பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 2-9-சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்-

திரு பரமேஸ்வர விண்ணகரத்து எம்பெருமானை -ஸ்ரீ வைகுண்ட பெருமாள் -மங்களா சாசனம் செய்து அருளுகிறார்
பல்லவ ராஜன் பல திருப் பணிகள் செய்ததாக பிரபலம்
முன்னடிகள் பகவத் குண கீர்த்தனம் -பின்னடிகள் பல்லவராஜன் புகழ்ச்சி
என்நாவிலின்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் -திருவாய் -3-9-1-
இழியக் கருதி ஒரு மானிடம் பாடல் என்னாவதே -திருவாய் -3-9-3-
பகவத் விஷயத்திலே அபிமானம் பூண்டு கிஞ்சித் கரிக்கப் பெற்றார்களே என்னும் உவப்பினால் புகழ்ந்து பேசுகிறார்
மேலும் ஆறாம் பத்தில் திரு நறையூர் பதிகத்திலும் -அம்பரமும் பெரு நிலனும் -செங்கணான் கோச் சோழனைப் புகழ்ந்து பேசுவர் –
எம்பெருமானோடு எம்பெருமான் உகந்து அருளின நிலங்களோடு -அந்நிலங்களை அபிமானித்து இருக்கும் மனிசரோடே
வாசி அற எல்லாருமே ஆழ்வாருக்கு உத்தேச்யமாய்   இருக்கும் என்கை –

————————————————————

சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம் அதுவே–2-9-1-

சொல் -சப்த ராசிகள் -அந்தராத்மா -எம்பெருமான் அளவும் சொல்லி நிற்குமே -அபர்யவஸாநவ்ருத்தி-
வன்சொல்லாவது-அழியாமல் வலிதாய் இருக்கக் கூடிய சப்தம் -வேதம் –

யோகிகட்கு -ரசம் ஸ்பர்சம் சப்தம் கந்தம் ரூபம் போல்வன எம்பெருமானே –
த்வக்ச   த்ருச்ச நிபிபரசதி ஜிஹ்வா -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -24
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு -என்றும் பாடம் -அந்தர்யாமியான நாராயணன் என்றவாறு
தடம் சூழ்ந்த அழகாய கச்சி -பரமேஸ்வர விண்ணகரத்திலே   அன்வயிக்கும்
பல்லவர் கோன் திருக் கடல் மல்லையை படைவீடாகக் கொண்டு அரசாட்சி புரிந்தமை பற்றி மல்லையர் கோன் எனப் பட்டான்
கழல் பல்லவன் -பல்லவம் போன்ற பாதத்தை யுடையவன் -பல்லவம் -தளிர்

————————————————————–

கார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித்
தார் மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி
தேர் மன்னு தென்னவனை முனையில் செருவில் திரள் வாட்டிய திண சிலையோன்
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-2-

உந்திக் கமலத்தில் மன்னி இருக்கையாவது -இவற்றுக்கு எல்லாம் பிறப்பிடமாய் இருக்கை
உந்தித் தார் -தார் -புஷ்பம்
சகரவர்த்தி   திருமகன் யுடைய பராக்கிரமம் போலே  புகழ்ந்து பேசுகிறார்
பாண்டிய ராஜனுக்கும் இப் பல்லவ ராஜனுக்கும் பெரும் போர் விளைய அதில் இவ்வரசன் வெற்றி பெற்றான் என்பர்
தேர் வீரனான பாண்டியனை  -தேர் மன்னு தென்னவனை
அதிரதர் -தானாகவே இருந்து பல்லாயிரம் போர் செய்ய வல்லவர்
மகாரதர் -தானாகவே இருந்து பதினாறாயிரம் பேருடன் போர் செய்ய வல்லவர்
சமரதர் -ஒரு வீரரோடு தாமும் ஒருவராய் போர் செய்கை
அர்த்தரதர் -அப்படி போர் செய்து தமது தேர் முதலியவற்றை இழந்து போவார்
முனையில் செருவில் -செருகின்ற   வில்லை யுடையவர்
செருவில் முனையில் -போர் முகத்தில் என்றுமாம்
பாண்டியனுடைய வில்லை பங்கப் படுத்தின வில்லை யுடைய பல்லவ ராஜன் கிஞ்சித் கரித்த
திவ்ய தேசம் -தாமரைக் கண்ணன் இடம் என்றது ஆயிற்று-

——————————————————————-

உரந்தரு மெல்லணைப் பள்ளி கொண்டான் ஒரு கால் முன்னம் மா வுருவாய்க்கடலுள்
வரந்தரு மா மணி வண்ணனிடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல் நெடு வாயிலுகச் செருவில் முன நாள்
பரந்தவன் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே–2-9-3-

திருப் பாற் கடலிலே திரு வநந்த ஆழ்வான் மேலே சயனித்து அருளுபவனே –
பேர் அருளாளப் பெருமாளாய் வராத ராஜன் என்று திரு நாமம் பூண்டு சேவை சாதித்து அருளுகிறான் –
அவனே பரமேஸ்வர விண்ணகரிலே ஸ்ரீ வைகுண்ட நாதனாக சேவை சாதித்து அருளுகிறான்
உரம் தரு மெல்லணை -உரமாவது வலிவு -பிராட்டிமார் உடம் எம்பெருமான் வருத்தித்  துகைத்தால் வருத்தம் இன்றி
பொறுத்து இருக்க வல்ல வலிமை  யுடையவன்
வரம் தரு மா மணி வண்ணன்- என்பதால் இப்பாசுரத்தை இரட்டித்து ஓதுவார்
ஸ்ரீ ஹஸ்திகிரி பேர் அருளானை மங்களா சாசனம் செய்து அருளுவதால் –
மண்ணையில் இருந்த சத்ருக்களை இவ்வரசன் வேல் படையாலே மாண்டு ஒழிந்தனாராம்
உக -உகுதல் பொடியாய்ப் பேசுதல்-

—————————————————————–

அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரோடு வான் எரி கால் முதலா
உண்டவன் எந்தை பிரானது இடம் ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
விண்டவர் இண்டைக் குழாமுடனே விரைந்தார் இரியச் செருவில் முனிந்து
பண்டு ஒரு கால் வளைத்தான் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-4-

பிரளயத்தில் திரு வயிற்றிலே வைத்து நோக்கி அருளிய அவனே சம்சார பெரும் கடலில் இருந்து நம்மை நோக்கி
அருள இங்கே சந்நிதி பண்ணி விரும்பி நிற்கிறான்
விண்டவர் -சத்ருக்கள் -அவர்கள் தாம் மட்டும் இன்றி
இன்டைக் குழாம் உடனே இரிய -தங்களைச் சேர்ந்த கூட்டங்களும் சிதறி ஓடும்படி இப்பல்லவன் வில் வளைத்த மிடுக்கு –
செருவில் போர் செய்கின்ற வில்லை வளைத்தான்
சூழ்ந்து கொண்டான் -சிதறி ஓடும் படி ஆக்ரமித்தான் என்றுமாம் –

———————————————————-

தூம்புடைத் திண் கைவன்தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள்
பூம்புனல் பொய்கை புக்கனவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
தேம் பொழில் குன்றெயில்  தென்னவனைத் திசைப்பச் செருமேல் வியந்து அன்று சென்ற
பாம்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-5-

யானையினுடைய துதிக்கையிலே துளை உள்ளதனால் தூம்புடைத் திண் கை -எனப் பட்டது
களிற்றின் துயர் தீர்த்து -கையில் உள்ள தாமரைப் பூவை திருவடியிலே சாத்தப் பெற்றதே-

தேம் பொழில் -தேம் -ஈரம் -கள்-தித்திப்பு -தேன் -வாசனை –
பாம்புடை -பல்லவ ராஜன் நாகத்து லோகம் அளவும் சென்று வென்று வந்தவன் -என்பதால் நாகத்தை கொடியாய் கொண்டவன்
குரு வம்ச அரசன் துரியோதனன் -அரவு நீள் கொடியோன் -எனப்படுவன் –

———————————————————-

திண் படைக் கோளரியின் உருவாய்த் திறலோன் அகலம் செருவில் முன நாள்
புண் படப் போழ்ந்த பிரானது இடம் பொரு மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப விடை வெல் கொடி வேற் படை முன் உயர்த்த
பண்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே–2-9-6-

ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்திக்கு திரு உகிரே படை என்பதால் திண் படை -என்கிறார் –
விட வெல் கொடி -என்றும் -விடை வெல் கொடி -என்றும் -விறல் வெல் கொடி -மூன்று பாடங்கள்
விட வெல் கொடி -நாகக் கொடியோன்
விடை -இளம் நாகம் -இதுவே பெரிய  வாச்சான் பிள்ளை –
எருது என்றும் பொருள் கொள்ளலாம்
பல்லவனுக்கு ஆதி காலமாக விருஷபக் கொடி இருந்தது என்றும்
பின்பு நாகத லோகம் சென்று வெற்றி பெற்று நாகக் கொடி கொண்டான் என்பர்

—————————————————————

இலகிய நீள் முடி மாவலி தன் பெரு வேள்வியில் மாண் உருவாய் முன நாள்
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
உலகுடை மன்னவன் தென்னவனைக் கன்னி மா மதிள் சூழ் கரு ஊர் வெருவ
பல்படை சாய வென்றான் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-7-

நம் போன்ற அஹங்காரிகளையும் திருவடிக் கீழ் கொள்ளுவதற்க்காகவே இங்கு நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான்
சலமொடு -ஜலம் -தத்தம் பண்ணிய நீர்த் தாரையோடே
க்ருத்ரிமத்தால் -சிறிய வடிவைக் காட்டி பெரிய வடிவால் அளந்து கொண்டது என்றுமாம்
பாண்டிய ராஜ நகரான கருவூரையும் பல்லவ ராஜன் வென்றி கைக் கொண்ட வரலாறு-

——————————————————————-

குடைத்திறல் மன்னவனாய் ஒரு கால் குரங்கைப் படையா மலையால் கடலை
யடைத்தவன் எந்தை பிரானது இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
விடைத் திறல் வில்லவன் நென் மெலியில் வெருவச் செரு வேல் வலங்கைப் பிடித்த
படைத்திறல் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே—2-9-8-

சக்கரவர்த்தி திருமகனே இங்கே சந்நிதி கொண்டு அருளுகிறான்
நென்மெலி என்னும் நகரத்திலே மிடுக்கனாய் இருந்த வில்லவன் என்னும் எதிரி அரசன் அஞ்சி
நடுங்குபடியாக வேல்  படையை கையிலே  பிடித்தவன்
சத்ருக்களை வென்று த்ரவ்யம் பெற்று அத்தைக் கொண்டு பல்லவன் கைங்கர்யம் செய்த திவ்ய தேசம் –

——————————————————–

பிறை யுடை வாணுதல் பின்னை திறத்து ஒரு கால் செருவில் உருமின்
மறை யுடை மால் விடை ஏழு அடர்த்தாற்கு இடம் தான் தடம் சோந்து அழகாய கச்சி
கறை யுடை வாள் மற மன்னர் கெடக் கடல் போல் முழங்கும் குரல் கடுவாய்
பறை யடைப் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே—2-9-9-

ஏழு எருதுகளையும்   ஏழு திரு  யுருக் கொண்டு வலி அடக்கின பெருமான் உறையும் திவ்ய தேசம் இது
கடல் போல் கர்ஜிக்க வல்ல கடுவாய்ப் பறையை நிரூபகமாக யுடைய பல்லவ ராஜனால் கைங்கர்யம் செய்யப் பெற்றது
உரும் உருமு என்றாலும் இடிக்கு பெயர் -இடி போன்ற குரலை இலக்கணையால் குறிக்கும்
பல்லவராஜன் யுடைய பறை கடுவாய்ப் பறை என்பதாக செப்பேடுகள் யுண்டு-

————————————————————–

பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகர் மேல்
கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம் தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள் தன் அருளால் உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் செழு நீர் உலகாண்டு திகழ்வர்களே—2-9-10-

நிலை நின்ற புகழை யுடைய பல்லவ ராஜன் பணிவிடைகள் செய்யப் பெற்ற பரமேஸ்வர விண்ணகர்
விஷயமான இத் திரு மொழியை
ஓத  வல்லவர்கள் -ஸ்ரீ மகா லஷ்மியின் திரு அருளுக்கு இலக்காகி அரசாள வல்ல அரசராகி விளங்குவார்கள்-

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading