ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-ஏழாம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —

கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி
பிறவாமை என்னைப் பணி எந்தை பிரானே –7-1-1-

அனுபவ விரோதியான சம்சார சம்பந்தத்தை கழித்து அருள வேணும் -என்கிறார் –

——————

வற்றா முதுநீரொடு மால்வரை ஏழும்
துற்றாக முன் துற்றிய தொல் புகழானே
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
பெற்றேன் அருள் தந்திடும் எந்தை பிரானே —7-1-2-

இது தான் மிகை அன்றோ –பிரளயம் கொண்ட பூமியை நீ எடுத்தது ஆர் கூப்பிட –
நீ அறிந்த ஆபத்தும் விலக்காமையும் அன்றோ வேண்டுவது உனக்கு ரஷிக்கைக்கு –
பிரளயம் கொண்ட பூமி ஆழ்ந்த இத்தனை அல்லது என்னை எடுக்க வேண்டும் -என்றதோ –

————————

தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய்
ஆரேன் அதுவே பருகிக் களிக்கின்றேன்
காரேய் கடலே மலையே திருக் கோட்டி
ஊரே உகந்தாயை உகந்தேன் அடியேனே–7-1-3-

ஸ்ரீ சௌபரி பல வடிவு கொண்டால் போலே அநேக வடிவம் கொண்டு
அவ்வோ இடங்கள் தோறும் இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்னும்படி வர்த்தியா நின்றான் –
ஸ்ரீ திருப் பாற் கடலில் கிடந்ததும்-ஸ்ரீ திரு மலையில் நின்றதும்-ஸ்ரீ திருக் கோட்டியூரிலே வந்ததும் தமக்காக -என்று
அறிந்த ஹர்ஷம் -அதுவே பருகிக் களிக்கின்றேன் -என்கிறார் –

———————

புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க
உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா
கள்வா கடல் மல்லைக் கிடந்த கரும்பே
வள்ளால் உன்னை எங்கனம் நான் மறக்கேனே –7-1-4-

ஆஸ்ரித விரோதியை ஆளிட்டு அந்தி தொழாதே-தானே கை தொட்டுப் போக்கினான் என்னும் சுத்தியை
உடையனாய் இருக்கிறபடி –

——————-

வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும் நீயும்
கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி
சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே –7-1-5-

நர நாரணனே –ஸ்த நந்தய பிரஜைகாகா தாய் குடி நீரை குடிக்குமா போலே
இவர்களுக்காகா தபஸ் ஸூ பண்ணுமவனே-
எங்கள் நம்பி-குறைவாளரான எங்கள் குறையை நிரப்புகைக்கு ஈடான பௌஷ்கல்யத்தை உடையவனே –
உன்னுடைய கைங்கர்யத்துக்கு நானே விரோதிகளை நானே போக்கித் தருகிறேன்-அஞ்சாதே கொள் -என்று
மாஸூச என்றாப் போலே ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –
சர்வ பூதேப்ய அபயம் ததாமி -என்றாப் போலே இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –

————————

பனியேய் பரங்குன்றின் பவளத் திரளே
முனியே திரு மூழிக் களத்து விளக்கே
இனியாய தொண்டரோம் பருகு இன்னமுதாய
கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-6-

தேவர்கள் பருகும் அமிர்தம் போல் அன்றிக்கே கைங்கர்ய ருசி உடையராய் இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பருகும் அம்ருதமாய் –
அப்போதே எடுத்து நுகரலாம் படி கனி போலே இருக்கிறவனே –
காணப் பெறாமையாலே அசந்நேவ-என்கிறபடியே உரு மாய்ந்த நான் கண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேன் –

——————

கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு
நிதியே திரு நீர் மலை நித்திலத்தொத்தே
பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக்
கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-7-

என்னோடு ச கோத்ரிகளாய் தான் உகந்த ஊர் எல்லாம் -என்கிறபடியே
உகந்து அருளின நிலங்கள் எல்லாம் புக்கு அனுபவிக்கும் அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனே –
நீ உகந்து அருளின நிலங்களிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே உன்னைக் கண்டு கொண்டு
உஜ்ஜீவிக்கப் பெற்றேன்

——————

அத்தா அரியே என்று உன்னை அழைக்கப்
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை
முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னை எங்கனம் நான் விடுகேனோ –7-1-8-

பிறர் என்னை பேசா நின்றார்கள் என்று கை விடலாம்படி இருக்கிறாய் அல்லையே நீ –
முத்துப் போலே ஸ்ரமத்தைப் போக்குமவனே –பெரு விலையனான மாணிக்கம் போலே இருக்கிறவனே
பலத்தோடு வ்யபசரியாதவனே -முளையாத வித்து -நிஷ்பலம் என்பதால் முளைக்கின்ற வித்தே -என்கிறார்
உன்னை எத்தைச் சொல்லி நான் விடுவது –

———————–

தூயாய் சுடர் மா மதி போல் உயிர் க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா வலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட
வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ –7-1-9-

ஆபத்து கரை புரண்டால் வரையாதே எல்லாரையும் ஒக்க ரஷிக்கும் ஸ்வபாவன் ஆனவனே –
திரைக் கிளர்த்தி உடைய கடல் சூழ்ந்த பூமியை அமுது செய்த திருப் பவளத்தை உடையவனே –
இப்படி ஆபத் சகனான உன்னை எங்கனே மறக்கும் படி –

—————

வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட
உண்டே விசும்பு உந்தமக்கு இல்லை துயரே -7-1-10-

என்னைப் போலே நீங்களும் இவ் விஷயத்திலே ருசியை உடையிகோளாய் பாடுவது ஆடுவதாகவே
ஸ்ரீ பரம பதம் தன்னடையே சித்திக்கும் படியாம் – அதுக்கு விரோதியான பாபம் தன்னடையே போம் –

————————

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர்தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1-

இனி வேறே நூறாயிரம் இதர விஷயங்கள் முகம் காட்டினாலும் அவற்றோடு செறியேன் –
நான் நோவு படுகிற சம்சாரத்தில் நீயே முற்பாடனாய் வந்து நின்ற பின்பு அவற்றோடு பொருந்துமோ –
ப்ரீதி அதிசயத்தாலே -ஒ -என்கிறார் –

———————–

ஓடா வாளரியின் உருவாய் மருவி என்தன்
மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா
பாடேன் தொண்டர் தம்மைக் கவிதை பனுவல் கொண்டு
நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ-7-2-2-

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து -என்றார் கீழே –தாழ்ந்த ஜன்மத்தில் வேணுமாகில் பிறக்கிறாய் –
நாட்டார் பிறக்கும் பிறவிகளில் பிறக்கல் ஆகாதோ – நாட்டில் நடையாடாத படியான நரசிம்ஹ ரூபத்தை யுடையையாய் –
ஸ்ரீ நரசிம்ஹ வேஷ பரிக்ரஹம் பண்ணின அன்று தொடங்கி இவர் உடைய ஹிருதயத்திலே காணும் கிட்டுவது –

—————————

எம்மானும் எம் அம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததன் பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற
நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன்
மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே–7-2-3-

அஞ்சனம் போலே ஸ்ரமஹரமான வடிவை உடைய உன்னை அல்லது புறம்பே சிலரை –
இப்போது புறம்பாக நினைக்கிறது -புறம்புற்றை திருப்பதிகளை –
எத்தனை வேணும் என்று ப்ரேரித்தாலும் ப்ரீதி புரஸ் சரமாக ஏத்துமது இல்லை –

——————–

சிறியாய் ஓர் பிள்ளையுமாய் யுலகு உண்டு ஓர் ஆலிலை மேல்
உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான்
அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும்
நறைவாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-4-

சேராச் சேர்த்தியாக என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து அவ் வாலந்தளிர் அளவன்றிக்கே
ஸ்ரீ பரம பதம் போலே இடம் பெற இருந்து என்னை உனக்காக்கிக் கொண்ட இம் மகோ உபகாரத்தை அறியாதே
நான் க்ருத்க்னனாய் இருக்கிறேன் அல்லேன் –
அவ்விடை யாட்டமும் அறிந்தே இருக்கிறேன் -உனக்கு உறைவிடம் இல்லாமை தான் செய்தாயோ நீ –
உனக்கு அசங்குசிதமாக வர்த்திகைக்கு ஒரு ஸ்தானம் இல்லையோ -இத் தேசத்தை உடைய உனக்கு –

——————–

நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பது அரிதால்
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை
பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல ஒட்டேன்
நாண் தான் உனக்கு ஒழிந்தேன் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-5-

என்னையும் அடிமையில் மூட்டுகைகாக என்னுடைய ஹிருதயத்திலே புகுந்த உன்னைப் போக ஒட்டுவேனோ
சேஷ பூதராவார் சேஷி செய்தபடி செய்யக் கண்டு இருக்குமவர்கள் அன்றோ
ஒட்டேன் என்று நிர்பந்திக்கை உம்முடைய ஸ்வரூபத்துக்குப் போருமோ -என்ன –
மடல் எடுக்க நினைப்பார் இது ஆம் இது ஆகாது என்று கார்யம் பார்த்தோ செய்வது –
நீயோ சால நாண் உடையையாய் இருக்கிறாய் –-நீ முந்துற மடல் எடுத்து பின்னை அன்றோ மடல் எடுப்பித்தது –
அவன் மடல் எடுக்கை யாகிறது -முற்பாடனாய் வர நிற்கை இறே-

————–

எந்தாதை தாதை அப்பால் எழுவார் பழ வடிமை
வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்
அந்தோ என் ஆர் உயிரே அரசே அருள் எனக்கு
நந்தாமைத் தந்த வெந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-6-

நீ போகாதே கொள் -என்று காலைக் கட்டி வளைக்கலாம் படி என் பக்கலிலே அருளைப் பண்ணின
ஸ்ரீ திரு நறையூரிலே வந்து நின்று ஆய்த்து-இவருக்கு அருளிற்று –

—————–

மன்னஞ்ச வாயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா
எந்நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இனிப் போய் பிறர் ஒருவர்
வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்
நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-7-

நீ போகில் நான் முடிவன் -என்கிறார் – இத்தலை இழக்க வரும் அளவில் -இட்ட அடி பேர்க்க மாட்டான் –
நீர் வளைக்கிறது என்ன மிடுக்கு கொண்டு என்ன –
நீர் குற்றம் கண்டு கை விடப் பார்க்கும் அன்றும்ந கச்சின் ந அபராத்யதி -என்னும் அவள் அன்றோ அருகே இருக்கிறாள் –

—————–

எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள்
கைப் போது கொண்டு இறைஞ்சிக் கழல் மேல் வணங்க நின்றாய்
இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
நற்போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-8-

விலஷணமான புஷ்பங்களிலே வண்டுகள் ஆனவை குடைந்து வண்டு உண்ணும் -என்கிறபடியே
உள்ளே உள்ளே அவஹாகிக்கும் அத்தனை போக்கி வேறு ஒன்றில் போக ஒண்ணாத படி
போக்யமான தேசத்தை வாசஸ் ஸ்தானமாக உடையவனே-
அவ் ஊரில் அவஹாகித்தாருக்கு வேறேயும் ஓர் இடம் தேடித் போகலாம் படியோ
அவ் ஊரில் போக்யதை இருப்பது –

———————–

ஊனேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால்
யானாய் என் தனக்காய் அடியேன் மனம் புகுந்த
தேனே தீன் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்
நானே எய்தப் பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-9-

தம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து கலந்த படியை அனுசந்திக்க அனுசந்திக்க
தமக்கு இனிதாக நின்றது –எனக்கு சர்வ வித போக்யமுமாய் உள்ளவனே –
வேறு ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி அது கொண்டு பெற இருக்கை அன்றிக்கே
இந்த சரீரம் தன்னையே கொண்டு பிராபிக்கப் பெற்றேன் –
அது செய்த படி தான் எங்கனே என்ன –நீ வர நிற்கையாலே நான் இப் பேறு பெற்றேன் –

——————–

நன்னீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக்
கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன்
சொன்னீர் சொல் மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில்
நன்னீர்மையால் மகிழ்ந்து நெடும் காலம் வாழ்வாரே –7-2-10-

இத்தை அனுசந்தித்தார்க்கு -இது ஒரு சப்தமே -என்று கொண்டாடும் இதுவே ஸ்வ பாவமாம் படி இருக்கிற
சொல் தொடையைச் சொல்லும் அவர்கள்-இத்தை சொல்லுகையே போரும் ஆய்த்து பிரயோஜனம் –
அதுக்கு மேலே-போக பூமிகளிலே மேலாய் இருக்கிற ஸ்ரீ பரம பதத்திலே போய்
இவ் வாத்மாவின் உடைய ஸ்வரூப அனுரூபமான முறையாலே நிரதிசய ஸ்வரூபா நந்திகளாய்
பின்னை ஒரு நாளும் புநரா வ்ருத்தி இல்லாத பேற்றைப் பெறுவார்கள் –

————————-

சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே -7-3-1-

ஸ்வ யத்னத்தால் அன்றிக்கே அவன் காட்டின வழியாலே காணப் பெற்ற அடியேனான நான் –
ஸ்ரீ திரு நறையூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற கல்யாண குண பூர்ணனை –
மனஸ் ஸூ சஹகரிக்க -அத்தாலே கண்ணால் காணும் காட்சி அன்றிக்கே அந்த நெஞ்சு தானே முழு மிடறு செய்து
பூரணமாக நெறிபட அனுபவிக்கப் பெற்றேன் –
நெஞ்சே அனுபவித்து கண்கள் அனுபவிக்கப் பெற்றது இல்லை -என்கிற குறை கிடவாமை -கண்கள் கண்டு அனுபவிக்க
அவற்றுக்கு ஆஸ்ரய பூதனாய் இருக்கிற நானும் –
என் கண்கள் களிப்பக் களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேனே -திரு வாய் மொழி -10-8-4-
என்கிறபடியே களிக்கப் பெற்றேன் –

——————–

தாயை நினைந்த கன்றே ஒக்க வென்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்
காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை அன்று இவ்வையகம் உண்டு உமிழ்ந்திட்ட
வாயனை மகரக் குழை காதனை மைந்தனை மதிள் கோவல் இடைகழி
யாயினை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே –7-3-2-

இப்படி பூர்ணனாய் இருந்து வைத்து என் பக்கலில் அன்பைப் பண்ணினவனை –
அவன் என்பக்களில் அன்பைப் பண்ணி மேல் விழா நிற்க
நான் அவனை ஒழிய வேறு சிலரை ஆதரிப்பேனோ –

————————–

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்றோர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்
சிந்தையாய் வந்து தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் இது சிக்கெனப் பெற்றேன்
கொந்துலாம் பொழில் சூழக் குடந்தைத் தலைக் கோவினைக் குடமாடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே –7-3-3-

இவர் உடைய திரு உள்ளம் ஒழிய வேறு ஓர் இடம் உண்டாக நினைத்து இருக்கிறிலன் –
பின்னை அவ்வோ இடங்களிலே இவன் இல்லையோ என்னில்
சௌபரி பல வடிவு கொண்டு அனுபவித்தால் போலே
இதுக்கு அவ்வருகு இல்லை என்னலாம் படி அவன் முகம் கொடுத்துக் கொண்டு இருந்த படி –
எனக்கு ஜனகன் ஆனவனை-என்னுடைய குல நாதன் ஆனவனை –
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை எனக்கு பிரகாசிப்பித்த மகா உபாகாரகனை –
எத்தால் மறக்கேனே –பண்ணின உபகாரம் அளவுபட்டு மறக்கவோ
நான் இட்ட பச்சையை நினைத்து ஆறி இருக்கவோ-எவ்வழியால் மறப்பது –

—————

உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச் சென்று
இரங்கி யூர்ந்தவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை வம்பார் புனல் காவிரி
அரங்கமாளி என்னாளி விண்ணாளி ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –7-3-4-

ஆஸ்ரிதர்க்காக சாரத்தியம் பண்ணியும் மார்விலே அம்பு ஏற்றும் உபகரிக்கும் அவனுக்கு அல்லது
வேறு சிலர் விஷயமாக என்னுடைய ஹிருதயத்தில் தாழ்ச்சி பிறவாது –

——————-

ஆங்கு வென்னரகத்து அழுந்தும் போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து
தங்கு தாமரை யன்ன பொன்னாரடி எம்பிரானை யும்பர்க்கு அணியாய் நின்ற
வேங்கடத்தரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட
தீங்கரும்பினைத் தேனை நன்பாலினை யன்றி என் மனம் சிந்தை செய்யாதே –7-3-5-

ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் ஒழியச் செல்லாமை பிறந்து-அது நேர் கொடு நேர் கிடையாமை
களவு கண்டு புஜிக்கப் புக்கு-அது தன்னை முடியச் செய்து தலைக் கட்டாமை
வாயது கையதாக அகப்பட்டு-உரலோடு சேர்த்து கட்டுண்டு-அடியுண்டு அடிக்கு இறாய்த்து
உடம்பு வெளுத்து-பயர்த்து-பேகணித்து நின்ற நிலையை அனுசந்திக்க அனுசந்திக்க
இவர்க்கு இவ்விருப்பு தானே யாய்த்து-சர்வ வித போக்யமுமாய் இருக்கிறது –
சர்வ ரச-என்கிற படியே இனியதாக நின்றது –இப்படி சர்வ வித போக்யனாய் இருக்கிறவனை ஒழிய
என் உடைய நெஞ்சு வேறு சிலரை அநவரத பாவனை பண்ணாது –

—————-

எட்டனைப் பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்
தட்டலர்த்த பொன்னே யலர் கோங்கின் தாழ் பொழில் திருமால் இரும் சோலை அம்
கட்டியைக் கரும்பு ஈன்ற இன் சாற்றைக் காதலால் மறை நான்கு முன்னோதிய
பட்டனைப் பரவைத் துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யனே –7-3-6-

இதுக்கு முன்பு ஒதப் போகாதவன் அபி நிவிஷ்டனாய் ஓதுமா போலே
சாந்தீபநீயோடே சாதாரமாக நாலு வேதத்தையும் அப்யசித்த பண்டிதனை –
இவ்வதாரத்துக்கு நாற்றங்காலாயக் கொண்டு ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின நீர்மை
உடையவனை அல்லது பாடல் செய்யேன் –

——————-

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே –7-3-7-

சர்வ இந்த்ரியங்களுக்கும் தானே விஷயம் ஆனான் –பெரு விலையனான நீல மணி போலே இருக்கிற நிறத்தை உடையவனை –
இந்நிறத்தைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவனுடைய நிறத்தை ஒழிய
என்னுடைய வாக் இந்த்ரியம் ஆனது வேறு ஒன்றைப் பேசாது –

——————–

இனி எப்பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள் பெற்றமையால் அடும்
துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றதோர் தோற்றத் தொன் நெறியை வையம் தொழப் படும்
முனியை வானவரால் வணங்கப் படும் முத்தினைப் பத்தர் தாம் நுகர்கின்றதோர்
கனியைக் காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே –7-3-8-

ஒன்றும் இன்றிக்கே இருக்கிற என் பக்கலில் தான் ஆசை உடையனாய்-என்னை சர்வாஸ்வாபஹாரம் பண்ணினவனை –
நான் அநாதி காலம் பண்ணிப் போந்த ஆத்மாபஹாரத்தை-அரை ஷணத்திலே பண்ணினவனை
இன்று-நினைவு இன்றிக்கே இருக்க காணப் பெற்றேன் –

——————-

என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கென்றும் என் மனத்தே இருக்கும் புகழ்
தஞ்சை ஆளியைப் பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனைத்
தழலே புரை விஞ்ச வாள் அரக்கன் நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை யன்றி என் மனம் போற்றி என்னாதே –7-3-9-

இவனை அல்லது போற்றி என்று என்னுடைய ஹிருதயம் ஆனது மங்களா சாசனம் பண்ணாது –
பாழாளாகப் படை பொருதானுக்கு அல்லது என்னுடைய ஹிருதயமானது பல்லாண்டு பாடாது –
நித்ய சூரிகள் பெரும் பேற்றைப் பெற்றேன் -சம்சாரியான நான் –
பர தந்த்ரனாய் இருக்கையாலே பிரத்யுபகாரம் பண்ணலாவது காண்கிறிலேன்
எத்தைச் செய்வேன் சொல்லி கோள்-

—————–

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே -7-3-10-

ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி உடையார் இத்தைப் பாடப் பாருங்கோள்-கரும்பு தின்னக் கூலி இறே
பாடுகை தானே பிரயோஜனமாக போந்து இருக்க அதுக்கு மேலே பிராப்தி பிரதிபந்தகமான பாபங்கள்
நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் இல்லை -என்று தன்னடையே விட்டுப் போம் –

———————–

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-

ஸ்ரீ திருத் துழாய் போலேயும் ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும் உம்முடைய ஸ்பர்சம் நமக்கு இனிதாய் இரா நின்றது –
உம்முடைய தலையைக் கொடு வாரும் நம்முடைய காலை வைக்க என்ன
இங்கு உமக்கு ஒழியாது வகுத்தவர்கள் காலுக்கு இடம் போரும் இத்தனை –

———————–

அம்புருவ வரி நெடுங்கண் அலர் மகளை வரை யகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண்சோலை வண்சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-

நித்ய வசந்தமாய் ஸ்ரமஹரமான பொழிலை உடைத்தாய் இருக்கிற ஸ்ரீ திருச் சேறையிலே
ஸ்பர்தையாலே ஆகாசத்தைத் தள்ளுகிறாப் போலே இருக்கிற ஸ்ரீ கோயிலிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனுடைய
திருவடிகளைத் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே –
நிதித்யாசி தவ்ய-என்கிற விஷயத்துக்குஇடம் காண்கிறிலேன் –

———————–

மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே –7-4-3-

ஸ்ரீ திருச் சேறையிலே எழுந்து அருளி இருக்கிறவன் திருவடிகளை ஏத்தி –ஆஸ்ரயிக்கிற பாக்யாதிகரே –
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி ஆஸ்ரயிக்கிற நித்ய சூரிகளில் சம்ருத்தர் ஆகிறார் –
அங்கே இருந்து ஆஸ்ரயிக்கிறவர்கள் இங்கே இருந்தபடியே ஆஸ்ரயிக்கிறவர்களோடே ஒவ்வார் இறே –

———————-

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே -7-4-4-

வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு
சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு – அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற
மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய-காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும்
பிரிய ஷமன் அல்லேன் –

———————-

வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வருக்கு அல்லால்
சந்தப்பூ மலர்ச் சோலைத் தண் சேறை எம்பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5-

ஸ்ரமஹரமாய் இருக்கிற ஸ்ரீ திருச் சேறையிலே நாயனார் உடைய திருவடிகளை
நாள் தோறும் போக ரூபமாக அனுசந்திப்பாருக்கு –என்னுடைய ஹிருதயமானது தேனூறி எப்பொழுதும் இனிதாக நின்றது
இது வெருமனேயோ

—————————–

பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இதுகாணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6-

ஸ்ரீ வண் சேறை எம்பெருமான் அடியாரைக் கண்ட மாத்ரத்திலே –கண்டி கோளே என்னுடைய நெஞ்சும்
கண் இணையும் களிக்கிற படி-ஆன பின்பு அத்யவசிக்கையில் ஒரு குறை உண்டோ –

—————-

பை விரியும் வரி யரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்
மை விரியும் மணி வரை போல் மாயவனே என்று என்றும் வண்டார் நீலம்
செய் விரியும் தண் சேறை எம்பெருமான் திருவடியைச் சிந்தித்தேற்கு என்
ஐ யறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம் என் அன்பு தானே -7-4-7-

ஸ்ரமஹரமான திருச் சேறையிலே நிற்கிற ஸ்ரீ நாயனார் உடைய ஸ்லாக்கியமான வடிவு அழகைஅனுசந்தித்தேற்கு –
ஸ்ரோத்ராதிகள் ஐந்தாலும் உண்டான வெளிச் சிறப்பை தன் பக்கலிலே ஆக்கிக் கொண்டான் –
அது தனக்குத் தான் விஷயம் ஆனான் -என்றபடி –
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆளான அளவிலே நிற்கிறது இல்லை –
அவனுக்கு ஆளானார் அளவிலே ஆளாகா நின்றது என் அன்பானது –

———————-

உண்ணாது வெங்கூற்றம் ஓவாத பாவங்கள் சேரா மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானைப்
பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னைக்
கண்ணாரக் கண்டு உருகி கையார தொழுவாரைக் கருதும் காலே -7-4-8-

பாகவதர்களை நெஞ்சாலே நினைக்க மிருத்யுவால் வரும் பயம் போம் –
பாபங்கள் உடைய நலிவால் வரும் பயத்துக்கும் அஞ்ச வேண்டா என்கிறது –

———————

கள்ளத்தேன் பொய்யகத்தேன் ஆதலால் போதருகால் கவலை என்னும்
வெள்ளத்தேற்கு என் கொலோ விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால்
தள்ளத்தேன் மண நாறும் தண் சேறை எம்பெருமான் தாளை நாளும்
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாறே –7-4-9-

எனக்கு இது தான் உண்டான படி எங்கனே என்கிறார் –

————————

பூ மாண் சேர் கருங்கழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான் தன்னை
வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை தொண்டீர்
தூ மாண் சேர் பொன்னடி மேல் சூட்டுமின் நும் துணைக் கையால் தொழுது நின்றே –7-4-10-

ஸ்ரீ ஆழ்வார்-ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடையைக் கொண்டு-பகவத் விஷயத்தில் ருசி உடையீர் –
ஹேய ப்ரத்ய நீகமாய்-தர்ச நீயமாய் இருந்துள்ள திருவடிகளிலே சூட்டுங்கோள்-
அது செய்யும் பொது அஞ்சலியைப் பண்ணா நின்ற கையை உடையராய்க் கொண்டு தொழுது
இம்மாலையைச் சூட்டுங்கோள் –

———————-

தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நல்லிருள் கண் வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
முந்தி வானம் மழை பொழியும் மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-1-

பிராப்ய பூதனான அவன் வந்து நிற்கையாலே நமக்கு பிராப்ய பூமி தான் போலே இருந்தது என்று
ஆதர அதிசயம் தோற்ற சொல்லுகிறது-

————–

பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாளப் பாரதத்துத்
தேரில் பாகனாயூர்ந்த தேவ தேவனூர் போலும்
நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சிப் போன குருகினங்கள்
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-2-

பாரத சமரத்திலே பீஷ்மாதிகள் -அதி ரதர் மகா ரதர் -என்று இங்கனே ஆண் பிள்ளைகளாகப் பேர் பெற்று ஜீவித்து இருந்தோம்
இப்போதாக பூசல் கோழைகளாக ஒண்ணாது -என்று சாரதி பக்கலிலே வந்து கிட்டுவது
தேர் காலில் உழக்குண்டு போக ஒண்ணாது -என்று அகலுவதாய்க் கொண்டு
அவர்கள் படுவுற்றை படா நின்றன வாய்த்துக் குருகு இனங்களும் –

——————

செம்பொன் மதிள் சூழ் தென்னிலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும்
உம்பர் வாளிக்கு இலக்காக வுதிர்த்த வுரவோனூர் போலும்
கொம்பிலார்ந்த மாதவி மேல் கோதி மேய்ந்த வண்டினங்கள்
அம்பராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே –7-5-3-

இந்த்ராதிகள் உடைய வஜ்ரத்துக்கு அழியாத பையல் தலைகளை
மனிச்சுக்கு ஏகாந்தமான மிடுக்காலே அழித்தான் ஆய்த்து-

—————–

வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி யடியேன் மனம் புகுந்து என்
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற ஊர் போலும்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடித் போன காதல் பெடையோடும்
அள்ளல் செறுவில் கயல் நாடு மணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-4-

சேறு என்றால் இறாய்க்கக் கடவ வவை-அங்கு உள்ள போக்யதையின் மிகுதியாலே அத்தை மதியாதே
சஞ்சரியா நிற்கும்-இத்தால் சொல்லிற்று ஆய்த்து-பிரளயம் என்று பாராதே
ஜகத் ரஷணத்துக்காக ஸ்ரீ மகா வராஹம் ஆனது இறங்குமா போலே இரா நின்றது ஆய்த்து –

——————–

பகலும் இரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய்
நிகரில் சுடராய் இருளாகி நின்றார் நின்ற ஊர் போலும்
துகிலின் கொடியும் தேர்த் துகளும் துன்னி மாதர் கூந்தல் வாய்
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-5-

ஜகதாகாரனானவன் அசாதாரண விக்ரஹத்தைக் கண்டு அனுபவிக்கலாம் படி வந்து நிற்கிற ஊர் போலும் –

—————————-

ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும்
நீடு மாடத் தனிச் சூலம் போழ்கக் கொண்டல் துளி தூவ
ஆடல் அரவத் தார்ப்போவா அணியூர் வீதி அழுந்தூரே–7-5-6-

என்னைப் பெறுகையால் வந்த அலாப்ய லாபம்தன்னது என்னும் இடம் தோற்ற ஸ்மிதம் பண்ணி –
தான் செய்தது விலக்காத படியான தசையை எனக்கு பிறப்பித்து-என் அருகே வந்து நின்று
அது சாத்மித்தவாறே ஹிருதயத்திலே வந்து புகுந்து
இனி இவருக்கு ஒரு போக்கு இல்லை என்று தோற்ற நிற்கிறவர்

———————–

மாலைப் புகுந்து மலரணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என்
நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும்
வேலைக் கடல்போல் நெடு வீதி விண்டோய் சுதை வெண் மணி மாடத்து
ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே —7-5-7-

பிரிவை பிரசங்கித்து-என்னுடைய கண்ணும் கண்ணீருமான ஆற்றாமையைக் கண்டு
பின்னை கால் வாங்கிப் போக மாட்டாதே நின்றவர் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் போலும் –

———————-

வஞ்சி மருங்கிலிடை நோவ மணந்து நின்ற கனவகத்து என்
நெஞ்சு நிறையக் கை கூப்பி நின்றார் நின்ற ஊர் போலும்
பஞ்சியன்ன மெல்லடி நற்பாவை மார்கள் ஆடகத்தின்
அஞ்சிலம்பின் ஆர்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே —7-5-8-

இன்ன பரிமாற்றம் பெற்றிலோம் -என்கிற அத்ருப்தி நெஞ்சில் கிடவாதபடி யாக வாய்த்து
நெஞ்சிலே குறைவறப் புகுந்து நின்றபடி –

———————–

என் ஐம் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளிப்
பொன்னங்கலைகள் மெலிவெய்தப் போன புனிதரூர் போலும்
மன்னு முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடனாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-9-

இத்தலையில் உள்ளதை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணி தன் பக்கல் உள்ளது ஒன்றும் தொங்காத படி பண்ணிப் போந்த
சுத்தியை உடையவர் வர்த்திக்கிற தேசம் போலும் –

———————

நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொதிந்த தமிழ் மாலை சொல்லப் பாவம் நில்லாதே –7-5-10-

சொல்களால் சம்ருத்தமாய் உள்ள தமிழ் தொடையை வாயாலே சொல்ல –
பாவத்தை உண்டாக்குவதானாலும் தவிர ஒண்ணாததைச் சொல்ல பாவங்கள் தன்னடையே போம் –

——————–

சிங்கமதாய் அவுணன் திரளாகம் முன் கீண்டுகந்த
சங்கமிடத்தானைத் தழலாழி வலத்தானைச்
செங்கமலத் தயனனை பார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அங்கமலக் கண்ணனை யடியேன் கண்டு கொண்டேனே —7-6-1-

அவ் ஊரில் உள்ளார் உடைய ஜன்மமும் இன்றிக்கே ஸ்ரீ பிரகலதான் உடைய படியும் இன்றிக்கே
இருக்கிற நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

————————–

கோவானார் மடியக் கொலையார் மழுக் கொண்டு அருளும்
மூவா வானவனை முழு நீர் வண்ணனை யடியார்க்கு
ஆவா வென்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற
தேவாதி தேவனை யான் கண்டு கொண்டு திளைத்தேனே –7-6-2-

அசாதாரண பரிகரத்துக்கு ஐயோ என்று கிருபையைப் பண்ணி ஸ்ரீ திரு வழுந்தூரிலே வந்து நிற்கிற
அயர்வறும் அமரர்கள் அதிபதியை-நான் கண்ணாலே காணப் பெற்று ஷோபம் அடையத் தீர்ந்து
களிக்கப் பெற்றேன் –

————————-

உடையானை யொலி நீர் உலகங்கள் படைத்தானை
விடையானோடே அன்று விறலாழி விசைத்தானை
அடையார் தென்னிலங்கை அழித்தானை யணி யழுந்தூர்
உடையானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –7-6-3-

நித்ய விபூதி உக்தனான சம்பத்துக்கு மேலே ஓன்று காணும் –ஸ்ரீ திரு வழுந்தூருக்கு கடவன் ஆனது –
அநந்ய கதியான நான் கிட்டப் பெற்று –அசந்நேவ -என்னும் நிலை தவிர்ந்து –உஜ்ஜீவித்து –க்ருதார்த்தனாகப் பெற்றேன் –

——————–

குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போர் ஏற்றை
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ண வணி யழுந்தூர்
நின்றானை யடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே –7-6-4-

அன்று பசுவின் நெய்யை அமர்ந்து அமுது செய்த ஸ்ரீ திரு வழுந்தூர் நின்றானை-
ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே நின்ற படி யாய்த்து இங்கு நிற்பது –
கண்ணாலே காணப் பெற்று அபூர்ணனான நான் பூர்ணனாகப் பெற்றேன்

————————-

கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ண மங்கையுள் நின்றானை
வஞ்சனப் பேய் முலை யூடு உயிர் வாய் மடுத்து உண்டானைச்
செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றன் தன்னை அடியேன் கண்டு கொண்டேனே –7-6-5-

ஸ்ரமஹரமான வடிவை உடையனாய்க் கொண்டு தாபத்ரயம் போம் படி நின்றவனை
தாபத் த்ரயத்தாலும் தப்தனாய் இருக்கிற நான் கண்டு என்னுடைய தாபத்ரயங்கள் தீரப் பெற்றேன் –

————————-

பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்
உரியானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும்
கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே –7-6-6-

ஸ்ரீ திரு அழுந்தூரில் உண்டான பிராமணர் ஆனவர்கள் திருவடிகளில் ஆஸ்ரயிக்கும் படியாக நிற்கிற
ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –அனந்யார்ஹனான நான் கண்டு கொண்டு களிக்கப் பெற்றேன் –

———————

திருவாழ் மார்பன் தன்னைத் திசை மண் எரி நீர் முதலா
உருவாய் நின்றவனை யொலி சேரும் மாருதத்தை
அருவாய் நின்றவனைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே -7–6-7-

ஸ்ரீ திரு வழுந்தையிலே நித்ய வாஸம் பண்ணுகிற –அடி உடைத்தான கல்பகம் ஆய்த்து-
ஸ்வர்க்கத்திலே நிராலம்பநமாக நிற்கிறது அன்றிக்கே பூமியிலே வேர்ப் பற்று உண்டான கற்பகத்தைக் கண்டு கொண்டு
என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன் –

————————

நிலையாளாக வென்னை உகந்தானை நிலமகள் தன்
முலையாள் வித்தகனை முது நான்மறை வீதி தோறும்
அலையாரும் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கலையார் சொற்பொருளைக் கண்டு கொண்டு களித்தேனே —7-6-8-

முது நான்மறை உண்டு -பாசி பூத்த வேதம் –அது திரு வீதிகள் தோறும் திரைக் கிளப்பத்தை உடைய
கடல் போலே கோஷியா நின்றுள்ள ஸ்ரீ தென் அழுந்தையில் மன்னி நின்ற –
சகல கலைகளாலும் புருஷார்த்தமாக பிரதிபாதிக்கப் பட்டவனைக் கண்டு கொண்டு
என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன் –

———————-

பேரானைக் குடந்தை பெருமானை இலங்கொளி சேர்
வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை
ஆராவின்னமுதைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9-

ஸ்ரீ திரு அழுந்தூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற –
கார் காலத்திலேயே மேகம் போலே ஸ்ரமஹரமான வடிவு அழகை உடையவனை –
கண்கள் குளிரக் காணப் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன் –

———————

திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அறமுதல் ஆனவனை யணி யாலியர் கோன் மருவார்
கறை நெடுவேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்
முறை வழுவாமை வல்லார் முழுதாள்வர் வானுலகே—7-6-10-

அடைவில் தப்பாதபடி அனுசந்திக்க வல்லவர்கள்-ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே
த்ரிபாத் விபூதி அடையத் தாங்கள் இட்ட வழக்காகப் பெறுவர்கள் –

——————–

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1-

ரஷகனான உன்னில் காட்டிலும் பாதக வர்க்கம் அணித்தாய் நின்று நலியா நின்றன –
கர்ம வச்யன் ஆகையாலே கர்ம க்ருதங்கள் சேர்ந்தே இருக்கும்
நீ அவசரம் பார்த்து புகுந்தாய் -இவை சஹஜங்கள்-
உண்ணிலாய -என்னுமா போலே ஒருவர் இருவர் இன்றிக்கே சேதன சமாதியால் நலியா நின்றுள்ள ஐந்து இந்த்ரியங்கள்
என் பக்கல் வந்து புகுந்து என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்குகிறவன வில்லை-
என்னுடைய விஷயத்தைக் காட்டு -என்னுடைய விஷயத்தைக் காட்டு என்று இவை தனித் தனியே
அலைத்து நெருக்க-அவற்றுக்கு அஞ்சி வந்து சர்வ ஸ்வாமியான உன் திருவடிகளிலே சரண ரஷணத்தில் அதிகரித்த உனக்கு
அத்தை முடிய நடத்த வேண்டாவோ –

——————–

பந்தார் மெல்விரலி நல் வளைத் தோளி பாவை பூ மகள் தன்னொடும் யுடனே
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால் வண்ணா மழை போல் ஒளி வண்ணா
சந்தோகா பௌழியா தைத்ரியா சாமவேதனே நெடுமாலே
அந்தோ நின்னடி யன்றி மற்றறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே–7-7-2-

வேறேயும் சில ரஷகரும் யுண்டாய் -அவர்கள் ரஷிக்கிறார்கள் என்று உனக்கு ஆறி இருக்க ஒண்ணாது கிடாய் –
அநந்ய கதியான நான் உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகலை யுடையேன் அல்லேன் –
அநந்ய கதிகளை நோக்குகைக்கு அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –

————————

நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய் அடியேனைச்
செய்யாத வுலகத்திடைச் செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்குமுள் புகுந்து
பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப் போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்னடைந்தேன்
ஐயா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே -7-7-3-

நிருபாதிக பந்துவே உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகல் யுடையேன் அல்லேன் –
நிருபாதிக பந்தம் தோற்ற வந்து நிற்கிறவனே-

———————–

பரனே பஞ்சவன் பௌழியன் சோழன் பார் மன்னர் மன்னர் தாம் பணிந்து ஏத்தும்
வரனே மாதவனே மதுசூதா மற்றோர் நற்றுணை நின்னலால் இலேன் காண்
நரனே நாரணனே திரு நறையூர் நம்பீ எம்பெருமானும் பாராளும்
அரனே ஆதி வராஹ முன்னானாய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே—7-7-4-

ஒருவனுக்கு உள்ளீடாய் நின்று ரஷிக்கை அன்றிக்கே வராஹ கல்பத்தின் யுடைய ஆதியிலே
ஸ்ரீ மகா வராஹமாய் வந்து அவதரித்து கண்ணுக்கு இலக்கை நின்று நோக்கினவனே-
அது தன்னை பழம் கதை யாக்கி இபொழுது இங்கே வந்து நிற்கிறவனே

———————–

விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து
பண்டானுய்ய வோர் மால்வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மைக் கருமமாவதும் என்தனக்கு அறிந்தேன்
அண்டா நின்னடியன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே-7-7-5-

இக் கலியுகத்தின் யுடைய ஸ்வ பாவத்தை நான் அழகியதாகக் கண்டேன் –
உன் பக்கலிலே வைமுக்யத்தை யுண்டாக்கி -பின்பு விஷய ப்ராவண்யத்தையும் பிறப்பித்து முடிக்கும்
சம்சார ஸ்வ பாவத்தை நான் அழகிதாக அறிந்தேன் –
எனக்கு ஹிதமாவதும் உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமதுவே என்று அறிந்தேன் –

———————–

தோயாவின் தயிர் நெய் அமுதுண்ணச் சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது எங்கும் தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும்
சேயாய் கிரேத திரேத துவாபர கலியுகமிவை நான்கும் ஆனாய்
ஆயா நின்னடியன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-6-

காலம் நீ இட்ட வழக்கு அன்றோ –உன் திருவடிகளை ஒழிய வேறு ஒன்றை அறியேன்
அந்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் பிற்பட்டாருக்கும் இழவாமைக்கு அன்றோ நீ இங்கே வந்து நிற்கிறது –

————————–

கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும் முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும் ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் தின்ற வம்மானே–7-7-7-

இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி போகங்களைப் புஜிக்கவேணும் என்று
ஐவர் நெருக்கி புஜிப்பிக்க அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

———————-

நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக் காவலைப் பிழைத்துக்
குடி போந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே–7-7-8-

வகுத்த ஸ்வாமியான நீ -ராஜ புத்ரனாய் பிறந்து முடி இழந்து போவாரைப் போலே ஆகாமே
அடியேனாய் இருக்கிற என்னை நித்ய கைங்கர்யத்தைக் கொண்டு அருள வேணும் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு வந்து புகுரலாம் படி கடல்கரை வெளியிலே வந்து நின்றால் போலே
எனக்கு உறவுமுறையார் கை விட்ட அன்று வந்து கிட்டலாம் படி அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –

————————-

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட்கொடியாய் நெடுமாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-

அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாவது
இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன்
ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்
கிருபை பண்ணுகைக்கு வந்து நிற்கிற இடம் இது அன்றோ –

————————–

அன்னம் மன்னும் பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக்
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன்
சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார்
மன்னி மன்னவராய் உலகாண்டு மான வெண் குடைக் கீழ் மன்னுவாரே–7-7-10-

இப்பத்தையும் அப்யசிக்க வல்லார் –சிரகாலம் ராஜாக்களாய் -லோகங்களை அடைய நிர்வஹித்து
பெரிய முத்தின் குடைக்கீழே இருந்து நிரவதிக ப்ரீதி யுக்தராய்ப் பெறுவார் –
இந்த்ரிய வஸ்தையை அனுசந்தித்து அஞ்சின ஸ்ரீ ஆழ்வார் இத்தை பலமாகச் சொல்லுவான் என் என்னில்
இவருக்கு அந்த ஐஸ்வர்யம் பாகவத சேஷமாக்குக்கைக்கு உடலாகையாலே
அதுவும் புருஷார்த்தத்திலே புக்குப் போய்த்து காண்-என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தாராம் –

————————

செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-1-

தனித் தனியே பிரஹ்மாவைப் போலே சிருஷ்டிக்க ஷமராய் இருக்கிற பிராமணர் நித்ய வாஸம் பண்ணுகையாலே
வந்த நிரவதிக சம்பத்தை உடைய ஸ்ரீ திரு வழுந்தூரிலே வந்து நின்று அருளின இது தான் அலாப்யலாபமாகக் கொண்டு நிற்கிறவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடி கோள்-அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப் போகப் பாருங்கோள் –

———————–

முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண முநிவரோடு தாநவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அருளிய வெம்பரமன் காண்மின்
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் சங்க மவை முரலச் செங்கமல மலரை ஏறி
அன்னமலி பெடையோடு மமரும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த யமரர் கோவே –7-8-2-

அன்னமானது அப்பூம் படுக்கையிலே போக ஸ்ரோதஸ்ஸில் தன்னை விஞ்சின பெடையோடு ஒக்க சாய்கிற
நிரவதிக சம்பத்தை உடைய –அங்குத்தை திர்யக்குகளும் அகப்பட போக பிரதாநமாய்த்து இருப்பது –

————————–

குலத்தலைய மத வேழம் பொய்கை புக்குக் கோள் முதலை பிடிக்க வதற்கு அனுங்கி நின்று
நிலத்திகழும் மலர்ச் சுடரேய் சோதி யென்ன நெஞ்சிடர் தீர்த்து அருளிய வென் நிமலன் காண்மின்
மலைத் திகழ் சந்தகில் கனக மணியும் கொண்டு வந்துந்தி வயல்கள் தோறும் மடைகள் பாய
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே—7-8-3-

ஆஸ்ரிதர் உடைய விரோதியைப் போக்கி –அவர்கள் உடைய அபேஷிதம் சம்விதானம் பண்ணும்
ஸ்வபாவன் என்கிற சுத்தியை எனக்கு பிரகாசிப்பித்தவன் கிடீர் –

—————————

சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கற்குன்றம் திகழ்ந்தது எனத் திரு உருவம் பன்றியாகி
இலங்கு புவி மடந்தை தனை யிடந்து புல்கி எயிற்றிடை வைத்து அருளிய வெம்மீசன் காண்மின்
புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்கப் பொழில்கள் தொறும் குயில் கூவ மயில்கள் ஆல
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-4-

அண்டபித்தியிலே புக்குச் சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறி –அந்த பூமிக்கும் அபிமானியான
ஸ்ரீ பூமிப் பிராட்டியை அணைத்து- அந்த பூமி தன்னை திரு எயிற்றிலே ஒரு நீல மணி அழுத்தினால் போலே வைத்து அருளின
அச் செயலைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன் கிடீர் –
நிரவதிக சம்பத்தை உடைத்தாய் –சம்சார விபூதிக்கு ஆபரணம் போலே இருக்கிற ஸ்ரீ திரு அழுந்தூரிலே –

—————-

சின மேவும் அடல் அரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு
மன மேவும் வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள வுயிர் வவ்விய வெம்மாயோன் காண்மின்
இனமேவும் வரி வளைக்கை ஏந்தும் கோவை ஏய்வாய மரகதம் போல் கிளியின் இன்சொல்
அனமேவு நடை மடவார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே —7-8-5-

ஸ்ரீ நரசிம்ஹத்துக்கும் பிற்காலியாத மிடுக்கை உடைய ஹிரண்யன் உடைய உடலைக் கீண்டு –
அவள் உடைய முலை வழியே அவளுடைய பிராணங்களும் வற்றி வரும்படி முலையை அமுது செய்த
ஆச்சர்ய பூதன் கிடி கோள் இங்கு வந்து நிற்கிறவன் –

——————-

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித்
தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்
தேனமரும் பொழில் தழுவும் எழில் கோள் வீதிச் செழு மாட மாளிகைகள் கூடம் தோறும்
ஆனதொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-6-

அவன் கையில் தான் நீர் ஏற்றுப் பெற்று அந்த திருவடிகளின் கீழே ஏழு வகைப் பட்ட லோகங்களும்
அடங்கும்படிக்கு ஈடாக வளர்ந்து –அத்விதீயமாய்
ஆயதங்களுக்கு எல்லாம் பிரதாநமாய் இருக்கிற திரு ஆழியைப் பரிகரமாக உடையவனான என் ஸ்வாமி கிடி கோள்

———————

பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன்
அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் காண்மின்
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசை முகனே யனையவர்கள் செம்மை மிக்க
அந்தணர் தம் ஆகுதியின் புகையார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே—7-8-7-

ஒரு கொலை அம்பாலே எய்து அவனை அழித்து விரோதி போக்கப் பெற்றோம் -ஆஸ்ரிதர்களும் குடி இருப்புப் பெற்றார்கள் –
என்று அவர்களுக்கு உகவக் கடவ உகப்பை தான் உகந்த ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் –

———————–

கும்ப மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ விடை யடர்த்துக் குரவை கோத்து
வம்பவிழும் மலர்க் குழலாள் யாய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின்
செம்பவள மரகதம் நன் முத்தம் காட்டத் திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும்
அம் பொன் மதிள் சூழ்ந்து அழகார் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த வமரர் கோவே —7-8-8-

அனுகூல ஸ்பர்சம் ஒழிய த்ரவ்யம் ஒழிய செல்லாமையாலே
பரிமள பிரசுரமான பூவை உடைத்தான குழலை உடைய யசோதை பிராட்டி வைத்த
தயிரையும் வெண்ணெயும் அமுது செய்து அத்தாலே பெறாப் பேறு பெற்றானாக இருக்கிற ஆச்சர்ய பூதன் கிடீர் –

————————

ஊடேறு கஞ்சனொடு வில்லும் மல்லும் ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற
நீடேறு பெரு வலித் தோளுடை வென்றி நிலவு புகழ் நேமி யங்கை நெடியோன் காண்மின் –
சேடேறு பொழில் தழுவும் எழில் கொள் வீதித் திரு விழவில் மணியணிந்த திண்ணை தோறும்
ஆடேறு மலர்க் குழலார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே —7-8-9-

நாள் செல்ல நாள் செல்ல மிடுக்கு ஏறி வாரா நிற்பதான தோளை உடையனாய் விஜயமானது எப்போதும் ஒக்க வர்த்தியா நின்ற
புகழை உடைத்தான ஸ்ரீ திரு வாழியைக் கையிலே உடைய சர்வாதிகன் கிடீர் –

————————-

பன்றியாய் மீனாகி யரியாய் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல்
ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே —7-8-10-

சர்வ வித ரஷணங்களையும் பண்ணும் இடத்தில்தன்னை எண்ணினால் பின்னை ஒருவரையும் எண்ணாது இருக்கிற
சர்வாதிகனை –ஸ்ரீ திரு வழுந்தூரிலே நின்று அருளின சர்வாதிகன் ஆனவனை –
இப்பத்தையும் வல்லார்-ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும்-என்று தாம் சேர்த்து அனுபவித்த பிரகாரம் இருக்கிறபடி –
முதல் பாட்டு -ஸ்ரீ ஷீரார்ணவம்/ 2-4-5-10—திர்யக் திருவவதாரம் -நான்கு பாடல்களிலும் ஸ்ரீ கஜேந்திர ரஷணம்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண திரு வவதாரம் -மீது ஐந்து பாசுரங்கள்
இவற்றை அப்யசிக்க வல்லாருக்கு ப்ரஹ்மாதிகள் உடைய பதம் உண்டாக முன்னம் தட்டில்லை –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் தாம் பாகவத சேஷத்வம் ஆக்குகைக்கு உடலாய் இருக்கையாலே ஐஸ்வர் யத்தையும் ஆதரித்து அருளினார்
என்று அருளிச் செய்வர் –

———————-

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்
வெள்ளம் முது பரவைத் திரை விரியக் கரையெங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறு புலியூர்ச் சல சயனத்
துள்ளும் எனதுள்ளத் துள்ளும் உறைவாரை உள்ளீரே —7-9-1-

உகந்து அருளின நிலங்களும் இவர் திரு உள்ளமும் ஒக்க வாய்த்து அவன் விரும்பி இருப்பது –
இப்படி இருக்கையாலே ஆஸ்ரயிப்பாருக்கு ஆஸ்ரயநீய ஸ்தானம் இவை இரண்டும் யாய்த்து –
சல சயனன் -என்றது-அது அவனுக்குத் திரு நாமமாய்-ஜல சயனன் வர்த்திக்கிற இடம்
சல சயனம் என்று ஊருக்கு பெயராகிறது –

————————

தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ்சோற்றோடு கஞ்சி
மருவிப் பிரிந்தவர் வாய் மொழி மதியாது வந்து அடைவீர்
திருவில் பொலி மறையோர் சிருபுலியூர்ச் சல சயனத்து
உருவக் குறளடிகள் அடி யுணர்மின் யுணர்வீரே –7-9-2-

அழகியதாய் கண்டார்க்கு மேல் விழும்படியான வடிவை உடைய ஸ்ரீ வாமனன் ஆன ஸ்ரீ சர்வேஸ்வரன்
உடைய திருவடிகளை ஸ்மரியுங்கோள்-

————————

பறையும் வினை தொழுது உய்மின் நீர் பணியும் சிறு தொண்டீர்
அறையும் புனல் ஒரு பால் வயல் ஒரு பால் பொழில் ஒரு பால்
சிறை வண்டினம் அறையும் சிறு புலியூர்ச் சல சயனத்
துறையும் மிறையடி யல்லது ஓன்று இறையும் அறியேனே–7-9-3-

கண்டிகோளே நாம் இருக்கிறபடி நீங்களும் இப்படியே இருக்கப் பாருங்கோள் -என்கிறார் –
ஸ்ரீ சிறு புலியீர் சல சயனத்தில் நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய திருவடிகளை ஒழிய
வேர் ஒன்றை த்யாஜ்யதயா வாகிலும் அறிவது ஓன்று இல்லை –

——————

வானார் மதி பொதியும் சடை மழுவாளி யொடு ஒருபால்
தானாகிய தலைவனவன் அமரர்க்கு அதிபதியாம்
தேனார் பொழில் தழுவும் சிறு புலியூர் சல சயனத்
தானாயனது அடி அல்லது ஓன்று அறியேன் அடியேனே —7-9-4-

தம்மை அவர்கள் ஆப்தராக நினைத்து இருக்கிறபடியால் தாம் சொல்லிற்று கேட்பார்கள் -என்று பார்த்து
தம்படியை அவர்களுக்கு அறிவித்து-நீங்களும் என்னைப் போலே அவனைக் கொண்டு
உங்கள் விரோதிகளைப் போக்கிக் கொள்ளப் பாருங்கோள் என்கிறார் –

————————

நந்தா நெடு நரகத்திடை நணுகா வகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறிநீர்ச்
செந்தாமரை மலரும் சிறு புலியூர்ச் சலசயனத்து
அந்தாமரை யடியாய் உனதடியேற்கு அருள் புரியே—7-9-5-

அல்லாதார் செய்தபடி செய்ய அநந்ய கதியான என் பக்கலிலே உன்னுடைய
கண் அழிவற்ற கிருபையைப் பண்ணி அருள வேணும் –

——————

முழு ஆம்பலும் அலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவிக்
கழுநீரொடு மடவாரவர் கண் வாய் முக மலரும்
செழுநீர் வயல் தழுவும் சிறுபுலியீர்ச் சலசயனம்
தொழு நீர்மை யது உடையார் அடி தொழுவார் துயர் இலரே —7-9-6-

ஸ்ரீ சிறுபுலியீர்ச் சலசயனத்தை தொழுகையே ஸ்வபாவமாக உடையாருடைய திருவடிகளைத் தொழுவார்க்கு
துக்கங்கள் நில்லா –அவை தன்னடியே விட்டுப் போம் –

————————–

சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்
மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ
தீயோம்புகை மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ வுனதடியார் மனத்தாயோ வறியேனே—7-9-7-

உன் திருவடிகளில் அசாதாரணராய் இருப்பார் ஹிருதயங்களில் உள்ளாயோ –அடியேன் அறிகிறேன் இல்லை –
எனக்கு இது தெரிய அருளிச் செய்ய வேணும் –
இத்தால் சொல்லிற்று ஆயத்து –ஸ்ரீ சௌபரி பல வடிவு கொண்டால் போலே இவ்வோ இடங்கள் தோறும்
இனி அவ்வருகு இல்லை என்னும்படி குறைவற வர்த்திக்கிற படியைக் காட்டிக் கொடுத்தான் –

———————-

மையார் வரிநீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு
உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார்
செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
ஐவாய அரவணை மேல் உறை யமலா யருளாயே –7-9-8-

அனுபவ ஜனித ப்ரீதிக்குப் போக்கு விடுகைக்கு பலவாய்த் தலைகளை உடையனாய் சைத்யாதிகளை பிரக்ருதியாக உடைய
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளி பிரயோஜன நிரபேஷமாக ரஷணத்திலே ஒருப் பட்டு இருக்கிறவனே –
என் பக்கலிலே உன்னுடைய கிருபையைப் பண்ணி அருள வேணும்

————————-

கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா
பெருமால் வரை யுருவா பிறவுருவா நினதுருவா
திருமா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
அருமா கடலமுதே யுனதடியே சரணாமே—7-9-9-

நிரதிசய போக்யனாய்க் கொண்டு ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடும் கூட சிறுபுலியூர்ச் சல சயனத்த்திலே
சாய்ந்து அருளினவனே-ஸ்ரீ யபதியான உனது திருவடிகளை ஒழிய எனக்கு வேறு ஒரு புகல் இல்லை
பிராப்யம் இல்லை –

————————

சீரார் நெடுமறுகில் சிறுபுலியூர்ச் சல சயனத்து
ஏரார் முகில் வண்ணன் தன்னை இமையோர் பெருமானைக்
காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை
பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே —7-9-10-

பாபம் வருகைக்கு யோக்யமான தேசத்திலே இருக்கச் செய்தேயும் இவற்றை வாயாலே சொல்லி ஆஸ்ரயிக்க-
பாபங்கள் தானே நமக்கு இவ்விடம் இருப்பிடம் அல்ல -என்று விட்டுப் போம்-

———————-

பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யானை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-

நான் நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தேயும் இதுக்கு முன்பு அனுபவித்து அறியாதது ஒன்றில் போலே
பிறக்கிற ஆசை யானவனை –அம்ருதத்தை நீராகப் பாய்ச்சி வளர்த்தால் போலே நிரதிசய போக்ய பூதமான
கரும்பு போலே இனியனாய் இருக்கிறவனை –
அப்போதே நுகரலாம்படி பக்வ பலமாய் இருக்கிறவனை –பசித்த இடத்தே ஸூக போஜனம் பண்ணப் பெறுவாரைப் போலே
அபேஷை பிறந்த இடத்தே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

————————–

மெய்ந்நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை
மைந்நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-2-

நிரதிசய போக்கியம் ஆனவனை –நெருக்கிக் கார்யம் கொள்ள வேண்டாதே அப்போதே பருகலாம்படி இருக்கிற
கரும்பில் ராசம்சம் ஆனவனை – ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –

——————-

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலி மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனிமா மதி யந்தவள்
மங்குலைச் சுடரை வடமா மலை யுச்சியைநச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப் பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே—7-10-3-

அசாதாரணமான விக்ரஹத்தோடே ஸ்ரீ திருமலையிலே ஏக தேசமாய் இருக்கிறவனை –
நசையை உடையோமாய்க் கொண்டு நம்மாலே ஆஸ்ரயிக்கப்படுகிற போக யோக்யமான காலம் ஆனவனை –
அதுக்கு உறுப்பாக த்ரவ்யார்ஜனத்து ஈடான காலம் ஆனவனை சென்று நாடி ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-

————————

பேய் முலைத்தள நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-4-

இந்த ஸ்வ பாவத்தைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனை –எனக்கு கைம்முதல் இல்லாத வன்று
அழித்துக் கெடுத்து ஜிவிக்கலாம் படி யான நிதியானவனை –பொன் போலே ஸ்ப்ருஹநீயம் ஆனவனை –
அப் பொன்னை அழித்தும் ஸ்வீகரிக்கக் கடவ ரத்னம் போலே ஸ்லாக்கியம் ஆனவனை –
சென்று நாடி ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே

————————

ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய
கூற்றினைக் குரு மா மணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினைக்
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-5-

அவ்வளவும் போகப் பற்றாதார்க்கு காட்சி கொடுக்கைக்காக ஸ்ரீ திரு நின்றவூரிலே நிற்கிற
முத்துத் திரள் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –
ஸ்வ ஸ்பர்சத்தால் வரும் ஸூகமாய் இருக்கிறவனை –
தாரகம் ஆனவனை –-சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-

———————–

துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் சுடர் வான் கலன் பெய்ததோர்
செப்பினைத் திருமங்கை மணாளனைத் தேவனைத் திகழும் பவளத்தொளி
யொப்பனை யுலகேழினை யூழியை ஆழி ஏந்திய கையனை யந்தணர்
கற்பினைக் கழுநீர் மலரும் வயல் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-6-

சர்வைஸ் ஸ்ப்ருஹநீயமானவனை-போக்ய-போகோ உபகரண போக ஸ்தானங்களாய் உள்ளவனை –
காலமே சேஷித்த அன்று காலமாய் நின்றவனை –
நித்தியமான திவ்ய ஆயுதங்களை ஏந்தும் திருக் கையை உடையவனை –
நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனை -என்றபடி –
பிராமணர் உடைய மரியாதை போலே இருக்கிற சங்கல்பத்தை உடையவனை –
பிராமணராலே அத்யயனம் பண்ணப் படுகிறவனை-என்றுமாம் –ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே

———————

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவதேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்தனை யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற
கருத்தனைக் களிவண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே—7-10-7-

விரோதிகளைப் போக்குமவன் –விரோதி நிரசனத்தை சீலமாக உடைய உபகாரகனை –
படபாமுகாக்னி ஜலம் அடைய தகன் பக்கலிலே வந்து சுவரும்படி இருக்குமா போலே
சர்வ பதார்த்தங்களும் தன பக்கலிலே வந்து லயிக்கும்படி இருக்கும் சக்தியை உடையவனை –
களிவண்டு அறையும் பொழில் ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டேனே-

—————————

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சியில் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்சவஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே —7-10-8-

நிருபாதிக சேஷியை-தன் பக்கல் ஆசை உடையார் தலை மேலே நிற்கிறவனாய்-
அது தான் பெறாப் பேறாக நினைத்து பூர்ணனாய் இருக்கிறவனை –
கம்சனுடைய துரபிசந்தியை அவன் தன்னோடு போக்கி உகவாதாரோடு செவ்வை அழியப் பரிமாறுமவனை –
ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டேனே –

——————

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலைநீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-9-

ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹமே வடிவாய் இருக்கிறவனை–ததாமி புத்தியோகம் தம் -என்கிறபடியே
தன்னைப் பிராபிக்கைக்கு ஈடான புத்தி யோகத்தை கொடுக்குமவனை –
வேதத்தை எங்கும் ஒக்க அதிகரித்து இருப்பார்க்கு தன்னை ஒழிய பதார்த்த தர்சனம் பண்ண ஒண்ணாத படி
அவர்களுக்கு -திருஷ்டி பூதனாய் உள்ளவனை –
காணப் பெறாமையால் உறாவின கண்களின் உறாவுதல் தீரும்படி -நின்று கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

—————–

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-

ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது-என்னோடு அதிகரிக்கில் அறியலாம்
ஒரு வசிஷ்டனோடே-ஒரு சாந்தீபனோடே தாழ நின்று அதிகரிக்கக் கடவ
அவனுக்கு ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –
இவை பத்தையும் –அனுசந்திப்பார்க்கு அடைவு படச் சொல்லுகையால் உண்டான அருமையாலே வல்லராய்
உபாதான லோகங்களில் போக பூமிகள் எல்லாம் புக்கு அங்கு உண்டான போகங்களைப் புஜிப்பார்கள்

————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading