தூதுவர் நகருக்கு ஏகி இராவணனுக்கு அறிவித்தல்
8402.
‘இன்று ஊதியம் உண்டு’ என இன்னகைபால்
சென்று ஊதின தும்பிகள்; தென் திசையான்
வன் தூதரும் ஏகினர், வஞ்சனையான-
தன் தூதரும் ஏகினர், தம் நகர்வாய்.–1-
இன்னகைபால் – இனிய சிரிப்பினை உடையவளான
சீதையினிடத்து; இன்று ஊதியம் உண்டு என – இன்று கிடைப்பதொரு
நற் பேறு உண்டு என (நன்னிமித்தமாக) சென்று ஊதின தும்பிகள் –
வண்டுகள் சென்று இசைத்தனவாயின; தென்திசையான் வன்தூதரும் –
தென்திசைக் காவலனான யமனின் வலிய தூதர்களும்; ஏகினர் –
(போரில் இறந்தவர்களின் உயி்ர்களைக் கொண்டு) தம் நகருக்குச்
சென்றனர்; வஞ்சனையான் தன் தூதரும் – வஞ்சகனான
இராவணனின் தூதர்களும்; தம்நகர்வாய் ஏகினர் – தமது நகரமாகிய
இலங்கையினிடத்துச் சென்றனர். (படைத்தலைவர் அழிந்த
செய்தியினைக் கொண்டு சென்றனர்).
—————
8403. ஏகி, தனி மன்னன் இருந்துழி புக்கு,
‘ஓகைப் பொருள் இன்று’, என, உள் அழியா,
வேகத்து அடல் வீரர் விளிந்த எலாம்
சோகத்தொடு, இறைஞ்சினர், சொல்லினரால்.–2-
ஏகி – (தூதர்கள், தம்நகருக்குச்) சென்று; தனி மன்னன்
இருந்துழிப்புக்கு இறைஞ்சினர் – ஒப்பற்ற மன்னவனாகிய இராவணன்
இருந்த இடத்திற்குச்சென்று (அவனை) வணங்கி; ‘ஓகைப் பொருள் இன்று’ என – மகிழ்ச்சிக்குரிய செய்தி
சொல்வதற்கில்லையே என்று; உள் அழியா – மனம் வருந்தினவராய்
(அத்தூதர்); வேகத்து அடல்வீரர் – போர்ச் செயலில் வல்லமையும்
அஞ்சாமையும் உடைய படைத்தலைவரும் அவர்தம் படைஞரும்;
விளிந்த எலாம் – இறந்த செய்தியை எல்லாம்; சோகத்தொடு
சொல்லினர் – வருத்தத்துடன் கூறினார்கள்.
————
8404. சொன்னார்; அவர் சொல் செவியில் தொடர்வோன்,
இன்னாத மனத்தின் இலங்கையர்கோன்,
வெந் நாக உயிர்ப்பினன், விம்மினனால்;
அன்னான் நிலை கண்டு, அயல் நின்று அறைவான்:
சொன்னார் – தூதர்கள் படைத்தலைவர் வதையுண்டமையைக்
கூறினார்கள்; அவர் சொல் செவியில் தொடர்வோன் –
அவ்வுரையினைச் செவியினிடத்துக் கேட்டவனாகிய; இன்னாத
இலங்கையர்கோன் – துன்புற்ற மனத்தினையுடைய
இலங்கையர்களுக்குத் தலைவனாகிய இராவணன்; வெந்நாக
உயிர்ப்பினன் – கொடிய நாகம் போற் (சீற்றத்துடனாகிய) பெருமூச்சை
விடுபவனாய்; விம்மினன் – பொருமினான்; அன்னான் நிலை கண்டு –
(அப்படிப்பட்ட) அவனுடைய நிலையைக்கண்டு; அயல் நின்று
அறைவான் – (மகரக்கண்ணன்) அவ்விராவணன் அருகில் நின்று
கூறுவானாயினன்.
———–
மகரக்கண்ணன் போர்க்குத் தன்னை அனுப்ப வேண்டுதல்
8405. ‘முந்தே, என தாதையை மொய் அமர்வாய்,
அந்தோ! உயிர் உண்டவன் ஆர் உயிர்மேல்
உந்தாய்; எனை யாதும் உணர்ந்திலையோ?
எந்தாய்! ஒரு நீ இடர் கூருதியோ?
எந்தாய் – எந்தையே! மொய் அமர்வாய் – நெருங்கிய போரில்;
என தாதையை – என்னுடைய தந்தையை; ஆர் உயிர் உண்டவன்
உயிர்மேல் – ஆருயிர் கொண்டவனாகிய இராமனின் உயிர்கொள;
முந்தே – (இதுவரை போரில் அழிந்தவர்களுக்கு) முன்னமே;
உந்தாய் – என்னை ஏவாமல் விடுத்தாய்; அந்தோ – ஐயோ!
எனையாதும் உணர்ந்திலையோ? – என்னுடைய வலிமைத்
தன்மையினை எவ்விதத்தும் உணரவில்லை போலும்? ஒரு நீ இடர்
கூருதியோ? – (அங்ஙனம் அறிந்து ஏவாமையின்) ஒப்பற்ற நீ துயர்
மிக்கிருக்கக் கடவையோ?
———–
8406. ‘யானே செல எண்ணுவென்; எய்த அவன்
தான் நேர்வது தீது எனவே தணிவேன்;
வானே, நிலனே, முதல் மற்றும் எலாம்,
கோனே! எனை வெல்வது ஓர் கொள்கையதோ?–5-
அவன் எய்த – அவ்விராமன் இவ்விடம் வர; யானே செல
எண்ணுவன் – (அவன் வருகையை அறிந்து) யானே (என் வஞ்சினம்
முடிக்க) அவன் மேல் போர்க்குச் செல்ல எண்ணுவன் (எனினும்);
தான் நேர்வது தீது எனவே – (தலைவனிருக்க) தானே ஒரு
முடிவெடுப்பது தீமையெனவே; தணிவேன் – அடங்கியிருக்கின்றேன்;
(அங்ஙனமன்றி) கோனே – தலைவனே! வானே, நிலனே முதல்
மற்றும் எலாம் – வானும் நிலமும் முதலாக எல்லா இடங்களிலுமுள்ள
எல்லாப் பொருள்களும்; எனை வெல்லது ஓர் கொள்கையதோ?
– எனை வெல்லும் படியான தன்மை யுடையதோ?
————
8407. ‘அருந் துயர்க் கடலுளாள் என் அம்மனை, அழுத
கண்ணள்,
பெருந் திருக் கழித்தல் ஆற்றாள்,”கணவனைக் கொன்று
பேர்ந்தோன்
கருந் தலைக் கலத்தின் அல்லால், கடனது கழியேன்”
என்றாள்;
பருந்தினுக்கு இனிய வேலாய்! இன் அருள் பணித்தி”
என்றான்.–6-
என் அம்மனை – என்னுடைய தாய்; அழுத கண்ணாள் –
அழுகின்ற கண்களை உடையவளாய்; அருந்துயர்க் கடலுளாள் –
(கடத்தற்கு) அரிய துயர்க்கடலுள் ஆழ்ந்திருக்கின்றாள்; பெருந்திருக்
கழித்தல் ஆற்றாள் – பெருமை பெற்ற மங்கல நாணை (இன்னும்)
கழித்திடப் பொறுக்க முடியாதவள்; கணவனைக் கொன்று போந்தோன்
– தன்னுடைய கணவனைக் கொன்றவனின் (இராமனின்); கருந்தலைக்
கலத்தின் அல்லால் – கரிய தலை ஓடாகிய பாத்திரத்தாலல்லாது;
கடனது கழியேன் என்றாள் – (தன்) (கணவனுக்குச் செய்ய வேண்டிய)
கடனைச் செய்ய மாட்டேன் எனக் கூறிவிட்டாள்; பருந்தினுக்கு இனிய
வேலாய் – (உணவளிப்பதால்) பருந்துகளுக்கு இனிமையைச் செய்கின்ற
வேற்படையை உடையவனே! இன்னருள் – (தாயின் வஞ்சித்தை
உடைய நோன்பினை முடித்துக் கொடுக்கும் கடமையை உடைய
மகனுக்கு உதவ வேண்டும் என்ற) இனிய அருளால்; பணித்தி
என்றான் – (இன்று) போர் மேற்செல்லுதற்கு எனக்குக் கட்டளை இடுக
என வேண்டிக்கொண்டான்.
———
மகரக் கண்ணன் போர்க்களம் போதல்
8408. அவ் உரை மகரக்கண்ணன் அறைதலும், அரக்கன், ‘ஐய!
செவ்விது; சேறி! சென்று, உன் பழம் பகை தீ்ர்த்தி!’
என்றான்.
வெவ் வழியவனும், பெற்ற விடையினன், தேர்
மேற்கொண்டான்,
வவ்விய வில்லன் போனான், வரம் பெற்று வளர்ந்த
தோளான்.–7-
அவ்வுரை மகரக்கண்ணன் அறைதலும் – அவ்வுரையை
மகரக்கண்ணன் உரைத்தவுடன்; அரக்கன் – இராவணன்; ஐய! –
(அவனை நோக்கி) ஐயனே! செவ்விது – (நீ கூறிய உரை)
முறைமையுடையது; சேறி! – (நீ) செல்வாயாக; சென்று உன் பழம்
பகை தீர்த்தி என்றான் – சென்று உனது பழைய பகையைத் தீர்த்துக்
கொள்வாயாக என்று சொன்னான்; பெற்ற விடையினன் – (இங்ஙனம்)
இராவணனிடமிருந்து விடை பெற்றவனாய்; வரம் பெற்று வளர்ந்த
தோளான் – (தேவர் முதலானவர்களிடமிருந்து) பெற்ற வரங்களினால்
பொலிந்த தோள்களை உடையவனும்; வெவ்வழியவனும் – கொடிய
போர் நெறிகளை உடையவனும் (ஆகிய அம்மகரக்கண்ணன்);
தேர்மேற் கொண்டான் போனான் – தேர்மேல் ஏறிக்கொண்டு
(போர்க்களம் நோக்கிப்) போனான்.
———-
8409. தன்னுடைச் சேனை வெள்ளம் ஐந்து உடன் தழுவ, தானை
மன்னுடையச் சேனை வெள்ளம் ஓர்-ஐந்து மழையின்
பொங்கிப்
பின்னுடைத்தாக, பேரி கடல் பட, பெயர்ந்த தூளி
பொன்னுடைச் சிமயத்து உச்சிக்கு உச்சியும் புதைய,
போனான்.–8-
தன்னுடைச்சேனை – தன்னதாகிய சேனை வரிசை; வெள்ளம் ஐந்து
உடன் தழுவ – ஐந்து வெள்ளம் உடன் தழுவி வரவும்; தானை
மன்னுடைச் சேனை – தானை கொண்ட மன்னவனுடைய சேனை;
வெள்ளம் ஓர் ஐந்து – ஐந்து வெள்ளம் சேனைகளும்; மழையின்
பொங்கிப் பின்னுடைத்தாக – மேகத்தைப் போல ஆரவாரித்துக்
கொண்டு தன் பின்னே வரவும்; பேரி கடல் படப் – பேரிகை கடல்
போல் ஒலிக்கவும்; பெயர்ந்த தூளி – (சேனைகள் செல்லுதலால்)
எழுந்த புழுதியால்; பொன்னுடைச் சிமயத்து உச்சிக்கு உச்சியும் –
பொன் மயமான மேருமலையின் உச்சியிலுள்ள சிகரமும்; புதைய,
போனான் – மறையும் படியாக (அம்மகரக்கண்ணன்) சென்றான்.
————-
8410. ‘சோணிதக்கண்ணனோடு, சிங்கனும், துரகத் திண் தேர்த்
தாள்முதல் காவல் பூண்டு செல்க’ என, ‘தக்கது’ என்னா,
ஆள் முதல் தானையோடும், அனைவரும் தொடரப்
போனான்,
நாள் முதல் திங்கள்தன்னைத் தழுவிய அனைய நண்பான்.–9-
சோணிதக்கண்ணனோடு சிங்கனும் – சோணிதக் கண்ணன்
என்பவனோடு சிங்கன் என்பவனும்; துரகத் திண் தேர்த்தாள் முதல்
காவல் பூண்டு செல்க என – ‘குதிரை பூட்டப்பெற்ற திண்ணிய தேர்ச்
சக்கரத்திடத்துக் காவல் பூண்டு செல்வார்களாக’ என்று (இராவணன்)
கூற; ‘தக்கது’ என்னா – (இராவணனுடைய இவ்வாணை) தகுதி
உடையது என்று; ஆள் முதல் தானையோடும் – காலாட் படை
முதலிய சேனைகளோடு; அனைவரும் தொடர – (வீரர்) யாவரும்
தொடர்ந்து வர; நாள் முதல் திங்கள் தன்னைத் தழுவிய அனைய –
விண்மீன்களும் கோள்களும் ஆகியவை சந்திரனைச் சேர்ந்தாற்
போல; நண்பான் போனான் – நண்பர்களை உடைய மகரக்கண்ணன்
புறப்பட்டுப் போனான்.
————–
8411. பல்பெரும் பதாகைப் பத்தி மீமிசைத் தொடுத்த பந்தர்
எல்லவன், சுடர் ஒண் கற்றை முற்ற இன் நிழலை ஈய,
தொல் சின யானை அம் கை விலாழி நீ்ர்த் துவலை தூற்ற,
செல் பெருங் கவியின் சேனை அமர்த் தொழில் சிரமம்
தீர்ந்த,–10-
பல்பெரும் பதாகைப் பத்தி – (அரக்கர் சேனைகள் பிடித்த) பல
பெரிய கொடிகளின் வரிசைகளால்; மீமிசைத் தொடுத்த பந்தர் –
மேலே தொடுக்கப்பட்ட பந்தலானது; எல்லவன் சுடர் ஒண்
கற்றைமுற்ற – சூரியனது ஒளி பொருந்திய தொகுதியாகிய
ஒளிக்கற்றைகளின் வெப்பம் முடிவுறும்படி; இன் நிழலை ஈய – இனிய
நிழலைத் தரவும்; தொல்சின யானை அம்கை – பழையதாகிய
கோபத்தையுடைய யானையினது அழகிய துதிக்கையினின்றும் உண்டாகிய; விலாழிநீ்ர்த் துவலை தூற்ற –
உமிழ் நீர்த் துவலை எங்கும் சூழவும்; செல்பெருங் கவியின் சேனை –
(அரக்கர் சேனையை) எதிர்த்துச் செல்லுகின்ற பெரிய குரங்குச்
சேனை; அமர்த்தொழில் சிரமம் தீர்ந்த – போர்த் தொழிலால்
உண்டாகிய வருத்தம் நீங்கப் பெற்றன.
———–
8412. ‘முழங்கின யானை; வாசி ஒலித்தன; முரசின் பண்ணை,
தழங்கின; வயவர் ஆர்த்தார்’ என்பதோர் முறைமை தள்ள,
வழங்கின, பதலை ஓதை, அண்டத்தின் வரம்பின்காறும்;
புழுங்கின உயிர்கள் யாவும், கால் புகப் புரை இன்றாக.–11-
‘முழங்கின யானை’ – யானைகள் முழங்கின; வாசி ஒலித்தன் –
குதிரைகள் ஒலித்தன; முரசின் பண்ணை தழங்கின – முரசின்
தொகுதிகள் ஒலித்தன; வயவர் ஆர்த்தார் – வீரர்கள் ஆர்த்தார்கள்;
என்பதோர் முறைமை தள்ள – என்று கூறப்படும் ஒலி முறைமை
நீங்க; பதலை ஓதை – பதலை என்னும் கருவியால் எழுந்த ஓசை;
அண்டத்தின் வரம்பின்காறும் வழங்கின – அண்டம் முழுமையும்
(எல்லை வரையிலும்) வழங்கின; கால்புகப் புரை இன்றாக –
(அதனால்) காற்றுப் புகவும் (இயங்கவும்) இடமின்றிப் போகவே;
உயிர்கள் யாவும் புழுங்கின – எல்லா உயிர்களும் வேர்த்தன.
————–
அரக்கர்க்கும் வானரர்க்கும் போர் நிகழ்தல்
8413.
வெய்தினின் உற்ற தானை முறை விடா நூழில்
வெம் போர்
சய்தன; செருக்கிச் சென்று நெருக்கினர், தலைவர் சேர்த்தி;
கையொடு கைகள் உற்றுக் கலந்தன; கல்லும் வில்லும்
எய்தன எறிந்த; யானை ஈர்த்தன, கோத்த சோரி. –12-
வெய்தினின் உற்ற தானை – விரைவாகச் சென்று பொருத்திய
சேனைகள்; முறைவிடா நூழில் வெம்போர் – போர் முறையை விடாது
கொன்று குவித்தலாகிய கொடிய போரைச் செய்தன; செருக்கிச் சென்று
நெருக்கினர் தலைவர் – (இருதிறத்துத்) தலைவரும் செருக்கோடு
சென்று ஒருவரோடு ஒருவர் தாக்கினர்; சேர்த்த கையொடு கைகள்
உற்றுக் கலந்தன- அணி வகுக்கப் பெற்ற பக்கப் படையோடு பக்கப்
படைகள் பொருந்திப் போரிட்டன; கல்லும் வில்லும் எய்தன எறிந்த –
இருதிற வீரர்களுடைய கைகளில் பொருந்திய கற்களும் வில்லும்
முறையே எறியப்பட்டனவும் எய்யப்பட்டனவும் ஆயின; யானை
ஈர்த்தன கோத்த சோரி – (அவ்விடத்துப்) பெருகிய இரத்தம்
யானைகளை இழுத்துச் சென்றன.
————-
8414. வானர வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி,
மீனொடு மேகம் சிந்த விசைத்தனர் மீட்டும் வீச,
கானகம் இடியுண்டென்னக் கவிக்குலம் மடியும்-கவ்வி,
போனகம் நுகரும் பேய்கள் வாய்ப் புறம் புடைப்போடு
ஆர்ப்ப.–13-
வானர வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி – வாரை
வீரர்கள் எடுத்து வீசிய மலைகளை அரக்கர்கள் பிடித்து; மீனொடு
மேகம் சிந்த விசைத்தனர் மீட்டும் வீச – நாள் மீனொடு மேகமும்
கெடும் படியாக மீளவும் (வானரர் மேல்) விரைவாய் எறிய; கானகம்
இடியுண்டென்னக் கவிக்குலம் மடியும் – (அம்மலைகள்
படுதலால்) இடி விழுந்த காட்டைப்போல வானரக் கூட்டங்கள்
இறக்கும்; கவ்வி, போனகம் நுகரும் பேய்கள் – (அங்ஙனம்
இறக்கின்ற வானரங்களைக்) கவ்வி உணவாக உண்ணுகின்ற பேய்கள்;
வாய்ப்புறம் புடைப்போடு ஆர்ப்ப – வாய்ப்புறம் புடைத்திருத்தலை
உடையனவாய் ஆரவாரிப்பன.
————–
8415. மைந் நிற அரக்கர் வன் கை வயிர வாள் வலியின் வாங்கி,
மெய்ந் நிறத்து எறிந்து கொல்வர், வானர வீரர்; வீரர்
கைந் நிறைத்து எடுத்த கல்லும் மரனும் தம் கரத்தின்
வாங்கி,
மொய்ந் நிறத்து எறிவர்; எற்றி முருக்குவர், அரக்கர்
முன்பர்.–14-
வானர வீரர் – வானர வீரர்கள்; மைந்நிற அரக்கர் வன்கை
வயிரவாள் வலியின் வாங்கி- கரிய நிறத்தையுடைய அரக்கர்கள் தம்
வலிய கையிலே பிடித்த உறுதியான வாளினை தமது வலிமையினால்
பிடுங்கி; மெய்ந் நிறத்து எறிந்து கொல்வர் – (அவ்வரக்கர்களுடைய)
உடலின் மார்புப் பகுதியில் எறிந்து கொல்லுவார்கள்; அரக்கர் முன்பர்
– அரக்கரில் வலிமையுடையவர்கள்; வீரர் கைந்நிறைத்து எடுத்த
கல்லும் மரனும் தம் கரத்தின் வாங்கி – வானர வீரர்கள் கைகளில்
நிறைய எடுத்த மலையையும் மரத்தையும் தம் கைகளினாலே பிடுங்கி;
மொய்ந்நிறத்து எறிவர் எற்றி முருக்குவர் – (அவ்வானர
வீரர்களுடைய) வலிய மார்பிலே எறிவாராய் அடித்துக் கொல்வர்.
———-
மகரக்கண்ணன் வஞ்சினம்
8416. வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகரக்கண், மழை
எறு என்ன,
திண் திறல் அரக்கன் கொற்றப் பொன் தடஞ் சில்லித்
தேரை,
தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டுக்
கொண்டல்மேல் ஓட்டிச் சென்றான்; குரங்கு இனப்
படையைக் கொன்றான்.–15-
வண்டு உலாம் அலங்கல் மார்பன் – வண்டுகள் மொய்க்கும்
படியாக மாலையை அணிந்த மார்பை உடையனும்; மகரக்கண் மழை
ஏறு என்ன திண்திறல் அரக்கன் – மகரக்கண்ணையும் இடியேற்றை
ஒத்த மிக்க வலிமையையும் உடைய அரக்கனாகிய மகரக்கண்ணன்;
குரங்கு இனப்படையைக் கொன்றான் – குரங்குக் கூட்டமாகிய
சேனையைக் கொன்றவனாய்; கொற்றப் பொன் தடஞ்சில்லித் தேரை
– (தனது) வெற்றி பொருந்திய அழகிய பெரிய சக்கரத்தையுடைய தேரை;
தண்டலை மருத வைப்பின் கங்கை நீ்ர் தழுவும் நாட்டு – சோலை
சூழ்ந்த மருத நிலத்தைக் கொண்ட கங்கை நீரால் சூழப் பெற்ற
(கோசல) நாட்டை உடைய;கொண்டல்மேல் ஓட்டிச் சென்றான் – மேகம் போன்ற நிற்த்தை
உடையவனான இராமன்மேல் (போர் வேண்டி) ஓட்டிச் சென்றான்;
—————
8417. ‘இந்திரன் பகைஞனே கொல்?’ என்பது ஓர் அச்சம் எய்தி
தந்திரம் இரிந்து சிந்த, படைப் பெருந் தலைவர், தாக்கி
எந்திரம் எறிந்த என்ன, ஏவுண்டு புரண்டார்; எய்தி;
சுந்தரத் தோளினானை நோக்கி நின்று, இனைய சொன்னான்:–16-
இந்திரன் பகைஞனே கொல் என்பதோர் அச்சம் எய்தி –
(அவ்வாறு மகரக்கண்ணன் வருதலைக் கண்ட வானர சேனை)
முன்னர் வந்த இந்திரனுக்குப் பகைவனான இந்திரசித்தோ என்பதாகிய
ஒரு பயத்தை அடைந்து; தந்திரம் இரிந்து சிந்த – படைநிலை
கெட்டுச் சிதறி ஓடவும்; படைப் பெருந் தலைவர் தாக்கி எந்திரம்
எறிந்த என்ன, ஏவுண்டு புரண்டார் – வானர சேனைப்
பெருந்தலைவர்கள் அவனோடு பொருது, எந்திரம் எறிந்தாற் போல
(அவனால் விடப்பட்ட) அம்பினால் தாக்குண்டு புரண்டாராகவும்;
எய்தி – (இங்ஙனமாகப் படை நிலை கெடவும் தலைவர் புரளவும்
போர் புரிந்த வண்ணம்) இராமனைச் சென்றடைந்து; சுந்தரத்
தோளினானை நோக்கி நின்று- அழகு பொருந்திய தோளினையுடைய
அவ்விராமனை நோக்கி நின்று; இனைய சொன்னான் – இவ்வாறான
(கீழ்வருமாறு) சொற்களைச் சொல்பவனானான்.
—————
8418. ‘”என்னுடைத் தாதை தன்னை இன் உயிர்
உணடாய்” என்னும்
முன் உடைத்தாய தீய முழுப் பகை மூவர்க்கு அன்றி,
நின்னுடைத்து ஆயது அன்றே; இன்று அது நிமிர்வென்’
என்றான்-
பொன்னுடைத் தாதை வண்டு குடைந்து உணும்
பொலம் பொன் தாரான்.–17-
பொன்னுடைத் தாதை – பொன்போன்ற நிறத்தை உடைய
மகரந்தத்தை; வண்டு குடைந்து உணும் பொலம் பொன்தாரான் – வண்டுகள் குடைந்து உண்ணும்படியான மிக்க அழகிய மாலையை
உடைய மகரக்கண்ணன்; “என்னுடைத் தாதை தன்னை இன்னுயிர்
உண்டாய்” – (இராமனை நோக்கி) “என்னுடைய தந்தையினது இனிய
உயிரை நீ போக்கினாய்” என்னும் முன் உடைத்தாய தீய முழுப்பகை
– “என்று (எனக்கு) முன்னமே உண்டாகிய கொடிய பெரும்
பகையானது; மூவர்க்கு இன்றி, நின்னுடைத்து ஆயது அன்றே –
மும்மூர்த்திகளிடம் இல்லாமல் உன்னிடத்து உள்ளது அல்லவா? இன்று
அது நிமிர்வென் என்றான் – இன்று அந்தப் பகையை நீக்கித்
தலையெடுப்பேன்” என்று சொன்னான்.
———–
8419. தீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரியக் கேட்டான்,-
‘நீ கரன் புதல்வன்கொல்லோ? நெடும் பகை நிமிர வந்தாய்;
ஆயது கடனே அன்றோ, ஆண் பிறந்து அமைந்தார்க்கு?
ஐய!
ஏயது சொன்னாய்’ என்றான்,-இசையினுக்கு இசைந்த
தோளான்.–18-
இசையினுக்கு இசைந்த தோளன், சேவகன் – புகழுக்குப்
பொருந்திய தோள் வலி உள்ளவனும் வீரனுமாகிய இராமன்; தீயவன்
பகர்ந்த மாற்றம் தெரியக் கேட்டான் – கொடியவனாகிய
மகரக்கண்ணன் சொன்ன சொற்களை விளங்கக் கேட்டு; “நீ கரன்
புதல்வன் கொல்லோ – நீ கரனுடைய மகனா? “நெடும் பகை நிமிர
வந்தாய் – (நின்னுடைய) பழைய பகையைத் தீர்த்துக் கொள்ள
வந்திருக்கின்றாய்; “ஆண் பிறந்து அமைந்தார்க்கு ஆயது கடனே
அன்றோ – (ஒரு குடியில் ஆண்மகனாகப் பிறந்து வளர்ந்தவர்க்குத்
தந்தை மேல வந்த பழியைத் தீர்ப்பது கடமையல்லவா; “ஐய! ஏயது
சொன்னாய்” என்றான் – ஐயனே! நீ தகுதியானதையே சொன்னாய்”
என்று கூறினான்.
—————-
மகரக்கண்ணன் – இராமன் போர்
8420. உரும் இடித்தென்ன வில் நாண் ஒலி படுத்து,
‘உன்னோ எந்தை
செரு முடித்து, என்கண் நின்ற சினம் முடித்து
அமைவென்’ என்னா,
கரு முடித்து அமைந்த மேகம், கால் பிடித்து எழுந்த
காலம்,
பெரு முடிக் கிரியில் பெய்யும் தாரைபோல் பகழி
பெய்தான்.–19-
உரும் இடித்தென்ன வில்நாண் ஒலிபடுத்து – இடி இடித்தாற்
போல வில்லினது நாண் ஒலியைத் தோற்றுவித்து; ‘உன்னோடு
எந்தை செரு முடித்து’ – ‘உன்னோடு என் தந்தை காரணமாக
ஏற்பட்ட போரை முடித்து; ‘என் கண் நின்ற சினம் முடித்து
அமைவென்’ என்னா – ‘எனது கோபத்தையும் தீர்த்துக்
கொள்வேன்’ என்று சொல்லி (மகரக்கண்ணன்); கருமுடித்து அமைந்த
மேகம் – சூல் முதிரப் பெற்ற மேகம்; கால் பிடித்து எழுந்த காலம் –
(வானத்தின மீது) மழைக்கால் பற்றி எழுந்த காலத்து; பெருமுடிக்
கிரியில் பெய்யும் தாரை போல்,பகழி பெய்தான் – பெரிய
முகடுகளையுடைய மலையிற் பொழியும் தாரைபோல் அம்புகளைச்
சொரிந்தான்.
————-
8421. சொரிந்தன பகழி எல்லாம் சுடர்க் கடுங் கணைகள் தூவி,
அரிந்தனன் அகற்றி, மற்றை ஆண்தகை அலங்கல்
ஆகத்து,
தெரிந்து ஒரு பகழி பாய எய்தனன், இராமன்; ஏவ
நெரிந்து எழு புருவத்தான்தன் நிறத்து உற்று நின்றது
அன்றே.–20-
சொரிந்தன பகழி எல்லாம் – (இராமன்) தன்மேல் மகரக்
கண்ணனால் ஏவப்பெற்ற எல்லா அம்புகளையும்; கூர்க் கடுங்கணைகள்
தூவி அரிந்தனன் அகற்றி – வெம்மையும், ஒளியும் பொருந்திய
அம்புகனை ஏவி ஒடித்துத் தள்ளி; மற்றை ஆண்தகை அலங்கல்
ஆகத்து – ஆனபின்பு ஆண்மைக் குணமுள்ள அந்த
மகரக்கண்ணனுடைய மாலையை அணிந்த மார்பிலே; தெரிந்து ஒரு
பகழி பாய எய்தனன், இராமன்- ஒரு கணை பாயும் படியாக இராமன்
ஆராய்ந்து எடுத்து ஓர் அம்பினை எய்தான்; ஏவ – (அப்படி அவன்)
செலுத்த; நெரிந்துஎழு புருவத்தான் தன் நிறத்து உற்று நின்றது
அன்றே – (அவ்வம்பானது, கோபத்தால்) வளைந்து எழுந்து
புருவத்தை உடைய மகரக்கண்ணனது மார்பிலே அழுந்தி நின்றது.
————-
8422. ஏவுண்டு துளக்கம் எய்தா, இரத்தகப் பரிதி ஈன்ற
பூவுண்ட கண்ணன், வாயின் புகை உண்டது உமிழ்வான்
போல்வான்
தேவுண்ட கீர்த்தி அண்ணல் திரு உண்ட கவசம் சேர,
தூவுண்ட வயிர வாயி ஆயிரம் தூவி ஆர்த்தான்.–21-
ஏவுண்டு துளக்கம் எய்தா – (இரமானால் எய்யப்பட்ட) அம்பு
தைத்து நடுங்கி; இரத்தகப் பரிதி ஈன்ற பூவுண்ட கண்ணன் –
செந்நிறத்தை உடைய சூரியனால் மலர்விக்கப் பெற்ற செந்தாமரைப்
பூப்போன்ற கண்களை உடைய மகரக்கண்ணன்; வாயின் புகை
உண்டது உமிழ்வான் போல்வான் – வாயில் முன்னமே உண்ட
புகையைக் கக்குபவன் போன்றவனாகி (நெருப்பை உமிழ்ந்துகொண்டு)
தேவுண்ட கீர்த்தி அண்ணல் திருஉண்ட கவசம் சேர –
தெய்வத்தன்மை பொருந்திய புகழை உடைய இராமனது அழகிய
கவசத்தில் தைக்கும் படியாக; தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி
ஆர்த்தான் – (பகைவரது) தசையில் தோய்ந்த திண்ணிய ஆயிரம்
அம்புகளைப் பொழிந்து ஆரவாரித்தான்.
———-
8423. அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார்: ஆழி
மன்னனும், முறுவல் எய்தி, வாய் அம்பு ஓர் ஆறு வாய்கி,
பொன் நெடுந் தடந் தேர் பூண்ட புரவியின் குரங்கள்
போக்கி,
வில் நடு அறுத்து, பாகன் தலையையும் நிலத்தில் வீ்ழ்த்தான்.–22-
அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார்- (மகரக்கண்ணன்)
அவ்விதம் அம்பு எய்ததைக் கண்ட தேவர்கள் (இப்படியும் எய்ய
முடியுமோ என) வியப்படைந்தனர்; ஆழி மன்னனும் முறுவல் எய்தி
-ஆணைச் சக்கரத்தை உடைய இராமனும் புன்முறுவல் பூத்து; வாய்
அம்பு ஓர் ஆறு வாங்கி – கூர்மையான ஆறு அம்புகளை எடுத்த;
பொன்நெடுந் தடந்தேர் பூண்ட புரவியின் குரங்கள் போக்கி –
(அவ்வம்புகளால்) அழகிய நெடிய பெரிய தேரில் பூட்டப்பெற்ற
குதிரைகளின் குளம்புகளைத் துண்டித்து; வில் நடு அறுத்து, பாகன்
தலையையும் நிலத்து வீழ்த்தான் – மகரக்கண்ணன் பிடித்திருந்த
வில்லை நடுவிடத்தே ஒடித்து தேர்ப்பாகனது தலையையும் பூமியில் விழும்படியாகச்
செய்தான்.
—————
மகரக் கண்ணன் தவ வலிமையால் இடியும் காற்றும் விளைத்தல்
8424. மார்பிடை நின்ற வாளிவாயிடை வெயிலின் வாரும்
சோரியன், விசும்பினூடு ஓர் இமைப்பிடைத்
தோன்றாநின்றான்,
கார் உரும்ஏறும், காற்றும், கனலியும், கடைநாள் வையம்
பேர்வுறு காலம் என்ன, பெருக்கினன், தவத்தின் பெற்றான்.–23-
மார்பிடை நின்ற வாளிவாயிடை வெயிலின் வாரும் சோரியன்-
மார்பினிடத்து (இராமனால் எய்யப்பெற்று) தைத்து நின்ற அம்பின்
வாயிடத்தினின்றும் வெயிலைப் போலச் செந்நிறமுடையதாக ஒழுகும்
இரத்தத்தை ‘உடையவனாகிய மகரக்கண்ணன்; விசும்பினூடு ஓர்
இமைப்பிடைத் தோன்றா நின்றான் – ஓர் இமைப்பொழுதிற்குள்.
ஆகாயத்தினிடத்துத் தோன்றி நின்று; தவத்தின் பெற்றான் –
தவத்தினால் சித்தி பெற்றவனாதலின்; கார் உரும் ஏறும், காற்றும்,
கனலியும் – மேகத்தில் பொருந்திய பேரிடியும், காற்றும் நெருப்பும்
என்ற இவற்றை;கடைநாள் வையம் பேர்வுறு காலம் என்னப்
பெருக்கினன் – உலகம் நிலை பெயர்ந்து அழியும் படியான
ஊழிக்காலம் எனும்படி மிகுதியாக உண்டாக்கினான்.
——————-
வானர சேனை சிதறுதல்
8425, உரும் முறை அனந்த கோடி உதிர்ந்தன; ஊழி நாளின்,
இரு முறை காற்றுச் சீறி எழுந்தது; விழுந்தது, எங்கும்
கரு முறை நிறைந்த மேகம்; கான்றன, கல்லின் மாரி;
பொரு முறை மயங்கி, சுற்றும் இரியலின் கவிகள் போன.–24-
உரும் முறை அனந்த கோடி உதிர்ந்தன – (மகரக் கண்ணனது
தவசித்தியால்) இடிகள் வரிசையாக எண்ணில்லாத கோடி உதிர்ந்தன; ஊழிநாளின் இருமுறை காற்றுச் சீறி எழுந்தது – ஊழி
நாளைக்காட்டிலும் இரு மடங்கு காற்றுச் சீறி எழுந்தது; விழுந்தது
எங்கும் – எவ்விடத்தும் (உள்ள பொருள்கள் நிலைதடுமாறி)
விழுந்தன;கருமுறை நிறைந்த மேகம் கான்றன கல்லின் மாரி –
கருமைத் தன்மை நிறைந்த மேகங்கள் கல் மழை பொழிந்தன;
பொருமுறை மயங்கி, சுற்றும் இரியலின் கவிகள் போன –
குரங்குகள் போர் செய்யும் தன்மையினின்றும் மயங்கிச் சுற்றிலும்
நிலை கெட்டு ஓடிப்போயின.
————
வீடணன் தந்த செய்தி
8426. போயின திசைகள் எங்கும் புகையொடு நெருப்புப் போர்ப்ப,
தீஇனம் அமையச் செல்லும் மாய மா மாரி சிந்த,
ஆயிர கோடி மேலும் அவிந்தன, கவிகள்; ஐயன்,
‘மாயமோ? வரமோ?’ என்றான்; வீடணன் வணங்கிச்
சொல்வான்:–25-
கவிகள் – குரங்குகள்; போயின திசைகள் எங்கும் புகையோடு
நெருப்புப் போர்ப்ப – (தாம்) ஓடிய திக்குகளிலெல்லாம் புகையும்,
நெருப்பும் மூடிக்கொள்ளவும்; செல்லும் தீ இனம் அமைய மாய மா
மாரிசிந்த – மேகமும் நெருப்புத் தொகுதி பொருந்த பெரு மழையை
அழியும்படியாகப் பொழியவும்; ஆயிரம் கோடி மேலும் அவிந்தன –
(அதனால்) ஆயிரம் கோடிக்கும் மிகுதியாக மடிந்தன; ஐயன்,
‘மாயமோ? வரமோ?’ என்றான் – (அதனைக் கண்ட) இராமன்
(வீடணனை நோக்கி) ‘இது மாயத்தினால் நிகழ்ந்ததா? (அல்லது)
வரத்தின் பயனால் உண்டானதா?’ என்று கேட்டான்; வீடணன்
வணங்கிச் சொல்வான் – (அதைக் கேட்ட) வீடணன் வணங்கிப்
பின்வருமாறு கூறலானான்.
—————
8427. ‘நோற்றுடைத் தவத்தின் நோன்மை நோக்கினர்
கருணை நோக்கி,
காற்றுடைச் செல்வன்தானும், மழையுடைக் கடவுள்தானும்,
மாற்றலர், ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது’ என்றான்;
நூற்று இதழ்க் கமலக் கண்ணன், ‘அகற்றுவென்,
நொடியில்’என்றான். –26-
காற்றுடைச் செல்வன் தானும், மழையுடைக் கடவுள்தானும் –
வாயுதேவனும், வருணதேவனும்; நோற்றுடைத் தவத்தின் நோன்மை
நோக்கினர் – (மகரக்கண்ணன்) செய்த தவத்தினது வலிமையைப்
பார்த்து; ‘மாற்றலர்’ – (அவன் கேட்ட வரத்தை) மறுக்க
முடியாதவராகி; ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது என்றான் –
கொடுத்த தெய்வத்தன்மையுடைய வரத்தினால் இது நிகழ்ந்துள்ளது
என்றான் (வீடணன்); நூற்று இதழ்க் கமலக் கண்ணன் – (அதைக்
கேட்டு) நூறு இதழ்களையுடைய தாமரைப் பூப்போலும் கண்களை
உடைய இராமன்; ‘அகற்றுவென் நொடியின்’ என்றான் – ‘ஒரு
நொடிப்பொழுதில் (இவற்றைப் போக்குவேன்’ என்றான்;
———
இராமபிரான் மாயத்தின் விளைவுகளைப் போக்குதல்
8428. காலவன் படையும், தெய்வக் கடலவன் படையும் காலக்
கோல வன் சிலையில் கோத்து கொடுங் கணையோடும்
கூட்டி,
மேலவன் துரத்தலோடும், விசும்பின்நின்று எரிந்து,
வெய்தின்
மால் இருங் கடலின் வீழ்ந்து மறைந்தன, மழையும் காற்றும். –27-
காலவன் படையும் தெய்வக் கடலவன் படையும் கால –
காற்றுக்கு உரிய தெய்வமான வாயு தேவனுடைய அம்பும் கடல்
தெய்வமாகிய வருணதேவனுடைய அம்பும் வெளிப்படும் படியாக;
கோலவன் சிலையில் கோத்து கொடுங்கணையோடும் கூட்டி –
அழகிய வலிய வில்லிலே கோத்த கொடிய கணையோடுங்கூட்டி;
மேலவன் துரத்தலோடும் – மேன்மை பெற்றவனாகிய இராமன்
செலுத்தியவுடன்; மழையும் காற்றும் விசும்பின் நின்று எரிந்து –
(மகரக்கண்ணனால்) ஏவப்பெற்ற மழையும் காற்றும் விரைவாக
வானத்திலிருந்து எரிந்து கொண்டு; மால் இருங்கடலின் வீ்ழ்ந்து
மறைந்தன – மிகப் பெரிய கடலிலே வீழ்ந்து அழிந்து போயின.
—————
மகரக் கண்ணன் மாயையால் மறைந்து போரிடுதல்
8429. அத் துணை, அரக்கன் நோக்கி, அந்தர வானம் எல்லாம்
ஒத்தன உருவே ஆக்கி, தான் மறைந்து ஒளித்து, சூலப்
பத்திகள் கோடி கோடி பரப்பினன்; அதனைப் பார்த்த
வித்தகன், ‘ஒருவன் செய்யும் வினையம்!’ என்று இனைய
சொன்னான்.–28-
அத்துணை, அரக்கன் நோக்கி – அவ்வளவில், மகரக் கண்ணன்
(தான் உருவாக்கிய மழையும் காற்றும் அழிந்ததைப்) பார்த்து; அந்தர
வானமெல்லாம் ஒத்தன உருவே ஆக்கி – இடைவெளியாயுள்ள
வானமெல்லாம் தன்னை ஒத்தனவாகிய உருவங்களை (மாயத்தால்)
தோற்றுவித்து; தான் மறைந்து ஒளித்து – தன் உரு வெளிப்படாமல்
மறைந்து பதுங்கி; சூலப் பத்திகள் கோடி கோடிப் பரப்பினன் – சூல
வரிசைகளைக் கோடி கோடியாகப் பரப்பினான்; அதனைப் பார்த்த
வித்தகன் – அதனைப் பார்த்த ஞான வடிவினனாகிய இராமன்;
‘ஒருவன் செய்யும் வினையம்’ என்று இனைய சொன்னான் –
‘ஒருவன் செய்யும் சூழ்ச்சி என்னே’ (என வியந்து) என்று
இப்படியாகச் சொன்னான்.
————-
மகரக்கண்ணன் மடிதலும் மாயை அகல்தலும்
8430. ‘மாயத்தால் வகுத்தான், யாண்டும் வரம்பு இலா
உருவம்; தான் எத்
தேயத்தான் என்னாவண்ணம் கரந்தனன்; தெரிந்திலாதான்;
காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன்
அல்லன்;
தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல்?’ எனச் சிந்தை
நொந்தான்.–29-
‘மாயத்தால் யாண்டும் வரம்பிலா உருவம் வகுத்தான்’ –
(மகரக்கண்ணன்) மாயத்தினால் அளவில்லாத உருவத்தை எவ்விடத்தும் தோன்றும் படியாகச் செய்தான்; ‘தான்
எத்தேயத்தான் என்னா வண்ணம் கரந்தனன் – ‘தான் எந்த
இடத்தில் இருக்கிறான் என்று சொல்ல முடியாதபடி ஒளித்து
விட்டான்; ‘தெரிந்திலாதான்’ – (அங்ஙனம்) ஒளித்துவிட்ட அவன்;
‘காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன்
– உடம்பினால் இத்தன்மையான் என்று நினைக்கும்படியான நினைவுக்கு
உட்பட்டவன் அல்லன்; ‘தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல்?’ –
‘தீயை ஒத்தகொடியவனாகிய அவனிடத்துச் செய்யக்கூடிய செயல்
யாது?’எனச் சிந்தை நொந்தான் – என்று மனம் வருந்தினான்.
——————
8431. அம்பின்வாய் ஆறு சோரும் அரக்கன்தன் அருள்
இல் யாக்கை
உம்பரில் பரப்பி, தான் வேறு ஒளித்தனன் என்ன ஓர்வான்,
செம்புனல் சுவடு நோக்கி, ‘இது நெறி’ என்று, தேவர்
தம்பிரான் பகழி தூண்ட, தலை அற்றுத் தலத்தன் ஆனான்.–30-
அம்பின்வாய் ஆறு சோரும் அரக்கன் – (நான் விட்ட) அம்பு
பட்ட இடத்திலிருந்து (இரத்து) ஆறு பெருகப் பெற்ற மகரக்கண்ணன்;
தன் அருன் இல் யாக்கை உம்பரில் பரப்பி – அருள் இல்லமால்
வளர்ந்த தன் உடம்பை ஆகாயத்தில் பலவாறாகத் தோன்றச்செய்து;
தான் வேற ஒளித்தனன் என்ன ஓர்வான் – தான் (அவற்றில்)
வேறாக ஒளிந்திருக்கின்றான் என்று எண்ணியவனாகி; தேவர்
தம்பிரான் – தேவர்களின் தலைவனாகிய இராமன்; செம்புனல்
சுவடுநோக்கி – இரத்தம் வழியும்படியான அடை யாளத்தைப் பார்தது;
‘இது நெறி’ என்று பகழி தூண்ட – இதுவே (அவனுள்ள)இடம் எனத்
துணிந்து (தன்) அம்பினைச் செலுத்த; தலை அற்றுத்தலத்தன்
ஆனான்- (அம்மகரக்கண்ணன்) தலை அறுபட்டுப் பூமியில் விழுந்தான்.
————-
8432. அயில் படைத்து உருமின் செல்லும் அம்பொடும்,
அரக்கன் யாக்கை,
புயல் படக் குருதி வீசி, படியிடைப் புரள்தலோடும்,
வெயில் கெடுத்து இருளை ஓட்டும் காலத்தின்
விளைவினோடும்
துயில் கெடக் கனவு மாய்ந்தால் ஒத்தது-சூழ்ந்த மாயை.–31-
அயில் படைத்து உருமின் செல்லும் அம்பொடும் –
கூர்மையுடைத்தாய் இடியைப் போலச் செல்லுகின்ற இராமனது
அம்புடன்; அரக்கன் யாக்கை – மகரக்கண்ணனது உடல்; புயல் படக்
குருதி வீசி படியிடைப் புரள்தலோடு – மேகம் மழை பொழிவது
போல இரத்தத்தைப் பொழிய விட்டுப் பூமியில் விழுந்து புரண்ட
அளவில்; சூழ்ந்த மாயை – (அவனால் விளைவிக்கப் பெற்றுச்)
சூழ்ந்திருந்த மாயையானது; வெயில் கெடுத்து இருளை
ஓட்டும் காலத்தின் விளைவினோடும் – சூரியன் இருளைக்
கெடுத்து ஓட்டும்படியா விடியற்காலம் தோன்றியதும்; துயில்
கெடக் கனவு மாய்ந்தால் ஒத்தது – உறக்கம் நீங்க
(அவ்வுறக்கத்திற் கண்ட) கனவு (முற்றிலும் பொய்யாய்) அழிந்து
போனதை ஒத்தது.
———-
குருதிக்கண்ணன், சிங்கன் வீழ்ச்சி
8433. குருதியின் கண்ணன், வண்ணக் கொடி நெடுந்
தேரன், கோடைப்
பருதியின் நடுவண் தோன்றும் பசுஞ் சுடர் மேகப்
பண்பன்,
எரி கணை சிந்தி, காலின் எய்தினான் தன்னோடு ஏற்றான்-
விரி கடல் தட்டான், கொல்லன், வெஞ் சினத் தச்சன்,
வெய்யோன்.–32-
வண்ணக் கொடி நெடுந்தேரன் – அழகிய கொடி கட்டப் பெற்ற
பெரிய தேரை உடையவனும்; கோடைப் பகுதியின்
நடுவண் தோன்றும் பசுஞ்சுடர் மேகப் பண்பன் –
கோடைக்காலத்துச் சூரியனிடையே தோன்றுகின்ற பசிய ஒளியை
உடைய மேகத்தின்தன்மையை உடையவனும்; குருதியின் கண்ணன்
– ஆகிய குருதிக்கண்ணன்; எரிகணை சிந்தி காலின் எய்தான்
– நெருப்பை உமிழ்கின்ற அம்புகளை எய்துகொண்டு காற்றைப் போல
விரைந்து வந்தான்; விரிகடல் தட்டான் கொல்லன் வெஞ்சினத் தச்சன், வெய்யோன் – (அவனை) பெரிய கடலைத் தடுத்து அணை
கட்டியவனும், கொல்லும் தன்மையனும், வெம்மையான கோபத்தினால்,
அச்சமுறச் செய்பவனும், (பகைவர்க்கு) கொடுமையானவனும் ஆகிய
நளன் (என்னும் வானரவீரன்); தன்னோடு ஏற்றான் – தன்னோடு
போர் புரியுமாறு (முன்சென்று) எதிர்த்தான்.
————–
8434. அன்று, அவன் நாம வில் நாண் அலங்கல் தோள்
இலங்க வாங்கி,
ஒன்று அல பகழி மாரி, ஊழித் தீ என்ன, உய்த்தான்;
நின்றவன்-நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி,
சென்றனன்-கரியின் வாரிக்கு எதிர் படர் சீயம் அன்னான்.–33-
அன்று, அவன் நாம வில்நாண் – அப்பொழுது, குருதிக் கண்ணன்
அச்சத்தைத் தருகின்ற வில்லின் நாணை; அலங்கல் தோள் இலங்க
வாங்கி – மாலையணிந்த தோள் விளங்கும் படியாக இழுத்து; ஒன்று
அல பகழி மாரி – பலவாகிய அம்பு மழையை; ஊழித்தீ என்ன,
உய்த்தான் – ஊழிக்காலத்துத் தீயைப் போலச் (நெருப்பு
உமிழும்படியாகச்) செலுத்தினான்; நின்றவன் – அவனுடன் போருக்கு
எதிரூன்றி நின்றவனாகிய நளன்;நெடியது ஆங்கு ஓர் தருவினால்
அகல நீக்கி – நெடியதாகிய ஒரு மரத்தினால் (அந்த அம்புகளை)
அப்பாற் செல்லும்படி நீக்கி; கரியின் வாரிக்கு எதிர்படர் சீயம்
அன்னான் சென்றனன் – யானைக் கூட்டத்திற்கு எதிராகச்
செல்லுகின்ற சிங்கத்தை ஒத்தவனாகிச் சென்றான்.
———-
8435. கரத்தினில் திரியாநின்ற மரத்தினைக் கண்டமாகச்
சரத்தினி்ன் துணித்து வீழ்த்த தறுகணான்தன்னை நோக்கி,
உரத்தினைச் சுருக்கிப் பாரில் ஒடுங்கினான், தன்னை
ஒப்பான்
சிரத்தினில் குதித்தான்; தேவர் திசைமுகம் கிழிய
ஆர்த்தார்.–34-
கரத்தினில் திரியா நின்ற மரத்தினை – (தன்னுடைய) கையிலே
சுழல்கின்ற மரத்தை; கண்டமாகச் சரத்தினின் துணித்து வீழ்த்த
தறகணான் தன்னை நோக்கி – துண்டமாக அம்பினால் வெட்டி விழச்
செய்த அஞ்சாமையை உடைய குருதிக் கண்ணனைப் பார்த்து;
தன்னை ஒப்பான் – தன்னைத் தானே ஒப்பவனாகிய நளன்;
உரத்தினைச் சுருக்கிப் பாரில் ஒடுங்கினான் – மார்பைச் சுருக்கிப்
பூமியில் ஒடுங்கினான் போலப் பதுங்கி; சிரத்தினில் குதித்தான் –
அவனுடைய தலையில் குதித்தான்; தேவர் திசைமுகம் கிழிய
ஆர்த்தார் – (அதனைப் பார்த்து) தேவர்களெல்லாம்
திசையிடங்களெல்லாம் பிளவுபடும்படியாக ஆரவாரித்தார்கள்.
—————-
8436. எரியும் வெங் குன்றின் உம்பர், இந்திரவில் இட்டென்ன,
பெரியவன் தலைமேல் நின்ற பேர் எழிலாளன், சோரி
சொரிய, வன் கண்ணின் மூக்கின் செவிகளின், மூளை
தூங்க,
நெரிய, வன் தலையைக் காலால் உதைத்து, மாநிலத்தில்
இட்டான்.–35-
எரியும் வெங்குன்றின் உம்பர் – நெருப்பு எரிகின்ற கொடிய
மலையின்மேலே; இந்திரவில் இட்டென்ன – இந்திரவில் தோன்றினாற்
போல; பெரியவன் தலைமேல் நின்ற பேர் எழிலாளன் –
வெருந்தோற்றமுள்ள குருதிக் கண்ணனது தலையின் மேல் நின்ற
மிக்க அழகை உடைய நளன்; வன் கண்ணின் மூக்கின் செவிகளின்
சோரி சொரிய – (குருதிக்கண்ணனது) வலிய கண்களிலும், மூக்கிலும்,
செவிகளிலும் இரத்தம் சொரியவும்; மூளை தூங்க – மூளை சிதைந்து
வழியவும்; நெரிய வன் தலையைக் காலால் உதைத்து, மாநிலத்தின்
இட்டான் – (அவனது) வலிய தலையை நெரியும் படியாகக் காலால் உதைத்து (அவனைப்)
பூமியில் தள்ளினான்.
————–
8437. அங்கு அவன் உலத்தலோடும், அழற் கொழுந்து ஒழுகும்
கண்ணான்,
சிங்கன், வெங் கணையன், வில்லன், தார் அணி தேரின்
மேலான்,
‘எங்கு, அடா போதி?’ என்னா, எய்தினன்; எதிர் இலாத,
பங்கம் இல்மேரு ஆற்றல், பனசன் வந்து, இடையில்
பாய்ந்தாள்.–36-
அங்கு அவன் உலத்தலோடும் – குருதிக் கண்ணன் இறந்த
அளவில்; அழற்கொழுந்து ஒழுகும் கண்ணான் சிங்கன் – நெருப்பை
உமிழும் கண்களை உடைய சிங்கன்; வெங்கணையன், வில்லன் தார்
அணி தேரின் மேலான் – கொடிய அம்பை உடையவனும், வில்லை
உடையவனும், சிறு மணிகள் கட்டிய தேரின் மேல் ஏறியவனுமாகி;
‘எங்கு அடா! போதி?’ என்னா எய்தினன் – (நளனைப் பார்த்து)
‘எங்கடா போகிறாய்?’ என்று சொல்லிக் கொண்டே வந்தான்
(அப்பொழுது); எதிர் இலாத, பங்கம் இல்மேரு ஆற்றல் –
கெடுதலில்லாத மேருவைப் போன்ற ஆற்றலை உடையவனும், தனக்கு
நிகரொருவருமில்லாதவனுமாகிய;பனசன் வந்து இடையில் பாய்ந்தான்
– பனசன் (என்னும் வானர வீரன்) நடுவிலே வந்து குதித்தான்.
—————–
8438. பாய்ந்தவன் தோளில், மார்பில், பல்லங்கள் நல்ல
பண்போடு
ஆய்ந்தன, அசனி போல, ஐ-இரண்டு அழுந்த எய்தான்;
காய்ந்தனன், கனலி நெய்யால் கனன்றது போலக் காந்தி;
ஏய்ந்து ஏழு தேரினோடும், இமைப்பிடை எடுத்துக்
கொண்டான்.
பாய்ந்தவன் தோளில், மார்பில் – அப்படிக் குதித்த பனசனது
தோள்களிலும், மார்பிலும்;பல்லங்கள் நல்ல பண்போடு ஆய்ந்தன –
நல்ல தகுதி நோக்கி ஆராய்ந்து எடுத்தனவாகிய அம்புகள்; அசனி
போல ஐ-இரண்டு அழுந்த எய்தான் – பத்தினை இடியைப் போல
அழுந்தும்படியாக (சிங்கன்) எய்தான்; காய்ந்தனன். கனலி நெய்யால்
கனன்றது போலக் காந்தி – (அதைப் பார்த்து பனசன்) கோபித்து,
நெருப்பு நெய்யால் சுடர்விட்டு எரிவது போலக் கொதித்து; ஏய்ந்து
எழு தேரினோடும், இமைப்பிடை எடுத்துக் கொண்டான் –
(சிங்கனை) பொருந்தி ஊர்ந்து வருகின்ற தேரோடும் ஓரிமைப்பிற்குள்
(கையினால்) தூக்கினான்.
—————
8439. தேரொடும் எடுத்தலோடு, நிலத்திடைக் குதித்த செங்கண
்மேருவின் தோற்றத்தான்தன் உச்சிமேல் அதனை வீச;
பாரிடை விழுதலோடும், தானவன் உம்பர் பாய்ந்து
சோரியும் உயிரும் சோர, துகைத்தனன், வயிரத் தோளன்.–38-
தேரொடும் எடுத்தலோடு – (பனசன் சிங்கனைத்) தேரோடு
தூக்கினவுடனே; நிலத்திடைக் குதித்த செங்கண் மேருவின்
தோற்றத்தான் தன் உச்சிமேல் அதனை வீச – தேரினின்றும்
பூமியிலே குதித்த மலைபோன்ற வடிவத்தினையும் உடைய சிங்கனது
தலையின் மேல் (பனசன்) அத்தேரை வீச; பாரிடை விழுதலோடும் –
அவ்வரக்கன் நிலத்தில் (அதுபட்டு) விழுந்த அளவில்; தானவன்
உம்பர் பாய்ந்து சோரியும் உயிரும் சோரத் துகைத்தனன்,
வயிரத்தோளன் – இரத்தம் மேலே பாயவும் உயிர் சோரவும் வயிரம்
போல் உறுதியான தோளை உடைய அப்பனசனானவன் (சிங்கனது
உடம்பினை) மிதித்து உழக்கினான்.
———
8440. தராதல வேந்தன் மைந்தர் சரத்தினும், கவியின் தானை
மராமரம், மலை என்று இன்ன வழங்கவும், வளைந்த தானை,
பராவ அரும் வெள்ளம் பத்தும் பட்டன; பட்டிலாதார,
இராவணன் தூதர் போனார், படைக்கலம் எடுத்திலாதார்.–39-
தராதல வேந்தன் மைந்தர் சரத்தினும் – பூமிக்கு மன்னனாகிய
தசரதனுடைய மைந்தராகிய இராம இலக்குவர் எய்கின்ற அம்புகளாலும்; கவியின் தானை – குரங்குச்சேனை; மராமரம்,
மலை என்று இன்ன வழங்கவும் – மராமரம், மலை என்ற இவைகளை
எறிதலினாலும்;வளைந்ததானை, பராவ அரும் வெள்ளம் பத்தும்
பட்டன – மகரக்கண்ணனைச் சூழ்ந்து வந்த சொல்லுதற்குரிய பத்து
வெள்ளச் சேனைகளும் இறந்து பட்டன; பட்டிலாதார் இராவணன்
தூதர்போனார் படைக்கலம் எடுத்திலாதார் – படைக்கலம்
எடுக்காதவராயும் (அதனால்) இறவாமல் நின்றவருமான இராவணன்
தூதர்கள் (செய்தியை உரைக்க நகருக்குச்) சென்றார்கள்.
தரையாகிய தலம் – தராதலம். பராவுதல் – சொல்லுதல்.
———-
மிகைப் பாடல்கள்
இந்திரியத்தத இகழ்ந்தவன், அந்தோ!
மந்திர வெற்றி வழங்க வழங்கும்
இந்திரம் அற்றது எனக் கடிதிகொல்?
வந்தது என், வில் தொழிலைக் கொலை மான? 5-1
அம்புயக் கண்ணன் கண்டத்து ஆயிரம் பகழி நாட்டி,
தம்பிதன் கவசமீதே இரட்டி சாயகங்கள் தாக்கி,
வெம்பு இகல் அனுமன்மீதே வெங் கணை மாரி வித்தி,
உம்பர் தம் உலகம் முற்றும் சரங்களாய் மூடி உய்த்தான். 19-1
‘இந்திரன் பகைஞன் போல இவனும் ஓர் மாய வீரன்;
தந்திரக் குரக்குச் சேனை உளது எலாம் தரையின் வீழ்த்தான்;
எந்திரம் ஆகிப் பார்த்த இடம் எலாம் தானே ஆனான்;
அந்தரம் அவனோடு ஒப்பார் ஆர்?’ என அமலன் சொன்னான். 29-1
மற்று அவன் இறத்தலோடும், மறைகளும் தேடிக் காணாக்
கொற்றவன் சரத்தின் மாரி கடையுக மழையின் கொள்ளப்
பற்றி, அங்கு அரக்கர் தானை வெள்ளம் அத்தனையும் பாரில்
அற்றவை அழிந்து சிந்த அறுத்து, ஒரு கணத்தில் மாய்த்தான். 31-1
மடிந்தனன் சிங்கன் என்னும் மறம் தரு வயிரத் தோளான்;
தொடர்ந்தனர் அரக்கர், பின்னும்; தொடர்ந்தவர் தம்மை எல்லாம்
கடந்தனர், கவியின் வீரர்; களத்திடைக் கணத்தில் மாய்த்தார்;
நெடுந் திரைப் பரவைமீது நிறைந்தது, குருதி நீத்தம். 38-1
————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply