ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -65 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இது எனக்கு ஒருவனுக்குமே யன்று –
அவனை ஆஸ்ரயித்தார் எல்லார்க்கும் கிடீர்
என்கிறார்  –

—————————————————-

வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிக் கண் செல்லார் நினைதற்
கரியானைச் சேயானை ஆயிரம் பேர்ச் செங்கட்
கரியானைக் கை தொழுதக்கால்   –65–

பதவுரை

நினைதற்கு அரியானை–(ஸ்வ ப்ரயத்நத்தாலே) நினைப்பதற்குக் கூடாதவனும்
சேயானை–(நெஞ்சுக்கு விஷயமாகாதபடி) மிக்க தூரத்திலிருப்பவனும்
ஆயிரம் பேர்–ஆயிரம் திருநாமங்களை யுடையவனும்
செம் கண் கரியானை–சிவந்த திருக் கண்களையும் கறுத்த வடிவை யுமுடையனுமான பெருமானைக் குறித்து
கை தொழுதக்கால்–அஞ்சலி பண்ணினால்
(அப்படி அஞ்சலி பண்ணினவர்கள்)
வினையால்–நல் வினை தீ வினைகளால்
அடர்ப் படார்–நெருக்கு பட மாட்டார்கள்;
வெம் நரகில்–கொடிய சம்ஸாரமாகிற நரகத்தில்
சேரார்–(மீண்டும்) சென்று கிட்ட மாட்டார்கள்;
தினையேனும்–சிறிதளவும்
தீ கதிக்கண்–கெட்ட வழிகளில்
செல்லார்–போக மாட்டார்கள்.

——————————————————————————

வியாக்யானம் –

வினையால் அடர்ப்படார் –
புண்ய பாப ரூப கர்மங்களால் நெருக்குப் படார்

வெந்நரகில் சேரார் –
செய்தற்ற பாபங்களுக்குப் பல ரூபமான
சம்சாரத்தில் வந்து கிட்டார்

அன்றிக்கே
வினையால் அடர்ப்படார் -என்றது
இங்கு அனுபவிக்குமது
வெந்நரகு  போய் அனுபவிக்கும் அது –

தினையேனும் தீக்கதிக் கண் செல்லார் –
தர்ம புத்ரனுக்கு அர்த்த ஸ்வ பாவத்தாலே குறைவற்று இருக்க
பிரதிபத்தி விசேஷத்தாலே வந்த தொரு தடவற்   பொய்க்கு
நரக தர்சனம் பண்ண வேண்டிற்று இறே
அம்மாத்ரமும் வேண்டா இவர்களுக்கு -என்கிறார் –

இது எல்லாம் என் செய்தால் தான் என்னில்
நினைதற் கரியானைச் –
ஸ்வ யத்னத்தால் அறிவார்க்கு நினைக்கப் போகாதபடி
அபரிச்சேத்யனாய் இருக்கும்

சேயானை –
என் தான் இப்படி அருமைப் பட வேண்டுவான் -என் என்னில்
தூரஸ்தன் ஆகையாலே –

ஆனால் பின்னை  அணுக ஒண்ணாத படி இருக்குமோ -என்னில் –
ஆயிரம் பேர்ச் செங்கட் கரியானைக் கை தொழுதக்கால்   –
தான் கொடுத்த அறிவு கொண்டு தன்னை அனுபவிப்பார்க்கு இழிந்த விடம் எங்கும் துறையாம்படி
குண சேஷ்டிதாதி களுக்கு வாசகமான
ஆயிரம் திரு நாமங்களை உடையானாய்
வாத்சல்யத்தாலே சிவந்த கண்களை உடையனாய்
ஸ்ரமஹரமான வடிவை உடையனானவனை
ஆஸ்ரயித்தால்

வினையால் அடர்ப்படார் –
வெந்நரகில்  சேரார்  –
தினையேனும் தீக்கதிக் கண் செல்லார் –

பால் குடிக்க நோய் தீருமா போலே
அஞ்சலி மாத்ரத்தாலே போம் –

—————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading