ஸ்ரீ வைஷ்ணவ தினசரி -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

அபி கமனம் -அன்றாடம் நடக்க வேண்டிய கைங்கர்யங்கள் தடை இன்றி நடந்தேற பிரார்த்தித்து பிரபத்தி செய்தல்
உபாதானம் -பகவத் ஆராதனா திருத் துழாய் புஷ்பம் சேகரித்து ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகளில் ஈடுபடுதல் –
இஜ்யை-ஸ்ரீ பாஞ்ச ராத்ர சாஸ்திரத்திலும் ஆஹ்நிகங்களிலும் சொல்லிய முறைப்படி பகவத் திருவாராதனம் செய்தல்
ஸ்வாதாயம் -வேதாந்த பாகங்களைப் படித்து பரிசயம் செய்தல்
யோகம் -பகவத் திருவடிகளை த்யாநித்தல் -தான் நித்ரையில் எம்பெருமான் திருவடிகளில் தலையை வைத்து இருப்பதாக த்யானித்து சயனித்தல்
இந்த பஞ்ச கால கார்யங்களையும் பேர் அருளாளன் விஷயம் ஆக்கி
இரண்டு இரண்டு பாசுரங்களால் வெளியிட்டு அருளுகிறார் இந்த பிரபந்தத்தில் –

————————————

வரியிருள் அழி வழி மனம் வரும் உணர்வொடு
கரி கிரி மருவிய கரியபன் அடியிணை
பரிவோடு பரவும் நல் அடியவர் பழ வுரை
யரி யரி யரி யரி யரி யரி யரியே–1-

வரியிருள் அழி வழி மனம் வரும் உணர்வொடு-அஜ்ஞ்ஞானம் கழிந்து நல்ல ஞானத்துடன்
கரி கிரி மருவிய கரியபன் அடியிணைபரிவோடு பரவும் நல் அடியவர் பழ வுரை – வெகு காலமாய் அனுசந்திக்கும் முன்னோர் ஸ்ரீ ஸூ கதிகள்
யரி யரி யரி யரி யரி யரி யரியே–ஹரி என்பதே ஏழு தடவை அனுசந்திப்பது தொன்று தொட்டு வந்த முறையாகும் –

———————————————————————–

வினை வகை ஒழுகிய வெறி நிலை அடையவும்
நினைவுடை நிகழ் வெதிர் நிலை நலம் அணுகிட
மனமுரை கிரிசைகள் மகிழ் மறை நெறி கொடு
தனி முதல் அடியிணை யடைபவர் தமரே –2-

தமரே -பாகவதர்கள்
வினை வகை ஒழுகிய -+தம்முடைய கர்மங்களை அனுசரித்து அதுவரை நடந்த
வெறி நிலை அடையவும் -அஜ்ஞ்ஞான தசை முழுவைதயும்
நினைவுடை நிகழ் -நினைக்கும் படியான நிகழ் காலத்தில்
வெதிர் நிலை நலம் அணுகிட -வரும் காலத்தில் உண்டாகும் ஆனந்த அனுபவம் நெருங்கும் படி
மனமுரை கிரிசைகள் -மனம் வாக்கு தேஹம் ஆகியவற்றால்
மகிழ் மறை நெறி கொடு -மகிழ்வைத் தருகின்ற வேத மார்க்கத்தைக் கொண்டு
தனி முதல் அடியிணை யடைபவர் -ஒரே காரணமான பேர் அருளாளன் திருவடிகள் இரண்டையும் சரணம் அடைபவர் ஆவார்
இங்கனம் செய்தாலே அபிகமனம் எனப்படும் –

—————————————————————————————————

மலர் மகள் மருவிய மறுவுடை இறையவன்
மலரடி கருதிய மனமுடை யடியவர்
மலர் புனல் அமுதுடன் வகையான வடையவும்
மலர் மதி எமது அல என அறிபவரே –3–

தம்முடைய மலர்கின்ற ஞானத்தால் தமக்காக அல்ல எம்பெருமானுக்கே தகும் என்று அறியும் மனசை யுடைய பக்தர்கள் -என்றவாறு –

————————————————————————–

நறையுடை மலர்மகள் நலம் உற மருவிய
இறையவன் இனிது உற எணும் அவர்
அற நெறி இலன் எவன் அணுகிலும் அணுகிலர்
துறை அலது எனும் ஒரு துறை படுகிலரே –4-

பகவத் பக்தர்கள் நேர்மையற்ற ஒருவன் இடம் வஸ்துக்களை பெறாமல் -சாஸ்திரம் கூறிய வழியிலே
பகவத் ஆராதனைக்கு உரிய வஸ்துக்களை சேர்ப்பார் -உபாதானம் -இதுவே

————————————————————————————-

ஒளி மதி எனவொரு திருவுடன் உயர்பவன்
நளி மதி முக நகை நலம் நிலவு உகவுகள்
தெளி புனல் அமுது அன செழு மதி யடியவர்
குளி முதல் கிரிசைகள் குறைகிலர் வலவே–5-

செழு மதி யடியவர் -செழுமையான ஞானத்தை யுடைய பாகவதர்கள்
ஒளி மதி எனவொரு திருவுடன் உயர்பவன் நளி மதி முகம் -திரு முக மண்டலத்தின் கண்
நகை நலம் நிலவு உகவுகள் -புன்சிரிப்பான அழகிய நிலவினால் வெளியாகும் ஹர்ஷத்துக்கு காரணமான
தெளி புனல் அமுது அன -தெளிந்த தீர்த்தமும் -அடிசிலும் அது போன்ற நிவேதனம் செய்யப்படும் பிறவும்
குளி முதல் கிரிசைகள் குறைகிலர் வலவே-திருமஞ்சனம் முதலிய உபசாரங்களிலும் குறைவு படாது நடந்து கொள்வர் –
இஜ்யை-பற்றி அருளிச் செய்கிறார் –

——————————————————————————————-

வருவது ஓர் உறவு என வளர் இளவரசு என
மருவு நல் மகன் என வனமத கரி என
அருவிலை மணி என வடியவர் அடைபவர்
அருகணை இறைவனை அரு கணை யுடனே –6-

வடியவர் -பாகவதர்கள்
அருகணை இறைவனை-சமீபத்திலே ஸூ லாபமாய் எழுந்து அருளி யுள்ள எம்பெருமானை
வருவது ஓர் உறவு என -வீட்டுக்கு வந்த பந்து போலவும்
வளர் இளவரசு என -வ்ருத்தி அடைகின்ற இளவரசன் என்னும் படியும்
மருவு நல் மகன் என -அணைத்துக் கொள்ள சிறந்த புத்திரன் போலவும்
வனமத கரி என -வனத்தில் உள்ள மதயானை என்னும் படியும்
அருவிலை மணி என அடைபவர் -அருமையான விலை மதிப்புடைய ரத்னம் பெறற்கு அரிய என்னும் படியும் அனுசந்தித்து
அரு கணை யுடனே -திருவாராதனத்துக்கு வேண்டிய வஸ்துக்களுடன் சரணம் அடைபராவர்
இங்கனம் செய்வதே இஜ்யை எனப்படும் –

———————————————————————————————–

விரை கமழ் மலர்மகள் மிகவுறும் இறையவன்
குரை கழல் குறுகிய குளிர்மதி மதியொடு
வரை நிலை யடியவர் மறைகளின் மறை எணும்
உரை நிரை பரவும் உளம் அமுது உணவே –7-

வரை நிலை யடியவர்-மலை போன்ற கலங்காத நிலையுடைய பாகவதர்கள்
விரை கமழ் மலர்மகள் மிகவுறும் இறையவன் -பேர் அருளாளன் உடைய
குரை கழல் குறுகிய குளிர்மதி மதியொடு -சதங்கை ஒலிக்கும் திருவடிகளை நெருங்கியதும் குளிர்ந்த சந்தரனைப் போன்ற மனத்துடன்
மறைகளின் மறை எணும்-வேதங்களுக்குள் சிறந்த ரகஸ்யங்கள் எண்ணப் படுகின்ற
உரை நிரை-ரகஸ்ய த்ரயங்களின் வரிசையை
பரவும் உளம் அமுது உணவே -தங்கள் மனம் அமிருதத்தை அனுபவிக்க அனுசந்திப்பர்
ஸ்வாதாயம் -பற்றி அருளிச் செய்கிறார் இதிலும் மேலில் பாசுரத்திலும்

————————————————————————————————

துதிகளும் அறிவரு சுருதியின் இறுதியில்
இதயம் இது என முனி இறையவர் உரைகளும்
மதுர மனு உதவிய மறைகளும் அடியவர்
விதி வகை பரவுவர் மிக யுளம் எழவே –8-

அடியவர் -பாகவதர்கள்
மிக யுளம் எழவே-தங்கள் மனம் உத்சாகம் அடைய
துதிகளும் -சகஸ்ர ணாமாதி ஸ்தோத் ரங்களையும்
அறிவரு சுருதியின் இறுதியில் -அறிய அரிதான வேதாந்தத்தின்
இதயம் இது என முனி இறையவர் உரைகளும் -தாத்பர்யம் இது என்னும்படி உள்ள
மதுர மனு உதவிய மறைகளும் -இனிய ஆழ்வார்களின் அருளிச் செயல்களையும்
விதி வகை பரவுவர் -சாஸ்த்ரங்களில் கூறிய முறைப்படி அனுசந்தித்து பிரவசனம் செய்பவர் ஆவர் —

————————————————————————————

அறிவிலர் தலை மிசை யயனடி எழுதிய
பொறிவகை எழுவதோர் பொறி நலம் உகவலர்
உறுவதும் உடையதும் இது வென வருவது
நறு மலர் மகள் பதி நலம் உறு நினைவே –9-

அறிவிலர் தலை மிசை யயனடி எழுதிய -ஜ்ஞானம் இல்லாத ஜீவர்களின் தலையில் ஆதிகாலத்தில் ப்ரஹ்மா எழுதிய
பொறிவகை எழுவதோர் பொறி நலம் -எழுத்துக்களைத் தழுவி உண்டாகும் ஓர் இந்த்ரியங்களின் ஸூ கத்தை
உகவலர் -விரும்பாத பாகவதர்கள்
உறுவதும்-தம் ஸ்வரூபத்துக்கு பொருந்தியதும்
உடையதும்-தமக்கு உடைமையாகக் கொள்வதும்
இது வென வருவது -இந்த யோகமே என்று கூறும்படி தானே வந்து அருளுவது
நறு மலர் மகள் பதி நலம் உறு நினைவே-நன்மை பொருந்திய திருமால் பற்றிய த்யானமே –
-யோகம் பற்றி இதிலும் மேலில் பாட்டிலும் அருளிச் செய்கிறார் –

—————————————————————————-

பெருகிய நலம் நிலை பெருமையின் மிகு மயல்
உருகிய நிலை மனம் உயர் முகிழ் எழும் உடல்
சொருகிய விழி திகழ் சுடர் மதி புகும் இறை
கருவிய வுருதிகழ் கரி கிரி யரியே –10-

பெருகிய நலம் நிலை -மேன்மேலும் வளரும் பகவத் த்யானம் ஆகிய ஆனந்த நிலைமையில்
பெருமையின் மிகு மயல் -பெருமையால் மிகுந்து நிற்கும் பகவத் பக்தியினால்
உருகிய நிலை மனம் -உருகிய தன்மையை யடைய மனசும்
உயர் முகிழ் எழும் உடல் -மேலே அரும்பிய மயிர்க் கூச்சு எறிந்த தேஹமும்
சொருகிய விழி -உள்ளே செருகிய விழிகளுமாய்
திகழ் சுடர் மதி புகும் இறை -விளங்கும் பிரகாசமான ஜ்ஞானத்தில் புகுந்து நிற்கும் நாயகன் யாவன் என்னில்
கருவிய வுருதிகழ் கரி கிரி யரியே -கரிய வடிவத்தோடு பிரகாசிக்கும் அத்தி கிரிப் பெருமான் ஆகிய பேர் அருளாளனே –

————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading