ஸ்ரீ பெரிய திருமொழி-7-3—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

ஸ்ரீ நம்பிக்கை நாச்சியார் வஞ்சுள வல்லி திருமணக் கோலம்
ஸ்ரீ நிவாஸன்
குடும்ப சகிதம்
மாடக்கோயில்
நாச்சியார் கோயில் -அவளுக்கே பிரதானம்
கோ செங்கணான் -புனர் உத்தாரணம் -கைங்கர்யங்கள்
கல் கருடன் பிரசித்தம் பங்குனி மார்கழி இரண்டு கருட உத்சவம் ஆண்டுக்கு –
அம்ருத கலசம் பிரசாதம்
ஸூ கந்தனை வனம் -மேதாவி ரிஷி -மணி முத்தாறு நதிக்கரையில் தபஸ்ஸூ
பங்குனி உத்தரம் தாயார் அவதாரம் -வஞ்சுள மரத்தின் அடியில்
சதுராத்மா வ்யூஹ -நான்காக சேவை
வ்யூஹ வாசுதேவன் சுகந்த வன நாதன்
வலது கையில் கிளி இடுப்பில் சாவிக்கொத்து உடன் தாயார்
ஹேமா விமானம் ஸ்ரீ நிவாஸ விமானம்
நான்முகனும் ஆராதனாக கர்ப்ப க்ருஹம்
வில்வ வகுள மரங்கள் ஸ்தல வ்ருக்ஷங்கள்
திரு மடல் இந்த திவ்ய தேசத்துக்கே –
மாடக் கவாடம் திறந்து புக்கு சேவிக்க பிரார்த்தனை
தெய்வ வாள் சோழனுக்கு அருளிய விருத்தாந்தம்
ஆழ்வாருக்கு சங்கு சக்கர லாஞ்சனம் பிரசாதித்த திருக்கோலம்

சினவில் -பிரவேசம் –

(என் சிந்தை தன்னால் )நானே எய்தப் பெற்றேன் -என்றார் கீழ் -7-2-
அந்தப் பேறு தன்னைப் பேசுகிறார் இதில் –

———————————————-

சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை  மரம் ஏழ்   எய்த மைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே -7-3-1-

நான் அடியேன் -அசேதந வியாவ்ருத்த ஞானம் உடைய சரணாகதன் –சரண் அடைந்த நான் -பூர்வ வாக்யார்த்தம்
அடியேன் நான் ஈஸ்வர வியவ்வருத்த -கைங்கர்ய பிரார்த்தனை -உத்தர வாக்யார்த்தம்

சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி –
மிக்க சினத்தை உடையராய் -சினத்துக்கு இல் —
சேதனர் விஷயமாக நிர் நிபந்தனமான த்வேஷத்தை உடையராய்
அந்த த்வேஷ பிராசுர்யம் தோற்றும்படி இருக்கிற கண்ணில் சிவப்பை உடையராய்
இருக்கிற ராஷசர் உடைய  பிராணன்கள் முடியும்படி
பிடித்த வில் வலியை உடையவனே –
மாதா வானவள் -பிரஜை என்று பாராதே ஹிம்சிக்குமா போலே
தேவாநாம் தாநவாநாஞ்ச சாமான்ய மதி தைவதம் -என்கிற
பொதுவைப் பாராதே அழித்து விட்டான் ஆயத்து –
இவர்கள் இருக்கில் ஜகத் உப சம்ஹாரமாம் என்று
விபூதி குடி கிடைக்கைக்காக அழித்தான் ஆயத்து –

என்று கற்றவர் தந்தம் மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை  –
அறிவுடையரான யோகிகள் ஆனவர்கள் தம் ஹிருதயத்திலே கொண்டு
எல்லா காலத்திலும் எல்லா அவஸ்தையிலும்
ஒருபடிப்பட நின்று ஏத்த
அவர்களுக்கு எல்லாம் செய்தும் பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்
பெரும் தனிசு பட்டால் போலே -இவர்களுக்கு செய்யல் ஆவது என் -என்று
இவற்றை அனுசந்திக்குமவனை –

மரம் ஏழ் எய்த மைந்தனை –
இப்படிப் பட்ட தன் படி அறியாதார்க்கும்
மழு ஏந்தி விஸ்வசிப்பித்து
கார்யம் செய்த மிடுக்கனை –

நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை –
கனவில் -என்றதற்கு எதிராய்
ஜாகரூக அவஸ்தையை காட்டுகிறது
நனவு -தெளிவு
எத்தனையேனும் அதிசய ஜ்ஞனராய் இருப்பார்க்கும்
நேர் கொடு நேர் சென்று
கிட்டிக் காண அரியனாய் இருக்கிறவனை –

நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக் கனவில் கண்டேன் இன்று கண்டமையால் –
இவர்களைப் போலே ஸ்வ யத்னத்தால் அன்றிக்கே
அவன் காட்டின வழியாலே காணப் பெற்ற
அடியேனான நான் –
திரு நறையூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற கல்யாண குண பூர்ணனை  –
மனஸ்ஸூ சஹகரிக்க -அத்தாலே கண்ணால் காணும் காட்சி அன்றிக்கே
அந்த நெஞ்சு தானே முழு மிடறு செய்து
பூரணமாக நெறிபட அனுபவிக்கப் பெற்றேன் –
நெறி பட -சஷூர் விஷயமாக
இன்று இப்படிக் காணப் பெறுகையாலே -கனவு -லஷணையாய் மானஸ அனுபவம் –

என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே  –
நெஞ்சே அனுபவித்து கண்கள் அனுபவிக்கப் பெற்றது இல்லை -என்கிற
குறை கிடவாமை -கண்கள் கண்டு அனுபவிக்க
அவற்றுக்கு ஆஸ்ரய பூதனாய் இருக்கிற நானும் –
என் கண்கள் களிப்பக் களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேனே -திரு வாய் மொழி -10-8-4-
என்கிறபடியே களிக்கப் பெற்றேன் –

——————————————————

எய்தப் பெற்றோம் களித்தோம் என்றாலும்
பூர்வ வாசனையால் மீண்டும் விஷயாந்தரங்களில் போனால் ஐயோ என்று நினைக்க
அது நம்மால் வந்ததாகில் அன்றோ அதி சங்கை வேண்டுவது
அவனே நினைக்கப் பண்ணினதால் வேறே ஒன்றில் நினைக்கப் போகேன் -என்கிறார் –

தாயை நினைந்த கன்றே ஒக்க வென்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்
காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட
வாயனை மகரக் குழை காதனை  மைந்தனை மதிள் கோவல் இடைகழி
யாயினை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே –7-3-2-

வென்னையும்- அவன் இடம் உபகாரம் பெற்ற என்னையும் -இதற்கே கன்று த்ருஷ்டாந்தம்

தாயை நினைந்த கன்றே ஒக்க வென்னையும் தன்னையே நினைக்கச் செய்து –
தாயை நினைந்த கன்றே போலே
நானும் தன்னையே நினைக்கும் படிக்கு ஈடாக பண்ணினான் –
அந்த கன்று தாயை நினைக்கிறது –வேறு ஒரு கார்யத்துக்கு அன்று இறே-
முன்னாள் முலை கொடுத்த உபகார  ஸும்ருதியாலே  இறே
அப்படியே நானும் உபகார ஸும்ருதியாலே தன்னை நினைக்கும்படி பண்ணினான் –

தான் எனக்காய் நினைந்து –
எல்லாம் செய்தாலும்
இவன் உடைய நினைவுக்கு வைகல்யம் உண்டாகக் கூடும்
இவன் தலையிலே இவ் வரும் தேவை இடுகிறது என் -என்று
அஹம் ஸ்மராமி -என்கிறபடியே
நான் நினைக்க மாட்டாத குறை தீர
எனக்காகத் தான் நினைத்து –

அருள் செய்யும் அப்பனை –
என் பக்கல் ஒரு ஹேது இன்றிக்கே இருக்க
தன்னுடைய நிரவதிகமான பிரசாதத்தை
ஒரு தலைத்து முழுக்கப் பண்ணின
நிருபாதிக பந்துவை –

அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட வாயனை –
ஆபன்னரான அன்று
எல்லாரையும் ஒக்க -வரையாதே நோக்கும்
ஸ்வ பாவனானவனை –
வயிற்றிலே வைத்தும்
புறப்பட விட்டும்
நோக்கின திருப் பவளத்தை உடையவனை

மகரக் குழை காதனை  –
பிரளயத்தில் தள்ளினும் விட ஒண்ணாத
வடிவு அழகை உடையவனை –

மைந்தனை –
நித்தியமான யௌவனத்தை உடையவனை –

மதிள் கோவல் இடை கழி யாயினை -( யாயனை -பாட பேதம் )
உகந்தார் நடுவே புகுந்து
நெருக்குமவனை –

அமரர்க்கு அரி ஏற்றை –
உகப்பார் திரளின் நடுவே புகுந்து நெருக்கும் இதுவே
ஸ்வ பாவமாய் உடையவனை –

என் அன்பனை –
இப்படி பூர்ணனாய் இருந்து வைத்து
என் பக்கலில் அன்பைப் பண்ணினவனை –

அன்றி ஆதரியேனே   –
அவன் என் பக்கலில் அன்பைப் பண்ணி மேல் விழா நிற்க
நான் அவனை ஒழிய வேறு சிலரை ஆதரிப்பேனோ –

————————————————————-

அநாதியாக ஸ்ருஷ்ட்டி அவதாராதிகளைப்பண்ணி
தன்னை நினைக்கும் படி யத்னம் செய்தாலும்
அவனை நினையாதே எம படர் காலில் அகப்பட்டு
வீணாகாமல் இருக்கும் படி
தன்னை மறவாத படி தானே வந்து நெஞ்சம் புகுந்து
நமக்கு என்ன குறை

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்றோர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்
சிந்தையாய் வந்து தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் இது சிக்கெனப் பெற்றேன்
கொந்துலாம் பொழில் சூழக் குடந்தைத்  தலைக் கோவினைக் குட மாடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம் பிரானை எத்தால் மறக்கேனே –7-3-3-

வந்த நாள் வந்து –
பிரதம ஸ்வீகாரத்துக்கு முன்பு தாம் இட்டது ஒரு பச்சை உண்டாய்
அதுக்கு உபகரித்தான் ஆகில் இறே இந்நாள் என்னல் ஆவது –
அங்கன் ஓன்று இல்லாமையாலே
பிரதம ஸ்வீகாரத்தை -வந்த நாள் -என்னும்
இத்தனை யாய்த்து சொல்லல் ஆவது –

என் நெஞ்சு இடம் கொண்டான் –
ஆவா சந்த்வஹ மிச்சாமி -என்கிறபடியே
என்னுடைய ஹிருதயத்தை தனக்கு இடமாக்கிக் கொண்டான் –
(நீர் காட்டும் இடத்தில் குடிசை கட்டி வாழ பெருமாள் ரிஷிகள் இடம் பிரார்த்தித்து போல் )

மற்றோர் நெஞ்சு அறியான் –
திருவடி -திரு வநந்த வாழ்வான் தொடக்க மானவர் பக்கலிலும் போவானாய் இருக்கிறிலன்-
அனந்தன்  பாலும்  கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து -பெரியாழ்வார் -5-4-8–என்றும்
இட வகைகள் இகழ்ந்திட்டு -பெரியாழ்வார் –5-4-10–என்றும்
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல்-என்றும்
சொல்லுகிறபடியே
இவர் உடைய திரு உள்ளம் ஒழிய வேறு ஓர் இடம் உண்டாக நினைத்து இருக்கிறிலன் –
பின்னை அவ்வோ இடங்களிலே இவன் இல்லையோ என்னில்
சௌபரி பல வடிவு கொண்டு   அனுபவித்தால் போலே
இதுக்கு அவ்வருகு இல்லை என்னலாம் படி அவன் முகம் கொடுத்துக் கொண்டு இருந்த படி –
(இளம் கோயில் கை விடேல் என்று இவர்கள் பிரார்த்திக்கும்படி )

அடியேனுடைச் சிந்தையாய் வந்து தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் –
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் -என்கிற என்னுடைய
மநோ ரதத்தைத் தான்-( அடிமை கொடுக்க வேண்டும் என்று ) உடையானாய்க் கொண்டு
யம படர் கையில் என்னைக் காட்டிக்  கொடுப்பானாய் இருக்கிறிலன் –

இது சிக்கெனப் பெற்றேன் –
என் சங்கல்பம் அடியாக வந்ததாகில் இறே
இதுக்கு ஒரு குலைதல் உள்ளது –
அவன் அடியாக வருகையாலே ஒரு நாளும் குலையாத படி பெற்றேன் –

கொந்துலாம் பொழில் சூழக் குடந்தைத்  தலைக் கோவினைக்
பூம் கொத்துக்களை உடைத்தாய் –
நித்ய வசந்தமாய் இருந்துள்ள
பொழிலாலே சூழப் பட்ட திருக் குடந்தையிலே சாய்ந்து அருளி
தன்னுடைய சேஷித்வத்தை உறுதிப் படுத்தினவனை –

குட மாடிய கூத்தனை –
மன்றிலே  குடக் கூத்தாடி வடிவு அழகை இடையருக்கு
முற்றூட்டாக்கினவனை –

எந்தையை எந்தை தந்தை தம்மானை எம் பிரானை –
எனக்கு ஜனகன் ஆனவனை
என்னுடைய குல நாதன் ஆனவனை –
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை எனக்கு பிரகாசிப்பித்த மகா உபாகாரகனை –

எத்தால் மறக்கேனே –
பண்ணின உபகாரம் அளவு பட்டு மறக்கவோ
நான் இட்ட பச்சையை நினைத்து  ஆறி இருக்கவோ
எவ் வழியால் மறப்பது –

———————————————————

மனம் அவனுக்கே ஆனபின்பு
நான் மறக்கிறேன் என்றாலும் முடியாதே –

உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச் சென்று
இரங்கி யூர்ந்தவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை வம்பார் புனல் காவிரி
அரங்கமாளி என்னாளி விண்ணாளி ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –7-3-4-

எம்பிரானை-எம்பிரான் -ஐ சாரிகை
எம்பிரான் அரங்கமாளி என்னாளி விண்ணாளி-நான்கு அடை மொழிகள் -தண் தாமரைக் கண்ணனுக்கு-
தாழ்ந்து நில்லாதே-நெஞ்சம் உருகி அடியேன் என்னாது –

உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச் சென்று  –
தர்ம பிரதானராய் நடத்துகை அன்றிக்கே
அசூரா வேசத்தாலே வந்த முன் கை மிடுக்கை உடையராய்
மிடுக்காலே நடத்திக் கொடு போருகிற ராஜாக்கள் உண்டு -துர்யோதநாதிகள் –
அவர்கள் முடியும் படிக்கு ஈடாக பாரத சமரத்திலே
வந்த பிரதி பஷத்துக்கு எல்லாம்
ஒரு தேரை எதிராக விட்டு
தான் பாண்டவர்களுக்காக தன்னை அழிவுக்கு இட்டுச் சென்று –

இரங்கி யூர்ந்தவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை –
ஐயோ இவர்கள் பால்யத்தில் பித்ரு ( பாண்டு ) ஹீநர் ஆனார்கள்
அரக்கு மாளிகையிலே அகப் பட்டார்கள்
நீரிலே கழுவிலே அகப் பட்டார்கள் -என்று
அவர்கள் பக்கலில் கிருபையைப் பண்ணி
அவர்களுக்காக தேரை நடத்தி
அவர்கள் அபேஷிக்க அவர்களுக்கு ஒரு கார்யம் செய்தானாய் இருக்கை அன்றிக்கே
தன் பேறாக அருளைப் பண்ணின
ஆஸ்ரித விஷயத்தில் பண்ணும் ஓரத்துக்கு எல்லை காண ஒண்ணாத் படி
இருக்கிற மகா உபகாரகனை –

வம்பார் புனல் காவிரி அரங்கமாளி –
பிரவாஹம் மாறாமையாலே
நித்ய அபூர்வமான ஜல சம்ருத்தியை உடைத்தாய் இருக்கிற
காவிரியை உடைய கோயிலை நிர்வாஹ்யமாக உடையவனை –

என்னாளி-
எனக்கு நிர்வாஹகனை –

விண்ணாளி –
நித்ய விபூதி உக்தனை –

ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி –
கடல் சூழ்ந்த அரணை உடைத்தாய் இருக்கிற இலங்கை
ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக
எடுத்து விட்டு  அம்புகளை நடத்தின
புண்டரீ காஷனான சர்வேஸ்வரனுக்கு அல்லது –

என் மனம் தாழ்ந்து நில்லாதே –
ஆஸ்ரிதர்க்காக சாரத்தியம் பண்ணியும்
மார்விலே அம்பு ஏற்றும்
உபகரிக்கும் அவனுக்கு அல்லது
வேறு சிலர் விஷயமாக என்னுடைய ஹிருதயத்தில் தாழ்ச்சி பிறவாது –

—————————————————-

அதீத அபதானங்கள் இதில்
கீழ் சொன்ன சாரத்வம் மற்றும் வேறே சிலவற்றை
நினைவூட்ட அவற்றை அனுசந்தித்து
நெஞ்சு ஆழ்ந்தமையை அருளிச் செய்கிறார்

ஆங்கு வென்னரகத்து அழுந்தும் போது அஞ்சேல்  என்று அடியேனை அங்கே வந்து
தாங்கு தாமரை யன்ன பொன்னாரடி எம்பிரானை யும்பர்க்கு அணியாய் நின்ற
வேங்கடத் தரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு  உரலினிடை ஆப் புண்ட
தீங் கரும்பினைத் தேனை நன் பாலினை யன்றி என் மனம் சிந்தை செய்யாதே –7-3-5-

ஆங்கு வென்னரகத்து அழுந்தும் போது –
பாபம் பண்ணுகிற சமயத்திலே வந்து கிட்டி
அவற்றில் நின்றும் திரிய விடுகை அன்றிக்கே
அவை செய்தற்று -அத்ருஷ்ட ரூபேண பல அனுபவம் பண்ணும்
துக்க அனுபவ பூமிகளிலே –
கொடிதான நரகத்திலே நோவு படும் அளவிலே –

அஞ்சேல்  என்று அடியேனை அங்கே வந்து –
இவன் தான் பண்ணின பாபத்துக்கு
பல அனுபவம் தானே பண்ணுகிறான் ஆகில் நமக்கு என் -என்று இருக்கை அன்றிக்கே
நாம் உளோமாக  நீ பாபங்களுக்கு ( குடி மகன் ஆக ) குடி போக வேணுமோ –
நீ அஞ்சாதே கொள் -என்று
அங்கே சென்று –

தாங்கு தாமரை யன்ன பொன்னாரடி எம் பிரானை-
ரஷிக்குமது செவ்வித் தாமரைப் பூ போலே
ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை கொண்டாய்த்து –
விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் -இவற்றுக்கு
தாமரையை ஒரு போலியாகச் சொல்லலாம் படியாய்
அவ்வளவு அல்லாத படி
அதி ஸூகுமாரமாய் -ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை-உடைய என் ஆயனே –

யும்பர்க்கு அணியாய் நின்ற வேங்கடத்து –
திருமலையில் நிற்கிற நிலை
நித்ய ஸூரிகளுக்கு ஆபரணம் போலே இருக்கிறது ஆய்த்து-

அரியை  –
உகப்பாருக்கு ஆபரணமாய் இருக்குமா போலே
உகவாதார்க்கு அப்ரதருஷ்யனாய் இருக்கும் ஆய்த்து –

பரி கீறியை –
கேசி உடைய வாயைக் கிழித்தவனை-

வெண்ணெய் உண்டு  உரலினிடை ஆப்புண்ட தீங் கரும்பினைத் தேனை –
ஆஸ்ரித (கர) ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் ஒழியச் செல்லாமை பிறந்து
அது நேர் கொடு நேர் கிடையாமை
களவு கண்டு புஜிக்கப் புக்கு
அது தன்னை முடியச் செய்து தலைக் கட்டாமை
வாயது கையதாக அகப்பட்டு
உரலோடு சேர்த்து கட்டுண்டு
அடியுண்டு
அடிக்கு இறாய்த்து
உடம்பு வெளுத்து
பயர்த்து
பேகணித்து
நின்ற நிலையை  அனுசந்திக்க அனுசந்திக்க
இவர்க்கு இவ்விருப்பு தானே யாய்த்து
சர்வ வித போக்யமுமாய் இருக்கிறது –
சர்வ ரச-என்கிற படியே இனியதாக நின்றது –

நன் பாலினை யன்றி என் மனம் சிந்தை செய்யாதே  –
இப்படி சர்வ வித போக்யனாய் இருக்கிறவனை ஒழிய
என் உடைய நெஞ்சு வேறு சிலரை
அநவரத பாவனை பண்ணாது –

———————————————–

கீழே தம்மைத் தவிர மனம் அவன் இடம் ஈடுபட்டதை அருளிச் செய்து
இதில் வாக் இந்த்ரியமும் அப்படியே
என் பண்பனை அன்றி பாடல் செய்யனே-கடாக்ஷித்து அவதாரிகை –

வ்யதிரிக்தர் பக்கலிலே அல்பம் உத்கர்ஷம் கண்டு
நான் பேசுவதாக ஒருப்பட்டாலும்
என்னுடைய வாக் இந்த்ரியமானது அதுக்கு உட்படாது –

எட்டனைப் பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்
தட்டலர்த்த பொன்னே யலர் கோங்கின் தாழ் பொழில் திருமால் இரும் சோலை அம்
கட்டியைக் கரும்பு ஈன்ற இன் சாற்றைக் காதலால் மறை நான்கு முன்னோதிய
பட்டனைப் பரவைத் துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யனே –7-3-6-

தட்டு மிகவும்
அலர்ந்த -விகசித்த பாட பேதம் அலர்த்த -விகசிக்கப் பெற்ற –
பட்டனை–பண்டிதன் — பிருந்தாவன பண்டிதன் -தயிர் கடையும் ஓசையில் நாட்டியம் கற்ற பண்டிதன் –

எட்டனைப் பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ் –
அல்ப காலமும்
என்றும் ஒக்க
என்னுடைய நெஞ்சை அகலாது இருக்கையால் வந்த புகழை உடையவனாய்
பிராட்டி -அகலகில்லேன் இறையும் -என்று இருக்கும் இருப்பைக் காட்டிலும்
ஏற்றமாக நினைத்து இரா நின்றான் ஆய்த்து -என்று
என்றும் எட்டனைப் பொழுதும் அகலாது இருக்கும் என்றபடி –

தட்டலர்த்த பொன்னே யலர் கோங்கின் தாழ் பொழில் திருமால் இரும் சோலை அம்  கட்டியைக்-
இதழ் விரியா நிற்பதாய்
பொன் போலே இருக்கிற அலரை உடைத்தான கோங்கினுடைய-என்னுதல்  –
இதழ் மிகும்படி அலரப் பண்ணப் பட்டு
பொன் போலே இருக்கிற அலரை உடைத்தான கோங்கினுடைய
தழைத்த  பொழிலை உடைய( தெற்குத் )திரு மலையிலே
அனுபவ யோக்யமாய்க் கொண்டு நிற்கிறவனை –

கரும்பு ஈன்ற இன் சாற்றைக்-
கை தொட்டு நெருக்குகையால் வரும்
செவ்விக் கேடு இன்றிக்கே
அக் கரும்பின் உடைய ரசமாய் யுள்ளவனை –

காதலால் மறை நான்கு முன்னோதிய பட்டனைப் –
இதுக்கு முன்பு ஒதப் போகாதவன்
அபி நிவிஷ்டனாய் ஓதுமா போலே
சாந்தீபநீயோடே சாதாரமாக நாலு வேதத்தையும் அப்யசித்த பண்டிதனை –

பரவைத் துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யனே –
இவ் வதாரத்துக்கு நாற்றங்காலாயக்  கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின நீர்மை
உடையவனை அல்லது பாடல் செய்யேன் –

——————————————–

(சமுதாயேன கரண த்ரயத்துக்கும் அவனே விஷயம் ஆனான் )

என்னுடைய மநோ வாக் காயங்கள்
அவனை அல்லது அறியாது
என்கிறார் –

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே –7-3-7-

கண்ணும்-காயங்களுக்கு பதம் –
வாய் யுரையாதே-மனம் உள்ளாது சரீரம் நாடாது சேர்த்துக் கொள்ள வேண்டும்

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து-
பண் வர்க்கத்திலே இனிய பேச்சை உடைய யாழ் நரம்பிலே –
யாழிலே பிறக்கப் பெற்ற -பாலை -யாகிற பண்ணாய்
அப் பண் போலே போக்யனாய்க் கொண்டு வந்து புகுந்து –

என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் –
கண்ணுக்கு வேறு ஒன்றும் காண ஒண்ணாத படி தானே விஷயமானான் –
வாக்குக்கு வேறு சிலரை பேசுகைக்கு விஷயம் இல்லாதபடி தானே விஷயம் ஆனான் –
நெஞ்சுக்கு வேறு சிலரை நினைக்க அவகாசம் இல்லாத படி தானே விஷயம் ஆனான் –
ஆக சர்வ இந்த்ரியங்களுக்கும் தானே விஷயம் ஆனான் –

கொண்ட பின்
மறையோர் மனம் தன்னுள் –
தன் உள்-வாசஸ் ஸ்தானம்
பிராமணர் உடைய ஹிருதயங்களைத் தனக்கு
வாசஸ் ஸ்தானமாய் உடையனாய் –

விண்ணுளார் பெருமானை –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யாய் உள்ளவனை –

எம்மானை –
எனக்கு ஸ்வாமியாய் உள்ளவனை –

வீங்கு நீர் இத்யாதி –
சம்ருத்தமான ஜலத்தை உடைத்தாய்
ஜல சர சத்வங்கள் தன்னில் கூடி விளையாடா நிற்கிற
கடல் போலே இருக்கிற நிறத்தை உடையனாய்
பெரு விலையனான நீல மணி போலே இருக்கிற நிறத்தை உடையவனை –
இந் நிறத்தைக் காட்டி
என்னை அனந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவனுடைய நிறத்தை ஒழிய
என்னுடைய வாக் இந்த்ரியம் ஆனது வேறு ஒன்றைப் பேசாது –

(ஐயப்பாடு அறுக்கவும் ஆதாரம் பெருக்கவும் அழகன் அன்றோ )

———————————————————–

இந்திரிய சமுதாயம் சரீரம் -கர்மாதீனம் அன்றோ –
மீளுமே என்னில்
பாபம் -புண்யம் -ஈஸ்வர கோபமும் ப்ரீதியுமே
அனுக்ரஹம் பெற்றால் அவை உண்டோ என்கிறார் –

இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள் பெற்றமையால் அடும்
துனியைத் தீர்த்து  இன்பமே தருகின்றதோர் தோற்றத் தொன் நெறியை வையம் தொழப் படும்
முனியை வானவரால் வணங்கப் படும் முத்தினைப் பத்தர் தாம் நுகர்கின்றதோர்
கனியைக் காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே –7-3-8-

துனி-கர்மம்
தோற்றத் தொன் நெறி-அழகிய பழமையான உபாயம் -திரு நாமம் சூட்டுகிறார்

இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு –
அவனுடைய நிக்ரஹ பலமான பாபங்கள் என்னைக் கிட்ட வற்றோ –
அவசியம் அநு போக்தவ்யம் -என்கிற வசனத்தைக் கொண்டு
அனுபவித்தால் அல்லது நசியேன் என்று கொண்டு சிலவை  நிற்றல்
(ந புக்தம் ஷீயதே கர்மம் சஞ்சித கர்மம் )
பிராரப்தம் காண் என்று சிலவை நிற்றல் செய்ய வற்றோ –

இனி -என்றது எத்தைக் கொண்டு என் என்ன –
இம்மையே அருள் பெற்றமையால் –
இஹ லோகத்திலேயே
பகவத் பிரசாதத்தைப் பெற்ற படியாலே
இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் –

அடும் துனியைத் தீர்த்து 
அச்சேத்யோயம் அதாஹ்யோயம்-என்று சொல்லப் படுகிற ஆத்ம வஸ்துவை
அசந்நேவ -என்னலாம் படி முடிக்கிற துனி உண்டு -பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள்
அவற்றை ச வாசனமாகப் போக்கி

இன்பமே தருகின்றதோர் –
யேஷஹ்யேவா நந்தபாதி -(ஆனந்திப்பிக்கிறார் )-என்கிறபடியே
நிரதிசய ஆனந்தியாம்படி பண்ணுகிற –

தோற்றத் தொன் நெறியை –
தோற்றம் -அழகு
தொன்மை -பெருமை
அழகிய மகா பதம் -உபாயம் -என்பர்
இதர உபாய பரிக்ரஹம் பண்ணினாருக்கும் தன்னையே  பற்ற வேண்டும்படியாய்
தன்னைப் பற்றினாருக்கு வேறு ஒன்றைப் பற்ற வேண்டாத படி பிரதானமாய்
நிலை நின்ற
உபாயமாய் உள்ளவனை –
அறம் சுவராகி நின்ற -( சாஷாத் தர்மம் )- இப்போதாக எடுக்க வேண்டா
பண்டே எடுத்து நிற்கிறது ஆய்த்து
( கிருஷ்ணம் தர்மம் ஸநாதனம் ) சநாதனம் -என்கிறபடியே
அத்தையே இறே அவன் -மாம் -என்றது –

வையம் தொழப் படும் முனியை –
பூமியில் உள்ளார் இருந்ததே குடியாய் ஆஸ்ரயிக்கப் படுமவனாய்
சேதனர் உடைய ஸ்வரூப பேதத்தோ பாதியும்
போரும் இறே ருசி பேதமும்
அவ்வோ ருசிக்கு அநு குணமான பேறுகளை பண்ணுகைக்கு
மனனம் பண்ணி  கொண்டு இருக்கும் அவனை –

வானவரால் வணங்கப் படும் முத்தினைப்-
ஒன்றில் ஓர் அபேஷை இல்லாத நித்ய ஸூரிகளாலே
ஆஸ்ரயிக்கப் படுமவனாய்
அவர்கள் உடைய ஸ்ரமத்தைப் போக்கினவனை –

பத்தர் தாம் நுகர்கின்றதோர் கனியைக் –
சம்சாரத்தில் முமுஷூக்கள் உண்டு -தம் பக்கல் ருசி உடையராய் இருப்பார்
அவர்களுக்கு கண்ட போதே அனுபவிக்கலாம் படியாய்
பகவ பலமாய் உள்ளவனை –

காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே –
அவை ஒன்றும் இன்றிக்கே இருக்கிற என் பக்கலில் தான் ஆசை உடையனாய்
என்னை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணினவனை –
நான் அநாதி காலம் பண்ணிப் போந்த ஆத்மாபஹாரத்தை
அரை ஷணத்திலே பண்ணினவனை
இன்று
நினைவு இன்றிக்கே இருக்க
காணப் பெற்றேன் –

———————————————-

கீழ் அவன் அனுக்ரஹத்தால் பாபம் வராதே
இதுக்கு என்ன பிரதி உபகாரம்
நான் உபகார பரம்பரைகளை அனுசந்தித்து
கைம்மாறு இல்லாமல்
பண்ண விரகு இல்லை
ஆத்ம சமர்ப்பணம் பண்ணினாலும் அதுவும் அவனது
இங்கும் அங்கும் ஒன்றும் இல்லையே –

என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கென்றும் என் மனத்தே இருக்கும் புகழ்
தஞ்சை ஆளியைப் பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனைத்
தழலே புரை விஞ்ச வாள் அரக்கன்  நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை   யன்றி என் மனம் போற்றி என்னாதே –7-3-9-

கடல் சிறை வைத்து-சேது அணை கட்டி
தஞ்சை ஆளி-மணிக் குன்றப் பெருமாள்

என் செய்கேன் –
உபகாரம் பண்ணாமல் இருக்கிறது இல்லை –
உபகரிகலாவது ஒன்றும் காண்கிறிலேன் –
எத்தைச் செய்வேன் –

அடியேன் –
எனக்கு என்ன கைம்முதல் இல்லாதபடி ஸ்வரூபமே பிடித்து
பரதந்த்ரனான நான் எத்தைச் செய்வேன் –

உரையீர் இதற்கு –
மத்யஸ்தராய் கரை மேல் நிற்கிற நீங்கள் இதுக்கு ஒரு
போக்கடி சொல்ல வல்லி கோள்  –

கென்றும் என் மனத்தே இருக்கும் புகழ் தஞ்சை ஆளியைப் –
என்றும் ஒக்க என்னுடைய ஹிருதயத்தை விடாமல் இருக்கையால் வந்த புகழை உடையனாய் –
இங்கு புகுருகைக்கு உடலாக
தஞ்சாவூரிலே நின்றவனை –

பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனைத் –
எனக்குப் பண்டே உபகரித்து நின்றவனை –

தழலே புரை விஞ்ச வாள் அரக்கன்  நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்து –
சிலரால் வந்து கிட்ட ஒண்ணாத படி நெருப்பை உமிழா நிற்பானாய்
அநபிபவ நீயனாய்
அவசர பிரதீஷனாய்
ஒளியை உடைத்தாய் இருப்பதொரு வாளை தேவதை பக்கலிலே பெற்று
(சந்த்ரஹாஸம் என்னும் வாள் பெற்று )
உடையனாய் இருக்கிற ராஷசனின் உடைய நகரி யானது பாழ் படும் படி
இலங்கைக்கு அகழான கடலை அணை செய்தவனை –

இமையோர் தொழும்-
இமையோர் உண்டு -ப்ரஹ்மாதிகள்-எங்கள் குடி இருப்பு பெற்றோம் என்று
பவான் நாராயணோ தேவ ஸ்ரீ மான் சக்ராயுத விபு –பூத பவ்ய ஜித் -என்றாப்  போலே
ஸ்தோத்ரம் பண்ண  –

பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை யன்றி என் மனம் போற்றி என்னாதே  –
அத்தாலே புகர் பெற்ற வடிவை உடையவனாய் நின்றவனை –
அத்தாலே குளிர்ந்த நிறத்தை உடையவனாய் நின்றபடி –
இப்படிப் பட்ட இவனை அல்லது போற்றி என்று என்னுடைய ஹிருதயம் ஆனது
மங்களா சாசனம் பண்ணாது –
பாழாளாகப் படை பொருதானுக்கு அல்லது என்னுடைய ஹிருதயமானது பல்லாண்டு பாடாது –

நித்ய ஸூரிகள் பெரும் பேற்றைப் பெற்றேன் –
சம்சாரியான நான் –
பர தந்த்ரனாய் இருக்கையாலே பிரத்யுபகாரம் பண்ணலாவது காண்கிறிலேன்
எத்தைச் செய்வேன்
சொல்லி கோள்
என்கிறார் –

——————————————–

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து  ஆடியும்  தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே -7-3-10-

சேவடி-அழகிய திருவடி – ஆஸ்ரித அநாஸ்ரிதர் வாசி அற பற்றும் படி அழகிய-

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் –
இதழ் விண்டு அலருகிற பூவை உடைத்தான
பொழிலாலே சூழப் பட்ட திரு மங்கையில் உள்ளார்க்கு பிரதானராய் உள்ள ஆழ்வார்  –

வாள் கலியன் –
பகவத் பிராப்திக்கு பிரபத்தி போலே யாய்த்து
பிரதி பஷ நிரசனத்துக்கு கையிலே வாள் –

திருவாலி நாடன் —
இதுவே போருமாய்த்து ஏற்றம் –

நன்னறையூர் நின்ற நம்பி தன் –
திரு நறையூரிலே வந்து நிற்கையாலே
கல்யாண குண பூர்ணன் ஆனாவன்  –

நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச் சூடியும்-
நிரதிசய போக்யமாய்
குணாகுணம் நிரூபணம் பண்ணாத திருவடிகளை திரு முடிக்கு வளையமாக வைத்தும்  –

தொழுதும் எழுந்து  ஆடியும் –
நம புரஸ்தாத் அத ப்ருஷ்ட -முன்னும் பின்னும் எல்லாப் பக்கமும் தொழுத அர்ஜுனன் –
என்கிறபடியே தொழுதும்
தொழப் பெற்ற ஹர்ஷத்தாலே இச் சரீரம் இருந்த இடத்தே இராதே ஆடியும் –

தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை-
தாம் அறிந்ததாக அனுபவித்து விடுகை அன்றிக்கே
பின்பு உள்ளார்க்கும் அனுபவ யோக்யமாம் படி
பக்தாம்ருதம்–தொண்டர்க்கு அமுது உண்ண -என்கிறபடியே
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எல்லாம் விருந்து இட்டார் ஆய்த்து –

பாடல் பத்திவை படுமின் தொண்டீர் –
அது தான் ச பாத லஷ க்ரந்தமாய்
புக்க இடமும் புறப்பட்ட இடமும் அறியாதே இருக்கை அன்றிக்கே
பாடல் பத்தும்
பகவத் விஷயத்தில் ருசி உடையார் இத்தைப் பாடப் பாருங்கோள்-

பாட நும்மிடைப் பாவம் நில்லாதே —
கரும்பு தின்னக் கூலி இறே
பாடுகை தானே பிரயோஜனமாக போந்து இருக்க
அதுக்கு மேலே
பிராப்தி பிரதிபந்தகமான பாபங்கள்
நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் இல்லை -என்று
தன்னடையே விட்டுப் போம் –

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

சினத்துச் செரு நீர் செற்றான் உட் புகுந்து
நனி நீங்கா தீது தீர் நம்பிக்கு மனம் செயல்
வாக்கற்றுக் கைம்மாறிலாமை சொல் வாட் கலியன்
வாக்கால் மலரும் உட் கண் -63-

என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் -என்பதால் நீங்காமை சொல்லி
கண் இணைகள் க்ளிப்பைக் களித்தேன் -அன்பனை அன்று ஆதரியேன் -என் மனம் தாழ்ந்து நில்லாது
என் மனம் சிந்தை செய்யாது -பண்பலை யான்றிப் பாடல் செய்யேன் –
எம் அண்ணல் வண்ணமே அன்றி என் வாய் யுரையாதே –
மனம் செயல் வாக்கு எம்பெருமானுக்கே அற்றுத்தீர்ந்தமையை அருளிச் செய்தார் –
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும்
என் மனத்தே இருக்கும் புகழ் என்றும் கைம்மாறு இல்லாமையையும் அருளிச் செய்தார் –

——————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading