முதல் இரண்டு பத்தாலே ப்ராப்ய பூதனுடைய சேஷியினுடைய ரக்ஷகத்வ போக்யத்வங்களைச் சொல்லி
அநந்தரம் மூன்றாம் பாத்தாலும் நாலாம் பாத்தாலும் ப்ராப்தாவான பகவச் சேஷ பூதனுடைய
தத் ஏக அனுபவத்தையும் தத் ஏக பிரியத்வத்தையும் சொல்லி
ஆக நாலு பாத்தாலும் சித்த ரூபமான பராவராத்ம யாதாத்ம்யத்தை அருளிச் செய்தாராய்
அநந்தரம் அஞ்சாம் பாத்தாலும் ஆறாம் பாத்தாலும் சித்த உபாய பூதனான ஈஸ்வர விஷயத்தில்
சேதனனுக்கு சாத்தியமான உபாய ஸ்வீ காரத்தை அருளிச் செய்கிறார்
அதில் இந்த அஞ்சாம் பத்தில் ஸித்தமான உபாய ஸ்வரூபத்தினுடைய யாதாம்யத்தை நிரூபிக்கிறது -எங்கனே என்னில்
கீழ்ச் சொன்ன தத் ஏக பிரியத்வத்தாலே -பகவத் கைங்கர்யமே உத்தேச்யம் -என்று பிறருக்கு உபதேசிக்கும்படி
தமக்கு இவ்விஷயத்தில் பிறந்த ப்ராவண்யத்தை அனுசந்தித்து -இதுக்கடி அவனுடைய உபாய பாவம் -என்று நிஷ்கர்ஷித்து
உபாய பூதனுடைய கிருபா பாரவஸ்யத்தையும்
அதடியாக ஆஸ்ரிதரை பாகத்தை இட்டுத் திருத்திக் கொள்ளும் ஆகாரத்தையும்
திருந்தினார்க்கு நிரதிசய ப்ரேமத்தை உண்டாக்கி ப்ராப்ய த்வரையை ஜெநிப்பிக்கும் படியையும்
ப்ராப்ய அ லாப்ய தசையில் ஆர்த்தி பிறந்தார் பக்கல் அவனுடைய ரக்ஷகத்வ சாமர்த்யத்தையும்
அப்ராப்ய வ்யசனத்தோடே ஹார்த்தமான அனுபவம் நடைக்கையாலே ப்ரீதி அப்ரீதிகளை சமமாக உண்டாக்கும் படியையும்
ஆர்த்தி அதிசயத்தாலே அநு கரிக்கும் படி அவன் இவனுக்கு அஹம் பாவ விஷயமாம் படியையும்
இப்படி ஆர்த்தி பிறந்தால் அகிஞ்சனனார்க்கு தன் உபாய பாவத்தை பிரகாசிக்கும் படியையும்
போக ஆகாங்ஷை யுடையார்க்கு அவ்வுபாயத்தில் பிரதிபத்தி விசேஷ கரத்வத்தையும்
பரிபூர்ண அனுபவ ப்ராவண்யம் பிறந்தால் பிரதி பன்னமான உபாயத்தில் விசுவாச ஜனகத்வத்தையும்
அதிசயித சக்தியான உபாய விஷயத்தில் அபி நிவிஷ்டரானார்க்கு அந்த விசுவாசத்தை யாவது பிராப்தி அனுவர்த்திக்கும் படியையும்
அருளிச் செய்து நிர் உபாய பூதனுடைய யாதாம்யத்தை நிஷ்கார்ஷித்து அருளுகிறார் –
அதில் முதல் திருவாய் மொழியில்
உபாய பூதனான ஈஸ்வரனுடைய கிருபா பாரவஸ்யத்தை ப்ரதிபாதிப்பதாக
க்ருத்ரிம அநு கூல்யவான்கள் பக்கலிலும் சர்வ ஸூலபனான ஈஸ்வரனுடைய கிருபை அவ்யபிசரிதை என்னும் இடத்தையும்
அந்த கிருபா பாரவஸ்யத்தாலே அஹ்ருதய யுக்தியே பற்றாசாக அவன் அபி நிவிஷ்டனாய் மேல் விழும்படியையும்
ஆஸ்ரிதருடைய கின்னதாயையும் போக்கித் தன்னை அனுபவிக்கும் படியையும்
அனுபவ பிரதிபந்தக தோஷ நிவர்த்தகத்வத்தையும்
தோஷ ரூப சரீராதிகள் நிவர்த்தகனுக்கு விதேயம் என்னும் இடத்தையும்
தோஷ ரூப ப்ரக்ருதியோடே இருக்கச் செய்தேயும் அந்த தோஷம் நெஞ்சில் படாதபடி விலக்ஷண விக்ரஹத்தை அனுபவிப்பிக்கும் படியையும்
போக்தாவின் நிகர்ஷம் பாராதே ப்ரேமத்தை ஜெநிப்பித்து தானும் மேல் விழுந்து அனுபவிக்கும் என்னும் இடத்தையும்
அனுபவிக்கும் அளவில் சர்வவித்த பந்துவாய் புஜிப்பிக்கும் படியையும்
இப்பந்தத்தோடு அசாதாரண ஆகார சிஹ்ன விசிஷ்டனாய் அனுபவிப்பிக்கும் ஆகாரத்தையும்
அந்த ஆகாரத்தை அழிய மாறியும் ஆஸ்ரித அர்த்தமாக அநேக அவதாரங்களைப் பண்ணும் படியையும்
அனுசந்தித்து -இப்படி உபாய பூதனான ஈஸ்வரனுடைய கிருபா பாரவஸ்யத்தை அனுபவிக்கிறார் –
—————————————————————
முதல் பாட்டில் க்ருத்ரிமமான அநு கூல யுக்திகளைப் பண்ண சர்வ ஸூ லபனானவானுடைய தப்ப ஒண்ணாத
கிருபா வைபவத்தாலே அக்ருத்ரிம ப்ரேம பரர் பெறும் பேற்றைப் பெற்றேன் என்கிறார் –
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று–திருக் கையேடு பொருந்தின திருவாழியை யுடையவனாய் அச்சேர்த்தியோடே
நீல ரத்னம் போலே தர்ச நீயமான வடிவை எனக்கு அநு பாவ்யம் ஆக்கினவனே என்று என்று பாரமார்த்திக ப்ரேம யுக்தரைப் போலே பலகாலும்
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி–அந்த ப்ரீதி இன்றி இருக்கச் செய்தே எதிரியும் சத்ய புத்தி பண்ணும்படி க்ருத்ரிம யுக்தியை பண்ணி
யுக்தி விருத்தமாம் படி பாஹ்ய விஷயங்களில் ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றி ஸர்வதா சஞ்சரித்து வைத்து
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?–பாரமார்த்திக ப்ரேம யுக்தர் பெற்ற பேற்றை பெற்று விட்டேன் –
இதுக்கு ஹேதுவாய் பொய்யையும் மெய்யாக நீ பிரதிபண்ணும்படி பண்ணக் கடவதாய்
நீ அல்லேன் என்னிலும் தவிர ஒண்ணாத படி ப்ரவர்த்திப்பிக்கையாலே விதி சப்த வாஸ்யையான உன்னுடைய கிருபை
பல உன்முகி யாகிற இது யாராலே விலக்கலாம்- என் என்னில்
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–சர்வ ஸூலபனாயக் கொண்டு எனக்கு உபகரித்த நீ
உன் ஸ்வா தந்தர்யத்தால் சக்தன் என்னா கிருபை பலித்த பின்பு கால் வாங்கிப் போகலாமா ஐயோ வல்லையாகில் போய்க் காண்
ஐயோ என்றது அது காண்போம் என்கிற ஹர்ஷ யுக்தி / அறையோ என்றது அதடியான கர்வ யுக்தி
—————————————————-
அநந்தரம் அஹ்ருதயமான ப்ரேம யுக்தியே பற்றாசாக ச விபூதிகனான சர்வேஸ்வரன்
என் பக்கலிலே அபி நிவிஷ்டானானான் என்கிறார்
போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2-
போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!–மஹா காயங்களாய் அஸூராவிஷ்டங்களாய்க் கொண்டு நலிகைக்குத் தன்னில் தான்
செறிந்த மருந்துகளின் நடுவே போனவனே -அவற்றை நிரசித்து அவ்வருக்கு பட்ட போதை உஜ்ஜ்வல்யத்தாலே
தொளையாதே ரத்னம் போலே அவிகளை தேஜஸ்ஸை யுடையையாய்க் கொண்டு எனக்கு தர்ச நீயனானவனே
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்–தேன் போலே ரசிப்பிக்கும் வடிவில் ஸுகுமார்யத்தை யுடையவனே
விரோதி பலத்தை நினைத்து சத்தை அழிந்த என்னை உஜ்ஜீவிப்பிக்கும் அம்ருதமானவனே என்று என்று தனித் தனியே
பாரமார்த்திக ப்ரேமத்தாலே சொல்லுவது சில பாசுரத்தை பாவித்துப் பலகாலும் சொல்ல
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்–எனக்கு ஸ்வாமியான அவன் தான் செய்தபடியாகில் என் அபிமானத்துக்குள்ளே
ஆம்படியாய் விட்டான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–ஆகாசம் பூமி முதலான பூத பஞ்சகங்களும் தத் கார்யமான லீலா விபூதியும்
அபரிச்சின்ன மஹாத்ம்யத்தை யுடைய நித்ய விபூதியும் எல்லாம் எனக்கு உள்ளே இருந்து நடத்தும்படி யாயிற்று
———————————–
அநந்தரம் சர்வஞ்ஞனான உன்னையும் வஞ்சிக்கும் நெஞ்சில் க்ருத்ரிம ஸ்வ பாவம் தீர்ந்து காணப் பெற்றேன்
இப்படி உபகாரகனான உன்னை ஒழிய அபாஸ்ரயம் உண்டோ என்கிறார் –
உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-
உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி–அந்தரக்கத்தங்கள் உன்னை ஒழிந்த பிராகிருத விஷயங்களாய்
நடக்க கண்டாது பரியாம்படி புறம்பே
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்-உதாரனானவனே -விலக்ஷண விக்ரஹ யுக்தனே என்று என்று
பலகாலும் சில மித்ய யுக்திகளைப் பண்ணி சர்வஞ்ஞனான உன்னையும் விப்ரலம்பிக்கும் படி
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்–க்ருத்ரிம ஸ்வ பாவமான நெஞ்சு தவிர்ந்து ஆனு கூல்ய
பாவனையே பற்றாசாக அங்கீ கரிக்கும் உன்னை அபரோக்ஷித்து அனுபவிக்கப் பெற்று அசத்கல்பனான நான் உஜ்ஜீவித்து விட்டேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –இப்படி என்னைத் திருத்துக்கைக்காக ஷீரார்ணவத்திலே
கண் வளர்ந்து அருளினவனே உன் கிருஷி பலித்த பின்பு நித்ய அவசர பிரதீஷனாய் நிரதிசய போக்யனான உன்னை விட்டு
நச்வரமாய் துராராதமான எத்தைக் கைக் கொள்ளுவேன் –
———————————
அநந்தரம் இந்த விப்ரலம்ப உக்த்யாதி மூலமான தோஷத்தைப் போக்கி அங்கீ கரிக்க வேணும் என்கிறார் –
என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4-
என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்–அநந்ய ப்ரயோஜனர் சொல்லுமா போலே பரம ப்ரயோஜன
பூதனான உன்னை விட்டு என்ன பிரயோஜனத்தைக் கொள்வேன் என்கிற பாசுரங்களை பலபடியாகச் சொல்லுவதும் செய்து
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து–அநாதி ஸித்தமான ஆத்மாவை அபகரித்த க்ருத்ரிமனான நான்
விஷயாந்தரங்களிலே போன நெஞ்சை வரவலித்து-அவற்றின் இழவாலே பிறக்கும் கண்ணநீரையும்
வாசனா நிவ்ருத்தியாலே மாற்றி அந்த நெஞ்சை
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்-நிரதிசய போக்யனான உன்னிடத்தில் நெருங்க வைத்து
என் ஆத்மாவை சம்சாரத்தில் நின்றும் விடுவிக்க மாட்டு கிறி லேன் -இதுக்கு ஹேதுவான
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –என்னுடைய அவித்யாதி தோஷத்தை போக்கி
அசக்தனான என்னை சோகித்தாரை மாஸூச என்னும் ஸ்ரீ கிருஷ்ணனே
உன் பக்கலிலே அழைத்துக் கொண்டு அருள வேணும்
——————————-
அநந்தரம் -கீழ் தோஷ ரூபமாகச் சொன்ன ப்ரக்ருதி யாதிகளில் பந்தித்தாய் நீ யன்றோ வென்று
நிவர்த்யம் அவனுக்கு விதேயமான படியை அருளிச் செய்கிறார் –
கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–5-1-5-
கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை–ஸ்ரீ கிருஷ்ணனாய் திருவவதரித்து மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று
உபாய உபதேசத்தை பண்ணி அருளி அபகரித்து ஆஸ்ரயித்தவர்களை நித்ய ஸூ ரிகளுக்கு தர்ச நீயமான விலக்ஷண விக்ரஹத்தை
அனுபவிப்பித்து நித்ய போக்யமான உன்னை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்–நீ தந்த ஞான முகத்தாலே கிட்டி இருக்கச் செய்தேயும்
போக அலாபத்தாலே கிட்டாதார் கணக்காணேன்
அதுக்கடி நிர் வரண மயனான ஆத்மாவோடும் ஸ்வதஸ் சம்பந்தம் அற்று ஹேய ப்ரத்ய நீகனான உன்னோடும் துவக்கற்று
இருவரையும் அகற்றுகைக்கு நடுவே புகுந்தது ஓர் உடம்பிலே சம்ஸர்க்கிப்பித்து
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்–பல வகையாய் காயிக பர்யந்தமாக அனுஷ்டித்தமான
கர்மங்களாகிற பிரபல பாசங்களாலே த்ருடமாம்படி துர்விவேசமாக கட்டி
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–ஆந்தர தோஷத்தை காண ஒண்ணாத படி நிரந்தரமாக சூழ்ந்து –
இக்கட்டு அவிழ்க்கைக்கு அசக்தனாய் அபிராப்தனான என்னை உனக்குப் புறம்பான விஷயபிரசுர சம்சாரத்திலே போர இட்டு வைத்தாய்
நீ நினைத்தால் விடுவிக்கலாம் என்று கருத்து –
————————————–
அநந்தரம் இத்தோஷத்தோடே இருக்கச் செய்தே அது நெஞ்சில் படாதபடி அவன் பிரகாசிப்பித்த
விலக்ஷண விக்ரஹத்தை அனுபவிக்கப் பெற்றேன் என்கிறார் –
புறமறக் கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே–5-1-6-
புறமறக் கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும்–புறம்பு ஒரு தலை தெரியாதபடி பந்தித்திக் கொண்டு
புண்ய பாப ரூபமான இருவகையை யுடைய பிரபலமான கர்மத்தினார் பீடிக்கைக்கு ஸ்த்தலமாய்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் தேவாதி க்ரம விசிஷ்ட சரீரத்தில் பஹு பிரகாரமான பிரவேசத்தை தவிரும்படியாக
நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்-தர்ச நீயமான வேஷத்தை உடைத்தாய் நாலு வகையாய்
சுற்றுடைத்தான திருத் தோள்களையும் சிவந்த திருப் பவளத்தையும் -சிவந்த தாமரை போன்ற திருக் கண்களையும்
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே–ரக்ஷண தர்மத்தில் உத்தியுக்தமான திருவாழியை யுடைத்தாகையாலே
பேர் அழகுடைய திருக் கையையும் யுடைத்தாய் ஸ்யாமளமான வடிவையுடைய சேஷியானவனை
கண்டு ஒழிந்தேன் -என் இலவு எல்லாம் தீர்க்கும்படி அபரோக்ஷித்து அனுபவித்து விட்டேன் –
ஆந்தரமான விக்ரஹ அனுபவ ப்ரீதி இனி சரீர சம்பந்தம் நமக்கு இல்லை என்கிற பிரதிபத்தியைப் பிறப்பித்தது என்று கருத்து –
—————————————————
அநந்தரம் தன் கிருபா அதிசயத்தாலே எத்தனையேனும் நிக்ருஷ்டருக்கும் ஸ்வ விஷயத்தில் ஆசையைப் பிறப்பித்துத்
தானும் விரும்பும் என்று ஸ்வ லாப முகத்தாலே அருளிச் செய்கிறார் –
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம்மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.–5-1-7-
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?–கையும் திருவாழியுமாய்-ஆஸ்ரிதரை அனுபவிப்பிக்கும்
மஹா உபகாரகனான நிருபாதிக ஸ்வாமியான அவன் அபரிச்சின்ன ஞானரான ஸூ ரிகளும்
அளவிட்டு அனுபவிக்க ஒண்ணாத படி ஏக நிலத்திலே நிற்கிறான்
யானோ இவ்விஷயத்தில் க்ருத்ரிம யுக்திகளை பண்ணும் நிக்ருஷ்டனான நான் எவ்வளவாய் இருப்பான் ஒருவன் -இப்படி இருக்க
கைம்மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே–உன் திருவடிகளிலே ஆராதனத்திலே உத்தியுக்தமான ஆனையினுடைய
ஜென்மாதி அபகர்ஷம் பாராதே க்லேசத்தை போக்கினவனே என்று கை தலையிலேயாம்படி பிரசித்தமாகக் கூப்பிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.–பாரமார்த்திக ப்ரேமத்தை யுடையேனாய் விட்டேன்
என் தண்மை பாராதே இப்படித் நிறுத்தின உபகாரகனானவனும் என் பக்கலிலே அபி நிவிஷ்டனானான் -ஆதலால்
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்–எத்தனையேனும் மஹா பாபிகளாய் இருப்பார்க்கும்
தப்ப ஒண்ணாத பகவத் கிருபா ரூப விதியானது பல உன்முகமாம் அளவில் பலித்தே விடும் கிடிகோள் –
————————————————-
அநந்தரம் உபய விபூதி நாதனான மேன்மையை யுடையவன் என் நெஞ்சில் வந்து புகுந்து
தன் ஸர்வவித பந்துத்வத்தையும் அனுபவிப்பியா நின்றான் என்கிறார் –
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8-
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்–சர்வ பிரகார உத்க்ருஷ்டரான ஸூ ரிகளும் இவ்விபூதியில்
பகவத் ஞான பிரேமாதிகளாலே உஜ்ஜ்வல ஸ்வ பாவரான பாகவதரும் அநந்ய ப்ரயோஜனத்வாதிகளாலே
ஒரு நீராகப் பொருந்தி அனுபவிக்கும் படியான
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்–சர்வாதிகாரனாவார் தம்முடைய மேன்மை நிற்கச் செய்தே இப்போது
என் பக்கலிலே அபிமுகராய் வந்து சர்வகாலமும் தனக்கு சேஷபூதனான என்னுடைய சம்பந்தமே பற்றாசாக நெஞ்சுக்குள்ளே ப்ரதிஷ்டிதரானார்-
இனி மேற்பட்டு ஒவ் பாதிக பந்துக்கள் போல் அன்றியே
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்–விலக்ஷணமான த்ருஷ்டிகளான ஸ்த்ரீகளும் –
அதி சயிதமான ஐஸ்வர்யமும் -குணாதிகரான புத்திரர்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–பிரியா ஹிதங்களால் மேற்பட்ட மாதா பிதாக்களும் அவரே ஆகி நிற்பர்
இவ்வோ விஷய சித்திகளால் பிறக்கும் ப்ரீதி தம்மை அனுபவித்துப் பிறக்கும்படி யாகா நின்றார் என்று கருத்து –
———————————————-
அநந்தரம் இப்படி ஸர்வவித பந்துவானவன் தன் அசாதாரண விக்ரஹத்தோடே கூட என்னோடே கலந்தான் -என்கிறார் –
ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–
ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்–துணை ஆவார் ஆர் என்று சொல்லி அலைகிற நீரையுடைத்தான கடலிலே அழுந்துகிற
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்-நாவாய் போலே -சம்சார சமுத்திர மத்யத்திலே நின்று
கரை ஏறிக் கொள்ள மாட்டாத நான் நடுங்க – அவ்விழவிலே
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்–திவ்ய ஸுந்தர்யாதிகளால் பூரணமான திவ்ய வடிவோடும்
அவ்வடிவுக்கு சோபாவஹமான திவ்ய ஆயுதங்களோடும் கூட -தேவு-அழகு -திவ்யமாய் -அப்ராக்ருதம் -என்றபடி
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–ஐயோ ஐயோ என்று கிருபை பண்ணி தன்னுடைமையான என்னுடனே கூடினான்-
கீழே விதி என்று சொல்லிப் போந்தத்தை இங்கே அருள் என்று வெளியாக்கினாராயிற்று –
———————————–
அநந்தரம் இப்படி அசாதாரண விக்ரஹ விசிஷ்டனானவன் தன்னுடைய சர்வ அவதாரங்களையும்
அனுபவிப்பித்துக் கொண்டு என் பக்கலிலே கலந்தான் என்கிறார் –
ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள்செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே.–5-1-10-
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்–மத்ஸ்யமுமாய்-கூர்மமுமாய் நரஸிம்ஹமுமாய் வாமனனும்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே.–காள மேகம் போலே ஸ்யாமளமான அசாதாரண விக்ரஹத்தை யுடையவன்
ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து–ஆனான் என்கிற அந்த யுக்தி மாத்ரமே பற்றாசாகக் கொண்டு -அதி ப்ரீதனாய் வந்து
தானே இன்னருள்செய்து என்னை முற்றவும் தானானான்– அபேஷா நிரபேஷமாகத் தானே நிரதிசய போக்யையான
கிருபையைப் பண்ணி என்னைப் பற்ற தான் சகல அவதார விசிஷ்டனாய்க் கொண்டு ஸம்ஸ்லேஷித்தான் –
அவ்வவதார வை லஷ்ணன்யங்களை அனுபவிப்பித்தான் என்று கருத்து –
———————————–
அநந்தரம் இத்திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லவர்கள் ஆவிர்பவித ஸ்வரூப குண சம்பத் விசிஷ்டராய்க் கொண்டு
ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளை ப்ராபிப்பார்கள் என்று பலத்தை அருளிச் செய்கிறார்
கார் வண்ணன் கண்ண பிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே.–5-1-11-
கார் வண்ணன் கண்ண பிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை–ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திரு வவதரித்த மஹா உபகாரகனாய்
ஆஸ்ரிதர்க்கு உபகரிக்கும் காள மேகம் போலே ஸ்ரமஹரமான திரு வடிவையும் தாமரை போலே பெருத்த திருக் கண்களையும் யுடையவனை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன–ஏர்களின் மிகுதியை யுடைத்தாய் ஸ்லாக்யமான கழனியை யுடைத்தான
திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்–சீரும் சந்தமும் யுடைத்தாய் அர்த்த ப்ரகாசகம் ஆகையாலே
நல்ல த்ராமிட ரூபமாய் இருக்கிற இவை ஆயிரம் திருவாய் மொழியிலும் இப்பத்தையும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே.–அம்ருத பானம் பண்ணுவாராய்ப் போலே சொல்ல வல்லவர்கள்
ஆவிர்ப்பூதமான ஸ்வரூப குண அபிவிருத்தியை யுடையராய்க் கொண்டு
அந்த ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளை ப்ராபிப்பார்கள்
ஆர் வண்ணத்தால் யுரைப்பார் என்று ஸ்வ சந்தத்தாலே உரைக்கும் அவர்களார் அவர்கள் அடிக் கீழ்ப் புகுவார்கள் என்றுமாம்
இது கலித்துறை
——————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply