அவதாரிகை –
உமக்கு வாழ்விலே அந்யமாகில்
பிரதி பந்தகம் போனால் அன்றோ வாழலாவது –
விரோதி செய்த படி என் என்ன
அது போக்குகை அவனுக்கு பரமாய் விட்டது
என்கிறார் –
————————————————————————————
பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து -கற்றுக் குணிலை
விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப்
பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு —–60-
பதவுரை
பெற்றம்–பசுக்களை
முற்ற காத்து–ஒன்று தப்பாமல் ரக்ஷித்தவனாயும்
பிணை மருதம் ஊடு போய்–இரட்டை மருத மாங்களிடையே சென்றவனாயும்
பேய் முலை உண்டு–பூதனையின் முலையை உண்டவனாயும்
மா சகடம் உதைத்து–பெரிய சகடத்தை உதைத் தொழித்தவனாயும்
கன்று குணிலை கொண்டு- கன்றாகிய எறிதடியைக் கொண்டு
விளங்கனிக்கு எறிந்தான்–விளாம்பழத்தின் மீது எறிந்தவனாயுமுள்ள எம்பெருமான்
பண்டு–முன்பொரு காலத்தில்
வெற்றி பணிலம்–ஜயசீலமான சங்கை
வாய் வைத்து–வாயிலே வைத்து ஊதி
உகந்தான்–மகிழ்ந்தான்
————————————————————————————-
வியாக்யானம் –
இந்த பாசுரம் நிரல் நிறை அணி பாசுரம் –
பெற்றம் –
பசுக்கள் –
பிணை மருதம் –
நிர்விவரமான மருத்துகள் –
பேய் முலை –
பேயினுடைய முலை –
மாச் சகடம் –
பயாவஹமான சகடம்
முற்றக் காத்து –
இவற்றில் –
பசுக்களை ஓன்று ஒழியாமல் நோக்கி –
ஊடு போய் –
யமளார்ஜூனங்களின் நடுவே
அவை சாயும்படி வழி போய் –
உண்டு-
பூதனை முடியும் படி உண்டு –
உதைத்து –
சகடத்தை உதைத்து
அநந்தரம் –
கற்றுக் குணிலை-
கன்றாகிற எறி கருவியைக் கொண்டு –
விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் –
விளாவினுடைய கனிக்கு எறிந்தான்
தன்னைக் கொண்டு தன்னை மாய்த்தபடி –
வெற்றிப் பணிலம் வாய் வைத்துகந்தான் –
அவன் தான் ஆர் என்னில் –
வெற்றியைப் பண்ணக் கடவதான
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைத் திருப்பவளத்திலே வைத்தூதி
ஆசூர வர்க்கத்தை முடித்து –
ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் என்று உகந்தவன் –
ஆயுதம் எடேன் என்று ஓர் ஆயுதம் எடுத்தவன் –
அர்ஜுனன் அம்பால் தனித் தனியே கொல்லாமே
திரளக் கொல்லவும் பெற்று
ஆஸ்ரிதர்க்கு உஜ்ஜீவன மிடவும் பெற்றான் –
பண்டு-
பருவம் நிரம்புவதற்கு முன்னே
ஆசூர வர்க்கத்தை கை தொடானாய் முடித்தான்
பின்பு
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தின் உடைய த்வநியாலே முடித்தான் –
————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply