ஸ்ரீ பெரிய திருமொழி-3-9—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

ஸ்ரீ மணி மாடக் கோயில் நாராயணனே -11-ஆக தன்னைப் பிரித்துக் கொண்டு சேவை –
ஏகாதச ருத்ரருக்குள் சங்கரனாக இருக்கிறேன்
இவர்களுக்காகவும் 11 சேவை
ஸ்ரீ வைகுண்ட விண்ணகரம் -பல விண்ணகரம் திவ்ய தேசங்கள்
வைகுண்டம் விண்ணகரம் இரண்டையும் கொண்ட திவ்ய தேசம் இது ஒன்றே -தனி சிறப்பு
விரஜா நதி தீர்த்தம் இங்கு-இதனாலும் சிறப்பு –
அவயவங்களாகவும் இந்த 11 திவ்ய தேசங்கள் என்றுமாம் –
இனி பத்து திருமொழிகளால்
முதல் மணி மாடக்கோயில் -அடுத்த பத்தும் அங்கங்கள்

வைகுந்த விண்ணகரம்
யோம புரி
ஸ்வேதகேது கார்ய வைகுண்டம் சென்று சேவை கிடைக்காமல்
நாரதர் சொல்லி இங்கு தொழுது
சேவை
வைகுண்ட வல்லி நாச்சியார்
அனந்த -சத்ய வர்த்தக -நித்ய விமானம்

சலம் கொண்ட -பிரவேசம்

அபிமத விஷயத்தை அனுபவிக்கும் இடத்தில்
அவயவங்கள் தோறும் விரும்பி அனுபவிக்குமா போலே –
அங்கு உள்ளது எல்லாம் உத்தேச்யமாய் –

ஆபத் சகனாய் –
சர்வத்துக்கும் ரஷகனாய் –
இருக்கிற சர்வேஸ்வரன் ரஷணத்துக்கு பாங்கான தேசம்
என்று விரும்பி வர்த்திக்கிற தேசம் ஆகையாலே

அங்குண்டான திர்யக்குகளும் அகப்பட
முக்தர் பகவத் அனுபவத்தாலே களிக்குமா போலே
களித்து வர்த்திக்கும் தேசம் ஆன பின்பு
நீயும் உத்தேச்யத்தை பிராப்யி என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

—————————————————

சலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு
தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை
நலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான்
நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி
சண்பகங்கள் மண நாறும் வண் பொழிலி னூடே
வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-1-

இரணியனது-இரணியனுடைய -அது அது தான் அகல் மார்பம் –
புள்ளின் வாய் கீண்டானை போல் -பிளந்து என்று சொல்லாமல் அநாயாசேன செய்தமை
அமுதம் கொண்டுகந்த-குழந்தைக்கு கொடுத்து தாய் உகக்குமா போல் கொடுத்து உகந்தான் என்றுமாம் –
விரோதி நிரஸனம் சொல்லி வண்மை சொல்லி -அழகைச் சொல்லி தனது பேறாகச் செய்தமையும் சொன்னவாறு –
அநந்ய ப்ரயோஜனராய் நித்ய வாஸம் செய்து உகந்து அருளுகிறார் -அங்கு அவாக்ய அநாதர-அன்றோ –
கயல் நீரை விட்டு வயலுக்கு இசலி இசலி -சோலையிலே விளையாடும் -வாசனையே தாரகம் இவற்றுக்கு –

சலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு
சீற்றத்தை இட்டாயிற்று வகுத்தது-( அடையாளமே சீற்றம் )
சீற்றத்தை உடையனாய் இருக்கிற ஹிரண்யனுடைய –
வர பலத்தாலே திண்ணியதாய் அகன்ற மார்வைத்
தன்னுடைய சீற்றத்தைக் காட்டி
வெதுப்பி பதம் செய்யப் பண்ணி
பின்னை அனாயாசேன கிழித்து –

தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை-
ஒருவரால் பரிச் சேதிக்க ஒண்ணாத கடலை ( அஷோப்யம் -சமுத்திர இவ காம்பீரம் பெருமாளுக்கு )
சூத்திர பதார்த்தங்களைப் போலே பரிச்சேதித்து கடைந்து
அதில் நல் உயிரான அமிர்தத்தை வாங்கி
நம்மை ஆஸ்ரயித்த தேவ ஜாதி கார்யம்
தலைக் கட்டப் பெற்றோம் இறே -என்று
அது பெற்றால் அவர்களுக்கு வரும் இன்பத்தை தான் உடையேனாய் –
அவ் வமுதத்தை புஜித்தாருக்கு கழியக் கண்ட ஜராதிகளை தான் உடையனாய் இருக்கிறவன்-
(காளைப்பருவமும் இவனுக்கே -மூப்பு தொலைந்து )

நலங்கொண்ட கரு முகில் போல் திருமேனி அம்மான்-
அம்ருதத்தை நாய் கிடாய் -என்னும்படியான வடிவை உடையவன்
தூம ஜோதி என்கிற படியே
உபசயாத்மகமான வடிவை உடைய மேகம் ( பலவும் சேர்ந்து வளர்ந்து மங்கி )
திரு மேனிக்கு ஒப்பாக போராமையாலே
வ்யாவ்ருத்தமான அழகை  உடைத்தாய்
ஸ்ரமஹரமாய் இருப்பதொரு மேகம் போலே திரு மேனியை உடையவனாய்
(நீல தோயதா மத்யஸ்தா –இத்யாதி -ஆதி காரணம் -சர்வேஸ்வரன் -வேதாந்தம் )

அத்தாலே
பிரமாதம் புகுந்த பின்பு ஹிரண்யாதிகளை நிரசிக்கவும்
கடல் கடையவும் ஒண்ணாது என்று ஏற்கவே வந்து பெரிய ஹர்ஷத்தோடு
நித்ய வாசம் பண்ணுகையாலே ஆஸ்ரிதருக்கு இனிதான தேசம்

சலம் கொண்டு இத்யாதி –
அதுக்கு ஹேது இருக்கிறபடி
சங்கர்ஷாதி புஷ்பிதா – என்கிறபடி இசலி இசலி மலரைச் சொரிகிற
மல்லிகை அழகிய செருந்தி அப்படிப் பட்ட செண்பகம் இங்கே
பரிமளத்தைப் புறப்பட விட-

பொழில் இத்யாதி –
நீரிலே கிடந்தால் மிடுக்கை உடைத்தாய்
கரையிலே எறினால் அது அன்றிக்கே இருக்கக் கடவ
மத்ச்யங்கள் ஆனவை அந்த நீர் தான் உறுத்தும் படி
அதில் காட்டிலும் நில மிதி தான் நன்றாய் இருக்கையாலே
அச் சோலையிலே மணத்தை ஆக்ராணம் பண்ணி
அத்தாலே மிடுக்கு உடைத்தாய்
முக்தர் பகவத் அனுபவம் பண்ணி
அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்குமா போலே
கயல்கள் ஆனவை அங்கே இங்கே துள்ளி விளையாடா நின்றுள்ள
திரு நாங்கூர்-
(வைகுந்த விண்ணகரம் தானே இதுவும் கயல்கள் முக்தர்கள்)

—————————————————

கீழ்ப் பாட்டில் பிரஸ்துதமான ஸ்ரீ நரஸிம்ஹ விருத்தாந்தம் விஸ்தாரமாக இதில் –
மனனம் பண்ணுவது மனம்-கீழ்ப் பதிகத்தில் – வணங்கு என் மனனே -இதில் மட நெஞ்சே –
நெஞ்சு இடைவிடாமல் சிந்திக்கும்

திண்ணிய தோர் அரி யுருவாய்த் திசை யனைத்தும் நடுங்கத்
தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை
நண்ணி அவன் மார்வகலத்து உகிர் மடுத்த நாதன்
நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
எண்ணில் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும்
ஏழு இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர்
மண்ணில் மிகு மறையவர்கள் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-2-

நண்ணி -நம்பியை நண்ணி –காலை மாலை நண்ணி மலர் இடுமா போலே இவன் ஹிரண்யன் உள்ள இடம் நண்ணி
எண்ணில் மிகு–எண்ணிக்கைக்கு மிக்கு -நினைவுக்கு அப்பால் –
கேள்விகளும்–அர்த்த ஸ்ரவணமும்
பெரும் குணத்தோர்-ஆத்ம குண சம்பன்னர் -கற்று அதற்குத் தக்க நடப்பவர்-நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் –

திண்ணிய தோர் அரி யுருவாய்த் திசை யனைத்தும் நடுங்கத் தேவரொடு தானவர்கள் திசைப்ப
ஹிரண்யன் உடைய சீற்றம் என்றால் பிற்காலியாத படியான
நரசிம்ஹமாய்
திக்குகள் எல்லாம் அஞ்ச
அனுகூல பிரதிகூல விபாகம் இன்றியே
எல்லாரும் ஒக்க கலங்க

இரணியனை நண்ணி —
எரிகிற பெரு நெருப்பிலே சென்று கிட்டுவாரைப் போலே
க்ரூரரான பையலைத் தீண்டி-

அவன் மார்வகலத்து உகிர் மடுத்த –
போக்குத் தேடி இடம் காணாமையாலே சுழித்து
வருகிற ருதிர வெள்ளத்துக்கு ஒரு வழி கண்டு விட்டால் போலே
அவனுடைய பரந்த மார்விலே ஒரு திரு உகிரை ஊன்றி அவனை அழியச் செய்து-

நாதன் நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில் –
தன்னுடைய ஈஸ்வரத்வத்தை நிலை
நிறுத்தினவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-

எண்ணில் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழு இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர்
எண்ணிறந்து இருப்பத்தாய் –
நிர்தோஷத்வாதிகளால் வந்த நிரவதிக சம்பத்தை உடைத்தாய்
அவ்வழியாலே அழகு விளங்கா நின்றுள்ள வேதமும்
சப்த ஸ்வரங்களும்
அங்கங்களும்
மற்றும் உள்ளவற்றால் வரும் கேள்விகளும்
இவற்றை வாசனை பண்ணி அத்தால் வந்த ஆத்ம குணங்களால் மிக்கு இருப்பாரே –

மண்ணில் மிகு மறையவர்கள் மலி வெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –
பூமியில் இதுக்கு இவனே கடவான் இதுக்கு இவனே கடவான்
என்னும்படி சமைந்த பிராமணர் நெருங்கி வர்த்திக்கிற தேசம்-

————————————————————–

ஒரு சிறுக்கனுக்கு உதவின மாத்திரம் அன்றி
பிரளயத்தில் உதவி
சிவன் சாபம் போக்கி அருளிய சர்வேஸ்வரன்

அண்டமும் இவ் வலை கடலும் அவனிகளும் எல்லாம்
அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும்
முண்ட மது நிறைத்து அவன் கண் சாபமது நீக்கும்
முதல்வனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி
இலைக் கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய
வண்டு பல இசை பாட மயில் ஆலு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-3-

திரு வயிற்றன்-உதாரமான உதரம் -பெரு வயிற்றன் –
முதல்வனவன்-சர்வ காரணம் -சர்வ நியாந்தா –
இலைக் கொடி ஒண் குலைக் கமுகோடு-வெற்றிலைக் கொடிகளும் பாக்கு மரங்களும்
வண்டு பல இசை பாட மயில் ஆலு-இயற்க்கை பாடலும் ஆடலும் கச்சேரி –
வண்டு பாட ஹம்சம் தாளம் கோகிலம் பாட மான் கணங்கள் -மது சொரிய ஆனந்தக் கண்ணீர் -வநாத்ரி

அண்டமும் இவ் வலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுது செய்த திரு வயிற்றன்
அண்டமும் இந்த லோகத்தை சூழப் போந்து
அலை எறிகிற அண்ட தீபங்களையும் எல்லாம் அமுது செய்த
திரு வயிற்றை உடையவன் –

அரன் கொண்டு திரியும் முண்ட மது நிறைத்து அவன் கண் சாபமது நீக்கும் முதல்வனவன்-
சாபத்தாலே உபஹதனாய் இருக்கிற ருத்ரன்
கொண்டு திரிகிற தலையோட்டை நிறைத்து
அவனை ஒரு நாளும் விடாதே இருக்கிற சாபத்தைப் போக்கி

மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில் –
இப்படி சர்வ நியந்தாவானவன் வர்த்திக்கிற கோயில்
(கீழே நாதன் -இதில் முதல்வன் )

எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி இலைக் கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய
வண்டு பல இசை பாட மயில் ஆலு நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –
பார்த்த பார்த்த இடம் என்னும் பெரிய செந்நெல்
முக்தர் பஞ்ச விம்சதி கார்ஷிகராய் இருக்குமா போலே
இளைத்தாய் இருக்கிற தெங்கு கதலி வெற்றிலைக் கொடி
அழகியதாய்க் காய்த்த கமுகுகளோடு கூடி
ஒன்றோடு ஓன்று இசலி -சம்ருத்தியைச் சுரக்க
இவற்றிலே புக்கு மது பானம் பண்ணி
உள்ளு புகுந்த த்ரவ்யம் இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே
வண்டுகள் ஆனவை பல இசைகளையும் பாட
அவற்றைக் கேட்டு மயில்கள் ஆடா நின்றுள்ள
திரு நாங்கூர்-

———————————–

நாட்டாரை ரஷித்த அளவு அன்றிக்கே
நித்ய அநபாயினிக்கு உதவி
அவள் பிரிவினுக்கு காரணம் இதில்
உதவியது அடுத்து
இப்படி ஸ்ரீ ராம அவதாரம் இரண்டு பாசுரங்கள்
மேல் மூன்று பாசுரங்கள் ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் –

கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி
தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சிலை இலங்கு மணி மாடத்துச்சி மிசைச் சூலம்
செழும் கொண்டல் அடடிரியச் சொரிந்த செழு முத்தம்
மலை இலங்கு மாளிகை மேல் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-4-

கலை இலங்கும் அகல் அல்குல் கமலப்பாவை–4-4-5- பிராட்டியை –
இங்கு சூர்ப்பணகை -கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடி-
அங்கை-அம் கை -அக்கை என்றுமாம்
சிலை-விக்ரகம் வில் ஒளி -மூன்றும் -இங்கு ஒளி –

கலை இத்யாதி
விளங்கா நின்றுள்ள பரியட்டத்தை உடைத்தான
அகன்ற நிதம்ப பிரதேசத்தை உடையளாய்
கொண்டு தோற்றின ராஷசியைக் கொண்டாடும்படி இருக்கிற பெண்ணை –
தனக்கு ஒரு பரியட்டமும் பெருமையும் உடையளாய்
வந்து தோற்றினாள் ஆயிற்று –
அவள் ஏறிட்டுக் கொண்டு வந்த வடிவைப் போக்கி
தானாம்படி பண்ணி விட்டான் ஆயிற்று

கதறி இத்யாதி
அநந்தரம் அவளும் கூப்பிட்டு கொண்டு
தலையிலே கையை வைத்து
மலையின் மேலேயான இலங்கையிலே புகும்படி பண்ணின
தோள் வலியை உடையவன் நித்ய வாசம் பண்ணுகிற கோயில்

சிலை இத்யாதி
சிலை என்று வில்லுக்கு பர்யாய சப்தமாய்
வில் என்று ஒளியாய்
ஒளி விளங்கா நின்றுள்ள மணி மயமான மாடங்களின்
உச்சி மேலே உண்டான -சூலமும்
இதாயிற்று அவ் ஊரில் கிருஹங்களின் அடைய இருக்கும்படி –

மேகங்கள் ஆனவை கடலிலே போய் புக்கு முத்தை அடைய
வாரிக்கொண்டு நகர்ந்து நகர்ந்து நடனமாட்டாதே வரும்

மாளிகைகளில் சூலங்கள் ஆனவை இவற்றின் உடைய கீழ் எயிற்றை போழும்
முன்பே தொட்டார் போலே தோஷமாய் இருக்கிறவை முத்தைச் சொரியும்

மலை இலங்கு மாளிகை மேல் மலிவெய்தும்-
அப்போது ஒரு மலை மேலே மலை செய்து வைத்தாப் போலே
யாயிற்று குவித்துக் கிடப்பது-

——————————————————————–

கீழே ஆபத்து வந்த சரித்திரம்
யதிருச்சியா வந்தவள் -ஹாஸ்ய ரசம் வால்மீகி
உருவம் பார்த்து ஒப்பிட்டு -குழல் -இடை -உருவம் மாற்றி
இதில் பிராட்டிக்கு உபகாரம்

மின்னணைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை
வேந்தன் முடி யொருபதும் தோள் இருபதும் போய் உதிர
தன்னிகரில் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை
செங்கழு நீரொடும் இடைந்து கழனி திகழ்ந்து எங்கும்
மன்னு புகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-5-

உதிர-ச சகலமாக நூறு நூறாக உதிர
சேல் கயல்கள் வாளை-மூன்று வகை மீன்கள்

மின்னணைய நுண் மருங்குல் –இத்யாதி
மின் போலே இருக்கிற நேரிய இடையை உடையளாய்
மிருது ஸ்வ பாவையாய் இருக்கிற பிராட்டிக்காக
இலங்கைக்கு நிர்வாஹகனாய் இருக்கிற ராவணன் உடைய பத்துத் தலையும்
இருபது தோளும் போய் உதிரும்படியாக
தனக்கு ஒப்பு உண்டாகிலும் உபமான ரஹிதமாய் இருக்கிற வில்லை வளைத்து
அன்று இலங்கையை பொடி படுத்திய தோள் மிடுக்கை உடைய

பிராட்டிக்கு பண்ணின வியாபாரத்தை
ஆஸ்ரிதர் எல்லாருக்கும் ஒக்கப் பண்ணினது போலே
அவன் பிரீதியோடே வர்த்திக்கிற தேசம் ஆகையாலே
கண்டார்க்கு எல்லாம் இனிதாமோபடி இருக்கிற தேசம்

செந்நெல் -இத்யாதி
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை
செங்கழு நீரொடும் இடைந்து கழனி திகழ்ந்து எங்கும்
மன்னு புகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே
இது வாயிற்று கழனியான பிரதேசம் அடைய இருக்கும் படி –
செந்நெல் உடன் தாமரை சேல் கயல்கள் வாளை செங்கழு நீர் உடன்
மிடைந்து விளங்கா நிற்கும் ஆயிற்று வயல் அடைய –

மன்னு புகழ் இத்யாதி
இது வாயிற்று ஸ்த்தலமான பிரதேசம் இருக்கிற படி
நித்யமான புகழை உடையராய் இருக்கிற ப்ராஹ்மனர் மிக்கு இருக்கிற –

இது வாயிற்று ஊரும் பிடாகையும் -வயலும் -இருக்கிறபடி-( இரண்டுமே செழித்து இருக்குமாயிற்று )

—————————————————————-

நரசிம்ம
பிரளய ஆபத்தில் உதவிய
ராம அவதாரம்
ஆழ்வார்களை ஈடுபடுத்தும் கிருஷ்ண அவதாரம் இது முதல் மூன்று பாசுரங்கள்

பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய
பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு
திண்மை மிகு மருதொடு நற் சகடம் இறுத்து அருளும்
தேவனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
உண்மை மிகு மறையொடு நற் கலைகள் நிறை பொறைகள்
உதவு கொடை என்று இவற்றின் ஒழிவில்லா பெரிய
வண்மை மிகு மறையவர்கள் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-6-

நற் சகடம்-எடுத்த கார்யம் முடிக்க வல்ல நன்மை -விபரீத லக்ஷணம் -திருவடி ஸ்பர்சம் பெற்ற நன்மை

பெண்மை இத்யாதி –
நாரீணாம் உத்தமையான யசோதை பிராட்டி வடிவைக் கொண்டு வந்த பூதனையை
பெரிய பேயின் வடிவை உடையவளாய் கொண்டு முடித்து
பிணமாய் கிடக்கும்படியாக அவளை முடித்து –
அசூராவேசத்தாலே மிக்க திண்மையை உடைய மருது
துடங்கின கார்யத்தை முடியத் தலைக் கட்ட வல்ல
சக்தியை உடைய சகடம் -இவற்றை இறுத்து அருளி
விரோதியைப் போக்கப் பெற்றோமே என்று அத்தாலே தீப்தனாய்-(தேவ -தீப்த)
சர்வேஸ்வரன் விரும்பி வர்த்திக்கிற தேசம்

உண்மை இத்யாதி –
யதா பூத தயா வேதங்களோடு அவற்றின் உடைய
நன்றான அங்கங்கள் -இவற்றில் உண்டான வாசனையாலே
வர விட்ட ஆத்ம குணங்களை உடைய
அடக்கம் -ஷமை-அர்த்திகள் அர்த்தித்த போதே அபேஷிதங்களை கொடுக்கை யாகிற ஔதார்யம் –
என்றாப் போலே சொல்லுகிற இவற்றால் ஒழிவு இன்றிக்கே
இருக்கிற உதாரர ஆனவர்களால் மிக்கு இருக்கிற –
வண்மை-ஆத்ம சமர்ப்பணம்

———————————————————–

விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து
வேல் நெடுங்கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய்
உளங்குளிர அமுது செய்து இவ் வுலகுண்ட காளை
உகந்தினிது நாள் தோறும் மருவி யுறை கோயில்
இளம்படி நற் கமுகு குலைத் தெங்கு கொடிச் செந்நெல்
ஈன் கரும்பு கண் வளரக் கால் தடவும் புனலால்
வளங்கொண்ட பெருஞ் செல்வம் வளரு மணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வண்ங்கு மட நெஞ்சே–3-9-7-

காளை-நவ யவ்வனம் வெண்ணெயும் மண்ணையும் உண்டு
கண் வளர-தூங்க கண்கள் புதிதாக உண்டாக
கால் தடவும் –நீர் காலைத் தடவும் -வாய்க்கால் மூலம் பாயும் நீர் ஸம்ருத்தி –

விளங்கனி இத்யாதி
வத்ஸாசுரனை கொண்டு விளாமாய் நிற்கிற அசுரன் மேலே
விழும்படி எறிந்து
வேல் போலே பரந்த கண்ணை உடையராய் இருக்கிற
இடைச்சிகள் சேமித்து வைத்த தயிரை உண்டு –
வெண்ணெயையும் ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யம்
ஆகையாலே
திரு உள்ளமானது குளிரும்படியாக அமுது செய்து
அநந்தரம் இந்த லோகத்தை அடைய திரு வயிற்றிலே வைத்து
ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்தை பண்ணுகையாலே
இளகிப் பதித்து இருக்கிற-

இளம்படி -இத்யாதி –
இளமையை ஸ்வரூபமாக உடைத்தாய் இருக்கிற
கமுகு –
குலையை உடைத்தாய் இருக்கிற தெங்கு -வெற்றிலை கொடி -செந்நெல்
இனிய கரும்பானது நாள் தோறும் ஒரு கண் வளரும்படியாக கால்
தடவுமாயிற்று புனலுமானது –
நிரவதிக சம்பத்து மாறாதே செல்லுகிற தேசம்-

——————————————————–

ஆறாத சினத்தின் மிகு நரகனுரம் அழித்த
அடலாழித் தடக்கையன் அலர்மகட்கும் அரற்கும்
கூறாகக் கொடுத்தருளும் திரு யுடம்பன் இமையோர்
குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
மாறாத மலர்க்கமலம் செங்கழுநீர் ததும்பி
மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை யடைப்ப
மாறாத பெருஞ் செல்வம் வளரு மணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-8-

ஆறாத சினத்தின் -இத்யாதி
ஒரு கால் ஆறாத -ஆரக் கடவ இன்றிக்கே -சினத்தை உடையவனாய்
வாரா நின்றுள்ள நரகன் உடைய
மிடுக்கை அழித்த யுத்த உன்முகனான
திரு ஆழியைக் கையிலே உடையவன்
பெரிய பிராட்டியாருக்கும் ருத்ரனுக்கும் என்னது என்று
கூறிட்டு அனுபவிக்கும் படி திரு மேனியைக்
கொடுத்துக் கொண்டு இருக்கிற சீலத்தை உடையவன் –
நித்ய ஸூரிகளுக்கு நாதன் ஆனவன்

மாறாத -இத்யாதி –
மாறாத மலரை உடைத்தான தாமரை செங்கழுநீர் இவற்றால்
மிக்கு மது வெள்ளம் இட்டு பாயா
வயலில் உண்டான கர்ஷகர்கள்
பயிர் அழிய வெள்ளம் போம் அளவானவாறே மடைகளை
அடைப்பர்கள்
மாறாத பெருஞ் செல்வம் வளரும்
அங்கே உடைந்தது
இங்கே உடைந்தது கிடாய்
சக்யப் பெருக்கு கிடாய் -என்று கூப்பிடுகிற
ஆரவாரமேயாய் கிடக்கும் ஆயிற்று-

————————————————————-

கிருஷ்ண அவதாரம் சொல்லி
வந்த இடம் பாற் கடல் தானே -அத்தை இதில்
வைகுந்த விண்ணகரம்
யோம புரி
ஸ்வேதகேது கார்ய வைகுண்டம் சென்று சேவை கிடைக்காமல்
நாரதர் சொல்லி இங்கு தொழுது
சேவை
வைகுண்ட வல்லி நாச்சியார்
அனந்த -சத்ய வர்த்தக -நித்ய விமானம்

வங்கமலி தடங்கடலுள் வானவர்களோடு
மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி
எங்கள் தனி நாயகனே ! எமக்கு அருளாய் என்னும்
ஈசனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
செங்கயலும் வாளைகளும் செந்நெல் இடைக் குதிப்பச்
சேலுகளும் செழும் பணை சூழ் வீதி தொறும் மிடைந்து
மங்குல் மதி யகடு உரிஞ்சி மணி மாட நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-9-

வங்கமலி -இத்யாதி
மரக் கலங்களால் குறைவற்று இருக்கிற
பெரிய திருப் பாற் கடலிலே –
மலைக்கு சிறப்பாக ஆனையை இட்டுச் சொல்லுமா போலே
கடலுக்கு சிறப்பாக மரக் கலங்களை இட்டு சொல்லக் கடவதுவே
தேவர்களோடே-சனகாதிகளோடே-புஷ்பாத் உபகரணங்களைத் தூவி
எங்களுக்கு நாதனான சர்வேஸ்வரனே
எங்கள் பக்கலில் கிருபையை பண்ணி அருள வேணும்
என்னும்
சர்வேஸ்வரன் பிரீதி பூர்வகமாக நித்ய வாசம் பண்ணுகிற தேசம் –

செங்கயல் இத்யாதி –
அழகிய கயலும் வாளைகளும்
குளிர்தியைப் பற்ற செந்நெலின் இடையிலே தாவ
சேல்கள் ஆனவை களித்து வர்த்தியா நின்றுள்ள
மருத நிலம் சூழ்ந்து இருக்கும் ஆயிற்று –
தெருவுகள் தோரும்
ஆகாசத்திலே சஞ்சரிக்கிற சந்தரன் உடைய
கீழ் வயிறு தேயும்படியான
மணிமயமான மாடங்களை உடைய –

————————————

சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும்
தாமரைக் கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில்
வங்கமலி கடலுலகில் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில் சூழ்
மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய
வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்க மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள்
தரணியோடும் விசும்பாளும் தன்மை பெறுவாரே–3-9-10-

மலி-திடமான
பரகாலன்-சத்ரு மிருத்யு

ஆஸ்ரித அர்த்தமாக ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு இருக்கிற
புண்டரீ காஷனான சர்வேஸ்வரன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்
மரக் கலத்தை உடைத்தாய் கடல் சூழ்ந்த பூமியில்
சம்ருத்தி விஞ்சி இருக்கிற திரு நாங்கூரிலே
வைகுந்த விண்ணகரிலே கவி பாடிற்று –

கவி பாடினவர் –
மது பான மத்தமாய் உள்ள வண்டுகள் த்வனியா நின்றுள்ள
பொழிலாலே சூழப் பட்ட
திரு மங்கையில் உள்ளாருக்கு பிரதானரான ஆழ்வார்
சத்ருக்கள் உடல் துணியும்படியாக வாள் வீசுகிற பர கால
ஆழ்வார் அருளிச் செய்த
சங்கப் புலவர்கள் திரள இருந்து தமிழ் கொண்டாடப் புக்கால்
இத்தையே கொண்டாடும்படியான தமிழ் தொடை
பத்தையும் வல்லார்கள்
உபய விபூதியையும் தாங்கள் இட்ட வழக்காம் படியான பிரபாவத்தை உடையராய்ப் பெறுவர்-

———-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

சலத்தால் நிலம் கொண்டான் எண்ணி நைவார் காப்பு
உலகுய்க்கும் நான்கை வைகுந்தன் -நலத்தால்
அசித்தும் அடையும் ஆனந்தம் என்னும் நீலன்
கசிந்து அருள் செய் நம் திரு -29-

சலத்தால்-மூவடி நீரொடும் கொண்டதால் ஜலம் என்றும்-கபடம் என்றுமாம்
காப்பு -நைந்து உள் கரைந்து உருகும் அடியார்க்கு அரணாய் நின்று ரக்ஷிக்குமவன்
நம் திரு -ஆழ்வாரே நம் செல்வம் என்றவாறு –

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading