ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் தனியன்களும் வாழித் திருநாமங்களும்–

வாக்ய குருபரம்பரையில் முதல் மூன்று வாக்யங்கள் வேதவாக்யங்கள். மற்றவை ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச்செய்தது ஆகும்
அஸ்மத் குருப்யோ நம:
-எனக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களைச் செய்து வைஷ்ணவனாக்கிய எனது ஆசார்யனை வணங்குகிறேன்
அஸ்மத் பரமகுருப்யோ நம:-எனது ஆச்சார்யனின் ஆசார்யனையும் அவர் சம காலத்து ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:-எனது எல்லா ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயையும் திருவரங்கச் செல்வத்தையுமுடைய எம்பெருமானாரை வணங்குகிறேன்
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:-ஆச்சார்ய அபிமானம் ஆகிற செல்வமுடைய பெரிய நம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீமத் யாமுந முநயே நம:-வேதாந்த சித்தாந்தமாகிற செல்வமுடைய ஆளவந்தாரை வணங்குகிறேன்
ஸ்ரீ ராமமிஸ்ராய நம:-ஆச்சார்ய கைங்கர்யம் ஆகிற செல்வரான மணக்கால் நம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நம:-ஆச்சார்ய அனுக்ரஹம் ஆகிற செல்வமுடைய உய்யக்கொண்டாரை வணங்குகிறேன்
ஸ்ரீமந் நாதமுநயே நம:ஸ்ரீவைஷ்ணவ குலபதியும், ப்ரபந்ந குலத்துக்கு முதல்வரும், பரமாச்சார்யரான நம்மாழ்வாரிடம் அருளிச் செயல் செல்வம் பெற்றவரான ஸ்ரீமந் நாதமுநிகளை வணங்குகிறேன்
ஸ்ரீமதே சடகோபாய நம:-மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயை உடையவரான நம்மாழ்வாரை வணங்குகிறேன்
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:-பெரிய பிராட்டியாரிடம் ரஹஸ்யத்ரய உபதேசம் பெற்ற மிக்க செல்வரான சேனை முதலியாரை(முதல்வர்) வணங்குகிறேன்
ஸ்ரீயை நம:-தேவதேவ திவ்ய மஹிஷியாய் எம்பெருமானுக்கு வல்லபையாய் புருஷகாரம் மிக்க செல்வமுடையவளை வணங்குகிறேன்
ஸ்ரீதராய நம:-திருவுக்கும் திருவாகிய செல்வனான எம்பெருமானை வணங்குகிறேன்.

ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி அருளிச் செய்த ஸ்லோக குருபரம்பரை ஸ்லோகம் –
அஸ்மத் தேசிகம்-அஸ்மதீய பரமாச்சார்யான் -அஸேஷாந் குரூந்:-ஸ்ரீமல் லக்ஷ்மண யோகி புங்கவ:மஹாபூர்ண :யாமுநம் முநிம்:ராமம்-பத்ம விலோசனம்: நாதம் முநிவரம் -ஸடத்வேஷிணம்: ஸேநேஸம்: ஸ்ரியம் இந்திரா ஸஹசரம்:நாராயணம்:ஸம்ஸ்ரயே:

அஸ்மத் தேசிகம் : நம் ஆசார்யனையும்
அஸ்மதீய பரமாச்சார்யான் : ஆச்சார்யனுக்கும் ஆச்சார்யரான பரமாச்சார்யர்களையும்
அஸேஷாந் குரூந்:-ஸ்வாமி மணவாளமாமுனிகள் வரை உள்ள மற்றுமுள்ள எல்லா ஆச்சார்யர்களையும்
ஸ்ரீமல் லக்ஷ்மண யோகி புங்கவ:-யதிராஜரான எம்பெருமானாரையும்
மஹாபூர்ண : பெரிய நம்பியையும்
யாமுநம் முநிம்: ஸ்ரீ ஆளவந்தாரையும்
ராமம் : மணக்கால்நம்பியையும்
பத்ம விலோசனம்: உய்யக் கொண்டாரையும்
நாதம் முநிவரம் : ஸ்ரீமந் நாதமுனிகளையும்
ஸடத்வேஷிணம்: நம்மாழ்வாரையும்
ஸேநேஸம்: சேனைமுதலியாரையும்
ஸ்ரியம் இந்திராஸஹசரம்: பெரிய பிராட்டியையும், திருமகள் கேள்வனான
நாராயணம்: நாராயணனையும்
ஸம்ஸ்ரயே: ஆஸ்ரயிக்கிறேன்(தஞ்சமாகப் பற்றுகிறேன்)

ஜ்யேஷ்டாமாஸே த்வநூராதே ஜாதம் நாதமுநிம் பஜே|
ய: ஸ்ரீஸடாரே: ஸ்ருதவாந் ப்ரபந்த மகிலம் குரோ:-
-ஆனி அனுஷத்தில் அவதரித்தவராய், ஆசார்யரான நம்மாழ்வாரிடமிருந்து எல்லா திவ்யப்ரபந்தங்களையும் கேட்டவரான நாதாமுனிகளிடம் பக்தி செய்கிறேன்.
ஆசாரியர்களில் முதல்வரான ஸ்ரீமந்நாதமுனிகள் ஸேனைமுதலியாருடைய முக்கியமான படைத்தலைவரான கஜாநநர் என்னும் யானை முகமுடைய நித்யஸுரியினுடைய அம்ஸமாய், சோழ தேசத்தில் உள்ள வீரநாராயணபுரம் என்னும் காட்டுமன்னார்கோவிலில் கிபி 823 ஆம் ஆண்டு ஆனி மாதம் 7ஆம் தேதி புதன்கிழமை பௌர்ணமி திதி அநுராதா நக்ஷத்ரத்தில் அவதரித்தார். ஸ்ரீரங்கநாதன் என்பது அவர் திருநாமம். அவர் யோகத்திலே வல்லவராய் இருந்தபடியால் முனி என்கிற சப்தம் சேர்ந்து ஸ்ரீரங்கநாதமுனி என்று வழங்கப்பட்டார்.
இவருடைய திருவடிகளில் ஆஸ்ரயித்த சிஷ்யர்கள் எண்மர்.-உய்யக்கொண்டார்,-குருகைக்காவலப்பன்,நம்பி கருணாகர தாஸர், ஏறுதிருவுடையார், திருக்கண்ணமங்கையாண்டான், வானமாமலைத்தேவியாண்டான்,உருப்பட்டூர் ஆச்சான்பிள்ளை மற்றும்சோகத்தூர் ஆழ்வான் ஆகியோர் ஆவர்.

ஒருநாள் சோழராஜன் ஸபரிவாரனாய் வேட்டையாட வந்து திரும்பிப்போகையில், இவருடைய பெண்பிள்ளைகள் வந்து “நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்பிள்ளையுமாக வந்து நாதமுனிகள் எங்கே என்று தேடிப்போனார்கள்” என்று தெரிவிக்க, அது கேட்ட நாதமுனிகள் பெருமாளும், பிராட்டியும், இளையபெருமாளும் சிறியதிருவடியுமாக இந்நால்வர் வந்திருக்கக் கூடும் என்று எண்ணி, அவர்களை பின் தொடர்ந்து சென்ற நாதாமுனிகள் எதிரே வந்தவர்களிடம் இப்படி யாரையேனும் பார்த்தீர்களா என்று கேட்டுக்கொண்டே கங்கைகொண்டசோழபுரத்திற்கு முன்பு அமைந்துள்ள செம்போடை என்னும் சொர்க்கப்பள்ளம் என்ற சிற்றூர் வரை சென்று அங்கு இருந்தவர்களிடம் விசாரிக்க, அவர்கள் நாங்கள் பார்க்கவில்லை என்று தெரிவித்தார்கள். நாதமுனிகளும் ஏங்கி விழுந்து மோஹித்து அங்கேயே திருநாடு அலங்கரித்தார். இதுவே நாதமுனிகளின் திருவரசு அமைந்துள்ள இடம் ஆகும்.

ஆனிதனில் அனுட்டத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தாருக்கு உபதேசம் அருளிவைத்தான் வாழியே
பானுதெற்கிற் கண்டவன் சொல் பல உரைத்தோன் வாழியே
பராங்குசனார் சொற்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத்தாளத்திற் கண்டு இசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே
நானிலத்திற் குருவரையை நாட்டினான் வாழியே
நலந்திகழ் நாதமுனி நற்பதங்கள் வாழியே

புண்டரீகாக்ஷர் என்னும் திருநாமமுடையவருமான ஸ்ரீ உய்யக்கொண்டாரின் திருநக்ஷத்ரம்.-சித்திரை கார்த்திகை 

மேஷமாஸே ஸரோஜாக்ஷம் க்ருத்திகா ஜாதமாஸ்ரயே
நாதயோகி பதாம்போஜ த்வந்த்வ ப்ரணவ மாநஸம்
நம: பங்கஜ நேத்ராய நாத ஸ்ரீபாத பங்கஜே
ந்யஸ்த ஸர்வபராயாஸ்மத் குலநாதாய தீமதே

நமஸ்யாம்யரவிந்தாக்ஷம் நாத பாவே வ்யவஸ்த்திதம்
சுத்த ஸத்வ மயம் சௌரே: அவதாரம் இவாபரம்

நாதமுனிகள் அவதரித்து 63 வருடங்கள் கழித்து பராபவ வருடத்தில் (கிபி 886) சித்திரை மாதம் கார்த்திகை நக்ஷத்ரம் அன்று ஜயத்ஸேநர் என்னும் நித்யஸுரியின் அம்சமாக திருவெள்ளறை என்னும் திவ்யதேசத்திலே பூர்வஸிக ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண குலத்திலே அவதரித்தார்.-மற்ற திருநாமங்கள் – புண்டரீகாக்ஷர், பத்மாக்ஷர் மற்றும் அரவிந்தாக்ஷர்.
ஆசார்யன் – ஸ்ரீமந் நாதமுனிகள்.-நாதமுனிகள் புண்டரீகாக்ஷரிடமும், நீரும் யோகத்தைப் பெற்றுப் போகிறீரா என்று வினவ, பிணங்கிடக்க மணம் புணர்வருண்டோ? என்று பதிலுரைத்தாராம்.
சிஷ்யர்கள் – மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணிப் பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்கார தாஸர், ஸ்ரீ புண்டரீக தாசர், கோமடம் திருவிண்ணகர் அப்பன் மற்றும் உலகப் பெருமாள் நங்கை ஆகியோர் ஆவர். இவர் நூற்று ஐந்து திருநக்ஷத்ரங்கள் (105 வயது) எழுந்தருளியிருந்தார் என்பது பெரிய திருமுடி அடைவு என்கிற கிரந்தம் கொண்டு அறிந்து கொள்ள முடிகிறது.

வாலவெய்யோன் தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பி தொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே
நாவிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே
நாலெட்டின் உப்பொருளை நடத்தினான் வாழியே
மாலரங்க மணவாளர் வளமுரைப்போன் வாழியே
வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே

—————–

வைஸாக ரோஹிண்யுதிதம் கோஷ்டீ பூர்ணம் ஸமாஸ்ரயே|
சரமஸ்லோக தாத்பர்யம் யதிராஜாய யோவதத்||
ஸ்ரீ வல்லப பதாம்போஜ தீபக்த்யம்ருத ஸாகரம் |
ஸ்ரீமத் கோஷ்டீபுரீ பூர்ணம் தேஸிகேந்த்ரம் பஜாமஹே ||-
-ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பிகள் தனியன் -ஸ்ரீய:பதியின் திருவடித் தாமரையில் ஞானமும் பக்தியுமாகிற அமுதங்களுக்குக் கடல் போன்றவரும், திருக்கோட்டியூர் நம்பியென்னும் பெயருடையவருமான ஆசார்ய உத்தமரை ஆஸ்ரயிக்கிறோம்.
பரமாசார்யரான ஆளவந்தார் அவதரித்தப் பதினோரு வருடங்கள் கழிந்த பின் ஸர்வஜித் வருடம், வைகாசி மாதம் ரோஹிணி நக்ஷத்ரம் காஸ்யப கோத்ரத்தில் பெரியாழ்வாருக்கு பரம ஆப்தரான செல்வநம்பியின் திருவம்சத்தில் ஸ்ரீ புண்டரீகர் என்னும் நித்யஸூரியின் அம்ஸமாய் பூர்வஸிக ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண குலத்திலே குருகேசர் (திருக்குருகைப்பிரான்) என்னும் திருநாமம் உடையவராய் அவதரித்தவர் ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பி.நாதமுனிகளிடமிருந்து உய்யக்கொண்டார் மணக்கால்நம்பி மூலம் கிடைத்த பவிஷ்யத் ஆசார்ய விக்ரஹத்தை ஆளவந்தார் தம் சரமதஸையிலே இவரிடம் ப்ரஸாதித்து, அது வந்த வழியையும் அருளிச்செய்து, ரஹஸ்ய அர்த்தங்கள் அனைத்தையும் ஸ்ரீ ராமாநுஜருக்கு உபதேசிக்கும்படியும் நம் தரிசனத்தை அவர் திருநாமத்தாலே விளங்கவைக்கும்படியும் நியமித்துச் சென்றார்.ஸ்ரீ ராமாநுஜருக்கு திருமந்திரம் மற்றும் சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தை உபதேசித்தார்.-கருணைக்கடலான ஸ்ரீ ராமாநுஜருக்கு எம்பெருமானார் என்று திருநாமம் சாற்றியாருளியவர் ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பி.-ஸ்வாமி திருமாலையாண்டானிடம் திருவாய்மொழிக்கு அர்த்தம் கேளுமென்று ஸ்ரீ ராமானுஜருக்கு நியமித்தார்.-ஸ்ரீ ராமாநுஜருக்கு தளிகை பண்ணி ப்ராஸாதிக்கும் படி கிடாம்பியாச்சானை நியமித்தவர் ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பி.

மன்னியசீர் ஆளவந்தார் மலர்ப்பதத்தோன் வாழியே
வைகாசி ரோஹிணி நாள் வந்துதித்தோன் வாழியே
இன்னிள வஞ்சிக்கு இனிதுரைத்தான் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
தென்னணியாம் காசிப கோத்திரத்து உதித்தான் வாழியே
திருக்குருகைப்பிரான் எனும் பேர் திகழ வந்தோன் வாழியே
முன்னர் அரும் பெரும்பூதூர் முனிக்கு உரைத்தோன் வாழியே
மொழிந்த திருக்கோட்டிநம்பி மூதுலகில் வாழியே

காசிபன் தன் கோத்திரத்தைக் கருதிவந்தோன் வாழியே
கலை அனைத்தால் முன்னவர்க்குக் கதியளித்தோன் வாழியே
மாசற மெய்ப்பொருள் எதிக்கு வழங்குமவன் வாழியே
வையகம் உன் தரிசனத்தால் வாழும் என்றான் வாழியே
ஏசறவே உகந்து எதியை எடுத்து அணைத்தான் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
தேசுபுகழ்ச்செல்வன் மொழி தேர்ந்து உரைப்போன் வாழியே
திருக்கோட்டியூர் நம்பி சகதலத்தில் வாழியே

ஈரேழு மூன்று ஒன்றில் இதம் உரைத்தான் வாழியே
ஏற்றமாம் ஆளவந்தார் இணையடியோன் வாழியே
ஈர் எழுவருக்கும் பதம் ஈயுமவன் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
நாலேழில் நாலாநாள் நாடி வந்தோன் வாழியே
நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே
நாலேழுநாலெழுத்தை நன்குரைத்தான் வாழியே
நங்கள் திருக்கோட்டியூர் நம்பி நற்பதங்கள் வாழியே

அல்பகலும் ஆளவந்தார் அடிநினைவோன் வாழியே
அனவரதம் தெற்க்காழ்வார்க்கு ஆட்செய்வோன் வாழியே
வெல்பொருள் வெளியிட எதியை வெறுத்துகந்தான் வாழியே
மேதிநியோர் உய்வரென்று மெச்சினான் வாழியே
உள் மந்திரம் எதிராசர்க்கு ஒளித்து உரைத்தான் வாழியே
உந்துமதத்தெதியை உகந்தணைத்தான் வாழியே
செல்வநம்பிகுலம் தழைக்க செகத்து உதித்தான் வாழியே
திருக்கோட்டியூர் நம்பி சகதலத்தில் வாழியே

பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேஸபலப்ரதாய|
ஸ்ரீபாஷ்யகார உத்தம தேஸிகாய ஸ்ரீசைல பூர்ணாய நமோ நமஸ்தாத்||-ஸ்ரீ பெரிய திருமலை நம்பி ஸ்வாமிகள் தனியன்
-பிரமன்னுக்குத் தந்தையான திருவேங்கடமுடையானாலே அப்பா என்று கூப்பிடப் பெருகையாலே உலகிற்குப் பாட்டனான பிரமனுக்கும் பாட்டனாராய், ஸ்ரீபாஷ்யகாரருக்குச் சிறந்த ஆசார்யராய் அவருக்கு வால்மீகியின் வாக்காகிற ஸ்ரீராமாயணத்தின் பொருளை உபதேசித்தவரான பெரிய திருமலைநம்பிக்குப் பலகால் வணக்கம்.
ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸ்ரீராமாயண தேஸிகம்
ஸ்ரீசைலபூர்ணம் வ்ருஷப ஸ்வாதி ஸஞ்ஜா தமாச்ரயே
-எம்பெருமானாருக்கு ஸ்ரீராமாயணத்தை உபதேசித்த ஆசாரியரும் வைகாசி ஸ்வாதியில் திருவவதரித்தவருமான திருமலை நம்பியை அஸ்ரயிக்கிறேன்.
வைகாசிச் சோதிநாள் வந்து உதித்தான் வாழியே
வண் திருவேங்கடமுடையான் வரபுத்திரன் வாழியே
அய்யன் ஸ்ரீ ஆளவந்தார் அடிதொழுவோன் வாழியே
அனவரதம் மலைகுனியர்க்கு அடிமை செய்வோன் வாழியே
மெய்யன் இராமாநுசாரியன் விரும்புமவன் வாழியே
மிக்க திருமலையார்க்கு எல்லாம் மேலாவான் வாழியே
செய்யதமிழ் வேதத்தின் சிறப்பு அறிந்தோன் வாழியே
திருமலைநம்பிகள் உபயதிருவடிகள் வாழியே

ஸுமுகர் என்னும் நித்யசூரியின் அம்ஸமாகச் சித்திரை ஸ்வாதியில் திருமலையில் அவதரித்தவர். எம்பெருமானாருக்கு மாதுலர்(தாய்மாமா). இவர் ஸ்வாமி எம்பெருமானாருக்குக் கீழ்த்திருப்பதியில் ஒருவருஷகாலம் ஸ்ரீராமாயணத்தைக் காலக்ஷேபம் சாதித்தார். உள்ளங்கைகொணர்ந்த நாயனார் என்னும் திருநாமாத்துடன் சைவராக மாறி காளஹஸ்தியில் வாழ்ந்து கொண்டிருந்த தமது மருமகனான கோவிந்தரை மறுபடியும் ஸ்ரீவைஷ்ணவராகத் திருத்திப்பணிகொண்டார். தமது குமாரர்கள் பிள்ளை திருமலை நம்பியையும், பிள்ளானையும் மற்றும் இருகுமாரத்திகளையும் உத்தாரகரான எம்பெருமானார் திருவடிகளில் ஆஸ்ரயிக்கச்செய்தார்.மற்றொரு திருநாமம் – ஸ்ரீசைலபூர்ணர்-திருவாராதனம் – மலைகுனியநின்ற பெருமாள்-வெண்ணைக்காடும் பிள்ளை-அமலனாதிபிரான் தனியன் பெரிய திருமலை நம்பி அருளியது.

ஸ்ரீராமமிஸ்ர பதபங்கஜ சஞ்சரீகம் ஸ்ரீயாமுநார்யவரபுத்ரமஹம் குணாட்யம்|
ஸ்ரீரங்கராஜகருணா பரிணாம தத்தம் ஸ்ரீபாஷ்யகார சரணம் வரரங்கமீடே ||-ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் ஸ்வாமிகள்
-பிங்கள வர்ஷம் வைகாசி கேட்டை –ஸங்கு கர்ணர் என்னும் நித்ய ஸூரியின் அம்ஸம்-ஸ்ரீராமமிஸ்ரராம் மணக்கால் நம்பியின் திருவடித் தாமரையில் வண்டாய் இருப்பவரும், ஸ்ரீ யாமுநாசார்யாருடைய சிறந்த புத்திரரும், குணத்தில் மிக்கவரும், ஸ்ரீரங்கராஜ கருணையினாலே அளிக்கப்பெற்றவரும், ஸ்ரீபாஷ்யகாரரை சிஷ்யராகக் கொண்டவருமான திருவரங்கப்பெருமாள் அரையரைத் துதிக்கிறேன்.
நாதமுனி குலம்திகழ நன்கு உதித்தோன் வாழியே
நற்றமிழின் மறைக்கு இசையை நவின்று உரைப்போன் வாழியே
காதல் அரங்கேசர் இருகழல் பணிவோன் வாழியே
கானவர நயவிசையால் களிப்பிப்போன் வாழியே
ஏதமில் வண்கச்சிப்பயனை ஏத்திசைப்போன் வாழியே
எதிபதியைப் பரிசாக ஏற்று வந்தோன் வாழியே
தீதில் யமுனைத்துறைவன் சேவடியோன் வாழியே
திருவரங்கப் பெருமாள் அரையர் திருவடிகள் வாழியே

ஸ்ரீ விஷ்ணுசித்த பதபங்கஜ ஸங்கமாய
சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண|
நோசேந் மமாபி யதிஸேகரபாரதீநாம்
பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: ||ஸ்ரீ எங்களாழ்வான் தனியன்

திருவெள்ளறையில் பூர்வசிக ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண குலத்தில் ஸ்ரீ விஷ்ணுசித்தர் என்னும் திருநாமாத்துடன் சித்திரை மாதம் ரோஹிணி நக்ஷத்ரத்தில் அவதரித்தவர். ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமி தம் கண்களை இழந்துவிட்ட காரணத்தினால், மேல் நாட்டிலிருந்து திரும்பிய யதிராஜர் ஸ்ரீ பாஷ்யத்தில் எஞ்சிய பகுதியைக் கூரத்தாழ்வானுக்கு பதிலாக இவரை உசாத்துணையாகக் கொண்டு எழுதுவித்தார் என்றும், அப்படி எழுதும் போது, ஆழ்வானுக்குத் துல்யமாயிருந்த இவருடைய மேதா விலாசத்தைக்கண்டு “எங்கள் ஆழ்வானோ” என்று எம்பெருமானார் அபிமானித்தாரம். அன்று முதல் இவர் எங்களாழ்வான் என்றே அழைக்கப்படுகிறார்.சிஷ்யர் – ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸநாதிபதிகளில் ஒருவரான ஸ்ரீ நடாதூராழ்வானின் பேரரான “வாத்ஸ்யவராதாச்சார்யார்” என்னும் ஸ்ரீ நடாதூரம்மாள்.பிதாமஹர் ஸ்ரீ நடாதூராழ்வான் நியமித்தபடி திருவெள்ளறையில் எழுந்தருளியிருந்த எங்களாழ்வான் ஸ்வாமியிடம் ஸ்ரீ பாஷ்யார்த்தம் அனைத்தையும் கசடறக் கற்றார் ஸ்ரீ நடாதூர் அம்மாள். இப்படி அம்மாளுக்கு ஆசார்யரானமையாலே “அம்மாள் ஆசார்யர்” என்று அழைக்கப் பெற்றார் எங்களாழ்வான்.74 ஸிம்ஹாஸநாதிபதிகளில் ஒருவரான இவர் ஸ்ரீ விஷ்ணு புராணத்திற்கு ஸ்ரீ விஷ்ணு சித்தீயம் என்னும் வ்யாக்யானத்தையும், ஸித்தாந்த ப்ரமேயங்களைச் சுருக்கி
“ப்ரமேயஸங்க்ரஹம்” என்னும் க்ரந்தத்தையும், ப்ரஹ்மஸுத்ரத்தின் அதிகரணங்களின் சங்கதியை விளக்கி “ஸங்கதிமாலா” என்னும் க்ரந்தத்தையும், கத்ய வ்யாக்யானம் மற்றும் “ஸாரார்த்த சதுஷ்டயம்” ஆகிய க்ரந்தங்களை அருளிச்செய்துள்ளார்.
சீராரும் வெள்ளறையில் சிறந்துதித்தோன் வாழியே
சித்திரை உரோகிணி நாள் சிறக்க வந்தோன் வாழியே
பார்புகழும் எதிராசன் பதம் பணிந்தோன் வாழியே
பங்கயச் செல்வியின் பதங்கள் பரவுமவன் வாழியே
திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவருளோன் வாழியே
தீதிலா பாடியத்தைத் தேர்ந்துரைப்போன் வாழியே
தாரணியில் விண்டுமதம் தழைக்க வந்தோன் வாழியே
தண்ணளியோன் எங்களாழ்வான் தாளிணைகள் வாழியே-

ஸ்வாமி பெரியதிருமலைநம்பி–சித்திரை ஸ்வாதி–ஸுமுகர் என்னும் நித்யசூரியின் அம்ஸம் -திருவாராதனம் – மலைகுனியநின்ற பெருமாள்/வெண்ணைக்காடும் பிள்ளை-அமலனாதிபிரான் தனியன் பெரிய திருமலை நம்பி அருளியது

பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேஸபலப்ரதாய|

ஸ்ரீபாஷ்யகார உத்தம தேஸிகாய ஸ்ரீசைல பூர்ணாய நமோ நமஸ்தாத்||

பிரமன்னுக்குத் தந்தையான திருவேங்கடமுடையானாலே அப்பா என்று கூப்பிடப் பெருகையாலே உலகிற்குப் பாட்டனான பிரமனுக்கும் பாட்டனாராய், ஸ்ரீபாஷ்யகாரருக்குச் சிறந்த ஆசார்யராய் அவருக்கு வால்மீகியின் வாக்காகிற ஸ்ரீராமாயணத்தின் பொருளை உபதேசித்தவரான பெரிய திருமலைநம்பிக்குப் பலகால் வணக்கம்.

ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸ்ரீராமாயண தேஸிகம்

ஸ்ரீசைலபூர்ணம் வ்ருஷப ஸ்வாதி ஸஞ்ஜா தமாச்ரயே

எம்பெருமானாருக்கு ஸ்ரீராமாயணத்தை உபதேசித்த ஆசாரியரும் வைகாசி ஸ்வாதியில் திருவவதரித்தவருமான திருமலை நம்பியை அஸ்ரயிக்கிறேன்.

வைகாசிச் சோதிநாள் வந்து உதித்தான் வாழியே

வண் திருவேங்கடமுடையான் வரபுத்திரன் வாழியே

அய்யன் ஸ்ரீ ஆளவந்தார் அடிதொழுவோன் வாழியே

அனவரதம் மலைகுனியர்க்கு அடிமை செய்வோன் வாழியே

மெய்யன் இராமாநுசாரியன் விரும்புமவன் வாழியே

மிக்க திருமலையார்க்கு எல்லாம் மேலாவான் வாழியே

செய்யதமிழ் வேதத்தின் சிறப்பு அறிந்தோன் வாழியே

திருமலைநம்பிகள் உபயதிருவடிகள் வாழியே

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா|
தஸ்ய தாஸரதே: பாதௌ ஸிரஸா தாரயாம்யஹம் ||ஸ்ரீ முதலியாண்டான் தனியன்
–யதிராஜருடைய பாதுகைகள் எவருடைய பெயராலே (முதலியாண்டான் என்று) வழங்கப்படுகின்றனவோ, தாஸரதி எனும் திருநாமமுடைய அந்த முதலியாண்டானின் திருவடிகளை யான் தலையாலே தரிக்கிறேன்.
கிபி 1027) பிரபவ வருடத்தில் பச்சைப் பெருமாள் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் புருஷமங்கலத்தில்/வரதராஜபுரத்தில் சித்திரை மாதம் புனர்வஸு நக்ஷத்திரத்தில் ஆபஸ்தம்ப ஸூத்ரம் வாதூல கோத்ரத்தில் எம்பெருமானாருக்கு மருமகனாகவும், பரதனின் அம்சமாகவும் “தாசரதி” என்னும் திருநாமத்தோடு அவதரித்தவர் ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி.-எம்பெருமானாருடைய சிஷ்யர்கள் அனைவருக்கும் நிர்வாஹகராக இருந்தமையால் “முதலியாண்டான்” என்று அழைக்கப்பெற்றார்.-எம்பெருமானாருடைய திருவடி ஸ்தானமாயிருந்து அவருக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தமையால் எம்பெருமானாருடைய திருவடி நிலை இன்றளவும் “முதலியாண்டான்” என்றே அழைக்கப்படுகிறது.எம்பெருமானார் இவரைத் தமது த்ரிதண்டமாக அபிமானித்தார்.முதல் திருவந்தாதி ப்ரபந்தத்துக்கு தனியன் அருளிச்செய்தார் ஸ்வாமி முதலியாண்டான்.
ய: பூர்வம் பரதார்த்தித: பிரதிநிதிம் ஸ்ரீ பாதுகாமாத்மந:
ராஜ்யாய ப்ரததௌ ஸ ஏவ ஹி குரு: ஸ்ரீ தாஸரத்யாஹ்வய:
பூத்வா லக்ஷ்மண பாதுகாந்திமயுகே ஸர்வாத்மநாம் ஸ்ரேயஸே
ஸாம்ராஜ்யம் ஸ்வயமத்ர நிர்வஹநி நோ தைவம் குலஸ்யோத்தமம்–
முக்த ஸ்லோகம்:-எவனொருவன் முற்காலத்தில் பரதனால் ப்ரார்திக்கப் பட்டு அரசாளுவதற்குத் திருப்பாதுகையைத் தனக்கு ப்ரதிநிதியாகக் கொடுத்தானோ, அந்த ராமனே தாசரதி (முதலியாண்டான்) என்ற திருநாமமுள்ள ஆசார்யனாய், கலி காலத்தில் நம் குலத்திற்கு உத்தம தெய்வமான ஸ்ரீ ராமானுஜ பாதுகையாகி அனைத்து ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கும் படி ஸ்ரீவைஷ்ணவ ஸாம்ராஜ்யத்தைத் தானே இங்கு நடத்திக்கொண்டிருக்கிறான்.
ஸ்ரீவைஷ்ணவ ஸிரோபூஷோ ஸ்ரீ ராமானுஜ பாதுகா|
ஸ்ரீ வாதூல குலோத்தம்ஸ: ஸ்ரீ தாசரதி ரேததாம்||-ஸ்ரீவைஷ்ணவர்களின்
தலைக்கு அலங்காரமாயிருக்கும் ஸ்ரீ ராமானுஜரின் பாதுகையாய், வாதூல குலத்திற்குச் சிறந்த அலங்காரமான ஸ்ரீ தாசரதியெனும் முதலியாண்டான் வெற்றி பெருவாராக என்பதாக அமைந்த ஸ்லோகம்.
ஸ்ரீ ராமாம்ஸ ஸமாஸ்லிஷ்டம் பாஞ்சஜன்யாம்ஸ ஸம்பவம்|
பஞ்ச நாராயணஸ்தாந ஸ்தாபகம் குருமாஸ்ரயே||-
ஸ்ரீராமனின் அம்ஸத்தோடு கூடியவராய், பாஞ்சஜன்ய அம்ஸமாக அவதரித்தவராய், ஐந்து நாராயண ஸ்தலங்களை ஸ்தாபித்தவரான முதலியாண்டானை ஆஸ்ரயிக்கிறேன்.
யஸ்சக்ரே பக்தநகரே தாடீபஞ்சக முத்தமம்
ராமனுஜார்ய ஸச்சாத்ரம் வந்தே தாசரதிம் குரும்-
பக்த நகரத்தில் எவரொருவர் சிறந்த தாடீபஞ்சக ஸ்தோத்திரத்தை இயற்றினாரோ, ராமானுஜாச்சார்யரின் ஸத் சிஷ்யரான ஸ்ரீ முதலியாண்டானை வணங்குகிறேன்
வித்யா விமுக்திஜநநீ விநயாதி கத்வம்
ஆசாரஸம்பத் அநுவேலவிகாஸசீலம்
ஸ்ரீ லக்ஷ்மணார்ய கருணா விஷயீ க்ருதாநாம்
சித்ரம் ந தாசரதி வம்ஸ ஸமுத்பவாநாம்||-ஸ்ரீ முதலியாண்டான் திருவம்ஸ ப்ரபாவ ஸ்லோகம்-
மோகஷத்திற்கு உறுப்பான ஜ்ஞானம், சிறந்த அடக்கம், அநுஷ்டானச் செல்வம், சிறந்த குணம், ஆகியவை எம்பெருமானாருடைய கருணைக்கு இலக்கான முதலியாண்டான் வம்சத்தினற்கு வாய்துள்ளதில் வியப்பில்லை என்பதாக அமைந்த ஸ்லோகம்.

———

சித்திரை அஸ்வினி -ஸ்வாமி வடுக நம்பியின் திருநக்ஷத்ரம்-மற்றொரு திருநாமம் – ஆந்த்ர பூர்ணர்-

சைத்ரே த்வச்விநிஸஞ்ஜாதம் ஸம்ஸாரார்ணவ தாரகம்
ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் ஆந்த்ர பூர்ண அஹம் பஜே

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாலக்ராம நிவாஸிநம்
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஆந்த்ர பூர்ணமஹம் பஜே

ராமாநுஜார்ய சரண ப்ரவணம் பரதேவவத்
வடுபூர்ணமஹம் வந்தே பரஜ்ஞாந பயோ நிதிம்

யதிராஜ வைபவம் என்ற நூலை அருளிச்செய்தார். 114 ஸ்லோகங்கள் கொண்ட அழகிய நூல்.-வடுக நம்பி, இது தான் பெற்ற பேறு என்று தாம் அருளிச்செய்த யதிராஜ வைபவம் என்னும் நூலில் 113வது ஸ்லோகத்தில் அருளிச்செய்துள்ளார்.

113 வது ஸ்லோகத்தின் விளக்கம்:
தன்னுடைய அந்தரங்க ஸிஷ்யர்களில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கைங்கர்யத்தில் நியமித்து அருளிய ஸ்ரீ யதிராஜர், மிகவும் தகுதியற்ற என்னையும் தமக்குப் பால் காய்ச்சும் கைங்கர்யத்தில் நியமித்து அருளினார். அத்துடன் தன் அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியவனாகவும், மிகுந்த அன்புடையவனாகவும் தனக்கு நல்லது செய்பவனாகவும் கொண்டு என்னையும் ரக்ஷிக்கிறவரான அவர் பல்லாண்டு வாழ்க! என்பது 113வது ஸ்லோகத்தின் அர்த்தம்.

ஸ்வாமி வடுக நம்பி உடையவருக்கு செய்தருளிய கைங்கர்யத்தைப் பற்றி திருக்கோளூர் பெண் பிள்ளை தாம் அருளிச்செய்த கிரந்தத்தில் 56 ஆம் வார்த்தையாக இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகநம்பியைப் போலே என்று தெரிவிக்கிறார்.-நிகழ்வு – ஒரு நாள் எம்பெருமான் திருவீதி புறப்பாடு கண்டருளியபோது ஸ்வாமி எம்பெருமானார் பெருமாள் சேவிக்க வாரும் என்று வடுக நம்பியை அழைக்க, அப்போது உடையவருக்கு பால் காய்ச்சி கொண்டு இருந்த வடுக நம்பி, “உம்முடைய பெருமாளை சேவிக்க வந்தால், என்னுடைய பெருமாளுக்கு பால் பொங்கிப்போமே” என்று அருளினாராம்.-ஸ்வாமி வடுக நம்பி அருளிச் செய்த வார்த்தைகளைப் பற்றி திருவல்லிக்கேணி அம்மாள் தாம் அருளிச் செய்த கிரந்தத்தில் “இருகரையர் என்றேனோ வடுகரைப் போலே” என்றும் “நாவகாரியம் ஆக்கினேனோ வடுகரைப் போலே” என்றும் குறிப்பிடுகிறார்.-இருகரையர் என்று வடுகநம்பி குறிப்பிட்டது ஆழ்வானையும் ஆண்டானையும் ஆகும். இந்த விஷயத்தை ஸ்ரீ பிள்ளைலோகாசார்யார் தாம் அருளிச்செய்த ஸ்ரீ வசனபூஷன திவ்ய சாஸ்திரத்தில் “வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர்” என்று அருளிச்செய்துள்ளார். இருகரையர் என்பதற்கு வடுகநம்பியைப் போன்று அல்லாமல் ப்ரதமபர்வம் சரமபர்வம் இரண்டிலும் கால்வைத்து நிற்குமிவர்கள் என்று பொருள். அதாவது பிரதமபர்வமான எம்பெருமான் ஒரு கரை; சரமபர்வமான ஆசார்யன் மற்றொரு கரை – இரண்டு கரையிலும் கால் வைத்திருப்பவர் என்று பொருள்.ஒரு ஸ்ரீவைஷ்ணவர் இவர் காதருகே திருமந்த்ரதை உச்சரிக்க இவர் நாவகாரியம் என்று சொல்லி, ராமாநுஜா என்ற திருநாமமே நாவுக்குத்தக்கது என்றாராம் வடுக நம்பி. அப்படி இருந்தது இவருடைய ஆசார்ய நிஷ்டை.மேலும் ராமானுஜ அவயவ ப்ரபாவம் என்னும் நூலில் வடுக நம்பியை ராமாநுஜர் திருமேனியில் காஷயமாக பாவித்து “ஆந்த்ரபூர்ணஸ்ச காஷாய: என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

——————–

ஈயுண்ணி மாதவப் பெருமாள் –
கார்த்திகே பரணி ஜாதம் ஸ்ரீ லோகார்ய பதாஸ்ரிதம்
வேதாந்த த்வய சம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே
–கார்த்திகையில் பரணியில் அவதரித்தவராய் நம்பிள்ளை திருவடிகளை அடைந்தவராய் உபய வேதாந்தச் செல்வரான மாதவப் பெருமாளை வணங்குகிறேன்.
லோகாசார்ய பதாம்போஜ ஸம்ஸ்ரயம் கருணாம்புதிம்
வேதாந்த த்வய சம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே
-உலகாரியரான நம்பிள்ளையின் திருவடித்தாமரையைப் பற்றியவராய் கருணைக்கடலாய் உபய வேதாந்தச் செல்வமுடையவரான மாதவாச்சார்யரை ஆஸ்ரயிக்கிறேன்.
சீரார் வடக்கு திருவீதிப் பிள்ளை* எழு
தேரார் தமிழ்வேதத்து ஈடுதனைத் – தாருமென
வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
தான்கொடுத்தார் பின் அதனைத்தான்
ஆங்கு அவர்பால்பெற்ற சிறியாழ்வான் அப்பிள்ளை
தாம் கொடுத்தார் தம்மகனார் தம் கையில்-பாங்குடனே
நாலூர் பிள்ளைக்கு அவர்தாம் நல்ல மகனார்க்கு அவர்தாம்
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு.

பெரிய பெருமாள் நியமனமின்றி நம்பிள்ளை இந்த ஸ்ரீகோசத்தை தந்தருளமாட்டார் என்பதை நன்கறிந்த ஈயுண்ணி மாதவப் பெருமாள் என்ற ஸ்வாமி, பெரிய பெருமாளிடம் ப்ரார்திக்க, பெரிய பெருமாளும் திருவுள்ளம் உவந்து இரங்கி நம்பிள்ளைக்கு நியமித்தருள, பின்பு அந்த ஸ்ரீகோசத்தை நம்பிள்ளை ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்கு தந்தருளினாராம். அப்படியாக ஸ்வாமி நம்பிள்ளையிடம் ஸ்ரீகோசத்தைப் பெற்றுக்கொண்ட சிறியாழ்வான் அப்பிள்ளை(ஈயுண்ணி மாதவப் பெருமாளுடைய மற்றொரு திருநாமம்) தம்முடைய திருக்குமாரரான பத்மநாபப் பெருமாளிடம் அந்த ஈட்டை ப்ரசாதித்து அருளினார். பத்மநாபப் பெருமாள் தம் சிஷ்யரான நாலூர்ப் பிள்ளைக்கு ப்ரசாதித்து அருளினார். அந்த நாலூர்ப் பிள்ளை தம்முடைய திருக்குமாரரான நாலூராச்சான் பிள்ளைக்கு ப்ரசாதித்து அருளினார். அந்த நாலூராச்சான் பிள்ளையே மேலுள்ளவர்களுக்கு கொடுத்து உபகரித்து அருளினாராம். நாலூராச்சான் ஸ்வாமியின் சிஷ்யர்கள் திருநாராயணபுரத்து ஆயி, ஸ்ரீசைலேசர் என்னும் திருநாமமுடைய திருவாய்மொழிப்பிள்ளை மற்றும் ஈயுண்ணி தேவப்பெருமாள் ஆகியோர் ஆவர்.

மிதுநே ஸ்வாதிஸம்பூதம் கலிவைரிபதாஸ்ரீதம்|
உதக்ப்ரதோளீ நிலயம் க்ருஷ்ணபாதம் அஹம் பஜே||-
ஆனி ஸ்வாதியில் அவதரித்தவராய் நம்பிள்ளையின் திருவடிகளை ஆஸ்ரயித்தவரான வடக்குத் திருவீதிப்பிள்ளையை வணங்குகிறேன்.
ஸ்ரீ க்ருஷ்ணபாத பாதாப்ஜே நமாமி ஸிரஸா ஸதா |
யத்ப்ரஸாதப்ரபாவேந ஸர்வஸித்திரபூந்மம||
-எவருடைய அருளின் பெருமையால் எனக்கு ஜ்ஞான பக்தி வைராக்யங்களாகிற எல்லா ஸித்திகளும் கிடைத்தனவோ, அத்தகைய ஸ்ரீக்ருஷ்ணர் என்னும் வடக்குத்திருவீதிப்பிள்ளையின் திருவடித் தாமரைகளைத் தலையால் எப்போதும் வணங்குகிறேன்.

ஆனி மாதத்தில் பெரியாழ்வாருடைய திருவவதார நன்னாளாகிய ஸ்வாதி நக்ஷத்ரத்தில், முடும்பைக் குடியில் ஸ்ரீவத்ஸ கோத்ரத்தில் யஜுஸ்ஸாகை ஆபஸ்தம்பஸுத்ரத்தில் ஸ்ரீக்ருஷ்ணபாதர் என்னும் வடக்குத்திருவீதிப்பிள்ளை அவதரித்தார்.அஷ்டாதச ரஹஸ்யங்களை அருளிச்செய்த பிள்ளைலோகாசாரியர்க்கும், ஆசார்ய ஹ்ருதயம் அருளிச்செய்த அழகிய மணவாளப்பெருமாள் நாயனாருக்கும் திருத்தந்தையார் இவர்.இவருடைய இயற்பெயர் ஸ்ரீகிருஷ்ண மஹாகுரு.

ஆனிதனில் சோதி நாள் அவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்து உரைப்போன் வாழியே
தான் உகந்த நம்பிள்ளை தாள் தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கு ஈடு சாற்றினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்ல உலகாரியனை நமக்கு அளித்தான் வாழியே
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே
எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை வைபவம்
அவதார ஸ்தலம்
– திருவெள்ளியங்குடிக்கு அருகிலே உள்ள சங்கநல்லூர் என்னும் சிற்றூர்
திருவவதாரம் – சர்வஜித் வருஷம், ஆவணி மாதம் ரோஹிணி நக்ஷத்ரம் (கண்ணன் எம்பெருமான் திருவவதரித்த நன்னாளிலே அவதரித்தவர் – ஸ்ரீஜயந்தி)
திருதகப்பனார் திருநாமம் – ஸ்ரீ யாமுனதேசிகர்
திருத்தாயார் – நாச்சியாரம்மாள்
பெற்றோர் இட்ட திருநாமம் – க்ருஷ்ணர்
திருவாராதனப் பெருமாள் – க்ருஷ்ண விக்ரஹம்
திருக்குமாரர் – ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை
மற்ற திருநாமங்கள் – அபயப்ரதராஜர், வ்யாக்யான சக்ரவர்த்தி, க்ருஷ்ணஸூரி, பரம காருணிகர், அபார கருணாம்ருத சாகரர் ஆகியவை ஆகும்.
ஆசார்யன் – ஸ்ரீ நம்பிள்ளை
வ்யாக்யான சக்ரவர்த்தியான ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளைக்கு நான்கு திக்குகளிலும் நான்கு ஸிம்ஹாஸனங்கள் உண்டு என்பது ஸ்ரீவைஷ்ணவ பெரியோர்களின் திருவாக்கு.
முதல் ஸிம்ஹாஸனம் – நாலாயிர திவ்யப்ரபந்த பாசுரங்களுக்கு ஸ்வாமி அருளிச் செய்த திவ்ய வ்யாக்யானங்களே முதலாவதும் முக்கியமானதுமான ஸிம்ஹாஸனம் ஆகும். அவைகள் இல்லாவிடில் ஸ்ரீவைஷ்ணவ உலகமே ஞான சூன்யமாய் இருளடைந்து பாழாகி யிருக்கும். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு திருப்பல்லாண்டு முதலான நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களை யொழிய பகவானை அறிவதற்கு வேறு வழியில்லை. திவ்ய ப்ரபந்தங்களிலே இருக்கக் கூடிய ஆழ்ந்த அர்த்தங்களை அறிவதற்கு பூர்வாசார்ய பரம்பரையாகவும், ஆசார்ய நியமனப்படியும், ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையால் அருளிச் செய்யப்பட்ட வ்யாக்யானங்களைத் தவிர வேறு புகல் இல்லை.
இரண்டாவது ஸிம்ஹாஸனம் – இதிஹாஸ ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தில் அமைந்துள்ள மிகச் சிறந்த ஸ்லோகங்கள் பலவற்றில் இருக்கக்கூடிய ரஹஸ்ய அர்த்தங்களை விவரித்து அருளிச் செய்த ஸ்ரீராமாயண தனிஸ்லோகம், ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் இரண்டாவது ஸிம்ஹாஸனமாகும்.
மூன்றாவது ஸிம்ஹாஸனம் – ரஹஸ்ய த்ரயங்களையும் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அவஸ்யம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்ற ரஹஸ்யார்த்தங்களையும் விவரித்து ஸ்வாமி அருளிச்செய்த பரந்த ரஹஸ்யம், மாணிக்க மாலை, ஸகல ப்ராமண தாத்பர்யம், ரஹஸ்யத்ரய தீபிகை, ரஹஸ்யத்ரய விவரணம் மற்றும் நிகமனப்படி முதலானவை மூன்றாவது ஸிம்ஹாஸனம்.
நான்காவது ஸிம்ஹாஸனம் – பரமாசார்யரான ஸ்ரீ ஆளவந்தாரும் ஜகதாசார்யரான ஸ்வாமி எம்பெருமானாரும் அருளிச்செய்த ஸ்தோத்ரரத்னம், சதுஸ்லோகி, கத்யத்ரயம் முதலான ஸ்தோத்ரங்களுக்கு ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த திவ்ய வ்யாக்யானங்களும் மற்றும் ஜிதந்தே ஸ்தோத்ர வ்யாக்யானமும், வ்யாக்யான சக்ரவர்த்தியான ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் நான்காவது ஸிம்ஹாஸனம் ஆகும்.

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் கோஷ்டியிலே எழுந்தருளியிருந்த சிலர் “எங்களுக்கு தஞ்சமாய் இருபத்தொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்று ப்ரார்திக்க” அதற்கு ஸ்வாமி, கலங்குகிறவனும், கலக்குகிறதும், கலங்கிக் கிடக்கிறவர்களும், தெளிவிக்கிறவனும், தெளிகிறவனும், தெளிந்திருப்பவனுமாயிறே இருப்பது என்று பதிலுரைத்தாராம்
கலங்குகிறவன் – ஜீவாத்மா
கலக்குகிறது – பகவானையும் ஆத்மாவையும் அறியவிடாமல் மறைத்துத் தன் விஷயத்திலே மூளும்படி பண்ணுகிற அசித்து.
கலங்கிக்கிடக்கிறவர்கள் – தேஹமே ஆத்மா என்று கிடக்கும் சம்சாரிகள்
தெளிவிக்கிறவன் – ஆசார்யன்
தெளிகிறவன் – சேதனன்(ஞானவானான ஜீவாத்மா)
தெளிந்திருக்கிறவன் – ஈஸ்வரன்
ஆகையாலே கலங்குகிற தன்னையும், கலக்குகிற ப்ரக்ருதியையும், கலங்கிக்கிடக்கிற சம்சாரிகளையும் தஞ்சம் அன்று என்று கைவிட்டு, தெளிவிக்கிற ஆசார்யனையும், தெளிந்திருக்கும் ஈஸ்வரனையும் பற்றுகையே, ஆசார்யனாலே தெளிந்த இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபம் என்று அருளினார் ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை.

ஸ்ருத்யர்த்த ஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் பகவதங்க்ரி புராண பந்தும்|
ஜ்ஞாநாதிராஜம் அபயப்ரதராஜபுத்ரம்
அஸ்மத்குரும் பரமகாருணிகம் நமாமி ||

வேதப்பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய், ஸ்ம்ருதிகளாகிற தாமரைகளுக்கு இளஞ்சூரியனாய், ஸ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் பழைய உறவினராய், ஞானங்களுக்குப் பேரரசராய், அபயப்ரதராஜரின் பிள்ளையாய், பரமகாருணிகரான நாயனார் ஆச்சான் பிள்ளையை வணங்குகிறேன்.
மற்ற திருநாமங்கள்-ஸுந்தரவரராஜாசார்யர்-சௌம்யவரேஸ்வரர்

அருளிச்செய்தவை
1-சதுஸ்லோகி வ்யாக்யானம் – இந்த க்ரந்ததில் பிராட்டி பற்றிய பூர்வாசார்ய நிர்ணயத்தை மிக விரிவாக விளக்கியுள்ளார்.
2-தத்வ ஸங்க்ரஹம் – பிராட்டி விஷயமாக மற்றொரு க்ரந்தம்
3-சரம உபாய நிர்ணயம் – எம்பெருமானாரே உத்தாரக ஆசார்யர் என்னும் பரம ரஹஸ்யத்தை விளக்கும் க்ரந்தம்
4-முக்தபோகாவலீ
5-ஜ்ஞாநார்ணவம்
6-தத்வத்ரய விவரணம்
7-அணுத்வபுருஷகாரத்வஸமர்த்தனம்
8-சரமரஹஸ்யத்ரயம்-
ஆகியவை ஆகும்

ஸ்வாமி எங்களாழ்வான் திருநக்ஷத்ரம்-சித்திரை ரோஹிணி

ஸ்ரீ விஷ்ணுசித்த பதபங்கஜ ஸங்கமாய
சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண|
நோசேந் மமாபி யதிஸேகரபாரதீநாம்
பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: ||

ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸநாதிபதிகளில் ஒருவரான ஸ்ரீ நடாதூராழ்வானின் பேரரான “வாத்ஸ்யவராதாச்சார்யார்” என்னும் ஸ்ரீ நடாதூரம்மாள்-அம்மாளுக்கு ஆசார்யரானமையாலே “அம்மாள் ஆசார்யர்” என்று அழைக்கப் பெற்றார் – இவர் ஸ்ரீ விஷ்ணு புராணத்திற்கு ஸ்ரீ விஷ்ணு சித்தீயம் என்னும் வ்யாக்யானத்தையும், ஸித்தாந்த ப்ரமேயங்களைச் சுருக்கி “ப்ரமேயஸங்க்ரஹம்” என்னும் க்ரந்தத்தையும், ப்ரஹ்மஸுத்ரத்தின் அதிகரணங்களின் சங்கதியை விளக்கி “ஸங்கதிமாலா” என்னும் க்ரந்தத்தையும், கத்ய வ்யாக்யானம் மற்றும் “ஸாரார்த்த சதுஷ்டயம்” ஆகிய க்ரந்தங்களை அருளிச்செய்துள்ளார்.

சீராரும் வெள்ளறையில் சிறந்துதித்தோன் வாழியே
சித்திரை உரோகிணி நாள் சிறக்க வந்தோன் வாழியே
பார்புகழும் எதிராசன் பதம் பணிந்தோன் வாழியே
பங்கயச் செல்வியின் பதங்கள் பரவுமவன் வாழியே
திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவருளோன் வாழியே
தீதிலா பாடியத்தைத் தேர்ந்துரைப்போன் வாழியே
தாரணியில் விண்டுமதம் தழைக்க வந்தோன் வாழியே
தண்ணளியோன் எங்களாழ்வான் தாளிணைகள் வாழியே

ஒன்றான ஸ்ரீ எம்பார் ஜீயர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம்-ஆவணி ரோஹிணி-ஆசார்யன் – சோளசிம்மபுரம் ரங்காசார்ய தொட்டையாசார்ய ஸ்வாமி

ஸ்ரீ வாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ
ஸ்ரீ குர்விந்த்ர மஹார்ய லப்த நிஜஸத்ஸத்தம் ச்ரிதா பீஷ்டம்|
ஸ்ரீ ராமாநுஜ முக்ய தேசிக லஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்
ஸ்ரீமத் வேங்கட லக்ஷ்மணார்ய யமிநம் தம் ஸத்குணம் பாவயே ||

ஸ்ரீ வாதூல தயாபாத்ரம் ஜ்ஞானவைராக்ய வாரிதிம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே கோவிந்தம் பக்திம் முநிம் ||

அக்ஷயாப்தே ஸிம்ம க்ருஷ்ண ரோஹிண்யாம் கலிதோதயம் |
ராமாநுஜ பதச்சாயாம் வந்தே வேங்கட லக்ஷ்மணம் ||

அக்ஷயாத்ரே ஸிம்ம க்ருஷ்ண ரோஹிண்யாம் ஜாதமாச்ரயே |
ஸ்ரீ ப்ரவாள குரோர் சிஷ்யம் முநிம் வேங்கட லக்ஷ்மணம் ||

ஜீயர் ஸ்வாமி அருளிச்செய்த நூல்கள்

ஸித்தோபாய ஸுதர்சனம்
ஸத்தர்சன ஸுதர்சனம்
துத்தர்சன கரிசனம்
விப்ரதிபத்தி நிரஸனம்
ஸ்ரீ வசனபூஷண அரும்பதம்
ஸ்ருதப்ரகாசிகா விவரணம்
பூகோள நிர்ணயம்
ஸ்ரீ ராமாநுஜ அஷ்டபதி
ஸித்த உபாய மங்கள தீபிகை
தர்மஜ்ஞ ப்ராமண்ய ப்ராகாசிகை
ஸித்தாந்த பரிபாஷை
கைவல்ய சததூஷணி
கீதார்த்தடிப்பணி
செத்தத்தின் என்கிற ஸ்ரீசுக்தி வ்யாக்யானம்
சரணாகதிக்கு அதிகாரி விசேஷணத்வ ஸமர்த்தனம்
ஜோதிஷ புராணங்களுக்கு ஐககண்ட்ய ஸமர்த்தனம்
துர் உபதேச திக்காரம்
சரண சப்தார்த்த விசாரம்
முக்திபதசக்தி வாதம்
ப்ரஹ்மபதசக்திவாதம்
ஸித்ததாத்பர்ய டிப்பணி
ஸாரநிஷ்கர்ஷ டிப்பணி
உடையவர் வடிவழகில் அடியார்கள் ஈடுபாடு
திருமஞ்சனக்கட்டியம்
த்யாக சப்தார்த்த டிப்பணி
ஸித்தாந்த தூலிகை
அஷ்டாக்ஷர ஸர்வாதிகார ஸமர்த்தனம்
பிரபத்தி அநுபாயத்வ விசாரம்
பிரமாண்ட க்ரஹண வரைபடம்

சீர் பெரும்பூதூரைச் செழுப்பித்தோன் வாழியே
திருப்பாவை சீயர் உளம் தேர்ந்து உணர்ந்தோன் வாழியே
பார்மேவும் பரசமயப் பற்று அறுத்தோன் வாழியே
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே
காரிசுதன் தமிழ்மறைக்குக் கருத்து உரைப்போன் வாழியே
கருணையினால் அடியேற்குக் கழல் அளித்தோன் வாழியே
ஏராரு முனிதிலகம் என வந்தோன் வாழியே
எங்கள் எம்பார் சீயர் தமது இணையடிகள் வாழியே

————

ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி பாலதந்வி வரதாச்சார்யார் ஸ்வாமி-சித்திரை ரோஹிணி –ஸ்வாமி ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 சிம்மாசனாதிபதிகளுள் 72 ஆம் ஸிம்ஹாசனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ கோயில் கந்தாடை குமாண்டூர் இளையவில்லியாச்சான் ஸ்வாமி திருவம்சத்தில் அவதரித்து திருமாளிகையின் ஸமாஸ்ரயண குருபரம்பரையின் வர்த்தமான ஸ்வாமியாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி பாலதந்வி வரதாச்சார்யார் ஸ்வாமி

ஸ்ரீமத் கௌஸிக வார்தீந்தும் ஸீலாதி குணஸாகரம்|

ஸ்ரீமத்கநார்ய ஸத்புத்ரம் வரதார்யம் அஹம் பஜே||

வாழி இளையவில்லி ஆச்சான்

மாதகவால் வாழும் பாலதந்வி வரதாசிரியன்

வாழியவன் ஸரணாகதி மொழிப்பொருளை

சிச்சனவன் உய்யும்படி உரைக்கும் சீர்

கௌசிகர் தம் குலத்து உதித்த குணக்கடலோன் வாழியே

தொல் புகழ் சீர் தொட்டையாரியன் தனயனவன் வாழியே

சித்திரையில் உரோகிணி நாள் உதித்த செல்வன் வாழியே

திருவரங்கன் பெரிய கோயில் போற்றுமவன் வாழியே

திருகடிகைத் தக்கானைத் தினம் தொழுவோன் வாழியே

காரேய் கருணையிராமாநுசன் கழல் பணிவோன் வாழியே

பதின்மர் தம் பாசுரத்தில் பற்றுடையோன் வாழியே

நம் பாலதந்வி வரதாரியன் பொற்பதங்கள் வாழியே

சீராரும் இளையவில்லி இணையடிகள் வாழியே

பன்னிருசீர் திருநாமம் அணிந்த எழில் வாழியே

பன்னிருவர் பாடல்கள் பயில் பவளம் வாழியே

திருமலைமால் திருக்கோஷ்டித் தழைக்க வந்தான் வாழியே

திருமுகமும் கருணைமிகுக் கண்ணிணைகள் வாழியே

திருமுடியிற் திகழ்வழகுக் குழலொழுங்கும் வாழியே

தாள் பணிவோர் ஆருரைப் பேணுமவன் வாழியே

கௌஸிகர் தம் குலமகனார் வாழி என்றும் வாழியே

மாலடியார்வாழ மாநகர் அரங்கம் வாழ* பெரும்பூதூர்

மாமுனி தன் மன்னுபுகழ் வாழ* ஆழிசூழ்

அனைத்துலகும் தாம் வாழ* நன்னெறி சேர் ஆத்திகர் புகழ்

இளையவில்லி வரதாரியனே இன்னுமொரு நூற்றாண்டு இ

ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை -திருநக்ஷத்ரம் – ஐப்பசி உத்திரட்டாதி
திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள ஆறநூர் என்னும் கிராமத்தில் அவதரித்தவர்.
ஆசார்யன் – ஸ்ரீ பிள்ளைலோகாசார்யார்
வேறு திருநாமம் – நலந்திகழ் நாராயண தாஸர்
துலாஹிர்புத்ந்ய ஸம்பூதம் ஸ்ரீ லோகார்ய பதாஸ்ரிதம்
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே-
-தனியன்-ஐப்பசி உத்திரட்டாதியில் அவதரித்தவரும் பிள்ளை லோகாசார்யரின் திருவடிகளைப் பற்றியவரும் ஸப்தகாதை அருளிச் செய்தவரும் “நலந்திகழ் நாராயண தாஸர் என்ற விளாஞ்சோலைப் பிள்ளையை வழிபடுகிறேன்.
ஸ்ரீ லோகார்ய பதாரவிந்த மகிலம் ஸ்ருத்யர்த்த கோசாம் ஸ்ததா
கோஷ்டீஞ்சாபி ததேக லீநமநஸா ஸஞ்சிந்தயந்தம் முதா
ஸ்ரீ நாராயண தாஸமார்யமமலம் சேவே ஸதாம் ஸேவிதம்
ஸ்ரீ வாக்பூஷண கடபாவ விவ்ருதிம் யஸ்ஸப்த காதாம் வ்யதாத்-
-மற்றொரு தனியன்-ஸ்ரீ பிள்ளை லோகாசார்யருடைய பாதார விந்தங்களில் மறைப் பொருள் அனைத்தையும் பெற்றவரும் அவருடைய கோஷ்டியை எப்போதும் நினைத்துக் கொண்டு இருப்பவரும், ஸ்ரீ வசனபூஷணத்தின் உட்பொருள்களை ஸப்தகாதை என்ற நூலால் வெளியிட்டவரும் ஸ்ரீ நாராயண தாஸர் என்ற திருநாமமுடையவரான உயர்ந்தவரை எப்போதும் சேவிக்கிறேன்.
ஸ்ரீ பிள்ளை உறங்காவில்லிதாஸர் ஸ்வாமி எம்பெருமானாருக்கு அந்தரங்கராய் இருந்தது போல், ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் ஸ்வாமியினிடத்திலே, அந்தரங்க சிஷ்யராய் இருந்து ஸகல சாஸ்திர அர்த்தங்களையும் கேட்டவர் ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை.-இவர் ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் திருவாய் மலர்ந்தருளிய ஸ்ரீ வசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்தில் ஊன்றினவராயும் அதிலுள்ள அர்த்த விசேஷங்களை அனுபவிப்பதைத் தவிர வேறொன்று அறியாதவராயும் வாழ்ந்து வந்தவர்.-ஸ்ரீமத் பகவத் கீதையில் அமைந்துள்ள ஸ்லோகங்களுள் சரம ஸ்லோகம் சிறப்பெய்தினது போல, ஸ்ரீ வசனபூஷணத்தில் அமைந்துள்ள ப்ரகரணங்களுள் சரம பர்வ நிஷ்டா ப்ரகரணம் சிறப்புற்றது. ஆகையால் இந்த ப்ரகரணத்தில் அருளிச் செய்யப்பட்ட அர்த்த விசேஷங்களை எல்லாம் திரட்டி ஒரு பிரபந்தம் அருளிச் செய்ய திருவுள்ளம் கொண்டு திருவாசிரியம் போலே ஏழு பாசுரம் கொண்ட ஸப்தகாதை என்னும் நூலை அருளிச்செய்தார் ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை என்று பெரியோர் பணிப்பர்.-ஸ்ரீ வசனபூஷண ரஹஸ்ய அர்த்தத்தை ஸ்வாமி திருவாய்மொழிப் பிள்ளைக்கு உபதேசித்தார். இவருடைய திருவரசு திருவனந்தபுரம் எம்பெருமானின் கர்பக்ரஹம் (அநந்த பத்மநாப பெருமாள் திருவடி).

நம: ஸ்ரீசைலநாதாய குந்தீநகர ஜந்மநே|
ப்ராஸத லப்த பரமப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே||ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை தனியன்
-குந்தீ நகரத்தில் உதித்தவராய், ஆசார்யன் அருளாலே அடையப்பெற்ற பரமப்ராப்யமான கைங்கர்யத்தை உடையயவரான திருமலையாழ்வாருக்கு வணக்கம்.
ஸ்ரீசைலேஸ குரும் லோக தேசிகாங்க்ரி ஸமாஸ்ரிதம்
வ்ருஷே விசாக ஸம்பூதம் வந்தே வரகுணாகரம்
–வைகாசி விசாகத்தில் அவதரித்தவரும் பிள்ளைலோகாசார்யாரை ஆஸ்ரயித்தவரும் உயர்ந்த குணங்களுக்கு இருப்பிடமானவருமான திருமலையாழ்வார் ஆகிற திருவாய்மொழிப்பிள்ளையை வணங்குகிறேன்
வையகம் எண் சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
ஐயன்அருள்மாரிகலை ஆய்ந்து உரைப்போன் வாழியே
அழகாரும் எதிராசர் அடிபணிந்தோன் வாழியே
துய்யஉலகாரியன் தன்துணைப் பதத்தோன் வாழியே
தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே
தெய்வநகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே
திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே
“காடுவெட்டிக் கண்டேனோ திருமலை யாழ்வார் போலே என்று திருவல்லிக்கேணிப் பெண்பிள்ளை அருளிச் செய்துள்ளார்


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading