ஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் – ஏழாம் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —

கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி
பிறவாமை என்னைப் பணி எந்தை பிரானே –7-1-1-

கடவ நீயே என்னுடைய விரோதியைப் போக்கா விட்டால் வேறு சிலர் கடவார் உண்டோ –
நீயே நினைத்து கார்யம் செய்யில் உளேனாய்-இல்லையாகில் இல்லை யாம் படி
அநந்ய கதியாய் இருக்கிற நான்-ஸ்வாமியான உன்னையே நினைத்துக் கூப்பிடா நின்றேன் –
என்னுடைய விரோதியை நீயே போக்கா விடில் வேறு சிலர் போக்குவார் உண்டோ என்கிறார் முதல் பாசுரத்தில்

ஆபன்னனான போதாக என்னுடைய ரஷணத்துக்காக நான் நாலடி இடத் தொடாதே
உன்னையே சொல்லிக் கூப்புடுகை யாகிற இப் பேறு பெற்றேன் –
இனி உன்னுடைய அருளுக்கு தண்ணீர் துரும்பு இல்லை இறே –
நாம் எல்லாம் செய்வோமாக இருக்கச் செய்தே நீ ஒட்டுகிறலை என்ன வேண்டாவே –
நான் கை வாங்கினேன் – அருள் தந்திடு எனக்கு என் குல நாதனே –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ சௌபரி பல வடிவு கொண்டால் போலே அநேக வடிவம் கொண்டு
அவ்வோ இடங்கள் தோறும் இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்னும்படி வர்த்தியா நின்றான் –
ஸ்ரீ திருப் பாற் கடலில் கிடந்ததும்-ஸ்ரீ திரு மலையில் நின்றதும்-ஸ்ரீ திருக் கோட்டியூரிலே வந்ததும் தமக்காக -என்று
அறிந்த ஹர்ஷம் -அதுவே பருகிக் களிக்கின்றேன் -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

மகா உபகாரகனாய் இருக்கிற உன்னை உன்னாலே உபகாரம் கொண்டு இருக்கிற நான்
எத்தைச் சொல்லி மறப்பது –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

நர நாரணனே –ஸ்த நந்தய பிரஜைகாகா தாய் குடி நீரை குடிக்குமா போலே
இவர்களுக்காகா தபஸ் ஸூ பண்ணுமவனே-
எங்கள் நம்பி-குறைவாளரான எங்கள் குறையை நிரப்புகைக்கு ஈடான பௌஷ்கல்யத்தை உடையவனே –
உன்னுடைய கைங்கர்யத்துக்கு நானே விரோதிகளை நானே போக்கித் தருகிறேன்-அஞ்சாதே கொள் -என்று
மாஸூச என்றாப் போலே ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –
சர்வ பூதேப்ய அபயம் ததாமி -என்றாப் போலே இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

தேவர்கள் பருகும் அமிர்தம் போல் அன்றிக்கே கைங்கர்ய ருசி உடையராய் இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பருகும் அம்ருதமாய் –
அப்போதே எடுத்து நுகரலாம் படி கனி போலே இருக்கிறவனே –
காணப் பெறாமையாலே அசந்நேவ-என்கிறபடியே உரு மாய்ந்த நான் கண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேன் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

என்னோடு ச கோத்ரிகளாய் தான் உகந்த ஊர் எல்லாம் -என்கிறபடியே
உகந்து அருளின நிலங்கள் எல்லாம் புக்கு அனுபவிக்கும் அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனே –
நீ உகந்து அருளின நிலங்களிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே உன்னைக் கண்டு கொண்டு
உஜ்ஜீவிக்கப் பெற்றேன்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பிறர் என்னை பேசா நின்றார்கள் என்று கை விடலாம்படி இருக்கிறாய் அல்லையே நீ –
முத்துப் போலே ஸ்ரமத்தைப் போக்குமவனே –பெரு விலையனான மாணிக்கம் போலே இருக்கிறவனே
பலத்தோடு வ்யபசரியாதவனே -முளையாத வித்து -நிஷ்பலம் என்பதால் முளைக்கின்ற வித்தே -என்கிறார்
உன்னை எத்தைச் சொல்லி நான் விடுவது –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஆபத்து கரை புரண்டால் வரையாதே எல்லாரையும் ஒக்க ரஷிக்கும் ஸ்வபாவன் ஆனவனே –
திரைக் கிளர்த்தி உடைய கடல் சூழ்ந்த பூமியை அமுது செய்த திருப் பவளத்தை உடையவனே –
இப்படி ஆபத் சகனான உன்னை எங்கனே மறக்கும் படி –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

என்னைப் போலே நீங்களும் இவ் விஷயத்திலே ருசியை உடையிகோளாய் பாடுவது ஆடுவதாகவே
ஸ்ரீ பரம பதம் தன்னடையே சித்திக்கும் படியாம் – அதுக்கு விரோதியான பாபம் தன்னடையே போம் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————-

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர்தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1-

இனி வேறே நூறாயிரம் இதர விஷயங்கள் முகம் காட்டினாலும் அவற்றோடு செறியேன் –
நான் நோவு படுகிற சம்சாரத்தில் நீயே முற்பாடனாய் வந்து நின்ற பின்பு அவற்றோடு பொருந்துமோ –
ப்ரீதி அதிசயத்தாலே -ஒ -என்கிறார் –என்கிறார் முதல் பாசுரத்தில்

ஸ்ரீ பிரஹலாத ஆழ்வான் நெஞ்சை உனக்காக்கிக் கொண்டாய் என்கிற இது உனக்கு ஒரு மிடுக்கோ –
என்னை உனக்காக்கிக் கொண்ட உனக்கு –
நீ என்னுடைய சர்வ இந்த்ரியங்களுக்கும் உன்னை விஷயம் ஆக்கி வைக்க
நான் உன்னை விட்டு புறம்பே கவி பாடுகைக்கு பிராப்தி உண்டோ –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அஞ்சனம் போலே ஸ்ரமஹரமான வடிவை உடைய உன்னை அல்லது புறம்பே சிலரை –
இப்போது புறம்பாக நினைக்கிறது -புறம்புற்றை திருப்பதிகளை –
எத்தனை வேணும் என்று ப்ரேரித்தாலும் ப்ரீதி புரஸ் சரமாக ஏத்துமது இல்லை –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

சேராச் சேர்த்தியாக என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து அவ் வாலந்தளிர் அளவன்றிக்கே
ஸ்ரீ பரம பதம் போலே இடம் பெற இருந்து என்னை உனக்காக்கிக் கொண்ட இம் மகோ உபகாரத்தை அறியாதே
நான் க்ருத்க்னனாய் இருக்கிறேன் அல்லேன் –
அவ்விடை யாட்டமும் அறிந்தே இருக்கிறேன் -உனக்கு உறைவிடம் இல்லாமை தான் செய்தாயோ நீ –
உனக்கு அசங்குசிதமாக வர்த்திகைக்கு ஒரு ஸ்தானம் இல்லையோ -இத் தேசத்தை உடைய உனக்கு –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

என்னையும் அடிமையில் மூட்டுகைகாக என்னுடைய ஹிருதயத்திலே புகுந்த உன்னைப் போக ஒட்டுவேனோ
சேஷ பூதராவார் சேஷி செய்தபடி செய்யக் கண்டு இருக்குமவர்கள் அன்றோ
ஒட்டேன் என்று நிர்பந்திக்கை உம்முடைய ஸ்வரூபத்துக்குப் போருமோ -என்ன –
மடல் எடுக்க நினைப்பார் இது ஆம் இது ஆகாது என்று கார்யம் பார்த்தோ செய்வது –
நீயோ சால நாண் உடையையாய் இருக்கிறாய் –-நீ முந்துற மடல் எடுத்து பின்னை அன்றோ மடல் எடுப்பித்தது –
அவன் மடல் எடுக்கை யாகிறது -முற்பாடனாய் வர நிற்கை இறே-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

நீ போகாதே கொள் -என்று காலைக் கட்டி வளைக்கலாம் படி என் பக்கலிலே அருளைப் பண்ணின
ஸ்ரீ திரு நறையூரிலே வந்து நின்று ஆய்த்து-இவருக்கு அருளிற்று –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

நீ போகில் நான் முடிவன் -என்கிறார் – இத்தலை இழக்க வரும் அளவில் -இட்ட அடி பேர்க்க மாட்டான் –
நீர் வளைக்கிறது என்ன மிடுக்கு கொண்டு என்ன –
நீர் குற்றம் கண்டு கை விடப் பார்க்கும் அன்றும்ந கச்சின் ந அபராத்யதி -என்னும் அவள் அன்றோ அருகே இருக்கிறாள்
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

விலஷணமான புஷ்பங்களிலே வண்டுகள் ஆனவை குடைந்து வண்டு உண்ணும் -என்கிறபடியே
உள்ளே உள்ளே அவஹாகிக்கும் அத்தனை போக்கி வேறு ஒன்றில் போக ஒண்ணாத படி
போக்யமான தேசத்தை வாசஸ் ஸ்தானமாக உடையவனே-
அவ் ஊரில் அவஹாகித்தாருக்கு வேறேயும் ஓர் இடம் தேடித் போகலாம் படியோ
அவ் ஊரில் போக்யதை இருப்பது –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

தம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து கலந்த படியை அனுசந்திக்க அனுசந்திக்க
தமக்கு இனிதாக நின்றது –எனக்கு சர்வ வித போக்யமுமாய் உள்ளவனே –
வேறு ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி அது கொண்டு பெற இருக்கை அன்றிக்கே
இந்த சரீரம் தன்னையே கொண்டு பிராபிக்கப் பெற்றேன் –
அது செய்த படி தான் எங்கனே என்ன –நீ வர நிற்கையாலே நான் இப் பேறு பெற்றேன் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இத்தை அனுசந்தித்தார்க்கு -இது ஒரு சப்தமே -என்று கொண்டாடும் இதுவே ஸ்வ பாவமாம் படி இருக்கிற
சொல் தொடையைச் சொல்லும் அவர்கள்-இத்தை சொல்லுகையே போரும் ஆய்த்து பிரயோஜனம் –
அதுக்கு மேலே-போக பூமிகளிலே மேலாய் இருக்கிற ஸ்ரீ பரம பதத்திலே போய்
இவ் வாத்மாவின் உடைய ஸ்வரூப அனுரூபமான முறையாலே நிரதிசய ஸ்வரூபா நந்திகளாய்
பின்னை ஒரு நாளும் புநரா வ்ருத்தி இல்லாத பேற்றைப் பெறுவார்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————-

சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே -7-3-1-

ஸ்வ யத்னத்தால் அன்றிக்கே அவன் காட்டின வழியாலே காணப் பெற்ற அடியேனான நான் –
ஸ்ரீ திரு நறையூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற கல்யாண குண பூர்ணனை –
மனஸ் ஸூ சஹகரிக்க -அத்தாலே கண்ணால் காணும் காட்சி அன்றிக்கே அந்த நெஞ்சு தானே முழு மிடறு செய்து
பூரணமாக நெறிபட அனுபவிக்கப் பெற்றேன் –
நெஞ்சே அனுபவித்து கண்கள் அனுபவிக்கப் பெற்றது இல்லை -என்கிற குறை கிடவாமை -கண்கள் கண்டு அனுபவிக்க
அவற்றுக்கு ஆஸ்ரய பூதனாய் இருக்கிற நானும் –
என் கண்கள் களிப்பக் களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேனே -திரு வாய் மொழி -10-8-4-
என்கிறபடியே களிக்கப் பெற்றேன் –என்கிறார் முதல் பாசுரத்தில்

இப்படி பூர்ணனாய் இருந்து வைத்து என் பக்கலில் அன்பைப் பண்ணினவனை –
அவன் என்பக்களில் அன்பைப் பண்ணி மேல் விழா நிற்க
நான் அவனை ஒழிய வேறு சிலரை ஆதரிப்பேனோ –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

இவர் உடைய திரு உள்ளம் ஒழிய வேறு ஓர் இடம் உண்டாக நினைத்து இருக்கிறிலன் –
பின்னை அவ்வோ இடங்களிலே இவன் இல்லையோ என்னில்
சௌபரி பல வடிவு கொண்டு அனுபவித்தால் போலே
இதுக்கு அவ்வருகு இல்லை என்னலாம் படி அவன் முகம் கொடுத்துக் கொண்டு இருந்த படி –
எனக்கு ஜனகன் ஆனவனை-என்னுடைய குல நாதன் ஆனவனை –
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை எனக்கு பிரகாசிப்பித்த மகா உபாகாரகனை –
எத்தால் மறக்கேனே –பண்ணின உபகாரம் அளவுபட்டு மறக்கவோ
நான் இட்ட பச்சையை நினைத்து ஆறி இருக்கவோ-எவ்வழியால் மறப்பது –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஆஸ்ரிதர்க்காக சாரத்தியம் பண்ணியும் மார்விலே அம்பு ஏற்றும் உபகரிக்கும் அவனுக்கு அல்லது
வேறு சிலர் விஷயமாக என்னுடைய ஹிருதயத்தில் தாழ்ச்சி பிறவாது –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் ஒழியச் செல்லாமை பிறந்து-அது நேர் கொடு நேர் கிடையாமை
களவு கண்டு புஜிக்கப் புக்கு-அது தன்னை முடியச் செய்து தலைக் கட்டாமை
வாயது கையதாக அகப்பட்டு-உரலோடு சேர்த்து கட்டுண்டு-அடியுண்டு அடிக்கு இறாய்த்து
உடம்பு வெளுத்து-பயர்த்து-பேகணித்து நின்ற நிலையை அனுசந்திக்க அனுசந்திக்க
இவர்க்கு இவ்விருப்பு தானே யாய்த்து-சர்வ வித போக்யமுமாய் இருக்கிறது –
சர்வ ரச-என்கிற படியே இனியதாக நின்றது –இப்படி சர்வ வித போக்யனாய் இருக்கிறவனை ஒழிய
என் உடைய நெஞ்சு வேறு சிலரை அநவரத பாவனை பண்ணாது –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

இதுக்கு முன்பு ஒதப் போகாதவன் அபி நிவிஷ்டனாய் ஓதுமா போலே
சாந்தீபநீயோடே சாதாரமாக நாலு வேதத்தையும் அப்யசித்த பண்டிதனை –
இவ்வதாரத்துக்கு நாற்றங்காலாயக் கொண்டு ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின நீர்மை
உடையவனை அல்லது பாடல் செய்யேன் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

சர்வ இந்த்ரியங்களுக்கும் தானே விஷயம் ஆனான் –பெரு விலையனான நீல மணி போலே இருக்கிற நிறத்தை உடையவனை –
இந்நிறத்தைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவனுடைய நிறத்தை ஒழிய
என்னுடைய வாக் இந்த்ரியம் ஆனது வேறு ஒன்றைப் பேசாது –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஒன்றும் இன்றிக்கே இருக்கிற என் பக்கலில் தான் ஆசை உடையனாய்-என்னை சர்வாஸ்வாபஹாரம் பண்ணினவனை –
நான் அநாதி காலம் பண்ணிப் போந்த ஆத்மாபஹாரத்தை-அரை ஷணத்திலே பண்ணினவனை
இன்று-நினைவு இன்றிக்கே இருக்க காணப் பெற்றேன் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

இவனை அல்லது போற்றி என்று என்னுடைய ஹிருதயம் ஆனது மங்களா சாசனம் பண்ணாது –
பாழாளாகப் படை பொருதானுக்கு அல்லது என்னுடைய ஹிருதயமானது பல்லாண்டு பாடாது –
நித்ய சூரிகள் பெரும் பேற்றைப் பெற்றேன் -சம்சாரியான நான் –
பர தந்த்ரனாய் இருக்கையாலே பிரத்யுபகாரம் பண்ணலாவது காண்கிறிலேன்
எத்தைச் செய்வேன் சொல்லி கோள் என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி உடையார் இத்தைப் பாடப் பாருங்கோள்-கரும்பு தின்னக் கூலி இறே
பாடுகை தானே பிரயோஜனமாக போந்து இருக்க அதுக்கு மேலே பிராப்தி பிரதிபந்தகமான பாபங்கள்
நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் இல்லை -என்று தன்னடையே விட்டுப் போம் – என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

—————-

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-

ஸ்ரீ திருத் துழாய் போலேயும் ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும் உம்முடைய ஸ்பர்சம் நமக்கு இனிதாய் இரா நின்றது –
உம்முடைய தலையைக் கொடு வாரும் நம்முடைய காலை வைக்க என்ன
இங்கு உமக்கு ஒழியாது வகுத்தவர்கள் காலுக்கு இடம் போரும் இத்தனை –என்கிறார் முதல் பாசுரத்தில்

நித்ய வசந்தமாய் ஸ்ரமஹரமான பொழிலை உடைத்தாய் இருக்கிற ஸ்ரீ திருச் சேறையிலே
ஸ்பர்தையாலே ஆகாசத்தைத் தள்ளுகிறாப் போலே இருக்கிற ஸ்ரீ கோயிலிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனுடைய
திருவடிகளைத் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே –
நிதித்யாசி தவ்ய-என்கிற விஷயத்துக்கு இடம் காண்கிறிலேன் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ திருச் சேறையிலே எழுந்து அருளி இருக்கிறவன் திருவடிகளை ஏத்தி –ஆஸ்ரயிக்கிற பாக்யாதிகரே –
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி ஆஸ்ரயிக்கிற நித்ய சூரிகளில் சம்ருத்தர் ஆகிறார் –
அங்கே இருந்து ஆஸ்ரயிக்கிறவர்கள் இங்கே இருந்தபடியே ஆஸ்ரயிக்கிறவர்களோடே ஒவ்வார் இறே
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு
சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு – அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற
மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய-காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும்
பிரிய ஷமன் அல்லேன் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஸ்ரமஹரமாய் இருக்கிற ஸ்ரீ திருச் சேறையிலே நாயனார் உடைய திருவடிகளை
நாள் தோறும் போக ரூபமாக அனுசந்திப்பாருக்கு –என்னுடைய ஹிருதயமானது தேனூறி எப்பொழுதும் இனிதாக நின்றது
இது வெருமனேயோ -என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரீ வண் சேறை எம்பெருமான் அடியாரைக் கண்ட மாத்ரத்திலே –கண்டி கோளே என்னுடைய நெஞ்சும்
கண் இணையும் களிக்கிற படி-ஆன பின்பு அத்யவசிக்கையில் ஒரு குறை உண்டோ –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஸ்ரமஹரமான திருச் சேறையிலே நிற்கிற ஸ்ரீ நாயனார் உடைய ஸ்லாக்கியமான வடிவு அழகைஅனுசந்தித்தேற்கு –
ஸ்ரோத்ராதிகள் ஐந்தாலும் உண்டான வெளிச் சிறப்பை தன் பக்கலிலே ஆக்கிக் கொண்டான் –
அது தனக்குத் தான் விஷயம் ஆனான் -என்றபடி –
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆளான அளவிலே நிற்கிறது இல்லை –
அவனுக்கு ஆளானார் அளவிலே ஆளாகா நின்றது என் அன்பானது –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ தண் சேறை அம்மான் தன்னை –கண்களின் உடைய விடாய் தீரக் கண்டு –அந்த ப்ரீதியாலே இறைஞ்சி
உருகி என்றும் பாடம் ஆகவுமாம்-
கைகளின் விடாய் தீரும்படி தொழுவாரை நினைக்கும் கால்-உண்ணாது வெங்கூற்றம்-ஓவாத பாவங்கள் சேரா –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ தண் சேறை எம்பெருமான் திருவடிகளை என்றும் ஒக்க ஹிருதயத்தில் வைக்குமவர்களுக்கு –
என்னுடைய ஹிருதயம் அழிகிற படி கண்டி கோளே –இப் பேறு எனக்கு வந்த படி எங்கனேயோ –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ ஆழ்வார்-ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடையைக் கொண்டு-பகவத் விஷயத்தில் ருசி உடையீர் –
ஹேய ப்ரத்ய நீகமாய்-தர்ச நீயமாய் இருந்துள்ள திருவடிகளிலே சூட்டுங்கோள்-
அது செய்யும் பொது அஞ்சலியைப் பண்ணா நின்ற கையை உடையராய்க் கொண்டு தொழுது
இம்மாலையைச் சூட்டுங்கோள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————–

தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நல்லிருள் கண் வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
முந்தி வானம் மழை பொழியும் மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-1-

பிராப்ய பூதனான அவன் வந்து நிற்கையாலே நமக்கு பிராப்ய பூமி தான் போலே இருந்தது என்று
ஆதர அதிசயம் தோற்ற சொல்லுகிறது-என்கிறார் முதல் பாசுரத்தில்

பாரத சமரத்திலே பீஷ்மாதிகள் -அதி ரதர் மகா ரதர் -என்று இங்கனே ஆண் பிள்ளைகளாகப் பேர் பெற்று ஜீவித்து இருந்தோம்
இப்போதாக பூசல் கோழைகளாக ஒண்ணாது -என்று சாரதி பக்கலிலே வந்து கிட்டுவது
தேர் காலில் உழக்குண்டு போக ஒண்ணாது -என்று அகலுவதாய்க் கொண்டு
அவர்கள் படுவுற்றை படா நின்றன வாய்த்துக் குருகு இனங்களும் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

இந்த்ராதிகள் உடைய வஜ்ரத்துக்கு அழியாத பையல் தலைகளை
மனிச்சுக்கு ஏகாந்தமான மிடுக்காலே அழித்தான் ஆய்த்து-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

சேறு என்றால் இறாய்க்கக் கடவ வவை-அங்கு உள்ள போக்யதையின் மிகுதியாலே அத்தை மதியாதே
சஞ்சரியா நிற்கும்-இத்தால் சொல்லிற்று ஆய்த்து-பிரளயம் என்று பாராதே
ஜகத் ரஷணத்துக்காக ஸ்ரீ மகா வராஹம் ஆனது இறங்குமா போலே இரா நின்றது ஆய்த்து –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஜகதாகாரனானவன் அசாதாரண விக்ரஹத்தைக் கண்டு அனுபவிக்கலாம் படி வந்து நிற்கிற ஊர் போலும்
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

என்னைப் பெறுகையால் வந்த அலாப்ய லாபம்தன்னது என்னும் இடம் தோற்ற ஸ்மிதம் பண்ணி –
தான் செய்தது விலக்காத படியான தசையை எனக்கு பிறப்பித்து-என் அருகே வந்து நின்று
அது சாத்மித்தவாறே ஹிருதயத்திலே வந்து புகுந்து
இனி இவருக்கு ஒரு போக்கு இல்லை என்று தோற்ற நிற்கிறவர்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பிரிவை பிரசங்கித்து-என்னுடைய கண்ணும் கண்ணீருமான ஆற்றாமையைக் கண்டு
பின்னை கால் வாங்கிப் போக மாட்டாதே நின்றவர் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் போலும் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

இன்ன பரிமாற்றம் பெற்றிலோம் -என்கிற அத்ருப்தி நெஞ்சில் கிடவாதபடி யாக வாய்த்து
நெஞ்சிலே குறைவறப் புகுந்து நின்றபடி –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

இத்தலையில் உள்ளதை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணி தன் பக்கல் உள்ளது ஒன்றும் தொங்காத படி பண்ணிப் போந்த
சுத்தியை உடையவர் வர்த்திக்கிற தேசம் போலும் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

சொல்களால் சம்ருத்தமாய் உள்ள தமிழ் தொடையை வாயாலே சொல்ல –
பாவத்தை உண்டாக்குவதானாலும் தவிர ஒண்ணாததைச் சொல்ல பாவங்கள் தன்னடையே போம் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

சிங்கமதாய் அவுணன் திரளாகம் முன் கீண்டுகந்த
சங்கமிடத்தானைத் தழலாழி வலத்தானைச்
செங்கமலத் தயனனை பார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அங்கமலக் கண்ணனை யடியேன் கண்டு கொண்டேனே —7-6-1-

அவ் ஊரில் உள்ளார் உடைய ஜன்மமும் இன்றிக்கே ஸ்ரீ பிரகலதான் உடைய படியும் இன்றிக்கே
இருக்கிற நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –என்கிறார் முதல் பாசுரத்தில்

அசாதாரண பரிகரத்துக்கு ஐயோ என்று கிருபையைப் பண்ணி ஸ்ரீ திரு வழுந்தூரிலே வந்து நிற்கிற
அயர்வறும் அமரர்கள் அதிபதியை-நான் கண்ணாலே காணப் பெற்று ஷோபம் அடையத் தீர்ந்து
களிக்கப் பெற்றேன் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

நித்ய விபூதி உக்தனான சம்பத்துக்கு மேலே ஓன்று காணும் –ஸ்ரீ திரு வழுந்தூருக்கு கடவன் ஆனது –
அநந்ய கதியான நான் கிட்டப் பெற்று –அசந்நேவ -என்னும் நிலை தவிர்ந்து –உஜ்ஜீவித்து –க்ருதார்த்தனாகப் பெற்றேன் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அன்று பசுவின் நெய்யை அமர்ந்து அமுது செய்த ஸ்ரீ திரு வழுந்தூர் நின்றானை-
ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே நின்ற படி யாய்த்து இங்கு நிற்பது –
கண்ணாலே காணப் பெற்று அபூர்ணனான நான் பூர்ணனாகப் பெற்றேன்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஸ்ரமஹரமான வடிவை உடையனாய்க் கொண்டு தாபத்ரயம் போம் படி நின்றவனை
தாபத் த்ரயத்தாலும் தப்தனாய் இருக்கிற நான் கண்டு என்னுடைய தாபத்ரயங்கள் தீரப் பெற்றேன் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு அழுந்தூரில் உண்டான பிராமணர் ஆனவர்கள் திருவடிகளில் ஆஸ்ரயிக்கும் படியாக நிற்கிற
ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –அனந்யார்ஹனான நான் கண்டு கொண்டு களிக்கப் பெற்றேன் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு வழுந்தையிலே நித்ய வாஸம் பண்ணுகிற –அடி உடைத்தான கல்பகம் ஆய்த்து-
ஸ்வர்க்கத்திலே நிராலம்பநமாக நிற்கிறது அன்றிக்கே பூமியிலே வேர்ப் பற்று உண்டான கற்பகத்தைக் கண்டு கொண்டு
என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

முது நான்மறை உண்டு -பாசி பூத்த வேதம் –அது திரு வீதிகள் தோறும் திரைக் கிளப்பத்தை உடைய
கடல் போலே கோஷியா நின்றுள்ள ஸ்ரீ தென் அழுந்தையில் மன்னி நின்ற –
சகல கலைகளாலும் புருஷார்த்தமாக பிரதிபாதிக்கப் பட்டவனைக் கண்டு கொண்டு
என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு அழுந்தூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற –
கார் காலத்திலேயே மேகம் போலே ஸ்ரமஹரமான வடிவு அழகை உடையவனை –
கண்கள் குளிரக் காணப் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

அடைவில் தப்பாதபடி அனுசந்திக்க வல்லவர்கள் ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே
த்ரிபாத் விபூதி அடையத் தாங்கள் இட்ட வழக்காகப் பெறுவர்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1-

ரஷகனான உன்னில் காட்டிலும் பாதக வர்க்கம் அணித்தாய் நின்று நலியா நின்றன –
கர்ம வச்யன் ஆகையாலே கர்ம க்ருதங்கள் சேர்ந்தே இருக்கும்
நீ அவசரம் பார்த்து புகுந்தாய் -இவை சஹஜங்கள்-
உண்ணிலாய -என்னுமா போலே ஒருவர் இருவர் இன்றிக்கே சேதன சமாதியால் நலியா நின்றுள்ள ஐந்து இந்த்ரியங்கள்
என் பக்கல் வந்து புகுந்து என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்குகிறவன வில்லை-
என்னுடைய விஷயத்தைக் காட்டு -என்னுடைய விஷயத்தைக் காட்டு என்று இவை தனித் தனியே
அலைத்து நெருக்க-அவற்றுக்கு அஞ்சி வந்து சர்வ ஸ்வாமியான உன் திருவடிகளிலே சரண ரஷணத்தில் அதிகரித்த உனக்கு
அத்தை முடிய நடத்த வேண்டாவோ –என்கிறார் முதல் பாசுரத்தில்

வேறேயும் சில ரஷகரும் யுண்டாய் -அவர்கள் ரஷிக்கிறார்கள் என்று உனக்கு ஆறி இருக்க ஒண்ணாது கிடாய் –
அநந்ய கதியான நான் உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகலை யுடையேன் அல்லேன் –
அநந்ய கதிகளை நோக்குகைக்கு அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

நிருபாதிக பந்துவே உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகல் யுடையேன் அல்லேன் –
நிருபாதிக பந்தம் தோற்ற வந்து நிற்கிறவனே-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஒருவனுக்கு உள்ளீடாய் நின்று ரஷிக்கை அன்றிக்கே வராஹ கல்பத்தின் யுடைய ஆதியிலே
ஸ்ரீ மகா வராஹமாய் வந்து அவதரித்து கண்ணுக்கு இலக்கை நின்று நோக்கினவனே-
அது தன்னை பழம் கதை யாக்கி இபொழுது இங்கே வந்து நிற்கிறவனே-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

இக் கலியுகத்தின் யுடைய ஸ்வ பாவத்தை நான் அழகியதாகக் கண்டேன் –
உன் பக்கலிலே வைமுக்யத்தை யுண்டாக்கி -பின்பு விஷய ப்ராவண்யத்தையும் பிறப்பித்து முடிக்கும்
சம்சார ஸ்வ பாவத்தை நான் அழகிதாக அறிந்தேன் –
எனக்கு ஹிதமாவதும் உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமதுவே என்று அறிந்தேன் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

காலம் நீ இட்ட வழக்கு அன்றோ –உன் திருவடிகளை ஒழிய வேறு ஒன்றை அறியேன்
அந்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் பிற்பட்டாருக்கும் இழவாமைக்கு அன்றோ நீ இங்கே வந்து நிற்கிறது –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி போகங்களைப் புஜிக்கவேணும் என்று
ஐவர் நெருக்கி புஜிப்பிக்க அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

வகுத்த ஸ்வாமியான நீ -ராஜ புத்ரனாய் பிறந்து முடி இழந்து போவாரைப் போலே ஆகாமே
அடியேனாய் இருக்கிற என்னை நித்ய கைங்கர்யத்தைக் கொண்டு அருள வேணும் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு வந்து புகுரலாம் படி கடல்கரை வெளியிலே வந்து நின்றால் போலே
எனக்கு உறவுமுறையார் கை விட்ட அன்று வந்து கிட்டலாம் படி அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாவது
இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன்
ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்
கிருபை பண்ணுகைக்கு வந்து நிற்கிற இடம் இது அன்றோ –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இப்பத்தையும் அப்யசிக்க வல்லார் –சிரகாலம் ராஜாக்களாய் -லோகங்களை அடைய நிர்வஹித்து
பெரிய முத்தின் குடைக்கீழே இருந்து நிரவதிக ப்ரீதி யுக்தராய்ப் பெறுவார் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
இந்த்ரிய வஸ்தையை அனுசந்தித்து அஞ்சின ஸ்ரீ ஆழ்வார் இத்தை பலமாகச் சொல்லுவான் என் என்னில்
இவருக்கு அந்த ஐஸ்வர்யம் பாகவத சேஷமாக்குக்கைக்கு உடலாகையாலே
அதுவும் புருஷார்த்தத்திலே புக்குப் போய்த்து காண்-என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தாராம் –

———————

செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-1-

தனித் தனியே பிரஹ்மாவைப் போலே சிருஷ்டிக்க ஷமராய் இருக்கிற பிராமணர் நித்ய வாஸம் பண்ணுகையாலே
வந்த நிரவதிக சம்பத்தை உடைய ஸ்ரீ திரு வழுந்தூரிலே வந்து நின்று அருளின இது தான் அலாப்யலாபமாகக் கொண்டு நிற்கிறவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடி கோள்-அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப் போகப் பாருங்கோள் –
என்கிறார் முதல் பாசுரத்தில்

அன்னமானது அப்பூம் படுக்கையிலே போக ஸ்ரோதஸ்ஸில் தன்னை விஞ்சின பெடையோடு ஒக்க சாய்கிற
நிரவதிக சம்பத்தை உடைய –அங்குத்தை திர்யக்குகளும் அகப்பட போக பிரதாநமாய்த்து இருப்பது –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஆஸ்ரிதர் உடைய விரோதியைப் போக்கி –அவர்கள் உடைய அபேஷிதம் சம்விதானம் பண்ணும்
ஸ்வபாவன் என்கிற சுத்தியை எனக்கு பிரகாசிப்பித்தவன் கிடீர் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அண்டபித்தியிலே புக்குச் சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறி –அந்த பூமிக்கும் அபிமானியான
ஸ்ரீ பூமிப் பிராட்டியை அணைத்து- அந்த பூமி தன்னை திரு எயிற்றிலே ஒரு நீல மணி அழுத்தினால் போலே வைத்து அருளின
அச் செயலைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன் கிடீர் –
நிரவதிக சம்பத்தை உடைத்தாய் –சம்சார விபூதிக்கு ஆபரணம் போலே இருக்கிற ஸ்ரீ திரு அழுந்தூரிலே –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஸ்ரீ நரசிம்ஹத்துக்கும் பிற்காலியாத மிடுக்கை உடைய ஹிரண்யன் உடைய உடலைக் கீண்டு –
அவள் உடைய முலை வழியே அவளுடைய பிராணங்களும் வற்றி வரும்படி முலையை அமுது செய்த
ஆச்சர்ய பூதன் கிடி கோள் இங்கு வந்து நிற்கிறவன் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

அவன் கையில் தான் நீர் ஏற்றுப் பெற்று அந்த திருவடிகளின் கீழே ஏழு வகைப் பட்ட லோகங்களும்
அடங்கும்படிக்கு ஈடாக வளர்ந்து –அத்விதீயமாய்
ஆயதங்களுக்கு எல்லாம் பிரதாநமாய் இருக்கிற திரு ஆழியைப் பரிகரமாக உடையவனான என் ஸ்வாமி கிடி கோள்
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஒரு கொலை அம்பாலே எய்து அவனை அழித்து விரோதி போக்கப் பெற்றோம் -ஆஸ்ரிதர்களும் குடி இருப்புப் பெற்றார்கள் –
என்று அவர்களுக்கு உகவக் கடவ உகப்பை தான் உகந்த ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

அனுகூல ஸ்பர்சம் ஒழிய த்ரவ்யம் ஒழிய செல்லாமையாலே
பரிமள பிரசுரமான பூவை உடைத்தான குழலை உடைய யசோதை பிராட்டி வைத்த
தயிரையும் வெண்ணெயும் அமுது செய்து அத்தாலே பெறாப் பேறு பெற்றானாக இருக்கிற ஆச்சர்ய பூதன் கிடீர் –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

நாள் செல்ல நாள் செல்ல மிடுக்கு ஏறி வாரா நிற்பதான தோளை உடையனாய் விஜயமானது எப்போதும் ஒக்க வர்த்தியா நின்ற
புகழை உடைத்தான ஸ்ரீ திரு வாழியைக் கையிலே உடைய சர்வாதிகன் கிடீர் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

சர்வ வித ரஷணங்களையும் பண்ணும் இடத்தில்தன்னை எண்ணினால் பின்னை ஒருவரையும் எண்ணாது இருக்கிற
சர்வாதிகனை –ஸ்ரீ திரு வழுந்தூரிலே நின்று அருளின சர்வாதிகன் ஆனவனை –
இப்பத்தையும் வல்லார்-ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும்-என்று தாம் சேர்த்து அனுபவித்த பிரகாரம் இருக்கிறபடி –
முதல் பாட்டு -ஸ்ரீ ஷீரார்ணவம்/ 2-4-5-10—திர்யக் திருவவதாரம் -நான்கு பாடல்களிலும் ஸ்ரீ கஜேந்திர ரஷணம்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண திரு வவதாரம் -மீது ஐந்து பாசுரங்கள்
இவற்றை அப்யசிக்க வல்லாருக்கு ப்ரஹ்மாதிகள் உடைய பதம் உண்டாக முன்னம் தட்டில்லை –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் தாம் பாகவத சேஷத்வம் ஆக்குகைக்கு உடலாய் இருக்கையாலே ஐஸ்வர் யத்தையும் ஆதரித்து அருளினார்
என்று அருளிச் செய்வர் –

—————–

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்
வெள்ளம் முது பரவைத் திரை விரியக் கரையெங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறு புலியூர்ச் சல சயனத்
துள்ளும் எனதுள்ளத் துள்ளும் உறைவாரை உள்ளீரே —7-9-1-

உகந்து அருளின நிலங்களும் இவர் திரு உள்ளமும் ஒக்க வாய்த்து அவன் விரும்பி இருப்பது –
இப்படி இருக்கையாலே ஆஸ்ரயிப்பாருக்கு ஆஸ்ரயநீய ஸ்தானம் இவை இரண்டும் யாய்த்து –
சல சயனன் -என்றது-அது அவனுக்குத் திரு நாமமாய்-ஜல சயனன் வர்த்திக்கிற இடம்
சல சயனம் என்று ஊருக்கு பெயராகிறது –என்கிறார் முதல் பாசுரத்தில்

அழகியதாய் கண்டார்க்கு மேல் விழும்படியான வடிவை உடைய ஸ்ரீ வாமனன் ஆன ஸ்ரீ சர்வேஸ்வரன்
உடைய திருவடிகளை ஸ்மரியுங்கோள்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ சிறு புலியீர் சல சயனத்தில் நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய திருவடிகளை ஒழிய
வேர் ஒன்றை த்யாஜ்யதயா வாகிலும் அறிவது ஓன்று இல்லை –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

தம்மை அவர்கள் ஆப்தராக நினைத்து இருக்கிறபடியால் தாம் சொல்லிற்று கேட்பார்கள் -என்று பார்த்து
தம்படியை அவர்களுக்கு அறிவித்து-நீங்களும் என்னைப் போலே அவனைக் கொண்டு
உங்கள் விரோதிகளைப் போக்கிக் கொள்ளப் பாருங்கோள் என்கிறார் நாலாம் பாசுரத்தில்

அல்லாதார் செய்தபடி செய்ய அநந்ய கதியான என் பக்கலிலே உன்னுடைய
கண் அழிவற்ற கிருபையைப் பண்ணி அருள வேணும் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரீ சிறுபுலியீர்ச் சலசயனத்தை தொழுகையே ஸ்வபாவமாக உடையாருடைய திருவடிகளைத் தொழுவார்க்கு
துக்கங்கள் நில்லா –அவை தன்னடியே விட்டுப் போம் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

உன் திருவடிகளில் அசாதாரணராய் இருப்பார் ஹிருதயங்களில் உள்ளாயோ –அடியேன் அறிகிறேன் இல்லை –
எனக்கு இது தெரிய அருளிச் செய்ய வேணும் –
இத்தால் சொல்லிற்று ஆயத்து –ஸ்ரீ சௌபரி பல வடிவு கொண்டால் போலே இவ்வோ இடங்கள் தோறும்
இனி அவ்வருகு இல்லை என்னும்படி குறைவற வர்த்திக்கிற படியைக் காட்டிக் கொடுத்தான் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

அனுபவ ஜனித ப்ரீதிக்குப் போக்கு விடுகைக்கு பலவாய்த் தலைகளை உடையனாய் சைத்யாதிகளை பிரக்ருதியாக உடைய
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளி பிரயோஜன நிரபேஷமாக ரஷணத்திலே ஒருப் பட்டு இருக்கிறவனே –
என் பக்கலிலே உன்னுடைய கிருபையைப் பண்ணி அருள வேணும் -என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

நிரதிசய போக்யனாய்க் கொண்டு ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடும் கூட சிறுபுலியூர்ச் சல சயனத்த்திலே
சாய்ந்து அருளினவனே-ஸ்ரீ யபதியான உனது திருவடிகளை ஒழிய எனக்கு வேறு ஒரு புகல் இல்லை
பிராப்யம் இல்லை –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பாபம் வருகைக்கு யோக்யமான தேசத்திலே இருக்கச் செய்தேயும் இவற்றை வாயாலே சொல்லி ஆஸ்ரயிக்க-
பாபங்கள் தானே நமக்கு இவ்விடம் இருப்பிடம் அல்ல -என்று விட்டுப் போம்–என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

—————–

பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யானை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-

நான் நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தேயும் இதுக்கு முன்பு அனுபவித்து அறியாதது ஒன்றில் போலே
பிறக்கிற ஆசை யானவனை –அம்ருதத்தை நீராகப் பாய்ச்சி வளர்த்தால் போலே நிரதிசய போக்ய பூதமான
கரும்பு போலே இனியனாய் இருக்கிறவனை –
அப்போதே நுகரலாம்படி பக்வ பலமாய் இருக்கிறவனை –பசித்த இடத்தே ஸூக போஜனம் பண்ணப் பெறுவாரைப் போலே
அபேஷை பிறந்த இடத்தே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –என்கிறார் முதல் பாசுரத்தில்

நிரதிசய போக்கியம் ஆனவனை –நெருக்கிக் கார்யம் கொள்ள வேண்டாதே அப்போதே பருகலாம்படி இருக்கிற
கரும்பில் ராசம்சம் ஆனவனை – ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அசாதாரணமான விக்ரஹத்தோடே ஸ்ரீ திருமலையிலே ஏக தேசமாய் இருக்கிறவனை –
நசையை உடையோமாய்க் கொண்டு நம்மாலே ஆஸ்ரயிக்கப்படுகிற போக யோக்யமான காலம் ஆனவனை –
அதுக்கு உறுப்பாக த்ரவ்யார்ஜனத்து ஈடான காலம் ஆனவனை சென்று நாடி ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

இந்த ஸ்வ பாவத்தைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனை –எனக்கு கைம்முதல் இல்லாத வன்று
அழித்துக் கெடுத்து ஜிவிக்கலாம் படி யான நிதியானவனை –பொன் போலே ஸ்ப்ருஹநீயம் ஆனவனை –
அப் பொன்னை அழித்தும் ஸ்வீகரிக்கக் கடவ ரத்னம் போலே ஸ்லாக்கியம் ஆனவனை –
சென்று நாடி ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

அவ்வளவும் போகப் பற்றாதார்க்கு காட்சி கொடுக்கைக்காக ஸ்ரீ திரு நின்றவூரிலே நிற்கிற
முத்துத் திரள் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –
ஸ்வ ஸ்பர்சத்தால் வரும் ஸூகமாய் இருக்கிறவனை –
தாரகம் ஆனவனை –-சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

சர்வைஸ் ஸ்ப்ருஹநீயமானவனை-போக்ய-போகோ உபகரண போக ஸ்தானங்களாய் உள்ளவனை –
காலமே சேஷித்த அன்று காலமாய் நின்றவனை –
நித்தியமான திவ்ய ஆயுதங்களை ஏந்தும் திருக் கையை உடையவனை –
நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனை -என்றபடி –
பிராமணர் உடைய மரியாதை போலே இருக்கிற சங்கல்பத்தை உடையவனை –
பிராமணராலே அத்யயனம் பண்ணப் படுகிறவனை-என்றுமாம் –ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

விரோதிகளைப் போக்குமவன் –விரோதி நிரசனத்தை சீலமாக உடைய உபகாரகனை –
படபாமுகாக்னி ஜலம் அடைய தகன் பக்கலிலே வந்து சுவரும்படி இருக்குமா போலே
சர்வ பதார்த்தங்களும் தன பக்கலிலே வந்து லயிக்கும்படி இருக்கும் சக்தியை உடையவனை –
களிவண்டு அறையும் பொழில் ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டேனே-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

நிருபாதிக சேஷியை-தன் பக்கல் ஆசை உடையார் தலை மேலே நிற்கிறவனாய்-
அது தான் பெறாப் பேறாக நினைத்து பூர்ணனாய் இருக்கிறவனை –
கம்சனுடைய துரபிசந்தியை அவன் தன்னோடு போக்கி உகவாதாரோடு செவ்வை அழியப் பரிமாறுமவனை –
ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டேனே –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹமே வடிவாய் இருக்கிறவனை–ததாமி புத்தியோகம் தம் -என்கிறபடியே
தன்னைப் பிராபிக்கைக்கு ஈடான புத்தி யோகத்தை கொடுக்குமவனை –
வேதத்தை எங்கும் ஒக்க அதிகரித்து இருப்பார்க்கு தன்னை ஒழிய பதார்த்த தர்சனம் பண்ண ஒண்ணாத படி
அவர்களுக்கு -திருஷ்டி பூதனாய் உள்ளவனை –
காணப் பெறாமையால் உறாவின கண்களின் உறாவுதல் தீரும்படி -நின்று கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது-என்னோடு அதிகரிக்கில் அறியலாம்
ஒரு வசிஷ்டனோடே-ஒரு சாந்தீபனோடே தாழ நின்று அதிகரிக்கக் கடவ
அவனுக்கு ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –
இவை பத்தையும் –அனுசந்திப்பார்க்கு அடைவு படச் சொல்லுகையால் உண்டான அருமையாலே வல்லராய்
உபாதான லோகங்களில் போக பூமிகள் எல்லாம் புக்கு அங்கு உண்டான போகங்களைப் புஜிப்பார்கள்
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

–——————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading