சக்தத்வம் திருவாய்மொழி ஏழாம் பத்தின் ஸாரம்-(ஸ்ரீ உ.வே. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் ஸ்வாமிகள் , ஆசிரியர்-ஸ்ரீ வைஷ்ணவ ஸூதர்சநம்’
வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் நாலு வேதங்களின் ஸாரமாக நாலு பிரபந்தங்களை அருளிச் செய்தார். அவற்றில் திருவிருத்தம் ருக்வேத ஸாரமாகவும், திருவாசிரியம் யஜுர் வேத ஸாரமாகவும், திருவாய்மொழி ஸாம வேத ஸாரமாகவும், பெரிய திருவந்தாதி அதர்வண வேத ஸாரமாகவும் கொண்டாடப் படுகின்றது. ஸாம வேத ஸாரமாய், நாலாயிர திவ்ய ப்ரபந்தத்திலும் பிரதானமான திருவாய் மொழி ஆயிரமும் விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்திற்கு அடிப்படையாகத் திகழ்கின்றது. இதனாலேயே இந்த திவ்ய க்ரந்தத்திற்கு வியாக்யாநங்களாக எம்பெருமானாரின் சிஷ்யரான தெள்ளாரும் ஞானத் திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஆராயிரப்படியும், ஸ்ரீபராசர பட்டரின் சிஷ்யரான நஞ்சீயர் ஒன்பதினாயிரப்படியும், அவருடைய சிஷ்யரான நம் பிள்ளையின் பிரதான சிஷ்யரான பெரியவாச்சான்பிள்ளை இருபத்து நாலாயிரப்படியும், நம் பிள்ளையின் மற்றொரு சிஷ்யரான வடக்குத்திருவீதிப் பிள்ளை ஈடு முப்பத்தாருயிரப் படியும், பெரியவாச்சான் பிள்ளைக்கும், அவர் குமாரரான நாயனாராச்சான் பிள்ளைக்கும் சிஷ்யரான வாதி கேஸரி அழகிய மணவாளச்சீயர் பதவுரையாகப் பன்னீராயிரப்படியும் அருளிச் செய்துள்ளனர். இவ்வளவுக்கும் மேலாக திருவாய்மொழி முழுவதையும் பல வகையாக ஆராய்ந்து விளக்குவதற்காகவே ஏற்பட்ட ஆசார்ய ஹ்ருதயம்” என்னும் அற்புதமான கிரந்தமும் இத்திருவாய் மொழியின் பொருளையும், பெருமையையும் விளக்கும் கிரந்தங்களில் தலை சிறந்ததாய் அமைந்துள்ளது, ஸ்ருதி ஸ்ம்ருதீதஹாஸ புராணங் களிலும், அருளிச் செயல்களிலும் உள்ள சந்தைகளைக் கொண்டே தொகுத்து 234 ஸுத்ரங்கள் கொண்டதாக அருளிச் செய்யப் பெற்ற இந்த திவ்யக்ரந்தத்தை அருளியவர் வடக்குத் திருவீதிப்பிள்ளையின் தீவிதீயகுமாரரும், பிள்ளை யுலகாசிரியரின் திருத் தம்பி யாருமான அழகிய மணவாளப் பெருமாள் நாயனாராவர். இவ் வாசார்ய ஹ்ருதயத்தின் நாலாம் ப்ரகரணத்தில் முதல் பத்து சூர்ணைகள் முழையே பத்து பத்துக்களின் ஸாரத்தை அற்புதமாக விளக்குமவை. திருவாய்மொழிக்கு வக்த்ரு வைலக்ஷ்ண்யம், விஷய வைலக்ஷண்யம், ப்ரபந்த வைலக்ஷண்யம் ஆகிய முப் பெருமைகளும் பரிபூர்ணமாக உண்டு என விளக்கும் முதல் மூன்று ப்ரகரணங்களும் அப்பத்து சூர்ணைகளுக்கு முக வுரையாகவும் அமைந்துள்ளன. இப்பத்து சூர்ணைகளுக்கும் பூர்வ பீடிகையாக மூன்றாவது ப்ரகரணத்தின் இறுதியில் அமைந்துள்ள இரு சூர்ணைகளையும் முதலில் விளக்குகிறேனிங்கு.
பாட்டுக்கு கிரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேசப் பத்து என்பது மூன்றாம் ப்ரகரணத்தில் 216–வ.து சூர்ணையாகும். இதன் கருத்து பின் வருமாறு ;–ஒவ்வொரு பாசுரத்திலும் (வெளிப்படையாகவோ, மறைந்தோ நிற்கும் ) கிரியாபதமான (வினை முற்றான) பதம் முக்கிய மாயிருக்கும்; வினை முற்று இல்லா விடில் வாக்யம், நிறைவடையா தன்றோ-அதுபோலே, ஓவ்வொரு பதிகத்திலும், அப் பதிகத்தின் கருத்தைக் தெளிவாகக் காட்டும் பாட்டு முக்கியமானதாயிருச்கும் உதாஹரணமாக முதற்பத்தில் நாலாவது பதிகமான *அஞ்சிறைய மடநாரை ‘யின் கருத்தான அபராத ஸஹத்வத்தை வெளிப்படையாகக் காட்டும் * என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு” என்னும் தொடரைக் கொண்ட ஏழாவது பாசுரம் முக்கிய மாயிருக்கும். (ஒவ்வொரு பதிகத்தின் வியாக்கயானங்களில் அப் பதிகத்தின் கருத்தை விளக்கும் உயிர்ப்பாட்டு எது என்பது காட்டப்பட்டுள்ளது., அதுபோலே நாறு :பாசுரங் கொண்ட ஓவ்வொரு பத்துக்கும், ஆழ்வார் பரோபதேசம் செய்வதாயமைந்த ஒரு பதிகம் முக்கியமாயிருக்கும்–என்பது இச் சூர்ணையின் கருத்து –
முதற்பத்தில் — வீடுமின்முற்றவும்
இரண்டாம் பத்தில் — இளரொளியிளமை
மூன்றாம் பத்தில் — சொன்னால் விரோதம்
நாலாம் பத்தில் — ஓன்றுந்தேவு
அஞ்சாம் பத்தில் — பொலிக பொலிக
ஆறாம் பத்தில் — நல்குரவுஞ்செல்வும் ஏழாம் பத்தில் — இன்பம் பயக்க
எட்டாம் பத்தில் — எல்லியுங்காலையும்
ஒன்பதாம் பத்தில்– மாலை நண்ணி பத்தாம் பத்தில் — கண்ணன் கழலிணை-ஆகிய பதிகங்கள் பிறர்க்கு உபதேசம் செய்பவை யாகையாலே, அந்தந்தப் பத்துக்களுக்கு அவை முக்கியமா யிருக்கும் என்றபடி. இனி, ஓவ்வொரு பத்திலும் எம்பெருமானுக்கு இன்ன இன்ன குணம் விளக்கப்படுகிறது என்பதையும், அந்த குணத்தோடு கூடிய எம் பெருமான் ஓவ்வொரு பத்திலும் ஆழ்வாருக்கு இன்ன இன்ன பேற்றை உண்டாக்கினான் என்பதையும் விளக்குகின்றதாய், மூன்றாம் ப்ரகரணத்தின் இறுதி சூர்ணையா யிருப்ப தான 218-வது சூர்ணை பின்வருமாறு :–
“பரத்வ காரணத்வ வ்யாபகத்வ நியந்த்ருத்வ காருணிகத்வ சரண்யத்வ சக்தத்வ ஸத்ய காமத்வ ஆபத் ஸகத்வ ஆர்த்தி ஹரத்வ விசிஷ்டன் மயர்வை அறுக்க, தத்த்வவேதந மறப்பற்று, ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து, மோக்ஷ பல விருத்தி செய்ய அர்த்தித்து, புருஷார்த்த பலாந்யருசி ஒழிந்து, விரக்தி பல ராகம் கழிய மிக்கு, ப்ரேம பலோபாயத்தே புகுந்து ஸாதநபலோபகாரக் கைம்மாறின்றி, கிருதஜ்ஞ்தா பல ப்ரதி க்ருதமானத்தை உணர்ந்து, ஆத்ம தர்சந பல ப்ராப்தி மரணாவதியாகப் பெற்று, காலா ஸத்திபல கதிக்குத் துணை கூட்டின தம் பேற்றைப் பிறரறியப் பத்துத் தோறும் வெளி யிடுகிறார்.!”
இச் சூர்ணையிலிருந்து-
முதற்பத்தில் பரத்வம்
இரண்டாம் பத்தில் — காரணத்வம்
மூன்றாம் பத்தில் –வ்யாபகத்வம்
நாலாம் பத்தில் நியந்த்ருத்வம்
ஐந்தாம் பத்தில் — காருணிகத்வம்
ஆரும் பத்தில் – சரண்யத்வம்
ஏழாம் பத்தில் – சக்தத்வம்
எட்டாம் பத்தில் — ஸத்ய காமத்வம்
ஓன்பதாம் பத்தில் — ஆபத் ஸகத்வம்
பத்தாம் பத்தில் — ஆர்த்தி ஹரத்வம்
ஆகிய குணங்கள் விளக்கப் படுகின்றன என்று விளங்குகிறது –
மேலும் *கஸ்சிந் மாம் வேத்தி தத்தவத?’” [கீதை 7-7] பல்லாயிரவரில் ஒருவனே என்னை உள்ளபடி. அறிகிறான் என்று கீதையில் சொல்லப்பட்ட தத்த்வ வேதன மாகிற, தன்னைப் பற்றிய உண்மை யறிவயை–‘*மயர்வற மதிநல மருளி’‘ [,திருவாய். 7-.7-1] என்கிற ரீதியில் எம்பெருமான் நிர்ஹேதுகமாக அருளியதும், *மறப்பனோ இனி யான் என் மணியையே”’? ( 1- 10-10] என்கிறபடியே அவ் வறிவைத் தமக்கு மறப்பில்லாதபடி. செய்ததுமாகிற பேற்றைத் தாம் பெற்றபடியை முதற்பத்தில் பேசுகிறார் என்றும் விளங்குகிறது. முதற்பத்தில் ஆழ்வார் எம்பெருமானுடைய பரத்வமாகிற பெருங்குணத்தை அநுபவித்தார். எந்த வஸ்து ஜகத் காரணமாக இருக்கிறதோ அதற்கே பரத்வம் ஸித்திக்குமாகையாலே, பரத்வத்துக்கு உறுப்பாயிருக்கும் காரணத்வமாகிற குண நலனை இரண்டாம் பத்தில் அநுபவிக்கிறார். *ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து” என்று இரண்டாம் பத்தில் ஆழ்வார் பெற்ற பேற்றை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அநுஸந்தித்தார். முதற் பத்தில் (தத்வ வேதந மறப்பற்ற ‘ என்கிறபடியே எம் பெருமானைப் பற்றிய உண்மை யறிவை மறப்பில்லாதபடி. பெற்றார் ஆழ்வார். அந்த அறிவின் பலமாகக் கிடைப்பதே மோக்ஷம். அதாவது அந்த அறிவை உடையவனுக்கு எம்பெருமான் தன் நிர்ஹேதுக க்ருபையாலே பரம புருஷார்த் தமான மோக்ஷத்தையே அளித்து, அவனைப் பெற்று இன்புறுகிறான். அந்த மோக்ஷத்தை ஆழ்வாருக்கு அளிக்க வந்தான் எம்பெருமான்.” அந்த மோக்ஷ ஆநந்தத்தைப் பெறுவது தமக்கு உத்தேச்ய மன்று. சேஷத்வ ஸித்தியும், எம்பெருமானுடைய முக மலர்த்தியுமே தமக்கு உத்தேச்யம்’” என்.று ப்ராப்ய நிஷ்கர்ஷத்தை *’செம்மா பாத பற்புத் தலை சேர்த்து” ( 2-9.1] என்றும், *’தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே, எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே”? [திருவாய் 2-9-4-என்றும் இரண்டாம் பத்தில் அருளிச் செய்கிறார் ஆழ்வார். *மோக்ஷத்திலும் பரார்த்தாநுபவ கைங்கர்யங்களே உத்தேச்யம்’ என்று ஆழ்வார் நிஷ்கர்ஷிக்க, எம்பெருமானும் அத்தகைய மோக்ஷத்தை ஆழ்வாருக்குத் தர இசைந்தான். இதுவே ஆழ்வார் இரண்டாம் பத்தில் பெற்ற பேறு என்று விளங்குகிறது.
இரண்டாம்பத்தில் எம்பெருமான் ஜகத் காரணன் என்றார் ஆழ்வார். இந்தக் காரணத்வமானது லோக விலஷணமானது. உலகிலுள்ள காரியப் பொருள்களுக்கு நிமித்த காரணம், உபாதாந காரணம் ஸஹஹகாரி காரணம் ஆகிய மூன்றும் வெவ்வேறா யிருக்கும். “எம்பெருமான் உலகிற்குக் காரணமாகும் போதோ வெனில், மூவகைக் கரரணமும் அவனே யாகிறான். குடத்துக்குக் குயவன் போலே நிமித்த காரணமா யிருப்பதோ டன்றியில், குடத்துக்கு மண் போலே உபாதாந காரணமாகவுமிருக்கிறான், காரியப் பொருள்கள் அனைத்திலும் வியாபித்து, அவற்றை ஸரீரமாகக் கொண்டிருக்கை யாலே ‘கார்யப் பொருள்கள் எல்லாம் இவனே: என்று சொல்லலாம்படி. இருக்கை யாலேயே இப்படி. எமபெருமான் உபாதாந காரணமாகவும் இருக்கிறான். இவ் வண்ணமாக ஐகத் காரணத்வத்திற்கு அவச்யாபேக்ஷிதமான வியாபகத்வத்தை ஆழ்வார் மூன்றாம் பத்தில் நிருபிக்கிறார். இப்பத்தில் ஆழ்வார் பெற்ற பேறு (மோக்ஷ பல விருத்தி செய்ய அர்த்தித்து’ என்று ஆசார்ய ஹ்ருதயத்தில் ஸங்க்ரஹிக்கப்பட்டது. இரண்டாம்பத்தில் நிஷ்கர்ஷிக்கப்பட்ட மோக்ஷத்திற்குப் பலன் கைங்கர்யமாகையாலே அந்தக் கைங்கர் யத்தை ‘ஒழிவில் காலம்” (திருவாய். 8-8] என்னும் திருவாய் மொழியிலே வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்‘ என்று பிரார்த்திக்கையாகிற பேறு மூன்றாம் பத்தில் ஆழ்வாருக்குக் கிடைத்தது என்று விளங்குகிறது.
மூன்றாம் பத்தில் எம்பெருமானுக்குக் காட்டப்பட்ட வியாப்தி ஆகாசத்தின் வியாப்தி போலல்லாமல், அந்தராத்மாவாய் உள் நுழைந்து நியமிக்கும் வியாப்தி என்பது தோற்ற இந்த நாலாம் பத்தில் ஸர்வ நியந்தருத்வத்தை எம்பெருமானுக்கு நிரூபிக்கிறார் ஆழ்வார். இப்பத்தில் ஆழ்வார் பெற்ற பேறு *புருஷார்த்த பல அந்ய ருசி ஓழிந்து‘ என்று ஆசார்ய ஹ்குதயத்தில் ஸங்க்ரஹிக்கப்பட்டது. மூன்றாம் பத்தில் ஆழ்வார் பிரார்த்தித்த கைங்கர்யமாகிற புருஷார்த்தத்துக்குப் பலன் அக்கைங்கர்யம் தவிர்ந்த மற்ற புருஷார்த்தங்கனில் ஈடுபாடில்லாமலிருக்கையே :யாகையாலே, புருஷார்த்தபலமான அந்யருசி ஓழிவாகிற இந்தப் பேற்றையே ஆழ்வார் இந்த நாலாம் பத்தில் பெற்றார் என்பது !கண்டு கேட்டுற்று மோந்து” (திருவாய் 4-9-10] என்கிற பாட்டில் ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்….ஓழிந்தேன்” என்று தெரிவிக்கப்படுகிறது என விளங்குகிறது.
முதல் நாலு பத்துக்களில் நிரூபிக்கப்பட்ட பரத்வம், காரணத்வம், வியாபகத்வம், நியந்த்ருத்வம் என்னும் மேன்மைக் குணங்களைக் கண்டு அஞ்ச வேண்டாதபடி எம்பெருமான் பரம காருணிகனா யிருக்கிறானா கையாலே அவனுடைய காருணிகத்வத்தை ஐந்தாம் பத்தில் நிரூபிக்கிறார் ஆழ்வார், இப் பத்தில் ஆழ்வார் பெற்ற பேறு விரக்தி பல ராகம் கழிய மிக்கு” என்று ஆசார்ய ஹ்ருதயத்தில் ஸங்க்ரஹிக்கப்பட்டது. முந்தியதான நாலாம் பத்தில் பெற்ற பேறான இதர விஷய விரக்திக்குப் பலன் பகவத் விஷயத்தில் ராகம் (காதல்) மிகுதி யடைவதே யாகையாலே * கழிய மிக்கதோர் காதலள் இவள் * (5-5-10] என்று அருளியபடியே வைராக்யத்தின் பலனான காதல் மிகுதியாகிற பேற்றினை ஆழ்வார் இப் பத்தில் பெற்றார் என்று விளங்குகிறது.
இப்படி ஐந்து பத்துக்களிலும் நிரூபிக்கப்பட்டபடி மேன்மை யுடையவனாகை யாலே ஸமர்த்தனாய், காருணிகனாக வுமிருப்பபனே அனைவராலும் சரணமடையத் தக்கவன் ஆகையாலே, ஆறாம் பத்தில் ஆழ்வார் சரண்யத்வமாகிற குணத்தை நிரூபிக்கிறார், இப் பத்தில் ஆழ்வார் பெற்ற பேறு ‘ப்ரேமபலோபாயத்தே புகுந்து‘ என்று ஆசார்ய ஹ்ருதயத்தில் ஸங்கரஹிக்கப்பட்டது. ப்ரேம பலமான உபாயம் புகுதலைச் செய்து என்ற படி, ஐந்தாம்பத்தில் பெற்ற எல்லையற்ற காதலுக்குப் பலன் எம்பெருமானை உபாய மாகப் பற்றுதலே யாகையாலே அலர் மேல் மங்கை யுறை மார்பா உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே ”’ [திருவாய். 6-10-10] என்று அருளியபடியே உபாய வரணமாகிற பேற்றை ஆழ்வார் இவ்வாறாம்பத்தில் பெற்றார் என விளங்குகிறது.
ஸர்வ சரண்யனா யிருட்பவன் சரணமடைந்தவர்களுடைய அநிஷ்டங்களைப் போக்கி, இஷ்டங்களை அளிப்பதற்குத் தக்க சக்தி யுடையவனாயிருக்க வேண்டுமாகையாலே ப்ரக்ருதமான ஏழாம் பத்தில் ஆழ்வார் சக்தத்வமாகற குணத்தை நிரூபிக்கிறார். இப் பத்தில் ஆழ்வார் பெற்ற பேறு * ஸாதநபலோபகாரக் கைம்மாறின்றி!” என்று ஆசார்யஹ்ருதயத்தில் ஸங்கரஹிக்கப்பட்டது. ஆராம்பத்தில் பண்ணிண உபாய வரணத்தில் உபாயமான எம்பெருமானால் கிடைத்த பலனான உபகாரத்திற்கு ப்ரத்யுபகாரமாக *உதவிக் கைம்மாறு என்னுயிர்‘ [திருவாய். 7-9-10]7 என்று ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணப் பரரித்து, அந்த ஆத்ம வஸ்துவும் அவனுடையதே என்று அறிகையாலே “உற்று எண்ணில் அதுவும் மற்றாங்கு அவன் தன்னது–எதுவும் ஒன்றுமில்லை செய்வது இங்கு மங்கே”” [7-9-10] என்று கைம்மாறு காணாமல் தடுமாறுகையாகிற பேற்றை ஆழ்வார் ஏழாம்பத்தில் பெற்றார் என்று விளங்குகிறது.
இனி இந்த ஏழாம்பத்தின் ஸாரத்தை விளக்குவதாய், நாலாம் ப்ரகரணத்தில் ஏழாம் சூர்ணையாய் அமைந்ததான–
எண்ணிலாக் குணங்கள் பால துன்பவேறவன் மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே தெளிவுற்றவர்க்கு ஏற்றரும் வைகுந்தத்தை யருளும் ப்ராபகத்வம் புற் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்க வல்ல ஸர்வ சக்தி, பாதம் அகல கில்லாத தன்மை அகற்றுமவற்றின் நடுவே யிருத்தக் கண்டு நலிவான் சுமடு தந்தாய் ஓ வென்று ஸாதந பலமான ஆக்ரோசத்தோடே பழியிட்டுக் கங்குலும் பகலும் அடை ஆர்த்தியைக் கோயில் திருவாசலிலே முறை கெட்ட கேள்வியாக்கத் தேற்ற வொண்ணாத படி தோற்று ஒன்றி நிற்கப் பண்ணீன பலாதிநெம் மற்றுங் கற்பாரிழவிலே சுவறிப் பழைய தனிமைக் கூப்பீடு தலை யெடுத்து, சூழவும் பகை முகஞ் செய்ய, எடுப்புஞ் சாய்ப்பு மான க்லேசம் நடக்க, உபாயாதிகாரதோஷ மொழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்திரியைக் கேட்க, ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர ப்ரயோஜனத்தை அருளிச் செய்ய, என் சொல்லி எந் நாள் பார் விண்ணீர் இறப்பொதிர் எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க விருந்த நிலத் தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதகாக காந கோஷ்டியையும் தேவ பிரானறிய மறந்தவர், சரமோபாய பரரானார்க்கு நீணகரமது, துணிந்தான் சரணன்றி மற்றொன்றிலம் உள்ளித் தொழுமினென்று ப்ராப்ய ஸாதராவதியை ப்ரீதியாலே ப்ரகாசிப்பிக்கிறார் ஏழாம் பத்தில்.” என்னும் சூர்ணையின் கருத்தை விளக்குவோம்.
(1. எண்ணிலாக் 2- குணங்கள் 3. பாலதுன்ப 4. வேறவன் 5. மாயாப் 6. பல்யோகு செய்தி யென்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே 7. தெளிவுற்ற வர்க்கு 8. ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் ப்ராபகத்வம் 9. புற்பா வெறும்பு 10. பகைவனுக்கு மாக்க வல்ல ஸர்வ சக்தி.) இப் பகுதியால் ஆழ்வார் இப்பத்தில் எம்பெருமானுடைய ஸர்வ சத்தத்வ மாகிற குணத்தை நிரூபிக்கிறார் என்று இப் பத்திலுன்; பத்து சந்தைகளைக் காட்டி விளக்குகிறார். அதாவது , “எண்ணிலாப் பெருமாயனே: (7-1-1) என்று ஆச்சர்யமான சக்தி முதலான குணங்களை யுடையவன் என்று காட்டுகிறார். 2. குணங்கள் கொண்ட மூர்த்தி யோர் மூவராய்ப் படைத்தளித்துக் கெடுக்கும்: (7-1-11) என்று முக் குணங்களைக் கொண்ட மும் மூர்த்திகளா யிருந்து உலகைப் படைத்தனித்தழிககும் ஸர்வ சக்தி உடையவன் என்பதைக் காட்டினார் . 3. பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்: (7-9-7) என்று இடமறிந்து அனைவர்க்கும் ஸுக துக்கங்களைப் படைத்த சக்தியை யுடையவன் என்று காட்டினார். 4, ஊழிதோறாழி யுருவும் பேரும் செய்கையும் வேறவன் வையங் காக்கும்’ (7-3-11) என்று ஒவ்வொரு கல்பத்திலும் ,நாம ரூப சேஷ்டிதங்களை வெவ்வேறாக உடையவனாய்க் கொண்டு உலகை ரக்ஷிக்கும் சக்தியை யுடையவன் என்று காட்டினார். 5. .மாயா வாமநனே?” (7-8-1) என்று ஆச்சர்யங்களை யுடையவனாகவும், ஆச்சர்யமான அவதாரங்களை எடுக்க வல்லவனாகவும் இருக்கும் ஸர்வ சக்தன் என்று காட்டுகிறார். 6. உள்ளப் பல் யோகு செய்தி’ (7-8-4) என்று திருவுள்ளத்திலே ஒவ்வொரு சேதனர்க்கும் ரக்ஷணோபாய சிந்தைகள் பலவும் பண்ணி நிற்கும் சக்தி யுடையவன் என்று காட்டினார். இப்படிப் பல விதமாகச் சொல்லப்பட்டதாய், இவனுடைய உபாயத் வத்துக்கு அவச்யம் வேண்டியதான ஆச்சர்ய சக்தி யோகத்தாலே. (இது மேலே *ஆக்க வல்ல” என்பதோடு அம்வயிக்கிறது.) 7. *தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்’ (7-5-11) 8. *ஏற்றரும் வைகுந்ததை அருளும்” (7-6-10) என்றபடியே உபாயமும், உபேயமும் எம்பெருமானே என்று துணிந்து, குயுக்தகளைக் கண்டு பின்வாங்காமல் நின்றவர்களுக்கு ஸ்ரீ வைகுண்டத்தைத் தன்னருளாலே கொடுக்கிற தன் உபாயத்வத்தை; 9, புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்றின் றியே” (7-5-1) என்று சொல்கிற படியே அறிவு குறைந்த திர்யக் ஸ்தாவரங்களுக்கும். 10. *சேட் பால் பழம் பகைவன் சிசு பாலன், திருவடி தாட்பாலடைந்த (7-5-3) என்று சொல்லுகிற படியே எதிரிகளில் தலைவனாயிருந்த சிசுபாலனாகிற பகைவனுக்கும் ஆம்படி பண்ண வல்ல ஸர்வ சக்தியுடையவனான சர்வேச்வரன். ஆக இவ்வளவால் இந்தப் பத்தில் எம்பெருமானுடைய ஸர்வ சக்தத்வம் நிரூபிக்கப்படுகிறது என்று காட்டப்பட்டது.
(பாதம் அகலகல்லாத தம்மை அகற்று மவற்றின் நடுவே யிருத்தக் கண்டு நலிவான் சுமடு தந்தாய் ஒவென்று ஸாதந பலமான ஆக்ரோசத்தோடே பழி யிட்டு, இப் பகுதியால் ‘உண்ணிலாவிய’ என்று தொடங்கும் முதல் திருவாய் மொழியின் ப்ரமேயம் சொல்லப்படுகிறது. அதாவது *அந்தோ அடியேன் உன்பாதம் அகலகில்லேன் இறையுமே’ (6-10-9) என்று தன் திருவடிகளை ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரிய மாட்டாதவராய், “அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே, (6-10-10) என்று தன்னைச் சரணம் புகுந்த தம்மை, “அகற்ற நீ வைத்த மாய வல்லைம் புலன்களாமவை ‘! (8-7-8) என்று தன் திருவடிகளைக் கட்டாதபடி அகலச் செய்யுமவையான இந்திரியங்களின் நடுவே இவ் வுடம்பிலே இருக்கும்படி வைக்க, அதை (ஆழ்வார்) பார்த்து ‘உண்ணிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை உன் பாத பங்கயம், நஈண்ணிலா வகையே நலிவான் இன்னமெண்ணு கின்றாய்’ (7-1-1) என்றும், *என் பரஞ் சுடரே என்றுன்னை அலற்றி உன் இணைத் தரமரைகட்கு, அன்புருகி நிற்குமது நிற்கச் ௬மடு தந்தாய்” (7-1-10) என்றும், “விண்ணுளார் பெருமானே ஓ’ (1-1-5) என்றும், (முன் பரவை கடைந்து அமுதங் கொண்ட மூர்த்தி ஓ’ (7-1-10) என்றும் ஓலமிட்டார். இப்படிக் கூக்குரலிட்டது ஸாதந பலங்களில் ஒன்று. அதாவது-தாமத்திற்கு இடமில்லாத ஸித்தோபாய மாகிற எம்பெருமானைப் பற்றினால் அவன் பலம் தருமளவும் இப்படி ஒலமிடுவது தவிர செய்யலாவது வேறொன்று இல்லாமையாலே, இந்த ஆக்ரோசமாகிற கூக்குரல் தாம் பற்றின உபாயத்தின பலமாக வந்தது என்றபடி, இப்படி முதல். திருவாய் மொழியில் கூக்குரலிட்ட ஆழ்வார் என்ன செய்தாரெனில், ௮நாதி காலமாக இந்திரியங்களுக்கு வசப்பட்டு நின்ற தம்மால் வந்ததையும் அவனால் வந்ததாகப் பழியிட்டார். இப்படி ஆழ்வார் எம்பெருமானைப் பழியிடலாமோ? எனில், *ப்ரஜை தெருவிலே இடறித் தாய் முதுகிலே குத்துமா போலே’ என்று ஸ்ரீவசன பூஷணத்தில் சொன்ன ரீதியில் அவனுக்கும் தமக்குமுள்ள உறவாகிற உரிமை கொண்டு பழி யிடத் தடை யில்லை என்று கொள்வது.
(கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியைக் கோயில் திருவாசலிலே முறைகெட்ட கேள்வியாக்கி) இது *கங்குலும் பகலும்‘ என்று தொடங்கும் இரண்டாம் திருவாய்மொழியின் ப்ரமேயத்தைச் சொல்லுகிறது. சென்ற திருவாய்மொழியில் மிகுந்த ஆர்த்தியுடன் கூக்குரலிட்ட பின்பு, அப்படி கூப்பிடவும் முடியாதபடி தளர்ந்து, ஒரு பிராட்டி தசையை யடைந்து “கங்குலும் பகலும் கண் துயிலறியாள்’ (7-9-1), *இட்ட காலிட்ட கையளா யிருக்கும்’ (7-2-4) “தித்திக்கும் இசைக்கும்! (7-2-6) முதலான பாசுரங்களின் படியே இராப் பகலாக அழுவது, தொழுவது, மயங்குவது, பிதற்றுவது. நெடுமூச்செறிவது இவையும் செய்ய மாட்டாமல் நிற்பது முதலான நிலைகளை யடைந்து, ஆர்த்தி மிகுந்து செல்லுகையாலே ஓர் அடைவிலே பிடிக்க. வொண்ணாதபடி நடக்கிற இந்த ஆர்த்தியை, பெரிய பெருமாள் கண் வளர்ந்தருளுகிற கோயில் திருவாசலில் இப் பெண் பிள்ளையைப் பொகட்டு, முறையோ, அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே” (திருவிருத்தம், 68) என்கிற ரீதியில் திருத் தாயார் கூச்ச மில்லாமல் தானே இவள் தசையை மணவாளப் பிள்ளையான பெரிய பெருமாளுக்குச் சொல்லி திருவரங்கத்தாய்! இவள் திறத்து என் செய்கின்றாயே! (7-1) *இவள் திறத்து என் செய்திட்டாயே” (7-2-3) *(இவள் திறத்து என் சித்தித்தாயே’ (1-2-4) என் செய்கேன் என் திருமகட்கே’ (7-2-8) என்று அவர் தம்மையே கேட்கும்படி ஆழ்வாருக்குப் பெருத்த வருத்தம் உண்டாயிற்று.
(தேற்ற வொண்ணாதபடி தோற்று) இது ‘வெள்ளைச் சுரிசங்கு? என்று தொடங்கும் மூன்றாம் திருவாய் மொழியின் ப்ரமேயத்தைச் சொல்லுகிறது. இப்படி தாயார் பெரிய பெருமாளுடைய ஆத்ம குணங்களையும், விக்ரஹ குணங்களையும் சொல்லிக் கேட்டதாலும், தாம் வாய் வெருவியதாலும், சென்ற திருவாய் மொழியில் பராங்குச நாயகிக்குப் பிறந்த மயக்கம் தெளிந்து, அவனைக் கிட்டி யல்லது கில்லேன்! என்னும் ஆற்றாமை பிறந்து, தென் திருப் பேரையில் வீற்றிருக்கும் மகர நெடுங்குழைக்காதப் பெருமானிடத்திலே நெஞ்சு பறி கொடுத்தவளானாள். அப்போது *சேர்வன் சென்று என்னுடைத் தோழீமீர்காள் அன்னையர்காள் என்னைத் தேற்ற வேண்டா” (7-3-9) என்றும், கனிந்த விளவுக்குக் கன்றெறிக்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்: (7-3-5) என்றும் சொல்லுகிறபடியே யாராலும் தேற்றி தரிக்கச் செய்ய முடியாத படி தன் பாரதந்தரியத்தையும் இழந்தாள்.
(ஒன்றி நிற்கப் பண்ணின பலாதாநம் மற்றும் கற்பாரிழவிலே சுவறி) இது ஆழி யெழ’ என்று தொடங்கும் நாலாம் திருவாய் மொழி, கற்பார்” என்று தொடங்கும் ஐந்தாம் திருவாய் மொழி ஆகிய இரண்டின் ப்ரமேயங்களையும் சொல்லுகிறது. கீழ்த் திருவாய் மொழியான வெள்ளைச் சுரி சங்கிலே தேற்ற வொண்ணாத படி தோற்றுத் தளர்ந்த ஆழ்வாரை தரிக்கச் செய்வதற்காக *ஆழியெழ’ என்று தொடங்கும் நாலாம் திருவாய் மொழியிலே எம்பெருமான் தன்னுடைய வெற்றிச் செயல்களை யெல்லாம் ஆழ்வாருக்குக் காட்டிக் கொடுத்தான். ஆழ்வாரும் அவற்றைக் கண்டு உள்ளம் பூரித்து, *குன்றமெடுத்த பிரான் அடியாரொடும், ஒன்றி நின்ற சடகோபன்” (7-4-11) என்னும்படி எம்பெருமானுடைய வெற்றிச் செயல்களிலே ஈடுபட்டிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களோடே பொருந்தி நிற்கும்படி வலிமை யூட்டப் பெற்றார். இது (ஆழி யெழ’ என்னும் நாலாம் திருவாய் மொழியின் ப்ரமேயம். : இப்படி ஆனந்தத்தின் எல்லை நிலத்திலே நின்ற ஆழ்வார் வருத்தத்தின் எல்லையை அடைந்ததைச் சொல்லுகிறது அடுத்ததான கற்பார் இராம பிரானை’ என்று தொடங்கும் திருவாய் மொழி. .இத் திருவாய் மொழியில், முந்திய திருவாய் மொழியில் அநுபவிக்கப் பெற்ற கற்றோர் கருதும் விசயங்களுக்கெல்லாம் பற்றாம் விபவ குணப் பண்புகளை உற்றுணர்ந்த ஆழவார் “அந்தோ! அனைவர்க்கும் எளியவனாய், நிர்ஹேதுக க்ருபையை உடையவனான எம்பெருமானிடம் ஈடுபடாமல் மற்ற விஷயங்களில் ஈடுபட்டு, ஸம்ஸாரிகள் நசித்துப் போகிறார்களே” என்று பத்த ஜீவர்களின் இழவை அநுஸந்தித்ததாலே சென்ற திருவாய் மொழியில் எம்பெருமான் செய்த பலாதானம் (வலிமையூட்டினது) *கற்பார் ராமபிரானை யல்லால் மற்றுங் கற்பரோ”: என்கிற இத் திருவாய் மொழியிலே சுவறிப் போயிற்று. (இல்லை என்றே சொல்லும்படி ஆயிற்று.)
(பழைய தனிமைக் கூப்பீடு தலையெடுத்து) இது *பாமரு மூவுலகும்‘ என்று தொடங்கும் ஆறாம் திருவாய் மொழியின் ப்ரமேயத்தைச் சொல்லுகிறது. முற் கூறியபடி ஐந்தாம் திருவாய் மொழியிலே ஆழ்வார் வருத்தத்தின் உச்ச நிலையை அடைந்தமையாலே பழைய கூப்பீடே தலையெடுக்கத் தொடங்கிற்று. அதாவது *உண்ணிலாவிய’ என்னும் முதல் திருவாய் மொழியில் ஆழ்வார் எப்படி ஓலமிட்டாரோ அவ்வண்ணமாகவே இத் திருவாய் மொழியிலும் ;பற்பநாபா ஓ’ (பற்ப. பாதா ஓ’ (தாமரைக் கண்ணா ஓ’ *தாமரைக் கையா ஓ’ என்று ஓலமிட்டார். *தனியேன் தனியாளா ஓ’ என்றும் கூக்குரலிடுகையாலே இதுவும் :உண்ணிலாவிய” வில் கூக்குரல் போலே தனிமைக் கூப்பீடு ஆயிற்று.
(சூழவும் பகை முகஞ்செய்ய) இது *ஏழைய ராவி” என்று தொடங்கும் ஏழாந் திருவாய் மொழியின் ப்ரமேயத்தைச் சொல்லுகிறது. சென்ற திருவாய் மொழியில் -அடி யுந்தி கை மார்வு கண் வாய் செஞ்சுடர்ச் சோதி’ என்று அவன் வடிவழகை அநுஸந்தித்தார். அவ்வடிவழகு தானே நெஞ்சிலே ஊன்றி நிற்கையாலே பாவநா ப்ரகர்ஷம் என்னும் நினைவின் முதிர்ச்சியாலே ப்ரத்யக்ஷம் போலே அவனுடைய ஒவ்வொரு அவயவங்களும் இவருக்குக் காட்சி யளித்தன. ப்ரத்யஷம் என்றே நினைத்து அணைப்பதற்காகக் கையை நீட்டினால், அணைப்பினால் வரும் ஆனந்தத்தைப் பெருமையாலே ஆற்றாமை பிறந்து, எம்பெருமானேடு கலந்து, பிரிந்து, உருவ வெளிப்பாட்டாலே வருந்தும் ஒரு பிராட்டி பாசுரத்தாலே இத் திருவாய் மொழியை அருளிச் செய்கிறார் ஆழ்வார். இதில் “இணைக் கூற்றங்கொலோ அறியேன்” என்றும், (கண்ணன் கோளிழை வாண் முகமாய்க் கொடியேனுயிர் கொள்கின்றதே’ (7-1-8) என்றும், *சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர்……… என் செய்கேன்’ (7-1-1) என்றும் முன்பு அனுபவிக்கப் பெற்ற முகாவயவ சோபையானது தெளிவாக நினைவுக்கு வந்து, கண்ட கண்ட இடமெங்கும் தோன்றி நின்று, பகைவர்கள் போலே முன் நின்று நலியத் தொடங்கிற்று. இப்படி திருமுக மண்டலத்திலுள்ள அவயவங்களான திருக்கண், திரு மூக்கு, திருவாய், திருப் புருவம், திருக் காது, திரு நெற்றி முதலியவை பகைவர் போலே சுற்றிலும் தோன்றி, சூழவும் பகை முகஞ் செய்த படியைச் சொல்லுகிறது இத்திருவாய் மொழி.
(எடுப்பும் சாய்ப்புமான கிலேசம் நடக்க) இது முற்கூறிய ஏழு திருவாய் மொழிகளிலும் ஆழ்வாருக்கு கடந்த நிலைகளை ஸங்கரஹிக்கிறது. அதாவது-முதல் மூன்று திருவாய் மொழிகளில் கிலேசம் தலை யெடுத்தும், “ஆழியெழ? என்னும் திருவாய் மொழியில் எம்பெருமான் தன் விஜயங்களைக் காட்டின போது தலை சாய்ந்தும், மீண்டும் மேல் திருவாய் மொழிகளிலே கூப்பிடும் படியும், சூழவும் பகை முகஞ் செய்யும்படியும், தலை யெடுத்தும் சென்றதைச் சொல்லுகிறது,
(உபாயாதிகார தோஷ மொழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்திரி யைக் கேட்க) இது *மாயா வாமநனே: என்று தொடங்கும் எட்டாம் திருவாய் மொழியின் ப்ரமேயத்தைச் சொல்லுகிறது. *அகலகில்லேன்’ என்னும் பாசரத்தில் நிறைவாளனான உன்னை உபாயமாகப் பற்றின நான் இன்னமும் உன்னை அடையாமல் இப்படி எடுப்பும் சாய்ப்புமான: கிலேசத்தை அநுபவிக்க காரண மென்ன? ஸித்தோபாயமான உன்னிடத்தில் ௮ஜ்ஞானம், ௮சக்தி முதலிய எந்த தோஷமும் இல்லை. ஆகிஞ்சன்யமும், அநந்யகதித்வமும், ஆர்த்தியும் நிறைந்திருக்கப் பெற்ற சரணாகதனான என்னிடத்தில் அதிகார தோஷமும் ஒன்றுமில்லை. அதாவது தகுதிக்கு எக் குறையுமில்லை. இப்படி இருவரிடமும் தோஷமில்லா மலிருக்கும் போது என்னிடமுள்ள பாசங்களை நீக்க, என்னை உனக்கு அநந்யார்ஹ சேஷமாகக் கொண்ட பின்பு இன்னமும் என்னை இந்த ஸம்ஸாரத்தில் வைத்த ஆச்சர்யத்திற்குக் காரணமென்ன? நீயே அருளிச் செய்ய வேணும்’? என்று ஆழ்வார் ‘*பாசங்கள் நீக்கு என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ …… மாயங்கள் செய்து வைத்தி இவை என்ன மயக்குக்களே”’ (7-8-6) இவை என்ன விசித்திரமே’ (7-8-2) முதலான பாசுரங்களில் எம்பெருமானை மடி பிடித்துக் கேட்டாசர் இத் திருவாய் மொழியில்-
(ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வபர ப்ரயோஜனத்தை அருளிச் செய்ய, என் சொல்லி எந் நாள் பார் விண்ணீர் இறப்பெதிர் எதுவுமென்கிற உபகார ஸ்ம்ருதி யோடே.) இது ‘என்றைக்கு மென்னை’ என்று தொடங்கும் ஒன்பதாம் திருவாய் மொழி யின் ப்ரமேயத்தைச் சொல்லுகிறது. சென்ற திருவாய் மொழியில் என்னை நீ இங்கு வைத்ததற்குக் காரணமென்ன? என்று ஆழ்வார் கேட்ட கேள்விக்கு ‘”உம்மைத் திருவாய் மொழி பாடவைத்து என் ஆநந்தமாகிற ஸ்வ ப்ரயோஜனத்தையும், என் அடியார்களுக்கு ஆனந்தமாகிற பர ப்ராயோஜனத்தையும் பெறுவதற்காக என் இச்சையாலே உம்மை இவ் வுலிலே இருத்தி வைத்தோம் காணும்” என்று எம்பெருமான் பதில் அருளிச் செய்தான்: “மறப்பிலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை, உறப் பல இன் கவி சொன்ன உதவிக்கே, (7-9:9) முதலான பாசுரங்களில் எம்பெருமான் இப்படி பதிலுரைத்தது அறியக்கிடக்கிறது. இப்படி எம்பெருமான் பதில் சொன்னதைச் செவி யுற்ற ஆழ்வார் “வியாஸர், பராசரர், வால்மீகி முதலான ரிஷிகளும், முதலாழ்வார்களும் இருக்கும் போது, என்னைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்வதே, இந்த உபகாரத்திற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்??? என்று தடுமாறினார். *என் சொல்லி நிற்பனோ’ *எந் நாள் சிந்தித்து ஆர்வனோ’ ‘பார் விண்ணீர் முற்றும் கலந்து பருகலும் ஆர்வனோ’ (உபய விபூதியிலுள்ளாருடைய சக்தியையும், ஸ்வபாவத்தையும் உடையவனாய்க் கொண்டு அநுபவித்தாலும் திருப்தி யடைவேனோ) இறப்பெதிர்காலம் பருலும் ஆர்வனோ’ என்று சொல்லியும், *உதவிக் கைம்மாறு என்னுயிர் என்னவுற்றெண்ணில், அதுவும் மற்றாங்கவன் தன்னது வாக அப்பனுக்கு எதுவு மொன்றுமில்லை செய்வதிங்கு மங்கே ‘ (7-9-10) என்று இவ் வுதவிக்குக் கைம் மாறாக என் ஆத்மாவையே கொடுக்கலாம் என்று பார்த்தால், அவ்வாத்மாவும் அவனுடையதாகவே யிருக்கையாலே, உபய விபூதியிலும் இவ் வுதவிக்குச் செய்யக் கூடிய கைம்மாறு யாதொன்றுமில்லை’” என்று சொல்லியும், உபகார ஸ்ம்ருதியோடு (செய்ந் நன்றியோடு) கூடியவரானார் ஆழ்வார். இது இப் பத்தில் ஆழ்வார் பெற்ற பேறு
(தன் சரிதை கேள்வி யாகாமல் ……. ப்ராப்ய ஸாதநா வதியை ப்ரீதியாலே ப்ரகாசிப் பிக்கிறார் ஏழாம் பத்தில்.) இது *இன்பம் பயக்க? என்று தொடங்குவதாய், இப் பத்துக்கு உபதேசப் பதிகமான பத்தாந் திருவாய் மொழியின் ப்ரமேயத்தைச் சொல்லுகிறது. சென்ற திருவாய் மொழியில் ஏற்பட்ட உபகார ஸ்ம்ருதியினாலே, திருவாறன்விளை யில் எழுந்தருளியிருக்கும் பெருமானைத் திருவாய் மொழி கேட்கச் செய்து, அடிமை செய்வோம் என்று ஆழ்வார் குதூஹலம் கொண்டார். “மிதிலைச் செல்வி உலகுய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்!” (பெருமாள் திரு, 10-8) என்றபடியே, திரேதா யுகத்தில் குசலவர்கள் மூலமாகத் தன் சரிதையான ஸ்ரீ ராமாயணத்தைப் பெரிய சபை கூட்டிக் கேட்டுகந்த அவனுக்கு இப்போது திருவாய் மொழி கேட்பதில் ஆசை மிகுந்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ? ஆனால் அப்படித் தன் சரிதை கேட்டதைக் காட்டிலும் பரம விலக்ஷணமாகத் திருவாய் மொழி கேட்பிக்க வேண்டுமென்று ஆழ்வார் பாரித்தார். ஸ்ரீ ராமாயணம் கேட்டது போல் பிராட்டியைப் பிரிந்து, தனி யிருப்பிலே யாகாமல், பிராட்டியோடு கூடியிருக்கு மிருப்பிலே ஆக வேணும் என்று திருவுள்ளம் பற்றி “இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ்வேமுலகை, இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து‘” என்கிற படியே பிராட்டியும் தானுமாய் உலகெல்லாம் வாழும்படி எழுந்தருளிருக்குமிடமாய், *நிலத் தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திருவாறன்விளை’ என்றபடியே நிலத் தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரண்டு வாழுமிடமான திருவாறன்விளை என்னும் மலை நாட்டுத் திருப்பதியிலே ஸ்ரீ வைஷ்ணவப் பெருங் குழுவிலே திருவாய் மொழி கேட்பித்து அடிமை செய்யப் பாரித்தார் ஆழ்வார். அப்போது எம்பெருமான் ஆழ்வாருடைய திருவுள்ளத்தைப் பரீக்ஷிக்க விரும்பினான். *திருவாய் மொழி கேட்பிப்பதிலேயே இவர் ஊன்றி யிருக்கிறாரா,அல்லது பரமபதம் செல்வதிலும் ஆசை வைத்திருக்கிறாரா பார்ப்போம்! என்று நினைத்து ஆழ்வீர்! பரமபதம் கொடுப்பதாக விருக்கறோம்’ என்று கூற, *திருவாறன்
விளை யுறை தீர்த்தனுக்கு ௮ற்ற பின் – சிந்தை மற்றொன்றின் திறத்த தல்லாத் தன்மை தேவபிரானறியும்’” (7-10-10) என்று பரமபதத்தின் பேர் சொல்லுகையும் தமக்கு அஸஹ்யமாய், மற்றொன்று’ என்றே சொல்ல வேண்டும்படி. ஸாம கான கோஷ்டியான பரம பதத்தையும் தேவ பிரானான பரமபத நாதன் அறிய உபேஷித்தார் ஆழ்வார். *இப்படிப்பட்ட ஆழ்வார் உபதேசப் பதிகமான இத் திருவாய் மொழியில் எவருக்கு எந்த விஷயத்தை உபதேசிக்கிறார்?: எனில், சென்ற பத்திலே *அகல கில்லேன்” என்கிற பாசுரத்திலே காட்டிய ஸித்தோபாயத்திலே ஊன்றி யிருக்கும் அதிகாரிகளுக்கு ப்ராப்யத்தினுடைய எல்லையையும், ப்ராபகத்தினுடைய எல்லையையும் வெளியிட்டருளுகிறார். *அதாவது-எம்பெருமானைக் காட்டிலும் அவனோடு ஸம்பந்தம் பெற்ற ததீய விஷயமே ப்ராப்யத்தினுடைய எல்லை என்பதை, *நீணகரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திருவாறன்விளை’ [7–10–7] என்று காட்டினார். அர்ச்சாவதாரம் எடுத்து எளியனாய் நிற்கும் எம்பெருமானே ப்ராபகம் எனப்படும் ஸாதனத்தினுடைய எல்லை என்பதை *திருவாறன் விளை நீணகரத் துறைகின்ற பிரான்….வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரணன்றி மற்மொன்றிலமே’” என்று அருளிச் செய்தார். *உள்ளித் தொழுமின் தொண்டீர்! /7–10–6] என்று முன்னிலைப் படுத்தி அருளிச் செய்கையாலே ஏழாம் பத்துக்கு உபதேச பரமான திருவாய்மொழி இதுவே என்று விளங்குகிறது. இவ்வளவால் ஆசார்யஹ்ருதய சூர்ணைகளைத் தழுவி ஏழாம் பத்தின் ஸாரம் விவரிக்கப்பட்டதாயிற்று.
ஷஷ்ட்யப்தபூர்த்தி என்னும் ஒரு வியாஜத்தை யிட்டு, திருவாய்மொழி பத்து பத்துக்களின் ஸாரார்த்தங்களையும், ஸ்ரீ பாஷ்பத்தின் 16 பாதங்களின் ஸாரார்த்தங்களையும் வித்வத் வரிஷ்டர்களைக் கொண்டு வெளி யிடச் செய்தும், மற்றும் உலகிற்குப் பல உபகாரங்களைச் செய்தும் மஹோபகாரகராய் உலகம் நிறைந்த புகழாளராய் விளங்கும் வாகம்ருத வர்ஷீ ஸ்ரீ.௨.வே. வேளுக்குடி வரதாசார்ய ஸ்வாமி ஸதாபிஷேகம் முதலான பல வைபவங்களையும் கண்டருளி, உலகோற்கு மற்றும் பல பேருபகாரங்களைச் செய்து “வையம் மன்னி வீற்றிருக்க வேணும்’ என்று அணியார் பொழில் சூழ் அரங்கநகரப்பனை இறைஞ்சுவோமாக.
—
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ. உ. வே. வித்வான் புத்தூர் கிருஷ்ண ஸ்வாமி அய்யங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
Leave a Reply