அவதாரிகை –
திருநாமம் சாத்மியாத தசையும்
சாத்மிக்குமோ -என்று சங்கிக்கிகும் தசையும்
சாத்மிக்கும் தசையுமாய் இருக்கிற படியை -இறே
இம் மூன்று பாட்டிலும் சொல்கிறது –
ஆபத் சகங்களான திரு நாமங்களை தான் ஆதிக்ரஹணம் பண்ணித் தந்து சொல்லச் சொல்லுகையாலே சொன்னோம்
அது மோஹ ஹேதுவாய்த்து என்று பார்த்து
கிளி தன்னுடைய விவேகத்தாலே முன்பு தெளிந்த காலத்திலே தான் உஜ்ஜீவித்த பிரகாரத்தாலே கற்பித்த திரு நாமங்களை
அடைவே சொல்லக் கேட்டு தரித்து –
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக -என்று
கிளியைக் கொண்டாடுகிறாள் –
——————————————————————————————————
முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே -14-
பதவுரை
முளை கதிரை-இளங்கதிரவனைப் போன்றவனும்
குறுங்குடியுள் முகிலை–திருக்குறுங்குடியில் காளமேகம் போல் விளங்குபவனும்
மூவா மூ உலகும் கடந்து–நித்யமாய் மூவகைப் பட்டதான ஆத்ம வர்க்கத்துக்கும் அவ்வருகாய்
அப்பால்–பரம பதத்திலே-தத் விஷ்ணோ -அப்பால் –
முதல் ஆய் நின்ற–(உபய விபூதிக்கும்) முதல்வனாய்க் கொண்டு எழுந்தருளி யிருப்பவனும்
அளப்பு அரிய–(ஸ்வரூப ரூப குணங்களில்) அளவிடக் கூடாதவனும்
ஆர் அமுதை-அருமையான அம்ருதம் போன்றவனும்
அரங்கம் மேய அந்தணனை–திருவரங்க மா நகரில் பொருந்திய பரம பரிஸூத்தனும்
அந்தணர் தம் சிந்தையானை–வைதிகர்களின் உள்ளத்தை இருப்பிடமாக வுடையவனும்
திருத் தண் காவில் விளக்கு ஒளியை–திருத் தண் காவில் விளக்கொளி யெம்பெருமானாய் ஸேவை ஸாதிப்பலனும்
மரகத்தை–மரகதப் பச்சைப் போல் விரும்பத் தக்க வடிவு படைத்தவனும்
வெஃகாவில் திருமாலை–திரு வெஃகாவில் கண் வளர்ந்தருளுகிற திருமகள் கொழுநனுமான
பாட கேட்டு–ஸர்வேஸ்வரனைக் (கிளி) பாட (அப் பாசுரங்களை)க் கேட்டு
மடக் கிளியை–அழகிய அக் கிளியை நோக்கி
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று–உன்னை வளர்த்ததனால் பிரயோஜனம் பெற்றேன்; இங்கே வா‘ என்றழைத்து
கை கூப்பி வணங்கினாள்–அதற்கு ஒரு அஞ்சலியும் செய்து நமஸ்கரித்தாள்.
பால ஸூர்யனை ஒத்தவனாய்
திருக்குறுங்குடியிலே நித்ய வாஸம் பண்ணுகிற
மேகத்தை ஒத்தவனாய்
நித்தியமான த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் அவ்வருகு வானவனாய்
பரமபதத்திலே உபய விபூதிக்கும் காரண பூதனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிறவனாய்
ஸ்வரூப ரூப குணங்களால் அளவிடக் கூடாதவனாய்
அம்ருதக் கடல் போல் நிரதிசய போக்ய பூதனாய்
கோயிலிலே நித்ய வாஸம் பண்ணுகிற பரிசுத்தனாய்
பரிஸூத்தரானாருடைய ஹ்ருதயத்திலே நித்ய வாஸம் பண்ணுமவனாய்
விளக்கு ஒளி போலே நெஞ்சிலே பிரகாசிக்குமவனாய்
திருத் தண் காவில் மரகதம் போல் குளிர்ந்த வடிவை யுடையவனாய் பச்சை வண்ணராய்
திரு வெஃகாவில் கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரனை
ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே பாட ப்ரீதியுடன் கேட்டு உன்னை வளர்த்ததனால் உண்டான ப்ரயோஜனத்தைப் பெற்றேன்
இங்கே வா என்று அழைத்து லஜ்ஜா விஷ்டமான கிளியை அஞ்சலி பண்ணி அதின் காலிலும் விழுந்தாள் –
——————————————————————————————————-
அடியில் அவற்றைக் கற்பித்த திரு நாமங்கள் உடைய அடைவு இருக்கிறபடி –
முளைக் கதிரை -என்னீர் –
குறும் குடியுள் முகில் -என்னீர்
என்றாய்த்து கற்பித்தது
முளைக் கதிரைக் –
உதிக்கிற ஆதித்யனைப் போலே
கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படி இருக்கிற
திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனை –
பரம பத நாதனை –
(தத்ர கோவிந்த மாஸீ நம் )பிரசன்னாதித்ய வர்ச்சசம் –என்னக் கடவது இறே –
தம்மை அடியிலே அவன் விஷயாந்தரங்களில் நின்றும் மீட்டதும்
ஸ்வ விஷயத்திலே ருசியைப் பிறப்பித்ததும் –
வடிவைக் காட்டி யாகையாலே -அத்தை யாய்த்து -இதுக்கு பிரதமத்திலே உபதேசித்தது –
மணி யுருவில் பூதம் ஐந்தாய் -என்று அன்றோ அடியிலே விஷயீ கரித்த வடிவைச் சொல்லிற்று –
இங்கே –முளைக் கதிரை -என்பான் என் என்னில் –
மணி வுரு நீல வர்ணன் முளைக் கதிர் -சிவப்பு வர்ணம்
வஸ்து உத்தேச்யம் பிரயோஜனம்
பிரகாசத்காமே யாய்த்து பிரகாசிப்பித்தது –
ஆகையாலே தேஜோ மயமான விக்ரஹம் -என்கை
திருக் குறும் குடியுள் வந்து நின்று அருளின சீலாதிகனுடைய அடிப்பாடு சொல்கிறது மேல் –
மூவா மூ வுலகு இத்யாதி –
மூவா மூ வுலகு என்று -நித்தியமான த்ரிவித ஆத்ம வர்க்கத்தை அருளிச் செய்கிறார் –
(மூ வுலகும்-உம்மைத்தொகை த்ரிவித அசேதனங்கள்
கடந்த த்ரிவித சேதன அசேதன விலக்ஷண விஸிஷ்ட ப்ரஹ்மம்
முதலாய் நின்ற -தரிப்பவன் -மேலான புருஷோத்தமன்-மூல காரணமாய் நின்ற
நித்ய முக்தர்களும் முழுவதும் அனுபவிக்க முடியாதே
நித்ய முக்தர்களை இனிமையால் தரிக்க வைக்கிறான்
நமக்கு சரீரம் இந்திரியங்கள் -கரண களேபரங்களைக் கொடுத்து தரிக்க வைக்கிறான்
நின்றனர் இருந்தனர் -இத்யாதி )
கடந்து –
சகல சேதன அசேதனங்களுக்கும் அவ்வருகாய் இருக்குமவன் –
அப்பால் –
பரம பதத்தில்
குறும் குடியுள் முகிலை –
இவ்வடிவை சாஸ்திர முகத்தாலும் அன்று
ஆசார்ய உபதேசத்தாலும் அன்று
திருக் குறும் குடியிலே யாய்த்து பிரகாசிப்பித்தது –
இரண்டாம் பாட்டில்-முகில் உருவம் -என்று
வடிவில் ஸ்ரமஹதையையும் ஔதார்யத்தையையும் பற்ற -அருளிச் செய்தார்
அத்தை இங்கே சொல்லுகிறார்
குறும் குடியுள் முகிலை –
இன்ன பர்வதத்திலே மேகம் படிந்தது என்றால் வர்ஷம் தப்பாது என்று இருக்குமா போலே
திருக் குறும் குடியிலே நின்றான் என்றால் லோகம் எல்லாம்
க்ர்தார்தமாம் படியாய்த்து இருப்பது –
உள் முகிலை
வந்து வர்ஷித்துப் போம் மேகம் போல் அன்றியே
ஸ்தாதியாய் நிற்கும் மேகம் ஆய்த்து
முதலாய் நின்ற –
உபய விபூதிக்கும் சத்தா ஹேதுவாய் நின்ற –
நித்ய ஸூரிகளுக்கு போக்யதையால் சத்தா ஹேதுவாய்
சம்சாரிகளுக்கு கரண களேபர பிரதானத்தாலே சத்தா ஹேதுவாய் இருக்கும் என்கை –
அளப்பரிய ஆராமுதை –
ஸ்வரூப ரூப குணங்களால் அபரிச்சின்னனாய்
அம்ர்த்த சாகரம் போலே நிரதிசய போக்ய பூதனாய்
இருக்குமவனை –
யரங்க மேய யந்தணனை-
அந்த அம்ர்த சாகரத்தில் நின்றும் ஒரு குமுழி புறப்பட்டு
ஒரு தடாகத்தில் வந்து தேங்கினால் போலே ஆய்த்து
கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிற படி –
பெரிய பெருமாளுக்கு அடி ஷீராப்தி அன்று காணும் பரம பதம் ஆய்த்து
அண்டர்கோன் அணி அரங்கன் -என்னக் கடவது இறே –
(கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10–)
அரங்கம் மேய –
பரம பதத்தில் இருப்பு பேருகைக்கு யோக்யதை உண்டு
அவதாரங்களில் தீர்த்தம் பிரசாதிக்கைக்கு யோக்யதை உண்டு –
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது கிளம்போம் என்று கிடக்கிற கிடை இறே –
கல்ப அவசானத்திலும் விஷயம் இல்லாமையாலே போகிற இத்தனை –
அந்தணனை –
தன் வடிவு அழகைக் காட்டி-
அஹங்காரமும் விஷயாந்தர பிராவண்யமும் ஆகிற
அஸூ த்தத்தை போக்கும்படியான ஸூ த்தியை உடையவனை –
(மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதியிலா வென்னைப் போலே
பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னர்
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம் அன்றே–15-)
(சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால்
ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே–16-)
யந்தணர் தம் சிந்தையானை –
ஸூத்தரானவர் உடைய ஹ்ருதயத்தில் நித்ய வாசம் பண்ணுமவனை
கோயில் வாசமும் ராகாதி தூஷிதன் இன்றியே இருப்பான் ஒரு ஸூத்தன் உடைய ஹ்ர்தயத்தை கணிசித்து இறே –
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெல்லாம் –என்னக் கடவது இறே
(நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –64-)
விளக்கொளியை –
தன் வடிவு அழகைக் காட்டி அஹங்காரத்தையும் விஷயாந்த்ர ப்ராவண்யத்தையும் போக்கி விடுகை அன்றியே
நெஞ்சிலே புகுந்து முறை உணர்தினவனை
விளக்கொளியை-
பிரகாசமானவனை –
அதாகிறது –
ஸ்வ ஸ்வரூப -பர ஸ்வரூபங்களையும்
தத் விரோதி ஸ்வ ரூபத்தையும்
விரோதி நிவர்த்தி பூர்வகமாக புருஷார்த்தம் சித்திக்கும் படியான
உபாய ஸ்வ ரூபத்தையும் பிரகாசிப்பிக்கை -என்கை –
(மிக்க இறை நிலையும், மெய்யா உயிர் நிலையும் *தக்க நெறியும், தடையாகித் – தொக்கியலும்*
ஊழ்வினையும், வாழ்வினையும், ஓதும் குருகையர்கோன் * யாழினிசை வேதத்தியல்
ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச் ச பிரத்யகாத்மான
ப்ராப்த்யு பாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்தி விரோதி ச – வதந்தி சகலா வேதா: ஸேதிகாஸ புராணகா: முநயச்ச மஹாத்மாநோ வேதவேதார்த்த வேதிந)
(மேலே ‘திருத்தண்கா‘ என வருகையாலே
இங்கு விளக்கொளியென்றது அத்தலத்து எம்பெருமானாகிய தீப ப்ரகாசனை என்றுங் கொள்ளலாம்;
திருத்தண்கா ‘விளக்கொளி கோயில்‘ என்றே வழங்கப் பெறும்.
இத் தலத்துப் பெருமான் பண்டைக் காலத்தில் சயன திருக்கோலமாக எழுந்தருளி யிருந்ததாகப்
பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தினாலும் அரும்பதவுரையினாலும் மற்றும் சில சாதனங்களாலும் விளங்குகின்றது.)
மரகதத்தைத் திருத் தண் காவில்
திருத் தண் காவில் மரகதத்தை –
அரு மண வனானை-த்வீப விசேஷம் -என்னுமா போலே –
திருத் தண் காவில் மரகதம் -என்கிறார்
(மரகத வல்லித் தாயாருக்கும் மங்களா ஸாஸனம்)
இந்த தீவில் பட்ட ஆனை என்றால் விலஷணமாய் இருக்குமா போலே
திருத் தண் காவில் கண் வளர்ந்து அருளுகின்றவன் உடைய வடிவு என்றால் விலஷணமாய் இருக்கிற படி –
பச்சை மா மலை போல் மேனி -என்கிற வடிவை உடையவர் –
வடதேசத்தின் நின்றும் பெருமாளை அனுபவிக்க வருமவர்கள் இளைத்து விழுந்த இடத்திலே
அவர்களை எதிர் கொண்டு அனுபவிக்கக் கிடக்கிற கிடை –
(விளக்கு ஒளிப் பெருமாள் கிடந்த திருக்கோலம் –
பச்சை வண்ண பெருமாள் மங்களா ஸாஸனம் என்றுமாம்)
வெக்காவில் திருமாலைப் –
திருத் தண் காவில் மரகதம் என்கிற வடிவிலே மினுக்கம் உண்டானாப் போலே யாய்த்து
திரு வெக்காவில் வந்து கண் வளர்ந்து அருளின பின்பு ஸ்ரீயபதித்வம் நிறம் பெற்ற படி —
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும் –
பிராட்டியை திரு மணம் புணர்ந்த மணக் கோலத்தோடு கூட
இருவரும் கிடந்த கிடையாக அருளிச் செய்தார் இறே -கீழே
ஆஸ்ரயண வேளையோடு போக வேளையோடு வாசி அற ஒரு மிதுனமாக ஆஸ்ரயமாய் இறே இருப்பது –
பாடக்-
திரு நாமம் சாத்மித்த படியாலே அவகாசத்திலே கிஞ்சித் கரிக்க பெற்றோமே
என்கிற ப்ரீதி பிரகர்ஹத்தாலே சொல்ல –
கேட்டு –
ப்ரீதி ப்ரேரிதையாய்க் கொண்டு கேட்டு-
சொல்லே என்று சோர்கின்றாள் -என்று முன்பு திரு சொன்ன இடத்தில் கேட்ப்பாரைப் பெற்றது இல்லை –
இப்போது சாம்யை யாகையாலே கேட்பாரைப் பெற்றது என்கிறாள் –
செல்வன் நாரணன் என்ற சொல் கேட்டலும் – என்னுமா போலே –
வளர்த்ததனால் பயன் பெற்றேன் –
இது சொன்ன திரு நாமம் தனக்கு தாரகமாய் இருக்கையாலே உன்னை வளர்த்த பிரயோஜனம் பெற்றேன் என்கிறாள் –
ஆபத் சகனானவன் ஆபத்தை விளைத்துப் போனான்
அத் தசையிலும் நீ ஆபத் சகமாகப் பெற்றேன் என்கிறாள்
வருக வென்று
முன்கை முப்பத்தின் காதமாய் இருக்கிறபடி
மடக் கிளியை
லஜ்ஜா விஷ்டமான கிளி -என்னுதல்-
பவ்யமான கிளி என்னுதல்-
வளர்த்ததனால் பயன் பெற்றேன் என்று –
தன்னோட்டை சம்பந்தத்தை ஔ பாதிகம் ஆக்குவதே –என்றும்
சேஷ பூதரான நாம் ஸ்வரூப ப்ராப்தமான கிஞ்சித் காரத்தைப் பண்ண
உபகாரம் கொண்டால் போலே சொல்லுவதே -என்றும்
லஜ்ஜாவிஷ்டமாய் இருந்தது –
சேஷ பூதன் ஸ்வரூப பிராப்தமான கிஞ்சித் காரத்தைப் பண்ண
தர்மதம் பரிரஷித -என்றான் இறே –
(தர்மதம் பரி ரஷித-பிராட்டியைக் கண்டு வந்து தர்ம கார்யம் செய்து ரக்ஷித்தான் –என்பது-ஏஷ சர்வ ஸ்வ பூதஸ்து பரிஷ்வங்க -என்று-தழுவிக் கொள்ளுவதாக அன்றோ புகுகிறான்
அஹம் ஸஹ ரகு வம்ஸ ஸ லஷ்மணஸ் ச மஹா பல -வைதேஹ்யா -நன்றாக ரக்ஷிக்கப்பட்டோம்
கைம்மாறு கருதாமல் செய்த அறம் -என்று பெரிய உபகாரமாக கொண்டாட -திருவடி வெட்கப்பட்டு இருந்தாரே)
சேஷி பவ்யதையான போது இவள் கொண்டாடப் புக்க வாறே தன்னுடைய சேஷத்வம் தோற்ற
நிப்ர்த ப்ரணத ப்ரஹ்வ-என்கிறபடியே ஒதுங்கின படியை சொல்லுகிறது
(ராம விஜயம் சொல்ல பெருமாள் திருவடியை அனுப்ப –
நிப்ர்த ப்ரணத ப்ரஹ்வ சோ அதிகம்ய -என்கிறபடியே ஒதுங்கின படியை சொல்லுகிறது–
சீதா ராமா தாசன் என்று சொல்லி வணங்கி அடங்கி ஒடுங்கி இருந்தார்
முன்பு வெட்கம்- விநயமாக அடங்கி இருந்தமை காட்டிய இடம் இது)
கை கூப்பி வணங்கினாளே –
அந்த உபகார ச்ம்ர்தியானது அவ்வளவில் பர்யவசியாமையாலே அஞ்சலியைப் பண்ணினாள் –
லஜ்ஜை தன்னையும் கை விட்டது(உதாஸீனமாய் இருந்தது )
அதுக்கு ஹேது என் என்னில் –
வாத்சல்யத்தாலே செய்ததுக்கு வழக்கு பேசக் கடவோமோ என்னும் நினைவாலே
வணங்கினாளே-
அஞ்சலி சாத்மித்தது இறே என்னா -காலிலே விழுந்தாள்-
(முதலில் கை கூப்பி -வணங்கி-அடுத்த -வணங்கி -காலில் விழுந்தாள்)
உடையவர் முதலிகளும் தாமுமாக நீராட எழுந்து அருளுகிற போதை
சமூஹத்தைக் கண்ட ப்ரீதியாலே பெரிய நம்பி தெண்டன் இட
விநயம் பாவிப்போம் ஆகில் தெண்டனை ஸ்வீகரித்தோம் ஆவுதோம் என்று
பேசாதே எழுந்து அருளினார் இறே –
(புத்திரனாகவுமாம், சிஷ்யனாகவுமாம், பகவத் விஷயத்திற்கு உசரத் துணையாகப் பெற்றால் கௌரவிக்க வேணும்
என்னுமிடம் ஈற்றடியால் அறிவிக்கப்பட்டதாயிற்று.
“கணபுரங்கை தொழும் பிள்ளையைப் பிள்ளை யென்றெண்ணப் பெறுவரே“ என்றதும் நோக்குக.
நாம் சொன்னதே இவள் மோஹிக்க ஹேதுவானதே
தெளிந்த காலத்தில் உஜ்ஜீவனமாக கொண்டு இருந்த திரு நாமங்களை சொல்லுவோம்
என்று அடைவே சொல்ல வளர்த்ததனால் பயம் பெற்றேன் என்கிறாள்)
—————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply