ஸ்ரீ இராமாயணம் சங்கத்தமிழ் இலக்கியங்களில்–

திருப்பாவையில் சங்கத்தமிழ் (30)என்றும்
திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் சங்கமலி தமிழ் (930), சங்கமுகத் தமிழ் (1187) என்றும்
கம்பரின் இராமாயணத்தில் தமிழ்ச் சங்கம் (4477) என்றும்
அவ்வையாரின் நல்வழியில் சங்கத் தமிழ் (கடவுள் வாழ்த்து) என்றும் கூறப்பெற்றுள்ளன.

திருமங்கை ஆழ்வார் பாடல்களில் சங்கமலி தமிழ், சங்கமுகத் தமிழ் என்னும் சொல்லாடல்கள் இடம் பெற்றுள்ளதை,

சங்கமலி தமிழ் மாலை பத்து இவை வல்லர்கள் (பெரியதிரு.930:7)

சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார் (பெரியதிரு.1187:7)

தமிழ்ச் சங்கம் என்ற சொல்லாடல்

தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல் (கம்பராமாயண-கிட். நாடு,31:1-2)

பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன் (அகம். 25: 20)-திதியன் என்பவனுக்கு உரியது பொதிகை மலை

கழல் தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் (குறுந். 84: 3)–கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ஆய் என்பவனுடையது பொதிகை மலை

திருந்துஇலை நெடுவேற் தென்னவன் – பொதியில் (அகம். 138: 7)-பாண்டியர்களின் சிறப்புப் பெயர் தென்னவன் என்பவனுடையது பொதிகை மலை

மழைசூழ் குடுமிப் பொதியிற் குன்றத்து (மணி.1:22)-குடுமி என்பது பாண்டியர்களின் சிறப்புப் பெயர்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத்தமிழ் மூன்றும் தா.’ அவ்வையார் தான் இயற்றிய நல்வழியில் ‘சங்கத் தமிழ் மூன்றும் தா’-இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும்

————–

சங்கத்தமிழ் இலக்கியங்களில் இராமாயணம்

சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் பாடியது. காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு.
“அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்,
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்,
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே” – புறநானூறு 378

சோழ வேந்தன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி நாட்டை விரிவாக்கும் நோக்கத்தில் வஞ்சிப் பூச் சூடி, செருப்பாழி
என்னும் கோட்டையை அழித்துத் தனதாக்கிக்கொண்டான். அந்த வஞ்சிப் போரைப் புலவர் பாடினார். அது கேட்ட வேந்தன்
புலவர்க்கு அவர் அறிந்திராத அரிய அணிகலன்களை வழங்கிச் சிறப்பித்தான்.
அதனைப் பார்த்த புலவரின் பெருஞ் சுற்றத்தார் விரலில் அணிய வேண்டிய அணிகலனைக் காதில் மாட்டிக்கொண்டனர்.
காதில் அணியவேண்டியவற்றை விரலில் மாட்டிக்கொண்டனர். இடுப்பில் அணிய வேண்டியவற்றைக் கழுத்தில் மாட்டிக்கொண்டனர்.
கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டியனவற்றை இடுப்பில் கட்டிக்கொண்டனர்.
கடும் போர்த்திறம் கொண்ட இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை அரக்கன் இராவணன் தன் வலிமை மிக்க கைகளால்
தூக்கிக்கொண்டு சென்றபோது, சீதை தன் கணவன் அடையாளம் கண்டுகொள்ளத்தக்க வகையில் ஆங்காங்கே எறிந்துகொண்டு சென்ற
அணிகலன்களைக் கண்ட செம்முகக் குரங்குகள் அணியுமிடம் தெரியாமல் அணிந்து அழகுபார்த்துக் கொண்டது போல்
எனக்கு நகைப்பு விளைவிப்பதாக இருந்தது என்று உவமை கூறுகிறார்.

———–

வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே’– கடுவன் மள்ளனார் (அகம் 70 – வரிகள் 13 முதல் 17 வரை)

உவமை:
தோழி சொன்னாள், “ஆம் தலைவி. பாண்டியரின் தொல்முது கோடியான கடற்கரை ஊரில் பல விழுதுகளை உடைய ஆலமரம்
ஒன்று இருந்தது. காலம் காலமாய் அதில் வாழ்ந்து வந்த பறவைகளின் அடங்காத கீச்சொலியால் அந்த ஊரே அமைதியின்றி இருந்தது.
சீதையைத் தேடி அந்த ஊருக்கு வந்த போரில் வெற்றி கொள்ளும் பண்பினரான இராமன், தம் நண்பர்களுடன் கூடிச் சீதையைத் தேடும்
வழிமுறைகளை ஆராய முயன்ற போது பறவைகளின் அடங்காத ஒலி இடையூறாய் விளைந்தது.
பார்வையாலோ, இதழ் விரித்து எழுப்பிய ஓசையாலோ இராமர் அந்தப் பேரொலியை ஒரு நொடியில் அடங்கச் செய்தாராம்.
அதைப் போலத்தான் நம் பெற்றோர் உனக்கும் அவருக்கும் திருமணம் என்றதும் ஓயாது ஒலித்துக் கொண்டிருந்த ஊர் வாயும் அடக்கிவிட்டது”.
(கோடி = தனுஷ்கோடி – தொன் முது கோடி, கவுரியர் = பாண்டியர்) .

————

இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல”– கபிலர் / திணை – குறிஞ்சி (கி.மு. 3ஆம் நூற்றாண்டு)

இமய மலையை வில்லாக்கி வளைத்தவர் சிவபெருமான், அவன் கங்கை ஆறு பாயும் ஈரச் சடையை உடையவன்.
அவன் தன் மனைவி உமையாளோடு சேர்ந்து இமயமலை மேல் அமர்ந்திருந்தான். 10 தலை கொண்டவனான அரக்கர் தலைவன்
இராவணன் தொடி அணிந்திருந்த தன் கையை இமய மலைக்கு அடியில் புகுத்தி அந்த மலையை எடுக்க முயன்றான்.

————-

திருப்பரங்குன்றத்து குகையில் வடிவமைக்கப்பட்டிருந்த ஓவியக் கலைகளில் அகலிகை பற்றிய குறிப்பு:

“என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்,
இரதி காமன், இவள் இவன்’ எனாஅ,
விரகியர் வினவ, வினா இறுப்போரும்;
‘இந்திரன், பூசை: இவள் அகலிகை;
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது’ என்று உரைசெய்வோரும்”

திருப்பரங்குன்றத்து முருகப் பெருமானை வணங்கிய பிறகு, மக்கள் இந்த ஓவிய மண்டபத்தில் சென்று அங்குள்ள ஓவியக் காட்சிகளைக்
கண்டு மகிழ்ந்தார்கள் என்றும், வரையப்பட்டிருந்த ஓவியங்களில் காமன், இரதி, அகலிகை, அவளிடம் சென்ற இந்திரன், கௌதம முனிவன்,
அவனைக் கண்ட இந்திரன் பூனையுருவங் கொண்டோடியது முதலிய ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன என்றும்,
அவற்றைக் கண்டவர் ‘இது என்ன, இது என்ன’ என்று அறிந்தவர்களைக் கேட்க, அவர்கள் இது இது இன்னின்ன ஓவியம் என்று
விளக்கிக் கூறினார்கள் என்றும் நப்பண்ணனார் கூறுகிறார்:-நப்பண்ணனார் (கி. பி. மூன்றாம் நூற்றாண்டு)

————

பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,
இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல் “
-பழமொழி நானூறு – பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று .

இலங்கை அரசன் இராவணனின் தம்பி வீடணன். இவன் இராமனை நண்பனாகப் பெற்று இலங்கை அரசனானான்
என்று அந்தப் பாடல் குறிப்பிடுகிறது.

———–

சிலப்பதிகாரத்தில் திருமால் அவதாரங்களில் இராமரும் துதிக்கப்படுகின்றார்.
கம்பர் (கி.பி. 12-ஆம் நூற்றாண்டு) தோன்றி ராமாயணத்தைத் தமிழில் எழுதுவதற்கு முன்பே
இளங்கோவடிகள்(கி. பி முதல் நூற்றாண்டு) சிலப்பதிகாரத்தை இயற்றிக் கொடுத்திருக்கிறார்.
அந்தச் சிலப்பதிகாரமும் ராமனைக் கடவுளாகவே கூறுகிறது

“மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் தான் போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!” – ஆய்ச்சியர் குரவைப் பாடல், மதுரைக்காண்டம்,

————-

“தாதை யேவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்
வேத முதல்வற் பயந்தோன் என்பது
நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ” – ஊர்காண்காதை

என, கவுந்தியடிகள் ராமனைப் பற்றிக் கோவலனிடம் கூறுமிடத்து, ராமன் கடவுள் என்பது தமிழகத்தின் புது மொழியல்ல;
நெடுமொழி. அதாவது; நீண்ட காலமாகவே தமிழ் மக்களிடையே இருந்துவரும் நம்பிக்கை என்றும் கவுந்தியடிகள் கூறுகின்றார்.

————–

16 வார்த்தை ராமாயணம்
படித்ததில் பிடித்தது பகிர்ந்தேன்

“பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்
மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார்
இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார்
துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார்”

1-பிறந்தார்: ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.

2.வளர்ந்தார்: தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது

3.கற்றார்: வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.

4.பெற்றார்: வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து
பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.

5.மணந்தார்: ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.

6.சிறந்தார்: அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.

7.துறந்தார்: கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.

8-நெகிழ்ந்தார்:
*அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
*குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
*பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.
*பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும் தன்னலமற்ற குணத்தையும்
தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
*அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
*சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
*விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
*எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, ‘கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை.
என்னால் முடிந்தது என்னையே தருவது’ எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.

9.இழந்தார்: மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது.

10.அலைந்தார்: அன்னை சீதையை தேடி அலைந்தது.

11.அழித்தார்: இலங்கையை அழித்தது.

12.செழித்தார்:
*சீதையை மீண்டும் பெற்று அகமும் முகமும் செழித்தது.
*ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது.

13.துறந்தார்:
அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது.

14.துவண்டார்:
அன்னை சீதையை பிரிய நேர்ந்தது சீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.

15.ஆண்டார்:
என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து
மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.

16.மீண்டார்:
பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி
தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது”.

————

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதாஹஸ்தகரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.–ஏக ஸ்லோக இராமாயணம் காஞ்சி மகாபெரியவர் அருளியது

————

வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விடை அடர்த்த பக்தி உழவன் பழம் புனத்து –ஸ்ரீ திருமழிசைப் பிரான்

வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சல் மிசைவான் புனம் –திருக்குறள்

ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெரு செய்யுள் -ஸ்ரீ நம்மாழ்வார்

ஊரவர் கவ்வை எருவாக அன்னை சொல் நீராக நீளும் இந்நோய் –திருக்குறள் –

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியேனாகி நின்று தேடினேன் நாடிக் கொண்டேன்
உள்ளுவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்றே
வெள்கினேன் வெள்கி நானும் விலவற சிரித்திட்டேனே -அப்பர் –திருமாலை –பாசுர சாயல்

————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading