ஸ்ரீ திருப்பாவை – உங்கள் புழைக்கடை -ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

போதரிக் கண்ணினாய் -ஞானத்தின் பெருமை
நா உடையாய்-பேச்சின் இனிமை சாமர்த்தியம் -சிஷ்யர்களுக்கு உபதேசிக்கும் தன்மை

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானை– -தாமரை ஸூர்ய சந்த்ரர்களைக் கண்டு இருக்குமா போல்-ஆங்கு மலரும் குவியும்

நாவுடையாய்–வாக் ஸாமர்த்யம் –கடக சமாஸ்ரயணம் பண்ணி -தனக்கும் அவனுக்கும் நமக்கும் ஸ்வரூப லாபம்-

————

அவதாரிகை –
இப்பாட்டில்
உங்கள் பாகவத சமுதாயத்துக்கு எல்லாம் தாமே கடவராய்
இவர்களுக்கு எல்லாம் பகவத் சம்பந்த கடகர் தாமே யாம்படி
ஜ்ஞான பக்தி வைராக்யங்களாலே பூர்ணரான
பாகவதரை எழுப்புகிறார்கள் –

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்

பதவுரை

உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள்-உங்கள் (வீட்டுப்) புழைக்கடைத் தோட்டத்திலிருக்கிற தடாகத்திலுள்ள
செங் கழுநீர்-செங்கழுநீர்ப் பூக்களானவை
வாய் நெகிழ்ந்து-விகஸிக்க,
ஆம்பல் வாய் கூம்பின-ஆம்பல் மலர்களின் வாய் மூடிப் போயின;
(அன்றியும்,)
செங்கல் பொடி கூறை வெண் பல் தவத்தவர்–காஷாய அம்பர தாரகராய் -காவிப் பொடியில் (தோய்த்த) வஸ்திரங்களையும் வெளுத்த
பற்களையுமுடையராய் தபஸ்விகளாயிருந்துள்ள ஸந்நியாஸிகள்,
தங்கள் திருக் கோயில் சங்கு இடுவான்-தமது திருக் கோயில்களைத் திறவு கோலிட்டுத் திறக்கைக்காக-சங்கூதுவத்துக்காக என்றுமாம்-
போகின்றார்–போகா நின்றனர்;(சங்கு -ஸலாகா -சாவி )
எங்களை-எங்களை
முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய்-முந்தி வந்து எழுப்புவதாகச் சொல்லிப் போன நங்கையே!-பரி பூரணையே
நாணாதாய்-(‘சொன்னபடி எழுப்ப வில்லையே!’ என்னும்) வெட்கமுமில்லாதவளே
நா உடையாய்-(இனிய பேச்சுக் பேசவல்ல) நாவைப் படைத்தவளே!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தட கையன்-சங்கையும் சக்கரத்தையும் லாகவமாக தரியா நின்றுள்ள விசாலமான திருக் கைகளை யுடையவனும்
பங்கயக் கண்ணனை-தாமரைபோற் கண்ணனுமான கண்ண பிரானை
பாட-ப்ரீதிக்குப் போக்குவீடாகப் பாடுகைக்கு
எழுந்திராய்-எழுந்திரு;
ஏல் ஓர் எம் பாவாய்!

வியாக்யானம்

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்-
ஆகார த்ரய விசிஷ்டரான உங்களுடைய
விஹார ஸ்தானமான திருமந்த்ரத்தின் உடைய
மத்யே வர்த்திக்கிற நமஸிலே
பாரதந்த்ர்யம் பிரகாசமாய்
ஸ்வ தந்த்ர்யம் தலை மடிந்தது காண் –

(பரனான பகவான் யாருக்குப் பிரதானமோ அவன் பரதந்த்ரன்
தானே தனக்குப் பிரதானமாக கொள்பவன் ஸ்வதந்த்ரன்)

(மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம்
தோட்டம் விகார ஸ்தானம் -நடுவில் -தோட்டத்து வாவியில்-ஆகார த்ரய ஸம்பன்னர் )

(ஓம் நம -அடியேன் அநந்யார்ஹ சேஷ பூதன்
நமோ நம -அநந்ய சரண்யத்வம் -பற்றுதலும் உபாயம் இல்லை-ஆந்தரமாக பாகவத சேஷத்வம் சொல்லும் -சித்திரையில் சித்திரை -மதுரகவி ஆழ்வார் -அனந்தாழ்வான் திருவவதாரம்
நாராயண நம -அநந்ய போக்யத்வம்-நாராயண நம இல்லாமல் நம நாராயண அஷ்டாக்ஷரத்தில் மட்டும் நம மத்யத்தில் -கண்டேன் சீதையைப் போல் )

மந்திர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸ ஸ்வரூபம் கதிர்
கம்யம் சிக்ஷிதமீ க்ஷிதேன புரத பச்சாதபி ஸ்தானத
ஸ்வா தந்த்ர்யம் நிஜ ரக்ஷணம்  சமுசித வ்ர்த்திச்ச நாநியோசித
தச்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ச்வாச்யபி நார்ஹம் தத—அஷ்டஸ்லோகி–2-

மந்திர ப்ரஹ்மணி மத்யமேன – மிகச் சிறந்த மந்த்ரம் ஆகிய திரு அஷ்டாஷரத்தில் இடையில் யுள்ளதாய்

நமஸா –நமஸ் ஆனது

பும்ஸ ஸ்வரூபம் –ஜீவாத்மாவின் ஸ்வரூபமானது

கதிர்கம்யம் சிக்ஷிதமீ க்ஷிதேன புரத பச்சாதபி ஸ்தானத-சிஷிதம் -நன்றாக சிஷிக்கப் பட்டது –

புரத ஈஷிதேன நமஸா –முன்னே யுள்ள பிரணவத்தை நோக்கி அத்தோடு சேர்ந்த தான நமஸ்சினால்-

ஸ்தானத   ஈஷிதேன நமஸா-ஸ்வ ஸ்தானத்திலேயே ஆவ்ருத்தி பெற்ற நமஸ்சினால் –

கதிர் சிஷிதா –உபாயம் சிஷிக்கப் பட்டது –

பச்சாத் அபி ஈஷிதேன நமஸா –பின்னே யுள்ள நாராயண பதத்தோடு சேர்ந்த நமஸ்சினால் –

கம்யம் சிஷிதம் –உபேயம்-பலன் -சிஷிப்பப் படுகிறது –

இத்தால் தேறின பொருள்கள் என் என்னில்

ஸ்வா தந்த்ர்யம்
நிஜரக்ஷணம் -ஸ்வ ரஷணம்
சமுசித வ்ர்த்திச்ச -சேஷத்வத்துக்கு இணங்கின கைங்கர்ய வருத்தி –

நாநியோசித-அன்யோசித   ந -மற்றையோர்க்கு யுரியவர் அல்ல –

தச்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ச்வாச்யபி நார்ஹம் தத-தஸ்ய ஹரே ஏவ -அந்த எம்பெருமானுக்கே உரியவை
இதி -இவ்வண்ணமாக
விவிச்ய கதிதம் –வகுத்துக் கூறப் பட்டதாயிற்று
தத -ஆதலால்
ஸ்வஸ்ய அபி அர்ஹம் ந – கீழ்ச் சொன்ன மூன்றும் அந்யருள் அந்ய தமனான தனக்கும் சேர்ந்தவை அல்ல -எனபது தேறிற்று –)

செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்-
ராக பிரயுக்தமான சேஷத்வ ஜ்ஞானம் உடைய
மந்த ஸ்மிதம் உடையரான
பிரபன்ன அதிகாரிகள்(தவத்தவர்)
தங்கள் தங்கள் எம்பெருமான் சந்நிதியிலே
திருவாராதனம் பண்ணுகைக்குப் போந்தார்கள் –

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் எழுந்திராய் –
எங்களை எல்லாம் நாங்கள் அபேஷிப்பதற்கு முன்னம் ஞானிகள் ஆக்கும்படி
ஸ்ரீ ஸூக்திகளை அருளிச் செய்யும் பூர்த்தியை உடையவரே -எழுந்திராய் –

(அஞ்ஞான அந்தகாரம் போக்குவதே எழுப்புவது-அபேஷா நிர்பேஷமாக- தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் ஆழ்வாருக்கும் மாறன் அடி பணிந்த உடையவருக்கும் உண்டே)

நாணாதாய் –
சொல்லும் செயலும் ஒத்து இராதார்க்கு
நாணமும் இன்றிக்கே ஒழிவதே

இப்படி என்னை ஷேபித்துக் கொண்டாகிலும்
என் பக்கல் சாபேஷராய் வருவது என்ன –

நாவுடையாய்-
வாக் மாதுர்யமுடையவரே
நீர் அஹ்ருதமாய் சொல்லிலும்
பேச்சின் இனிமையைப் பார்த்தால்
ஸ்வதஸ் சர்வஞ்ஞனான ஈஸ்வரனுக்கும் இது சஹ்ருதயம்
அவசியம் கர்த்தவ்யம் -என்னும்படியாய் இருக்கை –

(கௌசல்யா லோக பர்த்தாரம் -அந்த லோகத்தில் நானும் ஒருத்தி அன்றோ -சீதா பர்த்தா -ரக்ஷிக்கா விடிலும் இதுக்காகவாவது ரக்ஷிக்க வேண்டாமோ
நம்மிடையே சேரவே அவளுக்கு பிரியம் –மதுரா மதுரா லாபம் -வாக்மீ ஸ்ரீ மான் -சொல்லின் செல்வன் –வாசா தர்மம் அவாப்நோதி -சேர்த்து வையும் )

மநஸ்விநீ கௌசல்யா லோக பர்த்தாரம் யம் சுஷீவே-நாட்டில் பெண்கள் ‘இங்கு இருக்கும் நாள்களுக்கு நமக்கு ரக்ஷகனாய்ப்
பின்பு நரகத்தில் புகாதபடி விலக்குவதற்கும் ஒரு பிள்ளை வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெறுவர்கள்;
அங்ஙன் அன்றிக்கே, என் மாமியார் தன் நெஞ்சில் உண்டான பரந்த நோக்கத்தாலே,
‘உலகத்துக்கெல்லாம் ரக்ஷகனாக வல்லான் ஒரு பிள்ளையைப் பெற வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெற்றார்;
அவர் நினைவு தப்பலாமோ? அந்த உலகத்துக்குள்ளே இருக்கிற ஒரு பெண் அல்லளோ நான்.
இனி, ‘நாட்டில் பெண்கள் கணவன்மார்கள் சமர்த்தர்களானபோது ஆதரித்தும்,
சமர்த்தர்கள் அல்லரானபோது உபேக்ஷித்தும் போரக்கடவர்களாய் இருப்பர்கள் என்பது ஒன்று உண்டு;
நீ எல்லா நிலைகளிலும் அவரை ஆதரித்துப் போருவாய்’ என்று அவர் என்னைக் குறித்துச் சொல்லிவிட்டார்;
நானும் அப்படியே செய்து போராநிற்க, கிண்ணகத்தில் குமிழிக் கீழே சாவி போமாறு போலே,
தாம் என்னுடைய ரக்ஷணத்தில் நெகிழ நின்றது அவர் நினைவு குறைவுபட்டது ஆகவோ என்று சொன்னேன் என்று சொல்லு.
தம் மம அர்த்தே சுகம் பிருச்ச – எங்களுடைய ரக்ஷணத்துக்கு நாங்கள் பிரார்த்தித்துப் பெற வேண்டுவது ஒன்று இல்லையே அன்றோ,
அதுவும் அவர் நினைவில் உண்டு ஆகையாலே; இனி, கிரமப் பிராப்தி பற்றாமையால் உள்ளதே அன்றோ இப்போது படுகிறது.
தாம் உளராக எங்களுடைய ரக்ஷணம் தப்பாதே அன்றோ; ஆனபின்பு, தம்முடைய உண்மையை ஆகாசிக்கையன்றோ இனி எங்களுக்கு உள்ளது;
ஆகையாலே, அங்குத்தைக்கு ஒரு குறையும் இல்லையே என்று கேட்டேன் என்று சொல்லு.
சிரசா அபிவாதய ச-நாட்டார் அளவு அன்றிக்கே, தாம் விசேடித்து என்னைக் கைப் பிடிக்கையால் உண்டான வாசியை
யான் பெறாத பின்பு, நாட்டாரைப் போலவாகிலும் பெறக் குறை இல்லை அன்றோ.
இனி நாட்டர் பெறுவது பெறப் பார்த்தால், அவர்கள் தம் பக்கல் செய்யுமத்தையும் செய்யவேணுமே அன்றோ;
ஆனபின்பு, நான் என் தலையாலே தம் திருவடிகளிலே வணங்கினேன் என்று நீ எனக்காக அவர் திருவடிகளிலே விழு என்றும் அருளிச்செய்தாள்.”

இதுதான் ஊடுதலால் உண்டாகும் சீற்றம் தலை எடுத்துச் சொல்லுகிற வார்த்தையோ, அபேக்ஷை தோற்றச் சொல்லுகிற வார்த்தையோ’ என்ன,
‘மேலே, திருவடி வந்த போது பிரணய ரோஷத்தாலே வந்த சிவிட்குத் தோற்றச் சொன்ன வார்த்தைகள் அடைய மாறும்படி குளிர அவன் வார்த்தை சொல்ல,
பின்பு திருவுள்ளத்திலே ஓர் ஆறுதல் பிறந்து, பெருமாளைச் சேராமையால் உண்டான குறைபாடும் கிடக்க அருளிச் செய்கிற பாசுரம்’ என்று அருளிச் செய்தார்.)

ஞானம் உண்டானால் செய்வது என் என்ன –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணனையே பாடேலோ –
ஏதத் சாம கானம் ஆஸ்தே ஹாவு ஹாவு என்னும்படி -திருவாய்மொழி பாடுகையே பிரயோஜனம்
எழுந்திராய் -என்கிறார்கள் –

(ராம கிருஷ்ண ஏக தத்வம் என்பதற்கு இதுவே லக்ஷணம் என்று சொல்லவே இவளும் எழுந்து அவர்களோடு கலந்தாள்)(திருவாய் மொழியே சாம கான சமம் )

(இங்கும் அங்கு போலவே இனிமை -திருப்பாலாண்டு பல ஸ்ருதியும் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே -அநித்தியம் என்பதே குறை -ஆகவே மாக வைகுந்தம் போக என்னும் -)

(என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்! யானினச் செய்வதென்? என்நெஞ் சென்னை,
நின்னிடை யேனல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இருகைக் கொண்டு,
பன்னெடுஞ் சூழ்சுடர் ஞாயிற் றோடு பான்மதி ஏந்தியொர் கோல நீல,
நன்னெடுங் குன்றம் வருவ தொப்பான் நாண்ம லர்ப்பா தமடைந் ததுவே.

எம்பெருமான் ஒரு குன்றமாக வருணிக்கிறாள். அது தன்னிலும் இல்பொருளுவமை (அபூதோபமை) உள்ளது.
ஒரு திருக்கையில், திருவாழியாழ்வானையும், மற்றொரு திருக்கையில் திருச்சங்காழ்வானையும்  எந்தி யிராநின்ற
பச்சைமாமலைபோல் மேனியனான எம்பெருமானுக்கு – ஏககாலத்திலே ஸூர்யசந்திரர்களைத் தன்னிடத்திலே கொண்டதொரு பெரியமலை ஏற்ற உவமையாம்.
திருவாழியாழ்வானுக்கு ஸூர்யனோடு ஸாம்யமும் திருச்சங்காழ்வானுக்குச் சந்திரனோடு ஸாம்யமும் ப்ரஸித்தம்.

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து  ——67-)

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading