சாமான்யேன ஜகத்தை யுண்டும்- பிரதிகூலருடைய பிராணனையும் -அனுகூலர் ஸ்பர்சித்த
த்ரவ்யத்தையும் யுண்டும் -பர்யாப்த்தம் ஆயிற்று இல்லை என்கிறார் –
அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யத்தை அருளிச் செய்கிறார் –
மண்ணுண்டும் பேய்ச்சி முலை யுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி -கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடுஆற்றா மகன் ———91-
பதவுரை
வயிற்றினோடு ஆற்ற மகன்–வயிற்றைக் கொண்டு ஆறியிருக்க மாட்டாத (கண்ணனாகிற) பிள்ளையானவன்
மண் உண்டும்–(பிரளயத்தில்) உலகங்களை யெல்லாம் அமுது செய்தும்)
பேய்ச்சி–பூதனையினது
முலை–(நஞ்சு தீற்றின) முலையை
உண்டும்–அமுது செய்தும்
ஆற்றதாய்–த்ருப்தி பெறாதவனாய்
வெண்ணெய்–வெண்ணெயை
விழுங்க–(களவு செய்து) விழுங்கின வளவிலே
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டி
வெகுண்டு–கோபங்கொண்டு
கண்ணி கயிற்றினால்–பல முடிச்சுகளை யுடைய தாம்பினால்
கட்ட–உரைக்கக் கட்டிப் போட,
தான்–ஸர்வசந்தனான தான்
கட்டுண்டு இருந்தான்–(அதற்கொரு பரிஹாரம் செய்து கொள்ள மாட்டாமல்) கட்டுண்டிருந்தான்
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய்–
ஜகத்தை வயிற்றிலே வைத்தும் -பூதனை யுடைய பிராணனை யுண்டும்
இரண்டாலும் அபரியாப்தனாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி –
இவனுக்கு வெண்ணெய் களவு காண்கையிலே ஸ்நேஹம் போரும் இறே அவளுக்கு ரஷிக்கையிலும் –
வெண்ணெய் களவு போயிற்று என்ற மாத்திரத்திலே இவன் முகத்திலே பையாப்பையைக் கண்டு தாயார் சீறி –
கண்ணிக்-கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் வயிற்றினோடுஆற்றா மகன் —–
பல பிணை யுடைத்தான கயிற்றாலே அவள் கட்டுவதற்கு பரிஹாரம் இன்றிக்கே கட்டுண்டு இருந்தான்
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து–(8-3-5)-
நெய்யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள்ள நீ யுன் தாமரைக்கு கண்கள்
நீர் மல்கப் பையவே நிலையும்–5-10–3
முழுதும் வெண்ணெய் அளந்து தொட்டுண்ணும் முகிழ் இளம் சிறு தாமரைக் கையும் -7-8
வயிற்றினோடு ஆற்றா மகன் –
இதுக்கு பிள்ளை உறங்கா வல்லி தாசர் வயிற்றை வண்ணானுக்கு இட்டாலோ என்று பணித்தார் –
என் குற்றமே யென்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் ணுண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற் றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்
துன்புற்றன வெல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி யிட்டுச் சொல்லுகேன் மெய்யே–பெரியாழ்வார் -2-3-8-
வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள்
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக் கண்ண புரத் துறையும்
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி தயிர் உண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே-8-3-5-
பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள நீ யுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்
முகிழ் இளம் சிறு தாமரை கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு
நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட வசோதை
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே– 7-8-
—————————————————————————-
அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யத்தை அருளிச் செய்கிறார் –
அனுகூல பிரதிகூல விபாகமற பூமியில் உள்ளவர்களை திரு வயிற்றிலே வைத்து ரஷித்தும் –
பிரதிகூலையான பூதனையுடைய முலையை அவள் பிணமாய் விழும்படி அமுது செய்தும் –
இவற்றால் பர்யாப்தி பிறவாமல் அனுகூலர் கடைந்து சேர்த்து வைத்த
வெண்ணெயைக் களவிலே அமுது செய்ய –
பரிவுடையாளான யசோதை பிராட்டி ஸ்நேஹம் தோற்றச் சீறி
பல முடிச்சுகளை யுடைத்தான தாம்பாலே உரைக்கப் பட்ட ஸ்வ சங்கல்பத்தாலே சர்வரையும் கட்டுவது விடுவதாய் போரும்
சர்வ சக்தியான தான் கட்டுண்டு அதுக்கு ஒரு பிரதிகிரியை பண்ண மாட்டாதே இருந்தான்
வயிற்றைக் கொண்டு எங்கு புகுவோம் என்று பாடாற்ற மாட்டாத பிள்ளை –
————————————————————————————————————–
ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவனானவனை நெஞ்சே பூர்ணமாக நினை என்கிறார் —
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறை செய்தேன் நெஞ்சே நினை——-92-
பதவுரை
என் நெஞ்சே–எம் மனமே!
ஒருவற்கு மகன் அல்லாத–(கருமமடியாக) ஒருவனுக்கு மகனாகப் பிறக்கத் தகாத (ஸர்வ லோக பிதாவான)
மா மேனி–சிறந்த திருமேனியை யுடைய
மாயன்–ஆச்சர்ய பூதனாய்
மகன் ஆமவன்–(வஸுதேவர்க்குப்) பிள்ளையாகப் பிறந்தவனாய்
மகன் தன்–தனது மகனான பிரத்யும்நனுடைய
காதல் மகனை–இஷ்ட குமாரனான அநிருத்தாழ்வானை
சிறை செய்த–சிறையிலே வைத்த
வாணன்–பாணாஸுரனுடைய
தோள்–தோள்களாயிரத்தையும
செற்றான்–அறுத்தொழித்தவனான பெருமானுடைய
கழலே–திருவடிகளையே
நிறை செய்து–பூர்த்தியாக
நினை–சிந்தை செய்வாயாக
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்–
பிதா புத்ரேண பித்ருமான் -என்னும்படி இல்லாமையாலே சர்வேஸ்வரனுக்கு
அலாப்ய லாபம் இறே-புத்ர லாபம் —
தனக்கு இல்லாத ஒன்றிலே இறே ஸ்நேஹம் ஜனிப்பது
மகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்–சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே–நிறை செய்தேன் நெஞ்சே நினை—
புத்ரனைக் காட்டில் பவுத்ரன் பக்கல் ஸ்நேஹம் யுண்டு இறே —
ஸ்நிக்தனுமாய் பவ்த்ரனுமான அநிருத்த ஆழ்வானைச் சிறை செய்த சீற்றத்தால்
பாணனுடைய தோளைக் கழித்தவனுடைய திருவடிகளை –
நெஞ்சே அவன் பிரதிபந்தகங்களைப் போக்க -ஸ்நேஹித்து அனுபவி –
நேர் செறிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் செறிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் செறிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண தோள் கொண்ட வன்றே –7-4-8-
கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –
——————————————————————–
ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவனானவனை நெஞ்சே பூர்ணமாக நினை என்கிறார் —
கர்மம் அடியாக ஒருவனுக்குப் பிள்ளையாய் பிறக்குமவன் அன்றிக்கே –
(அகில காரணன் நிஷ் காரணன் அத்புத காரணன் இவன் ஒருவனே )சர்வ லோகத்துக்கும் பிதாவான பெருமையை யுடையனாய்
அப்ராக்ருதம் ஆகையால் பரம பூஜ்யமான திருமேனியை யுடையனாய் –
அத்யாச்சர்யமான ஞானாதி குணங்களை அமைத்துக் கொண்டு
ஸ்ரீ வாஸூதேவர்க்குப் பிள்ளையாய்ப் பிறந்த கிருஷ்ணன தன்னுடைய புத்ரனுக்குப் புத்ரனாய் -அத்தாலே மிகவும் ஸ்நிக்தனாய்
இருக்கிற அநிருத்த ஆழ்வானைச் சிறையிலே வைத்த பாணாசூரனுடைய செருக்கும்-
அதுக்கும் அடியான தோள்கள் ஆயிரத்தையும் அறுத்துப் பொகட்டவனுடைய திருவடிகளை –
எனக்கு விதேயமான நெஞ்சே பூர்ணமாக அனுசந்திக்கப் பார்–
———————————————————————————————————————–
(யுகங்கள் தோறும் ஆழ்வார்கள் அவதாரம் உண்டே
அவன் இவர்கள் நாவில் புகுந்து தன்னைப் பாடுவித்துக் கொள்கிறான்
அருளிச் செயல்களைக் கண்ட ரிஷிகள் முனிகள்
விளக்கு ஏற்றி -ப்ரகாசப்படுத்திக் காட்டி அருளுகிறார்)
(தாரக போஷக போக்யமாக –உபாய உபேயமாக அவனை பூர்ணமாக நினைக்க வேண்டுமே -)
இப்படி இருக்கிறவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்தில் அறிவார் ஒருவரும் இல்லை யானாலும்
நீ அவனை உன் ஹிருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் –
நினைத்து உலகிலார் தெளிவார் நீண்ட திருமால்
அனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல் -கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை
உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து —–93-
பதவுரை
நெஞ்சே–ஓமனமே!
நீண்ட–(முன்பு உலகங்களை அளப்பதற்காக) வளர்ந்து
திருமால்–ஸ்ரீய பதியானவனும்
நீண்ட திருமால் –அப்ரமேயமான பெருமை பொருந்திய திருமால் என்னவுமாம்.
கனைத்து உலவு வௌளத்து–கோஷித்துக் கொண்டு எங்கும் பரந்த பிரளய வெள்ளத்திலே
ஒர் பிள்ளை ஆய் –ஒப்பற்ற சிறு குழந்தையாய்
அனைத்து உலகும்–உலகங்களை யெல்லாம்
உள் ஒடுக்கி–திருவயிற்றினுள்ளே அடக்கி
ஆல் மேல்–ஆலந்தளிரின் மேலே
மெள்ள துயின்றானை–மெள்ள சயனித்துக் கொண்டவனுமான பெருமானை
உய்த்து–சரணாக அநுஸந்தித்து
உள்ளத்தே வை,–தியானிக்கக் கடவாய்-உள்ளத்தே வைத்தால் உஜ்ஜீவனம் அடையலாம் என்றுமாம் –
உலகில்–இவ்வுலகில்
நினைத்து–(அப் பெருமானை) அநுஸந்தித்து
ஆர் தெளிவார்–தெளிவு பெறுவார் ஆரேனு முண்டோ? (ஒருவருமில்லை)
(த்வன் நிர்மிதா -உனது சொத்து -இரந்தா கொள்ள வேண்டும் -அதிமானுஷ ஸ்தவம்
ஆழ்வார்கள் இவற்றைப் பாட -அதனால் பக்தி வளர -நீ செய்த செயல்கள் அன்றோ)
நினைத்து உலகிலார் தெளிவார் -அவனை அனுபவித்துத் தம் தாமுக்கு உரியராக வல்லார் யுண்டோ –
நீண்ட திருமால்-அனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல்
லோகத்தை எல்லாம் அளக்கைக்கு வளர்ந்து –
அளந்த லோகத்தை ஒரு வயிற்றிலே வைத்து ஒரு பவனாய் இருபத்தொரு ஆலிலையிலே
கனைத்துலவு-வெள்ளத்தோர் பிள்ளையாய்–
சப்தித்துப் பரந்து வளரா நின்றுள்ள வெள்ளத்திலே உளனான பிள்ளையாய்
மெள்ளத் துயின்றானை-உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து —–
வயிற்றிலே புக்க லோகம் தளராத படிக்கு ஈடாக மெள்ளக் கண் வளர்ந்தவனை —
உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து-
கொடு வருகை யாவது -அவன் புகுரப் புக்கால் விலக்காது ஒழிகை –
கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-உண்டு அளந்தது ஆழ்வார்கள் பலரும் ஒரே பாசுரத்தில்
பாலன் றனதுருவாய் யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-
பாலனா யேழுல குண்டு பரிவின்றி,
ஆலிலை யன்னவ சஞ்செய்யும் அண்ணலார்,
தாளினை மேலணி தண்ணந் துழாயென்றே
மாலுமால், வல்வினை யேன்மட வல்லியே.
ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-
———————————————————————–
இப்படி இருக்கிறவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்தில் அறிவார் ஒருவரும் இல்லை யானாலும்
நீ அவனை உன் ஹிருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் –
சர்வ பிரகாரத்தாலும் அபரிச்சேதயனான ஸ்ரீ யபதியாய் -(நீண்ட -அபரிச்சேத்யன் என்றும் உலக அலங்க ஓங்கியதுமாம் )
இப்படி இருந்து வைத்து -சகல லோகங்களையும் திரு வுதரத்திலே ஏக தேசத்திலே அடக்கி வைத்து
ஒரு பவனாய் இருப்பதோர் ஆலந்தளிரின் மேலே கோஷித்துக் கொண்டு
கண்ட இடம் எங்கும் தடையற சஞ்சரிக்கிற பிரளயத்தில்
அத்விதீயமான முக்த சிஸூ விக்ரஹத்தை யுடையனாய்க் கொண்டு
வயிற்றிலே புக்க பதார்த்தத்துக்கு ஓர் அலசு வராதபடி மெள்ள கண் வளர்ந்து அருளினவனை –
நமக்கு இவன் அல்லது தஞ்சம் இல்லை என்று
அனுசந்தித்து லோகத்தில் கலங்காமல் அறிய வல்லார் ஒருவரும் இல்லை –
ஆனாலும் நெஞ்சே இப்படி இருக்கிறவனைக் கொடு வந்து உன் ஹிருதயத்திலே வை –
அவன் புகுரப் புக்கால் விலக்காதே கிட்டி அநுஸந்தி -என்றபடி
அன்றிக்கே
நீண்ட திருமால் அனைத்து உலகும் உள்ளொடுக்கி என்றாய் –
லோகத்தை எல்லாம் அளக்கைக்காக வளர்ந்த ஸ்ரீ யபதியாய்
அளந்த லோகத்தைத் திரு வயிற்றிலே வைத்து ஆலின் மேலே மெள்ளத் துயின்றானை என்றுமாம் –
——————————————————————————————————–
இப்படி அவனை அநுஸந்தி என்று திரு உள்ளத்துக்கு தாம் அருளிச் செய்த அளவிலே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு
அவன் தம்முள்ளே புகுந்து தம் பக்கல் வியாமுக்தனான படியை அருளிச் செய்கிறார் –
உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி
வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் -மெத்தனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்
பொன்றாமல் மாயன் புகுந்து ———-94–
பதவுரை
உய்த்து உணர்வு என்னும்—சித்த உபாய -நிஷ்டை ஞானம்- உணர்வு-விவேக வுணர்ச்சி யாகிற
ஒளி கொள் விளக்கு–உஜ்வலமான தீபத்தை
ஏற்றி–ஏற்றி-விஸ்வாசம் முதலில் வேண்டுமே -இந்த விளக்கை ஏற்றிய பின்பு பேறு
அவனை நாடி வைத்து–அவ் வெம்பெருமானைத் தேடிப் பிடித்து
வலைப் படுத்தேன்–ஸ்வாதீனப் படுத்திக் கொண்டேன்
மாயன்–அப் பெருமான்
பொன்றாமை–குறைவின்றி
என் நெஞ்சத்து–என்னுடைய ஹ்ருதயத்திலே
புகுந்து–வந்து சேர்ந்து
மெத்தென–மெதுவாக
நின்றான்–(முதலில்) நின்றான்
இருந்தான்–(பிறகு) வீற்றிருந்தான்,
கிடந்தான்–(அதன் பிறகு) பள்ளி கொண்டருளினான்.
உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி–
உணர்வு ஆகிற –தைலவர்த்திகளால் (எண்ணெய் தீ இத்யாதிகளால் )யுண்டான அழுக்கு இன்றிக்கே-
திணுங்கின தேஜஸ்ஸை -ஒளி விளக்கு ஏற்றி –
உய்த்து – வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் –
கொடு வந்து வைத்து அநு சந்தித்து ஆனுகூல்யம் ஆகிற வலையிலே அகப்பட்டு
(கமலக் கண்ணன் என்னும் நெடும் கயிறு -அவன் வலை
அனுகூல்ய லேசம் -நம் வலை)
மெத்தனவே-நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்-பொன்றாமல் மாயன் புகுந்து —–
விச்சேதம் இன்றிக்கே என்னுடைய நெஞ்சிலே நிற்பது இருப்பது கிடப்பது ஆனான் –
பொன்றாமை -என்றது நான் நசியாமல் -என்னவுமாம்
ஹிருதயத்திலே ஸ்தியாதிகளுக்கு விச்சேதம் இன்றிக்கே என்றுமாம் –
——————
இப்படி அவனை அநுஸந்தி என்று திரு உள்ளத்துக்கு தாம் அருளிச் செய்த அளவிலே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு
அவன் தம்முள்ளே புகுந்து தம் பக்கல் வியாமுக்தனான படியை அருளிச் செய்கிறார் –
ஞானம் ஆகிற தைலவர்த்திகளால் யுண்டான அழுக்கு இன்றிக்கே செறிந்த ஒளியை யுடைத்தான விளக்கை ஏற்றி
அவனைக் கொண்டு வந்து வைத்து -தத் ஸ்வபாவங்களை ஆராய்ந்து அனுசந்தித்து –
ஆனு கூல்யம் ஆகிற வலையிலே தப்ப ஒண்ணாத படி சேர்த்துக் கொண்டேன் –
அநந்தரம் ஆச்சர்ய பூதனானவன் நான் நசித்துப் போகாத படியாக
என் ஹ்ருதயத்தில் வந்து புகுந்து மெள்ளக் கொண்டு கால் பாவி தரித்து நின்றான் –
புறம்பு போக்கு இல்லை என்று தோற்ற வாசனை பற்றுண்டாய் இருந்தான் –
பின்னை படுத்த படுக்கை கொட்டுப் படாமல் பள்ளி கொண்டு அருளினான்
பொன்றாமை என்று
ஹிருதயத்திலே ஸ்தியாதிகளுக்கு விச்சேதம் வாராத படி என்றுமாம் –
(மாயனாக இருப்பதால் புகுந்து கிடந்தான் -புகுந்து கிடந்ததால் மாயனானான் என்றுமாம்)
————————————————————————————————-
தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லுகிறார் –
தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லா நின்று கொண்டு –
நெஞ்சே இப்படி உபகாரகனானவன் திருவடிகளை வணங்கி வாழ்த்தப் பாராய் -என்கிறார் –
புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்
இகழ்ந்த இரணியனதாகம் -சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து ——95-
பதவுரை
அந்தி புகுந்து–ஸாயங்காலமானது வந்து சேர்ந்து
இலங்கும் பொழுதத்து–விளங்கும் ஸமயத்திலே
அரி ஆய்–நரஸிம்ஹ மூர்த்தியாய்த் திருவவதரித்து,
இகழ்ந்த இரணியனது ஆகம்–நிந்தித்துக் கொண்டிருந்த ஹிரண்யாஸுரனது சரீரத்தை
சுகிர்ந்து–பல கூறாக வகிர்ந்து
எங்கும் சிந்த–(ரத்தம்) எங்கும் சிந்தும்படியாக
பிளந்த–பிளந்தொழித்த
திருமால்–எம்பெருமானுடைய
திருஅடியே–திருவடிகளையே
என் நெஞ்சமே–எனது மனமே!
வந்தித்து வாழ்த்து–தலையார வணங்கி வாயார வாழ்த்து
(திருமால் திருவடியே-சேஷி ப்ராப்யம் -அறிந்து வணங்கி வாழ்த்த வேண்டுமே)
(சிந்தையினால் இகழ்ந்த -ஹிரண்யன் அன்றோ)
சந்த்யா புகுந்தது என்றும்
அரியுருவாய் சந்த்யா காலத்தில் புகுந்தான் என்றுமாம்
புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்-இகழ்ந்த இரணியனதாகம் —
ஹிரண்யன் வரம் கொள்ளாத ஸந்த்யையிலே
புகுந்து இலங்கும் என்றது –
ஸந்தையினுடைய பிரவேசத்தைச் சொல்லுகிறது –
அரியாய்-இகழ்ந்த இரணியனதாகம் —சுகிர்ந்தெங்கும்-சிந்தப் பிளந்த-
ஆஸ்ரித விரோதி யாகையாலே கொன்றது என்ற மாத்திரம் அன்றிக்கே சீற்றத்தின் உரம் இருந்த படி –
திருமால் திருவடியே–
ஆஸ்ரிதர் பக்கல் ஓரத்துக்கு அடி பிராட்டி அருகே இருக்கை -என்கிறது –
திருமால் திருவடியே வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து ——
வந்திகைக்கும் விஷயம் அவளோடு கூடினவன் போலே –
——————————————————————
தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லா நின்று கொண்டு –
நெஞ்சே இப்படி உபகாரகனானவன் திருவடிகளை வணங்கி வாழ்த்தப் பாராய் -என்கிறார் –
வந்து பிரவேசியா நிற்பதாய் செக்கர் வண்ணத்தால் வந்த ஒளியை யுடைத்தாய் –
அசூரர்க்குப் பலம் வர்த்தித்துச் செல்லக் கடவதான சந்த்யா சமயத்திலே –
அவன் வரத்துக்குள் அடங்காத நர சிம்ம ரூபியாய்க் கொண்டு
நிர் நிபனந்தனமாகத் தன்னையும் ப்ரஹ்லாதனையும் பஹு முகமாக நிந்தித்த
அஸஹ்ய அபசாரத்தை யுடையனான ஹிரண்யாசூரனுடைய வர பலாதிகளால் வளர்ந்த சரீரத்தை –
சீற்றத்தின் மிகுதியால் –
சின்னம் பின்னம் -என்கிறபடியே
பல கூறாக வகிர்ந்து
சர்வ பிரதேசத்திலும் சிதறி விழும்படியாகப் பிளந்து பொகட்ட ஸ்ரீயபதியானவனுடைய திருவடிகளை
என் கருத்திலே நடக்கும் நெஞ்சே -தலையால் வணங்கி வாயார மங்களா சாசனம் பண்ணு –
அந்தித்துப் பொழுதத்து இலங்கும் அரியாய்ப் புகுந்து என்றாய் –
சந்த்யா காலத்திலே ஒளியை யுடைத்தான நரசிம்ஹமமாய் புகுந்து என்றுமாம் –
திருமால் என்று
ஆஸ்ரித விஷயத்தில் ஓரத்துக்கு அடி அவ்ளோட்டைச் சேர்த்தி என்கை –
(அந்தியம் பொழுது அரியுருவாகி அரியை அழித்தவன் அன்றோ)
(உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-)
———————————————————————————————————-
நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் என்கிறது –
நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் -என்கிறார்
வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த
அடித் தாமரை மலர் மேல் மங்கை மணாளன்
அடித் தாமரை யாமலர் ———-96-
பதவுரை
கேழ்த்த அடி–பெருத்த தாளை யுடைய-அழகிய சிவந்த என்றுமாம்
தாமரை மலர் மேல்–தாமரைப் பூவிற் பிறந்த
மங்கை–பெரிய பிராட்டிக்கு
மணாளன்–வல்லபனான எம்பெருமானுடைய
அடி ஆம் தாமரை அலர்–திருவடிகளாகிற தாமரைப் பூக்களை
வானோர்–தேவர்
வாழ்த்திய வாயர் ஆய்–வாயால் வாழ்த்து கின்றவராய்க் கொண்டு
மணி மகுடம்–மணிகளழுத்தின மகுடத்தை
தாழ்த்தி–தாழ விட்டு
வணங்க–வணங்குவதனால்
தழும்பு ஆமே–(அத் திருவடிகள்) தழும்பேறிக் கிடக்கின்றனவே.
கேழ்ந்த-அடி–பெருத்த தாளை யுடைய
தாமரை மலர்மேல் மங்கை மணாளன்-அடித் தாமரை யாமலர் —
திருவடிகள் ஆகிற தாமரைப் பூக்கள்
அழகிய சிவந்த திருக்கைகளால் =கூசிப் பரிமாற வேண்டும் படியான ஸ்ரீ யபதியின் திருவடிகள்
வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்-தாழ்த்தி வணங்கத் தழும்பாமே —
வாயாலே வாழ்த்தி மணிகள் அழுத்தின கிரீடத்தை தாழ விட்டு வனக்குப்பதால் தழும்பு ஏறிக் கிடக்கின்றனவே –
வயிறு பிடிக்கிறார்
————————
நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் -என்கிறார்
பெருத்த தாளை யுடைய
தாமரைப் பூவின் மேல் வர்த்திக்கிற நித்ய யவ்வன பிராட்டியாருக்கு போக்தவாய்
அவளும் கூசிப் பரிமாற வேண்டும்படி மிருதுவான திருவடிகள்
ஏத்து கையே தொழிலாகக் கொண்ட நித்ய ஸூரிகள்
வணங்க
ரத்ன பிரசுருமான திரு அபிஷேகம் பொருந்திய திருமுடியின் ஸ்பர்சம் பொறாமல் சிவக்க
வானோர் ப்ரஹ்மாதிகள் என்றுமாம்
கேழ் பெருமைக்கும் நிறத்துக்கும் கொள்ளலாம்
—————————————————————————————————————–
இப்படி ஸ்ரீ யபதியாய் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெறும் அத்தனை
அல்லது ஸ்வ யத்னத்தால் ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது என்கிறார் –
அலரெடுத்த வுந்தியான் ஆங்கு எழிலாய
மலரெடுத்த மா மேனி மாயன் –அலரெடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான் ஆமோ இமை ——-97-
பதவுரை
அலர் எடுத்த உத்தியான்–தாமரைப் பூ ஓங்கி யிருக்கப் பெற்ற திருநாபியை யுடையவனும்
எழிலாய மலர் எடுத்த–அழகிய காயம் பூப் போன்ற
மா மேனி–பெரிய திருமேனியை உடையனுமான
மாயன்– எம்பெருமான்
அவர் எடுத்த வண்ணத் தான்–காஞ்சி மலர் போன்ற நிறத்தை யுடையனான இந்திரனென்ன
மா மலரான்–தாமரைப் பூவிற் பிறந்த பிரமனென்ன
வார் சடையான்–நீண்ட ஜடையை யுடையனான சிவனென்ன
என்ற இவர்கட்கு-ஆகிய இத் தேவர்கட்கு
இமை–சற்றேனும்
எண்ணத்தான் ஆமோ–நெஞ்சால் நினைக்கவுங் கூடியவனோ
அலரெடுத்த வுந்தியான் ஆங்கு எழிலாய-மலரெடுத்த மா மேனி மாயன் —
அலரைக் காட்டா நின்ற திரு நாபியை யுடையனாய்
எழிலை யுடைத்தாய் இருந்துள்ள மலர் காட்டா நின்ற திரு மேனியை யுடைய ஆச்சர்ய பூதன்
அலரெடுத்த-வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு-எண்ணத்தான் ஆமோ இமை –
இந்த்ராதிகளுக்கும் அவனை மநோ ரதிக்கத் தான் போமோ –
இமை -விசாரி –
சற்றுப் போது என்றுமாம்
——————————————————————-
இப்படி ஸ்ரீ யபதியாய் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெறும் அத்தனை
அல்லது ஸ்வ யத்னத்தால் ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது என்கிறார் –
சகல ஜகத் யுதபத்தி காரணமான தாமரைப் பூவை தோற்றுவியா நிற்கிற திரு நாபியை யுடையனாய் –
அழகை யுடைத்தான பூவை பிரகாசிப்பிக்கிற அதி ஸூ குமாரமான கறுத்த திருமேனியை யுடைய
ஆச்சர்ய பூதனான அவன் இடையாட்டத்தில் பூவைத் தெரிவிப்பிக்கிற நல்ல நிறத்தை யுடைய இந்திரன்
ஸ்லாக்யமான திரு நாபீ கமலத்தில் பிறந்த ப்ரஹ்மா -தாழ்ந்த ஜடையை யுடையனான ருத்ரன் என்று
பிரசித்தரான இவர்களுக்கு நெஞ்சால் தான் நினைக்கத் தான் போமோ
இது ஒக்குமோ ஒவ்வாதோ என்று விசாரித்துப் பார் –
சற்றுப் போது என்றுமாம்
அலர் எடுத்த உந்தியான் எழிலாய மலர் எடுத்த மா மேனி ஆயன் அங்கு –
அவன் இடையாட்டத்திலே -என்றுமாம் –
——————————————————————————————————–
தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற நம்முடைய விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துத் தருவான் அவனே என்கிறார் –
(பூதனை தொடக்கமாக கேசி பர்யந்தம் -விரோதி நிரஸனம்
இவன் வடிவம் கண்டு -ஜகத் அஸ்தமிக்கப் போகிறதோ என்று -நாரதர் பயந்தாரே
பருமனாலும் உயர்த்தியாலும் வேகத்தாலும்-மூன்று ஹிமாலயம் -ஆகாசம் -காற்று -மூன்று த்ருஷ்டாந்தங்கள்
இவற்றைக் கீழே தள்ளி -குதிரை -அதிசய யுக்தி -பொங்கும் பரிவால் இப்படிச் சொன்னவாறு
பகவானின் ஸ்வ பாவ யுக்தி –ஸர்வ வியாபகன் நம்மை ரக்ஷிக்கவே கண்ணனாய் திருவவதரித்தவன் என்றவாறும்-தொட்டாலே நிரஸனம் -)
இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும்
அமஞ் சூழ்ந்தற விளங்கித் தோன்றும் -நமஞ்சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —–98-
பதவுரை
இமம் சூழ் மலையும்–பனியாலே சூழப்பட்டிருகிற இமய மலையையும்
இரு விசும்பும்–பெரிய ஆகாயத்தையும்
காற்றும்–வாயுவையும்
அமம் சூழ்ந்து–(பருமனாலும் உயர்த்தியாலும் வேகத்தாலும்) திரஸ்கரித்து-இவை கண்ணனைச் சொல்லி -அப்படி விபுவானவன் என்றுமாம்
அற விளங்கி தோன்றும்–மிகவும் விளங்கிக் கண்ணெதிரே வந்து தோன்றின
துரகத்தை–குதிரை வடிவு கொண்டு வந்த கேசி யென்னுமசுரனை
தொட்டு–திருக் கையால் பற்றி
வாய் பிளந்தான்–(அவனது) வாயைக் கிழிந்துப் போட்ட பெருமான்
நம்மை–நம்மை
நமன் சூழ் நரகத்து நணுகாமல் கரப்பான்–யமனைத் தலைவனாகக் கொண்ட நரகத்திலே புகவொட்டாமல் ரக்ஷித்தருள்வன்
(நரகம் ஸம்ஸாரம் என்றுமாம் -நம் அம் சூழ் -நம்மால் அழகாக சூழ்ந்த நரகம் என்றுமாம்)
அமம் சூழ்ந்து -பருமன் உயர்த்தி வேகத்தாலும்-கீழ்ப் படுத்தி வியாபித்து –
துரகத்தை-குதிரை வடிவு கொண்டு வந்த கேசி என்னும் அசுரனை –
இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும்-அமஞ் சூழ்ந்தற விளங்கித் தோன்றும் துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு–
ஹிமவானிலும் வாயுவின் பக்கலிலும் அமைத்துப் பரந்து அற பிரகாசித்துத் தோன்றுகிற
துரகத்தைத் தொட்டு வாய் பிளந்தான்
நமஞ்சூழ்-நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்–துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —-
கேசியை ஆஸ்ரித விரோதி என்று கை தொட்டுப் பிளந்தவன்
நமனாலே சூழ்க்கப் பட்டு உள்ள நரகத்திலே நம்மைக் கிட்டாமல் காக்குமவன் –
————————————————————————–
தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற நம்முடைய விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துத் தருவான் அவனே என்கிறார் –
பனியால் சூழப் பட்டு இருக்கிற பர்வதமும் –
சர்வத்துக்கும் அவகாச பிரதமான பெரிய ஆகாசமும் -வாயுவும் –
சகல பதார்த்தங்களிலும் வியாபித்து நிற்குமவனாய் இருந்து வைத்துக்
கண் காண வந்து அவதரித்து –
ஒளி வரும் முழு நலம் -என்கிறபடியே
மிகவும் உஜ்ஜவலமான குணங்களை யுடையனாய்க் கொண்டு பிரகாசிக்குமவனாய் –
பத்தும் பத்தாக நம்மாலே சூழ்த்துக் கொள்ளப் பட்ட சம்சாரம் ஆகிற நரகத்திலே நம்மைக் கிட்டாதபடி ரக்ஷிக்குமவன் –
கேசியாகிற குதிரையைப் பிடித்து வாயைக் கிழித்துப் பொகட்ட கிருஷ்ணன் –
அன்றிக்கே எம வஸ்யத்தை தவிராத படியான சம்சாரத்தில் நம்மைக் கிட்டாத படி காப்பான் என்னவுமாம் –
அற விளங்கித் தோன்றும் துரகத்தை வாய் பிளந்தான் என்று குதிரைக்கு விசேஷணம் ஆகவுமாம்
அப்போது மிகவும் பிரகாசித்தது தோற்றுகிற குதிரை வாயைக் கிழித்துப் பொகட்டான் என்று பொருளாகக் கடவது –
ஆஸ்ரித விரோதிகளை போக்கும் ஸ்வ பாவனான எம்பெருமான் திருவடிகளே பரம ப்ராப்யம் என்கிறார் –
(சக்கரத்தான்–ஆபத்து போக்கி அருள
தாள் முதலே -ஸம்பத்து அருள-தாள் முதலே-வேறே ஒன்றை எதிர்பார்க்காமல் -சஹாயாந்தர அஸஹத்வம் –
நங்கட்குச் -அவனே உபாயம் உபேயம் என்று ஸ்வரூபம் உணர்ந்த நமக்கு
சார்வு–ஸூபஸாஸ்ரயம் -பாராயணம்
திண்ணிய கழல் -அவனும் அவளும் விட்டாலும் விடாமல் கைக் கொள்ளும் கழல்கள் –ஆழ்வார்கள் -ஆச்சார்யர்கள்)
தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான் அந் நான்று-குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு ——99-
பதவுரை
தொட்ட–ஏந்தின
படை எட்டும்–எட்டு திவ்யாயுதங்களாலும்
தோலாத–தோல்வி யடையாத–அபராஜிதா -தேசத்துக்கே பெயர் உண்டே
வென்றியான்–ஜய சீலனும்
அட்டபுய காத்தான்–கச்சித் திருவட்டபுயகரத் திருப்பதியிலுள்ளவனும்
அந்நான்று–முன்பொரு காலத்தில்
குட்டத்து–நீர்ப் பொய்கையிலே
கோள் முதலை துஞ்ச–மிடுக்குடைய முதலை முடியும்படியாக
குறித்து எறிந்த சக்கரத்தான்–இலக்குத் தப்பாமல் பிரயோகிக்கப்பட்ட திருவாழியை யுடைய பெருமானது
தாள் முதலே–பாத மூலமே-ஏவ காரம் -வேறே ஒன்றையும் எதிர்பார்க்காத உபாயம் உபேயம் -திண் கழல் சேரே
நங்கட்கு–ப்ராப்யமும் பிராப்பகமும் அவனே என்று ஆத்ம ஸ்வரூபம் உணர்ந்த -எங்களுக்கு
சார்வு–பரம ப்ராப்யம்-அபாஸ்ரயம் ப்ராப்யமும் பிராப்பகமும்
(சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார் மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-)
(ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||–ஸ்தோத்ர ரத்னம் -22- -ஆளவந்தார்)
தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்-அட்ட புயகரத்தான் அந்நான்று–
ஏதேனும் ஒரு ஆயுதத்தைத் தொட்டால்
அவ்வாயுதத்தால் எதிரிகளுக்கு தோலாதே-வெற்றியை யுடையனாய்
திரு அட்ட புயகரத்திலே நின்றவன் –
குட்டத்துக்-கோள் முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்-தாள் முதலே நங்கட்குச் சார்வு –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே என்னும் படியே
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவினவனுடைய திருவடிகளே நமக்கு அபாஸ்ரயம் –
(ஸூ ப்ரவ்ருத்தி ஸூ ப்ரயோஜன நிவ்ருத்தி இல்லாமல்)
(நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
ஆஸன பத்மத்திலே அழுத்தின திருவடிகளே சரணம்
முதலே -நிரபேஷ உபாயம் -உபேயமுமாம்)
(செம்பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழியோடு கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ வெண் மறுப்பொன்று பறித்து இருண்ட
அம்புதம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-3-)
பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணுறா வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே–44-
——————————————————————–
ஆஸ்ரித விரோதிகளை போக்கும் ஸ்வ பாவனான எம்பெருமான் திருவடிகளே பரம ப்ராப்யம் என்கிறார் –
எடுத்த திவ்யாயுதங்கள் எட்டாலும் போரிலே தோலாதே எதிரிகளை மூலமற மாய்த்து –
வெற்றியை யுடையனாய் இருக்கும் ஆண் பிள்ளையாய் –
இந்த வடிவோடும் மிடுக்கோடும் எட்டா நிலத்திலே இருக்கை யன்றிக்கே –
திரு அட்ட புயகரத்திலே சந்நிஹிதனாய் –
ஸ்ரீ கஜேந்த ஆழ்வான் ஆபன்னனான அத் தசையிலே மடுவில் முடிக்கும் ஸ்வ பாவமான
முதலையானது உருவழிந்து சிதிலமாம் படி –
அவ் வாபத்திலும் (ஸூ ரக்ஷண ஸ்வாந்வயம் ஆபத்து போனதே )கலங்காத ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பரிவாலே
இலக்குத் தப்பாத படி எறிந்த திரு வாழியை யுடையவனுடைய பாத மூலமே
ப்ராப்ய ருசி பரவசரான எங்களுக்கு பரம ப்ராப்யம் –
அன்றிக்கே ஸ்வ ரக்ஷணத்திலே அசக்தரான எங்களுக்கு
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்கிறபடியே
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவின சிவந்த திருவடிகளே
சஹாயாந்தர நிரபேஷமான உபாயம் என்னவுமாம் -(ஸஹாய அஸஹத்வம் உண்டே அவனுக்கு )
(மீனமர் பொய்கை நாண மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கராவதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-9-)
————————————————————————————————————
எம்பெருமான் அபாஸ்ரயமான பெரிய பிராட்டியார் திருவடிகளே
என்றும் புகலிடமாம் பற்றினார்க்கு என்றுமாம் –
(திருவில் உபக்ரமித்து திருவிலே உப ஸம்ஹாரம்
மிதுனமே உத்தேச்யம்
அவளுக்கு அவன் என்றும் சார்வு
நமக்கு இவளே என்றும் சார்வு)
(எம்பெருமானைப் பற்றுவது சார்வு-ஆழியான் -ரக்ஷிக்கவும் சிஷிக்கவும் எம்பெருமான்
பிராட்டியைப் பற்றுவது என்றுமே சார்வு
அபராதங்களைப் பார்க்காமல் -நித்ய அஞ்ஞான நிக்ரஹ –
ராவணனுக்கும் உபதேசம் -சரணம் என்று வாயாலே கூடச் சொல்லாத ராக்ஷஸிகளையும் ரஷித்த பிராட்டி
ரமஸ்ய கோஷ்ட்டியை லகுவாக்கிய பெருமை உண்டே)
சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-
பதவுரை
சக்கரத்தான்–திருவாழியைக் கையிலே உடையவனும்
தண் துழாய் தார் வாழ்–குளிர்ந்த திருத் துழாய் மாலை விளங்கப்பெற்ற
வரை மார்பன் தான்–மலை போன்ற திருமார்பை யுடையனுமான எம்பெருமானால்
முயங்கும்–ஸம்ச்லேஷிக்கப் படுகின்றவளாய்
கார் ஆர்ந்த வான்–மேகங்கள் செறிந்த ஆகாசத்திலே-மின்னல் நிலைத்து இருக்காதே -நித்ய அநபாயினி ஆகவே ஆர்ந்த விசேஷணம்
அமரும்–நிலைத்து நிற்கக் கூடியதான
மின்–மின்னல் போல
இமைக்கும்–விளங்குகின்றவளாய்
வண் தாமரை–அழகிய தாமரைப் பூப் போன்ற
நெடு–நீண்ட
கண்–திருக் கண்களை யுடையளாய்-அஸி தேக்ஷிணை
தேன் அமரும் பூமேல்–தேன் நிறைந்த தாமரைப் பூவில் வஸிப்பவளான
திரு–பெரிய பிராட்டியார்
நமக்கு என்றும் சார்வு–நமக்கு எப்போதும் சரணம்.
சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்–தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் —
ஆபத்துக்கு சர்வேஸ்வரன் –
ஆபத்து உள்ள போதும் எற்றைக்கும் நமக்கு அபாஸ்ரயம் பெரிய பிராட்டியார் –
ரக்ஷணத்துக்கு உபகரணமான திரு வாழியைக் கையிலே யுடையவனுமாய் –
போக உபகரணமான திரு வாழியைக் கையிலே யுடையவனுமாய்
போக உபகரணமான திருத் துழாயை யுடையவன் தானே -ஸம்ஸ்லேஷியா நின்றுள்ளவளான —
இதுக்கு உவமானம் மேலே –
காரார்ந்த-வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்-தேனமரும் பூ மேல் திரு —
மேகங்கள் செறிந்து இருந்துள்ள ஆகாசத்தில் அமர்ந்த மின்னைக் காட்டா நின்று உள்ளாளுமாய்-
ஆஸ்ரித ரக்ஷணத்திலே குளிர நோக்கா நின்ற திருக் கண்களை யுடையாளாய் –
தேன் செறிந்த பூவின் மேலே இருக்கும் திரு சார்வு நமக்கு என்றும் –
பெரிய பிராட்டியார் நமக்கு எல்லா காலத்துக்கும் அபாஸ்ரயம் –
(அவனை அழகாலே திருத்தும் நம்மையோ அருளாலே திருத்தும் அஸி தேக்ஷிணை)
——————————————————————-
எம்பெருமான் அபாஸ்ரயமான பெரிய பிராட்டியார் திருவடிகளே
என்றும் புகலிடமாம் பற்றினார்க்கு என்றுமாம் –
திரு வாழியைத் திருக் கையிலே யுடையனாய்
போக உபகரணமாய்
சர்வ ஐஸ்வர்ய ஸூ சகமான குளிர்ந்த திருத் துழாய் மலையானது செவ்வி பெற்றுத் தழைத்துச்
செல்லா நிற்கிற மலை போலே உறைத்து பரந்த திரு மார்வை யுடையனான
தான் அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு அநவரதம் சம்ஸ்லேஷிக்கும் படி இருக்குமவளாய் –
மேகங்கள் நிறைந்து இருந்துள்ள ஆகாசத்தில் பொருந்தின மின் போலே
கறுத்த திரு நிறத்துக்குப் பகைத் தொடையாக பிரகாசியா நிற்பாளாய் –
ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக் குளிர நோக்குகிற உதாரமான தாமரைப் பூ போலே இருக்கிற
அழகான நீண்ட திருக் கண்களை யுடையாளாய்
தேன் நிறைந்து இருந்துள்ள பூவின் மேலே எழுந்து அருளி இருக்கிற பெரிய பிராட்டியார் தன்னை ஒழிய
வேறு புகல் இன்றியே இருக்கிற நமக்கு
ஆபத்து உள்ள போதோடு
இல்லாத போதோடு வாசியற
சர்வ காலத்திலும் அபாஸ்ரயம் –
(ஆழியான்-விரோதி நிரஸனம் –திருத் துழாய் போக்யம் ஸ்ரீ யபதித்தவம் –ஸர்வேஸ்வரத்வ மூன்று அடையாளங்களையும் பாசுரம் காட்டுமே)
(பத்ம பிரிய பத்மாலய பத்ம வாஸிநி பத்ம லோசநே)
——————-
பாலேய் தமிழர்” (1.5.11)
இன்கவி பாடும் பரமகவிகள்” (7.9.6)
“செந்தமிழ் பாடுவார்”
“பலரடியார் முன்பருளிய” (7.10.5)
“செஞ்சொற் கவிகாள்” (10.7.1) –
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நல் தமிழால் நூல் செய்து நாட்டையுய்த்த –
பெற்றிமையோர் என்று முதலாழ்வார்கள் என்னும்
பெயரிவர்க்கு நின்றதுலகத்தே நிகழ்ந்து.
முதலாழ்வார்கள் பிரணவம் போல – எப்பொழுதும் தொடக்கமாகிற படியால்.
முதலாழ்வார்களே திராவிட வேதமாம் திவ்ய பிரபந்தத்திற்கு உயர்ந்த திராவிட மொழியில் (தமிழ்) அஸ்திவாரம்/ அடித்தளம் இட்டனர்.
————
திரு மயிலை கேஶவப் பெருமாள் கோயிலின் அருகில் உள்ள கிணற்றில் பேயாழ்வார் அவதரித்தார்.
இவரின் மறு பெயர்கள் மஹதாஹ்வயர் மற்றும் மயிலாபுராதிபர் ஆகியவை ஆகும்.
த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டம் ததா விஷ்ணும் ரமயா மயிலாதிபம்
கூபே ரக்தோத்பலே ஜாதம் மஹதாஹ்வயம் ஆஸ்ரயே–இவரது தனியன்:
திருக்கண்டேனென நூறுஞ் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்த வள்ளல் வாழியே
மருக் கமழும் மயிலை நகர் வாழ வந்தோன் வாழியே
மலர்கரிய நெய்தல் தனில் வந்துதித்தான் வாழியே
நெருங்கிடவே யிடை கழியில் நின்ற செல்வன் வாழியே
நேமி சங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திரு மழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணை யிப் பெரு நிலத்தில் வாழியே–இவரது வாழி திருநாமம்:
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply