பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -10-10-திருத்தாய் செம்போத்தே-

இத் திருமொழி பரகால நாயகி பாசுரமாகச் செல்கிறது –
செம்போத்து -காக்கை -குயில் கிளி -முதலிய பறவைகளை எம்பெருமான்
இங்கே வந்து சேரும்படியாக கூவ வேண்டிக் கொள்கிறாள் –

———————————————-

திருத்தாய் செம்போத்தே
திரு மா மகள் தன் கணவன்
மருத்தார் தொல் புகழ் மாதவனை வரத்
திருத்தாய் செம்போத்தே -10-10-1-

செம்போத்து பறவை வலமானால் நல்ல சகுனம் என்பர்
செம்போத்து வலம் வருதல் -காக்கை கூவுதல் -பல்லி கொட்டுதல் -இஷ்ட சித்திக்கு ஸூசகங்கள் –
இஷ்டங்களைப் பெறுவிப்பன வல்ல -பிரமித்து அருளிச் செய்கிறார்
மயர்வற மதி நலம் அருளப் பட்டாலும் -ப்ரமம் கர்ம நிபந்தனம் அன்று
பகவத் ப்ராவண்ய அதிசயத்தினால் விளைந்த அஜ்ஞ்ஞானம் அடிக் கழஞ்சு பெரும்
புருஷகாரம் செய்ய வல்ல பிராட்டி யுடன் இருக்க -ரஷகத்துக்கு தனி மாலை சாத்திக்கொண்டு –
ரஷித்து புகழ் படைத்து இருப்பவன் அன்றோ
மாதவன் -திருநாம க்ரஹணம்
ஆதாராதி சயத்தினால் முதல்  அடியும் ஈற்றடியும் பாசுரங்கள் தோறும் ஒன்றாய் இருக்கும்-

———————————–

கரையாய் காக்கைப் பிள்ளாய்
கருமா முகில் போல் நிறத்தன்
உரையார் தொல் புகழ் உத்தமனை வரக்
கரையாய் காக்கைப் பிள்ளாய் –10-10-2-

உரை  ஆர் தொல் புகழ் -சொற்களில் நிரம்பிய நித்ய கீர்த்தியை யுடையவன் –
ஸ்ரீ ராமாயணம் மகா பாரதம் போன்ற நூல்களில் நிரம்பிய திருப் புகழ்கள் பலவும் யுடையவன் காண்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரனா கருளக் கொடியானே -பெரியாழ்வார் -5-1-1-
காக்கை கத்தினால் இஷ்ட ஜனத்தின் வருகை நேரும் என்பர்
காக்காய் -என்னாமல் -காக்கைப் பிள்ளாய் -கௌரவ பேச்சு -பகவத் விஷயத்தில் உபகரிப்பாரை துதித்துச் சொல்ல  வேண்டுமே
தாபம் தீரும்படியான குளிர்ந்த வடிவு காண்
அதமன் -மத்யமன் -உத்தமன் -புருஷோத்தமன்
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய் நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு -திருவாய் -7-5-2-
தான் படாதன பட்டும் அடியாரை வாழ்விக்கும் புருஷோத்தமன் அன்றோ
காக்கை கத்தின மாத்ரத்திலே எம்பெருமான் பதறி ஓடி வருவான் -உத்தமனை வரக்
கரையாய் காக்கைப் பிள்ளாய் -கரைதல் -ஒலி செய்தல் –

———————————————

கூவாய் பூங்குயிலே
குளிர்மாரி தடுத்துகந்த
மாவாய் கீண்ட மணி வண்ணனை வரக்
கூவாய் பூங்குயிலே -10-10-3-

மன்னு பெரும் புகழ் மாதவன் -நாச்சியார் திரு மொழி
குயில் கூவினால் எம்பெருமான் கடுக வந்திடுவான் நினைப்பு போலும்
குயில் கூவின பின்பும் வாராது ஒழிந்தால் -பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் –
நல் வேங்கட நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி யுடையார் வந்தருள் செய்து கூடுவராயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே -நாச்சியார் -10-5-என்று
சீறிச் சொல்வதும் யுண்டே
கைக்கு எட்டின ஒரு மலையைத் தூக்கி ஆநிரைகளையும் கோவலரையும் ரஷித்தவன் அன்றோ
ஆஸ்ரித ரஷணத்தில்  அத்தனை கருத்துடையானை கூவவோ நீ இறாய்ப்பது
மா வாய் கீண்ட மா வாய் பிளந்த -அருளிச் செயல்களில் இத்தை குதிரை வடிவு கொண்ட கேசியினுடைய
வாயைக் கிழித்த என்றே அருளிச் செய்வர்
பகாசுரன் வாயைக் கிழித்த என்றும் சொல்லலாமாலும் முந்திய பொருளே கொள்ளக் கடவது-

——————————————————-

கொட்டாய் பல்லிக் குட்டி
குடமாடி உலகளந்த
மட்டார் பூங்குழல் மாதவனை வரக்
கொட்டாய் பல்லிக் குட்டி—10-10-4-

பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ யுண்டு பண்டு பண்டே -திருவிருத்தம்
பெண்களை வசப்படுத்துக் கொள்ள குடக் கூத்தாடினவன் அன்றோ அவன்
தானாகவே திருவடியை வைத்து உலகோரை சத்தை பெறுவிக்குமவன்  அன்றோ -நம்மை உபேஷிக்க மாட்டான் –
மாட்டார் பூங்குழல் -மா பெரிய பிராட்டிக்கும் மாதவனுக்கும் விசேஷணம்-

———————————————————

சொல்லாய் பைங்கிளியே
சுடராழி வலனுயர்த்த
மல்லார் தோள் வட வேங்கடவனை வரச்
சொல்லாய் பைங்கிளியே  —10-10-5-

விரோதிகளை இரு துண்டமாக்க பாங்கான திரு வாழி ஆழ்வானை வலத் திருக்கையிலே ஏந்தி யுள்ளான் காண்
அதுவும் மிகையாகும்படி திருத் தோள்களில் மிடுக்கை  யுடையவன்
என்னை அணைவதற்கு என்று பயணித்து திருமலையிலே நின்று அருள்கின்றான்
அன்னவனை பைங்கிளியே  இங்கே வரச் சொல்லாய்-

—————————————————-

கோழி கூவென்னுமால்
தோழி நான் என் செய்கேன்
ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்றுக்
கோழி கூவென்னுமால்  -10-10-6-

கோழி கூவென்னுமால்-ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்று -கோழி கூவென்னுமால் -தோழி நான் என் செய்கேன்-என்று அந்வயம்
கலவி செய்ய வரும் காலமாயிற்று -முதலில் சொல்லி
பல பல ஊழி களாயிடும் அன்றியோர் நாழிகையை பல பல கூறிட்ட கூறாயிடும் -திரு விருத்தம்
விஸ்லேஷ காலம் அநேக கல்பங்கள் -சம்ச்லேஷ காலம் அதி ஸ்வல்ப காலமாகுமே
சம்ஸ்லேஷம் நடந்து முடிந்ததாகக் கொண்டு அடுத்து தோழியிடம்   சொல்கிறாள் –
கிருஷ்ணன் கோழியை மடியிலே இட்டுக் கொண்டு வரும் போலே காணும் – என்று பட்டர் அருளிச் செய்தார் -என்று பிரசித்தம் –
ஆல்-மகிழ்ச்சியும் வருத்தமும் தோன்ற நின்ற இடைச் சொல் -முதலடியில் மகிழ்ச்சி– ஈற்றடியில் வருத்தம் –

——————————————————–

காமற்கு என் கடவேன்
கரு மா முகில் வண்ணற்கு அல்லால்
பூ மேல் ஐங்கணை  கோத்துப் புகுந்து எய்யக்
காமற்கு என் கடவேன் —10-10-7-

வயிற்றில் பிறந்த பிள்ளை வருத்தப் படுத்துவதற்கு என்ன பிராப்தி யுண்டு
காமன் தன் தாதை அன்றோ -இங்கே ஸ்பஷ்டமாக இல்லை என்றாலும்
காமன் தனக்கு முறை யல்லேன் –எனக்குத் தானும் மகன் சொல்லில் -என்பர் மேலே -11-3-7-
பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் -திருவாய் -5-8-4-
அவர் வாளா இருக்க இந்த சிறு பையல் ஏதுக்காக அதிக பிரசங்கம் பண்ணுகிறான்
ஐங்கணை-மதனன் பஞ்ச பாணமாவன-முல்லை யசோகு முழு நீலம் சூதப் பூ அல்லி முளரி யோடு ஐந்தென மொழிப-

—————————————————-

இங்கே போதுங்கொலோ
இனவேல் நெடுங்கண் களிப்பக்
கொங்கார் சோலைக் குடந்தை கிடந்த மால்
இங்கே போதுங்கொலோ –10-10-8-

ஸ்வாமி தானே வந்து யுடைமையைக் கைக் கொள்ள வேண்டும் அன்றோ
அடியான் ஸ்வாமி தேடி அவ்விடம் செல்லுதல்  இரண்டு தலைக்கும் அவத்யம் அன்றோ
தத் தஸ்ய சத்ருசம் பவேத் –
அது போலே -கொங்கார் சோலைக் குடந்தை கிடந்த மால்
இங்கே போதுங்கொலோ
ஏதுக்காக இங்கே வர வேணும் என்றால் -இன வேல் நெடும் கண் களிப்ப -என்கிறாள்
கண்ணாரக் காண்பதற்கு மேலே வேறு பிரயோஜனம் இல்லை என்று இருப்பார்கள் முந்துற முன்னம்
காணப் பெற்ற பின்பு அணைய வேணும் என்று இருப்பார்கள்
அணையவும் பெற்றால் இவ்விருப்பு  நித்யமாக இடையூறு இல்லாமல் செல்ல வேணும் என்று இருப்பார்கள் –
போதும்  -போதரும்-

——————————————-

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் –10-10-9-

கொங்கார் சோலைக்  குடைந்தை கிடந்த மால் இங்கே போதும் கொலோ -மநோ ரதித்த பரகால நாயகிக்கு
உரு வெளிப்பாட்டாலே காட்சி தந்து அருளினான் –
ஆழியும் சார்ங்கமும் ஏந்தி வந்து  சேவை  சாதித்து அருளினான்
அசாதாராண லஷணங்களை காணா நிற்கச் செய்தேயும் இன்னார் என்று அறுதியிடக் கூடாமல்
இருக்கிற தாயிற்று அத்தலையில் வைலஷண்யம்
பெருமையைப் பார்க்கும் இடத்தில் தேவன் என்னலாய் இருந்தது
எளிமையைப் பார்க்கும் இடத்தில் மனிதரில் ஒருவன் என்னலாய் இருந்தது
ஆகவே இன்னார் என்று அறியேன் -என்கிறாள்
அன்னே -வியப்புக் குறிப்பிடைச் சொல் -அடிகள் -ஸ்வாமி-

———————————————-

தொண்டீர் பாடுமினோ
சுரும்பார் பொழில் மங்கையர் கோன்
ஒண்டார் வேல் கலியன் ஒலி மாலைகள்
தொண்டீர் பாடுமினோ –10-10-10-

உண்டியே உடையே உகந்தொடும் இம் மண்டலத்தோருக்குள்-பகவத் குணங்களிலே ஈடுபட்டு தொண்டீர் -என்று
புகழ் பெற்று இருக்குமவர்களே
நீங்கள் உங்கள் ஸ்வரூபத்துக்குத் தகுதியாக  இத் திருமொழியைப் பாடித் திரிமின்
வேறு பலன் அருளிச் செய்யாமல் ஒழிந்தது இதனைப் பாடுகை தானே ஸ்வயம் பிரயோஜனம் -என்று காட்டுவதற்காக –

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading