அவதாரிகை —
மென் கிளி போல் மிக மிழற்றும் -என்று
சம்ஸ்லேஷ தசையில் தன்னுடைய ஜெயமும் அவனுடைய அபஜயமும்
தோற்ற மேலிட்டு வார்த்தை சொன்ன இடத்தில் அவனும் அப்படியே மேலிட்டு
வார்த்தை சொல்லக் கேட்டிலள் –
அத்தாலே நின்ற நிலை குலைந்து –
தன் கர்வமும் -தானும் -வீணையுமாய் -விட்டது –
கூப்பிடத் தொடங்கினாள் –
பர்த்தாரம் இவ சம்ப்ராப்தா ஜாநகீ முதிதா பவத் -என்று
உகந்த சமனந்தரம் –
ஹா ராம ஹா லஷ்மணா ஹா ஸூமித்ரே -என்று
பிராட்டி கூப்பிட்டாப் போலே
(ஹா ராமா ஹா லஷ்மண ஹா ஸூமித்ரே ஹா ராம மாதா ஸஹ மே ஜனன்யா
ஏஷா விபத்யாம் யஹம் யல்ப பாக்யா மஹார்ணவே நவ்ரிவ மூட வாதா –ஸூந்தர –28-8-)
ஹா ராமா -என்று போக்ய வஸ்துவை நினையா
ஹா லஷ்மணா -என்று புஜிப்பாரை நினையா –
ஹா ஸூமித்ரா –என்று நிமித்த பூதரை நினையா கூப்பிட்டாள்
அப்படியே – இறே –
வரையாதே ரஷிக்கும் படியையும்
முகம் கொடுக்கும் படியையும்
சொல்லிக் கூப்பிட்டுத் தரைப் படா நின்றாள்
என்கிறாள் –
———————————————————————————————
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்ற மரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே–16-
பதவுரை
கன்று மேய்த்து-கன்றுகளை ரக்ஷித்து
இனிது உகந்த-மிகவும் மகிழ்ச்சி கொண்ட
காளாய் என்றும்–இளையோனே! என்றும்,
கடி பொழில் சூழ்–வாஸனை மிக்க சோலைகளாலே சூழப்பட்ட
கண புரத்து–திருக் கண்ண புரத்திலே (பழுத்த)
என் கனியே என்றும்–என் பழமே! என்றும்
மன்று அமர கூத்து ஆடி–வீதி யாரக் குடக் கூத்தாடி
மகிழ்ந்தாய் என்றும்–மகிழ்ந்தவனே! என்றும்
வட திரு வேங்கடம்–வட திருவேங்கட மலையிலே
மேய மைந்தா என்றும்–பொருந்தி வாழ்கின்ற யுவாவே! என்றும்,
அசுரர் குலம்–அசுரக் கூட்டங்களை
வென்று–ஜயித்து
களைந்த–வேரோடொழித்த
வேந்தே என்றும்–வேந்தனே! என்றும்
விரி பொழில் சூழ்-விரிந்த சோலைகளாலே சூழப்பட்ட
திருநறையூர்–திருநறையூரிலே
நின்றாய் என்றும்–நின்றருளுமவனே! என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்-அடர்ந்த திருக்குழற் கற்றையையும்
கறுத்த திருமேனியையு முடையனாய் எனக்குத் துணையானவனே என்றும் சொல்லி
துணை முலை மேல்–ஒன்றோடொன்றொத்த தனங்களிலே
துளி சோர–கண்ணீர்த் துளிகள் பெருகும் படியாக
சோர்கின்றாள்–தளர்கின்றாள்
கன்றுகளை ரஷித்து மிகவும் ஸந்துஷ்டனாய் -காளை போலே செருக்குத் தோற்ற வர்த்திக்கிறவனே -என்றும்
பரிமளம் மிக்கு இருந்துள்ள சோலையாலே சூழப்பட்ட திருக்கண்ண புரத்திலே எனக்கு பக்வ பலம் போலே போக்ய பூதனானவனே என்றும்
நாற்சந்தியில் பொருந்தும்படி நர்த்தனம் பண்ணி மகிழ்ந்தவனே என்றும்
வடக்குத் திருமலையில் நித்ய வாஸம் பண்ணுகிற மிடுக்கனே என்றும்
கர தூஷணாதி அஸூரர்களை ஜெயித்து அக்குலத்தை நிர்மூலம் ஆக்கின சக்கரவர்த்தி திரு மகனே என்றும்
விஸ்திருதமான பொழிலாலே சூழப்பட்ட திரு நறையூரிலே நின்று அருளினவனே
மிகவும் நெருங்கின குழலையும் கருத்த திரு மேனியையும் யுடையனாய் எனக்குத் துணையானவனே என்றும் சொல்லி
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான ஸ்தனங்களிலே கண்ணீர்த் துளிகள் அருவி போலே பாயும்படி தளரா நின்றாள்
———————————————————————————————-
பிரதமத்தில்
வரையாதே ரஷித்த படியைச் சொல்கிறது –
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்-
சர்வ ரஷகனான நீ ரஷணத்தில் நின்றும் கை வாங்கினாயோ -என்கிறாள் –
மேய்க்கை -ரஷிக்கை –
1-நித்ய ஸூரிகளை ரஷித்த அளவாய் ஆறி இருக்கிறானோ –
2-சநகாதிகளையும் காதாசித்கதமாக ரஷித்த அளவாய் ஆறி இருக்கிறானோ –
3-ராம க்ர்ஷ்ணாதி ரூபத்தாலே வந்து அவதரித்து
4-இடக்கையும் வலக்கையும் அறியாத இடையரை ரஷித்த அளவாய் ஆறி இருக்கிறானோ —
அறிவு கேட்டுக்கு மேல் எல்லையான கன்றுகளை மேய்த்த யுன்னை விட்டு
எங்கனே ஆறி இருப்பேன் –
கன்று மேய்த்து இனிது உகந்து –
நித்ய ஸூரிகளை ரஷிக்கை தட்டியில் இருப்பாய் –
கன்று மேய்த்த பின்பு காணும் சார்வ பௌமன் ஆய்த்து –
சர்வ ரஷகத்வம் புஷ்கலம் ஆய்த்தது -கன்று மேய்த்த பின்பு இறே –
இனிது உகந்த –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -என்கிறபடியே
பசுக்களை மேய்ப்பு உகக்கும்
கன்று மேய்த்து இனிது உகக்கும் –
அவற்றுக்கு ரஷகன் பக்கல் ரஷகன் என்ற ஞானம் உண்டு –
அஞ்ஞானத்துக்கு மேல் எல்லையான கன்றுகளையும் அகப்பட ரஷித்த நீ –
உன் வாசியை அறிந்து
உன்னை ஒழிய செல்லாத
என்னை ரஷியாது ஒழிவதே -என்கிறாள் –
நானும் இவ் வாற்றாமையை விட்டு
அஞ்ஞர் கோடியிலே அந்தர்பவிக்கப் பெற்றிலேன் –
(பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-1-)
(கோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி–10-3-4-)
(மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண
மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–10-3-7-)
(அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர் தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10-)
காளாய் -என்றும் –
தான் சோகாவிஷ்டையாய் இருக்கச் செய்தேயும்
தன்னை வடிம்பிடிம் பருவத்தில் தோற்றுச் சொல்கிறாள் –
தருணவ்-என்று பிணம் தின்னியையும் அகப்பட ஆழம் கால் படுத்தும் பருவம் இவளை விடுமோ –
அவனோடு கலந்து தான் இளகிப் பதிக்க ஆசைப் படுகிறாள் காணும் –
(தருணவ் ரூப ஸம்பன்னவ் ஸூகுமாரவ் மஹா பலவ் புண்டரீக விசாலாஷவ் ஷீர க்ருஷ்ணாஜிநாம் பரவ்
ஒரு நாள் முகத்திலே விழித்தாரை வடிவு அழகு படுத்தும் பாடு)
அதவா
ரசாயன சேவை பண்ணினாரைப் போலே
கன்றுகளை ரஷித்த பின்பு வடிவு இளகிப் பதித்த படி –
மனுஷ்யர் அன்ன மய ஸ்வரூபமாய் இருக்கையாலே
அன்னமே வ்ர்த்தி ஹேதுவாமா போலே
ரஷகனுக்கு ரஷண தர்மமே இறே இளகிப் பதிகைக்கு ஹேது –
(கரியான் ஒரு காளை வந்து –
பட்டி மேய்ந்தோர் கார் ஏறு –காளாய் என்று அரசன் -வாலிபன் -காய கல்பம் உண்டவன் போல் -மூன்று அர்த்தங்கள்
காளாய்! = இளம் பருவத்தைச் சொன்னபடி;
“காளையே எருது பாலைக்கதிபன் நல்லிளையோன் பேராம்“ என்பது திவாகரம்.)
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
அவ்வவ காலத்தில் பிற்பட்டாரையும் ரஷிக்க அன்றோ
திருக் கண்ணபுரத்தில் வந்து போக்ய பூதனாய் நின்று அருளிற்று –
இது பூர்வர்கள் நிர்வாகம் –
பசுக்கள் கை கழியப் போகையாலே-அவற்றை மறிக்கப் போன விடத்திலே
ஸ்ரமஹரமாய் இருப்பதொரு பொழிலைக் கண்டு திரு வாய்ப்பாடியாக நினைத்துப் புக்கான் –
அப் பொழில் மயல் மிகு பொழில் ஆகையாலே கால் வாங்க மாட்டிற்றிலன் -என்று அருளிச் செய்வர் பட்டர் –
அதுக்கு ஹேது
அவதாரத்திலும் அர்ச்சாவதாரத்திலும் தமக்கு உண்டான ஸ்வரூப ஐக்ய பிரதிபத்தியாலே அருளிச் செய்தார் –
கடி பொழில் சூழ் கணபுரம் –
பரிமளமே உபாதானம் என்னும்படியான
பொழிலாலே சூழப் பட்ட தேசம்
சர்வ கந்த -என்கிற வஸ்துவையும் கூட கால் தாழப் பண்ணும் படி இறே
இப் பொழிலின் பரிமளம் இருப்பது –
என் கனியே என்றும் –
அச் சோலை பழுத்த பழம் இருக்கிறபடி –
எனக்கு பக்வ பலம் போலே போக்யமாய் இருக்கிறவனே
என் கனியே -என்று
ஸ்வ அதிகாரத்தை வெளியிடுகிறார்
சாதனாந்தர நிஷ்டர்க்கு சாதனா சமாப்தியிலே அனுபவம் ஆகையாலே
அவர்களுக்கு அவன் காயாய் இருக்கும் –
பிரபன்னருக்கு பிரபத்தி பண்ணின சமனந்தரமே பிடித்து
போக்யமாய் இருக்கையாலே பக்வ பலமாய் இருக்கும் –
என் கனியே என்றும் –
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியனோ -என்று இருக்குமவர் இறே
ஆகையாலே –என் கனியே -என்கிறார் –
கனிக்கு போக்தாவை ஒழியச் செல்லாது-
போக்தாவுக்கும் கனியை ஒழியச் செல்லாது –
மன்ற மரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
போக்தாவுக்கு போக்யமாய் இருக்கும் அளவு அன்றிக்கே
அம்பலத்தில் அவல் பொதி அவிழ்ப்பாரைப் போலே
சமுதாய ஸ்தலத்திலே சர்வ ஸ்வதானம் பண்ணிற்று இலையோ –
மன்றமரக் கூத்தாடி –
மன்றானது கூத்தோடு பொருந்தும் படியாக கூத்தாடினவனே
மன்று அமருகையாவது –
கூத்தாடி விட்டாலும் மன்று ந்ர்த்த கந்தியாய் இருக்கை –
பெருமாள் எழுந்து அருளிப் புக்க திரு வீதி போலே காண்
திருவாய்ப் பாடியிலே அம்பலம் இருப்பது –
என்று அருளிச் செய்வர் பட்டர்
மன்று -நாற் சந்திக்கும் பேர் -அம்பலத்துக்கும் பேர் –
இடையர் எல்லாரும் திரள இருக்கிற இடம் ஆய்த்து —அம்பலம் ஆகிறது –
அங்கன் இன்றியே
மன்றில் உள்ளாரைச் சொல்லிற்றாய்
இடையர் எல்லாரும் அனன்யார்ஹராம் படிக்கு ஈடாக ஆடின படி என்றுமாம் –
அதாவது
புறம்பு நெஞ்சு செல்லாதே –அது அது -என்று கூத்திலே நெஞ்சு கிடக்கை –
மகிழ்ந்தாய் என்றும் –
கூத்துக் கண்டவர்கள் உகக்கை அன்றிக்கே
உகப்பானும் தானாய் இருக்கை –
அவர்களைத் தன் கூத்தாலே எழுதிக் கொள்வானும் தானாய்
உகப்பானும் தானாய் இருக்கிறபடி –
கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் –
தன் போக்யதையை அனுபவித்ததும் புரு நாரதர்கள் கூத்தாடக் கண்டு உகக்கக் கடவ தான் கிடீர்
அத் தலை இத் தலையாய்
கூத்தாடுவானும் தானாய் உகப்பானும் தானாய் இருக்கிறான் -என்கிறாள் –
குடக் கூத்தாடுகை தான் ஈஸ்வர லஷணமோ வென்னில் –
பிராமணர் ஐஸ்வர்யம் மிக்கால் யாகாதிகளைப் பண்ணுமா போலேயும்
விஷய பிரவணர் ஐஸ்வர்யம் மிக்கால் அழித்து விவாகம் பண்ணுமா போலேயும்
இடையருக்கு ஐஸ்வர்யம் மிக்கால் செருக்குக்குப் போக்கு வீடாக ஆடுவதாய்த்து குடக் கூத்தாகிறது –
அந்த சஜாதீய பாவத்தில் புரை யறுதியாலே குடக் கூத்தாடின படி என்கை –
ஊர்ப் பொதுவான பண்டம் கிடீர் எனக்கு அரிதாய்த்து என்கிறாள் –
வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும் –
ஓர் ஊரிலே மன்றிலே நின்று கொள்ளை கொடுக்கை அன்றியே
உபய விபூதிக்கும் நடுவான மன்றிலே நின்று
தன்னைக் கொள்ளை கொடுத்த படியைச் சொல்லுகிறது –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்னக் கடவது இறே –
மைந்தா என்றும் –
திரு மலையில் நின்று தன் பருவத்தை ஆய்த்து கொள்ளை கொடுத்தது –
வானவர் வானவர் கோனொடும் நமன்று எழும் திரு வேங்கடம் – என்றும்
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் -என்றும்
சொல்லுகிறபடியே
ஈஸ்வர அபிமானிகளோடு -நிஹீன ஜன்மாக்களோடு வாசி அற கொள்ளை கொள்ளும் வடிவு கிடீர்
எனக்கு அரிதாய்த்து -என்கிறாள் –
அதவா
பக்த்தானாம் -என்கிற வடிவு
மத் ஏக வர்ஜமாயோ இருப்பது -என்கிறாள் -என்னவுமாம் –
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே -என்றும்
தான் போக்யனாய் இருக்கும் அளவேயாய்
விரோதி நிவ்ர்த்தி பிறக்கை யரித்தாய்த் தான் இழக்கிறேனோ -என்று
கர தூஷணாதிகள் முதலாக ராவணன் தானே தானாம்படி பரிகரத்தை கொன்று
அசூர வ்யக்திகளை கிழங்கு எடுத்து
அவர்களுக்கு கூடஸ்தனான ராவணனை அழியச் செய்த
சகரவர்த்தி திருமகனே –
அசூர வ்யக்திகள் இறே ராஷசரும் -அத்தைப் பற்ற அசுர குலம் களைந்த -என்கிறாள்
வேந்தே -என்றும்
ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவன் கதா -என்று
அனுகூலர் வாய் புலத்தும் படியாய்
தத் பிரதி கூலர் மண் உண்ணும்படியாய் இருக்கிறவன் கிடீர் எனக்கு முகம் காட்டாது ஒழிகிறான்
(ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவன் கதா: |
ராம பூதம் ஜகத் அபூத் ராமே ராஜ்யம் பிரஷாஸதி ||-ஜகத் ராம அத்வைதம் ஆனதே )
தாயார் மகிழ ஒன்றார் தளர –என்றும்
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான் -என்றும் இறே
வஸ்து ஸ்வ பாவம் இருப்பது –
(ஆயர் குலத்தினில் வந்துத் தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை
தாயார் மகிழ ஒன்னார்த் தளர தளர் நடை நடந்தானை
வேயர் புகழ் விட்டுச் சித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே)
(விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண் கொள் வசுதேவன் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-)
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும் –
அவ் அவதாரத்துக்கு பிற்பட்டார்க்கும் முகம் கொடுக்கைக்காக
சக்கரவர்த்தி திருமகன் -வந்து நிற்கிற தேசம் ஆய்த்து -திரு நறையூர் ஆகிறது –
ஏக தார வ்ரதன் வந்து நிற்கிறான் என்று தோற்றும் படியாய் இறே இருப்பது –
விரியா நின்று இருந்துள்ள பொழிலாலே சூழப் பட்ட தேசம்
நம்பியும் நாச்சியாரும் கடாஷித்த –அக் கடாஷமே விளை நீராக வளருகிற பொழில் ஆகையாலே
நாள் தோறும் வர்த்தித்து வரக் கடவது இறே
அக் கடாஷம் மாறில் இறே பொழில் விரிவும் மாறுவது –
நின்றாய் என்றும் –
ஷீராப்தியில் இருந்து புறப்பட்டு
மேதாவி மகரிஷி இடத்தில்
திரு நறையூரில் வந்து இருக்க
இங்கே நம்பி தேடி வந்தான் இறே –
பிராட்டியை தேடி அலமர்ந்து திரிந்தவன் அத் தேசத்திலே அவளைக் கண்ட வாறே அங்கே தரித்து நின்ற படி –
அந்நிலை உனக்கு சித்திக்கும் போது எனக்கு முகம் காட்ட வேண்டாவோ
எனக்கு முகம் தராத போது அவள் முகம் உனக்கு கிடைக்குமோ என்கிறாள் –
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
இத்தாலும் நம்பி உடைய திருக் குழலையும் வடிவையும் சொல்கிறது –
அற நெருங்கி இருண்ட குழலையும்
காளமேக நிபச்யாமமான வடிவையும் உடைய என் துணையே –
தோளு நான்குடைச் சுரி குழல் கமலக் கட் கனிவாய் காள மேகத்தை இறே இவர்கள் துணையாகப் பற்றுவது –
இந்தக் குழலிலும் வடிவிலும் போலே காணும் தான் அகப்பட்டது –
பிராட்டியைத் தேடி திரிகிற காலம் திருக் குழல் பேணாமையாலே ஜடையாய் கிடந்தது
கண்டவாறே அவள் கையாலே வகிர்ந்து பேணின குழல் ஆகையாலே துன்று குழல் -என்கிறது –
(தாள தாமரைத் தட மணி வயல் திருமோகூர்
நாளும் மேவி நன் கமர்ந்து நின் றசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக் கண் கனிவாய்
காள மேகத்தை யன்றி மற் றொன்றிலம் கதியே.)
(பிராட்டியைத் தேடுகையாவது
ஷீராப்தியின் நின்றும் புறப்பட்டு மேதாவி மகரிஷி இடத்தில் திரு நறையூரிலே வந்து இருக்க
இங்கே தேடி வந்தார் நம்பி என்கிற வ்ருத்தாந்தம் )
என் துணையே –
ஸ்நிக்த நீல குடில குந்தளம் என்கிற மயிர் முடியையும் வடிவில் ஸ்ரமஹரதையும் காட்டி
என்னை அனன்யார்ஹை ஆக்கினவனே –
(கேசவ -ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 23 திரு நாமம்
பிரமன் ஈசன் நிர்வாஹகன்
கேசி ஹந்த
ப்ரஷஸ்த கேஸ பாஸம்
ப்ரஷஸ்த ஸ்நிக்த நீல குடிலை குண்டல -புகழப் படும் -வழுவழுப்பான -கறுத்த -சுருண்ட திருக் குழல் காற்றை)
நான் விமுகனான தசையிலே சத்தியை நோக்கி
உன் வடிவு அழகைக் காட்டி
அனன்யார்ஹம் ஆக்கி
என்னோடு வந்து சம்ஸ்லேஷித்து
என்னை உபேஷித்துப் போகவோ -என்கிறாள் –
துணை -என்று
காந்தனையும் சொல்லக் கடவது -ரஷகனையும் சொல்லக் கடவது இறே –
இலை துணை -என்னக் கடவது இறே –
எனக்கு பிராப்யமும் பிராபகமும் ஆனவனே –
(இலை துணை மற்று என் நெஞ்சே! ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண் மால் சேரா குலை கொண்ட
ஈர் ஐந்தலையான் இலங்கையை ஈடு அழித்த
கூர் அம்பன் அல்லால் குறை -நான்முகன் திருவந்தாதி-8- -அங்கும் – இனிய ப்ராப்யம் -காந்தன் -ரக்ஷகன் -ப்ராபகம்)
என்றும் -துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே
இப்படி சொல்லா நிற்கச் செய்தே தரைப் படா நின்றாள் –
துணை முலை
போக உபகரணமோ துணை
இதுவே போக்தாவுக்கு துணை
அவனைப் பிரிந்த தசையிலும் முலை துணையாய் இறே இருப்பது-
துளி சோரச் சோர்கின்றாளே –
அது அழிகையாலே தானும் அழிந்தாள் என்கிறாள் –
(அக்னி கணம் போலே கண்ணீர் விழ
அத்தாலே அது வை வர்ணமாய் தானும் அழியா நின்றாள் )
என் துணையே -என்று -சோர்கின்றாளே –
விழுவார் அம்மே என்று விழுமா போலே அவன் முகம் காட்டாமையாலே வந்த ஆற்றாமையாலே
நோவு படா நிற்கச் செய்தேயும்
அவனைத் துணையாகச் சொல்லி தரைப் படா நின்றாள் -(மாத்ரு காதுகனும் அம்மே என்றே சொல்லி விழுவானே )
(தாயான )துணையான நான் -என் முகம் பார்க்க வல்லளே என்று ப்ரார்த்தியா நிற்க
தான் துணையாக நினைத்தவன் முகம் காட்டாதே உபேஷித்துப் போகா நிற்க
பின்னையும் அவன் முகத்தை ஆகாங்ஷித்து தரைப் படா நின்றாள் –
இது போலே காணும் பகவத் சம்பந்த உக்தன் இருக்கும் இருப்பு –
விஷயாந்தரங்கள் தாம் மேல் விழா நின்றாலும் அத்தை கால் கடைக் கொண்டு இருக்கையும்
அவன் உபேஷகன் ஆனாலும் அவனை ஒழியச் செல்லாதே இருக்கையும் இறே -பகவத் சம்பந்த உக்தன் படி –
தாய் ரஷகையாய் அபிமானித்து இருக்கச் செய்தேயும் அவளைக் கால் கடைக் கொண்டாள் இறே –
(கொண்ட பெண்டிர் மக்கள் -ஆபாஸ பந்துக்கள் வர்ஜனம் நல்ல கோட்ப்பாடுடை –அனுகூல பகவத் பக்தர்கள் உபாதேயம்
கடியன் கொடியன் நெடிய மால் -ஆகிலும் கொடிய என் நெஞ்சு அவனே என்று இருக்குமே )
————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply