ஸ்ரீ பெரிய திருமொழி-1-1-2-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அவதாரிகை –

அநாதி காலம் பகவத் தத்வம் என்று ஓன்று உண்டு -என்றும் அறியாதே
விஷய ப்ரவணராய் போருகையாலே –
வாடினேன் -என்றும் –
இளையவர் கல்வியே கருதி ஓடினேன் -என்றும் இறே கீழ் சொல்லி நின்றது –
அதில் அனுபவித்த கொங்கைகளையும் காலம் அடங்க வ்யர்தமே போயிற்று என்றும்  சொல்லி –
இப்படி போன காலமும் வ்யர்த்தம் ஆகாதபடியான திரு நாமத்தைக் காணப் பெற்றேன் என்கிறார் –

சென்ற நாள் செல்லாத செங்கண்மால் எங்கள் மால் என்ற நாள் எந்நாளும் நாளாகும்-என்றபடியே
போன காலத்தையும் நல்ல நாளாக்கும்-

அன்று ஆயர் குலமளுக்கு அரையன் தன்னை
அலை கடலைக் கடைந்த அம்மான் தன்னைக்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக்
கொடுஞ்சிலை வாய்ச் சரம் துரந்து குலங்களைந்து
வென்றானைக் குன்றெடுத்த தோளினானை
விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானைத் தண் குடந்தை கிடந்த மாலை
நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -திரு நெடும் தாண்டகம்––29-

சரம பர்வம் சரம திவ்ய தேச மங்களா சாசனமும் திருக்குடந்தையே
ஆறு திவ்ய பிரபந்தங்களிலும் திருக்குடந்தை மங்களா சாசனம் உண்டே

———-

ஆவியே அமுதே என நினைந்து உருகி யவரவர் பணை முலை துணையாப்
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதே போய் ஒழிந்தன நாள்கள்
தூவிசேர் அன்னம் துணையொடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்—-1-1-2..

(பாவியேன் என்பதால் உணராமல் -உணராதே பாவியேன் ஆனேன் –
தூவிசேர் அன்னம்-சிறகினால் அநு ரூபமான -ஸ்ரீ கோமள வல்லித் தாயார் -ஸ்ரீ ஆராவமுதனுடன் ஸம்ஸ்லேஷித்து
நாவினால் கண்டு கொண்டேன் -நாவால் புகழ உள்ளத்தில் இருந்தமை காட்டக் கண்டு -அவனைக் கொண்டேன் -)

வியாக்யானம் –

ஆவியே அமுதே –
ஆவியே அமுதே அலை கடல் கடைந்தவனே அப்பனே -எட்டாம் பத்து திருவாய் -என்றும் –
ஆவியே அமுதே என்னை ஆளுடைத் தூவி யம் புள் உடையாய் -திருவாய்-3-8-7–என்றும்
ஸ்ரீ பகவத் விஷயத்தில் சொல்லக் கடவ வார்த்தையை யாயிற்று இங்கே சொல்லிற்று –

வகுத்த விஷயத்தில் சொல்லக் கடவ வார்த்தையை அப்ராப்த விஷயத்தில் சொன்னேன் –
தாரகத்வமும் கண் அழிவற்று போக்யதையும் கண் அழிவற்று இருப்பது ஸ்ரீ பகவத் விஷயம் இறே
தாரகம் அன்றிக்கே பாதகமுமாய் -போக்யதை அன்றிக்கே பீபத்ஸ்யமுமாய் இருக்கிற
விஷயங்களிலே யாயிற்று வார்த்தை சொல்லிப் போந்தது -(ஆவி -தாரகம்-அமுது -போக்யம்)
த்வம் ஜீவிதம் த்வமஸிமே ஹ்ருதயம் மதீயம் – என்று இறே சொல்லிப் போந்தது-

என நினைந்து –
இப்புடைகளிலே நினைப்பது அநேகத்தை  இறே -என்று ஆயிற்று ஸ்ரீ ஜீயரருளிச் செய்தது
ஸ்ரீ பிள்ளை இங்கன் நினைந்து வாய் விட மாட்டாதே –
நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் -என்று இங்கனே சொல்லாமோ -என்று
ஸ்ரீ ஜீயருக்கு விண்ணப்பம் செய்ய
நீர் இவரிலும் பக்தராய் இருந்தீர் -என்று அருளிச் செய்தார்-
(ஸ்ரீ நம்பிள்ளை கலிகன்றி தாசர் அன்றோ -ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திரு உள்ளம் அறிந்து அருளிச் செய்த வார்த்தை )

என நினைந்து உருகி –
இங்கனே அனுசந்தித்து நீர்ப் பண்டம் போலே மயங்கிக் கிடப்பர் –
எத்தனை விஷயங்களிலே இப்படி கால் தாழ்ந்து போந்தது என்னில் –

அவரவர்
காலம் அநாதி -ஆத்மா நித்யன் -பரிகிரஹித்த சரீரங்களுக்கு எல்லை இல்லை –
அவ்வவோ சரீரங்கள் தோறும் விஷயங்களுக்கும் எல்லை இல்லை –
அவ் விஷயங்கள் தோறும் கால் தாழ்ந்து இறே போந்தது -ஆகையாலே -அவரவர் -என்னும் இத்தனை –

பணை முலை –
ஒருத்தன் நோவு பட்டான் என்றால் -பிற்பாடரானோம் -உதவப் பெற்றிலோம் –
ஹ்ரீரேஷாஹி மமதுலா -என்றும் –
நத்யஜேயம் -என்னுமவன் அன்றே
இளிம்பனாய் இருந்தான் அகப்பட்டான் -இனி இவன் கையில் உள்ளது அடங்க நம்மது –
என்று அதுவே எருவாக பணைக்கும் ஆயிற்று
நம்மைப் பெற வேணும் என்று உருகினான் -என்றால் இரங்கி உடம்பு கொடுக்கும்
அத்தனை நீர்மை இல்லையே

பணை முலை  துணையா –
த்வங் மாம்ஸ மேதோஸ்த்தி மயமான க்ரந்தியைப் பற்றி (தோல் மாம்சம் எலும்பு சீழ் இத்யாதி அன்றோ )
தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -என்று இருக்குமா போலேயாய் இறே இருப்பது
இப்போது சாபலத்தாலே விரும்புகிறோம் என்று இருக்கை அன்றிக்கே
அத்ருஷ்டத்தையும் இதுதானே தருமது போலே யாயிற்று -ஆதரிப்பது -அத்ருஷ்டத்தை மறந்தபடி

துன்னு குழல் கரு நிறத்து என் துணையே -திரு நெடும் தாண்டகம்–16-என்று
இருக்குமத்தை இறே இங்கே நினைப்பது-(ஸ்ரீ கிருஷ்ணனின் குழல் நிறமே என்றது போலே)

பாவியேன் –
நித்தியமாய் -ஏக ரூபமாய்- ஞநானந்த லஷணமாய் – ஸ்ரீ ஈஸ்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்வத்தோ பாதியாய்-
இருக்கிற ஆத்மா வஸ்து படும் எளிவரவே இது

உணராது
இவ் விஷயத்துக்கு நம்மை வகுத்தது என்று உணர மாட்டாதே

எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன நாள்கள்
எத்தனை காலமும் இப்படி வ்யர்த்தமே  போகிறது
காலம் அடங்க வ்யர்தமே போயிற்று-அணைக்கு அவ்வருகு பட்ட நீரோபாதி இறே
வயோஸ் யாஹ்யதி வர்த்ததே
(ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ பிராட்டியை பிரிந்த காலத்தை மீண்டும் கொண்டு வர முடியாதே என்று வருந்தினால் போலே )

பழுது போய் ஒழிந்தன நாள்கள்
ஸ்ரீ இளைய பெருமாளைப் போலே கண் உறங்கவும் அவசரம் இன்றிக்கே போகக் கடவ காலம் அநர்த்தத்தோடே போயிற்று –
கைங்கர்யத்தோடே அடிக் கழஞ்சு பெற்று செல்லக் கடவ காலம் அநர்த்தத்தோடே போயிற்று-

தூவி சேர் இத்யாதி
இப்படி கை கழிந்தது உகந்து அருளின நிலங்களிலே இங்கே ஆகையாலே ஸ்வரூபம் பெற்று மீண்டது
தூவி -சிறகு –
சிறகால் வந்த அழகை உடைத்தாய் அன்னம் சஹ சரத்தோடே புணர்ந்து வர்த்திக்கிற தேசம்
சர்வ பூத சரண்யமான தேசம்
அன்னத்தோடு சர்வதா ஸாம்யம் சொல்லலாய் இருக்கையாலே
(அள்ளலில் ரதி இன்றி இத்யாதி -அவனை அன்னமாக ஆச்சார்ய ஹிருதயம் )
ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு ஸ்ரீ ஆரா அமுத ஆழ்வார் ரமித்து வர்த்திக்கிற தேசம்
சரண்ய வஸ்து குறைவற வர்த்திக்கிற தேசம்
பொறுப்பாரும் உண்டாய் பொறுப்பிப்பாரும் உண்டாகையாலே குறைவற்ற தேசம்-

சூழ் புனல்
அசேதனமான ஜலமும் அங்கே வந்தால் ஒருகால் சூழ வாயிற்றுப் போவது
தாபார்த்தருக்கு ஸ்ரமஹரமான தேசம்

குடந்தையே தொழுது –
அவசா ப்ரதிபேதிரே -என்கிறபடியே தம் பக்கல் ஒரு நினைவு இன்றிக்கே இருக்க
தொழுது கொடு நிற்கக் கண்டார்-( துரியோதனன் தானே எழுந்தானே-தாங்கள் தம் வசம் இல்லாமல் )

என் நாவினால் –
ஆவியே அமுதே -என்ற என் நாவினால்
இப் பிரஜையை பெற்று வாழ்ந்தேன் -என்பாரைப் போலே -கரணம் -இன்று பெற்ற பேற்றுக்கு
பாங்காய் இருக்கையாலே வேறு ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணினாலும் -என் நா -என்னலாம் இறே
இதரை ஸ்தோத்ரம் பண்ணித் திரிந்த இவ் உடம்போடே

உய்ய நான் கண்டு கொண்டேன் –
மறந்த மதியின் மனத்தால் இறந்தேன் எத்தனையும்–என்ற நான்
உஜ்ஜீவிக்கும்படி கண்டு கொண்டேன்

கண்டு கொண்டேன் –
திருமந்த்ரத்தின் உடைய அர்த்தத்தை அனுசந்தித்தால் அது ஸ்வரூபமாய் இருக்குமா போலே
சப்தத்தை சொல்லுகையும் ஸ்வரூபமாய் இருக்கும் இறே
இப்படி பிராப்தமாய் இழந்ததை காணப் பெற்றேன் என்கை-

நாராயணா என்னும் நாமம் –
நா வாயில் உண்டே என்னுமத்தை –
நா வாயில் உண்டானால் ஓவாது உரைக்கும் உரை இறே

நா வாயில் உண்டே
இது முந்துற முன்னம் தேடித் போக வேண்டாவே

நமோ நாராயணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே –
ஓவாது உரைக்கும் உரை யாகிறது உச்சி வீடு விடாதே சொல்ல வேணும் என்கிறது அன்று
எட்டு அஷரம் ஆகையாலே நடுவே இளைக்க வேண்டாதே சொல்லி இளைப்பாறலாம் என்கை –
சஹஸ்ர அஷரீ மாலா மந்த்ரமாய் -இது கற்பதில் நரகத்தை புக்கு போக அமையும் என்னும்படி இராது ஒழிகை-

என்னும் நாமம்
முன்பு இழந்த காலமும் வ்யர்த்தம் ஆகாதபடியான திரு நாமத்தைக் காணப் பெற்றேன்

சென்ற நாள் செல்லாத செங்கண் மால் எங்கள் மால் என்ற நாள் எந்நாளும் நாளாகும்
செங்கண் மால் எங்கள் மால் என்பது ஒரு நாள் உண்டாகில் -சென்ற நாள் செல்லாத எந்நாளும் நாளாகும் –

ஸ்ரீ திருமந்த்ரத்தை சொல்லுகைக்கு உறுப்பாகையாலே
போன காலமும் நல்ல காலமாய்
செல்லுகிற காலமும் தானே நல்ல காலம்
ஸ்ரீ திருமந்தரம் சொன்னால் மேல் தானே  ஓர் அநர்த்தம் விளையாது இறே..

————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading