எட்டாம் திருவாய் மொழியிலே
கீழ் இவர் ஆசைப்பட்டுக் கூப்பிட்ட படியில் வந்து முகம் காட்டக் காணாமையாலே -அவன் அநாதரித்தானாக நினைத்து
ஆஸ்ரித அநாஸ்ரித விஷயங்களில் அபீஹம்யத்வ அப்ரதிருஷ்யத் வத்தாலுண்டான உபாய பாவத்தையும்
கைங்கர்ய பிரதி சம்பந்தித்தவத்தால் வந்த உபேயத்வ பூர்த்தியையும்
உபாய கார்யமான அனுகூல சத்ரு நிரசனத்தையும்
அபிமத விரோதி நிரசனத்தையும்
அஸஹ்ய விரோதி நிரசனத்தையும்
அர்த்த உபதேசத்தால் அநந்யார்ஹம் ஆக்கும் அறிவுடைமையையும்
ஊத்துங்க விரோதி விதாரணத்தையும்
விரோதி சதா விநாஸகத்வத்தையும்
விரோதி சரீர விஹஸ்த தாகரணத்தையும்
அசேஷ விரோதி கண்டநத்தையும்
அனுசந்தித்து -இப்படி ஆஸ்ரித உபகாரகன் அநாதரித்த ஆத்மாத்மீயங்களாலே எனக்கு ஒரு கார்யம் இல்லை என்று
தமக்குப் பிறந்த அநாதர விசேஷத்தை நாயகனான ஈஸ்வரன் ஆதரியாத ஆத்மாத்மீயங்களை
அநாதரிக்கிற நாயகி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –
————————————————–
முதல் பாட்டில் -ஆஸ்ரிதர்க்கு அபாஸ்ரயமான சீலவத்தையையும்
அநாஸ்ரிதர்க்கு விநாசகமான ஆண் பிள்ளைத் தனத்தையுமுடைய உபாய பூதன் ஆதரியாத
அழகிய நிறத்தால் எனக்கு ஒரு கார்யம் இல்லை என்கிறாள் –
ஏறு ஆளும் இறையோனும், திசைமுகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குலமா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறைஇலமே.–4-8-1-
ஏறு ஆளும் இறையோனும், -ருஷப வாகனத்தை யுடையனாய் -நாட்டுக்கு ஈஸ்வரனாகத் தன்னை அபிமானித்து இருக்கும் ருத்ரனும்
திசைமுகனும், -பஹுமுகமாக ஸ்ருஷ்டியைப் பண்ணுகைக்கு யோக்யனான சதுர்முகனும்
ஈஸ்வர அபிமானிகளான இவர்களோடு ஓக்க
திருமகளும்,–தனக்கு நித்ய அநபாயினியான சம்பத்தாயுள்ள ஸ்ரீ மஹா லஷ்மியும்
கூறு ஆளும் -பிரதி நியாமாம் படி அனுபவித்துத் தங்களுக்கு இருப்பிடமாக அபிமானித்துக் கொண்டு போருமதாய்
தனி உடம்பன், -அத்விதீயமாம் படி அப்ராக்ருத வை லக்ஷண்யத்தை யுடைத்தான திரு மேனியை யுடையனாய்
ஆஸ்ரித விஷயத்தில் அபிமான தூஷிதர் என்றும் அந பாயினி -என்றும் வாசி வையாத சீலத்துக்கு மேலே அவர்கள் விரோதியைப் போக்கும் இடத்தில்
குலம் குலமா அசுரர்களை-திரள் திரளாக அஸூரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட–தூளி சேஷமாய்ப் போம்படி திரு உள்ளத்தால் அறுதியிட்டு ஆயுதம் எடுத்து வியாபரித்த
மாறாளன் கவராத மணிமாமை குறைஇலமே.–ஸாத்ரத்வ நிர்வாஹகானானவன் விரும்பாத ஒளியையுடைய நிறத்தால் நமக்கு ஒரு கார்யம் இல்லை
நிருமித்தல் -நிரூபித்தால் / மாறாளன் -எதிர்த்தலை யுடையவன் / கவர்தல் -விரும்புதல் /
மணி -என்று ஒளியைக் காட்டுகிறது / மாமை -நிறம்
குறைவிலம் என்றது இத்தால் கொள்ளுவதொரு பிரயோஜனம் யுண்டாய் அக்குறை கிடப்பதில்லை என்றபடி
இது எல்லாப் பாட்டிலும் ஒக்கும் –
——————————————————–
அநந்தரம் பிராட்டியோடே கூடின விக்ரஹ வைலக்ஷண்யத்தைக் காட்டி அடியிலே என்னை அடிமை கொண்ட
உபேய பூதன் ஆதரியாத நெஞ்சால் ஒரு கார்யம் இல்லை என்கிறாள்
மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–4-8-2-
மணி மாமை குறையில்லா –நித்ய ஸம்ஸ்லேஷத்தாலே நிரதிசய உஜ்ஜ்வல்யமான நிறத்துக்கு குறையற்று இருப்பாளாய்
இந்த ஆபிரூப்யத்துக்கு மேலே
மலர் மாதர் உறை மார்பன்–பூவில் பிறந்த ஆபீஜாதியத்தால் வந்த ஸுகுமார்யாதி குண விசிஷ்டையான
போக்யதையை யுடைய நாரீணாம் உத்தமையானவள் நிரந்தர வாசத்தைப் பண்ணுகிற திரு மார்பை யுடையனாய்
அணி மானத் தடைவரைத் தோள் –ஆபரண சோபிதமாய் -ஆயுதமாய் -ஸூ வ்ருத்தமாய்-மலையைக் கணையமாக
வகுத்தாற் போலே சிக்கென்ற தோள்களை யுடையனாய்
அடல் ஆழித் தடக்கையன்-விரோதி நிரசன சீலமான திருவாழியை யுடைத்தான பெரிய கையை யுடையவனாய்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட–கைங்கர்ய வ்ருத்திகளில் ஓர் அளவும் தப்பாதபடி அடியேனான
ஸ்வரூபத்தை யுடைய என்னை அதுக்கு ஈடாக அடிமை கொண்ட
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–நீல ரத்னம் போல் கறுத்த நிறத்தை யுடையனானவன் விரும்பாத
விதேயமான நெஞ்சால் ஒரு கார்யம் யுடையோம் அல்லோம்
அணி -ஆபரணம் / மானம் -அளவுடைமை / தடம் -சுற்றுடைமை / மாயன் -கரியவன் –
——————————————–
அநந்தரம் உபாய கார்யமான அநிஷ்ட நிவ்ருத்த்யாதிகளை மேல் முழுக்க ப்ரதிபாதிப்பதாக முதலிலே
அனுகூல சத்ருவான பூதநா நிரசனத்தைச் சொல்லி ஆஸ்ரித அர்த்தமாக நாக பர்யங்கத்தில் நின்றும் வந்த
ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பாத அடக்கத்தால் ஒரு கார்யம் இல்லை என்கிறாள் –
மடநெஞ்சால் குறையில்லா மகள் தாய்செய்து ஒருபேய்ச்சி
விடநஞ்ச முலைசுவைத்த மிகுஞானச் சிறுகுழவி
படநாகத்து அணைக்கிடந்த பருவரைத்தோட் பரம்புருடன்
நெடுமாயன் கவராத நிறையினால் குறையிலமே.–4-8-3-
மடநெஞ்சால் குறையில்லா –முலை யுண்கிற பிள்ளை பக்கலிலே ப்ரவணமான நெஞ்சால் குறைவற்று இருக்கிற
மகள் தாய்செய்து ஒருபேய்ச்சி–தாய் மகள் செய்து -யசோதை யாகிற தாய் மகளாக -தன்னைப் பண்ணி வந்தவளாய்
எதிர்த் தலையை நலிகைக்கு அத்விதீயையாய் இருக்கிற பேய்ச்சியுடைய
விடநஞ்ச முலைசுவைத்த மிகுஞானச் சிறுகுழவி–நாட்டில் விஷங்கள் அம்ருதம் என்னலாம் படி மிக்க விஷத்தை யுடைத்தான நச்சு முலையை
பசை அறச் சுவைத்த மிக்க ரஸ ஞானத்தை யுடைய முக்த சிசுவாய் -இப்படி வந்த விரோதியை நிரசிகைக்காக ஏலக் கோலி
படநாகத்து அணைக்கிடந்த -ஸ்வ ஸ்பர்சத்தாலே விரிந்த பணத்தையுடைய நாக பர்யங்கத்தில் கண் வளர்ந்தவனாய்
பருவரைத்தோட் பரம்புருடன்–பெரிய மலை போலே வளர்ந்த தோளை யுடையனாய் -பரம புருஷனாய்
நெடுமாயன் கவராத நிறையினால் குறையிலமே.–நிரவதிகமான ஆச்சர்ய குண சேஷ்டிதங்களையுடைய ஸ்ரீ கிருஷ்ணன்
விரும்பாத ஸ்த்ரீத்வ பூர்த்தியாலே என்ன கார்யம் உண்டு
நிறைவாவது -நெஞ்சு பிறர் அறியாமல் அடக்கும் நிரப்பம்
விட நஞ்சம் என்றது மீமிசை
பேய்ச்சி விட வென்று -அவள் நசிக்க என்றும் சொல்லுவர்
———————————————-
அநந்தரம் அபிமதையான நப்பின்னைப் பிராட்டியை புஜிக்கைக்காக ஆஸூரமான எருது ஏழு அடர்த்தவன்
விரும்பாத நிறத்தில் செவ்வியல் ஒரு பிரயோஜனம் இல்லை என்கிறாள்
நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த
கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4-
நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை–ஸ்த்ரீத்வ பூர்த்தியால் குறைவற்று இருப்பாளாய்
நீண்டு பணித்த தோளை யுடையளாய் ப்ராணய விஷயத்தில் பவ்யையான நப்பின்னை பிராட்டி முலையை அணைக்கைக்காக
நெடும் பணை -என்று நீண்ட மூங்கில் என்றுமாம்
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த-தன்னுடைய வியஸனசஹமான மிடுக்காலே
யுத்தோன்முகமான ருஷபங்கள் ஏழையும் அபிமதம் பெற்றோம் எண்டு உகந்தவராய் இவளைப் பெறுகைக்கு ஈடான
ஜாதி உசித விருத்தியாலே காட்டில் பழம் பறித்திட்ட
கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை-கறை நிரம்பி துவருட்டின உடைத் தோலையும் -பசுக் கறைக்கைக்கு
சாதனமான கடையாவையும் கழி கோலையும் கையிலே கொண்டு
துவர் உடுக்கை -துவரூட்டின உடைத் தோல் / கடையா -கறக்கும் மூங்கில் குழாய் / கழி கோல்-பசுக்கள் பாயாமல் வீசும் கோல்
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –அரையில் கட்டின சறை மணியை யுடையரானவர் விரும்பாத தளிர் போலே
செவ்விய நிறத்தால் நமக்கு ஒரு பிரயோஜனம் இல்லை –
சறை மணி -பசுக்கள் த்வனி கேட்டு வருகைக்குத் தன் அரையில் கட்டின மணி
சறையன் என்று உடம்பைப் பேணாதவன் என்றுமாம் / தளிர் என்று தளிர் போன்ற செவ்வியை நினைக்கிறது
———————————————-
அநந்தரம் ஸ்ரீ ஜனகராஜன் திருமகளுக்காக அஸஹ்ய அபராதியான ராவணனை அழியச் செய்த
சக்ரவர்த்தி திருமகன் விரும்பாத அறிவால் என்ன கார்யம் உண்டு என்கிறாள் –
தளிர் நிறத்தால் குறையில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.–4-8-5-
தளிர் நிறத்தால் குறையில்லாத் தனிச்சிறையில்
விளப்புற்ற–தளிர் போல் தர்ச நீயமாய் ஸூ குமாரமான நிறத்தால் பரிபூரணை யாய் –
ப்ரபை பிரபவான்களைப் பிரிக்குமா போலே பிரிக்கப்பட்டுத் தனியே ராக்ஷஸே மத்யத்திலே நிருத்தையாய்-
லோகம் அடைய ஒருத்தி சிறை இருந்து ரஷிக்கும் படியே என்று கொண்டாடும்படி ப்ரசித்தையாய்
கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த–கிளி போலே இனிய மொழியை யுடையளான பிராட்டி காரணமாக
அநீதியாலே பெரிய கிளர்த்தியை யுடையனான ராவணனுடைய சம்ருத்தமான நகரத்தை நெருப்புக்கு இரையாக்கினவனாய் –
மீண்டு வந்து முடி சூடி
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து–தேனை யுடைத்தாய் மலர்ந்த திருத் துழாய் மாலையால்
பரிமள உத்தரமான அபிஷேகத்தை யுடையனாய் கடல் சூழ்ந்த பூமியிலே
அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.–தண்ணளி விஞ்சும்படி எழுந்து அருளி இருந்தவன் விரும்பாத
அறிவால் ஒரு கார்யம் யுடையோம் அல்லோம்
களி–தேன் / அலங்கல் -மாலை /அளி-தண்ணளி /உபகாரகமாகவுமாம் –
—————————–
அநந்தரம் உபதேசத்தால் அர்த்தித்தவத்தாலும் தனக்கேயாக என்னைக் கொள்ளும்
சர்வஞ்ஞன் விரும்பாத ஒளியால் ஒரு கார்யம் இல்லை என்கிறாள் –
அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6-
அறிவினால் குறையில்லா -ஞானத்தில் அபேக்ஷை இல்லாமையால் குறைவு பட்டிராத
அகல் ஞாலத்தவர் அறிய,–விஸ்தீரணையான பூமியில் உள்ளார் அறியும்படி -சர்வ லோகமும் திரண்ட படைக்கு நடுவே
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,-கர்ம யோகம் முதலாக பிரபத்தி பர்யந்தமான சகல உபாயங்களையும்
வ்யக்தமாம்படி எடுத்து அருளிச் செய்த பரிபூர்ண ஞானவானான அத்விதீய ஸ்வ பாவனானவனாய்
குறிய மாண் உருவாகி, –மஹா மேருவை மஞ்சாடி யாக்கினால் போலே வாமனத்வத்தாலே ஆகர்ஷகமாய் –
அர்த்தித்வமே நிரூபகம் என்னலாம் படி ப்ரஹ்மசாரி வேஷத்தை யுடையனாய்
கொடுங் கோளால் நிலங்கொண்ட—அழகைக் காட்டி மாறாதபடி பண்ணி சிற்றடியைக் காட்டி இசைவித்து இப்படிக் கொடிதாக
வஞ்சித்த பரிக்ரஹத்தாலே பூமியைத தன்னதாக்கிக் கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–நல் விரகையுடைய சர்வேஸ்வரன் விரும்பாத கிளர்ந்த ஒளியால் என்ன பிரயோஜனம் உண்டு
ஒளி -லாவண்ய குணமான சமுதாய சோபை –
—————————————-
அநந்தரம் உத்துங்க விரோதியான ஹிரண்யனைப் பிளந்த நரசிம்மன் விரும்பாத வளையல் என்ன கார்யம் உண்டு -என்கிறாள் –
கிளர் ஒளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,
கிளர் ஒளிய இரணியனது அகல்மார்பம் கிழித்து உகந்த,
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன், மணி நீல
வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே.–4-8-7-
மணி நீல வளர் ஒளியான் –நீல ரத்னத்தின் ஒளி போலே அத்யுஜ்ஜ்வலமாய் அசாதாரணமான விக்ரஹ தேஜஸ் ஸை யுடையனாய் –
ஆஸ்ரித அர்த்தமாக அவ்வடிவழகை அழிய மாறி
கிளர் ஒளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,–அபிவ்ருத்தமான உஜ்ஜ்வல்யத்தால் பரிபூரணமான ஸிம்ஹ ரூபமாய்க்
கொண்டு சத்ரு நிரசனத்திலே உத்யோகித்து ஆவிர்ப்பவித்து
கிளர் ஒளிய இரணியனது அகல்மார்பம் கிழித்து உகந்த,–மிக்க தேஜஸ் ஸை யுடையனான ஹிரண்யனுடைய விஸ்தீர்ணமான
மார்பை அநாயாசேன கிழித்து ஆஸ்ரித விரோதி போனபடியாலே உகந்தவனாய் -இரை பெறாத பாம்பு போலே சீறுகையாலே
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன், –வளர்கிற ஜ்வாலையையுடைய அக்னி போலே இருக்கிற திரு வாழியையும்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் யுடையனானவன்
கவராத வரிவளையால் குறையிலமே.–ஆதரியாத வரியையுடைய வளையாலே என்ன பிரயோஜனம் உண்டு –
—————————————-
அநந்தரம் பூபார நிர்ஹரணார்த்தமாக துரியதனாதி விரோதி சதத்தையும் நிரசித்த நிரதிசய கீர்த்தியை
யுடையவன் விரும்பாத மேகலையால் என்ன கார்யம் உண்டு -என்கிறாள்
வரி வளையால் குறையில்லாப் பெரு முழக்கால் அடங்காரை
எரி அழலம் புக ஊதி இருநிலம் முன் துயர் தவிர்த்த
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்து ஏத்தும்
விரிபுகழான் கவராத மேகலையால் குறையிலமே.–4-8-8-
வரி வளையால் குறையில்லாப் பெரு முழக்கால் -முகத்தில் வரியையுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தாலுண்டான மஹா கோஷத்தாலே
அடங்காரை- அபவ்யாரான சத்ருக்களை
எரி அழலம் புக ஊதி –கிளர்ந்து எரிகிற பயாக்னியானது உள்ளே பிரவேசிக்கும்படியாக ஊதி
இருநிலம் முன் துயர் தவிர்த்த–மஹா பிருத்வியினுடைய பார க்லேசத்தை தவிர்த்தவனாய் -இவ்வுபகாரத்தாலே
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்து ஏத்தும்–தன்னோடு ஓக்க நினைருத்ரன் ப்ரஹ்மா தேவ நிர்வாஹகனான இந்திரன்
க்ருதஞ்ஞதா பரவசராய்க் கொண்டு வணங்கி ஸ்தோத்ரம் பண்ணும்படி
விரிபுகழான் கவராத மேகலையால் குறையிலமே.–-விஸ்தீர்ணமான புகழை யுடையவன் ஆதரியாத காஞ்சீ குணத்தால் என்ன பிரயோஜனம் உண்டு
மேகலை -பரிவட்டத்தின் மேல் காட்டும் காஞ்சி குணம்-./ பரிவட்டமாகவுமாம்
——————————————–
அநந்தரம் ஆஸ்ரித விரோதியான பாணனை விஹஸ்தனாக்கின ஸ்ரீ கிருஷ்ணன்
விரும்பாத சரிரத்தால் என்ன பிரயோஜனம் உண்டு -என்கிறாள்-
மேகலையால் குறையில்லா மெலிவுற்ற அகல்அல்குல
போகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து
நாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க
யோகுஅணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே.–4-8-9-
மேகலையால் குறையில்லா மெலிவுற்ற அகல்அல்குல–உடை அழகால் குறை இன்றியிலே அநிருத்த சம்ச்லேஷத்தால்
வந்த துவட்சியை உடைத்தாய் -விஸ்தீர்ணமான நிதம்ப வை லக்ஷண்யத்தை யுடையளாய்
போகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து–போக அனுகூல மான ஸ்த்ரீத்வத்தை உடையளான உஷைக்கு
பிதா என்கிற பிரதையை யுடையனாய் ஸுர்ய வீரயாதிகளால் குறைவற்ற பாணனுடைய யுத்த கான்டூதியை யுடைத்தாகச்
சொல்லப்பட்ட தோள்களை தின்ற இடம் சொறிந்தால் போலே துணித்து –
நாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க—அவதார கார்ய அநந்தரம் பழைய நாக பர்யந்தத்திலே சாய்ந்து
உறங்குவான் போலே சர்வ லோகமும் ஸ்வ ப்ராப்தியாகிற நன்மையில் ஒதுங்கும் படி
யோகுஅணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே.–உபாய சிந்தையைப் பண்ணுமவன் -விரும்பாத உடம்பால் என்ன
பிரயோஜனம் உண்டு -யோகு -உபாயம் –
——————————————
அநந்தரம் அசேஷ விரோதி நிவர்த்தகனான சர்வேஸ்வரன் விரும்பாத
ஆத்மாவால் என்ன பிரயோஜனம் உண்டு என்கிறாள்
உடம்பினால் குறையில்லா உயிர்பிரிந்த மலைத்துண்டம்
கிடந்தனபோல் துணிபலவா அசுரர்குழாம் துணித்துஉகந்த
தடம்புனல சடைமுடியன் தனிஒருகூ றமர்ந்துறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.–4-8-10-
உடம்பினால் குறையில்லா உயிர்பிரிந்த மலைத்துண்டம்–சரீர போஷணத்தா-இந்த்ரச்சின்னமாய் நிஷ் பிராணமான பர்வத கண்டங்கள்
கிடந்தனபோல் துணிபலவா அசுரர்குழாம் துணித்துஉகந்த-கிடந்தால் போலே நாநா கண்டமாம் படி துணித்து –
அத்தாலே ஜகத் விரோதி கழிந்தது என்று உகக்குமவனாய்
தடம்புனல சடைமுடியன் தனிஒருகூ றமர்ந்துறையும்–அதி விஸ்தீர்ண ஜலையான கங்கையைத் தரிக்கிற ஜடா மகுடத்தை
யுடையவனாகையாலே அதிசயித சக்திகனாக அபிமானித்து இருக்கிற ருத்ரன் தனக்கு ஆபாஸ்ரயமாகப் பற்றி
ஒரு பார்ஸ்வத்திலே நித்ய வாசம் பண்ணும்படியான
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.–திருமேனியை யுடையவனை விரும்பாத ஆத்மாவால் ஒரு பிரயோஜனம் யுடையோம் அல்லோம்
அவன் விரும்பாத ஆத்மீயங்களோபாதி ஆத்மாவையும் வேண்டேன் என்றபடி
———————————–
அநந்தரம் இத்திருவாய் மொழிக்கு பலமாக பகவத் சேஷத்வ பூர்வகமான பரமபத ப்ராப்தியை அருளிச் செய்கிறார் –
உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே.–4-8-11-
உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்–ஆத்மாக்களால் குறைவில்லாத ஸமஸ்த லோகங்களையும்
சங்கல்ப அந்தர்பூதமாம் படி ரஷிக்கும் பரத்வத்தை யுடையனாய் -ரஷ்ய ஏக தேசத்தில் அவதீர்ணனாய் -ஆஸ்ரிதர் உகந்த
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங் குருகூர்ச் சடகோபன்–தயிரையும் வெண்ணெயையும் அமுது செய்த ஸுலபயத்தை
யுடையவனைப் பற்ற மஹா அவகாசமான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாருடைய
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தால்–சபிதார்த்தங்களில் குற்றம் அற்ற சொல்லாய் இருக்கிற
இசையோடு கூடின சந்தர்ப்பமாய் இருக்கிற ஆயிரம் திருவாய்மொழிக்குள்ளும் இப்பத்தாலே
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே.–காழ்ப்பு ஏறும்படி அநாதி ஸித்தமான சம்சார சம்பந்தத்தை அறுத்து
பரமபதத்தை கிட்டப் பெறுவர்கள்
இது களி விருத்தம் -நாலடித் தாழிசையுமாம்
————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply