அவதாரிகை –
இப்படி எழுப்பின இடத்திலும் எழுந்திராமையாலே
தங்களுக்கு புருஷகார பூதையான நப்பின்னை பிராட்டியை எழுப்புகிறார்கள் –
அவள் புருஷகாரமாக அவனைப் பற்றுவதே பல வ்யாப்தம் ஆவது-
இதுதான் காக விபீஷணாதிகள் பக்கலிலே காணலாம் –
அவளை அநாதரித்து இவனைப் பற்றின சூர்பணகை அனர்த்தப் பட்டாள் இறே
பெருமாளை ஒழிய பிராட்டியைப் பற்றின ராவணனும் அனர்த்தப் பட்டான்
இருவரையும் பற்றினால் இறே ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே வாழ்வது
அபிநிவேச ப்ரேரிதர்கள் ஆகையால் முந்துறவே கிருஷ்ணன்
பக்கலிலே மேல் விழுந்தார்கள் இவர்கள் .
அங்கு கார்யம் பலியாமையாலே
வழியே போக வேணும் என்று
புருஷகாரத்தில் இழிந்தார்கள் –
ஆஸ்ரயண வேளையிலே இறே க்ரமம் பார்ப்பது
போக வேளையிலே க்ரமம் பார்க்கப் போகாது இறே-
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
பதவுரை
உந்து மத களிற்றன்–(தன்னால் வென்று) தள்ளப்படுகின்ற மத யானைகளை யுடையவனும்
தோள் வலியன்–புஜ பலத்தை யுடையவனுமான
நந்தகோபாலன்–நந்த கோபானுக்கு
மருமகளே–மருமகளானவளே!
நப்பின்னாய்–ஓ! நப்பின்னைப் பிராட்டியே!
கந்தம் கமழும் குழலீ–பரிமளம் வீசா நின்றுள்ள கூந்தலுடையவளே
கடை திறவாய்–தாழ்ப்பாளைத் திறந்திடு’
கோழி–கோழிகளானவை
எங்கும் வந்து-எல்லா விடங்களிலும் பரவி
அழைத்தன காண்–கூவா நின்றனகாண்’ (அன்றியும்),
மாதவி பந்தல் மேல்–குருக்கத்திக் கொடிகளாலாகிய பந்தலின் மேல் (உறங்குகிற)
குயில் இனங்கள்–குயிற் கூட்டங்கள்
பல்கால்-பல தடவை
கூவின காண்-கூவா நின்றன காண்’
ஓடாத–போர்க் களத்தில் முதுகு காட்டி) ஓடாத
பந்து ஆர்விரலி –பந்து பொருந்திய விரலை யுடையவளே!
(க்ருஷ்ணனோடு விளையாடு கைக்கு உபகரணமான) பந்து
உன் மைத்துனன் பேர் பாட-உனது கணவனான கண்ண பிரானுடைய திரு நாமங்களை (நாங்கள்) பாடும்படியாக
சீர் ஆர் வளை ஒலிப்ப வந்து–சீர்மை பொருந்திய (உன்) கை வளைகள் ஒலிக்கும் படி (நடந்து) வந்து
செந்தாமரை கையால்–செந்தாமரைப் பூப் போன்ற (உன்) கையினால்
மகிழ்ந்து திறவாய்-(எங்கள் மீது) மகிழ்ச்சி கொண்டு (தாழ்ப்பாளைத், திறந்திடு’
ஏல் ஓர் எம் பாவாய்
உந்து மத களிற்றன்-
மதத்தை உந்தா நின்றுள்ள களிறு –
மத்த கஜம் போலே இருக்கும் பலத்தை உடையவன் –
ஆனைகளுடன் பொரும்படியான மிடுக்கை உடையவன் -என்கை –
ஓடாத தோள் வலியன் –
பிரதி பஷத்தைக் கண்டால் பிற்காலியாத தோள் வலியை உடையவன் –
நாட்டில் நடையாடாத தோள் வலியன் -என்னவுமாம் –
இப்போது இவர்கள் உடைய மிடுக்கைச் சொல்லிற்று
தங்களுக்கு தனமான இம் மிதுனத்துக்கு
காவல் உண்டு என்று தங்கள் பய நிவ்ருத்திக்காக –
அங்கோர் ஆய்க் குலம் -என்று
கம்சன் படைவீடான ஸ்ரீ மதுரையை நினைத்து
அஞ்சினார்க்கு அஞ்ச வேண்டாத ஊர் இறே –
தோள் வலியன் –
நம்முடைய அநீதிகளை நினைத்தால்
எம்பெருமான் தோள் வலியை நினைத்து பயம் கெடுமா போலே –
கிருஷ்ணன் உடைய தீம்புகளை நினைத்தால்
இவருடைய தோள் வலியை நினைத்து
பயம் கெடலாய் இருக்கை –
கம்சன் மாளிகை நிழல் கீழ் கிருஷ்ணனுக்கு
ஒரு தீங்கு வாராதபடி வளர்க்க வல்ல
மிடுக்கை உடையவர் இறே –
நந்தகோபாலன் மருமகளே –
ஸ்ரீ கும்பர் மகளே என்னாதே -மாமனாரைச் சொல்லிற்று –
அதிலும் இவளுக்கு இது பிரியம் ஆகையாலே
நப்பின்னாய் –
திரு ஆய்ப்பாடியிலே கிருஷ்ணன் பிறந்த பின்பு
ஸ்ரீ நந்த கோபருக்கு மருமகள் இல்லாதார் உண்டோ –
நமக்கென்-என்று பேசாதே கிடக்க –
நப்பின்னாய் -என்கிறார்கள் –
கந்தம் கமழும் குழலீ –
பரிமளம் தான் நிறம் பெறுவது
இவள் திருக் குழலிலே சேர்ந்த வன்று -என்கிறது –
வாசம் செய் பூம் குழலாள் இறே –
சர்வ கந்தா -என்கிறவனுக்கும் நாற்றம் கொடுக்கும்படி
பரிமளம் மிக்க திருக் குழல் –
கடை திறவாய் –
கிருஷ்ணன் உடைய பரிமளமும்
உன்னுடைய பரிமளமுமாகி
தேங்கி நிற்கிற வெள்ளத்தை –
கதவை திறந்து புறப்பட விட்டு
எங்கள் விடாயைத் தீராய் -என்கிறார்கள் –
கிண்ணகத்தை அணை செய்தாப் போலே
அடைத்துக் கொண்டு கிடவாதே
வெட்டி விடாய் –
மத்திய ராத்ரியில் எழுப்புகிறது என் என்ன
போது விடிந்தது -என்ன
விடிந்ததுக்கு அடையாளம் என்-என்ன
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் –
கோழி கூவா நின்றது என்ன –
ஒரு கோழி கூவினவாறே விடிந்தது ஆமோ -என்ன
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் –
துடை தட்டி எழுப்புவாரைப் போலே-
சர்வதோதிக்கமாக கோழி கூவா நின்றன –
உணர்ந்தவை எல்லாம் கூப்பிடும்
பின்னை உறங்குமது தான் சாமக் கோழி -என்ன –
மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண் –
சுக ஸ்பர்சத்தாலே-படுக்கையிலே உறங்குகிறவை உணரும் போது
விடிய வேண்டாவோ -என்ன –
ஒரு குயில் ஒருகால் கூவும் காட்டில் விடிந்ததோ -என்ன
பல்கால் குயில் கூவிற்றுக் காண் –
உன்னுடைய நோக்கும் ஸ்பர்சமுமே தாரகமான குயில்
விடிந்ததும் உன்னைக் காணப் பெறாமையாலே
பல் காலும் கூவா நின்றது
ஒரு குயில் பல் கால் கூவினது பிரமாணமோ -என்ன –
உன்னைக் காணப் பெறாமையாலே
நாக்கு ஒட்டினமை தோற்ற
குயில் இனங்கள் கூவின காண் –
இனம் இனமாக குயில்கள்
பலகாலும் கூவின –
பந்தார் விரலி –
பந்தும் கையும் பொருந்தி இருக்கிறபடி –
நாங்கள் சைதன்யத்தை விட்டு
அசேதனமாக பெற்றிலோமே -அது என் -என்னில்
உன் கைக்குள்ளே கிடக்கலாமே
இப்போது பந்தின் பிரசங்கம் என் என்றால் –
கிருஷ்ணன் உடன் பந்தடித்து -அவனைத் தோற்பித்து
அவனை ஒரு கையாலும் பந்தை ஒரு கையாலும்
அனைத்துக் கொண்டு கிடக்கை –
அவன் இவளுக்கு போக உபகரணம்
பந்து லீல உபகரணம் –
ஒரு கையில் நாரம் ஆய்த்து –
ஒரு கையில் நாராயணன் ஆய்த்து –
ஒரு கையில் விபூதி ஆய்த்து
ஒரு கையிலே விபூதிமான் ஆய்த்து –
இத்தால்
உபய சம்பந்தத்தால் வந்த புருஷகார பாவம் தோற்றுகிறது –
நீங்கள் வந்தது என் என்ன –
உன் மைத்துனன் பேர்பாடச் –
நீயும் அவனும் மைத்துனமை யாடி
ஒருவருக்கு ஒருவர் ஒன்றுக்கு ஒன்பது சொல்லி
இட்டீடு கொள்ளும் போது
உன் பஷத்தில் நாங்கள் நின்று -அவன் தோல்விக்கு வசை பாட
அவனுக்கு உள்ளது எல்லாம் சொல்லிக் கொடுக்கைக்கும்
இருவரும் ஒன்றாய்ச் செல்லுமன்று செல்லவும்
பிரிந்தால் தாய் பஷத்தில் இ றே பிரஜைகள் நிற்பது –
அவள் இங்கனே ஆகில் திறந்து கொண்டு புகுருங்கோள் -என்ன
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப –
நீ தானே வந்து திறக்க வேணும்
செந்தாமரைக் கையால் –
அவனும் ஆசைப் படும் கை –
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்துக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம் என்னும் கை –
அவள் -அப்படியே செய்கிறோம் -என்று
முன் கையில் வளையைக் கடுக்கி திறக்கப் புக்காள் –
சீரார் வளை ஒலிப்ப –
வளைக்கு சீர்மை யாவது -கழலமல் இருக்கை –
சங்கு தங்கு முன்கை நங்கை -இறே –
நாங்களும் அத த்வனி கேட்டு வாழும்படி –
தங்கள் கைகள் -இருக்கையில் சங்கு இவை நில்லா -என்று இறே இருப்பது –
சூடகமே -தோள் வளையே -என்று அவர்கள் இருவரும்
கூட்டிப் பூட்டினால் இறே
இவர்களுக்கு உள்ளது –
இப்பாட்டு எம்பெருமானார் விசேஷித்து உகந்த பாட்டு –
வந்து திறவாய் –
யந்த்ரத்தாலே திறக்க ஒண்ணாது -உன்னுடைய நடை அழகு காணும்படி வந்து திற –
மகிழ்ந்து
அர்த்திகள் வாசலிலே நிற்க வேறு அனுபவம் உண்டோ
என்று தர்மத்துக்கு திறக்கை அன்றிக்கே –
பேறும் உன்னதாக வேணும் –
மகிழ்ந்து –
கிருஷ்ண சம்ஸ்லேஷத்தால் வந்த
ஹர்ஷ பிரகர்ஷம் முகத்திலே தோற்றும்படி என்னவுமாம் –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார்
எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply