அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.
பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம் ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||
யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:
————————-
நான்காம் பாதம் -பிராண பாதம் -எட்டு அதிகரணங்கள்-
2-4-1-ப்ராண உத்பத்த்யதி₄கரணம் –புலன்களும் படைக்கப்படுபடுபவையே–
பூர்வ பக்ஷிகளின் வாதம்- 2ஆவது அத்யாயத்தின்-3ஆவது பாதத்தில் ஐம்பூதங்களும் ஆத்மாக்களும் கூட ப்ர்ஹமத்தின் கார்யங்கள் தான், அதாவது படைக்கப் பட்டவை தான் என்று நிரூபித்தார் வ்யாஸர். அதைத் தொடர்ந்து –4ஆம் பாதத்தில் ஜீவாத்மாவுக்கு உதவும் கருவிகளான இந்திரியங்களும் ப்ராண வாயுவையும் பற்றி ஆராய்ச்சி செய்யப்படுகிறது -அவற்றுக்கு ஆகாஸம் முதலான அசேதனப் பொருள்களைப் போல் உருவ மாறுபாடு ஏற்படுகிறதா? அல்லது ஜீவாத்மாவைப் போல் நித்யமான படியால் பண்புகளில் மட்டும் மாறுபாடு ஏற்படுகிறதா? என்று.
இந்தப் பாதத்தில் மொத்தம் 8 அதிகரணங்கள்உள்ளன. அதில் முதல் மற்றும் கடைசி அதிகரணங்களில் தான் நேரடியாக புலன்கள் மற்றும் ப்ராண வாயுவின் உண்டாக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யப்படுகிறது. நடுவில் உள்ள 6 அதிகரணங்கள் ப்ரஸங்காத்(நினைவு வந்தபடியால்) புலன்கள் மற்றும் ப்ராண வாயுவின் தன்மைகளைச் சொல்பவையாக உள்ளன–
(பிராணாதிகரணம் -முதல் அத்யாயம் முதல் பாதத்தில் பார்த்தோம் -இங்கு பிராண உத்பத்தி அதிகரணம் -இதில் மூன்று ஸூத்ரங்கள் உள்ளன -முதல் ஸூத்ரம் பூர்வபக்ஷம் ஸ்பஷ்டமாக சொல்லி ஸித்தாந்தம் மறைந்த உள்ளுரைப்பொருளாக -உத் ஸூத்ரமாக உள்ளது –இறுதியான எட்டாவது அதிகரணத்தில் புலன்கள் நேரடியாக ஸ்ருஷ்டிக்கப் படுவதை காட்டி அருளுகிறார்)
2-4-1-ப்ராண உத்பத்த்தி₄கரணம்–இந்த அதிகரணத்தில் ப்ராணன் என்று அழைக்கப் படும் புலன்கள்(இந்த்ரியங்கள்) உண்டாகின்றனவா இல்லையா என்று ஆராயப்படுகிறது. இதில் மொத்தம் 3 ஸூத்ரங்கள் உள்ளன. முதல் ஸூத்ரம் பூர்வ பக்ஷத்தைக் காட்டுகிறது. அதிலேயே உத் ஸூத்ரமாக(ஸூத்ரத்திலியே நேரடியாக சொல்லப்படாமல் மறை முகமாக)ஸித்தாந்தமும் சொல்லப்படுகிறது. அதற்குப் பின்-2 ஸூத்ரங்கள் ஸித்தாந்தி கூறும் வேறு சில யுக்திகளைச் சொல்கின்றன–
பூர்வ பக்ஷம்–1-ததா ₂ ப்ராணா :-“அவ்வாறே ப்ராணங்கள்”
அவ்வாறு-2-3-3-ஆத்மாதிகரணத்தில் ஆத்மா எப்படிப் பட்டவராகச் சொல்லப்பட்டாவரோ அப்படிப் பட்டவை தான் ப்ராணங்களும் என்று பொருள். அதாவது, 2.3.3 ஆத்மாதிகரணத்தின் முதல் ஸூத்ரம் “ந ஆத்மா ச்ருதே .” என்பது. அதன் பொருள் – “ஆத்மா உண்டாவதில்லை ; வேதம் சொல்கிற படியால்” என்பதாகும். “ப்ராணங்கள் அவ்வாறே ” என்றால் “ப்ராணங்கள் உண்டா வதில்லை ; வேதம் சொல்கிற படியால்”என்று பொருள். எனவே ப்ராணங்கள் எனப்படும் புலன்கள் நித்யமானவை என்பதே இவர்கள் வாதம்–
அஸத்₃வா இத₃மக்₃ர ஆஸீத் … ரிஷயோ வாவ தே அக்₃ரே ஸதா₃ஸீத் । ததா₃ஹு: கே தே ரிஷய இதி । ப்ராணா வாவ ரிஷய: ஸ்ருஷ்டிக்கு முன்னால் இவ் வுலகம் அனைத்தும் அஸத்தாக(இல்லாததாக) இருந்தது. அப்போது ரிஷிகள் மட்டும் தான் இருந்தன. ரிஷிகள் எனப்படுபவை ப்ராணங்கள்(புலன்கள்-இந்த்ரியங்கள்) தான்–ப்ரளயத்தின் போதும் புலன்கள் இருந்தன என்று வேதம் சொல்கிறபடியால் அவற்றுக்கு உண்டாக்கமில்லை என்று அவர்கள் வாதம்.
வேத வ்யாஸரின் மறுப்பு– ஸித்தாந்தம் –ஸூத்ரத்தில் வெளிப்படையாகச் சொற்களால் சொல்லப் படாமல், உள்ளுரைப் பொருளாக ஸித்தாந்தம் கூறப்படுகிறது.-ஆகமம் முதலானவை எப்படி உண்டாக்கப் படுகின்றனவோ அது போல் புலன்களும் உண்டாக்கப் படுகின்றன,ஏனெனில்
1–“ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத் ஏகமேவ அதி₃விதீயம்”,
“ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்₃ர ஆஸீத்” முதலான வாக்கியங்களில் ஸ்ருஷ்டிக்கு முன்னால், ப்ரளய காலத்தில், ஒரே ஒரு பொருள் தான் இருந்தது எனப்படுகிறது. எனவே புலன்கள் அப்போது இல்லை
2- ஏதஸ்மாத் ஜாயதே ப்ராணா : மந: ஸர்வேந்த்₃ரியாணி ச -அதாவது “இந்த ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராண வாயுவும் மனதும் எல்லாப் புலன்களும் உண்டாகின்றன-என்று ஸ்பஷ்டமாக உள்ளது. ஆக, ப்ரளயத்தில் அவை இல்லை
கேள்வி –ஆத்மவுக்குச் சில வாக்கியங்களில் பிறப்புண்டு என்று சொல்லப்பட்டிருந்தாலும் அது உண்டாக்கமல்ல, நித்யமான ஆத்மா ஓர் உடலை எடுத்துக் கொள்வது தான் சொல்லப் படுகிறது என்று கூறினீர்கள். அது போல் இங்கும் புலன்கள் உண்டாகின்றன என்று கொள்ளாமல். நித்யமான புலன்கள் வெளிப்படுகின்றன என்று கொள்ளலாமே ?
பதில்–(ந ஜாயதே ம்ரியதே இத்யாதி )ஆத்மாக்கள் உண்டாகுவதில்லை என்றும், ஆத்மாக்கள் நித்யமானவை என்றும் கூறும் வேத வாக்கியங்கள் பல உள்ள படியால், “ஆத்மா பிறக்கிறார்” என்று கூறும் ஒரு வாக்கியத்துக்கு வேறு மாதிரி பொருள் கொண்டோம். ஆனால் புலன்கள் நித்யமானவை என்று கூறும் எந்த வேத வாக்கியமும் இல்லை – எனவே இந்த வாக்கியத்துக்கு நேரடியான பொருளைத் தான் ஏற்க வேண்டும்.
“அஸத்₃வா இத₃மக்₃ர ஆஸீத்” என்று முன்னால் காட்டப்பட்ட வாக்கியத்திலும்,ப்ரளய காலத்தில் புலன்கள் இருந்தன என்று கூறப்பட வில்லை –அந்த வாக்கியத்தில் ரிஷி என்றும் ப்ராணன் என்றும் சொல்லப்படுபவர் பரமாத்மா தான். ஏனெனில்
1-ப்ராணன் என்கிற சொல் வேதத்தில் பல இடங்களில் பரமாத்மாவைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது. பரமாத்மா நம்மை வாழ வைப்பதால், அவரைப் ப்ராணன் என்று கூறுவது பொருத்தமானதே —
2- ரிஷி என்ற சொல்லுக்கு“சிறந்த ஜ்ஞாந முடையவர்” என்று பொருள். அறிவற்ற புலன்களை ரிஷிகள் என்று அழைப்பது பொருந்தாது. ஸர்வஜ்ஞனான பரமாத்மாவையே ரிஷி என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
ஆக,புலன்களும் கூட ப்ரஹ்மத்தால் படைக்கத் தான் படுகின்றன என்று வேத வ்யாஸர் தன் ஸித்தாந்தத்தைக் கூறுகிறார்.
ஸித்தாந்தியின் வாதங்கள் -கேள்வி–ரிஷி ப்ராணன் என்ற சொற்கள் ஒருமையில் பயன் படுத்தப் பட்டிருந்தால் பரமாத்மா என்று பொருள் கூறலாம். ஆனால் வேதத்தில்“ரிஷிகள்”, “ப்ராணங்கள்” என்று ப₃ஹு வசனம்(பன்மை விகுதி) உள்ள படியால் பரமாத்மாவாக இருக்க முடியாதே ?
பதில்-2-கௌ₃ணீ அஸம்ப₄வாத் தத் ப்ராக் ச்ருதே : ச
கௌ₃ணீ–இவ் விடத்தில் உள்ள பன்மை விகுதி கௌ₃ணமானது– அதாவது பன்மை என்ற பொருள் இல்லாமல் வேறொரு இரண்டாம் பக்ஷமான பொருளை உடையது
அஸம்ப₄வத்–இயலாதபடியால்-ஸ்ருஷ்டிக்கு முன் பல பொருள்கள் இருக்க முடியாத படியால்”. இதற்குக் காரணம்
தத் ப்ராக் ச்ருதே : ச – பரமாத்மா மட்டுமே ஸ்ருஷ்டிக்கு முன் இருந்தார் என்று வேதம் சொல்கிறபடியால்.
(நாங்கள் போய் வருகிறோம் கௌசல்யை இடம் பெருமாள் சொன்னதை காட்டி லஷ்மணன் பன்மை பிரயோகத்தால் -ஒருமை இருமை பிரயோகம் இல்லாமல் -பன்மையாகவே அருளிச் செய்ததால் -தன்னையும் பிராட்டியாரையும் சேர்த்தே சொன்னதாக காட்டி கூடச் சென்றானே)
கேள்வி–ஸ்ருஷ்டிக்கு முன் புலன்கள் இருந்தன என்று வேதம் சொல்லா விட்டாலும் நாமே யுக்திகளைக் கொண்டு அவ்வாறு கல்பிக்கலாமே ? ப்ரளயத்தில் ஜீவாத்மா இருந்தார் என்று ஏற்பது போல் புலன்களும் இருந்தன என்றால் என்ன தவறு?
பதில்-3–தத் பூர்வ கத்வாத் வாச :– சொற்கள் பொருள்களை முன்னிட்டுக் கொண்டவை யான படியால்”
ப்ரளயத்திலும் ஆத்மாக்கள் இருந்தார்கள் என்று ஏற்பதற்குக் காரணம் உள்ளது -ப்ரளயத்துக்குப் பின் அந்தந்த ஜீவாத்மா அடையும் பிறவியானது, ப்ரளயத்துக்கு முன் அந்தந்த ஜீவாத்மா செய்த பாப புண்யங்களின் விளைவாகத் தான் இருக்க வேண்டும். எனவே இடைப்பட்ட ப்ரளய காலத்திலும் ஜீவாத்மாவும் அவரிடம் பாப புண்யங்களும் தொடர்ந்து இருந்தன என்று ஏற்க வேண்டும்.–அது போல் புலன்களும் ப்ரளயத்தின் போது இருந்தன என்று ஏற்க வேண்டுமென்றால், ப்ரளயத்திலும் புலன்களுக்குச் செயல்பாடு இருந்தது என்று காட்ட வேண்டும். ஆனால் அது பொருந்தாது. எடுத்துக் காட்டுக்கு–பேச்சுக்கான இந்த்ரியம் -சொற்களைப் பேச வேண்டும் என்றால் அதற்குச் சொற்கள் இருக்க வேண்டும். ஆனால், உலகச் சொற்கள் அனைத்துமே உலகம் படைக்கப் பட்ட பிறகு தான் உண்டாயின என்று வேதம் கூறுகிறது
தத்₃தே₄த₃ம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் । தந் நாம ரூபாப்₄யாம் வ்யாக்ரியதே என்று. ஆகையால், ப்ரளய காலத்தில் பொருள்கள் இல்லாத போது சொற்களும் இருந்திருக்க முடியாது. எனவே பேச்சுக்கான இந்த்ரியம் செயல் பட்டிருக்க முடியாது. எனவே அப் புலன் ப்ரளத்தின் போது இருந்தது என்று கல்பிப்பதற்கு எந்த ஒரு அடிப்படையும் இல்லை
ஆகவே ப்ராணங்கள் எனப்படும் புலன்களும் ப்ரஹ்மத்தால் படைக்கப் படுபவை தான் என்று நிரூபிக்கப்பட்டது.
—
2-4-2-ஸப்த க₃த்யதி₄கரணம்-புலன்கள் பதினொன்று -பூர்வ பக்ஷியின் வாதம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் ப்ராணங்கள் எனப்படும் புலன்களும் உண்டாக்கப்படுபவையே என்று நிரூபிக்கப்பட்டது. புலன்களைப் பற்றின பேச்சு எழுந்தமையால் ப்ரஸங்காத் (நினைவுக்கு வந்தபடியால்) புலன்களின் எண்ணிக்கை , அளவு, தன்மைகள் முதலானவற்றை அடுத்த சில
அதிகரணங்களால் வ்யாஸர் நிரூபிக்கிறார். அதில் இவ் வதிகரணத்தில் புலன்களின் எண்ணிக்கை ஆராயப் படுகிறது.
ஸம்சயம் – வேதத்தில் முரண் பட்டவை போல் தோன்றும் சில வாக்கியங்கள் உள்ள படியால் புலன்கள் ஏழு உள்ளனவா? அல்லது பதினொன்றா ? என்று ஸந்தேஹம் எழுகிறது.
பூர்வ பக்ஷம் – ஏழு புலன்கள் தான் என்ற பூர்வ பக்ஷம் இவ் வதிகரணத்தின் முதல் ஸூத்ரத்தால் சொல்லப்படுகிறது.
1-ஸப்த க₃தே : விசேஷி தத்வாச்ச – “(புலன்கள்) ஏழு, சொல்வதாலும் சிறப்பிக்கப்பட்ட தாலும்”
க₃தி (செல்வது) – ஜீவாத்மா ஓருடலை விட்டு மற்றோர் உடலுக்குச் செல்லும் போது அவரோடு கூடச் செல்வது தான்
இங்கு க₃தி’ (செல்வது) என்று குறிப்பிடப் படுகிறது. அந்த க₃தி ஏழு புலன்களுக்கு தான் உண்டு என்கிறது வேதம் –
(ஸப்த இமே லோகா : யேஷு சரந்தி ப்ரணா : கு₃ஹா ஶயா : நிஹிதா 🙂
லோகங்கள் எனப்படும் புலன்கள் ஏழு உள்ளன -அவை உறக்கத்தின் போது இதயத்தில் சுற்றி வருகின்றன.
விசேஷிதத்வம் (சிறப்பிக்கப்படுதல்) – ப்ராணங்களை சிறப்பித்துச் சொல்லும் போது ஏழு தான் சொல்லப்படுகின்றன –
யதா ₃ பஞ்சா வதிஷ்ட₂ந்தே ஜ்ஞாநாநி மநஸா ஸஹ । பு₃த்₃தி₄ஶ்ச ந விசேஷ்டேத தாமாஹு꞉ பரமாம் க₃திம் ॥
“கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்ற ஐந்து ஜ்ஞாந இந்த்ரியங்களும் மனதும் புத்தியும் எப்போது செயல்படாமல் அடங்கி இருக்கின்றனவோ , அப்போது மோக்ஷத்துக்கு வழி வகுக்கும் யோகம் கை கூடுகிறது”
ஆகவே , ஜ்ஞாந இந்த்ரியங்கள் 5, மனது, புத்தி – இந்த ஏழும் தான் இந்த்ரியங்கள் என்கிறார்கள் பூர்வ பக்ஷிகள்.
சில இடங்களில் பேச்சுப்புலன், கைகள், கால்கள், மலம் மற்றும் கழிக்கும் புலன்கள், அஹங்காரம், சித்தம் என்று மேலும் 7 சொல்லப் பட்டிருந்தாலும், அவை ப்ராணன் என்று அழைக்கப்படும் புலன்கள் அல்ல , ஆத்மாவுக்கு உதவாத படியால்.
ஸித்தாந்தியின் வாதம்-ஸித்தாந்தம் –2-ஹஸ்தாத₃ய: து ஸ்தி₂தே அத: ந ஏவம்
ஹஸ்தாத₃ய: து – கை முதலானவையும் (இந்த்ரியங்கள் தான்) அன்றோ
ஸ்தி₂தே அத: – (உடலில் ஜீவாத்மா ) இருக்கும் பொழுது (இன்ப துன்பங்களை அநுபவிக்கக்) கருவிகளான படியால்
(அத:) ந ஏவம்– ஆகையால் அவ்வாறு (கை கால்கள் முதலானவை புலன்கள் அல்ல என்பது அல்ல
கண் மூக்கு காது முதலானவை உடலிலிருக்கும் ஜீவாத்மாவுக்கு இன்ப துன்பங்களை அநுபவிக்கக் கருவிகளாக இருப்பதால் தான் அவற்றைப் புலன்கள் என்கிறோம். அதே போல் பேச்சுப் புலன், கைகள், கால்கள், மலம் மற்றும் ஜலம் கழிக்கும் இந்த்ரியங்கள் என்று இந்த ஐந்து கர்ம -இந்த்ரியங்களும் கூட ஜீவாத்மாவுக்குக் கருவிகளான படியால் அவையும் புலன்கள் (இந்த்ரியங்கள்) தான். ஆகவே 5 ஜ்ஞாந இந்த்ரியங்கள், 5 கர்ம இந்த்ரியங்கள், 1 மனது – ஆக மொத்தம் 11 இந்த்ரியங்கள் (ப்ராணங்கள் -புலன்கள்) உள்ளன என்று தெளிவாகிறது.
சில இடங்களில் இந்த 11 இந்த்ரியங்களோடு கூட புத்தி, அஹங்காரம், சித்தம் என்ற மூன்றையும் சேர்த்து,மொத்தம் 14 இந்த்ரியங்கள் என்கிறார்கள். ஆனால் உண்மையில் புத்தி, அஹங்காரம், சித்தம் என்பவை யெல்லாம் மனதினுணடய வெவ்வேறு பெயர்கள் தான். ஒரே மனது மனனம் (ஆராய்ச்சி) செய்யும் போது மனது என்றும் , கர்வம் கொள்ளும் போது அஹங்காரம் என்றும், உறுதியோடு இருக்கும் பொழுது புத்தி என்றும்,கவலை கொண்ட போது சித்தம் என்றும் கூறப்படுகிறது. எனவே அம் மூன்றும் தனித்தனி புலன்கள் அல்ல. -மொத்தம் 11 புலன்கள் தான் உள்ளன.
வேதம் முதலானவற்றிலும் (த₃ ச இமே புருஷே பரணா : ஆத்மா ஏகாதா₃ ஸ )
அதாவது இந்த ஆத்மாவுக்குப் பத்து ப்ராணங்கள் (வெளிப் புலன்களும்) ஒரு மனதும் உள்ளன” என்று கூறப் பட்டுள்ளது.
ஆக இவ்வாறு புலன்கள் மொத்தம் 11 தான் என்று வ்யாஸர் நிரூபித்தார்.
(அந்தகரணம் -மனஸ்ஸூ –சித்தம் -சிந்தனை பண்ண -புத்தி -உறுதி கொள்ள -அபிமானம் -அஹங்காரம் கர்வம் -ஒன்றுக்கே பல நிலைகள்-வைகாரிக -ஸாத்விக அஹங்காரத்தில் இருந்து பிறந்த இந்த்ரியங்கள் 11- ‘)
—
2-4-3- ப்ராணாணுத்வாதி₄கரணம்-புலன்கள் அணுவானவை -புலன்களின் அளவு – ஸங்கதி –
புலன்களின் எண்ணிக்கையை முடிவு செய்த பின்பு புலன்களின் அளவு என்ன என்று இவ்வதிகரணத்தில் ஆராய்கிறார் வேத வ்யாஸர்.
பூர்வ பக்ஷம் – புலன்கள் எல்லாம் விபு₄வானவை , அதாவது உலகெங்கம் நீக்கமற நிறைந்திருப்பவை என்பது பூர்வ பக்ஷம்
வேதத்தில் -(தே ஏதே ஸர்வே ஏவ ஸமா: ஸர்வே அநந்தா🙂 அதாவது-அந்த ப்ராணங்கள் (புலன்கள்)
அனைத்துமே ஸமமானவை , அனைத்துமே அநந்தமானவை ” என்று கூறப் படுகிறது. அந்தம் என்றால் முடிவு. அநந்தம் என்றால் முடிவற்றது, எல்லை யற்றது என்று பொருள். ஆக, புலன்கள் எல்லை யற்றவை என்று சொல்லப் படுவதால் அவை ஆகாசம் போல் விபு₄க்களாகத் தான் இருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்.
(மூல ப்ரக்ருதி லீலா விபூதியில் தான் உள்ளது -அதில் இருந்து உண்டான ஆகாயம் நித்ய விபூதியில் இருக்காதே –நம் ஸித்தாந்தத்தில் ஆகாசம் விபு இல்லை -இங்கும் -அதைச் சுத்தி அஹங்காரம் மஹான் மூல பிரகிருதி உண்டே -)
(இதில் இரண்டு ஸூத்ரங்கள் உள்ளன –முதல் ஸூத்ரம் இதை விவரித்து அடுத்த ஸூத்ரம் மூச்சிக்காற்றின் அறிமுகம் -மேல் அதைப் பற்றி ஆராய்ச்சி உள்ளதால்)
ஸித்தாந்தம் – 1- அணவ: ச – “(ப்ராணங்கள் எனப்படும் புலன்கள்) அணுவானவையும் கூட
வேதத்தில் –(ப்ராணம் அநூத்க்ராமந்தம் ஸர்வே ப்ராணா : அநூத்க்ராமந்தி) அதாவது–ஓர் உடலிலிருந்து ஜீவாத்மா புறப்படும் பொழுது அவரைத் தொடர்ந்து ப்ராண வாயு (மூச்சுக் காற்று) புறப்படுகிறது, மூச்சுக் காற்று புறப்படும் பொழுது எல்லாப் புலன்களும் பின் தொடர்ந்து புறப்படுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது. புலன்கள் ஓரிடத்திலிருந்து புறப்பட வேண்டும் அவை விபு₄வாக (எங்கும் நீக்க மற நிறைந்து) இருக்க முடியாது.அளவு பட்டவையாகத் தான் இருக்க வேண்டும்.
(இதே போல் உத் க்ராந்தி என்பதால் ஆத்மாவும் அணுவே என்று முன்னமே பார்த்தோம்)
புலன்கள் உடலிலிருந்து புறப்பட்டுச் செல்லும் பொழுது யார் கண்ணுக்கும் தெரியாதபடியால், அவை அணுக்களாக (மிக நுண்ணியவையாக) தான் இருக்க வேண்டும், குடம் கட்டை போல் நடுத்தர அளவோடு இருக்க முடியாது.-“புலன்கள் அநந்தங்கள் (அளவற்றவை )” என்று வேதம் சொன்னது அளவின் அடிப்படையில் அல்ல. எண்ணிறந்த செயல்களை இந்தப் புலன்கள் செய்கிற படியால், செயலின் அடிப்படையில் எல்லை யற்றவை என்று தான் பொருள்.
ஆகவே , ப்ராணங்கள் (புலன்கள்) எல்லாம் அணுவானவை தான் என்று நாம் முடிவு செய்யலாம்.
இந்த அதிகரணத்தில் புலன்களைப் பற்றிச் செய்ய வேண்டிய ஆராய்ச்சியை முதல் ஸூத்ரத்திலேயே வ்யாஸர் முடித்து விட்டார். இரண்டாவது ஸூத்ரத்தால் ப்ராண வாயு எனப்படும் மூச்சுக் காற்றும் ப்ரஹ்மத்தால் உண்டாக்கப்படுவதே என்று நிரூபிக்கிறார்.
ப்ராண வாயுவும் உண்டாக்கப் படுவதே
இதற்கு எந்த புதிய யுக்திகளையும் அவர் காட்ட வில்லை , முன்னால் புலன்கள் உண்டாக்கப் படுபவை என்று நிரூபிக்க என்ன வாதங்களை முன் வைத்தாரோ , அதே வாதங்களால் தான் மூச்சுக் காற்று உண்டாக்கப்படுவதே என்று நிரூபிக்கிறார். அதனால் தான் இதை ஒரு தனி அதிகரணமாக ஆக்காமல் இவ் வதிகரணத்திலேயே சேர்த்துள்ளார்.
இதை ஏன் இப்போது கூறுகிறார்?அடுத்த அதிகரணத்திலிருந்து மூச்சுக் காற்றைப் பற்றின ஆராய்ச்சியைச் செய்ய இருப்பதால், அதற்கு அறிமுகமாக மூச்சுக் காற்றும் உண்டாக்கப்படுவதே என்று இவ் வதிகரணத்தில் கூறுகிறார்.
2-:ஸ்ரேஷ்ட ச – “ஸ்ரேஷ்டமானதும் – சிறந்ததும் (உண்டாக்கப் படுவதே )”
உபநிஷத்தில் ப்ராண ஸம்வாதம் (ப்ராணங்களின் உரை யாடல்) என்றொரு கதை . ஒரு முறை புலன்களும் மூச்சுக் காற்றும் தங்களுக்குள் யார் சிறந்தவர் (ஸ்ரேஷ்டமானவர்) என்ற விவாதத்தில் ஈடுபட்டன. ப்ரஹ்மா கூறினார் – “
எது உடலை விட்டுப் புறப்படும் பொழுது மற்றவர்கள் எல்லாம் செயலிழந்து போகிறார்களோ அதுவே சிறந்தது” என்று. கண், காது,மூக்கு முதலானவை புறப்பட்ட போதும் மற்ற புலன்களுக்கோ உடலுக்கோ பாதிப்பு இருக்க வில்லை . ஆனால் மூச்சுக் காற்று புறப்படத் தொடங்கும் பொழுதே புலன்களனைத்தும் வலுவிழந்து போயின. அதனால் ப்ராண வாயு தான் தங்களுக்குள் சிறந்தது (ஸ்ரேஷ்டமானது) என்று முடிவு செய்தார்கள். அதனால் ’ஸ்ரேஷ்டம்’ (சிறந்தது) என்று வ்யாஸர் இங்கு குறிப்பிடுவது ப்ராண வாயுவைத் தான். ப்ராணன் என்ற சொல் புலன்களையும் மூச்சுக் காற்றையும் குறிக்கும் பொதுவான சொல். ஸ்ரேஷ்ட ப்ராணன் (சிறந்த ப்ராணன்) என்ற சொல் மூச்சுக் காற்றுக்கு மட்டும் தனிப்பட்ட பெயர்.
(கீழ் பிராண -புலன்களை சொல்லி இங்கு மூச்சுக்காற்று -என்பதே பொருள் -ஆத்மா -உள்ளே புகுந்து இயக்கம் ஒன்றைக்குறிக்கும் –பரமாத்மா -மிகவும் உயர்ந்த ஸ்ரேஷ்டரான ஆத்மா –
அதே போல் ஸ்ரேஷ்ட பிராணன் என்று மூச்சுக் காற்றைக் காட்டும் -முக்கிய பிராணன் -பிராண ஸம்வாதம் சாந்தோக்கிய உபநிடதம் மற்றும் பிருகதாரண்யக உபநிடதம் ஆகிய நூல்களில் முக்கியமாக விவரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆற்றல்களுக்கும் (இந்திரியங்கள்) மேலானது உயிர் சக்தி (பிராணன்) என்பதை இது உணர்த்துகிறது.-)
பூர்வபக்ஷம் – வேதத்தில் (ஆநீத் அவாதம் ஸ்வத₄யா ததே₃கம்) என்று ப்ரளயத்திலும்
மூச்சுக் காற்று ஜீவ ராசிகளை ரக்ஷிப்பது சொல்லப் படுவதால் மூச்சுக் காற்று நித்யமானது, உண்டாக்கப்படுவதல்ல.
ஸித்தாந்தம் – ஸ்ருஷ்டிக்கு முன் ஒரே பொருள் (பரமாத்மா) தான் இருந்தது என்று வேதம் சொல்வதாலும்,-(ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண: ) அதாவது-ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராண வாயு உண்டாகிறது” என்று தெளிவாகச் சொல்கிற படியாலும் ப்ராண வாயு உண்டாக்கப் படுவது தான். “ஆநீத் அவாதம்” என்ற வாக்கியம் ’ஸ்வதா₄-என்றழைக்கப் படும் மஹா லக்ஷ்மி யோடு கூட பரமாத்மா உலகை ரக்ஷிக்கிறார் என்று தான் கூறுகிறது.
(ஸ்வதயா லோக பாலிநீ -ஸ்ருதி -ஸ்ரீ யபதியையே குறிக்கும்)
—
2-4-4-வாயுக்ரியாதி₄கரணம்-ப்ராண வாயு என்பது யாது? ப்ராணன் என்றால் என்ன? – ஸங்கதி – முன் அதிகரணத்தில் ப்ராண வாயுவும் உண்டாக்கத் தான் படுகிறது என்று நிரூபிக்கப்பட்டது. ப்ராண வாயு என்றால் என்ன என்று இவ் வதிகரணத்தில் ஆராய்கிறார்.
பூர்வ பக்ஷம் -1- – ப்ராண வாயு என்பது வாயு அதாவது காற்று மட்டுமே , வேறொன்றும் இல்லை –
வேதத்திலேயே (ய: ப்ராண: ஸ: வாயு:)-அதாவது-“ப்ராணன் என்பது வாயுவே தான்” என்று கூறப்பட்டு்ள்ளது.
பூர்வ பக்ஷம் -2- – வெறும் வாயுவே தான் ப்ராணன் என்றால், உலகத்தில் எங்கு காற்றைப் பற்றிச் சொல்வதற்கும் ப்ராணன் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் அப்படிக் காணப்பட வில்லை . எனவே ப்ராணன் என்பது வெறும் காற்று அல்ல -காற்றினுடைய ஒரு செயல் (க்ரியை ) தான் ப்ராணன் எனப்படுகிறது. உலகத்தில் உச்வாஸம் (மூச்சை இழுப்பது) மற்றும் நிச்வாஸம் (மூச்சை வெளியே விடுவது) என்ற செயல்கள் இருக்கும் போது தான் ப்ராணன் உ்ள்ளது என்று சொல்லப் படுகிறது. எனவே ப்ராண வாயு என்பது காற்றினுடைய ஒரு செயல் தான்.
ஸித்தாந்தம் – 4 ஸூத்ரங்களால் இந்த இரண்டு பூர்வ பக்ஷங்களையும் நிரஸித்து தன் பக்ஷத்தைக் காட்டுகிறார் வ்யாஸர்.
1– ந् வாயு க்ரியே ப்ருத₂க் உபதே ₃ஸாத் – “வாயுவும் செயலும் அல்ல, தனித்த உபதேஸத்தால்”
வாயு மட்டுமே ப்ராணன் என்று சொல்வது பொருந்தாது, ஏனெனில் -(ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண : மந: ஸர்வேந்த்ரியாணி ச கம் வாயு –தேஜோ அதிகரணத்திலேயே பார்த்தோம்-த்ரவ்யங்களைப் பற்றியே சொல்லும் சுருதி -கிரியை செயல்பாடு சொல்லவே இல்லையே- ) அதாவது-ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராணன், மனது, புலன்கள் ,ஆகாசம், வாயு முதலானவை உண்டாகின்றன” என்று வேதம் சொல்கிறது. இதில், வாயு என்று சொல்வதைத் தவிற ப்ராணன் என்று தனித்து ஒரு முறை கூறப் பட்டு்ள்ளது. வாயுவே தான் ப்ராணன் என்றால் இது தேவை யில்லை –
வாயுவின் செயல் (க்ரியை ) தான் ப்ராணன் என்பதும் பொருந்தாது, ஏனெனில் இந்த வாக்கியத்தில் நிலம் நீர் தீ ஆகாயம் என்ற த்ரவ்யங்கள் (பொருள்கள் ) தான் பட்டியலிடப் பட்டு்ள்ளனவே தவிற, அப்பொருள்களின் செயல்கள் எதுவும் சொல்லப் படவில்லை எனவே , தனித்து சொல்லப் பட்ட ப்ராணனும் ஒரு த்ரவ்யமாகத் தான் இருக்க வேண்டுமே தவிற செயலாக இருக்க முடியாது.
ஆகவே , ப்ராணன் என்பது ஒரு சிறப்பான வாயு -ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட செயலைச் செய்யும் வாயு.
(பஞ்ச பிராணன் –அவஸ்தா விசேஷமே பிராணன் -ஹ்ருதி பிராணன் -புதி அபான– சபான- நாபி உதாந – கழுத்து -விதாந – உடல் முழுவதும்)
ப்ராணன் என்பது ஆறாவது பூதமா?
கேள்வி – ஆகாசத்திலிருந்து வாயு, வாயுவிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து ஜலம் என்று அடுத்தடுத்த பூதங்கள் உண்டாகின்றன. அதுபோல் ப்ராணன் என்பதும் வாயுவிலிருந்து பிறந்த ஒரு
மாறுபாடு என்றால் அது வேறு பூதமா?
பதில் – 2- ச க்ஷுராதி₃வத் து தத் ஸஹ சிஷ்ட்யாதி₃ப்₄ய:
சக்ஷு ராதி₃வத் து – சக்ஷுஸ் முதலான புலன்களைப் போல் (ஆத்மாவுக்கு ஒரு கருவி) தான், (வேறு
பூதம் அல்ல )
தத் ஸஹ சிஷ்ட்யாதி₃ப்₄ய: – அவற்றோடு கூட உபதேசிக்கப் படுதல் -முதலான வற்றால்
ப்ராண வாயு என்பது ஒரு தனி ஆறாவது பூதம் அல்ல – கண் காது மூக்கு முதலான புலன்கள் எல்லாம் எப்படி ஜீவாத்மாவுக்குக் கருவிகளாக இருக்கின்றனவோ , அதுபோல் ப்ராண வாயுவும் ஒரு கருவி
மட்டுமே –
(ஆதி –முதலானவற்றால் -புலன்களுக்கும் மூச்சுக் காற்றுக்கும் ஒரே சொல் -பிராணன் -புலன்களைப் போலவே மூச்சுக் காற்று என்றவாறு)
ஏனெனில் –
1–ப்ராண வாயுவைப் பற்றின உபதேசங்களில் அது புலன்களோடு கூடத் தான் பேசப் படுகிறது-உதாஹரணத்துக்கு ப்ராண ஸம்வாதம் என்று புலன்களுக்கும் ப்ராண வாயுவுக்குமான உரையாடலைக் கடந்த அதிகரணத்தில் பார்த்தோம். அவற்றோடு கூட ஒற்றுமை இருப்பதால் தானே அவற்றோடு சேர்ந்து பேசப் பட்டிருக்க வேண்டும்.
2-ப்ராணங்கள் என்ற சொல் புலன்களுக்கும் ப்ராண வாயுவுக்கும் பொதுவாக உள்ளது.
ப்ராண வாயுவை ’ஸ்ரேஷ்ட ப்ராணன்’-அதாவது-’சிறந்த ப்ராணன்’ என்று வேதம் கூறுகிறது.-எனவே , அவற்றோடு ஒற்றுமை இருக்க வேண்டும்.
ப்ராணன் ஒன்றா? ஐந்தா?
கேள்வி – கண் காது முதலானவை தங்கள் செயல்களின் மூலம் ஜீவாத்மாவுக்கு உதவுகிறபடியால் கருவிகள் ஆகின்றன.-அப்படி எந்த ஒரு உதவியும் ப்ராண வாயுவால் செய்யப் படாத போது அது எப்படி கருவியாக இருக்க முடியும்?
3-அகரணத்வாத் ச ந தோ₃ஷ: ததா₂ ஹி த₃ர்சயதி
அகரணத்வாத் – “ஆத்மாவுக்கு உதவக் கூடிய செயல் இல்லாத படியால் [கரணம் என்றால் க்ரியை (செயல்)]
தோ₃ஷ: ந ச – கருவியாக இருக்க முடியாது” என்ற தோஷம் இல்லை .
ததா₂ ஹி த₃ர்சயதி – ப்ராணன் ஜீவாத்மாவுக்குச் செய்யக் கூடிய உதவிச் செயலை வேதமே காட்டுகிற படியால்.
(யஸ்மிந் உத்க்ராந்தே இத₃ம் சரீரம் பாபிஷ்ட தரம் இவ த்₃ருச்யதே ஸ: வ: ச்ரேஷ்ட₂:) அதாவது-“எந்த ஒரு ப்ராண வாயு புறப்படும் பொழுது உடலை மிகத் தாழ்ந்ததாக ஆகிறதோ , அது தான் நமக்குள் சிறந்தவன்” என்று புலன்கள் கூறுவதாக வேதம் காட்டுகிறது. எனவே , சரீரம் மற்றும் புலன்களைத் தாங்குதல் என்கிற முக்கியமான உதவியை ஜீவாத்மாவுக்கு ப்ராண வாயு தான் செய்கிறது. எனவே அது கருவியாகத் தட்டில்லை
கேள்வி – ப்ராணம் அபானன் வ்யானன் உதா₃னன் ஸமானன் என்று தனித் தனி பெயர்கள் இருப்பதாலும், அவற்றுக்குத் உடலில் தனித் தனி இடங்களும் செயல்களும் இருக்கிற படியாலும் 5 ப்ராண வாயுக்களும் வெவ்வேறானவையா?
பதில் – 4-பஞ்ச வ்ருத்தி: மநோ வத் வ்யபதி₃ச்யதே
பஞ்ச வ்ருத்தி: – ஒரே ப்ராண வாயு தான் ஐந்து விதமான செயல்பாடுகளை உடைய படியால்
வ்யபதி₃ச்யதே – ஐந்தாகக் கூறப்படுகிறது
மநோவத் – (காம: ஸங்கல்போ விசிகித்ஸா
ஶ்ரத்₃தா₄ அஶ்ரத்₃தா₄ த்₄ருதி: அத்₄ருதி: ஹ்ரீ: தீ₄: பீ₄: இத்யே தத் ஸர்வம் மந ஏவ- என்கிற வேத வாக்கியத்தின் படி மனதுக்கு ஆசை , எண்ணம், ஆராய்ச்சி, ஈடுபாடு, ஈடுபாடின்மை , தைர்யம், தைர்யமின்மை, வெட்கம், பயம் என்று பல செயல்பாடுகள் இருந்தாலும் மனது ஒன்று தானே . அதே போல் ப்ராண வாயுவும் ஒன்று தான்.
(பிராணன் – மார்புப் பகுதியில் செயல்படும் இது, சுவாசம், இதயத் துடிப்பு மற்றும் ஒட்டு மொத்த உயிர் ஆற்றலையும் நிர்வகிக்கிறது.
அபானன் -தொப்புளுக்குக் கீழே அடி வயிற்றில் இயங்கும் இது, கழிவு நீக்கம் மற்றும் இனப் பெருக்க மண்டலத்தின் செயல்பாடுகளைக் கட்டுப் படுத்துகிறது.
வியானன் – உடல் முழுவதும் பரவி யிருந்து, ரத்த ஓட்டம், நரம்பு மண்டலம் மற்றும் தசைகளின் இயக்கங்களை ஒருங்கிணைக்கிறது.
உதானன் – தொண்டை மற்றும் தலைப் பகுதியில் இயங்குகிறது. பேச்சு, சிந்தனை, மற்றும் நரம்பு மண்டலத்தின் மேல் நோக்கிய இயக்கங்களைச் செயல் படுத்துகிறது.
சமானன் – தொப்புள் மற்றும் வயிற்றுப் பகுதியில் இயங்கும் இது, உணவு செரிமானம் மற்றும் சத்துக்களைப் பிரித்தளிக்கும் பணியைச் செய்கிறது.)
(பஞ்ச பிராண வாயு அல்லது ஐந்து சக்தி ஓட்டங்கள், உடலையும் அதன் உறுப்புகளையும் செயல்பட வைக்கின்றன. அடிப்படையில், மனித உடலின் ஒட்டுமொத்த உடலியலுக்கும் பஞ்ச பிராண வாயுக்களே பொறுப்பாகும்.-நாம் நமது உடல் ஆற்றலை உணவிலிருந்து உருவாக்குகிறோம். அந்த உணவு குளுக்கோஸாக மாற்றப்பட்டு, அது செல்களில் சிதைக்கப்பட்டு ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இந்த ஆற்றலை உள்வாங்குவதிலும், விநியோகிப்பதிலும், மற்றும் உடல் இயங்குவதற்குத் தேவையானவற்றை நிர்வகிப்பதிலும் ஐந்து பிராண வாயுக்கள் ஈடுபட்டுள்ளன. )
ஆக ப்ராணன் என்பது ஒரு சிறப்பான வாயு -ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட செயலைச் செய்யும் வாயு –
—
2-4-5-ஸ்ரேஷ்டாணுத்வாதி₄கரணம்-ப்ராண வாயு அணுவானது -ப்ராண வாயுவின் அளவு-ஸங்கதி – ப்ராண வாயு என்றால் என்ன என்று முன் அதிகரணத்தில் நிரூபிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து இவ் வதிகரணத்தில் ப்ராண வாயுவின் அளவு ஆராயப்படுகிறது.
ஸித்தாந்தம் – 1-:அணு ச –“அணுவானதும் கூட”
புலன்கள் அணுவானவை என்று சொல்வதற்கு எந்த எந்த யுக்திகள் சொல்லப்பட்டனவோ , அதே யுக்திகளால் ப்ராண வாயுவும் அணுவானது என்று நிரூபிக்கலாம். அதாவது – “ஜீவாத்மா உடலிலிருந்து புறப்படும் பொழுது ப்ராண வாயு கூடப் புறப்படுகிறது” என்று வேதம் சொல்கிற படியால், ப்ராண வாயு ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குச் செல்கிறது என்று தெரிகிறது. எனவே கண்டிப்பாக ப்ராண வாயு விபுவாக (எங்கும் நீக்கமற நிறைந்த்தாக) இருக்க முடியாது, அளவுபட்டதாகத்தான் இருக்க வேண்டும். அது புறப்படும் பொழுது கண்ணுக்கும் தெரிவதில்லை ,-எனவே அணுவாகத் தான் இருக்க வேண்டும்.
கேள்வி – புது யுக்திகள் இல்லாத போது ஏன் இதற்குத் தனி அதிகரணம்? ப்ராணணுத்வ-அதிகரணத்திலேயே இதையும் சேர்த்துச் சொல்லி யிருக்கலாமே ?
பதில் – இங்கு அதிகப்படியான ஒரு கேள்வி உள்ளது. வேதத்தில் (ஸம: ஏபி₄: த்ரிபி₄:
லோகை : ஸம: அநேந ஸர்வேண )-அதாவது-“ப்ராண வாயு மூன்று உலகங்களுக்கும் ஸமமானது, அனைத்துப் பொருள்களுக்கும் ஸமமானது” என்றும்,
(ப்ராணே ஸர்வம் ப்ரதிஷ்டி₂தம்) அதாவது “ப்ராண வாயுவில் அனைத்தும் நிலை பெற்றுள்ளது” என்றும்,
(ஸர்வம் ஹி இத₃ம் ப்ராணேண ஆவ்ருதம்) அதாவது-“இந்த உலகனைத்தும் ப்ராண வாயுவால் சூழப் பட்டுள்ளது” என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால், ப்ராண வாயு விபுவானதாக இருக்குமோ ? என்கிற ஸந்தேஹம் ஏற்படுகிறது. அதைத் தீர்ப்பதற்காகத் தான் இவ்வதிகரணம் தனியாக ஊள்ளது.
ஸமாதானம் – ப்ராண வாயு புறப்படுவது சொல்லப் படுவதால், அது அணுவானது தான். அனைத்துப் பொருள்களும் தங்கள் தங்கள் ப்ராண வாயுவை அண்டியே வாழ்கிறபடியால் ப்ராண வாயுவில் நிலை பெற்றுள்ளன என்றும் ப்ராணன் அனைத்தையும் சூழ்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இதைக் கொண்டு ப்ராண வாயு விபு என்று கூற முடியாது–
—
2-4-6-ஜ்யோதிராத்₃யதி₄ஷ்டா₂நாதி₄கரணம்-ஜீவாத்மா புலன்களை இயக்குவது
பரமாத்மாவின் ஆணையாலேயே –
புலன்களின் அதிஷ்டாநம் -ஸங்கதி – கண் காது முதலான 11 புலன்களும் ப்ராண வாயு என்னும் மூச்சுக் காற்றும் ப்ரஹ்மத்தால் படைக்கப் படுகின்றன என்று நிரூபிக்கப்பட்டது. புலன்களைப் பயன்படுத்துவதற்காக ஜீவாத்மா அவற்றை அதி₄ஷ்டா₂நம் செய்கிறார் (தன் ஜ்ஞாநத்தால் ஏற்று இயக்குகிறார்) என்றும் வேதத்தில் கூறப்படுகிறது. அதே போல், அந்தப் புலன்களுக்கு சக்தி யளிப்பதற்காக அக்நி ஸூர்யன் முதலான தேவர்களும் அவற்றை அதி₄ஷ்டா₂நம் செய்கிறார்கள் என்றும் கூறப் பட்டுள்ளது. (2-1-3-2-கீழ் விலக்ஷண அதிகரணத்தில் இந்திரியங்களை தேவர்கள் அதிஷ்டானம் -இயக்குவது -தேவதைகள் என்று பார்த்தோம் )இப்போது, ஜீவாத்மாக்களும் அக்நி முதலான தேவர்களும் இந்த்ரியங்களை அதிஷ்டாநம் செய்வது தாங்களாகவா? அல்லது பரமாத்மாவின் இயக்கத்தாலா? என்று ஆராய்கிறார்.
பூர்வ பக்ஷம் – ஜீவாத்மாக்களும் அக்நி முதலான தேவர்களும் இந்த்ரியங்களை அதிஷ்டாநம் செய்யும் போது யாரையும் எதிர்பார்க்கத் தேவை யில்லை , அவர்கள் தாங்களாகவே இயங்கும் வல்லமை படைத்தவர்கள் என்பது பூர்வ பக்ஷம்
ஸித்தாந்தம் – இவ் வதிகரணத்தில் இரண்டு ஸூத்ரங்களால் வ்யாஸர் தன் பக்ஷத்தைக் கூறுகிறார்.
1–ஜ்யோதிராத் ₃யதி₄ஷ்டா₂நம் து தத் ஆ₃மநநாத் ப்ராண வதா சப்₃தா₃த்
ப்ராண வதா – ப்ராணன் எனும் மூச்சுக் காற்றை உடையவரான ஜீவாத்மாவோடு கூட(சஹ யோகி த்ரியதாய் -மூன்றாம் வேற்றுமை உருபுடன் கூடி)
ஜ்யோதிராத்₃யதி₄ஷ்டா₂நம் து – ஜ்யோதிஸ் (அக்நி) முதலான தேவர்கள் புலன்களை அதிஷ்டாநம் செய்வது
ததா₃மநநாத் –தத் ஆ₃மநநாத்– அந்த பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் (ஆமநநம் – -ஆபி முக்யேனான மனனம்–ஒன்றை நோக்கி சிந்தித்தல் – ஸங்கல்பம்)
சப்₃தா₃த் – அவர்கள் தங்கள் செயல்பாடுகளில் பரமாத்மாவால் இயக்கப்படுகிறார்கள் என்று வேதம் கூறுகிறபடியால்
அந்தர்யாமி ப்ராஹ்மணத்தில் கண் காது முதலான புலன்களுக்கும், ஜீவாத்மாக்களுக்கும், அக்நி வாயு ஸூர்யன் முதலான தேவர்களுக்கும் அந்தர்யாமியாக இருந்து இயக்குபவர் பரமாத்மா தான் என்று கூறப்பட்டுள்ளது.
தைத்திரீய உபநிஷத்தில் (பீ₄ஷா அஸ்மாத் வாத: பவதே பீ₄ஷா உதே₃தி ஸூர்ய:…)
அதாவது-“அந்த பரமாத்மாவுக்கு பயந்து தான் காற்று வீசுகிறது, ஸூர்யன் உதிக்கிறது” என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆகவே , ஜீவாத்மாக்களும் தேவர்களும் புலன்களை அதிஷ்டாநம் செய்வதும் பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான்.
இருப்பே பரமாத்மாவால் தான்-கேள்வி – தேவர்களும், நம்மைப் போன்ற ஸாதாரண ஜீவாத்மாக்களும் செய்யும் செயல்பாடுகள் எல்லாம் பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் இருக்கட்டும், ஆனால் அந்த தேவர்களும் ஜீவாத்மாக்களும் இருப்பது (அவர்களின் ஸத்தை – இருப்பு) பரமாத்மாவால் அல்ல, சுயமானதே .
பதில் – (2- தஸ்ய ச நித்யத்வாத் – “அந்த அதி₄ஷ்டா₂நம் நித்யமானதால்”
பரமாத்மா தேவர்களையும் ஜீவாத்மாக்களையும் செய்யும் அதிஷ்டாநம் (உள்ளே புகுந்து இயக்குதல்)
அவர்களுடைய செயல்பாட்டுக்காக மட்டுமல்ல, செயல்படும் காலத்தில் மட்டும் அல்ல. என்றுமே இயற்கையாகவே அதிஷ்டானம் செய்து தான் இருக்கிறார். எனவே அந்த தேவர்கள் மற்றும்
ஜீவாத்மாக்களின் ஸத்தை அதாவது இருப்பு (existence) கூட, பரமாத்மாவால் தான்.
பொருள்களின் இருப்பே அவரால் என்றால், செயல்பாடுகளும் அவரால் தான் என்று சொல்லத் தேவையே இல்லை . தானாகவே தேறுகிறது.
நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-
தைத்திரீய உபநிஷத்தில் -(ததே₃வாநுப்ராவிசத் தத₃நுப்ரவிச்ய ஸத் ச த்யத் ச அப₄வத்) அதாவது-“அந்த பரமாத்மா உலகப் பொருள்களைப் படைத்துவிட்டு, அவற்றுக்குள் புகுந்தார், அவர் புகுந்ததால் தான் சேதனர்களான ஜீவாத்மாக்களும் அசேதனப் பொருள்களும் உள்ளவை ஆயின” என்று தெளிவாக கூறப்படுகிறது.
ஆக, அனைத்துப் பொருள்களின் இருப்பும் செயல் பாடுகளும் பரமாத்மாவால் தான் என்று நிரூபிக்கப் பட்ட படியால், தேவர்களும் ஜீவாத்மாக்களும் புலன்களை அதிஷ்டானம் செய்வதும்
பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான் என்று தெளிவாகிறது.
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-
—
2-4-7-இந்த்₃ரியாதி₄கரணம்-இந்திரியங்கள் எவை?–புலன்கள் 11 மட்டுமே –ஸங்கதி – இது வரை இந்தப் பாதத்தில் ப்ராணன்கள் எனப்படும் 12 தத்துவங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யப் பட்டது. அவையாவன – சக்ஷுஸ் (கண்ணிலிருப்பது), ஸ்ரோ த்ரம் (காதிலிருப்பது), க்₄ராண ம் (மூக்கில்), ரஸநம் (நாக்கில்), த்வக் (தோல்), வாக் (நாக்கில்), பாணி (கைகள்), பாதம் (கால்கள்), பாயு (மலம் கழிக்க), உபஸ்தம் (ஜலம் கழிக்க), மநஸ் (மனது), ஸ்ரேஷ்டப்ராணன் -ப்ராண வாயு (மூச்சுக் காற்று). இப்போது, இந்த 12 தத்துவங்களில் எவை இந்த்ரியங்கள் (புலன்கள்) என்று இந்த அதிகரணத்தில் ஆராயப்படுகிறது.
பூர்வ பக்ஷம் – இவை பன்னிரண்டுமே இந்த்ரியங்கள் தான். ப்ராணன்கள் என்கிற பெயர் இவை அனைத்துக்கும் பொதுவாக இருக்கிறது, அவற்றில் வேறுபாடுகளும் ஒன்றும் தெரியவில்லை . எனவே அனைத்துமே புலன்கள் தான். மேலும், இவை அனைத்துமே ஜீவாத்மாவுக்கு ஏதோ ஒரு விதத்தில் கருவிகளாகத் தான் இயங்குகின்றன. எனவே அனைத்துமே இந்த்ரியங்கள் தான்.
ஸித்தாந்தம் – 1–தே இந்த்₃ரியாணி தத்₃வ்யபதே ₃சாத் அந்யத்ர ஸ்ரேஷ்டா₂த்
தே இந்த்₃ரியாணி – அவை – 11 தான் இந்த்ரியங்கள்
அந்யத்ர ஸ்ரேஷ்டா₂த் – ஸ்ரேஷ்ட₂ ப்ராணன் என்றழைக்கப்படும் மூச்சுக் காற்றைத் தவிற மற்றவற்றில்
தத்₃வ்யபதே ₃சாத் – இந்த்ரியம் என்ற பெயர் பயன்படுத்தப்படுவதால்
இந்த ஸூத்ரத்தில் ’-அவை ’ என்று பொதுவாகச் சொல்லப் பட்டிருந்தாலும், அச் சொல் முன் பேசப்பட்ட 12 தத்துவங்களையும் குறிக்க வில்லை . ’-அவை ’ என்று பன்மை ப்ரயோகம் உள்ள படியால், இதற்கு முன் பன்மையில் பேசப்பட்டதைத் தான் நினைவு கூற வேண்டும். இதற்கு முன் ப்ராணணுத்வாதிகரணத்தில் ’ அணவ: ச ’ என்ற-ஸூத்ரத்தில் தான் கண் முதலான 11 தத்துவங்களும் அணுவானவை என்று சொல்லும் போது பன்மை ப்ரயோகம் உள்ளது. மூச்சுக் காற்றை ஒருமை யில் தான் அழைத்துள்ளார். எனவே இங்கு ’ அவை ’ என்ற சொல் மூச்சுக் காற்றைத் தவிர்ந்த மற்ற ப்ராணன்களைத் தான் குறிக்கிறது.
(இந்த்₃ரியாணி த₃ச ஏகம் ச ) அதாவது “இந்த்ரியங்கள் பத்தும் ஒன்றும்” என்று தெளிவாக உபநிஷத்துக்களில் கூறப்படுகிறது. எனவே , ப்ராண வாயுவைத் தவிர்ந்த மற்ற 11 ப்ராணன்களும் தான் இந்த்ரியங்கள்–
புலன்களை ஏன் ப்ராணன் என்றழைக்கிறோம்?
பூர்வபக்ஷி 12 ப்ராணன்களுக்கும் எதுவும் வேறுபாடுகளே இல்லை என்று கூறியிருந்தார். அதை அடுத்த ஸூத்ரத்தால் தகர்க்கிறர் –
2–பே₄த₃ஸ்ருதே : வைலக்ஷண்யாத் ச – “தனித்துக் கூறும் வேதத்தாலும் வேறுபாட்டாலும்”
பே₄த₃ஸ்ருதி: (தனித்துக் கூறும் வேத வாக்கியம்) –
(ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண :, மந:, ஸர்வேந்த்ரியாணி ச ) அதாவது
“ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராண வாயு உண்டாகிறது, மனது உண்டாகிறது, எல்லாப் புலன்களும் உண்டாகின்றன” என்று வேதம் கூறுகிறது. இங்கு இந்த்ரியங்களைக் காட்டிலும் ப்ராண வாயு தனித்துச் சொல்லப் பட்டுள்ளதால், அது இந்த்ரியங்களுக்குள் ஒன்று அல்ல என்று தெரிகிறது. மனதும் இவ்விடத்தில் தனித்துச் சொல்லப் பட்டிருந்தாலும், மற்ற பல ப்ரமாணங்களில் மனதும் புலன் தான் என்று கூறப்பட்டுள்ளது.
எடுத்துக் காட்டுக்கு பகவத்கீதையில் கண்ணன் (மந:ஷ்ஷ்டாநி இந்த்₃ரியாணி) அதாவது (மனது உள்பட ஆறு இந்த்ரியங்களையும்) என்று ஓரிடத்தில் கூறுகிறார். எனவே மனது ஓர் இந்த்ரியம் தான் என்று ஏற்கப் படுகிறது.-ஆனால் ப்ராண வாயு புலன் அல்ல–
வைலக்ஷண்யம் (வேறுபாடு) – ப்ராண வாயுவுக்கும் கண் முதலானவற்றுக்கும் பல விதமான வேறுபாடுகள் உள்ளன –
1-நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது நம் புலன்கள் இயங்குவதில்லை . ஆனால் ப்ராண வாயு இயங்குகிறது
2-கண் முதலானவை ஜீவாத்மாவுக்குச் செய்யும் உதவி – மற்ற பொருள்களையும் அறியவும் பயன்படுத்தவும் உதவுதல்.
ப்ராண வாயு செய்யும் உதவி – சரீரம் புலன்கள் முதலானவற்றைத் தாங்குதல்.
(தே ஏதஸ்யைவ ஸர்வே ரூபம் அப₄வன், தஸ்மாத் ஏதே ஏதேந ஆக்₂யாயதே ) அதாவது–பிராண அதீன தாரணத்வாத்--“புலன்கள் ப்ராண வாயுவை நம்பியே இயங்குவதால் ப்ராணன் என்றே அழைக்கப் படுகின்றன” என்று வேதம் கூறுகிறது. ஆகவே , இந்த 12 தத்துவங்களுமே ப்ராணன் என்று அழைக்கப் பட்டாலும் அவற்றில் ப்ராண வாயுவைத் தவிற மற்ற 11 மட்டும் தான் இந்த்ரியங்கள் (புலன்கள்) என்று நிரூபிக்கப் படுகிறது.
—
2-4-8-ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லிப்த் யதி₄கரணம் –வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்வது யார்?–ஸங்கதி– இந்த அத்யாயத்தின் தொடக்கத்திலிருந்து இது வரை ஸமஷ்டி ஸ்ருஷ்டி ப்ரஹ்மத்தால் தான் செய்யப் படுகிறது என்று நிரூபிக்கப்பட்டது. இந்தக் கடைசி அதிகரணத்தில் வ்யஷ்டி ஸ்ருஷ்டியும் ப்ரஹ்மத்தால் தான் செய்யப் பட்டுகிறது என்று நிரூபிக்கிறார் வேத வ்யாஸர்.(ஸம்ஜ்ஞா= பெயர்; மூர்தி= உருவம்; க்லிப்தி= ஸ்ருஷ்டித்தல்)
ப்ரஹ்மம் உலகை ஸ்ருஷ்டிப்பதில் இரண்டு பகுதிகள் உள்ளன –
1-ஸமஷ்டி ஸ்ருஷ்டி
2-வ்யஷ்டி ஸ்ருஷ்டி
(ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லாஅன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே”– பஹுஸ்யாம் ப்ரஜாயேய–ஊழி முதல்வன்-ஸமஷ்டி ஸ்ருஷ்டி-
தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைத்த தேவனே –நாராயணன் நான்முகனைப் படைத்தான் –வ்யஷ்டி ஸ்ருஷ்டி)
(ஸமஷ்டி ஜீவன் ஹிரண்ய கர்ப்பன் -நான்முகனுக்கு பெயர்கள்)
ஸமஷ்டி ஸ்ருஷ்டி
பிரளயத்தில் உலகங்களனைத்தும் அழிந்து, மூலப் பொருளான ப்ரதானம் என்பதோடு ஒன்றாகிறது.– இப் பூதங்களோ , அவற்றிலிருந்து உண்டான பொருள்களோ எதுவும் கிடையாது. ஜீவாத்மாக்கள் அனைவரும் உடலில்லாமல் ப்ரக்ருதியோடு சேர்ந்து இருப்பார்கள். இவை அனைத்துக்கும் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மா, ஸ்ருஷ்டிக்கான காலம் வந்தவுடன்,தனக்கு உடலான மூல ப்ரக்ருதி என்கிற அசேதனப் பொருளிலிருந்து வரிசையாக மஹாந், அஹம்காரம், 11 புலன்கள், 5 தன் மாத்ரங்கள், 5 பூதங்கள்(நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்) ஆகியவற்றை உண்டாக்கி, அதற்குப் பின் ஐம் பூதங்களைக் கொண்டு14 உலகங்களைக் கொண்ட எண்ணிலடங்காத அண்டங்களைப் படைக்கிறார். அதற்குப் பின், அந்த அண்டத்துக்குள் அடியிலிருக்கும் தண்ணீரில் ஆதிசேஷன் படுக்கையில் சயனித்து, தன் உந்தித் தாமரை யிலிருந்து ப்ரஹ்மா என்னும் நான்முகனைப் படைக்கிறார். இதுவரை நடக்கும் ஸ்ருஷ்டிக்கு ஸமஷ்டி ஸ்ருஷ்டி (பொதுவான ஸ்ருஷ்டி) என்று பெயர், ஏனென்றால் இதுவரை நடப்பது ஜீவாத்மாக்களின் தனிப்பட்ட புண்ய-பாபங்களுக்குப் பொருத்து அல்ல. இதை ப்ரஹ்மமே நேரடியாகச் தெய்கிறார்–
வ்யஷ்டி ஸ்ருஷ்டி–
வ்யஷ்டி என்றால் தனித் தனியான என்று பொருள். நான்முகன்உண்டாக்கப் பட்ட பிறகு நடக்கும் ஸ்ருஷ்டிக்கு வ்யஷ்டி ஸ்ருஷ்டி என்று பெயர், ஏனென்றால் அந்தந்த ஜீவாத்மாவின் பாப-புண்யங்களின் கணக்கைப் பார்த்து அதற்குத் தகுந்த படி ஓர் உடலை ஸ்ருஷ்டித்து, அதற்குள் அந்த ஜீவாத்மாவைப் புகுத்தி பிறப்பை ஏற்படுத்துவது தான் இந்த ஸ்ருஷ்டி. இதைத் தான் நான்முகன் செய்கிறார்–
கேள்வி –வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்வது நான்முகனேவா? அல்லது அவருக்கு அந்தர்யாமியான பரமாத்மாவா? –
பூர்வ பக்ஷமும் ஸித்தாந்தமும்–
பூர்வ பக்ஷம் –நான்முகன் தானாகவே தான் செய்கிறார். வேதத்தில் ஸ்ருஷ்டியை வருணிக்கும் போது, பரமாத்மா ஸமஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்யும் முறையைக் கூறி விட்டு, அதற்குப் பின் வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் சொலும் போது
(அநேந ஜீவேந ஆத்மநா அநு ப்ரவிச்ய நாம ரூபே வ்யாகரவாணி)-அதாவது “நான் இந்த ஜீவன் மூலமாக உள்ளே புகுந்து இந்த அசேதனப் பொருள்களின் பெயர்களையும் உருவங்களையும் பிரிக்கப் போகிறேன்” என்று பரமாத்மா ஸங்கல்பம் எடுப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் நாம-ரூப வ்யாகரணம்–அதாவது–பெயர் மற்றும் உருவங்களைப் பிரிப்பது என்பது தான் வ்யஷ்டி ஸ்ருஷ்டி ஆகும். அதைப் பரமாத்மா தானாகச் செய்யாமல், ஜீவாத்மா மூலம் தான் செய்கிறார் என்று இந்த வாக்கியம் கூறுகிறபடியால், வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்வது ஒரு ஜீவாத்மாவான நான்முகனாகத் தான் இருக்க வேண்டும்.
மேலும், ஸ்ம்ருதிகளிலும் நான்முகன் செய்யும் ஸ்ருஷ்டியை வருணிக்கும் போது தான் நாம-ரூப-வ்யாகரணம்–அதாவது பெயர்-உருவ பிரிவினை என்பது சொல்லப்படுகிறது. அதனால் அவரே செய்கிறார்.(நாம ரூப பூதானாம் க்ருத்யானாம் பிரபஞ்சனம்)
ஸித்தாந்தம்-1– ஸம்ஜ்ஞா மூர்தி க்லிப்தி: து த்ரிவித் குர்வத: உபதே ₃சாத் ஸம்ஜ்ஞா மூர்தி க்லிப்தி: து–பெயர்-உருவ-ஸ்ருஷ்டி(ஸம்ஜ்ஞா= பெயர்; மூர்தி= உருவம்; க்லிப்தி= ஸ்ருஷ்டித்தல்)
த்ரிவித் குர்வத: -த்ரிவித் கரணம் என்ற செயலைச் செய்பவரான பரமாத்மாவினுடையதே
உபதே ₃சாத்–த்ரிவித்கரணம் செய்பவர் தான் பெயர்-உருவ-பிரிவினையைச் செய்கிறார் என்கிற உபதேசத்தால்
பூர்வபக்ஷி காட்டின வாக்கியத்தில் பிற்பகுதி உள்ளது–(அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிச்ய நாம ரூபே வ்யாகர வாணி,தாஸாம் த்ரிவ்ரிதம் த்ரிவ்ரிதம் ஏகைகாம் கரவாணி)-அதாவது“இந்த ஜீவனாகிற நான் உள்ளே புகுந்து இந்த அசேதனப் பொருள்களுக்குப் பெயர்-உருவ-பிரிவைச் செய்யப் போகிறேன், அதற்காக அவை ஒவ்வொன்றையும் மும் மூன்றாக ஆக்கப் போகிறேன்” என்று பரமாத்மா ஸங்கல்பம் எடுத்துக் கொள்கிறார். முற் பாதியில் சொல்லப்பட்ட வ்யஷ்டி ஸ்ருஷ்டி யையும் பிற் பாதியில் சொல்லப்பட்ட த்ரிவித் கரணம்(ஒவ்வொன்றையும் மும் மூன்றாக ஆக்குதல்) என்னும் செயலையும் ஒருவரே செய்கிறார் என்று இதிலிருந்து தெரிகிற படியால் அதைச் செய்பவர் பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.
த்ரிவித்கரணம் அல்லது பஞ்சீகரணம் –உபநிஷத்தில் த்ரிவித் கரணம் என்று ஒரு செயல் குறிப்பிடப் பட்டுள்ளது. அக்நி, ஜலம், நிலம் என்ற மூன்று பூதங்களைப் படைத்த பிறகு த்ரிவித் கரணம் அதாவது -ஒவ்வொன்றையும் மூன்றாக ஆக்கும் செயல் நடக்கிறது. உண்மையில் ஐந்து பூதங்களைப் படைத்து, பஞ்சீகரணம் அதாவது ஒவ்வொன்றையும் ஐந்தாக ஆக்கும் செயல் செய்யப் படுகிறது என்று புராணங்களிலிருந்து நாம் அறியலாம். சாந்தோக்ய உபநிஷத்தில் அதன் ஒரு பகுதியாக த்ரிவித் கரணம் கூறப்பட்டுள்ளது — முதலில் பூதங்கள் படைக்கப்படும் பொழுது, தூய்மையான ஆகாசம், காற்று,நெருப்பு, ஜலம் மற்றும் நிலம் என்று இருக்கும். ஆனால் இப்படித் தனித் தனியான பூதங்களைக் கொண்டு அண்டங்களை ஸ்ருஷ்டி செய்ய இயலாது என்பதால் இவற்றை ஒன்றோடு ஒன்றாகக் கலக்க வேண்டும். ஒவ்வொரு பூதத்தின்12.5% எடுத்து மற்ற நான்கு பூதங்களோடு கலக்குவது தான் பஞ்சீகரணம். இதன் இறுதியில் ஆகாசம் என்ற பூதத்தில் 50% ஆகாசமும், தலா 12.5% காற்று, நெருப்பு, ஜலம் மற்றும் நிலம் இருக்கும். இதே போல் மற்ற பூதங்களிலும். இவற்றைக் கொண்டு தான் அண்டங்கள் படைக்கப் படுகின்றன–
நான்முகன் படைக்கப் படுவது அண்டம் உண்டான பிறகு அதற்குள் சயனித்திருக்கும் நாராயணனின் உந்தித் தாமரையில் தான். எனவே அண்டம் உண்டாவதற்கு முன் நடக்க வேண்டிய பஞ்சீகரணத்தை அவர் செய்திருக்க முடியாது, அவரே அப்போது உண்டாகாதபடியால். அதனால் பரமாத்மா தான் பஞ்சீகரணத்தைச் செய்திருக்க வேண்டும். பஞ்சீகரணம் செய்பவர் தான் வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்கிறார் என்கிறது உபநிஷத். எனவே பரமாத்மா தான் வ்யஷ்டி ஸ்ருஷ்டியையும் செய்பவராக இருக்க வேண்டும்.
’அநேந ஜீவேந ஆத்மநா’ என்ற இடத்தில் ஜீவன் மூலமாக என்று பொருள் அல்ல, ஜீவனை உடலாகக் கொண்ட நானாகிய பரமாத்மா உள்ளே புகுந்து பெயர்-உருவ-பாகுபாட்டைச் செய்யப் போகிறேன் என்று தான் பொருள்.
(தத் தேஜஸ் ஐஷத–தேஜஸ்ஸை உடலாகக்கொண்ட ப்ரஹ்மமே ஸங்கல்பித்தது போல் இங்கும் ஜீவனை சரீரமாகக் கொண்ட– —சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன் புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே-1-1-8–)
வேறொரு த்ரிவித்கரணம் உள்ளதா? கேள்வி-இங்கு த்ரிவித்கரணம் என்பது நீங்கள் சொல்லும்படி அண்டம் உண்டாவதற்கு முன் நடக்கும் செயல் அல்ல. சாந்தோக்ய உபநிஷத்தில் இதே ப்ரகரணத்தில் வேறொரு த்ரிவித்கரணம் (ஒவ்வொன்றும் மும்மூன்றாக ஆவது) சொல்லப்பட்டுள்ளது. அதாவது
இமா: திஸ்ரோ தே ₃வதா: புருஷம் ப்ராப்ய த்ரிவ்ரித் த்ரிவ்ரித் ஏகைகா ப₄வந்தி —
அக்நி, ஜலம், நிலம் ஆகிய மூன்றும் மனிதனால் உண்ணப் பட்டதும் மும் மூன்றாகஆகின்றன
பூதம் –நிலம் நீர் தீ
கெட்டிப் பகுதி –மலம் மூத்திரம் அஸ்தி-எலும்பு
நடுத்தரப் பகுதி –மாம்சம் ரத்தம் மஜ்ஜை
நுண்ணிய பகுதி –மனது -பிராணன் -வாக்
(நிலம் -மலம் -மாம்சம் -மனது
நீர் -மூத்திரம் -ரத்தம் -பிராணன்
தீ-அஸ்தி-எலும்பு-மஜ்ஜை-வாக்)
இவ்வாறு ஒவ்வொரு பூதமும் மும்மூன்று பூதங்களாக மாறுவது தான் த்ரிவ்ரித்கரணம் எனப்படுகிறது. இதெல்லாம் நான்முகனால் தான் நம் உடலில் நடப்படுகிறது. எனவே வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்பவரும் அவர் தான்.
ஸித்தாந்தியின் பதில்
2–மாம்ஸாதி பௌமம் யதா சப்தம் இதரயோ ச
மாம்ஸாதி₃ ப்ருதி₂வியிலிருந்து உண்டாகும் மாம்ஸம், மனது ஆகியவையும்
ச பௌ₄மம்–ப்ருதி₂வி தான், மற்ற பூதங்கள் அல்ல.
இதரயோ : ச – நீர் -நெருப்பிலிருந்தும் உண்டாகும் மூத்ரம் ப்ராணன் எலும்பு மஜ்ஜை ஆகியவையும்
யதா₂சப்₃த₃ம்– அந்தந்த தொற்களின் படி நீரும் நெருப்பும் தான், மற்ற பூதங்கள் அல்ல.
அது த்ரிவ்ரித் கரணமே அல்ல
ஒரு பூதம் மூன்றாக ஆகும் த்ரிவ்ரித் கரணம் இது தான் என்றால், உண்ணப் பட்ட நிலம்,மலம், மாம்ஸம், மனது என்று மூன்றாக மாறும் பொழுது, அதில் ஒன்று நிலம், ஒன்று நீர், ஒன்று நெருப்பு என்று கூற வேண்டும். பொதுவாக கெட்டியாக இருப்பது நிலம், நடுத் தரமானது நீர், மிக நுண்ணியது நெருப்பு. எனவே , கீழுள்ள அட்டவணையின்படி தான் ஒவ்வொரு பூதமும் மும் மூன்றாக ஆகிறது, இது தான் த்ரிவ்ரித்கரணம் என்கிறார் பூர்வபக்ஷீ. ஆனால், இப்படிக் கூறுவது தவறானது–நிலத்திலிருந்து வரும் மலம், மாம்ஸம், மனது என்ற மூன்றுமே நிலம் தான். அதே போல், நீரிலிருந்து வரும் மூத்ரம், ரத்தம், ப்ராணன் மூன்றுமே நீர் தான். அதே போல் எலும்பு, மஜ்ணஜ, வாக் மூன்றுமே நெருப்பு தான் என்கிறார் வேத வ்யாஸர்–
பூதம் –நிலம் நீர் தீ
கெட்டிப் பகுதி –மலம் -நிலம் –மூத்திரம் -நிலம் -எலும்பு -நிலம்
நடுத்தரப் பகுதி –மாம்சம் -நீர் –ரத்தம் -நீர் -மஜ்ஜை -நீர்
நுண்ணிய பகுதி –மனது -நெருப்பு –பிராணன் -நெருப்பு –வாக் -நெருப்பு –
இதற்குக் காரணம்–இதே பகுதியில்(அந்ந மயம் ஹி ஸோம்ய மந:, ஆபோ மய: ப்ராண தேஜோ மயீ வாக்) அதாவது மனது நிலத்தாலானது, ப்ராணன் நீராலானது, வாக் நெருப்பாலானது –என்று வேதம் கூறுகிறது. இது பூர்வ பக்ஷியின் வாதத்தோடு முரண்படுகிறது, ஏனென்றால் அவர் கூறிய படி மனது நெருப்பாலானது, நிலமல்ல;ப்ராணன் நெருப்பாலானது, நீரல்ல; ஆகவே பூர்வ பக்ஷீ கூறியது தவறானது.
ஆக, இங்கு ஒவ்வொரு பூதமும் மூன்று மூன்று பூதங்களாக மாறுவது சொல்லப்பட வில்லை , அதே விதமான மூன்று பொருள்களாக மாறுவது தான் சொல்லப் படுகிறது. எனவே இது த்ரிவ்ரித்கரணமே அல்ல. அண்டம் உண்டவதற்கு முன் நடப்பது தான் த்ரிவ்ரித்கரணம்; அதைச் செய்பவர் பரமாத்மா; எனவே வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்பவரும் பரமாத்மாவே–
கேள்வி– நிலம் நீர் தீ ஆகியவை யெல்லாம் ஒவ்வொன்றும் மும் மூன்று பூதங்களாகக் கலந்து தான் உள்ளன என்றால், அவற்றை ஏன் நிலம் நீர் தீ என்றும்குறிக்கிறோம்? மாற்றி, எந்தச் சொல்லைக் கொண்டும் குறிக்கலாமே
பதில்– 3-வைசேஷ்யாத் து தத்₃வாத₃: தத்₃வாத₃: – “சிறப்பாக (அதிகமாக) இருப்பதால் –அப்படிக் குறிக்கப் படுகிறது”. எந்த பூதத்தின் பகுதி எதில்அதிகமாக(50%) உள்ளதோ ,அச் சொல்லால் அதைக் குறிப்பிடுகிறோம்
ஸூத்ரத்தில்’தத்₃வாத₃:’ என்ற சொல்லின் இரட்டிப்பு, இதோடு இந்த அத்யாயம் முடிகிறது என்பதைக் காட்டவே —
(இங்கு ஸ்வாமி தேசிகன்
அநேந ஜீவேந ஆத்மனா அனு ப்ரவேஸ்ய-என்ற ஸ்ருதியும்
அந்தராத்மா வேறு என்றும்
மற்றவன் சரீரம் என்றும் பேதத்தைக் ஊறி இருப்பதால் ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யத்தைக் கூறவில்லை-ஆகையால் எம்பெருமான் சேதன அசேதன சரீர விசிஷ்ட ஸ்வ பாவனாய் அனு ப்ரவேசத்திலும் கர்த்தா ஆகிறான்-அனு ப்ரவேசத்தில் கர்த்தா பின்னர் ஆவதால் த்வா ப்ரத்யயம் ஜீவனுக்கு கர்த்ருத்வத்தைக் காட்டாது என்று அருளினார்
ஒருவன் அனு பிரவேசம் செய்வதாயும் மற்றவன் வியாகரணம் செய்வதாயும் கர்த்தா வேறான -சமான கர்த்ருகத்வம் இல்லாமையாலே த்வா ப்ரத்யயம் வாராது என்பதாகும் –)
இப்பாதத்தில் எட்டு அதிகரணங்களால் கூறப்பட்ட கருத்துக்கள்
1-பிராண அதிகரணத்தில் இந்திரியங்களின் உத்பத்தியும்
2-ஸப்த கத் யதிகரணத்தில் அவற்றுக்கு பதினோரு எண்ணிக்கையும்
3-பிராணஅணவ-அதிகரணத்தில் -அவற்றின் பரிமாணமும்
4-வாயு க்ரியா அதிகரணத்தில் பிராண வாயு ஸ்வரூபமும்
5-அணுச்ச அதிகரணத்தில் -பிராணனின் ஸூஷ்மத்வமும்
6-ஜ்யோதிராத் அதிகரணம் –அக்னி தேவதைகளின் வாக் யாதி அதிஷ்டானத்தில் பகவத் பாரதந்தர்யத்வமும்
7-த இந்த்ரிய அதிகரணம் -ப்ராணனுக்கு அதீந்த்ரத்வமும்
8-ஸம்ஞா மூர்த்தி க்லுப்த் யதி கரணம் -தன் நாபியில் தோன்றிய சதுர்முக சரீரகனாய் ஆத்யனாய்
பஞ்சீ கரண கர்த்தாவான பரம புருஷனிடம் சித் அசித் என்னும் வ்யஷ்டி நாம ரூப உத்பத்தியும்
என்பவை எட்டு அதிகரணங்களால் விளக்கப்பட்டன –
ஸித்த த்விகம் பார்த்துள்ளோம் -ஸாத்ய த்விகம் பார்க்கப் போகிறோம் –
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply