பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 2-8-திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப-

ஸ்ரீ தண்ட  காரண்யத்தில் ராஷசர்களால் புண்பட்ட ரிஷிகளைக் கண்ட பெருமாள்
ப்ரஸீதந்து பவந்தோ மே ஹ்ரீஷோ ஹி மமதுலா -யதீர்ருசை ரஹம் விப்ரை உபச்தேரை ரூபஸ்தித-என்று
குற்றவாளியாய் வெள்கி நிற்க
ஆழ்வார்கள் -பர்வதத்துக்கும் பரமாணுக்கும் வாசி  அன்றோ –
ஆழ்வார்களுக்கும் ரிஷிகளுக்கும் -விஷயத்தில் பன்மடங்கு அதிகமாகப் பேசுவான் அன்றோ –

ஆழ்வார் துடிப்பைக் கண்டு நாம் பிற்பட்டோமே -அடியார்களுக்கு உதவின குணங்களையும்
பரம விக்ரஹ விலஷண வடிவு அழகையும் பிரகாசப் படுத்திக் கொண்டு
திரு அட்டபுயகரத்திலே ஆழ்வாருக்கு பரம போக்யமாக சேவை சாதிக்க –
ஆழ்வாருக்கு எங்கும் கண்டு அறியாத திருக் கோலமாய் இருந்தது –
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -10-10-9- என்றால் போலே
அறிய மாட்டிலர் -அறிந்து கொள்ளவும் முடிய வில்லை –
நீர் யார் என்று கேட்க வாய் எழும்பவில்லை -சோதி வெள்ளம் அலை எறித்து தள்ளுகின்றது –
நம் பர்த்தாவாக இருக்கக் கூடும் என்னும் வெட்கத்தால் கேட்க மாட்டிலர்
கேட்காமலும் இருக்க முடியாமல் தெரிந்து கொள்ள விருப்பமும் அதிகரிக்க –
அவரை நேரே முகம் பார்த்து கேட்க முடியாமல் வேறு ஒருவரை நோக்கி இப்பெரியவர் யார் கொல்-என்று கேட்க
எம்பெருமான் தானே -நான் அட்டபுயகரத்தேன்-என்று மறுமொழி கூற
படுக்கைத் தலையிலே வார்த்தை நடந்து கொண்டு இருப்பதை தோழிமார் தாய்மார்கள் செவியுற்று –
நங்காய் ஏதேனும் பிரமித்தாயா இவை என்ன வார்த்தைகள் -என்று கேட்க
நான் பிரமித்தேன் அல்லேன் -ஒரு மகா புருஷரை சேவிக்கப் பெற்றேன் –
நான் தான் அட்டபுயகரத்தேன் என்று உத்தரம் அருளிச் செய்கிறார் காண்-என்று
நடந்த வரலாறு சொல்வதாகச் செல்கின்றது இத் திருமொழி –
கீழ் -திருத்தாயார் பாசுரம் -இது தலைவி பாசுரம் –

——————————————————

திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப
முரிதிரை மா கடல் போல் முழங்கி மூ உலகும் முறையால் வணங்க
எரியன கேசரி வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா
அரி உருவாம் இவர் யார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே –2-8-1-

அன்று ஒரு கால் ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு உதவின மாதரம் அன்று –
உனக்கு உதவுகைக்காக இங்கே வந்து சமயம் பார்த்து நிற்கிறவன் அன்றோ -என்றார் -என்கிறாள் –
அடையாளம்  சொல்லா நிற்கச் செய்தே நிச்சயிக்க ஒண்ணாத படி இறே விஷய ஸ்வ பாவம் –
இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் யுடைய வடிகளை இன்னார் என்று அறியேன் போலே
திருவடி கை கூப்பி மெய்யே வார்த்தை சொல்லா நிற்கச் செய்தேயும் –
கிம் நு ஸ்யாத் சித்த மோஹோயம் பவேத் -வாதகதி ஸ்திவ்யம் உன்மாதஜோ விகாரோவா ஸ்யாதியம் ம்ருக த்ருஷ்ணிகா-என்று
மதி மயக்கத்தால் வந்ததா -காற்றின் போக்கின் தோற்றரவா -பித்த விகாரத் தோற்றமோ –
கானல் காட்சியோ என்று பலவாறு சந்கித்தாப்   போலே –

தாரகாசுரன் புத்ரர் வித்யுன்மாலி -தாரகாஷன் -கமலாஷன் -பரமன் இடம் தவம் செய்து வரம் பெற்று  திரியும் பறக்கும் –
சிவபெருமான் பூமியை தேராகவும் -சந்திர சூர்யர்களை தேர்ச் சக்கரங்களாயும்-நான்கு வேதங்களை குதிரைகளாயும்
பிரமனை சாரதியாகவும் -மகா மேருவை வில்லாகவும் -ஆதி சேஷனை வில் நாணியாகவும் –
விஷ்ணுவை வாயுவாகிய சிறகு அமைந்து அக்னியை முனையாக யுடைய அம்பாகவும் –
சிரிக்க சிரிப்பிலே அவ் வசுரர்களையும் நரகங்களையும் எரித்தான்-

த்ரி புரம் மூன்று சொல்வான் என் என்னில் -திரியும் மூன்று பட்டணங்கள் —
பஞ்ச பஞ்ச  ஜனா -சப்த சப்தர்ஷய-என்னுமா போலே தனித் தனியே நாமதேயம் ஆகவுமாம் –
கேசரம் -சிங்கம் பிடரி  மயிர் – கேசரி -சிங்கம்
அரி யுருவாகிய நீர் யார் -என்னாமல்-அருகில் இருந்த வேறு ஒருவரைக் கேட்பது போல் இவர் யார் கொல்
அதற்கு அட்டபுயகரத்தேன் என்று அவரே மறுமொழி கூறினார்
க்ருஹம் -கரம் எனத் திரிந்து அட்டபுயகரம் -அஷ்ட புஷ ஷேத்ரத்துக்கு   அதிபதி என்றும் –
அஷ்ட புஜ ஷேதத்ரத்தில் கிடப்பான் ஒருவன் என்றும் பொருளில் –
துஷ்யந்த மகாராஜன் சகுந்தளையை அடைந்து -புரு வம்சத்து அரசனால் தர்ம கார்யங்களை செய்யுமாறு நியமிக்கப் பட்டவன் –
புரு வம்ச அரசனாகிய தனது தந்தையால் நியமிக்கப் பட்ட அரசன் -வேலைக் காரன் என்ற பொருளில் சொன்னது போலே
அட்ட புய அகரம் -அக்ரஹாரம் -என்னவுமாம் –

————————————————–

வெந்திறல் வீரரில் வீரர் ஒப்பார் வேதம் உரைத்து இமையோர் வணங்கும்
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர் கொல் தெரிக்க மாட்டேன்
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மா வலி வேள்வியில் மண் அளந்த
அந்தணர் போன்று இவர் யார் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே-2-8-2-

ஸ்ரீ இராமபிரானாகவும் -வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார் இவர் -மகா வீரன் ஸ்ரீ ராமன் அன்றோ
திருவேங்கடமுடையானாகவும் -செம் தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் –
திருவிக்ரமனாகவும் -மா வலி வேள்வியில்-வந்து குறள் உருவாய் நிமிர்ந்து-
மண் அளந்த அந்தணர் போன்று இவர் மாறி மாறி சேவை சாதித்த படி –

மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இருபாடு இலங்கி யாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் -போலே
வேதமுரைத்த இமையோர் வணங்கும் – ஸ்ரீ ராமபிரானுக்கும் ஒக்கும் -பவான் நாராயணோ தேவ –
தெரிக்க மாட்டேன் -அறிகிலேன் -மேன்மையைப் பார்த்தால் -ஸ்ரீ ராம பிரானைப் போலே –
தாழ நிற்கும் சீலத்தைப் பார்த்தால் திருவேங்கடமுடையானாகவும் –
நீர்மையும் மேன்மையும் ஒரே ஆஸ்ரயத்திலே தோன்றும்படி  உலகளந்த பெருமானாகவும் தோற்றுகிறாரே-
கழஞ்சு மண் இரந்து வந்தவன் அல்லன் -உன்னை இரந்து வந்தவன் நான் என்கிறார் –
பிறருக்காக இறந்தவன் அல்லேன் -எனக்காக இரந்து வந்தேன் என்கிறார் -பெரிய வாச்சான் பிள்ளை –
வேதம் உரைத்த இமையோர் வணங்கும் -செந்தமிழ் பாடுவாருக்கும் இயைக்கலாம்   என்பர்

——————————————————

செம்பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழியோடு கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ வெண் மறுப்பொன்று பறித்து இருண்ட
அம்புதம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-3-

பஞ்ச ஆயுதங்களோடு கண்ணனுடைய சிறுச் சேவகமும் திரு மணி அழகும் தோன்றுமாறு சேவை சாதிக்கிறபடி –
எதிரிகளை வெல்லவும் என் போன்றாரை வசப் படைத்தவும் பரிகரங்கள் யுடையவர் –
வாளி-அம்பு
சிலை
தண்டு
சங்கம்
வாள்
ஆழி
கேடகம் -கேடயம் -கடகம்
மலர் –
ஆயுத கோடியிலும் ஆபரண கோடியிலும்-
வலங்கை -என்றது இரண்டு திருக் கைகளுக்கும் உப லஷணம் –
அன்றிக்கே ஆழ்வாருக்கு மட்டும்-
அனைத்தும் வலங்கை இலே ஏந்தி சேவை சாதித்ததாகவுமாம்

—————————————-

மஞ்சுயர் மா மணிக்குன்றம் ஏந்தி மா மழை காத்து ஒரு மாயவானை
அஞ்ச அதன் மருப்பன்று வாங்கும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன்
வெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து
அஞ்சுடர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே—–2-8-4-

கிருஷ்ணானுபவம் பின்னாட்டுகிற படி
திரு ஆழியும் திருச் சங்கும் ஏந்தி
வாயில் வேத ஒலிகள் வெளிப்பட
சாஷாத் பரமபத நாதரோ
அவர் இங்கே வர ப்ரசக்தி இல்லையே -அவரைப் போலே இருக்கிற இவர் யார்
தூரஸ்தன் அல்லன் -அட்டபுயகரத்தேன் என்றார் என்கிறாள்-

——————————————–

கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்து நீண்ட
மலைகளும் மா மணியும் மலர் மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற
அலைகடல் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே—2-8-5-

சாஸ்தரங்களான கடலைத் தந்து அருளின கரும் கடலோ
கலைகள் -சாஸ்திரங்கள் என்றாலும் பிரகரண பலத்தால் வேதாந்தங்கள்
நீதி நூல் -இதிகாசங்கள்
கற்பம் -கல்பம்
சொல் -வியாகரணம்
பொருள் -மீமாம்சை
நீண்ட திருத் தோள்கள் -கடலிலும் மலைகள் உண்டு இவனிடமும் மலைகள் யுண்டு
கடல் ரத்னாகாரம் ஆகையாலே மா மணிகளை யுடையது
குருமா மணிப் பூண் பூண்டவன் இவனும்
மலர்மங்கை தங்கப் பெற்றது கடல் -அகலகில்லேன் இறையும் என்று உறை மார்பினன் இவன்
சங்குக்கு உறைவிடம் கடல் இவனும் சங்குடையான்
ஆக இப்படிகளாலே கடலைப் போன்றவன் –

——————————————

எங்கனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறைவும் எல்லாம் தம் மனவாகப் புகுந்து தாமும்
பொங்கு கருங்கடல் பூவை காயா போதவிழ் நீலம் புனைந்த மேகம்
அங்கனம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-6-

சர்வ ஸ்வத்தையும் கொள்ளை கொள்ளுதற்கே   வந்தவர் போலும்
எங்கனும்-உம்மைத் தொகையைப் பிரித்து -எண்ணில் என்பதோடு கூட்டிப் பொருள்  –
இவரைக் கண்ட உடனே விரும்பின படி கலவி செய்ய பெறாமையாலே உடல் இளைத்து கை வளையல்கள் கழன்று ஒழியும்படியும்
நெஞ்சு இவர் இடத்தில் பதிந்து இருக்கும் படியும்
அடக்கத்தை விட்டு பதறி மேல் விழும்படியும் செய்து கொள்வதையே-ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறைவும் எல்லாம் தம் மனவாகப் புகுந்து என்கிறார் -தம்மன -தம்முடையவை
புனைந்த மேகம் -கீழ் சொன்ன கடல் முதலியவற்றோடு ஒரு கோர்வையாகச் சேர்க்கப் பட்ட என்ற பொருளிலுமாம்-

————————————————

முழுசி வண்டாடிய தண் துழாயின் மொய்ம்மலர்க் கண்ணியும் மேனி யஞ்சாந்து
இழுசிய கோலம் இருந்தவாறும் எங்கனம் சொல்லுகேன் ஓவி நல்லார்
எழுதிய தாமரை யன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும்
அழகியதாம் இவரார் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே–2-8-7-

திருமேனி இயற்க்கை அழகிலும் செயற்கை அழகிலும் ஈடுபட்டு பேசுகிறார்
வண்டு முழுசி ஆடிய -திருத் துழாய் மாலையில் மது வெள்ளத்தின் பெருமை சொல்லிற்று
மேனி அஞ்சாந்து இழிசிய கோலம் –
நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத் தேறி யவளும் திரு யுடம்பில் பூச -பெரியாழ்வார் -1-8-4-
ஏட்டிலே கேட்டு இருந்தோம் இன்று நேரிலே காணப் பெற்றோம்
ஓவி  நல்லார் -நல் ஓவியர் -என்றபடி –
ஓவில் நல்லார் -ஓவியம் எழுதுவதில் வல்லார் என்றபடி
ஓவி நல்லார் எழுதிய தாமரை என்றும் கொண்டு அது போன்ற திருக் கண்கள் என்றபடி-

——————————–

மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில்
காவி யொப்பார் கடலேயும் ஒப்பார் கண்ணும் வடிவும் நெடியராய் என்
ஆவி யொப்பார் இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே—2-8-8-

நித்ய சூரிகள் சுற்றிலும்  சூழ்ந்து வணங்கா நிற்க வந்தார்
வேதங்கள் ஓதிக் கொண்டு வந்தார்
முந்நீர் மடந்தை கடலில் பிறந்த ஸ்ரீ மகா லஷ்மி
ஆற்று நீர் ஊற்று நீர் வேற்று நீர் -மலை நீர் -முந்நீர் என்பர்
முச்செய்கை யுடைய -மண்ணைப் படைத்து காத்து அழித்தல்-முத் தொழில் களும்  கடலுக்கு உரியதாம்
நீரில் இருந்து நிலம் பிறக்கும் -முடிவில் நீரினால் மூடப் பட்டு உலகம் அழியும் -நடுவில் நீரால் காக்கப் படும்
முந்நீர் -பழைய நீர் என்றுமாம் ஆதியில் நீரையே படைத்தார் -நாராயணன்-

————————————————–

தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு
நஞ்சமுடைத்திவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறிய மாட்டேன்
அஞ்சுவன் மற்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-9-

கை வளையல்களும் நெஞ்சும் அவன் இடம் சேர்ந்து விட்டன –
இன்னும் தங்கி இருப்பதை கொள்ளை கொள்ள உற்று நோக்கி வார்த்தையும் சொன்னானே
ரஷிக்க வந்தவரா பஷிக்க வந்தவரா -கேட்கவும் அஞ்ச -அத்தை அறிந்து கொண்டு அஞ்ச வேண்டாதபடி
அட்டபுயகரத்திலே எளியனாய் வந்து நிற்கிறவன் அன்றோ என்கிறார்
என் வளையும் இவர்க்கு நில்லா -இவருக்காகி என்னிடத்தில் நில்லா என்றபடி
இங்கே குடியிருப்பாய்   அவருக்காகவே  வர்த்தின்றன -வியாக்யானம்
தஞ்சம் -தத்த்யம் -தஞ்சமாக  திரிந்து -உண்மையாக என்றபடி –

———————————————-

மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீள் முடி மாலை வயிரமேகன்
தன் வலி தன புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி தன்னை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன்னிசையால் சொன்ன செஞ்சொல்மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே—2-8-10-

வைகுந்தம் சென்று நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்
அன்றிக்கே அவர்கள் வசிக்கும் இடமே பரமபதம் –
வயிரமேகன் -தொண்டை நாட்டரசன் அபிமானித்து ஜீர ணோத் தாரணம் முதலிய சிறப்புகளை செய்தான் –

————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading