பிரவேசம் –
தொட்டுதைத்து நலியேல் கண்டாய் -என்னும்படியாக
கண்ணபிரான் ஆய்ச்சிகள் மேல் வந்து தீண்டி
எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் -என்னும்படியாக
தனித் தனியே உடம்பாய் இருக்கை அன்றிக்கே
ஒரு உடம்பே என்னும்படி கலவி ஏற்பட
இரும்பு காய்ந்து பொருந்துவது போல்
பிரிந்து கூடா விடில் இரண்டு தலையும் அழியும் என்று பந்து வர்க்கங்கள் நினைத்து
சிறுப் பெண்களை இழக்க ஒண்ணாது
இங்கனே ஆனபின் இனி போக்கடி என்
என்று பார்த்து இவர்களைக் கொண்டு போய் நிலவறைகளிலே அடைக்க
அவர்களும் பிரிவு ஆற்ற மாட்டாமல் வருந்த
கண்ண பிரானும் அவர்களில் மேலாக வருந்திக் கிடக்க
பெண்களின் நிலைமையை ஆராய்ந்த தாய் தந்தையர்
இவர்களை நாம் முற்ற வியேதிக்கில் நாம் இப் பெண்களை இழந்து விடுவோம்
நாமே சேர்த்து விட்டோம் ஆகவும் ஒண்ணாது
இனி இங்கனே ஒரு வழி இடுவோம்
பெண்கள் வரலாபத்தின் பொருட்டு பனி நீராடுகை என்று ஒரு செய்தி உண்டு
அதனை இவர்கள் செய்யக் கடவர்கள்
தங்கள் நினைவில் அதுவும் பலிக்கிறது
நாம் இது தன்னை அழித்தோம் ஆகாமல் ஒழிகிறோம்
என்று இவர்கள் தங்கள் தாங்களில் நிர்ணயம் பண்ணி இருக்க-
கண்ணபிரானும் பிரிந்த போதே தொடங்கி ஊரில் விசேஷங்களை
ஆராயுமவன் ஆகையாலே பஞ்ச லஷம் குடிப் பெண்களுக்கும் தனித்தனியே ஆளிட்டு
நடந்தவற்றையும் நடக்கின்றவற்றையும் நடக்கப் போகின்றவற்றையும் ஆரய்ந்து அறிந்து
பனி நீராடப் போகப் போகிற ஆய்ச்சிகளின் இன்னே தானும் போகப் போவதாக கணிசித்து இருக்க-
ஆய்ச்சிகளும் கண்ணபிரான் உடைய சம்ச்லேஷம் பொறுக்க முடியாது
அதுக்கு மேலே விஸ்லேஷ வ்யசனம் மிகவும் அசஹ்யம்
சம்ச்லேஷமோ விச்லேஷமாய் அல்லது இராது
ஆனபின்பு சம்ச்லேஷத்திது பின்பு வருத்தப் படுவதில் காட்டிலும்
முந்துற முன்னமே விரஹ தாபத்துக்கு பரிஹரமாக நீரிலே போய் படிந்து முழுகி
ஆஸ்வசித்து இருக்க அடுக்கும்
அங்கன் செய்யும் அளவில் நாமும் அவனுமாய் முன்பு குளிக்கும் பொய்கைகளில் புகுந்தால் அவன் அறிந்து வரும்
அவன் அறியாத ஒரு பொய்கை தேடித் போக வேணும்
அங்கன் போகும் அளவில் எல்லாரும் திரண்டு போகில் அவன் வழி அறிவன்
ஆன பின்பு ஒருவர் ஒருவராகப் போவோம்
போகும் இடத்தும் வழி தெரியாத படி இட்ட அடியை அழித்துக் கொண்டு போவோம்
என்று சங்கேதித்துக் கொண்டு எல்லாரும் போந்தார்கள் –
கண்ண பிரான் -இருள் அன்ன மா மேனியனாகையாலே
அவர்கள் நிழலைப் பற்றிக் கொண்டு போய்
அவர்களுக்கு முன்பே பொய்கைக் கரைக்குப் போய்ச் சேர்ந்தான்
இவர்கள் அவன் வந்தமை அறிந்திலர்
இடைப் பெண்கள் ஆகையாலே பரியட்டங்களையும் ஆபரணங்களையும் எல்லாம்
களைந்து கரையிலே வைத்து நீரிலே அவஹாகித்தார்கள்
அவ்வளவிலே கண்ண பிரான் இவற்றை எல்லாம் வாரி எடுத்துக் கொண்டு
மிக விரைந்து குருந்தின் மேலே ஏறி மறைந்து நின்றான்
பின்பு ஆய்ச்சிகள் கரை ஏறிக் கண்ட அளவில் அவை காணாமையாலே
இவை இருந்தபடி என்என்று துணுக என்று
நம்முடன் கூட வந்தார் பிறர் யாரும் இல்லையே ஆகாயம் கொண்டதோ
திரைகள் கொண்டனவோ
இக்குளம் கொண்டதுவோ
கிருஷ்ணன் கொண்டானோ
இங்கனே கலங்கி பலவகைகளால் சந்கித்து
பருகு பருகு என்று பார்த்துக் கொண்டு வாரா நிற்க
கண்ணபிரானைக் குருந்த மரத்தில் கண்டார்கள் –
கண்ட பின்பு இவன் நம்மடி பிடித்து வந்தான்
நாமும் இவனை மடி பிடித்து வாங்கினோமாக வேணும்
என்று எண்ணி
இவனை இரப்பார்
ஏத்துவார்
வாழ்த்துவார்
தாழ்த்துவார்
சீறுவாராய்
இவனை இப்படி தீம்பு செய்யும்படி பெற்ற விட்ட தாயும் ஒருத்தியே -என்று அவளை வெறுப்பாருமாய்
தங்கள் ஆற்றாமையை அறிவிக்க
அவனும் பரியட்டங்களைக் கொடுத்து புனர்ந்தானாய்
தலைக் கட்டுகிறது இத் திருமொழி-
ஒருவனுக்கு ஒரு கால் சம்சாரத்தில் மிக வருத்தம் தோற்றி
ஒன்றும் செய்ய மாட்டாமல்
மோஹம் பிறக்கும் அளவில்
இத் திருமொழிக்கு பெரியவாச்சான் பிள்ளை இட்டு அருளின
அவதாரிகையை சேவித்தால்
சகல தாபங்களும் நீங்கி நல் தெளிவு பிறக்கும் என்பது அனுபவ சித்தம்-
————————————————————————————————
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே—3-1-
பதவுரை
அரவு அணை மேல்–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே
பள்ளி கொண்டாய்–திருக் கண் வளர்ந்தருளுமவனே!
குடைந்து–(குளத்தில்) அவகாஹித்து
நீர் ஆடுவான்–நீராடுவதற்காக
கோழி அழைப்பதன் முன்னம்–கோழி கூவுதற்கு முன்னம்
போந்தோம்–(இவ்விடம்) வந்தோம்;’ (இப்போதோ வென்றால்,)
பொய்கைக்கு–குளத்திற்கு
வாரோம்–நாங்கள் வருவதில்லை’
தோழியும் நானும் தொழுதோம்–தோழியும் நானுமாக (உன்னை) ஸேவியா நின்றோம்’
செல்வன்–(ஸ்ரீ மந்நாராயணன் தன்னிடத்து நித்ய வாஸம் பண்ணப் பெறுகையாகிற) செல்வத்தை யுடையனான
ஆழியன்–ஸூர்யன்
எழுந்தான்–உதித்தான் ’
ஆற்றவும் ஏழமை பட்டோம்’ (நாங்கள் உன்னாலே) மிகவும் இளிம்பு பட்டோம் ’
இனி–இனி மேல்
என்றும்–என்றைக்கும்
துகிலை–(எங்களுடைய) சேலைகளை
தோழியும் நானும் தொழுதோம்–தோழியும் நானுமாக (உன்னை) ஸேவியா நின்றோம்’
துகிலை–(எங்களுடைய) சேலைகளை
பணித்தருளாய்–தந்தருள வேணும்.
கண்ண பிரான் இரவின் முற்கூறெல்லாம் பெண்களோடே புணர்ந்து கிடந்து பிற்கூற்றில் உறங்குமவனாதலால்,
ஸூர்யோதயமளவும் அவன் கண் விழியான் என்று நினைத்து
இவ் வாய்ச்சிகள் கோழி கூவுவதற்கு முன்னமே குளத்தில் நீராடி மீள்வதாக வந்தார்கள்’
இவர்கள் நினைத்தது ஒன்றாய், முடிந்தது வேறாய்த் தலைக் கட்டிற்று.
இவர்கட்குந் தெரியாமல் கண்ணன் அங்கு வந்து சேர்ந்தனனாதலால் அவனாலே தாங்கள் மிகவும் ஏழைமைப் பட்டு
ஸூர்யோதயமாகயும் தாங்கள் வந்த காரியம் தலைக்கட்டப் பெறாமையைக் கண்டு வருந்திக் கூறுகின்றனர்.
‘அப்பா! இன்று நாங்கள் குளத்திற்குவந்து பட்டபாடு போதும்’
இனி ஏழேழ் பிறவிக்கும் இக்குளத்தின் முகத்திலும் நாங்கள் விழிப்பதில்லை’ என்றார்கள்.
இவர்கள் ‘குடைந்து நீராடுவான் போந்தோம்’ என்றவாறே,
தமிழர் கலவியைச் சுனையாடலாகச் சொல்லும் முறைமையை உணர்ந்த கண்ணபிரான்
தானும் நெஞ்சில் ஒன்றை நினைத்து ‘அங்ஙனே நீராடுகைக்குத் தடை ஏன்?’ என்ன’
அவனது கருத்தை அறிந்த ஆய்ச்சிகள், ‘பிரானே! அந்த ஆசைக்கு. இடமாறும்படி
பாழுஞ்சூரியன் வந்து தோன்றிவிட்டனனே!’ என்றனரென்க.
செல்வன் என்றதை விபரீத லக்ஷணையாகக் கொள்வது பொருந்தும்.
எனவே, “செல்வனாழியன்” என்றது- பாழுஞ்சூரியன் என்றபடி.
சுனையாடலுக்கு விரோதியாக வந்து தோன்றின படியால் வசவுக்கு உடலாமத்தனையிறே.
(ஏழைமை ஆற்றவும் பட்டோம்) நீ நெடுநாள் எங்கள் கையில் பட்டதெல்லாம் ஒரு க்ஷணத்தில்
நாங்கள் உன் கையிலே பட்டோமென்கிறார்கள்.
இங்ஙனே இவர்கள் பாரிதாபந்தோற்றச் சொல்லச் செய்தேயும்,
அவன் ‘இன்று நீங்கள் என்னை வஞ்சித்து வந்த குற்றந்தீர ஒரு அஞ்ஜலி பண்ணுங்கள்’ என்றான்’
ஒரு கையாலே தொழுதார்கள்.
‘ஏகஹஸ்தப்ரணாமம் மஹாபசாரகோடியில் கணக்கிடப்பட்டுள்ளது’
இரண்டு கையாலும் தொழுமின்’ என்றான்.
இவர்கள் தாம் துகிலிழந்திருப்பதனால் அங்ஙன் செய்யமாட்டாதே
இருவரிருவராய்ச் சேர்ந்து தொழுகிறார்கள்-
“தோழியும்நானுந் தொழுதோம்” என்கிறார்கள்.
ஆழியம் செல்வன் எழுந்தான் –
ஸ்ரீ மன் நாராயணன் நித்ய வாசம் பண்ணப் படும்
செல்வத்தை உடைய ஆதித்யனும் எழுந்தான்
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
கண்ணபிரான் இரவின் முற்கூறு எல்லாம் பெண்கள் உடன் புணர்ந்து
பிற்கூற்றில் உறங்குமவன் ஆதலால்
சூர்யோதயம் அளவும் அவன் கண் விழியான் என்று நினைத்து
இவ்வாய்ச்சிகள்
கோழி கூவுவதற்கு முன்பே குளத்தில் நீராடி மீள்வதாக வந்தார்கள்
இவர்கள் நினைத்து ஒன்றாய்
முடிந்தது வேறாய்த் தலைக்கட்டிற்று –
இவர்கட்கும் தெரியாமல் கண்ணன் அங்கு வந்து சேர்ந்தனன் ஆகையால்
அவனாலே தாங்கள் மிகவும் ஏழமைப் பட்டு
சூர்யோதயம் ஆகியும் தாங்கள் வந்த கார்யம் தலைக் கட்டப் பெறாமையைக் கண்டு வருந்திக் கூறுகின்றனர்
அப்பா இன்று நாங்கள் குலத்துக்கு வந்து பட்ட பாடு போதும்
இனி ஏழு ஏழு பிறவியிலும் இக்குளத்தின் முகத்தில்
நாங்கள் விழிப்பது இல்லை -என்கிறார்கள் –
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்
இவர்கள் குடைந்து நீராடுவான் போந்தோம் என்றவாறே
தமிழர் கலவியை சுனை யாடல் சொல்லும் முறைமையை உணர்ந்த கண்ணபிரான்
தானும் நெஞ்சிலே ஒன்றை நினைத்து
அங்கனே நீராடுகைக்கு தடை என்ன
அவனது கருத்தை அறிந்த ஆய்ச்சிகள்
பிரானே அந்த ஆசைக்கு இடம் அறும் படி
பாலும் சூர்யன் வந்து தோன்றினான் -என்றனர் -என்கை
செல்வன் என்றத்தை விபரீத லஷணையாக கொள்வது பொருந்தும்
செல்வன் ஆழியான் பாழும் சூரியன் என்றபடி
சுனை யாடலுக்கு விரோதியாக வந்து தோன்றினதால்
வசவுக்கு உடலாம் இத்தனை இ றே
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
நீ நெடுநாள் எங்கள் இடம் பட்டது எல்லாம்
ஒரு ஷணத்தில் நாங்கள் உங்கள் கையில் பட்டோம் என்கிறார்கள்
இங்கன் இவர்கள் பரிதாபம் தோற்றச் சொல்லச் செய்தேயும்
அவன்
இன்று நீங்கள் என்னை வஞ்சித்து வந்த குற்றம் தீர ஒரு அஞ்சலி பண்ணுங்கோள் என்றான்
ஒரு கையாலே தொழுதார்கள்
ஏக ஹஸ்த பிரணாமம் மகா அபசாரக் கோடியில் கணக்கிடப் பட்டு உள்ளது
இரண்டு கையாலும் தொழுமின் என்றான் –
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே
இவர்கள் தாங்கள் துகில் இழந்து இருப்பதனால்
அங்கன் செய்ய மாட்டாதே
இருவர் இருவராய்ச் சேர்ந்து
தொழுகிறார்கள்
தோழியும் நானும் தொழுதோம் -என்கிறார்கள்
—————————————————————————————-
இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்—3-2–
பதவுரை
இங்கு–இங்கே
புகுந்து இது என்–(நீ) வந்து சேர்ந்த விதற்குக் காரணமென்ன?
இப் பொய்கைக்கு–இக் குளத்திற்கு
எவ்வாறு வந்தாய்–எவ் வழியாலே வந்தாய்?
மது இன் துழாய் முடிமாலே–தேன் மாறாத இனிய திருத்துழாய் மாலை சூடிய திருவபிஷேகத்தை யுடைய பெரியோனே!
மாயனே–ஆச்சரிய சக்தி யுடையவனே!
எங்கள் அமுதே–எங்களுக்கு அம்ருதம் போல் இனியவனானவனே!
விதி இன்மையால்–விதி யில்லாமையாலே
அது மாட்டோம்–ஸம்ச்லேஷத்திற்கு இசைய மாட்டோம்’
வித்தகப் பிள்ளாய்–ஆச்சரிய சேஷ்டைகளையுடைய பிள்ளாய்!
விரையேல்–அவஸரப் பட வேண்டா’
அரவில்–குதி கொண்டு காளிய நாகத்தின் மேல்-
குதி கொண்டு–குதித்துக் கொண்டு
நடித்தாய்–நர்த்தனஞ்செய்தவனே!
குருந்திடைக் கூறை–(அக்) குருந்த மரத்தின் மேல் வைத்திருக்கிற சேலைகளை
பணியாய் – கொடுத்தருள்.
“இவர்கள் தங்களுடைய காரியத்தைப் பார்த்துக் கொண்டு போக நினைக்கின்றனரே யன்றி,
நம் அபிமதந் தலைக்கட்ட நினைக்கிறிலர்; இதற்கு என் செய்வது!” என்று சிந்தித்துக் கண்ண பிரான்
சடக்கெனக் குருந்த மரத்தில் நின்றுமிழிந்து கீடே மிகுந்திருந்த ஒன்றிரண்டு பாரியட்டங்களையும் வாரிக் கொண்டு
சுழல் காற்றுப் போலே எங்கும் வியாபாரித்து, ‘இன்னதுசெய்தான்’ என்று இவர்கள் அறுதியிட வொண்ணாதபடி,
சேலைகளைப் போலே இவர்களது நெஞ்சையுங் கவர்ந்து கொண்டு போய்க் குருந்தின் மேலேறி மறைவிருந்தான் ’
இவர்கள் கரையேறி ஒன்றுங்காணாமையாலே திடுக்கிட்டு, “இது என் புகுந்தது?” என்கிறார்கள்,
மின்னலின்றியே இடி விழுந்து நிற்க கண்டோமென்கை.
இப் பொய்கைக்கு ஸ்ரீ வழக்கமாக நீயும் நாமும் ஜலக்ரிடை பண்ணும் பொய்கை யன்றே இது’
இதறிந்து நீ வந்தபடி என்? என்கிறார்கள்.
‘நான் எப்படிவந்தாலென்ன? வந்தாயிற்று,
இனி நீங்களும் நானும் ஸத்தை பெறும்படி அநுபவிக்குமத்தனையன்றோ’ என்றான் கண்ணன்’
அதுகேட்ட ஆய்ச்சிகள், ‘நீ ஆசைப்படுவது அழகியதே’
ஆகிலும் எங்களுடைய தெளர்ப்பாக்கியத்தினால் நாங்கள் அதற்கு இசைந்து வரமாட்டுகிறிலோம், என்கிறார்கள்,
அது என்பதற்கு ஸம்ச்லேஷம் அர்த்தமானபடி என்னென்னில்’
கண்ணபிரான் தன்னுடைய ஸம்ச்லேஷ விருப்பத்தை ஸூசனையாகக் காட்டினனாதலால்,
அதனை உணர்ந்த இவர்கள் அது என்று ஸம்ச்லேஷத்தைச் சுட்டுகிறார்கள் என்க.
நெஞ்சறி சுட்டு.
இப்படி இவர்கள் சொல்லச் செய்தேயும் அவன் தன் ஆற்றாமையாலே பதறி மேல் விழப் புக்கான்’
‘பிரானே! உன் ஸாமர்த்தியம் நாம் அறிவோம்’ அவசரப்படாதே கடக்கநில்’ என்கிறார்கள்.
(விதியின்மையால்) விதி – பாக்யம். வடசொல், “***“ என்பது நிகண்டு.
“குதிகொண்டு“ என்றவிடத்து, குதி என்பது – முதனிலைத் தொழிற்பெயர்.
இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் –
இவர்கள் தங்கள் உடைய காரியத்தை நடத்திக் கொண்டு போக
நினைக்கின்றனரே அன்றி
நம் அபிமதம் தலைக் கட்ட நினைக்கிறிலர்
இதற்கு என் செய்வது என்று சிந்தித்து
கண்ணபிரான் சடக்கென
குருந்த மரத்தில் நின்றும் இழிந்து
கீழே மிகுந்து இருந்த ஓன்று இரண்டு பரியட்டங்களையும் வாரிக் கொண்டு
சுழல் காற்றுப் போலே எங்கும் வ்யாபரித்து -இன்னது செய்தான் -என்று
இவர்கள் அறுதி இட ஒண்ணாத படி சேலைகளைப் போலே இவர்கள் நெஞ்சையும் கவர்ந்து கொண்டு போய்
குருந்தின் மேல் ஏறி மறைந்து இருந்தான்
இவர்கள் கரை ஏறி ஒன்றும் காணாமையாலே திடுக்கிட்டு
இது என் புகுந்தது என்கிறார்கள்
மின்னல் இன்றியே இடி விழுந்து நிற்கக் கண்டோம் என்கை
இப்பொய்கைக்கு
வழக்கமாக நீயும் நாங்களும் ஜலக் கிரீடை பண்ணும் பொய்கை அன்றே இது
இது அறிந்து நீ வந்த படி என் என்கிறார்கள் –
நான் எப்படி வந்தால் என்ன
வந்தாயிற்று
இனி நீங்களும் நானும் சத்தை பெறும்படி அனுபவிக்கும் அது அன்றோ என்ன
அது கேட்ட ஆய்ச்சிகள்
நீ ஆசைபடுவதும் அழகியதே
ஆகிலும் எங்களுடைய தௌர் பாக்யத்தினால் நாங்கள் இசைந்து
அதற்கு வர மாட்டுகின்றிலோம்-என்கிறார்கள்
அது எனபது சம்ச்லேஷம் அர்த்தமான படி எங்கனே என்னில்
கண்ணபிரான் தன்னுடைய சம்ச்லேஷ விருப்பத்தை ஸூசகமாகக் காட்டினான் ஆதலால்
அதனை உணர்ந்த அவர்கள் -அது -என்று சம்ச்லேஷத்தை காட்டினார்கள் என்க
நெஞ்சுறிசுட்டு
இப்படி இவர்கள் சொல்லச் செய்தேயும் அவன் தன ஆற்றாமையாலே பதறி மேல் விழப் புக்கான்
பிரானே உன் சாமர்த்தியம் நாம் அறிவோம்
அவசரப் படாதே கடக்க நில் -என்கிறார்கள்-
———————————————————————————————–
எல்லே ஈது என்ன விளமை எம்மனைமார் காணில் ஒட்டார்
பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூங்குருந்தேறி யிருத்தி
வில்லால் இலங்கை யழித்தாய் நீ வேண்டியது எல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்து அருளாயே—–3-3-
பதவுரை
வில்லால்–வில்லாலே
இலங்கை–லங்கையை
அழித்தாய்–நாசஞ் செய்தருளினவனே!
எல்லே–என்னே!
ஈது என்ன இளமை–இது என்ன பிள்ளைத்தனம்!
எம் அனைமார்–எங்களுடைய தாய்மார்கள்
காணில்–கண்டால்
ஒட்டார்–(மறுபடியும் எங்களை வீட்டின் வழி வர) ஒட்டார்கள்’
(நீயொவென்றால்)
ஈது–கண்டாரடங்கலும் ஏசும்படி எங்களை அம்மணமாக்கி நிறுத்தியிருக்கிற இது
பொல்லாங்கு என்று–பொல்லாத காரியமென்று
கருதாய்–நினைக்கிறாயில்லை’
பூ குருந்து–புஷ்பித்திரா நின்ற குருந்த மரத்தின் மேல்
ஏறி இருத்தி–ஏறி யிரா நின்றாய்’
நீ வேண்டியது எல்லாம்–நீ அபேஷிக்கு மவற்றை யடங்கலும்
தருவோம்–கொடுக்கிறோம்’
பல்லாரும்–(ஊரிலுள்ள) பலரும்
காணோமே–காணாதபடி
போவோம்–போகிறோம்’
பட்டை–(எங்களுடைய) பட்டுச் சேலைகளை
பணித்தருளாய்–தந்தருள வேணும்
ஆய்ச்சிகள் நெடுங்காலம் நீரிலே நின்று வருந்தச் செய்தேயும்
கண்ணபிரான் அவர்கள் சேலைகளைக் குருத்த மரக்கிளையிலேயே இட்டு வைக்க,
‘கரங்கள் நீரிலே கெடும் போதாக நின்று வருந்த, நீ பேசாதிருக்கிறதென்’ சேலைகளைத் தா’ என்று இவர்கள் கேட்க’
‘நீரை விட்டுக் கரை மேல் ஏறுங்கள், சேலைகளைத் தருகிறேன்’ என்றான்’
அதுவும் மெய்தானென்று சிலர்நம்பிக் கரைமீது ஏறினார்.
ஏறினவர்களுடைய அங்க ப்ரத்யங்களை உற்று நோக்கிப் புன் முறுவல் செய்து சில விலாஸ சேஷ்டைகளைப் பண்ணினான்’
எல்லே! ஈதென்ன இளமை” என்றார்கள்.
‘நான் இளைஞனும்படி நீங்கள் தாம் முலை பெருத்த முதுமையரோ?
வயஸ்ஸில் பார்த்தால் என்னோடு உங்களோடு ஒரு வாசி இல்லை’
இரண்டு திறத்தாரும் ஒத்த பருவமான பின்பு பருவத்துக் கீடாகப் பாரிமாற நீங்கள் உடன்பட வேண்டாவோ?’ என்றான்’
“எம்மனைமார் காணில் ஒட்டார்” என்கிறார்கள்.
நாங்கள் உடன்படாமையில்லை,
எங்கள் சுற்றத்தார் கண்டால் சீறுவார் என்ற அச்சத்தினால் மறுக்காநின்றோ மென்கை.
அது கேட்ட கண்ண பிரான், ‘பெண்காள்! அழகாகச் சொன்னீர்கள்’ உங்களுக்கு மாத்திரந்தானோ சுற்றத்தாருள்ளது?
எனக்கும் ஒரு தாயும் தகப்பனம் உறவு முறையாருமில்லையா!
நான் ஏதேனும் காம்பற்று வானத்தினின்றும் விண்டு விழுந்தேனோ?
சுற்றத்தார் பலரும் இருக்கவன்றோ நானும் இங்ஙனே பேசுகிறது’
உங்களுக்கு மாத்திரம் வந்த அச்சமென்?’ என்ன’
அது கேட்ட ஆய்ச்சிகள், ‘உன்னைப் போலேயோ நாங்கள், எங்களைப் போலேயோ நீ?
நாங்கள் பழிக்கு அஞ்சுவோம், நீ பழியென்றால் உடம்பு பெருக்கிறாயன்றோ’ என்கிறார்கள்-
“பொல்லாங் கீதென்று கருதாய்.”
‘நான் அஞ்சேனாகிலும் உங்களுக்கு இவை தரவேண்டிய தில்லையே’ என்று குருந்தின் மேலே
பூப்பொருந்தினாற் போலே பொருந்தி, கீழ்இறங்கக் கருத்தின்றியே இருந்தான்’
“பூங்குருந்தேறியிருத்தி’ என்கிறார்கள்.
(வில்லால் இத்யாதி) ப்ரஹ்மாதிதேவர்களுடைய அஸ்த்ரங்களுக்கும் அழியாதபடி வரபலத்தாலே
சேமிக்கப்பட்டிருந்த இலங்கையை, ஒரு பிராட்டிக்காக நாசஞ்செய்தருளின நீ இன்று
எம்மை இங்ஙன் வருத்துவது என்னோ? என்றவாறு, ஸாபிப்ராயஸம்போதநம்.
இதுகேட்ட கண்ணபிரான், ‘ஆம், நான் பிராட்டிக்காக அங்ஙனே அளவற்ற பாடுகள் பட்டதுண்டு,
என் நினைவுக்கு அவள் ஒத்திருந்தபடியாலே அவளுக்காகக் காரியஞ்செய்தேன்’
அப்படியே நீங்களும் என் நினைவுக் கீடாக வந்தாலன்றோ நான் உங்கள் காரியஞ்செய்வது’ என்றான்’
“அதிலும் ஒரு குறையுமில்லை’ நீ அபேக்ஷிக்குமதெல்லாம் செய்யக்கமவோம்” என்கிறார்கள்-
“நீ வேண்டியதெல்லாம் தருவோம்.”
‘அப்படியாகில் ஸம்போக பிக்ஷை கொடுங்கள்’ என்று மடியை ஏற்றான்’
‘இந்த பிக்ஷை ஸதஸ்யமாகக் கொடுக்கக் கூடியதோ? ரஹஸ்யமன்றோ?
ஒருவருங் காணாதவிடம் தேடிப்போவோமென்கிறார்கள் –
‘பல்லாரும் காணோமே போவோம்.”
‘ஆகில் புறப்படுங்கள் போகலாம்’ என்றான்’
அரையில் சேலை யின்றிப் புறப்பட மாட்டாமையாலே “பட்டைபட பணித்தருளாய்” என்கிறார்கள்.
ஆய்ச்சிகள் நெடும்காலம் நீரிலே நின்று வருந்தச் செய்தேயும்
கண்ணபிரான் அவர்கள் சேலைகளை குருந்த மரக் கிளைகளிலேயே இட்டு வைக்க
நாங்கள் நீரிலே நெடும்போதாக நின்று வருந்த நீ பேராது இருக்கிறது என்-சேலைகளைத் தா –
என்று இவர்கள் கேட்க
நீரை வீடு கரை மேல் எறுங்கோள் -சேலைகளைத் தருகிறேன் -என்கிறான்
அதுவும் மெய் தான் என்று சிலர் நம்பி கரை மேல் ஏறினர்
எறினவர்களின் அங்கப் பிரத்யங்களை உற்று நோக்கி
புன்முறுவல் செய்து
சில விலாச சேஷ்டிதங்களைப் பண்ணினான்
எல்லே ஈது என்ன இளமை -என்கிறார்கள்
நான் இளைஞனாம் படி நீங்கள் தாம் முலை பெருத்த முதுமையரோ
வயசிலே பார்த்தால் என்னோடு உங்களுக்கு ஒரு வாசி இல்லை
இரண்டு திறத்தாரும் ஒத்த பருவம் ஆனபின்பு
பருவத்துக்கு ஈடாகப் பரிமாற
நீங்கள் உடன் பட வேண்டாவோ -என்றான்
எம்மனைமார் காணில் ஒட்டார் -என்கிறார்கள்
நாங்கள் உடன்படாமல் இல்லை
எங்கள் சுற்றத்தார்ர் கண்டால் சிறுவர் என்ற
அச்சத்தினால் மறுக்கா நின்றோம் -என்கை
அது கேட்ட கண்ணபிரான் -பெண்காள்
அழகாக சொன்னீர்கள் உங்களுக்கு மாதரமோ சுற்றத்தார் உள்ளது
எனக்கும் ஒரு தாயும் தகப்பனும் உறவு முறையாரும் இல்லையோ
நானும் ஏதேனும் காம்பற்று வானத்தின் நின்றும் விண்டு விழுந்தேனோ
சுற்றத்தார் பலரும் இருக்க அன்றோ நானும் இவ்வாறு பேசுகிறது
உங்களுக்கு மாதரம் வந்த அச்சம் என் -என்ன
அது கேட்ட ஆய்ச்சிகள் -உன்னைப் போலேயோ நாங்கள்
எங்களைப் போலேயோ நீ
நாங்கள் பழிக்கு அஞ்சுவோம்
நீ பழி என்றால் உடம்பு பெருக்கிறாய் அன்றோ -என்கிறார்கள்
பொல்லாங்கு ஈது என்று கருத்தாய் –
நான் அஞ்சேன் ஆகிலும் உங்களுக்கு இவை தர வேண்டியது இல்லையே என்று
குருந்தின் மேல் பூ பொருந்தினால் போலே பொருந்தி
கீழே இறங்க கருத்து இன்றியே இருந்தான்
பூங்குருந்து ஏறி இருத்தி -என்கிறார்கள்
வில்லால் இத்யாதி
ப்ரஹ்மாதி தேவர்கள் உடைய அஸ்த்ரங்களுக்கும் அழியாத படி
வர பலத்தாலே சேமிக்கப் பட்டு இருந்த இலங்கையை
ஒரு பிராட்டிக்காக நாசம் செய்து அருளின நீ
இன்று எம்மை இங்கன் வருத்துவது என்னோ -என்றவாறு
சாபிப்ராய சம்போதனம்
இது கேட்ட கண்ண பிரான்
ஆம் நான் பிராட்டிக்காக அங்கனே அளவற்ற பாடுகள் பட்டதுண்டு
என் நினைவுக்கு அவள் ஒத்து இருந்த படியாலே அவளுக்காக காரியம் செய்தேன்
அப்படியே நீங்களும் என் நினைவுக்கு ஈடாக வந்தால் அன்றோ நான் உங்கள் கார்யம் செய்வது -என்றான்
அதிலும் ஒரு குறை இல்லை
நீ அபேஷிக்கும் அது எல்லாம் செய்யக் கடவோம் -என்கிறார்கள்
நீ வேண்டியது எல்லாம் தருவோம் –
அப்படியாகில் சம்போக பிஷை கொடுங்கோள்-என்று மடியை ஏற்றான்
இந்த பிஷை சதஷ்யமாகக் கொடுக்கக் கடவதோ
ரஹச்யம் அன்றோ
ஒருவரும் காணாத இடம் தேடித் போவோம் என்கிறார்கள்
பல்லாரும் காணாமே போவோம் –
ஆகில் புறப்படுங்கோள் போகலாம் -என்றான்
அறையில் சேலை இன்றிப் புறப்பட மாட்டாமையாலே
பட்டைப் பணித்து அருளாய் -என்கிறார்கள்-
——————————————————————————————-
பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்தாடும் சுனையில்
அரக்க நில்லாக் கண்ண நீர்கள் அலமருகின்றனவா பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே
குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்—-3-4-
பதவுரை
இலங்கை அழித்த பிரானே!-’
பலர் குடைந்து ஆடும் சுனையில்–பல பெண்கள் படிந்து நீராடும் இப் பொய்கையின் கரையில்
கண்ண நீர்கள்–கண்ணீர்த் தாரைகள்
அரக்க நில்லா–அடக்கினாலும் நிற்க மாட்டாதவைகளாய்
அலமருகின்ற–ஆ தளும்புகிறபடியை
எங்கும்–நாற் புறத்திலும்
பரக்க விழித்து–நன்றாக விழித்து
நோக்கி பாராய்– உற்று நோக்கு’
ஒன்றும் இரக்கம் இலாதாய்–கொஞ்சங்கூட தயவு இல்லாதவனே!
குரங்கு அரசு ஆவது அறிந்தோம்–நீ மரமேற வல்லார்க்குள் தலைவன் என்பதை அறிந்து கொண்டோம்’
(ஆன பின்பு)
குருந்திடை கூறை–குருந்தின் மேலுள்ள (எங்கள்) சேலைகளை கொடுத்தருள வேணும்.
‘இப்பெண்களும் நாம் சொன்னதுக்கெல்லாம் மறுமொழி சொல்லா நின்றார்கள்’
இவர்களுக்குச் செய்ய வேண்டிய வழி இதுவன்று, அச்சமுறுத்திக் காரியங் கொள்ள வேணும்’ என்றெண்ணி,
சிலர் வருவதாகக் கொண்டு சுற்றும் பார்த்து உடம்பை ஒடுக்குவது,
மறுபடியுஞ் சிலர் வருவதாகக் கொண்டு கூசினவன் போல் அத் திக்கிலே சில தழைகளை யிட்டு மறைப்பது.
இப்படி ஆய்ச்சிகள் அஞ்சும்படியான சில வியாபாரங்களைச் செய்தான்’
இவன் செய்கிற இச்செயல்களுக்கெல்லாம் ஸம்பாவநை யுள்ளவிடமாயிருந்தது அவ்விடம் –
அது பலரும் வரக்கூடிய சுனையாகையாலே, இவனுடைய பயங்கரமான செயல்களாலும்,
தாங்களிருக்குமிடம் அனைவர்க்கும் பொதுவான தென்னுமத்தாலும்
இவ்வாய்ச்சிகளுக்குத் துணுக்கென்று கண்ணீர் பெருகத் தொடங்கிற்று’
அக் கண்ணீர்ப் பெருக்கை இவர்கள் தாம் மிக வருந்தி அடக்கப் பார்த்த விடத்தும் அஃது அடங்காதொழிந்தது.
பிறகு சடக்கென யார் வருவாரோ! என்கிற அச்சத்தினாலும் கண்ணீர் நில்லாமையாலும்,
‘நம் கதி இவ்வறாயிற்றே’ என்று கிடந்து துடியா நின்றார்களாய்,
‘பிரானே! நீ எமக்குச் சேலை தாராதொழியினும் ஒழிக’
நாங்கள் படுகிற அலமாப்பைக் கண் கொண்டு பார்த்தாயாகில் போதுமித்தனை’ என்றார்கள்.
இங்ஙனே இவர்கள் வேண்டச் செய்தேயும் கண்ணபிரான் கண்ணற்றவன் போலே பாராதே யிருந்தான்’
“இரக்கமேலொன்றுமிலாதாய்” என்று நெஞ்சில் உறுத்தும்படி விளிக்கின்றனர்.
(“இலங்கையழித்தபிரானே!”) இன்று இங்ஙனே எம்மை வருத்துகின்ற நீ முன்பு ஒரு பிராட்டிக்காக
உண்ணாது உறங்காது ஒலிகடலை யூடறுத்துப் படாதென பட்டாய் என்று புராணங்களில் எழுதி வைத்திருப்பது பரமஸத்யமே,
அது தான் யார் சமைத்த அபத்த பஞ்சாங்க மோ! என்று உபாலம்பந்தோற்றக் கூறுகிறபடி.
இதுகேட்ட கண்ணபிரான், “பெண்காள்! என்னை இரக்கமற்றவனாகவன்றோ நீங்கள் சொல்லாநின்றீர்கள்’ மிக நன்று’
உங்கள் கருத்தின் படியே நான் இரக்கமற்றவனாகவே ஆகிறேன் காண்மின்’ என்று சேலைகளுடனே ஒரு கொம்பிலே தாவினான்.
அதனைக் கண்டு “குரக்கரசாவதறிந்தோம்” என்கிறார்கள்.
மரமேற வல்லவர்கட்கு நீ முதலியென்னுமிடம் நாங்களறிந்தோ மென்கை. குரங்கு + அரசு, குரக்கரசு.
இப்பெண்களும் நாம் சொன்னதுக்கு எல்லாம் மறுமொழி சொல்லா நின்றார்கள்
இவர்களுக்குச் செய்ய வேண்டிய வழி இது என்று
அச்சமுறுத்திக் கார்யம் கொள்ள வேணும் -என்று எண்ணி
சிலர் வருவதாகக் கொண்டு சுற்றும் பார்த்து
உடம்பை ஒடுக்குவது
மறுபடியும் சிலர் வருவதாகக் கொண்டு கூசினவன் போல்
அத்திக்கிலே சில தழைகளை இட்டு மறைப்பது
இப்படி ஆய்ச்சிகள் அஞ்சும்படியான சில வ்யாபாரங்களைச் செய்தான்
இவன் செய்கிற இச் செயல்களுக்கு எல்லாம் சம்பாவனை உள்ள இடமாய் இருந்தது அவ்விடம்
அது பலரும் வரக் கூடிய சுனையாகையாலே
இவனுடைய பயங்கரமான செயல்களும்
தாங்கள் இருக்கும் இடமும் அனைவருக்கும் பொதுவானது என்னுமத்தாலும்
இவ்வாய்ச்சிகளுக்கு துணுக என்று கண்ணீர் பெருகத் தொடங்கிற்று
அக் கண்ணீர் பெருக்கை இவர்கள் மிகவும் வருந்தி அடக்கப் பார்த்தாலும்
அஃது அடங்காது ஒழிந்தது
பிறகு சடக்கென யார் வருவாரோ என்கிற அச்சத்தினாலும்
கண்ணீர் நில்லாமையினாலும்
நம் கதி இவ்வாறு ஆயிற்றே என்று கிடந்தது துடியா நின்றார்ளாய்
பிரானே நீ நமக்கு சேலை தராது ஒழியினும் ஒழிக
நாங்கள் படுகிற அலமாப்பைக் கண் கொண்டு பார்த்தாயாகில் போதும் இத்தனை -என்றார்கள்-
இங்கனே இவர்கள் வேண்டச் செய்தேயும் கண்ணபிரான் கண் அற்றவன் போல் பாராதே இருந்தான்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் -என்று
நெஞ்சில் உறுத்தும்படி விளிக்கின்றனர்
இலங்கை அழித்த பிரானே –
இன்று இங்கனே எம்மை வருத்துகின்ற நீ முன்பு ஒரு பிராட்டிக்காக
உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்துப் படாதன பட்டாய்
என்று புராணங்களிலே எழுதி வைத்து இருப்பது பரம சத்தியமே
அது தான் யார் சமைத்த அபத்த பஞ்சாங்கமோ -என்று உபாலம்பம் தோற்ற கூறுகிறபடி
இது கேட்ட கண்ணபிரான்
பெண்காள் என்னை இரக்கம் அற்றவனாக அன்றோ நீங்கள் சொல்லா நின்றீர்கள்
மிக நன்று
உங்கள் கருத்தின் படியே நான் இரக்கம் அற்றவனாக ஆகிறேன் காண்மின் -என்று
சேலைகள் உடன் ஒரு கொம்பிலே தாவினான்
அதனைக் கண்டு
குரக்கு அரசு ஆவது அறிந்தோம் -என்கிறார்கள்
மரம் ஏற வல்லவர்கட்கு நீ முதலி என்னும் இடம் நாங்கள் அறிந்தோம் -என்கை
குரங்கு+ அரசு -குரக்கரசு-
———————————————————————————————
காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி
வேலைப் பிடித்து என் ஐமார்களோட்டில் என்ன விளையாட்டோ
கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே
கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய்—3-5-
பதவுரை
கரிய–கறுத்த
கோலம்–திருமேனியை யுடைய
பிரானே–கண்ண பிரானே!
கயலொடு–கயல் மீன்களும்
வாளை–வாளை மீன்களும்
விரவி–ஒன்றாய்க் கூடி
காலை–(எமது) கால்களை
கதுவிடுகின்ற–கடியா நின்றன’
(இப்படி நீ எங்களை வருத்தப்படுத்துவதைக் கேள்விப்பட்டு)-
என் ஐமார்கள்–எங்கள் தமையன்மார்கள்
வேலை பிடித்து–வேலைப் பிடித்துக் கொண்டு
ஓட்டில்-உன்னைத் துரத்திவிட்டால்
என்ன விளையாட்டு–அது பின்னை) என்ன விளையாட்டாய் முடியும்?
நீ–நீ
கோலம்–அழகிய
சிற்றாடை பலவும் கொண்டு–சிற்றாடைகளை யெல்லாம் வாரிக் கொண்டு
ஏறி இராது–(மரத்தின் மேல்) ஏறி யிராமல்
குருந்திடை–குருந்த மரத்தின் மேலுள்ள
கூறை–(எங்கள்) சேலைகளை
பணியாய்–தந்தருள்
என் ஐமார்களோட்டில்-எங்கள் தமையன்மார்கள்
வேலைப் பிடித்து-வேலைப் பிடித்துக் கொண்டு
ஓட்டில் -உன்னை துரத்தி விட்டால்
கண்ணபிரானே! நீ செய்யும் தீம்புகளால் நாங்கள் படும் வருத்தம் எவ்வளவாயிருந்தது பாராய்’
நீயோ எங்களை நீர் நிலையை விட்டு வெளிவர வொட்டாமல் சேலைகளைப் பறித்துக் கூத்தாட்டங் காணா நின்றாய்’
அல்குல் மறையுமாறு நீரினுள்ளே நிற்கின்ற எங்களுடைய காலைக்
கயல்மீன்களும் வாளை மீன்களும் கவ்விக் கடித்துத் துடிக்கச் செய்யா நின்றன.
இவ்வாறு நீ எங்கள் திறத்தில் செய்யுந் தீமைகளை எமது தமையன்மார்கள் கேள்விப்படுவரேல்
சீறிச் சடக்கென ஓடிவந்து உன்னை வேலால் உதைத்துத் துரத்துவார்கள்’
ஆன பின்பு விபரிதமாகத் தலைக்கட்ட வல்ல விளையாட்டு உனக்கு என்? என்று ஆய்ச்சிகள் அச்சமுறுத்த,
அதுகேட்ட கண்ண பிரான், ‘பெண்காள்! பிறகு வருவது வருக’
அதைப்பற்றி நான் இப்போது சிந்திப்பேனல்லேன்’
இப்போது என் கையில் அகப்பட்டுக் கொண்ட இச் சேலைகளை உங்களுக்குக் கொடுப்பதென்கிற சங்கதி இல்லை’ என்று –
அரையிலே ஒன்றைச் சாத்துவது, தலையிலே ஒன்றைக் கட்டுவது, உத்தரியமாக ஒன்றை அணிவதாக,
இப்படித் தன் திருமேனிக்குப் பரபாகமாம்படி நாநாவர்ணமான சேலைகளாலே அலங்கரித்து
மிகுந்தவற்றைக் குருந்தமரத்தின் மேலேயிட்டு வைத்து,
‘பெண்காள்! அணிந்த இவை நமக்குத் தகுதியாயிருந்தபடி கண்டீர்களா?
என் அலங்காரத்தை அழித்தோ நீங்கள் இவற்றை வேண்டுவது?’ என்றான்’
‘பிரானே! உன் திருமேனியை அழகு பெறுத்துஞ் சேலைகளை நாங்கள் வேண்டுகின்றிலோம்’
குருந்தில் கிடக்கிறவற்றைத் தாராய்’ என்கிறார்கள்.
————————————————————————————————–
தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல வெங்கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே—3-6-
பதவுரை
தடம்–விசாலமாயும்
அவிழ் தாமரை–மலர்ந்த தாமரைகளை யுடையவுமான
பொய்கை–தடாகத்திலே
தாள்கள்–தாமரைத் தண்டுகளானவை
எம் காலை–எங்கள் கால்களை
கதுவ–கடிக்க,
விடம் தேள் எறிந்தால் போல–விஷத்தை யுடைய தேள் கொட்டினாற்போலே
ஆற்றவும்–மிகவும்
வேதனை பட்டோம்–வருத்தப் படா நின்றோம்’
குடத்தை–குடங்களை
எடுத்து–தூக்கி
ஏற விட்டு–உயர வெறித்து
(இப்படி)-
கூத்து ஆட–குடக் கூத்தை ஆடுவதற்கு
வல்ல–ஸாமர்த்தியமுள்ள
எம் கோவே–எம்முடைய தலைவனே!
படிற்றை எல்லாம் தவிர்ந்து–(நீ செய்கிற) தீம்புகளை யெல்லாம் விட்டு
எங்கள் பட்டை பணித்தருளாய்-.-படிற்றை எல்லாம் தவிர்ந்து-தீமைகளை எல்லாம் விட்டு நீ செய்கிற
கீழ்ப் பாட்டில் கயல்களுக்கும் வாளைகளுக்கும் வருந்தி முறையிட்ட ஆய்ச்சிகளை
நோக்கி கண்ணபிரான்
பெண்காள் -கயலும் வாளையும் உங்களை வருத்தா நின்றனவாகில்
அவற்றை ஓட்டுதற்கு ஒரு உபாயம் சொல்லுகிறேன் -கேண்மின் –
பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று
நடையோடியலி நாணி யொளிக்கும் நறையூரே -பெரிய திருமொழி -6-5-5-என்று
திரு நறையூரில் வாழும் மாதர்களின் நடை அழகைக் கண்ட அன்னங்கள் வெள்கி ஒளித்துக் கொள்ளா நின்றன
என்று பிரசித்தம் இறே
அப்படியே இக் கயல்களும் உங்கள் கண் அழகைக் கண்டால் நாணி ஒளிக்கத் தட்டில்லையே
ஆகையாலே அவை மறைந்து ஓடும்படி உங்கள் கண் அழகை அவற்றுக்கு காட்டுங்கோள்
என்றால் போலே சில நர்மோக்திகளைச் சொல்ல
அவற்றைக் கேட்கலுற்ற ஆய்ச்சிகள்
பிரானே மீன்களுக்கு மாத்ரமேயோ நாங்கள் வருந்துவது
இத்தடாகத்தில் உள்ள தாமரைத் தாள்களும் அன்றோ எமது காலைக் கவ்வி வேதனைப் படுத்தா நின்றன
இவற்றுக்குத் தப்பிப் பிழைக்கும் வழி சொல்லாய் என்ன
அது கேட்ட கண்ணபிரான்
இப்பெண்கள் மீன்களுக்கும் தாமரைத் தாள்களுக்கும் வருந்தா நின்றார்களே யன்றி
நம்முடைய தீம்புகளை ஒரு பொருளாக மதிக்கின்றிலர்
இன்னும் சில பொறுக்க ஒண்ணாத தீம்புகளைச் செய்வோம்
என்று எண்ணி
இன்னது செய்தான் என்று பிறருக்கு பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாத படி
சிலவற்றைச் செய்யத் தொடங்கினான்
பிரானே இந்த விஷமங்களைத் தவிர்ந்து
பட்டைப் பணித்து அருளாய் -என்கிறார்கள்
குடத்தை எடுத்து -இத்யாதி
குடக் கூத்து எனபது பிராமணர்க்கு செல்வம் விஞ்சினால் யாகம் செய்வது போலே
இடையருக்கு செல்வம் விஞ்சினால் அதனால் உண்டாகும் செருக்குப் போக்குவீடாக ஆடுவதொரு கூத்து
இதனை -தலையிலே அடுக்குக் குடம் இருக்க
இரு தோள்களிலும் இரு குடங்கள் இருக்க
இரு கைகளிலும் குடங்களை ஏந்தி ஆகாசத்திலே எறிந்து ஆடுவதொரு கூத்து -என்பர்
இதனை பதினோராடலில் ஓன்று என்றும்
அறுவகைக் கூத்தில் ஓன்று என்றும் கூறி
குடத்தாடல் குன்று எடுத்தோனாடல் அதனுக் கடைக்குப வைந்துறுப் பாய்ந்து -என்று
மேற்கோளும் காட்டினார் சிலப்பதிகார யுரையில் அடியார்க்கு நல்லார்-
குடங்கள் எடுத்து ஏற விட்டு கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல என் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய்
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்தி பூ சூட்ட வா -2- 7-7-
குடக்கூத்துக்கும் ஆளாகாத நம் போல்வாரைத் திருத்தவே திருக்குடந்தை ஆராவமுதனானான்
குருக்கத்தி -ஸ்தல வ்ருக்ஷம் திருக்குடந்தையில்
—————————————————————————————————-
நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி யல்லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்ததால் ஊழி எல்லாம் உணர்வானே
ஆர்வம் உனக்கே யுடையோம் அம்மனைமார் காணில் ஒட்டார்
போர விடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்து ஏறி இராதே——-3-7-
பதவுரை
ஊழி எல்லாம்–கற்பாந்த காலத்திலெல்லாம்
உணர்வானே–(ஜகத் ரக்ஷண சிந்தையுடன்) உணர்ந்திருப்பவனே!
நீரிலே நின்று அயர்க்கின்றோம்–ஜலத்தில் நின்று கொண்டு வருத்தப்படா நின்றோம்’
நீதி அல்லாதன – அநீதியான செயல்களை
ஆல்–ஐயோ!’
(இப்படி நீ எங்களை வருத்தத் செய்தேயும்)
உனக்கே–உன் விஷயத்திலேயே
ஆர்வம் உடையோம்–நாங்கள் அன்புள்ளவர்களா யிரா நின்றோம்’
அம்மனைமார்–எங்கள் தாய்மார்
காணில்–நீ பண்ணும் லீலைகளுக்கு நாங்கள் இணங்கி நிற்பதைக் கண்டால்
செய்தாய்–செய்யா நின்றாய்’
(உன் விஷமங்களுக்குத் தப்பி ஓடிப் பிழைக்கப் பார்ப்போமென்றால்)
ஊர்–எங்கள் ஊராகிய ஆய்ப் பாடியும்
அகம்–மாளிகைகளும்
சாலவும்–மிகவும்
சேய்த்து–தூரத்தி லிரா நின்றன:
ஒட்டார்–இசைய மாட்டார்கள்’
எங்கள் பட்டை–எங்களுடைய சேலைகளை
போர விடாய்–தந்தருளாய்,
பூ குருந்து–பூத்திரா நின்ற குருத்த மரத்தின் மேல்
ஏறி இராதே–ஏறிக் கொண்டு தீமைகளைச் செய்யாதே.
ஊரகம் சாலவும் சேய்ததால்-ஊர் அகம் சாலவும் சேய்ததால்
ஊராகிய ஆய்ப்பாடியும் மாளிகைகளும் தூரத்தில் இரா நின்றன-
பிரானே! கோழி கூவுதற்கு முன்னே, நீ உணர்ந்து வருவதற்கு முன்னே பிடித்து வந்து நாங்கள் நீரிலே தோய்ந்து அத்தாலே அறிவுகலங்கிப் படுகிற க்லேசங்களைப் பாராய் என்று ஆய்ச்சிகள் கூறியதைக் கேட்ட கண்ணபிரான் ‘நீங்கள் நீரிலே நின்று வருந்துவதற்கு மேலாக நான் நெடும் போதாக மரத்திலே நின்று பூச்சிகளுக்கும் புழுக்களுக்கும் இரையாகிப் படுகிற க்லேசத்தைக் கண்டீர்களில்லையோ? உங்களாலேயன்றோ எனக்கு இக்கஷ்டம் நேர்ந்தது’ என்று சேலைகளையுங் கொடாதே சில விலாஸ சேஷ்டிதங்களைப் பண்ண, ‘அப்பா! இப்படியும் எம்மை நீ அநியாயஞ் செய்வாயோ?’ என்று ஆய்ச்சியர் முறையிட, ‘நான் செய்வது அநியாயமாகில் நீங்கள் ஊரிலேபோய் முறையிட்டுக் கொள்ளுங்கள்’ என்று கண்ணன் கூற, நாயனே! ஊரும் மாளிகைகளும் கிட்டவிருந்தனவாகில் அது செய்யலாமாயிருந்தது, நாங்கள் உன்னால் கண்டுபிடிக்க வொண்ணாதபடி வரவேணுமென்று, நெடுந்தூரம் வந்தோமே ‘என்செய்வோம்’ என்று ஆய்ச்சிகள் அலமர’ அதுகண்ட கண்ணன் ‘பெண்காள்! நானோ மிறுக்குப் பண்ணாநின்றேன், ஊரோ தூரமாயிராநின்றது’ இனி நீங்கள் போக்கடியாக நினைத்திருப்பதென்?’ என்று வினவ, “ஊழியெல்லா முணர்வானே!” என்கிறார்கள். ஜகத்துக்களை யடங்க ப்ரளயம் வந்து விழுங்கியவன்று எல்லாப் பொருள்கட்கும் போக்கடியைச் சிந்தித்து ஜாகரூகனாயிருந்த நின்னையன்றி வேறுயாரைப் போக்கடியாக நினைக்கவல்லோ மென்கை. (?????? – ஸதேவ) என்னும்படியான வன்று (????) என்று போக்கடி பார்க்கவல்ல நீ பார்க்குமித்தனையன்றோ” என்ற வியாக்கியாநஸூக்தி அறிக.
இங்ஙனம் தன்னையே போக்கடியாக நினைத்துப் பேசின ஆய்ச்சிகளை நோக்கிக் கண்ணபிரான் – ‘நான் ப்ரளயங்கதமான ஜகத்துக்குப் போக்கடி பார்ப்பது உண்மையே, அந்த ஜகத்துக்களுக்கு அப்ரதிஷேதம்- (விலக்காமை) என்கிற பெருத்த குணமொன்று இருந்தபடியாலே நான் அது செய்யலாய்த்து’ உங்கள் திறத்து அஃது இல்லையே’ என்ன’ ‘பிரானே! அப்ரதிஷேதத்துக்கும் மேற்பட ஆநுகூல்யமு முடையவர்களா யிராநின்றோமே நாங்கள், எம்மை நீ இப்படி பேசலாமோ!’ என்று பெண்கள் சொல்ல’ அதுகேட்ட கண்ணபிரான், ‘நீங்கள் “ஆர்வமுனக்கே யுடையோம்” என்று வாயாலே, சொன்னால் அதை நம்புவாருண்டோ? அது கார்ய பார்யவஸாயியாக வேண்டாவோ, ஆர்வத்தைச் சற்று வெளிக்காட்டுங்கள் பார்ப்போம், என்று சில அங்க ஸம்ஜ்ஞைகளைப் பண்ண, ஆய்ச்சிகள் ‘அப்பனே! அப்பேச்சு தவிர்க’ – இதையெல்லாம் எங்கள் தாய்மார் காண்பரேல் தடிபிணக்கே’ இப்போது இவ்வளவிலே அருள்புரிந்து எங்கள் பட்டைப் பணித்தருளாய்’ என்கிறார்கள்.
(போரவிடாய்) சேலையை எங்கள் கைக்கு எட்டிற்று எட்டாதாக விட வொண்ணாது, முழுச் சேலையும் எங்கள் கையில் வந்து விழும்படி விட்டருளாய் என்கை
பிரானே
கோழி கூவுவதற்கு முன்னே நீ உணர்ந்து வருவதற்கு முன்னே பிடித்து வந்து நாங்கள் நீரிலே தோய்ந்து
அத்தாலே அறிவு கலங்கிப் படுகிற கிலேசங்களைப் பாராய் என்று ஆய்ச்சிகள் கூறியதைக் கேட்ட கண்ணபிரான்
நீங்கள் நீரிலே சென்று வருந்துவதற்கு மேலாக நான் நெடும்போதாக
மரத்திலே நின்று பூச்சிகளுக்கும் புழுக்களுக்கும் இரையாகிப் படுகிற
கிலேசத்தைக் கண்டீர்கள் இல்லையோ
உங்களாலே அன்றோ எனக்கு இக்கஷ்டம் நேர்ந்தது -என்று
சேலைகளையும் கொடாதே
சில விலாச சேஷ்டிதங்களையும் பண்ண
அப்பா இப்படியும் எம்மை அநியாயம் செய்வாயோ -என்று ஆய்ச்சியர் முறையிட
நான் செய்வது அநியாயம் ஆகில் நீங்கள் ஊரிலே போய் முறை இட்டுக் கொள்ளுங்கோள் -என்று கண்ணன் கூற
நாயனே ஊரும் மாளிகைகளும் கிட்ட இருந்தன வாகில் அது செய்யலாமே இருந்தது
நாங்கள் உன்னால் கண்டு பிடிக்க ஒண்ணாத படி வர வேணும் என்று
நெடும் தூரம் வந்தோம்
என் செய்வோம் என்று ஆய்ச்சிகள் அலமர
அது கண்ட கண்ணபிரான்
பெண்காள் -நானோ மிறுக்குப் பண்ணா நின்றேன்
ஊரோ தூரமாய் இரா நின்றது
இனி நீங்கள் போக்கடியாக நினைத்து இருப்பது என் என்று வினவ
ஊழி எல்லாம் உணர்வானே -என்கிறார்கள் –
ஜகத்துக்களை யடங்க பிரளயம் வந்து விழுங்கிய அன்று
எல்லா பொருள்களுக்கும் போக்கடியைச் சிந்தித்து
ஜாக ரூகனாய் இருந்த
நின்னை அன்றி வேறு யாரைப் போக்கடியாக நினைக்க வல்லோம் -என்கை
சதேவ என்னும்படியான அன்று
பஹூச்யாம் என்று போக்கடி பார்க்க வல்ல நீ பார்க்கும் இத்தனை அன்றோ
இங்கனம் தன்னையே போக்கடியாக நினைத்துப் பேசின ஆய்ச்சிகளை நோக்கிக் கண்ண பிரான்
நான் பிரளயங்கதமான ஜகத்துக்குப் போக்கடி பார்ப்பது உண்மையே
அந்த ஜகத்துக்களுக்கு அப்ரதிஷேதம் -விலக்காமை-என்கிற பெருத்த குணம் ஓன்று இருந்தபடியாலே நான் செய்யலாய்த்து
உங்கள் திறத்து அஃது இல்லையே -என்ன
பிரானே அப்ரதிஷேததுக்கும் மேற்பட ஆநு கூல்யம் உடையவர்களாய் இரா நின்றோம்
நாங்கள் -எம்மை நீ இப்படி பேசலாமா -என்று பெண்கள் சொல்ல
அது கேட்ட கண்ணபிரான்
நீங்கள் ஆர்வம் உனக்கே யுடையோம் -என்று வாயாலே சொன்னால் அதை நம்புவார் உண்டோ
அது கார்ய பர்யவசியாக வேண்டாவோ
ஆர்வத்தைச் சற்று வெளிக் காட்டுங்கோள் பார்ப்போம் என்று சில அங்க சம்ஜ்ஞ்ஞைகளைப் பண்ண
ஆய்ச்சிகள்
அப்பனே அப்பேச்சு தவிர்க்க
இதை எல்லாம் எங்கள் தாய்மார் காண்பரேல் தடி பிணக்கே
இப்போது இவ்வளவிலே அருள் புரிந்து
எங்கள் பட்டைப் பணித்து அருளாய் -என்கிறார்கள்
போர விடாய்
சேலையை எங்கள் கைக்கு எற்றிற்று எட்டாதாக விட ஒண்ணாது
முழுச் சேலையும் எங்கள் கையில் விழும்படி விட்டருளாய்-என்கை –
————————————————————————————————–
மாமியார் மக்களே யல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்
தூ மலர்க்கண்கள் வளரத் தொல்லை யிராத் துயில்வானே
சேமமலேன்றிது சாலச் சிக்கனே நாமிது சொன்னோம்
கோமள வாயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய்–3-8-
பதவுரை
தொல்லை இரா – பழைய ராத்ரிகளில்
தூ மலர் கண்கள் வளர–பரிசுத்தமான மலர் போன்ற கண்கன் நித்ரா பரவசமாம்படி
துயில்வானே–பள்ளி கொள்பவனே!
(இப் பொய்கைக் கரையிலே நிற்குமவர்கள்)
மாமியார் மக்களே அல்லோம்–உனக்குத் தேவிமாராகும் முறையிலுள்ளார் மாத்திரமல்லோம்’
மற்றும் எல்லோரும்–மற்றுள்ள மாமிமார், அவர்கள் தாய்மார் முதலியவர்களும்
இங்கு–இவ் விடத்தில்
போந்தார்–வந்திருக்கின்றார்கள்’
இது–நீ செய்கிற இத் தீம்பானது
சால–மிகவும்
சேமம் அன்று–தகுதியானதன்று’
இது–இவ் வார்த்தையை
நாம் நாங்கள்
சிக்கன–திண்ணிதாக
சொன்னோம்–சொல்லுகின்றோம்’
ஆயர்–இடையர்களுக்கு
கோமளக் கொழுந்தே–இளங்கொழுந்து போன்றவனே!
குருந்திடை கூறை பணியாய்
கண்ணபிரான் ஷணம் தோறும் தீமைகளை முக முகச் செய்யப் புக்கவாறே
இவன் ஊரில் இவ்வளவும் செய்யாமல் இங்கே செய்வதனால்
தனி இடத்திலே செய்வதற்கு ஆராய்ச்சி இல்லை என்று இவன் நினைத்து இருக்கக் கூடும் என்றுகருதி
பிரானே தனி இடத்திலே இவை செய்கிறோம் என்று நினையாதே கொள் பழியாய் முடியும் என்று ஆய்ச்சிகள் சொல்ல
ஊரில் பழி யாவது என்
ஊரில் இருந்து நீங்கள் அன்றோ இங்கே ஏற வந்தீர்கள்
நான் தீம்பன் என்று உங்கட்குத் தெரியுமே இறே-
என்று கண்ணபிரான் கூற
நீ இவ்வாறு தீம்பு செய்வதற்கு காரணம் என் –
என்று ஆய்ச்சிகள் கேட்க
இங்கு உள்ளார் அனைவரும் எனக்கு மைத்துனமை முறைமை யுடையார்கள் ஆனது பற்றிச் செய்கிறேன் என்ன
அது கேட்ட ஆய்ச்சிகள்
அப்படியா இங்கு உள்ளார் எல்லாரும் மைந்துணனமை முறை யுடையார் அல்லர்
மாமிமார் மக்கள் சிலர்
மாமிமார் சிலர்
மாமிமார்களின் தாயார் சிலர்
என்று இப்படிப் பட்ட பலவகைப் பட்ட உறவு முறையார் இங்கு உண்டு காண்
ஆகையாலே இத் தீமைகளைத் தவிராய் -என்கிறார்கள்
மாமியார் மக்களே யல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்
தூ மலர்க்கண்கள் வளரத் தொல்லை யிராத் துயில்வானே
சேமமலேன்றிது சாலச் சிக்கனே நாமிது சொன்னோம்
கோமள வாயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய்
மாமிமார் மக்கள் -பத்னிகள் என்றபடி
வடமொழியில் நாயகனை ஆர்யபுத்ரர் என வழங்குவதோடு ஒக்கும் இவ்வழக்கு-
கீழ் மாமி தன மகனாகப் பெற்றால் -என்றதும் காண்க –
————————————————————————————————–
கஞ்சன் வலை வைத்த வன்று காரிருள் எல்லில் பிழைத்து
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற விக்கன்னியரோமை
அஞ்ச யுரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டிருக்கும் –
வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசுமையிலீ கூறை தாராய்–3-9-
பதவுரை
கஞ்சன்–கம்ஸனானவன்
வலை வைத்த அன்று–உன்னை அழிப்பதாக நினைத்த காலத்தில்
கார் இருள்–மிக்க இருளை யுடையத்தான
எல்லில்–இரவில்
பிழைத்து–பிழைத்து,
நின்ற–(அம்மணமாக) நிற்கின்ற
இக் கன்னிய ரோமை–இளம் பெண்களான எங்களுக்கு
நெஞ்சு துக்கம் செய்ய–மனத் துன்பத்தை உண்டாக்குவதற்காக
போந்தாய்–வந்து பிறந்தாய்’
அசோதை–யசோதைப் பிராட்டியோ வென்றால்
அஞ்ச–நீ பயப்படும்படி
உரப்பாள்–உன்னை அதட்ட மாட்டாள்’
ஆணாட விட்டிட்டிருக்கும்–தீம்பிலே கை வளரும் படி உன்னை விட்டிரா நின்றாள்’
வஞ்சகம்–வஞ்சனை யுடைய
பேய்ச்சி–பூதனையினுடைய
பால்–முலைப் பாலை
உண்ட–(அவளுயிரோடே கூட) உறிஞ்சி யுண்ட
மசுமை இலீ–லஜ்ஜை யில்லாதவனே!
கூறை தாராய்–சேலைகளைத் தந்தருள்.
ஆணாட விட்டிட்டிருக்கும் -தீம்பிலே கை வளரும்படி உன்னை விட்டிரா நின்றாள்
மசுமை இலீ-லஜ்ஜை இல்லாதவனே-
வசூதேவ தேவியான தேவகியின் எட்டாவது கருவில் திருமால் கண்ணனாக அவதரிக்க
அப்போதே வசூதேவ தேவகிகளின் கால் விலங்கு இற்று முறிந்து விழ
அக்குழந்தையைக் கம்சன் கொல்லக் கூடும் என்று அச்சத்தினால்
தாய் தந்தையர் அத தெய்வக் குழந்தையின் அனுமதி பெற்று
அந்த சிசுவை
அது பிறந்த நாடு ராத்ரியிலேயே திருவாய்ப்பாடியிலே இடையர்க்கு எல்லாம் தலைவரான
நந்தகோபரது திருமாளிகையிலே ரஹச்யமாகக் கொண்டு சேர்த்து விட்டு
அங்கு அப்பொழுது அவர் மனைவியான யசோதைக்கு மாயையின் அம்சமாகப் பிறந்து இருந்த
ஒரு பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து விட
அது முதல் கம்சனைக் கொள்ளுகிற வரையில்
கண்ணபிரான் அக்கோகுலத்தில் நந்த கோப குமரனாய்
யசோதை வளர்க்க வளர்ந்து அருளினான் –
பிரானே நீ கஞ்சனுக்குத் த்தப்பிப் பிழைத்தது எங்களை எல்லாம் வாழ்விப்பதற்காக என்று நினைத்து இருந்தோம்
இன்று நீ செய்யும் படிகளைப் பார்த்தால் எங்களை துக்கப் படுத்துவதற்காகவே
நீ தப்பிப் பிழைத்தாய் என்று நினைக்கலாய்த்து என்கிறார்கள் –
அஞ்ச உரைப்பாள் அசோதை இத்யாதி
கண்ணன் செய்யும் தீம்புகளை யசோதையிடம் சென்று யாரேனும் முறை இட்டால்
அவள் பரிவின் மிகுதியாலே அவனை அதட்ட மாட்டாமல்
இடைப் பெண்கள் திறத்தில் நீ இப்படி தானா தீம்பு செய்கிறது -என்றால் போலே சில வார்த்தைகளைச் சொல்லி
மேன் மேலும் அவனைத் தீம்பிலே கை வளர விடுவாள் -என்கை-
ஆணாட இட்டுஇட்டு இருக்கும் -என்றும் பிரிக்கலாம்
இட்டு இடுகை -உபேஷித்து இருக்கை-
இருக்கும்
தான் கண்டபடி இவனைத் தீம்பு செய்ய விட்டு
நம் மகன் இப்படி பருவம் நிரம்பித் தீம்பு செய்யப் பெற்றோமே -என்னுமத்தாலே
தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்-என்கிறபடியே
ஆனந்த நிர்ப்பரையாய்
க்ருதக்ருத்யையாய் -இருக்கும்
மசுமை இலீ
பிறர் நோவு படுவதைக் கண்டால்
ஹ்ரீரேஷா ஹி மமாதுலா -என்று லஜ்சைப் படும் சக்கரவர்த்தி திரு மகனைப் போல் அன்றிக்கே
வெட்கம் கெட்டுப்பிழைக்கிற பிழைப்பு இ றே உன்னது -என்கை-
———————————————————————————————
கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாட்டை
பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை
இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே–3-10-
பதவுரை
எங்கள் நம்பி–எமக்கு ஸ்வாமியாய்
கரிய–கார் கலந்த மேனியனான
பிரான்–கண்ண பிரான்
கன்னிய ரோடு–ஆயர் சிறுமியரோடே செய்த
விளையாட்டை–திவ்ய லீலைகளைக் குறித்து
பொன் இயல்–ஸ்வர்ண மயமான
மாடங்கள் சூழ்ந்த–மாடங்களால் சூழப்பட்ட
புதுவையர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூரி லுள்ளார்க்குத் தலைவரான
பட்டன் கோதை–பெரியாழ்வார்க்குத் திருமகளான ஆண்டாள்
இன் இசையால் இனிய இசையாலே
சொன்ன–அருளிச் செய்த
மாலை–சொல் மாலையாகிய
ஈர் ஐந்தும்–இப் பத்துப் பாட்டுக்களையும்
வல்லவர் தாம்–கற்க வல்லவர்கள்
போய்–(அர்ச்சிராதி மார்க்கமாகப்) போய்
வைகுந்தம் புக்கு–பரம பதத்தை யடைந்து (அவ் விடத்திலே)
மன்னிய–நித்ய வாஸம் செய்தருளுகிற
மாதவனோடு–திருமாலோடு கூடி
இருப்பார்–நித்யா நுபவம் பண்ணிக் கொண்டு வாழ்ந்திருக்கப் பெறுவர்.
நிகமத்தில் –
கண்ணபிரானுக்கும் இள வாயர் மகிளிர்க்கும்
பொய்கைக் கரையிலே நடந்த
லீலா ரசத்தைக் குறித்து
ஆண்டாள்
பரம போக்யமாக அருளிச் செய்த
இத் திருமொழியை
ஓத வல்லவர்கள்
பரமபதம் சென்று புக்குப்
பர வாஸுதேவன் உடைய பாதார விந்தங்களின் கீழ்
வாழப் பெறுவார் -என்று
இத் திரு மொழி கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டியவாறு
மன்னிய -வைகுந்தத்துக்கு அடை மொழி ஆக்கவுமாம்-
அடிவரவு கோழி இது எல்லே பரக்க காலை தடத்து நீர் மாமி கஞ்சன் கன்னி தெள்ளியார்.
————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே -அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply