ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-6-6–

ஆனாலும், ‘ஏதேனும் ஒரு படி நீரும் சிறிது செய்து வந்து கிட்ட வேண்டாவோ?’ என்ன,
உன்னை வந்து கிட்டும் உபாயம் அறியேன்,’ என்கிறார்.

வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச்
செஞ் சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தர மேற் செம் பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ் சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே–7-6-6-

வந்து எய்துமாறு அறியேன் –
வந்து கிட்டும் உபாயத்தை அறியேன். என்றது,
நீ தானே மேல் விழுந்து உன் வடிவழகைக் காட்டா நின்றால் அதனை விலக்காமைக்கு வேண்டுவது உண்டு;
என்னால் உன்னை ஒரு சாதனத்தைச் செய்து வந்து கிட்டப் போகாது,’ என்றபடி.
ஆனால், இழந்தாலோ?’ என்ன, ‘இழக்கலாம் படியோ உன் படி இருக்கிறது?’ என்கிறார்.

மல்கு நீலம் சுடர் தழைப்ப –
வடி வழகு இல்லை என்று விடவோ,
பெறுவிக்கைக்குப் புருஷகாரம் இல்லை என்று விடவோ,
எனக்கு ஆசை இல்லையாய் விடவோ
மல்கு நீலச் சுடர்
குறைவு அற்ற நீலப் புகரானது
தழைப்ப
கர்மம் காரணமாக வந்தது அல்லாமையாலே மேன் மேலென மிக்கு வருதலின், ‘தழைப்ப’ என்கிறார். என்றது,
இவ்வளவு என்ன ஒண்ணாதபடி மேன் மேலென வளரா நிற்கின்றது’ என்றபடி.

நெஞ் சுடர்ச் சோதிகள் பூத்து-
சிவந்த சுடரை யுடைத்தான ஒளி யானது காலப் பூ அலர்ந்தாற் போலே பூத்து.

ஒரு மாணிக்கம் சேர்வது போல் –
அனுபவத்திற்குத் தகுதியாம்படி ஒரு மாணிக்கமானது சாய்ந்தால் போலே.
மல்கு நீலம் சுடர் தழைப்ப’
என்கையாலே, நிறம் இருந்தபடி சொல்லிற்று;
நெஞ்சுடர்ச் சோதிகள் பூத்து’ என்கையாலே,
திவ்ய அவயங்கள் இருந்தபடி சொல்லிற்று;
ஒரு மாணிக்கம் சேர்வது போல்’ என்கையாலே,
இரண்டுக்கும் ஆஸ்ரயமான – பற்றுக்கோடான திருமேனியைச் சொல்லுகிறது.
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து’ என்கிற இடத்தில்
தெரியாதபடி மறைத்துச் சொல்லிற்று ஒன்று உண்டே அன்றோ?
அதனை வியக்தமாக -விளக்கமாக அருளிச்செய்கிறார் மேல்:

அந்தரம் மேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய் செஞ்சுடர்ச் சோதி விட –
அந்தரம் – நடுவு. உடம்புக்கு நடுவு, அரை.
திரு வரையில் திருப் பீதாம்பரத்தோடே, திரு வடிகள், திரு நாபி கமலம், திருக் கைகள்,
பெரிய பிராட்டியார் எழுந்தருளி யிருக்கையாலே மேலே கூறியவற்றோடு ஒக்கச் சொல்லலாம்படி
சிவந்திருக்கிற திரு மார்பு, திருக் கண்கள், திருப் பவளம் இவை,
செஞ்சுடர் சோதி விட
சிவந்த சுடரை யுடைத்தான தேஜஸ்ஸை ஒளியை ப்ரசரிக்க -வீச.

உறை என் திரு மார்பனை –
இதுவும் ஓர் ஆபரணம் போலே:
என் தலைவியான பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே உடையவனை.
திருப் பாற் கடலிலே நீர் உறுத்தாதபடி திருவனந்தாழ்வானைப் படுக்கையாகக் கொண்டு,
அதிலே பலப் பல வர்ணங்களாய் இருப்பது ஒரு மேல் விரியை விரித்தால் போலே அவன் சாய்ந்தருள,
மேல் எழுந்தருளி இருக்கமாயிற்றுப் பிராட்டி.
மேல் விரி -திருப் படுக்கை மேலே அலங்காரமாகப் படுத்துமது –
பரிஸ்ரமாத் பர்ஸூப்தா ச ராகவாங்கே அஸ்மிஅஹம் சிரம்
பர்யாயேண ப்ரஸூப்தஸ்ச மமஅங்கே பரதாக்ரஜ;’-சுந். 38 : 20.
நானும் மிக்க ஆயாசனத்தினால் பெருமாள் மடியில் தூங்கிக் கொண்டிருந்தேன்’ என்னக் கடவதன்றோ?
மலரான் தனத்துள்ளான்’ (மூன்றாம் திருவந். 3.) என்ன வேண்டியிருக்க,
அவன் மார்விலே இருக்கிறான் எனக் கூடுமோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘நானும்’ என்று தொடங்கி.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply