அவதாரிகை –
ப்ரஹ்மா அறிய மாட்டான் ஆகில்
நீர் பின்னை அறிந்த படி எங்கனே என்னில்
திரு நாம த்வாரா அவனை ஆஸ்ரயித்து
அவன் தானே தன்னைக் கொடு வந்து காட்டக் கண்டேன்
என்கிறார் –
சம்சாரம் பய ஸ்தானம் என்னும் இடமும் –
உஜ்ஜீவிப்பது அவனைப் பற்றி என்னும் இடமும் –
அறிந்தேன்
என்கிறார் –
—————————————–
அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன்மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது ——57-
பதவுரை
அயல் நின்ற–(என்) அருகிலேயே இருந்து கொண்டு (என்னை) இடைவிடாமல் ஹிம்ஸித்துக் கொண்டே யிருக்கிற
வல் வினையை–மிகக் கடினமான பாவங்களைக் குறித்து
அஞ்சினேன்–பயப்பட்டேன்;
அஞ்சி–(இப்படி) பயப்பட்டு
உய–(இந்தப் பாப ஸம்பந்தம் நீங்கி) உஜ்ஜீவிக்கும் பொருட்டு
நின்–உன்னுடைய
திரு அடியே–திருவடிகளில் தானே
சேர்வான்–வந்து கிட்டுகைக்காக
நயம் நின்ற–இன்பம் பொருந்திய
நல் மாலை கொண்டு–சிறந்த இந்தப் பிரபந்தத்தைக் கொண்டு
தொழுது–(உன்னை) ஆச்ரயித்து
நமோ நாரணா என்னும் சொல் மாலை–திருமந்திரத்தின் பொருளை
கற்றேன்–அப்யஸித்தேன்.
———————————————-
வியாக்யானம் –
அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் –
புக்கிடம் புக்கு வடிம்பிட்டு நலியக் கடவதான
பாபத்துக்கு பயப்பட்டேன்
அன்றிக்கே
ஜ்ஞானம் பிறந்த பின்பு இவரை விட்டுக் கடக்க நின்றது ஆய்த்து பாபம்
இது இன்னம் வந்து மேலிடில் செய்வது என் என்று
அஞ்சினேன் -என்கிறார் ஆகவுமாம் –
பாபத்துக்கு அடியான தேகம் கிடக்கையாலே பின்னையும் வந்து
மேலிடில் செய்வது என் என்று அஞ்சக் குறை இல்லை என்று
அஞ்சினேன் என்கிறார் ஆகவுமாம் –
அஞ்சி உய நின் திருவடியே சேர்வான்-
அவற்றை அஞ்சி உஜ்ஜீவிக்கைக்குப்
பின்பு பய ஸ்தானம் இல்லாதபடி
உன் திருவடிகளிலே கிட்டுகைக்காக
வல்லேனாய்ப் பேசினேன் அல்லேன்
ஆற்றாமையாலே உளன் ஆகைக்காகப் பேசினேன் –
நய நின்ற நன் மாலை கொண்டு நமோ நாரணா வென்னும் சொன் மாலை கற்றேன் தொழுது –
நீர்மை யுடைத்தான -என்னுதல்
அன்றிக்கே
நயிக்கப் படுகின்ற திரு மந்த்ரத்துக்கு நிர் வசன ரூபமான இப் பிரபந்தத்தைக் கொண்டு
அவனுக்கு வாசகமான திரு மந்த்ரத்தை அப்யசித்தேன்-
சொன் மாலை கற்றேன் தொழுது –
சொல் தொடை கற்றேன்
அநந்தரம்
அனுகூல வ்ருத்தியையும் பண்ணினேன் –
————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply