ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
ஸ்ரீ எம்பெருமானார் உடைய ஜ்ஞான ப்ரதத்வ-மோஷ பிரதத்வங்களை அருளிச் செய்து நின்றார் கீழ் –
ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணத்துக்கு உறுப்பான கரணங்களை கொண்டு-வ்யபிசரியாதபடி ஸ்ரீ எம்பெருமானார்
ஸ்வ உபதேசத்தாலே நியமித்து ரஷித்து இலராகில்-இவ்வாத்மாவுக்கு வேறு ரஷகர் ஆர் என்று
ஸ்வ கதமாக வனுசந்தித்து-வித்தராகிறார் இதில் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–
கீழ் இரண்டு பாட்டிலும் ஸ்ரீ எம்பெருமானாருடைய ஞான பிரதான வைபவத்தையும் –
மோஷ பிரதான-வைபவத்தையும் அருளிச் செய்து -இதிலே
இந்திரிய கிங்கரராய்ப் போருகிற சம்சாரிகளைப் பார்த்து -அசித விசேஷிதராய் –
போக மோஷ சூன்யராய் இருந்த உங்களுக்கு –
புருஷார்த்த யோக்யராய் -ஸ்வ சரண கமல சமாஸ்ரயணம் பன்னுக்கைக்கு உடலாக
அடியிலே கொடுத்த கர சரணாதிகளைக் கொண்டு -வ்யபசரியாதே
ஸ்ரீ சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து -உஜ்ஜீவியுங்கோள் என்று ஸ்ரீ எம்பெருமானார் உபதேசித்து இலர் ஆகில் –
இந்த சேதனருக்கு வேறு ரஷகர் யார் என்று -சொல்லா நின்று கொண்டு -அவ் வழியாலே
ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய மகா உபகாரத்வத்தை கொண்டாடி வித்தர் ஆகிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
ஸ்ரீ எம்பெருமானார் ஞானம் கொடுப்பதன் சீர்மையும் -மோஷம் கொடுப்பதன் சீர்மையும்
கீழ்ப் பாசுரங்களில் கூறப் பட்டன .
ஸ்ரீ இறைவன் தன்னைப் பற்றுகைக்கு உறுப்பாக கொடுத்த கருவிகளை அவன் திறத்து அன்றி
பிறர் திறத்து பயன் படுத்தாத படி –
ஸ்ரீ எம்பெருமானார் -தமது உபதேசத்தாலே கட்டுப் படுத்தி-இவ் ஆத்ம வர்க்கத்தை ரஷித்து இலர் ஆகில்
வேறு எவர் காப்பாற்றுவார் என்று தாமே-நினைந்து ஈடு பட்டுப் பேசுகிறார் .
சரண மடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரண மடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரண மிவை வுமக் கன்று என்று இராமானுசன் உயிர் கட்
கரணங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ் வார் உயிர்க்கே – 67- –
பத உரை .
சரணம் அடைந்த -திருவடிகளை ஆஸ்ரயித்த
தருமனுக்கா -தருமா புத்த்ரனுக்காக
பண்டு -முற்காலத்தில்
நூற்றுவரை -துர் யோதனன் முதலிய நூறு பேர்களையும்
மரணம் அடைவித்த -மாளும்படி செய்த
மாயவன்-வியக்க தக்க வல்லமை படைத்த ஸ்ரீ சர்வேஸ்வரன்
தன்னை வணங்க -தன்னை ஆஸ்ரயிப்பதற்காக
வைத்த -உபகரணங்களை வைத்த
கரணம் இவை -இந்திரியங்கள் இவை
உமக்கு அன்று -உங்கள் உபயோகத்துக்காக வைக்கப் பட்டவைகள் அல்ல
என்று -என்று உபதேசித்து
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
உயிர்கட்கு -ஆத்மாக்களுக்கு
அரண்-ரஷையை
அங்கு -அந்த சமயத்தில்
அமைத்திலனேல் -செய்யாது இருப்பார் ஆனால்
இவ் ஆர் உயிர்க்கு -இந்த அருமையான ஆத்மாவுக்கு
மற்று அரண் ஆர் -வேறு காப்பாற்றுகிறவர் எவர் -எவருமே இல்லை -என்றபடி –
வியாக்யானம் –
தான் கொடுத்த கரணங்களைக் கொண்டு ந நமேயம் -யுத்த–39 11- -என்னாதே –
திருவடிகளை ஆஸ்ரயித்த தர்ம புத்ரனுக்காக முற் காலத்திலே தன்னை வணங்கோம் என்ற துர் மானிகளாய்
ஆஸ்ரிதரை நலிந்த துர் யோநாதிகள் நூற்றுவரையும் -மரணத்தை ப்ராபிப்பித்த ஆச்சர்ய சக்தி யுக்தனான
ஸ்ரீ சர்வேஸ்வரன் – தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உப கரணங்களாக வைத்த கரணங்கள் இவை –
உங்களுக்கு சேஷமாய் உள்ளது ஓன்று அன்று -என்று
இப்படி அந்வய -வ்யதிரேகங்கள் -இரண்டாலும் -கரணங்களினுடைய பகவத் அனந்யார்ஹத்வத்தைப் பிரகாசிப்பித்தது –
கரணங்களைக் கொண்டு வ்யபிசரிக்கிற சமயத்தில் ஸ்ரீ எம்பெருமானார் ஆத்மாக்களுக்கு ரஷையை கற்பித்திலர் ஆகில்
இவ் ஆத்மாவுக்கு வேறு ரஷகர் ஆவார் யார் –-ஒருவரும் இல்லை என்று கருத்து .
அரண்-ரஷை
அமைத்தல்-சமைத்தல்
மாயவன் தன்னை வணங்க வைத்த -என்று சமஸ்த பதமாக யோஜிக்கவுமாம் ..
தன்னை வணங்க வைத்த –உமக்கு அன்று -என்று அரண் வெளி அமைத்துக் கொடுத்தார்
ஸ்ரீ ஸ்வாமி –நாமம் நமக்கு என்று கொண்டோமே – பாண்டவர்கள் ந நமேயம் -விலக்காமையே பற்றாசாக –
நூற்றுவர் -வணங்காமல் -த்ருஷ்டாந்தம் –கரணங்களைக் கொண்டு -வியபிசரிக்கிற –நமக்கு நாமே என்றாலும் கூடாதே –
ரக்ஷை அரண் அமைத்தார் ஸ்ரீ ஸ்வாமி – மரணம் அடைவித்த –நிமித்தம் அர்ஜுனன் -என்றவாறு –
உபதேசம் -ஸ்ரீ பாஷ்யாதிகள் மூலமும் -74 சிம்ஹாசனாதிபதிகள் மூலம் –
ஸ்ரீ திருக் கோயில் உத்ஸவாதிகள் ஏற்படுத்தி –நமக்காக ஸ்ரீ பிராட்டி முன்னாக ஸ்ரீ அரங்கன் திருவடிகளில் சரண் அடைந்து –
ரக்ஷை பண்ணி அருளினார் –இதுவும் உபகார பரம்பரை -முந்திய இரண்டு பாசுரங்களை போலே
சரணம் அடைந்த தருமனுக்கா –
ஸ்ரீ ராகவத்வே பவத சீதா -என்னும்படியான ஸ்ரீ பெரிய பிராட்டியார் தானே –
விதிதஸ் சஹி தர்மஞ்சஸ் சரணாகத வத்சல-தேன மைத்ரீ பவது தேயதி ஜீவிதுமிச்சசி -என்று
நேர் கொடு நேர் உபதேசிக்கிலும் இசையாத ராவணனைப் போலே -ந நமேயம் -என்று இருக்கை அன்றிக்கே –
த்ரௌபத்யா சஹிதரஸ் சர்வே நமஸ் சக்ரூர் ஜனார்த்தனம் -என்றும்
ஸ்ரீ கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ண பலா கிருஷ்ண நாதாஸ் ச பாண்டவ –-என்கிறபடியே சரணாகதரான
தர்ம புத்திரன் தொடக்கமான பாண்டவர்களுக்காக –
தரும புத்திரனை தருமன் -என்றது -சத்ய பாமாவை -சத்ய பாமா- எனபது போலே நாம ஏகதேச க்ரஹணம்
மற்ற பாண்டவர்களுக்கும் த்ரௌபதிக்கும் இது உப லஷணம்-
த்ரௌ பத்யா சஹி தாஸ் சர்வே நமச்சக்ரூர் ஜனார்த்தனம் -என்று
த்ரௌ பதியோடு கூடப் பாண்டவர் அனைவரும் ஸ்ரீ கண்ணனைச் சரண் அடைந்தனர் –
என்று கூறப் பட்டு இருப்பது காண்க –
சரணம் அடைந்தவர் த்ரௌபதியோடு கூடிய பாண்டவர் ஐவர் –-அவர்களைக் காப்பதற்காக
பண்டு நூற்றுவரை –
ஸ்ரீ அமுதனார் -தமக்கு த்வாபரா வாஸநா காலம் புராதனம் ஆகையாலே –பண்டு -என்கிறார் –
இப்படிப் பட்ட பூர்வ காலத்திலேயே -மகா பாரதத்திலே-நூற்றுவர் -என்று தொகை இட்டு சொல்லப்பட்ட
துர்யோநாதிகள் நூற்றுவரையும் –
மரணமடைவித்த –
மயைவைதே நிஹிதானாம் பூர்வமேவ நிமித்தாமாத்ரம் பவசவ்யாசாசின் -என்றும்
காலோச்மி லோகஷய க்ர்தப்ரவர்த்தா -என்கிறபடி
மரணத்தை ப்ராபிப்பித்த -சம்ஹரிப்பித்த என்றபடி –
மாயவன் –
பகலை இரவாக்கியும் –
ஆயுதம் எடேன் என்று பிரதிக்ஜை இட்டு ஆயுதம் எடுத்ததும் –
யுத்தான் நிவர்த்தனான அர்ஜுனனை நிறுத்தி -பஹூ முகமாக உபதேசித்து –
கரிஷ்யே வசனம்தவ -என்னும்படி பண்ணி
தன்னுடைய பெருமை பாராதே ஆஸ்ரித பரவசனாய் -லோகத்துக்கு எல்லாம் சாஷியாக தூத்ய சாரத்யங்களைப் பண்ணின
ஆச்ச்சர்ய குண சேஷ்டிதங்களை உடைய ஸ்ரீ கிருஷ்ணன் –
நூற்றுவரை மரணம் அடைய செய்தான் மாயவன் .
ஸ்ரீ கண்ணன் என்னும் கரும் தெய்வம் எல்லோருக்கும் பொதுவானதன்றோ –
அது சிலரை காப்பான் ஏன்-பலரை மாய்ப்பான் ஏன் –
ஸ்ரீ கண்ணன் தன்னை வணங்குவதற்காக கொடுத்த கரணங்களை அவன் திறத்து பயன் படுத்தி வணங்கி-வழி பட்டவர் சிலர் –
அத் தன்மையால் பாண்டவர்களை காப்பாற்றுகிறான் .
வணங்கா முடி மன்னன் என்று பேர் பெற்ற துர் யோதனன் முதலியோர்களோ-ஸ்ரீ கண்ணன் கொடுத்த
கரணங்களை அவன் திறத்து தீங்கு இழைத்தற்காக பயன் படுத்தி பகைமை பாராட்டினவர்கள் பலர் .
அத்தகைய நூற்றுவரை மரணம் அடைவிக்கிறான் .
தன் உயிர் நிலையான பாண்டவர்கள் இடம் பகைமை கொண்டமையின் தன் பகைவர்களாக
அவர்களைக் கருதி ஸ்ரீ கண்ணன் மரணம் அடைவித்தான் -என்க .
மரணம் அடைவித்த –
மயை வைதே நிஹதா பூர்வ மேவ -இவர்கள் முன்னமே என்னாலேயே கொள்ளப் பட்டு விட்டனர் -என்று
ஸ்ரீ கீதையில் ஸ்ரீ கண்ணன் தானே சொல்வது காண்க –
தருமனுக்காக நூற்றுவரை மரணம் அடைவித்தலின்-மாயவன் இடம் உள்ள ஆஸ்ரித பஷ பாதம் தோற்றுவது காண்க –
மாயவன்-
ஆச்சர்ய சக்தி வாய்ந்தவன் –
பகலை இரவாக்கியது போன்ற செயல்களை நினைத்து இங்கனம் கூறுகிறார் .
ஸ்ரீ கிருஷ்ண ஏவஹி லோகானா முத்பத்தி ராபிசாப்யாய -என்று
உலகங்கட்கு ஸ்ரீ கிருஷ்ணனே அன்றோ உத்பத்தி லயங்களுக்கு காரணம் .என்றபடி –
ஸ்ரீ கண்ணனே கரணங்களைக் கொடுத்து சிருஷ்டி செய்வதாக அருளிச் செய்தார் .
எல்லாக் கருமங்களும் செய் எல்லையில் மாயனைக் கண்ணனை -ஸ்ரீ திருவாய் மொழி -3 10-8 – என்று-
ஸ்ரீ கண்ணனே சிருஷ்டி முதலியவற்றை செய்வதாக ஸ்ரீ நம் ஆழ்வார் அருளியதும் –காண்க
பித்தேறிய காலத்திலும் -அவர்-எல்லா வுலகும் ஸ்ரீ கண்ணன் படைப்பு -என்பர் .
அந்த ஸ்ரீ நம் ஆழ்வார் சித்தாந்தத்தை பின் பற்றுபவரான ஸ்ரீ எம்பெருமானார் கண்ணனையே
சிருஷ்டி கர்த்தாவாக சொல்வது மிகவும் பொருந்தும் அன்றோ —
ஸ்ரீ கண்ணனுக்கே ஆமது காமம் -என்று பக்திக்கு விஷயமான காரணப் பொருளாக ஸ்ரீ கண்ணனை-உபதேசிப்பதற்கு ஏற்ப
ஸ்ரீ கண்ணனே சிருஷ்டி செய்ததாக உரைக்கிறார் -என்க .
தன்னை வணங்க வைத்த கரணம் இவை –
விசித்ரா தேக ச்ம்பத்தி ரீஸ்வராய நிவேதிதும் -பூர்வமேவ கர்தா ப்ரஹ்மன் ஹஸ்தபாதாதி சம்யுதா -என்றும் –
ஜிஹ்வே கீர்த்தய கேசவம் முரரிபும் சேதோ பஜ ஸ்ரீ தரம் பாணி த்வந்த்வ சமர்ச்சயாச்சுத கதாம் ஸ்ரோத்ர த்வயத்வம்
ச்ருணு கிருஷ்ண லோக்ய லோசன த்வயஹரேர் க்கச்சான்க்ரி யுகமாலயம் ஜிக்ரக்ரான
முகுந்த பாத துளஸீம் மூர்த்தன் நமா தோஷஜம்-என்றும்
ஸ்வ சரண கமல பரிசரண அர்த்தமாக ஸ்ரீ சர்வேச்வரனாலே உண்டாக்கப்பட்ட இந்திரியங்கள் – உமக்கு அன்று என்று –
இப்படி சம்சார நிஸ்தரனத்து சாதனமாக கொடுத்த கரணங்களைக் கொண்டு –
நதியை கடக்க கொடுத்த தெப்பத்தைக் கொண்டு -அதை கடவாதே பிரவாஹத்தோடே போவாரைப் போலே
ஆக்கையின் வழி உழன்று -யாதானும் பற்றி நீங்கும் வ்ரதத்தை ஏறிட்டுக் கொண்டு -திரியுமவர்களைக் கண்டு –
உமக்கு அன்று என்று -இந்த கரணங்களைக் கொண்டு நீங்கள் சம்சரிக்கைக்காக வன்று என்று –
தன்னை வணங்க வைத்த —அன்று என்று-தன்னை வணங்க மாயவன் வைத்த கரணம் -என்க .
இனி மாயவன் தன்னை -என்பதனை ஒரு சொல்லாகக் கொள்ளலுமாம் .
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேசம்-இவ்விதம் ஹிருஷீகேசனாகிய -இந்திரியங்களுக்கு உரிய தலைவனாகிய –
ஸ்ரீ கண்ணனாம் சாரதியை நோக்கி -அர்ஜுனன் கூறி -என்றும்
தமுவாச ஹ்ருஷீகேச ப்ரஹசன்நிவ பாரத -என்று பரத குல தோன்றலே -ஹ்ருஷீகேசனான ஸ்ரீ கண்ணன்
சிரித்து பேசுபவன் போலே -அர்ஜுனனை நோக்கி சொன்னான் -என்றும் ஸ்ரீ கீதையில்
ஸ்ரீ கண்ணனை ஹ்ருஷீகேசன் -என்று வழங்கியதை அடி யொற்றி –
ஸ்ரீ எம்பெருமானார் நேர் முகமாகவும் எதிர் முகமாகவும் –ஸ்ரீ கண்ணனே இந்திரியங்களுக்கு உரியவன் -என்று உபதேசிக்கிறார் .
வைத்த கரணம் -என்று நேர் முகமாகவும்
உமக்கு அன்று -என்று எதிர்மறையாகவும்
கரணங்கள் மாயவனுக்கே உரியவை என்பதை ஸ்ரீ எம்பெருமானார் வலியுறுத்துகிறார் -என்க –
நாடாத மலர் நாடி -நாடொறும் நாரணன்தன் வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வைக்கின்று –
திருவாய் மொழி –1 4-9 என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி இங்கு அனுசந்திக்கத் தக்கது .
சேதனர் சம்ஹார காலத்தில் அறிவு ஒடுங்கி -அசேதனப் பொருள் போலே கிடத்தலால்
கொடுத்த கரணம் -என்னாது -வைத்த கரணம் -என்றார் .
உமக்கு அன்று –
உங்களுக்கு உரியதாக வைத்தது அன்று -என்றபடி-
சமஸ்த பதமாக –மாயவன் தன்னை வணங்க தானே-
ஸ்ரீமன் நாராயணனே உன்னை என்று இன்றி-ஸ்ரீமன் நாராயணனின் சரண் அடைவது போல
சேர்த்தும் விரித்தும் கொள்ளலாம்
இராமானுசன் –
இந்த ஸ்ரீ எம்பெருமானார் –
உயிர்கட்கு –
அசேதனங்களுக்கு உபதேசிக்கப் போகாது இறே –
இந்த ஆத்மா ப்ரரனவத்துக்கு உள் ஆகையாலே இவர்களுடைய சத்தா விநாசம் கண்டு -சஹியாதே –
பரம கிருபையாலே -சேதனரைக் குறித்து -கரணங்களை உமக்கு விநியோகித்து கொள்ளுகைக்கு அன்று என்று –
அங்கு அஞ்ஞராய் -தேஹாத்மா பிராந்தர் இடத்திலே ரஷையாக –
அவ்வவ சேதனருடைய -ஸ்வ பாவத்துக்கு தகும்படி உபதேசித்தும் -பாஷ்யாதி முகேன கிரந்தீகரித்தும்
அவர்களுக்கு அமரும்படி தம்முடைய சம்பந்திகளான பேர்களாலும்-அந்வய வ்யதிரேகங்கங்களாலே
போதித்திலர் ஆகில் – இவ்வார் உயிர்க்கு –
ஏவம் சம்ஸ்ர்தி சக்ரச்தே ப்ராம்ய மானேஸ்வகர்மபி –என்கிற
சம்சார சாகர நிமக்னரான ஆத்மாக்களுக்கு –
அரண் ஆர் –
வேறு ரஷகாந்தரமுண்டோ –
ஷேமஸ் ச ஏவ ஹியதீந்திர பவச்சிரிதாநாம்-என்றும் –
தத்தே ரங்கீ நிஜமபிபதம் தேசிகாதேச கான்க்ஷி-என்றும் சொல்லுகிறபடியே –
ஸ்ரீ தேவரீரே ரஷகர் என்றது ஆய்த்து –
நசேத் ராமானுஜேத்ஏஷா சதுராசதுரஷரீ -காமவச்த்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோஹந்த மாத்ர்சா-என்னக் கடவது இறே —
என்று –ஸ்ரீ இராமானுசன் —ஆருயிருக்கு-என்று -என்று உபதேசித்து
ஸ்ரீ மாயவனுக்கே உரியவை கரணங்கள்
அவைகளைத் தம் நன்மைக்காக- உபயோகப்படுத்தல் தகாது –
இவ் உண்மையினை அறிந்து –தமக்காக சாதனா அனுஷ்டானம் செய்யாது -தம் கரணங்களை ஒடுக்கி -நிற்றலாகிய
சரணாகதி -ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான சரணாகதியைக் கொண்டமையின் –தருமன் முதலியோர் வாழ்ந்தனர் .
தம் நலனுக்காக தம் கரணங்களை உபயோகப் படுத்தி -நூற்றுவர் மாய்ந்தனர் -என்று உதாரணம் காட்டி
உபதேசித்து ஸ்ரீ எம்பெருமானார் உயிர்கட்கு அரண் அமைத்தார் -என்க .
உயிர்கள்-
ஆத்மாக்கள்
அங்கு உயிர்கள் மாயவனுக்கு உரிய கரணங்களை தம் திறத்தோ பிறர் திறத்தோ உபயோகப்படுத்தி
அழிவைத் தேடிக் கொள்ளும் தறுவாயிலே
அரண்-
ரஷை
அமைத்திலனேல் –
செய்யாது இருப்பார் ஆயின்
இவ் ஆர் உயிர்க்கு மற்று அரண் யார்
அருமையான இவ் ஆத்மா அழியாது காக்க வேறு எவரும் இலர் -என்றபடி .
ஆக்கையின் வழி உழன்று–யாதானும் பற்றி நீங்கும் விரதம்/கண்டு-உங்களுக்கு இல்லை-என்று சொல்லி-
உயிர்களுக்கு –
ஸ்ரீ கண்ணன் அசேதனுக்கு சொன்னது போல தான்-அங்கு உயிர்களுக்கு விசேஷித்து சொல்ல வில்லை
பர துக்கம் சகியாதே நிர்கேதுக கிருபையால்
வாய் அவனை அல்லாது வாழ்த்தாது-கை உலகம் தாவி அளந்தவனை அன்றி தொழாது-
கேளா செவி அல்ல செவி-உள்ளாத உள்ளத்தை உள்ளமாக கொள்ளோமே-பிரிந்தால் தரிக்க மாட்டாமே
என் நாவின் இன் கவி ஒருவருக்கும் கொடுத்திலேன்-அங்கு-அரண்-தேவை உள்ள இடத்தில் வேலி-
கரணங்களை கொடுக்கிறான்- காருணிகனான ஸ்ரீ சர்வேஸ்வரன் நீர்மை யினால் அருள் செய்தான் -ஸ்ரீ ஆச்சர்ய ஹ்ருதயம்
அணைத்த வேலும் தொழுத கையும் -ஸ்ரீ கலியன் நின்ற பிரகாரமும் சேஷத்வம் பறை சாற்றும்-
———–
வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும் என் நாவி னுக்காற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி—5-1 1-
மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– –பெருமாள் திருமொழி -2-2-8-
வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை அல்லது தாந்தொழ பேய் முலை நஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால்
காணாக் கண் கேளா செவி ——முதல் திருவந்தாதி–11-
தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான்
அந்தரம் ஒன்றில்லை யடை——58-
நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர்
தீக்கண் செல்லும் திறம் ——95-
பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –இரண்டாம் திருவந்தாதி-–91-
காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண்டார கலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான செம்பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை —-மூன்றாம் திருவந்தாதி–-—35–
நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப் பெற்றேன்
நெஞ்சமே பேசாய் நினைக்கும் கால் -நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என் கொலோ
ஓராது நிற்பது உணர்வு ——81-
வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த
துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து–-நான்முகன் திருவந்தாதி –11–
வகை சேர்ந்த நல் நெஞ்சம் நாவுடைய வாயும்
மிக வாய்ந்து வீழா வெனிலும்-மிக வாய்ந்து
மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பார் இதுவன்றே
மேலைத் தாம் செய்த வினை––பெரிய திருவந்தாதி–44-
அருவரை யன்ன தன்மை யடலாமையான திரு மால் நமக்கோர் அரணே –பெரிய திருமொழி-–11-4-2-
கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7-
நீணாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்
பேணான் கடைந்து அமுதம் கொண்டுகந்த பெம்மானைப்
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன் மலையைக்
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே –11-7-1-
நீள் வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை
தோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானை
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே –11-7-2-
மையார் கடலும் மணி வரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானைக் கை தொழாக் கையல்ல கண்டாமே –11-7-5-
கனையார் கடலும் கரு விளையும் காயாவும்
அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும்
சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சல்ல கண்டோமே –11-7-7-
மொய்ம் மாம் பூம் பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர், தண் கடல் வட்டத்து உள்ளீரே!––ஸ்ரீ திருவாய் மொழி-3-5-1-
வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப் படுவாரே–3-5-8-
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின் மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே–9-10-7-
இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-
பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-
பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன்
தேர் மிகுத்து மாயமாகி நின்று கொன்று வென்றி சேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையமைவர் பாலதாம்
சீர் மிகுத்த நின்னலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே –திருச்சந்த விருத்தம்-–89-
நீர்மையில் நூற்றுவர் வீய ஐவருக்கு அருள் செய்து நின்று
பார்மல்கு சேனையவித்த பரஞ்சுடரை நினைந்தாடி
நீர்மல்கு கண்ணினாராகி நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்க்கு என் செய்வாரே -திருவாய்மொழி–2-5-7-
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப் போர் பண்ணி
நீறு செய்த வெந்தாய் –சிரீ வர மங்கல நகர் ஏறி வீற்று இருந்தாய் –5-7-4-
அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –
அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்க்காய் அன்று பாரதப் போர்
முடிய பரி நெடும் தேர் விடுங்கோனை முழுதுணர்ந்த
அடியர்க்கமுதம் இராமானுசன் என்னை யால வந்து
இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே––இராமானுச நூற்றந்தாதி–51-
சரணம் அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்த
மாயவன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை யுமக்கு
என்று இராமானுசன் உயிர்கட்க்கு அரண் அங்கு அமைத்திலனேல்
அரண் ஆர் மற்று இவ்வார் உயிருக்கே–67-
ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன இராமானுசனைப் பணியும்
நல்லோர் சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே -68-
—————-———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply