பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -9-10-எங்கள் எம்மிறை யெம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர்-

திருப் பாண்டி நாட்டுக்கு திலகம் போன்று இருக்கும் திருக் கோஷ்டியூரை
மங்களா சானனம் பண்ணி அருளும் திருப்பதிகம்
கோஷ்டீபுரம் -ஹிரண்யாசுரனை முடிக்க தேவர்கள் கூடி ஆலோசிக்க ஏகாந்தமான ஸ்தலம்
பட்டர் இங்கே நெடு நாள் வாழ்ந்து அருளிய விசேஷமும் -எம்பெருமானாரும் கூரத் ஆழ்வானும்
பல முறை எழுந்து அருளி திருக் கோஷ்டியூர் நம்பி இடம் பெரு நிதி பெற்ற விசேஷங்களும் உண்டே –

————————————

எங்கள் எம்மிறை யெம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர்
தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்
பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் இலங்கொளி
செங்கமல மலரும் திருக் கோட்டியூரானே –9-10-1-

எங்கள் இறை -எம் இறை -என்னாமல்-எங்கள் எம் இறை -என்றது -எங்களுக்கே இறை -அசாதாரண ஸ்வாமி-
அகில ஜகத் ஸ்வாமி க்கு மேலே அஸ்மத்  ஸ்வாமி என்றாப் போலே
பர வாசுதேவன் -நித்ய முக்தர்கள் அனுபவத்துக்கு -வ்யூஹ நிலை ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்க –
ஸ்ரீ ராமகிருஷ்ணாதி அவதாரங்கள் அக்கால
குருடர்க்கு ஏற்பட்ட இடத்திலே விழி கண்ணார் புகுரலாமோ
பதியே பரவித் தொழும் தொண்டர் அனைவரையும் -எங்கள் –

எங்கள் எம் இறை -சொத்தை யுடையவன் -சேஷத்வத்திலே நிறுத்தி வைத்து அருளி –
எம்பிரான் -சொத்துக்கு ஆவன செய்யும் உபகாரகன் -கைங்கர்யம் கொண்டு அருளியும்-
அதற்கு இடையூறான  பிரதி பந்த்கங்களை போக்கி அருளுகையும் -அவிச்சின்ன கைங்கர்யம் கொள்ளுகையே உபகாரகம்
இப்படிச் செய்பவன் -அமரர்கள் அதிபதி -மீனுக்கு தண்ணீர் வார்ப்பது போலே அது ஒரு சிறப்போ –
எங்கள் எம் இறை எம்பிரானே இருப்பதுவே சிறப்பு என்றபடி
திரிகரண வ்ருத்திகளையும் தம் பக்கல் வைத்திருப்பார்களுக்கு
வட தடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -என்கிறபடியே
நித்ய வாசம் செய்து அருளுவான்
இங்கு அருவிப் பெருக்குகள் குதிரை தாவுமா போலே பிரவஹிக்கும் -பொங்கு தண்ணருவி புதம் செய்ய –
திருப் புல்லாணி திருப் பதிகத்திலும் -வெண் திரைப் புரவி என்னப் புதம் செய்ய –புதம் செய்ய -தாவிப் பாவுதல்
பொன்களே சிதற -அருவிப் பெருக்காலே  ரத்னங்கள் கொழித்து வருதலை சொன்னபடி
மேகம் பொன்களே சிந்த -என்னவுமாம் அம்புதம் -மேகம் -புதமிகு விசும்பில் -என்றால் போலே
சிதறு மிலங்கொளி -பாடமே பெரும்பான்மையாக -பொன்கள்  சிதறப் பெற்ற திருக் கோட்டியூர் –
எம்பெருமானார் ஆசை உடைற்கு எல்லாம் ஆரியர்காள் வம்மின்  என்று பொன்களை வழங்கிய ஸ்தலம் அன்றோ –

————————————————-

எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்குஇறை இன்னகைத் துவர்வாய் நிலமகள் தம்
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்
மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையோடும் அணைந்த மாருதம்
தெய்வ நாற வரும் திருக் கோட்டியூரானே –9-10-2-

எவ்வம் -துக்கம் –சம்சாரம் ஆகிய பெரிய வியாதியைத் தீர்த்து அருள தீர்ப்பதற்காக
திருமடந்தை  மண் மடந்தை இரு பாலும் திகழ நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான்
எருத்துக் கொடி யுடையானும் பிரமனும் இந்த்ரனும் மற்று ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு
மருந்து அறிவாரும் இல்லை -அத்விதீயன்
எமக்கு இறை யாகையாலே எவ்வ நோய் தவிர்ப்பான் -காரண கார்ய பாவம்
இன்னகைத் துவர்வாய் நிலமகள் தம் செவ்வி தோய வல்லான்-பிரபுவத்தை பரிஹசிப்பது தோற்ற புன்சிரிப்பு
ஒழிக்க ஒழியாத சம்பந்தம் உண்டே ஒரு சேதனனைப் பெற என்ன பாடு பட்டீர்
சர்வஜ்ஞ்ஞராய் இருந்து வைத்து நன்று செய்யப் பார்த்தீர் -ஈடுபட்டு மயங்கிப் போவான்
நிலமகள் செவ்வி தோய வல்ல்னாகையாலே-அதுவே ஹேதுவாக பெரிய பிராட்டியாருக்கு
இனியனாய் இருப்பன் -திரு மா மகட்கு இனியான்
மௌவல் -மல்லிகைக்கும் முல்லைக்கும் மாலதிக்கும் பெயர் –
மல்லிகை மௌவல் -மௌவலும் தளவும் கற்பு முல்லை -மாலதி மௌவல் ஆகும் என்ப –
அணைந்து -மணந்து -பாட பேதங்கள்-

——————————————

வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு
ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்
துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றை சந்தந முந்தி வந்தசை
தெள்ளு நீர் புறவில் திருக் கோட்டியூரானே —9-10-3-

கிருத யுகம் -சாத்விகர் -வெள்ளியான்
த்வாபர யுகம் -பசுமை -மணி நிற வண்ணன்
கலியுகம் -கரியான் -இயற்கையான வண்ணம்
ஒள்ளியான் -வைத்த கண் வாங்க ஒட்டாத தேஜஸ்வீ
சம்சார பிரளய ஆபத்தில் இருந்து எடுக்க வல்லவன்
சாமரக் கற்றை சந்தன வ்ருஷம் கொழித்துக் கொண்டு வருகிற மணி முத்தாறு அருகே விளங்கப் பெற்ற ஸ்தலம் –

————————————————

ஏறும் ஏறி  இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பிலோர்
கூறு தான் கொடுத்தான் குல மா மகட்கு இனியான்
நாறு செண்பக மல்லிகை மலர் புல்லியின் இளவண்டு நன்னறும்
தேறல் வாய் மடுக்கும் திருக் கோட்டியூரானே –9-10-4-

ஈஸ்வரோஹம் என்பாருக்கும் திருமேனியில் இடம் கொடுத்து அருளும் சீலவான்
வேதாத்மா விஹகேஸ்வர -இவனுக்கு -அட மாடே -என்னும் எருது அவனுக்கு
அருளார் திருச் சக்கரம் இவனுக்கு -கொலைத் தொழிலுக்கு ஏற்ற மழு அவனுக்கு
குலமா மகட்கு இனியான் -இப்படி சீலவானைப்   பெற்றோமே -போக்யதையை முற்றூட்டாக அனுபவிக்குமவன்
வண்டுகள் நறு மணம் மிக்க செண்பகப் பூக்களையும் மல்லிகை மலர்களையும் தழுவி
அவற்றால் வந்த வெப்பம் ஆற தேனிலே வாய் வைக்கும் இடம் –

—————————————————-

வங்க மா கடல் வண்ணன் மா மணி வண்ணன் விண்ணவர் கோன் மது மலர்
தொங்கல் நீண் முடியான் நெடியான் படி கடந்தான்
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகமீது உயர்ந்தேறி வானுயர்
திங்கள் தான் அணவும் திருக் கோட்டியூரானே —9-10-5-

கடல் போலவும் நீல மணி போலவும் உள்ள திரு மேனி நிறத்தை நித்ய சூரிகளுக்கு நித்ய போக்யமாகக் கொடுத்து அருளுபவன்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் –
திருத் துழாய் மாலை அணிந்த திரு அபிஷேகத்தை யுடையவன்
ஒப்பார் மிக்கார் இல்லாத சர்வாதிகன்
இந்தரனுக்கு உதவும் வ்யாஜ்யத்தாலே திருவடிகளாலே உலகம் அனைத்தும் தீண்டி  புனிதம் ஆக்கி அருளினவன்
ஓங்கின மாட மாளிகைகள் யுடைத்தான திருக் கோட்டியூர்
மாகம் -பரம்பின ஆகாசம்-

——————————————-

காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான்
நாவலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கு எனத்
தேவர் வந்து இறைஞ்சும் திருக் கோட்டியூரானே -9-10-6-

நானே ரஷகன் என்று அஹங்கரித்து இருந்த ராவணனை முடியும் படி பானன்களை பிரயோகித்து
அவனுடைய ஏ வலம் -பாண பிரயோக சாமர்த்தியத்தை தொலைத்து அருளிய பெருமாள்
என்னை ஆளுடை -அடிமை கொண்டு அருளினவன் -அவனுடைய வீரச் செயலாலே தோற்ப்பித்து ஆட்கொண்டான்
காவலன் -எம்பெருமானுக்கு விசேஷணம் ஆக்கவுமாம்
நாவலம் புவி மன்னர் உப்புக்கடல் -கருப்புக் கடல் -கள்ளுக்கடல் -நெய்க்கடல் -தயிர்க்கடல் -பாற் கடல் -நீர்க்கடல்
இவற்றால் சூழப் பட்ட தீவுகள் ஜம்பூத்வீபம் -ப்லஷத்வீபம்-சால்மலத்வீபம்-குசத்வீபம் -க்ரௌஞ்சத்வீபம்-சாகத்வீபம் -புஷ்கரத்வீபம் –
இவற்றில் ஜம்பூத்வீபம் -நடுவில் உள்ளது –

அதன் நடுவில் மேரு என்னும் பொன் மலை உள்ளது -அதனைச் சுற்றி உள்ள இளா வ்ருத வருஷத்தில்  
சிருஷ்டிக்கப் பட்டுள்ள நான்கு மலைகளைச் சுற்றி நான்கு திசையிலும் நான்கு மரங்கள் உள்ளன –
அவற்றில் ஒன்றாகிய நாவல் மரத்தால் இப்பெயர் -ஜம்பூ -நாவல்
மற்றைத் தீவுகள் கரும பலன் அனுபவிக்கவும் இது ஒன்றே கர்மம் அனுஷ்டிக்கவும் உண்டான சிறப்பும் உண்டே
இதில் நவம கண்டமான பாரத வருசத்துக்கே இந்த உரிமை –
இத் தீவினில் மானிடப் பிறவி அரிது -தவங்களைச் செய்து அரசர்களாக திருக் கோட்டியூரை வணங்குகிறார்கள்
இதைக் கண்ட இந்த்ராதி தேவர்களும்-இங்கே தேவ சந்நிதானம் உண்டு என்று அறிந்து – இறைஞ்சுகிறார்கள்
ஏ வளம் -நாமே அம்பு எய்ய வல்லோம் ஒப்பார் இல்லை -என்னும் மிடுக்கு –

———————————————

கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவன்று  மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் முல்லையின் மணமும் அளைந்து இளம்
தென்றல்  வந்து உலவும் திருக் கோட்டியூரானே –9-10-7-

அதி மானுஷ திவ்ய  சேஷ்டிதங்களாலே சிஷ்டர்களை வாழ்வித்து துஷ்டர்களை மாள்வித்து மண்ணின் பாரம்
நீக்குகையாலே நிலா மா மகட்கு இனியான்
அவனே இங்கு நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான்
தென்றல் நறு மணத்தை கொய்து கொண்டு வந்து உலவுகின்றதாம்
அழிவன்று-சரியான பாடம் -அழிவு -கெடுதல் /அன்று நேர்ந்த காலத்திலே-அழிவென்று -பாட பேதம் –

————————————————————–

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த அரிமாச் செகுத்து  அடியேனை ஆளுக
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்த் திருக் கோட்டியூரானே –9-10-8-

குருந்த மரத்தை ஒசித்து அழித்தவனும்-குவலயா பீடத்தை அழித்து  ஒழித்தவனும் -குதிரை வடிவால் வந்த கேசியை முடித்தவனும் –
அடிமை கொள்ளவே அயர்வரும் அமரர்கள் அதிபதியாக இருந்தும் இங்கே நித்ய சந்நிதி கொண்டு அருளும் தேவாதி தேவன்
இங்கே பலா வாழை மாம்பழங்கள் விழுந்து தேங்கும் தீர்த்தங்களால் புடை சூழப் பெற்ற ஸ்தலம்
ஆனை காய்ந்து -உபசார வழக்கு- கொன்று என்றவாறு-

—————————————————————

கோவையின் தமிழ் பாடுவார் குடமாடுவார் தட மா மலர் மிசை
மேவு நான் முகனில் விளங்கு புரி நூலர்
மேவு நான் மறை வாணரை வகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும்
தேவ தேவபிரான் திருக் கோட்டியூரானே–9-10-9-

கோவை இன் தமிழ் -ஒழுங்குடைத்தான இனிய தமிழ் பாசுரமாகிய இத் திரு மொழியை
இங்கு உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களின் சிறப்பை -பெரியாழ்வாரும்
நா அகாரியம் சொல்லாதவர் நாடொறும் விருந்தோம்புவார் தேவ கார்யம் செய்து
வேதம் பயின்று வாழ் திருக் கோட்டியூர் -என்றும்
குற்றம் இன்றிக் குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய் செற்றம் ஒன்றிலாத
வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர் -என்றும்
பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால் ஏதம் ஒன்றிலாத
வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர் -என்றும்
காசின் வாய்க் கரம் விறகிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு தேச வார்த்தை படைக்கும்
வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர் -என்றும்
ஸ்ரீ சௌம்ய நாராயணனைக் காட்டிலும் அவ்விடத்து பாகவதர்களின் வைபாவத்தையே
போரப் பொலிய கொண்டாடி அருளிச் செய்து இருக்கிறார்
தொண்டர்க்கு அமுதுண்ண சொன்மாலைகள் சொன்னேன் -போலே கோவை இன் தமிழ்
கோவை -கோக்கப் பட்ட மாலை -அதில் போலே பரம போக்யமான தமிழ் பாசுரம்-
குடமாடுவார் -செருக்காலே திருவாய்ப்பாடியில் படியாக குடக் கூத்தை யாடுவாராய் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடையர் கூத்து போலே ஆட –
வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் –என்றும்
செந்நெலார் வயல் சூழ் திருக் கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை -ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு
வேர் பற்று என்பதால் ஆடுவார்கள்
அன்றிக்கே உப லஷணம் செருக்குக்குப் போக்கு வீடாக செய்யும் செயல் -கோவை இன் தமிழ் பாடுதலும்
ப்ரீதிக்கு போக்குவீடாக மொய்ம்மாம் பூம் பொழில் பொய்கை -படியே சசம்ப்ரம ந்ருத்தம் பண்ணுவார்கள் என்றுமாம்
பரம வைதிகர்கள் -வாழும் ஸ்தலம் -என்றபடி –
மேவு நான் மறை வாணரை வகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும்
தன்னை உள்ளபடி பேச வல்ல வேதங்களுக்கு வியாச பதம் செலுத்த வல்லராய் 
பஞ்ச மகா யஞ்ஞம்  அங்கங்கள் ஆறும்  கை வந்து இருக்கிறவர்கள் என்றுமாம் –

——————————–

ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில்
சேல்கள் பாய்  கழனித் திருக் கோட்டியூரானை
நீல மா முகில் வண்ணனை நெடுமாலை யின் தமிழால் நினைந்த விந்
நாலும்  ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே –9-10-10-

ஆலும் மா வலவன் -ஆடல் மா குதிரை செலுத்துவதில் சமர்த்தர்
பரமபதமே வாசஸ் ஸ்தானம் -பலமாக அருளித் தலைக் கட்டுகிறார் -அவர்கள் வசிக்கும் இடமே பரமபதம் என்றுமாம்
ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் உரைக்க வல்லாருக்கு வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் -திருவாய் 5-3-11-
திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும்–புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன்  -60
திருக் கல்யாண குணங்களை நினைக்க அந்த அனுபவம் உள் அடங்காமல் வெளி வந்த பாடல் -என்றவாறு-

————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading