திரு நெடும் தாண்டகம்–18–கார் வண்ணம் திரு மேனி கண்ணும் வாயும் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அவதாரிகை –

நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே –என்று தான் சொன்ன
ஹிததத்தைக் கடந்த படியாலே
இனி இவளை ஹிதம் சொல்லி மீட்கை என்று நமக்கு ஓன்று இல்லை என்று கூடி உடன்பட்டு –
இவள் கருத்தை கேட்போம் பார்த்து
உனக்கு ஓடுகிற கருத்து என் என்ன –

இங்கு இருந்து கூப்பிடக் கடவேன் அல்லேன் –
அவன் இருந்த தேசம் ஏறப் போகக் கடவேன் என்ன –
அளவுடையாரும் குமுழி நீர் உண்ணும் விஷயத்தில் தான் மேல் விழுந்து அனுபவியா நின்றாள் –
இது அன்றோ ஸ்த்ரீத்வத்தை பாராதே விஷய வைலஷண்யத்தை பார்த்தார் படி இருக்கும் படி

வினவ வந்தாருக்கு சொல்கிறாள்
நிறை வழிந்தார் நிற்குமாறு -இது வன்றோ -என்று இவளுக்கு பிரணயத்வத்தில் உண்டான தேசிகத்வம்
தனக்கு இஷ்டம் என்னும் இடம் ஹார்த்தமாக போந்தது –
அத்தை இங்கே பிரகாசிப்பிகிறாள்

இவ்விடத்தில் ஓர் அர்த்தத்தை தாயார் வார்த்தையால் பூர்வ பஷித்து
மகள் வார்த்தையாலே சித்தாந்திக்கிறது –

பிரதமத்திலே ஸ்வரூபத்தை அனுசந்தித்து
பின்னை ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தில் இழிய வேண்டாவோ என்று யாய்த்து தாயார் சித்தாந்தம்
அது வேண்டுகிறது என் என்னில்

சாஸ்த்ரங்களில் ஸ்வர்க்காதிகளையும் புருஷார்த்தமாக சொல்லுகையாலே
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் இது என்னும் நிர்ணயிக்கும் போது
ஸ்வரூபம் முன்னாக வேணும் என்கை –

அது ஓர் ஆர்த்தம் அன்று காண்
போக அனுரூபம் ஸ்வரூபமாம் இத்தனை ஒழிய
ஸ்வரூப அனுரூபமாயோ போகம் இருப்பது என்று ஆய்த்து மகள் சித்தாந்தம் –

(இது வன்றோ நிறை வழிந்தார் நிற்குமாறே–நாராயணாயா பதார்த்தம் பார்க்கும் தனது பெண்

பெண் பிள்ளையின் வாய் வெருவுதல்களை வரிசையாகச் சொல்லுகிறாள் திருத்தாய்
கீழ்ப்பாட்டில் “நங்காய் நங்குடிக்கிதுவோ நன்மையென்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே“ என்று நின்றது.
‘நாம் சொன்ன ஹிதத்தை இவள் கடந்த படியாலே இனி படியாகவே தோற்ற விருந்து இவளுடைய பாசுரங்களைக் கேட்போம்‘
என்றெண்ணிய திருத்தாயார் ‘நங்காய்! உன் எண்ணங்களைச் சொல்லிக் காணாய்‘ என்று சொல்ல,

மகளும் எம்பெருமானுடைய திருமேனியழகை வருணிப்பது,
திருமடந்தை மண்மடந்தையர் பக்கலிலே அப்பெருமான் இருக்குமிருப்பைப் பேசுவது,
அவனூர் எங்கேயென்று வினவுவது,
நானிருங்கேயிருந்து கதறி என்ன பயன்? அவனூருக்கே போய்ச்சேருவேன் என்பது,
ஆக விப்படி நிகழும் மகளது பாசுரங்களைத் தன் உகப்புத் தோன்றத் தான் திருத்தாய்.

‘கார்வண்ணந் திருமேனி கண்ணும் வாயுங் கைத்தலமு மடியிணையுங் கமல வண்ணம்‘ என்பதும்,
‘பார்வண்ணமடமங்கை பத்தர்‘ என்பதும்
‘பனிமலர்மேல் பாவைக்குப் பித்தர்‘ என்பதும்
‘எம்பெருமான் திருவரங்கமெங்கே‘ என்பதும்
‘நீர்வண்ணன் நீர் மலைக்கே போவேன்‘ என்பதும் மகளுடைய வார்த்தைகளின் அநுவாதங்கள்; மற்றவை தாய்ச்சொல்.
‘என்னும்‘ என்கிற வினை முற்று மகளுடைய ஒவ்வொரு வார்த்தையோடும் அந்வயிக்கத்தக்கது.
‘என்மகள் இப்படி சொல்லுகிறாள், இப்படி சொல்கிறாள்‘ என்று ஒவ்வொரு வாக்கியமாக எடுத்துத் தாய் சொல்லுகிறாளாயிற்று.)

(எம்பெருமான் தானுகந்தார்க்கு ஸர்வ ஸ்வதானமாகக் கொடுத்தருள்வது தன் திருமேனியையே.
பரதாழ்வான், சிறிய திருவடி, அக்ரூரர் முதலானாரிடத்தே இது காணலாம்.
“தம் ஸமுத்தாப்ய காகுத்ஸ்த; சிரஸ்யாக்ஷிபதம் கதம் – அங்கே பரதமாரோப்ய முதித; பரிஷஸ்வஜே“ என்று
பரதாழ்வான் விஷயத்திலே சொல்லப்பட்டது.
(நெடுநாள் கடந்தபின் கண்ணுக்கு இலக்காகித் திருவடிவாரத்தில் வீழ்ந்த பரதாழ்வானை வாரியெடுத்து
மடிமீதிருத்தி மகிழ்ந்து சேரத்தழுவினாள் ஸ்ரீராமபிரான் என்பது இதன் பொருள்)
“ஏஷ ஸர்வஸ்பூதஸ்து பரிஷ்வங்கோஹநூமத; மயா காலமிமம் ப்ராப்ய தத்தஸ் தஸ்ய மஹாத்மந;“ என்று
சிறிய திருவடி விஷயத்திலே சொல்லிற்று.
“ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜக்ருதசிஹ்நேந பரணிநா, ஸம்ஸப்ருச்யாக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே“ என்று
அக்ரூரர் விஷயத்திலே சொல்லப்பட்டது.
மூவர்க்கும் தன் திருமேனியை அணைக்கக் கொடுப்பதே பெரும்பரிசு.)

———————————————————————————————–

கார் வண்ணம் திரு மேனி கண்ணும் வாயும்
கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம்
பார்வண்ண மட மங்கை பத்தர் பித்தர்
பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன்
ஏர் வண்ணம் என் பேதை என் சொல் கேளாள்
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்
இது வன்றோ நிறை வழிந்தார் நிற்குமாறே–18-

பதவுரை

பாவம் செய்தேன் என்-பாவியான என்னுடைய
ஏர் வண்ணம் பேதை-அழகிய வடிவை யுடைய பெண்ணானவள்
என் சொல் கேளாள்–என் வார்த்தையைக் கேட்கிறாளில்லை;
திருமேனி கார் வண்ணம் என்னும்–(எம்பெருமானது) திருமேனி காளமேக நிறத்து என்கிறாள்;
கண்ணும்–(அவனது) திருக்கண்களும்
வாயும்–திரு வாயும்
கைத் தலமும்–திருக் கைகளும்
அடி இணையும்–திருவடியிரண்டும்
கமலம் வண்ணம் என்னும்–தாமரைப்பூப்போன்ற நிறமுடையன என்கின்றாள்;
பார் வண்ணம் மடமங்கை பத்தர் என்னும்–(அவர்) பூமிப்பிராட்டி இட்ட வழக்காயிருப்பர் என்கின்றாள்;
பனி மலர் மேல் பாவைக்கு பித்தர் என்னும்-குளிர்ந்த செந்தாமரைப் பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்
விஷயத்தில் வியாமோஹங் கொண்டவர் என்கின்றாள்;
எம் பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும்-என்னை அடிமைப் படுத்திக் கொண்ட பெருமானுடைய திருவரங்கம் எங்குள்ளது? என்கின்றாள்;
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்–நீர் வண்ணப் பெருமாள் எழுந்தருளியிருக்கிற திருநீர் மலைக்கே போகக் கடவேன் என்கின்றாள்;
நிறைவு அழி்ந்தார் நிற்கும் ஆறு இது அன்றோ-அடக்கமழியப் பெற்றவர்களின் நிலைமை இங்ஙனே போலும்!

கறுத்த நிறத்தை யுடைய திருமேனியையும்
செந்தாமரை மலரை ஒத்த திருக்கண்களையும் திருப் பவளத்தையும்
திருக் கைத் தலங்களையும் பரஸ்பர ஸத்ருசமான திருவடிகளையும் யுடையனாய்
பூமியைப் பிரகாரமாக யுடையளாய் மடப்பத்தை யுடையளான பூமிப் பிராட்டிக்கு இட்ட வழக்காய் இருக்குமவனாய்
குளிர்ந்த செந்தாமரை மலரில் எழுந்து அருளி இருக்கிற பெரிய பிராட்டியார் விஷயத்தில் அதி வியாமுக்தனான சர்வேஸ்வரன் விஷயத்திலே
பாபத்தைப் பண்ணினேன்
அது எது என்னில்
அழகிய வடிவை யுடைய என் பெண்ணானவள் என்னுடைய வார்த்தையைக் கேட்க்கிறாள் இல்லை
என்னை அநன்யார்ஹை யாக்கினவனுடைய கோயிலானது எங்கே என்று கேட்க்கிறாள்
கடலின் நீர் போன்ற நிறத்தை யுடையவன் எழுந்து அருளி இருக்கிற திரு நீர் மழைக்கே போவேன் என்கிறாள்
தம்முடைய ஸ்த்ரீத்வம் அழிந்தவர்கள் நிற்கும் பிரகாரம் இது அன்றோ –

————————————————————————————————–

இவளுடைய சித்தாந்தமே சித்தாந்தம் என்னும் இடத்தை வினவ வந்தார்க்கு மூதலிக்கிறாள் –
திரு மந்த்ரத்திலே பிரதம பதத்தில் இழிந்து
பின்னை த்ர்தீய பதத்தில் இழிந்தவளோ இவள் –
பிரதமத்தில் வடிவில் அன்றோ -இவள் இழிந்தது –

அநர்த்த ஹேதுவாய் இருக்கும் வடிவைப் பற்றி -புருஷார்த்தம் என்று நின்ற என் பெண்ணை –
தன் வடிவைக் காட்டி அன்றோ அவற்றில் துவக்கு அறுத்தது –
ஸூரி போக்யமான வடிவிலே அன்றோ இவள் பிரதமத்தில் இழிந்தாள் -என்கிறாள்

ஏஷ சர்வ ஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத – என்று அடிமை செய்தார்க்கு
பரிசலாகக் கொடுத்ததும் வடிவை இறே-

(ஏஷ சர்வ ஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத – மயா காலமிமம் ப்ராப்ய தத்தஸ் தஸ்ய மஹாதமன-யுத்த -1-14)

மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று(ஸர்வ தர்மாந் பரித்யஜய மாம் ஏகம் சரணம் வ்ரஜ |. அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி …)

உழவு கோலும்
சிறு வாய்க் கயிரும்
சேனா தூளி தூசரிதமான திருக் குழல் கற்றையுமாய்
நின்ற வடிவைக் காட்டி இறே –

பிராப்யத்தில் மேல் எல்லையான வடிவு அன்றோ
இவளுக்கு விஷயாந்தர ப்ராவண்ய நிவ்ர்த்திக்கு பரிகரம் ஆய்த்து –

திவ்ய மங்கள விக்ரஹமே பிராப்யமும் பிராபகமும் -இதுவே ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசம் –

(இதில் வாத்சல்ய -ஸ்வாமித்வ-சௌசீல்ய -சௌலப்யங்கள் -ஆகிற குண விசேஷங்கள் நேராகப் பிரகாசிக்கிறது –முமுஷுப்படி -சூரணை -217

கையும் உழவு கோலும்–பிடித்த சிறு வாய் கயிறும்–சேநா தூளி தூ சரிதமான திரு குழலும்–தேருக்கு கீழே நாற்றின திரு அடிகளுமாய் நிற்கிற
சாரத்திய வேஷத்தை -மாம்-என்று காட்டுகிறான் –முமுஷுப்படி -சூரணை -218

வைத்த அஞ்சேல் என்ற கையும் கவித்த முடியும் முகமும் முறுவலும் ஆசன பத்மத்திலே அழுத்திய திருவடிகளுமே தஞ்சம் )

அர்ச்சிராதி மார்க்கத்தாலே
ஓர் தேச விசேஷத்திலே செல்லுகிறதும்
பூர்ண ஷாட் குண்ய விக்ரஹத்தை அனுபவிக்கை இறே –

கார் வண்ணம் –
தாப த்ரயாதுரர்க்கு தாப ஹரமாய்
விரஹ தாபாதுரர்க்கு விரஹ தாபத்தை போக்கக் கடவதாய் இருக்கும் இறே –

அம் மேகம் பரப்பு மாற தாமரை பூத்தால் போல் ஆய்த்து
காளமேக நிபஸ்யாமமான வடிவுக்கு பரபாகமாய் கொண்டு
திவ்ய அவயவங்கள் இருப்பது –
இப்படி இருப்பதொரு மேகம் உண்டாகில் இறே வடிவுக்கு த்ர்ஷ்டாந்தம் ஆவது -இது அபூதோமை –

(கருமுகில் தாமரைக் காடு பூத்து நீடிருசுடர் இருபுறத் தேந்தி யேடவிழ்
திருவொடும் பொலியவோர் செம்பொற் குன்றின்மேல் வருவபோல் கலுழன்மேல் வந்து தோன்றினான்”

கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே -ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே-
அரவம் சுமப்பது ஓர் அஞ்சன மலையே -அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே-
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே )

திரு மேனி கண்ணும் வாயும் கைத் தலமும் அடி இணையும் கமல வண்ணம் –
இவளுடைய வாத்சல்யாதி குணங்கள் இருக்கிறபடி –
ஸ்வரூபம் அடியாக இழிந்த போது இறே ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்கள் உபாயம் ஆவது –
ரூபம் அடியாக இழிந்தவள் ஆகையால் ரூப குணங்களே ஆய்த்து இவளுடைய உபாயம் –

சம்சார பய பீதி பூர்வகமாக-
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களை உணர்ந்து-
தத் பூர்வ வ்ருத்தத்தையும் உணர்ந்து-
தத் பரிஹாரார்தமாக திவ்ய ஆத்ம குணங்களிலே
அடி இட்டு இழிந்தவள் அன்றோ இவள் –

கண்ணும்
தூது செய் கண்ணும் இறே
தம் பக்கல் விமுகராய் போருவாரையும் அகப்பட காலைக் கட்டி துவக்கிவிக்கும் கண் இறே –
ஜிதந்தே புண்டரீகாஷா -என்று பிரதமத்திலே ருசி ஜனகமாய் இறே கண் இருப்பது

புண்டரீகாஷா நஜா நே சரணம் பரம் -என்று ருசி பிறந்தார்க்கு உபாயமாய் இருப்பதும் கண் இறே

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -என்று பிராப்தி தசையில்
சதா தர்சனத்துக்கு விஷயமாய் இருப்பதும் கண் இறே –

(ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-)

(ஜிதந்தே புண்டரீ காஷா ! நமஸ்தே விஸ்வ பாவந !
நமஸ்தே அஸ்து ஹ்ருஷீ கேஸ ! மஹா புருஷ ! பூர்வஜ !)-1-

(அஹம் பீதோ அஸ்மி தேவேஸ ஸம்ஸாரே அஸ்மின் பயாவஹே
பாஹி மாம் புண்டரீகாஷ ! ந ஜாநே ஸரணம் பரம் —8–
பரம் சரணம் ந ஜாநே-உன்னை ஒழிய வேறு ஒரு உபாயம் அறிகிறிலேன்-)

(தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனைத் துழாய் விரைப்
பூமருவு கண்ணி எம்பிரானைப் பொன்மலையை
நாம்மருவி நன்குஏத்தி உள்ளி வணங்கி நாம்மகிழ்ந்து ஆட நாஅலர்
பாமருவி நிற்கத் தந்த பான்மையே! வள்ளலே!-2-6-3-)

வாயும் –
அக் கண்ணிலே துவக்கு உண்டாரை நெடும் காலம் இழந்த இழவு எல்லாம்
தோற்றும்படியாக சாந்த்வனம் பண்ணும் முறுவலும் -(ஸம் பாஷணமாவ இவ)

சாபராதரான நம் அளவிலே திரு உள்ளம் என்னாய் இருக்கிறதோ என்று கூச்சத்தோடு கிட்டினால்
நிரபராதர் நாம் என்று அவர்கள் தாங்களே தங்களை நினைக்கும் படி யாய்த்து முறுவல் இருப்பது –
அபராதத்துக்கு நேர்த்தரவு கொடுக்கும் முறுவல் இறே

கைத்தலமும் –
கிட்டினாரை மாஸூச -என்னும் கையும்(அஞ்சேல் என்ற கையும் அபய ப்ரதானம் -அபய ஹஸ்தம் )
அணி மிகு தாமரைக் கையை யந்தோ வடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் –என்று
பிராப்யமாய் இருப்பதும் இக் கையே இறே –

(பணி  மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-)

அடி இணையும் –
அக்கையைக் கொண்டு நிர்ப்பயரானார் அனுபவிக்க இழியும் துறையான திருவடிகளும் –
த்ரிவிக்ரம தவச் சரணாம் பூஜா த்வயம் மதீய மூர்த்தானாம் அலங்கரிஷ்யதி –என்றும்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்றும்
சொல்லுகிறபடியே போக்யமாய் இருப்பதும் திருவடிகள் இறே –

(கதா புநஸ் சங்க ரதாங்க கல்பக
த்வஜார விந்த அங்குஸ வஜ்ர லாஞ்சநம்
த்ரிவிக்ரம த்வச் சரணாம் புஜத்வயம்
மதிய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி— -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்  ஸ்லோகம்-31-

(குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-)

முதல் உறவு பண்ணும் கண்ணும்
அத்தை ஸ்த்ரமாக்கும் முறுவலும்
முறை உணர்ந்தாரை மேல் விழுந்து அணைக்கும் கையும் –
அந்த ஸ்பரசத்துக்கு தோற்று விழும் திருவடிகளும் -இருக்கிறபடி –

(சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே பாடகமே)

கமல வண்ணம் –
தாமரையை ஒரு போலியாக சொலும் அது ஒழிய
உத்தர ஷணத்தில் சருகாய் போகும் தாமாரை
சதைக ரூபமாய் இருக்கும் வடிவுக்கு த்ர்ஷ்டாந்தமாக மாட்டாது -என்கை
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா -என்று
தாமரையை அபேஷித்தார் இறே நம் ஆழ்வார்-

(கட்டுரைக்கில் தாமரை*  நின் கண் பாதம் கை ஒவ்வா,* 
சுட்டு உரைத்த நன்பொன்*  உன் திருமேனி ஒளி ஒவ்வாது,*
ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப்*  புகழ்வு எல்லாம் பெரும்பாலும்,* 
பட்டுரையாய் புற்கு என்றே*  காட்டுமால் பரஞ்சோதீ!  )

சமுத்ரத்தே நிலவராய் இருக்குமவர்கள் முழுகி மண் கொள்ளுமா போலே
இந்த சௌந்த்ரய சாகரத்தை தலை நீர் பாட்டிலே அனுபவிக்கிறவர்களைச் சொல்லுகிறது
இப்போது இது சொல்லுகிறது -இவர்களும் அகப்பட குமுழி நீர் உண்ணும் விஷயத்திலே கிடீர்
இவள் அனுபவிக்க இழிகிறது என்கைக்காக –

பார்வண்ண மட மங்கை –
பூமியை தனக்கு பிரகாரமாய் வுடையவளாய்
அசாதாராணமான ஸ்த்ரீத்வத்தையும் உடையவளாய்
துல்ய சீல வயோ வ்ர்த்தாம்-என்கிற பருவத்தையும் உடையவளான ஸ்ரீ பூமிப் பிராட்டி

(துல்ய சீல வயோ வ்ர்த்தாம் துல்ய அபி ஜென்ம லக்ஷணம் ராகவோ வைதேஹி -அஸி தேக்ஷிணா –

அனைத்தும் ஸாத்ருஸ்யமாக இருந்தாலும் இவள் கண் அழகுக்கு ஒப்பு அவன் இடம் இல்லையே)

பார் வண்ணம் -என்கிற விசேஷணம் இப்போது சொல்கிறது –
ஸ்ரீ பூமிப் பிராட்டி தான் அபிமதையாய் இருக்கை அன்றிக்கே
தத் சம்பந்திகளும் அபிமதமாய் இருக்கும்படி தோற்றுகைக்காக

அடியார் அடியார் -என்று அவனோட்டை சம்பந்திகள்
இவனுக்கு உத்தேச்யராய் இருக்குமா போலே இறே
இவளோட்டை சம்பந்திகளும் அவனுக்கு உத்தேச்யராய் இருக்கும் படி –

(அடி ஆர்ந்த வையம் உண்டு*  ஆல் இலை அன்ன வசம் செய்யும,* 
படி யாதும் இல் குழவிப்படி*  எந்தை பிரான் தனக்கு,* 
அடியார் அடியார் தம்*  அடியார் அடியார் தமக்கு* 
அடியார் அடியார் தம்*  அடியார் அடியோங்களே.)

மங்கை –
யுவாகுமார -என்கிற பருவத்துக்கு தகுதியான
யுவதிஸ்ஸ குமாரிணி
-என்கிற பருவத்தை உடையவள் –

பத்தர்-
பஜ சேவாயாம்-என்கிறபடி -சேவையைச் சொல்கிறது –
தான் சேவ்யனாய் இவன் சேவகனாய் இருக்கிற முறையிலே பரிமாறுகை ஒழிய
அத்தலை இத்தலையாய் முறை கெட பரிமாறும்படி யாய்த்து இவளுடைய போக்யதை இருப்பது –

அஹம் சிஷ்யா ச தாசீ ச பக்த்தா ச புருஷோத்தமம் -என்று
அத் தலையில் பும்ஸ்வத்தை அனுசந்தித்து -இவள் படும்பாடு இது –

(அஹம் சிஷ்யா ச தாசீ ச பக்த்தா ச புருஷோத்தமம்-மத் க்ருத சர்வ பூதாநாம் லகு உபாயம் -அருளிச் செய்ய வேண்டும் -ஸ்ரீ வராஹ புராணம்)

இவளுடைய ஸ்த்ரீத்வத்தை அனுசந்தித்து –
கிடந்திருந்து நின்றளந்து
-என்கிறபடி இறே இவன் படுவது –

(கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்ப் புக்கு
இடந்திடும் தன்னும் கரக்கும் உமிழும்
தடம்பெருந்தோள் ஆரத்தழுவும் பாரென்னும்
மடந்தையை மால்செய்கின்ற மால் ஆர்காண்பாரே-(2-8-7)

(அரவாகி சுமத்தியால் –எயிற்றில் ஏந்திதியால்–ஒரு வாயில் ஒளித்தியால்-ஓர் அடியால் அளத்தியால்-
மணி மார்பில் வைகுவாள் இது அறிந்தால் சீறாளோ-சா பத்னி –நிழல் போலே –கம்பர்)

பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு –
அது தான் முறையிலே பரிமாற்றிற்று என்னும் படி யாய்த்து
இவள் பக்கல் வ்யாமோஹம் இருக்கிறபடி –

ஸ்ரமஹரமான தாமரைப் பூவிலே ஒரு பரிமளம் வடிவு கொண்டால் போலே
இருக்கிற பிராட்டிக்கு அதி வ்யாமுக்தனாய்
அல்லி மலர் மகள் போக மயக்குகளாயும் நிற்கும் -என்கிறபடியே
அவன் குமிழி நீர் உண்ணும் படி இறே பிராட்டி உடைய போக்யதை இருப்பது –

(அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லைஇல் ஞானத்தன் ஞானம்அஃ தேகொண்டு எல்லாக்கரு மங்களும்செய்
எல்லைஇல் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி யான் ஓர் துக்கம் இலனே.-3-10-8-)

பாவம் செய்தேன் –
வினவ வந்தார்க்கு அழுது காட்டுகிறாள் –
இவர்களைப் போல இவளும் முறை கெடப் பரிமாற அன்றோ புகுகிறது
அவ்விஷயத்தில் வை லஷண்யத்தை அமைக்கப் போகாது –
இவள் ஆற்றாமையை அமைக்கப் போகாது –

(பகவத் விஷயத்திலே தன் பெண்பி்ள்ளைக்குண்டான அவகாஹநம் தனக்கு மிகவும் மகிழ்ச்சிக் குடலாயிருக்கையாலே
‘புண்ணியஞ்செய்தேன்‘ என்ன வேண்டுமிடத்து நாட்டாருக்காக மறைத்து “பாவஞ்செய்தேன்“ என்கிறாள்.

காலிப்பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர், ஞாலத்தப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்!
நானே மற்றாருமில்லை‘ என்ற யசோதைப் பிராட்டியைப்போலே
“ஞாலத்துப் புத்திரியைப் பெற்றாள் நங்கைமீர்! நானே மற்றாருமில்லை” என்று சொல்லிக் கொள்ளவே இத்திருத்தாய்க்கு விருப்பம்;
ஆயினும் கட்டுப்பாட்டுக்காக மறைக்கிறாளென்க.)

என் பாபமேயாம் -இத்தனை இறே –
இதுக்கடி
மத் பாபமேவாத்ர நிமித்த மாஸீத் – என்று ஸ்ரீ பரத ஆழ்வான்அவள் வயிற்றில்
பிறந்த பாபமே -என்றாப் போலே இவளைப் பெற்ற பாபமே -என்கிறாள் –

பாவம் செய்தேன் –
எனக்கும் தனக்கும் உதவாதபடி பிள்ளை பெற்றேன்
இவள் இப்பாடு படுகைக்கு அடி தன்னை உணராமையாலே -கிடீர் -என்கிறாள் –

ஏர் வண்ணம் என் பேதை –
இவள் தன்னை உணர்ந்தாள் ஆகில் -இப்பாடு எதிர் தலை படும் படியாய் இறே இருப்பது –
தன் வடிவு அழகில் அவன் படும் பாட்டை கிடீர் -அத்தலை இத்தலையாய் தான் படுகிறாள் –

ஏர் வண்ணம் என் பேதை – –
அவனுடைய கார் வண்ணம் -இவளுடைய எர் வண்ணத்துக்கு ச்தர்சம் அன்று கிடீர்
ஒரு த்ர்ஷ்டாந்தம் இட்டுச் சொல்லும்படி இறே அவன் வடிவு இருப்பது –
அழகிய வடிவு என்னும் என்னும் இத்தனை ஒழிய இவள் வடிவுக்கு த்ர்ஷ்டாந்தம் இல்லை இறே
வடிவிணை இல்லா -என்னும் இத்தனை இறே –

(கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-)

பிராட்டிக்கு அவன் போக்யமாய் இருக்கும்
அவனுக்கு இவள் போக்யமாய் இருக்கும் –
அம் மிதுனத்தை அனுபவிக்கும் ஏற்றம் உண்டு ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு
அந்த சமுதாயத்தை அனுபவிக்கும் ஏற்றம் உண்டு இறே இவளுக்கு
போகம் மிக்கதனையும் அழகு மினுங்கும் இத்தனை அன்றோ இறே –

என் பேதை –
என் மகள் –
அவர்களில் காட்டில் அபிஜாதையான ஏற்றம் உண்டு இறே இவளுக்கு
பிறந்திட்டாள் -என்னுமவள் அன்றோ இவள் –

(பின்னை கொல் நில மா மகள் கொல்? திருமகள் கொல்? பிறந்திட்டாள்,
என்ன மாயங்கொலோ?இவள் நெடு மாலென்றே நின்று கூவுமால்,
முன்னி வந்தவன் நின்றி ருந்துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் வூர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே.–6-5-10-)

உன் மகள் உனக்கு பவ்யையாய் அன்றோ இருப்பது – பாவம் செய்தேன் -என்ன வேணுமோ –
நீ நியமிக்க குறை என் என்ன –
என் சொல் கேளாள்-
க்ரமத்தாலே லபிக்கும் அது ஒழிய
இங்கண் த்வரிக்கக் கடவது அன்று காண் -என்று ஹிதம் சொன்னால் அது கேட்கிறிலள் –

என் சொல் கேளாள் –
அவன் சொல் கேட்டவள் ஆகையால் -என் சொல்லை கால் கடை கொள்ளா நிற்கும்
மாம் ஏகம் சரணம் வ்ரஜ –என்ற அவன் வார்த்தையை கேட்டவள் ஆகையாலே
க்ரம ப்ராப்தியை சஹிக்க வேணும் காணும் என்னும் என் வார்த்தையை ஸ்வீகரியாள் இறே –
க்ரம ப்ராப்தி வேண்டும்படி அன்றே உபாய ஸ்வரூபம் இருப்பது –
தனக்கு கர்த்தவ்யம் உண்டாகில் இறே க்ரம ப்ராப்தி உள்ளது –

(“மாமேகம் சரணம் வ்ரஜ“ என்றும்,
“அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம“ என்றும் அவன் சொல்லி வைத்த
வார்த்தைகளைக் கேட்டிருக்குமவள் என்சொல்லைக் கேட்பளோ?)

எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் –
என் வார்த்தை கேளாத அளவேயோ -அவன் இருந்த தேசத்துக்கு போக வழி தேடா நின்றாள் –
என்னை அனன்யார்ஹை ஆக்கினவன் உடைய கோயிலுக்கு வழி எங்கே என்னும்

எங்கே என்னும் –
நான் சொன்ன ஹிதத்தை கால் கடைக் கொண்டது கிடக்கிடாய்
கோயிலுக்கு வழி எது என்று என்னை கேளா நின்றாள் –
அவன் பதறாமைக்கு முறை உணர்த்தி போனான் –
அது தானே பதறுகைக்கு ஹேதுவாய்த்து இவளுக்கு-

நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்
கோயிலுக்கு போவது திரு நீர் மலையிலே புக்கு என்னா நின்றாள் –

இதுவன்றோ நிறை வழிந்தார் நிற்கும்படி என்கிறாள் –
திருக் குறையலூரில் நின்றும் புறப்பட்டு திரு நீர் மலையிலே புக்கு போலே காணும் கோயிலுக்கு போவது –
இவளுடைய தங்கும் பயணம் இருக்கும் படி –
பாதேயம் புண்டரீகாஷா நாம சங்கீர்த்தனாம்ர்தம் -என்கிற ஸ்தானத்திலே
இவளுடைய பாதேயம் இருக்கிறபடி –
திருப்பதிகளிலே தங்கி அல்லது போக மாட்டாள் இறே –
கோயிலுக்கு போம் வழி திரு நீர்மலை என்னும்படி இறே இவளுடைய கலக்கம் –

இது வன்றோ நிறை வழிந்தார் நிற்குமாறே –
ஸ்வரூபத்தைப் பாராதே
விஷய வைலஷண்யத்தை பார்த்தார் உடைய பிரகாரம் இருக்கும்படி இது வன்றோ

இதுவன்றோ -நிற்குமாறு –
நாம் இந்த பிரகாரம் அறிந்திலோம் இத்தனை போக்கி பிரகாரம் இது வன்றோ
போக அனுரூபம் ஸ்வரூபம் என்னும் இது வன்றோ அர்த்தம்
விஷய வைலஷண்யத்தையும் உபாய சித்தமாய் இருக்கிறபடியையும் அனுசந்தித்தார் –
சித்தம் இருக்கும்படி இது வன்றோ –
நமக்கு இரண்டிலும் ஜ்ஞானம் இல்லை– ஸ்வரூபத்தை பார்த்தோம் இத்தனை இறே –

எம்பெருமான் திருவரங்கம் -இத்யாதி
இப்பெண் பிள்ளை ஆற்றிலே கெடுத்து குளத்திலே தேடுகிறாள்
இது வன்றோ நிறை வழிந்தார் நிற்குமாறு -என்று பிள்ளை அருளிச் செய்வர் –
திரு நீர் மலை பம்மல் குளத்தில் இருக்கையாலே -ரசோக்தி
போக அனுரூபம் ஸ்வரூபம் ஆகையாலே இறே –

ஆண்டாள் க்ர்ஷ்ணனுக்கு இடைப் பெண்கள் பக்கலிலே நோக்கான போது
பாவநா ப்ரகரஷத்தாலே முடை நாற்றமும் இடை வுடையும் இடை முடியுமாய் இடைப் பேச்சுமாய் இருப்பது

யஞ்ஞ பத்னிகள் பக்கலில் நோக்கானவாறே மடிதார் உடுப்பதும் ஆய்த்து –

(கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே யென்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –12-6-)

ரிஷி பத்தினிகள் -வேர்த்து நெடு நோக்கு கொண்டு இருக்கும் பத்த விலோசனத்து உய்த்திட –
மடிசார் கட்டியவளாக ஆனாள் அன்றோ
பெறப் போகும் பேற்றுக்கு அனுகுணமாகவே தன்னை அமைத்துக் கொண்டாளே அங்கும் இங்கு போலேவே –

————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading