மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -57-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படிப் பட்ட பெருமையை யுடையவனை
அனுசந்திக்கும் இதுவே கிடாய்
நமக்கு உத்க்ருஷ்டமாகை ஆகிறது
என்கிறார் –

கருடத்வஜனுமாய்
ஸ்ரீ யபதியும் ஆனவன்
திருவடிகளை ஆஸ்ரயி -என்கிறார் –

முடியாது என்று பேசாது இராதே அவனை
ஆஸ்ரயிக்கில் எல்லாரும் மேலாவது
என்கிறார் –

—————————————————————————————-

பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி
மலிந்து திருவிருந்த மார்வன் -பொலிந்த
கருடன் மேல் கண்ட கரியான் கழலே
தெருடன் மேல் கண்டாய் தெளி ——–57-

பதவுரை

திரு–பிராட்டியானவள்,
பொலிந்து இருண்ட கார்–செறிந்து இருளை யுடைத்தான கார் காலத்திலுண்டான
வானில்–மேகத்தில்
மின்னே போல் தோன்றி–மின்னல் போல் பிரகாசித்து
மலிந்து இருந்த மார்வன்–பொருந்தி யிருக்கப் பெற்ற திரு மார்பை யுடையனாய்
பொலிந்த கருடன் மேல் கொண்ட–விளங்குகின்ற கருடனால் மேற்றகொள்ளப்பட்டவனான
கரியான்–கருநிறப் பெருமானுடைய
கழலே–திருவடிகளே
தெருள்தன் மேல்-ஜ்ஞாநத்திற்கு மேற்பட்டதான பக்திக்கு விஷயமென்று
தெளி கண்டாய்–(நெஞ்சே!) தெளிந்திரு

———————————————————————————————
வியாக்யானம் –

பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி –
இருளை யுடைத்தான
கார் காலத்தில் கருத்த மேகத்திலே மின்னினாப் போலே யாய்த்து
பிராட்டி அவன் மார்வில் இருந்தால் இருக்கும் படி –

மலிந்து திருவிருந்த மார்வன் –
பெரிய பிராட்டியார் தன் வேண்டப்பாடு தோன்ற
எழுந்து அருளி இருக்கும் படியான
மார்வை யுடையவன் –

அன்றிக்கே
மலிந்து திரு விருந்த என்று
அவளும் தண்ணீர் தண்ணீர் என்று
ஆசைப் படா நிற்கும் -என்றுமாம் –

பொலிந்த கருடன் மேல் கண்ட கரியான் கழலே –
பெரிய பிராட்டியாரை உடையவன்
என்னும் இடத்துக்கு மேலே
வேறே யொரு வேண்டற்பாடு காணும்
திருவடி மேல் இருக்கும் அத்தால் –
அவ் வழகுக்கு  மேலே ஆரழகு -என்றுமாம்

பெரிய திருவடியை நடத்தா நின்றுள்ள
கருத்த நிறத்தை யுடைய சர்வேஸ்வரன்
திருவடிகளே –

பொலிந்த கருடன் –
சம்ருத்த்னான திருவடி என்றுமாம் –
மகா மேருவிலே ஓர் அஞ்சன கிரி இருந்தாப் போலே இருக்கை –

திருவடி மேரு போலே –
எம்பெருமான் அஞ்சன கிரி போலே-

கரியான் –
ஒன்றுக்கு ஓன்று பரபாகமாய் இருக்கிறபடி –

தெருடன் மேல் கண்டாய் தெளி –
தெருள் தன் –
தெருளுதல்
தெருளப் படுமது -அனுசந்திக்கப் படுமது –
ஞான விபாகமான பக்தி யாகவுமாம் –

மேல் கண்டாய் –
இது எல்லாவற்றுக்கும் மேலாக அனுசந்தி –
இத்தை ஒழிந்தவை அடங்கலும் கீழ் –
இது ஒன்றுமே கிடாய் மேல் –
சேஷ பூதன் ஸ்வ ரூபத்துக்கு ஈடான உதகர்ஷம் இது கிடாய் –

தெளி –
இத்தை ஒலக்க வார்த்தை என்று இராதே
அழகிதாக புத்தி பண்ணு

கருடன் மேல் கொண்ட கரியான் –
இரண்டையும் விளக்கும் மின் போலே பிராட்டி –

———————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading