ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –
கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –
———————————————————————————-
அமலன் அவியாத சுடர் அளவில்லா ஆரமுதம்
அமலவுருக் குணங்கள் அணி யாயுதங்கள் அடியவர்கள்
அமல வழியாத நகர் அழிந்து எழும் கா வுடனே எல்லாம்
கமலை யுடன் அரசாளும் கரிகிரி மேல் காவலனே –1–
அவியாத -மாறுபாடு இல்லாத
லீலா விபூதி விளையாட்டு சோலை -கா யுடனே –
அவன் ஸ்வரூபம் —ஸ்ரீயபதித்வம் -சத்யத்வம் -ஜ்ஞானத்வம் -அனந்தத்வம் -ஆனந்தத்வம் -அமலத்வம்
கமலை யுடன் அரசாளும்-ஸ்ரீயபதித்வம்–அவியாத – சத்யத்வம் -சுடர் -ஜ்ஞானத்வம்
அனந்தத்வம் -த்ரிவித பரிச்சேத ரஹிதன் -அளவில்லா ஆனந்தத்வம் -ஆரமுதம் -அமலத்வம் -அமலன்
சகல வஸ்துக்களும் அவன் சங்கல்பத்துக்குள் அடங்கினவை –
உபய விபூதியையும் பெரும் தேவிப் பிராட்டி உடன் அரசாள்கின்றான் என்றவாறு –
————————————————————————————————-
உள்ள பொருள் அனைத்துக்கும் உருவ நிலை கருமங்கள்
தெள் இசைவின் வசமாக்கித் திகழ்ந்து உயிராய் உறைகின்றாள்
நள் இருள் தீர்த்து அடியவர்க்கு நலம் கொடுக்கும் திருவுடனே
வள்ளல் அருளாளர் எனும் வாரண வெற்பு இறையவனே –2-
திருவுடனே வள்ளல் அருளாளர் எனும் வாரண வெற்பு இறையவனே –
உள்ள பொருள் அனைத்துக்கும்
உருவ நிலை கருமங்கள் –ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்தி
தெள் இசைவின் வசமாக்கித் -தெளிந்த சங்கல்ப்பத்தில் அடங்கியதாகச் செய்து
திகழ்ந்து உயிராய் உறைகின்றான் -பிரகாசித்து அந்தர்யாமியாய் நித்ய வாசம் செய்து அருளுபவனாய்
நள் இருள் தீர்த்து அடியவர்க்கு நலம் கொடுக்கும் -நெருங்கிய சம்சாரம் ஆகிய இருளைப் போக்கி
மோஷ ஆனந்தத்தை கொடுத்து அருளுபவன்
——————————————————————————————————-
பூத வுடல் புலன் கண் மனம் புல்லாவி புந்தி எனும்
யாதும் அலனே இளகி யான் எனும் இன் நுண் அறிவாய்ச்
சேதனனாய் அடிமையுமாய் உயிர்க்கு எல்லாம் திண் உயிராய்த்
தீதலின்றித் திகழும் சீர் அத்திகிரித் திருமாலே –3-
புல்லாவி – -அழிந்து போவதால் -அல்பமான பிராண வாயு
திருமால் உயிர்க்கு உயிராகத் திகழும் -என்று அந்வயம்
சரீரம் -இந்த்ரியங்கள் -மனம் -பிராண வாயுக்கள் -ஜ்ஞானம் -ஆகிய இவற்றைக் காட்டிலும் வேறுபட்ட ஜீவாத்மா
நான் என்றே தோற்றி -தனக்குத் தானே தோற்றி -அணுவாய் -ஜ்ஞான ஆனந்த ஸ்வரூபனாய் நின்று –
ஜ்ஞானத்தை குணமாகக் கொண்டு -சரீரங்கள் தோறும் வேறுபட்டு நின்று -எம்பெருமானுக்கே சேஷமாக இருப்பதையே
ஸ்வரூபமாகக் கொண்ட ஜீவாத்மாக்களுக்கும் அந்தர்யாமியாக நின்று பேர் அருளாளன் பிரகாசிக்கின்றான் -என்றவாறு –
———————————————————————————————————————
தானடைத்த குணம் கருவி தம் கிரிசை வழி ஒழுக்கி
ஊன் எடுத்து உண்டு உமிழ்ந்து உழலும் உயிர்க்கு எல்லாம் உயிராகிக்
கான் நடத்திக் கமலையுடன் கண்டு உகந்து விளையாடும்
தேன் எடுத்த சோலைகள் சூழ் திருவத்தியூரானே –4–
தானடைத்த -தான் இயற்கையாக ஆத்மாவுக்குக் கொடுத்து அருளிய
குணம் கருவி -குணங்கள் இந்த்ரியங்களையும்
தம் கிரிசை வழி ஒழுக்கி -தம் கர்மத்தை அனுசரித்து நடத்தி
ஊன் எடுத்து -சரீரத்தைப் பெற்று
உண்டு உமிழ்ந்து உழலும் உயிர்க்கு எல்லாம்-கர்ம பலன்களை அனுபவித்து -பின் தள்ளி -மறுபடியும் ஏற்று –
உழலும் ஆத்மாக்களுக்கு எல்லாம்
உயிராகிக் -அந்தர்யாமியாக நின்று
கான் நடத்திக்-சம்சாரம் ஆகிய காட்டிலே நடக்கச் செய்து -அனுபவிக்கச் செய்து
கமலையுடன் கண்டு உகந்து விளையாடும் தேன் எடுத்த சோலைகள் சூழ் திருவத்தியூரானே
ஜீவர்கள் கர்ம பலனை அனுபவித்தல் எம்பெருமானுக்கு லீலா ரசம் என்றவாறு –
——————————————————————————————–
உய்யும் உறவு இசையாதே ஒத்தவர்க்கே யடிமையுமாய்ப்
பொய்யுருவைத் தமக்கு ஏற்றிப் புலன் கொண்ட பயனே கொண்டு
ஐயுறவும் ஆர் இருளும் அல்வழியும் அடைந்தவர்க்கு
மெய்யருள் செய்திடும் திருமால் வேழ மலை மேயவனே –5–
வேழ மலை மேயவனே -திருமாலே –
உய்யும் உறவு இசையாதே -அவனுக்கே அற்ற சேஷத்வ சம்பந்தத்தை அறிந்து ஏற்றுக் கொள்ளாமல்
ஒத்தவர்க்கே யடிமையுமாய்ப் -தம்மைப் போலே கர்ம வச்யர்களுக்கு அடியவராக இருந்து
பொய்யுருவைத் தமக்கு ஏற்றி-அழியும் தன்மையான சரீரத்தின் தன்மையை ஏறிட்டுக் கொண்டு
புலன் கொண்ட பயனே கொண்டு -இந்த்ரியங்கள் பலனே தனக்கு என்று கொண்டு -தேகாத்ம அபிமானம் கொண்டு
ஐயுறவும் ஆர் இருளும் -சித்தாந்த விஷயங்களில் சங்கையும் பூரணமான அஜ்ஞ்ஞானத்தையும் கொண்டு –
அல்வழியும் அடைந்தவர்க்கு -அதனாலே தகாத வழியை அடைந்தவர்கட்கு
மெய்யருள் செய்திடும் -உபாயத்தின் மூலம் அழியாத கிருபை யாகிய மோஷத்தை தந்து அருளுவான் –
—————————————————————————————-
விதை முளையின் நியாயத்தால் அடியில்லா வினையடைவே
சதை யுடல நால் வகைக்கும் சரண் அளிப்பான் எனத் திகழ்ந்து
பதவி யறியாது பழம் பாழில் உழல்கின்றார்க்கும்
சிதைவில் அருள் தரும் திருமால் திருவத்தி நகரானே –6-
திருமால் திருவத்தி நகரானே-
விதை முளையின் நியாயத்தால் -பீஜாங்குர நியாயத்தால்
அடியில்லா வினையடைவே-அநாதியான கர்மங்களை அனுசரித்து
கர்மம் சரீர சுழலிலே அகப்பட்டு என்றவாறு -இரண்டுமே அநாதி –
சதை யுடல நால்வகைக்கும் -மாம்ச மயமான -தேவ மனுஷ்ய ஸ்தாவர ஜங்கம -நான்கு வகை சரீரம் பெற்ற ஜீவர்களுக்கும்
சரண் அளிப்பான் எனத் திகழ்ந்து -ரஷணத்தை அளிப்பான் என்று கூறும்படி நின்று பிரகாசித்து அருளி
பதவி யறியாது -சம்சார பந்தத்தை நீக்கும் வழியை அறியாமல்
பழம் பாழில் உழல்கின்றார்க்கும் -அநாதியான சம்சார மண்டலத்தில் துன்பப்படுமவர்க்கும்
சிதைவில் அருள் தரும் -குறைவற்ற கிருபையை செய்து அருளி சம்சார சம்பந்தத்தை நீக்கி அருளுவான்
————————————————————————————–
எம நியம ஆசனங்கள் இயலாவி புலனடக்கம்
தமது அறியும் தாரணைகள் தாரை அறா நினைவு ஒழுக்கம்
சமமுடைய சமாதி நலம் சாதிப்பார்க்கு இலக்காகும்
அமரர் தொழும் அத்திகிரி யம்புயத்தாள் ஆரமுதே –7-
அமரர் தொழும் அத்திகிரி யம்புயத்தாள் ஆரமுதே
எம நியம ஆசனங்கள் -யமம் நியமம் ஆசனம் ஆகியனவும்
இயலாவி புலனடக்கம் –இயலாவி அடக்கம் -சஞ்சரிக்கின்ற பிராண வாயுக்களை அடக்குவதாகிய பிராணாயாமமும்
புலன் அடக்கம் -இந்த்ரியங்களை அடக்கும் ப்ரத்யாஹாரமும்
தமது அறியும் தாரணைகள் -ஜீவர்கள் தம் மனத்தால் அறிகின்ற எம்பெருமான் திருமேனியை நினைத்தால் ஆகிய தாரணையும்
தாரை அறா நினைவு ஒழுக்கம் -இடைவிடாத நினைவின் தொடர்ச்சியாகிய த்யானமும்
சமமுடைய சமாதி நலம் -சமம் உடைய -மனத்தின் அடக்கம் ஆகியவற்றை அங்கமாக உடைத்தான
புலன் அடக்கம் -ஞான கர்ம இந்த்ரியங்கள் அடக்கம் -சமம் -மனச் அடக்கம் -இரண்டாலும் ப்ரத்யாஹாரம் -என்னும் அங்கம் கூறப்பட்டது
நலம் சமாதி -ஆனந்த ரூபமான பக்தி யோகத்தை
சாதிப்பார்க்கு இலக்காகும் -அனுஷ்டிப்பார்க்கு குறிப் பொருளாகி மோஷம் அளித்து அருளுவான்
————————————————————————————————-
புகல் உலகில் இல்லாது பொன்னருள் கண்டு உற்றவருக்கு
மகலகிலா வன்பர்க்கும் அன்றே தன்னருள் கொடுத்துப்
பகலதனால் பழம் கங்குல் விடிவிக்கும் பங்கயத்தாள்
அகலகிலேன் என்று உறையும் அத்திகிரி அருள் முகிலே –8-
பங்கயத்தாள் -அகலகிலேன் என்று உறையும் அத்திகிரி அருள் முகிலே
புகல் உலகில் இல்லாது
பொன்னருள் கண்டு -புருஷகார பிரபத்தியால் பெற்று
உற்றவருக்கு -தன்னைச் சரணம் அடைந்தவர்க்கும்
மகலகிலா வன்பர்க்கும்
அன்றே -அவர்கள் வேண்டிய காலத்திலேயே –
த்ருப்த பிரபத்தி -ஆர்த்த பிரபத்தி -இரண்டில் தாம்தாம் வேண்டிய காலத்திலேயே
தன்னருள் கொடுத்துப்
பகலதனால் -மோஷம் ஆகிற பகலால்
பழம் கங்குல் விடிவிக்கும் -அநாதியான சம்சாரம் ஆகிய காள ராத்ரியி நீக்கி பொழுது விடியச் செய்து அருளுவான் –
—————————————————————————————-
இரு விலங்கு விடுத்திருந்த சிறை விடுத்தோர் நாடியினால்
கரு நிலங்கள் கடக்கும் வழி காவலரால் கடத்துவித்துப்
பெரு நிலம் கண்டு உயிர் உணர்ந்து பிரியாமல் அருள் செய்யும்
உரு நலம் கொண்டு உறும் திருவோடு உயர் அத்திகிரியானே –9-
உரு நலம் கொண்டு -தனக்கு ஏற்ற திருமேனியையும் ஆனந்தத்தையும் கொண்டு
உறும் திருவோடு-தன்னுடன் பொருந்திய பிராட்டியுடன்
உயர் அத்திகிரியானே
இரு விலங்கு விடுத்து -உபாயம் அனுஷ்டித்த ஜீவனுக்கு புண்ய பாபங்கள் ஆகிய இரண்டு விலங்கையும் நீக்கி
இருந்த சிறை விடுத்து -இது வரை இருந்த சரீரம் ஆகிய சிறையினின்றும் விடுவித்து
தோர் நாடியினால் -அத்விதீயமான மூர்த்ன்ய நாடியினால்
கரு நிலங்கள் கடக்கும் வழி -கர்ப்ப வாசத்தைக் கொடுக்கும் ஸ்தானங்கள் ஆகிய லோகங்களை தாண்டிச் செல்லலும் அர்ச்சிராதி மார்க்கத்தை
காவலரால் கடத்துவித்துப் -ஆதிவாஹிகர்களால் தாண்டுவித்து
பெரு நிலம் கண்டு-பரமபதத்தைப் பார்த்து
உயிர் உணர்ந்து -தன் ஜீவ ஸ்வரூபத்தை உள்ளவாறு அறிந்து
பிரியாமல் அருள் செய்யும் -நச புனராவர்த்ததே -என்று தன்னை விட்டு பிரியாமல் இருக்கும் படி அருள் புரிவான் –
————————————————————————————
தந் திருமாதுடனே தாம் தனி யரசாய் யுறைகின்ற
வந்தமில் பேரின்பத்தில் அடியவரோடு எமைச் சேர்த்து
முந்தி இழந்தன வெல்லா முகிழ்க்கத் தந்து ஆட்கொள்ளும்
அந்தமிலா வருள் ஆழி யத்திகிரித் திருமாலே –10-
முந்தி இழந்தன வெல்லா முகிழ்க்கத் தந்து ஆட்கொள்ளும்
கர்ம சம்பந்தத்தால் முன்பு இழந்த கைங்கர்யங்களை எல்லாம் தோன்றுமாறு கொடுத்து எம்மை உஜ்ஜீவிக்கச் செய்து அருளுவார் –
———————————————————————————
அயன் பணியும் அத்திகிரி யருளாளர் அடியிணை மேல்
நயங்கள் செறி கச்சி நகர் நான்மறையோர் நல்லருளால்
பயன்கள் இவை யனைத்தும் எனப் பண்டு உரைத்தார் படி யுரைத்த
வியன்கலைகள் ஈரைந்தும் வேதியர்கட்கு இனியனவே –11–
அயன் பணியும் -ப்ரஹ்மாவானால் வணங்கப்பட்ட
அத்திகிரி யருளாளர் அடியிணை மேல்
நயங்கள் செறி -நல்ல பயன்கள் பொருந்திய
கச்சி நகர் நான்மறையோர் நல்லருளால்
பயன்கள் இவை யனைத்தும் என -இங்கே அருளிச் செய்த பாசுரங்கள் முழுதும் சகல பலன்களையும் இருக்க வல்லன என்னும் படி
வேறு பலன்களை விரும்பாத படி இவற்றையே பிரயோஜனமாக கொள்வர் -அநந்ய பிரயோஜனர் ஆவார்
ஒவ்வொரு பாசுரங்களிலும் பிராட்டி சம்பந்தம் அருளிச் செய்வதால் உபாயமும் உபேயமும் மிதுனமே என்றதாயிற்று
ஸ்வயம் பிரயோஜனம் இந்த பாசுரங்கள் என்றவாறு
பண்டு உரைத்தார் படி யுரைத்த -முன்னோர் மொழிந்த ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளின் படியே
வியன்கலைகள் ஈரைந்தும் வேதியர்கட்கு இனியனவே-அதிசயமான கலைகள் ஆகிய இந்தப் பத்துப் பாசுரங்களும்
வேதாந்த அர்த்தங்களை அறிந்த மகான்களுக்கு மகிழ்ச்சியைத் தருவனவாகும்
வேதாந்தார்த்தங்களை நன்கு உணர்ந்த மகான்களே இப்பாசுரங்களின் இனிமையை அறிய வல்லார்கள் என்றவாறு –
——————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply