. மலைப் பெருங் கழுதை ஐஞ்ஞூற்று இரட்டியான், மனத்தின்
செல்லும்
தலைத் தடந் தேரன், வில்லன், தாருகன் என்னும் தன்மைக்
கொலைத் தொழில் அவுணன்; பின்னை, இராக்கத வேடம்
கொண்டான்,
சிலைத் தொழில் குமரன் கொல்ல, தொல்லை நாள் செருவில்
தீர்ந்தான்.–123-
மலைப் பெருங் கழுதை ஐஞ்ஞூற்று இரட்டியான் – மலையினை
ஒத்த பெரிய ஆயிரங் கழுதைகளால் (இழுக்கப் பெற்ற); மனத்தின்
செல்லும் தலைத் தடந்தேரன், வில்லன் – மனத்தைக் காட்டிலும்
விரைந்து செல்லும் தலைமை பெற்ற தேரினை உடையவனும், வில்லை
ஏந்தியவனுமாகிய அகம்பன்; தாருகன் என்னும் தன்மைக்
கொலைத்தொழில் அவுணன் – தாருகன் என்னும் பெயரைப் பெற்ற
கொலைத் தொழிலையுடைய அவுணன்; சிலைத் தொழில் குமரன்
கொல்ல – வில்லாற்றல் மிக்க முருகப் பெருமான் கொல்ல; தொல்லை
நாள் செருவில் தீர்ந்தான் – முற்காலத்தில் போரில் உயிர்
நீங்கியவனாய்; பின்னை, இராக்கத வேடங் கொண்டான் – பிற்
காலத்தில் (அகம்பனென்னும்) இராக்கத வேடத்தைக் கொண்டு
தோன்றியவனாவான்.
————
8564. ‘பாகசாதனனும், மற்றைப் பகை அடும் திகிரி பற்றும்
ஏக சாதனனும், மூன்று புரமும் பண்டு எரித்துளோனும்
போக; தாம் ஒருவர் மற்று இக் குரங்கொடு பொரக் கற்றாரே,
ஆக; கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும்’
என்றான்.–124-
பாக சாதனனும் – பாகன் என்னும் அசுரனைக் கொன்ற
இந்திரனும்; மற்றைப் பகை அடும் திகிரி பற்றும் ஏக சாதனனும்-
ஏனைப் பகையினை அழிக்கும் தன்மையினை உடைய சக்கரப்
படையினைக் கையிற்கொண்ட திருமாலும்; மூன்று புரமும் பண்டு
எரித்துளோனும் போக – முப்புரங்களையும் முற்காலத்தே எரித்தழித்த
சிவபெருமானும் தவிர; தாம் ஒருவர் மற்று இக் குரங்கொடு பொரக்
கற்றாரே – ஏனைத் தேவர் முதலியவர்களில் ஒருவரேனும்
இக்குரங்குடன் தனித்தப் போர் செய்யக் கற்றுள்ளார்களோ? (இல்லை)
ஆக கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும் என்றான் –
எனவே, கூற்றுவன் (போர்க்களத்தில் போர் செய்வோரது) உயிரைக்
கவர்தல் என்பது (அனுமன் என்னும்) இக்குரங்கின் போர்
வன்மையின் மேலதேயாகும் என்றான் (அகம்பன்).
————–
8565. ‘யான் தடேன்என்னின், மற்று இவ் எழு திரை வளாகம்
என் ஆம்?
வான் தடாது; அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும்’
என்னா,
ஊன் தடாநின்ற வாளி மழை துரந்து, உருத்துச் சென்றான்;
மீன் தொடாநின்ற திண் தோள் அனுமனும், விரைவின்
வந்தான்.–125-
யான் தடேன் என்னின் – யான் (இக்குரங்கினை) தடுக்காமல்
விடுவேனாயின்; இவ் எழுதிரை வளாகம் என் ஆம் – ஏழு
கடல்களால் சூழப்பட்ட இந்நிலவுலகம் என்ன ஆகும்? (அழிக்கப்பட்டு
விடும்); வான் தடாது – வானுலகத் தேவரோ தடுக்க மாட்டார்கள்!
அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும் – (இக்குரங்கு) அரக்கர்
என்ற பெயர் கூட இல்லாதபடி அழித்து விடும்; என்னா – என்று கூறியவனாய் (அகம்பன்); ஊன் தடா
நின்றவாளி மழைதுரந்து – ஊனுடல் பெற்ற உயிர்களால் தடுக்க
வியலாத (வன்மை வாய்ந்த) அம்பு மழையைப் பொழிந்து கொண்டு;
உருத்துச் சென்றான் – கோபமுடையவனாய் (அனுமனை) நெருங்கிச்
சென்றான்; மீன் தொடா நின்ற திண் தோள் – விண்மீன்களைத்
தீண்டுமாறு உயர்ந்து நின்ற திண்ணிய தோள்களை உடைய;
அனுமனும், விரைவின் வந்தான் – அனுமனும் (அவனை நோக்கி)
விரைந்து எதிர்த்து வந்தான்.
———-
8566. தேரொடு களிறும் மாவும் அரக்கரும் நெருக்கித் தெற்ற,
காரொடு கனலும் காலும் கிளர்ந்தது ஓர் காலம் என்ன,
வாரொடு தொடர்ந்த பைம் பொற் கழலினன் வருதலோடும்,
சூரொடும் தொடர்ந்த தண்டைச் சுழற்றினான் வயிரத்
தோளான்.–126-
தேரொடு களிறும் மாவும் அரக்கரும் நெருங்கித் தெற்ற –
தேருடன் யானைகளும் குதிரைகளும், அரக்கராகிய வீரர்களும்
நெருங்கிச் செறிந்து உடன் வர; காரொடு கனலும் காலும் கிளர்ந்தது
ஓர் காலம் என்ன – மேகத்துடன் நெருப்பும் காற்றும் பொங்கி
எழுந்ததோர் ஊழிக்காலம் இது என்று சொல்லும்படி; வாரொடு
தொடர்ந்த பைம்பொற் கழலினன் வருதலோடும் – வாரினாற்
பிணிக்கப் பெற்ற பசிய பொன்னாலாகிய வீரக்கழலை அணிந்த
அகம்பன் (எதிர்த்து) வந்தபோது; வயிரத்தோளான் – வயிரம்
போலும் திண்ணிய தோள்களை உடைய அனுமன்; சூரொடும்
தொடர்ந்த தண்டைச் சுழற்றினான் – கொடுந் தன்மையுடன் கூடிய
தண்டாயுதத்தைச் சுழற்றி வீசினான்.
————
8567. எற்றின, எறிந்த வல்லை ஏயின, எய்த, பெய்த,
முற்றின படைகள் யாவும், முறை முறை முறிந்து சிந்த,
சுற்றின வயிரத் தண்டால் துகைத்தனன், அமரர் துள்ள;
கற்றிலன் அன்று கற்றான், கதையினால் வதையின் கல்வி. –127-
எற்றின, எறிந்த வல்லை ஏயின, எய்த, பெய்த-
(அரக்கர்களால்) எறியப் பெற்றனவும் வீசப் பெற்றனவும், விரைந்து
ஏவப் பெற்றனவும், எய்யப்பெற்றனவும், சொரியப் பெற்றனவுமாக;
முற்றின படைகள் யாவும் முறை முறை முறிந்து சிந்த –
(தன்னை) சூழ்ந்த படைக் கலங்கள் யாவும் முறை முறையே
முறிபட்டுப் பொடியாய்ச் சிதறும்படியாக; சுற்றின வயிரத்தண்டால்
அமரர் துள்ளத் துகைத்தனன் – (அனுமன் தான்) சுழற்றின
திண்ணிய தண்டாயுதத்தால் தேவர்கள் (மகிழ்ந்து) துள்ளும்படி
மோதி அழித்திட்டான்; கதையினால் வதையின் கல்வி கற்றிலன்
அன்று கற்றான் – (இவ்வாறு) தண்டாயுதத்தால் (பகைவரைக்)
கொல்லும் கல்வியை இதற்கு முன்பு முழுமையாகக் கல்லாதவனாகிய
அனுமன் அகம்பனோடு பொருத அன்று முழுமையாகக் கற்றான்.
———–
8568. அகம்பனும் காணக் காண, ஐ-இரு கோடிக் கைம்மா,
முகம் பயில் கலினப் பாய்மா, முனை எயிற்று அரக்கர், மூரி
நுகம் பயில் தேரினோடும் நுறுக்கினன்; நூழில் தீர்த்தான்;-
உகம் பெயர் ஊழிக் காற்றின் உலைவு இலா மேரு ஒப்பான்.–128-
உகம் பெயர் ஊழிக் காற்றின் – ஊழி முடிவடைகின்ற காலத்து
வீசும் பெருங்காற்றினாலும்; உலைவிலா மேரு ஒப்பான் –
அசைக்கப்படாத மேரு மலையை ஒத்த அனுமன்; அகம்பனும்
காணக்காண – அகம்பனாகிய பகைவனும் கண்டு கொண்டிருக்க;
ஐ-இரு கோடிக்கைம்மா முகம்பயில் கலினப்பாய்மா – பத்துக்
கோடி யானைகள் முகத்திற் பொருந்திய கடிவாளத்தைப் பூண்ட
பாயுந் தன்மையுடைய குதிரைகள்; முனை எயிற்று அரக்கர் – கூரிய
பற்களை உடைய அரக்கர்கள், ஆகிய சேனைகளை; மூரி
நுகம்பயில் தேரினோடும் – வலிய நுகத்தோடு பொருந்திய
தேர்களோடு; நுறுக்கினன் நூழில் தீர்த்தான்- பொடியாக்கினவனாகிக்
கொன்று குவித்தலைச் செய்து முடித்தான்.
————
8569. ‘இன்று இவன்தன்னை விண்ணாடு ஏற்றி, வாள் இலங்கை
வேந்தை
வென்றியன் ஆக்கி, மற்றை மனிதரை வெறியர் ஆக்கி,
நின்று உயர் நெடிய துன்பம் அமரர்பால் நிறுப்பல்’
என்னாச்
சென்றனன் அரக்கன்; ‘நன்று, வருக!’ என அனுமன்
சேர்ந்தான்.–129-
இவன் தன்னை இன்று விண்ணொடு ஏற்றி – (அனுமனாகிய)
இவனை இன்றைக்கே வானுலகில் ஏற்றி; வாள் இலங்கை வேந்தை
வென்றியன் ஆக்கி – வாட்படையை உடைய இலங்கை மன்னனாகிய
இராவணனை வெற்றி பெற்றவனாகச் செய்து; மற்றை மனிதரை
வெறியர் ஆக்கி – ஏனை (இராம இலக்குவராகிய) மனிதர்களை
(தேல்வியுடையவர்களாய்) வெறுமை உடையவராகச் செய்து;
அமரர்பால் நின்று உயர் நெடிய துன்பம் – தேவர்களிடத்து
மேன்மேல் ஓங்கிய பெருந்துயரத்தை; நிறுப்பல் என்னா – நிலை
பெறச் செய்வேன் என்று; அரக்கன் சென்றனன் – (அகம்பனாகிய)
அரக்கன் அனுமனை நெருங்கிச் சென்றான்; அனுமன் ‘நன்று வருக’
எனச் சேர்ந்தான் – (அது கண்ட) அனுமன் ‘நல்லது வருக’ எனக்கூறி
அவனை நெருங்கினான்.
—————
8570. படுகளப் பரப்பை நோக்கி, பாழி வாய் அதுக்கி, நூழில்
சுடு கனற் பொறிகள் வெங் கண் தோன்றிட, கொடித்
தேர் தூண்டி,
விடு கனல் பகழி மாரி மழையினும் மும்மை வீசி,
முடுகுறச் சென்று, குன்றின் முட்டினான், முகிலின்
ஆர்ப்பான்.–130-
படுகளப் பரப்பை நோக்கி – போர்க்களப் பரப்பினைப் பார்த்து;
பாழிவாய் அதுக்கி – குகை போன்ற (தன்) வாயை அதுக்கியவனாய்;
நூழில் சுடுகனற் பொறிகள் வெங்கண் தோன்றிட – (பகைவரைக்)
கொன்று குவிக்கும் தொழிலிலே சுடுகின்ற தீப்பொறிகள் (தன்) கொடிய
விழிகளில் காணப்பட; கொடித்தேர் தூண்டி விடுகனல் பகழி மாரி –
கொடி கட்டிய தேரினைச் செலுத்தி விடுகின்ற கனல் கக்குகின்ற
அம்புத் தொகுதி மழையை; மழையினும் மும்மை வீசி –
மழையினைக் காட்டிலும் மும் மடங்கு அதிகமாக வீசிக்கொண்டு;
முகிலின் ஆர்ப்பான் – மேகம் போன்று (இடிப்) பெருங்குரலில்
ஆர்ப்பவனாய்; முடுகுறச் சென்று, குன்றின் முட்டினான் – விரைந்து சென்று குன்றினைப்
போல (அனுமனைத்) தாக்கினான்.
————–
8571. சொரிந்தன பகழி மாரி தோளினும் மார்பின்மேலும்
தெரிந்தன-அசனி போலத் செறு பொறி பிதிர்வ திக்கின்,
வரிந்தன எருவை மானச் சிறைகளால், அமரர் மார்பை
அரிந்தன, வடிம்பு பொன் கொண்டு அணிந்தன, வாங்கு
கண்ண.–131-
அசனி போலத் செறிபொறி திக்கின் பிதிர்வ – இடியைப்
போன்றனவான நெருங்கிய அனற்பொறிகளை திசைகளில்
சிதறுவனவும்; எருவை மானச்சிறைகளால் வரிந்தன – கழுகுகளின்
பெரிய சிறகுகளால் கட்டப்பட்டனவும்; அமரர் மார்பை அரிந்தன –
வானவர் மார்பை (முன்னர்) அரிந்தனவும்; பொன் கொண்டு வடிம்பு
அணிந்தன ஆங்கு கண்ண – பொன்னைக் கொண்டு கூரிய முனை
அலங்கரிக்கப்பட்ட இடத்தைக் கொண்டனவுமான; சொரிந்தன பகழி
மாரி – (அகம்பன்) பொழிந்தனவான அம்பு மழைகள்; தோளினும்
மார்பின் மேலும் தெரிந்தன – (அனுமனது) தோளின்மீதும் மார்பின்
மீதும் காணப்பட்டன;
————-
8572. மார்பினும் தோளின்மேலும், வாளி வாய் மடுத்த வாயில்,
சோர் பெருங் குருதி சோரத் துளங்குவான், தேறாமுன்னம்,
தேர் இரண்டு அருகும் பூண்ட கழுதையும் அச்சும் சிந்த,
சாரதி, புரள, வீரத் தண்டினால் கண்டம் செய்தான்.–132-
மார்பினும் தோளின் மேலும் – (தனது) மார்பு தோள்
ஆகியவற்றின் மீதும்; வாளி வாய் மடுத்த வாயில் – அம்பு துளை
செய்து சென்ற வாய்வழியாக; சோர்பெருங் குருதி சோரத்
துளங்குவான் – வழிகின்ற பெரும் குருதி பெருகிய வண்ணமிருக்கச்
சோர்வுற்றவனான அனுமன்; தேறா முன்னம் – (அந்நிலையினின்றும்
தான்) தெளிவடைவதற்கு முன்னரே; தேர் இரண்டு அருகும்
பூண்ட கழுதையும் அச்சும் சிந்த- தேரின் இரு பக்கத்தும் பூட்டப்
பெற்ற கோவேறு கழுதையும் அச்சும் அழிந்து வீழவும்; சாரதி, புரள
வீரத்தண்டினால் கண்டம் செய்தான் – பாகன் புரண்டு தரையில்
வீழவும், வீரத்தண்டாயுதத்தினால் துண்டு செய்தான்
———–
8573. ‘வில்லினால் இவனை வெல்லல் அரிது’ எனா,
நிருதன்-வெய்ய
மல்லினால் இயன்ற தோளின், வலியினால், வானத் தச்சன்
கொல்லினால் அமைத்தது, ஆங்கு, ஓர் கொடு முனைத்
தண்டுகொண்டான்,
அல்லினால் வகுத்தது அன்ன மேனியான், கடலின்
ஆர்ப்பான்.–133-
அல்லினால் வகுத்தது அன்ன மேனியான் – இருளைக் கொண்டு
இயற்றியது போலும் (கரிய) உடம்பினை உடையவனும்; கடலின்
ஆர்ப்பான், நிருதன் – கடல் போலப் பெருமுழக்கம் செய்பவனுமாகிய
(அகம்பன் என்னும்) அரக்கன்; வில்லினால் இவனை வெல்லல் அரிது
எனா – இவ்வனுமனை வில் தொழிலினால் வெற்றி கொள்வது
அருமையான செயல்’ என எண்ணியவனாய்; வெய்ய மல்லினால்
இயன்ற தோளின் வலியினால் – கொடிய மற்றொழிலுக்கென்றே
இயன்றது போன்ற (தன்) தோளின் வன்மையால் (வெல்லக்கருதி);
வானத்தச்சன் கொல்லினால் அமைத்தது – தெய்வத்தச்சன் தனது
கொல்லுத் தொழிலினால் செய்தமைத்தான்; ஓர்கொடுமுனைத் தண்டு
கொண்டான் – கொடிய முனையினை உடைய ஓர் தண்டாயுதத்தை
அப்போது (கையில்) எடுத்துக் கொண்டான்.
—————
8574. தாக்கினார்; வலத்து மற்றை இடத்தினும் திரிந்தார் சாரி;
ஓக்கினார்; ஊழின் ஆர்ப்புக் கொட்டினார்; கிட்டினார்; கீழ்த்
தூக்கினார்; சுழற்றினார், மேல்; சுற்றினார்; எற்றி வெற்றி;
நீக்கினார்; நெருக்கினார் போய்; நீங்கினார், ஏங்கினார்
மேல்.–134-
தாக்கினார் – (அனுமன் அகம்பன் ஆகிய அவ்விருவரும்)
ஒருவரை ஒருவர் முட்டித்தாக்கினர்; வலத்து மற்றை இடத்தினும்
திரிந்தார் சாரி – வலப்பக்கத்திலும் மற்றை இடப்பக்கத்திலுமாகச் சாரி
திரிந்தனர்; ஓக்கினார்; ஊழின் ஆர்ப்புக் கொட்டினர் – (கைகளை)
ஓங்கியவர்களாய் ஊழிக்காலத்தைப் போன்று பேராரவாரம் செய்து
(போருக்குத் தோள்) கொட்டினர்; கிட்டினார், கீழ்த் தூக்கினார்,
சுழற்றினார் – (தம்முள்) கிட்டி நெருங்கியவர்களாய்த் தூக்கிக்கொண்டு
(உடம்பு தரையில் படுமாறு) கீழே சுற்றினர்; மேல் சுற்றினார் – மேலே
எழுத்து (ஒருவரை ஒருவர்) வெற்றி கொள்வதினின்றும் நீக்கினர்;
நெருக்கினார் போய்; நீங்கினார் ஏங்கினார்மேல் – மீண்டும் சென்று
நெருக்கினர் அந்நிலையில் மேலே எம்பித் தள்ளி ஒருவரின் ஒருவர்
நீங்கினர்.
————
8575. தட்டினார்; தழுவினார்; மேல் தாவினார்; தரையினோடும்
கிட்டினார்; கிடைத்தார்; வீசிப் புடைத்தனர் கீழும் மேலும்
கட்டினார்; காத்தார்; ஒன்றும் காண்கிலார், இறவு; கண்ணுற்று,
ஒட்டினார்; மோதி வட்டம் ஓடினார்; ஆதி போனார்.–135-
தட்டினார், தழுவினார் – (தோள்) தட்டியவராய் (ஒருவரை ஒருவர்)
தழுவிப் பிடித்தனர்; மேல் தாவினார் தரையினோடும் கிட்டினார் –
விசும்பின் மேல் தாவினர் தரையிற் கிட்டி நெருக்கினார்; கிடைத்தார் –
(ஒருவரை ஒருவர்) நெருங்கினார்; வீசிப்புடைத்தனர் கீழும் மேலும் –
(ஒருவரை ஒருவர்) கீழும் மேலும் வீசி மோதிப் புடைத்தனர்;
கட்டினார்; காத்தார் – நெருக்கிக் கட்டிக் கொண்டனர்
(அக்கட்டினின்றும் நெகிழ்ந்து வெளிவந்து) தம்மைக்
காத்துக்கொண்டனர்; ஒன்றும் இறவு காண்கிலார் – ஒருவர்
(மற்றவரை) இறத்தலைச் சிறிதும் காண மாட்டாதவராயினர்; கண்ணுற்று
ஒட்டினார் – ஒருவரை ஒருவர் நோக்கிச் சபதம் கூறினர்; மோதி
வட்டம் ஓடினார் – (தம்முள்) மோதித் தாக்கி இடம் வலமாகச்
சாரி திரிந்தனர்; ஆதிபோனார் – நேராக ஓடினர்.
————
8576. மய்யொடும் பகைத்து நின்ற நிறத்தினான் வயிர மார்பில்,
பொய்யொடும் பகைத்து நின்ற குணத்தினான் புகுந்து மோத,
வெய்யவன், அதனைத் தண்டால் விலக்கினான்;
விலக்கலோடும்,
கய்யொடும் இற்று, மற்று அக் கதை களம் கண்டது அன்றே.–136-
பொய்யொடும் பகைத்து நின்ற குணத்தினான் – பொய்ம்மையின்
மாறுபட்டு நின்ற வாய்மையனாகிய அனுமன்; மய்யொடும் பகைத்து
நின்ற நிறத்தினான் – மைக்குழம்புடன் பகைத்து மிகுந்து நின்ற
கருமை நிறத்தை உடைய அகம்பனின்; வயிரமார்பில் புகுந்து மோத –
திண்ணிய மார்பிடத்துப் (தண்டு கொண்டு) புகுந்து தாக்கிய அளவில்;
வெய்யவன் அதனைத் தண்டால் விலக்கினான் – கொடியவனாகிய
அகம்பன் அத் தாக்குதலைத் (தன் கையிற் கொண்ட)
தண்டாயுதத்தால் தடுத்து விலக்கினான்; விலக்கலோடும் – அங்ஙனம்
தடுத்த அளவில்; அக்கதை கய்யொடும் இற்று களம் கண்டது
அன்றே – அந்தத் தண்டாயுதம் (அதனைப் பற்றிய அகம்பனின்
வலக்) கையுடன் முறிந்து போர்க்களத்தில் வீழ்ந்தது.
————
8577. கய்யொடு தண்டு நீங்க, கடல் எனக் கலக்கம் உற்ற
மெய்யொடு நின்ற வெய்யோன், மிடலுடை இடக் கை ஓச்சி,
அய்யனை அலங்கல் ஆகத்து அடித்தனன், அடித்த ஓசை,
ஒய்யென வயிரக் குன்றத்து உருமின்ஏறு இடித்தது ஒத்த.–137-
கய்யோடு தண்டு நீங்க – (பற்றிய வலக்) கையுடன் தண்டாயுதம்
(முறிந்து) நீங்க; கடல் எனக் கலக்கம் உற்ற மெய்யொடு நின்ற
வெய்யோன் – (பெருங்காற்று எழுந்தபோது) கடலைப் போன்று
கலக்கமுற்று உடம்புடனே நின்ற வெம்மையுடைய அகம்பன்;
மிடலுடை இடக்கை ஓச்சி – வலிமை மிக்க தனது இடக்கையினை
ஓங்கி; அய்யனை அலங்கல் ஆகத்து அடித்தனன் – அனுமனை
வெற்றி மாலை விளங்கும் மார்பின் கண்ணே அடித்தான்; அடித்த
ஓசை- அங்ஙனம் அடித்தலால் எழுந்த பேரோசை; வயிரக்குன்றத்து
உருமின் ஏறு – திண்ணிய வயிரமலையில் பேரிடியானது; ஒய்யென
இடித்தது ஒத்த – விரைந்து வீழ்ந்ததை ஒத்திருந்தது.
————-
8578. அடித்தவன் தன்னை நோக்கி, அசனிஏறு அனைய தண்டு
பிடித்து நின்றேயும் எற்றான், ‘வெறுங் கையான்;
பிழையிற்று’ என்னா,
மடித்து வாய், இடத்த கையால் மார்பிடைக் குத்த, வாயால்
குடித்து நின்று உமிழ்வான் என்னக் கக்கினன், குருதி
வெள்ளம்.–138-
அடித்தவன் தன்னை நோக்கி – அனுமன் (தன்னை)
அடித்தவனாகிய அகம்பனை நோக்கி; வெறுங்கையான் பிழையிற்று
என்னா – இவன் (ஆயுதம் எடாத) வெறுங்கையினை உடையான்
(இவனை ஆயுதத்தால் தாக்குதல்) குற்றமுடைய செயலாம் என
எண்ணி; அசனி ஏறு அனைய தண்டு பிடித்து நின்றேயும் எற்றான்-
இடியேற்றினைப் போன்ற தண்டாயுதத்தைத்தான் பிடித்திருந்தும்
(அதனைக் கொண்டு) தாக்காதவனாய்; வாய் மடித்து இடத்தகையால்
மார்பிடைக் குத்த – வாயினை மடித்துக்கொண்டு தனது
இடக்கையினால் அவ்வகம்பனுடைய மார்பின் கண்ணே குத்த; குருதி
வெள்ளம் வாயால் குடித்து நின்று – (அவ்வரக்கன்) உதிரப்
பெருக்கினை (முன்னம்) வாயினால் பருகி நின்று; உமிழ்வான் என்னக்
கக்கினான் – (இப்போது) உமிழுகின்றவனைப்போலக் கக்கினான்.
—————
8579. மீட்டும் அக் கையால் வீசி, செவித்தலத்து எற்ற, வீழ்ந்தான்;
கூட்டினான் உயிரை, விண்ணோர் குழாத்திடை; அரக்கர்
கூட்டம்
காட்டில் வாழ் விலங்கு மாக்கள் கோள் அரி கண்ட என்ன,
ஈட்டம் உற்று எதிர்ந்த எல்லாம் இரிந்தன, திசைகள் எங்கும்.–139-
மீட்டும் அக்கையால் வீசி செவித்தலத்து எற்ற வீழ்ந்தான் –
திரும்பவும் (அனுமன்) அவ்விடது கரத்தினாலே ஓங்கி (அகம்பனது)
கன்னத்திலே அறைந்து தாக்க வீழ்ந்தவனாய்; உயிரை விண்ணோர்
குழாத்திடை கூட்டினான் – தனது உயிரைத் தேவர் குழாத்திடைச்
செலுத்தி இறந்துபட்டான்; ஈட்டம் உற்று எதிர்ந்த அரக்கர் கூட்டம்
எல்லாம் – (அவ்வளவில் போர்க்களத்தில் திரண்டு நின்று, எதிர்ந்த
அரக்கர் கூட்டம் அனைத்தும்; கோள் அரி கண்ட காட்டில் வாழ்
விலங்கு மாக்கள் என்ன – சிங்கத்தைக் கண்ட காட்டில் வாழுகின்ற
விலங்குகளைப் போன்று; திசைகள் எங்கும் இரிந்தன – எல்லாத்
திக்குகளிலும் நிலைகுலைந்து சென்றன.
———–
அனுமன் முதலியோர் ஒருவரை ஒருவர் காணாது திகைத்தல்
8580. ஆர்க்கின்ற குரலும் கேளான்; இலக்குவன் அசனி ஏற்றைப்
பேர்க்கின்ற சிலையின் நாணின் பேர் ஒலி கேளான்; வீரன்
யார்க்கு இன்னல் உற்றது என்பது உணர்ந்திலன்;
இசைப்போர் இல்லை;
போர்க் குன்றம் அனைய தோளான் இனையது ஓர்
பொருமல் உற்றான்.–140-
போர்க்குன்றம் அனைய தோளான் – பொருதல் தொழிலை
உடையதும் மலையினை ஒத்ததுமாகிய தோள்களை உடைய அனுமன்;
ஆர்க்கின்ற குரலும் கேளான் – (மீண்டு வந்த வானர வீரர்)
ஆரவாரிக்கின்ற குரலைக் கேட்டிலன்; அசனி ஏற்றைப் பேர்க்கின்ற –
பேரிடியின் ஒலியையும் அடக்கவல்ல; இலக்குவன் சிலையின் நாணின்
பேர் ஒலி கேளான் – இலக்குவனது வில் நாணின் பேரொலியையும்
கேட்டிலன்; வீரர் யார்க்கு இன்னல் உற்றது என்பது
உணர்ந்திலன் – (தன்) சேனையைச் சேர்ந்த வீரர்களில் இன்னார்க்கு
இன்ன துன்பம் நேர்ந்தது என்பதனையும் அறிந்திலன்; இசைப்போர்
இல்லை – அவற்றை அறிந்து கூறுவோரும் இல்லை; இனையது ஓர்
பொருமல் உற்றான் – (இந்நிலையில்) இத்தகையது என ஒப்புமை
கூறவியலாத ஓர் பெருந்துயரத்தை அடைந்தான்.
———–
8581. வீசின நிருதர் சேனை வேலையில் தென்மேல் திக்கின்
யோசனைஏழு சென்றான் அங்கதன்; அதனுக்கு அப்பால்,
ஆசையின் இரட்டி சென்றான் அரி குலத்து அரசன்;
அப்பால்,
ஈசனுக்கு இளைய வீரன் இரட்டிக்கும் இரட்டி சென்றான்.–141-
வீசின நிருதர் சேனை வேலையில் – சிதறிய அரக்கர்
சேனையாகிய கடலினுள்ளே; தென்மேல் திக்கின் – தென் மேற்குத்
திசையில்; யோசனை ஏழு அங்கதன் சென்றான் – ஏழு யோசனை
அளவு (தூரம்) அங்கதன் சென்றான்; அரிகுலத்து அரசன் –
வானர குலவேந்தனாகிய சுக்கிரீவன்; அதனுக்கு அப்பால் ஆசையின்
இரட்டி சென்றான் – அவ்வங்கதன் சென்ற தூரத்துக்கப்பால் அதே
திசையில் அதன் இரண்டு மடங்கு (பதினான்கு) யோசனை அளவு
சென்றான்; ஈசனுக்கு இளைய வீரன் – இராமபிரானுக்குத் தம்பியான
இலக்குவன்; அப்பால் இரட்டிக்கும் இரட்டி சென்றான் – அதற்கு
அப்பால் நான்கு மடங்கு (இருபத்து எட்டு) யோசனை அளவு சென்றான்.
—————–
8582. மற்றையோர் நாலும் ஐந்தும் யோசனை மலைந்து புக்கார்;
கொற்ற மாருதியும் வள்ளல் இலக்குவன் நின்ற சூழல்
முற்றினன்-இரண்டு மூன்று காவதம் ஒழிய, பின்னும்
சுற்றிய சேனை நீர்மேல் பாசிபோல் மிடையும் துள்ளி.–142-
மற்றையோர் நாலும் ஐந்தும் யோசனை மலைந்து புக்கார் –
ஏனைய படைத்தலைவர்கள் நாலு யோசனையும், ஐந்து யோசனையும்
அளவே (அரக்கர் சேனையை) பொருது (உள்ளே) புகுந்தனர்; பின்னும்
சுற்றிய சேனை – அதன் மேலும் சூழ்ந்து நின்ற படை; நீர்மேல்
பாசிபோல் துள்ளி மிடையும் – நீர் மேல் பாசி படர்வதைப் போன்று
விரைந்து நெருங்கும்; கொற்ற மாருதியும் – வெற்றி பொருந்திய
அனுமனும்; வள்ளல் இலக்குவன் நின்ற சூழல் – வள்ளன்மை
பொருந்திய லக்குவன் நின்ற இடத்திற்கு; இரண்டு மூன்று காவதம் ஒழியமுற்றினன் – இரண்டு மூன்று
காவதங்கள் இடையிட்டுச் சேர்ந்தான்.
————
8583. ‘இளையவன் நின்ற சூழல் எய்துவென், விரைவின்’ என்று ஓர்
உளைவு வந்து உள்ளம் தூண்ட, ஊழி வெங் காலின்
செல்வான்,
களைவு அருந் துன்பம் நீங்கக் கண்டனன் என்ப மன்னோ-
விளைவன செருவில் பல் வேறு ஆயின குறிகள் மேய.
ஓர் உளைவு வந்து உள்ளம் தூண்ட – (இலக்குவனைக்
காணாமையால் உண்டாக்கிய) ஒரு துயரந்தோன்றித் தன் உள்ளத்தைத்
தூண்டுதலால்; இளையவன் நின்ற சூழல் எய்துவென் விரைவின்
என்று – இளையோனாகிய இலக்குவன் நின்ற இடத்தினை விரைவில்
அடைவேன் என்று; ஊழி வெங்காலின் செல்வான் – ஊழிக்காலத்து
வீசும் பெருங்காற்றினைப் போன்று விரைந்து செல்பவனாகிய
அனுமன்; விளைவன செருவில் மேய பல்வேறு ஆயின குறிகள் –
(இலக்குவனால் அங்கு) நிகழ்வனவாகிய போர்ச் செயல்களில்
பொருந்திய பல்வேறு அடையாளங்களை; களைவு அருந்துன்பம்
நீங்கக் கண்டனன் – நீக்குதற்கரிய தன் மனத் துயரம் நீங்கும்படி
கண்டான்.
———-
8584. ஆனையின் கோடும், பீலித் தழைகளும், ஆரத்தோடு
மான மா மணியும், பொன்னும், முத்தமும், கொழித்து வாரி,
மீன் என அங்கும் இங்கும் படைக்கலம் மிளிர, வீசும்
பேன வெண் குடைய ஆய, குருதிப் பேர் ஆறு கண்டான்.–144-
ஆனையின் கோடும், பீலித் தழைகளும் – யானைத்
தந்தங்களையும் மயிற் பிச்சங்களையும்; ஆரத்தோடு மானமா
மணியும் – மாலைகளோடு பெருமை மிக்க இரத்தினங்களையும்;
பொன்னும், முத்தமும் கொழித்து வாரி – பொன்னையும்
முத்துக்களையும், கொழித்து வாரிக்கொண்டு; படைக்கலம் மீன் என
அங்கும் இங்கும் மிளிர – (ஒளி மிக்க வாள் முதலான) ஆயுதங்கள்
மீன்களைப் போன்று விளங்க; வீசும் பேன வெண்குடைய ஆய,
குருதிப்போர் ஆறு கண்டான் – வீசியொதுக்கும் நுரைகளை யொத்த
வெண் குடைகளைத் தன்னகத்தே கொண்டு செல்வனவாகிய இரத்தப்
பேராறுகளை (அனுமன்) கண்டான்.
———-
8585. ஆசைகள்தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர்தம்மேல்
வீசின பகழி, அற்ற தலையொடும் விசும்பை முட்டி,
ஓசையின் உலகம் எங்கும் உதிர்வுற, ஊழி நாளில்
காசு அறு கல்லின் மாரி பொழிவபோல், விழுவ கண்டான்.–145-
ஆசைகள் தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர் தம்மேல் –
திசைகள் தோறும் சூழ்ந்து வளைத்துப் போர் செய்கின்ற
அரக்கர்களின் மேலே; வீசின, பகழி, அற்ற தலையொடும் விசும்பை
முட்டி – (இலக்குவன்) ஏவிய அம்புகள் அறுபட்ட தலைகளோடு வான
முகட்டைச் சென்று முட்டி; ஓசையின் உலகம் எங்கம் உதிர்வுற –
பெரு முழக்கத்துடன் உலகம் எங்கும் பொடியாய்ச் சிதர்ந்து
உதிருமாறு; ஊழிநாளில் காசு அறு கல்லின் மாரி – ஊழி முடிவில்
குற்றமற்ற கல்மழை; பொழிவபோல் விழுவ கண்டான் –
சொரிவனவற்றையொத்து (தரையில்) வீழ்வனவற்றை (அனுமன்)
கண்டான்.
————
8586. மான வேல் அரக்கர் விட்ட படைக்கலம், வான மாரி
ஆன வன் பகழி சிந்த, திசைதொறும் பொறியோடு அற்று
மீன் இனம் விசும்பின்நின்றும் இருள் உக விழுவ போல,
கானகம் தொடர்ந்த தீயின் சுடுவன பலவும் கண்டான்.–146-
மானவேல் அரக்கர் விட்ட படைக்கலம் வானமாரி – (வீரத்தில்
குறையாத) பெருமை வாய்ந்த வேற்படையை உடைய அரக்கர்கள்
விடுவித்த ஆயுதங்களாகிய பெரு மழையை; ஆனவன் பகழி சிந்த –
அத்தகைய வீரத்தன்மை உடையவனாகிய இலக்குவன் (எய்த)
அம்புகள் துணிக்க; திசையொடும் பொறியோடு அற்ற – (அவை)
திக்குகள் தோறும் தீப்பொறிகளோடும் துணிபட்டுத் (தரையில்)
வீழ்வன; மீன் இனம் விசும்பினின்றும் இருள் உக வீழ்வபோல –
விண்மீன் தொகுதிகள் வானத்தினின்றும் இருள் கெட
வீழ்வனவற்றைப் போன்று (விழுவனவாகி); கானகம் தொடர்ந்த தீயின்
சுடுவன பலவுங் கண்டான் – காட்டிற் பற்றிய பெருந்தீயினையொத்துச்
சுடுவன பலவற்றையும் (அனுமன்) கண்டான்.
——-
8587. அருளுடைக் குரிசில் வாளி, அந்தரம் எங்கும் தாம் ஆய்,
தெருள் உறத் தொடர்ந்து வீசிச் செல்வன, தேவர் காண
இருளிடைச் சுடலை ஆடும் எண் புயத்து அண்ணல் வண்ணச்
சுருளுடைச் சடையில் கற்றைச் சுற்று எனச் சுடர்வ,
கண்டான்.
அருளுடைக் குரிசில் வாளி – அருட்குணமுடைய தலைவனாகிய
இலக்குவன் எய்த அம்புகள்; அந்தரம் எங்கும் தாம் ஆய் –
ஆகாயமெங்கும் தாமேயாய் பரவி; தெருள் உறத் தொடர்ந்து வீசிச்
செல்வன – (வீரர்கள் யாவரும் இருள் நீங்கித்) தெளிவு பெறுமாறு
தொடர்ந்து ஒளிவீசி (உயர்ந்து) செல்பவை; தேவர் காண இருளிடைச்
சுடலை ஆடும் – தேவரெல்லாம் காணுமாறு நள்ளிருளில்
சுடுகாட்டகத்தே நடம்புரியும்; எண் புயத்து அண்ணல் வண்ணச்
சுருளுடைச் சடையின் கற்றைச் சுற்று என – எண் தோள் ஈசனாகிய
சிவபெருமானின் அழகு வாய்ந்த சுருளுதலைக் கொண்ட சடைத்
தொகுதியின் சுற்றுப் போன்று; சுடர்வ கண்டான் – ஒளி செய்வதைக்
கண்ணுற்றான். (அனுமன்)
————-
8588. நெய் உறக் கொளுத்தப்பட்ட நெருப்பு என, பொருப்பின்
ஓங்கும்
மெய் உறக் குருதித் தாரை விசும்பு உற, விளங்குகின்ற-
அய்யனை, கங்குல் மாலை, அரசு என அறிந்து, காலம்,
கய் விளக்கு எடுத்தது என்ன-கவந்தத்தின் காடு கண்டான். –148-
நெய்யுறக் கொளுத்தப்பட்ட நெருப்பு என – நெய்யிட்டு எரிக்கப்
பெற்ற தீயினைப் போன்று; பொருப்பின் ஓங்கும் மெய்யுறக் – மலை
போன்று உயர்ந்து நிற்கும் உடலினின்றும் மிகுதியாக; குருதித் தாரை
விசும்பு உற விளங்குகின்ற – (எழுந்த) குருதிப்பெருக்கு ஆகாயத்தின்
உற விளங்கி நின்றமை; அய்யனை அரசு என அறிந்து –
இலக்குவனை அரச குமாரன் என அறிந்து; கங்குல், மாலை, காலம்
கய் விளக்கு எடுத்தது என்ன – இருளுடன் கூடிய இரவுக் காலக்
கைவிளக்கு ஏந்தினாற் போன்று; கவந்தத்தின் காடு கண்டான் –
கவந்தங்களின் மிகுதியை (அனுமன்) கண்டான்.
————
8589. ஆள் எலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும்,
நாள் எலாம் எண்ணினாலும் தொலைவு இலர் நாதர் இன்றி,
தாள் எலாம் குலைய ஓடித் திரிவன, தாங்கல் ஆற்றும்
கோள் இலா மன்னன் நாட்டுக் குடி எனக் குலைவ கண்டான்.–149-
ஆள் எலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும் –
(செலுத்தும்) வீரர்களை இழந்து வெறுமையுற்ற தேரும், யானையும்
வெற்றி மிக்க குதிரையும்; நாள் எலாம் எண்ணினாலும் தொலைவு
இலா – (வாழ்) நாட்களெல்லாம் (இருந்து) எண்ணினாலும் எண்ணத்
தொலையாதனவாம்; நாதர் இன்றி, தாள் எலாம் குலைய ஓடித்
திரிவன – (அங்ஙனம் தம்மைச் செலுத்தும்) தலைவர்களின்றி
கால்களெல்லாம் குலைந்து தளருமாறு (நிலைபெறாது) ஓடித் திரிபவை;
தாங்கல் ஆற்றும் கோள் இலா மன்னன் – தாங்கிக் காக்கும்
கொள்கை இல்லாத (கொடுங்கோல்) மன்னனது; நாட்டுக்குடி எனக்
குலைவு கண்டான் – நாட்டிலுள்ள குடி மக்களைப் போன்று
நிலைகுலைந்து சிதைவனவற்றை மேலும் அனுமன் கண்டான்.
————–
8590. மிடல் கொளும் பகழி மாரி, வானினும் மும்மை வீசி,
மடல் கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட, உலைந்து
மாண்டார்
உடல்களும், உதிர நீரும், ஒளிர் படைக்கலமும், உற்ற
கடல்களும், நெடிய கானும், கார் தவழ் மலையும்,
கண்டான்.–150-
மடல் கொளும் அலங்கல் மார்பன் – இதழ்களை உடைய மலர்
மாலையை அணிந்தவனான இலக்குவன்; மிடல் கொளும் பகழி மாரி –
வன்மை பொருந்திய அம்பு மழையினை; வானினும் மும்மை வீசி
மலைந்திட – மேகத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு சொரிந்து போர்
செய்தமையால்; உலைந்து மாண்டார் -உயிர் நீங்கியவராகிய
அரக்கரின்; உடல்களும் உதிர நீரும் ஒளிர்படைக்கலமும் –
உடல்களும், இரத்தப் புனலும், ஒளி செய்கின்ற போர்க்கருவிகளும்
உற்ற – பொருந்திய (அவற்றாலாகிய); கடல்களும் நெடிய கானும்
கார்தவழ் மலையும் கண்டான் – கடல்களையும், பரந்த காட்டினையும்
மேகந்தவழ்கின்ற மலையையும் (அனுமன்) கண்டான்.
————
8591. சுழித்து எறி ஊழிக் காலின் துருவினன் தொடரும்
தோன்றல்,
தழிக் கொண்ட குருதி வேலை தாவுவான், ‘தனிப் பேர்
அண்டம்
கிழித்தது, கிழித்தது’ என்னும் நாண் உரும்ஏறு கேட்டான்;
அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் ஆர்கலிக்கு இரட்டி
ஆர்த்தான்.–151-
சுழித்து எறி ஊழிக்காலின் – (எல்லாப்பொருள்களையும்) சுழற்றி
வீசும் யுகமுடிவுக் காலத்தின் பெருங்காற்றுப்போல; துருவினன்
தொடரும் தோன்றல் – (இலக்குவனைத்) தேடிச் செல்லும் பெருமை
மிக்கவனாகிய அனுமன்; தழிக்கொண்ட குருதி வேலை தாவுவான் –
(நாற்புறத்தும்) வளைத்துக் கொண்டுள்ள குருதி நீர்க்கடலைத் தாவிக்
கடந்து செல்லுபவன்; தனிப்பேர் அண்டம் கிழித்தது, கிழித்தது
என்னும் – தனித்துள்ள இப்பெரிய அண்டத்தைக் கிழித்தது கிழித்தது
என்னும்படியாக (எழுந்த)! நாண் உரும் ஏறு கேட்டான் –
(இலக்குவனது) வில் நாணின் ஒலியாகிய இடி ஓசையினைக்
கேட்டவனாகி; அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் – (எல்லாப்
பொருள்களையும்) அழித்தொழிக்கின்ற ஊழி முடிவுக்காலத்தில்
ஆரவாரித்து(ப்பொங்கி) எழும்; ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான் – கடலைக்
காட்டிலும் பெருமுழக்கம் செய்தான்.
———–
அனுமனைத் தழுவி, இலக்குவன் சேனையின் நிலைமை உசாவுதல்
8592. ஆர்த்த பேர் அமலை கேளா, அணுகினன் அனுமன்; ‘எல்லா
வார்த்தையும் கேட்கல் ஆகும்’ என்று, அகம் மகிழ்ந்து,
வள்ளல்
பார்ப்பதன் முன்னம் வந்த வணங்கினன், விசயப் பாவை
தூர்த்தனை; இளைய வீரன் தழுவினன், இனைய சொன்னான்:-152-
ஆர்த்த பேர் அமலைகேளா – ஆரவாரித்த (அனுமனின்)
பேரொலியினைக் கேட்டு; ‘அனுமன் அணுகினன்’ – அனுமன் (இங்கு)
வந்து சேர்ந்தான்; எல்லாவார்த்தையும் கேட்கல் ஆகும் – (அவன்
வாயிலாக) எல்லோருடைய செய்திகளையும் கேட்டறியலாம்; என்று
அகம் மகிழ்ந்து – என்று தன்னுள்ளத்தே மகிழ்ச்சியுற்று; வள்ளல்
பார்ப்பதன் முன்னம் – வள்ளன்மையுடையோனாகிய இலக்குவன்,
(அவ்வனுமனைத் திரும்பிப்) பார்ப்பதற்கு முன்னே; வந்து
வணங்கினன் – (அவன் இலக்குவனை) அடைந்து வணங்கினான்;
இளையவீரன் – (இராமனுக்கு) இளைய வீரனாகிய இலக்குவன்;
விசயப்பாவை தூர்த்தனை – வெற்றி மங்கையைக் காமுற்றவனாகிய
அனுமனை; தழுவினன் இனைய சொன்னான் – தழுவிக்
கொண்டவனாய் (ப்பின்வருமாறு) இவ்வார்த்தைகளைக் கூறினான்.
————-
8593. ‘அரி குல வீரர், ஐய! யாண்டையர்? அருக்கன் மைந்தன்
பிரிவு உனைச் செய்தது எவ்வாறு? அங்கதன்
பெயர்ந்தது எங்கே?
விரி இருள் பரவைச் சேனை வெள்ளத்து விளைந்தது
ஒன்றும்
தெரிகிலென்; உரைத்தி’ என்றான். சென்னிமேல்
கையன் சொல்வான்.–153-
ஐய! அரிகுல வீரர் யாண்டையர்? – ‘தலைமை சான்றவனே!
(அனுமனே) குரக்குக் குலத்து வீரர்கள் எவ்விடத்தே உள்ளார்கள்?
அருக்கன் மைந்தன் பிரிவு உனைச் செய்தது எவ்வாறு? –
சூரியன் மகனான சுக்ரீவன் உன்னை விட்டுப் பிரிந்து சென்றது
எவ்வாறு? அங்கதன் பெயர்ந்தது எங்கே? – அங்கதன் சென்றது
எங்கே? விரிஇருள் பரவைச் சேனை வெள்ளத்து – பரந்த
இருட்கடலில் கலந்த சேனை வெள்ளத்தில்; விளைந்தது ஒன்றும்
தெரிகிலென் உரைத்தி என்றான் – நிகழ்ந்த செயல் எதையும்
அறிந்திலேன், (இவற்றை விளங்கச்) சொல்வாயாக என (இலக்குவன்)
வினவினான்; சென்னிமேல் கையன் சொல்வான் – (அது கேட்ட
அனுமன்) தலைமேல் குவித்த கையனாய் (ப்பின் வருமாறு மறுமொழி)
கூறுவானாயினன்.
—————-
அனுமன் மறுமொழி
8594. ‘போயினார் போயவாறும், போயினது அன்றிப் போரில்
ஆயினார் ஆயது ஒன்றும், அறிந்திலென், ஐய! யாரும்
மேயினார் மேய போதே தெரிவது, விளைந்தது’ என்றான்-
தாயினான் வேலையோடும் அயிந்திரப் பரவைதன்னை.–154-
வேலையோடும் அயிந்திரப் பரவைதன்னைத் தாயினான் –
கடலுடன் ஐந்திரவியாகரணமாகிய கடலையும் கடந்தவனாகிய
அனுமன்; ஐய! போயினார் போயவாறும் போயினது அன்றி –
(இலக்குவனை நோக்கி) தலைவனை! போர்மேற் சென்றவர்களாகிய
அவர்கள் (தம்மை எதிர்த்த பகைவர்களைத் தொடர்ந்து)
போயினதைத் தவிர; போரில் ஆயினார் ஆயது ஒன்றும்
அறிந்திலென் – போரில் ஈடுபட்டோராகிய அவர்களிடையே நிகழ்ந்த
செய்தி எதுவும் அறியப் பெற்றிலேன்; யாரும் மேயினார்
மேயபோதே – (போரில்) பொருந்தியவர்களாகிய அவர்கள்
யாவரும் (இங்கு மீண்டு) வந்தபோது தான்; விளைந்தது தெரிவது’
என்றான் – (அங்கு) நிகழ்ந்தவற்றை அறிதல் கூடும்’ என்று கூறினான்.
—————-
8595. ‘மந்திரம் உளதால், ஐய! உணர்வுறும் மாலைத்து; அஃது உன்
சிந்தையின் உணர்ந்து, செய்யற்பாற்று எனின், செய்தி;
தெவ்வர்
தந்திரம்அதனைத் தெய்வப் படையினால் சமைப்பின்
அல்லால்,
எந்தை! நின் அடியர் யாரும் எய்தலர், நின்னை’ என்றான்.–155-
ஐய!, உணர்வுறும் மாலைத்து மந்திரம் உளது – ‘ஐயனே!
(பகைவரது மாயையாற் பொருந்திய மயக்கம் நீங்கி) நல்லுணர்வினை
அடையச் செய்யும் இயல்பினதாகிய உபாயம் ஒன்று உள்ளது; அஃது
உன் சிந்தையின் உணர்ந்து – அதனை நின் மனத்தின் கண்ணே
ஆராய்ந்து தெளிந்து; செய்யற்பாற்று எனின், செய்தி – (இப்பொழுது)
செய்யத்தக்கதாயின் அதனைச் செய்வாயாக; தெவ்வர் தந்திரம்
இதனை – பகைவருடைய சூழ்ச்சித்திறமாகிய இம்மயக்கத்தினை;
தெய்வப்படையினால் சமைப்பின் அல்லால் – தெய்வத்தன்மை
வாய்ந்த அத்திரங்களால் செய்தால் அன்றி; எந்தை! நின் அடியர்
யாரும் எய்தலர் நின்னை’ என்றான் – எந்தையே நின்
அடித்தொண்டராகிய வானரவீரர்கள் எவரும் (மயக்கந்தெளிந்து)
நின்னை வந்தடையும் ஆற்றலுடையவர் அல்லர்’ என (அனுமன்
இலக்குவனுக்கு) கூறினான்.
————-
இலக்குவன் சிவன்படை தொடுத்தல்
8596. ‘அன்னது புரிவென்’ என்னா, ஆயிர நாமத்து அண்ணல்-
தன்னையே வணங்கி வாழ்த்தி, சரங்களைத் தெரிந்து தாங்கி,
பொன் மலை வில்லினான்தன் படைக்கலம் பொருந்தப் பற்றி,
மின் எயிற்று அரக்கர்தம்மேல் ஏவினான்-வில்லின்
செல்வன்.–156-
வில்லின் செல்வன் – விற்றொழில் வன்மையாகிய செல்வத்தை
உடைய இலக்குவன்; அன்னது புரிவென் என்னா – (நீ கூறிய)
“அதனையே செய்வேன்” என (அனுமனுக்குக்) கூறி; ஆயிர நாமத்து
அண்ணல் தன்னையே வணங்கி வாழ்த்தி – ஆயிரம்
திருப்பெயர்களை உடையவனாகிய இறைவனாம் இராமபிரானை
வணங்கி, வாழ்த்தி; சரங்களைத் தெரிந்துதாங்கி – அம்புகளைத்
தேர்ந்தெடுத்து; பொன்மலை வில்லினான் தன் படைக்கலம்
பொருந்தப் பற்றி – பொன்மயமான மேருமலையை வில்லாகக்
கொண்ட சிவபெருமானது படைக்கலத்தினைப் பொருந்தும் படி செய்து;
மின்னெயிற்று அரக்கர் தம்மேல் ஏவினான் – மின்னலை ஒத்து
விளங்கும் ஒளி பொருந்திய பற்களை உடைய அரக்கரின் மீது
செலுத்தினான்.
————-
8597. முக்கணான் படையை மூட்டி விடுதலும், மூங்கில் காட்டில்
புக்கது, ஓர் ஊழித் தீயின், புறத்தின் ஓர் உருவும் போகாது
அக் கணத்து எரித்து வீழ்ந்தது, அரக்கர்தம் சேனை; ஆழித்
திக்கு எலாம் இருளும் தீர்ந்த; தேவரும் மயக்கம் தீர்ந்தார்.–157-
முக்கணான் படையை மூட்டி விடுதலும் – (இலக்குவன்)
சிவபெருமானது படைக்கலத்தைத் தொடுத்துச் செலுத்திய அளவில்;
மூங்கில் காட்டில் புக்கது ஓர் ஊழித் தீயின் – மூங்கில் காட்டில்
பற்றியதொரு ஊழிக்காலத்தீயினைப் போன்று; புறத்தின் ஓர் உருவும்
போகாது – புறத்தே ஒரு பொருளும் தப்பிப் போகாதவாறு;
அரக்கர்தம் சேனை அக்கணத்து எரிந்து வீழ்ந்தது – அரக்கர்
சேனை அப்பொழுதே எரிந்து வீ்ழ்ந்தது; ஆழித்திக்கெலாம் இருளும் தீர்ந்த- கடலை எல்லையாக உடைய
திசைகள் அனைத்தும் இருள் நீங்கப்பெற்றன; தேவரும் மயக்கம்
தீர்ந்தார் – தேவர்களும் திகைப்பு நீங்கப்பெற்றனர்.
———-
8598. தேவர்தம் படையை விட்டான் என்பது சிந்தை செய்யா,
மா பெருந் தேரில் நின்ற மகோதரன் மறையப் போனான்;
யாவரும் இரிந்தார் எல்லாம், இன மழை கழிய ஆர்த்து,
கோ இளங் களிற்றை வந்து கூடினார்; ஆடல் கொண்டார்.–158-
தேவர்தம் படையை விட்டான் – (இலக்குவன்) தேவர்க்குரிய
(திறல்மிக்க பாசுபதாத்திரத்தை) படைக்கலத்தை ஏவினான்; என்பது
சிந்தை செய்யா – என்பதனை மனத்தில் எண்ணி; மாபெருந்தேரில்
நின்ற மகோதரன் – மிகப்பெருந்தேரில் (அனைத்தையும்
பார்த்துக்கொண்டு) நின்றவனாகிய மகோதரன்; மறையப் போனான் –
(தான்ஏவிய) மாயை மறைந்தொழியத் தானும் அவ்விடத்தைவிட்டுப்
போயினன்; யாவரும் இரிந்தார் எல்லாம் – (ஒருவரை விட்டு ஒருவர்
பிரிந்த நிலையில் போராற்றிய) வானரத்தலைவர் யாவரும் (போரில்)
நிலைகுலைந்து ஓடிய எல்லோருடனும்; இனமழை கழிய ஆர்த்து –
மேகக் கூட்டங்கள் பின்னிடுமாறு ஆரவாரித்து; கோ இளங்களிற்றை –
தலைமைசான்ற இளங்களிறு போன்றவனாகிய இலக்குவனை; வந்து
கூடினார் ஆடல் கொண்டார் – வந்து சூழ்ந்தவராய் (மகிழ்ச்சி
மிகுதியால்) கூத்தாடத் தொடங்கினார்.
—————
8599. யாவர்க்கும் தீது இலாமை கண்டு கண்டு, உவகை ஏற,
தேவர்க்கும் தேவன் தம்பி திரு மனத்து ஐயம் தீர்ந்தான்;
காவல் போர்க் குரங்கின் சேனைக் கடல் எனக் கலந்து
புல்ல,
பூ வர்க்கம் இமையோர் தூவ; பொலிந்தனன்; தூதர்
போனார்.–159-
தேவர்க்கும் தேவன் தம்பி – தேவாதி தேவனாகிய இராமபிரானின்
தம்பியாகிய இலக்குவன்; யாவர்க்கும் தீது இலாமை – (தன்
சேனையிலுள்ளார்) யாவர்க்கும் எவ்வித இடையூறும் நேராத
தன்மையினை; கண்டு கண்டு உவகை ஏற – விடாமல் பார்த்து
மகிழ்ச்சி மிகக் கொண்டவனாய்; திருமனத்து ஐயம் தீர்ந்தான் – (தான்
முன்புகொண்ட) சந்தேகம் தீர்ந்தவனாகி; காவல் போர்க் குரங்கின்
சேனை – (தனது) காவலிற் போர் புரியும் குரங்குப்படை; கடல் எனக்
கலந்து புல்ல – கடல் போலத்திரண்டு (தன்னை) நெருங்கி நிற்க;
இமையோர் பூவர்க்கம் தூவ – வானவர் மலர்வகைகளைத் தூவ;
பொலிந்தனன் – விளங்கி நின்றான்; தூதர் போனார் – தூதர்கள்
(இச்செய்தியினைக் கூற இராவணனிடம்) சென்றனர்.
————
தூதர் இராவணனுக்கும் இந்திரசித்திற்கும் செய்தி கூறுதல்
8600.இலங்கையர் கோனை எய்தி, எய்தியது உரைத்தார், ‘நீவிர்
விலங்கினிர் போலும்; வெள்ளம் நூற்றை ஓர் வில்லின்,
வேழக்
குலங்களினோடும் கொல்லக் கூடுமோ?’ என்ன, ‘கொன்றை
அலங்கலான் படையின்’ என்றார. ‘அன்னதேல், ஆகும்’
என்றான்.–160-
இலங்கையர் கோனை எய்தி – (சென்ற தூதர்கள்) இலங்கையர்
வேந்தனாகிய இராவணனை அடைந்து; எய்தியது உரைத்தார் –
(போர்க்களத்தில்) நிகழ்ந்த செய்தியை எடுத்துரைத்தார்கள்; நீவிர்
விலங்கினர் போலும் – (அது கேட்ட இராவணன் அத்தூதர்களை
நோக்கி) நீங்கள் (அஞ்சி) விலகித் திரும்பினீர் போலும்; வேழக்
குலங்களினோடும் – யானைக் கூட்டத்துடன்; வெள்ளம் நூற்றை –
நூறு வெள்ளம் சேனைகளையும்; ஓர் வில்லின் கொல்லக் கூடுமோ –
ஒரு வில்லாலே கொன்றொழித்தல கூடுமோ?; என்ன – என்று கேட்க;
கொன்றை அலங்கலான் படையின் என்றார் – கொன்றை மாலை
அணிந்த சிவபெருமானின் படைக்கலமாகிய பாசுபதாத்திரத்தினால்
(இவ்வாறு நம் சேனை அழிவுற்றது) எனத் தூதர் விடை கூறினார்;
‘அன்னதேல், ஆகும்’ என்றான் – (அதனைக் கேட்ட இராவணன்) அப்படியானால் அரக்கர் சேனை எல்லாம் அழிவது
நிகழ்ந்திருக்கும் என உடன்பட்டு உரைத்தான்.
———
8601. ‘வந்திலன் இராமன்; வேறு ஓர் மலை உளான்; உந்தை,
மாயம்
தந்தன தீர்ப்பான் போனான், உண்பன தாழ்க்க; தாழா
எந்தை! ஈது இயன்றது’ என்றார். ‘மகோதரன் யாண்டை?’
என்ன,
‘அந்தரத்திடையன்’ என்றார். இராவணி, ‘அழகிற்று!’
என்றான்.–161-
இராமன் வந்திலன் – இராமன் (போர் நிகழுமிடத்திற்கு)
வந்தானல்லன்; வேறு ஓர் மலை உளான் – (அவன்) வேறு ஓர்
மலையினிடத்தே தங்கியிருக்கின்றான்; மாயம் தந்தன தீர்ப்பான்
உந்தை – நாம்பகைவர் மாட்டுச் செய்கின்ற மாயைகளை
(அவர்களுக்கு முன்னறிவிப்புச் செய்து) தீர்ப்பவனாகிய உன் சிறிய
தந்தை; உண்பன தாழ்க்கப் போனான் – (வானர சேனைகள்)
உண்ணுதற்கு உரியனவாகிய உணவுகள் வரத் தாழ்த்தமையால்
(அவற்றைக்) கொணர்தற்குப் (புறத்தே) போயினான்; ‘தாழா எந்தை!
ஈது இயன்றது’ என்றார் – (செயலாற்றுவதில்) காலந்தாழாத எந்தை
போல்பவனே! இதுவே (போர்க்களத்தில்) நிகழ்ந்ததாம் எனத் தூதர்கள்
கூறினர்; ‘மகோதரன் யாண்டை?’ என்ன – (அதனைக் கேட்ட இந்திர
சித்து ‘மகோதரன் எவ்விடத்துள்ளான்? எனவினவ;
‘அந்தரத்திடையன்’ என்றார் – ‘அவன் ஆகாயத்திடத்தே
மறைந்தனன்’ என (தூதர்)க் கூறினர்; இராவணி ‘அழகிற்று’
என்றான் – இந்திரசித்து (மகோதரன் செயல்) ‘அழகாயிருக்கிறது என
(இகழ்ந்து) கூறினான்.
—————
இந்திரசித்தன் பிரமாத்திரம் ஏவ வேள்வி செய்தல்
8602. ‘காலம் ஈது’ எனக் கருதிய இராவணன் காதல்.
ஆல மா மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான்;
மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால்
கூலம் நீங்கிய இராக்கதப் பூசுரர் கொணர்ந்தார்.–162-
‘காலம் ஈது’ எனக் கருதிய இராவணன் காதல் – (தான்
பிரமாத்திரம் விடுவதற்குரிய) காலம் இதுவே என எண்ணிய
இராவணன் மகனாகிய இந்திரசித்து; ஆலமா மரம் ஒன்றினை
விரைவினில் அடைந்தான் – பெரியதோர் ஆலமரத்தின் அடியிடத்தை
விரைவாகச் சென்றடைந்தான்; கூலம் நீங்கிய இராக்கதப் பூசுரர் –
ஒழுக்க நெறியை விட்டு விலகிய அரக்கர் குல வேதியர்கள்;
மூலவேள்விக்கு வேண்டுவ – முதன்மையுடைய வேள்விக்கு
வேண்டியவையான; கலப்பைகள் முறையால் கொணர்ந்தார் –
கருவிகளை முறைப்பட (அவ்விடத்திற்குக்) கொண்டு சேர்த்தார்கள்.
———–
8603.
அம்பினால் பெருஞ் சமிதைகள் அமைத்தனன்; அனலில்
தும்பை மா மலர் தூவினன்; காரி எள் சொரிந்தான்;
கொம்பு பல்லொடு, கரிய வெள்ளாட்டு இருங் குருதி,
வெம்பு வெந் தசை, முறையின் இட்டு, எண்ணெயால்
வேட்டான்.–163-
அம்பினால் பெரும் சமிதைகள் அமைத்தனன் – (இந்திரசித்து)
வேள்விக்குரிய சமித்துக்களை அம்பினாலேயே அமைத்தான்;
அனலின் தும்பை மாமலர் தூவினன் – வேள்வித் தீயில்
சிறந்ததும்பை மலர்களைத் தூவினான்; காரிஎள் சொரிந்தான் –
கருமை நிறமுடைய எள்ளினைப் பெய்தான்; கொம்பு பல்லொடு,
கரிய வெள்ளாட்டு இருங்குருதி – கொம்பு, பல் ஆகியவற்றுடன்
கரிய வெள்ளாட்டினது பெருகிய குருதியையும்; வெம்பு வெந்தசை
முறையின் இட்டு – வேகக்கூடிய வெவ்விய தசையினையும்
முறையாகப் பெய்து; எண்ணெயால் வேட்டான் – எள்ளின் நெய்யைச்
சொரிந்து ஓமம் செய்தான்.
————
பிரமாத்திரத்துடன் இந்திரசித்து வானில் மறைந்திடுதல்
8604. வலம் சுழித்து வந்து எழுந்து எரி, நறு வெறி வயங்கி,
நலம் சுரந்தன பெருங் குறி முறைமையின் நல்க,
குலம் சுரந்து எழு கொடுமையான், முறையினில் கொண்டே,
‘நிலம் சுரந்து எழு வென்றி’ என்று உம்பரில் நிமிர்ந்தான்.–164-
எரி நறுவெறி வயங்கி வலஞ் சுழித்து வந்து எழுந்து –
(வேள்வியின்) தீயானது நறுமணத்துடன் வலது புறமாகச் சுழன்று
வந்து மேலெழுந்து; நலம் சுரந்தன பெருங்குறி முறைமையின்
நல்க – நன்மையை விளைவிப்பனவாகிய பெரிய அறிகுறிகளை
முறைப்படி புலப்படுத்திக்காட்ட; குலம் சுரந்து எழு கொடுமையான்
முறையினில் கொண்டே – (அரக்கர்) குலத்தில் ஊற்றெடுத்துப்
பெருகும் கொடுமைகட்கெல்லாம் நிலைக்களமான இந்திரசித்து (தீவலம்
சுழித்த) அம்முறைமையினை ஆதரவாகக் கொண்டு; ‘நிலம் சுரந்து
எழுவென்றி’ என்று உம்பரில் நிமிர்ந்தான் – ‘செருநிலத்தில்
வெற்றி பெருகித் தோன்றும்’ என்று (எண்ணயிவனாய்) விசும்பின்
மேல் உயர்ந்து சென்றான்.
————-
8605. விசும்பு போயினன், மாயையின் பெருமையான்; மேலைப்
பசும் பொன் நாட்டவர் நாட்டமும் உள்ளமும் படரா,
அசும்பு விண்ணிடை அடங்கினன், முனிவரும் அறியாத்
தசும்பு நுண் நெடுங் கோளொடு காலமும் சார.–165-
மாயையின் பெருமையான்- (யாவரையும் மயக்குந் தன்மையாகிய)
மாயத்தின் மிகுதியை உடையவனாகிய இந்திரசித்து; தசும்பு நுண்
நெடுங்கோளொடு காலமும் சார – (வானப்பெருவெளியில்)
அசையுந்தன்மையனவாகிய நுண்ணிய நீண்ட கோள்களுடன்
(வெற்றியைத் தரும்) காலமும் சேர; விசும்பு போயினன் –
ஆகாயத்தில் சென்றவனாகி; மேலைப் பசும்பொன் நாட்டவர்
நாட்டமும் உள்ளமும் படரா – மேலேயுள்ள பசிய பொன்மயமான
துறக்க உலகத்தவராகிய தேவர்களுடைய கண்களும் உள்ளமும்
(ஊடுருவிச்) செல்ல முடியாத; அசும்பு விண்ணிடை அடங்கினன் –
நீர்த்திவலையை உடைய வானத்திடையிலே நுண்ணுருவுடையவனாய்
ஒடுங்கினான்; முனிவரும் அறியார் – (அவனது இருப்பினை)
முனிவர்களும் அறிய முடியாதவராயினர்.
————
மகோதரன் இந்திரவடிவுடன் வந்து பொருதல்
8606. அனையன் நின்றனன்; அவ் வழி, மகோதரன் அறிந்து,
ஓர்
வினையம் எண்ணினன், இந்திர வேடத்தை மேவி,
துனை வலத்து அயிராவதக் களிற்றின்மேல் தோன்றி,
முனைவர் வானவர் எவரொடும் போர் செய மூண்டான்.–166-
அனையன் நின்றனன் – அத்தன்மையனாகிய இந்திரசித்து
(வானகத்து உருக்கரந்து) நின்றான்; அவ்வழி மகோதரன் அறிந்து
ஓர் வினையம் எண்ணினன் – அப்போது மகோதரன் அதனை
அறிந்து ஒரு சூழ்ச்சிச் செயலைச் செய்ய எண்ணியவனாய்; இந்திர
வேடத்தை மேவி – இந்திரனது உருவத்தைத்தான் மேற்கொண்டு;
துனைவலத்து அயிராவதக் களிற்றின் மேல் தோன்றி –
வேகமும் வலிமையுங் கொண்ட ஐராவதக் களிற்றின் மேல் தோன்றி;
முனைவர் வானவர் எவரொடும் போர் செய மூண்டான் –
முனிவர் தேவர் முதலியவர்களோடும் போர் புரிய முனைந்தெழுந்தான்.
———-
8607. ‘அரக்கர், மானிடர், குரங்கு, எனும் அவை எலாம் அல்லா
உருக்கள் யா உள, உயிர் இனி உலகத்தின் உழல்வ,
தருக்கும் போர்க்கு வந்தனவாம்’ எனச் சமைத்தான்;
வெருக்கொளப் பெருங் கவிப் படை குலைந்தது, விலங்கி,–167-
அரக்கர் மானிடர் குரங்கு எனும் அவை எல்லாம் அல்லா –
(தன் இனத்தவராகிய) அரக்கரும் (பகைவர் இனத்தவராகிய) மனிதரும்
குரங்கும் ஆகிய அவை அல்லாத; உருக்கள் யாவுள உயிர் இனி
உலகத்தின் உழல்வ – உருவங்களை உடையவாய் இவ்வுலகத்தில்
திரிவனவாகிய உயிரினங்கள் யாவை உள்ளன. அவை எல்லாமும்
(இப்பொழுது); தருக்கும் போர்க்கு வந்தனவாம் எனச் சமைத்தான் –
(இலக்குவன் முதலானோரோடு) செருக்கிச் செய்யும் போர்க்கு
(துணைசெய்ய) வந்துள்ள எனக் கண்டோர் கருதும்படி
(மகோதரன்தன் மாயத்தால்) படைத்துக் காட்டினான்;
வெருக்கொளப் பெருங் கவிப்படை குலைந்தது விலங்கி –
(அதுகண்டு) பெரிய வானர சேனை அச்சங்கொண்டு நிலை கெட்டுப்
பின் வாங்கியது.
———-
8608.‘கோடு நான்குடைப் பால் நிறக் களிற்றின்மேல் கொண்டான்
ஆடல் இந்திரன்; அல்லவர் யாவரும் அமரர்,
சேடர், சிந்தனை முனிவர்கள்; அமர் பொரச் சீறி,
ஊடு வந்து உற்றது என்கொலோ, நிபம்?’ என உலைந்தார்.–168-
கோடு நான்குடைப்பால் நிறக் களிற்றின் மேல் கொண்டான் –
நான்கு தந்தங்களை உடைய பால் போன்ற வெண்ணிற யானை மேல்
ஏறி வருபவன்; ஆடல் இந்திரன்; அல்லவர் யாவரும் அமரர் –
வலிமை வாய்ந்த இந்திரன் (அவனைச் சூழ்ந்துள்ள) ஏனையோர்
தேவர்கள்; சேடர் சிந்தனை முனிவர்கள் – எஞ்சியோர் இறைவனை
எண்ணியிருக்கின்ற முனிவர்கள்; அமர் பொரச் சீறி – இங்ஙனம்
வானுலகவர் (நம்மீது பகையுடன்) போர் செய்தற்குச் சீற்றங்கொண்டு;
ஊடு வந்து உற்றது என்கொலோ நிபம்? என உலைந்தார் –
(இப்போர்க்களத்தின்) இடையே வந்து சேர்ந்தது எக்காரணத்தினாலோ’
என (வானரர் திகைப்புற்று) வருந்தினர்.
———
இலக்குவன், அனுமனை முனிவர் முதலியோர் பொரும் காரணம் வினவல்
8609.அனுமன் வாள் முகம் நோக்கினன், ஆழியை அகற்றித்
தனு வலம் கொண்ட தாமரைக் கண்ணவன்தம்பி,
‘முனிவர் வானவர் முனிந்து வந்து எய்த, யாம் முயன்ற
துனி இது என்கொலோ? சொல்லுதி, விரைந்து’ எனச்
சொன்னான்.–169-
ஆழியை அகற்றித் தனுவலம் கொண்ட – சக்கரப்படையை நீக்கி
வில்லை வலக்கையிற் கொண்ட; தாமரைக் கண்ணவன் தம்பி –
செந்தாமரை மலர் போலும் கண்களை உடைய இராமபிரானின்
தம்பியாகிய இலக்குவன்; அனுமன் வாள் முகம்
நோக்கினன் – அனுமனது ஒளிபொருந்திய முகத்தை
நோக்கியவனாய்; முனிவர் வானவர் முனிந்து வந்து எய்த –
முனிவர்களும் தேவர்களும் சினந்து ‘(நம்முடன் போர் செய்ய)
வருமாறு; யாம் முயன்ற துனி இது என்கொலோ – நாம் செய்த
வெறுக்கத்தக்க குற்றம் யாதோ? சொல்லுதி உணர்ந்து எனச்
சொன்னான் – ஆராய்ந்து கூறுவாயாக” என்று கூறினான்.
——–
இந்திரசித்தன் பிரமாத்திரத்தை இலக்குவன் மேல் விடுதலும் அதன்
விளைவுகளும்
8610.இன்ன காலையின் இலக்குவன் மேனிமேல் எய்தான்,
முன்னை நான்முகன் படைக்கலம்; இமைப்பதன் முன்னம்,
பொன்னின் மால் வரைச் குரீஇஇனம் மொய்ப்பது போல,
பன்னல் ஆம் தரம் அல்லன சுடர்க் கணை பாய்ந்த.–170-
இன்ன காலையின் – இவ்வாறு (அனுமனை நோக்கி இலக்குவன்)
வினவும் நேரத்தில்; முன்னை நான் முகன் படைக்கலம் –
(இந்திரசித்து) காலத்தால் முற்பட்ட முதியவனாகிய பிரமதேவனது
படைக்கலத்தை; இமைப்பதன் முன்னம் – ஓர் இமைப்பொழுதிற்குள்;
இலக்குவன் மேனி மேல் எய்தான் – இலக்குவனது உடலின் மீது
செலுத்தினான்; பொன்னின் மால் வரைக்குரீஇ இனம் மொய்ப்பது
போல – பொன் மயமான பெரிய மலையின் மீது குருவிக் கூட்டங்கள்
மொய்ப்பதைப் போன்று; பன்னல் ஆம் தரம் அல்லன சுடர்க்கணை
பாய்ந்த – சொல்லும் தன்மைய வல்லாத ஒளிமிக்க அம்புகள்
(இலக்குவனது மேனியிற்) பாய்ந்து தைத்தன.
————-
8611.கோடி கோடி நூறாயிரம் சுடர்க் கணைக் குழாங்கள்
மூடி மேனியை முற்றுறச் சுற்றின மூழ்க,
ஊடு செய்வது ஒன்று உணர்ந்திலன், உணர்வு புக்கு ஒடுங்க,
ஆடல் மாக் கரி சேவகம் அமைந்தென, அயர்ந்தான்.–171-
கோடி, கோடி நூறாயிரம் சுடர்க் கணைக் குழாங்கள் – கோடி
கோடி நூறாயிரம் என்னும் தொகையினவாகிய ஒளி படைத்த
அம்பின் தொகுதிகள்; மேனியை மூடி முற்றுறச் சுற்றின் மூழ்க –
(இலக்குவனது) மேனியை முழுவதுமாக மூடி மறைத்துத் தைக்க; ஊடு
செய்வத ஒன்று உணர்ந்திலன் – அவ்விடை நேரத்தில் இன்னது
செய்வது என்று ஒன்றும் உணராதவனாகி; உணர்வு புக்கு ஒடுங்க –
தன்னுணர்வு உள்ளே சென்று ஒடுங்க; ஆடல்மாக்கரி சேவகம்
அமைந்தென அயர்ந்தான் – வலிய பெரிய யானையானது தான்
துயிலுமிடத்தில் அயர்ந்து துயில் கொண்டாற்போன்று அயர்ந்தான்.
————
8612.அனுமன், ‘இந்திரன் வந்தவன் என்கொல், ஈது அமைந்தான்?
இனி என்? எற்றுவென் களிற்றினோடு எடுத்து’ என
எழுந்தான்;
தனுவின் ஆயிர கொடி வெங் கடுங் கணை தைக்க,
நினைவும் செய்கையும் மறந்துபோய், நெடு நிலம் சேர்ந்தான்.–172-
அனுமன், வந்தவன் இந்திரன் ஈது என்கொல் அமைந்தான்?
(அது கண்ட) அனுமன், ‘வந்தவனோ இந்திரன், (நம்மோடு
போர் செய்தலாகிய) இதனை எது கருதி மேற்கொண்டான்? இனி
என்? எற்றுவன் களிற்றினோடு எடுத்து என எழுந்தான் –
இவ்வாறு பகைவனாக வந்துள்ளமையால்) இப்பொழுது செய்தற்குரியது
வேறு என்ன இருக்கிறது? (இவனை) யானையோடும் எடுத்து எற்றித்
தள்ளுவேன்’ எனக்கிளர்ந்து எழுந்தவன்; தனுவின் ஆயிர கோடி
வெங்கடுங்கணை தைக்க – (தனது) உடம்பில் ஆயிரங்கோடி வெம்மை
மிக்க அம்புகள் தைக்க; நினைவும் செய்கையும் மறந்து போய் நெடு
நிலம் சேர்ந்தான் – தன்நினைவும் செயலும் மறந்து போக
நெடியதரையின் கண் வீழ்ந்தான்.
—————-
8613.அருக்கன் மா மகன், ஆடகக் குன்றின்மேல் அலர்ந்த
முருக்கின் கானகம் ஆம் என, குருதி நீர் முடுக
தருக்கி, வெஞ் சரம் தலைத்தலை மயங்கின தைக்க,
உருக்கு செம்பு என கண்ணினன், நெடு நிலம் உற்றான்.–173-
அருக்கன் மாமகன் – பெருமை வாய்ந்த சூரியன் புதல்வனான
சுக்ரீவன்; ஆடகக் குன்றின் மேல் அலர்ந்த –
பொன்மலையின் மேல்பூத்துத் தோன்றும்; முருக்கின் கானகம் ஆம்
எனக் குருதி நீர் முடுக – செம்முருங்கக் காட்டினை யொத்து (தன்
உடம்பின்மேல்) இரத்தம் சுரந்து பெருகித் தோன்றுமாறு; வெஞ்சரம்
தலைத் தலைமயங்கின தைக்க – வெம்மையுடைய அம்புகள் (தன்
உடம்பின்) இடந்தோறும் விரவினவாய்த் தைத்து ஊன்றுதலால்;
உருக்கு செம்பு எனக் கண்ணினன் – ‘உருகிய செம்பு’ எனக்
கூறத்தக்க (சிவந்த) கண்களை உடையவனாகி; தருக்கி, நெடுநிலம்
உற்றான் – செருக்குற்று நீண்டதரையிடத்தே வீழ்ந்தான்.
———-
8614. அங்கதன், பதினாயிரம் அயில் கணை அழுந்த;
சிங்கஏறு இடியுண்டென நெடு நிலம் சேர்ந்தான்;
சங்கம் ஏறிய பெரும் புகழ்ச் சாம்பனும் சாய்ந்தான்,
துங்க மார்பையும் தோளையும் வடிக் கணை துளைக்க.–174-
அங்கதன் பதினாயிரம் அயில்கணை அழுந்த – அங்கதன் (தன்
உடல் மீது) பதினாயிரம் கூரிய அம்புகள் தைக்கப்பெற்று; சிங்க ஏறு
இடியுண்டென நெடுநிலம் சேர்ந்தான் – ஆண்சிங்கம் இடியினால்
தாக்கப் பட்டாற்போன்று நெடிய நிலத்தில் வீழ்ந்தான்; துங்க
மார்பையும் தோளையும் வடிக்கணை துளைக்க – உயர்ந்த
மார்பையும், தோளையும் கூரிய அம்புகள் துளைத்ததனால்; சங்கம்
ஏறிய பெரும் புகழ்ச் சாம்பனும் சாய்ந்தான்-வீரர் குழுவில் உயர்ந்து
விளங்கிய பெரிய புகழினனான சாம்பவனும் (தரையில்) சாய்ந்தான்.
———–
8615. நீலன், ஆயிரம் வடிக் கணை நிறம் புக்கு நெருங்க,
காலனார் முகம் கண்டனன்; இடபன் விண் கலந்தான்;
ஆலமே அன்ன பகழியால், பனசனும் அயர்ந்தான்;
கோலின் மேவிய கூற்றினால், குமுதனும் குறைந்தான். –175-
நீலன் ஆயிரம் வடிக்கணை நிறம்புக்கு நெருங்க – (வானர
வீரர்களில்) நீலன் என்பான் ஆயிரம் கூரிய அம்புகள் (தன்) மார்பில்
புகுந்து செறிதலால்; காலனார் முகம் கண்டனன் – (உயிர் துறந்து)
கூற்றுவனது முகத்தைக் காண்பானாயினான்; இடபன் விண் கலந்தான்
– இடபன் வானுலகடைந்தான்; பனசனும் ஆலமே அன்ன பகழியால்
அயர்ந்தான் – பனசன் ஆலகால நஞ்சினைப் போன்ற அம்பினால்
அயர்வுற்றான்; குமுதனும் கோலின் மேவிய கூற்றினால் குறைந்தான்
– குமுதன் அம்பின் வடிவத்தில் வந்த கூற்றுவனால் உயிர்குறைந்தான்.
———–
8616. வேலை தட்டவன், ஆயிரம் பகழியால், வீழ்ந்தான்;
வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மடிந்தார்;
கால வெந் தொழில் கவயனும் வானகம் கண்டான்;
மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான்.–176-
வேலை தட்டவன், ஆயிரம் பகழியால், வீழ்ந்தான் – கடலை
அணை கட்டித் தடுத்தவனாகிய நளன் ஆயிரம் அம்புகளால் வீழ்ந்து
இறந்தான்; வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மடிந்தார் –
வாலியை ஒத்த வலிமை வாய்ந்தமயிந்தன் என்பானும் (அவன் தம்பி)
துமிந்தனும் ஒருசேர மாண்டனர்; காலவெந்தொழில் கவயனும்
வானகம் கண்டான் – காலனையொத்த கொடுந்தொழிலை உடைய
கவயன் என்பவனும் (உயிர்துறந்து) வானகம் சேர்ந்தான்; மாலை
வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான் – மாலை போன்று
(தொடர்ச்சியாக) வந்த அம்புகளால் கேசரி என்பான் நிலத்தில் வீழ்ந்து
இறந்தான்.
———–
8617.கனகன் ஆயிரம் கணை பட, விண்ணிடைக் கலந்தான்;
அனகன் ஆயின சங்கனும் அக் கணத்து அயர்ந்தான்;
முனையின் வாளியின் சதவலி என்பவன் முடிந்தான்;
புனையும் அம்பினில் தம்பனும் பொருப்பு எனப்
புரண்டான்.–177-
கனகன் ஆயிரம் கணைபட விண்ணிடைக் கலந்தான் – கனகன்
என்பவன் ஆயிரம் அம்புகள் பாய்ந்தமையால் (உயிர் நீத்து)
விண்ணில் கலந்தான்; அனகனாயின சங்கனும் அக்கணத்து
அயர்ந்தான் – (மாயையால்) அரூபியான சங்கன் என்பவனும்
(அம்புகள்பட்ட) அந்தக் கணத்திலேயே அயர்ந்தான்; முனையின்
வாளியின் சதவலி என்பவன் முடிந்தான் – முனைதீட்டப் பெற்ற
அம்பினால் சதவலி என்பவன் இறந்தான்; புனையும் அம்பினில்
தம்பனும் பொருப்பு எனப் புரண்டான் – புனைந்து ஏவப் பெற்ற
அம்பினால் தம்பன் என்பவனும் மலைபோல மண்ணில் புரண்டான்.
———–
8618.விந்தம் அன்ன தோள் சதவலி, சுசேடணன், வினதன்,
கெந்தமாதனன், இடும்பன், வன் ததிமுகன், கிளர,
உந்து வார் கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப,
தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர், மண் உறச் சாய்ந்தார்.–178-
விந்தம் அன்ன தோள் சதவலி சுசேடணன், வினதன் – விந்த
மலையினை ஒத்து உயர்ந்த தோளையுடைய சதவலி, சுசேடணன்
வினதன்; கெந்தமாதனன், இடும்பன்வன் ததிமுகன்கிளர –
கந்தமாதனன், இடும்பன், வன்மையுடைய ததிமுகன் ஆகிய வானர
வீரர்கள், கிளர்ந்துமேலெழ; உந்துவார்கணை கோடி தம் உடலம்
உற்று ஒளிப்ப – (இந்திரசித்தனாற்) செலுத்தப்பட்ட நீண்ட அம்புகள்
கோடிக்கணக்கின வாகத்தம் உடலில் அழுந்தத் தைத்து மறைந்தலால்;
தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர் மண் உறச் சாய்ந்தார் –
தங்கள் தங்களது நல்லுணர்வு ஒடுங்கியவர்களாய் மண்ணிற் பொருந்த
வீழ்ந்தார்கள்.
————
8619. மற்றை வீரர்கள் யாவரும் வடிக் கணை மழையால்
முற்றம் வீந்தனர்; முழங்கு பேர் உதிரத்தின் முந்நீர்
எற்று வான் திரைக் கடலொடும் பொருது சென்று ஏற,
ஒற்றை வான் கணை ஆயிரம் குரங்கினை உருட்ட.–179-
முழங்கு பேர் உதிரத்தின் முந்நீர் – ஒலிக்கின்ற பெரிய குருதி
நீராகிய (செங்)கடல்;எற்று வான் திரைக் கடலொடும் – மோதுகின்ற
பெரிய அலைகளை உடைய கருங்கடலோடு; பொருது சென்று ஏற –
எதிர்த்து மோதி மேற் செல்லும்படி; ஒற்றை வான் கணை ஆயிரம்
குரங்கினை உருட்ட – (ஆயிரம் ஆயிரமாகப் பெருகிய
பிரமாத்திரத்தின்) ஒரு தெய்வக்கணை ஆயிரம் வானரங்கள் வீதம்
ஒரு சேர உருட்டித்தள்ள; மற்றைவீரர்கள் யாவரும் வடிக்கணை
மழையால் – (மேலேகுறிக்கப்பட்டவர்களை யொத்த) ஏனைய
வானரவீரர்கள் அனைவரும் கூரிய அம்பு மழையால்; முற்றும்
வீந்தனர் – (தாக்கப்பட்டு) முழுமையாக அழிந்து போயினார்.
———–
8620. தளைத்து வைத்தது, சதுமுகன் பெரும் படை தள்ளி;
ஒளிக்க, மற்றொரு புகலிடம் உணர்கிலர்; உருமின்
வளைத்து வித்திய வாளியால், மண்ணொடும் திண்ணம்
முளைப் புடைத்தன ஒத்தன; வானரம் முடிந்த.–180-
சதுமுகன் பெரும்படை தள்ளித் தளைத்து வைத்தது – நான்
முகனது பெருமை வாய்ந்த படைக்கலமானது (வானரங்களைக் கீழே)
தள்ளிப் பிணித்துவிட்டது;ஒளிக்க, மற்றொரு புகலிடம் உணர்கிலர் –
(அவ்விடத்தை விட்டுத் தப்பியோடி) மறைதற்கு அன்னோர் வேறொரு
பாதுகாப்பான இடத்தை உணர்தற்கு இயலாதவராயினர்; உருமின்
வளைத்து வித்திய வாளியால் மண்ணொடும் திண்ணம் –
இடியினைப் போன்று சுற்றிலும் எய்யப்பெற்ற அம்புகளால் பூமியுடன்
சேர்த்து உறுதியாக; முளைப்புடைத்தான் ஒத்தன வானரம்
முடிந்த – முளையடிக்கப் பட்டவற்றை ஒத்தனவாய் அங்குள்ள
வானரங்கள் யாவும் இறந்தன.
——–
8621. குவளைக் கண்ணினை வான் அர மடந்தையர் கோட்டித்
துவள, பாரிடைக் கிடந்தனர்; குருதி நீர் சுற்றித்
திவள, கீழொடு மேல் புடை பரந்து இடை செறிய,
பவளக் காடுடைப் பாற்கடல் ஒத்தது, அப் பரவை.–181-
குவளைக் கண்ணினைக்கோட்டி – நீலமலர்போன்ற கண்களைச்
சாய்த்து நோக்கி; வான் அரமடந்தையர் துவள – வானுலகிலுள்ள
தேவமகளிர் வாட்டமுற்று வருந்த; பாரிடைக் கிடந்தனர் –
(வானரவீரர்கள்) பூமியிற் (பிணமாகக்) கிடந்தார்கள்; குருதி நீர் சுற்றிக்
கீழொடு மேல் புடை பரந்து – (அவர்தம் வெண்ணிற உடம்பினின்றும்
வெளிப்பட்ட) இரத்த நீர் கீழும் மேலும் பக்கங்களிலும் பரவி; இடை
திவள செறிய – இடையிடையே நெருங்கி விளங்குதலால்; அப்பரவை,
பவளக் காடுடைப் பாற்கடல் ஒத்தது – அந்த (வானரப்படையாகிய)
கடற்பரப்பானது பவளக்கொடிகளாகிய காடுகளையுடைய பாற்கடலை
ஒத்துத் தோன்றியது.
———–
8622. விண்ணில் சென்றது, கவிக் குலப் பெரும் படை வெள்ளம்;
கண்ணில் கண்டனர் வானவர், விருந்து எனக் கலந்தார்,
உள் நிற்கும் பெருங் களிப்பினர், அளவளாய் உவந்தார்;
‘மண்ணில் செல்லுதிர், இக் கணத்தே’ எனும் மனத்தார்.–182-
கவிக்குலப் பெரும்படை வெள்ளம் விண்ணில் சென்றது –
வானரகுலப்பெரும் படையாகிய வெள்ளம் (மண்ணில் உயிர்துறந்து
தேவர்களாகி) விண்ணுலகிற் சென்றது; வானவர் கண்ணில் கண்டனர்
விருந்து எனக் கலந்தார் – (அதனைத்) தேவர்கள் தம் கண்களாற்
கண்டவர்களாய் விருந்தினர்என (அன்பினாற்) கலந்தவர்களாய்;
உள்நிற்கும் பெருங்களிப்பினர் – உள்ளத்தில் நிலைபெற்ற
பெருங்களிப்பினை உடையவர்களாய்; அளவளாய் உவந்தார் –
(அவர்களோடு) அளவளாவி மகிழ்ந்தார்கள்; இக்கணத்தே மண்ணில்
செல்லுதிர் – ‘(நீங்கள், எம்பொருட்டு) இப்பொழுதே’ மண்ணுலகத்திற்கு
(மீண்டு) செல்வீராக; என வலித்தார் – எனவற்புறுத்தி
வேண்டினார்கள்.
——————-
8623. ‘பார் படைத்தவன் படைக்கு ஒரு பூசனை படைத்தீர்;
நீர் படக் கடவீர்அலீர்;-வரி சிலை நெடியோன்
பேர் படைத்தவற்கு அடியவர்க்கு அடியரும் பெறுவார்,
வேர் படைத்த வெம் பிறவியில் துவக்குணா, வீடு.–183-
வரிசிலை நெடியோன் – வரிந்து கட்டப்பெற்ற வில்லினை
உடையோனாகிய இராமபிரானது; பேர்படைத்தவர்க்கு – பெயரைத்
தரித்தவர்களுக்கு; அடியவர்க்கு அடியரும்- அடித்தொண்டுபட்டார்க்கு
அடியவராயினாரும்; வேர்படைத்த வெம்பிறவியில் – (வினையாகிய)
வேரூன்றிட வெம்மையான பிறவியினால்; துவக்குணா வீடு பெறுவர்
– பிணிக்கப்படாது, வீடு பேற்றினைப் பெறுவர்; (என்றால்); நீர்படக்
கடவீர் அலீர் – (இராமபிரானது சேவையிலிருக்கின்ற) நீங்கள்
(இங்ஙனம் அகாலமாக) இறக்கும் தன்மை உள்ளவர்களல்லீர்;
பார்படைத்தவன் படைக்கு – இவ்வுலகைப் படைத்த பிரமதேவனுடைய
பாடையாகிய பிரமாத்திரத்திற்கு; ஒரு பூசனை படைத்தீர் –
செய்யத்தக்கதொரு வழிபாட்டினைச் செய்தவராய் (நும் உடம்பைத்
துறந்து) இவ்விடம் வந்தீர்கள்!
————–
8624. ‘நங்கள் காரியம் இயற்றுவான் உலகிடை நடந்தீர்;
உங்கள் ஆர் உயிர் எம் உயிர்; உடல் பிறிது உற்றீர்;
செங் கண் நாயகற்காக வெங் களத்து உயிர் தீர்ந்தீர்;
எங்கள் நாயகர் நீங்கள்’ என்று இமையவர் இசைத்தார்.–184-
‘நங்கள் காரியம் இயற்றுவான் – (தேவர்களாகிய) நம்முடைய
செயல்களை நிறைவேற்றுதற்காக; உலகிடை நடந்தீர் – நிலவுலகில்
சென்று பிறந்தீர்கள்; உங்கள் ஆர் உயிர் எம் உயிர் – உங்களுடைய
அரிய உயிர் எம்முடைய உயிரே; உயிர் பிறிது உற்றீர் – உடம்பு
(மட்டும்) வேறாகப் பெற்றுள்ளீர்கள்; செங்கண் நாயகற்காக –
(தாமரைபோலும்) சிவந்த கண்களை உடைய இராமபிரான்பொருட்டு;
வெங்களத்து உயிர் தீர்ந்தீர் – கொடுமை மிக்க போர்க்களத்தில் உயிர்
நீங்கப் பெற்றீர்; எங்கள் நாயகர் நீங்கள்’ – எம்முடைய இறைவர்
நீங்களே; என்று இமையவர் இசைத்தார் – என்று தேவர்கள்
(வானரவீரரைப்) புகழ்ந்து பாராட்டினர்.
————-
இந்திரசித்தன் தந்தையின் இருப்பிடம் சென்று செய்தி சொல்லுதல்
8625. ‘வெங் கண் வானரக் குழுவொடும், இளையவன் விளிந்தான்;
இங்கு வந்திலன், இராமன் இப்போது’ என இகழ்ந்தான்;
சங்கம் ஊதினன்; தாதையை வல்லையில் சார்ந்தான்;
பொங்கு போரிடைப் புகுந்துள பொருள் எலாம் புகன்றான்.–185-
‘வெங்கண் வானரக் குழுவொடும் – ‘வெகுளி மிக்க கண்களை
உடைய வானரக் கூட்டத்துடன்; இளையவன் விளிந்தான் –
இலக்குவன் இறந்து பட்டான்; இராமன் இப்போது இங்கு
வந்திலன்’ – (அவன் தமையனாகிய) இராமனோ (யான்
பிரமாத்திரம் விடுத்த இப்பொழுது) இப்போர்க்களத்திடத்து வந்து
சேர்ந்திலன்’; என இகழ்ந்தான் – என்று இகழ்ந்தவனாகிய
இந்திரசித்து; சங்கம் ஊதினான் – (வெற்றிச்) சங்கினை ஊதினான்;
தாதையை வல்லையில் சார்ந்தான் – (பிறகு) தன்தந்தையாகிய
இராவணனை விரைவிற் சென்றடைந்து; பொங்கு போரிடை –
எழுச்சி மிக்க போரின்கண்; புகுந்துள பொருள் எலாம் புகன்றான் –
விளைந்துள்ள நிகழ்ச்சிகளை எல்லாம் எடுத்துரைத்தான்.
————-
இராமன் இறந்திலனோ?’ என்ற இராவணன் வினாவும்
இந்திரசித்தன் விடையும்
8626. ‘இறந்திலன்கொலாம் இராமன்?’ என்று இராவணன்
இசைத்தான்;
‘துறந்து நீங்கினன்; அல்லனேல், தம்பியைத் தொலைத்து,
சிறந்த நண்பரைக் கொன்று, தன் சேனையைச் சிதைக்க,
மறந்து நிற்குமோ, மற்று அவன் திறன்?’ என்றான், மதலை.–186-
“இறந்திலன் கொலாம் இராமன்?” – (இந்திரசித்தன் கூறியவற்றைக்
கேட்டபின்பு) ‘இராமன் இறக்கவில்லையோ?’ என்று இராவணன்
இசைத்தான் – என்று (மகனைப்பார்த்து) இராவணன் கேட்டான்;
(அதற்கு); ‘துறந்து நீங்கினான்’ ‘அவ்விராமன் போர்க்களத்தை விட்டு எங்கேயோ சென்று
விட்டான்; அல்லனேல் – அங்ஙனம் செல்லாதிருந்திருப்பானாயின்;
தம்பியைத் தொலைத்து – அவனுடைய தம்பியாகிய இலக்குவனை
உயிர் நீங்கச் செய்து; சிறந்த நண்பரைக் கொன்று – அவனுக்குச்
சிறந்த நண்பர்களாயிருந்தோரை எல்லாம் கொன்று; தன்சேனையைச்
சிதைக்க – அவன்றன்னுடைய சேனையையும் சிதைத்த
(பிரம்மாத்திரம்); மற்று அவன் திறம் – மற்று அவ்விராமன்
பக்கத்தும்; மறந்து நிற்குமோ – (கொல்லாமல்) மறந்து நிற்பதுண்டோ?
என்றான் மதலை – என்று மறுமொழி கூறினான்; மைந்தனாகிய
இந்திரசித்து.
—————
8627. ‘அன்னதே’ என, அரக்கனும் ஆதரித்து அமைந்தான்;
சொன்ன மைந்தனும், தன் பெருங் கோயிலைத்
தொடர்ந்தான்;
மன்னர் ஏவலின் போயினன், மகோதரன் வந்தான்;
எனனை ஆளுடைய நாயகன் வேறு இடத்து இருந்தான்.–187-
அன்னதே என – (நீ கூறிய) அதுவே நிகழ்ந்திருத்தல் வேண்டும்
என்று கூறி; அரக்கனும் ஆதரித்து அமைந்தான் – இராவணன்
(தன்மகன் கூறியதை) உடன்பட்டு ஏற்றுக்கொண்டான்; சொன்ன
மைந்தனும் – (நிகழ்ந்தவற்றைச்) சொன்ன இந்திர சித்தும்; தன்
பெருங் கோயிலைத் தொடர்ந்தான் – தனது பெரிய
மாளிகையினை அடைந்தான்; மன்னன் ஏவலின் போயினன் –
இராவணன் ஏவலால் முன்பு போருக்குச் சென்றவனாகிய;மகோதரன்
வந்தான் – மகோதரனும் (மீண்டு தன் இருப்பிடத்திற்கு)
வந்து சேர்ந்தான்; என்னை ஆளுடை நாயகன் – என்னை
அடிமையாக உடைய இறைவனான இராமன்; வேறு இடத்து
இருந்தான் – (தெய்வப்படைக்கலங்களுக்கு வழிபாடு செய்து
கொண்டு) வேறோர் இடத்தில் தங்கி இருந்தான்.
———
இராமன் தெய்வப்படைகளுக்கு வழிபாடு இயற்றிப்
போர்க்களம் புகுதல்
8628. செய்ய தாமரை நாள்மலர்க் கைத் தலம் சேப்ப,
துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன்முறை துரக்கும்
மெய்கொள் பூசனை விதிமுறை இயற்றி, மேல், வீரன்,
‘மொய்கொள் போர்க் களத்து எய்துவாம் இனி’ என
முயன்றான்.–188-
வீரன் – (வீரருள்) வீரனாகிய இராமபிரான்; செய்ய தாமரை
நாள்மலர் – அன்றலர்ந்த செந்தாமரை மலர் போன்ற; கைத்தலம்
சேப்ப – (தனது) கைத்தலங்கள் மேலும் சிவக்கும்படி; துய்ய தெய்வ
வான் படைக்கு எலாம் – தூய்மையும் தெய்வத்தன்மையும் உடைய
உயர்ந்த (தனது) படைகளுக்கெல்லாம்; வரன்முறை துரக்கும்
மெய்கொள் பூசனை – வரன்முறையாகச் செலுத்துதற்குரிய
மெய்மையான வழி பாட்டினை; விதி முறை இயற்றி – செய்ய
வேண்டிய முறைப்படி செய்து; மேல் – பிறகு, இனிமேல்; மொய்கொள்
போர்க்களத்து – (வீரர்தம்) வலிமை விளங்கித் தோன்றும்
போர்க்களத்திடத்து; எய்துவாம் என முயன்றான் – செல்வோம் என்று
(புறப்படுதலாகிய) முயற்சியை மேற்கொண்டான்.
————–
8629. கொள்ளியின் சுடர் அனலிதன் பகழி கைக்கொண்டான்;
அள்ளி நுங்கலாம் ஆர் இருட் பிழம்பினை அழித்தான்;
வெள்ள வெங் களப் பரப்பினைப் பொருக்கென விழித்தான்;
தள்ளி, தாமரைச் சேவடி நுடங்குறச் சார்ந்தான்.–189-
கொள்ளியின் சுடர் அனலிதன் – தீக்கொள்ளியினை யொத்துச்
சுடர் விட்டொளிர்கின்ற அக்கினி தேவனது; பகழிகைக் கொண்டான் –
அம்பினைத் தன் கையிற் கொண்டவனாகி; அள்ளி நுங்கலாம் –
(கையினால்) அள்ளியெடுத்து விழுங்குதற்குத் தக்கவாறு; ஆர் இருட்
பிழம்பினை அழித்தான் – திரண்டுள்ள அரிய இருளின் பிழம்பினைச்
சிதைத்து அழித்தான்; தள்ளில் தாமரைச் சேவடி – தள்ளப்
படுதற்கியலாத (சிறந்த) தாமரை போன்ற சிவந்த திருவடி; நுடங்குறச்
சார்ந்தான் – அசைவுற்றுத் தளர நடந்து சென்று; வெள்ள வெங்களப் பரப்பினை – (குருதி) வெள்ளம்
நிரம்பிய கொடுமை மிக்க போர்க்களமாகிய பரந்த இடத்தினைப்;
பொருக்கென விழித்தான் – திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான்.
———-
வீழ்ந்து கிடக்கும் சுக்ரீவன் முதலானோரைத் தனித்தனி
கண்டு இராமன் வருந்துதல்
8630. நோக்கினான் பெருந் திசைதொறும்; முறை முறை நோக்கி,
ஊக்கினான்; தடந் தாமரைத் திரு முகத்து உதிரம்
போக்கினான்; நிணப் பறந்தலை அழுவத்துள் புக்கான்;
காக்கும் வன் துணைத் தலைவரைத் தனித் தனி கண்டான்.–190-
நோக்கினான் – (அங்ஙனம் போர்க்களத்தை) விழித்துப்
பார்த்தவனாகிய இராமபிரான்; பெருந்திசை தொறும் முறை முறை
நோக்கி – திசையிடங்கள் தோறும் அடுத்தடுத்து உற்றுப்பார்த்து;
ஊக்கினான் – (அங்குள்ள அவலக் காட்சிகளைக் கண்டு) முயன்று
மேற்சென்றவனாய்; தடந்தாமரைத் திரு முகத்து – விரிந்த பெரிய
செந்தாமரை மலர் போலும் (தன்) அழகிய முகத்தின் கண்ணே;
உதிரம் போக்கினான் – உதிரத்தை வெளிப்படுத்தினான்;
நிணப்பறந்தலை அழுவத்துள் புக்கான் – நிணம் நிறைந்த
போர்க்களப் பரப்பினிடத்தே புகுந்தான்; காக்கும் வன் துணைத்
தலைவரை – (தன் சேனையைக்) காத்தற்றொழிலை மேற்கொண்டிருந்த
வலிமை வாய்ந்த துணையாயமைந்த (வானரத்) தலைவைர்களை;
தனித்தனி கண்டான் – (ஒவ்வொருவராகத்) தனித்தனியே சென்று
பார்த்தான்.
———–
8631. சுக்ரீவனை நோக்கி, தன் தாமரைத் துணைக் கண்
உக்க நீர்த்திரள் ஒழுகிட, நெடிது நின்று உயிர்த்தான்;
‘தக்கதோ, இது நினக்கு!’ என்று, தனி மனம் தளர்ந்தான்;
பக்கம் நோக்கினன்; மாருதி தன்மையைப் பார்த்தான்.–191-
சுக்ரீவனை நோக்கி – (மடிந்துகிடக்கும்) சுக்ரீவனைப் பார்த்து; தன்
தாமரைத் துணைக்கண் – தனது தாமரை மலர் போன்ற
இருகண்களினின்றும்; உக்க நீர்த்திரள் ஒழுகிட – சிந்திய
கண்ணீர்த்திரள் வழிந்த படி இருக்க; நின்று நெடிது உயிர்த்தான் –
(செயலற்று) நின்று பெருமூச்செறிந்தான்; ‘இது நினக்குத் தக்கதோ
என்று – (என்னைத் தனியே புலம்புமாறு விட்டுப் பிரிந்து) இங்ஙனம்
கிடப்பது உனக்குப் பொருந்துவதோ என்று; தனிமனந்தளர்ந்தான் –
மனந்தளர்ந்து வருந்தினான்; பக்கம் நோக்கினன் – (அச்சுக்ரீவனது)
பக்கத்தில் பார்த்தான்; மாருதிதன்மையைப் பார்த்தான் – அனுமானின்
நிலைமையைக் கண்ணுற்றான்.
————–
8632. ‘கடல் கடந்து புக்கு, அரக்கரைக் கருவொடும் கலக்கி,
இடர் கடந்து நான் இருக்க, நீ நல்கியது இதற்கோ?
உடல் கடந்தனவோ, உனை அரக்கன் வில் உதைத்த
அடல் கடந்த போர்வாளி?’ என்று, ஆகுலித்து அழுதான்.–192-
கடல் கடந்து புக்கு – கடலைக் கடந்து (இலங்கையினுள்) புகுந்து;
அரக்கரைக் கருவொடும் கலக்கி – (எதிர்ப்பட்ட) அரக்கர்களைக்
கருவுடனே கலங்கச்செய்து; இடர் கடந்து நான் இருக்க –
(அரக்கர்செய்த) துன்பத்தைக் கடந்து நான் (உயிர் தாங்கி)
இருக்கும்படி; நீநல்கியது இதற்கோ – நீ (எனக்கு) உதவியது (இங்ஙனம்
உன்னை இழந்து, பார்த்துப் பரிதவிப்பதற்குத் தானோ?’ அரக்கன் வில் உதைத்த – அரக்கனுடைய
(இந்திரசித்தினுடைய) வில்லினின்று செலுத்திய; அடல் கடந்த போர்
வாளி – வலிமை வாய்ந்த போர்த்தொழிற்குரிய அம்புகள்; உனை,
உடல் கடந்தனவோ? – உனது உடம்பினை ஊடுருவி அப்பாற்
சென்றனவோ?” என்று ஆகுலித்து அழுதான் – என்று கூறி
(வாய்விட்டு அரற்றி) இரைந்து அழுதான் (இராமன்).
————-
8633. ‘முன்னைத் தேவர்தம் வரங்களும், முனிவர்தம் மொழியும்,
பின்னைச் சானகி உதவியும், பிழைத்தன; பிறந்த
புன்மைச் செய் தொழில் என் வினைக் கொடுமையால்
புகழோய்
என்னைப் போல்பவர் ஆர் உளர், ஒருவர்?’ என்று
இசைத்தான்.–193-
புகழோய் – புகழத்தக்க பெருமையுடையோனே! பிறந்த புன்மை
செய் தொழில் – (என்னுடன்) தோன்றிய இழிந்த செய் தொழிலுக்குக்
காரணமாகிய; என்வினைக்கொடுமையால் – எனது தீவினையின்
கொடுமையால்; முன்னைத் தேவர்தம் வரங்களும் – முன்பு (உனக்குத்)
தேவர்கள் கொடுத்த வரங்களும்; முனிவர்தம் மொழியும் –
முனிவர்கள் அளித்த வாழ்த்துரையும்; பின்னைச் சானகி உதவியும் –
பின்பு (சனகன் மகளாகிய) சானகி (நீ இலங்கையில் அவளைக் கண்ட
காலத்துச்) செய்த உதவியும்; பிழைத்தன – ஆகிய இவையெல்லாம்
(இன்னு உன்னைக் காத்தற்கு முடியாதனவாய்) பயனற்றவாய் ஒழிந்தன;
என்னைப் போல்பவர் ஒருவர் ஆர் உளர் – (இதற்குக்காரணமாய்)
என்னைப் போன்று (உயிர் தாங்கி) உள்ளவர் ஒருவர்
(என்னையன்றிப் பிறர் யாருளர்? என்று இசைத்தான் – என்று
(தன்னை வெறுத்துக்) கூறினான் (இராமன்).
————–
8634. ‘புன் தொழில் புலை அரசினை வெஃகி, என் பூண்டேன்?
கொன்று ஒருக்கினேன், எந்தையை; சடாயுவைக் குறைத்தேன்;
இன்று ஒருக்கினேன், இத்தனை வீரரை; இருந்தேன்!
வன் தொழிற்கு ஒரு வரம்பும் உண்டாய் வரவற்றோ?–194-
புன் தொழில் புல அரசினை – சிறுமையான செயலால் இழிந்த
அரச பதவியினை; வெஃகி என் பூண்டேன் – விரும்பி என்ன
(பெறுதற்கரிய பேற்றினைப்) பெற்று விட்டேன்? எந்தையைக் கொன்று
ஒருக்கினேன் – (அதனால்) என் தந்தையைக் கொன்றழித்தேன்;
சடாவுவைக் குறைத்தேன் – (என்தந்தைக்குச் சமமான) சடாயுவை
வீழ்த்தினேன்; இத்தனை வீரரை இன்று – (இப்போர்க்களத்தில்)
இத்தனை வானரவீரர்களையும் இன்று; ஒருக்கினேன் இருந்தேன் –
உயிர் நீங்கச் செய்தேனாய் (நான்மட்டும் உயிர் தாங்கி) இருந்தேன்;
வன்தொழிற்கு – (இத்தகைய என்னுடைய) கொடிய செயல்களுக்கு;
ஒருவரம்பும் உண்டாய் வரவற்றோ? – ஓர் எல்லையும் உண்டாகி
அமையவல்லதோ? (இல்லை என்றபடி).
————-
8635. ‘தமையனைக் கொன்று, தம்பிக்கு வானரத் தலைமை
அமைய நல்கினென், அடங்கலும் அவிப்பதற்கு அமைந்தேன்;
கமை பிடித்து நின்று, உங்களை இத்துணைக் கண்டேன்;
சுமை உடல் பொறை சுமக்க வந்தேன்’ எனச் சொன்னான்.–195-
தமையனைக் கொன்று – அண்ணனைக் கொன்று; தம்பிக்கு
வானரத்தலைமை – தம்பிக்கு (சுக்கிரீவனுக்கு) வானரகுல அரசனாம்
தன்மையை; அமைய நல்கினென், – பொருந்தும்படி தந்து;
அடங்கலும் அவிப்பதற்கு அமைந்தேன் -(நன்மை செய்வது போன்று
அவ்வானவர்குலம்) முழுமையும் அழிப்பவனாகி அமைந்தேன்;
கமைபிடித்து நின்று, – பொறுமையைக் கடைபிடித்து நின்று; உங்களை
இத்துணை கண்டேன் – உங்களை இவ்வளவு
துன்பத்திற்குள்ளாக்கினேன்; சுமை உடல் பொறை – பூமிக்குப்
பாரமாகவுள்ள எனது உடம்பின் சுமையினை; சுமக்க வந்தேன்’ எனச்
சொன்னான் – சுமத்தற்கென்றே (இவ்வுலகிற்) பிறந்தேன்’ என்று கூறி
(இராமன்) வருந்தினான்.
—————–
8636. விடைக் குலங்களின் நடுவண் ஓர் விடை கிடந்தென்ன,
கடைக்கண் தீ உக, அங்கதக் களிற்றினைக் கண்டான்;
‘படைக்கலங்களைச் சுமக்கின்ற பதகனேன், பழி பார்த்து,
அடைக்கலப் பொருள் காத்தவாறு அழகிது’ என்று அழுதான்.–196-
விடைக்குலங்களின் நடுவண் – ‘எருதுக் கூட்டங்களின் நடுவே;
ஓர் விடை கிடந்தென்ன – ஒப்பற்ற தோர் இடபம்
கிடந்தாற்போல (ப்பெருவீரர்களின் நடுவிலே கிடக்கும்); அங்கதக்
களிற்றினை – அங்கதனாகிய யானையை;கண்டகடைதீ உகக்
கண்டான் – (இராமன் தன்) கண்களின் கடையினின்றும் தீப்பொறி
பறக்குமாறு பார்த்தான்;படைக்கலங்களைச் சுமக்கின்ற பதகனேன் –
(பகைவரால் துன்புறாது அடைந்தாரைப் பாதுகாக்கும் நோக்குடன்)
ஆயுதங்களைச் சுமந்து கொண்டுள்ள தீவினையாளனாகிய யான்; பழி
பார்த்து-பழி (நேராமல்) நோக்கி; அடைக்கலப் பொருள் காத்தவாறு
– (என்னிடத்தில் ஒப்புவித்த) அடைக்கலப்பொருளைப்
பாதுகாத்ததிறம்; அழகிது’ என்று அழுதான் – மிகவும் அழகாயுள்ளது’
என்று கூறி அழுதான்.
————-
இலக்குவனைக் கண்டு இராமன் அடைந்த துயரம்
8637. உடரிடைத் தொடர் பகழியின் ஒளிர் கதிர்க் கற்றைச்
சுடருடைப் பெருங் குருதியில், பாம்பு எனச் சுமந்த
மிடருடைப் பண மீமிசை, தான் பண்டை வெள்ளக்
கடரிடைத் துயில்வான் அன்ன தம்பியைக் கண்டான்.–197-
உடரிடைத் தொடர் பகழியின் – உடம்பின் இடையே துளைத்து
ஊடுருவிய அம்புகளின்; ஒளிர்கதிர்க் கற்றை – ஒளிவிட்டு விளங்கும்
ஒளித் தொகுதியான; சுடருடைப் பெருங் குருதியில் – சுடரினையுடைய
பெரிய குருதியினிடத்தே; பாம்பு எனச் சுமந்த – பாம்பெனப்
பகருமாறு சுமந்து அக்காட்சி; மிடருடைப் பணமீமிசை – வலிமையை
உடைய ஆதிசேடன் என்னும்) பாம்பின் மேல்; பண்டை வெள்ளக்
கடரிடை – பழமையான பாற்கடலின் கண்ணே; துயில்வான் தான்
அன்ன – துயில்பவனாகிய தன்னை நிகர்த்திருக்க (க்கிடைக்கும்);
தம்பியைக் கண்டான் – இளவலான இலக்குவனை இராமபிரான்
பார்த்தான்.
————-
8638. பொருமினான், அகம்; பொங்கினான்; உயிர் முற்றும்
புகைந்தான்;
குரு மணித் திரு மேனியும், மனம் எனக் குலைந்தான்;
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர, சாய்ந்தான்;
உருமினால் இடியுண்டது ஓர் மராமரம் ஒத்தான்.–198-
அகம் பொருமினான் – (இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும்
தம்பியைக் கண்ட இராமன்) மனம் வெதும்பினான்; பொங்கினான்;
உயிர் முற்றும் புகைந்தான் – வெகுளி மிகுந்தவனாகி உயிர்ப்பு
முழுமையும் புகையுடன் தோன்றப் பெற்றான்; குருமணித்
திருமேனியும் – நிறந்தாங்கிய நீலமணி போலும் (தனது) அழகிய
உடம்பும்; மனம் எனக் குலைந்தான் – உள்ளம்போல நடுக்கமுற்றான்;
தருமம் நின்று – அறக்கடவுள் (இத்துன்பநிலை கண்டு இரங்கி) நின்று;
தன்கண்புடைத்து அலமரச் சாய்ந்தான் – தன் கண்களில் அடித்துக்
கொண்டு வருந்துமாறு (நிலத்தில்) சாய்ந்தான்; உருமினால் இடியுண்டது
ஓர் – இடியினால் தாக்கப்பட்டதொரு; மராமரம் ஒத்தான் –
மராமரத்தை ஒத்து (த்தரையில்) வீழ்ந்தான்.
————-
8639. உயிர்த்திலன் ஒரு நாழிகை; உணர்ந்திலன் ஒன்றும்;
வியர்த்திலன், உடல்; விழித்திலன், கண் இணை;
விண்ணோர்,
‘அயிர்த்து இலன் கொல்?’ என்று அஞ்சினர்;
அங்கையும் தாளும்
பெயர்த்திலன்; உயிர் பிரிந்திலன்-கருணையால் பிறந்தான்.–199-
கருணையால் பிறந்தான் -(உயிர்கள் மீது வைத்த) பெரும் கருணை
காரணமாக அவதரித்து வந்தவனாகிய இராமபிரான்; ஒரு நாழிகை
உயிர்த்திலன் – ஒரு நாழிகைப் பொழுதளவும் மூச்சு விட்டிலன்;
ஒன்றும் உணர்ந்திலன், – ஒன்றும் உணர்ந்தானில்லை; உடல்
வியர்த்திலன் – உடல் வியர்வை கொள்ளவும் இல்லை; கண் இணை
விழித்திலன் – இரு கண்களும் திறக்கவும் இல்லை; அங்கையும்
தாளும் பெயர்த்திலன் – அழகிய கைகளும் கால்களும்
நிலைபெயர்த்து அசைத்திலன்; உயிர் பிரிந்திலன் – (ஆனால்)
உயிர்மட்டும் நீங்கப் பெறாதவனாயினான்; விண்ணோர் ‘அயிர்த்து
இலன்கொல்?’ என்று அஞ்சினர் – (அந்நிலையில்) தேவர்கள்
(அப்பிரான்) ‘உயிரொடுங்கினானோ’ என அச்சமுற்றனர்.
—————-
8640. தாங்குவார் இல்லை; தம்பியைத் தழீஇக்கொண்ட தடக் கை
வாங்குவார் இல்லை; வாக்கினால் தெருட்டுவார் இல்லை;
பாங்கர் ஆயினார் யாவரும் பட்டனர்; பட்ட
தீங்குதான் இது; தமியனை யார் துயர் தீர்ப்பார்?–200-
தாங்குவார் இல்லை – (அங்கு இராமபிரானை) தாங்கிக் கொள்வார்
எவரும் இலர்; தம்பியைத் தழீஇக்கொண்ட – தம்பியாகிய
இலக்குவனைத் தழுவிக் கொண்டுள்ள; தடக்கை வாங்குவாரில்லை –
(இராமனது) பெரிய கையினை (ப்பிரித்து) வாங்கி எடுப்பவர் ஒருவரும்
இலர்; வாக்கினால் தெருட்டுவார் இலர் – தேறுதல் மொழிகளால்
தேற்றுவாரும் இலர்; பாங்கர் ஆயினார் யாவரும் பட்டனர் –
(அவனுக்கு) அணுக்கராயுள்ளோர் அனைவரும் இறந்துபட்டனர்;
பட்டதீங்குதான் இது – (அவனுக்கு) உண்டாகிய துன்பம் இத்தகையது;
தமியனை யார் துயர் தீர்ப்பார்? – (உற்றார் உறவினர் எவருமின்றித்)
தனிப்பட்டவனைத் துன்பம் தவிர்ப்பவர் எவர் உளர்?
—————
8641. கவந்த பந்தமும், கழுதும், தம் கணவரைக் காணார்
சிவந்த கண்ணியர் தேடினர் திரிபவர் திரளும்,
உவந்த சாதகர் ஈட்டமும், ஓரியின் ஒழுங்கும்,
நிவந்த; அல்லது, பிறர் இல்லை, களத்திடை நின்றார்.-201-
கவந்த பந்தமும், கழுதும் – தலையற்ற உடம்புகளின் தொகுதியும்,
பேயும்; தம் கணவரைக் காணார் – தம்முடைய கணவரைக் காணப்
பெறாமையால்; சிவந்த கண்ணியர் – (துயரத்தால்) சிவப்பேறிய
கண்களை உடையவராய்; தேடினர் திரிபவர் திரளும் – தேடி
அலைபவராகிய மகளிர் கூட்டமும்; உவந்த சாதகர் ஈட்டமும் –
(தமக்கு உணவாகும் பிணங்களின் மிகுதிகண்டு) மகிழ்ச்சி கொண்ட
பூதங்களின் தொகுதியும்; ஓரியின் ஒழுங்கும் – நரிகளின் வரிசையும்;
நிவந்த அல்லது – மிகுந்து காணப்பட்டனவல்லாமல்; களத்திடை நின்றார் பிறர் இல்லை –
(அப்) போர்க்களத்தின் கண்ணே உயிரோடு நின்றவர் பிறர்யாரும்
இல்லை.
————–
8642.
வான நாடியர் வயிறு அலைத்து அழுது, கண் மழை நீர்
சோனை மாரியின் சொரிந்தனர்; தேவரும் சோர்ந்தார்;
ஏனை நிற்பவும் திரிபவும் இரங்கின, எவையும்
ஞான நாயகன் உருவமே ஆதலின், நடுங்கி.–202-
வானநாடியர் – (இராமனின் துயரங்கண்ட) வானவர் நாட்டு மகளிர்;
வயிறு அலைத்து அழுது – தம் வயிற்றில் அடித்துக் கொண்டு அழுது;
மழைக்கண் நீர் – (மேகம் போன்ற) கரிய கண்ணின் நீரை; சோனை
மாரியின் சொரிந்தனர் – விடா மழையினுடைய மேகம் போலச்
சொரிந்தனர்; தேவரும் சோர்ந்தார் – தேவர்களும் மனம் சோர்வுற்று
வருந்தினர்; எவையும் ஞான நாயகன் உருவமே ஆதலின் –
எல்லாப் பொருள்களும் ஞானப் பொருளாம் இறைவனாகிய
திருமாலின் வடிவங்களே ஆதலின்; ஏனை நிற்பவும் திரிபவும்
– ஏனைய நிற்பனவும் நடப்பனவுமாகிய எல்லா உயிர்களும்; நடுங்கி
இரங்கின – (அவ்விராமனைப் போலவே) நடுங்கி வருத்தமுற்றன.
——-
8643. முகையின் நாள்மலர்க் கிழவற்கும், முக்கணான் தனக்கும்,
நகையும் நீங்கிய; திருமுகம், கருணையும் நலிந்த;
தொகையுள் நின்றவர்க்கு உள்ளது சொல்லி என்?
தொடர்ந்த
பகையும் பார்க்கின்ற பாவமும் கலுழ்ந்தது, பரிவால்.–203-
முகையின் நாள் மலர்க் கிழவற்கும் – மொட்டாகவில்லாமலே
புதிதாக மலர்ந்தது போன்ற (திருமாலின் உந்திக்கமலமாகிய)
தாமரையில் வசிப்பவனாகிய பிரமனுக்கும்; முக்கணான் தனக்கும் –
மூன்று கண்களை உடையவனாகிய உருத்திர மூர்த்திக்கும்;
கருணையும் நலிந்த – (இராமன் படுகின்ற துயரத்தைக் கண்ணுற்றதால்
ஏற்பட்ட) இரக்கத்தினால் விளைந்த வருத்தத்தினால்; திருமுகம்
நகையும் நீங்கிய – திருமுகங்கள் மகிழ்ச்சியாகிய மலர்ச்சியின் நீங்கி
வாட்டமுற்றன; தொகையுள் நின்றவர்க்கு – (முப்பத்து முக்கோடி
என்னும்) எண்ணின் அளவினை உடையவராய் நின்ற (ஏனைய)
தேவர்களுக்கு; உள்ளது சொல்லியென்? – நேர்ந்த துன்பநிலையினைச்
சொல்லி யாது பயன்?தொடர்ந்த பகையும் பார்க்கின்ற பாவமும் –
தொடர்ந்துள்ள பகைமையுடன் (அத்துயரைக்) கண்ணுறுகின்ற
பாவத்திற்குரிய தேவதையும்; பரிவால் கலுழ்ந்தது – (தன்னிலைமறந்து)
இரக்கத்தினால் கண்ணீர் விட்டு அழுதது.
—————
8644. அண்ணலும், சிறிது உணர்வினோடு அயாவுயிர்ப்பு அணுகிக்
கண் விழித்தனன்; தம்பியைத் தெரிவுறக் கண்டான்;
‘விண்ணை உற்றனன்; மீள்கிலன்’ என்று, அகம் வெதும்பா,
புண்ணின் உற்றது ஓர் எரி அன்ன துயரினன் புலம்பும்;–204-
அண்ணலும், சிறிது உணர்வினோடு – பெருமை மிக்கவனாக
இராமபிரானும் சிறிது உணர்வுடன்; அயாவுயிர்ப்பு அணுகி –
பெருமூச்சு வரப் பெற்றது; கண்விழித்தான் – கண்களை விழித்தான்;
தம்பியைத் தெரிவுறக் கண்டான் – தம்பியை நன்கு உற்றுப்
பார்த்தான்; விண்ணை உற்றனன் மீள்கிலன் என்று- (இவன் இறந்து)
விண்ணுலகடைந்தான் (இனி) மீளமாட்டான்’ என்று எண்ணி; அகம்
வெதும்பா – உள்ளம் அழன்று வெம்மையெய்த; புண்ணின் உற்றது
ஓர் எரி அன்ன – புண்ணில் நெருப்புத் தோய்ந்தது போன்று; துயரினன் புலம்பும் – துன்பத்தினை
உடையவனாகிப் (பின்வருமாறு) வருந்தி அழுபவனானான்.
———-
சிறிது உணர்வு பெற்ற இராமன் இலக்குவனைக் குறித்துப் புலம்புதல்
8645. ‘எந்தை இறந்தான்’ என்றும் இருந்தேன்; உலகு எல்லாம்
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன்; தனி
அல்லேன்;
கந்தன் இருந்தாய் நீ என நின்றேன்; உரை காணேன்;
வந்தனென், ஐயா! வந்தனென், ஐயா! இனி வாழேன்!-205-
‘எந்தை இறந்தான்’ என்றும் இருந்தேன் – எம்தந்தை (தசரதன்)
இறந்தான் எனக் கேள்வியுற்றும் (இறவாது) இருந்தேன்; உலகு எல்லாம்
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன் – ‘உலகம்
முழுவதனையும் (பரதனே ஆளத்) தந்தேன்’ என்ற (எனது
உறுதியான) கொள்கையில் நெகிழ்ந்து நீங்கி (எனது ஆணையின் வழி
பரதன் ஆளும்படி) ஆட்சியை ஏற்றுக்கொண்டவனாயினேன்; கந்தன்
நீ இருந்தாய் – (இருப்பினும்) பற்றுக்கோடானவனாக நீ இருந்தாய்;
தனி அல்லேன் என நின்றேன் -(ஆதலினால்) நான் தனித்துள்ளவன்
அல்லேன் என எண்ணி (உறுதியுடன்) நின்றேன்; உரைகாணேன் –
(இன்றோ) உனது உரையை நான் காணப் பெற்றேனில்லை;
இனிவாழேன் – இனியும் நான் வாழ்ந்திருக்க மாட்டேன்; ஐயா!
வந்தனன் – ஐயனே! வந்துவிட்டேன்! ஐயா! வந்தனன்! – ஐயனே!
வந்துவிட்டேன்!
——————
8646. ‘தாயோ நீயே; தந்தையும் நீயே; தவம் நீயே;
சேயோ நீயே; தம்பியும் நீயே; திரு நீயே;
போயோ நின்றாய்; என்னை இகந்தாய்; புகழ் பாராய்,
நீயோ; யானோ, நின்னினும் நெஞ்சம் வலியேனோ?
தாயோ நீயே; தந்தையும் நீயே; தவம் நீயே; – (எனக்குத்)
தாயும் நீயே; தந்தையும் நீயே; தவமும் நீயே; சேயோ நீயே; தம்பியும்
நீயே; திரு நீயே – மைந்தனும் நீயே; தம்பியும் நீயே; செல்வமும் நீயே;
புகழ் பாராய், என்னை இகந்தாய் போயோ நின்றாய் – (இத்தகைய)
நீயோ புகழைக் கருதாமல் என்னை (த்தனியே) விடுத்து (உயிர்துறந்து)
சென்றாய்; நீயோ; யானோ; – (இங்ஙனம் எனக்கு எல்லாமாகவும்
இருந்தும் என்னைத் தனித்துக் கதறவிடுத்துச் சென்ற
வன்னெஞ்சத்தால்) நீயோ, (அல்லது இங்ஙனம் எல்லாமாகவும்
எனக்கிருந்த உன்னை இழந்தும் உயிரோடிருக்கும் வன்னெஞ்சத்தால்)
யானோ; நின்னினும் நெஞ்சம் வலியேனோ-(ஆராய்ந்து பார்த்தால்)
உன்னைக் காட்டிலும் (எனக்காக உயிருங்கொடுத்த உன் செயலின்
முன்) யானே வன்னெஞ்ச முடையேன்.
————
8647. ‘ஊறாநின்ற புண்ணுடையாய்பால் உயிர் காணேன்;
ஆறாநின்றேன், ஆவி சுமந்தேன்; அழிகின்றேன்;
ஏறே! இன்னும் உய்யினும் உய்வேன்; இரு கூறாக்
கீறா நெஞ்சம் பெற்றனென் அன்றோ, கெடுவேனே?–207-
ஊறா நின்ற புண்ணுடையாய்பால் – (உதிரம்) ஊறுகின்ற புண்ணை
உடைய உன் உடம்பின் கண்ணே; உயி்ர் காணேன் – உயிர்ப்பினைக்
காண்கிலேன்; ஆறா நின்றேன்; ஆவி சுமந்தேன்; அழிகின்றேன் –
ஆறுதலுடையவனாய், உயிர் சுமந்தவனாய் வருந்துகின்றேன்; ஏறே!
கெடுவேன் (ஏ) – ஆண் சிங்கம் போன்றவனே, (அன்பின் திறமின்றி)
கெட்டொழிவேனாகிய நான்; இரு கூறாக் கீறா நெஞ்சம் – (நீ
இறந்தமை அறிந்தும்) இரண்டு கூறாகப் பிளந்து சிதையாத வலிய
நெஞ்சம்; பெற்றெனென் அன்றோ இன்னும் உய்யினும் உய்வேன் –
(ஆதலால்) இன்னும் உயிர்தாங்கி இருப்பினும் இருப்பேன்.
————-
8648. ‘பயிலும் காலம் பத்தொடு நாலும் படர் கானத்து
அயில்கின்றேனுக்கு ஆவன நல்கி, அயிலாதாய்!
வெயில் என்று உன்னாய், நின்று தளர்ந்தே மெலிவு
எய்தி,
துயில்கின்றாயோ இன்று? இவ் உறக்கம் துறவாயோ?–208-
படர்கானத்துப் பயிலும் – பரவிய இடமகன்ற காட்டினிடத்தே
பழகிவாழும்! காலம் பத்தொடு நாலும் – பதினான்கு ஆண்டு
காலத்தில்; அயில்கின்றேனுக்கு – (உணவினை) உண்கின்றவனாகிய
எனக்கு; ஆவன நல்கி அயிலாதாய் – பொருந்துவனவாகிய
உணவுகளைத் (தேடித்) தந்து (நீமட்டும்) உண்ணாதிருந்தவனே!
வெயில் என்று உன்னாய் – வெயில் என்று கருதாத நீ; நின்று
தளர்ந்தே மெலிவு எய்தி – (எனக்குத் துணையாக) நின்று
தளர்ச்சியுற்று மெலிவினை அடைந்து; இன்று துயில்கின்றாயோ –
இப்பொழுது உறங்குகின்றாயோ? இவ்வுறக்கம் துறவாயோ –
இவ்வுறக்கத்தினை விட்டு எழமாட்டாயோ?
————-
8649. அயிரா நெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அச் சொல்
பயிரா எல்லைப் பாதகனேற்கும் பரிவு உண்டோ?
செயிரோ இல்லா உன்னை இழந்தும், திரிகின்றேன்;
உயிரோ, நானோ, ஆர் இனி உன்னோடு உறவு, ஐயா!–209
அயிரா நெஞ்சும் ஆவியும் – ஐயுறவு கொள்ளாத தெளிந்த
நெஞ்சமும் உயிரும்; ஒன்றே எனும் அச்சொல் – (தம்முட்பிரிவின்றி
ஒன்றிக் கலந்திருத்தலால்) ஒன்றே என (உலகோர்) கூறும் அம்மொழி;
பயிரா எல்லை – பொருளுள்ளதாக ஆகாதபோது; பாதகனேற்கும்
பரிவு உண்டோ – பாவியாகிய என்னிடம் இரக்கம் என்ற உணர்வுதான்
நிகழுமோ; செயிரோ இல்லா – ஒரு குற்றமும் இல்லாத; உன்னை
இழந்தும் திரிகின்றேன் – உன்னை இழந்தபின்பும் (வருத்தமின்றித்)
திரியும் நிலையினனாக உள்ளேன்;ஐயா! இனி உன்னோடு உறவு –
ஐயனே! இனி உன்னுடன் (உண்மையான) உறவு; உயிரோ, நானோ,
ஆர் – (எனது) உயிரோ, யானோ யார்?
——————
8650. ‘வேள்விக்கு ஏகி, வில்லும் இறுத்து, “ஓர் விடம் அம்மா
வாழ்விக்கும்!” என்று எண்ணினென், முன்னே வருவித்தேன்;
சூழ்வித்து, என்னைச் சுற்றினரோடும் சுடுவித்தேன்;
தாழ்வித்தேனோ, இத்தனை கேடும் தருவித்தேன்?–210-
வேள்விக்கு ஏகி வில்லும் இறுத்து-(சனகன் புரிந்த) வேள்விக்குச்
சென்று சிவன் வில்லையும் ஒடித்து; ஓர்விடம் வாழ்விக்கும் என்று எண்ணினென் – ஓர் நஞ்சினை (சீதையை)
(இது நம்மை) வாழ்விக்கும் என்று எண்ணினேனாய்; முன்னே
வருவித்தேன் – என்முன்னே வருவித்துக் கொண்டேன்; சூழ்வித்து –
(என்னைச்) சூழ்ந்துவரச் செய்து; என்னைச் சுற்றினரோடும்
சுடுவித்தேன் – என்னைச் சுற்றி இருந்தவர்களையும் சுட்டொழித்தேன்!
இத்தனைகேடும் தருவித்தேன் – இத்தனை கெடுதிகளையும்
உண்டாக்கிக் கொண்டேன்; தாழ்வித்தேனோ? – (இதன் பின்பும்)
சிறிதேனும் பின்வாங்கினேனா? (இல்லை).
———–
8651. ‘மண்மேல் வைத்த காதலின், மாதா முதலோர்க்கும்
புண்மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன்;
பெண்மேல் வைத்த காதலின், இப் பேறுகள் பெற்றேன்;
எண்மேல் வைத்தேன், என் புகழ்; யான்தான் எளியேனோ!–211-
மண்மேல் வைத்த காதலின் – மண்ணிடத்தே வைத்த பற்றுக்
காரணமாக; மாதாமுதலோர்க்கும் – (என்னுடைய) தாயார்
முதலானோர்க்கும்; புண்மேல் வைத்த தீநிகர் துன்பம்
புகுவித்தேன்- புண்ணிடத்தே தீ நுழைந்தாற் போன்ற பெருந்துன்பத்தை
உண்டாக்கி விட்டேன்; பெண்மேல் வைத்த காதலின்- (சீதை என்னும்)
பெண்ணிடத்தே வைத்துள்ள ஆசையினால்; இப்பேறுகள்
பெற்றேன் – இத்தகையபயன்களை அடைந்தேன்; என்புகழ் எண்மேல்
வைத்தேன் – எனது புகழ்த்திறங்களை (ஒன்றன் மேலொன்றாகப் பிறர்
எண்ணி மதிக்குமாறு உயர்த்தினேன்; யான்தான் எளியேனோ? –
நான்தான் வலியற்ற எளியவனோ?
————-
8652. ‘மாண்டோய் நீயோ; யான் ஒருபோதும் உயிர் வாழேன்;
ஆண்டான் அல்லன் நானிலம், அந்தோ, பரதன்தான்!
பூண்டார் எல்லாம் பொன்றுவர், துன்பப் பொறையாற்றார்;
வேண்டாவோ, நான் நல் அறம் அஞ்சி, மெலிவுற்றால்?–212-
நீயோ மாண்டாய் – (என் ஆருயிர்த் தம்பியாகிய) நீயோ
இறந்துவிட்டாய்; யான் ஒருபோதும் உயிர் வாழேன் -(நீயின்றி) நான்
(இனி) ஒரு கணமும் உயிருடன் வாழமாட்டேன்; பரதன் நானிலம்
ஆண்டான் அல்லன் – (என்னைப் பிரிந்து) பரதனும் இவ்வுலகத்தை
ஆளமாட்டான்; பூண்டார் எல்லாம் – (நம்மோடு அன்பின்
தொடர்பினைப் பூண்டவர்கள் எல்லோரும்; துன்பப்பொறை ஆற்றார்
பொன்றுவர் – (பிரிவுத்) துன்பத்தைப் பொறுக்கும் வலியற்றவராய்
இறந்துபடுவர்; நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றால் – நான்
நன்மையுடைய அறத்துக்குப் பயந்து (பகைவரை அழிப்பதில்)
தளர்ச்சியுற்றால்; வேண்டாவோ? – (அதன்பயனாக) இத்தனை
துயரங்களும் வேண்டத் தக்கன அல்லவோ?
————-
8653. ‘அறம், தாய், தந்தை, சுற்றமும், மற்றும், எனை அல்லால்,
துறந்தாய்! என்றும் என்னை மறாதாய்! துணை வந்து
பிறந்தாய்! என்னைப் பின்பு தொடர்ந்தாய்! பிரிவு அற்றாய்!
இறந்தாய்! உன்னைக் கண்டும் இருந்தேன், எளியேனோ? -213-
துணை வந்து பிறந்தாய் – (எனக்குத்) துணையாகவந்து பிறந்தவனே!
அறம், தாய், தந்தை, சுற்றமும் – அறம், அன்னை, தந்தை, உறவினர்;
மற்றும் – மற்றுள்ள அனைத்தும்; அல்லால் துறந்தாய் –
என்னைத்தவிர (உனக்குப் பற்றுதற்குரியனவல்லாவென) துறந்தாய்!
பிரிவு ஆற்றாய் – பிரிந்திருக்கப் பெறாதவனாய்; என்னைப் பின்பு
தொடர்ந்தாய் – என்னைப் பின்தொடர்ந்து (கானகத்திற்கு) வந்தவனே!
என்றும் என்னை மறாதாய் – எக்காலத்தும் என்னை மறவாதவனே!
இறந்தாய் – (இன்று என்னைப் பிரியும் படியாக) இறந்துபட்டாய்!
உன்னைக் கண்டும் இருந்தேன் – அங்ஙனம் இறந்துபட்ட உன்னைக்
கண்டும் நான் உயிர்தாங்கி இருந்தேன்! எளியேனோ? –
வலியற்றவனாவேனோ? ஓகாரம் எதிர்மறை.
————
8654. ‘சான்றோர் மாதைத் தக்க அரக்கன் சிறை தட்ட,
ஆன்றோர் சொல்லும் நல் அறம் அன்னான் வயமானால்,
மூன்று ஆய் நின்ற பேர் உலகு ஒன்றாய் முடியாவேல்,
தோன்றாவோ, என் வில் வலி வீரத் தொழில் அம்மா?–214-
சான்றோர் மாதை – சான்றோர்களால் பாராட்டத்தகும்
(கற்பென்னும் திண்மையையுடைய) பெண்ணை; தக்க அரக்கன் –
அரக்கத் தன்மைக்குச் சான்றாக நிற்கும் அரக்கன்; சிறைதட்ட –
சிறைப்படுத்தி வைக்க; ஆன்றோர் சொல்லும் நல் அறம் –
கொடியவர்களை ஒறுத்தழிக்க வல்ல அறக்கடவுள் உண்டெனச்
சான்றோர்களால் சிறப்பித்துக் கூறப்பெறும் நல்லறமும்; அன்னான்
வயமானால் – அத்தகைய கொடியவனின் கொடுமைக்கு உட்பட்டு
அடங்கிச் செயலற்றுப் போகுமானால்; மூன்றுஆய் நின்ற பேர் உலகு
– (மேல், கீழ், நடுஎன) மூவகையாய் நிலை பெற்றுள்ள பெரிய
உலகங்கள் யாவும்; ஒன்றாய் முடியாவேல் – ஒருசேர அழிந்து
போகாமல் இருக்குமானால்; என் வில்வலி வீரத் தொழில் –
என்னுடைய வில்லின் வன்மை காட்டும் வீரத் தொழில்; தோன்றாவோ
– உலகோர்க்கு நன்கு விளங்கித் தோன்றாதோ?
—————-
8655. ‘வேலைப் பள்ளக் குண்டு அகழிக்கும், விராதற்கும்,
காலின் செல்லாக் கவந்தன் உயிர்க்கும், கரனுக்கும்,
மூலப் பொத்தல் செத்த மரத்து ஏழ் முதலுக்கும்,
வாலிக்கும்மே ஆயினவாறு என் வலி அம்மா?–215-
வேலைப் பள்ளக்குண்டு அகழிக்கும் – கடற்பள்ளமாகிய ஆழ்ந்த
அகழியை (அணைகட்டிக்) கடத்தற்கும்; விராதற்கும் – விராதனைக்
கொல்லுதற்கும்; காலின் செல்லாக் கவந்தன் உயிர்க்கும் –
கால்கொண்டு நடக்கவியலாத கவந்தனது உயிரைக் கவர்வதற்கும்;
கரனுக்கும் – கரன் என்னும்அரக்கனை அழிப்பதற்கும்; மூலப்
பொத்தல் செத்த -ஆணிவேரின் கண் துளையுற்று பட்டுப்போன; ஏழ்
மரத்து முதலுக்கும் – ஏழு மராமரங்களின் முதலைத் துளைத்தற்கும்;
வாலிக்கும்மே – வாலியைக் கொல்லுதற்கும் மட்டுமே; ஆயினவாறு
என் வலி அம்மா – ஆகித் தீர்ந்தொழிந்தது எனது
வன்மையனைத்தும்! (அந்தோ! இரங்கத்தக்கதே).
————–
8656. ‘இருந்தேனானால், இந்திரசித்தே முதலாய
பெருந் தேராரைக் கொன்று பிழைக்கப் பெறுவேனா?
வருந்தேன்; “நீயே வெல்லுதி” என்னும் வலி கொண்டேன்;
பொருந்தேன், நான், இப் பொய்ப் பிறவிக்கும் பொறை
அல்லேன்!–216-
வருந்தேன்-வருத்தம் இல்லாதேனாகி; “நீயே வெல்லுதி” என்னும்
வலி கொண்டேன் – ‘நீயே (இந்திரசித்தைப் போரிற் கொன்று)
வெற்றியடைவாய்’ என்னும் (மன) வலிமையைக் கொண்டு இருந்தேன்;
இருந்தேனானால் – (இனி, நின்னை இழந்த இந்நிலையிலும் உயிர்துறவாது) இருந்தேனானால்; இந்திரசித்தே
முதலாய பெருந்தேராரை – இந்திரசித்து முதலாகவுள்ள பெரிய தேர்
வீரர்களாகிய பகைவர்களை; கொன்று பிழைக்கப் பெறுவேனா? –
(போரிற்) கொன்று பிழைத்திருத்தலாகிய ஆற்றலைப் பெறவல்லேனா?
நான் பொருந்தேன் – நான், ‘உன்னுடன் பிறந்தேன்’ எனக் கூறிக்
கொள்ளுதற்கும் பொருத்தமுடையேனல்லேன்; இப்பொய்ப் பிறவிக்கும்
பொறை அல்லேன் – (எனவே) இப்பொய்மைத் தன்மையுடைய
பிறவியின் சுமையைத் தாங்குதற்கும் வன்மையுடையேனல்லேன்!
———–
8657. ‘மாதாவும், நம் சுற்றமும், நாடும் மறையோரும்,
“ஏது ஆனாரோ?” என்று தளர்ந்தே இறுவாரை,
தாதாய்! காணச் சால நினைந்தேன்; தரை ஆள்வேம்;
போதாய்; ஐயா, பொன் முடி என்னைப் புனைவிப்பான்!–217-
தாதாய் – என் அப்பனே! மாதாவும், நம் சுற்றமும் நாடும்
மறையோரும் – (நம்மை ஈன்ற) தாயும், நம் சுற்றத்தாரும்,
நாட்டுமக்களும், வேதியரும்; ‘ஏது ஆனாரோ?” என்று தளர்ந்தே
இறுவாரை – (வனம் போந்தநம்மைக் குறித்து) ‘என்ன
நிலையினராயினாரோ’ என்று தளர்வெய்தி (மனம் நொந்து)
அழிபவரை; காணச் சால நினைந்தேன் – (அவர் தம் துயர் நீங்க)
காணுதற்குப் பெரிதும் எண்ணி நிற்கின்றேன்; ஐயனே! – ஐயனே!
என்னைப் பொன்முடி புனைவிப்பான் – என்னைப் பொன்னாலியன்ற
முடியைப் புனைவித்தல் வேண்டி; தரை ஆள்வேம் போதாய் –
நிலமாள்வதற்கு (மீண்டும் உயிர்பெற்று) வருவாயாக.
————
8658. ‘பாசமும் முற்றச் சுற்றிய போதும், பகையாலே
நாசமும் முற்ற இப்போதும், நடந்தேன், உடன் அல்லேன்;
நேசமும் அற்றார் செய்வன செய்தேன்; நிலை நின்றேன்;
தேசமும் மற்று, என் கொற்ற நலத்தைத் தெரியாதோ?–218-
பாசமும் முற்றச் சுற்றியபோதும் – நாகபாசம் முழுவதும் (உனது
உடம்பைச்) சுற்றிய அப்பொழுதும்; பகையாலே நாசமும் முற்ற
இப்போதும் – பகைவனாலே (நம் சேனைக்குக்) கேடு முற்றிவிட்ட
இப்பொழுதும்; உடன் அல்லேன் நடந்தேன் – உன்னுடன் துணை
நிற்பேன் அல்லாதேனாகி (உன்னை விட்டுப்புறத்தே) சென்று
விட்டேன்;நேசமும் அற்றார் செய்வன செய்தேன் – அன்பில்லாதார்
செய்வனவற்றைச் செய்தேன்; நிலைநின்றேன் – (ஆயினும்)
தளர்ச்சியின்றி நிற்கின்றேன்; என்கொற்ற நலத்தை – (இத்தகைய)
எனது வெற்றி நலத்தை; தேசமும் மற்று தெரியாதோ – உலகமும்
தெரிந்து கொள்ளாதோ?
பாசம் – இந்திரசித்து ஏவிய நாகபாசம்.
—————
8659. ‘கொடுத்தேன் அன்றே, வீடணனுக்குக் குலம் ஆள
முடித்து ஓர் செல்வம்; யான் முடியாதே முடிகின்றேன்;
படித்தேன் அன்றே, பொய்ம்மை? குடிக்குப் பழி பெற்றேன்;
ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே, உணர்வு அற்றேன்?’–219-
வீடணனுக்குக் குலம் ஆள முடித்து ஓர் செல்வம் – (என்னை
அடைக்கலம் அடைந்த) வீடணனுக்கு அவன் குலமுழுவதனையும்
ஆளுமாறு முடிவு செய்து ஒப்பற்ற (இலங்கை அரசாகிய) செல்வத்தை;
அன்றே கொடுத்தேன் – (அவன் அடைக்கலம் புகுந்த
அந்நாளிலேயே) அன்றே (வாயளவில்) கொடுத்து விட்டேன்; யான்
முடியாதே முடிகின்றேன் – நான் (அங்ஙனம்
வாக்குறுதிகொடுத்ததனை) நிறைவேற்றாமலேயே இறந்துபடப்
போகின்றேன்; படித்தேன் அன்றே பொய்மை – பொய்மை மொழி
கூறப் பயின்றேன் அல்லவா? குடிக்குப் பழி பெற்றேன் – (அதனால்)
என் குடிக்குப் பழியைத் தேடி)ப் பெற்றேன்; உணர்வு அற்றேன்
நானே என்புகழ் ஒடித்தேன் அன்றே – உணர்வற்றவனாகிய யான்
எனது புகழினை நானே சிதைத்தழித்தேன் அன்றோ?
—————–
8660. என்று என்று ஏங்கும், விம்மும், உயிர்க்கும், இடை அஃகி,
சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த,
பொன்றும் என்னாத் தம்பியை ஆர்வத்தொடு புல்லி,
ஒன்றும் பேசான்; தன்னை மறந்தான், துயில்வுற்றான்.–220-
என்று என்று ஏங்கும் – என்று என்று இவ்வாறு புலம்பி
வருந்துவான்; விம்மும் உயிர்க்கும் – மனம் விம்முவான்; பெருமூக்சு
விடுவான்; இடைஅஃகிச் சென்று – இடை இடையே (நெட்டுயிர்ப்பு
அடங்கிச் சென்று; இந்தியம் எல்லாம் ஒன்றோடு ஒன்று சிதைவு
எய்த – (கண்முதலிய) பொறிகளெல்லாம் (தத்தம் புலன்களைக்
கொள்ளுதலின்றி) சிதைந்து கெட; பொன்றும் என்னா –
‘இறந்தொழிவோம்’ என்று; தம்பியை ஆர்வத்தோடு புல்லி- தம்பியை
மார்போடு இறுகத் தழுவிக்கொண்டு; ஒன்றும் பேசான், தன்னை
மறந்தான், துயில்வுற்றான் – ஒன்றும் பேச இயலாதவனாகி தன்னை
மறந்து உறங்கிக் கிடந்தான் (இராமன்).
———-
8661. கண்டார் விண்ணோர்; கண்கள் புடைத்தார், கலுழ்கின்றார்;
கொண்டார், துன்பம்; ‘என் முடிவு?’ என்னாக்
குலைகின்றார்;
‘அண்டா! ஐயா! எங்கள் பொருட்டால் அயர்கின்றாய்;
உண்டோ உன்பால் துன்பு?’ என அன்பால் உரை செய்தார்.–221-
விண்ணோர் கண்டார் – (இராமனுற்ற இப்பெருந்துயரை) தேவர்கள்,
கண்டனர்; கண்கள் புடைத்தார் கலுழ்கின்றார் – (அதனைக்
கண்டமைக்காக இரங்கி) தம்முடைய கண்களில் மோதி அறைந்து
கொண்டவர்களாய் அழுவாராயினர்; துன்பம் கொண்டார் –
(எல்லையற்ற) துன்பத்தினை மேற்கொண்டார்கள்; ‘என் முடிவு?’
என்னாக் குலைகின்றார் – ‘முடிவில் நிகழப் போவது யாதோ?’ என
அஞ்சி நடுங்குகின்றார்கள்; “அண்டா! ஐயா!” – ‘அண்டம் முழுவதும்
ஆனவனே! (எம்முடைய) தலைவனே! உன்பால் துன்பு உண்டோ?’ –
(இறைவனாகிய) உன்னிடத்துத் துன்பம் என்பது உளதோ? எங்கள்
பொருட்டால் அயர்கின்றாய் – (நின் அன்பர்களாகிய) எங்கள்
பொருட்டாகவே (இத்தகைய துன்பங்களை மேற்கொண்டு) தளர்ந்து
வருந்துகின்றாய்! என அன்பால் உரை செய்தார் – எனச் சொல்லி (அம்முதல்வனிடத்துத்
தாம் கொண்ட) பேரன்பினால் பின்வருமாறு கூறினார்கள்.
———
8662. ‘உன்னை உள்ளபடி அறியோம்; உலகை உள்ள
திறம் உள்ளோம்;
பின்னை அறியோம்; முன் அறியோம்; இடையும் அறியோம்,
பிறழாமல்;
நின்னை வணங்கி, நீ வகுத்த நெறியில் நிற்கும் இது
அல்லால்,
என்னை, அடியோம் செயற்பால?-இன்ப-துன்பம் இல்லோனே!–222-
இன்ப-துன்பம் இல்லோனே – இன்பமும் துன்பமும் இல்லாதவனே!
உன்னை உள்ளபடி அறியோம் – உன் நிலையை உள்ளது உள்ளவாறு
அறியும் திறம் அறியமாட்டோம்; உலகை உள்ளதிறம் உள்ளோம் –
உலகினை (உள்ளும் புறமும்) நிறைந்துள்ள நின் வியாபகத்
தன்மையைச் சிந்தித்துணரும் திறமுடையோம் அல்லோம்; பின்னை
அறியோம், முன் அறியோம், இடையும் அறியோம் – முடிவு
இதுவென்றறியோம்; முதல் இதுவென்றறியோம்; நடுவும்
இதுவென்றறியோம்; நின்னை வணங்கி – (ஆதி அந்தம் நடுவென்றறிய
வொண்ணாப் பரமாகிய) நின்னை வழிபட்டு; நீவகுத்த நெறியின்
பிறழாமல் – நீ வகுத்தருளிய அற நெறியில் மாறுபடாமல்; நிற்கும் இது
அல்லால் – நின்றுஒழுகுதலையின்றி; அடியோம் செயற்பால என்னை? – நின்
அடியோங்களாகிய எங்களாற் செய்யத் தக்கனயாவை உள்ளன?
திடவிசும் பெரிவெளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையுண்ட சுரனே!’–(திருவாய்மொழி – 1-1-7)
எனவரும் நம்மாழ்வார் திருவாக்கு இங்கு நினைக்கத் தக்கது.
———-
8663. ‘”அரக்கர் குலத்தை வேர் அறுத்து, எம் அல்லல்
நீக்கி அருளாய்” என்று
இரக்க, எம்மேல் கருணையினால், ஏயா உருவம் இவை
எய்தி,
புரக்கும் மன்னர் குடிப் பிறந்து, போந்தாய்! அறத்தைப்
பொறை தீர்ப்பான்,
கரக்க நின்றே, நெடு மாயம் எமக்கும் காட்டக்கடவாயோ?–223-
அரக்கர் குலத்தை வேர் அறுத்து – (இரக்கமற்றவர்களாகிய)
அரக்கரினத்தை வேருடன் அறுத்துக் களைந்து; எம் அல்லல் நீக்கி
அருளாய் என்று – எம்முடைய துன்பங்களை நீக்கியருள்வாயாக
என்று; இரக்க, எம்மேல் கருணையினால் – (யாம் நின்னைக்)
குறையிரந்து வேண்ட, எம்மேல் (நீவைத்த) பேரருளால்; ஏயா உருவம்
இவை எய்தி – (நினக்கு) பொருந்தாத மானிடவடிவங்களை ஏற்று;
அறத்தைப் பொறை தீர்ப்பான் – அறத்தின் (பொறுக்க முடியாத)
பாரமாகிய தீமைகளைப் போக்குதற்காக; புரக்கும் மன்னர் குடிப்
பிறந்து போந்தாய் – (உலக உயிர்களைக்) காக்கும் மன்னர்குலத்தில்
அவதரித்து இங்குவந்தாய்; கரக்க நின்றே நெடுமாயம் – (இவ்வாறு
எமது குறை தீர்க்க வந்த நீ நின் இறைமைத் தன்மை) மறைய நின்று
நினது நெடிய மாயத்தன்மையினை; எமக்கும் காட்டக் கடவாயோ? – (நின்பால்
அன்புடைய) எம்மனோர்க்கும் காட்டும் முறைமையினை
உடையாயோ?
————-
8664. ‘ஈன்று, எம் இடுக்கண் துடைத்து அளிப்பான் இரங்கி,
அரசர் இல்பிறந்தாய்!
“மூன்று ஆம் உலகம் துயர்தீர்த்தி” என்னும் ஆசை
முயல்கின்றோம்;
ஏன்றும் மறந்தோம், “அவன் அல்லன்; மனிதன்”
என்றே; இது மாயம்
போன்றது இல்லை; ஆளுடையாய்! பொய்யும் புகலப்
புக்காயோ?–224-
ஈன்று எம் இடுக்கண் துடைத்து அளிப்பான் – (நின்னால்)
படைக்கப்பட்டவராகிய எம்முடைய துன்பங்களை அறவே நீக்கி
(எம்மைக்) காத்தற் பொருட்டு; இரங்கி, அரசர் இல் பிறந்தாய் –
அருள் கொண்டு அரசர் குடியில் பிறந்தவனே! மூன்று ஆம் உலகம்
துயர் தீர்த்தி – (அவ்வாறு அவதரித்து அருளியநீ) மூன்றாகிய
உலகங்களின் துயர்களைத் தீர்த்தருள்வாய்; என்னும் ஆசை
முயல்கின்றோம் – என்னும் ஆசையினாலேயே முயன்று (உயிருடன்)
வாழ்கின்றோம்; ஏன்றும் – (நீ எம்மை உறுதியாகப் பாதுகாப்பாய்
என்பதனை மனம் பொருந்த) ஏற்றுக் கொண்டிருந்தும்; “அவன்
அல்லன்; மனிதன்” என்றே மறந்தோம் – (நின் அரற்றுதல் கேட்டு
இராமனாகிய இவன்) திருமாலாகிய அவனல்லன்; மனிதருள் ஒருவனே!
என்று (அவ்வுண்மையை) மறந்தோமாயினும்; இதுமாயம் போன்றது
இல்லை – (எம்மிடத்து நீகாட்டிய) இதனையொப்பதொரு வஞ்சனைச்
செயல் (வேறெங்கும் நிகழ்ந்தது) இல்லை; ஆளுடையாய்! பொய்யும் புகலப் புக்காயோ –
எம்மை அடிமையாக உடைய இறைவனே! (மெய்மையின் வடிவமான
நீ) பொய்யுரைகளையும் புகலுதற்குமுற்பட்டு விட்டாயோ?”
———–
8665. ‘அண்டம் பலவும், அனைத்து உயிரும், அகத்தும்
புறத்தும் உள ஆக்கி,
உண்டும் உமிழ்ந்தும், அளந்து இடந்தும், உள்ளும்
புறத்தும் உளை ஆகிக்
கொண்டு, சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயையக்
கூடு இயற்றி,
பண்டும் இன்றும் அமைகின்ற படியை ஒருவாய்-பரமேட்டி!–225
பரமேட்டி!-மேலான பரம்பொருளே! அண்டம் பலவும் அனைத்து
உயிரும் – அண்டங்கள் பலவற்றையும், எல்லா உயிர்களையும்;
அகத்தும் புறத்தும் உள ஆக்கி – (இறைவனான நினக்கு) உள்ளேயும்
புறத்தேயும் உள்ளனவாகச் செய்து; உண்டும் உமிழ்ந்தும் –
(உலகங்களை ஒருசேர) உண்டு (வயிற்றில்) அடக்கியும் உமிழ்ந்து
வெளிப்படுத்தியும்; அளந்தும் இடந்தும், உள்ளும் புறத்தும் உளை
ஆகி – (நின் அடியினால்) அளந்தும், பிளந்தும் அவற்றின்
உள்ளேயும் புறம்பேயும், நீக்கமற நிறைந்துள்ளாயாகி; சிலம்பி தன்
வாயின் கூர் நூல் இளைய – சிலந்திப் பூச்சி தன் வாயில் மெல்லிய
நூலினால் பொருந்த; கொண்டு கூடு இயற்றி – கொண்டு கூட்டினை
வகுத்து (அதன் கண்தங்கி இருத்தல் போல); பண்டும் இன்றும்
அமைகின்றபடியை ஒருவாய் – (உலகுயிர்களை நிலை நிறுத்தித்)
தொன்மைக் காலத்தும் இக்காலத்தும் காக்கின்ற (கரக்கின்ற) நின்
தன்மையினில் நீங்காது உள்ளாய்.
அவனது வியாபக நிலையினை,
திருமால் தன்னிடத்தே உலகுயிர்களைப் படைத்து அவற்றைத்
தன்னுள்ளே மீளவும் ஒடுக்கிக் கொள்ளுதற்குச் சிலந்திப் பூச்சி தன்
வாயின் நூலால் கூடியற்றி அந்நூலினை மீளவும் தன்னுட்சுருக்கிக்
கொள்ளுதலை உவமையாகக் கூறுவர் வைணவ சிந்தாந்திகள். இதனை,
சின்னூல் பலபல வாயா லிழைத்துச் சிலந்தி பின்னும்
அந்நூ லருந்தி விடுவது போல அரங்கரண்டம்
பன்னூறு கோடி படைத்தவை யாவும் பழம்படியே
மன்னூழி தன்னில் விழுங்குவர் போத மனமகிழ்ந்தே!–எனத்திருவரங்கத்து மாலை (18) யும் குறிப்பிடுதல் காணலாம்.
இறைவன் தான் எவ்வித மாறுபாட்டிற்கும் உட்படாமல் உலகங்களை
உருவாக்கிக் காத்தும் அழித்தும் நிற்கின்ற நிலை சிலந்திப் பூச்சியின்
தன்மையோடு ஒப்புமைப் படுத்திப் பேசப் பெற்றது.
———–
8666. ‘துன்ப விளையாட்டு இதுவேயும், உன்னைத் துன்பம்
தொடர்பு இன்மை,
இன்ப விளையாட்டு ஆம்; எனினும், அறியாதேமுக்கு
இடர் உற்றால்,
அன்பு விளையும், அருள் விளையும், அறிவு விளையும்,
அவை எல்லாம்,-
முன்பு, பின்பு, நடு, இல்லாய்!-முடித்தால் அன்றி,
முடியாவே.–226-
முன்பு பின்பு நடு இல்லாய்-தோற்றம் நிலை இறுதி இல்லாதவனே!
துன்ப விளையாட்டு இதுவேயும் – (நீ மேற்கொண்ட) இச்செயல்
துன்பத்தைத் தரும் விளையாட்டாம், ஆயினும்; உன்னைத் துன்பம்
தொடர்பின்மை – (இறைவனாகிய நின்னை) அத்துன்பம் தொடர்தல்
இல்லாமையால்; இன்பவிளையாட்டு ஆம் – இன்பத்தைத் தரும்
விளையாடலே ஆம்; எனினும் அறியாதே முக்கு இடர் – ஆயினும்
(நின் இயல்பினை) அறியாதேமாகிய எங்களுக்குத் துன்பத்தையே
தருவதாயிற்று;உற்றால் அன்பு விளையும்,அருள் விளையும், அறிவு
விளையும் – (நீ செய்த) இச்செயலால் (எங்கள்உள்ளத்தி்ல்) அன்பு
உண்டாகும், அருள் உண்டாகும், ஞானம் உண்டாகும்;
அவையெல்லாம் முடித்தால் அன்றி முடியாவே – அத்தகைய
பயன்களெல்லாம் (முதல்வனாகிய நீ முன்னின்று) முடித்து வைத்தாலன்றி
(எம்மிடத்து) நிறைவேறுவன அல்ல.
———–
8667. ‘வருவாய் போல வாராதாய்! வந்தாய் என்று மனம் களிப்ப,
வெருவாதிருந்தே நீ இடையே துன்பம் விளைக்க,
மெலிகின்றோம்;
கரு ஆய் அளிக்கும் களைகண்ணே! நீயே இதனைக்
காவாயேல்,
திரு வாழ் மார்ப! நின் மாயை எம்மால் தீர்க்கத் தீருமோ?’–227-
வருவாய் போல வாராதாய் – (வெளிப்பட) வருவாய் போன்று
தோன்றி வாராமல் இருப்பவனே! வந்தாய் என்று மனம் களிப்ப –
(காணுதற்கு அரிய நீ இன்று இராமனாக அவதரித்து) வந்தாய் என்று
மனமகிழ்ச்சியுறுதலால்; வெருவாதிருந்தோம் – (பகைவர் செய்யும்
இடர்களுக்குச் சிறிதும்) அஞ்சாதிருந்தோம்; நீ இடையே துன்பம்
விளைக்க மெலிகின்றோம் – (அச்சந்தீர்த்தருளவல்ல) நீயே
(எம்மகிழ்ச்சியின்) இடையே துன்பத்தை உண்டாக்கினமையால்
மெலிவுற்று வருந்துவேம் ஆயினேம்; கரு ஆய் அளிக்கும்
களைகண்ணே! – மூலமாய் நின்று எம்மைப் பாதுகாத்தருளும்
பற்றாகிய பெருமானே! நீயே இதனைக் காவாயேல் –
(அருளாளனாகிய) நீயே இத்துன்பத்தைக் களையா தொழிவாயாயின்;
நின்மாயை எம்மால் தீர்க்கத் தீருமோ? – நினது மாயச் செயல்
(உணர்வற்ற) எங்களால் தீர்க்கத் தீர்ந்தொழியும் எளிமையுடையதோ?
“வந்தாய் போலே வாராதாய், வாராதாய் போல் வருவானே” என்ற
திருவாய் மொழித்தொடர் (6-10-9) இங்கு ஒப்புக் காணத்தக்கது.
—————
8668. ‘அம்பரீடற்கு அருளியது, அயனார் மகனுக்கு அளித்ததுவும்,
எம்பிரானே! எமக்கு இன்று பயந்தாய் என்றே ஏமுறுவேம்;
வெம்பு துயரம் நீ உழக்க, வெளி காணாது மெலிகின்றேம்;
தம்பி துணைவா! நீ இதனைத் தவிர்த்து, எம்
உணர்வைத் தாராயோ?’–228-
எம்பிரானே!-எம்முடைய இறைவனே! அம்பரீடற்கு அருளியதும்
– அம்பரீடன் என்பானுக்கு அருள் புரிந்ததும்; அயனார்மகனுக்கு
அளித்ததுவும் – பிரம தேவருயை மகனான உருத்திர மூர்த்திக்கு
அருள் வழங்கியதும், (ஆகிய நின் அருளை); எமக்கு இன்று
பயந்தாய் என்றே ஏமுறுவேம் – எங்களுக்கும் இப்பொழுது
கொடுத்தாய் என்று (நினது) பாதுகாப்பினை நாடி அடைதற்கு உள்ள
யாங்கள்; வெம்புதுயரம் நீ உழக்க – மனம் வெதும்புதற்குக்
காரணமான துன்பத்தை நீ அடைந்தமையால்; வெளிகாணாது
மெலிகின்றேம் – (துன்பஇருளைவிட்டுச் செல்லும்) வழிகாணாது
தளர்ந்து வருந்துகின்றோம்;தம்பிதுணைவா! – தம்பிக்கு துணைவனே!
நீ இதனைத் தவிர்த்து, எம் உணர்வைத் தாராயோ – நீ
(மேற்கொண்டுள்ள) இத்துயரத்தை நீக்கி (உணர்விழந்த) எங்களுக்கு
நல்லுணர்வினைத் தந்தருள மாட்டாயா?
————
இராவணனிடம் தூதர், ‘உன்பகை முடிந்தது’ என அறிவித்தல்
8669. என்ப பலவும் எடுத்து இயம்பி, இமையாதோரும்
இடர்உழந்தார்;
அன்பு மிகுதியால், ஐயன் ஆவி உள்ளே அடங்கினான்,
துன்ப மனிதர் கருமமே புரிய முன்பு துணிந்தமையால்;
புன்கண் நிருதர் பெருந் தூதர் போனார், அரக்கனிடம்
புகுந்தார்.–229-
என்ப பலவும் எடுத்து இயம்பி – என மேற்குறித்த பலவற்றையும்
எடுத்துக்கூறி; இமையாதோரும் இடர் உழந்தார் –
கண்ணிமையாதவராகிய தேவர்களும் துன்புற்று வருந்தினார்கள்;
ஐயன், துன்பமனிதர் கருமமேபுரிய – இறைவனாகிய இராமன்
துன்பத்தில் உழலும் மனிதர்களுக்குரிய செயல் முறையினையே
புரிவதாக; முன்பு துணிந்தமையால் – தான் முன்பு துணிந்து
மேற்கொண்ட அவதாரச் செய்கை காரணமாக;அன்பு மிகுதியால்
ஆவி உள்ளே அடங்கினான் – (இலக்குவன் பால் வைத்த) அன்பு
மிகுதியால் (அவனைப் பிரிய முடியாமல்) உயிர் உள்ளே
ஒடுங்கப்பெற்றான்; புன்கண் நிருதர் பெருந்தூதர் – (அதுகண்டு)
துன்பஞ்செய்தலையே இயல்பாக உடைய அரக்கருடைய பெரிய
தூதர்கள்;போனார், அரக்கனிடம் புகுந்தார் – போர்க்களத்தைவிட்டு
நீங்கிச் சென்றவர்கள் அரக்கனாகிய இராவணன் (இருக்கும்) இடத்தை
அடைந்தார்கள்.
மானுடவேடந்தாங்கி மண்ணுலகில் அவதரித்து வந்தமையின்
மனிதருக்குரிய ஆசாபாசங்கள் அவனுக்கும் உள்ளதுபோல் காட்ட
வேண்டி இராமபிரான் ஆவி உள்ளே அடங்கப்பெற்றான். இறைவனின்
இவ்வெளிவந்த தன்மையை,
‘துயரில் சுடரொளி தன்னுடைச்
சோதி நின்றவண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிசர் பிறவியில்
தோன்றிக் கண்காண வந்து
துயரங்கள் செய்துதன் தெய்வ
நிலையுலகில் புகவுய்க்கு மம்மான்
துயரமில் சீர்க்கண்ணன் மாயன்
புகழ்துற்ற யானோன் துன்பமிலலே!’–(திருவாய்மொழி – 3-10-6)
———-
8670. ‘என் வந்தது, நீர்?’ என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப,
‘எறிசெருவில்,
நின் மைந்தன்தன் நெடுஞ் சரத்தால், துணைவர்
எல்லாம் நிலம் சேர,
பின்வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கி,
பெருந்துயரால்,
முன்வந்தவனும் முடிந்தான்; உன் பகை போய்
முடிந்தது’என மொழிந்தார்.–230-
அரக்கர்க்கு இறைவன் ‘என்வந்தது நீர்?’என்று இயம்ப-அரக்கர்
வேந்தனாகிய இராவணன் (வந்த தூதர்களை நோக்கி) ‘நீர் வந்தது
என்ன காரணம் பற்றி?” என வினவ; நின் மைந்தன் நெடுஞ்சரத்தால்
– (அது கேட்ட தூதர்) ‘நின்னுடைய மகன் ஏவிய நெடிய
பிரம்மாத்திரத்தால்; துணைவரெல்லாம் நிலம் சேர – தன்னுடைய
தோழர்கள் எல்லோரும் நிலத்தில் மடிந்து வீழ; பின் வந்தவனும் முன்
மடிந்த பிழையை நோக்கி – தன்பின்னே வந்த தம்பி இலக்குவனும்
தனக்கு முன்னே இறக்க நேர்ந்தமைக்குக் காரணமாயமைந்த தனது
(காலத்தாழ்வாகிய) பிழையை எண்ணி; பெருந்துயரால் முன்
வந்தவனும் முடிந்தான் – பெருந்துயரால் மூத்தோனாகிய இராமனும்
இறந்து போனான்; ‘உன்பகைபோய் முடிந்தது’ என மொழிந்தார்-
(அதுவே) ‘உனது தீராப் பகையும் அறவே தொலைந்தது’ எனக்
கூறினார்கள்.
———–
மிகைப் பாடல்கள்
பண் தரு கிளவிச் செவ்விப் பல்லியத்து ஒழுகு தீம் தேன்,
கண்டினின் குயின்ற வீணை நரம்பொடு கமழும் தேறல்,
வண்டினின் பொலியும் நல் யாழ் வழியுறு நறவம், வானத்து
அண்டர்தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய அன்றே. 7-1
இமைப்பதன் முன்னம் வந்த இராக்கத வெள்ளம் தன்னைக்
குமைத் தொழில் புரிந்த வீரர் தனுத் தொழில் குறித்து இன்று எம்மால்
அமைப்பது என்? பிறிது ஒன்று உண்டோ ? மேரு என்று அமைந்த வில்லான்,
உமைக்கு ஒரு பாகன், எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த. 21-1
தலைகளை நோக்கும்; தான் தன் சரங்களை நோக்கும்; தன் கைச்
சிலையினை நோக்கும்; செம் பொன் தேரினை நோக்கும்; செய்த
கொலைகளை நோக்கும்; கொன்ற கொற்றவர் தம்மை நோக்கும்;
அலை பொரும் குருதி என்னும் அளக்கரை அமைய நோக்கும். 25-1
ஆர்த்த வானரர் வாய் எலாம் கை எலாம் அசைய,
பார்த்த கண் எலாம் அங்கதன் உடல் எலாம் பாரில்
சீர்த்த வீரியன் இளையவன் இராமன்மேல் செறிய,
தூர்த்த வாளியன் சிலையொடும் விசும்பினைத் தொடர்ந்தான். 77-1
இன்னது இவ் வழி நிற்க, மற்று இருஞ் சமர்க்கு உடைந்தே,
துன்னு வான் வழி இலங்கையில் போகின்ற தோன்றல்,
பொன்னின் வார் சிலைக் கரத்தொடும் பொருகெனப் புகுந்து,
தன்னை ஈன்றிடும் ஒரு தனித் தந்தையைக் கண்டான். 88-1
மாண்டனன் அகம்பன், மண்மேல்; மடிந்தன, நிருதர் சேனை;
மீண்டனர், குரக்கு வீரர்; விழுந்தன, சினக் கை வேழம்;
தூண்டின, கொடித் தேர்; அற்றுத் துணிந்தன, தொடுத்த வாசி;-
ஆண் தகை இளைய வீரன் அடு சிலை பொழியும் அம்பால். 137-1
அருந் திறல் அகம்பன் ஆதி அரக்கரோடு, அளவு இல் ஆற்றல்
பொரும் திறல் களிறு, காலாள், புரவி, தேர், அளப்பு இல் கோடி,
இரிந்திடக் கொன்று, தான் அங்கு ஒரு திசை, யாரும் இன்றிப்
பொருந்திய இருளின் பொம்மல் பொலிய, மாருதியும் நின்றான். 140-1
மான வேல் அரக்கர் விட்ட படைக்கலம், வான மாரி ஆன
வன் பகழி சிந்த, திசைதொறும் பொறியோடு அற்று
மீன் இனம் விசும்பின் நின்றும் இருள் உக விழுவ போல,
கானகம் தொடர்ந்த தீயின் சுடுவன பலவும் கண்டான். 143-1
‘தோடு அவிழ் அலங்கல் என் சேய்க்கு உணர்த்துமின்’ என்னச் சொன்னான்;
ஓடினார் சாரர்; வல்லை உணர்த்தினர்; துணுக்கம் எய்தா,
ஆடவர் திலகன், ‘யாண்டையான் இகல் அனுமன்? ஏனோர்,
வீடணன், யாங்கண் உள்ளார்? உணர்த்துமின், விரைவின்’ என்றான் 157-1
தந்தை இறந்தும், தாயர் பிரிந்தும், தலம் விட்டும், பின் தனி
மேவும் மாது பிரிந்தும், பிரிவு இல்லா எம் துணை நீ என்று
இன்பம் அடைந்தேன்; இது காணேன்; வந்தனென், எம்பி!
வந்தனென், எந்தாய்! இனி வாழேன்! 202-1
—————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply