அவதாரிகை –
ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல்
இப்படி வத்சலனாய்
உள்ளவன் உடைய
அழகை -அனுபவிக்கிறார் –
———————————————————————————
பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல் -திரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன்
நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ———-55-
பதவுரை
பெரியவரை மார்வில்–பெரிய மலைபோன்ற திருமார்பிலே
பேர் ஆரம்பூண்டு–பெரிய ஹாரத்தை அணிந்துகொண்டு
திரியுங்கால்–உலாவினால்
கரிய முகிலிடை மின் போல–காளமேகத்திலே மின்னல் மின்னினாற் போன்றிருக்கும்!
மற்று–அன்றியும்,
அவன் தன்–அப்பெருமானுடைய
நீள் நெடு கண்–நீண்டு பரந்த திருக்கண்களினுடைய
நிறம்–நிறத்தை
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே காட்டும்–பாட்டென்று பேர் பெற்றவையெல்லாம் ஒடுங்கும் படியாக
(அதிமதுரமாக) வண்டுகள் இருந்து பாடப்பெற்ற தாமரைப்பூவே காட்டித்தரும்.
————————————————————————————-
வியாக்யானம் –
பெரிய வரை மார்வில் –
ஒரு மேரு போலே யாய்த்து
தன் திருமேனி இருக்கிற படி –
இத்தால்
ஆரத்தால் பரிச்சேதிக்கப் போகாத படி
பெரிய மலை போலே பரந்து இருக்கிற
திரு மார்வில் -என்கிறபடி –
பேராரம் பூண்டு –
அம் மார்வு தனக்கு இருமடி இட்டுச்
சாத்த வேண்டும்படி யாய்த்து
ஆரத்தின் பெருமை
இருக்கிறபடி –
கரிய முகிலிடை மின் போல் –
அப்போது இருக்கும் படி என் என்னில் –
மார்வுக்கும்
ஆரத்துக்கும்
திருஷ்டாந்தம்
கருத்த நிறத்தை உடைத்தாய் இருப்பதொரு
மேகத்தில் மின்னினாப் போலே
யாய்த்து ஸ்யாமளமான திரு மேனியிலே
ஆரம் கிடந்தால் இருக்கும் படி –
திரியுங்கால் –
பெரிய வடிவிலே ஆரத்தைச் சாத்தி
சஞ்சரிக்கும் போது
அங்கன் அன்றிக்கே
திரியுங்கால் –
இவ்வழகை அனுசந்திக்கும் போது -என்றுமாம் –
பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே-
பாண ஜாதியாக
லஜ்ஜித்து ஒடுங்கும் படிக்கு ஈடாக
வண்டுகள் ஆனவை சப்தியா நின்றுள்ள
பங்கயமே காட்டும் –
எத்தை என்னில் –
மற்றவன் தன் நீண் நெடுங்கண் காட்டும் நிறம் –
அவனுடைய மற்றை நீண் நெடும் கண்ணில் உண்டான நிறத்தை –
அவனுடைய பரிச்சேதிக்கப் போகாத கண்ணின் உடைய நிறத்தைக் காட்டா நின்றது –
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் -திரு விருத்தம்-45-
——————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply