ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -11-20–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

தேவதாந்தரங்களை அனுவர்தித்து பட்ட-அனர்த்தத்தை பரிஹரி என்ன(என்று ஆழ்வார் விண்ணப்பம் கீழே செய்ய )
இப்படி செய்வார் உண்டோ என்னில்-(சக்ரவர்த்தியாக தேவபிரான் நான் நிற்க மற்ற தெய்வம் நாடுவார் உண்டோ என்று அவன் கேட்க )
அவர் (அனைவருமே -தேவர்களும் சம்சாரிகளும் )இப்படி செய்து அன்றோ அனர்த்தப்படுகிறார்

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்———11-

பதவுரை

(பாழும் ஸம்ஸாரிகளானவர்கள்)
அமரக் கடை நின்று–தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று-அமரர்களும் தேவரீர் கடையிலே நின்று பிரயோஜநாந்தரங்களைப் பெற்றுப் போகிறார்களே
நாளும் கழல் தொழுது–நெடுங்காலம் வரையில் (அவர்களுடைய) காலில் விழுந்து
(பரமாநந்தம் பெற மாட்டாமல்)-தேவதாந்தரங்கள் உனது திருவடிகளைப் பற்றி -அதன் பிரபாவம் முழுவதும் அறியாமலேயே -ப்ரயோஜனாந்தரங்களைப் பெற்றுப் போவார்கள் என்றுமாம் -கடலுக்குள் உள்ள திமிங்கலம் போல் அவர்கள் ஆளவந்தார் –
இடைநின்ற இன்பத்தர் ஆவர்–நடுவே கிடக்கிற (ஸ்வர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்;
புடைநின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே–(இவ்வுலகைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியையுடைய ஸர்வேஸ்வரனே!,-இரண்டாலும் திருமேனி -ஸ்வரூபம் இரண்டையும் சொன்னபடி
நின் அடியை–உனது திருவடிகளை
ஓதவல்லாரவர் ஆர்–அநுஸந்திக்கவல்லார் ஆரேனு முண்டோ? (யாருமில்லையே!)

வியாக்யானம் –
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும் இடை நின்ற வின்பத்தராவர் –
தேவதாந்தரங்கள் வாசலிலே நின்று
அவர்களை நாள் தோறும் தொழுது
மத்யம புருஷார்த்தமான சுகத்தைப் பெறுவர் –

புடை நின்ற நீரோத மேனி நெடுமாலே நின்னடியை யாரோத வல்லார் அவர் –
எங்கும் புக்க நின்ற நீரை உடைத்தான கடலிலே நிறத்தை உடைய சர்வேஸ்வரனே
ப்ராப்யமான உன்னுடைய திருவடிகளை அறிந்து (ப்ராபகமாகவும் அறிந்து )ஆஸ்ரயிக்க வல்லார் ஆர்-

(நெடுமாலே-ஸர்வேஸ்வரனே இங்கு -அப்பிள்ளை சர்வாதிகனே என்றும் அபரிச்சேத்யன் என்றும் அருளிச் செய்வார்)

(ந ப்ரஹ்மா ந ஈஸாநா -ஸ்ருதி அர்த்தம் அறியாமல் என்றுமே சாகாது இருப்பவர்கள் என்று தப்பாக நினைக்கிறார்கள் –
பையனை அறுத்துத் தா போல் ஆராதனைக்கு அரியவர்கள் அன்றோ இவர்கள் –
பத்ரம் புஷ்பாம் பலம் தோயம் –ஸ்ரீ கீதை -9-26- என்னுமவனைப் போல் அல்லரே
இடை நின்ற இன்பம் இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் திரிசங்கு சுவர்க்கம் போல் கால்கட்டாகவே இருக்குமே
கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் -முதல் திருவந்தாதி -56
ப்ரஹ்மாவால் இழந்தே போவது
உன்னை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கவும் வழி இல்லாமல்
கழுத்துக்கு கட்டியாயே இருக்குமே
வாஸூ தேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸூ துர்லப-7-19-
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாமே கண்ணன் என்னும் மஹாத்மா கிடைத்தற்கு அரியவர் அன்றோ
கற்பக வ்ருக்ஷத்திடம் கௌபீந பிக்ஷை கேட்டுப் பெறுவாரைப் போலே அன்றோ இவர்கள்
நின்னை விண்ணோர் தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்றும் காணலுமாம் கொலோ என்றே வைகல் காலையும் மாலையும் -திரு விருத்தம் -92-)

————————————————————————–

சிறியார் பெரியார் என்னாதே-சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயியாதார் எவர் –

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்-பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து——12-

பதவுரை

எண்ணில்–(எம்பெருமானை ஆஸ்ரயித்து ஸ்வரூப ஸித்தி பெறுகிறவர்கள் ஆரார்?’ என்று) ஆராயுமளவில்
அவர் இவர் என்று இல்லை–இன்னார் தாம் ஆஸ்ரயிப்பவர்கள், இன்னார் ஆஸ்ரயிக்காதவர்களென்ற ஒருவாசி யில்லை;
அரவு அணையான் பாதம்–சேஷசாயியான அப்பெருமானுடைய திருவடிகளை
வணங்கி–தொழுது
ஏத்தாதார்–ஸ்துதியாதவர்கள்
எவர்–யாவர்? (ஒருவருமிலர்)
பவரும் செழுகதிரோன்–பரவின அழகிய ஆயிரங் கிரணங்களை யுடையவனான ஸூரியனும்
ஒள் மலரோன்–அழகிய (திருநாபிக் கமல) மலரை இருப்பிடமாக வுடைய பிரமனும்
கண் நுதலோன்–நெற்றிக் கண்ணனான ருத்ரனும்
(ஆகிய, நாட்டிலுள்ளவர்களால் ஆஸ்ரயிக்கப்படுகிறவர்களென்று பிரசித்தரான இவர்கள்)
நாளும்–நாள்தோறும்
தொடர்ந்து தொழும் தகையார் அன்றே–அப்பெருமானெழுந்தருளியிருக்கின்ற இடத்தைத் தேடி ஆஸ்ரயிக்கும் ஸ்வபாவமுள்ளவர்களன்றோ?

வியாக்யானம் –

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம் எவர் வணங்கி ஏத்தாதார் –
எல்லாரும் அவனையே ஆஸ்ரயிக்கிறதோ என்னில்
பிரசித்தமான ப்ரஹ்மாதிகளும் அவனைத் தொழும் ஸ்வபாவராய் அன்றோ இருக்கிறது

எண்ணில்-பவரும் செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
பரந்து அழகியதான கிரணங்களை உடைய ஆதித்யனும்
ப்ரஹ்மாவும் லலாட நேத்ரனும்

நாளும் தொடர்ந்து தொழும் தகையார் —
தொழும் ஸ்வ பாவத்தை உடையவர் ஆவர்-

(கீழ்ப் பாட்டில் -நெடுமாலே நின்னடியை யார் ஓத வல்லாரவர் -என்று சொல்லி வைத்து
இதில் -அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்-எவர் வணங்கி ஏத்தாதார்-என்று அருளி இருப்பது முரண் அல்லவோ
எனில் முரண் ஆகாது
சென்ற பாசுரத்தில் பரம புருஷனுடைய திருவடிகளை ப்ராப்யமாக அறிந்து அவனை ஸ்துதிப்பவர்கள் அருமைப்பட்டு இருப்பர் என்று அருளினார்
இப்பாசுரத்தில் இதர பலன்களுக்காக ப்ரஹ்மாதி தேவர்களும் மனிதர்களும் வாசி இல்லாமல் அனைவருமே அவனை ஸ்துதிப்பவர்கள்
ஆகையால் ஒரு முரணும் இல்லை -)

(நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் படைத்தான் -ஸர்வ காரணத்வம் சொல்லி
ஸர்வரும் உன்னை ஆஸ்ரயிக்கிறார்கள் -என்றாலும்
எழுவார் விடைகொள்வாருமே மிக்கு
வைகல் தொழுது உன் இடமே இருப்பார் சிலரே என்கிறார் –

பவான் நாராயண ஸ்ரீ ராமாயணம்
உவராய் வந்து நிற்பார்கள்
அந்திக்காப்பு இடுகிறோம் -)

————————————————————————–

விலஷண அதிகாரம் ஆகில் கிடையாதோ என்னில்-
ஓர் ஆனைக்கன்றோ எளிதாய் தோன்றுகிறது –

(தேவர்கள்-விலஷண அதிகாரம்- அன்றோ பற்றினார் என்று நாம் விலக
ஸ்ரீ கஜேந்திர மோக்ஷம் பற்றி அருள
நாங்கள் விலங்கு இல்லையே என்று யாதானும் பற்றி விலக அன்றோ பார்க்கிறோம்)

தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படரெடுத்த பைங்கமலம் கொண்டு -அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்றுப பண்டு—-13-

பதவுரை

தொடர் எடுத்த மால் யானை–காற்சங்கிலியை முறித்துக் கையிற்கொண்டு பதறியோடுந் தன்மையதான மதயானையானது(ஸ்துதிக்கையே ஸ்வரூபமான துதிக்கை அன்றோ )
சூழ் கயம் புக்கு–(கரைகாண வொண்ணாதபடி) விசாலமாயிருந்த பொய்கையிலே இழிந்து
படர் எடுதுத பை கமலம் கொண்டு–மலர்ந்து ஓங்கியிருக்கிற அழகிய தாமரைப் பூவை (எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதற்காக)க் கையிற் கொண்டு-தொழும் காதல் களிறு அன்றோ
அன்று இடர் அடுக்க–அந்த நிலைமையிலே (முதலையின் வாயிலகப்பட்டு விடுவித்துக் கொள்ள முடியாத) பெருந்துன்பமுண்டாக
அஞ்சி–(செவ்வி யழிவதற்கு முன்னே இந்த மலர்களை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியாமற் போய் விடுமோவென்று) மனம் பதறி,
ஆழியான் பாதம்–(முதலையைத் துணிக்குங் கருவியான) திருவாழியைக் கையிலேந்தின எம்பெருமானுடைய திருவடிகளை (தியானித்து) வணங்கியதனாலன்றோ-நாராயணா மணி வண்ணா என் ஆர் இடரை நீக்காய் –
தான்–அந்த கஜேந்திரம்
பண்டு–முற்காலத்தில்
வானவர் கோன்பாழி–தேவாதி தேவனுடைய இருப்பிடமான பரமபதத்தை
எய்திற்று–அடைந்தது.(ஸ்ரீ கஜேந்திர மோக்ஷம் பிரசித்தம் அன்றோ )

வியாக்யானம் –
தொடரெடுத்த மால் யானை –
வல்லியை முறித்து கையில் கொண்ட ஆனை
மதித்து இருந்துள்ள (மதம் கொண்ட )ஆனை

சூழ் கயம் புக்கு –
பரந்த பொய்கையிலே புக்கு

இடர் அடுக்க அஞ்சி –
முதலையால் வந்த இடருக்கு பயப்பட்டு

படரெடுத்த பைங்கமலம் கொண்டு –
(முன் ஜென்ம வாசனையால்-ச து நாக வர ஸ்ரீ மான் நாராயண பாராயண )படர்ந்து ஓங்கி குளிர்ந்த தாமரைப் பூவைக் கொண்டு

அன்று-ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன் பாழி தான் எய்திற்றுப பண்டு-
(அன்று-க்ருத யுக சரித்திரம் அன்றோ )சர்வேஸ்வரன் உடைய திருவடிகளில் விழுந்து அன்றோ
நித்ய ஸூரிகளோடே கூடி இருக்கிறவனுடைய படுக்கையிலே
(இந்த சரீரம் விட்டு ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்று )ஏறப் பெற்றது-

(கஜ ஆகர்ஷ தீரே –க்ராஹ ஆகர்ஷதே ஜலே -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-46-

நாஹம் கலே பரஸ் யாஸ்யா த்ராணார்த்தம் மது ஸூதந
கரஸ்த கமலாந்யேவ பாதயோ ரர்ப்பிதம் தவ –

அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் –
தர்ம புத்ராதிகளும்
திரௌபதியும்
காகமும்
காளியனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பெருமாளும்
இளைய பெருமாளும்
தொடக்கமானவர்கள்
சரணம் புகுருகையாலே
அதிகாரி நியமம் இல்லை–ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -32-)

————————————————————————-

அவன் படி இதுவான பின்பு (சர்வ சமாஸ்ரணீயன் )-சம்சாரிகளை ஏற்றித் திரியாதே
அவன் திருவடிகளிலே பணிந்து-திரு நாமங்களைச் சொல்லி
உங்களுடைய ஸ்பர்சத்தாலே லோகத்தை-சுத்தமாக்கிக் கொள்ளுங்கோள்-என்கிறார்
அன்றிக்கே
வயிறாகிய பெரும் பதியை உண்டாக்கி என்னவுமாம்

பண்டிப்பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே எண்டிசையும்
பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து—14-

பதவுரை

பேதைகாள்–அவிவேகிகளே!,
பண்டியை–வயிற்றை-அநாதி காலம் இருக்கும் சம்சாரம் ஆக்கி வளர்த்து என்றுமாம் -ஆக்கியவர்-ஸ்ருஷ்டித்த கரம் நான்கு உடையவன் -என்றுமாம்
பெரு பதி ஆக்கி–பெரிய ஊர் போலக் கண்டதையுங் கொண்டு நிரம்பச் செய்து வளர்த்து(பண்டி -பண்டு -யை பண்டு இப் பெரும் பதி ஆக்கி –பண்டியை )
பழி பாவம் கொண்டு–தெரியாமல் விளையுங் குற்றங்களையும் தெரிந்து செய்யுங் குற்றங்களையும் மேன்மேலும் வளர்த்துக் கொண்டு-செய்யாத குற்றத்தை ஏறிட்டு சொல்வது பழி -பண்ணுவதை நிரூபித்து சொல்வது பாவம் என்றுமாம் –
இங்கு–இவ்வுலகில்
வாழ்வாரை–வாழ்கின்ற ஸம்ஸாரிகளை
கூறாதே–புகழ்ந்து பேசுகை தவிர்ந்து,
எண் திசையும் பேர்த்த கரம் நான்கு உடையான்–(உலகளந்த காலத்தில்) எட்டுத் திக்குக்களையும் பேர்த்துப் போடும்படி-வியாபித்து-
விம்மி வளர்ந்த நான்கு திருத் தோள்களையுடையனான பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓதி–இடைவிடாது சொல்லிக் கொண்டு-ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி -ஆண்டாள் சுலபமாக அருளிச் செய்தாள் அன்றோ -ஸ்வயம் பிரயோஜனமாக என்பதால் ஓதி -சொல்லி பாடி என்று இல்லாமல்
திரிந்து–திவ்ய தேசங்கள் தோறும் ஸஞ்சரித்து
தீர்த்தகரர் ஆமின்–(உங்கள் ஸஞ்சாரத்தாலே நாடு முழுவதும்) பரிசுத்தமாம்படி செய்ய வல்லவராக ஆகுங்கோள்.

வியாக்யானம் –
பழி பாவம் கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே
அடி (காரணம்)உண்டாயும்
அடி (காரணம்)இன்றிகே யாயுமான பாபமே

வாழ்வாக இருப்பாரைப் பேசாதே
பழி –பிறரால் ஏற்பட்ட தீமைகள்
பாவம் -புத்தி பூர்வகமாக செய்த தீமைகள்

எண்டிசையும் பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள் தீர்த்த கரராமின் திரிந்து
எட்டுத் திக்கும் விம்ம வளர்ந்த நாலு தோள்களை-உடையவன் உடைய திரு நாமங்களைச் சொல்லி –

பெரும் பதியை ஆக்கி லோகத்தை உண்டாக்கி என்று-அதுக்கு ஆபத்து வர
எண் திசையும் பேர்த்த கரம் நான்கு உடையான் என்று
அவனுக்கு விசேஷணம் ஆக்குதல்
அன்றிக்கே-
பண்டியாகிய வயிற்றைப் பெருக்கப் பண்ணி என்னவுமாம்-

(தீர்த்தம் கரோதீதி தீர்த்த கர -பிறரைப் பரிசுத்தப் படுத்துபவர்

அதி பாதக யுக்தோபி த்யாயன் நிமிஷம் அச்யுதம்
பூயஸ் தபஸ்வீ பவதி பங்க்தி பாவந பாவந
மஹா பாவங்களை செய்தவனாயினும் -அச்யுதனை ஒரு க்ஷணம் நினைத்தாலே மஹா தபஸ்ஸைச் செய்தவனாயும்
தன் ஸம்பந்தத்தாலேயே ஒரு பங்க்தி-வரிசை முழுவதையும் பாவனம் செய்யும் பங்க்தி பாவனர்களையும் பரிசுத்தப் படுபவனாயும் ஆகிறான்

ஞானதோ அஞ்ஞானதோ வா அபி வாஸூ தேவஸ்ய கீர்த்த நாத்
தத் ஸர்வம் விலயம் யாதி தோயஸ்தம் லவணம் யதா
தெரிந்து தெரியாமலோ வாஸூ தேவனை சங்கீர்த்தனம் செய்வதன் மூலம் மனிதனுடைய பாபம் எல்லாம்
தண்ணீரில் உள்ள உப்பு போலவே கரைந்து விடும்

யன் நாம கீர்த்தனம் பக்த்யா விலாயநம நுத்தமம்
மைத்ரேய அசேஷ பாபா நாம் தாதூ நாமிவ பாவக
மைத்ரேயரே -என்னுடைய நாமத்தை அன்புடன் கீர்த்தனம் செய்வது தாதுக்களை அழிக்கும் நெருப்பு போலவே
எல்லா பாபங்களையும் அழித்து ஒழிப்பதாய் இருக்குமது அன்றோ

ஸமா யாலம் ஜலம் வஹ்நேஸ் தமஸோ பாஸ்கர உதயா
சாந்தி கலேர கௌ கஸ்ய நாம சங்கீர்த்தனம் ஹரே
நெருப்பை அணைக்க நீரும் -இருட்டை நீக்க ஸூர்ய உதயமும் போதும் அன்றோ
அதே போலவே கலியின் பாபக் கூட்டங்களை அழிக்க ஹரியின் திரு நாம சங்கீர்த்தனத்தாலேயே இயலும் –
என்று சாஸ்த்ரங்கள் கோஷிக்குமே-

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –பெருமாள் திருமொழி -2-6-)

(மழை மேகம் போல் முதல் ஆழ்வார்கள் மூவரும் எங்கும் சென்று உலகத்தை திருத்தி அருளினார்கள் அன்றோ கொண்டல் அனைய வண்மையாலேயே -)

————————————————————————–

திரு உலகு அளந்தபடி ப்ரஸ்துதம் ஆகையால்–அல்லாத அவதாரங்களிலும்
ஆஸ்ரித அர்த்தமாக மிகைப் பட்ட-மிறுக்குகளை நினைத்து வெறுக்கிறார்

(த்ரிவிக்ரமன் ராமன் கிருஷ்ண -மூன்று அவதாரங்களும் திருப்பாவையில் போல் முன் பாசுரத்திலும் -இப் பாசுரத்திலும் மூன்றும் உண்டே-அருகில் உள்ள அவதாரமான கிருஷ்ணாவதாரம் சொல்லி ராமாவதாரம் –
தேஹ போஷணம் பண்ணும் சம்சாரிகளுக்காகவாச இப்படி அவதாரம் செய்வது -என்கிறார்-இப்படி இரண்டு சங்கதி -)

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய்-புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு—-15-

பதவுரை

வெம் சமத்து–கொடிய (பாரத) யுத்தத்திலே
தேர் கடவி–(பார்த்த ஸாரதியாகித்) தேரை நடத்திக் கொண்டு
திரிந்ததும்–அலைந்ததும்,
அன்று–இராமனாகத் திருவவதரித்த காலத்து
மான்பின் போய்–மாரிசனாகிற மாயமானின் பின்னே சென்று
சீதையை பிரிந்ததும்–பிராட்டியைப் பிரிந்து அலைச்சற்பட்டதும்,
கண்–தரையிலே
பள்ளி கொள்ள–படுத்துக் கொள்ளும்படி
புரிந்ததுவும்–ஆசை கொண்டதும்
(ஆகிய இச்செயல்கள் யாவும்)
நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு–திருவனந்தாழ்வான் மேலே குளிரப் பள்ளி கொண்டிருக்க வேண்டிய பெருமானுக்கு
அழகியதே–ஏற்றவையோ?

கண் பள்ளி கொள்ள —தரையிலே பள்ளி கொண்ட தலை சயனப்பெருமாளை அனுசந்தித்து என்றும்
பெருமாள் தரையிலே பள்ளி கொண்டதுவும் என்றதுவாம்

வியாக்யானம் –
திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி –
யுத்தத்திலே
உடம்புக்கு ஈடிடாதே(ஈடு -கவசம் திருவாய் மொழிக்கு பாதுகாக்கும் கவசம் போல் ஈடு  )
உன்னை அழிய மாறி(ரதியானவன் சாரதி ஆனான் அன்றோ )
படை பொருது -தேர் கடாவித் திரிந்தது -(சித்திரத்தேர் வலவா -மாயப்போர் தேர்ப்பாகனாய் )

அன்று -பிரிந்தது சீதையை மான் பின் போய்-

ரஷிக்கும் இடத்தில் இருவரும் கூட இருந்து-ரஷிக்கப் பெற்றோமோ –

புரிந்ததுவும் கண் பள்ளி கொள்ள அழகியதே –
தரையிலே பள்ளி கொள்ளக் கற்றது

நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு –
திரு வநந்த வாழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளப் பெற்ற சௌவ்குமார்யத்தை
உடையனானவனுக்கு ஜகத் ரஷணம்
சால அழகியதாய் இருந்ததே-

(தேர் கடாவி –
ஆத்மாநம் ரதிநம் வித்தி சரீரம் ரதமேவ ச
புத்திம் து சாரதிம் வித்தி மனஸ் ப்ரக்ரஹ மேவ ச
இந்திரியாணி ஹயாநா ஹுர் விஷயாம்ஸ் தே ஷு கோசரான் –கடவல்லி -1-3-34-
அனைவரையும் நடத்தி செல்பவன் அன்றோ இங்கு ஒரு ரதிக்கு அடங்கி சாரதி யாகிறேனே

ராமாவதாரத்தில்
மா ச லஷ்மண ஸந்தாபம் கார்ஷீர் லஷ்ம்யா விபர்யயே
ராஜ்ஜியம் வா வன வாஸோ வா வன வாஸோ மஹோதய –ஆரண்ய 2-29-
வன வாசமே அரசாள்வதை விட சிறந்ததாகும் என்றானே

மேலும் பிராட்டியைப் பிரிந்து
ராஜ்யாத் ப்ரம்சோ வன வாஸ ஸீதா நஷ்டா ஹதோ த்விஜ
ஈத்ரு ஸீயம் மம அலஷ்மீர் நிர்த ஹேதபி பாவகம் -ஆரண்ய -67-24-
இப்படி வந்த துன்பங்கள் எல்லாம் நெருப்பையும் எரிக்கும்படி அன்றோ)

————————————————————————–

(பர கத ஸ்வீ காரம் அருளிச் செய்ய வந்த பாசுரம்)

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று—–16-

பதவுரை

தனக்கு–சேதநனாகிய தனக்கு
அடிமை–சேஷத்வமென்பது
பட்டது–பொருந்தி அமைந்திருக்கின்ற தென்பதை
தான் அறியான் ஏலும்–தான்தெரிந்து கொள்ள அசக்தனாயிருந்தாலும்-யானே என்னை அறியகில்லாத -அடிமைப்பட்டது -சேஷத்வம் -ஆத்மாவை சேஷத்வமே என்று ஆதரிக்கும்
பூவுக்கு மணம் -ரத்னத்துக்கு ஒளி போல்
(எம்பெருமான் தானாகவே)
மனத்து–மனத்திலே
அடைய–வந்து சேர்ந்த வளவில்-சொத்தை தேடி ஸ்வாமி வந்த அளவிலே —
மாலை–அப்பெருமானை-மால் -ஆஸ்ரித வ்யாமோஹம் -பித்தன்–மால் பெரியவன் கருமை -அழகன் -பாலைக் குடிக்க காலைப்பிடிக்க வேண்டுமோ
வைப்பது–இடங்கொடுத்து வைத்துக்கொள்வது -ஆம்-தகும்;-இத்தால் ஸ்வீ காரத்தில் உபாய பாவத்தைத் தவிர்க்கிறது -அதிகாரி விசேஷணம் இது –
(இவனுக்கு -யானே என்னை அறிய கில்லாமல் இருந்தாலும் -இவ்வளவு ருசிமாத்திரம் உண்டானால் விரோதியைப் போக்கித் தன்னைத் தானே
தந்தருள்வன் எம்பெருமான்; அது எங்ஙனே யென்னில்–ந்யாஸ இதி ப்ரஹ்ம -சரணாகதி பிரபத்தி செயல் அல்ல -அவனே -ஈஸ்வரனே உபாயம் என்னும் திட அத்யவசாயம்-போஜனத்துக்கு ஸூத்து போல் பசி போல்—வைப்பது ஆம் இதுவே பொருத்தம் –பல அனுபவ யோக்யதா ஆபத்வம்-பசி போல் விலக்காமை -வைப்பதாம் -என்கிறது 😉
வனம் திடரை–காடெழுந்து கிடக்கிற மேட்டு நிலத்தை
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்–(பெய்யும் மழைநீர் அப்பால் போகாமல் தடையின்றி வந்து புகும்படி)
ஏரியாகக் குழி வெட்டுதல் செய்யக்கூடுமேயன்றி
மற்று-பின்னும்
மாரி–மழையை
பெய்கிற்பார்–பெய்யும்படி செய்விக்க வல்லவர்கள்
யார்–யாவருளர்? (மழை பெய்ய வேண்டுவது பகவத் ஸங்கல்பத்தாலன்றோ?.)

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
ஸ்வ த்வாத்மா நி சஞ்சதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்
என்னும்படி விசதமாக அறியான் ஏலும்(அறிந்து அனுஷ்டான பர்யந்தமாக செய்து _

மனத்தடைய வைப்பதாம் மாலை –
யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட என்னும்படி யாகிலும்
சர்வேஸ்வரனை (நெஞ்சமே நீள் நகராக -மேல் விழுந்து அவன் வர )ஹிருதயத்திலே வைப்பதாம்

வனதிடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்மாரி யார் பெய்கிற்பார் மற்று –
காட்டில் திடரை கல்லிக் குளமாக்கும் அது ஒழிய
வர்ஷத்தை இவனால் பெய்விக்கப் போமோ

இத்தால்
ருசி மாத்ரம் இவன் தலையிலே உண்டாம் இத்தனை
ஒழிய
ப்ராப்தி இவனால் உண்டாக்கிக் கொள்ளப் போமோ என்றது ஆயிற்று -(பெரிய திருமலை நம்பி நிர்வாஹம் இது -ருசி -குளம் வெட்டுவது -மழை பெய்வது ப்ராப்தி )

அன்றிக்கே
ஏரியாம் வண்ணம் இயற்றுமது
மற்று வர்ஷிப்பிக்குமது
இரண்டும் செய்யப் போமோ -என்னவுமாம்

ருசி உத்பாதகனும் தானே
பிராப்தியைப் பண்ணிக் கொடுப்பவனும் தானே என்னவுமாம்

(ருசியை விளைவிப்பானும் அவனே -கூரத்தாழ்வான் நிர்வாஹம் -அஹம் ஹி ஸர்வ யஞ்ஞானாம்–போக்தா ச பிரபு -செய்யும் கிரிசைகளும் – செய்வார்களைச் செய்வானும் யானே என்னும் -இத்யாதி)

(ருசி ஜனக விபவ லாவண்யம் வைஷ்ணவ வாமனத்தில் பூர்ணம் –திருக்குறுங்குடியில்
ருசி விவசர்க்கு -உதார குணம் -பாதத்தையே சரண் ஆக்கி அருளுபவர் -பிராப்தி வானமா மலை
நடுவில் கடல் ஞாலம் -)

(அவனைப் பெற ருசி ஒன்றே போதும் -முயல வேண்டா -பரகத ஸ்வீ காரத்தின் சிறப்பைத் தெளிவிக்கும் பாசுரம் இது –
ஸ்வத்வ மாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -உடைமையாய் இருக்கை ஜீவாத்மாவின் இடமும் உடையவனாய் இருக்கை பரமாத்மாவிடமும் உள்ளன –
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்பாவஞ்ச ஸதா ஸ்மர –ஆத்மாவின் தாசத்தன்மையும் ஹரியின் ஸ்வாமித் தன்மையும் இயற்க்கை என்பதை எப்போதும் அறிவாயாக
அவனே நெஞ்சமே நீள் நகராகக் கொண்டு வாழ அபிநிவேசத்துடன் வந்து அடையும் போது
திருவாணை இட்டுத் தடுக்காமல் பொருந்து இருக்கும் படி இடம் கொடுக்க வேண்டுமே –
யத்ய தாசாரதி ஸ்ரேஷ்ட தத் ததே வேத ரோஜந -3-21–அறிவாளர்கள் அனுஷ்டிப்பதை அறிவில் குறைந்தவனும் பின்பற்றி அனுஷ்டிக்கிறான்
இவனுடைய விலக்காமையையும் ருசியையும் கொண்டு விரோதியைப் போக்கித் தன்னையே தந்து அருளுபவர் அவன்
ருசி மாத்திரம் -திருமலை நம்பி நிர்வாஹம்
ருசியையும் உண்டாக்கிக் தன்னைத் தந்து அருளுபவன் -ஆழ்வான் நிர்வாஹம்-என் உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே -எல்லாமே அவனாலே –

மனத்தடைய –மேல் விழும் முயற்சி மாலது அவனது-பக்தி உழவன் அன்றோ
வைப்பதாம் –இதுவே நமது கர்தவ்யம்

அருள் மழையைப் பொழிய வரும் போது -அஞ்ஞானம் கர்மா வாசனை போன்ற புதர்களை அழித்து
ருசியாகிய விதையை விதைத்து
அத்தை பேர் அமர் காதல் பின் நின்ற காதல் -கடல் புரைய -அதனிலும் பெரிய அவாவாக்க தனது கல்யாண குணங்களாகிற மழையைப் பொழிந்து
வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த பத்தி யுழவன் பழம் புனத்து -நான்முகன் -23-
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்துவம் ந து குணவ் -ரெங்க ராஜ ஸ்தவம் -2-87-உபாயத்வமும் உபேயாத்வமும் உனக்கு ஸ்வரூப நிரூபனம்
மற்றவை போல் நிரூபித்த ஸ்வரூப குணங்கள் அல்ல-ஞான பலாதி ஆறு குணங்களும் ஸ்வரூப நிரூபக குணங்கள்
பெரிய பெருமாளை நிரூபிக்கவே உபாயத்வமும் உபேயத்வமும் – என்கிறார் பட்டர் -)

————————————————————————–

இவனே ஆஸ்ரயணீயன் என்பான்  என் என்னில்-வேறு ஒருவர் இல்லாமை என்கிறது

மற்று ஆர் இயலாவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை -ஒற்றைப்
பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு—–17-

பதவுரை

வானவர் கோன்–தேவர்கட்குத் தலைவனான இந்திரனும்
மா மலரோன்–(எம்பெருமானது) சிறந்த (திருநாபிக் கமலத்தை இருப்பிடமாகவுடைய பிரமனும்
சுற்றும் வணங்கும் தொழிலானை–பக்கங்களிற் சூழ்ந்துகொண்டு ஆஸ்ரயிப்பதற்கேற்ற சேஷ்டிதங்களை யுடையனான
மாலை–எம்பெருமானை
ஒற்றை பிறை இருந்த செம்சடையான்–ஓரு கலா மாத்திரமான சந்திரனைத் தரித்த சிவந்த சடையையுடைய ருத்ரன்
பின் சென்று–அநுவர்த்தித்து
இரந்து-(பல்லைக் காட்டி) யாசித்து
குறை–தனது குறையை
தான் முடித்து கொண்டான்–தான் நிறைவேற்றிக் கொண்டான்;
(ஆன பின்பு)
இயல் ஆவார்–ஆஸ்ரயிக்கலாம்படி தகுதியுடையவர்
மற்று ஆர்-அந்த ஸர்வேஸ்வரனைத் தவிர வேறு யாவர்?

மற்று ஆர் இயலாவார் –
மற்று ஆஸ்ரயணீயர் ஆவார் ஆர் –

வானவர் கோன் மா மலரோன் சுற்றும் வணங்கும் தொழிலானை –
லோகத்தில் பிரதானனான இந்த்ரனோடு கூடின ப்ரஹ்மாதிகள் இறே
அவர்களும் அவனை ஆஸ்ரயித்து இறே தம்தாமுடைய
அபிமதங்கள் பெறுகிறது
இந்த்ரன் ப்ரஹ்மா நேர் கொடு நேர் ஆஸ்ரயிகப் போகாதே
பாடே பக்கே சென்று வணங்கும் ஆஸ்ரயண பிரகாரங்களை
உடையனாவனை -(தொழிலானை-குண சேஷ்டிதங்கள் உடையவனை )
ஈஸ்வரனுடைய சேஷ்டிதங்களை அவர்கள் சுற்றி-வணங்குவார் என்னவுமாம்

(விரோதி நிரசன சாமர்த்தியம் குணம் -கேசி அழித்தவன்-சேஷ்டிதம்
சர்வ ஆதாரன் குணம் – -கோவர்த்தந தாரி -சேஷ்டிதம் போல்)

ஒற்றைப் பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று –
சடையிலே பிறையைத் தரித்தானாய்
சுக பிரதானான ருத்ரன் பின்னே சென்று -அனுவர்தித்து

மாலை
சர்வேஸ்வரனை

குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு
ஹிருதயத்திலே கொண்டு –
குறைகளை இரந்து
தன்னுடைய அபேஷிதங்களைப் பெற்றான்-

(அபிதஸ் பாவ கோபமம் -அயோத்யா -99-26- சுற்றிலும் தீயைப் போல அணுக ஒண்ணாதவன்
கடிக்கமலத்துள் இருந்தும் காண் கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் -முதல் திரு -56-
பின் சென்று -நேராக விழிக்க ஒண்ணாமையால் என்றும்
நெஞ்சிலே உள்ள துற அகங்காரத்தை விட்டுப் பின் பற்றி அனுவர்த்தித்து -என்றுமாம்
ப்ரஹ்மாதி தேவர்களும் இவனை ஆஸ்ரயித்து குறைகள் தீரப் பெற்றார்கள் -எனவே
இவனைப் போல் ஆஸ்ரயிக்கத் தக்கவர் வேறே யார் என்று கீழோடே அந்வயம்)

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||–ஸ்தோத்ர ரத்னம் -13-

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?

————————————————————————–

இவன் ஜகத் ரஷணம் பண்ணும்படி சொல்லுகிறது-

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு——-18-

பதவுரை

குறள்உரு ஆய்–வாமந ரூபியாய் மாவலியிடஞ் சென்று யாசித்து
உலகம்–பூமி முதலிய லோகங்களை
கொண்டது–ஆக்ரமித்துக் கொண்டதும்,
கோள் அரி ஆய்–மிடுக்கையுடைய நரசிங்கமாகி
ஒண்திறலோன் மார்வத்து–மஹா பலசாலியான இரணியனுடைய மார்பிலே
உகிர் வைத்தது–தனது நகங்களை யழுத்திக் கீண்டொழித்ததும்
ஒருநாள்–ஒருகாலத்திலே
தான் கடந்த–தான் அளந்து கொண்ட
ஏழ் உலகே–எல்லா வுலகங்களையும்
உண்டதுவும்–(பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்துக் கொண்டதும்
(ஆகிய இச் செயல்கள்)
வான் கடந்தான்–ஆகாசத்தை யளவிட்டாலும் அளவிட வொண்ணாத படியுள்ள பெருமையை யுடையவனும்-
தாமரை கண்–செந்தாமரைக் கண்ணனுமாகிய
மால்–எம்பெருமான்
செய்த–செய்தருளின
வழக்கு–நியாயமான செயல்களாம்-பிராப்தம் -சர்வாதிகன் -சர்வேஸ்வரன் -அன்றோ எனவே வகுத்ததே –

கொண்டது உலகம் குறள் உருவாய் –
ஸ்ரீ வாமனனாய் உலகம் அளந்து கொண்டது(ஸகல பலப்ரதன் இரந்து போனது பிராப்தமோ )

கோளரியாய் ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது –
(ஸங்கல்ப மாத்திரத்தாலே அழிக்கும் சக்தனாய் இருந்தாலும் தானே )கை தொட்டு ஆஸ்ரித விரோதிகளை போக்கும்படி (பிராப்தமோ) –

உண்டதுவும் தான் கடந்த ஏழ் உலகே
தன் திருவடிகளிலே அடங்கின
லோகங்களையே திரு வயிற்றில் வைத்ததுவும்

(தன் நிர்மிதா ஜடராதா ச தவ த்ரி லோகீ கிம் பிஷணாதி -வேஷம் போட்டாயே -சாஸ்திரம் ரிஷிகள் பேச அவல் கொடுத்தாய் அன்றோ -கூரத்தாழ்வான்
அளந்த மரக்கால் கொண்டே அளந்து அனைத்தும் உள்ளதா முக்த சிஸூ -)

தாமரைக் கண் மால்
புண்டரீகாஷனான ஈஸ்வரன்(ஆஸ்ரித பக்ஷ பாதி -)

(கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 12 –

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?)

ஒரு நாள் வான் கடந்தான் –
நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகு ஆனவன்
ஸ்வர்க்கத்தை அளந்தவன் என்றுமாம்–(அபரிச்சின்ன ஸ்வ பாவன் -கீழே பார்த்தோம்)

செய்த வழக்கு –
தன்னுடமையை ரஷிக்க பிராப்தம் இறே

(சேஷ பூதனுக்கு கைங்கர்யம் வகுத்தது போல் சேஷிக்கு ரக்ஷணமே பிராப்தம் அன்றோ
அவனுக்கு பரீஷை களே -திரௌபதி கஜேந்திரன் விபீஷணன் -பிரகலாதன் விருத்தாந்தம்)

(தாமரைக் கண் மால் –
ஆஸ்ரித பக்ஷபாதத்தையும்
ஸர்வ ஸ்வாமித்வத்தையும் கோட் சொல்லும் திருக்கண்கள்
வான் கடந்தான் –
அங்குள்ள நித்ய ஸூரிகளாலும் அளவிட முடியாதபடி இருப்பவன்
ஒரு நாள் வான் கடந்தான்
உலகு அளந்த வ்ருத்தாந்தம் என்றும் கொள்ளலாம்
அடியார்களுக்காகச் செய்தவையானாலும் தனது காரியமாகவே உகந்து செய்து அருளினான்
அபி ஷிச்ய ச லங்கா யாம் ராக்ஷ ஸே ந்தரம் வீபீஷணம்
க்ருதக்ருத்யஸ் ததா ராம விஜ்வர பிரமுமோத ஹ
உடைமையை ரக்ஷிப்பது உடையவனுக்கே அன்றோ ப்ராப்தம்)

————————————————————————–

நீ ஜகத் ரஷணம் பண்ணுகிறது பழியாய் விட்டது -(நியாயம் இல்லை என்கிறார் -உனது ஸுகுமார்யத்துக்குச் மார்த்வத்துக்குச் சேராத செயல்கள் அன்றோ-உனது திருமேனி உன்னதே அல்லவே -பக்தா நாம் ப்ரகாஸதே அன்றோ )

(கொண்ட பெண்டிர் மக்களே -உத்தேச்யம் என்று முடித்து -அடுத்த பாசுரம் கொண்ட பெண்டிர் த்யாஜ்யம் என்று மாற்றி அருளிச் செய்தது போல்
வழக்கு பிராப்தம் என்று முடித்து அடுத்த பாசுரத்தில் தகுந்தது அல்லவே என்கிறார்)

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா -குழக்கு அன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே
பார் விளங்கச் செய்தாய் பழி—-19-

பதவுரை

திருமாலே! ; நீ;
(கிருஷ்ண சிசுவாயிருந்த போது-இந் நம்பி பிறந்த ஏழு திங்களில் )
வலி சகடம்-வலிதான சகடத்தை
செற்றாய்–உதைத்து முறித்துத் தள்ளினாய்;
வழக்கு அன்று கண்டாய்–இது உனக்குத் தகுதியன்று காண்;
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா–இது நமக்குத் தகுந்ததே யென்று நினைக்கலாகாது;
(இப்படிப்பட்ட ஸாஹஸச் செயல் செய்ததோடு நில்லாமல்)
குழ கன்று–(அஸுரனான) இளங்கன்றை
தீ விளவின் காய்க்கு எறிந்த–தீய விளங்காயை உகுக்கும் பொருட்டு வீசிப் போட்ட
தீமை–இந்தத் தீம்பான செயல்
பார் விளங்க–பூமியிலே பிரகாசிக்கும்படி
பழி செய்தாய்–தவறு செய்தாய்

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் –
பிள்ளையாய் இருந்து பெரிய சகடத்தை முறித்ததும்
வழக்கு அன்று
அது செய்தோம் இறே என்னில்
இது இறே நானும் வேண்டா என்கிறது

வழக்கு என்று நீ மதிக்க வேண்டா –
இது வழக்கு என்று நீ புத்தி பண்ணி இருக்க வேண்டா(ஸர்வ ரக்ஷகன் செய்தேன் என்றால் -ஆஸ்ரிதர் வழக்காய் இருக்க வேண்டாமோ என்றபடி )

குழக்கு அன்று தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை
அசுரனான கன்றும்
விளாவான அசுரனும்
தன்னிலே ஒத்து உள்ளறிந்த உன்னை நலிந்ததாகில்
செய்வது என் என்று
பயப்படுகிறார் –

திரு மாலே –
இருவரும் கூட இருக்கிறது அன்றோ
தகுவது

பார் விளங்கச் செய்தாய் பழி –
பூமி அடங்கலும் பிரகாசிக்கும் படி பழி செய்தாய்
விபூதியில் ஏக தேசத்தை ரஷிக்கப் புக்கு
அவ் விபூதியையும் அழிக்கப் பார்த்தாய்-

(கதே ஜலே சேது பந்தனம் -பய நிவர்த்தகங்களுக்கு பயப்படுகை -அநிமிஷரை உறகல் என்பவர்கள் அன்றோ
ஆநிரை -விபூதியில் ஏக தேசம் தானே-அவ்விபூதியும் -என்றது உபய விபூதியும் என்றவாறு )

தனக்கு ஒரு ஹானி வந்தால் அவ் விபூதி அழியும் என்றபடி
இது அவன் செய்த பழி யாவது-

(பிறந்த எழு திங்களில் –சேடன் -திரு மறு மார்பன் கிடந்து திருவடியால் -மலை போல் ஓடும் சகடத்தை சாடிய -பெரிய திருமொழி -10-7-9-இங்கும் திருமாலே –
தலை நீர்ப்பாட்டிலே இருந்து சர்வேஸ்வரனுடைய பெருமை எல்லாம் அறியும் பிராட்டியே அஸ்தானே பய சங்கையாலே வயிறு பிடித்தாள்
முலை வரவு தாழ்த்து உதைத்தாய் போலும் -பொன்றச் சகடம் உத்தரித்தாய் புகழ் போற்றி என்ற அநந்தரம்
அதிலும் சாஹசம் மிக்க -கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –
பழி -அவன் புகழ் என்று எண்ணி இருப்பதை பய சங்கையால் பழி என்கிறார் –

மார்பில் கிடக்கிறவர்கள் -மண்ணில் இருப்பவர்கள் வாசி இல்லாமல் இருவரும் தவிக்கும் படி செய்த செயல்கள் அன்றோ -திருப்பாவை வியாக்யானத்தில்
கிருஷ்ணாவதாரத்தில் மாதா பிதாக்கள் சாது இடையர்களாய்
ஊர் இடைச்சேரியாய்
கம்ஸாதிகள் எதிரிகளாய்
ஸ்ரீ பிருந்தா வனத்தில் முளைத்து எழும் பூண்டுகள் எல்லாம் அஸூரர்களாய்
தமையன் ஒரு கணம் தப்பில் தான் பாம்பின் வாயில் விழும் தீம்பனாய்
பூதநாதிகளால் பிறந்த அபாயங்களை ஓர் எல்லை இல்லாமையால் மங்களா சாசனம் ஒழியக்
காவல் இல்லாமையாலே ஆழ்வார்கள் கண்ணனுக்கு மங்களா ஸாஸனம் செய்வதிலேயே மண்டி இருப்பர்கள் என்பர் பட்டர்)

————————————————————————–

ஜகத் ரஷணத்தை அனுசந்தித்து-அவனை ஆஸ்ரயித்தவர்கள் அன்றோ
வாழ்வர்கள் -என்கிறது –

(ஸ்ரீ பாஷ்யம் -கற்று -மாட்டிற்றிலன் ஆகில் -கீழே கீழே போனால் போல் -எல்லா படிகளில் உள்ளாருக்கும் ஒரே பூர்ண பலன்)

பழி பாவம் கை யகற்றிப் பல் காலும் நின்னை
வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ -வழுவின்றி
நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்———–20-

பதவுரை

பழி–அபகீர்த்தியையும்
பாவம்–பாவங்களையும்
கை அகற்றி–நீக்கி
பல்காலும்–எப்போதும்
நின்னை–உன்னை
வழி வாழ்வார்–வழிப்பட்டு -ஸாஸ்த்ர வழியில் பூர்ணமாக -ஆஸ்ரயிக்குமவர்களும்
நாரணன் தன்–நாராயணனான வுன்னுடைய
நாமங்கள்–திருநாமங்களை
நன்கு உணர்ந்து–நன்றாக அறிந்து
வழு இன்றி–இடைவீடின்றி
நன்கு ஏத்தும் காரணங்கள் உடையார் தாம்–அழகாகத் துதிப்பதற்கேற்ற உபகரணங்களை யுடையவர்களும்-அத்வேஷம் ஆபி முக்கியம் பாகவத சமாஹம் போன்ற காரணங்கள்
(ஆகிய இவ்விருகை யதிகாரிகளும்)
வாழ்வராம்–மகிழ்ந்து வாழப் பெறுவர்கள்.
(மாதோ- அசை).ஆச்சர்யம் என்றுமாம்

பழி பாவம் கை யகற்றிப் –
அடி உண்டாயும் அடி இன்றிக்கேயும் உள்ள விரோதங்களைப் போக்கி

பழி
அபுத்தி பூர்வகமாக செய்யும் தப்பு

பாவம்
புத்தி பூர்வகமாக செய்யும் தப்பு

பல் காலும் நின்னை
என்றும் உன்னை ஆஸ்ரயித்து வாழ்வார்

வாழ்ந்தே போவார் வழி வாழ்வார் வாழ்வராம்-
ந ஸூ லப்யதே சுகம் –என்கிறது இவனை ஆகாதே –

(ஸூகம் மேலே ஸூகத்திலே விட வேண்டும் நிர்பந்தம் இல்லை லௌகிகத்தில் -இங்கு அப்படி இல்லையே)

மாதோ –
இது இடைச் சொல்லு(ஆச்சர்யம் என்றபடி )

வழுவின்றி நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
வழு இன்றிக்கே இருக்கிற நாராயணனுடைய திரு நாமங்களை
பக்தியாலே உணர்ந்து நன்றாகவே ஏத்தும்(வழுவின்றி நன்குணர்ந்து–வழுவின்றி நன்கேத்தும்)

காரணங்கள் -தாமுடையார் தாம் –
ஹேதுக்கள் -ஏத்துகைக்கு அடியான பக்தி- ருசி -ஆநு கூல்யம்
பகவத் கடாஷம் -ஸூக்ருதம்(இந்த படிக்கட்டில் எது இருந்தாலும் வாழ்வாராம் )

தாரணங்கள் தாமுடையார் என்ற போது
தாரணம் என்று த்ருதி உடையார் என்றபடி -(தைர்யம் பலசாலி -நாயமாத்மா பல ஹீந -உபநிஷத் -உள்ளத்தில் பலமான உறுதி மஹா விஸ்வாஸம் வேண்டுமே )

சுகத்துக்கு அநந்தரம் துக்கம் என்கிற ந்யாயம்
இங்கு இல்லை யாகாதே என்கிறது –
முடிய வாழ்வேயாய் இருக்கும் பகவத் சமாஸ்ரயணம் என்றபடி-

(ராஜ வித்யா  –ஸூ ஸூ கம் கர்த்தும் அவ்யயம் -ஸ்ரீ கீதை -9-2-பக்தி யோகம் அனுஷ்ட்டிக்கவே இனியதாய் இருக்கும்
வாழ்வராம் -நல்ல பாதத்தால் மனை வாழ்வார் கொண்டபெண்டிர் மக்களே -திருவாய் -8-10-11-
இங்கும் வாழ்ச்சி பெற்று பின்பு பேர் இன்பமும் பெறப் பெறுவர்
ந ஸூ கால் லப்யதே ஸூகம் -இன்பத்துக்குப் பின் எப்போதுமே இன்பமே உண்டாகும் என்பது இல்லை என்னும் லௌகிக விஷயம் போல் அல்லவே பகவத் விஷயம்
மாதோ -ஆச்சார்யம் -ஸர்வ காலமும் ஆஸ்ரயிப்பார் பெரும் பேற்றை உன்னை ஆஸ்ரயிக்கத் தொடங்கி இருப்பாராம் பெறும்படி இருப்பதே –
பரிபூர்ணமாக ஆஸ்ரயித்தவர்களைப் போலே இவர்களும் பேறு பெறுவது நிச்சயமே
நேஹாபி க்ரம நாஸோஸ்தி –ஸ்ரீ கீதை -2-40-இட்ட படை கற் படை என்று கண்ணன் தானே அருளிச் செய்தான் அன்றோ –
காரணங்கள் என்று காரண பரம்பரைகளைச் சொன்னவாறு –
தாரணங்கள் பாட பேதம் -த்ருதி என்னும் மன உறுதியை யுடையவர் அவனை அடைவது நிச்சயம் என்றவாறு –
நாயமாத்மா பல ஹீநேந லப்யா -மநோ பலம் அற்றவனால் இவன் அடையப்பட மாட்டான் என்பதையே
தாரணங்கள் தாமுடையார் தாம் வாழ்வாராம் -என்று அந்வய முகத்தால் அருளிச் செய்கிறார் -)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading