ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – பத்தாவது திரு மொழி – -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ உ. வே. P.B.A.. ஸ்வாமிகள்–

பிரவேசம் –

இத் திருமொழியும்
கீழ்த் திருமொழியின் சைலியோடு ஒத்து இருக்கும்

வர்ஷா காலத்திலேயே எம்பெருமான் உடைய திரு யுருவை
நினைப்பூட்டிக் கொண்டு
வந்து தோன்றின சில புஷ்ப விசேஷங்களைக் கண்டு
ஆற்றாதாளாய்
சில பாசுரங்கள் அருளிச் செய்கிறாள்

அப்படி அருளிச் செய்யும் பொழுது
இனி நாம் எவ் வழியாலே உயிர் தரிக்கப் பெறுவது
பண்டு நமக்கு அனுகூலமாய் இருந்த வஸ்துக்களும்
இப்போது பிரதிகூலங்கலளாய் விட்டனவே –

நத்யஜேயம் கதஞ்சன -என்று
எப்போதும் கை விடுவது இல்லை என்று பிரதிஞ்ஞை பண்ணித் தந்த
பெருமானும் கை விட்டு ஒழிந்தானே

இனி நாம் ஜீவிப்பது எங்கனம் -என்று சிந்திக்கையில்
நமக்கு
பெரியாழ்வார் வயிற்று பிறப்பு கிடைத்து இருக்கையாலே
அது கொண்டு நாம் ஜீவிக்க பிராப்தமாய் இருக்க
இப்படி சிந்திப்பது என் -என்று

ஒருவாறு சிந்தை நீங்கித் தரிக்கும் உபாயம் அறிந்து
அது தன்னைச் சொல்லி முடிக்கிறாள்
இந்த திருமொழியை-

———————————————————————————

கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் எம்மேல் உம்மைப்
போர்க் கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான்
ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது அணி துழாய்த்
தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ–10-1-

பதவுரை

கார் கோடல் பூங்காள்!–கறுத்த காந்தள் பூக்களே!
உம்மை–உங்களை
போர் கோலம் செய்து–யுத்தத்திற்கு உசிதமாக அலங்கரித்து
எம் மேல்–என் மேலே
போர விடுத்தவன்–அனுப்பினவானான
கார் கடல் வண்ணன்–கறுத்த கடல் போன்ற வடிவை யுடையனான கண்ணபிரான்
எங்குற்றான்–எங்கே யிருக்கிறான்?
நாம்–(உங்களால் மிகவும் நலிவுபட்ட) நான்
இனி–இனி மேல்
ஆர்க்கு–யாரிடத்தில் போய்
பூசல் இடுவதோ–முறை யிட்டுக் கொள்வதோ (அறியேன்)
அணி–அழகிய
துழாய் தார்க்கு–திருத் துழாய் மாலையை ஆசைப்பட்டு
ஓடும் நெஞ்சம் தன்னை படைக்க வல்லேன் அந்தோ!–ஓடுகின்ற நெஞ்சை யுடையவளா யிரா நின்றேனே! ஐயோ!

கோடல்பூக்கள் என்று ஒரு புஷ்பஜாதி உண்டு, அது காந்தள்பூ என்றுஞ் சொல்லப்படும்.
அப்புஷ்வங்கள் கார்காலத்திலே மிகுதியாக மலரும். அவை விரஹகாலத்திலே காமுகர்கட்கு மிகவும் உத்தீபகங்களாயிருக்கும்;
பலகைப்பட்ட நிறங்களையுடைய அப்புஷ்பஜாதியில் கரியநிறமுள்ள பூக்களும் உண்டு.
அவை எம்பெருமானுடைய திருநிறத்துக்கு ஸ்மாரகங்களாய்க்கொண்டு ஆண்டாளை விஸேஷமாக வருத்துகின்றமையால்
‘இம்மலர்களை எம்பெருமான் படைத்தது நம்மைக் கொலைசெய்வதற்காகவே போலும்‘ என்ற அறுதியிட்டு
அம்மலர்களையே நோக்கி கூறுகின்றாள்; “ஓ கோடல்பூக்களே! என்னைக் கொலை செய்வதற்கென்று
உங்களை அழகாகக் கோடித்து அனுப்பின மஹாநுபாவன் எங்கிருக்கிறான்?“ என வினவுகின்றாள் முன்னடிகளில்.

உண்மையில் அப்புஷ்பங்கள் அசேதநங்களாகையாலே மறுமொழி ஒன்றும் சொல்லாதிருக்கவே,
‘அந்தோ‘ நம்மை இந்தப்பூக்களும் லக்ஷியம்பண்ணுகின்றன வில்லையே; அந்த எம்பெருமானோ வரமாட்டேனென்கிறான்,
இவையோ நம்மோடு பேசுகின்றனவில்லை; உசாத்துணை ஆகக்கூடியவர்களும் யாருமில்லை,
இனி நாம் ஆர்வீட்டுவாசலிலேபோய் நம் துயரை முறையிட்டு ஆறுவது!‘ என்கிறாள் மூன்றாமடியில்.

எம்பெருமானுடைய விபூதியடங்கலும் நம்மைநலிவதற்கு அவனுக்குத் துணையாயிருப்பதுபோல
நம்மைச் சேர்ந்த வஸ்துக்களாவது நமக்குத் துணைநிற்குமோவென்று பார்த்தாலோ அதுவுமில்லை;
நமக்கு விதேயமாயிருக்கக் கடவதான நெஞ்சும் நம்மை உதறித்தள்ளிவிட்டு அவனுடைய திருத்துழாய் மாலையை நாடி ஓடாநின்றது,
இப்படி எல்லாம் பகையாகப் பெற்றோயே! இஃது என்ன கஷ்டகாலம்! என்கிறாள் ஈற்றடியில்.
இதனால், எம்பெருமானுடைய விஸ்லேஷம் தனக்கு அஸஹ்யமாயிருக்கிறப்படியும்,
அவ்வளவிலும் தனது திருவுள்ளம் பகவத்விஷயத்திலேயே ஈடுபட்டுச் செல்லுகிறபடியையும் அருளிச் செய்தாளாய்ந்தது.

“கார்க்கோடல்பூக்காள்“ என்பதற்கு – கார்காலத்திலே வந்து தோன்றுகின்ற கோடல்பூக்களே! என்றும் கறுத்த கோடல்பூக்களே! என்றும்,
பெருத்த கோடல்பூக்களே! என்றும் மூன்றுவகையாகப் பொருள் கூறுவர்.
உம்மைப் போர்க்கோலஞ்செய்து என்மேல் போரவிடுத்த கார்க்கடல்வண்ணன் எங்குற்றான்? என்று அந்வயித்துக்கொள்க.
ஒவ்வொரு பதார்த்தங்களுக்கும் ரூபநாமங்களை ஏற்படுத்தினவன் எம்பெருமான் என்ற நூற்கொள்கைப்படி இம்மலர்கட்கு
நிறங்கொடுத்தவன் எம்பெருமானாதலாலும், அந்த நிறம் இப்போது இவளுடைய ஹிம்ஸைக்கு உறுப்பாயிருப்பதால்
யுத்தஞ்செய்வதற்கு ஏற்ற கோலஞ்செய்துவிட்டது போன்றிருப்பதாலும் “உம்மைப் போர்க்கோலஞ்செய்து போரவிடுத்தவன்“ என்றாள்.
இந்திரஜித்தைக் கொல்வதற்கு இராமபிரான் இளையபெருமானை அலங்கரித்து அனுப்பினதுபோலத் தன்மை முடிப்பதற்காக
இவற்றை நிறமூட்டியனுப்பினான் என்றிருக்கிறான் போலும். “போதா“ என்பது போர என மருவிற்று போரவிடுத்தல் – அனுப்புதல்.

உங்களை அனுப்பினவன் எங்கே இருக்கிறான்? என்று கேட்பதற்குக் கருத்து யாதெனில்;
ஸுக்ரீவன் இராமபிரானைப் பின்னேஒளித்து நிறுத்திவைத்துவிட்டு வாலியைச்சண்டைக்கு அழைக்க வந்தது போல
நீங்களும் எம்பெருமானை ரஹஸ்யமாகத் துணைகொண்டு என்னைச் சண்டைக்க ழைக்க வந்திருக்க வேணுமேயன்றி,
நீங்கள் மாத்திரம் தனிப்பட்ட வந்திருக்கமாட்டீர்கள்; ஆதலால் அவன் எங்கே பதுங்கிநிற்கிறான்? சொல்லுங்கள் என்கிறாள் என்க.

பூசலிடுவது – பேரொலிசெய்து முறையிடுவது

கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன்-
கோடல் பூக்கள் என்று ஒரு புஷ்ப ஜாதி -காந்தள் பூ என்றும் சொல்வர்
அது கார் காலத்தில் மிகுதியாக மலரும்
விரஹ காலத்தில் காமுகர்களுக்கு உத்தீபங்களாய் இருக்கும்
பலவகை நிறம் உள்ள அந்த புஷ்ப ஜாதியில் கரிய நிறமும் உண்டு
அவை எம்பெருமான் திரு நிறத்துக்கு ஸ்மாரகங்களாய் கொண்டு
ஆண்டாளை விசேஷமாக வருத்துவதால் –

கார்க்கோடல் பூக்காள் –
கார் காலத்திலேயே வந்து தோன்றுகிற கோடல் பூக்காள் என்றும்
கறுத்த கோடல் பூக்களே -என்றும்
பெருத்த கோடல் பூக்களே -என்றும் மூன்று வகை பொருள்
எம்மேல் உம்மைப் போர்க் கோலம் செய்து போர விடுத்து –
இம்மலர்களை
எம்பெருமான் படைத்தது நம்மை கொலை செய்வதற்காகவே போலும் –
என்று அறுதி இட்டு
அவைகளை நோக்கி –
ஒவ் ஒரு பதார்த்தங்களுக்கும் ரூப நாமங்களை ஏற்படுத்தினவன் எம்பெருமான் தானே –
இவள் ஹிம்சைக்கு உறுப்பாய் இருப்பதால் இப்படி அருளிச் செய்கிறாள்
இந்த்ரஜித்தை முடிக்க இராமபிரான் இளையபெருமாளை அலங்கரித்து அனுப்பினது போலே –
போர விடுத்தல் -அனுப்புதல்

அவன் எங்குற்றான் –
உங்களை அழகாக கோடித்து அனுப்பின அந்த மகாநுபாவன் எங்கு இருக்கிறான் –
சுக்ரீவன் இராம பிரானை பின்னே ஒளித்து நிறுத்தி வைத்து
வாலியை சண்டைக்கு அழைக்க வந்தது போலே
நீங்களும் எம்பெருமானை ரஹச்யமாக துணை கொண்டு
என்னை சண்டைக்கு அழைக்க வந்து இருக்க வேணும் –
அவன் எங்கே பதுங்கி இருக்கிறான் சொல்லுங்கோள்

ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது –
அவைகள் அசேதனங்கள் தானே
மறுமாற்றம் சொல்ல வில்லை
அந்தோ இவையும் நம்மை லஷியம் பண்ண வில்லை
அவன் வர மாட்டேன் என்கிறான்
உசாத் துணை ஆகக் கூடியவர்களும் யாரும் இல்லை
இனி யார் வீட்டு வாசலிலு போய் நாம் துயரை முறை இட்டு ஆறுவது –
பூசல் இடுவது -பேரொலி செய்து முறை இடுவது

அணி துழாய்த்தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ
எம்பெருமான் உடைய விபூதி அடங்கலும் நம்மை நலிவதற்கு அவனுக்கு துணையாய் இருப்பது போலே
நம்மைச் சேர்ந்த வஸ்துக்களாவது நமக்கு துணை ஆகுமோ என்று பார்த்த அளவில்
அதுவும் இல்லை –
நமக்கு விதேயமாக கடவதான நெஞ்சும் நம்மை உதறித் தள்ளி விட்டு
அவனுடைய திருத் துழாய் மாலையை நாடி ஓடா நின்றது –
இதனால் விச்லேஷம் தனக்கு அசஹ்யமாய் இருக்கும் படியையும்
தனது திரு உள்ளம் பகவத் விஷயத்தில் ஈடுபட்டு செல்லுகிறபடியையும்
அருளிச் செய்கிறார் –

——————————————————————————————-

மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையின்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே –10-2-

பதவுரை

மேல் தோன்றி பூக்காள்–உயரப் பூத்திருக்கிற காந்தள் பூக்களே!
மேல் உலகங்களின் மீது போய் மேல் தோன்றும் சோதி–மேலுள்ள உலகங்களெல்லாவற்றையுங் கடந்து
அவற்றுக்கு மேற்பட்டு விளங்குகின்ற ‘தன்னுடைச் சோதி‘ என்கிற பரம பதத்தில் எழுந்தருளி இருக்கிற
வேதம் முதல்வர்–வேத ப்ரதிபாத்யனான பரம புருஷனுடைய
வலம் கையின் மேல் தோன்றும்–வலத் திருக் கையிலே விளங்கா நின்ற
ஆழியின் வெம் சுடர் போல்–திருவாழி யாழ்வானுடைய வெவ்விய தேஜஸ்ஸு போல
சுடாது–தஹியாமல்
எம்மை–என்னை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து–இந்த பிரக்ருதி மண்டலத்தை விட்டு நீங்கினவர்களுடைய திரளில்
வைத்துக் கொள்கிற்றீரே–கொண்டு சேர்க்கவல்லீர்களோ?

கீழ், கோடல்பூக்கள் பண்ணின ஹிம்ஸையைப் பொறுக்கமாட்டாமல் அவற்றில் நின்றும் கண்ணை மீட்டு
மேலொருபக்கத்திலே வைத்தாள், அங்கே மேல் தோன்றிப்பூக்கள் மலர்நதுதோன்றின.
அவை எம்பெருமானுடைய சிரிப்பைக் கோட்சொல்லிக்கொண்டு நலியவே, அவற்றைநோக்கிக் கூறுகின்றாள்.
தோன்றிப்பூ என்றாலும், காந்தட்பூ என்றாலும், கோடல்பூ என்றாலும் புஷ்பஜாதி ஒன்றேயாம்,
மேல்தோன்றிப்பூ என்றமையால் கீழ்ப்பாட்டிற்சொன்ன கோடல்பூக்கள் கீழேபடர் கின்றனவையென்றும்,
இவை மேலே படர்கின்றவையென்றும் அவாந்தரபேதம் அறியத்தக்கது, நிலஸம்பங்கி, கொடிஸம்பங்கி என்கிறாப்போலே.

“த்ருஷ்டி விஷம்போலே கோடல்பூக்கள் பாதகமாகப் புக்கவாறே அவற்றுக்கு இறாய்த்துக் கண்ணை மேலேவைத்தாள்,
அங்கே மேல்தோன்றிப்பூக்களாய் கிடந்தது, அவற்றைநோக்கி ‘மேல்தோன்றிப்பூக்கள்! என்கிறாள்,
அதுக்குத் தப்பினாரையும் அழிக்கக் கடவோமென்று அதுக்கு ஒரு பேரும் பெற்று நீங்கள் மேலே புக்குநிற்பதே!“ என்ற
வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்க.

மேலுலகங்களின்மீது போய் மேல்தோன்றஞ்சோதி என்றது – பரமபதமாகிற சோதிமிக்க இடத்தையாம்.
அவ்விடத்திலே எழுந்தருளியிருக்கின்ற வேத வேத்யனான பரமபுருஷனுடைய வலத்திருக்கையின் மேல் விளங்குகின்ற
திருவாழியாழ்வானுடைய வெவ்வியசுடர் ஆச்ரித ஸத்ருக்களை தஹிப்பதுபோல என்னை நீங்கள்
தஹிக்கவேண்டாவென்று வேண்டிக்கொள்ளுகிறாள்.
இதனால் மேல்தோன்றிப்பூக்களின் தாபம் அஸஹயமாயிருத்தல் சொல்லிற்றாயிற்று.

எம்மை மாற்றோலைப்பட்டவர் கூட்டத்து வைத்துக்கோள்கிற்றிரே –
கைவல்ய மோக்ஷாநுபவம் பண்ணுகிறவர்களுடைய கோஷ்டியிலாவது என்னைக் கொண்டுபோய் வைப்பீர்களாவென
இரக்கிறாளென்று திருமலை நம்பி அருளிச்செய்வராம்.
இவள் விஸலேஷத்தாலே மிகவும் நொந்துபோனபடியாலே ‘நமக்கு பகவதநுபம் கிடைக்காமற்போனாலும் போகிறது,
இந்த ஸரீரம் கழிந்தால் போதும், அதுவே பரமஸுகம், என்று நினைத்து இங்ஙனே கூறுகின்றாள் போலும்.
“மாற்றோலைப்பட்டவர்“ என்றால் கைவல்ய மோக்ஷ நிஷ்டர்களை எப்படிச் சொல்லுமென்னில்,
பகவதநுபவத்துக்கு மாறானவர்கள் என்று ஓலைப்பட்டவர்கள் – கேவலர் எனக்கொள்க.
(ஓலைப்பட்டவர்கள் – ஓலையில் எழுதப்பட்டவர்கள்)

கேவலர்கள் தனித்தனியாக ஆத்மாநுபவம் பண்ணு மவர்களே யன்றி, ஒரு கூட்டமாக இருந்து அநுபவம் பண்ண
மாட்டாதவர்களாகையாலும், இங்கு “கூட்டத்து“ என்று அளிச்செய்திருப்பதாலும்
அந்த அர்த்தம் அவ்வளவு ஸ்வரஸமல்லவென்று எம்பார் வேறுவகையாக அருளிச்செய்வராம் –
மாற்றோலைப் பட்டவர் கூட்டமாவது அடியார்கள் குழாங்களாம், என்னை நித்ய முக்தர்களின் திரளின் நடுவே கொண்டு போய்
வைப்பீர்களா வென்கிறாள் என்று அருளிச் செய்வராம்.
இப்போது, மாற்றோலைப்பட்டவர் என்கிறது – ஸம்ஸாரத்திலிருந்து ஓலைமாற்றப்பட்டவர் என்றபடி.

அன்றியே, “மாற்றோலைப்பட்டு – அவர்கூட்டத்து“ என்றும் பிரித்து உரைப்பர் சில ஆசிரியர்.
யமன் தனது தூதர்களை நோக்கி ‘இன்னானைப் பிடித்து என்னிடம் கொண்டு வாருங்கள்‘ என்று சொல்லி
ஓலைச் சாசனம் எழுதித்தந்தனுப்பினால், சில ஸமயங்களில் அத் தூதர்கள் மாறுபாடாக வேறோருவனைப்
பிடித்துக் கொண்டுபோய் விடுவதுண்டு, அப்படியே இப்போது இவ்வாண்டாளை ஹிம்ஸக்கும்படியாக
இப் புஷ்பங்கள் எம்பெருமானால் நியமித்தனுப்பப் பட்டிருப்பதாலும் அந்த நியமநத்தை மாறாடி இவளைக்
கொண்டு போய் அவ் வெம்பெருமானுடைய கோஷ்டியிலே நிறுத்திவிடக் கூடுமென்கிற எண்ணத்தினால்,
ஓ! மேல்தோன்றிப் பூக்களே! என்னை ஹிம்ஸிக்கவேணுமென்கிற பகவாதாஜ்ஞையை மாறாடி அவ் வெம்பெருமானுடைய
கோஷ்டியிலே என்னைக் கொண்டு போய் நிறுத்துங்கள் என்கிறாளென்க. இப்பக்ஷத்தில் மாற்றோலைப் பட்டு – ஓலைமாற்றப்பட்டு –
அவருடைய ஆஜ்ஞையைமாறாடி என்கை. இன்னும் பலபடியாகவும் பொருள் கொள்கள இடமுண்டு.

மேல் தோன்றி பூக்காள்-
கீழ் கோடல் பூக்கள் பண்ணின ஹிம்சையை பொறுக்க மாட்டாமல்
அவற்றின் நின்றும் கண்ணை மீட்டு மேல் ஒரு பக்கத்திலே வைக்க –
அங்கு மேல் தோன்றிப் பூக்கள் மலர்ந்து இருக்க
அவை எம்பெருமான் உடைய சிரிப்பை கோள் சொல்லிக் கொண்டு நலியவே
அவற்றை நோக்கி கூறுகின்றாகள்
தோன்றிப் பூ -காந்தள் பூ -கோடல் பூ -ஒரே புஷ்ப ஜாதி
கீழே படர்ந்தவை கீழே சொல்லி
மேலே படரும் இவை -அவாந்தர பேதம்
நிலா சம்பங்கி கொடி சம்பங்கி போலே
திருஷ்டி விஷம் போலே கோடல் பூக்கள் பாதகமாய் புக்கவாறே
அவற்றை இறாய்த்து கண்ணை மேலே வைத்தாள்
அங்கெ மேல் தோன்றி பூக்களாய்க் கிடந்தது
அவற்றை நோக்கி -மேல் தோன்றி பூக்காள் -என்கிறாள்
அதுக்குத் தப்பினாரையும் அழிக்கக் கடவோம் -என்று
அதுக்கு ஒரு பேரும் பெற்று
நீங்கள் மேலே புக்கு நிற்பதே -என்கிறாள்

மேல் உலகங்களின் மீது போய் மேல் தோன்றும் சோதி
பரமபதம் ஆகிற சோதி மிக்க இடத்தை –

வேத முதல்வர் வலம் கையின் மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது -எம்மை-
அவ்விடத்திலே எழுந்து அருளி இருக்கிற வேத வேத்யனான பரம புருஷன் உடைய
வலது திருக் கையிலே மேல் விளங்குகின்ற திரு வாழி வாழ்வான் உடைய
வெவ்விய சுடர் ஆஸ்ரித சத்ருக்களைத் தஹிப்பது போலே
என்னை நீங்கள் தஹிக்க வேண்டா

எம்மை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே –
கைவல்ய மோஷ அனுபவம் பண்ணுகிறவர்கள் கோஷ்டியிலாவது
என்னைக் கொண்டு போய் வைப்பீர்களா என்று இரக்கிறாள்
என்று திருமலை நம்பி அருளிச் செய்வாராம்
இவள் விச்லேஷத்தால் மிகவும் நொந்து போன படியால்
மாற்றோலைப் பட்டவர் -பகவத் அனுபவத்துக்கு மாறானவர்கள் -என்று ஒலைப்பட்டவர் -கேவலர் –

ஆனால் இங்கே கூட்டத்து -என்று இருப்பதால்
-கேவலர் தனி அனுபவம் செய்வதால்
எம்பார் -சம்சாரத்தில் இருந்து ஓலை மாற்றப் பட்டவர் –
அடியார்கள் குழாம்-நித்ய முக்தர்களின் நடுவே வைப்பீர்களோ -என்கிறார்

அன்றியே –
மாற்றோலைப் பட்டு -அவர் கூட்டத்து -என்று பிரித்து சிலர்
யமன் தனது தூதர்களை ஓலை சாசனம் எழுதி இன்னானை கூட்டி வர சொல்ல
அத தூதர்கள் மாறாக வேறு ஒருவனைக் கூட்டிப் போவது போலே
புஷ்பங்களை ஆண்டாளை ஹிம்சிக்க நியமித்து இருந்தாலும்
அந்த நியமனத்தை மாறாடி இவளைக் கொண்டு போய்
அந்த எம்பெருமான் கோஷ்டியிலே நிறுத்தி விடக் கூடும் –
என்று
ஓலை மாற்றப் பட்டு -அவர் உடைய ஆஞ்ஞையை மாறாடி -என்கை–

————————————————————————————————————————————————————–

கோவை மணாட்டி நீ யுன் கொழுங்கனி கொண்டு எம்மை
ஆவி தொலைவியேல் வாய் அழகர் தம்மை அஞ்சுதும்
பாவியேன் தோன்றிப் பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல்
நாவும் இரண்டுள வாய்த்து நாணியிலேனுக்கே–10-3-

பதவுரை

கோவை மானாட்டி–அம்மா! கோவைக் கொடியே!
நீ–நீ
உன்–உன்னுடைய
கொழுங்கனி கொண்டு–அழகிய பழங்களாலே
எம்மை–என்னுடைய
ஆவி–உயிரை
தொலைவியேல்–போக்கலாகாது.
வாய் அழகர் தம்மை–அழகிய வாய் படைத்த பெருமான் விஷயத்திலே
அஞ்சுதும்–பயப்படா நின்றேன்!
பாவியேன்–பாவியானா நான்
தோன்றி–பிறந்த பின்பு
நாணிலியேனுக்கு–லஜ்ஜை யற்றவளான என் விஷயத்திலே
பாம்பு அணையார்க்கும்–சேஷ சாயியான பெருமாளுக்கும்
தம் பாம்பு போல்–தமது படுக்கையான திருவனந்தாழ்வானுக்குப் போல
நாவும் இரண்டு உள ஆயிற்று–இரண்டு நாக்குகள் உண்டாயின.

மேற்புறங்களில் நின்றும் கண்ணைமீட்டுப் பக்கங்களில் நோக்கினாள்
அங்கே ஒரு செடியிலே கோவைக்கொடி படர்ந்து பழுத்துக்கிடந்தன; அவற்றை நோக்கிப் பேசுகின்றாள்.
கோவைக்கனிகள் எம்பெருமானுடைய திருவதரத்திற்கு ஸ்மாரகங்களாய் இருப்பவையாதலால்
அவ்வழியாலே அவை தன்னை நலியவே அந்த நலிவுபொறுக்கமாட்டாமற் சொல்லுகிறாளென்க.

கீழ்பாட்டுக்களில் “கார்க்கோடல்பூக்காள்!“ என்றும் “மேல்தோன்றிப்பூக்காள்!“ என்றும் சொன்னது போல்
இப் பாட்டிலும் ‘கோவைக்கொடிகாள்!‘ என்றாவது, ‘கோவைக்கனிகாள்!‘ என்றாவது சொல்லாமல்
கோவை மணாட்டி! என்றதென்னென்னில்; ‘கொடியாகையாலே ஸாபத்ந்யத்தாலே நலிந்தாப் போலே யிராநின்றது“
என்றருளிச்செய்வர் பெரியவாச்சான்பிள்ளை, வடமொழியில் கொடிக்கு வாசகமாகிய லதா, வல்லீ முதலிய
ஸப்தங்கள் ஸ்திரீலிங்கமாதல் அறிக. ஸத்ரீகளைக் கொடிகளாகவே கூறுதலும் வழக்கம்.
இனி மாணாட்டி என்று மணமுனைடமை சொல்லிற்றாகவுமாம். அதாவது பரிமளத்தை உடைத்தாகை.

ஓ! கோவைக்கொடியே நீ உனது சிறந்த கனிகளைக் காட்டி என் உயிரைச் சிதைக்க வேண்டா;
உன் கனிகளைக் காணும் போதே திருமாலிருஞ்சோலை யழகருடைய திருவதாரம் நினைவுக்கு வந்து மிகவும் தளர்ந்தொழிவேன்;
அதுபற்றி எனக்கு மிகவும் அச்சமாயிருக்கிறது என்கிறாள் முன்னடிகளில்.

(அபயம் ஸர்வபூதுப்யோ ததாமி) என்று அபயப்ரதாநம் பண்ணியருளினவன் விஷயத்தில் பயப்பட ப்ரஸக்தி ஏது?
என்று அவை கேட்கக் கூடுமென்று கொண்டு, அவ் வெம்பெருமானுடைய வாக்கு என்னளவில் பொய்யாய் விட்டதென்கிறாள் பின்னடிகளில்.
பாவியான நான் பிறப்பதற்கு முன் அவன் “ஒன்றேயுரைப்பான் ஒருசொல்லை சொல்லுவான்“ என்னும்
ஸத்ய வாக்காயிருந்தானாகிலும், நான் தோன்றினபிறகு என்னுடைய பாவத்தினால் அவன் அஸத் வாக்காய் விட்டான்.
சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய்விட்டான். நாக்கு ஒன்றாயிருந்தாலன்றோ சொல்லும் செய்கையும்
ஒன்றாயிருக்கும் இரட்டை நாக்குப் படைத்தவனான திருவனந்தாழ்வானோடு இடைவிடாத சேர்த்தியாலே
இவனும் அவனைப்போலே இரண்டுகாக்குப் பெற்றானாயினான், (அபயம் ததாமி) என்ற நாக்கு இப்போது இல்லை என்கிறாள்.

தம்பாம்புபோல் – ‘தவிஜிஹ்வ‘ என்றுமு ‘த்விரஸந‘ என்றும்சொல்லப்படுமிறே பாம்பு.
(நாவும் இரண்டுளவாயிற்று) நாக்கு ஒன்றாயிருந்தால் வாக்கும் ஒன்றாயிருக்கும்;
வாக்கு இரண்டுபட்டபடியால் நாக்கும் இரண்டாய் விட்டதென்றிருக்கிறாள்.

நாணிலியேனுக்கே – நான் தவிர மற்றபேர்கள் விஷயத்தில் அவன் ஸத்யவாக்கவே இருக்கக்கூடும்.
வெட்கங்கெட்ட என்விஷயத்தில் மாத்திரமே அவன் த்விஜிஹ்வனாய் விட்டானென்கிறாள்,
இப்படி அவன் பொய்யனாயிருக்கச் செய்தேயும் நான் அவனையே வாய்வெருவா நின்றமைப்பற்றித்
தன்மை வெட்கமற்றவளாகக்ச் சொல்லிக்கொள்ளுகிறாள்.

கோவை மணாட்டி நீ யுன் கொழுங்கனி கொண்டு –
மேல் புறங்களில் நின்றும் கண்ணை மீட்டு பக்கங்களிலே நோக்க
கோவைக் கனிகள் அவன் திரு அதரத்துக்கு ஸ்மாரகங்களாய் இருப்பவை யாதலால்
நலிவு பொறுக்க மாட்டாமல் சொல்லுகிறாள் –
இங்கே கோவைக் கநிகாள் கோவைக் கொடிகாள்-எண்ணாமல்
கோவை மணாட்டி -என்றது என் என்னில்
கொடி யாகையாலே ஸா பத்ன்யத்தாலே நலிந்தால் போலே இரா நின்றது –
கொடி -லதா -வல்லி-போலே மணாட்டி
மணம் உடைமை சொல்லிற்று ஆகவுமாம்-பரிமளத்தை யுடைத்தாகை –

எம்மை ஆவி தொலைவியேல் வாய் அழகர் தம்மை அஞ்சுதும்
ஒ கோவைக் கோடியே
நீ சிறந்த கனிகளைக் காட்டி என் உயிரைச் சிதைக்க வேண்டா –
உன் கனிகளைக் காணும் போதே அழகர் திருவதரம் நினைவுக்கு வந்து நலியா நிற்கிறது –
தளர்ந்து அஞ்சுகிறேன் –
பாவியேன் தோன்றிப் பாம்பணையார்க்கும் தம் பாம்புபோல்
நாவும் இரண்டுள வாய்த்து நாணியிலேனுக்கே
அபயம் சர்வ பூதாப்யோ ததாமி -என்று அபய பிரதானம் பண்ணி அருளினவன்
விஷயத்திலே பயப்பட ப்ரசக்தி எது என்று அவை கேட்க
பாவியான நாண் பிறப்பதற்கு முன்பு
ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் -என்று சத்ய வாக்யனாய் இருந்தாலும்
நான் தோன்றின பிறகு என்னுடைய பாவத்தினால்
அவன் அசத்திய வாக்யனாய் ஆகி விட்டான்
சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றும் ஆக இருக்க –
நாக்கு ஒன்றாய் இருந்தால் சொல்லும் செய்கையும் ஒன்றாய் இருக்கும்
இரட்டை நாக்கு படைத்தவனான திரு வநந்த வாழ்வான் உடன் இடைவிடாத சேர்த்தியால்
இவனும் அவனைப் போலே இரண்டு நாக்கு பெற்றவனாய் ஆயினான்
ஆகையால் -அபயம் ததாமி என்ற நாக்கு இப்போது இல்லை –

தம்பாம்பு போல்
தவி ஜிஹ்வ -தவி ரசன

நாணியிலேனுக்கே
வெட்கம் கேட்ட என் விஷயத்தில் மட்டுமே அவன் தவி ஜிஹ்வானாய் ஆகி விட்டான்
இப்படி அவன் பொய்யனாய் இருக்கச் செய்தேயும்
தான் அவனையே வாய் வெருவா நின்றமை பற்றி
தன்னை வெட்கம் அற்றவளாக சொல்லிக் கொள்கிறாள்-

——————————————————————————

முல்லைப் பிராட்டி நீ யுன் முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம்
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே —10-4-

பதவுரை

முல்லைப் பிராட்டி!–அம்மா! முல்லைக் கொடியே!
ஆழி நங்காய்!–கம்பீரமான இயல்வை யுடையாய்!
நீ–நீ
உன் முறுவல்கள் கொண்டு–(எம்பெருமானது முறுவல் போன்ற) உனது விகாஸத்தாலே
எம்மை–என் விஷயத்திலே
அல்லல் விளைவியேல்–வருத்தத்தை உண்டாக்க வேண்டா,
உன் அடைக்கலம்-(இதற்காக) உன்னைச் சரணமடைகிறேன்.
கொல்லை அரக்கியை–வரம்பு கடந்தவளான சூர்ப்பணகையை
மூக்கு அரிந்திட்ட–மூக்கறுத்துத் துரத்தின
குமரனார்–சக்ரவர்த்தி திருமகனாருடைய
சொல்லும்–வார்த்தையே
பொய் ஆனால்–பொய்யாய் விட்டால்
நான் பிறந்தமையும் பொய் அன்று–நான் பெரியாழ்வார் வயிற்றில் பிறந்ததும் பொய்யாகக் கடவதன்றோ.

கோவைக்கொடியில் நின்றும் கண்ணைத் திருப்பி வேறோரிடத்தே வைத்தாள்,
அங்கே முல்லையானது நன்றாகப் பூத்துக்கிடந்தது, அதைக்கட்டவாறே எம்பெருமானுடைய முறுவல் நினைவுக்கு
வரவே ஆற்றமாட்டாதாளாய் அதின் காலிலே விழுகிறாள்.

வழிபறிக்க வந்த கள்ளனைக் கண்டால் ‘பிரானே! நாயனே! அப்பனே! என்னுமாபோலே முல்லைப்பிராட்டி என்கிறாள்
அம்மா முல்லைக்கொடியே கோடல்பூக்களுக்கும் மேல்தோன்றிப் பூக்களுக்கும் கோவைக்கொடிக்கும்
ஒரு வாறு தப்பிப் பிழைத்தோமென்று நான் மகிழ்ந்திருக்கையில், நீ உன் விகாஸத்தைக் காட்டி என்னை துன்பப்படுத்துவது தகுதியோ?
இனி இப்படி என்னைத் துன்பப்படுத்தாதே, உன்காலிலேவிழுந்து உன்னை வேண்டிக்கொள்ளுகிறேன், என்னை ஹமஸிக்கவேண்டாமம்மா! என்கிறாள்.

ஆழி நங்காய்! – ஆழியென்றதனால் – காம்பீர்யமுடைமை சொல்லப்படுகிறது, நங்காய் என்றதனால் – பரிபூர்த்தி சொல்லப்படுகிறது.
உலகில் துதிப்பவர்கள் இப்படிப்பட்ட குணங்களையிட்டுத் துதிப்பது வழிக்கமாதலால்
ஆண்டாளும் இம்முல்லைக்கொடியை அங்ஙனே துதிக்கின்றாளென்க.
இனி, ஆழி என்றதனால் – வட்டமாயிருக்குந்தன்மை சொல்லிற்றாகவுமாம்.
முல்லைச்செடியை முட்டாக்கிட்டாற்போல் புஷ்பங்கள் வட்டமாகப் பூத்திருக்குமிறே.

இவள் பெரியாழ்வார் திருமகளாயிருந்துவைத்து எம்பெருமானையும் தன்காற்கீழே வீழ்த்தவேண்டியிருக்க
இவள்போய் அசேதங்களின் காலிலே விழும்படி என்னை! என்று சிலர் நினைக்கக்கூடும் என்றெண்ணி,
“எனக்குப் பெரியாழ்வார் திருவயிற்றிற் பிறப்பு அசிஞசித்கரம்“ என்கிறாள் பின்னடிகளில்.

கொல்லையரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் – இராமபிரான், அவருடைய சொல்லாவது –
(மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந) அதாவது – ஒருவன் மெய்யான் அன்போடு என்னை வந்து
பற்றா விட்டாலும் அன்பன்போல் பாவனை செய்துகொண்டு வந்து சேர்ந்தானேலும் அவனையும் நான் ஒருவிதத்திலும்
கைவிடமாட்டேன் என்ற வார்த்தை. இரவுபகல் மாறாடினாலும் என்னுடைய வார்த்தையானது
எந்த க்ஷணத்திலும் எள்ளளவும் மாறாடமாட்டாது என்ற அவருடைய வார்த்தையை என்னளவில் பொய்யாய் விட்டபோது,
பெரியாழ்வார் வயிற்றிற் பிறப்பா எனக்குக் கார்யகரமாகப் போகிறது? என்று அதிலும் அதிசங்கிக்கிறாள்.

கொல்லையரக்கி என்றது – வரம்பு அழிந்தசெயலையுடையவள், அதாவது – மரியாதையைத் தப்பி நடந்தவள் என்றபடி.
பிராட்டியைப் புருஷகாரமாகக் கொண்டு பெருமாளைப்பற்றி உய்ந்து போகலாமாயிருக்க அங்ஙன் செய்யாதே
பிராட்டியின்மீது விபரீதமான எண்ணங்கொண்டு அவளை விழுங்கப் போனாளிறே.

சூர்பணகை மூக்கறுப்புண்டு பொறுக்கமுடியாத துக்கத்தோடும் பரிபவத்தோடும் கதறிக்கொண்டு போகிறவள்.
பெருமானை மனம்போனபடியே நிந்திக்கவேண்டி யிருக்கச்செய்தேயும் “தருணௌ ரூபஸம்பந்நௌ“ என்று
பருவத்துக்கும் அழகுக்கும் தோற்றுப்போனமை தோற்றப் பேசினாளாகையாலே “அரக்கியை முக்கரிந்திட்ட குமரனார்“ என்கிறாள்.

“குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே என்றதற்கு-
“அப்பெருமானுடைய வார்த்தை பொய்யாய்விட்டாலும் என்பிறப்பு பொய்யாய்விடாதிறே“ என்று
பொருள் சொல்லலாமாயினும் வியாக்கியானத்திற்குச் சேராது –
“பொய்யன்றே என்றது பொய்யாமிறே என்கை“ என்றிறே பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்த்து. அன்றே – அன்றோ என்றபடி.

முல்லைப் பிராட்டி நீ யுன் முறுவல்கள் கொண்டு எம்மை
கோவைக் கோடியில் இருந்து கண்ணை திரும்பி வேறு ஒரு இடத்திலே வைக்க
அங்கு முல்லை நன்றாக பூத்துக் கிடக்க
அவன் முறுவல் நினைவுக்கு வர
ஆற்ற மாட்டாதவளாய் அதன் காலிலே விழுகிறாள் –
வழி பறிக்க வந்த கள்ளனைக் கண்டால்
பிரானே நாயனே அப்பனே -என்னுமா போலே -முல்லைப் பிராட்டி -என்கிறாள்
அம்மா முல்லைக் கோடியே
கோவைப் பூக்களுக்கும் மேல் தோன்றி பூக்களுக்கும் கோவைக் கோடிக்கும் ஒருவாறு தப்பி
பிழைத்தோம் என்று மகிழ்ந்து இருக்கையில்

அல்லல் விளைவியேல்
நீ உன் விகாசத்தைக் காட்டி துன்பப் படுத்துவது தகுதியோ –

உன் காலில் விழுந்து வேண்டிக் கொள்கிறேன் -என்னை ஹிம்சிக்க வேண்டா –

ஆழி நங்காய் –
காம்பீர்யம் உடைமை
பரிபூர்தியும்
குணங்களை இட்டு துதிப்பது வழக்கம் என்பதால்
முல்லைக் கொடியையும் அங்கனே துதிக்கிறாள்
ஆழி -வட்டம்
முல்லைச் செடியை முட்டாக்கி இட்டால் போலே
புஷ்பங்கள் வட்டமாய் பூத்து இருக்குமே –

உன் அடைக்கலம் —
இவள் பெரியாழ்வார் திரு மகளாய் இருந்து வைத்து
எம்பெருமானையும் தன கால் கீழே விழ வைக்க கடவையாய் இருக்க
அசேதனங்களின் காலிலே விழும்படி என்னே –

கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்
இராமபிரானார் –
தருனௌ ரூப சம்பன்னௌ-பருவத்துக்கும் அழகுக்கும் தோற்றமை -குமரனார் -என்கிறாள்

சொல்லும் –
அவர் சொல்லாவது
மித்ர பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன –
பாவனையாக வந்தாலும் கை விட மாட்டேன்
இரவு பகல் மாறாடினாலும் என் வார்த்தை எந்த ஷணத்திலும் மாறாடாது
என்ற வார்த்தையும்

பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே –
என் அளவில் பொய்யானால்
பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பா எனக்கு கார்யகரமாகப் போகிறது
என்று அதிலும் அதிசங்கை படுகிறாள் –
அப்பெருமான் உடைய வார்த்தை பொய்யாய் விட்டாலும்
என் பிறப்பு பொய்யாய் விடாது இ றே-என்ற பொருள்
வ்யாக்யானதுக்கு சேராது
பொய்யன்றே என்றது பொய்யாம் இ றே -என்கை -வியாக்யான ஸ்ரீ ஸூ கதி
அன்றே -அன்றோ -என்றபடி-

—————————————————————————————–

பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல்வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி யுடையார் வந்து அருள் செய்து
கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே –10-5-

பதவுரை

பாடும்–பாடுகின்ற
குயில்காள்!–குயில்களே!
ஈடு-(கர்ண கடோரமான) இக் கூசல்
என்ன பாடல்?–என்ன பாட்டு
நல் வேங்கடம் நாடர்–விலக்ஷணமான திருவேங்கட மலையை இருப்பிடமாக வுடைய பெருமான்
நமக்கு–என் விஷயத்திலே
ஒரு வாழ்வு தந்தால்–ஒரு வாழ்ச்சியைப் பண்ணிக் கொடுப்பனாகில் (அப்போது)
வந்து பாடுமின்–(நீங்கள் இங்கே) வந்து பாடுங்கள்
ஆடும்–ஆநந்தத்தாலே) ஆடுகின்ற
கருளன்–பெரிய திருவடியை
கொடி உடையார்–த்வஜமாகக் கொண்டிருக்கிற அப் பெருமான்
அருள் செய்து–க்ருபை பண்ணி
வந்து கூடுவர் ஆயிடில்–(இங்கே) வந்து சேர்வனாகில்
கூவி–(அப்போது உங்களை) வரவழைத்து
நும் பாட்டுக்கள்–உங்களது பாட்டுக்களை
கேட்டுமே–கேட்போம்.

எந்தப் பக்கம் நோக்கினாலும் ஒவ்வொரு புஷ்பம் கண்ணிலே தோற்றி ஹம்ஸகமாயிருந்தபடியாலே
‘கண்ணை மூடிக் கொண்டோமாகில்‘ சுகப்படலாம் என்று நினைத்துக் கண்ணை மூடிகொண்டாள்.
உடனே குயில்களின் பாட்டுக்கள் செவிப்பட்டன. அவற்றைக்கேட்டுத் தரிக்க மாட்டாதாளாய் அக்குயில்களே நோக்கி
‘நீங்கள் ஏன் இப்படி கர்ணகடோரமாகக் கத்துகின்றீர்கள்? போரும் போரும்; உங்கள் பாட்டை நிறுத்துங்கள்‘ என்கிறாள்.

இரண்டருகும் நெருப்புப் பற்றி யெரியா நிற்கச் செய்தே நடுவேயிருந்து சந்தனம் பூசுவாரைப்போலே யிருந்ததீ!,
உங்கள் பாட்டைக் கேட்கும்படியாகவோ இப்போது என்னுடைய தஸையிருப்பது; ஐயோ! என்ன பாட்டுப் பாடுகிறீர்கள்.
ஸம்ஸ்லேஷரஸாநுபவம் செல்லும்போது பாடத்தக்க பாட்டுக்களை நீங்கள் விஸ்லேஷத்தில் பாடாநின்றீர்களே!;
பாவிகள்! பாடினது போரும்; எம்பெருமான் இங்கேயெழுந்தருளி என்னை வாழ்விக்குங்காலம் வாய்க்குமாகில்
அப்போது நீங்கள் இங்குவந்து ஆசைதீரப் பாடுங்கள் என்கிறாள் முன்னடிகளில்.

“எம்பெருமான்“ என்று பொதுப்படையாகச் சொல்லாமல் “நல்வேங்கடநாடர்“ என்று சிறப்பித்து அருளிச்செய்துள்ளமையால்,
அந்தஸ்வாரஸ்யத்துக்கு இணங்கப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார் –
“ஆற்றுப்பெருக்கில் முன்னே சினையாறுபடுமா போலே அவன் வரவுக் குறுப்பான நற்குறிகள் உண்டாயிராநின்றன;
அது பலித்தால் வந்து பாடப்பாரிகோள். ஆச்ரிதர்க்கு அருமைப்படவேண்டாதபடி வந்து நிற்கிறவராய்த்து
பரமபதம் கலவிருக்கை யாயிருக்க, அத்தைவிட்டுத் திருமலையிலே வந்து முகங்காட்டினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலேபோலேயிருந்து பயணம்“.

நமக்கொருவாழ்வுதந்தால் என்றது – உங்கள்பாட்டைக் கேட்கும்படியான காதை எனக்குத் தந்தால் என்றபடி;
இப்போது ஸர்வேந்த்ரியங்களும் அவனாலே அபஹரிக்கப்பட்டு அழிந்துகிடக்கின்றமை அறிக.
வந்துபாடுமின் – இப்போது உங்களுடைய காட்சி எனக்கு அஸஹ்யமாயிருக்கையாலே ஒழிந்துபோங்கள் என்றபடி.

வேங்கடநாடர்வந்து உனக்கு வாழ்வுகொடுக்கும் மையம் எங்களுக்கு எப்படித்தெரியும்?
தெரிந்தாலன்றோ அந்த ஸமயத்தில் நாங்கள்வந்து பாடக்கூடும் என்று அக்குயில்கள் கேட்பனவாகக்கொண்டு கூறுகின்றாள்

(ஆடுங்கருளக்கொடியுடையார் இத்யாதி) அவருடைய வரவுக்கு ஸூசகமாகப் பெரிய திருவடி நாயனார்
சிறகை விரித்துக் கூத்தாடிக்கொண்டு வருவர்; அந்த அடையாளத்தைக் கொண்டே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
அப்படி நீங்கள் தெரிந்து கொள்ளா விட்டாலும் அப்போது நானே உங்களை வரவழைத்து உங்கள் பாட்டைக்கேட்பேன் போங்கள் என்கிறாள்.

பாடும் குயில்காள் ஈதென்ன பாடல்
எந்தப் பக்கம்நோக்கினாலும் ஒவ் ஒரு புஷ்பம் கண்ணிலே தோற்றி
ஹிம்சகமாய் இருந்தபடியாலே
கண்ணை மூடி சுகிகலாம் என்று மூடிக் கொள்ள
குயில்கள் பாட்டுக்கள் செவிப்பட்டன
அவற்றிக் கேட்டு தரிக்க மாட்டாமல் –
இரண்டு அருகும் நெருப்பு பற்றி எரியா நிற்கச் செய்தே
நடுவே இருந்து சந்தனம் பூசுவாரைப் போலே -என்னுடைய தசை –
விஸ்லேஷ தசையிலா சம்ச்லேஷ ரச அனுபவம் செல்லும் போது பாடத் தக்க பாட்டுக்களை பாடா நின்றீர்களே பாவிகாள்

நல்வேங்கட நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின் –
எம்பெருமான் என்று பொதுப் படையாக சொல்லாமல்
நல் வேங்கட நாடர் என்று சிறப்பித்து அருளியது –
ஆற்றுப் பெருக்கில் முன்னே சினை யாறு படுமா போலே
அவன் வரவுக்கு உறுப்பான நற் குறிகள் உண்டாய் இரா நின்றன
அது பலித்தால் வந்து பாடப் பாரி கோள்
ஆஸ்ரிதர்க்கு அருமைப் பட வேண்டாதபடி வந்து நிற்கிறவர் ஆய்த்து-
பரமபதம் கலவிருக்கையாய் இருக்க
அத்தை விட்டு திருமலையிலே வந்து முகம் காட்டினார்
ஸ்ரீ வில்லி புத்தூரிலே போலே இருந்தது பயணம் —

நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின் –
உங்கள் பாட்டை கேட்கும்படியான காதை எனக்குத் தந்தால் -என்றபடி
இப்போது சர்வ இந்த்ரியங்களும் அவனாலே அபஹரிக்கப்பட்டு அழிந்து கிடக்கின்றமை அறிக –

வந்து பாடுமின் —
இப்போது உங்கள் உடைய காட்சி அசஹ்யமாய் இருக்கையாலே ஒழிந்து போமின்

வேங்கட நாடர் வந்து வாழ்வு கொடுக்கும் சமயம் நாங்கள் எப்படி அறிவோம் -என்ன –
ஆடும் கருளக் கொடி யுடையார் வந்து அருள் செய்து கூடுவர்
அவருடைய வரவுக்கு ஸூ சகமாக
பெரிய திருவடி நாயனார் சிறகை விரித்து கூத்தாடிக் கொண்டு வருவர்
அந்த அடையாளத்தைக் கொண்டே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் –

ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே –
அப்படி நீங்கள் தெரிந்து கொள்ளா விடிலும்
அப்போது நான் உங்களை வரவழைத்து -கூவி –
உங்கள் பாட்டைக் கேட்பேன் போங்கள் -என்கிறார்-

———————————————————————————————

கண மா மயில்காள் கண்ணபிரான் திருக் கோலம் போன்று
அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்கு அடி வீழ்கின்றேன்
பண மாடரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள்
மண வாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே–10-6

பதவுரை

கணம்–கூட்டமாயிருக்கிற
மா மயில்காள்!–சிறந்த மயில்களே!
கண்ணபிரான்–கண்ணபிரானுடைய
திருக்கோலம் போன்று–அழகிய வடிவு போன்ற வடிவை யுடையீராய்க் கொண்டு
அணி மா நடம் பயின்று–அழகிய சிறந்த நாட்டியத்திலே பழகி
ஆடுகின்றீர்க்கு–ஆடுகின்ற உங்களுடைய
ஆடி–திருவடிகளிலே
வீழ்கின்றேன்–ஸேவிக்கின்றேன். (இந்த ஆட்டத்தை நிறுத்துங்கள்)
பணம் ஆடு அரவு அணை–படமெடுத்து ஆடுகின்ற திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
பல்பல காலமும்–காலமுள்ளதனையும்
பள்ளி கொள்–பள்ளி கொண்டருளா நின்ற
மணவாளர்–அழகிய மணவாளப் பெருமாள்
நம்மை வைத்த பரிசு–எனக்கு உண்டாக்கித்தந்த லக்ஷணம்
இது காண்மின்–இப்படி உங்கள் காலிலே விழும்படியான தாயிற்று.

சிலமயில்கள் கூட்டங்கூட்டமாக இருந்துகொண்டு கூத்தாடுவதைக்கண்டு தரிக்கமாட்டாதாளாய்
‘இக்கூட்டத்தாடுதலை நிறுத்துங்கள், உங்கள்காலிலே விழுகிறேன்‘ என்கிறாள்.

“நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமால்“ (பெரியாழ்வார் திருமொழி) என்னப்பட்ட எம்பெருமானுக்கு
இவை ஸ்மாரகங்களாய்க்கொண்டு நலிகிறபடியால் “கண்ணபிரான் திருக்கோலம்போன்று“ என்கிறாள்.
அடிவீழ்கின்றேன் – இக்கூத்து ஒழியவேணுமென்று ப்ரபத்திபண்ணுகிறேனென்றபடி.

இப்படி இவள்சொன்னவாறே, அந்தோ! பெரியாழ்வார் திருமகளாகப் பெற்ற பெருமைவாய்ந்த நீ இப்படிச் சொல்லத்தகுமோ?
உன் காலிலேயன்றோ நாங்கள் விழக்கடவோம்“ என்று அம்மயில்கள் சொல்வனவாகக் கொண்டு, கூறுகின்றாள்.
(பணமாடரவணையித்பாதி) “சென்றால்குடையாம் இருந்தால் சிங்காசன்மாம்“ என்றபடி –
திருவனந்தாழ்வானை ஸர்வ ப்ரகாரங்களாலும் அடிமை கொண்டு சிறப்பிக்குமவர் என்னை உங்கள் காலிலே
விழும்படி செய்த பின்பு நான் செய்யலாவதுண்டோ? என்கிறாள்.

“பணவாளரவணை“ என்றும்பாடமுண்டு,
அப்பாடத்தில், படங்களையும் ஒளியையுமுடைய அரவு என்க. வாள் – ஒளி.

கண மா மயில்காள் கண்ணபிரான் திருக் கோலம் போன்று
சில மயில்கள் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு
கூத்தாடுவதைக் கண்டு
தரிக்க மாட்டாமல்

அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்கு அடி வீழ்கின்றேன் –
கூத்தாட்டம் நிருத்துங்கோள்
உங்கள் காலில் விழுகின்றேன் -என்கிறாள் –

நின்றாடு கணமயில் போல் நிறமுடைய நெடுமால் -பெரியாழ்வார் திருமொழி -என்றபடி –
எம்பெருமானுக்கு இவை ஸ்மராககங்களாய் கொண்டு நலிகிற படியால்
கண்ணபிரான் திருக் கோலம் போன்று-என்கிறாள் –

அடி வீழ்கின்றேன் —
இக் கூத்து ஒழிய வேணும் என்று பிரபத்தி பண்ணுகிறேன் -என்றபடி –

இவள் வார்த்தை கேட்டதும் -அந்தோ
பெரியாழ்வார் திருமகளாராய் பெருமை வாய்ந்த உன் காலில் அன்றோ நாங்கள் விழ வேண்டும் -என்று சொல்லக் கேட்டு –
பண மாடரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள்மண வாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே –
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் -என்றபடி
திரு வநந்த ஆழ்வானை சர்வ பிரகாரங்களாலும் அடிமை கொண்டு
சிறப்பிக்குமவர் என்னை உங்கள் காலிலே விழும்படி செய்த பின்பு நான் செய்யலாவது உண்டோ -என்கிறாள்

பண வாளரவணை -என்றும் பாடம் உண்டு –
படங்களையும்
ஒளியையும் உள்ள அரவு -என்றபடி

————————————————————————————————–

நடமாடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை
நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்
குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை
யுடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஓன்று போதுமே–10-7-

பதவுரை

நடம் ஆடி–கூத்தாடிக் கொண்டு
தோகை விரிக்கின்ற–தோகைகளை விரிக்கிற
மா மயில்காள்–சிறந்த மயில்களே!
உம்மை–உங்களுடைய
நடம் ஆட்டம் காண–கூத்தைப் பார்ப்பதற்கு
பாவியேன் நான்–பாவியேன நான்
ஓர் முதல் இலேன்
குடம் ஆடு கூத்தன்–குடக்கூத்தாடினவனான
கோவிந்தன்–கோபாலக்ருஷ்ணன்
கோமிறை செய்து–கேட்பாரற்ற மிறுக்குக்களைப் பண்ணி
எம்மை–என்னை
உடை மாடு கொண்டான்–ஸர்வ ஸ்வாபஹாரம் பண்ணினான்
இனி–இப்படி யிருக்க
ஒன்று–(என் முன்னே கூத்தாடி என்னை ஹிம்ஸிக்கையாகிற) ஒரு காரியம்
உங்களுக்கு–உங்களுக்கு
போதுமே–தகுமோ?

‘உங்கள் கூத்தை நிறுத்துங்கள்‘ என்று மயில்களின் காலிலே இவள் விழுந்து வேண்டிக் கொள்ளவே,
அம் மயில்கள் இவளுடைய எளிமையை நன்று தெரிந்து கொண்டு ‘இவளுக்கு நாம் அநிஷ்டமானதைச் செய்தால்
நம்மை இவள் தண்டிப்பளோவென்று நாம் அஞ்சவேண்டா; இவள் புகலற்றுக் கிடக்கின்றான்;
இவளை நாம் எப்படி ஹிம்ஸித்தாலும் கேட்பாரில்லை என்று எண்ணி முன்னிலும் அதிகமாகத் தோகைகளை
விரித்துக் கூத்தாடத்தொடங்கின; அவற்றை நோக்கி மீண்டும் தன் அவஸ்தையை முறையிட்டுக் கொள்கிறாள்.

நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில்காள் – தோகைவிரித்து நடமாடுகின்ற மாமயில்காள்! என்க.
உள்ள படியே அந்வயிப்பதும் ஒக்கும்.
(உம்மை இத்யாதி) கண்ணுடையவர்கள் உங்கள் கூத்தைக் கண்டால் பரமாநந்தம் பெறுவர்கள் என்பதில் தட்டில்லை;
கண் இழந்திருக்கிற நான் உங்கள் கூத்தை எங்ஙனே காணவல்லேன்? முதல் இலேன் என்றது –
காண்பதற்கு முக்ய ஸாதநமான கண்ணை யுடையேனல்லேன் என்றபடி.
“என்ஐம்புலனும் எழிலுங்கொண்டு“ என்றபடி எல்லா இந்திரியங்களையுங் கொள்ளை கொண்டானிறே எம்பெருமான்.

“பாவியேன் நானோர்முதலிலேன்“ என்று சொன்னதை விரித்துரைக்கின்றனா பின்னடிகளில்
நாற்சந்தியிலே குடக்கூத்தாடி அக்கூத்திலே எல்லாரை ஈடுபடுத்திக்கொண்டவனாய், பசுக்களுக்கும் இடையர்க்குங்கூட பண்ணி
என்னுடைய ஸர்வஸ்பத்தையும் கொள்ளைகொண்டான், இப்படிப்பட்ட தஜையிலே நீங்களும் என்னைவந்து ஹிம்ஸிப்பது தகுதியோ? என்கிறாள்.

கோமிறை -கோ- அரசர்கள், மிறை – மிறுக்கு; அரசர்கள் செய்யும்படியான மிறுக்காவது ஈரநெஞ்ச இளநெஞ்சு இல்லாமல்
புரியங் கொடுமைகள் கொடுமைகள். கோக்கள் மிறுக்கு செய்யுமாபோலே செய்து என்படி. அரசர்கள் எதுசெய்தாலும் கேட்பாரில்லையே.

(எம்மையுடை மாடு கொண்டான்) எம்மை – எங்களுடைய உடை – ஆடையையும், மாடு – செல்வத்தையும், கொண்டான் என்றும்;
எம்மையுடை- எங்களுடைய , மாடு – ஸர்வஸ்வத்தையும் என்றும் பொருள்கொள்ளலாம்.
‘மாடு பொன் பக்கஞ் செல்வம்‘ என்ற நிகண்டு அறியத்தக்கது.
திருவாய்மொழியில் “மாலுக்கு வையமளந்த மணாளற்கு“ என்ற திருவாய்மொழியிற் கூறியபடி
எல்லாவற்றையும் இழந்துகிடக்கிற என்னை நீங்களும் நலிகை ப்ராப்தமன்று என்கிறாள்.

நடமாடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள்
காலில் விழுந்து வேண்டிக் கொண்டதும்
இவள் எளிமையை புரிந்து கொண்டு
நன்றாக தோகை விரித்து ஆட
அவற்றை நோக்கி மீண்டும் முறையிட்டுக் கொள்கிறாள்
தோகை விரித்து நடமாடுகின்ற மா மயில்காள்
உள்ளபடியே அன்வயிக்கவும் அமையும் –

உம்மை நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன் –
கண் உடையவர்கள் உங்கள் கூத்தை கண்டால் பரமானந்தம் பெறுவார்கள்
கண் இழந்த நான் உங்கள் கூத்தை காண எங்கனம் வல்லேன் –

முதல் இலேன் -என்றது
காண்பதற்கு முக்ய சாதனமான கண்ணை யுடையேன் அல்லேன் -என்றபடி –
என் ஐம்புலனும் எழிலும் கொண்டு -என்றபடி
எல்லா இந்த்ரியங்களையும் கொல்லை கொண்டான் இ றே எம்பெருமான் –

குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை
யுடைமாடு கொண்டான்-
நால் சந்தியிலே குடக் கூத்தாடி
அக்கூத்திலே எல்லாரையும் ஈடுபடுத்திக் கொண்டு
பசுக்களுக்கும் இடையருக்கும் சுலபனான அவன்
ஸ்வதந்த்ரர் பண்ணும்படியான மிறுக்குகளை என் விஷயத்திலே பண்ணி
என்னுடைய சர்வஸ்வத்தையும் கொள்ளை கொண்டான்
இப்படிப் பட்ட தசையிலே நீங்களும் என்னை வந்து ஹிம்சிப்பது தகுதியோ
கோ ஸ்வாமி
மிறை -மிறுக்கு
ஈர நெஞ்சு இள நெஞ்சு இல்லாமல் புரியும் கொடுமைகள்
கேட்பார் இல்லையே அரசர் எது செய்தாலும் —

எம்மை யுடைமாடு கொண்டான்-
எம்மை -எங்களுடைய
உடை -ஆடையையும்
மாடு -செல்வத்தையும் கொண்டான்
எம்மையுடை -எங்களுடைய
மாடு -சர்வ்ஸ்வத்தையும் கொண்டான்
மாடு -பொன் பக்கல் செல்வம் -நிகண்டு
மாலுக்கு வையம் அளந்த மணாளர் க்கு -திருவாய் மொழியில் அருளின படி
எல்லா வற்றையும் இழந்து கிடக்கிற என்னை –

உங்களுக்கு இனி ஓன்று போதுமே –
நீங்களும் நலிகை பிராப்தம் அன்று-

—————————————————————————————————–

மழையே மழையே மண் புறம் பேசி உள்ளாய் நின்ற
மெழுகூற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற
அழகப பிரானார் தம்மை யென்னெஞ்சகத்து அகப்பட
தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே–10-8-

பதவுரை

மழையே மழையே!–ஓ மேகமே!
புறம்–மேற் புறத்திலே
ஊற்றும்–என்னை அணைந்து அந்தஸ் ஸாரமான ஆத்மாவை உருக்கி யழிப்பவராய்.
நல் வேங்கடத்துள் நின்ற அழகப் பிரானார் தம்மை–விலக்ஷணமான திருவேங்கடமலையிலே நிற்குமவரான அழகிய பெருமாளை
மண் பூசி–மண்ணைப் பூசி விட்டு
உள்ளாய் நின்ற மெழுகு ஊற்றினால் போல்–உள்ளே யிருக்கும் மெழுகை உருக்கி வெளியில் தள்ளுமா போலே
என் நெஞ்சந்து அகப்பட தழுவ நின்று–என் நெஞ்சிலே ஸேவை ஸாதிக்கிறபடியே நான் அணைக்கும்படி பண்ணி
என்னை–என்னை
ததைத்துக் கொண்டு–அவரோடே நெருக்கி வைத்து (பிறகு)
ஊற்றவும் வல்லையே–வர்ஷிக்க வல்லையோ?

விண்ணீல மேலாப்பிலே கண்ட மேகங்கள் வர்ஷித்த பிறகு விகாஸத்தோடும் விலாஸத்தோடும் கூடிக் கிளர்ந்த
பதார்த்தங்களை நோக்கி வார்த்தை சொல்லிக் கொண்டு வந்து ஆண்டாள் இப்போது பழையபடியே மேகங்களைவிளித்துக் கூறுகின்றாள் – ;
மேகங்களானவை சிலபதார்த்தங்களை உத்தீபங்களாகக் கிளப்பி அவற்றின் வழியாலே நலிந்தது போதாமல்
பின்னையும் விடாதே நின்று வர்ஷித்து ஸாக்ஷாத்தாகவும் நலியத் தொடங்கினபடியாலே அவற்றை நோக்கிக் கூறுகின்றன்ளென்க.
மழை பொழிதலும் விரஹிகளுக்கு உத்தீபகமிறே.

இப்பாட்டில் அந்த பரம்பரையாக மூன்று எழுத்துப் பிழைகள் நெடுநாளாகவே நேர்ந்திருக்கின்றன.
முதலடியின் முடிவில் “உள்ளாய்நின்று“ எனவும் இரண்டாமடியின்முடிவில் “வேங்கடத்துள்நின்று“ எனவும்
ஈற்றடியின் முதலில் “தழுவிநின்று“ எனவும் பெரும்பாலும் பண்டிதபாமா விபாகமற அளைவராலும் ஓதப்பட்டுவருகின்றது.
மூலப்பதிப்புகள் எல்லாவற்றிலும் இப்பிழைகள் உள்ளன. அடைவே, “உள்ளாய்நின்ற“ எனவும்,
“வேங்கடத்துள் நின்ற“ எனவும்; “தழுவநின்று“ எனவும் திருத்திக்கொள்க.
கோயில் பத்தராவிஸ்வாமி இப்பிழைகளைக் குறிப்பாக எடுத்துக்காட்டினர்.

மழையேயென்று ஒருகாற்சொல்லாமல் இருகாற்சொல்லிவிளித்தது –
மேகங்கள் எத்தனைதூரஞசென்றாலும் அவற்றின்செவியிலே இந்த்க் கூக்குரல் உறைப்பதற்காகவென்ப.

(மண்புறம்பூசி இத்யாதி) வெண்கலப்பதாத்திரம் முதலியன நிருமிப்பவர்கள், முதலில், பாத்திரத்தின் வடிவத்துக்கு ஒப்ப
மண்ணைக்கட்டி அதன்மேல் சுற்றிலும் மெழுகைவளைத்து, பின்னையும் அம்மெழுகின்மேலே மண்ணைப் பூசி,
மர்மமாக ஓரிடத்திலே த்வாரமாக்கி, உள்ளிருக்கும்மெழுகை வெதுப்பி அவ்வழியாலே வெளியே ஊற்றுவர்கள்.
அவ்வாறாக ஊற்றுகின்றார் வேங்கடத்துள் நின்ற அழகப்பிரானார் என்கிறவிதனால் தேறுங்கருத்து யாதெனில்,
மேலே மண்ணை இணைத்து உள்ளிருக்கும் மெழுகைத் தள்ளிவிடுவதுபோல, அப்பெருமானும் உடம்பின் மேலே
அணைந்து உள்ளிருக்கும் ஸந்து உருகிக் கழிந்து போம்படி செய்யவல்லவன் என்றதாகிறது. –
“உடம்பிலே அணைந்து அகவாய் குடிபோம்படி பண்ணுமவராய்ந்து“ என்றருளிச்செய்தார் பெரியவாச்சான் பிள்ளையும்.

ஊற்றும் என்ற விஸேஷணம் அழகப்பிரானாரிடத்து அந்வயிக்கும். என்னை இப்பாடுபத்துகைக்கு
அப்பெருமானிடத்துள்ள முக்கியஸாமக்ரி அழகுதான் என்றகருத்துத் தோன்ற அழகப்பிரானார் தம்மை என்கிறாள்.
(என்னெஞ்சத்தகப்பட இத்யாதி.) அப்பெருமான் என்நெஞ்சில் ப்ரகாஸிக்கிறாப் போலிருக்கிறானத்தனைபொழிய,
அவனைநான் அணைக்கவிரும்பிக் கையை நீட்டப் புகுந்தால் அகப்படுவதில்லை. இப்படிநான் நோவுபடவொண்ணாமல்
அப்பெருமான் எனது நெஞ்சில் ப்ரதிபாஸிக்கும்படியே அவனை நான் அணைக்கும்படி பண்ணிவைத்து
(அதாவது, உஷையையும் அநிருத்தனையும் கூடவிலங்கிட்டு வைத்தாப்போலே அவனையும் என்னையும் ஒரு வ்யக்தியாக நெருக்கி)
ஓமேகமே! பிறகு நீ வர்ஷிப்பாயாகில் அப்போதன்றோ உன்னுடைய வர்ஷம் ஆநந்தகரமாயிருக்கு மென்கிறாளென்க.
விஸ்லேஷ காலத்தில் வேண்டாத வர்ஷந்தானே ஸம்ஸ்லேஷஸமயத்தில் உத்தேஸ்யமாயிருக்குமிறே.

இப்பாட்டையும் மேற்பாட்டையும் திருமலை நம்பி அநுஸந்திக்கும்போதெல்லாம் நெடும்போது
கண்ணுங் கண்ணநீருமாயிருந்து உருகிப்போவராம்;
அதுபற்றி இவ்விரண்டுபாட்டையும் நம்பூருவாசாரியர்கள் மிகவும் ஆதரித்துப் போருவர்களாம்.

மழையே மழையே –
விண்ணீல மேலாப்பில் கண்ட மேகங்கள் வர்ஷித்த பிறகு
விகாசத்தொடும் விலாசத்தொடும் கிளர்ந்த பதார்த்தங்களை நோக்கி
வார்த்தை சொல்லிக் கொண்டு வந்த ஆண்டாள்
பழையபடி மேகங்களை விளித்து கூறுகிறாள் –
மேகங்கள் சில பதார்த்தங்களை உத்தீபகங்களாக கிளப்பி
அவற்றின் வழியாக நலிந்தது போதாமல்
விடாதே நின்று வர்ஷித்து சாஷாத்தாகவும் நலியத் தொடங்க -அவற்றைப் பார்த்து கூறுகிறாள்
மலை பொழிதலும் விரஹி களுக்கு உத்தீபகம் இ றே –
இருகால் உரைத்தது மேகங்கள் எத்தனை தூரம் சென்றாலும் இக் கூக்குரல் உறைப்பதற்காக

மண் புறம் பேசி உள்ளாய் நின்ற -மெழுகூற்றினால் போல்
உள்ளாய் நின்று -பிழையான பாடம்
வேங்கடத்துள் நின்று -என்பதுவும் பிழையான பாடம்
மேலே மண்ணை இணைத்து உள்ளிருக்கும் மெழுகைத் தள்ளி விடுவது போலே
உடம்பின் மேலே அணைந்து
உள்ளிருக்கும் சத்து உருகி அழிந்து போம்படி செய்ய வல்லவன்

ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற அழகப பிரானார் தம்மை யென்னெஞ்சகத்து அகப்பட
தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே
உடம்பிலே அணைந்து
அகவாய் குடிபோம்படி
பண்ணுமவர் ஆய்த்து அழகப பிரானார்
தழுவி நின்று -பிழையான பாடம்

ஊற்றும் -விசேஷணம் அழகப பிரான் இடமும் அன்வயிக்கும்
இப்பாடு படுத்துவது அவர் அழகாலே -என்று காட்டி அருள
அழகப பிரானார் தம்மை -என்கிறாள்
அழகு தான் முக்கிய சாமக்கிரி –
அப்பெருமான் என் நெஞ்சில் பிரகாசிக்கிறாப் போலே இருக்கிறான் அத்தனை ஒழிய
அவனை அணைக்க விரும்பி கையை நீட்டப் புகுந்தால் அகப்படுவது இல்லை –
இப்படி நான் நோவு பட ஒண்ணாமல்
அப்பெருமான் நெஞ்சில் பிரகாசிக்கும்படியே
அவனை நான் அணைக்கும்படி பண்ணி வைத்து
உஷையையும் அநிருத்தனையும் கூட விலங்கிட்டு வைத்தால் போலே
எங்கள் இருவரையும் ஒரு வ்யக்தியாக நெருக்கி
நீ வர்ஷிப்பாய் ஆகில் ஆனந்தகரமாய் இருக்கும்

இப்பாட்டையும்
மேல் பாட்டையும்
அனுசந்திக்கும் பொழுது எல்லாம்
திருமலை நம்பி
கண்ணும் கண்ணநீருமாய் இருந்து உருகிப் போவாராம்
அது பற்றி இரண்டு பாட்டையும் நம் பூர்வர்கள் மிகவும் ஆதரித்துப் போவார்கள் –

—————————————————————————————————-

கடலே கடலே யுன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என்
நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே–10-9-

பதவுரை

கடலே கடலே!–ஓ கடலே!
உன்னை–(தனக்குப் படுக்கை யிடமாக வாய்ந்த) உன்னை
கடைந்து–(மலையை யிட்டுக்) கடைந்து
கலக்குறுத்து–கலக்கி
உடலுள் புகுந்து நின்று–(உனது) சரீரத்திலே புகுந்திருந்து
ஊறல் அறுத்தவற்கு–ஸாரமான அமுதத்தை அபஹரித்தவராய் (அவ்வாறாகவே)
என்னையும் உடலுள் புகுந்து நின்று–என் உடலிலும் புகுந்திருந்து
ஊறல் அறுக்கின்ற–என் உயிரை அறுக்குமவரான
மாயற்கு–எம்பெருமானுக்கு (விண்ணப்பம் பண்ணும்படி)
என் நடலைகள் எல்லாம்–என் துக்கங்களை யெல்லாம்
நாக அணைக்கே–அவர் படுக்கையான திருவனந்தாழ்வானிடத்தில்
சென்று–நீ போய்
உரைத்தியே–சொல்லுவாயா? (சொல்ல வேணும் என்கை)

அநந்தரம், கடலின் ஓதம் காதில்விழத் தொடங்கின்று, கடலே! என்று ஒருகால் அதனைநோக்கிச் சொன்ன வளவிலும்
அது தன் கோஷத்தையே பெருக்கக் கிளப்பிக் கொண்டிருக்க, அந்தக் கோஷத்தையே பெருக்கக் கிளப்பிக் கொண்டிருக்க,
அந்தக் கோஷத்தைக் கீழ்ப்படுத்தித் தன்னுடைய த்வநியே ஓங்கும்படி கடலேகடலே! எனவிளித்து ஒருவார்த்தை சொல்லுகின்றாள்.

“மாலுங் கருங்கடலே! என்நோற்றாய்! வையகமுண்டாலினிலைத் துயின்ற வாழியான்
கோலக் கருமேனிச் செங்கண்மாற் கண்படையுளென்றும், திருமேனி நீதீண்டப்பெற்று“ (முதல்திருவந்தாதி) என்றபடி
எம்பெருமானுக்கும் கடலுக்கும் நெருங்கின ஸம்பந்தம் இருக்கின்றமையால் அந்தஸம்பந்தத்தையே பற்றாசாகக்கொண்டு
கடலைப் பிரார்த்திக்கின்றாள் –
நான்படும் பாட்டை * அரவணை மேற்பள்ளிகொண்ட முகில்வண்ணன் பக்கலிலே நீதெரிவிக்க வேணுமென்கிறாள்.

தனக்கு உபகாரம் செய்யுமவர்களை வேண்டியமட்டும் ஹிம்ஸித்து அவர்களிடத்துள்ள ஸாரத்தையும் கொள்ளை கொள்பவன் எம்பெருமான் –
என்னுமிடம் விளங்கக் கூறுவன முன்னடிகள். கடலானது நமக்குப் படுக்குமிடமாயிற்றேயென்று சிறிதும் நோக்காமல்
மலைகளையெல்லாங் கொணர்ந்து உன்னுள்ளே போட்டு உன்குடல் குழம்பும்படி உன்னைக் கடைந்து
கலக்கினதுமல்லாமல் உன்னோடே அன்புடன் அணைந்து கிடக்கிறாப் போற்கிடந்து உன்பக்கல் ஸாரமாயிருந்த
அம்ருதத்தைக் கொள்ளை கொள்வித்தவனன்றோ அவன் என்கிறாள்.

“நீதான் என்செய்தாய்? தூசித்தலையிலே படையறுப்பாரைப்போலே உன்னையன்றோ நெருக்கிக் கடைந்து கலங்கப்பண்ணிற்று,
படுக்கையென்றும் பாராதேயன்றோ நெருக்கிற்று; இடங்கொடுத்தார் நெஞ்சிலே கல்லையிட்டு நெருக்கிச் சாறு பெறுத்துமவரன்றோ“
என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி ஸேவிக்கத்தக்கது.

உன்னை இப்பாடுபடுத்தியதுபோலவே என்னையும்படுத்தா நின்றானெகிறாள் மூன்றாமடியில்.
மேலோடே அணைந்து உள்ளே பசையறுத்தபெருமான் என்கிறாள். மாயற்கு என்றது அவன் இப்பாடுபடுத்தச் செய்தேயும்
“ஆகிலுங்கொடிய வென்னெஞ்சமவனென்றே கிடக்குமெல்லே!“ என்றபடி அவனையே பற்றி நிற்கும்படியான மாயமுடையவன் என்றபடி.
நடலை- துக்கம். நாகணைக்கே சென்று உரைத்தி – சென்றால் குடையாமிருந்தால் சிங்காசனமாம்“ என்றபடி
ஸர்வ்வித கைங்கரியங்களும் திருவனந்தாழ்வானொருவன் இடத்தில் தானோ கொள்ள வேணும்,
அத்தகைய கைங்கரியங்களுக்கு அடியோம் உரிமைப்பட்டோமல்லோமோ? என்று சொல்ல வேணுமென்பது உள்ளுறை.
அன்றியே திருவனந்தாழ்வானைப் புருஷகாரமாகக் கொண்டு சொல்ல வேணுமென்பதாகவுமாம்.

கடலே கடலே –
அனந்தரம் கடலின் ஓதம் காதில் விழத் தொடங்கிற்று
ஒரு கால் கடலே -என்று அதனை நோக்கிச் சொன்ன அளவிலும் கோஷத்தைக் கிளப்பிக் கொண்டு இருக்க
அந்த கோஷத்தை கீழ்படுத்தி தன்னுடைய த்வனியே ஓங்கும்படி-
கடலே கடலே -என்று
விளித்து ஒரு வார்த்தை சொல்கிறாள் –
மாலும் கருங்கடலே என் நோற்றாய் வையகம் யுண்டான்
ஆலினிலைத் துயின்ற ஆழியான்
கோலக் கருமேனி செங்கண் மால் கண் படையுள் என்றும்
திரு மேனி நீ தீண்டப் பெற்று -முதல் திருவந்தாதி
கடலுக்கும் எம்பெருமானுக்கும் நெருங்கின சம்பந்தம்
இருக்கின்றமையால்
அந்த சம்பந்தமே பற்றாசாக கடலை பிரார்திக்கின்றாள்

யுன்னைக் கடைந்து கலக்குறுத்து உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு –
தனக்கு உபகாரம் செய்தவர்களை வேண்டியமட்டும் ஹிம்சித்து
சாரம் கொள்பவன்
கடலானது நமக்குப் படுக்கும் இடம் ஆயிற்றே என்று சிறிதும் நோக்காமல்
மலைகளை எல்லாம் கொணர்ந்து
உன் உள்ளே போட்டு
உன் குடல் குழம்பும்படி
உன்னைக் கடைந்து கலக்கினது அல்லாமல்
உன்னோடு அன்புடன் அணைந்து கிடக்கிறார் போலே கிடந்தது
உன் பக்கல் சாரமாய் இருந்த அம்ர்தத்தை கொள்ளை கொள்வித்தவன் அன்றோ –
நீ தான் என் செய்தாய்
தூசித் தலையிலே படை அறுப்பாரைப் போலே உன்னை அன்றோ
நெருக்கிக் கடைந்து கலங்கப் பண்ணிற்று
இடம் கொடுத்தார் நெஞ்சிலே
கல்லை இட்டு
நெருக்கிச்
சாறு பெருத்துமவர் -அன்றோ —

என்னையும் உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு-
அது போலே என்னையும்
மேலோடு அணைந்து
உள்ளே பசை அறுத்த பெருமான் –

மாயற்கு -என்றது
அவன் இப்பாடு படுத்தச் செய்தேயும்
ஆகிலும் கொடிய என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே -என்றபடி
அவனையே பற்றி நிற்கும்படியான மாயம் யுடையவன் -என்றபடி –

என் நடலைகளை எல்லாம்
நடலை -துக்கம்

நாகணைக்கே சென்று உரைத்தியே –
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் -என்றபடி
சர்வவித கைங்கர்யங்களையும்
திரு வநந்த ஆழ்வான் ஒருவன் இடமே கொள்ள வேணுமோ
அத்தகைய கைங்கர்யங்களுக்கு அடியோம் உரிமைப் பட்டோம் அல்லையோ
அன்றியே
திரு வநந்த ஆழ்வானை புருஷாகாரமாகக் கொண்டு சொல்ல வேணும் –

————————————————————————————————–

நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-

பதவுரை

என் நல்ல தோழி!–எனது உயிர்த் தோழியே,
நாக அணைமிசை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே சயனித்திருக்கிற
நம் பரர்–நம் பெருமாள்
சிறு மானிடவர்–க்ஷுத்ர மநுஷ்யரா யிரா நின்றோம் (இப்படிப்பட்ட நாம்)
என் செய்வது–என்ன செய்யலாம்?
வில்லி புதுவை விட்டுசித்தர்–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு நிர்ஹகரான பெரியாழ்வார்
செல்வர்–பெருஞ்செல்வம் படைத்தவர்
பெரியர்–எல்லாரினும் மேற்பட்டவர்
நாம்–நாமோ வென்றால்
தங்கள் தேவரை–தமக்கு விதேயரா யிருக்கிற அப் பெருமானை
வல்ல பரிசு–தம்மால் கூடின வகைகளாலே
வருவிப்பரேல்–அழைப்பராகில்
அது காண்டும்–அப்போது (அவனை) நாம் ஸேவிக்கப் பெறுவோம்

ஆண்டாள் இப்படி பகவத்விரஹத்தாலே ஆற்றமாட்டாதாளாய்ப்படுகிற அலமாப்பைக் கண்ட உயிர்த்தோழியானவள்.
‘ஐயோ! இவள் இப்பாடுபடுகின்றாளே! இவளை நாம் எப்படித் தேற்றுவிப்பது! ஒருவழியும் தெரியவில்லையே! என்று
சிந்தித்து வ்யஸநித்திருக்கையில், ஆண்டாள் அவ்வுயிர்த்தோழியைநோக்கி
‘நீ அஞ்சவேண்டா; ஜீவிப்பதற்கு ஒருவழி கண்டேன்காண்‘ என்கிறாள்.

திருவனந்தாழ்வான்மேல் ஸயனித்தருளுமவராய் ஸ்ரிய பதியாய்ப் பரம புருஷராயிருக்கிறவரை அதிக்ஷுத்ரராயிருக்கிற
நாம் எங்ஙனே அணுகமுடியும்? “அம்மானாழிப்பிரானவன் எவ்விடத்தான்யானார்?“ என்னுமாபோலே அவருடைய
பெருமைக்கும் நம்முடைய சிறுமைக்கும் எவ்வளவோ வாசியுண்டாயிருக்க அவரை நாம் வளைப்பிடமுடியுமோ? முடியாது.
ஆகில் நாம் இழந்தே போகவேண்டியதேர்வென்னில், இழவாமைக்கு ஒருவழியுண்டு;
அப் பெரியவர் நமக்கு வசப்பட மாட்டாராயினும் நம் அண்ணலான் பெரியாழ்வார்க்கு வசப்படாதிருக்க அவரால் முடியாது.
அந்த நாகணைமிசைநம்பரர் தாமே பெரியாழ்வாரிடத்தில் கோற்கீழ்க்கன்றாயிருப்பர்.
“பூச்சூட்டவாராய்“ என்றும் “நீராடவாராய்“ என்றும் “காப்பிடவாராய்“ என்றும் அவர் அழைத்தவாறே
அப் பெரியவர் பதறி ஓடி வருவர்; அப்போது நாம் எளிதாக அவரை ஸேவிக்கப் பெறுவோமென்கிறாள்.

வல்லபரிசுவருவிப்பரேல் – ஒருபூவையிட்டு வரப்பண்ணவுமாம், ஒரு இசையைச்சொல்லி இசைவிக்கவுமாம்;
கிரியையறுத்து வரப்பண்ணவுமாம், திருமஞசனத்தைச் சேர்த்து அழைக்கவுமாம்; திருக்குழல் பணியைச் சேர்த்துவைத்து அழைக்கவுமாம் ;
திருவந்திக் காப்பிட்டு அழைக்கவுமாம்;
அன்றிக்கே, அவர் தம்மை முன்னிட்டாப்போலே அவர் தமக்குப்புருஷகாரமாவாரை முன்னிட்டு வரப் பண்ணவுமாம்
அவ்வழியாலே பெறக்கடவோம்“ என்ற வியாக்கியமான ஸூக்தியின் போக்யதை அநுபவிக்கத்தக்கது.

இத்திருமொழிக்குப் பலஸ்ருதி அருளிச்செய்யாமல் இப்பாட்டே அதன் ஸ்தாநத்தில் நின்றது.
பாகவத ஸம்பந்தத்தைக் கொண்டு உஜ்ஜீவிக்கப் பெறுவர்கள் என்பதே இத் திருமொழிக்கும் பல ஸ்ருதியாகக் கொள்ளத்தக்கது.

ஆண்டாள் இப்படி பகவத் விரஹத்தாலே
ஆற்ற மாட்டாளாய் படுகிற அலமாப்பைக் கண்ட உயிர் தோழி
இவளை எப்படி தேற்றுவிப்பது வழி தெரிய வில்லையே என்று சிந்தித்து வ்யசநித்து இருக்கையில்
ஆண்டாள்
நீ அஞ்ச வேண்டா
ஜீவிப்பதற்கு ஒரு வழி கண்டேன் நான் -என்று அருளிச் செய்கிறாள் –
நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்-செல்வர் பெரியர்-
திரு வநந்த ஆழ்வான் மேல் சயனித்து அருளுமவராய்
ஸ்ரீ யபதியாய் –
பரம புருஷராய் இருக்கிறவரை

சிறு மானிடவர் நாம் செய்வது என் –
ஷூத்ரராய் இருக்கிற நாம்
எங்கனே அணுக முடியும்
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார்-என்னுமா போலே
அவருடைய பெருமைக்கும் நம்முடைய சிறுமைக்கும்
எவ்வளவோ வாசி உண்டாய் இருக்க
அவரை நாம் வளைப்பிட முடியுமோ -முடியாது
ஆகில் நாம் இழந்தே போம் இத்தனையோ
இழவாமைக்கு ஒரு வழி உண்டு –

வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே –
அப்பெரியவர் நமக்கு வசப்படார் ஆயினும்
நம் அண்ணலான பெரிய ஆழ்வாருக்கு வசப்படாது இருக்க அவரால் முடியாதே
அந்த நாகணை மிசை நம்பரர் தாமே
பெரியாழ்வார் இடத்தே
கோற்கீழ்க் கன்றாய் இருப்பார்
பூச் சூட வாராய் -என்றும்
நீராட வாராய் -என்றும்
காப்பிட வாராய் -என்றும்
அவர் அழைத்தவாறே அப்பெரியவர் பதறி ஓடி வருவர்
அப்போது நாம் அவரை எளிதாக சேவிக்கப் பெறுவோம் –

வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே –
ஒரு பூவை இட்டு வரப் பண்ணவுமாம்-
ஒரு இசையைச் சொல்லை இசைவிக்க்கவுமாம் –
கிரியை அறுத்து வரப் பண்ணவுமாம் –
திரு மஞ்சனத்தைச் சேர்த்து அழைக்கவுமாம் –
திருக் குழல் பணியைச் சேர்த்து வைத்து அழைக்க்கவுமாம் –
திருவந்திக் காப்பிட்டு அழைக்க்கவுமாம் –
அன்றிக்கே
நான் அவர் தம்மை முன்னிட்டாப் போலே
அவர் தமக்கு புருஷகாரமாமவரை முன்னிட்டு வரப் பண்ணவுமாம்
அவ வழியாலே பெறக் கடவோம்

இத்திருமொழிக்கு பல ஸ்ருதி அருளிச் செய்யாமல்
இப்பாட்டே அதன் ஸ்தானத்தில் நின்றது
பாகவத சம்பந்தத்தைக் கொண்டு உஜ்ஜீவிக்கப் பெறுவார்கள் என்பதே
இத் திரு மொழிக்கும் பல ஸ்ருதி யாகக் கொள்ளக் கடவது-

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே -அண்ணங்கராச்சார்யர்  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading