அவதாரிகை –
உகந்து அருளின நிலங்களில்
இங்கே சந்நிஹிதன் ஆன பின்பு
இனி -அவ்வோ விடங்களில் முகம் காட்டிப் பிழைத்துப் போம் இத்தனை -போக்கி
தம் தம் உடம்புகளை நோவ வருத்தி
துக்கப் பட வேண்டா கிடீர் –
புருஷார்த்த லாபம் வேண்டி இருப்பார்க்கு –
என்கிறார் –
சர்வேஸ்வரன் சம்சாரத்தில் புகுந்து
தன்னுடம்பைப் பேணாதே
நம் கார்யம் செய்யா நிற்க
நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா –
என்கிறார் –
————————————————————————————
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-76-
பதவுரை
(ஒ உலகத்தவர்களே)
நீர்–நீங்கள்
பொருப்பு இடையே–மலைகளின் நடுவே
நின்றும்–நின்று கொண்டும்
புனல்–நீர் நிலைகளிலே
குளித்தும்–முழுகிக் கொண்டும்
ஐந்து நெருப்பு இடையே–பஞ்ச அக்நி மத்யத்திலே
நிற்கவும்–நின்று கொண்டும் தவஞ்செய்ய
வேண்டா–வேண்டியதில்லை,
விருப்பு உடைய–(எல்லாராலும்) விரும்பத் தக்கதா யிருக்கின்ற
வெஃகா–திரு வெஃகாவில்
சேர்ந்தானை–வந்து கண் வளர்த்தருளும் பெருமானை
மெய்–மெய்யாக (அநந்நய ப்ரயோஜநமாக)
மலர் தூய் கை தொழுதால்–புஷ்பங்களைப் பணிமாறி வணங்கப் பெற்றால்
தீ வினைகள்–துஷ் கருமங்களெல்லாம்
ஆய்ந்து–(நமக்கு இவ்விடம் வாஸயோக்யமன்று என்று) நிரூபித்தறிந்து
அஃகாவே–சுருங்கிப் போக மாட்டாவோ? (அகன்றோடிப் போய்விடுமென்கை)
————————————————————————————–
வியாக்யானம் –
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் –
பனிக்காலத்திலே மலைகளின் நடுவே நின்றும்
குளிர் நாளில் பொய்கைகளில் புகுந்து
நீரிலே முழுகிக் கிடந்தும் –
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா –
கோடை நாளில்
மாத்யந்தினத்திலே
பஞ்சாக்னியின் நடுவே நின்றும்
நீங்கள் துக்கப் பட வேண்டா –
துக்கப் பட்டு பாவத்தைப் போக்க வேணுமோ —
இனி இவ் வழியால் போக்குங்கள் என்கிறார்
விருப்புடைய வெக்காவே சேர்ந்தானை –
அவனோடு அல்லாதாரோடு
வாசி யற
சர்வருக்கும் ஸ்ப்ருஹநீயமாய்
விரும்பப் படுவதான திரு வெக்காவிலே
சாய்ந்து அருளினவன் பக்கலிலே –
மெய்ம்மலர் தூயக் கை தொழுதால் –
பிரயோஜனாந்தர பரதை யாகிற பொய் கலவாதே
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு
பூக்களை அக்ரமாகப் பணிமாறி
கையாலே அஞ்சலி பந்தத்தைப் பண்ணி
ஆஸ்ரயித்தால்-
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து –
தீ வினைகள் ஆய்ந்து அக்காவே –
பாபங்கள் ஆனவை நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம்அன்று என்று அறிந்து தப்பாவே
பின்பு அவை நிற்கை என்று ஓன்று உண்டோ –
தானே ஆராய்ந்து நமக்கு இவ்விடம் அன்று என்று ஓடிப் போம் –
வ்ருஷ்டி ப்ரதீஷாஸ் சாலய-பயிர் நெல் மழையை எதிர்பார்த்து -பயிரை உயிர் உடையது போலே சொன்னது போலே –
சும்மனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -பெரியாழ்வார்-5-4-3-
வெக்காவே சேர்ந்தானை –
இருவர் சாதன அனுஷ்டானம் பண்ண வேணுமோ –
அன்றிக்கே –
மெய்ம்மலர் தூவி ஆய்ந்து –
அவன் குணங்களை ஆய்ந்து
அனுசந்தித்துக்
கை தொழுதால்
தீ வினைகள் அக்காவே -என்னவுமாம்
மென்மலர் -என்றதாகில் -மிருதுவான மலரை -என்கிறது –
———————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply