ஸ்ரீ சாரீரக மீமாம்ஸா பாஷ்யத்தில் இரண்டாம் அத்யாயத்தில் மூன்றாவதான வியத் பாதத்தின் அர்த்த ஸங்க்ரஹம்–ஸ்ரீ அஹோபிலமடம் ஆஸ்தாந் வித்வான், ந்யாய வேதாந்த விஷாரத வித்வன்மணி ஸதர்த்த ப்ரகாசிகராஜா ப்ரவசந் ப்ரவீண உபய வேதாந்த வித்வான் வில்லி வலம் க்ருஷ்ணமாசார்ய ஸ்வாமிகள்-
ஸ்ரீபாஷ்யத்தில் இரண்டாவது அத்யாயத்தில் உள்ள நான்கு பாதங்களை இரண்டு இரண்டாகப் பிரித்து இரண்டு பேடிகைகளாக வகுத்துள்ளனர் பூர்வா சார்யர்கள். முதல் இரண்டு பாதங்களைக் கொண்ட பேடிகை. ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்ற விஷயத்தில் வேத பாஹ்யர்களால் ஏற்படும் உபத்ரவங்களைப் போக்குகின்றது. மூன்றாவது நான்காவது பாதங்களைக் கொண்ட மற்றொரு பேடிகை ஜகத்து முழுவதும் பரஹ்மத்தினுடைய கார்யம் என்ற விஷயத்தில் உபநிஷத் வாக்யங்களுக்குள்ளேயே ஏற்படும் முரண் பாட்டைப் போக்குகின்றது–இந்த அர்த்தத்தையே மற்றொரு விதத்திலும் சுருக்கிக் காட்டி யுள்ளனர்–ப்ரஹ்மத்திற்கு ஜகத் காரணத்வம் கூடாது என்ற ஆக்ஷேபத்தைப் போக்குகிறது முதல் பேடிகை, ஜகத்து முழுமைக்கும் ப்ரஹ்ம கார்யத்வம் கூடாது என்ற ஆக்ஷேபத்தைப் போக்குகின்றது இரண்டாவது பேடிகை என்றபடி –
இந்த பாதத்தில் செய்யப்படும் ஸித்தாந்தத்தினால் பிறர்களுடைய தவறான வாதங்கள் நிரஸிக்கப்பட்டன ஆகின்றன, அவை பொதுவில் நால்வகைப் படும்:-த்ரவ்யம்–அத்ரவ்யம் என்ற வாசி யற ஸர்வமும் நித்யம் என்கின்றனர் ஸாங்க்யர். ஷணிகங்கள் என்கின்றனர் வைபாஷிகர் முதலான பெளத்தர்-இவ் விருவருள் ஒருவர் அனைத்தையும் நித்யம் என்றும் மற்றொருவர் அனைத்தும் அநித்யம் என்றும் வாசி அறியத் தக்கது: நித்யங்கள் சில—அநித்யங்கள் சில என்ற விபாகமே இவ் விருவர்களின் ஸித்தாந்தங்களில் கிடையாது-ஜைநர்கள் ஸப்த பங்கீ வாதத்தைக் கொண்டு யாவற்றையும் நித்யங்களாயும். அநித்யங்களாயும் அங்கீகரித்துள்ளனர். நித்யங்களாகச் சிலவும், அநித்யங்களாகச் சிலவும் காணப்படும் பதார்த்தங்களை ஒரே வகையில் அடக்குவதும், இரு தகைமையோடு கூடியதாகச் சொல்லுவதும் அத்யந்தம அநுபபந்நம், ஆகவே சிலவற்றை நித்யங்கள் என்றும், சிலவற்றை அநித்யங்கள் என்றும் விபஜித்து அங்கீகரிப்பதே நிபுண க்ருத்யமாம்-வைசேஷிகர்கள் முன்னவர்களைப் போல் அன்றிக்கே நித்ய அநித்ய விபாகம் கொண்டுள்ளனர் ஆயினும் அதிலும் மாறுபாடு உள்ளது, நித்யமான சைதந்யத்தை அநித்யம் என்கின்றனர், எம்பெருமானுடைய நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை அடியோடு ஏற்க வில்லை. அநித்ய பதார்த்தங்களுடைய அநித்யமான ஸமவாய ஸம்பந்தத்தை நித்யம் என்கின்றனர். ஆகவே இவர்களுடைய நித்யாநித்ய விபாக வகையும் மறுக்கப்பட வேண்டிய தாகிறது-ஆக இப்படிப் பலவிதமான பிற மதங்களைச் சார்ந்தவர்களை நிரஸிக்கவே இந்த வியத் ப்ராண பாதங்கள் ஏற்பட்டுள்ளன, இந்த ப்ரயோஜந விசேஷத்தை அதிகரண ஸாராவளியில் ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன் அருளிச் செய்துள்ளார் –
இந்த வியத் பாதத்தில் ஸாதிக்கப்படும் அர்த்தங்கள்–
1-ஆகாசத்துக்கும் ஸ்ருஷ்டி (உத்பத்தி) உண்டு.
2-பூர்வ பூர்வ தத்த்வ விசிஷ்டனான எம்பெருமானிடமிருந்தே உத்தரோத்தர தத்த்வங்கள் உண்டாகின்றன.
3-ஜீவாத்மாவுக்கு உத்பத்தி விநாசங்கள் சரீர ஸம்பந்தம் காரணமாய் ஒளபாதி கங்களேயாம்,
4-ஜீவன் ஜ்ஞான ஸ்வரூபனாய் இருப்பதோடு மட்டுமன்றி ஜ்ஞாதாவாகவும் இருக்கிறான்.
5-ஜீவன் கர்த்தாவாகவும் இருக்கிறான்.
6-இவனுடைய கர்த்ருத்வம் பரமாத்மாதீந மாயிருக்கும்.
7-ஆத்மாவுக்கு சரீரம் போலே, குணிக்கு குணம் போலே, வ்யக்திக்கு ஜாதி போலே பரமாத்மாவுக்கு ஜீவாத்மாக்கள் அம்சம். இவற்றால் எம்பெருமான் பக்கலிலே பர்யவஸிக்கும் ஏழு கல்யாண குணங்களையும் அறிக-
முதலாவதான வியததிகரணத்தின் ஸாரமான அர்த்தம் –தத்த்வங்களின் உத்பத்தியைச் சொல்லுமிடத்தில் சாந்தோக்ய உபநிஷத் தேஜஸ் தத்த்வத்திலிருந்தே உத்பத்தியைக் கூறுகிறது. மற்றும் சில உபநிஷத்துக்களில் ஆகாசத்தை அம்ருதம்” (அழிவற்றது) என்று விசேஷித்துள்ளது. மேலும் ஆகாசம் நிரவயவ தரவ்யம், ஆக இக் காரணங்களால் ஆகாசத்திற்கு உத்பத்தி கிடையாது-சில இடங்களில் உத்பத்தி உண்டு என்று கூறப் பட்டிருந்தாலும் அது ஆத்மோத் பத்தி வாதம் போலே கெளணம், அதாவது ஒளபாதிகம் என்றே கொள்ள வேண்டும்-ஆக, *ஆகாசம் நித்யம்” என்பது பூர்வபஷியின் கருத்து, *ஆகாசத்திற்கு உத்பத்தி உண்டு” என்பது ஸித்தாந்தம் சாந்தோக்யத்தில் சொல்லப்பட்டுள்ள தேஜஸ்ஸின் உத்பத்தி ஆகாசத்தின் உத்பத்தியை நிரோதிக்க வில்லை. தத்த்வங்களின் உத்பத்தியைக் கூறும் உதாஹரணத்திற்காக ஸர்வாநுபவ ஸித்தமான தேஜஸ்ஸை எடுத்துக் காட்டியபடி–மேலும் ”தேஜஸ்ஸுதான் முதலில் உண்டாகிறது’? என்று கூற வில்லை. ஆகவே ஆகாசத்தின் உத்பத்தியும் அந்த உபநிஷத்தில் அநுமதமாகிறது-மற்றைய உபநிஷத்தில் ஸ்பஷ்டமாகவே ஆகாசத்தின் உத்பத்தி கூறப்பட்டுள்ளது-ஏக விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாந ப்ரதிஜ்ஞையும் இப்பொழுது தான் பொருந்தும், மற்றைய தத்த்வங்களை விட ஆகாசம் சிரகால ஸ்தாயியாக இருப்பது பறறி ‘அம்ருதம்’ எனறு சொல்லப்பட்டது. ஆகவே ஆகாசத்திற்கு உத்பத்தி உண்டு–
இரண்டாவதான தேஜோதிகரணத்தின் ஸாரம்–இந்த அதிகாணத்தில் வ்யவஹிதங்களான தத்த்வங்கள் ஸாக்ஷாத் ஸ்வ பூர்வ பூர்வ தத்த்வங்களிடமிருந்தே உண்டாகின்றனவா? அல்லது பூர்வ பூர்வ தத்தவங்களைச் சரிரமாகக் கொண்ட எம்பெருமானிடமிருக்தே உண்டாகின்றனவா என்று விசாரித்து பூர்வ பூர்வ தத்த்வ சரீரகளான எம்பெருமானிடமிருக்தே உண்டாகின்றன என்று ஸித்தாந்திக்கப் படுகிறது–பூர்வபக்ஷம் :–வாயோரக்நி :, அக்நோராப: ‘ என்று பூர்வ பூர்வ தத்த்வங்களி லிருந்தே உத்தரோத்தர தத்த்வங்கள் உண்டாவதாகச் சொல்லி யிருப்பதால் அப்படியே தான் இசைய வேண்டும். முதல் தத்த்வம் மட்டும் நேரே எம்பெருமானிடமிருந்தே உண்டாகின்றது. பிந்தைய தத்த்வங்கள் யாவும் தனக்கு முந்திய தத்த்வங்களிடமிருந்தே யுண்டாகின்றன-ப்ரஹ்மம் கூடஸ்த்தமாய்க் கொண்டு எல்லாவற்றிற்கும் காரணம் ஆகிறது: உலகிலும் கூடஸ்த்த புருஷன் ஒருவன் ஒரு பிள்ளையைப் பெற–பிறகு அவன் மூலம் புத்ர பெளத்ர பரம்பரை உண்டாவதைக் காணா நிற்கிறோம். கூடஸ்த புருஷன் பெளத்ராதி களுக்கு ஸாஷாத் ஜநகன் ஆவதில்லை. அவ்வாறே தான் இங்கும் என்று பூர்வ பக்ஷியின் கருத்து-ஸித்தாந்தம்–ஸித்தாந்தீ இதை மறுத்து பூர்வ பூர்வ. தத்த்வ சரீரகணான எம்பெருமானிட மிருந்தே உத்தரோத்தர தத்த்வங்கள் உண்டாகின்றன என்று ஸ்தாபிக்கிறார் :-தத்த்வங்கள் உண்டாகும் கர்மத்தைச் சொல்லும் இடங்கள் தோறும் ஈஷணம்-அதாவது ஸங்கல்பம் சொல்லப் படுகிறது–*! தத் தேஜ ஐக்ஷத, தா: ஆப: ஐக்ஷந்த ” என்று. கேவல அசேதநங்களுக்கு இந்த ஸங்கல்பம் ஸம்பவியாது. ஆகையால் தேஜஸ் சரீரகனான எம்பெருமான் ஸங்கல்பித்து ஜலத்தை ஸ்ருஷ்டிக்கிறான்: ஜல சரீரகனனான எம்பெருமான் ஸங்கல்பித்து ப்ருதிவியை ஸ்ருஷ்டிக்கிறான் என்றே கொள்ள வேண்டும் – ச்ருதிகள் எம்பெருமானிடமிருந்தே தத்த்வங்கள் யாவும் பிறக்கின்றன என்று கூறுவதும் இவ் வகையில் தான் உபபந்நமாகும் –
நாம ரூப வ்யாகரண ச்ருதியினால் ஸர்வ சப்தங்களும் பரமாத்ம பர்யந்தமாகவே ஸ்வார்த்தத்தைச் சொல்லும். உலகில் ** தேவதத்தன்-யக்ஞதத்தன் £’ என்ற சப்தங்களால் சேதந விசேஷத்தையும், ‘*கடம்-படம்’” என்ற சப்தங்களால் அசேதந விசேஷத்தையும் வ்யவஹரிப்பது–நீண்ட சப்த சக்தியை நடுவே ஒடித்து (குறுக்கி) ப்ரயோகிப்பதாலாகும். ஆக * வாயோரக்நி :; அக்நேராப: ‘” என்ற இடங்களில் உள்ள வாயு வக்நி யாதி சப்தங்கள் அவ் வவற்றை சரீரமாகக் கொண்ட எம்பெருமானிட மிருந்தே தோன்றுவனவாகும் என்பது தேஜோ$திகரண ஸித்தாந்தம்
மூன்றாவதான ஆத்மாதிகாணத்தின் ஸாரம்–ஏகவிஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாந * ப்ரதிஜ்ஞையை நிர்வஹிப்பதற்காக ஆகாசம் உள்பட அனைத்தையும் ப்ரஹ்ம கார்யம் என்றே சொல்ல வேண்டும் என்று வியததிகரணத்தில் நிர்ணயித்த ரீதியில் ஆத்மாவுக்கும் உத்பத்தி சொல்ல வேண்டும் என்பது இந்த அதிகரணத்தின் பூர்வபஷம். * தோயேந ஜீவாந் வ்யஸஸர்ஜ ‘ என்ற ச்ருதிகளும் ஜீவாத்மாவுக்கு உத்பத்தியை ஸ்டஷ்டமாகக் கூறுகின்றன. ஆகவே ஆத்மோத்பத்தி கொள்ள வேண்டுவது அவர்ஜநீயம் என்பது பூர்வபக்ஷத்திற்கு ஸாதக யுக்தி.
ஸித்தாந்தம்–ஆத்மாவுக்கு உத்பத்தி கிடையாது என்பது ஸித்தாந்தம், ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித் ‘* என்ற ச்ருதியினால் ஆத்மாவுக்கு உத்பத்தி கிடையாது என்று ஸ்பஷடமாகச் சொல்லி யிருப்பதால் ஆகாத்துக்குப் போல் ஆத்மாவுக்கு உத்பத்தி கிடையாது. மேலும் *நித்யோ நித்யாநாம் சேதந : சேதநாநாம் ‘” என்ற ச்ருதியினால் ஜீவாத்மாக்கள் நித்யங்கள் என்று ஏற்படுவதாலும் அவற்றுக்கு உற்பத்தி கிடையாது என்பது ஸித்தாந்தம்--கீழ்ச் சொன்ன ப்ரதிஜ்ஞையை நிர்வஹிக்க ஆத்மாவுக்கு ஒரு வகையில் ப்ரஹ்ம் கார்யத்வம் அங்கீகரிக்கப்படுகிறது. அதாவது ஆத்மா நித்யமே யாயினும் அதனுடைய ஸ்வபாவமான தர்மபூத ஜ்ஞாநம் ஸங்கோச—விகாஸமாகிய (சுருக்கம்–விரிவாகிய-மாறுபாட்டை அடைகிறது. ஆகவே அதன் மூலம் ஆத்மாவும் கார்யம் ஆகிறது. எம்பெருமான் ஆத்மாவைச் சில ஸமயங்களில் ஸங்குசித ஜ்ஞாநம் உடையதாகவும், சில ஸமயங்களில் விகஸித ஜ்ஞாநம் உடையதாகவும் செய்கிறான். ஆகவே ஆத்மாவுக்கு ஸ்வபாவ அந்யதா பாவ ரூபமான (ஸ்வபாவ மாறுபாடாகிற) கார்யத்வம் உண்டு. ஆகாசாதிகளுக்கு ஸ்வரூபாந்யதாபாவமாகிற ( உருவ வேறுபாடாகிற) கார்யத்வம் உண்டு என்ற வயத்யாஸம் அறிய வேண்டும். ஆக கார்யத்வம் இருவகைப் படும்- ஸ்வரூபாந்யதாபாவ ரூபான கார்யத்வமே ஆத்மாவுக்கு உண்டு என்பது பூர்வ பக்ஷியின் கருத்து. இது கிடையாது. ஸ்வபாவாந்யதாபாவ ரூபமான கார்யந்தான் ஆத்மாவுக்கு உண்டு என்பது ஸித்தாந்தியின் நிர்ணயம்-இதல் இடைத்த பலன் அதிகரண ஸாராவளீ காட்டுகிறது.
1-தேஹமே ஆத்மா என்கிறான் சார்வாகன்.
2-தேஹத்தை விட ஆத்மா வேறு பட்ட போதிலும் அதுள்ளளவும் இருக்கும் பிராணன், புத்தி-இந்த்ரியம் இவற்றுள் ஏதேனும் ஒன்று தான் ஆத்மா என்கின்றனர் சார்வாகனைப் பின்பற்றும் மற்றும் சிலர்.
3-க்ஷணிகமான ஜ்ஞாந ஸந்தானமே ஆத்மா என்று பெளத்தர்களில் பலர் சொல்லுகின்றனர், இந்த ஸந்தாநம் முக்தி தசையிலும் ஓடுகிறதாகையால் (இருப்பதால்) இது நித்யம் என்னப் படுகிறது.
4-மற்றும் சிலர் ஸ்திரனாகவே ஆத்மாவை இசைந்து ப்ரளயம் வரை இருப்பதாக ஒப்புகின்றனர்.
5-யாதவ ப்ரகாசன் என்பவன் ஸமுத்ரத்தில் நுரை போல் ப்ரஹ்மமாகிற ஸமுத்ரத்தினுடைய பரிணாமமாகவே ஜீவாத்மாவை இசைகின்றனர். இப்படி மற்றும் பலவகைகளில் பலர் ஆத்ம தத்வத்தை ஒப்புகின்றனர். இந்த வாதிகள் அனைவரும் ஆத்மாதிகரண ஸித்தாந்த ரீதியில் பாத தோஷம் அற்ற பல ஸ்ருதிகளால் வெகு தூரத்தே நிரஸிக்கப் பட்டவர்கள் ஆகிறார்கள் என்று அருளிச் செய்கிறார் ஸ்வாமி ஸ்ரீதேசிகன் அதிகரண ஸாராவளியில் -… இதுவே இந்த அதிகரணத்தின் பலன்.–
நான்காவதான ஜ்ஞாதிகரணத்தின் ஸாரம்-இந்த அதிகரணத்தில் ஆத்மா.ஜ்ஞாந ஸ்வ்ரூபனா யிருப்பதோடு ஜ்ஞாதாவாகவும் இருக்கிறான் என்பது நிர்ணயிக்கப் படுகிறது-பூர்வபக்ஷம் :–ஸ்வபாவாந்யதா பாவத்தினால் ஆத்மாவுக்கு ப்ரஹ்ம கார்யத்வம் சொல்ல வேண்டுமானால் இதற்கு ஸ்வபாவம் என்று ஒன்றைக் கொள்ள வேண்டும்-பிறவாதிகள் ஆத்மாவை ஜ்ஞாந மாத்ர ஸ்வரூபன் என்றே கொண்டு ஜ்ஞாநம் என்ற ஸ்வபாவம் இதற்குக் கிடையாது என்கிறார்கள். இந்த ரீதியில் எந்த ஸ்வபாவத்தைக் கொண்டு ஆத்மாவுக்கு கார்யத்வத்தை நிர்வஹிப்பது ? ஆக ஆத்மா ப்ரஹ்ம கார்யமாகாது என்பது பூர்வ பக்ஷம்.
ஸித்தாந்தம்:–* ஜ்ஜோ$த ஏவ! என்ற ஸித்தாந்த ஸூத்ரத்தினால் பூர்வபஷி இசைந்துள்ள ஜ்ஞாந ஸ்வரூபத்வத்தைத் தாமும் இசைந்து அதற்கும் மேலாக ஜ்ஞாந ஸ்வபாவத்வத்தை -ஜ்ஞாத்ருத்வத்தையும் ஸித்தாந்தீ ஸ்தாபிக்கிறார், ”ஜாநாத்யேவாயம் ஆத்மா”’ என்றிவை முதலான பல ச்ருதிகளால் ஆத்மா–ஜ்ஞாதா என்று ஏற்படுகிறது அன்றோ ! ஆகவே ஆத்மா ஜ்ஞாந ஸ்வரூபன் மட்டும் அல்லன், ஜ்ஞாந ஸ்வபாவனும் (ஜ்ஞாதாவும்) ஆகிறான் என்பது ஸித்தாந்தம்
நையாயிகர்கள் :–* ஆத்மா ஜட ஸ்வரூபன். ஆனால் ஜ்ஞாந குணகன், இந்த ஜ்ஞானமும் அவனுக்கு ஸ்வாபாவிகம் அன்று. ஆகந்துகம்– வந்தேறி ‘ என்கிறார்கள்-அத்வைதிகள் : “ஆத்மா ஜ்ஞாந மாத்ர ஸ்வரூபனேயன்றி ஜ்ஞாந குணகன் அல்லன். அதாவது ஜ்ஞாதா அல்லன் ‘” என்கின்றனர்-நாம்–இரண்டையும் இசைகின்றோம் ச்ருதி ப்ரமாணத்தினால். இதுவே இந்த அதிகரணத்தின் ப்ரதாநமான அர்த்தம், இவ்விரு தன்மைகளும் ச்ருதி ஸித்தங்களாகை யாலே ஒன்றையும் விட ஒண்ணாது. ஜாநாத்யேவாயம் ஆத்மா ” என்பன போன்ற பல ச்ருதிகளால் ஆத்மாவுக்கு எப்பொழுதுமே ஜ்ஞாத்ருத்வம் உண்டு என்று ஏற்படுவதால் ஆத்மாவை அஜ்ஞாதா என்று சொல்லும் அத்வைதிகள் மறுக்கப்படுகிறார்கள்-* விஜ்ஞாந கந ஏவ ” என்பன போன்ற ச்ருதிகளால் ஜ்ஞாந ஸ்வரூபத்வம் ஏற்படுகிற படியால் ஆத்மா ஜடஸ்வரூபன் என்கிற நையாயிகர்கள் நிரஸிக்கப்படுகிறார்கள்-இப்படி ஜ்ஞாந ஸ்வரூபனாய் ஜ்ஞாதாவுமான இந்த ஆத்மா அணு ஸ்வருபன் என்றும் இவனுடைய ஸ்வபாவமான ஜ்ஞாநம் நித்யம் என்றும், இவன் ஹ்ருதய தேச வர்த்தீ என்றும், தன்னுடைய தர்ம பூத ஜ்ஞாநத்தினால் சரீரம் முழுக்க வ்யாபித்து அவயவங்கள் தோறும் உண்டாகும் ஸூக து:கங்களின் அநுபவங்களைப் பெறுகிறான் என்றும் பல விஷயங்கள் நிர்ணயிக்கப்படுகிறன.–ஸசாநந்த்யாய கல்பதே ‘ என்ற ச்ருதியில் சொல்லப்பட்டுள்ள விபுத்வம் ஸ்வரூபத்தைச் சார்ந்தது அன்று. மோக்ஷ தசையில் தர்ம பூத ஜ்ஞாநத்திற்கு ஏற்படும் விகாஸத்தைப் பற்றியதாகும்
ஹரி சந்தநத்தின் திவலை சரீரத்தில் எங்காவது ஓரிடத்தில் இருந்தாலும் உடல் முழுவதும் சைத்யாநுபவத்தைத் தருவது போல் ஆத்மா அணு ஸ்வரூபனாயினும். “ஹ்ருதி ஹ்யயம் ஆத்மா”’ என்ற ச்ருதியினால் சரீரைக தேசமான ஹ்ருதயத்தில் இருந்து கொண்டு உடல் முழுவதிலும் ஸுக துக்கா நுபவத்தைப் பெறுகிறான் -தீபம் ஓரிடத்தில் இருந்தாலும் தன் ப்ரபையின் மூலம் எல்லா இடங்களிலும் பரவுவது போல் இந்த ஆத்மாவும் தன்னுடைய தர்ம பூத ஜ்ஞாநத்தினால் சரீரம் முழுவதையும் வ்யாபிக்கிறது:-ஆத்மாவுக்கு தர்ம பூத ஜ்ஞானம் ப்ரதாந குணமாயிருப்பதனால் இத்தை இட்டே ஆஸ்ரயமான ஆத்மாவும் ஜ்ஞானம் என்றே வழங்கப்படுகிறது.-ஆத்மா அணுவாக இருப்பதனால் சரீரத்தைத் தவிர்த்து வெளிப் புறத்தே ஸுக துக்காநுபவம் வர மாட்டாது-தர்ம பூத ஜ்ஞாநத்திற்கு ஸங்கோச விகாஸங்கள் உண்டாகையால் ஸுஷுப்த்யாதி வ்யவஸ்தைகளும ஸம்பவிக்கின்றன-।ஆத்மா–ஜ்ஞாந ஸ்வரூபன்–நித்யமான ஜ்ஞாநத்தை ஸ்வபாவமாகக் கொண்டவன்’” என்றிசைந்தால்–எப்பொழுதும்–எங்கும் அநுபவமே யாகவோ– அல்லது அநுபவம் இன்றியேயோ இருக்க நேரிடும்; ஸுஷுப்தயாதி வ்யவஸ்தைகளும் கூடா ‘” என்றிவ்வாறான ஆக்ஷேபங்கள் —ஆத்மாவை அணு ஸ்வரூபனாகவும், தர்ம பூத ஜ்ஞாநத்தை ஸங்கோச விகாஸங்கள் உடையதாகவும் இசைவதால் பரிஹ்ருதங்களாம் என்ற படி –
ஐந்தாவதான கர்த்ரதிகரணத்தின் சாரம்-ஜ்ஞாதாவான ஆத்மா கர்த்தாவாகவும் இருக்கிறான் என்று நிர்ணயிக்கப்படுகிறது இந்த அதிகரணத்தில்-பூர்பக்ஷம் ச்ருதியினாலும்,ஸ்ரீகீதா வசநத்தினாலும் ஆத்மாவுக்குக் கர்த்ருத்வம் கிடையாது. மேலும் கர்த்ருத்வம் என்பது விகார வகையைச் சேர்ந்ததால் விகார ரஹிதனான ஆத்மாவுக்கு இது அறவே சேராது. ஆக ஜீவாத்மா கர்த்தன் அல்லன், ப்ரக்ருதிக்குத் தான் கர்த்ருத்வம் உண்டு என்பது இந்த அதிகரணத்தின் பூர்வபக்ஷம். இது ஸாங்க்யனுடைய கொள்கை-
ஸித்தாந்தம் :- ஸூத்ரத்தினல் முன் சொன்ன பூர்வ பக்ஷத்தை மறுத்து ஜீவாத்மா கர்த்தா என்று இங்கு ஸ்தாபிக்கப்படுகிறது-சாஸனாத் கட்டளை யிடுவதால் சாஸ்த்ரம்-சாஸ்த்ரம் ஆகிறது. சாஸநம்–விதி–நிஷேதம் என்ற வகையில் இரு விதமாக இருக்கும். இரு வகைப்பட்ட இந்த சாஸநம் சேதகனைப் பற்றித் தானே ப்ரவ்ருத்திக்கும். இட்ட கட்டளையைக் கருத்தறிந்து செயலாற்றக் கூடிய வனாய் அன்றோ அந்த சேதநன இருக்க வேண்டும், ஆகவே இந்த விதி நிஷேத ரூபங்களான சாஸ்த்ரங்கள் ஸபலங்களாக வேண்டி ஆத்மாவைக் கர்த்தா என்றே கொள்ள வேண்டும். அசேதநமான ப்ரக்ருதிக்கே கர்த்ருத்வம் இசைந்தால், அது விதி நிஷேதங்களின் தாத்பர்யத்தை அறிந்து அநுஷ்டிக்க மாட்டாதே, எந்த ப்ரவருத்தியும் புத்தி பூர்வகமாக அன்றோ இருப்பது -ஆகவே அசேதநத்தை நியமிக்க முடியாது. அப்பொழுது சாஸ்த்ரங்கள் வ்யர்த்தங்களாம்-மேலும் பல போக்தாதான் சாஸ்த்ர விஹிதங்களான கர்மங்களை அநுஷ்டிப்பான். இதுதான் உசிதமும். போக்த்ருத்வம் ஆத்மாவுக்கு உண்டு என்று கொண்டுள்ள ஸாங்க்ய பக்ஷத்தில் கர்த்ருத்வமும் ஆத்மாவுக்கே தான் வரும்: இரண்டும் ஸமாநாதிகரணங்க ளாகவே இருக்க வேண்டும் என்பது ஸர்வ ஸம்மதம். லோகத்திலும், உட்காருதல்-. உண்ணுதல் உறங்குதல் இவற்றில் ஆத்மாவே கர்த்தா ஆகிறான் என்பது ப்ரத்யக்ஷ ஸித்தம்-ஆத்மா நித்யனாகையாலே அவனைக் கொல்ல முடியாது. கொல்ல முடியாத ஒரு வஸ்துவை ஒருவன் கொன்றதாக நினைத்தால் அது தவறு தானே: இதைத்தான் முன் காட்டிய ச்ருதி கூறுகிறது. அழிவற்ற ஆத்மாவை அழித்ததாக அழித்தவன் நினைப்பதும், அழிக்கப்பட்டதாக அழிக்கப்படுபவன் நினைப்பதும் ப்ரமமேயாம், என்பது கீழே கூறிய ச்ருதியின் உண்மைப் பொருள், இதனால் ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் கிடையாது என்பது சித்திக்காது. ஸ்வத: ஆத்மா விகார ரஹிதனே யாகிலும் சரீர ஸம்பந்த ப்ரயுக்தமான-ஒளபாதிகமான விகாரங்கள் விருத்தங்கள் அல்லன-சரீரத்தில் இந்தரியங்களை உபாதாநம் செய்வதிலும் விஹாரம் செய்வதிலும் கர்த்ருத்வம் கேவலம் ஆத்ம ஸ்வருபத்திற்குத் தானே, ஒருவன் ஸ்வப்நம் காண்கிறான். இதில் இந்த ஜீவன் வேறு ஒரு சரீரம கொண்டு ஸஞ்சரிப்பதாகத் தோன்றுகிறது. ஸ்வப்நம் காணும் ஜீவன் தன் சரீரத்திலுள்ள இந்த்ரியங்களை எடுத்துக் கொண்டு ஸ்வப்நத்தில் காணப்படும் சரீரத்தில் புகுந்து தன் இச்சைப்படி ஸஞ்சரிக்கிறான். இங்கு இந்த்ரியங்களை எடுத்துச் செல்வதை உபாதாநம் என்றும், ஸ்வப்ந சரீரத்தில் ஸஞ்சரிப்பதை விஹாரம் என்றும் ஸூத்ரகாரர் குறிப்பிட்டு இவற்றில் கர்த்ருத்வம் ஆத்ம ஸ்வரூபத்திற்குத் தான் என்று நிர்ணயிக்கிறார். வெளிப்புற விஷயங்களில் ப்ரவ்ருத்திககும் போது சரீரத்தின் துணை உண்டு, சரீரத்தை நியமிக்கும் போதும்–இந்த்ரியங்களை நியமிக்கும் போதும்-சரீரத்தினுள் ஸஞ்சரிக்கும் போதும் கேவல ஆத்மாதானே கர்த்தா ஆகிறான். இவ் வர்த்தம் ச்ருதியினாலேயும் கிடைக்கின்றது.
நித்யமான ஆத்மாவைக் கர்த்தா என்று இசைந்தால் எப்பொழுதும் எதையாவது செய்த வண்ணமே இருக்கட்டுமே என்ற கேள்வியும் எழாது, ஆத்மா நித்யமாயினும் இச்சை உள்ள போது தான் அவன் செயல்படுவான். இச்சை எப்பொழுதும் வாராது. ஆகவே இச்சை உள்ள போது கர்த்தா ஆகிறான். அதில்லாத போது செயல்படுவதில்லை- மரங்களைச் செதுக்கும் கருவி முதலியன இருந்த போதும் தச்சன் எப்பொழுதுமே மரத்தைச் செதுக்குவதில்லையே. இச்சை உள்ள போது செதுக்குகிறான். இது இல்லாத போது வெறுமனே இருக்கிறான். அவ்வாறே தான் இங்கும்-ஆகவே நித்யமான ஆத்மாவுக்குக் கர்த்ருத்வம் இசைந்தால் வருவதொரு இழுக்கும் இல்லை, அசேதநமான ப்ரக்ருதிக்குக் கர்த்ருத்வம் இசைந்தால் அதற்கு பலாநுபவேச்சை உண்டாகாதபடியால் இதன் காரணமாய் ஒரு ஸமயம் செயல்படுவதும், மற்றோர் ஸமயம் செயல்படாதொழிவதுமாகிற வ்யவஸ்தை இன்றி எபபொழுதுமே செயல்பட்ட வண்ணமே இருக்க வேண்டி வரும்–
ஆறாவதான பராயத்தாதிகரணத்தின் ஸாரம்-இப்படி ஸ்தாபிக்கப்பட்ட இந்தக் கர்த்ருத்வம் ஜீவாத்மாவுக்கு ஸ்வதந்த்ரமாகவே உள்ளதா அல்லது ஈச்வராதீநமா என்று ஸம்ஸயப்பட்டு ஸ்வதந்த்ரமாகவே உள்ளது என்று பூர்வபக்ஷம் வர, அதை மறுத்து பரமாத்மாதீனமே இந்தக் கர்தருத்வம் என்று ஸ்தாபிக்கப்படுகிறது இங்கு.- இந்த அதிகாணத்தில் அவச்யம் எடுத்துரைக்க வேண்டிய அதி ஸூஷ்மங்களான அர்த்த விசேஷங்கள் பலபல இடங்களில் உள்ளன. ஓரளவுக்கு அவை இங்குச் சுருக்கித் தரப்படுகின்றன-பூர்வபக்ஷ ஸாரம் : ச்ருதி வாக்யங்கள் ஸ்வர்காத் யநுபவத்தில் இச்சை உள்ள ஜீவனைக் குறித்து யாகம் முதலியன செய்யுமாறு விதிக்கின்றன-ஜீவன் விதியின் தாத்பர்யத்தை அறிந்து தன் புத்தியைக் கொண்டு ப்ரவருத்திக்க சக்தனாகில் இந்த விதி சாஸ்த்ரங்கள் ஸபலங்களாம். இவ்வாறே நிஷேத சாஸ்த்ரங்களும் அறிந்து அநுஷ்டிக்க அசக்தனா யிருப்பவனை நோக்கி இதைச் செய் ‘ என்று விதிக்கவோ, ‘இதைச் செய்யாதே! என்று நிஷேதிக்கவோ முடியாதன்றோ –எம்பெருமான் அந்த:ப்ரவிஷ்டனாய் ஜீவாத்மாவை எல்லாவற்றிலும் நியமிக்கிறான் என்று ” அந்தர்யாமி ச்ருதிகள் சொல்லுகின்றன. ஆக ஜீவாத்மா பரமாத்மாவினால் தூண்டப்பட்டே எந்த ஒரு செயலையும் செய்கிறான் -ஆத்மாவினால் தூண்டப்பட்ட சரீரம் நல்லன செய்தால் அநுக்ரஹிக்கப் படுவதோ, தீயன செய்தால் தண்டிக்கப் படுவதோ இல்லையே, இவ்வாறே தான் ஜீவனும் பரமாத்மா வுக்கு சரீரமாக இருக்கிறான். ஆக இவனும் நிக்ரஹாநுக்ரஹங்களுக்கு உரியவன் ஆக மாட்டான்.
பெருங்காற்றில் அகப்பட்ட புல் தன் வயம் இழந்து வெள்ளத்தின் வழியே இழிவது போலவும்-பிசாசத்தினால் பீடிக்கப்பட்டவன் தன் வயம் இழந்து அது ஆட்டுவிக்க ஆடுவது-வெள்ளத்திடைப்பட்ட மனிதன் தன் வயமிழக்து வெள்ளத்தின் வழியே இழிவது போலவும் ஜீவாத்மா பரமாத்மாவினால் உட் புகுந்து தூண்டப்பட்டே- ஆக்ரமிக்கப்பட்டே எல்லாவற்றையும் செய்கிறான்-காட்டப்பட்ட உதாரணங்களில் புல்லும்–ஜீவனும் எப்படி. நிக்ரஹா நுக்ரகங்களுக்கு உரியன அல்லனவோ– அப்படியே தான் எல்லாக் கார்யங்களிலும் ஜீவாத்மாவின் நிலையும்-இப்படிப்பட்டவனுக்கு: புத்தி பூர்வக ப்ரவ்ருத்தி கூடாதாகையாலே விதி நிஷேத சாஸ்த்ரங்கள் வ்யர்த்தங்களாகும். விலங்கிட்டு வைத்த ஒருவனை ஓடு என்று உத்திரவு இடுவது போன்றுளது பரமாத்ம பரதந்த்னான ஜீவனை நோக்கி–*இதைச் செய், இதைச் செய்யாதே”’ என்று விதிப்பதும் நிஷேதிப்பதும்-ஆக ஜீவாதமாவுக்குக் கர்த்ருத்வம் இசைந்தாலும் அது பரமாத்மா யத்தம் என்றால் அப்பொழுதும விதி நிஷேத சாஸ்த்ரங்கள் வ்யர்த்தஙகளேயாம்-ஆகையால் ஜீவாத்மா–எதையும் ஸ்வதந்த்ரனாகவே–பரமாத்மாவின் ப்ரேரணம் இன்றியே செய்கிறான் என்றே கொள்ள வேண்டும். இப்பொழுது அந்தர்யாமி ச்ருதியின் அர்த்தத்தில் ஏதாவது ஸங்கோசம் சுருக்கம் அல்லது கெளணார்த்த கல்பகம் என்று ஒரு முறையைக் கொள்ள வேணடும் என்பது பூர்வ பக்ஷத்தின் ஸாரம்.
ஸித்தாந்தமாவது :–ஜீவனுடைய கர்த்ருத்வம் பரமாத்மா யத்தமே ! ஸ்வ தந்த்ர மானது அன்று. அந்தர்யாமி சருதி பலத்தினால் இவ்விதமே தான் கொள்ள வேண்டும் என்பதேயாகும் –அந்நர்யாமி ச்ருதியானது–பரமாத்மா ஜீவனை அந்த:ப்ரவிஷ்டனாய்க் கொண்டே எல்லாச் செயல்களிலும் ப்ரவருத்திப்பிக்கிறான் என்கிறது. ஸ்ரீ கீதையிலும் கண்ணன்-* யாவருடையவும் ஹ்ருதயத்திலும் நான் இருக்கிறேன் ‘” என்றும், “ஈச்வரன் ஸர்வ பூதங்களுடையவும் ஹ்ருதயத்தில் இருந்து கொண்டு ஸங்கல்பத்தினால், யந்த்ரத்தில் ஏற்றிய பூதங்களைப் போல் அனைத்தையும் சுழல வைக்கிறேன் ‘ என்றும், ‘ஸ்ம்ருதியும், ஜ்ஞாநமும். அதன் அழிவும் அனைத்தும் என்னால் தான் !’ என்றும் அருளி யுள்ளான். ஆகவே ஜீவனுடைய கர்தருதவம் பரா யத்தமே-பரமாத்மாதீநமே. அந்தர்யாமி ச்ருதிகளுக்கு வேறு அர்த்தம் கல்பிப்பதும் பல ச்ருதிகளுக்கு விருத்தமாகும். பரதந்தரனே யாகிலும் ஸ்வாதந்த்ர்யமும் உண்டு எனல் ” :-இப்படியாகில் விதி-நிஷேத சாஸ்த்ரங்களுக்கு முன் கூறிய வகையில் வையர்த்யம் வருமே எனில், வாராது. பரமாத்மா ஜீவாத்மாவைப் செயல் படுத்துவது. அதாவது ப்ரவர்த்திப்பது. முதலில் ஜீவன் செய்யும் ப்ரயத்நத்தை அபேக்ஷித்துத் தான். ஆகவே முதல் க்ஷணத்தில் ஜீவனுக்கு ஸ்வாதந்ர்த்யம் உண்டு. அவன், ஈச்வரன் தந்த ஜ்ஞானம் சக்தி இவற்றைக் கொணடு அறிந்து, புத்தி பூர்வகமாகவே ப்ரவருத்திக்கிறான் ஆகையால் புத்தி பூர்வகமாகச் செயல்படுபவனை நோக்கி ஏன் விதி நிஷேத சாஸ்த்ரங்கள் ப்ரவருத்திக்கா ? கட்டாயம் ப்ரவ்ருத்திக்கலாம், அவை ஸபலங்களாகலாம் –
ஈச்வரன் முதல் ஷணத்தில் ஜீவன் செய்யும் ப்ரயத்நத்தைக் கண்டு ஸத் விஷய மாயினும் அஸத் விஷயமாயினும் இரண்டாவது ஷணம் முதல் ஜீவனுக்கு அவ்வவ விஷயத்தில் அநுமதி தருகிறான். ஈச்வரன் முதல் க்ஷணத்தில் உதாஸீகன். இரண்டாவது க்ஷணத்தில் அநுமந்தா என்ற பாகுபாடு அறிதல் வேண்டும்-இங்கு ப்ரதம ப்ரயத்நம். ப்ரதம க்ஷணம் என்பது –அவ்வப் பொழுது ஆரம்பிக்கப் படும் ஒவ்வொரு க்ரியையிலும், அதாவது –படித்தல், படிப்பித்தல், உண்ணுதல் முதலான தொடர்ந்து நடைபெறும் ஒவ்வொரு க்ரியையிலும் முதல் க்ஷணமும் அதில் செய்யும் ப்ரயத்னமே யாகும். இச் சமயத்தில் ஜீவன் தன் புத்தியைச் செலுத்தி ஆராய்ந்தே செய்வதால் ஸ்வாதந்தர்யம் உண்டு. ஆயினும் இதுவும் அவனது இன்னருளால் பெற்றதே யாகும். இதனால் பாரதந்தர்யமும் உண்டு-ஆக ஒருவன் அறிந்து ஸத் கார்யம்–அஸத் கார்யம் இவற்றின் பலன்கனை இவன் தானே அனுபவிக்க வேண்டும். அறிந்து–ஆசை கொண்டு செய்வது தான் ஸ்வாதந்தர்யம். இது பாரதந்தர்யத்துடன் முரண்படாது.
அசேதநங்களுக்கு அறிவில்லாமையால் அவை ஸர்வதா பரதந்த்ரங்களே ! அவற்றை ஈச்வரன் ஆட்டி வைக்கும்போது–ப்ரவ்ருத்திப்பிக்கும் போது அவற்றிக்கு நன்மை தீமைகளாம் பலத்தில் அந்வயமே கிடையாது-ஜீவர்களின் விஷயம் வேறு. கீழே காட்டிய உதாஹரணங்கள் இங்குப் பொருந்தா. பெருங் காற்றில் அகப்பட்ட புல் அசேதநம். அறிவில்லாமையால் அதற்கு ஸ்வாதந்தர்யம் சிறிதும் கிடையாது-வெள்ளத்திடைப்பட்ட மனிதன் சேதநநே யாகிலும் காலாழ்ந்து, நெஞ்சழிந்து, கண் சுழன்று, தன்வயமின்றிச் செயல்படுவதால் அவன் போக்கு அப்பொழுது அவனுடைய புத்தி பூர்வகம் அன்று-பிசாசத்தினால் பீடிக்கப்பட்டவனுடைய நிலையும் இப்படியே, அங்கும் இவன் ஸ்வ புத்தி பூர்வகமாக ஆடுகிறான் அல்லன், பிசாசம் அவன் புத்தியை வேலை செய்ய ஒட்டாமல் தடுத்து விடுகிறது, ஆக இங்கும் சிறிதும் ஸ்வாதந்த்ர்யம் கிடையாது-உலக வழக்கில் க்ரியா கர்த்தாவான ஜீவன் நிலை முன் காட்டியது போன்றதன்று-ஸ்வ புத்தி பூர்வகமாக ஆராய்ந்து அறிந்து ஈடுபடுவதால் இங்கெல்லாம் ஸ்வாதந்தர்யம்-ஸ்வ புத்தி பூர்வகமாக ப்ரவ்ருத்திக்கும் இடந்தோறும் ஸ்வாதந்தர்யம் உண்டு- இந்த ஸ்வாதந்த்ர்யமும் பரமாத்மா தந்ததாகையால் பரமாத்ம பாரதந்தர்யத்தோடு முரண்படாது
இதனால் நம் சரீரத்தைக் காட்டி ஆக்ஷேபமும் ஏறுது. அசேதந சரீரம் போல் ஜீவனும் பரமாத்மாவுக்கு சரீரமே யாயினும்–அது அசேதநம். இவன் சேதநன் என்ற வாசியை ஒரு நாளும் மறக்கலாகாது, ஆகவே முந்தியது தண்டிக்க உரியதன்று. பிந்தியவனனான ஜீவன் சேதநனாய் இருந்து கொண்டு ஸ்வ புத்தி பூர்வகமாகவே ப்ரவருத்திப்பதால் பராயத்த கர்த்ருத்வம் உள்ள போதும் தண்டிக்கத் தக்கவனாகிறான். என்றிவ்வாறான வேற்றுமை அறிந்தால் பூர்வ பக்ஷம் இடம் பெறாது ஒழியும்
இப்படி ஜீவன் முதல் க்ஷணத்தில் செய்யும் ப்ரயத்நத்தைக் கண்டு கொண்டே ஈச்வரன் ஜீவனை ப்ரவருத்திப்பிப்பதால் ஈச்வரனுக்கு இதன் பலாநுபவத்தில் ஸம்பந்தம் கிடையாது. முதல் க்ஷணத்தில் ஸ்வதந்த்ரனாய் அதாவது ஈச்வரன் தந்த புத்தியைக் கொண்டே ஜீவன் ப்ரவ்ருத்திப்பதால் ஈச்வரனுடைய நிக்ரஹ–அநுக்ரஹங்களுக்கு இவன் விஷயமாகிறான். விதி நிஷேத சாஸ்த்ரங்கள் வீணாகாமைக்காக இப்படித் தான் கொள்ள வேண்டும்-இதற்குமேல் இதில்வரும் ஸந்தேஹங்களும்–அவற்றின் பரிஹாரங்களும்-ப்ரதமக்ஷணத்தில் ஜீவன் செய்யும் ப்ரவ்ருத்தியில் ஈச்வரன் காரணம் இல்லை என்று தானே இந்த ஸித்தாந்த ரீதியில் தேறுகிறது. அப்படியாயின் அவனுக்கு ஸர்வகாரணத்வம் கூடா தொழியுமே ? ந்யாயமும் ஸர்வ ப்ரவ்ருத்திகளுக்கும் எம்பெருமானே காரணம் என்பதைத் தானே வலியுறுத்துகிறது. எண்ணில் அடங்காத ஜிவாத்மாக்கள் செய்யும் ப்ரதம ப்ரவ்ருத்திகள்தான் எத்தனை–எத்தனை? அவை அனைத்திலும் , அவன் காரணம் ‘ஆகாது ஒழிபில் ஸர்வ காரணத்வ ஸ்தாபகம் வீணேயாம், என்ற -ஸந்தேஹம் அனைவருக்கும் உண்டு-இதற்குரிய பரிஹாரமாவது:–ஜீவன் செய்யும் முதல் ப்ரவ்ருத்தியிலும் ஈச்வரனுக்குக் காரணத்வம் உண்டு. காரணம் ஆவது இருவகையிலாகும். ஸாமாந்ய காரணம்-விசேஷ காரணம் என்று-கார்நெல்—சம்பாநெல் என்று நெல்லில் பலவகைகள் உண்டு. இவை உண்டாவதற்கு அந்தந்த இனத்தைச் சார்ந்த விதைகள் விசேஷ காரணம். கார்நெல் விதை போட் டால் சம்பாநெல் விளைவதில்லை. சம்பாநெல் விதை போட்டால் கார்நெல் விளைவதில்லை. ஆகவே அந்தந்த இனத்தைச் சார்ந்த விதைகள் விசேஷ காரணங்கள் ஆகின்றன. எந்த நெல் விளைய வேண்டுமானாலும் ஜலம்–எரு முதலியன வேண்டும். பலவகை நெல் பயிர் களுக்கும் ஒரே ஏரிபின் ஜலம் பாய்ச்சுகின்றனர், இங்குப் பாய்ச்சப்படும் ஜலம் ஒரே இடத்தைச் சார்ந்ததால் ஒரே இனம்: விளையும் பயிர்களோ பல பல வகைகள்: ஆகவே ஜலம் முதலியன ஸாமாந்ய காரணங்களாகின்றன. இவ்வாறே தான் ஜீவன் செய்யும் ப்ரதம ப்ரவ்ருத்தியிலும் பரமாத்மா ஸாமாந்ய காரணம் ஆகிறான்-அசேதநமான ஜலம் தான் காரணம் ஆகும் போது ஸங்கல்பித்துக்கொண்டு காரணம் ஆவதில்லையே ! எம்பெருமானோ பரம சேதநனாகையாலே ஸங்கல்ப விசிஷ்டனாய்க் கொண்டு தானே காரணம் ஆகிறான். ஸங்கல்பம் என்பது ஒரு விஷயத்தைப் பற்றித் தானே இருக்கும். ஆக ஒரு விஷயத்தைக் கொண்டிருக்கும் ஸங்கல்பம் விசேஷ ஸங்கல்பமாக முடிய, தத் விசிஷ்டனான ஈச்வரனும் விசேஷ காரணமாகத் தானே நிற்கமுடியும் ! இப்படி. யிருக்க இவன் ஸாமான்ய காரணமாவது எப்படி * என்று மேலும் ஸந் தேஹம் வரும், _ இதற்கு ஸமாதாநம்:–ஜீவாத்மாக்கள் அனைவருக்கும் எம்பெருமான் தான் சரீரேந்த்ரி யங்களைத் தருகிறான். அப்படித் தரும் போது ஸங்கல்பித்துத் தான் தருகிறான். இவ்வளவையும் இசைந்தே தான் அவனை ஸாமான்யகாரணம் என்கிறோம் ப்ரதம க்ஷணத்தில் அந்த ஸங்கல்பம் ஸாமாந்யமானது–பொதுவானது. அதாவது–சரீரம், இந்த்ரியம், புத்தி இவற்றைக் கொடுக்கும் போது–”இவற்றைக் கொண்டு இந்தக் கார்யத்தையே இன்னான் செய்யக் கடவன். மற்றொருவன் இவற்றைக் கொண்டு வேறு ஒன்றைச் செய்யட்டும் ‘* என்று விசேஷித்து ஸங்கல்பிப்பதில்லை.
நன்மை தீமைகளைப் பகுத்தறியும் ஆற்றலையும் ( புத்தி சத்தியையும் ) சரீரேந்த்ரி யங்களையும் தந்து ஸ்வாதந்த்ர்யத்தையும் தரும் ஈச்வரன் எல்லா ஜீவன்கள் விஷயத்திலும் இவ்வாறே ஸங்கல்பிப்பதால் இந்த ஸாமாந்யாகாரத்தை இட்டு ஈச்வரன் ஸாமாந்ய காரணம் ஆகக் குறையில்லை, உத்கடமான புண்ய-பாபங்கள் செய்துள்ள ஜீவன்கள் விஷயம் வேறு. அவர்கள் விஷயத்தில் எம்பெருமானே எல்லா ப்ரவ்ருத்திகளையும் செய்விக்கிறான்.-ஜீவாத் மாக்களுக்கு எம்பெருமான் ஸ்வாதந்த்ர்ய சக்தியைக் கொடுத்துள்ளமையால் முதல் க்ஷணத்தில் செய்யும் ப்ரவ்ருத்தியில் ஜீவன் ஸ்வதந்த்ரனான கர்த்தா ஆகிறான். ஆகவே விதி நிஷேதங்களுக்கும்- அவ்வவற்றின் பலாநுபவத்திற்கும் நிக்ரஹாநுக்ரஹங் களுக்கும் உரியவன் ஆகிறான். ஆகவேதான் ஸூத்ரகாரர் ஜீவனால் செய்யப்பட்ட ப்ரயத்னம் என்ற அர்த்தம் தரும் ‘* க்ருத ப்ரயத்ந ” என்ற பதத்தையே ப்ரயோகித்துள்ளார். ப்ரதம ப்ரவ்ருத்தியிலும் ஜீவன் அத்யந்த பரதந்த்ரனாய் பரமாத்மா செய்விக்கச் செய்கிறானாகில் ஈரி என்றே தான் ஸூத்ரத்தில் பதம் இருக்க வேண்டும். ந .து. க்ருத ப்ரயத்நேதி-இதனால் பகவத் பாரதந்த்ர்யம் ஜீவனுக்கு ப்ரதம க்ஷணத்தில் இல்லை எனறு நினைக்க வேண்டாம். இவன் ஸ்வதந்த்ரனாய் தன்னுடைய புத்தி-சரீர இந்த்ரியங்களைக் கொண்டு ப்ரவ்ருத்தித்தானாகிலும் இந்த ஸ்வாதந்த்ர்ய சக்தி-புத்தி சரீர-இந்த்ரியங்கள் அனைத்தும் அவன் தந்தவை தானே, ஆக எம்பெருமான் தந்த கருவிகளைக் கொண்டே எல்லா ஜீவாத் மாக்களும் எப்பொழுதும்–எதையும் செய்வதால் பாரதந்த்ர்யமும் போகாது-ராஜா ஒருவன் தன் மந்த்ரிக்குப் பெரும் பதவியைத் தந்து போக்ய-போகோபகரணங்களையும் தந்து பரிகரங்களையும் கொடுத்து அவனை ஸ்வதந்த்ரனாக விடுகிறான். அந்த நிலையிலும் அந்த மந்த்ரி ராஜாவுக்கு அதீநன் தானே! பரதந்த்ரன் தானே! ஆகவே ஸ்வாதந்தர் யத்துக்கும், பாரதந்தர்யத்துக்கும் முரண்பாடு இல்லை.
இதற்கு மேலும் உண்டாகும் பெரும் ஸந்தேஹம் ஒன்று-கீழ்க் கூறிய வகையில் எம்பெருமான் யாவருக்கும் ஸாமாந்ய காரணமாகவே நிற்கிறான் என்றால் ஈச்வரன் தந்த ஸ்வாததந்த்ர்யம் புத்தி-சரீரம் இந்த்ரியங்கள் இவற்றைப் பெற்றுள்ள ஜீவாத்மாக்கள் அனைவரும் ப்ரதம க்ஷணத்தில் ஏக ரூபமான கார்யத்திலேயே-அதாவது புண்ய கார்யத்திலேயோ அல்லது பாப கார்யத்திலேயோ ப்ரவருத்திக்கட்டுமே ! ஆனால் அப்படி யின்றி சிலர் புண்ய கர்மங்களிலும், வேறு சிலர் பாப கர்மங்களிலும் அன்றோ ப்ரவ்ருத்திக்கின்றனர். இத்தகைய வைஷம்யம் (வேறுபாடு): ஏன் ? எதனால் ! என்பதே இங்கு உண்டாகும் ஸந்தேஹம் இதற்குப் பூர்வர்கள் காட்டும் பரிஹாரம்.-ஈச்வரன் ஜிவாத்மாக்கள் விஷயத்தில் செய்யும் உபகாரங்கள் இருவகைப்படும். ஸாமாந்யம் என்றும் விசேஷம் என்றும். யாவருக்கும் பொதுவில் சரீரேந்த்ரியங்களைக் கொடுப்பதும், பின்னர் அதை வ்யாபிப்பது, தரிப்பது, ப்ரவ்ருத்தி ஸாமர்த்யத்தை உண்டு பண்ணுதல் முதலியனவும் ஆன உபகாரங்கள் ஸாமாந்யங்கள். இவ்வளவால் எம்பெருமானுக்கு ஸர்வ காரணத்வமும் ஸர்வ பல ப்ரதத்வமும் பொருந்துகிறது-பின்னர் விஷம ப்ரவருத்தி -அதாவது ஜீவாத்மாக்களில் சிலர் ஸத் கார்யங்களில் செய்யும் ப்ரவ்ருத்தியும், அஸத் கார்யத்தில் செய்யும் ப்ரவ்ருத்தியும் உண்டாகும் விஷயத்தில் காரணம் வேறு. எந்த ஒரு கார்யமும் ஸாமாந்ய காரணத்தினால் மட்டும் உண்டாவதில்லை. விசேஷ காரணமும் வேண்டியுள்ள தன்றோ ! ஸாமாந்ய காரணமான ஜலமும், விசேஷ காரணமான விதைகளும் சேர்ந்தால் தானே நெற் பயிர்கள் விளைகின்றன-அவ்வாறே எம்பெருமானுடைய ஸாமாந்ய ஸங்கல்பத்தினலே உண்டாகிற சரீரத் திலே ஸத்வம்-ரஜஸ்-தமஸ் என்ற குணங்களின் உத்பவம்… அபிபவம்.ஒன்று குறைவதும் மற்றொன்று மேலோங்கி நிற்பதும், வாஸநா விசேஷம்–முன் பிறவியில் அடிக்கடி ஒரு கார்யத்தைச் செய்ததால் உண்டாகும் ஸம்ஸ்காரம் என்றிவை யாகிற விசேஷ காரணங் களாலே விஷம ப்ரவ்ருத்திகள் உண்டாகின்றன–
பலாநுபவம் பண்ணும் போது விஷயங்கள் சேர்வதும் எம்பெருமானுடைய ஸாமாந்ய ஸங்கல்பத்தினால் தான். எம்பெருமான் அநுபவ யோக்யங்களான விஷயங்களைக் கொடுத்தது வேறு காரணத்திற்காக. ஆனால் அவை பயன்படுவது வேறு விதத்தில்-அதாவது முன் செய்த முழு வினைகளின் பயனை அநுவிப்பதற்காகவே ஸர்வேச்வரன் விஷயங்களைச் சேர்த்தான். அவ்வளவே. இவ் விஷயங்களைக் கண்டு இவற்றைப் பெற விரும்பிப் புதிதாக உபாயங்களை அநுஷ்டிப்பதற்காக அன்று. பிறகு ஸந்தர்ப்ப வசத்தினால் ஜீவர்கள் இவற்றைப் பெற விரும்பி ஸாதநங்களை அநுஷ்டிக்கப் புகுகின்றனர். இங்கு எம்பெருமான் ப்ரதம க்ஷணத்தில் உதாஸீந மாகவே இருந்து விடுகிறான்-குடத்தைப் பார்ப்பதற்காக ஒருவன் விளக்கு ஏற்றினான். துணியைத் தேட விரும்பிய ஒருவன் இந்த விளக்கைக் கொண்டு துணியைப் பார்க்க முயல்கிறான். விளக்கு ஏற்றியவன் –நான் குடத்தைப் பார்ப்பதற்காகவே இந்த விளக்கை ஏற்றினேன். இதன் உதவியைக் கொண்டு துணியைப் பார்க்கக் கூடாது என்று தடுப்பதில்லையே. உதாஸீநனாகத்தானே இருப்பான். அவவாறே தான் இங்கும்-மேலும் ஒரு கேள்வியும் அதன் பதிலும்–அத்ருஷ்டம், பூர்வ வாஸனை இவற்றால் ஜீவனுக்கு இச்சை உண்டாக அதனால் தூண்டப்பட்டுத்தானே ஜீவன் ஒவ்வொரு கார்யத்திலும் ப்ரவ்ருத்திக்கிறான், இப்படியாகில் இச்சைக்கு வசப்பட்ட இவன் காற்றில் அகப்பட்ட புல்லே போல் பரவசனாகத்தானே ப்ரவ்ருத்திக்கிறான். ஆகவே ஜீவனுக்கு ஸ்வாதந்த்ர்யம் கிடையாது, விதி–நிஷேத சாஸ்த்ரங்கள் வ்யர்த்தங்களே என்று மற்றோர் ஆக்ஷேபம் முளைக்கிறது -இதற்குப் பதில்–ஒரு விஷயத்தில் இச்சை உண்டானால் அதன்படியே ப்ரவ்ருத்திக்க வேண்டும் என்ற நியதி கிடையாது. அதனால் வரும் நன்மை தீமைகளை ஆராய்ந்து அறிந்து விஷயங்களைக் கொள்ளவோ-விலக்கவோ ஜீவன் வல்லவனனாகிறான். ஆகையால் இச்சைக்கு வசப்பட்ட இவன் காற்றில் அகப்பட்ட புல் போல் ஆகான்-ஒருவனுக்குப் பெரும் பசி உண்டாகி விட்டது. பசி என்றால் என்ன ? உண்ண வேண்டும் என்ற ஆசை தானே ! இந்த ஆசையினால் உந்தப்பட்டு போஜநம் செய்யப் ப்ரவ்ருத்திக்கிறான் இவன். அந்நம் முதலியனவும் கொண்டு வைக்கப்படுகின்றன. நெருங்கி உண்ணப் போகும் ஸமயத்தில் அதில் விஷம் கலந்திருப்பதை அறிகிறான். உடனே என்ன செய்கிறான் ? உண்ண ஆசை அதிகமாக இருந்தும் அதை உண்கிறானா ? இல்லையே ? உண்ணும் ஆசையை உடனே விலக்கி விடுகிறான் அன்றோ ! இதனால் என்ன ஏற்படுகிறது ? இச்சை அதிகமாக இருப்பினும் அதனால் தூண்டப்பட்ட ஜீவன் தன்னுடைய ப்ரவருத்தியினால் நல்லது வருமா கெட்டது வருமா ? என்று ஆராய்ந்து நல்லது கிடைக்கு மாயின் எடுததுக் கொள்ளவும், கெட்டது வருமாயின் இச்சையை அடக்கி அதை விட்டு விடவும் சக்தனாகிறான் என்ற உண்மை புலனாகிறது-இப்படிப்பட்ட இவன் அவச்யம் கர்த்தவ்யங்களான கர்மங்களை விட விருப்பம் உண்டாகும் போது அதனால் வரும் அர்த்தத்தை அறிந்து அந்த விருப்பத்தை விலக்க வேண்டும். இவ்வாறே செய்யக் கூடாதவற்றைச் செய்ய விருப்பம் உண்டாகும் போதும் அதனால் வரும் அநர்த்தங்களை அறிந்து அந்த விருப்பத்தையும் விலக்க வேண்டும். இப்பொழுது க்ருத்யங்களைச் செய்யவும் அக்ருத்யங்களை விடவும் முற்படுவான். பரம ஸ்ரேயஸ்ஸையும் பெறுவான். இவ்வாறு செய்யத் தவறிய போது தான் தண்டிக்கத் தக்கவனாகிறான்–
இவ்வளவும் இந்த அதிகரண ச்ருத ப்ரகாசிகையின் சுருக்கமே. கடைசியில் அங்கு ஸார தமமான அர்த்த விசேஷத்தைக் காட்டும் இரண்டு வாக்யங்களை மட்டும் இங்கு தருகிறேன் அப்படியே –அந்தர்யாமி ச்ருதிக்கும் அர்த்தத்தில் ஸங்கோசம் ஏற்படுகிறது-அநுமதியில் வரும் ஆக்ஷேபமும் பரிஹாரமும்--இரண்டாவது க்ஷணம் முதல் எம்பெருமான் ப்ரதம ப்ரவ்ருததி செய்த ஜீவனுக்கு அவ் விஷயத்தில் அநுமதி செய்கிறான் எனறால் ப்ரவ்ருத்தி பலமான ஸுக துக்கா நுபவங்கள் யாருக்கு ஜீவனுக்கா ? எம்பெருமானுக்கா ? அநுமதி தந்தவனுக்குத் தானே அவை பொருந்தும் என்ற கேள்வி இங்கு வர, இதற்குப் பரிஹாரம் இருவருக்கும் பொதுவான பணம் இருக்கிறது. அதில் ஒருவன் தன் பங்கை எடுத்து ராஜாவுக்குக் காணிக்கையாகத் தர நினைக்கிறான். தன் பணமே யாயினும் மற்றவனுடைய அநுமதி இன்றி அதை எடுக்க இவனுக்கு உரிமை கிடையாதே ! என்ன செய்கிறான் ? மற்றொருவனுடைய அநுமதியையும் தானே பெறுகிறான். தன் பங்கை எடுத்து ராஜாவுக்குக் காணிக்கை வைக்கிறான். ராஜா இதனால் மகிழ்ந்து இவனுக்குப் பரிசுகள் பல தருகிறான். இவை யனைத்தும் அனுமதி தந்தவனுக்கா ? அதைப் பெற்றுப் பணம் தந்தவனுக்கா? அது போலவே அநுமதி தந்த. ஈச்வரனுக்கு ஸூக துக்காநுபவங்களில் பங்கு கிடையாது.
தத்த்வ ஸாரத்தின் ஸாரம்–ச்ருத ப்ரகாசிகாசார்யரின் குருவான நடாதூர் அம்மாள் என்கிற வாத்ஸ்ய வரத குருவும் தாம் அருளிய தத்வ ஸாரம் எனும் அத்புத கரந்தத்தில் இவ் விஷயத்தைத் தெளிவு பட அருளி யுள்ளார்-முதல் க்ஷணத்தில் உதாஸீஈன். இரண்டாது க்ஷணத்தில் அநுமந்தா. பிறகு ஸஹகாரீ என்ற நிலைகளைப் பெறுகிறான் எம்பெருமான்-தயா கார்யம்–ஒருவன் தவறு செய்யும் போது அதை விலக்க வல்ல ஒருவன் விலக்காமல் இருந்தால் அவனை நிர் தயன் என்று தானே சொல்லுவார்கள். அவ்வாறே ஈச்வரன் தயா வானாக இருந்தால் ஜீவன் அஸத் கார்யங்களில் ப்ரவ்ருத்திக்கும் போது ஏன் தடுக்காமல் இருக்கிறான் என்ற கேள்வி அடுத்து இடம் பெறுகிறது. இதற்கும் பதில் –ப்ரதம க்ஷணத்தில் செய்த ப்ரவ்ருத்தியின் பலமாக இரண்டாவது க்ஷணங்களில் எம்பெருமான் அநுமதிப்பதாய் இவனுக்கு ஒரு குற்றமில்லை. தண்டிக்கப்பட வேண்டியவனை தண்டிப்பது ஆளும் அரசனுக்கு எப்படி குணமாமோ ? அப்படியே ஸர்வ நியந்தாவான எம்பெருமானுக்கும் குணமே ! என்று கொள்ள வேண்டும்”-இங்கு அதிகரண ஸாராவளியில் ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன ப்ரதம ப்ரவ்ருத்தி யிலும் ஈச்வரன் ப்ரேரகனே என்று ஸாதித்து கீழே காட்டிய வகையில் ப்ரேரகத்வத்திற்கும் உதாஸீநத்வத்திற்கும் விரோதம் இல்லை என்பதை ஸூஷ்ம புத்தியைக் கொண்டு அறிய வேண்டும் என்று அருளி யுள்ளார்
ஈச்வரன் ஸ்வதந்த்ரனாக இருப்பதனால் கர்த்தா என்றும், ஜீவனைச் செய்விக்கிறபடியால் காரயிதா என்றும், ஒரு கார்யத்தில் முன்னமே ப்ரவ்ருத்தித்தவனை மேலும் ப்ரவருத்திப் பிக்கிறயடியால் அநு மந்தா என்றும், பயிர்களின் முளைகளுக்குத் தண்ணீர் போல் ஸர்வ. கார்யங்களுக்கும் ஸாமாந்ய ஹேதுவாக. இருப்பதால் உதாஸீநன் என்றும், ‘எல்லா நிலைகளினும் யாவற்றையும் கண்டு நிற்பதால் ஸாக்ஷீ என்றும் அவனவனுடைய கர்மங்களை அநு சரிசித்து கார்ய விசேஷங்களில் ப்ரவர்த்தகனாய் உடனிருந்து செய்வித்தலால் ஸஹ காரீ என்றும் இப்படி யெல்லாம் ஈச்வரன் ஒருவனே சொல்லப் படுகிறான்-பொருள்களை நிறுத்திக் காட்டும் தராசு நிறுக்கும் போது ப்ரமாணம் ( அளவை) என்ற பெயரால் பெறுகிறது. அதையே மற்றைய பொருள்களுடன் ஸமமாக நிறுக்கும் போது ப்ரமேயம் ஆகிறது. ஒன்றே ப்ரமாணமும்–ப்ரமேயமும் ஆகிறது-அது போன்றே ஈஸ்வரன் ஜீவனுடைய ப்ரதம ப்ரவருத்தியில் ப்ரேரகனாகவும் ஆகிறான். உதாஸீநன் -ஸாஷீ என்பதால் ப்ரேரகத்வம் இல்லை என நினைக்கலாகாது என்று அருளினார்
அம்சாதிகரணத்தின் ஸாரம்-இந்த அதிகாணததில் ஜீவன் ப்ரஹ்மத்திற்கு அப்ருதக்ஸித்த விசேஷணமாகக் கொண்டு அம்சன் ஆகிறான் என்று ஸ்தாபிக்கப் படுகிறது.ஜீவாத்மாக்கள் –ப்ரஹ்மத்திற்கு பாதம் என்றும், அம்சம் என்றும், சக்தி என்றும் ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லப் பட்டுள்ளமையால் இரண்டு தத்தவங்களும் ஒன்றே தானோ எனறு மயங்கும் பிற மதவாதிகளை நிரஸிகக இந்த அதிகரணம் ஆவச்யகமாகிறது-ஜீவ-ப்ரஹ்ம தத்த்வங்களுக்கு ஸ்ருதிகளில் ஓரிடத்தில் பேதமும் மற்றோரிடத்தில் அபேதமும சொல்லி யிருப்பதால் இவையையும் சரீராத்ம பாவத்தைக் கொண்டே நிர் வஹிக்க வேண்டி யுள்ளது. ஆக ப்ரஹ்மம் என்பது சேதநா சேதந சரீரகமாய்– விசிஷ்ட வஸ்துவாய் இருக்கிறது. குணியை விட்டுப் பிரியாத குணம் போலவும், வ்யக்தியை விட்டுப் பிரியாத ஜாதி போலவும் , பாபாவத்தான (ப்ரகாசம் உடைய) வஸ்துக்களை விட்டுப் பிரியாத ப்ரபையை (ப்ரகாசத்தை)ப் போலவும் விசிஷ்டமான ப்ரஹ்மத்தை விட்டுப் பிரியாதனவாய் ப்ரஹ்மத்துக்கு அப்ருதக் ஸித்த விசேஷணங்களாய் இருந்து கொண்டு சேதனங்களும் அசேதனங்களும் அம்சங்களாகின்றன–
இந்தப் பாதத்தில் உள்ள ஏழு அதிகரணங்களில் மூன்று அதிகரணங்களே ஸாக்ஷாத்தாக ஸங்கதங்கள். ஆகாசம், தேஜஸ், ஆத்மா இவற்றுக்கு ப்ரஹ்ம கார்யதவத்தை ஸ்தாபிக்கிற முதல் மூன்று அதிகரணங்களேயாம் அவை. மற்றைய நான்கு அதிகரணங்கள் ப்ரஸங்காத் ஜிவ ஸ்ரூபத்தை விளக்க வந்தன ஆகும்
பூர்வ மீமாம்ஸையிலேயே ஜீவ ஸ்வரூபம் நிர்ணயிக்கப் பட்டுள்ளதால் மறுபடி இங்கு எதற்காக அது பற்றிய நிர்ணயம்– விசாரம் ? என்ற ஸந்தேஹம் சிலர்க்கு வருகிறது. இதற்கு அதிகரண ஸாராவளீ கூறும் பதில்-பூர்வ மீமாம்ஸையில் தேசாந்தரத்தில் காலாந்தரத்தில் வரக் கூடிய பலத்தை அநுபவிப்பதற்கு ஏற்ப ஜீவாத்மா சிரகால ஸ்தாயீ என்றே கூறப்பட்டுள்ளது-நமக்கு அது போதாது. ப்ரஹ்ம காண்டத்தில் மூன்றாவதான அத்யாயத்தில் ஜீவ ஸ்வரூப ஜ்ஞாநம் கலந்த பரமாத்மோபாஸநம் சொல்லப் போகிற வ்யாஸ மஹர்ஷி அதற்கு அநுகுணமாக இங்கு ஆத்மாவுக்கு நித்யத்வம். ஜ்ஞாத்ருத்வம், கர்த்ருத்வம், பரமாத்மாதீநத்வம் முதலியன அருளிச் செய்கிறார் இங்கு என்று ஸமாதானம் –
—
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ.வே. வித்வான் அபிநவ தேசிக உத்தமூர் தி. வீர ராகவாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
Leave a Reply