கீழ் -அன்னை, நீ செய்கிற இதனைப் பொறுக்க மாட்டாள்’ என்ன, “அன்னை என் செய்யும்” என்று,
அவள் பொறாமல் செய்வது என்? என்னுமளவிலே நின்றாள்.
இப் பாசுரத்தில், நீ இப்படி ஒரு விஷயத்தில் வியவசிதையானபடி -அறுதியிட்டிருப்பதை அறிந்தால்,
அவள் ஜீவியாள் கிடாய் – பிழைக்க மாட்டாள் என்ன,
அவள் பிழைத்தால் என்? முடிந்தால் என்? என்கிறாள்.
அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே–5-3-6-
அன்னை என் செய்யில் என்-
அவள் பிழைத்தால் என்? முடியில் என்? என்கிறாள்.
குரவ : கிம் கரிஷ்யந்தி தக்தாநாம் விரஹாக்நிநா”- ஸ்ரீ விஷ்ணுபுராணம், 5. 18 : 22
விரக அக்னியினால் கொளுத்தப்பட்டிருக்கிற நமக்குப் பெரியோர்கள் என்ன செய்வார்கள்” என்கிறபடியே,
முடியாதே இருப்பார்க்கு அன்றோ இதனை பரிஹரிக்க – நீக்க வேண்டுவது,
கையற்றார்க்கு இது கொண்டு காரியம் என்?
நன்று-தாயாருடைய நாசம் ஒரு தலையாகவும் மீளாதபடியாய்,
இவள் நாயகனுடைய ஸுந்தரியாதிகளில் -அழகு முதலானவைகளில்- ஈடுபட்டவள் ஆனாள்’ என்று
ஊரார் பழி சொல்லுவார்களே என்ன,
ஊர் என் சொல்லில் என்-
அவர்கள் பழி சொல்லில் என்?
குணங்களைச் சொல்லில் என்?
“கொல்லை” என்னுதல், “குணமிக்கனள்” என்னுதல், இத்தனை அன்றோ அவர்கள் பழி சொல்லுவது.
தோழிமீர்-
தாய் என் செய்யில் என், ஊர் என் சொல்லில் என்’ என்று நீங்கள் மேல் விழுந்து என்னை இவ் விஷயத்தில் –
பிரவணையாக்குகை -ஈடுபாடு உடையவளாக ஆக்குகை அன்றிக்கே,
தாய் பிழையாள், ஊரார் பழி சொல்லுவர்கள்’ என்று இதனைப் பழியாகச் சொல்லுமளவு உங்களது ஆன பின்பு.
என்னை –
“தாய் வாயிற் சொற்கேளாள் தன் ஆயத்தோடு அணையாள்” என்கிற
தாயார் பிழையாள், ஊரார் பழி சொல்லுவார்கள்’ என்றால் மீளாதபடி இவ் விஷயத்தில் ஈடுபாடுடையவளாய்
இருக்கிற என்னை.
இனி-
உங்கள் சொல்லும் கேளாதபடி கைகழிந்த பின்.
உமக்கு –
இது பழி’ என்று மீட்கப் பார்க்கிற அளவிலே நிற்கிற உங்களுக்கு.
ஆசை இல்லை-
இனி என் பக்கல் உங்களுக்கு நசை அற அமையும்.
தோழிமீர் –
இதற்கு முன்பு எல்லாம் ‘தோழி’ என்று உயிர்த் தோழி ஒருத்தியையும் பார்த்து வார்த்தை சொல்லிப் போந்தாள்;
இப்போது இவளுடைய துணிவின் மிகுதியைக் கண்டவாறே
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தை சொல்லி யாகிலும் மீட்க வேணும்’ என்று ஆய வெள்ளம் எல்லாம் திரண்டன;
அதனாலே ‘தோழிமீர்’ என்கிறாள்.
அகப்பட்டேன்-
இப்போது ‘ஹிதம்’ என்கிற புத்தியாலே ஒரு வார்த்தை சொன்னோமே யாகிலும், ஊரார்க்கும் தாய்மார்க்கும்
இவ்வருகே எங்களிடத்தில் ஒரு வாசி நினைத்திருக்க வேண்டாவோ உனக்கு” என்ன,
அது அப்படியே, அதில் குறை இல்லை; என்னைக் கடல் கொண்டது காணுங்கோள், நான் என் செய்வேன் என்கிறாள்.
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதிமன்னன் –
“சிறியார் பெரியார்’ என்ற வாசி இன்றிக்கே எல்லாரையும் ஒரு சேர ஆழப் பண்ணும் கடலிலே அன்றோ நான் அகப்பட்டது.
ரூப ஒளதார்ய குணை:”-ரூபம் என்றது, வடிவழகை. ஒளதார்யம் என்றது, அதனை எல்லாரும் அநுபவிக்கலாம்படி
தன்னை முற்றக் கொடுத்துக் கொண்டிருக்கையை.
“குணம்” என்றது, கொள்ளுகிறவனைக் காட்டிலும் தாம் தாழ நின்று கொடுக்கும் சீலத்தை.
தன் மேன்மை தோற்ற இருந்து கொடுக்கும் அன்று ஆள் பற்றதே அன்றோ;
அதற்காகத் தாழ நின்றாயிற்றுத் தன்னைக் கொடுப்பது.
“பும்சாம்” – அந்த அழகும் கொடையும் சீலமும் வயிர உருக்கானவாம்; என்றது, பலம் அற்ற பெண்கள் படுமதனை
வன்னெஞ்சரையும் படுத்த வல்லனவாம் என்றபடி.
அன்றிக்கே, “பிரகிருதி புருஷர்கள்” என்றால் போலேயாய், அசித்துக்கு வேறுபட்டவர்கள் எல்லாரையும்
ஈடுபடுத்த வல்லன என்னவுமாம்.
“திருஷ்டி சித்தாபஹாரிணம்”-கண்களுக்கு மனத்தின் துணை வேண்டாமலே, கண்களைப் பின் செல்லுமத்தனை நெஞ்சு.
தாய் வேறு, கன்று வேறு ஆக்கும் விஷயம் அன்றோ என்றபடி.
(மனத்தினைத்‘தாய்’ என்றும், மற்றைக் கரணங்கள் மனத்தினைப் பின் செல்லுவன ஆதலின், அவற்றைக் ‘கன்று’ என்றும்
அருளிச்செய்கிறார். ஸ்ரீ பரதாழ்வானையும் கைகேசியையும் வேறாக்கின விஷயம் அன்றோ இது என்பது, தொனிப் பொருள்,)
யத்ருஷ்ய பிரதமஜாயே புராணா “எந்தப் பரம பதத்தில் எல்லாவற்றையும் காண்கிறவர்களும், எப்பொழுதும் உள்ளவர்களும்,
பகவானுடைய அநுபவத்தில் எப்பொழுதும் ஒருபடிப் பட்டவர்களும்” என்னும்படி இருக்கிறவர்கள்
ஆகையாலே ‘முன்னை அமரர்’ என்கிறது.
நித்ய ஸூரிகளுக்கும் சத்தைக்குக் காரணமாயிருக்கிற மேன்மையுடையவன் ஆதலாலே முதல்வன்’ என்கிறது.
அன்றிக்கே, அப் பொழுதைக்கு அப் பொழுது ஆசைப் படக்கூடிய-நித்ய ஸ்ப்ருஹா- விஷயமானவன் என்னுதல்.
ஆக, அத்தகைய விஷயத்திலே அன்றோ நான் அகப்பட்டது என்பதனைத் தெரிவித்தபடி.
வண் துவராபதி மன்னன்’
என்றதனால், முதன்மை தோற்ற ஓலக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிற துறை அல்லாததிலேயோ நான் இழிந்தது’
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னுமதில் நாயகராக வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில்”
என்கிறபடியே பெண்களுக்கு உடம்பு கொடுத்துக் கொண்டிருக்கிற நம் துறையிலே அன்றோ இழிந்தது
என்பதனைத் தெரிவிக்கிறாள்.
அன்றிக்கே, ‘மன்னன்’ என்றதனால் மேன்மை தோற்ற ஓலக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிற இடமே நன்றாய் விட்டது
நீர்மை தோற்ற இருக்கிற இடத்தில் விழுகிற பிரம்புகளிற் காட்டில் என்பதனைத் தெரிவிக்கிறாள் ஆதலுமாம்.
மணி வண்ணன்-
அவ் விரண்டும் இல்லையே யாகிலும் விட ஒண்ணாததாயிற்று வடிவழகு.
காதலி துவக்குண்பது வடிவழகிலே அன்றோ.
வாசுதேவன்-
வடிவழகு இல்லையாகிலும் விட ஒண்ணாததாயிற்றக் குடிப் பிறப்பு.
ஸ்னுஷா தசரதஸ் யாஹம் -நான் தசரத சக்கரவர்த்தியினுடைய மருமகள்” என்கிறபடியே,
பிராட்டி தனக்குப் பேற்றுக்கு உடலாக நினைத்திருப்பது ‘சக்கரவர்த்தி மருமகள்’ என்னும் இதனையே காணும்.
ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹாநாம் முக்யஸ்ய விதிதாத்மந: ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ருசைந்ய பிரதாபிந:”- சுந். 33 : 15, 16
சத்ரு சைன ப்ரதாபி ந -எதிரியின் படையினை வருந்தச் செய்யுமவர்” என்கிறபடியே,
எங்கள் மாமனார் உளராகில் எனக்கு இவ்விருப்பு இருக்க வேணுமோ? பகைவர்களும் ஜீவிக்க, ஜீவித்தவரோ அவர்.
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன்-
அவனுடைய நைர் க்ருண்யத்தோடே -அருள் அற்ற தன்மையோடு நீர்மையோடு,
ஊராருடைய பழியோடு புகழோடு வாசி அற்றால் போலே,
அவன் மேன்மையோடு சௌலப்யத்தோடு வாசி அற இரண்டும் ஆகர்ஷகமாய் -மனக் கவர்ச்சியாய் இருக்கிறதாயிற்று இவளுக்கு.
வலையுள் . . . அகப்பட்டேன் –
அந்தப் பொதுவானதில் அன்றிக்கே, அவன் என்னைக் குறித்து நோக்கின
நோக்கிலும் புன் முறுவலிலும் அன்றோ நான் அகப்பட்டது.
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் வலையாக அபிநயித்துப் பாடா நிற்க,
எம்பெருமானார் திருக் கண்களைக் காட்டி யருளினார்,
“கமலக்கண் என்னும் நெடுங்கயிறு” எனக் கடவதன்றோ.
அநுகூலம் போலே இருந்து தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன்-
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply