ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –1-நிதியினைப் பவளத் தூணை–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

அவதாரிகை-

கிழிச் சீரையோடே தனத்தைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே
தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளை
திரு மந்திர முகத்தாலே காட்டிக் கொடுக்கக் கண்டு
தம்முடைய பூர்வ வ்ருத்தத்தையும்
பேற்றின் கனத்தையும்
அனுசந்தித்துத் தலை சீய்க்கிறார் –

பெரிய திருமொழியில்–
திருப் பிரிதி -தொடங்கி-ஒரு சுற்றம் -அளவும்
உகந்து அருளின தேசங்களை அனுசந்தித்தார் –

ஒரு சுற்றத்துக்கு மேல் -மாற்றம் உள்ள அளவும் -செல்ல
அவதாரங்களின் குண சேஷ்டிதங்களை அனுபவித்து
சம்சார -பரமபத -விபாகம் இன்றிக்கே இவர் ஹ்ருஷ்டராய் இருக்கிறபடியை சர்வேஸ்வரன் கண்டு
சம்சாரத்தில் இருக்கிற படியை அறிவித்தால்
த்வரித்து இருந்தார் ஆகில் கொடு போகிறோம்
இல்லையாகில் க்ரமத்தில் கொடு போகிறோம் என்று
சம்சாரத்தில் இருக்கும் இருப்பை அறிவிக்க-

ஆற்றங்கரை வாழ் மரம் போல் -என்றும்
காற்றைத் திடைப்பட்ட கலவர் மனம் போல் -என்றும்
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போல் -என்றும்
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல் -என்றும்
வெள்ளத்திடைப் பட்ட நரி இனம் போல் -என்றும்
இடையன் எறிந்த மரமே ஒத்திராமே -என்றும்
கூப்பிட்டு –

பெரிய விடாயர் உடம்பிலும் முகத்திலும் நீரை இரட்டிக் கொள்ளுமா போலே பேசி
அனுபவித்து

இது தான் இனிதாய் இவை எல்லாம் உகந்து அருளின நிலங்களை அனுபவிக்கையால் வந்தது-
உகந்து அருளின நிலங்களிலே மண்டினவர்கள் பாக்யாதிகர்
எனறு தலைக் கட்டுகிறார்

——————————————————————

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே-1-

பதவுரை

நிதியினை-(அன்பர்கட்கு) நிதி போன்றவனும்
பவளம் துணை–பவளம் போல் இனியனும் தூண் போல் தாரகனும்
நெறிமையால்–ஒரு நெறிப் பட்டுச் சிந்திக்க வல்லவர்களுக்குப் பரம கதியாயிருப்பவனும்
முன்–முன்பு
கஞ்சன் மாள கண்டு–கம்ஸன் முடிந்து போம்படி செய்து
அண்டம்–உலகங்களை
ஆளும்–ரக்ஷித்தருளினவனும்
மதியினை–(அடியவர்களை எப்போதும்) நினைத்துக் கொண்டே யிருப்பவனும்
மாலை–அடியார் திறத்தில் வியாமோஹமே வடிவெடுத்தவனும்
வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினை–நான் வாழ்த்தி வணங்கும் படியாக என்னெஞ்சிலே வந்து நின்ற பாக்ய ஸ்வரூபியுமான எம்பெருமானை
கண்டு கொண்ட–ஸேவிக்கப் பெற்ற
தொண்டனேன்–அடியேன்
விடுகிலேன்–(இனி ஒரு நாளும்) விட மாட்டேன்.

——-

நிதியினை –
எய்ப்பினில் வைப்பாய் –
இந் நிதி உடையவனுக்கு இடி பட வேண்டாது இருக்கையும் –
உடையவன் காலிலே எல்லாரும் வந்து விழுகையும் –
உண்டு என்ன உயிர் நிற்கையும் –
ஆபத்துக்கு உதவுகையும் –
உடையவன் பெரு மதிப்பன் ஆகையும் –
விற்றும்
ஒத்தி வைத்தும் –
ஜீவிக்கலாய் இருக்கையும் –
இப்படிச் செய்தது என் என்று ஏசாது இருக்கையும் –
ஏவமாதி குணங்களைப் பற்ற –
நிதி -என்கிறார் –

வைத்த மா நிதி -இ றே -(“வைத்த மா நிதியாம் மதுசூதன்“ என்பர் நம்மாழ்வாரும்)
குஹாயாம் நிஹிதம் -என்று பேசப் படுகிற வஸ்து –
குஹை -ஹிருதய கமலம்

நிதியினை-

நாட்டில் காண்கிற நிதி போல் அல்ல –
எல்லா வற்றுக்கும் மேலான நிதி யாயிற்று இந் நிதி
இந் நிதி புதைத்து வைத்து ஆள வேண்டா –
நெஞ்சிலே வைத்து ஆளலாம் –

ஓர் இடத்திலே புதைத்து வைத்து
தேசாந்த்ரத்திலே நிற்கச் செய்தே
விநியோகம் கொள்ள வேண்டினால் உதவாது -அந் நிதி
இந் நிதி -நினைத்த இடத்தே விநியோகம் கொள்ளலாம்

பறித்துக் கொள்வார் இல்லை
பறிக்கத் தான் ஒண்ணாது

அந் நிதி உடையவனை அவசரம் பார்த்து கொன்று பறித்து கொண்டு போவார்கள் –
இந் நிதி உடையவனுக்கு அப்படிப்பட்ட பிரமாத சம்பாவனைகள் இல்லை –

(நிதியே திரு நீர் மலை நித்திலத் தொத்தே–7-1-7)

(ஓம் ப்ரஹ்மவிதாப்னோதி பரம I ததேஷாப்யுக்தா I ஸத்யம்
ஜ்ஞானமனந்தம் ப்ரஹ்ம I யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே
வ்யோமன் I ஸோஅச்னுதே ஸர்வான் காமான் ஸஹ I ப்ரஹ்மணா விபச்சிதேதி II 1.1 II
இறைவனை அறிந்தவன் மிக மேலான நிலையை அடைகிறான். அது பற்றி இவ்வாறு சொல்லப்படுகிறது ‘ இறைவன் உண்மை வடிவினர்; உணர்வு வடிவினர்; எல்லையற்றவர். அனைத்தையும் கடந்தவரான அவர் இதயக் குகையில் வீற்றிருக்கிறார். இந்த உண்மையை உணர்பவன், அனைத்தையும் அறிபவரான அந்த இறைவனை அடைகிறான். அவனுடைய எல்லா ஆசைகளும் நிறைவேறுகின்றன.)

(நிதியானது தன்னை யுடையவர்களை இரவும் பகலுங் கண்ணுறங்க வொட்டாது;
எந்த வேளையில் யார் கொள்ளை கொள்வாரோவென்று துஞ்சாதிருப்பர் நிதியுடையார்;
எம்பெருமானை யுடையவர்களும்படியே,
“கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குமுண்டோ கண்கள் துஞ்சுதலே” என்கிறபடியே
காண்பதற்கு முன்பும், உறக்கமில்லை; கண்டாலும் கையாலே உறக்கமில்லை.)

(நிதியானது ஸித்தாஞ்ஜனமணிந்த சில பாக்யசாலிகளுக்கே கிடைக்கும்;
எம்பெருமானும் பக்தி ஸித்தாஞ்ஜனம் பெற்ற ஆழ்வார்கள் போன்ற சில பாக்யவான்களுக்கே-)

பவளத் தூணை
சர்வத்துக்கும் தான் தாரகனாய் இருக்குமதைப் பற்ற –
தூண் -என்கிறார் –

பவளம் -என்றத்தால்
ஸ்ப்ருஹணீயதயைச் சொல்லுகிறது –

(பனியேய் பரங்குன்றின் பவளத் திரளே
முனியே திரு மூழிக் களத்து விளக்கே
இனியாய தொண்டரோம் பருகு இன்னமுதாய
கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-6-)

தூண் ஆவது -தான் அநேகத்தைத் தரித்து –
தன் கீழே ஒதுங்குவாருக்கு நிழல் கொடுத்து நிற்பது ஓன்று இறே

அப்படியே -தான் எல்லாருக்கும் தாரகனாய்
தன்னை அடைந்தார்க்கு நிழல் கொடுக்கையாலே -தூண் -என்கிறார் –

நெறிமையால் நினைய வல்லார் கதியினை –
நினை தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் -என்கிறபடியே
அடைவு பட நினைக்க மாட்டார்களே -இவர்கள்-
ஆகையால் -நெறிமையால் நினைய வல்லார்-என்கிறார் –

நினைக்க வல்லார்க்கும் நெற்றிக் காக்கும் -அவனுடைய
ஸ்வரூபாதிகள் நினைக்க ஒண்ணாத படி தகையும் -என்றபடி –

(நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2-)

( உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்து உடம்பெலாங் கண்ண நீர் சோர நிற்கை ப்ராப்தமாகையாலே
இவ் வண்ணமாக நினைத்தலே நெறிமையால் நினைத்தலாம்; அப்படி நினைப்பார்க்கு உபாயமாயிருப்பவன் எம்பெருமான் என்க.)

கதியினை –
நினைப்பார்க்கு பரம கதியாம் –
பிராப்யனாம் -என்றபடி –
பரவித் தொழும் தொண்டர் தமக்குக் கதியே -என்னக் கடவது இறே-

(கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு
நிதியே திரு நீர் மலை நித்திலத்தொத்தே
பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக்
கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-7-)

நிதியினை -என்று பிராப்யம் சொல்லிற்று –
கதியினை -என்று பிராபகம் -சொல்லிற்று
நினைக்க வல்லார் -என்கையாலே அதிகாரி ஸ்வரூபம் சொல்லிற்று —

இப்படி உபாய உபேயங்கள் தானே இருக்குமவன்
ஆருக்கு உதவக் கண்டோம் -என்னில் –
கஞ்சன் மாளக் கண்டு –
தந்தை காலில் பெரு விலங்கு தாள வீழ -என்றும்
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய -என்றும் –
ஒருத்தி மகனாய் பிறந்து -இத்யாதிப் படியே –
தன்னைப் பிள்ளையாகப் பெற்றவர்கள் கால் கட்டு அறுத்து –
அவர்களை வாழ்வித்தான் -என்கிறார் –

(தந்தை காலில் பெரு விலங்கு*  தாள் அவிழ நள் இருட்கண்- 
வந்த எந்தை பெருமானார்*  மருவி நின்ற ஊர்போலும்*
முந்தி வானம் மழை பொழியும்*  மூவா உருவின் மறையாளர்* 
அந்தி மூன்றும் அனல் ஓம்பும்*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.)
(தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய    தோன்றல் பின் தமியேன்-தன்
சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப்  பெறும் அளவு இருந்தேனை
அந்தி காவலன் அமுது உறு பசுங் கதிர் அவை சுட அதனோடும்
மந்த மாருதம் வன முலை தடவந்து வலிசெய்வது ஒழியாதே)

கஞ்சன் மாளக் கண்டு –
கம்சனுடைய ஆயுஸ்ஸூ மாளும்படி பார்த்து –

முன் –
அவன் நினைவை அவனுக்கு முன்னே செய்து முடிக்கை –

அண்டம் ஆளும் –
ஜகத்து ஸ நாதம் ஆய்த்து-

அண்டம் ஆளும் –
ராமோ ராஜ்யம் உபாஸித்யா – என்னுமா போலே
நாட்டை ஈரக் கையாலே தடவி
கம்சன் காலத்தில் பட்ட நோவு தீர ரஷித்து –

மதியினை-
கம்சனைக் கொண்டு நாட்டுக்கு களை பிடுங்கின பின்பும்
ஆச்சியும் ஐயரும் என் செய்தார்கள் என்று
ருணம் ப்ரவர்த்தமிவ -என்று படுகிறபடி –

மதியினை –
நம் மதி கேட்டை நினைந்து அஞ்ச வேண்டா –
அஹம் ஸ்மராமி -என்று தான் அவ் விழவு தீர நினைக்கும்-

(மதி யென்பது வடசொல்; புத்தியென்று பெயர்.
“எய்ப்பென்னை வந்து நலியும் போது அங்கேதும் நானுன்னை நினைக்க மாட்டேன்,
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தே னரங்கத் தரவணைப் பள்ளியானே!“ என்றும்
“ஆமிடத்தே யுன்னைச் சொல்லி வைத்தேன்“ என்றும் சொல்லுகிறபடியே
நாம் பாங்காயிருக்கும் போது எம்பெருமானைச் சிந்தித்து வைத்தால் பிறகு நாம் சிந்திக்கப் பெறாத குறை தீர
அவன் தானே நம்மைச் சிந்தித்துக் கொண்டிருப்பவன் என்றவாறு.
ஸ்திதே மனஸி ஸூஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா; விஸ்வ ரூபம் ச மாமஜம் ;
ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம் ;
அஹம் ஸ்மராமி மத் பக்தம்; நயாமி பரமாம் கதிம்;–வராஹ சரம ச்லோகம் இங்கு அநுஸந்திக்கத்தக்கது.
புத்திக்கு வாசகமான மதி யென்னுஞ் சொல் இவ்வளவு அர்த்தத்தைத் தருவது லக்ஷணையால்.
புத்தியின் காரியமாகிய நினைத்தலைத் தானே செய்பவனென்றபடி.)

(ருணம் ப்ரவர்த்த மிவ -என்னுமா போலே ஈஸ்வரன் –
திரௌபதியின் பொருட்டு தூது சென்று-தேருமூர்ந்து -கீதோபதேசம் செய்து -துர்யோதனாதியரை அழித்து –
பாண்டவர்களுக்கு இராஜ்யப்பிராப்தியைப் பண்ணிக் கொடுத்ததும் ஒன்றும் செய்ததாகத் தோன்றவில்லையே
அவன் திரு உள்ளத்திலே -நேரில் சென்று ஆபத்துக்காலத்தில் உதவப் பெறவில்லையே என்ற
குறையே குடி கொண்டு இருந்தது)

(ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி-பெரிய திருவந்தாதி -53)

மாலை –
மாலாய் பிறந்த நம்பி -இறே –
ஆசா லேசம் உடையார் பக்கல் முக்தனாய் இருக்குமவனை –

வாழ்த்தி வணங்கி –
வாய் படைத்த பிரயோஜனம் பெற வாழ்த்தி
அவன் திருவடிகளிலே வணங்கி

என் மனத்து வந்த விதியினை-
ஈழம் கனாக் காண்பர் இல்லை இறே –
கண்டது ஒழிய காணாதவற்றை ஸ்வப்னம் காணார் -என்றபடி –
எல்லா அவஸ்தையிலும் வருவான் அவன் இறே –

அதுக்கடி
விதியினை
அவன் ஸ்வாதந்த்ர்யத்தாலும்
என் கருமத்தாலும்
தவிர்க்க ஒண்ணாத கிருபை –

விதி வாய்க்கின்று காப்பார் யார்
விதி சூழ்ந்ததால்
இவ்வளவான பேற்றுக்கு அடியான தம்முடைய ஸூஹ்ருதத்தைச் சொல்லுகிறார் –

(விதி வாய்க்கின்று காப்பார் யார் -திருவாய்மொழி -5-1-1-
விதி சூழ்ந்ததால் -திருவாய்மொழி -2-7-6-
நன்று சூட்டும் விதி எய்தினம்-திருவாய்மொழி -4-5-7-)

(கேசவன் தமர்க்கு இப்பால் எல்லாம் விதி என்கிறார் பகவத் கிருபையை-நன்று சொல் மாலைகள் சூட்டும் படியான பாக்கியம்)

கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே –
சுவடு அறிவிக்கும் தனையும் இறே வருத்தம் உள்ளது –
பின்னை அத்தலை -இத்தலையாம் -இத்தனை –

கண்டு கொண்ட –
நான் கண்டு கொண்டேன் -என்று திரு அரசடியிலே காட்டிக் கொடுத்த காட்சி
ஏது செய்தால் மறக்கேன் -என்று
மறந்து விட ஒண்ணாதபடி இறே மனசிலே புகுந்து காட்டிக் கொடுத்தது –

கண்டு கொண்ட –
கேட்டது கண்டால் போலே இருக்கிறது காணும்
ஸ்வரூப ஞானம் பிறந்தவர் ஆகையாலே -பண்டே வுண்டாய் –
இழந்தது கண்டால் போலே இருக்கிறது –

அவன் மால்
நான் தொண்டன்
இனி விட உபாயம் உண்டோ –

அவனுக்கு என் பக்கல் ஸ்நேஹம் இல்லை என்ன ஒண்ணாது –
நான் அதிலே ஈடு பட்டிலேன் -என்ன ஒண்ணாது –
ஆன பின்பு -எத்தைச் சொல்லி விடுவது –

(வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினை=
‘வணங்கி‘ என்றதை எச்சத் திரிபாகக் கொள்க:
வணங்க என்றபடி; நான் வாழ்த்தி வணங்கும்படியாக என் மனத்தே வந்து சேர்ந்தவிதியை என்றவாறு.
அன்றியே,
“என் மனத்து வந்த விதியினை வாழ்த்தி வணங்கி விடுகிலேன்“ என்று அந்வயிக்கவுமாம்.
விதி யென்னும் வட சொல் பாக்கியத்தைச் சொல்லும்.
தம்முடைய பாக்கியமே எம்பெருமானாக வடிவெடுத்ததென்கிறார்.
ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை இன்று காணப் பெற்ற அடியேன் இனி விட மாட்டேன் என்றார் ஆயிற்று .)

——————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading