ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-மூன்றாம் அத்யாயம்-ஸாதந அத்யாயம் – முதல் பாதம்-வைராக்₃ய பாதம்–ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

————————-

ஸித்த த்விகம் பார்த்துள்ளோம் -ஸாத்ய த்விகம் பார்க்கப் போகிறோம் –

முதல் அதிகரணம் -ததந்திர பிரதிபத்த்ய அதிகரணம் -7 ஸூத்ரங்கள் –
ஜீவன் இந்த உடலை விட்டு கிளம்பும் பொழுது
பஞ்ச பூதங்களுடன் கூடிய சூஷ்ம ரூபத்துடன் செல்வதை சாந்தோக்யம் -கருத்து நிரூபிக்கப்படுகிறது –

இரண்டாவது அதிகரணம் –க்ருதாத்ய யாதிகரணம்–4 ஸூத்ரங்கள்-
அனுபவிக்க வேண்டிய எஞ்சிய கர்ம பலன்களுடன் ஸ்வர்க்கத்தில் இருந்து ஜீவன் வருகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது-

மூன்றாம் அதிகரணம் –அநிஷ்டாதிகார்யாதிகரணம்-10- ஸூத்ரங்கள்–
பாபம் செய்தவர்கள் சந்திர மண்டலம் செல்வது இல்லை என்பது நிரூபிக்கப் படுகிறது-

நான்காவது அதிகரணம் –தத் ஸ்வா பாவ்யாபத்த்யதிகரணம் – 1 ஸூத்ரம்-
மேலே கிளம்பிய ஜீவன் ஆகாசம் போன்றவற்றுடன் தொடர்பு மட்டுமே அடைகின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது

ஐந்தாம் அதிகரணம் -நாதிசிராதி கரணம்- 1 ஸூத்ரம்-
ஆகாசம் போன்றவற்றில் ஜீவன் சிறிது காலமே தங்கி விட்டுக் கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

ஆறாவது அதிகரணம் -அந்யா திஷ்டிதாதி கரணம் -4-ஸூத்ரங்கள்–
மற்ற ஜீவன்களுடன் தொடர்பு மட்டும் கொள்கின்றான் என்கிறதாயிற்று-

3-1-1-தத₃ந்தரப்ரதிபத்த்யதி₄கரணம் –மூன்றாம் அத்யாயத்தின் அறிமுகம் -ஸங்கதி –
ப்ரஹ்ம ஸூத்ரங்கள் என்ற நூலில் 4 அத்யாயங்கள் உள்ளன –ஸமந்வய, அவிரோத, ஸாதந, பல அத்யாயங்கள் என்று. அதில் முதல் இரண்டு அத்யாயங்களும் சேர்த்து ஸித்₃த₄ த்₃விகம் என்று அழைக்கப் படுகின்றன, ஸித்தமான (தயாரான) பொருளான ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தையும், அவர் தான் ஜகத் காரணம் என்பதையும், மோக்ஷம் அடைவதற்கு அவரைத் தான் உபாஸிக்க வேண்டும் என்பதையும் சொல்வதால். இனி மேலுள்ள இரண்டு அத்யாயங்களும் சேர்த்து ஸாத்₄ய த்₃விகம் என்று அழைக்கப் படுகின்றன–ஸாதிக்கப் பட வேண்டிய(செய்யப் பட வேண்டிய) பொருள்களைப் பற்றிப் பேசுகிற படியால். அதில் மூன்றாம் அத்யாயத்தில் மோக்ஷம் அடைவதற்கான உபாயமான (வழியான) உபாஸநம் என்பதைப் பற்றிஆராய்கிறார் வ்யாஸர். நான்காம் அத்யாயத்தில் அடையப்படுகிற மோக்ஷத்தின் தன்மைகளை ஆராய்கிறார்–
இந்த மூன்றாம் அத்யாயத்தில் 4 பாதங்கள் உள்ளன–வைராக்₃ய பாதம், உப₄யலிங்க₃ பாதம், குண உப ஸம்ஹார பாதம் மற்றும் அங்க₃பாதம். இந்த நான்கு பாதங்களின் பொருளையும் சுருக்கமாக ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகார ஸாரா வலீ என்னும் நூலில் காட்டுகிறார்

பாதா₃ப்₄யாம் அத்ர பூர்வம் ஜநயதி ப₄விநாம் ப்₃ரஹ்ம வித்₃யாதி₄காரம்
பஶ்சாத் தேஷாம் உபா₄ப்₄யாம் வத₃தி ப₃ஹுவித₄தாம் தாம் அசேஷ꞉ ஸஹாங்கை ₃꞉ ।
ஐஶ்வர்யாதௌ விரக்திம் நிரவதி₄விப₄வே புருஷே சாபி₄லாஷம்
வித்₃யா பே₄தா₃வலம்ப₃ம் தது₃பகரண மப்யாஹ பாதை ₃꞉ க்ரமேண ॥

உபாஸநம் செய்வதற்கு அடிப்படைத் தகுதி–உலக விஷயங்களில் வைராக்யம் (பற்றின்மை ) மற்றும் பரமாத்மாவிடம் மிகுந்த ஆசை (பக்தி). இவை இரண்டையும் ஏற்படுத்துவதற்காகத் தான் முதல் பாதத்தில் ஸம்ஸாரத்தில் இருக்கும் ஜீவாத்மா வெவ்வேறு நிலைகளில் படக் கூடிய துன்பங்களையும், இரண்டாவது பாதத்தில் பகவானுடைய பெருமைகளையும் வ்யாஸர் கூறுகிறார். அதற்கு மேல் மூன்றாவது பாதத்தில் உபாஸநம் செய்வதில் உள்ள வெவ்வேறு முறைகளையும் நான்காவது பாதத்தில் உபாஸநத்துக்குத் தேவையான அங்கங்களையும் விவரிக்கிறார்.

3-1-1-தத₃ந்தர ப்ரதிபத்த் யதி₄கரணம் -அதிகரணத்தின் பின்புலம் ––இந்த அதிகரணத்தில் ஓர் ஆத்மா ஓர் உடலை விட்டு, வேறொரு உடலுக்குச் செல்லும் நிலம் ஆராயப் படுகிறது.
ஸந்தேஹம்– உடல் என்பது ஐம் பூதங்களால் ஆக்கப் பட்டது. பூத ஸூக்ஷ்மங்கள் அதாவது ஐம் பூதங்களில் நுண்ணிய பகுதிகளால் தான் அது உண்டாக்கப் பட வேண்டும். எனவே , ஜீவாத்மா ஓருடலிலிருந்து மற்றொரு உடலுக்குச் செல்லும் போது, அந்த உடலை உண்டாக்கத் தேவையான பூத ஸூக்ஷ்மங்களைத் தன்னோடு எடுத்துச் செல்கிறாரா? அல்லவா? என்பது தான் இந்த அதிகரணத்தில் உள்ள ஸந்தேஹம்-

பூர்வ பக்ஷம்– பூத ஸூக்ஷ்மங்கள் இல்லாமல் தனியாகத் தான் செல்கிறார் ஜீவாத்மா. ஏனெனில், அவர் எந்த இடத்தில் போய் சேருகிறாரோ , அங்கேயே பூத ஸூக்ஷ்மங்கள் இருக்கப் போகின்றன, அவற்றைக் கொண்டே புது உடலை உண்டாக்கி விடலாம்.அதனால் முன் உடலிலிருந்து பூத ஸூக்ஷ்மங்களைச் சுமந்து செல்லத் தேவை யில்லை

ஸித்தாந்தம்– ஜீவாத்மா பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துக் கொண்டு தான் செல்கிறார் என்று இந்த அதிகரணத்தில்உள்ள 7 ஸூத்ரங்களால் வ்யாஸர் நிரூபிக்கிறார்.
1–தத₃ந்தர ப்ரதி பத்தௌ ரம்ஹதி ஸம் பரிஷ்வக்த: ப்ரச்ந ப்ரதிவசநாப்₄யாம்(நிரூபணாப்யாம் )
தத₃ந்தர ப்ரதி பத்ததௌ
–வெவ்வேறு உடலை அடையும் பொழுது–தத் என்றால்’அது’ என்று பொருள்.
முன் அதிகரணத்தில் ’ஸம்ஜ்ஞா மூர்தி க்லிப்தி’ (நாம ரூப வியாக்ரணம் -பெயர் உருவம் கொடுத்தல் )என்ற ஸூத்ரத்தில் மூர்த்தி என்ற சொல்லால் ’உடல்’ குறிக்கப்பட்டது. அதைத் தான் இவ் விடத்தில் அது என்று நினைவு கூறுகிறார். ஆகவே , தத்= உடல்; ததந்தரம்= வெவ்வேறு உடல்; பிரதிபத்தி= அடைதல். அப்பொழுது–
ஸம் பரிஷ்வக்த:
– பூத ஸூக்ஷ்மங்களை (அணைத்துக் கொண்டு )அழைத்துக் கொண்டு (எடுத்துக் கொண்டு) ரம்ஹதி–(ஜீவாத்மா) செல்கிறார்
ப்ரச்ந ப்ரதிவசநாப்₄யாம் – கேள்வி பதில்களால் (நிரூபணாப்யாம் )-

பஞ்ச அக்நி வித்யை – சாந்தோக்ய உபநிஷத்தின் 5 ஆவது அத்யாயத்தில் பஞ்சோக்₃நி வித்₃யா என்பது வருணிக்கப் பட்டுள்ளது. அதிலிருக்கும் கேள்வி பதில்களைத் தான் இங்கு வ்யாஸர் குறிப்பிடுகிறார்
ச்வேத கேது என்பவன் (ஆருணி என்றும் இவர் பெயர் ) பாஞ்சால தேசத்து அரசனான ப்ரவாஹணனுக்குச் சில வைதிக கர்மங்களைச் செய்து வைப்பதற்காகச் சென்ற போது அவர் இவனிடம் 5 கேள்விகள் கேட்டார். அவனுக்குப் பதில் தெரியாததால் தன் தந்தையிடம் (கௌதமர் இவர் தகப்பனார் )வந்து அவன் கேட்க, அவரும் பதில் தெரியாமல் ப்ரவாஹணரிடமே சென்று விடை கேட்டார். அப்போது பஞ்சோக்₃நி வித்₃யா என்பதை ப்ரவாஹணர் உபதேசித்தார். அந்த ஐந்து கேள்விகள்-
1-வைதிக கர்மங்களைச் செய்பவர்கள் எந்தப் பாதையால் ஸ்வர்கத்தை அடைகிறார்கள்?
2-அவர்கள் எந்தப் பாதையால் திரும்பவும் பூ லோகத்தில் வந்து பிறக்கிறார்கள்?
3–தேவ யானம் பித்ரு யானம் என்ற இரண்டு பாதைகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
4-யாரெல்லாம் ஸ்வர்க லோகத்தை அடைவதில்லை ?
5–ஜலமானது ஐந்து ஆஹுதிகளுக்குப் பிறகு எப்படி ’மனிதன்’ என்றழைக்கப்படும் உடலாக மாறுகிறது?
இதில் ஐந்தாவது கேள்வியும் அதற்கான பதிலும் தான் நமக்கு இப்போது தேவையானவை

அக்நி என்ற உருவகப் படுத்தப்பட்ட ஐந்து பொருள்களில் ஜலத்தை ஆஹுதியாகக் கொடுக்கக் கொடுக்க அது பல மாறுபாடுகளை அடைந்து இறுதியில் மனித உடலான கர்பமாக மாறுகிறது என்று ப்ரவாஹணர் பதில் கூறினார். இது தான் பஞ்சோக்₃நி வித்₃யா என்று அழைக்கப் படுகிறது. இறுதியில் மனித உடல் உண்டாகிற படியால், அதற்குத் தேவையான பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துக் கொண்டு தான் ஜீவாத்மா இந்த ஐந்து நிலைகளையும் கடக்கிறார் என்று கேள்வி-பதில்களைக் கொண்டு நாம் அறிய முடிகிறது.

ஹோமப் பொருள் ஸ்ரத்தா-(பூத சூஷ்மங்களுடன் கூடிய ஜீவாத்மா)-அக்னி -ஸ்வர்க்கம் -மாற்றம் -ஸோமராஜா -அழகிய உடல்
ஹோமப் பொருள் -சோமராஜா -அக்னி -மேகம் -மாற்றம் -மழை –
ஹோமப் பொருள் -மழை -அக்னி -பூமி – -மாற்றம் -அன்னம் -சோறு
ஹோமப் பொருள் –அன்னம் -அக்னி -ஆண் -மாற்றம் -ரேதஸ் விந்து –
ஹோமப் பொருள் -ரேதஸ் -அக்னி -பெண் -மாற்றம் -கர்ப்பம் -மனித உடல் –

ஜீவாத்மா அடுத்த உடலுக்குப் பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துச் செல்கிறாா்–புலன்களும் பூத ஸூக்ஷ்மங்களும் செல்கின்றன -ஒரு ஜீவாத்மா ஓரு உடலை விட்டு வேறொரு உடலுக்குச் செல்லும் போது, அந்த உடலை உண்டாக்கத் தேவையான பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துக் கொண்டு செல்கிறாரா? இல்லையா ? என்கிற ஆராய்ச்சி செய்யப் படுகிறது. சாந்தோக்ய உபநிஷத்திலுள்ள பஞ்ச அக்நி வித்யையில் ப்ரவாஹணர் ஸ்வேத கேதுவுக்கும் அவருடைய தந்தைக்கும் உபதேசிக்கும் போது, இந்த உடலிலிருந்து பிரிந்த ஜீவாத்மா ஸ்வர்கம்,மேகம், பூமி, ஆண், பெண் என்ற ஐந்து அக்நிகளில் ஆஹுதியாகக் கொடுக்கப்பட்டதும் மனித உடலை அடைகிறார் என்று கூறுவதால், கண்டிப்பாக அந்த உடலை உண்டாக்கத் தேவையான பூத ஸூக்ஷ்மங்களையும் எடுத்துக் கொண்டு தான் அவர் சென்றிருக்க வேண்டும் என்று முதல் ஸூத்ரத்தில் வ்யாஸர் நிரூபித்தார். இனி மேலுள்ள ஸூத்ரங்களைப் பார்ப்போம்.

பூர்வ பக்ஷியின் கேள்வி–ப்ரவாஹணரின் கேள்வியில் “ஜலம் ஐந்து ஆஹுதிகளுக்குப் பிறகு எப்படி மனிதனாக மாறுகிறது என்று தெரியுமா?” என்று தானே உள்ளது. ஜலத்தை மட்டும் தானே குறிப்பிட்டு்கிறார். பிறகு எப்படி எல்லாப் பூத ஸூக்ஷ்மங்களையும் எடுத்துச் செல்வதாகக் கொள்ள முடியும்?
வ்யாஸரின் பதில் அடுத்த ஸூத்ரத்தில்–2-திரியாத் மகத் வாத் து பூ₄யஸ்த்வாத்
–“மூன்றின் வடிவமானதால்; அதிகமானதால்”
முன் அதிகரணத்தில் சொன்ன படிக்கு, ஐம்பூதங்களையும் படைத்த பிறகு பகவான் அவற்றைக் கலந்து பஞ்சீகரணம் என்ற செயலைச் செய்கிறார். அதனால் ஒவ்வொரு பூதமுமே ஐம் பூதங்களின் வடிவமாகத் தான் உள்ளது. எனவே இங்கு ஜலம் என்று குறிப்பிடப் பட்டதும் ஐம் பூதங்களின் பூத ஸூக்ஷ்மங்களும் தான்.(பஞ்சீகரணத்துக்கு உப லக்ஷணம் -பஞ்சாத்மகத்வாத் என்றே கொள்ள வேண்டும்)
-பிறகு ஏன் அதை மற்ற பெயர்களால் குறிப்பிடாமல் ’ஜலம்’ என்று குறிப்பிடுகிறார்? அதிகமான பகுதி ஜலமான படியால். உண்டாக்கப்படும் மனித உடலிலும் ஜலம் தானே பெரும்பாலும் உள்ளது

3– ப்ராண க₃தே : ச – “ப்ராணன்கள் (புலன்கள்) செல்வதாலும்”;
இதில் வேறொரு காரணம் காட்டுகிறார். -ஜீவன் உடலிலிருந்து புறப்படும் பொழுது மூச்சுக் காற்றையும் புலன்களையும் எடுத்துச் செல்கிறார் எனப்படுகிறது. புலன்களை மட்டும் எடுத்துச் செல்ல இயலாதாகையால், அவற்றுக்கு இருப்பிடமான பூத ஸூக்ஷ்மங்களையும் சேர்த்துத் தான் எடுத்துச் செல்ல வேண்டும், காற்று புஷ்பத்தின் துகள் களோடு மணத்தை எடுத்துச் செல்வது போல்.(கீதையிலும் இதே போல் அருளிச் செய்துள்ளார்)

ஸ்ரீ கீதை 15-7/8–மன ஷஷ்டானி இந்த்ரியாணி பிரகிருதி ஸ்தானி கர்ஷதி சரீரம் யத் அவாப் நோதி யத் ச அபி உக்த்க்ரமாதீச்வர க்ரஹீத்வைதானி சம்யாதி வாயுர் கந்தா நிவாசயாத் – என்று காற்று மலர்களில் உள்ள நறு மணத்தை கவர்ந்து செல்வது போலே ஜீவன் அனைத்தையும் எடுத்துச் செல்கிறான்-இவற்றுக்கு ஆஸ்ரயமாக பூத ஸூஷ்மங்களும் கூட செல்கின்றன –

புலன்கள் அழிகின்றனவா? செல்கின்றனவா?
கேள்வி
–வேதத்தில், ஒருவன் மரணமடையும் பொழுது புலன்கள் அழிந்து போகின்றன என்று தான் சொல்லப் படுகிறது. (யத்ர அஸ்ய புருஷஸ்ய ம்ருதஸ்ய அக்₃நிம் வாக்அப்யேதி, வாதம் ப்ராண :, சஷுஸ் : ஆதி₃த்யம்) அதாவது“ஒரு மனிதன் மரணம் அடையும் பொழுது அவனுடைய வாக்(பேச்சுப் புலன்) நெருப்பில் லயம் அடைகிறது (அழிந்து போகிறது), மூச்சு காற்றில் சேர்கிறது, கண் ஸூர்யனிடம் லயம் அடைகிறது” என்றுள்ளது. எனவே , ஜீவாத்மா வேறொரு உடலுக்குச் செல்லும் பொழுது புலன்களையும் எடுத்துச் செல்கிறார் என்பது தவறு.

வ்யாஸரின் பதில்–அடுத்த ஸூத்ரத்தில்
4–அக்₃ந்யாதி₃ க₃தி ச்ருதே : இதி சேத் ந பா₄க்தத்வாத்
அக்₃ந்யாதி₃க₃திச்ருதே
: – புலன்கள் அக்நி முதலானவற்றில் லயம் அடைவதாக வேதம் சொல்வதால்
இதி சேத் ந–என்று நீங்கள் கூ₂றினால், அது தவறானது
பா₄க்தத்வாத்– இந்த வாக்யம் நேரடிப் பொருளைக் குறிக்காமல் வேறொரு அர்த்தத்தில் சொல்லப் பட்டு்ள்ளபடியால்.

இதே இடத்தில் (ஓஷதீ₄: லோமாநி, வநஸ்பதீந் கேசா 🙂 அதாவது “உடலிலிருக்கும் முடிகள் செடி கொடிகளைச் சென்றடைகிறது, தலையிலிருக்கும் முடிகள் மரங்களில் லயம் அடைகின்றன” என்றும் கூறப்பட்டு்ள்ளது. அது கண்டிப்பாக நேரடியான பொருளில் கூறப் பட்டிருக்க முடியாது, அப்படி எதுவும் நடக்காததால். எனவே , இந்தப் பகுதி முழுவதுமே அதி₄ஷ்டா₂த்ரு தே₃வதா அபக்ரமணம் என்ற பொருளில் தான் உள்ளது. -அதாவது, உடலிலிருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் வலுவூட்டக் கூடிய தெய்வங்கள் உள்ளார்கள் . நெருப்புக்கான கடவுள் பேச்சுப் புலனையும், காற்றுத் தேவதை மூச்சுக் காற்றையும் , ஸூர்யனுக்கான தேவதை கண்ணையும், செடி கொடிகளின் தேவதை உடல் முடிகளையும், மரங்களுக்கான அபிமாநிநீ தேவதை தலை முடியையும் பாதுகாக்கிறார்கள் ஒருவன் மரணமணடயும் போது, பேச்சுப் புலனை இதுவரை காத்து வந்த தெய்வம், இனி அதற்குத் தேவை இல்லாதலால், அக்நிக்கு மட்டும் தெய்வமாக இருக்கும். அதைத் தான்“பேச்சுப் புலன் அக்நியில் சேர்கிறது” என்று வேதம் கூறுகிறது. அதே போல் தான் மற்ற இடங்களிலும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே , புலன்கள் அழிவதில்லை , ஜீவாத்மாவால் தான் அடுத்த உடலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்.

ஸ்ரத்தா என்றால் என்ன?
கேள்வி
–ப்ரவாஹணரின் கேள்வியில்-’ஜலம் ஐந்து ஆஹுதிகளுக்குப் பிறகு எப்படி மனித உடலாக ஆகிறது?’ என்று ஜலத்தை (பூத ஸூக்ஷ்மங்களை ) பற்றின பேச்சு இருந்தாலும், ஆஹுதிகணை ஒவ்வொன்றாகச் சொல்லும் பொழுது, முதல் ஆஹுதியில் ’ஸ்ரத்₃தா₄’ என்ற பொருள் தான் ஸ்வர்கம் என்ற அக்நியில் ஆஹுதியாகக் கொடுக்கப் படுவதாகச் சொல்லப் பட்டு்ள்ளது. ஸ்ரத்தா என்றால் ஈடுபாடு-நம்பிக்கை என்கிற எண்ணம் தான் -ஆகவே , ஜீவாத்மா பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துச் செல்வதாக எப்படிச் சொல்ல முடியும்? வியாஸரின் பதில்–அடுத்த ஸூத்ரத்தில்

5– ப்ரத₂மே அஶ்ரவணத் இதி சேத் நதா: ஏவ ஹி உபபத்தே :
ப்ரத₂மே அஶ்ரவணத்
-முதல் ஆஹுதியில், ஜலம் (பூத ஸூக்ஷ்மங்கள் )வேதத்தில் சொல்லப்படாதபடியால்
இதி சேத் ந–என்று நீங்கள் சொன்னால், அது தவறு
தா: ஏவ ஹி–அந்த பூத ஸூஷமங்கள் தானன்றோ (ஸ்ரத்₃தா₄ என்ற சொல்லால் குறிக்கப் படுகின்றன)
உபபத்தே :– (அப்போது தான் கேள்வியும் பதிலும்) பொருந்துகிற படியால்
முதலில் ப்ரவாஹணரின் கேள்வியில் ’ஜலம் மனித உடலாக மாறுகிறது’ என்றுள்ளது. பதிலின் முடிவிலும் ’இவ்வாறு ஜலம் மனித உடலாக மாறுகிறது’ என்றுள்ளது. எனவே நடுவில்’ ஸ்ரத்தா என்ற பொருள் ஐந்து ஆஹுதிகளைத் தாண்டி மனித உடலாக மாறுகிறது’ என்று சொல்லப்பட்டாலும், அந்த ஸ்ரத்தா என்பது ஜலம் (பூத ஸூக்ஷ்மங்கள் ) என்று தான் கொள்ள வேண்டும். இல்லா விட்டால், கேள்விக்கும் பதிலுக்கும் பொருத்தமே இல்லாமல் போய் விடும்.
மேலும் வேதத்தில் வேறொரு இடத்தில்“ஸ்ரத்₃தா₄ வை ஆப:” அதாவது ’ஜலம் அன்றோ ஸ்ரத்தா என்று சொல்லப் படுகிறது’ என்று தெளிவாகவே சொல்லப்பட்டு்ள்ளது. எனவே இங்கும் அதுவே பொருள் –

ஜீவாத்மா எங்கே சொல்லப் பட்டு்ள்ளார்? கேள்வி–ஸ்ரத்தா-ஜலம் என்று பூத ஸூக்ஷ்மங்கள் சொல்லப் பட்டு்ள்ளன. அவை ஐந்து ஆஹுதிகளைக் கடந்து மனித உடல் ஆகின்றன. ஆனால் இங்கு ஜீவாத்மாவைப் பற்றின பேச்சே இல்லையே ? பிறகு இதைக் கொண்டு எப்படி ஜீவாத்மா பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துச் செல்கிறார் என்று கூற முடியும்? வ்யாஸரின் பதில்-
6-அஸ்ருத்த்வாத் இதி சேத் ந இஷ்டாதி₃காரிணாம் ப்ரதீதே : ச-•
அஸ்ருத்த்வாத்
–ஜீவாத்மா இங்கு சொல்லப் படாதபடியால் இதைக் கொண்டு முடிவு செய்ய இயலாது
இதி சேத் ந–என்று நீங்கள் சொன்னால் அது தவறானது
இஷ்டாதி₃காரிணாம் ப்ரதீதே ச:-யாகம் முதலானவற்றைச் செய்பவர்கள் என்றும் சொல்லப் படுகிற படியால்-அறிந்து கொள்ளலாம்-

இதே பஞ்சாக்நி வித்யையில்(அத₂ ய இமே க்₃ராமே இஷ்டா பூர்தே த₃த்தம் இத் யுபாஸதே தே தூ₄ம மேவ அபி₄ஸம்ப₄வந்தி… ஆகாசாத் சந்த்₃ரமஸம், ஏஷ ஸோமோ ராஜா) அதாவது “யாரெல்லாம் உலகத்தில் இஷ்டம்(தேவர்களுக்குச் செய்யும் யாகம் ஹோமம் முதலானவை ), பூர்தம் (மனிதர்களுக்காகச் செய்யும் மரம் நடுதல், குளம் வெட்டுதல் முதலானவை ), த₃த்தம் (தானம் செய்தல்) முதலானவற்றைத் தொடர்ந்து செய்கிறார்களோ அவர்கள் இந்த உடலை விட்டு புகை மண்டலம் இரவுக்காக தேவதை மூலமாகஆகாசம், சந்த்ரன் மூலமாக ஸ்வர்கத்தை அடைந்து ஸோம ராஜாவாக (அழகான உடலை உடையவராக) ஆகிறார்” என்றுள்ளது.

ஒரு இடத்தில் “ ஸ்ரத்தா என்பது ஸ்வர்கத்தில் ஆஹுதியாகக் கொடுக்கப்பட்டு ஸோமராஜாவாக ஆகிறது” என்றும், மற்றொரு இடத்தில் “யாகம் முதலானவற்றைச் செய்த ஜீவாத்மா ஸ்வர்கத்தை அடைந்து ஸோம ராஜாவாக ஆகிறார்” என்றும் சொல்லப் பட்டு்ள்ளபடியால், இங்கு ஸ்ரத்தா எனப்படுவதும் வெறும் பூத ஸூக்ஷ்மங்களை அல்ல, அவற்றோடு கூடின ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.

ஸ்ரத்தா, ஸோமராஜா, மழை , அந்நம், ரேதஸ், கர்பம் என்று ஒவ்வொரு நிலையிலும் வெறும் பூத ஸூக்ஷ்மங்கள் சொல்லப் பட வில்லை , அந்தந்த நிலையில் உள்ள பூத ஸூக்ஷ்மங்களை உடலாகக் கொண்ட ஜீவாத்மா தான் சொல்லப் படுகிறார்.

ஸ்வர்கம் செல்லும் ஜீவாத்மாவின் நிலை கேள்வி–இங்கு ஸோம ராஜா என்று சொல்லப்பட்டவர் ஜீவாத்மாவாக இருக்க முடியாது. ஏனெனில் (ஏஷ ஸோமோ ராஜா, தத் தே₃வாநாம் அந்நம், தம் தே₃வா: ப₄க்ஷயந்தி) அதாவது “ஸோம ராஜா என்பது தேவர்களின் அந்நம் (உணவு), அதை தேவர்கள் உண்ணுகிறார்கள் ” என்று ப்ரவாஹணர் உபதேசிக்கிறார். ஜீவாத்மாவை உண்ண முடியாதே ?வ்யாஸரின் பதில்–அடுத்த(கடைசி) ஸூத்ரத்தில்

7–பா₄க்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா₂ ஹி த₃ர்ஸயதி
பா₄க்தம்வா
–“உருவகம் தான்”. உணவு- உண்கிறார்கள் என்றது நேரடியான பொருளிலல்ல, உருவகமாக. உணவு எப்படி ஒருவனுக்குத் திருப்தியை அளிக்குமோ அது போல் ஸ்வர்கத்தை அடைந்த இந்த ஜீவாத்மா தேவர்களுக்குத் திருப்தி அளிக்கிறான் என்று தான் பொருள்
(ந வை தே ₃வா: அச்நந்திம் ந பிப₃ந்தி, ஏத்தே₃வ அம்ருதம் த்₃ருஷ்ட்வா த்ருப்யந்தி) அதாவது “தேவர்கள் உண்பதில்லை , பருகுவதில்லை , இதைப் பார்த்தே த்ருப்தி அடைகிறார்கள் ” என்று வேதமே காட்டுகிறது. அதனால், இங்கு நேரடியாக உண்பது சொல்லப் படாதபடியால் ஸோம ராஜா என்பது பூத ஸூக்ஷ்மங்களோடு கூடின ஜீவாத்மா தான்

அநாத்ம வித்த்வாத்–“ஆத்ம ஜ்ஞாநி அல்லாத படியால்”. ஸ்வர்கத்தை அடையும் இந்த ஜீவாத்மா சிறந்த ஆத்ம ஜ்ஞாநியோ ,பரமாத்மாவை உபாஸிப்பவனோ அல்ல. உலகத்தில் இஷ்டம் பூர்தம் த₃த்தம் முதலானவற்றைச் செய்தவன் தான். அதனால் அவன் ஸ்வர்கத்தை அடைந்து, அங்கு தேவர்களுக்கு ஒரு கருவி போல் -உதவியாளனாக இருந்து தொண்டு செய்து த்ருப்தியை ஏற்படுத்துகிறான் என்று சொல்வதில் எந்த முரண்பாடும் இல்லை-
ததா₂ ஹி த₃ர்ஸயதி–“அவ்வாறு அன்றோ வேதம் காட்டுிறாது”.
(யதா₂பசு: ஏவம் ஸ: தேவாநாம்₃) அதாவது “எப்படி ஒரு விலங்கோ அது போல் தான் அவன் தேவர்களுக்கு” என்று இவன் தேவர்களுக்கு ஒரு கருவியாக இருப்பதை வேதமே காட்டுகிறது. அதனால் இந்தப் பொருள் பொருத்த முடையதே .-

ஆக, பஞ்சாக்நி வித்யையில் உள்ள கேள்வி பதில்களின் மூலம், ஒ்ரு உடலை விட்டு வேறொரு உடலுக்குச் செல்லும் ஜீவாத்மா, பூத ஸூக்ஷ்மங்களையும் எடுத்துக் கொண்டு தான் செல்கிறாா் என்பது நிரூபிக்கப் பட்டது.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading