அவதாரிகை –
இப்படிப் பட்டவனுடைய அழகை
அனுபவித்துப் போமித்தனை போக்கி
இன்ன படிப் பட்டு இருக்கும் என்று கொண்டு
நம்மால் பரிச்சேதிக்கப் போகாது கிடீர்
என்கிறார் –
பிரயோஜனத்திலே சொல்லில்
சொல்லும் அத்தனை –
———————————————————————————-
நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறையுருவம் யாம் அறியோம் எண்ணில் -நிறைவுடைய
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு ——-56-
பதவுரை
இறை–ஸர்வேச்வரனுடைய
உருவம்–திவ்ய மங்கள விக்ரஹமானது
நிறம்–நிறத்தால் வெளுத்திருக்குமோ (அல்லது)
செய்து–சிவந்திருக்குமோ, (அல்லது)
பசிது–பச்சென்றிருக்குமோ, (அல்லது)
கரிது–கறுத்திருக்குமோ,
என்று–எவ்வண்ணமா யிருக்குமென்று
எண்ணில்–ஆராயுமிடத்தில்
யாம் அறியோம்–நாம் அறியமாட்டோம் (இது நிற்க)
நிறைவு உடைய–ஜ்ஞான சக்திகளில் பூர்த்தியை உடையவளான
நா மங்கை தானும்–ஸரஸ்வதீ தேவியும்
பூ மங்கை கேள்வன்–பூவிற்பிறந்த பெரிய பிராட்டிக்குக் கணவனான எம்பெருமானுடைய
பொலிவு–பூர்த்தியை
நலம் புகழ வல்லளே–நன்றாகப் புகழ சக்தி யுடையவளோ
(அல்லள்)
————————————————————————————-
வியாக்யானம் –
நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று இறையுருவம் யாம் அறியோம் எண்ணில் –
இறையினுடைய திரு நிறமானது
வெளுத்து இருக்கும்
சிவந்து இருக்கும்
கருத்து இருக்கும்
பச்சென்று இருக்கும்
என்று கொண்டு ஆராயும் இடத்தில்
நம்மால் ஏக தேசமும் அறியப் போகாது –
யாம் அறியோம் எண்ணில் –
எண்ணாதே
பக்தியால் பேசிக் கொண்டு நிற்கில்
நிற்கும் இத்தனை –
இது தான் நம்முடைய ஞான வைகல்யத்தாலே
வந்தது ஓன்று அன்று –
நிறைவுடைய நா மங்கை தானும் –
நாட்டில் அவனைப் பேசப் புகுவார்
தன்னை யாஸ்ரயிக்க இருப்பாளுமாய்
தான் அவனைப் பேசுகையிலே ஒருப்பட்டு
அதுக்கு ஈடான பெருமையையும் உடையளான
சரஸ்வதி யானவளும்-
கலங்காதே பேசுகைக்கு மத்யச்தையாய்ப் பிறந்த
தெளிவை உடையவளும் –
நலம் புகழ் வல்லளே –
அவனுடைய கல்யாண குணங்களைப் பேசி முடிக்க வல்லளோ-
அங்குத்தைக்குத் தகுதியாகப் புகழ வல்லளே-என்றுமாம் –
என் தான் அவள் மாட்டாமைக்கு அடி -என் என்னில்
பூ மங்கை கேள்வன் பொலிவு –
இவள் யாவள் ஒருத்திக்கு சேஷ பூதையாய் இருக்கிறாள் –
அப்படிப் பட்டவள் தானும் கூட சேஷ பூதையாக யுடையவனுடைய சம்ருத்தியை
இவளாலே புகழ்ந்து தலைக் கட்டலாமோ –
ஸ்ரீ யபதியினுடைய சம்ருத்தியைச் சிலராலே பேசப்போமோ-
அவனும் அவளுமாய் நிற்கிற இடத்திலே சொல்லலாமோ
அப்ரமேயம் ஹித்த்தேஜ யஸ்ய சா ஜநகத்மஜா -ஆரண்ய -37-18
உயர்வற உயர்நலம் உடையவன் –
இறையுருவம் யாம் அறியோம் எண்ணில் –
அவன் கொண்ட வடிவு ஒன்றுக்கும் இத்தனை –
அவன் கல்யாண குணங்களைப் பேச முடியுமோ என்றபடி –
——————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply