ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –83-சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் – இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

பொருவற்ற கேள்வியனாக்கி -நின்றேன் -என்ன-
உம்முடைய ஸ்ருதத்துக்கு வ்யாவ்ருத்தி எது -எல்லார்க்கும் ஒவ்வாதோ சரணாகதி -என்ன –
நான் பிரபத்தி பண்ணி ஸ்ரீ பரமபதம் பெறுவார் கோடியில் அன்று –
தேவரீர் திருவடிகள் ஆகிற மோஷத்தை -தேவரீர் ஔதார்யத்தாலே பெருமவன் – என்கிறார் —

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டில் இவர் தம்முடைய ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக –பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் – என்று சொன்னவாறே –
அத்தைக் கேட்டருளி –உபமான ரஹீதமான ஸ்ருதத்தை உடையனாம்படி பண்ணி யருளினார் என்று நீர் நம்மை ச்லாகித்தீர் –
உம்மை ஒருவரையோ நாம் அப்படி பண்ணினது –ஒரு நாடாக அப்படி பண்ணி பரம பத்தில் கொண்டு போகைக்கு
பக்த கங்கணராய் அன்றோ நாம் அவதரித்தது –
(இன்றும் கங்கணம் திருக்கையிலே சேவிக்கிறோம் -முக்தியே சிலரது சொத்து என இருக்கையில் -அனைவருக்கும் அருளி –
தரணி தவம் பெற்றதே உம்மால் -)-ஆகையாலே உமக்கும் உம்மை ஒழிந்தாருக்கும் தன்னிலே வ்யாவ்ருத்தி ஏது என்று –
ஸ்ரீ எம்பெருமானாருக்கு திரு உள்ளமாக –இவர் அவர் திரு முக மண்டலத்தைப்-பார்த்து
நான் என்னை ஒழிந்தார் எல்லாரையும் போலே ஸ்ரீ பகவத் சரணாகதியைப் பண்ணி ஸ்ரீ பரம பதத்தை பிராப்பிப்போம்
என்று இருந்தேன் அல்லேன் காணும் –
தேவரீர் திருவடிகளாகிற மோஷத்தை தேவரீர் ஔதார்யத்தாலே கிருபை-பண்ணப் பெறக் கடவேன் -என்று நேரே விண்ணப்பம் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

பொருவற்ற கேள்வி -என்று உமது கேள்வி அறிவை சிறப்பிப்பான் என் –ஏனையோரும் கேள்வி அறிவு பெற்றிலரோ என்ன –
ஏனையோர் கேள்வி அறிவு பிரதம பர்வத்தை பற்றியதாதலின் -ஸ்ரீ பகவானிடம் பிரபத்தி பண்ணி
ஸ்ரீ பரம பதத்தை அடைவராய்-நின்றனர் அவர் –
நானோ சரம பர்வத்தின் எல்லை நிலையான ஆசார்யராகிய தேவரீரைப் பற்றிய கேள்வி அறிவு உடையவனாக ஆக்கப்பட்டமையின் –
அவர் கூட்டத்தில் சேராது –
தேவரீர் திருவடிகளையே பரம பதமாய் கொண்டு –அதனை தேவரீர் வள்ளன்மையால் பெறுமவனாய் உள்ளேன் –
இது என் கேள்வி யறிவினுடைய பொருவற்றமை -என்கிறார்

சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன் உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமானுச ! இது கண்டு கொள்ளே – – 83- –

பத உரை –
இராமானுசா -ஸ்ரீ எம்பெருமானாரே –
சீர் கொண்டு -சமம் தமம் முதலிய நன்மைகள் உடையவர்களாய் கொண்டு
பேர் அறம் -பெரிய தர்மமாகிற ப்ரபத்தியை
செய்து -பண்ணிக் கொண்டு
நல் வீடு -நல்ல மோஷத்தை
செறிது என்னும் -சேருவோம் என்னும்
பார் கொண்ட -பூமியை தனக்குள் கொண்ட
மேன்மையர் -பிரபாவம் வாய்ந்த பகவத் பிரபன்னர்களுடைய
கூட்டன் அல்லேன் -கூட்டத்தில் சேர்ந்தவன் அல்லேன்
உன் பத யுகமாம் -தேவரீருடைய திருவடி இணையாகிற
ஏர் கொண்ட -அழகு – வீறுடைமை-வாய்ந்த
வீட்டை -மோஷத்தை
எளிதினில் -சுலபமாக
எய்துவன் -அடைவேன்
அதுக்கு ஹேது
உன்னுடைய -தேவரீருடைய
கார் கொண்ட -மேகத்தை வென்ற
வண்மை -வள்ளல் தன்மையாம்
இது -இவ் விஷயத்தை
கண்டு கொள் -தேவரீர் கண்டு கொள்ள வேணும் –
நான் சொல்ல வேணுமோ -என்று கருத்து .

வியாக்யானம் –
சமதமதாதிகள் -ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்கள் ருசி விச்வாசங்கள் -ஆகிய ஸ்வபாவ விசேஷங்களை வுடையராய் –
பரம தர்மம் ஆகிற ப்ரபத்தியை பண்ணி –ஆத்மா அனுபவம் மாத்ரமான கைவல்யம் போல் அன்றிக்கே –
பரம புருஷார்த்த லஷண மோஷத்தை ப்ராப்பிப்போம் என்னும் பூமி எங்கும் வ்யாப்தமான பிரபாவத்தை உடைய
ஸ்ரீ பகவத் பிரபன்னருடைய திரளுக்கு உட்பட்டவன் அல்லேன் –
தேவரீருடைய திருவடிகள் இரண்டும் ஆகிற சர்வ விலஷணமான மோஷத்தை – அநாயாசேன ப்ராபிப்பேன் -அதுக்கு ஹேது –
சர்வ விஷயமாக சர்வ காலத்திலும் உபகரிக்கையாலே – மேகத்தை ஜெயித்து இருக்கும் தேவரீருடைய ஔ தார்யம் .
இது நான் சொல்ல வேணுமோ ?
அனுஷ்டனத்தால் கண்டு கொள்ள மாட்டீரோ ?

நல் வீடு பெறுதும்-என்றும் பாடம் சொல்லுவார்கள் –
பார் கொண்ட மேன்மை -விசேஷஜ்ஞ்ஞாரோடு அவிசேஷஜ்ஞ்ஞாரோடு வாசி யற பூமியில்-உள்ளார் எல்லாராலும்
கைக் கொள்ளப் பட்ட உத்கர்ஷம் என்னவுமாம் .

ஏர் கொண்ட வீட்டில் -என்ற பாடமான போது –
தேவரீர் திருவடிகள் இரண்டுமாகிற விலஷண மோஷத்திலே-அநாயாசேன சேர்வன் -என்றபடி –
ஏர் -அழகு
கொள்கை -உடைத்தாகை
திருவடிகளை மோஷமாக சொல்லிகிறது -ஆனந்தாவஹத்வத்தாலே –
முக்திர் மோஷோ மகா நந்த -என்னக் கடவது இறே –

ஸ்ரீ பெருமாளை பற்றி -பிரயோஜனாந்தரங்கள் – கைவல்யம்- இல்லாமல் அவனையே பற்றுவது பிரதம பர்வ நிஷ்டை
ஸ்ரீ ஆச்சார்யன் பற்றி அவனை அடையாமல் ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகளில் -சரம பர்வ நிலை
நல் வீடு –பிரதம பர்வம் —சீர் கொண்ட பேர் அறம் செய்ய வேண்டும் -ஆனால் இங்கே
ஏரார் இடை -ஏர் கொண்ட வீடு -சரம பர்வ -எளிதினில் எய்துவேன் -உம் வண்மை பிரத்யக்ஷம் -கண்ணாடியில் கண்டு கொள்ளும்
இருப்பிடம் –வைகுந்தம் -அனைவரும் உம் திரு உள்ளம் -உம்மை உம்மால் பெற்றால் -வேறே என்ன-வேண்டும் –
நிர்ப்பயம் நிர்ப்பரம்–இங்கே தானே –
சபரி பாத மூலம் -அடைவேன் -உன் பாதம் பெற்று கொடுத்த என் ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகள் -மதங்கரை அடைந்தாள்
இவரே இங்கேயே எளிதில் கொடுக்க -வேறே வேண்டுமோ-
மேன்மையர் கூட்டனல்லேன்-ஸ்ரீ வடுக நம்பி -ஒப்பாக்கலாமோ என்னில் நல்லவர் -நானோ நீசன் -நிறை ஒன்றும் இலேன் –
பெறக் கடவன் -பெற்றேன் என்று சொல்ல வில்லை –

சீர் கொண்டு –
சாந்தோதாந்த -இத்யாதிகள் சொல்லப்படுகிற சம தம தாதிகள் என்றும் –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -என்றும் –
என் நான் செய்கேன் யாரே களை கண்-என்னை என் செய்கின்றாய் -என்றும் சொல்லப்படுகிற
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்கள் என்ன –
பிரியோஹி ஜ்ஞானி நோத்யர்த்தமஹம் -என்றும்
ரஷிஷ்ய தீதி விஸ்வாச -என்றும் சொல்லப்படுகிற ருசி விச்வாசங்கள் என்ன –
இது தொடக்கமான அதிகாரி விசேஷ ஸ்வ பாவங்களை உடையவராய் –

கொள்கை -உடைத்தாகை –
பேர் அறம் செய்து -நியாச மேஷாம் தபஸா மதி ரிக்த மாஹூ -என்றும் –
சர்வ குஹ்ய தமம் பூத -என்றும் சொல்லுகிறபடியே
பரம குஹ்ய தமமாய் -பரம தர்மமாய் -ஸ்வ ரூப-அனுரூபமான ப்ரபத்தியை பண்ணி -அதாகிறது –
ந்யச்யத்வத் பாத பத்மேவாத நிஜ பரம் நிர்ப்பரோ நிரபயோச்மி-என்கிறபடியே
ஆத்மா ஆத்மீயங்கள் உடைய ரஷண பரத்தை-அவன் பக்கலிலே பொகட்டு-ஸ்த நந்த பிரஜையோபாதி நிர்ப்பரராய் இருக்கை –

(பரந்யாசம் -சொல்ல வில்லை -அதற்காக த்ருஷ்டாந்தம் -பால் குடிக்கும் குழந்தை -சொல்லிவிட்டு பேசாமல் கிடக்குமா –
பேசாமல் கிடக்குமா -அதே போலே நாமும் -)-
பலத்துக்கு-ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமும் வேண்டுவது -என்று பிள்ளையும் (பிள்ளை லோகாச்சார்யார் )-
(விலக்காமை -சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்கு )அருளிச் செய்தார் இறே-பேர் –

பெருமை
அறம் -தர்மம் –

நல் வீடு செறிதும் என்னும் –
வீடு -மோஷம் -ப்ராப்ய ஸ்தானம் -அதாவது -ஸ்வாத் மா நு பூதிரிதி யாகில
முக்திருக்தா -என்கிறபடியே கைவல்யமும் மோஷம் யாகையாலே -தத் வ்யாவ்ர்த்யர்த்தமாக –நல்வீடு -என்று அத்தை விசேஷிக்கிறார் –
வீட்டுக்கு நன்மையாவது –
ஸ்வ ஆத்ம மாத்திர அனுபவமான கைவல்யம்போலே அல்பமாயும் ஸ்வார்த்தமாயும் இருக்கை யன்றிக்கே –
நலம் அந்தமில்லதோர் நாடு – என்கிறபடியே அபரிமித ஆனந்த ரூபமாய் –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்கிறபடியே பகவத் ஏக போகமாய் இருக்கை –

செறிதும் என்னும் –
இப்படிப் பட்ட பரம புருஷார்த்த லஷணமான மோஷத்தை ப்ராபிப்போம் என்னும் —

நல் வீடு பெறுதும் -என்றும் பாடம் சொல்வார்கள் – –
ஆகிலும் அர்த்த பேதம் இல்லை –
யோகிநாம் மிர்தம் ஸ்தானம் -என்றும்
யத்வை பஸ்யந்தி சூரய -என்று ஸ்வ ஆத்ம அனுபவரூப கைவல்ய மோஷத்தையும் –
ஸ்ரீ பகவத் ப்ராப்தி ரூபா பரம புருஷார்த்த லஷண மோஷத்தையும் –
ஸ்தான-பரம -சப்தங்களாலே பசித்து ஸ்ரீ கீதாசார்யனும் அருளிச் செய்தான் இறே –

சீர்கொண்டு –கூட்டன் அல்லேன்
நல் வீடு செறிதலுக்காக செய்யும் பேரறம் என்பது இங்கு பிரபத்தியை -என்று உணர்க .
பக்தி யோகமும் நல் வீடு செறிதலுக்கு கைக் கொள்ளப் படுவதாயினும் -அதனை பேரறம் ஆகாது என்று விலக்குக–
ந்யாசம்-எனப்படும் பிரபத்தியே -தனக்கு மேல் இல்லாத அதிரிக்தமான தபசாக ஓதப்படுதலின் பிரபத்யே பேரறம் ஆகும் -என்க –

மேலும் ஸ்ரீ எம்பெருமானார் கோஷ்டியில் பக்தி மார்க்கத்தைக் கைக் கொண்டு
நல் வீடு செறிதும் என்று இருப்பார் எவருமே இலர் ஆதலின் – அவர்கள் கூட்டத்தில் சேர்ந்தவன் அல்லேன் -என்று
தம்மை ஸ்ரீ அமுதனார் சொல்லிக் கொள்வது பொருந்தாது .
ஸ்ரீ எம்பெருமானார் தாமும் பிரபத்தி செய்து -மற்றவர்களையும் அதனை கைக் கொள்ளுமாறு செய்தலின் அந்த பிரபத்தியினாலே
நல் வீடு செறிதும் என்று இருப்பார் பலர் உண்டு .
அந்தக் கோஷ்டியில் தான் சேர்ந்தவன் அல்லேன் என்பது நன்கு பொருந்துகிறது –

பேரறமாகிய பிரபத்தி -மாமேகம் சரணம் வ்ரஜ –என் ஒருவனையே உபாயமாகப் பற்று -என்றபடி –
ஸ்ரீ கண்ணனையே உபாயமாய் வரிப்பதாக அமைந்து இருத்தலின் -தான் உபாயமாக மாட்டாது –
ஆதலின் அதனைச் செய்வதற்கு வேறு எதனையும் அங்கமாகக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை .
ஆயின் சீர் கொண்டு பேரறம் செய்து -என்று
ஸ்ரீ அமுதனார் கூறுவதன் கருத்து யாதோ -எனின் –
பிரபத்தி செய்வோருக்கு சில நல்லியல்புகள் தாமே அமைந்து இருக்கும் –
அச் சீரிய இயல்புகளை உடையவர்களாய்-பேரறம் செய்கிறார்கள் -என்கிறார் ஸ்ரீ அமுதனார் என்று கொள்க .

அவ்வியல்புகளாவன-
சமம் தமம் முதலியனவும் –
அகிஞ்சந்ய -வேறு வழி இல்லாமை -அநந்ய கதித்வம் -வேறு புகல் இல்லாமைகளும் –
ருசி-பேற்றினில் வேட்கை -விஸ்வாசம் -பேறு தப்பாது -என்ற துணிபு போன்றவைகளும் –
சமம்-மனத்தை அடக்குதல் தமம் -வெளி இந்திரியங்களை அடக்குதல் –மாறிக் கொள்வதும் உண்டு .
இவ் இயல்புகள் பிரபத்தி செய்வதற்கு உறுப்பாக வந்தவைகள் அல்ல –
பிரபத்தி செய்வோரிடம் நேரிடும் இயல்புகள் என்றுணர்க –

இனி –சீர் கொண்டு -என்பதற்கு
மற்ற உபாயங்களை கை கொண்டோரினும் சீர்மை உடையவராய் கொண்டு -என்று பொருள் உரைத்தலுமாம் .
நார்ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடி தமீமபி -பிரபத்தி செய்தவனுடைய சீர்மையில்
கோடியில் ஒரு பங்கு கூடப் பெற மற்ற உபாயங்களை கைக் கொண்டவர்கள் தகுதி அற்றவர்கள் –என்பது காண்க –-

பார் கொண்ட மேன்மையர் –என்னும் இடத்தில் –
உலகு எங்கும் பரவின பிரபாவம் பேசப்படுகிறது -இங்கே உபாயாந்தரங்களை கைக் கொண்டவர்களினும் பிரபத்தி செய்வோருடைய
சீர்மை செப்பப் படுகிறது .
பிரபத்தி செய்த பிறகு -பேற்றுக்கு செய்ய வேண்டியது யாதொன்றும் இல்லாமையினால்
நல் வீடு பெறப் போகின்றோம் என்று -அதனை எதிர் நோக்கி நிற்கின்றனர் –பேரறம் செய்தோர் –
அவர்கள் எதிர்பார்ப்பது -நல்ல வீட்டை –
புல்லிய வீட்டை அன்று .
புல்லிய வீடு-கைவல்யம் எனப்படும் மோஷம் ஆகும் .
சிறிய மின்மினி பூச்சி போலே மிளிரும் அணுவான தன் ஆத்மா ஸ்வரூபத்தை தேக சம்பந்தம் அறவே நீங்கின ஜீவாத்மா
தானே அனுபவித்து -அவ்வளவோடு ப்ரஹ்ம அனுபவத்தை இழந்து நிற்றல் கைவல்யம் எனப்படும் .
ப்ரஹ்ம அனுபவத்தையும் அதன் விளைவான கைங்கர்யத்தையும் கோரி பிரபத்தி செய்பவர்கள் ஆதலின் –
நல் வீடு செறிதும் -என்று இருக்கிறார்கள் –
நல் வீடு -என்று கைவல்யத்தை விலக்குவதனால் கைவல்யத்துக்கும் மோஷம் வீடு -என்னும் வழக்கு உண்டு என்று தெரிகிறது –
ஸ்வ ஆத்மா அநுபூதி ரீதி யாகில முக்தி ருக்தா -தன் ஆத்மாவைத் தானே அனுபவித்தல் என்னும் யாதொரு முக்தி கூறப் பட்டதோ –
என்று ஆழ்வான் கைவல்யத்தை முதி என்னும் சொல்லால் வழங்குதல் காண்க
நல் வீடு பெறுதும் -என்றும் பாடம் உண்டு

பார் கொண்ட மேன்மையர் –
பூமி எங்கும் ஒக்க-வ்யாப்தமான பிரபாவத்தை உடையவர் -என்னுதல் –
விசேஷஞ்ஞாரோடு அவிசேஷஞ்ஞாரோடு வாசி அற பூமியில் உள்ள எல்லாராலும் கைக் கொள்ளப்பட்ட
உத்கர்ஷத்தை உடையவர் என்னுதல் –

கொள்கை –
வ்யாபிக்கையும் ஸ்வீகரிக்கையும் –

கூட்டன் அல்லேன் –
இப்படி பட்ட ஸ்ரீ பகவத் பிரபன்னருடைய கோஷ்டியிலே உள்பட்டவரில் ஒருவனாய்-இருக்கிறவன் அல்லேன் –
ஆகில் உம்முடைய படி எங்கனே என்ன சொல்லுகிறார் –

பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லன் –
பாரினை யடங்கக் கொண்ட மேன்மை-பூமி எங்கும் பரவின மேன்மை -என்றபடி –
இனி பாரில் உள்ள மேலோர் கீழோர் அனைவரும் கைக் கொண்ட மேன்மை என்னலுமாம் –
இத்தகைய பேரறம் செய்வோர் மேன்மை பாரடங்க பரவி இருப்பினும் அன்றி –
பாரில் உள்ளோர் அனைவரும் கைக் கொண்டு இருப்பினும் –
அம் மேன்மையில் மயங்கி -நான் அவர்கள் கூடத்தில் சேர்ந்து விட வில்லை -என்று தமது உறுதிப்பாட்டினை காண்பிக்கிறார் –
பேரறம் செய்து நல் வீட்டினை எதிர் பார்க்கின்றனர் அவர்கள் .
நானோ யாதொன்றும் செய்யாது -அந் நல் வீட்டினும் வீறுடைய பரம விலஷணமான வீட்டினை எளிதில் அடைபவனாய் உள்ளேன் –
நான் அவர்கள் கூட்டத்தில் எங்கனம் சேருவேன் ?-என்கிறார் மேல் .

உன் பத யுமாம் ஏர் கொண்ட வீட்டை-
தேவரீர் திருவடிகள் இரண்டும் ஆகிற விலஷண மோஷத்தை –
குருரேவ பராயணம் -குருரேவ பராகதி –பாத மூலம் கமிஷ்யாமி யாநகம் பர்யசாரிஷம் –
நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம் -என்றும்-சொல்லுகிறபடியே –
சர்வ பிரகார லஷணமான மோஷத்தை –
ஏர் -அழகு -எளிதினில் எய்துவன் -வருத்தம் அற ப்ராபிப்பேன் –

உன்பத யுகமாம் ஏர் கொண்ட வீட்டில் -என்ற பாடமானபோது-
தேவரீர் திருவடிகள் இரண்டும் ஆகிற விலஷண மோஷத்தில் என்றபடி –
இவர் இப் பெறாப்பேறு பெற்ற-பின்பு -ஸ்ரீ பகவல் லாபத்தையும் ஒரு பொருளாக நினைக்க மாட்டார் காணும் –
திருவடிகளை-மோஷமாக சொன்னது ஆனந்த அவஹத்வத்தாலே –
இப்படி சொன்னால் உமக்கு இந்த ப்ராப்யம் எத்தாலே-அத்தை சொல்லி காணீர் என்ன –

உன் பத யுகமாம் ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் –
தேவரீருடைய திருவடிகள் இரண்டுமே கீழ்ச் சொன்ன நல் வீட்டிலும் விலஷணமான மோஷமாக அடியேனுக்கு அமைந்து உள்ளன –
முக்திர் மோஷோ மகா நந்த -என்னும் நிகண்டுவின் படி பேரின்பமே மோஷம் ஆதலால் தாஸ்ய மகா ரசத்தை தருதல் பற்றி –
பேரின்பம் தரும் வைகுண்டத்தை மோஷம் என்பது போலே தமக்கு பேரின்பம் விளைவிக்கும் திருவடிகளை மோஷமாகவே கூறினார் .
ஏர் –அழகு -இங்கே வீறுடைமை-

ஏர் கொண்ட வீட்டில் என்பதும் ஓர் பாடம் –
அப்பொழுது தேவரீர் திருவடிகள் இரண்டுமாகிற வீறுடைய வீட்டில் எளிதில் சேர்வேன் -என்று பொருள் ஆகிறது .
ஸ்ரீ ஆச்சார்ய அபிமானத்தில் ஒதுங்கினவர்-பகவான் இடம் பிரபத்தி பண்ணினவர்கள் போலே
ஸ்ரீ பகவானது தாளிணைக் கீழே வாழ்ச்சியை ஒரு பேறாக மதிக்காது -ஸ்ரீ ஆசார்யர் பொன்னடியை மேவி நிற்பதையே தாம்
பெரும் பேறாக மதிப்பவர் ஆதலின் ஸ்ரீ எம்பெருமானார் பத யுகத்தை
ஏர் கொண்ட வீடு -என்கிறார் .
ஸ்ரீ சபரி எந்த ஸ்ரீ ஆசார்யருக்கு நான் பணிவிடை புரிந்தேனோ அவன் திருவடி வாரத்துக்கு தான் போவதாக மோஷம் அடையும் போது
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனை நோக்கிக் கூறியதை இங்கு நினைவு கூர்க-
இம்மையிலும் மறுமையிலும் ஸ்ரீ ஆசார்யன் திருவடிகளே சரணம் –உபாயமும் உபயமும் –என்றார் ஸ்ரீ ஆள வந்தாரும் –

ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -பகவானை ஏத்துமவர்களை விட ஸ்ரீ ஆச்சார்ய அபிமான நிஷ்ட்டர் சீரியர் என்பதனை –
மாறாய தானவனை -என்னும் பாசுரத்தில் -ஸ்ரீ நான் முகன் திருவந்தாதி -18 – அருளிச் செய்தார் .
வேறாக ஏத்தி இருப்பார் ஸ்ரீ பெரியாழ்வார் போல்வார் –
சாத்தி இருப்பார் ஸ்ரீ ஆண்டாள் போல்வார் -என்பது அவ்விடத்தில் வியாக்யானம் .

பழுதாக ஓன்று அறிந்தேன் -ஸ்ரீ நான் முகன் திருவந்தாதி -89 – என்னும் பாசுரத்தில் ஸ்ரீ ஆசார்யனைப் பற்றினவன்
விண் திறந்து வீற்று இருப்பார் மிக்கு -90-என்று வீறு கொண்ட பேற்றினை பெறுதல் அந்த
ஸ்ரீ திரு மழிசைப் பிரானாலேயே அருளிச் செய்யப் பட்டு இருப்பதும் இங்கு அறியத் தக்கது .

ஸ்ரீ ஆசார்யனை தானே பற்றுகிறவனுக்கும்
ஸ்ரீ ஆசார்யனாலே நம்முடையவன் என்று அபிமானப் படுகிறவனுக்கும்
பேற்றிலே எத்தகைய வேறு பாடும் இல்லை என்று உணர்க .
யாதொரு முயற்சி இன்றி ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவதற்கு ஹேது என் -என்ன விடை இறுக்கிறார்

உன்னுடைய கார் கொண்ட வண்மை –
அதுவும் அவனது இன்னருளே -என்றபடி-தேவரீர் ஔதார்யமே அதுக்கு சாதனம் என்கிறார் –
கார் கொண்ட வண்மை – -நீரே உம்மை அருள வேணும் –
விசேஷணத்தாலே மேகத்தில் நின்றும்-கிருபைக்கு உண்டான வ்யாவ்ர்த்தியை சொல்லுகிறார் –
மேகமானது நாலு மாசம் வர்ஷிக்க கடவதாய் -அப்போதும் அபேஷித்த இடங்களில் வர்ஷியாதே –
சமுத்ரத்திலும் பர்வதத்திலும் அரண்ய பிரதேசத்திலும்-வர்ஷிக்கும் -இவருடைய ஒவ்தார்யம் அப்படி இன்றிக்கே —
கொள்ள குறைவற்று இலங்கி கொழுந்து-விட்டு ஓங்கி இருப்பதாகையாலே –
சர்வ காலத்திலும் -சர்வர்க்கும் -சர்வ பலங்களையும் -கொடுத்துக்-கொண்டு இருந்து –
மகா வ்ர்ஷம் போல் இருக்கிற மகா மேகத்தை பராஜிதமாக்கி -என்னை ஸ்வா தீனமாக-எழுதிக் கொண்டது -என்றபடி –
இப்படிப் பட்ட தேவரீர் உடைய பரம கிருபா பூர்வகமாக இந்த ஒவ்தார்யம்-ஒன்றுமே அந்த பலத்துக்கு பிராபகம் என்றபடி —

இராமானுச –
எம்பெருமானாரே –

இது கண்டு கொள்ளே –
இது-தான் சொல்ல வேணுமோ –
கை இலங்கு நெல்லிக் கனி போல் இருக்கிற இவ் அர்த்தத்தை தேவரீர் கண்டு கொள்ள-மாட்டீரோ –
அடியேன் சொல்ல கேட்டருள வேணும் என்னும் ஒரு நிர்பந்தம் உண்டோ –

ஸூலபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் உபாசதே பத்தம் த்யக்த்வா தனம் மூடோ குப்தமன்வேஷ தேஷி தவ்-என்னக் கடவது இறே –

உன்னுடைய கார் கொண்ட வண்மை
தேவரீர் வள்ளல் தனத்தினால் வழங்க -நான் அதனை அடைய எளிதாய் முடிந்தது என்கிறார் .
ஸ்ரீ எம்பெருமானாருடைய வண்மை கார் கொண்டது -அதாவது மேகத்தை வென்றது –
சிலருக்கு சில காலத்திலே மழை பொழிவது கார்
எல்லாருக்கும் எல்லா காலத்திலும் பயன் படுவது வண்மை-ஆதலின் காரை வென்றது வண்மை

இது கண்டு கொள்
தேவரீர் வழங்க நான் பெற்றமை -வழங்கின தேவரீருக்கு தெரியாதோ –
ஏற்றம் என் வாயாலே சொல்லிக் கேட்க வேணுமா என்கிறார் .
நான் கேள்வியினால் பிரபத்தி செய்து ஸ்ரீ பகவானை அடைவார்கள் கூட்டத்தில் சேர்ந்திலேன்-
பொருவற்ற கேள்வியினால் ஸ்ரீ ஆசார்யனுடைய அபிமானத்திற்கு பாத்ரமாகி ஸ்ரீ எம்பெருமானார்-திருவடிகளையே பெரும் பேறாக
பெறுமவன் ஆனேன் –என்பது கருத்து –

தேவரீர் ஒவ்தார்யத்தாலே பெருமவன் நான் என்கிறார் –
இவ் வார்த்தை கொண்டு—இரு கரையர் -என்று ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ ஆழ்வான் இருவரையும் பரிகசிப்பார் -ஸ்ரீ வடுக நம்பி-
நம்மை நம் பையல் என்று ஒதுங்குவது மூன்றாம் நிலை-ஸ்ரீ பெருமாளை பற்றும் பொழுது
பர கத ச்வீகாரம் ஏற்றம் ஸ்ரீ ஈஸ்வரன் திரு உள்ளத்தில் மகிழ்வானாம்-
உன் அபிமானத்தில் ஒதுங்கி உன் திருவடி அடைந்தேன் –என்கிறார்-உணர்வினில் நிறுத்தினேன் அதுவும் அவனின் இன் அருளே -போலே-

————–

நல் வீடு -ஏர் கொண்ட வீடு -மிக்க நல் வீடு அன்றோ –

உம்முயிர் வீடுடையான் இடம் வீடு செய்ம்மினே -1-2-1-
ஒளி வரும் முழு நலம் முதலில கேடில வீடாம் –1-3-2-
திண்ணன் வீடு முதல் முழுதுமாய் -2-2-1–
கனிவார் வீட்டு இன்பமே-2-3-5-
நல்லமுதம் பெறர்கு அறிய வீடுமாய்-2-5-9–
இணைவனாம் எப்பொருட்க்கும் வீடு முதலாம் -2-8-1–
துயரில்லா வீடு முதலாம் 2-8-2–
சேண் பாலா வீடோ -2-8-2-
சீர்மை கொள் வீடு சுவர்க்கம் 2-8-10-
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் 2-9-1–
சிறப்பில் வீடு சுவர்க்கம் -2-9-5-
இப்பத்தும் கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே -2-9-11–
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே -3-3-7-
நாடு நகரமும் நன்குடன் காண நலனிடை யூர்தி பண்ணி வீடும் பெறுத்தித் தன் மூ உலகுக்கும் தரும் ஒரு நாயகமே -3-10-11-
எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே -4-10-6-
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும் 5-6-10–
பொன் உலகு ஆளீரோ-6-8-1–
ஏற்ற யரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு -7-6-10-
பசை அற்றால் அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே 8-8-6-
அதுவே வீடு வீடு பேற்று இன்பம் தானும் அது தேறி –
எதுவே தானும் பற்றி இன்றி ஆதும் இலிகளா கிற்கில்
அதுவே வீடு வீடு பேற்று இன்பம் தானும் அது தேறாது
எதுவே வீடு ஏது இன்பம் என்று எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே-8-8-7–
நுகர்ச்சி யுறுமோ மூவுலகின் வீடு பேறு-8-10-6-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading