ஸ்ரீ அரங்கநாத ஸ்வாமி தேவஸ்தானத்திற்காகத் தொகுத்தவர்:-ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ,–ஸ்ரீ அ.கிருஷ்ணாமாசார்யர் ஸ்வாமிகள்–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வைபவம்”

1. ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை திருநக்ஷத்ரோத்ஸவம் ஆவணி ரோஹிணி
2. ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதிக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள கருத்துரை மண்டபத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது
ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை ஸந்நிதி.
3. உரைவேந்தர்-வியாக்யானச் சக்ரவர்த்தி என்று வைணவ உலகங்கெங்கும் கொண்டாடும் சிறப்பினைப் பெற்ற வரும்,
நாலாயிரத்திற்கும் உரை கண்ட பேரறிஞருமாவார் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை.
4. சோழநாட்டிலுள்ள ஸ்ரீ திருவெள்ளியங்குடிக்கு அணித்தான சங்கநல்லூரில்
ஸ்ரீ யாமுன தேசிகருக்கும் ஸ்ரீ நாச்சியாருக்கும் திருமகனாய்த் தோன்றினார்.
5. ஸ்ரீ கிருஷ்ணர் என்பது இவரது இயற்பெயர். ஸ்ரீ அபய ப்ரதராஜர் என்னும் பெயரும் இவருக்கு வழங்கியது.
6. வைணவ உலகம் ஒருமிடறாக இவருக்குச் சூட்டிய பெயர்கள் பரம காருணிகர், அபார கருணாம்ருத ஸாகரர் என்பன.
7. ஸ்ரீ நம்பிள்ளையின் நெஞ்சுகந்த இவர் சமய மறைகள் (ரகசியங்கள்), திவ்யப்பிரபந்தங்கள், இராமாயணம், ஸ்தோத்ரங்கள்
ஆகியவற்றில் விளங்கும் ஸ்ரீ வைணவக் கொள்கை விளக்கத்திற்கு இன்றியமையாதனவாய் இலங்கும்
நுண் பொருள்களை பலர்க்கும் விளக்கிக் கூறியவர்.
8. அவற்றிற்கு உரை வகுத்துச் சென்ற பெருமைக்கும் உரியவர்.
9. பெரியபெருமாள், பெரியாழ்வார், பெரியவாச்சான்பிள்ளை, பெரியஜீயர் என்று சொல்லப்பட்ட நால்வரும்
அவரவர் பெருமையால் பெரிய என்னும் பட்டம் அடைந்தனர்.
10. இவர் தம் மாணாக்கர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீ திருவாய் மொழிக்கு ஸ்ரீ பன்னீராயிரப்படி உரை எழுதிய ஸ்ரீ வாதிகேஸரி சீயராவர்.
11. ஸ்ரீ நம்பிள்ளை, ஸ்ரீ கூரத்தாழ்வானுடைய திருப்பேரரான ஸ்ரீ நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டருக்கு
ஸ்ரீ திருவாய்மொழி உரையினை ஒருமுறை அருளிச் செய்தார்.
12. அவர் ஒவ்வொரு நாளும் தாம் கேட்ட வற்றை இரவில் எழுதி வந்தார்.
13. ஸ்ரீ நம்பிள்ளையின் விளக்கவுரை முடிந்தபின் தாம் எழுதி வந்த உரையினை எடுத்துச் சென்று அவரிடம் காட்டினார்.
14. அவர் அது மகாபாரதத்தின் அளவில் பெரியதாக இருத்தலைக் கண்டார்.
15. ஸ்ரீ நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டரை நோக்கி, ஸ்ரீ உடையவர் காலத்தில் ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ திருவாய்மொழிக்கு
ஸ்ரீ விஷ்ணுபுராணத்தின் தொகையளவில் ஓர் உரை செய்ய அவர் இசைவினைப் பெறுவதற்குச் செய்த முயற்சிக்கு அளவில்லை.
16. அவ்வாறிருக்க நம்முடைய காலத்தில், “நம்மையுங் கேளாமல் ஸ்ரீ நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டரே, நீர் இவ்வாறு
இலட்சத்து இருபத்தையாயிரம் கிரந்தத்தில் (இதையே படியென்றும் அழைப்பர்.
படியென்பது மெய்யெழுத்து நீங்கலாக 32 எழுத்துக்கள் கொண்ட தொகுதியாகும். தற்போது நாம் பக்கம் என்ற அளவைக் குறிப்பதுபோல
அந்தக் காலத்தில் இந்த நூல் இவ்வளவு படி கொண்டது என்று குறிப்பிடுவர்.
அதனால் தான் ஸ்ரீ திருவாய்மொழிக்கான உரைகள் ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, பன்னீராயிரப்படி
இருபத்து நாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்படி என்று குறிப்பிடப்படுகின்றன.)
பரக்க உரை எழுதினால் அஃது ஆசிரிய மாணாக்க முறைமையினைக் கெடுத்து விடும்” என்று கூறி
அதன்மேல் நீரைத் தெளித்துக் கரையானுக்குக் கொடுத்தார்.
17. பின்னர் தம் விருப்பத்திற்குகந்த மாணாக்கராய்த் தம்மிடம் அனைத்து நூல்களையும் அலகு அலகாகக் கற்ற
ஸ்ரீ பெரிய வாச்சான்பிள்ளையைப் பார்த்து, நீர் ஸ்ரீ திருவாய்மொழிக்கு ஓர் உரை எழுதும் என்று சொல்ல,
ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை தமது ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி உரையினை எழுதினார்.
18. பின்னர் மற்ற திவ்யப்பிரபந்தங்களுக்கும் காலப் போக்கில் உரை எழுதினார்.
இவரது தொண்டினை, “ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பின்புள்ள வைக்கும் தெரிய வியாக்கியைகள் செய்வால்-
அரிய அருளிச் செயற்பொருளை ஆரியர்கட் கிப்போது அருளிச் செயலாய்த் தறிந்து” (ஸ்ரீ உபதேசரத்தினமாலை-46) என்று
நன்றியோடு போற்றிக் கூறுகிறார் ஸ்ரீமணவாள மாமுனிகள்.
19.ஸ்ரீ பெரியதிருமொழி 7-10 பதிகம் திருக்கண்ணமங்கை திவ்யதேசத்திற்கு உரியதாகும்.
அந்தப் பதிகத்தில் ஈற்றுப் பாசுரத்தில் (9-10-10) திருமங்கையாழ்வார் “மெய்ம்மை சொல்லின் வெண்சங்கம் ஒன்று ஏந்திய கண்ண,
நிந்தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்தானே ” என்று அருளிச் செய்துள்ளார்.
ஆவணி ரோஹிணியில் அவதரித்தவர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை அதுவே கண்ணனின் திருநக்ஷத்ரமுமாகும்.
ஸ்ரீ நம்பிள்ளை அவதரித்தது கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்ரத்தில். ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருநக்ஷத்ரமும் அதுவேயாகும்.
‘வெண்சங்கம் ஒன்று ஏந்திய கண்ண’ என்ற விளியினால் ஸ்ரீ திருமங்கையாழ்வார் பக்தவத்ஸலப் பெருமாளை நோக்கி
‘ஸ்ரீ திருமங்கை யாழ்வாராகிய அடியேனுடைய கவிதைகளின் பொருளை நீ அறிந்து கொள்ள வேணுமானால்
நீ எனக்கு சிஷ்யனாக வேணும்’ என்று கூறியதால் ஸ்ரீ கண்ணனே ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளையாக அவதரித்தார் என்றும்,
ஸ்ரீ திருமங்கையாழ்வாரே திருக்கலிகன்றி தாஸரான ஸ்ரீ நம்பிள்ளையாக அவதரித்தார் என்றும்
அந்த ஸ்ரீ நம்பிள்ளையிடம் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை மாணாக்காராக இருந்து அர்த்த விசேஷங்களைக் கேட்டறிந்தார் என்றும்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையின் அவதார ரஹஸ்யம் பேசப்படுகிறது.

—————– ——————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ,–ஸ்ரீ அ.கிருஷ்ணாமாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading