படைத்தலைவர் போரிட இசைவு வேண்டல்
8302. ஆர்த்து எழும் ஓசை கேட்ட அரக்கரும், முரசம் ஆர்ப்ப,
போர்த் தொழில் வேட்கை பூண்டு, பொங்கினர், புகுந்து
மொய்த்தார்;
தார்த் தட மார்பன் தன்னை, ‘தா, விடை’ என்னச்
சார்ந்தார்;
பார்த்தனன், முனிந்து மன்னன், இனையன பகர்வது ஆனான்:–1-
ஆர்த்து எழும் ஓசை கேட்ட அரக்கரும் – (வானரப் படை
வீரர்கள்) ஆரவாரத்தோடு எழுப்பிய (பேரொலி) கேட்ட அரக்கப்
படை வீரர்கள்; முரசம் ஆர்ப்ப – முரசு ஒலிக்க; போர்த் தொழில்
வேட்கை பூண்டு – போர்த் தொழில் செய்தலில் பெரு விருப்பம்
கொண்டு; பொங்கினர் புகுந்து மொய்த்தார் – சினம் மிக்கவர்களாய்ப்
புகுந்து நெருங்கித்; தார்த்தட மார்பன் தன்னை – மாலை அணிந்த
அகன்ற மார்பினை உடைய இராவணன் தன்னைப் பார்த்து; விடைதா
என்னச் சார்ந்தார் – விடை தருக என்று (கேட்டு) நெருங்கினர்;
மன்னன் – அரசனாகிய இராவணன்; முனிந்து பார்த்தனன் – சினம்
கொண்டு பார்த்து; இனையன பகர்வது ஆனான் – இத்தகைய
சொற்களைச் சொல்லல் ஆனான்
—————–
மாபக்கன் புகை நிறக்கண்ணன் வேண்டுதல்
8303. மாபெரும்பக்கனோடு வான் புகைக்கண்ணன் வந்தான்;
‘ஏவுதி எம்மை’ என்பார்; தம் முகம் இனிதின் நோக்கி,
‘போவது புரிதிர்’ என்னப் புகறலும், பொறாத தூதர்,
‘தேவ! மற்று இவர்கள் செய்கை கேள்!’ எனத் தெரியச்
சொன்னார்;–2-
மாபெரும் பக்கனோடு – மாபக்கனோடு; வான் புகைக் கண்ணன்
வந்தான் – சிறந்த புகை நிறக் கண்ணனும் (சேர்ந்து) வந்து; எம்மை
ஏவுதி என்பார் – இப்போருக்கு எங்களை ஏவுக என்றார்கள்; தம்முகம்
இனிதின் நோக்கி – இராவணன் அவர்தம் முகங்களை மகிழ்ச்சியோடு
பார்த்து; போவது புரிதிர் என்னப் புகறலும் – (போருக்குப்)
போவதைச் செய்யுங்கள் என்று கூறுதலும்; பொறாத தூதர் –
(அதனைக் கேட்டுப்) பொறுக்க முடியாத தூதுவர்கள்; தேவ –
தேவனே! மற்று இவர்கள் செய்கை கேள் எனத் – இவர்கள் செய்த
செயலைக் கேட்பாயாக என்று; தெளியச் சொன்னார் – தெளிவாகச்
சொல்லலாயினார்.
———–
8304. ‘ஆனையும் பரியும் தேரும் அரக்கரும் அமைந்த ஆழித்
தானைகள் வீய, நின்ற தலைமகன் தனிமை ஓரார்,
“மானவன் வாளி, வாளி! என்கின்ற மழலை வாயார்,
போனவர் மீள வந்து புகுந்தனர் போலும்! என்றார்.–3-
ஆனையும் – யானைகளும்; பரியும் – குதிரைகளும்; தேரும் –
தேர்ப்படைகளும்; அரக்கரும் – காலாட் படை வீரர்களாகிய
அரக்கர்களும்; அமைந்த – (ஒன்றாகச் சேர்ந்து) (நால்வகைப்
படையாக) அமைந்த; ஆழித்தானைகள் வீய – கடல் போன்ற
படைகள் அழிவுற்றதனால்; தனிமை நின்ற தலைமகன் – தன்னந்
தனியனாய்ப் (போர்க்களத்தில்) நின்ற தலைவனாகிய இந்திரசித்தனது;
தனிமை ஓரார் – தனிமையைப் பற்றிச் சிறிதும் எண்ணிப் பாராமல்;
மானவன் வாளி வாளி என்ற – மனிதனாகிய இலக்குவனுடைய
அம்புகள் அம்புகள் என்கின்ற; மழலை வாயார் – குழறிச் சொல்லும்
சொற்களைக் கொண்ட வாயினை உடையவர்களாய்; போனவர் –
போர்க்களத்தை விட்டு ஓடிப் போனவர்கள்; மீளவந்து – மீண்டும்
வந்து; புகுந்தனர் போலும் என்றார் – (தங்கள் வீரத்தை
வெளிக்காட்ட) புகுந்துள்ளார் போலும் என்றனர். (தூதுவர்)
—————
8305. அற்று அவர் கூறலும், ஆர் அழலிற்றாய்
முற்றிய கோபம் முருங்க முனிந்தான்,-
‘இற்றிதுவோ இவர் சேவகம்?’ என்னா,
‘பற்றுமின்!’ என்றனன்-வெம்மை பயின்றான்.–4-
அவர் – அந்தத் தூதுவர்கள்; அற்று கூறலும் – அவ்வாறு ஆன
சொற்களைச் சொன்ன அளவிலே; வெம்மை பயின்றான் – கொடுஞ்
(செயல்களைச் செய்வதிலேயே) பயின்றவன் ஆகிய இராவணன்; ஆர்
அழலிற்றாய் – நிறைந்த தீயின் தன்மைத்தாய; முற்றிய கோபம் – முதிர்ந்த சினம்; முருங்க முனிந்தான் – (தன்
தன்மையை அழித்தலால்) மிகச் சினந்தவனாகி; இவர் சேவகம்
இற்றிதுவோ என்னா – இவர்கள் (என் மனனுக்குச் செய்த) சேவகம்
இவ்வகைப்பட்டதோ என்று கூறி; பற்றுமின் என்றனன் –
(இவர்களைப்) பிடியுங்கள் என்றான்.
————–
8306. என்றலும், எய்தினர், கி்ங்கரர் என்பார்,
பின்றலினோரை வலிந்து பிடித்தார்,
நின்றனர்; ஆயிடை, நீல நிறத்தான்,
‘கொன்றிடுவீர் அலிர்; கொண்மின், இது’ என்றான்.–5-
என்றலும் – என்று (இராவணன்) கூறிய உடனே; கிங்கரர் என்பார்
– கி்ங்கரர் என்ற பெயர் உடையவர்கள்; எய்தினர் – நெருங்கி;
பின்றலினோரை – (போர்க்களத்தில் இருந்து) பின்னிட்டு
ஓடிவந்தவர்களான; (மாபக்கனையும் புகைநிறக் கண்ணனையும்)
வலிந்து பிடித்தார் – இறுகப் பிடித்துக்கொண்டு; நின்றனர் –
நின்றார்கள்; ஆயிடை – அப்பொழுது; நீல நிறத்தான் – கரிய நிறம்
உள்ள இராவணன்; கொன்றிடுவீர் அலீர் – (இவர்களைக்) கொன்று
விடவேண்டாம்; இது – (நான் சொல்லப்போகிற இச்செய்தியை);
கொண்மின் என்றான் – மனத்தில் நிலை நிறுத்திக்கொள்ளுங்கள்
என்றான்.
————
8307. ‘ஏற்றம் இனிச் செயல் வேறு இலை; ஈர்வீர்
நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை; நாமக்
கோல் தரு திண் பணை கொட்டினிர், கொண்டு, ஊர்
சாற்றுமின், “அஞ்சினர்” என்று உரைதந்தே,’–6-
நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை – மணத்தை நுகர்ந்து கொண்டு
உயர்ந்து விளங்கித் தோன்றுகிற மூக்கினை; ஈர்வீர் – (முதலில்)
அறுப்பீர்கள்; (பிறகு) ஊர் – ஊர் முழுதும் கூட்டிக் கொண்டுபோய்);
நாமக்கோல் தரு திண்பணை கொட்டினிர் கொண்டு – சிறந்த
குறுந்தடியால் அடிக்கப்படுகிற வலிய பறையைக் கொட்டிக் கொண்டு;
அஞ்சினர் என்று உரை தந்தே – (இவர்கள் போருக்கு) அஞ்சி
(ஓடிவந்தவர்கள்) என்ற சொற்களைச் சொல்லி; சாற்றுமின் –
(அனைவருக்கும்) சொல்லுங்கள்; ஏற்றம் இனிச் செயல் வேறு இலை
– இவர்களுக்குச் செய்கிற உயர்வான செயல் இதைத்தவிர வேறு எதுவும் இல்லை (என்று இராவணன்
கிங்கரர்களிடம் கூறினான்).
————–
8308. அக் கணனே, அயில் வாளினர் நேரா,
மிக்கு உயர் நாசியை ஈர விரைந்தார்,
புக்கனர்; அப் பொழுதில், ‘புகழ் தக்கோய்!
தக்கிலது’ என்றனன், மாலி, தடுத்தான்.–7-
அக் கணனே – (அவ்வாறு இராவணன் கட்டளை இட்ட)
அப்பொழுதே; அயில்வாளினர் – கூர்மையான வாளினை உடைய
(கிங்கரர்கள்); நேரா – (அக்கட்டளைககு) உடன்பட்டு நேர்ந்து; மிக்கு
உயர் நாசியை – (மாபக்கன் புகை நிறக் கண்ணன்
ஆகியவர்களுடைய) மேல் நோக்கி உயர்ந்த மூக்கினை; ஈர
விரைந்தார் புக்கனர் – அறுப்பதற்காக விரைந்து வந்து புகுந்தனர்;
அப்பொழுதில் – அப்பொழுது; மாலி – மாலி என்னும் அரக்கப்
படைத்தலைவன் (இராவணனை நோக்கி); புகழ்தக்கோய் – புகழுக்குத்
தகுதியானனே; தக்கிலது என்றனன் தடுத்தான் – இச்செயல்
தகுதிக்குரியதன்று என்று கூறித் தடுத்தான்.
———————
8309. ‘அம் சமம் அஞ்சி அழிந்துளர் ஆனார்,
வெஞ் சமம் வேறலும், வென்றியது இன்றாய்த்
துஞ்சலும் என்று இவை தொல்லைய அன்றே?
தஞ்சு என ஆர் உளர், ஆண்மை தகைந்தார்?–8-
அம்சமம் – அழகிய போரில்; அஞ்சி அழிந்துளர் ஆனார் –
அஞ்சி (மனம் அழிந்தவர்களானவர்கள்; வெஞ்சமம் வேறலும் –
(பிறிதொரு) கொடிய போரில் வெல்லுதலும்; வென்றியது இன்றாய்த்
துஞ்சலும் – வெற்றி இல்லாமல் இறந்து படுதலும்; என்று இவை –
என்ற இவ்வகைச்செயல்கள்; தொல்லைய அன்றே – பழமையான
முறையில் வருபவை அல்லவா? ஆண்மை தஞ்சு என தகைந்தார் –
ஆண்மைப் பண்பைத் தன்னிடத்திலேயே அடைக்கலமாக
(நிலையாகக்) கொண்டவர்கள்; ஆர் உளர் – (இந்த உலகத்தில்) யாவர்
உளர் ஒருவருமில்லை என்றபடி.
———–
8310. ‘அந்தரம் ஒன்றும் அறிந்திலை அன்றே;
வந்தன நம்வயின் எத்தனை, மன்னா!
தந்திரம், வானவர் தானவர் என்னும்,
இந்திரன் அஞ்சினன்; எண்ணுதி அன்றே!–9-
மன்னா – மன்னனே; அந்தரம் ஒன்றும் அறிந்திலை அன்றே –
(நீ) வேறுபாடு எதையும் ஒரு சிறிதம் அறிந்திருக்கவில்லை அல்லவா?
வானவர் – தேவர்கள்; தானவர் – தானவர்கள்; என்னும் தந்திரம் –
என்கிற படைகள்; நம் வயின்வந்தன எத்தனை – நம்முடன் போரிட
வந்தவைகள் எத்தனையோ அல்லவா? (அவையெல்லாம் நம்மிடம்
தோற்றுப்போய் விடவில்லையா?) இந்திரன் அஞ்சினான் – தேவர்
தலைவனாகிய இந்திரன் (கூடப்) போருக்கு அஞ்சினானே! எண்ணுதி
அன்றே – (அதை நீ) எண்ணிப் பார்க்கலாமல்லவா?
————–
8311. ‘வருணன் நடுங்கினன், வந்து வணங்கிக்
கருணை பெறும் துணையும், உயிர் கால்வான்;
இருள் நிற வஞ்சகர் எங்கு உளர்? எந்தாய்!
பருணிதர் தண்டம் இது அன்று, பகர்ந்தால்.–10-
எந்தாய் – எமது தந்தையே; வருணன் வந்து வணங்கி –
(உன்னுடைய ஆற்றலுக்கு அஞ்சித் தோற்ற) வருணன் (வந்து
உன்னை) வணங்கி நின்று; கருணை பெறும் துணையும் – (உன்)
அருள் பெறும் கால அளவும்; உயிர் கால்வான் நடுங்கினான் – பெரு
மூச்சு விட்டுக்கொண்டு நடுங்கி நின்றான் (என்றால்); இருள் நிற
வஞ்சகர் எங்கு உளர்? – இருட்டின் நிறம் உள்ள வஞ்சனைப் பண்பு
நிறைந்த இவர்கள் எங்கே இருப்பர் (வருணனே அஞ்சி நிற்கையில்
இவர்கள் உயிருக்கு அஞ்சி ஓடிவந்தது பெரும் பிழையிலை);
பகர்ந்தால் – எடுத்துச் சொன்னால்; இது – (நீ கொடுத்த) இந்தத்
தண்டனை; பருணிதர் தண்டம் அன்று – அறிவு உடையோர்
கொடுக்கும் தண்டனை அன்று.
—————-
8312. ‘பத்து-ஒரு நாலு பகுத்த பரப்பின்
அத்தனை வெள்ளம் அரக்கர் அவிந்தார்;
ஒத்து ஒரு மூவர் பிழைத்தனர், உய்ந்தார்;
வித்தக! யார் இனி வீரம் விளைப்பார்?–11-
வித்தக – வித்தகனே! பத்து ஒரு நாலு – நாற்பது வெள்ளமாகப்;
பகுத்த பரப்பின் – பிரிந்த பரப்பினை உடைய; அத்தனை வெள்ளம்
அரக்கர் அவிந்தார் – அத்தனை வெள்ளம் அரக்கப் படை வீரரும்
(இலக்குவன் கணைகளாலும் வானரப் படையினராலும்) போரில் இறந்து
ஒழிந்தனர்; ஒரு மூவர் – இந்திரசித்தன், புகைநிறக் கண்ணன்
மாபக்கன் என்ற மூவர்; ஒத்து உய்ந்தார் பிழைத்தனர் – ஒன்றாக
(உயிர்) தப்பியவர்களாகிப் பிழைத்தார்கள்; இனியார் – இனிமேல்
யாவர்? வீரம் விளைப்பார் – (இவர்களைப் போல்) வீரச் செயல்
செய்யவல்லராவர்?
—————
8313. ‘பாசமும் இற்றது; பாதியின் மேலும்
நாசமும் உற்றது; நம்பி! நடந்தாய்;
பூசல் முகத்து ஒரு கான்முளை போதா,
நீசரை ஈருதியோ, நெடு நாசி?–12-
நம்பி – ஆடவரில் சிறந்தவனே; பாசமும் இற்றது – (இந்திர
சித்தனது) நாகக் கணையும் வலி இழந்து இற்றுப் போய் விட்டது;
பாதியின் மேலும் நாசமும் உற்றது – (அரக்கப் படை) பாதிக்கு மேல்
(போரில்) அழிந்து போய் விட்டது; நடந்தாய் – (நீயும்) முதல் நாள்
போருக்குச் சென்று விட்டுத்) திரும்பி வந்துவிட்டாய்; பூசல் முகத்து –
போர் முகத்தில்; ஒருகான்முளை போதா – ஒப்பற்ற (உன்) மகனுடன்
(இறுதி வரை உடன்நின்று) போகாத; நீசரை – (எளிமைத் தன்மை
உடைய) நீசர்களாகிய இந்தப் பணியாளருடைய; நெடுநாசி – நீண்ட
மூக்கினை; ஈருதியோ – அறுக்கக்கடவாயோ?
—————
8314. ‘”வாழி இலக்குவன்” என்ன, மறுக்குற்று
ஆழி அரக்கர் தம் வாயில் அடைப்பார்;
ஏழ கடல் துணையோ? இனி, நாசி
ஊழி அறுத்திடினும், உலவாதால்.-13-
வாழி இலக்குவன் என்ன – இலக்குவன் என்று (பெயர்)
சொன்னாலும்; மறுக்குற்று – மனக்கலக்கம் அடைந்து; ஆழி அரக்கர்
தம் வாயில் அடைப்பார் – கடல் (நீர்) வாயிலை அடைப்பார்கள்;
இனிநாசி – (அவர்கள் எல்லோருடைய மூக்கையும் அறுக்க
முற்பட்டால்) இனி மூக்கின் தொகுதி; ஏழு கடல் துணையோ – ஏழு
கடலின் அளவு மாத்திரம் இருக்குமோ; ஊழி அறுத்திடினும் –
(அப்படி அறுத்தலைத் தொடங்கினால்) ஊழிக்காலம் வரை
அறுத்தாலும்; உலவாதால் – முடியாததாகும்,
—————
315. தூது நடந்தவனைத் தொழுது, அந் நாள்,
ஓது நெடுஞ் செரு அஞ்சி உடைந்தார்,
தீது இலர் நின்றவர், சேனையின் உள்ளார்
பாதியின் மேலுளர், நாசி படைத்தார்!–14-
ஓது நெடுஞ் செரு அஞ்சி – சிறப்பித்துச் சொல்லப்படுகிற பெரிய
போருக்கு அஞ்சி; அந்நாள் – அந்த நாளில்; தூது நடந்தவனைத்
தொழுது – தூதுவனாக வந்த அனுமனைத் தொழுது; உடைந்தார் –
தோற்றுப் போனவர்களாய் (இருந்தும்); தீது இலர் நின்றிவர் –
(தண்டனை என்னும்) தீது இல்லாதவராய் நின்றவர்கள்; சேனையின் –
(நம்) அரக்கர் படையில்; பாதியின் மேலுளர் – பாதிக்கு மேல்
உள்ளவர்கள்; நாசி படைத்தார் உள்ளார் – மூக்கு உள்ளவர்களாய்
உள்ளார்கள்.
————-
8316. ‘விட்டிலை சீதையை ஆம்எனின், வீரர்
ஒட்டிய போரினில் ஆர் உளர், ஓடார்?
“வெட்டுதி நாசியை, வெந் தொழில் வல்லோர்
பட்டிலர் என்றிலை என்று பகர்ந்தான்.–15-
சீதையை விட்டிலை ஆம் எனின் – (நீ) சீதையை விட்டு
விடவில்லை ஆனால் வீரர் ஒட்டிய போரினில் – வீரர்கள் நெருங்கிச்
செய்யும் போரில்; ஓடார் ஆர் உளர் – (அஞ்சி) ஓடாத அரக்க
வீரர்கள் யார் இருக்கப் போகிறார்கள்; வெந்தொழில் வல்லோர்
பட்டிலர் – கொடிய போர்த்தொழில் வல்ல (இராம இலக்குவர்)
அழிந்திலர்; என்றிலை – (என்று) சொல்லவில்லை (என்பதற்காக);
நாசியை வெட்டுதி – (போர்க்களம் சென்றவர்களுடைய) மூக்குகளை
எல்லாம் வெட்டி விடுவாயோ; என்று பகர்ந்தான் – என்று (மாலி
இராவணனுக்குச்) சொன்னான்.
—————
மாபெரும் பக்கனும் புகைக்கண்ணனும் பேசுதல்
8317. ஆறினன் என்பது அறிந்தனர், அன்னார்
தேறினர், அன்னது சிந்தை உணர்ந்தார்,
சீறிய நெஞ்சினர், செங் கணர், ஒன்றோ
கூறினர்? தம் நிலை செய்கை குறித்தார்:–16-
ஆறினன் என்பது அறிந்தனர் – (மாலி கூறிய சொற்களால்
இராவணன்) சினம் தணிந்தனன் என்பதை அறிந்தவர்களான;
அன்னார் – (அந்த மாபக்கன், புகை நிறக்கண்ணன் ஆகிய)
இருவரும்; தேறினர் – (தண்டனை கிடைக்குமோ என்ற) மனக்கலக்கம்
தீர்ந்து தெளிந்து; அன்னது சிந்தை உணர்ந்தார் – (அவனது
மனநிலையைத்) தெளிவாக மனத்தில் உணர்ந்தவர்களாகி; சீறிய
நெஞ்சினர் – சினம் கொண்ட நெஞ்சினை உடையராய்; செங்கணர் –
சிவந்த கண்களை உடையவராய்; தம் நிலை – தம்முடைய
நிலையினையும்; செய்கை குறித்தார் – செய்கையையும்
குறித்தவர்களாகி; ஒன்றோ கூறினர் – ஒன்றை மட்டுமா கூறினார்கள்;
(பல கூறினர் என்றபடி.)
——————-
8318. ‘உன் மகன் ஒல்கி ஒதுங்கினன் அன்றோ?
மின் நகு வானிடை ஏக, விரைந்தான்,
அன்னதின் மாயை இயற்றி அகன்றான்;
இந் நகர் எய்தினன், உய்ந்தனன்-எந்தாய்!–17-
எந்தாய் – எங்களுக்குத் தந்தை போன்றவனே!; உன் மகன் –
உனக்கு மகனாகிய (இந்திரசித்தன்); ஒல்கி ஒதுங்கினன் – (போரினால்)
தளர்ந்து ஒதுங்கினான்; அன்றோ – அது மாத்திரமா? மின்நகு
வானிடைஏக விரைந்தான் – மின்னல்கள் விளங்குகின்ற
ஆகாயத்தினிடத்தில் விரைந்து சென்று; அன்னதின் மாயை இயற்றி
அகன்றான் – அங்கிருந்து மாயைச் செயலைச் செய்து நீங்கி; இந்நகர்
எய்தினன் – இந்த (இலங்கை) நகரை வந்தடைந்து; உய்ந்தனன் –
உயிர் பிழைத்தான்.
————–
8319. ‘இப் பகல், அன்றுஎனின் நாளையின், அல்லால்,
முப் பகல் தீர்கிலம்; ஆவி முடிப்போம்,
வெப்பு அகலா எரி வெந் தழல் வெந்த
செப்பு அகல் வெண்ணெயின்-நோன்மை தெரிந்தோய்!–18-
நோன்மை தெரிந்தோய் – வலிமையின் தன்மையை அறிந்தவனே!
இப்பகல் – (நாங்கள்) இப்பகல் ஒன்றில்; அன்று எனின் – இல்லை
என்றால்; நாளையின் – நாளை; அல்லால் – அல்லாமல்; முப்பகல்
தீர்கிலம் – மூன்றாம் நாள் போகவிடோம்; (தவறாமல்) வெப்பு அகலா
– வெம்மை நீங்காத; எரி வெந்தழல் வெந்த – எரிகின்ற
வெப்பமுடைய தீயில் வெந்த; செப்பு அகல் வெண்ணெயின் – செம்பு
விளக்கில் (ஊற்றப்பட்ட) வெண்ணெயைப் போல; ஆவி முடிப்போம் –
பகைவர்களின் உயிரை முடிப்போம் (என்றனர்).
————
8320. ‘விட்டனை எம்மை, விடுத்து, இனி, வெம் போர்
பட்டனர் ஒன்று, படுத்தனர் ஒன்றோ,
கெட்டனர் என்பது கேளலை’ என்னா,
ஒட்டினர், ஆவி முடிக்க உவந்தார்.–19-
எம்மை விட்டனை – எங்களைப் போருக்கு அனுப்பி; விடுத்து –
விடுத்த பின்பு; இனி வெம்போர் பட்டனர் ஒன்று – இனி (இவர்கள்)
கொடிய போர் செய்து இறந்தார்கள் என்பது ஒன்று, படுத்தனர்
ஒன்றோ – (பகைவர்களை) அழித்தனர் என்பது ஒன்று (ஆகிய
இவ்இரண்டில் ஒன்றைத் தவிர); கெட்டனர் என்பது கேளலை என்னா
– போரில் தோற்று விட்டார்கள் என்ற சொல்லைக் கேட்க மாட்டாய்
என்று; ஆவி முடிக்க உவந்தார் ஒட்டினர் – உயிரைக் கொடுக்க
மகிழ்ச்சி கொண்டவர்களாய்ச் சபதம் செய்தனர்.
————–
இராவணன் இருவருடன் பெரும் படை அனுப்பல்
8321. அன்னவர் தம்மொடும் ஐ-இரு வெள்ளம்
மின்னு படைக் கை அரக்கரை விட்டான்;
சொன்ன தொகைக்கு அமை யானை, சுடர்த் தேர்,
துன்னு வயப் பரியோடு தொகுத்தான்.–20-
அன்னவர் தம்மொடும் – (அந்த மாபக்கன் புகைநிறக் கண்ணன்)
தம்முடன் (இராவணன்); மின்னு படைக்கை – ஒளி விடுகின்ற
படைக்கலங்களைக் கையில் கொண்ட; ஐ இரு வெள்ளம் – பத்து
வெள்ளம்; அரக்கரை விட்டான் – அரக்க வீரர்களை அனுப்பினான்;
சொன்ன தொகைக்கு அமையானை – முன்னால் கூறிய
காலட்படைக்கு) (உரிமையாக) அமைந்த யானைப் படைகளையும்;
சுடர்த்தேர் – ஒளியைக் கொண்ட தேர்ப் படையினையும்; துன்னு
வயப்பரியோடு – நெருங்கிய வலிமையான குதிரைப் படைகளையும்;
தொகுத்தான் – சேர்த்து அனுப்பினான்.
————-
8322. நெய் அழல் வேள்வி நேடும் பகை, நேர் விண்
தைவரு சூரியசத்துரு என்பான்,
பெய் கழல் மாலி, பிசாசன் எனும் பேர்
வெய்யவன், வச்சிரம் வென்ற எயிற்றான்.–21-
நெய் அழல் வேள்வி நெடும்பகை – நெய் பெய்து செய்யும்
வேள்விக்கு பெரிய பகைவன்; (வேள்வியின் பகைஞன்) நேர்விண்
தைவரு சூரிய சத்துரு என்பான் – நேராக வானத்தில் பவனி வருகிற
சூரியன் பகைஞன் என்பவன்; கழல் பெய் மாலி – கழல் அணிந்த
மாலி; பிசாசன் எனும் பேர் வெய்யவன் – பிசாசன் என்னும் பெயர்
உடைய கொடியவன்; வச்சிரம் வென்ற எயிற்றான் – வச்சிரத்தை
வென்ற (வலிய) பற்களை உடையவன் (வச்சிரத்து எயிற்றவன்).
————–
8323. என்றவரோடும் எழுந்து, உலகு ஏழும்
வென்றவன் ஏவலின், முன்னம் விரைந்தார்,
சென்றன, மால் கரி, தேர், பரி; செல்லக்
குன்றுஇனம் என்ன நடந்தனர், கோட்பால்.–22-
என்றவரோடும் – என்ற பெயர் கொண்ட அரக்கத்
தலைவர்களுடன்; எழுந்து – (மாபக்கனும் புகைநிறக் கண்ணனும்
சேர்ந்து) எழுந்து; உலகு ஏழும் வென்றவன் – உலகு ஏழனையும்
வென்றவனாகிய (இராவணன்); ஏவலின் – கட்டளைப்படி; சென்றன
மால்கரி – சென்றனவாகிய மத மயக்கம் கொண்ட யானைகள்; தேர் –
தேர்; பரி – குதிரை; செல்ல – என்பவைகள் செல்ல; குன்று இனம்
என்ன நடந்தனர் – மலைகளின் கூட்டம் என்று கூறுமாறு நடந்து; கோட்பால் முன்னம் விரைந்தார் –
கொள்கையால் முன்னால் விரைந்து சென்றார்கள்.
————
8324. விண்ணை விழுங்கிய தூளியின் விண்ணோர்
கண்ணை விழுங்குதலின், கரை காணார்;
எண்ணை விழுங்கிய சேனையை, யாரும்,
பண்ணை விழுங்க உணர்ந்திலர், பண்பால்.–23-
விண்ணை விழுங்கிய தூளியின் – (அவர்கள் நால்வகைப் படையும்
செல்லுதலினால் தோன்றிய) வானத்தை மறைக்கும் அளவு எழுந்த
புழுதியானது; விண்ணோர் கண்ணை விழுங்குதலின் – தேவர்களின்
கண்களை மறைத்ததனால்; கரை காணார் – (அவர்களும் கூடப் படை
அளவின்) எல்லையைக் காணாதவராயினர்; எண்ணை விழுங்கிய
சேனையை – எண்ணிக்கையின் அளவைக் கடந்த (அந்த அரக்கர்)
படை; பண்ணை – அமைந்துள்ள வகையை; யாரும் – எவரும்;
பண்பால் – முறையாக; விழுங்க உணர்ந்திலர் – முற்றும்
உணராதவராயினர்.
—————–
8325. கால் கிளர் தேரொடு, கால் வரையோடும்,
மேல் கிளர் பல் கொடி வெண் திரை வீச,-
மால் கடலானது, மாப் படை-வாள்கள்
பால் கிளர் மீனிடை ஆடிய பண்பால்.–24-
கால்கிளர் தேரொடு – காற்றுப்போல் விரைந்து செல்லுகின்ற
தேர்ப்படையிலும்; கால் வரையோடும் – கால் படைத்த மலை போன்ற
யானைப் படையிலும்; மேல்கிளர் பல் கொடி – மேலே விளங்குகின்ற
பல கொடிகள் ஆகிய; வெண்திரை வீச – வெண்மையான அலைகள்
வீச; வாள்கள் – வாள் படைகள்; மாப்படை – பெரிய படையின்; பால்
கிளர் மீனிடை – இடத்து விளங்குகின்ற மீன்போல; ஆடிய பண்பால்
– அசைந்து ஆடிய தன்மையினால்; மால் கடலானது – பெரிய கடல்
போல விளங்கியது.
———-
8326. பேரி கலித்தன, பேர் உலகைச் சூழ்
ஏரி கலித்தன ஆம் என; யானை
கார் இகலிக் கடலோடு கலித்த;
மாரி கலித்தென, வாசி கலித்த.–25-
பேர் உலகைச் சூழ் – பெரிய உலகத்தைச் சூழ்ந்துள்ள; ஏரி
கலித்தன ஆம் என – கடல்கள் ஒலித்தனவாம் எனும் படியாக; பேரி
கலித்தன – பேரிகைகள் ஒலித்தன; யானை கார் இகலிக் – யானைகள்
மேகங்களின் (இடி ஒலியோடு) மாறுகொண்டு; கடலோடு கலித்த – கடல்
ஒலிபோல் ஒலித்தன; மாரி கலித்தென – மழை ஒலித்தது என்னும்
படி; வாசி கலித்த – குதிரைகள் ஒலித்தன.
———–
8327. சென்றன சென்ற சுவட்டொடு செல்லா
நின்று பிணங்கிய, கல்வியின் நில்லா,
ஒன்றினை ஒன்று தொடர்ந்தன, ஓடைக்
குன்று நடந்தனபோல்-கொலை யானை.–26-
கொலையானை – கொல்லும் தன்மை உள்ள யானைகள்; சென்றன
சென்ற சுவட்டொடு செல்லா – சென்றனவாகிய (படைகள்) சென்ற
அடிச்சுவட்டினில் செல்லாமல்; நின்று பிணங்கிய – நின்ற
இடத்திலேயே நின்று மாறுபாடு கொண்டனவும்; கல்வியின் நில்லா –
(பாகர்களின்) சொல்லுக்கு (அடங்கி) நிற்காதனவும் ஆகி; ஓடைக்குன்று
நடந்தன போல் – முகபடாம் அணிந்த மலைகள் நடந்தன போல;
ஒன்றினை ஒன்று தொடர்ந்தன – ஒன்றினை ஒன்று தொடர்ந்து
சென்றன.
———–
8328. மாக நெடுங் கரம் வானின் வழங்கா,
மேக நெடும் புனல் வாரின, மேன்மேல்,
போக விலங்கின, உண்டன போலாம்-
காக நெடுங் களி யானை களிப்பால்.–27
காக நெடுங்களி யானை – காகங்கள் சூழ்ந்துவரும் பெரிய மதம்
கொண்ட யானைகள்; களிப்பால் – மத மயக்கத்தால்; நெடுங்கரம் –
(தங்களது) நீண்ட துதிக்கையை; மாகவானின் – உயர்ந்த வானத்தில்;
வழங்கா – செலுத்தி; மேக நெடும் புனல் வாரின – மேகங்களில்
உள்ள மிகுதியான நீரினை வாரி முகந்து; மேன்மேல் போக விலங்கின
– மேன்மேல் போதலைத் தவிர்த்தனவாய்; உண்டன போலாம் – (அந்த நீரினை)
உண்பனவாயின.
———-
8329. எரிந்து எழு பல் படையின் ஒளி, யாணர்
அருங் கல மின் ஒளி, தேர் பரி யானை
பொருந்திய பண் ஒளி, தார் ஒளி, பொங்க,
இரிந்து பேர் இருள், எண் திசைதோறும்.
எரிந்து எழு பல்படையின் ஒளி – ஒளிர்ந்து எழுகின்ற பல்வகைப்
படைக்கலங்களின் ஒளி; யாணர் அருங்கல மின்ஒளி – புதியதாக
(வீரர்கள் அணிந்து உள்ள) அரிய அணிகலன்களின் மின்னுகின்ற
ஒளி; தேர் பரி யானை – தேர், குதிரை, யானை; பொருந்திய பண்
ஒளி – (ஆகியவற்றுக்குச் செய்து) அமைத்த அலங்காரப்
(பொருள்களின்) ஒளி; தார் ஒளி – பொன் மாலைகளின் ஒளி; பொங்க
– (ஆகியவை எங்கும்) மிகுதியாக இருப்பதனால்; எண்திசை தோறும்
– எட்டுத் திசைகள் தோறும்; (செறிந்திருந்த) பேர் இருள் இரிந்தது –
மிக்க இருள் (கெட்டு) ஓடியது.
————
வீடணன் வருபவர் பற்றி இராமனுக்கு உரைத்தல்
8330. எந்திய சேனையை, ஈசன் எதிர்ந்தான்,
‘வெய்து இவண் வந்தவன், மாயையின் வெற்றி
செய்தவனேகொல்? தெரித்தி இது’ என்றான்;
ஐயம் இல் வீடணன் அன்னது உரைத்தான்:–29-
ஈசன் – (அனைத்துயிர்க்கும் உலகங்களுக்கும் தலைவனாகிய)
இராமன்; எய்திய சேனையை எதிர்ந்தான் – (போர்க்களம்) வந்து
அடைந்த (அரக்கர்) படையை எதிர்கொண்டு கண்டு; வெய்து இவண்
வந்தவன் – மிகுசினம் கொண்டு இவ்விடத்துக்கு வந்தவன்; மாயையின்
– மாயையால்; வெற்றி செய்தவனே கொல் – வெற்றியை உண்டாக்கிக்
கொண்ட இந்திரசித்தன் தானோ? இது தெரித்தி என்றான் – இதனைத்
தெரிவிப்பாய் என்று கேட்டான்; ஐயம் இல்வீடணன் – (வந்தவன்
யாவன் என்பதை) ஐயம் இல்லாமல் உணர்ந்தவன் ஆகிய வீடணன்;
அன்னது உரைத்தான் – அது பற்றிச் சொன்னான்.
—————
8331. ‘முழைக் குலச் சீயம் வெம் போர் வேட்டது முனிந்தது
என்ன,
புழைப் பிறை எயிற்றுப் பேழ் வாய், இடிக் குலம்
பொடிப்ப, ஆர்த்து,
தழைப் பொறி வாளிப் புட்டில் கட்டி, வில் தாங்கி,
சார்வான்.
மழைக் குரல் தேரின் மேலான், மாபெரும்பக்கன் மன்னோ.–30-
முழைக்குலச்சீயம் – குகையில் வாழுகின்ற சிங்கம்; வெம்போர்
வேட்டது முனிந்தது என்ன – கொடிய போரினை விரும்பிச் சினங்
கொண்டது என்னும்படி; புழைப்பிறை – பிளவு பட்ட பிறை போன்ற;
எயிற்றுப் பேழ்வாய் – பற்களை உடைய பிளந்த வாயினால்;
இடிக்குலம் பொடிப்ப ஆர்த்து – இடிகளின் கூட்டமும்
பொடியாகும்படியாகப் பேரொலி செய்து; பொறி தழைவாளிப்
புட்டில்கட்டி – நெருப்புப் பொறியினை மிகுதியாகக் கக்குகின்ற
அம்புகள் (நிறைந்த) அம்பு அறாத்தூணியை (முதுகில் கட்டி);
வில்தாங்கி – வில்லைப் பிடித்து; மழைக்குரல் தேரின் மேலான்
சார்வான் – இடிபோன்று (சக்கரங்கள்) ஒலியை எழுப்பும் தேரின்
மேலேறியவனாய் வருபவன்; மாபெரும்பக்கன் – மாபக்கன்
(என்பவன்). மன், ஓ – அசைநிலை.
—————
8332. ‘சிகை நிறக் கனல் பொழி தெறு கண் செக்கரான்,
பகை நிறத்தவர் உயிர் பருகும் பண்பினான்,
நகை நிறப் பெருங் கடைவாயை நக்குவான்,
புகைநிறக்கண்ணவன், பொலம் பொன் தேரினான்.–31-
சிகை நிறக்கனல் – தன் தலைமுடியின் செந்நிறமுள்ள நெருப்பை;
பொழி – வெளியிடுகிற; தெறுகண் – அழிக்கவல்ல கண்கள்; செக்கரான்
– சிவந்த நிறமாக உள்ளவனும்; பகை நிறத்தவர் – பகைத் தன்மை
கொண்டவர்களுடைய; உயிர் பருகும் பண்பினான் – உயிரைக்
குடிக்கும் தன்மை உள்ளவனும்; நகைநிறப் பெருங்கடை வாயை –
சிரிப்போடு கூடிய நிறம் பொருந்திய (தன்)பெரிய கடைவாயை; நக்குவான் – (நாக்கினால் அடிக்கடி)
நக்குபவனும் ஆகிய; பொலம்பொன் தேரினான் – பொன்னால் ஆகிய
அழகிய தேரில் ஏறி இருப்பவன்; புகை நிறக் கண்ணவன் – புகை
நிறக்கண்ணன் (என்பவனாவான்.)
———-
8333. ‘பிச்சரின் திகைத்தன பெற்றிப் பேச்சினான்,
முச் சிரத்து அயிலினான், மூரித் தேரினான்,
“இச் சிரம் உம்மதே?” என வந்து எய்துவான்,
வச்சிரத்து எயிற்றவன், மலையின் மேனியான்.–32-
பிச்சரின் திகைத்தன – பித்தரைப் போன்று திகைத்தனவாகிய;
பெற்றிப் பேச்சினான் – தன்மை உடைய பேச்சினை உடையவனும்;
முச்சிரத்து அயிலினான் – முத்தலையை உடைய சூலப் படையைக்
(கையில்) ஏந்தியவனும்; மூரித்தேரினான் – வலிமையான தேரினை
உடையவனும்; மலையின் மேனியான் – மலை போன்ற உடம்பினை
உடையவனும் ஆகி; இச்சிரம் உம்மதே என – இந்த (என்னுடைய)
தலை உங்களுக்கே என்று; (கூறுவது போல) வந்து எய்துவான் –
(போருக்கு) வந்து அடைந்தவன்; வச்சிரத்து எயிற்றவன் – வச்சிரத்து
எயிற்றவன் (என்பவன் ஆவான்).
————–
8334. ‘காலையும் மனத்தையும் பிறகு காண்பது ஓர்
வாலை உளைப் புரவியன், மடித்த வாயினான்,
வேலையின் ஆர்ப்பினன், விண்ணை மீக்கொளும்
சூலம் ஒன்று உடையவன், பிசாசன், தோன்றுவான்.–33-
காலையும் – காற்றினையும்; மனத்தையும் – மனத்தினையும்; பிறகு
காண்பது – பின்னிடச் செய்யும் (தன்மை உள்ள); ஓர் வாலை உளைப்
புரவியன் – ஒப்பற்ற வெண்மையான பிடரிமயிரை உடைய குதிரையை
உடையவனும்; மடித்த வாயினான் – கடித்த உதடுகளை உடையவனும்;
வேலையின் ஆர்ப்பினன் – கடல் போல் பேரொலி செய்பவனும்;
விண்ணை மீக்கொளும் – விண்ணுலகத்தையும் வெல்லவல்ல; சூலம்
ஒன்று உடையவன் – சூலப்படை ஒன்றினை உடையவனும் (ஆகித்);
தோன்றுவான் – தோன்றுபவன்; பிசாசன் – பிசாசன் (என்பவன்).
————
8335. ‘சூரியன்பகைஞன், அச் சுடர் பொன் தேரினன்,
நீரினும் முழக்கினன், நெருப்பின் வெம்மையான்;
ஆரிய! வேள்வியின் பகைஞன் ஆம்அரோ,
சோரியும் கனலியும் சொரியும் கண்ணினான்.–34-
ஆரிய – தலைவனே; அச்சுடர் பொன் தேரினன் – அந்த ஒளி
விடுகிற அழகிய தேரினை உடையவனும்; நீரினும் முழக்கினன் –
கடலினும் மிக்க முழக்கினை உடையவனும்; நெருப்பின் வெம்மையான்
– நெருப்பைக் காட்டிலும் சினமுடையவனும் (ஆகிய இவன்); சூரியன்
பகைஞன் – சூரியன் பகைவன் (என்பவன்); சோரியும் – இரத்தமும்;
கனலியும் – நெருப்பும்; சொரியும் கண்ணினான் – வெளிப்படுகிற
கண்களை உடைய (இவன்); வேள்வியின் பகைஞன் ஆம் –
வேள்வியின் பகைஞன் (என்ற பெயர் உடையவன்) ஆம் ஆகும்.
—————
8336. ‘சாலி வண் கதிர் நிகர் புரவித் தானையான்,
மூல வெங் கொடுமையின் தவத்தின் முற்றினான்,
சூலியும் வெருக்கொளத் தேரில் தோன்றுவான்,
மாலி’ என்று, அடி முறை வணங்கிக் கூறினான்.–35-
சாலிவண் கதிர்நிகர் – செந்நெல்லின் வளமை பொருந்திய
கதிர்களை ஒத்த; புரவித் தானையான் – (வளம் மிக்குக் கொழுத்த)
குதிரைப் படையை உடையவன்; மூல வெங்கொடுமையின் –
பழமையாக உள்ள வெவ்விய கொடுமையோடு; தவத்தின் முற்றினான்-
தவத்திலும் நிறைந்தவன்; சூலியும் – சிவனும்; வெருக்கொளத் –
அச்சம் கொள்ளும்படி; தேரில் தோன்றுவான் – தேரில்
தோன்றுபவனாகிய (அவன்); மாலி என்று – மாலி (என்னும்
பெயரினன்) என்று; அடிமுறை வணங்கிக் – (இராமனது) திருவடிகளை
முறைப்படி வணங்கி; கூறினான் – (வீடணன்) கூறினான்.
————-
8337. ஆர்த்து எதிர் நடந்தது, அவ் அரியின் ஆர்கலி
தீர்த்தனை வாழ்த்தி; உற்று இரண்டு சேனையும்
போர்த் தொழில் புரிந்தன; புலவர் போக்கு இலார்;
வேர்த்து உயிர் பதைத்தனர், நடுங்கி விம்மியே.–36-
தீர்த்தனை வாழ்த்தி – தூயவன் ஆகிய இராமனை வாழ்த்திவிட்டு;
அவ்அரியின் ஆர்கலி – அந்தக் குரங்குப் படைகளாகிய கடல்;
ஆர்த்து எதிர் நடந்தது – பேரொலி செய்துகொண்டு (அரக்கப்
படையின்) எதிரில் சென்றது; உற்று இரண்டு சேனையும் – (அதற்குப்
பிறகு) நெருங்கி இரு படைகளும்; போர்த் தொழில் புரிந்தன –
போர்த்தொழிலைச் செய்தன; புலவர் – (அதைக் கண்ட) தேவர்கள்;
போக்கிலார் – விலகிச் செல்லமாட்டாதவராய்; நடுங்கி – உடல் நடுங்கி;
விம்மியே – மனம் விம்மிதமுற்று; வேர்த்து – உடல் வியர்த்து;
உயிர்பதைத்தனர் – உயிர் துடித்தனர்.
———–
8338. கல் எறிந்தன, கடை உருமின்; கார் என
வில் எறிந்தன, கணை; விசும்பின் மேகத்துச்
செல் எறிந்தன எனச் சிதறி வீழ்ந்தன,
பல்; எறிந்தன தலை, மலையின் பண்பு என.–37-
கடை – ஊழிக்கடைக்காலத்தில்; உருமின் கார் என – இடியைக்
கொண்ட மேகம் என்னும்படி; கல் எறிந்தன – வானரப் படைகள்
கற்களை (வீசி) எறிந்தன; வில் எறிந்தன கணை – அரக்கர்களுடைய
விற்கள் அம்புகளைத் தூவின; (அதனால்) விசும்பின்மேகத்துச் செல்
எறிந்தன எனக் – ஆகாயத்தின் கண் உள்ள மேகங்களில் இருந்து
இடி விழுந்த (போது) மலையின் பண்பு என – மலைகளின்
தன்மையைப் போல; பல் எறிந்தன தலை- குரங்குகளின் பற்கள்
சிதறித் தெரித்த தலைகள்; சிதறி வீழ்ந்தன- சிதறிப் போர்க்களம்
(எங்கும்) விழுந்தன.
—————
8339. கடம் படு கரி பட, கலின மாப் பட,
இடம் படு சில்லியின் ஈர்த்த தேர் பட,
உடம்பு அடும் அரக்கரை, அனந்தன் உச்சியில்
படம் படும் என, படும் கவியின் கல் பல.–38-
கடம்படு கரிபட – மதம் பொருந்திய யானைகள் இறந்துபடவும்;
கலினமாப்பட – கல்லணை பூட்டிய குதிரைகள் இறந்துபடவும்;
இடம்படு சில்லியின் ஈர்த்த தேர்பட – இடம் அகன்ற சக்கரங்கள்
பூட்டப்பட்டுக் (குதிரைகளால் (அல்) பிற உயிரினங்களால்) இழுத்துச்
செல்லப்படுகிற தேர்கள் அழிந்துபடவும்; உடம்பு அடும் அரக்கரை –
உடம்பு அழிக்கப்படும் அரக்கப் படையினரை; அனந்தன் உச்சியில்
படம்படும் என – ஆதிசேடனது தலையின் உச்சியில் உள்ள படமும் அழிந்துவிடும் என்று
(கண்டோர்) என்ணும்படியாக; கவியின் கல்பல படும் – குரங்குகள்
எறிந்த கற்கள் பல வீழ்த்தும்.
————–
8340. கொலை ஒடுங்கா நெடும் புயத்தின் குன்றொடும்,
நிலை நெடுங் காலொடும், நிமிர்ந்த வாலொடும்,
மலையொடும், மரத்தொடும், கவியின் வல் நெடுந்
லையொடும், போம்-விசைத்து எறிந்த சக்கரம்.–39-
விசைத்து எறிந்த சக்கரம் – (அரக்கவீரர்) விரைவாக எறிந்த
சக்கரவடிவமான அம்புகள்; கொலை ஒடுங்கா – கொலைத் தொழில்
செய்தலில் (குறைவுபட்டு) ஒடுங்காத; நெடும் புயத்தின் குன்றொடும் –
(வானரப்படையினர் தங்களது) நீண்ட தோள்களாகிய மலையோடும்;
நிலை நெடுங் காலொடும் – (போரில் புறமுதுகிடாது) நிலைபெற்று
நிற்கும் நீண்ட கால்களோடும்; நிமிர்ந்த வாலொடும் – (சினத்தால்)
நிமிர்ந்து நிற்கும் வாலொடும்;மலையொடும் – (எதிரிகள் மீது வீசக்
கையில் தாங்கிய) மலைகளோடும்; மரத்தொடும் – மரங்களோடும்;
கவியின் – குரங்குகளின்; வல்நெடும் தலையொடும் – வலிய நீண்ட
தலைகளோடும்; போம் – (அலுத்துக்கொண்டு) போகும்.
————
8341.
ஆண் தகைக் கவிக் குலத் தலைவர் ஆக்கையைக்
கீண்டன; புவியினைக் கிழித்த-மாதிரம்
தாண்டுவ, குலப் பரி, மனத்தின் தாவுவ,
தூண்டினர் கை விசைத்து எறிந்த தோமரம்.–40-
மாதிரம் தாண்டுவ – திசைகளைத் தாண்டுவனவாயும்; மனத்தின்
தாவுவ – மனத்தைப் போலத் தாவிச்செல்வனவாயும்; (உள்ள) பரி
குலம் – குதிரைப்படைக கூட்டத்தைத்; தூண்டினர் –
செலுத்தியவர்களான (வீரர்களின்); கைவிசைத்து – கையில் இருந்து
வேகமாக; எறிந்த தோமரம் – எறியப்பட்ட தோமரம் என்னும்
படைக்கலம்; ஆண்தகைக் – ஆண்மைத் தன்மை உள்ள; கவிக்குலத்
தலைவர் – குரங்குப் படைத்தலைவர்களின்; ஆக்கையைக் கீண்டன –
உடம்புகளைக் கிழித்தனவாய்; புவியினைக் கிழித்த- (பூமியில் பட்டு)
பூமியைப் பிளக்கச் செய்தன.
————-
8342. சில்லி அம் தேர்க் கொடி சிதைய, சாரதி
பல்லொடு நெடுந் தலை மடிய, பாதகர்
வில்லொடு கழுத்து இற, பகட்டை வீட்டுமால்-
கல்லெனக் கவிக்குலம் வீசும் கல்அரோ.–41-
கல்லெனக் – கல் என்ற ஒலி தோன்றும்படியாகக்; கவிக்குலம்
வீசும் – குரங்குக் கூட்டங்கள் வீசும்; கல் – மலைகள்;
சில்லி அம்தேர்க்கொடி சிதைய – சக்கரங்களை உடைய அழகிய
தேரின் கண்கட்டப்பட்டுள்ள கொடிகள் சிதைந்து அழியவும்; சாரதி
பல்லொடு நெடுந்தலை மடிய – தேர்ப்பாகர்களின் பற்களும், நீண்ட
தலையும் அறுபட்டு விழவும்; பாதகர் வில்லொடு கழுத்து இற-
பாதகர்களான அரக்கர்களுடைய வில்லும் கழுத்தும் அறுபட்டு
விழவும் (செய்து அதற்குமேல்) பகட்டை வீட்டுமால் – யானைகளையும்
அழிக்கும்.
———–
8343.
கரகம் உந்திய மலை முழையில், கட் செவி
உரகம் முந்தின என ஒளிக்கும், ஒள் இலை
அரகம் முந்தின நெடுங் கவியின் ஆக்கையில்-
துரகம் உந்தினர் எடுத்து எறியும் சூலமே.–42-
துரகம் உந்தினர் – குதிரைகளைச் செலுத்தும் (அரக்க வீரர்);
எடுத்து எறியும் – (வானரப்படையினர்மீது) எடுத்து வீசிய; ஒள் இலை
சூலமே – ஒளி பொருந்திய இலை வடிவமாக உள்ள சூலப் படை;
கரகம் உந்திய மலை முழையில் – நீர்க்குடத்தைப் போன்று
வெளிப்பட்டுத் தோன்றும் மலைக்குகைகளில்; கட்செவி உரகம்
உந்தின என – கண்ணே செவியாக உடைய பாம்புகள் புகுந்தன
எனும்படி; அரகம் முந்தின – போர்க்களத்துக்கு முந்திச் சென்ற;
நெடுங்கவியின் ஆக்கையில் – நீண்ட குரங்குகளின் உடலங்களில்;
ஒளிக்கும் – புகுந்து மறையும்.
————–
8344.
வால் பிடித்து அடக்கும் வானரத்தை, மால் கரி;
கால் பிடித்து அடிக்கும், அக் கரியினைக் கவி;
தோல் பிடித்து அரக்கரை எறியும், சூர் முசு;
வேல் பிடித்து எறிவர், அம் முசுவை வெங் கணார். –43-
மால்கரி – மத மயக்கம் கொண்ட யானை; வானரத்தை –
குரங்குப்படையினரை; வால் பிடித்து அடிக்கும் – வாலைப் பிடித்து
(நிலத்தில்) அடிக்கும்; கவி – (தப்பிய) வானரங்கள்; அக்கரியினைக் –
அந்த யானைகளைக்; கால் பிடித்து அடிக்கும் – காலைப் பிடித்து
இழுக்கும்; சூர்முசு – அச்சம் தரும் குரங்குகள்; தோல் பிடித்து –
(அரக்கர் வீசிய) கேடயங்களைக் (கையில்) பிடித்து; அரக்கரை எறியும்
– (அந்த) அரக்கர்கள் மீது மோதும்; அம்முசுவை – அந்தக்
குரங்குகளை; வெங்கனார் – கொடிய கண்களை உடைய அரக்கர்கள்;
வேல் பிடித்து எறிவர் – வேலைப்பிடித்து (வீசி) எறிந்து அழிப்பர்.
————–
8345. முற்படு கவிக்குலம் முடுக வீசிய
கல் பட, களம் படும், அரக்கர் கார்க் கடல்;
பல் படு தலை படப் படுவ, பாதகர்
வில் படு கணை பட, குரங்கின் வேலையே.–44-
முற்படு கவிக்குலம் – போர்க்களத்தில் முற்பட்டு வருகின்ற குரங்குக்
கூட்டங்கள்; முடுக வீசிய – விரைவாக வீசிய; கல்பட – மலைகள்
படுதலினால்; அரக்கர் – அரக்கப்படையாகிய கரிய கடல்; களம்படும் –
களத்தில் படும்; பாதகர் – பாதகர்களாகிய அரக்கர்; வில் படுகணை
பட – வில்லில் இருந்து வெளிப்படுகிற அம்புகள் படுதலினால்;
பல்படுதலை பட – பற்களைக் காட்டுகின்ற தலை (அறு) பட; குரங்கின்
வேலையே படுவ – குரங்குப் படைகளாகிய கடல் அழியும்.
————–
8346. கிச்சு உறு கிரி பட, கிளர் பொன் தேர் நிரை
அச்சு இற, செல்கில, ஆடல் வாம் பரி-
எச்சு உறு துயரிடை எய்த, ஈத்து உணா
முச்சு இறு வாழ்க்கையின் மூண்டுளோர் என.–45-
எச்சு உறு துயரிடை எய்த – இளைத்தலை உண்டாக்கும்
வறுமைத்துயர் (தங்களை அடைந்ததனால்); ஈத்து உணா –
(பிறருக்குக்) கொடுத்து உண்ணாத; முச்சு இறு வாழ்கைகையின் –
மூச்சு அற்றுப்போகும் உலக வாழ்க்கையில்; மூண்டுளோர் என-
சிக்கித் தவிப்பவர்கள் போல; கிச்சு உறுகிரிபட – நெருப்பைக்
கொண்ட மலைகள் விளங்குவது போல் விளங்குகின்ற; கிளர் பொன்
தேர் நிரை – விளங்குகிற பொன்னால் ஆகிய தேர்களின் வரிசை; அச்சு இற – அச்சு இற்றுப்போக; ஆடல்வாம் பரி –
வலிமை பொருந்தியதாகவுள்ள குதிரைகள்; செல்கில – (அத்தேர்களை
இழுத்துச்) செல்லமுடியாதனவாயின.
———
8347. மீயவர் யாவரும் வீய, வெங் கரி
சேயிருங் குருதியில் திரிவ, சோர்வு இல,-
நாயகர் ஆளொடும் அவிய, நவ்வி தம்
பாயொடும் வேலையில் திரியும் பண்பன.–46-
மீயவர் – (தம்) மீது இருப்பவர்கள்; யாவரும் – எல்லோரும்; வீய-
(பகைவர்களால்) இறந்து ஒழிய; வெங்கரி – கொடிய யானைகள்;
சோர்வு இல – சோர்வு இல்லாமல்; சேயிருங் குருதியில் – சிவந்த
மிக்க குருதி வெள்ளத்தில்; திரிவ – திரிவன ஆயின; (இக்காட்சி)
நாயகர் – மாலுமிகள் யாவரும்; ஆளொடும் – பணியாளர்களுடன்;
அவிய – அழிந்திட; நவ்வி – கப்பல்கள்; வேலையில் – கடலில்; தம்
பாயொடும் – தமது பாய் மரத்துடன்; திரியும் பண்பன –
சுற்றித்திரியும் தன்மைய வாய்த்தோன்றின.
————-
8348. படையொடு மேலவர் மடிய, பல் பரி,
இடை இடைதர விழுந்து இழிந்த பண்ணன,
கடல் நெடுங் குருதிய,-கனலி காலுறு
வடவையை நிகர்த்தன-உதிர வாயன.–47-
பல்பரி – பல குதிரைகள்; படையொடு – (தங்கள்) படைக்
கலங்களுடன்; மேலவர் மடிய – மேலே உள்ள வீரர்கள் அழிந்திட;
கடல் நெடுங் குருதிய – கடல் போன்ற பெருங்குருதியில் சிக்கித்
தவிப்பனவும்; இடை இடை தர விழுந்து – இடை இடையே தடுக்கி
விழுந்து; இழிந்த பண்ணன – அழுந்தும் தன்மை உடையனவும்;
உதிரவாயன – குருதி வடியும் வாயினை உடையனவும் ஆகிய அவை);
கனலி காலுறு – நெருப்பைக் கக்குகின்ற; வடவையை நிகர்த்தன –
(உலக அழிவுக்காலத்தில் கடலிடையே குதிரை வடிவில் தோன்றும்)
வடவைக் கனலை ஒத்தன.
———-
8349.
எயிற்றொடு நெடுந் தலை, இட்ட கல்லொடும்
வயிற்றிடைப் புக, பல பகலும் வைகிய
பயிற்றியர் ஆயினும், தெரிக்கும் பண்பு இலார்,
அயிர்ப்பர், தம் கணவரை அணுகி அந் நலார்.–48-
எயிற்றொடு – பற்களுடன்; நெடுந்தலை- கூடிய (அரக்க வீரரின்)
பெரிய தலைகள்; இட்ட கல்லொடும் – (வானரப் படையினர்) வீசிய
மலைகளினால்; வயிற்றிடைப் புக – (அவர்களது) வயிற்றில் புகுந்து
விட; அந்நலார் – அவர்களுடைய மனைவியர்; பல பகலும் வைகிய –
பல நாட்கள் உடன் இருந்து பழகிய; பயிற்றியர் ஆயினும் –
பயிற்சியை உடையவர்களாய் இருந்தும்; தம் கணவரை அணுகி –
தங்கள் கணவர்களுடைய (உடலை) நெருங்கி; தெரிக்கும் பண்பு இலார்
அயிர்ப்பர் – ஆய்ந்து அறிதற்கு ஏற்ற பண்பு இல்லாதவர்களாய்
ஐயங்கொள்வர்.
————-
8350.
தூமக்கண்ணனும் அனுமனும் எதிர் எதிர் தொடர்ந்தார்;
தாமத்து அங்கதன் மாபெரும்பக்கனைத் தடுத்தான்;
சேமத் திண் சிலை மாலியும் நீலனும் செறுத்தார்;
வாமப் போர் வயப் பிசாசனும் பனசனும் மலைந்தார்.–49-
தூமக்கண்ணனும் அனுமனும் – புகை நிறக்கண்ணனும், அனுமனும்;
எதிர் எதிர் தொடர்ந்தார் – எதிர் எதிராகப் போரிடத்
தொடங்கினார்கள்; தாமத்து அங்கதன் – மாலையை அணிந்துள்ள
அங்கதன்; மாபெரும் பக்கனைத் தடுத்தான் – மாபக்கனைப் போரில்
தடுத்தான்; சேமத்திண் சிலை மாலியும் – பாதுகாவலாக வலிய
வில்லினைக் கொண்ட மாலியும்; நீலனும் செறுத்தார் – நீலனும்
சினந்து போர் செய்தார்கள்; வாமப் போர் வயப் பிசாசனும் – அச்சம்
தருகிற வலிய போர் உடற்றுகிற பிசாசனும்; பனசனும் மலைந்தார் –
பனசனும் போர் செய்தார்கள்.
————-
8351. சூரியன் பெரும்பகைஞனும் சூரியன் மகனும்
நேர் எதிர்ந்தனர்; நெருப்புடை வேள்வியின்பகையும்
ஆரியன் தனித் தம்பியும் எதிர் எதிர் அடர்ந்தார்;
வீர வச்சிரத்துஎயிற்றனும் இடபனும் மிடைந்தார்.–50-
சூரியன் பெரும் பகைஞனும் – சூரியன் பகைஞனும்; சூரியன்
மகனும் – சூரியன் மகன் ஆகிய சுக்கிரீவனும்; நேர் எதிர்ந்தனர் –
நேரிடையாக எதிர்த்தார்கள்; நெருப்புடை வேள்வியின் பகையும் –
நெருப்புடைய வேள்வியின் பகைஞனும்; ஆரியன் தனித்தம்பியும் –
தலைவனாகிய இராமனது ஒப்பற்ற தம்பியாகிய இலக்குவனும்; எதிர்
எதிர் அடர்ந்தார் – எதிர் எதிராக நின்று போர் செய்தார்கள்; வீர
வச்சிரத்து எயிற்றனும் – வீரம் பொருந்திய வச்சிரத்து எயிற்றவனும்;
இடபனும் – இடபனும்; மிடைந்தார் – நெருங்கிப் போர் செய்தார்கள்.
———–
8352. வெங் கண் வெள் எயிற்று அரக்கரில், கவிக் குல வீரச்
சிங்கம் அன்ன போர்த்தலைவரில், தலைவராய்த் தெரிந்தார்,
அங்கு அமர்க்களத்து ஒருவரோடு ஒருவர் சென்று அடர்ந்ார்;
பொங்கு வெஞ் செருத் தேவரும் நடுக்குறப் பொருதார்.–51-
வெங்கண் வெள் எயிற்று அரக்கரில் – கொடுமையான
கண்களையும் வெண்மையான பற்களையும் உடைய அரக்கர்களிலும்;
கவிக்குல வீரச்சிங்கம் அன்ன – குரங்குக் கூட்டத்தில் தோன்றிய
வீரச் சிங்கங்களைப் போன்ற; போர்த் தலைவரில் – போரில் சிறந்த
தலைவர்களிலும்; தலைவராய்த் தெரிந்தார் – தலைவர்களாய்
விளங்கியவர்கள்; அங்கு அமர்க்களத்து – அந்தப் போர்க்களத்தில்;
ஒருவரோடு ஒருவர் – ஒருவரோடொருவர்; சென்று அடர்ந்தார் –
சென்று நெருங்கியவர்களாகி; தேவரும் நடுக்குற – (போர் காணவந்த)
தேவர்களும் அஞ்சும்படி; பொங்கு வெஞ்செரு – சினம் மிகுகிற
கொடிய போரை; பொருதார் – செய்தார்கள்.
———
8353. இன்ன காலையின், ஈர்-ஐந்து வெள்ளம், வந்து ஏற்ற
மின்னும் வெள் எயிற்று அரக்கர்தம் சேனையில், வீரர்
அன்ன வெஞ் சமத்து ஆறு வெள்ளத்தையும் அவித்தார்;
சொன்ன நாலையும் இலக்குவன் பகழியால் தொலைத்தான்.–52-
இன்ன காலையில் – இவ்வாறு நிகழும் நேரத்தில்; ஈர் ஐந்து
வெள்ளம் வந்து – பத்து வெள்ளமாக வந்து; ஏற்ற – போர் ஏற்ற;
மின்னும் வெள் எயிற்று அரக்கர் – ஒளி உடைய வெண்மையான
பற்களை உடைய அரக்கர்; தம் சேனையில் – தம் படையி்ல்; அன்ன
வெஞ்சமத்து – அத்தகைய கொடிய போர்க்களத்து; வீரர் –
வானரப்படை வீரர்; ஆறு வெள்ளத்தையும் அவித்தார் – ஆறு
வெள்ளத்தை அழித்தார்கள்; சொன்ன நாலையும் – (மீதியாகச்)
சொல்லப்படுகிற நான்கு வெள்ளத்தையும்; பகழியால் – அம்புகளால்;
இலக்குவன் அழித்தான் – இலக்குவன் அழித்து விட்டான்;
———–
8354. உப்புடைக் கடல் மடுத்தன உதிர நீர் ஓதம்
அப்பொடு ஒத்தன கடுத்தில; ஆர்கலி முழுதும்
செப்பு உருக்கு எனத் தெரிந்தது; மீன் குலம் செருக்கித்
துப்பொடு ஒத்தன, முத்துஇனம் குன்றியின் தோன்ற.–53-
உப்புடைக் கடல் – உப்பைக் கொண்ட (நீர் நிறைந்த) கடலில்;
மடுத்தன – சென்று சேர்ந்தனவாகிய; உதிர நீர் ஓதம் – குருதி நீர்ப்
பெருக்கு; அப்பொடு ஒத்தன கடுத்தில – கடல் நீருடன் கலந்ததாகத்
தோன்றவில்லை, (அதனால்); ஆர்கலி முழுதும் – ஒலிக்கின்ற கடல்
முழுவதும்; செப்பு உருக்கு எனத் தெரிந்தது – செம்பை உருக்கின
உருக்குப் போலச் (சிவந்தத நிறம் கொண்டதாய்க்) தோன்றியது; முத்து
இனம் – (அந்தக் கடலில் உள்ள) முத்துத் தொகுதிகள்; குன்றியின்
தோன்ற – (சிவந்த நிறமுடைய) குன்றி மணியின் தொகுதிகளைப்
போல் விளங்க; செருக்கி – (இறைச்சி உணவு கிடைத்தமையால்)
செருக்குக் கொண்டு, திரிந்த; மீன்குலம் – மீன் கூட்டங்கள் எல்லாம்; துப்பொடு – பவளத்தோடு; ஒத்தன – ஒத்து
விளங்கின.
———–
8355.
தத்து நீர்க் கடல் முழுவதும் குருதியாய்த் தயங்க,
சித்திரக் குலப் பல் நிற மணிகளும் சேந்த;
ஒத்து வேறு உருத் தெரியல, உயர் மதத்து ஓங்கல்
மத்தகத்து உகு தரளமும், வளை சொரி முத்தும்.–54-
தத்து நீர்க் கடல் முழுவதும் – ஒலிக்கின்ற நீரை உடைய கடல்
முழுவதும்; குருதியாய்த் தயங்க – குருதியாக விளங்க; சித்திரக் குலப்
பல்நிற மணிகளும் – (அக்கடலில் உள்ள) விசித்திரமான (வெவ்வேறு)
தொகுதிகளாக உள்ள பல்வகை நிறங்களைக் கொண்ட
இரத்தினங்களும்; சேந்த – சிவந்த நிறம்பெற்றன; உயர்ந்த ஓங்கல் –
உயர்ந்த மதம் மிக்க மலை போன்ற யானைகளின்; மத்தகத்து
உகுதரளமும் – கொம்புகளில் இருந்து வெளிப்படுகிற முத்துக்களும்;
வளைசொரி முத்தும் – சங்குகள் என்ற முத்துக்களும்; ஒத்து – (ஒரே
மாதிரியாகச் சிவந்த நிறம் அடைந்து) ஒத்து; வேறு உருத்தெரியல –
வேறு நிறம் தெரியாதவை ஆயின.
————
கதிரவன் உதித்தல்
8356. அதிரும் வெஞ் செரு அன்னது ஒன்று அமைகின்ற
அளவில,
திரவன், செழுஞ் சேயொளிக் கற்றை அம் கரத்தால்,
எதிரும் வல் இருட் கரி இறுத்து, எழு முறை மூழ்கி,
உதிர வெள்ளத்தின் எழுந்தவன் ஆம் என, உதித்தான்.–55-
அன்னது – அப்படிப்பட்ட; அதிரும் வெஞ்செரு – அதிர்கின்ற
கொடிய போர்; ஒன்று அமைகின்ற அளவில் – ஒன்று நிகழ்கின்ற
பொழுது; கதிரவன் – கதிரவன்; செழுஞ் சேயொளிக் கற்றை –
செழுமையான சிவந்த ஒளித் தொகுதிகள் ஆகிய; அம் கரத்தால் –
அழகிய கைகளால்; எதிரும் – எதிர்ப்பட்ட; வல் இருட்கரி இறுத்து –
வலிய இருளாகிய யானையை அழித்து; உதிர வெள்ளத்தின் – குருதி
வெள்ளத்தில்; எழுமுறை மூழ்கி – ஏழு முறை முழுகி; எழுந்தவன் ஆம் என – எழுந்தவன் ஆம் எனக் கூறும்
படியாக; எழுந்தான் – உதித்தான்.
————-
8357. அரக்கர் என்ற பேர் இருளினை இராமன் ஆம் இரவி
துரக்க, வெஞ் சுடர்க் கதிரவன் புறத்து இருள் தொலைக்க,
புரக்கும் வெய்யவர் இருவரை உடையன போல,
நிரக்கும் நல் ஒளி பரந்தன, உலகு எலாம் நிமிர.–56-
அரக்கர் என்ற பேர் இருளினை – அரக்கர் எனப்படுகிற பெரிய
இருளினை; இராமன் ஆம் இரவி துரக்க – இராமன் என்கிற கதிரவன்
துரத்த; வெஞ்சுடர்க் கதிரவன் – வெப்பமான கதிர்களை உடைய
கதிரவன்; புறத்து இருள் தொலைக்க – புறத்தில் காணப்படுகிற
இருட்டை நீக்க; புரக்கும் வெய்யவர் – (உலகைப்) பாதுகாக்கின்ற
சூரியர்; இருவரை உடையன போல – இருவரைக் கொண்டவை போல;
நல் ஒளி பரந்தன – நல்ல (கதிர்) ஒளி பரந்து; உலகு எலாம் – உலகம்
எல்லாம்; நிமிர நிரக்கும் – தெளிந்து தெரியுமாறு நிரம்பும்.
————
படுகளக் காட்சி
8358. நிலை கொள் பேர் இருள் நீங்கலும், நிலத்திடை நின்ற
மலையும் வேலையும் வரம்பு இல வயின்தொறும் பரந்து,
தொலைவு இல் தன்மைய தோன்றுவ போன்றன-சோரி
அலை கொள் வேலையும், அரும் பிணக் குன்றமும் அணவி.–57-
நிலைகொள் பேர் இரள் நீங்கலும் – நிலையாக இருந்த மிகுதியான
இருள் நீங்கிய உடனே; நிலத்திடை நின்ற – நிலத்தின் கண் நின்ற;
வரம்பு இல – எல்லை இல்லாத; வயின் தொறும் பரந்து – இடந்தோறும் பரந்து (உள்ள); மலையும் வேலையும் –
மலைகளும் கடல்களும்; தொலைவு இல் தன்மைய – ஒழிதல் இல்லாத
தன்மை உடையனவாய் (விளங்கித் தோன்றுதல் போல); சோரி
அலைகொள் வேலையும் – இரத்தத்தை அலையாகக் கொண்ட
இரத்தக் கடலும்; அரும் பிணக்குன்றமும் அணவி – அருமையான
பிணங்களாகி (க்கிடக்கிற) யானைக்கூட்டங்களும் கலந்து; தோன்றுவ
போன்றன- தோன்றுவனவற்றை ஒத்திருந்தன.
————
8359. நிலம் தவாத செந்நீரிடை, நிணக் கொழுஞ் சேற்றில்,
புலர்ந்த காலையில், பொறி வரி அம்பு எனும் தும்பி
கலந்த தாமரைப் பெரு வனம், கதிரவன் கரத்தால்,
மலர்ந்தது ஆம் எனப் பொலிந்தன, உலந்தவர் வதனம்.–58-
புலர்ந்த காலையில் – (சூரியன்) புலர்ந்த விடியல் காலத்தில்; நிலம்
தவாத – நிலத்தினின்று நீங்காத; செந்நீரிடை – இரத்த
வெள்ளத்திலும்; நிணக்கொழுஞ் சேற்றில் – கொழுப்பாகிய வளமான
சேற்றிலும்; பொறிவரி அம்பு எனும் தும்பி – புள்ளிகளும் வரிகளும்
உடைய அம்புகள் என்னும் தும்பி; கலந்த – மொய்க்கிற; தாமரைப்
பெருவனம் – தாமரைப் பெருங்காடு; கதிரவன் கரத்தால் – கதிரவனது
கிரணங்களால்; மலர்ந்தது ஆம் என- மலர்ந்தது ஆம் என்னும்படி;
உலந்தவர் வதனம் பொலிந்தன – உயிரிழந்தவர்களின் முகங்கள்
அழகுற விளங்கின.
————
8360. தேரும் யானையும் புரவியும் விரவின,-தேவர்
ஊரும் மானமும் மேகமும் உலகமும் மலையும்
பேரும் மான வெங் காலத்துக் கால் பொர, பிணங்கிப்
பாரின் வீழ்ந்தன போன்றன-கிடந்தன பரந்த.–59-
தேரும் யானையும் புரவியும் – தேர்களும் யானைகளும்,
குதிரைகளும்; விரவின – கலந்து பரந்து கிடந்தன (பரவிக் கிடப்பவை);
தேவர் ஊரும் – தேவர் உலகமும்; மானமும் மேகமும் உலகமும்
மலையும் – விமானங்களும் மேகமும், பிற உலகங்களும், மலைகளும்;
பேரும் – நிலை பெயருகின்ற; மான வெங்காலத்துக் – பெருமை மிக்க
யுக முடிவுக்காலத்தில்; கால் பொர – மிகுதியான காற்று வீச;பிணங்கி – மாறுபட்டு; பாரின் வீ்ழ்ந்தன போன்றன –
நிலத்தில் விழுந்து கிடப்பவற்றை ஒத்துத் தோன்றின.
———–
போர்க்களம் போந்த அரக்கியர் நிலை
8361. எல்லி சுற்றிய மதி நிகர் முகத்தியர், எரி வீழ்
அல்லி சுற்றிய கோதையர், களம் புகுந்து அடைந்தார்,
புல்லி முற்றிய உயிரினர் பொருந்தினர் கிடந்தார்,
வல்லி சுற்றிய மா மரம் நிகர்த்தனர் வயவர்.–60-
எல்லி சுற்றிய மதிநிகர் முகத்தியர் – இரவில் சுற்றி வரும்
நிலவினை ஒத்த முகத்தினையும்; எரிவீழ் அல்லி சுற்றிய கோதையர் –
நெருப்பைக் காட்டிலும் சிவந்த அகவிதழ்களை உடைய செவ்வல்லி
மாலையைச் சுற்றிய கூந்தலையும் (உடைய அரக்கியர்கள்); களம்
புகுந்து அடைந்தார் – போர்க்களம் புகுந்து அடைந்து; புல்லி முற்றிய
உயிரினர் – (அவர்களால்) தழுவப்பட்டு முடிந்த உயிரினை
உடையவர்களாய்; பொருந்தினர் கிடந்தார் – பொருந்திக் கிடக்கின்ற;
வயவர் – அரக்க வீரர்கள்; வல்லி சுற்றிய – கொடியினால்
தழுவப்பட்ட; மாமரம் நிகர்த்தனர் – பெரிய மரம் விழுந்து கிடப்பது
போல் விழுந்து கிடந்தனர்.
————-
8362. வணங்கு நுண் இடை, வன முலை, செக்கர் வார் கூந்தல்,
அணங்கு வெள் எயிற்று, அரக்கியர் களத்து வந்து
அடைந்தார்,
குணம் கொளும் துணைக் கணவர்தம் பசுந் தலை கொடாது
பிணங்கு பேய்களின் வாய்களைப் பிளந்தனர், பிடித்தே.–61-
வணங்கு நுண் இடை- ஒசியும் நுண்மையான இடையினையும்;
வனமுலை – அழகிய மார்பகங்களையும்; செக்கர் வார் கூந்தல் –
சிவந்த நீண்ட கூந்தலினையும்; அணங்கு வெள் எயிற்று – வருத்தும் தன்மை கொண்ட வெண்மையான
பற்களையும்; அரக்கியர் – உடைய அரக்கியர்கள்; களத்து வந்து
அடைந்தார் – போர்க்களத்துக்கு வந்து அடைந்தவர்களாகி; குணம்
கொளும் – (தங்களிடம்) அன்பு எனும் பண்பு கொண்டிருந்த; தம் –
தங்களுடைய; துணைக்கணவர் – துணையாகிய கணவர்களுடைய;
பசுந்தலை கொடாது – பசுந்தலையை உண்பதற்காகக் கையில் கொண்டு
கொடுக்காமல்; பிணங்கு பேய்களின் – மாறுபடுகின்ற பேய்களின்;
வாய்களைப் பிடித்தே பிளந்தனர் – வாய்களைப் பிடித்துப்
பிளந்தனர்.
—————-
8363. சுடரும் வெள் வளைத் தோளி, தன்கொழுநனைத்
தொடர்வாள்,
உடரும் அங்கமும் கண்டு, கொண்டு ஒரு வழி உய்ப்பாள்
குடரும், ஈரலும், கண்ணும், ஓர் குறு நரி கொள்ள,
தொடர ஆற்றலள், நெடிது உயிர்த்து, ஆர் உயிர் துறந்தாள்.–62-
சுடரும் வெள் வளைத்தோளி – ஒளி விடுகிற வெள்ளிய
வளையல்களை அணிந்த தோள்களை உடையாள் ஒருத்தி; தன்
கொழுநனைத் தொடர்வாள் – தன் கணவனைப் (போர்க்களத்தில்
தேடித்) தொடர்ந்து சென்றவள்; உடரும் அங்கமும் கண்டு – (அங்கு
அவனது) உடலினையும் (கை, கால் முதலிய) உறுப்புகளையும் பார்த்து;
கொண்டு ஒருவழி உய்ப்பார் -(அவற்றை எல்லாம் திரட்டிக்) கொண்டு
(வந்து) ஓரிடத்தில் சேர்ப்பவள்; ஓர் குறு நரி – ஒருசிறிய நரி; குடரும்
ஈரலும் கண்ணும் கொள்ள – குடலையும், ஈரலையும், கண்ணையும்
தூக்கிச் செல்ல; தொடர ஆற்றலள் – அதனைத் தொடர்ந்து செல்லும்
வலிமை அற்றவளாகி; நெடிது உயிர்த்து – பெருமூச்சு விட்டு; ஆர்
உயிர் துறந்தாள் – தனது அரிய உயிரை விட்டாள்.
————-
8364. பெரிய வாள் தடங் கண்ணியர், கணவர்தம் பெருந் தோள்
நரிகள் ஈர்த்தன, வணங்கவும் இணங்கவும் நல்கா
இரியல்போவன தொடர்ந்து, அயல் இனப் படை கிடைந்த
அரிய,, நொந்திலர், அலத்தகச் சீறடி அயர்ந்தார்.–63-
பெரிய வாள் தடங்கண்ணியர் – நீண்ட வாள் போன்ற கண்களை
உடைய மகளிர்; தம் கணவர் தம் – தங்கள் கணவர்களுடைய;
பெருந்தோள் நரிகள் ஈர்த்தன – பெரிய தோள்களை நரிகள் இழுத்துச்
சென்றனவாக; வணங்கவும் – (அவை) வணங்கிக் கேட்கும்;
இணங்கவும் – இணக்கமாகக் கேட்டும்; நல்கா – (அத்தோள்களைக்)
கொடுக்காமல்; இரியல் போவன தொடர்ந்து – ஓடுகின்ற அவற்றைத்
தொடர்ந்து (போய்); அயல் கிடந்த இனப்படை அரிய – அருகில்
விழுந்து கிடந்த தொகுதியாய் உள்ள படைக்கலங்கள் (தங்கள்
கால்களை) அறுத்திட; அலத்தகச் சீறடி – செம்பஞ்சுக் குழம்பு
ஊட்டிய சிறிய அடிகள்; நொந்திலர் அயர்ந்தார் – ஓடி வருந்தாராய்
அயர்ந்து நின்றனர்.
————
8365. நலம் கொள் நெஞ்சினர், தம் துணைக் கணவரை நாடி,
விலங்கல் அன்ன வான் பெரும் பிணக் குப்பையின் மேலார்,
அலங்கல் ஓதியர்,-அருந் துணை பிரிந்து நின்று அயரும்,
பொலம் கொள், மா மயில் வரையின்மேல் திரிவன
போன்றார்.–64-
தம் துணைக் கணவரை நாடி – தங்களுக்குத் துணைவனாய்
அமைந்த கணவரைத் தேடி; விலங்கல் அன்ன – மலையைப் போன்று;
வான் பெருங் குப்பையின் மேலார் – உயர்ந்த பிணக் குவியலின்
மேலேறி நின்றவர்களான; அலங்கல் ஓதியர் – மாலையை அணிந்த
கூந்தலையும்; நலம் கொள் நெஞ்சினர் – நன்மையை (விரும்பிக்)
கொண்ட நெஞ்சினையும் (உடைய அரக்க மகளிர்); அருந்துணை
பிரிந்து – (தம்) அருமையான துணையாகிய (ஆண் மயிலைப்) பிரிந்து;
நின்று அயரும் – நின்று சோருகிற; பொலம் கொள் – அழகு
கொண்ட; மாமயில் – பெரிய (பெண்) மயில்; வரையின் மேல் திரிவன போன்றார் – மலையின் மீது
சுற்றித் திரிவன ஒத்தார்கள்.
—————-
8366. சிலவர்-தம் பெருங் கணவர்தம் செருத் தொழில் சினத்தால்,
பலரும், வாய் மடித்து, உயிர் துறந்தார்களைப் பார்த்தார்,
‘அலைவு இல் வெள் எயிற்றால் இதழ் மறைத்துளது,
அயலாள்
கலவியின் குறி காண்டும் என்று ஆம்’ எனக் கனன்றார்.–65-
சிலவர் – சில (அரக்க) மகளிர்; தம் பெரும் கணவர் –
தங்களுடைய பெருமை மிக்க கணவர்கள்; பலரும் – பல பேர்களும்;
தம் செருத்தொழில் சினத்தால் – (தங்களுடைய) போர்த் தொழிலில்
(மூண்ட பெருஞ்) சினத்தினால்; வாய் மடித்து – வாயை மடித்து
(இதழ்களைப் பல்லால் கடித்துக்கொண்டு); உயிர் துறந்தார்களைப்
பார்த்தார் – உயிரை விட்டவர்களைப் பார்த்து; அயலாள் கலவியின்
குறி – மாற்றாள் கலவிக்காலத்தில் செய்த பற்குறிகளை; அலைவு இல்
வெள்ளெயிற்றால் – அசைவு இல்லாத வெண்மையான பற்களினால்;
இதழ் மறைத்துளது – இதழில் (செய்யப்பட்ட பற்குறியை)
மறைத்துள்ளது; (அதற்குக் காரணம்) காண்டும் என்று ஆம் – நாம்
பார்த்து விடுவோம் என்று கருதிப் போலும்; எனக் கனன்றார் – என்று
எண்ணிச் சினம் கொண்டார்கள்.
———-
8367. நவை செய் வன் தலை இழந்த தம் அன்பரை நணுகி,
அவசம் எய்திய மடந்தையர் உருத் தெரிந்து அறியார்,
துவசம் அன்ன தம் கூர் உகிர்ப் பெருங் குறி, தோள்மேல்
கவசம் நீக்கினர், கண்டு கண்டு, ஆர் உயிர் கழிந்தார்.–66-
நவை செய் வன்தலை – குற்றம் செய்கிற வலிய தலைகளை; இழந்த
– போரில் இழந்து விட்ட; தம் அன்பரை அணுகி – தங்களுடைய
கணவன்மாரை நெருங்கி; உருத்தெரிந்து அறியார் – (அவர்களுடைய)
உருவத்தை (அடையாளம்) தெரிந்து அறியாதவர்களாய்; அவசம்
எய்திய மடந்தையர் – சலிப்பினை அடைந்த பெண்டிர் (எண்ணிப்
பார்த்த பின்பு); கவசம் நீக்கினர் – (அவர்களுடைய உடல்) கவசத்தை
நீக்கி; துவசம் அன்ன – கொடியைப் போன்ற; தம் கூர் உகிர்ப்
பெருங்குறி – தங்களுடைய கூர்மையான நகத்தால் செய்யப்பட்ட
பெருங்குறி; தோள் மேல்கண்டு கண்டு – (அவர்களுடைய) தோளின்
மீது இருப்பதைப் பார்த்துப் பார்த்து); ஆர் உயிர் கழிந்தார் –
(தங்களது) அருமையான உயிர் நீங்கினார்கள்.
———–
8368. மாரி ஆக்கிய கண்ணியர், கணவர்தம் வயிரப்
போர் யாக்கைகள் நாடி, அப் பொரு களம் புகுந்தார்,
பேர் யாக்கையின் பிணப் பெருங் குன்றிடைப் பிறந்த
சோரி ஆற்றிடை அழுந்தினர், இன் உயிர் துறந்தார்.–67-
மாரி ஆக்கிய கண்ணியர் – மழை (போல் கண்ணீர் வடித்து)
ஆக்கிய கண்களை உடையவர்களான (அரக்க மகளிர்); தம் கணவர் –
தங்கள் கணவன்மாருடைய; வயிரப் போர் யாக்கைகள் நாடி – வயிரம்
(பாய்ந்த) போர் (செய்த) உடல்களைத் தேடி; அம் பொரு களம்
புகுந்தார் – (அந்தப்) போர்க்களத்தின் கண் புகுந்தார்கள் (அவர்கள்);
பேர் யாக்கையின் – பெரிய உடம்புகளை உடைய; பிணப்
பெருங்குன்றிடை – பிணங்களாகிய பெரிய மலையில் இருந்து; பிறந்த
– தோன்றிய; சோரி ஆற்றிடை அழுந்தினர் – குருதி ஆற்றின்
இடையில் அழுந்தி; இன் உயிர் துறந்தார் – (தங்கள்) இனிய உயிரைத்
துறந்தார்கள்.
—————
அனுமன் புகைநிறக்கண்ணன் போர்
8369. வகை நின்று உயர் தாள் நெடு மாருதியும்,
புகையின் பொரு கண்ணவனும் பொருவார்;
மிகை சென்றிலர், பின்றிலர், வென்றிலரால்;
சிகை சென்று நிரம்பிய தீ உமிழ்வார்.–68-
வகை நின்று உயர்தாள்- அழகாக ஓங்கி நின்ற கால்களை உடைய;
நெடு மாருதியும் – பெருமை உடைய அனுமனும்; புகையின் பொரு
கண்ணவனும் பொருவார் – புகையோடு மாறுபடுகிற கண்களை
உடையவனும் போரிடுகின்றவர்களாகி; சிகை சென்று நிரம்பிய –
கொழுந்து எழுந்து சென்று நிரம்புகிற; தீ உமிழ்வார் – தீயை
உமிழ்கின்றவர்களாகி; மிகை சென்றிலர் – (ஒருவருக்கு ஒருவர்)
மேம்படுதல் இன்றியும்; பின்றிலர் – பின்னிடுதல் இன்றியும்;
வென்றிலரால் – வெல்லுதல் இன்றியும் போர் செய்தனர்.
———–
8370. ஐ-அஞ்சு அழல் வாளி, அழற்கொடியோன்,
மெய் அஞ்சனை கான்முளை மேனியின்மேல்,
வை அம் சிலை ஆறு வழங்கினனால்,
மொய் அஞ்சன மேகம் முனிந்தனையான்.–69-
அழற்கொடியோன் – நெருப்பினும் கொடியவன் ஆகிய புகை
நிறக்கண்ணன்; மொய் அஞ்சன மேகம் – சொரிந்த கரு மேகம்;
முனிந்தனையான் – சினந்ததனை ஒப்பவனாகி; மெய் அஞ்சனை –
உண்மை உள்ள அஞ்சனையின்; கான்முளை மேனியின் மேல் –
மகனாகிய (அனுமனின்) உடம்பின் மீது; வை அம்சிலை ஆறு –
(தான்) வைத்துள்ள அழகிய வில்லின் வழியாக; ஐ – அஞ்சு அழல்
வாளி – இருபத்து ஐந்து நெருப்புப் போன்ற அம்புகளை;
வழங்கினனால் – செலுத்தினான்.
———–
8371. பாழிப் புயம் அம்பு உருவப் படலும்,
வீழிக் கனிபோல் புனல் வீச, வெகுண்டு,
ஆழிப் பெருந் தேரை அழித்தனனால்,-
ஊழிப் பெயர் கார் நிகர் ஒண் திறலான்.–70-
பாழிப்புயம் – (அனுமன்தன்) வலிமை உள்ள தோள்களில்; அம்பு
உருவப்படலும் – அம்பானது உருவும் படியாகப்பட்ட உடனே;
வீழிக்கனி போல் – வீழிக்கனியினைப் போல்; புனல் வீச – குருதி நீர்
(அங்கிருந்து) வெளிப்பட; ஊழிப்பெயர் – உலக அழிவுக்காலத்தில்
உலவுகிற; கார்நிகர் – மேகத்தைப் போன்று; ஒண் திறலான் –
பெருவலி படைத்த அனுமன்; வெகுண்டு – சினம் மிகக் கொண்டு;
ஆழிப்பெருந்தேரை – (அந்தப் புகை நிறக்கண்ணனுடைய) சக்கரத்தை
உடைய பெரிய தேரை; அழித்தனனால் – அழித்தான்.
———–
8372. சில்லிப் பொரு தேர் சிதைய, சிலையோடு
எல்லின் பொலி விண்ணின் விசைத்து எழுவான்,
வில் இற்றது, இலக்குவன் வெங் கணையால்;
புல்லித் தரை இட்டனன், நேர் பொருவான்.–71-
சில்லி – சக்கரத்தை உடைய; பொருதேர் சிதைய – போர்
செய்வதற்கு உரிய (தன்) தேர் அழிந்ததனால்; சிலையோடு –
வில்லுடன்; எல்லின் பொலிவிண்ணின் – சூரியனால் அழகு பெற்று
விளங்கும் ஆகாயத்தின் கண்; விசைத்து எழுவான் – வேகமாக
எழுபவனாகிய; (புகை நிறக்கண்ணனுடைய) வில் – (கை) வில்;
இலக்குவன் – இலக்குவன்; வெங்கணையால் – (எய்த) கொடிய
அம்பினால்; இற்றது – அழிந்தது; நேர் பொருவான் – (அவனுடன்)
நேரே போர் செய்பவன் ஆகிய (அனுமன்); புல்லித்தரை இட்டனன் –
(அவனைத்) தழுவி (இழுத்துத்) தரையில் இட்டான்;
————-
அனுமன் கொல்லுதல்
8373. மலையின் பெரியான் உடல் மண்ணிடை இட்டு,
உலையக் கடல் தாவிய கால் கொடு உதைத்து,
அலையின், பருகிப் பரு வாய் அனல் கால்
தலை கைக்கொடு எறிந்து, தணிந்தனனால்.–72-
மலையின் பெரியான் – மலையினும் பெரிய உடலுடையவனான
(புகை நிறக்கண்ணனுடைய); உடல் மண்ணிடை இட்டு – உடலை
மண்ணில் போட்டு; கடல் தாவிய கால்கொடு – கடலைத் தாவிய தன்
கால்களைக் கொண்டு; உலைய உதைத்து – (அழிந்து உயிர்) வற்றும்படியாக உதைத்து; பருவாய் அனல் கால்தலை –
பெரிய வாயில் தீயை உமிழ்கின்ற தலையினை; கைக்கொடு பருகி –
(தன்) கையைக் கொண்டு பறித்து; அலையின் எறிந்து – கடலின் கண்
எறிந்து; தணிந்தனனால் – சினமாறினான்.
———-
அங்கதன் மாபக்கன் போர்
8374. மாபக்கனும் அங்கதனும் மலைவார்,
தீபத்தின் எரிந்து எழு செங் கணினார்,
கோபத்தினர், கொல்ல நினைந்து அடர்வார்,
தூபத்தின் உயிர்ப்பர், தொடர்ந்தனரால்.==73-
மலைவார் – போரிடுகின்றவர்களான; மாபக்கனும் – மாபக்கன்
என்பவனும்; அங்கதனும் – அங்கதன் என்பவனும்; தீபத்தின் எரிந்து
எழு – விளக்கைப் போல் எரிந்து எழுகின்ற; செங்கணினார் – சிவந்த
கண்களை உடையவர்களாய்; கோபத்தினர் – சினத்தினை
உடையவர்களாய்; தூபத்தின் உயிர்ப்பர் – தூபத்தைப் போல் புகை
வெளிப்படுகிற பெரு மூச்சினை உடையவர்களாகி; கொல்ல நினைந்து –
ஒருவரை மற்றொருவர் கொல்லுவதற்கு எண்ணி; அடர்வார்
தொடர்ந்தனரால் – அழித்துக் கொல்லுவதற்காகத் தொடர்ந்தார்கள்;
————–
8375. ஐம்பத்தொரு வெங் கணை அங்கதன் மா
மொய்ம்பில் புக உய்த்தனன், மொய் தொழிலான்-
வெம்பி, களியோடு விளித்து எழு திண்
கம்பக் கரி, உண்டை கடாய் எனவே.–74-
மொய் தொழிலான் – நெருங்கி வந்து போர் செய்த மாபக்கன்;
வெம்பி – சினந்து; கனியோடு – மது மயக்கத்தோடு; விளித்து –
பேரொலி செய்து; எழு – எழுகின்ற; திண் கம்பக்கரி – வலிமையான
கட்டுத்தறியில் கட்டப்பட்டிருந்த யானை; உண்டை கடாய் எனவே –
மண் உருண்டையை விரைவாக வீசியதைப் போல்; ஐம்பத்தொரு
வெங்கணை – ஐம்பத்தொரு கொடிய அம்புகளை; அங்கதன் –
அங்கதனது; மாமொய்ம்பில் – அகன்ற வலிமை உள்ள மார்பில்;
புகஉய்த்தனன் – புகும் படியாகச் செலுத்தினான்.
—————-
8376. ஊரோடு மடுத்து ஒளியோனை உறும்
கார் ஓடும்நிறக் கத நாகம் அனான்,
தேரோடும் எடுத்து, உயர் திண் கையினால்,
பாரோடும் அடுத்து எறி பண்பிடையே.–75-
ஊரோடு மடுத்து – ஊர்தல் தொழிலுடன் பொருந்தி; ஒளியோனை
உறும் – கதிரவனைச் சேருகின்ற; கார் ஓடும் நிறக் – கருமை ஓடுகிற
நிறத்தினை உடைய; கத நாகம் அனான் – சினம் மிக்க (இராகு கேது
என்னும்) பாம்புகள் போன்றவனாகிய (அங்கதன்); உயர்திண்
கையினால் – (தன்னுடைய) உயர்ந்த வலிமையான கைகளினால்;
தேரோடும் எடுத்து – (அந்த மாபக்கனைத்) தேருடன் எடுத்து;
பாரோடும் அடுத்து – நிலத்தில் பொருந்தும் படியாக; எறி
பண்பிடையே- எறிந்த போது (அடுத்த பாடலில் முடியும்).
————-
8377. வில்லைச் செல வீசி, விழுந்து அழியும்,
எல்லின் பொலி தேரிடை நின்று இழியா,
சொல்லின் பிழையாதது ஓர் சூலம், அவன்
மல்லின் பொலி மார்பின் வழங்கினனால்.–76-
வில்லைச் செலவீசி – (அந்த மாபக்கன்) தன் வில்லை அப்பால்
செல்லும்படி வீசி விட்டு; எல்லின் பொலி – கதிரவன் போல்
விளங்குகிற; விழுந்து அழியும் – (மேலிருந்து) கீழே விழுந்து அழிகிற;
தேரிடை நின்று இழியா – தேரில் இருந்து இறங்கி; அவன் – அந்த
அங்கதனுடைய; மல்லின்பொலி மார்பின் – மற்போர்த் தொழிலால்
அழகு விளங்குகின்ற மார்பின்கண்; சொல்லின் பிழையாதன – சாபம்
போல் தவறாது பயன் விளைக்கவல்ல; ஓர் சூலம் – ஒப்பற்ற
சூலப்படை (ஒன்றை); வழங்கினனால் – செலுத்தினான்.
———–
8378. ‘சூலம் எனின், அன்று; இது தொல்லை வரும்
காலம்’ என உன்னு கருத்தினனாய்;
ஞாலம் உடையான், அது நாம் அற, ஓர்
ஆலம் முக அம்பின் அறுத்தனனால்.–77-
ஞாலம் உடையான் – உலகங்கள் எல்லாம் தன் வடிவாக உடைய
(இராமன்); இது – இப்போது வருகின்ற சூலம்; சூலம் எனின் அன்று –
எளிமையான சூலமோ எனின் அன்று; தொல்லை வரும் காலம் என –
பழமையாக வருகின்ற காலபாசம் என்று; உன்னு – நினைக்கிற;
கருத்தினனாய் – கருத்தினை உடையவனாய்; அது நாம் அற – அதன்
பெயர் அழியும்படியாக; ஓர் ஆலம் முக அம்பின் – ஒப்பற்ற நஞ்சு
தோய்ந்த முனையினை உடைய அம்பினால்; அறுத்தனனால் –
அறுத்தான்.
———-
8379. உளம்தான் நினையாதமுன், உற்று, உதவாக்
கிளர்ந்தானை, இரண்டு கிழித் துணையாய்ப்
பிளந்தான்-உலகு ஏழினொடு ஏழு பெயர்ந்து
அளந்தான், ‘வலி நன்று’ என,-அங்கதனே.–78-
அங்கதனே – (அது கண்ட) அங்கதன்; ஏழினொடு ஏழு உலகு –
பதினான்கு உலகங்களையும்; பெயர்ந்து அளந்தான் – (மூவடி)
பெயர்த்து வைத்து அளந்தவனாகிய (திருமாலின் அவதார
நாயகனாகிய) இராமனின்; வலி நன்று என – வலிமை நன்று என்று
சொல்லி; உளம் தான் நினையாத முன் – மனத்தினால் நினைப்பதற்கு
முன்னமேயே; உற்று உதவாக் கிளர்ந்தானை – நெருங்கிப்
போரிடக்கிளர்ந்து எழுந்தவனாகிய (மாபக்கனை); இரண்டு கிழித்
துணையாய்ப் – இரண்டு கிழியின் தன்மையாகுமாறு; பிளந்தான் –
கிழித்தான்.
————-
நீலன் – மாலி போர்
8380. மா மாலியும் நீலனும், வானவர்தம்
கோமானொடு தானவர்கோன் இகலே
ஆமாறு, மலைந்தனர் என்று இமையோர்
பூ மாரி பொழிந்து, புகழ்ந்தனரால்.–79-
மாமாலியும் – பெருமையில் சிறந்த மாலி என்பவனும்; நீலனும் –
வானரப் படைத்தலைவனான நீலன் என்பவனும்; வானவர் தம் கோமானொடு – தேவர் தலைவனாம் திருமாலின்
அவதாரமாகிய நரசிங்கத்தோடு; தானவர் கோன் – தானவர்
தலைவனாகிய இரணியன்; இகலே ஆமாறு – செய்த போரே
ஒப்பாகுமாறு; மலைந்தனர் – போர் செய்தனர்; என்று இமையோர் –
என்று கூறி விண்ணவர்கள்; பூ மாரி பொழிந்து – பூ மழை பொழிந்து;
புகழ்ந்தனரால் – புகழ்ந்தனர்.
———
8381. கல் ஒன்று கடாவிய காலை, அவன்
வில் ஒன்று இரு கூறின் விழுந்திடலும்,
அல் ஒன்றிய வாளொடு தேரினன் ஆய்,
‘நில்!’ என்று இடை சென்று, நெருக்கினனால்.–80-
கல் ஒன்று கடாவிய காலை – (நீலன்) கல் ஒன்றை எடுத்துச்
செலுத்திய பொழுது; அவன் வில் ஒன்று – (அது) அந்த
மாலியினுடைய வில் ஒன்றை; இருகூறின் விழுந்திடலும் – இரண்டு
துண்டாக விழுந்திடச் செய்யவும்; அல் ஒன்றிய வாளொடு – (மாலி)
ஒளி நிறைந்தவாளுடன்; தேரினன் ஆய் – தேர் மேல் ஏறியவனாகி;
நில் என்று – (நீலனைப் பார்த்து) நில் என்று சொல்லி; இடை சென்று
– அவனிடத்தில் சென்று; நெருக்கினனால் – போரிடல் ஆனான்.
———–
8382. அற்று, அத் தொழில் எய்தலும், அக் கணனே,
மற்றப் புறம் நின்றவன், வந்து அணுகா,
கொற்றக் குமுதன், ஒரு குன்று கொளா,
எற்ற, பொரு தேர் பொடி எய்தியதால்.–81-
அற்று – அப்பொழுது; அத்தொழில் எய்தலும் – அச்செயல்
நிகழும் அளவில்; அக்கணனே – அக்கணமே; மற்றப்புறம் நின்றவன்
– மற்றொரு இடத்தில் நின்றவனாகிய; கொற்றக்குமுதன் – வெற்றியை
உடைய குமுதன் என்பவன்; ஒரு குன்று கொளா – ஒரு குன்றினைக்
கையில் கொண்டு; வந்து அணுகா – வந்து நெருங்கி; எற்ற – அடிக்க;
பொருதேர் – போரிடுவதற்குரிய (மாலியின்) தேர்; பொடி எய்தியதால்
– பொடியாகப் (போய்) விட்டது.
———–
நீலன் – மாலி – இலக்குவன் செயல்கள்
8383. தாள் ஆர் மரம் நீலன் எறிந்ததனை
வாளால் மடிவித்து, வலித்து அடர்வான்
தோள் ஆசு அற, வாளி துரந்தனனால்-
மீளா வினை நூறும் விடைக்கு இளையான்.–82-
நீலன் – நீலன்; எறிந்ததனை – எறிந்ததாகிய; தாள் ஆர் மரம் –
அடி பெருத்த மரத்தை; வாளால் மடிவித்து – (தன்) வாளால் அழித்து;
வலித்து அடர்வான் – வலிமையோடு பொருபவன் ஆகிய
(மாலியினது); தோள் ஆசு அற – தோளின் மூட்டு அறும்படியாக;
மீளா வினை நூறும் விடைக்கு இளையான் – போக்குதற்கு அரிய
வினைகளைப் போக்குபவனாகிய இடபம் போன்ற இராமனுக்கு
இளையவனாகிய இலக்குவன்; வாளி துரந்தனனால் – அம்புகளைச்
செலுத்தினான்.
———–
இலக்குவன் செயல்
8384. மின்போல் மிளிர் வாளொடு தோள் விழவும்
தன் போர் தவிராதவனை, சலியா,
‘என் போலியர் போர்எனின், நன்று; இது ஓர்
புன் போர்’ என, நின்று அயல் போயினனால்.–83-
மின்போல் மிளிர் வாளொடு – மின்னலைப்போல் விளங்குகின்ற
வாளுடன்; தோள் விழவும் – (தன்) தோள் அறுபட்டுக் (கீழே)
விழவும்; தன் போர் தவிராதவனை – (தன்) போரை நீங்காமல்
செய்பவனாகிய (மாலியைப் பார்த்து இலக்குவன்); என் போலியர்
போர் எனின் நன்று – என் போன்றவருடன் செய்யும் போர் என்றால்
அது நல்லது; இது ஓர் புன்போர் – இது ஒரு புன்மையான போர்
ஆகும்; என சலியா – என்று (கூறி) வெறுத்து; நின்று – நின்று; அயல்
போயினனால் – அப்பால் போயினன்.
—————-
வானரப்படை வீரர் புகழ்ச்சி
8385. நீர் வீரை அனான் எதிர் நேர் வரலும்,
பேர் வீரனை, வாசி பிடித்தவனை,
யார், வீரதை இன்ன செய்தார்கள்?’ எனா,
போர் வீரர் உவந்து, புகழ்ந்தனரால்.–84-
நீர் வீரை அனான் – நீரினை உடைய கடல் போன்ற
நிறமுடையவனாகிய இராமனுக்கு முன்; எதிர் நேர் வரலும் –
(இலக்குவன்) எதிரில் நேராக வருதலும்; போர் வீரர் – வானரப்
படைப் போர் வீரர்கள்; போர் வீரனை – புகழுடைய வீரனும்; வாசி
பிடித்தவனை – அம்பைத் தாங்கி உள்ளவனும் ஆகிய இலக்குவனை;
யார் வீரதை இன்ன செய்தார்கள் எனா – யாவர் தம்
வீரத்தன்மையால், இத்தகைய செயல்களைச் செய்தார்கள் என்று;
உவந்து – மகிழ்ந்து; புகழ்ந்தனரால் – புகழ்ந்தனர்.
———–
இலக்குவன் வேள்விப் பகைஞனை அழித்தல்
8386. வேள்விப்பகையோடு வெகுண்டு அடரும்
தோள் வித்தகன், அங்கு ஓர் சுடர்க் கணையால்,
‘வாழ்வு இத்தனை’ என்று, அவன் மார்பு அகலம்
்தனன்; ஆர் உயிர் போயினனால்.–85-
வேள்விப் பகையோடு – வேள்வியின் பகைஞன் என்பவனுடன்;
வெகுண்டு அடரும் – சினந்து போர் செய்கின்ற; தோள் வித்தகன் –
தோள் வலிமை உடைய இலக்குவன்; வாழ்வு இத்தனை என்று –
(உனக்கு) வாழ்வு இத்தனை (அளவு) தான் என்று சொல்லி; அங்கு ஓர்
சுடர்க் கணையால் – அப்போது ஒரு ஒளி விடுகின்ற அம்பினால்;
அவன் மார்பு அகலம் போழ்வித்தனன் – அவனது பரந்த மார்பைப்
பிளந்தான்; ஆர் உயிர் போயினனால் – (அவனுடைய) அருமையான
உயிர் நீங்கியது.
—————
8387. மல்லல் தட மார்பன் வடிக் கணையால்
எல்லுற்று உயர் வேள்விஇரும்பகைஞன்
வில் அற்றது, தேரொடு மேல் நிமிரும்
கல் அற்ற, கழுத்தொடு கால்களொடும்.–86-
மல்லல் தட மார்பன் – வளப்பம் பொருந்திய பரந்த மார்பை
உடைய (இலக்குவனது); வடிக்கணையால் – கூர்மையான அம்புகளால்;
எல்லுற்று – ஒளி நிறைந்து; உயர் வேள்வி – உயர்கிற வேள்வித் தீக்கு;
இரும் பகைஞன் – மிக்க பகைவனாகிய அவனுடைய; வில் அற்றது –
வில் அழிந்திட்டது; கழுத்தொடு – கழுத்தும்; கால்களொடும் –
கால்களும்; மேல் நிமிரும் தேரொடு – மேல் உயர்ந்து விண்ணில்
செல்லும் தேருடன்; கல் அற்ற – கற்களும் அழிந்தன;
———-
சுக்கிரீவன் சூரியன் பகைஞனை அழித்தல்
8388. தன் தாதையை முன்பு தடுத்து, ஒருநாள்,
வென்றானை, விலங்கலின் மேனியனை,
பின்றாத வலத்து உயர் பெற்றியனை,
கொன்றான்-கவியின்குலம் ஆளுடையான்.–87-
கவியின் குலம் ஆளுடையான் – வானரக் கூட்டங்களை ஆளடிமை
கொண்ட சுக்கிரீவன்; முன்பு ஒரு நாள் – முன்பு ஒரு காலத்தில்; தன்
தாதையை தடுத்து – தன் தந்தையாகிய சூரியனைத் தடுத்து;
வென்றானை – வென்றவனும்; விலங்கலின் மேனியனை – மலை
போன்ற உடம்பினை உடையவனும்; பின்றாத வயத்து உயர்
பெற்றியனை – பின்னிடாத வெற்றியால் உயர்ந்தவனும் (ஆகிய
சூரியன் பகைஞனை); கொன்றான் – கொன்றான்.
—————-
இடபன் – வச்சிரத்து எயிற்றன் போர்
8389. இடபன்,-தனி வெஞ் சமம் உற்று எதிரும்
விட வெங் கண் எயிற்றவன், விண் அதிரக்
கடவும் கதழ் தேர், கடவு ஆளினொடும்
பட,-அங்கு ஒரு குன்று படர்த்தினனால்.–88-
இடபன் – இடபன் என்ற பெயர் கொண்ட வானர வீரன்; தனி
வெஞ்சமம் உற்று – ஒப்பற்ற வலிமையான போரைச் செய்ய நெருங்கி;
எதிரும் – (தன்னை) எதிர்ப்பவனும்; விட வெங்கண் – நச்சுப் போன்ற
கொடிய கண்களையும்; எயிற்றவன் – பற்களையும் உடையவனாகிய
வச்சிரத்து எயிற்றவன் உடைய;விண் அதிரக் கடவும் கதழ்தேர் –
வானம் அதிரும்படி செலுத்தப்படுகிற விரைவு பொருந்திய தேரும்;
கடவு ஆளினோடு – (அதைச்) செலுத்துகிற பாகனும்; பட –
அழியும்படி; ஒரு குன்று – ஒரு குன்றினை; படர்த்தினன் –
செலுத்தினான். ஆல்- அசை.
————-
வச்சிரத்து எயிற்றவன் செயல்
8390. திண் தேர் அழிய, சிலை விட்டு, ஒரு தன்
தண்டோடும் இழிந்து, தலத்தினன் ஆய்,
‘உண்டோ உயிர்?’ என்ன உருத்து, உருமோடு
எண் தோளனும் உட்கிட, எற்றினனால்.–89-
திண்தேர் அழிய – (தன்) வலிமையான தேர் அழிந்ததனால்; சிலை
விட்டு – (தன் கையில் இருந்த) வில்லை விட்டு விட்டு; (அந்த
வச்சிரத்து எயிற்றவன்) ஒரு தன் தண்டோடும் இழிந்து – ஒப்பற்ற
(தன்னுடைய) தண்டாயுதத்தோடு (கீழ்) இறங்கி; உருமோடு –
இடியுடன்; எண் தோளனும் – எட்டுத் தோள்களை உடைய
சிவபிரானும்; உட்கிட – அச்சப்படும் படியாக; உண்டோ உயிர் என்ன
– (கண்டவர் இனி இவனுக்கு) உண்டோ உயிர் என்று எண்ணும் படி;
உருத்து – சினந்து; எற்றினன் – அடித்தான். ஆல் – அசை.
—————
அனுமன் செயல்
8391. ‘அடியுண்டவன் ஆவி குலைந்து அயரா,
இடியுண்ட மலைக் குவடு இற்றதுபோல்
முடியும்’ எனும் எல்லையில் முந்தினனால்-
‘நெடியன், குறியன்’ எனும் நீர்மையினான்.–90-
அடியுண்டவன் – அடிபட்டவன் ஆகிய இடபன்; ஆவி குலைந்து –
உயிர் வாதனை அடைந்து; அயர்ந்து – துன்பப்பட்டு; இடியுண்ட
மலைக்குவடு இற்றது போல் – இடியால் தாக்குண்ட மலை உச்சிகள்
அழிந்தது போல; முடியும் எனும் எல்லையில் – அழிந்து
விடுவானெனும் அளவில்; நெடியன் குறியன் எனும் நீர்மையினான் –
நெடியனும் குறியனும் ஆகும் என்கிற தன்மை உள்ளவனாகிய
அனுமன்; முந்தினன் – முன்வந்து தோன்றினான். ஆல் – அசை.
———–
வச்சிரத்து எயிற்றவன் செயல்
8392. கிடைத்தான் இகல் மாருதியை, கிளர் வான்
அடைத்தான் என மீது உயர் ஆக்கையினைப்
படைத்தானை, நெடும் புகழ்ப் பைங்கழலான்
புடைத்தான், அகல் மார்பு பொடிச் சிதற.–91-
கிடைத்தான் – தன்முன் வந்து தோன்றியவனாகிய; கிளர்வான்
அடைத்தான் என – விளங்குகின்ற ஆகாயத்தை அடைத்தவன் என்று
(கூறும்படி); மீது உயர் ஆக்கையினை படைத்தானை – மிக உயர்ந்த
உடம்பு படைத்தவனாகிய; இகல் மாருதியை – பகைத் தொழில் வல்ல
அனுமனை; நெடும் புகழ் பைங்கழலான் – மிக்க புகழை உடைய பசிய
வீரக்கழலை அணிந்தவனாகிய வச்சிரத்து எயிற்றன்; அகல் மார்பு
பொடிச்சிதற – அகன்ற மார்பு பொடியாகச் சிதறும் படியாக;
புடைத்தான் – அடித்தான்
—————
அனுமன் கொல்லுதல்
8393. எற்றிப் பெயர்வானை இடக் கையினால்
பற்றி, கிளர் தண்டு பறித்து எறியா,
வெற்றிக் கிளர் கைக்கொடு, மெய் வலி போய்
முற்ற, தனிக் குத்த, முடிந்தனனால்.–92-
எற்றிப் பெயர்வானை – (தன் மார்பு பொடிச்சிதற) அடித்து
செல்பவன் ஆகிய வச்சிரத்து எயிற்றவனை; இடக்கையினால் பற்றி – (அனுமன்) தன் இடது கையினால் பிடித்து; கிளர் தண்டு
பறித்து எறியா – (அவன் கையில் இருந்த) மூள்கின்ற போர் செய்யும்
தண்டாயுதத்தைப் பறித்து எறிந்து விட்டு; வெற்றிக் கிளர் கைக்கொடு
– வெற்றியோடு விளங்குகின்ற (தன்) கையினைக் கொண்டு; மெய் வலி
போய் முற்ற – (அவனுடைய) உடல் வலிமை போய் முடியும்படி;
தனிக்குத்த – வலிமையாகக் குத்த; முடிந்தனனால் – உயிர்
முடிந்திட்டான். ஆல் – அசை.
———-
பனசன் பிசாசன் போர்
8394. காத்து, ஓர் மரம் வீசுறு கைக் கதழ் வன்
போத்து ஓர் புலிபோல் பனசன் புரள,
கோத்து ஓட நெடுங் குருதிப் புனல், திண்
மாத் தோமரம் மார்பின் வழங்கினனால்.–93-
காத்து – (பிசாசன் தன்னைக்) காத்துக்கொண்டு; ஓர் மரம் வீசுறு-
(தன் மேல்) ஒரு மரத்தை வீசுகிற; கைக்கதழ் – கை வேகமுடைய; ஓர்
புலிப் போத்து போல் – ஒரு புலிப் போத்தைப் போன்றவனாகிய;
பனசன் புரள – பனசன் என்னும் வானர வீரன் புரளும் படியும்;
நெடுங் குருதிப் புனல் – மிகுதியான இரத்த வெள்ளம்; கோத்து ஓட
– வழிந்து ஓடும் படியும்; திண் மாத்தோமரம் – வலிய பெரிய
தோமரம் என்னும் படைக்கலத்தை; மார்பின் வழங்கினனால் –
(அவனது) மார்பில் விடுத்தான்.
————
பிசாசனின் வேகம்
8395. கார் மேலினனோ? கடல் மேலினனோ?
பார் மேலினனோ? பகல் மேலினனோ?
யார் மேலினனோ? இன என்று அறியாம்-
போர் மேலினன், வாசி எனும் பொறியான்.–94-
போர் மேலினன் – போர் மேல் வந்தவனும்; வாசி எனும்
பொறியான் – குதிரை என்கிற இயந்திரத்தை உடையவனும் ஆகிய
பிசாசன்; கார் மேலினனோ? – மேகத்தின் மேல் இருக்கிறானோ?
கடல் மேலினனோ – கடல்மேல் இருக்கிறானோ? பார் மேலினனோ?
– நிலத்தின் மேல் இருக்கிறானோ? பகல் மேலினனோ – கதிரவன்
மீது இருக்கிறானோ? யார் மேலினனோ – யார் மேல் இருக்கிறான் (எங்கிருந்து போரிடுகிறான்); இன என்று –
இத்தன்மையான் என்று; அறியாம் – (நாம்) அறியோம்.
————–
8396. ‘நூறாயிர கோடிகொல்? அன்றுகொல்?’ என்று
ஆறாயிர வானவரும், அறிவின்
தேறா வகை நின்று, திரிந்துளதால்-
பாறு ஆடு களத்து, ஒரு பாய் பரியே.–95-
ஆறாயிர வானவரும் – ஆறாயிரம் தேவர்களும்; நூறாயிர கோடி
கொல் – நூறாயிரம் கோடி (குதிரைகள் போர்க்களத்தில்) உள்ளன
போலும் (என்றும்); அன்று கொல் என்று – அன்று போலும் என்றும்
(தடுமாறி); அறிவின் தேறாவகை – அறிவின் (துணைகொண்டு) தெளிய
முடியாத படி; பாறு ஆடு களத்து – கழுகுகள் பறக்கிற
போர்க்களத்தில்; ஒரு பாய்பரியே – (பிசாசனுடைய) ஒப்பற்ற பாயும்
தன்மை உள்ள குதிரை; திரிந்து நின்றுளது – சுற்றித் திரிந்து
நிற்பதாகும். ஆல் – அசை.
————-
8397. கண்ணின் கடுகும்; மனனின் கடுகும்;
விண்ணில் படர் காலின் மிகக் கடுகும்;
உள் நிற்கும் எனின், புறன் நிற்கும்; உலாய்,
மண்ணில் திரியாத வயப் பரியே.–96-
மண்ணில் திரியாத – நிலத்தில் திரிதலைச் செய்யாத;
வயப்பரியே- (பிசாசனுடைய) வலிமையான குதிரை; கண்ணின் கடுகும்
– கண் பார்வையை விட விரைந்து செல்லும்; மனனின் கடுகும் –
மனத்தைக் காட்டிலும் வேகமாகச் செல்லும்; விண்ணில் படர் காலின்
– வானத்தில் செல்லுகிற காற்றைக் காட்டிலும்; மிகக் கடுகும் –
மிக வேகமாகச் செல்லும்; உலாய் உள் நிற்கும் எனின் – உலவிப்
போர்க்களத்தின் கண் நிற்கும் என்றால் (அப்போதே); புறன் நிற்கும்
– அதற்கு வெளியேயும் நிற்கும்.
————–
8398. மாப் புண்டரவாசியின் வட்டணைமேல்
ஆப்புண்டவன் ஒத்தவன், ஆர் அயிலால்
பூப் புண் தர,-ஆவி புறத்து அகல,
கோப்புண்டன, வானர வெங் குழுவே. –97-
மாப்புண்டர வாசியின் – பெரிய கழுகு போன்ற குதிரையின்;
வட்டணை மேல் – சுழன்று விரைந்த நடையின் மேல்; ஆப்புண்டவன்
ஒத்தவன் – கட்டப்பட்டிருப்பவனைப் போன்றவனான (அந்தப்
பிசாசன் உடைய) ; ஆர் அயிலால் – அருமையான வேல்
படையினால்; பூப்புண் தர – நிலவுலகம் புண்ணைப் பெற்றிருத்தல்
போல; வானர வெங்குழுவே – வானரங்களின் கொடிய கூட்டம்; ஆவி
புறத்து அகல – உயிர் (உடம்பினை விட்டுப்) புறத்து நீங்க;
கோப்புண்டன – இறந்து குவிந்து கிடந்தன.
—————
8399. ‘நூறும் இரு நூறும், நொடிப்பு அளவின்,
ஏறும்; நுதி வேலின், இறைப்பொழுதில்
சீறும் கவி சேனை சிதைக்கும்?’ எனா,
ஆறும் திறல் உம்பரும் அஞ்சினரால்.–98-
திறல் ஆறும் உம்பரும் – வலிமை ஓய்ந்த தேவர்களும்; ஏறும்
நுதிவேலின் – வீசி எறிகிற கூர்மையான வேலினால்; நொடிப்பு
அளவின் – ஒரு நொடிப் பொழுதிலும்; இறைப் பொழுதில் – கண
நேரத்திலும்; நூறும் இருநூறும் – நூறும் இருநூறும் ஆக; சீறும் கவி
சேனை – சினங்கொண்ட வானர சேனையை; சிதைக்கும் எனா –
(இப்பிசாசன்) அழிக்கிறானே என்று சொல்லி அஞ்சினர் – அச்சம்
கொண்டார்கள். ஆல் – அசை.
————–
8400.
தோற்றும் உரு ஒன்று எனவே துணியா,
கூற்றின் கொலையால் உழல் கொள்கையனை,
ஏற்றும் சிலை ஆண்மை இலக்குவன், வெங்
காற்றின் படை கொண்டு கடந்தனனால்.–99-
தோற்றும் உரு – பல இடங்களிலும் தோன்றுகின்ற வடிவம்; ஒன்று
எனவே துணியா – ஒன்றுதான் என்று துணிந்து; கூற்றின் கொலையால்
– கூற்றுவனுக்கு உரிய கொலைத் தொழிலோடு; உழல் கொள்கையனை
– திரிகின்ற கொள்கை உடையவனான பிசாசனை; ஏற்றும் சிலை
ஆண்மை இலக்குவன் – நாணேற்றும் வில் போரில் ஆண்மை
கொண்ட இலக்குவன்; காற்றின் படை கொண்டு – கொடுமையான
காற்றின் வாளியினால்; கடந்தனன் – கொன்று வீழ்த்தினான். ஆல் –
அசை.
—————–
8401. குலையப் பொரு சூலன் நெடுங் கொலையும்
உலைவுற்றில, உய்த்தலும் ஓய்வு இலன், ஒண்
தலை அற்று உகவும், தரை உற்றிலனால்-
இலையைப் பரி மேல் கொள் இருக்கையினான்.–100-
இலையப்பரி – தாளத்திற்கு ஏற்ப அடியிட்டு நடக்கும் குதிரையின்;
மேல் கொள் இருக்கையினான் – மேல் நிலையாக இருக்கை
கொண்டவனாகிய (பிசாசன்); ஒண்தலை அற்று உகவும் – தன்
ஒளியுள்ள தலை துண்டுபட்டு விழுந்த பின்பு கூட; குலையப் பொரு
சூலன் – (வானர வீரர்கள்) குலைந்து ஓடும்படியாகப் போர் செய்கிற
சூலத்தை உடையவனாய்;நெடுங் கொலையும் உலைவுற்றில – (தான்)
(செய்து வந்த) பெரும் (போர்க்) கொலையையும் குறைவில்லாமல்;
உய்த்தலும் ஓய்வு இலன் – செய்தலிலும் ஓய்வு கொண்டு
ஒழியாதவனாகி; தரை உற்றிலனால் – தரையில் விழாமல் இருந்தனன்.
——————-
மிகைப் பாடல்கள்
‘அளப்ப அரும் வெள்ளச் சேனை நமர் திறத்து அழிந்தது அல்லால்,
களப்படக் கிடந்தது இல்லை, கவிப் படை ஒன்றதேனும்;
இளைப்புறும் சமரம் மூண்ட இற்றை நாள்வரையும், என்னே
விளைப்ப அரும் இகல் நீர் செய்து வென்றது, விறலின் மிக்கீர்! 1-1
‘இகல் படைத் தலைவர் ஆய எண்பது வெள்ளத்து எண் இல்
தொகைப்பட நின்றோர் யாரும் சுடர்ப் படை கரத்தின் ஏந்தி,
மிகைப்படும் தானை வெள்ளம் ஈர்-ஐந்தோடு ஏகி, வெம் போர்ப்
பகைப் பெருங் கவியின் சேனை படுத்து, இவண் வருதிர்’ என்றான். 1-2
‘மன்னவர் மன்னவ! மற்று இது கேண்மோ!
துன்னும் அரக்கரின் வீரர் தொகைப்பட்டு
உன்னிய நாற்பது வெள்ளமும் உற்று, ஆங்கு
அந் நரன் அம்பினில் ஆவி அழிந்தார். 16-1
மத்த மதக் கரியோடு மணித் தேர்,
தத்துறு வாசி, தணப்பு இல காலாள்,
அத்தனை வெள்ளம் அளப்பு இல எல்லாம்,
வித்தக மானிடன் வாளியின், வீந்த. 16-2
இப் படையோடும் எழுந்து இரவின்வாய்
வெப்பு உறு வன் கவி வீரர்கள் ஓதை
எப் புறமும் செவிடு உற்றதை எண்ணி,
துப்புறு சிந்தையர் (வீரர்) தொடர்ந்தார். 20-1
தேர் நிரை சென்றது; திண் கரி வெள்ளக்
கார் நிரை சென்றது; கால் வய வாசித்
தார் நிரை சென்றது; தாழ்வு அறு காலாள்
பேர் நிரை சென்றது; பேசுவர் யாரே? 22-1
‘ஐய! கேள்: சிவன் கை வாள் கொண்டு, அளப்ப அரும் புவனம் காக்கும்
வெய்யவன் வெள்ளச் சேனைத் தலைவரின் விழுமம் பெற்றோர், கை உறும்
சேனையோடும் கடுகினார் கணக்கிலாதோர், மொய் படைத் தலைவர்’
என்று, ஆங்கு அவர் பெயர் மொழியலுற்றான். 29-1
‘இன்னவர் ஆதியர் அளப்பிலோர்; இவர் உன்ன அருந் தொகை
தெரிந்து உரைக்கின், ஊழி நாள் பின்னரும் செல்லும்’
என்று ஒழியப் பேசினான்; அன்ன போர் அரக்கரும் களத்தை அண்மினார். 35-1
கொடுமரத்திடை இராகவன் கோத்த வெம் பகழி அடல் அரக்கர் என்று
உரைத்திடும் கானகம் அடங்கக் கடிகை உற்றதில் களைந்தது கண்டு,
விண்ணவர்கள், ‘விடியலுற்றது நம் பெருந் துயர்’ என வியந்தார். 58-1
வெற்றி வெம் படைத் தலைவர் என்று உரைத்திடும் வெள்ளத்து
உற்ற போர் வலி அரக்கர்கள், ஒரு தனி முதல்வன்
கொற்ற வெஞ் சரம் அறுத்திட, அளப்பு இலர் குறைந்தார்;
மற்றும் நின்றவர் ஒரு திசை தனித் தனி மலைந்தார். 67-1
தேர் போய் அழிவுற்றது எனத் தெளியா,
போர் மாலி பொருந்து தரைப்பட, முன்
ஓர் மா மரம் நீலன் உரத்தொடு கொண்டு
ஏர் மார்பிடை போக எறித்தனனால். 81-1
அப் போது அழல் வேள்வி அடல் பகைஞன்,
வெப்பு ஏறிய வெங் கனல் போல வெகுண்டு,
‘இப் போர் தருக!’ என்ற இலக்குவன்மேல்
துப்பு ஆர் கணை மாரி சொரிந்தனனால். 85-1
சொரி வெங் கணை மாரி தொலைத்து, இரதம்
பரி உந்திய பாகு படுத்து, அவன் வெம்
பொரு திண் திறல் போக, இலக்குவன் அங்கு
எரி வெங் கணை மாரி இறைத்தனனால். 85-2
முடிவுற்றனன், மாருதி மோதுதலால்,
கொடு வச்சிர எயிற்றன் எனும் கொடியோன்;
விடம் ஒத்த பிசாசன் விறற் பனச-
னொடும் உற்று, இருவோரும் உடன்றனரால். 92-1
பொர நின்ற பணைப் புய வன் பனசன்
நிருதன் களமீது நெருக்கி, அதில் பரி
வெள்ளம் அளப்பு இல பட்டு அழியத்
தரு அங்கை கொடே எதிர் தாக்கினனால். 92-2
பனசன் அயர்வுற்று ஒருபால் அடைய,
தனி வெம் பரி தாவு நிசாசரன் வெங் கனல்
என்ன வெகுண்டு, கவிப் படையின் இனம் எங்கும் இரிந்திட, எய்தினனால். 93-1
விசை கண்டு உயர் வானவர் விண் இரிய,
குசை தங்கிய கோள் என, அண்டமொடு எண்
திசை எங்கணும் நின்று திரிந்துளதால் –
பசை தங்கு களத்து ஒரு பாய் பரியே. 96-1
மற்றும் படை வீரர்கள் வந்த எலாம்
உற்று அங்கு எதிரேறி உடன்று,
அமர்வாய் வில் தங்கும் இலக்குவன் வெங்
கணையால், முற்றும் முடிவு எய்தி முடிந்தனரால். 100-1
—————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply