ஸ்ரீ பெரிய திருவடி மஹாத்ம்யம் –ஸ்ரீ திவ்ய தேச ஸ்ரீ கருட சேவைகள்-

தை மாதம் – திருநாங்கூர் 11 கருட சேவை: தை அமாவாசைக்கு மறுநாள் (ஜனவரி/பிப்ரவரி) திருநாங்கூர் பகுதியில் உள்ள 11 திவ்ய தேசப் பெருமாள்களும் ஒரே இடத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி திருமங்கையாழ்வாருக்கு காட்சியளிக்கின்றனர்.திருநாங்கூர் 11 கருட சேவை: இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருநாங்கூரில் நடைபெறும் மிக முக்கியமான விழா. தை அமாவாசைக்கு மறுநாள், 11 திவ்ய தேசப் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி திருமங்கையாழ்வாருக்குக் காட்சி அளிப்பார்கள்.-இடம்: மணிமாடக் கோயில் (திருமணிமாடம்), திருநாங்கூர்.

கும்பகோணம் 12 கருட சேவை: சித்திரை மாதத்தில் வரும் அட்சய திருதியை அன்று கும்பகோணத்தில் உள்ள 12 வைணவக் கோயில்களின் பெருமாள்களும் கருட வாகனத்தில் ஒரே இடத்தில் எழுந்தருளுவார்கள்.-இடம்: பெரிய தெரு, கும்பகோணம்.

திருவல்லிக்கேணி (சென்னை): சித்திரை பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள் பார்த்தசாரதி பெருமாள் கருட வாகனத்தில் உலா வருவார்.

வைகாசி – காஞ்சிபுரம் கருட சேவை: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோத்ஸவத்தின் போது நடைபெறும் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது.-பெரியாழ்வார் திருநக்ஷத்ர ஆனி ஸ்வாதிக்கும் ஆடி கஜேந்திர மோக்ஷத்துக்கும் கருட சேவை இங்கு உண்டு

ஆழ்வார்திருநகரி 9 கருட சேவை: வைகாசி விசாகத் திருவிழாவின் போது, நவதிருப்பதி எனப்படும் 9 திவ்ய தேசப் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி நம்மாழ்வாருக்குக் காட்சி கொடுப்பார்கள்.

ஆடி– ஸ்ரீவில்லிபுத்தூர்: பெரியாழ்வார் அவதரித்த இடத்தில், திரு ஆடிப் பூரத்தை முன்னிட்டு கருட சேவை நடைபெறும்.-திரு ஆடிப் பூரம் திருவிழாவின் போது பெரியாழ்வாருடன் ஐந்து திவ்ய தேசப் பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளும் ஐந்து கருட சேவை நடைபெறும்.

பெரும்பாலான திவ்ய தேசங்களில் பிரம்மோற்சவத்தின் 3வது அல்லது 5வது நாளில் கருட சேவை நடத்தப்படுகிறது.

ப்ரஹ்மோத்ஸவம்
கோயிலின் ப்ரதானப் பெருமாளுக்கு நடப்பது ப்ரஹ்மோத்ஸவம். பொதுவாக இது கோயிலில் முதலில் நடந்த உத்ஸவம் பிரம்மனால் நடத்தப்பட்டதைக் குறிக்கும். கோயிலின் மூலவர் ப்ரதிஷ்டையையும் குறிக்கும். பொதுவாக இவ்வுத்ஸவத்தில் காலை மாலை இரு வேளைகளிலும் புறப்பாடுகள் இருக்கும்.
அங்குரார்ப்பணம் – உத்ஸவம் தொடங்குவதைக் குறிக்க , புனிதப்படுத்திய மண்ணில் விதைகளை ஊன்றி முளைக்கவிட்டு அங்குரார்ப்பணம் செய்தல். சேனை முதலியார் புறப்பாடு உத்ஸவம் தொடங்கும்முன் விஷ்வக்ஸேநர் பெருமாள் திருவீதி புறப்பாட்டுக்கு முன் சென்று தெருக்கள் சரியாக தூய்மையாக உள்ளனவா என்று பார்த்தல்.
த்வஜாரோஹணம் – கொடி ஏற்றம்: – முதல் நாள் கருடக் கொடி கொடிக்க கம்பத்தில் ஏற்றி, உத்ஸவம் முடியும்வரை பறக்க விடப்படுகிறது.
கருட வாஹனம் – மூன்றாம் அல்லது நான்காம் அல்லது ஐந்தாம் நாள் தேச ஆசாரப்படி கருடவாஹனம் புறப்பாடு நடக்கிறது. கருடன்மீது ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளுவதால் , வேத ஸ்வரூபியாகிய கருட வாஹனம் முக்கியமான திருவிழா.
ரதோத்ஸவம் – திருத்தேர். இது ஏழு அல்லது எட்டு அல்லது ஒன்பதாம் நாள் தேச ஆசாரப்படி நடக்கிறது. எல்லா இலக்கியங்களிலும் தேர்த்திருவிழா மிகச் சிறப்பாகப் பேசப்படுகிறது. எம்பெருமானின் திருத்தேர் புறப்பாடு கண்டவர்கள் பிறவிப்பாவங்களிலிருந்து விடுபடுவதாக நம்பப்படுகிறது. முழுச் சமுதாயமும் தேர்த் திருவிழாவில் ஈடுபடுகிறது.

குதிரை வாஹனம் – வேடுபறி உத்ஸவம்
வேடு – வேட்டை ஆடுவது, துணி எனப் பொருள்படும். பறி – கொள்ளை/பறித்தல். பொதுவாக இது திருமங்கை ஆழ்வார் தொடர்பான விழா. அவர், பணக்கார ப்ராமணத் திருமணமகனாக வந்த பெருமாளை அடியார்க்கு உணவளிக்கும் பொருட்டு வழிப்பறி செய்தது வேடுபறி என்று கொண்டாடப் படுகிறது.
கலியன் (திருமங்கை ஆழ்வார்) ததீயாராதனம் (அடியார்க்கு உணவளிப்பதைச்) சிறப்பாகச் செய்து வந்தார். ஏற்கெனவே ஸ்ரீவைஷ்ணவ கைங்கர்யத்திலிருந்த அவர்க்குப் பொருள் இல்லாதபோது,வழிப்பறிகள் செய்தார். அவர்க்கு மெய்ஞ்ஞானமும் தரத் திருவுளம் பற்றிய எம்பெருமான் செல்வமிக்க அந்தணப் புதுமணமகனாக வந்து தன் பொருளைக் கொள்ளை அடிக்க விட்டார். இறுதியில், ஒரு சிறிய வளையம் எம்பெருமானின் காலில் இருந்து நீக்க முடியாமல் போக, கலியன் கீழே வளைந்து பற்களால் அதை வெட்டி அதை கட்டாயமாக நீக்கினார். கலியனின் துணிச்சலை வியந்த எம்பெருமான், அவரை “நம் கலியனோ” என்று அழைத்தார். (கலியன் பொதுவாக பெரிய போர்வீரன் என்று பொருள்படும், மரணத்தின் தலைவன், நேரத்தின் கட்டுப்படுத்துபவரை குறிக்கும் – அனைவரையும் பயத்தில் ஆழ்த்துபவர்- எம்பெருமான் கூட கலியனின் வீரத்தையும் தைரியத்தையும் கண்டு பயந்தான். நகை மூட்டையை எடுத்துத் தூக்க முடியாமல் தவித்த கலியன் “ப்ராமணரே மூட்டைக்கு மந்திரம் போட்டீரோ” என வினவ. எம்பெருமானும் ஆம் என்று கலியன் காதில் திருமந்த்ரம் ஓதி ஆட்கொண்டான். எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹத்தைக் கண்ட கலியன், “வாடினேன் வாடி வருந்தினேன்” என்று திருமந்த்ர ப்ரபாவத்தைப் பாடியருளினார்.(இந்த சம்சாரத்தில் நான் நித்தியமாக துன்புற்று இருந்தேன் … திருமந்திரத்தை எம்பெருமானிடமிருந்து கேட்க்கும் வரை-பெரிய திருமொழி முதல் பாசுரம்). ப்ரமோத்ஸவத்தில் பகுதியாக இருக்கும் குதிரை வாஹனம் நாளில், இந்த முழு நிகழ்வும் பொதுவாக திவ்யதேசங்களில் நடத்தப்படுகிறது.

மட்டையடி – ப்ரணய ரோஷம். காதலர் இடையிலான அன்புச் சண்டை. பெருமாள்/தாயார் இருவரையும் வைத்துப் பல கோயில்களில் நடக்கிறது.இது ஸ்ரீரங்கத்தில் மிக உத்ஸாகத்தோடு பங்குனி உத்தரத்தில் கொண்டாடப்படுகிறது. வேட்டையாடச் சென்ற எம்பெருமான் வேட்டைப்புண்களோடு திருமேனியை மூடி வர, பிராட்டி திவ்ய மங்கள விக்ரஹத்தில் குருதி அடையாளங்கண்டு ஸந்தேஹம் கொண்டு பெருமாள் பிற நாச்சியார்களோடு இருந்ததாக ஊடி திருக்கதவை அடைத்து அவரை உள்ளே விடாமல் தடுக்க சேதன ரக்ஷணர்த்தமாக நாம் சென்று வந்தோம் என்று அவர் சொல்வது ஏற்காததால் நம்மாழ்வார் கடகராகிப் பிராட்டியம் பெருமாளும் சமாதானமாகும் நிகழ்ச்சி பூப்பந்து எறிதலோடு அழகாக முடிகிறது.
தீர்த்தவாரி – அவப்ருத ஸ்நாநம்: சக்கரத்தாழ்வாருக்குத் திருக்குளத்தில் அல்லது சில திவ்ய தேசங்களில் எம்பெருமானுக்கே, திருமஞ்சனம் ஆகிறது.
துவஜ அவரோஹணம் – கொடி இறக்கம்:உத்ஸவம் முடிந்ததற்கு அறிகுறியாக ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்படும் நிகழ்ச்சி.
த்வாதச ஆராதனம் – தொண்டை நாட்டு திவ்ய தேசங்களில் பல ஸந்நிதிகளில் இறுதி நாளன்று எம்பெருமானுக்குப் பன்னிரண்டு திருவாராதனங்கள் ஸமர்பிக்கப்பட்டு, திருவாய்மொழி ஆயிரமும் ஒரே தொடர்ச்சியாக ஸேவிக்கப்படுகிறது.திருவாய்மொழி தொடங்குமுன் திருமஞ்சனமும் உண்டு.
சப்தாவரணம் – அன்றுமாலை எம்பெருமான் பிராட்டிமாரோடு சிறிய தேரில் அல்லது புண்யகோடி விமானத்தில் இராமானுச நூற்றந்தாதி கோஷ்டியோடு புறப்பாடாகி ஸந்நிதி திரும்பியதும் அர்ச்சக ஸ்வாமிகள் எல்லா தேவர்கள், ரிஷிகள், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்வஸ்தி வாசகம் சொல்லி வழியனுப்புதல்.
விடாயாற்றி பத்துநாள் உத்ஸவங்கண்ட களைப்புத் தீர எம்பெருமான் சில நாள்கள் திருமஞ்சனம்/திவ்யப்ரபந்த கோஷ்டி/இன்னிசைக் கச்சேரி என எழுந்தருளியிருப்பர்.

தெப்போத்ஸவம் – கோயில் புஷ்கரிணி அல்லது அருகிலுள்ள நீர்நிலைகளில் பிராட்டிமாரொடு எம்பெருமானுக்குத் தெப்ப உத்ஸவம் நடக்கும். குளத்து நீராழி மண்டபத்தைச் சுற்றித் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் வருவது அழகிய காட்சி.
பல்லவ உத்ஸவம் – இளவேனில் காலத்தில் எம்பெருமான் புதிதாய்த் துளிர்க்கும் தளிர்கள் தழைகளை அணிந்து ஸ்தல புராணம் கேட்பது.
வசந்தோத்ஸவம் – எம்பெருமான் ஸந்நிதிக்கு அருகிலுள்ள தோட்டத்திற்கு சென்று உள் புறப்பாடாகி சிறிது நேரம் எழுந்தருளியிருந்து திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளுதல். அருள்வார்.பிறகு திருமஞ்சனமும் திருவராதனமும் உண்டு.
கோடை உத்ஸவம் – எம்பெருமான் ஸந்நிதிக்கு அருகிலுள்ள மண்டபத்திற்கு சென்று திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளுதல்.
ஸ்ரீராம நவமி – ஸ்ரீராமன் அவதார உத்ஸவம் ஒன்பதுநாள்கள் புறப்பாடு, நவமியோடு முடிவுறுவது
பவித்ரோத்ஸவம் – கோயில் வழிபாடுகள் யாவும் பாஞ்சராத்ர/வைகாநஸ ஆகம விதிகளின்படி நடக்கின்றன. இவற்றில் ஏதாகிலும் குறை/பிழை ஏற்படக்கூடும் என்பதால் அதை நிவ்ருத்தி செய்ய மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு நாள்கள் குண்டங்கள் நிர்மாணித்து எம்பெருமானையும் தாயாரையும் தினமும் யாகசாலைக்கு எழுந்தருளச் செய்து, திவ்ய ப்ரபந்தம், வேத இதிஹாஸ புராண பாராயணங்களுடன் ஈடு/ஸ்ரீபாஷ்ய பாராயணங்களும் நடத்தப்படும். எம்பெருமானுக்குத் திருமஞ்சனமும் உண்டு.
ஆனி (ஜ்யேஷ்ட மாச) கருடோத்ஸவம் – ஆனி ஸ்வாதியில் பெரியாழ்வார் திருநக்ஷத்ரத்தன்று அவர் பரத்வ நிர்ணயம் செய்தது ஒட்டி எம்பெருமான் கருட வாஹனனாகப் பெரியாழ்வார்க்கு ஸேவை சாதிப்பார்.

ஜ்யேஷ்டாபிஷேகம்: எல்லா எம்பெருமான்களும் கவசத்தோடேயே ஸேவை சாதிப்பர். இந்த நாளன்று கவசங்கள் களையப்பட்டு திருமஞ்சனம் ஆகி அழகிய திருமேனியை யாவரும் ஸேவித்தபின் திருவாராதனமாகி ஸேவை ஆகும். இதன்பின், பவித்ரோத்ஸவம் கண்டருளும்வரை எம்பெருமானுக்குப் புறப்பாட்டுடன் உத்ஸவாதிகள் இராது.
ஆடிப் பௌர்ணமி கருடோத்ஸவம் – கஜேந்திர மோக்ஷம் – பொதுவாக இது யஜுர் உபாகர்மத்தன்று வரும்.
ஸ்ரீஜயந்தி – ஆகம விதிப்படியும், ஆவணி மாதம்/அஷ்டமி திதி அல்லது ரோஹிணி நக்ஷத்ரப்படியும் இது கொண்டாடப்படும். மாலை தொடங்கி நள்ளிரவு வரை இது நீடிக்கும்.
.நவராத்ரி – 9 நாள்கள் தாயார் புறப்பாடு, ஊஞ்சல்.
விஜயதசமி – பரிவேட்டை – எம்பெருமான் வேட்டையாட வெளியே எழுந்தருள்வது
தீபாவளி – பெருமாள்/தாயார் புறப்பாடு இது பெரும்பாலும் மாமுனிகள் அவதார உத்ஸவதோடு வரும்
கார்த்திகை தீபம் + அநத்யயந காலத் தொடக்கம் – திருவிளக்குகள் பல ஸந்நிதிகளில் ஏற்றப்படும். பெருமாள் புறப்பாட்டின்போது சொக்கப்பனை கொளுத்தப்படும்.
அத்யயந உத்ஸவம் 20+ நாள்கள் நம்மாழ்வார்க்கும் திருவாய்மொழிக்கும் என்றே ஏற்பட்ட மஹோத்ஸவம்

 

ஸ்ரீ பெரிய திருவடி மஹாத்ம்யம் –

ஸ்ரீ கருடன் மேல் ஸ்ரீ சுவாமி தேசிகர் இரு ஸ்தோத்திரங்கள் இயற்றியுள்ளார். அவையாவன ஸ்ரீ கருட தாண்டகம், ஸ்ரீ கருட பஞசாசத்

———

வைநதேயன் – விந்தையின் குமாரன்.
பக்ஷிராஜன் – வேத ஸ்வரூபன்.
கருத்மான் – அழகிய இறகுகளை உடையவன்.
தார்விகாரி – நாகப்பகையோன்
பத்ரிநாடா – பறவைகளின் யஜமானன்.
ஆசிவிகாரி – நாகங்களின்(விஷ) பகைவன். காகேந்திரன் – பறவைகளின் அரசன்.
அருண அனந்தரன்- அருணனின் இளையோன்.
பக்ஷிஇந்திரன் – பறவைகளின் அரசன்.
தெய்வப்புள்ளான கருட பகவான் ஒப்பற்ற மேன்மை யுடையவர்.
மஹாவிஷ்ணுவுடைய இரண்டாவது வியுகமான ஸ்ரீ சங்கர்ஷண மூர்த்தியின் அம்சமாக விளங்குபவர்.
மனித உடலிலுள்ள ஐந்து வாயுக்களான ப்ராணன், அபாநன், வ்யானன்,உதானன், ஸமானன் என்பவற்றுக்கு
ஸத்யர், ஸுபர்ணர், கருடர், தார்க்ஷ்யர். விஹகேஸ்வரர் என்னும் ஐந்து மூர்த்திகளாய் விளங்குகின்றார்.
இவர் ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் ஆறு குணங்கள் நிரம்பப்பெற்றவர்.
ஏழு சுரங்களையுடைய சாம வேதத்தின் வடிவமானவர்.
அணிமா, மஹிமா, லகிமா,கரிமா,வசித்வம்,ஐச்வர்யம், ப்ராப்தி, ப்ராகாம்யம் என்னும் அட்டமஹா சித்திகள் பெற்றவர்.
 
கருடனுக்கு ருத்ரை, ஸுகீர்த்தி என்று இரு மனைவியர்கள்.
இவரது நட்சத்திரம் சுவாதி.
சில தலங்களில் கருட சேவையின் போது ஒரு வெள்ளைத் துணியை கருட வாகனத்தின் அலகால் கிழித்து நான்கு
திசைகளிலும் திசைக்கு ஒன்றாக தூக்கி எறிவார்கள்.
இது மனிதனின் மும்மலங்கள் அவனிடமிருந்து கிழிக்கப்பட்டு திசைக்கு ஒன்றாக வீசப்பட்டு
அவன் தூயமையாவதைக் குறிக்கின்றது.
எனவே கருட சேவையை காணும் போது நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் நீங்கும்(
நீக்க நாம் முயற்சி செய்தால்) இவ்வாறு மலங்கள் நீங்கும் போது மனிதன் நிர்மலன் ஆகின்றான்.
இவ்வாறு ஆணவத்தை தொலைத்தால் சீவனில் உள்ள ஆணவமாகிய சுழி இறங்கும் போது
சீவன் சிவன் ஆகிறான். அவன் தன்னை உணர்கிறான்.
இறை தரிசனம் கிட்டும்.முக்திக்கு வழி பிறக்கும்
எனவே தான் பெருமாளின் கருட சேவையைக் காண்பதால் மோக்ஷம் கிட்டும் என்பது ஐதீகம்.
 
————-
கருடன் வேதமயமானவன், அதாவது “வேத சொரூபன்”.
 
ஸூபர்ணோஸி கருத்மாந் த்ரிவ் ருத்தே சிரோ
காயத்ரம் சஷீஸ்ஸ்தோம ஆத்மா ஸாம தே
தநுர் ப்ரஹத்ரதந்தரே யஜ்ஞாயஜ்ஞியம்
புச்சம் – என்பது யஜுர் வேத வ்யாக்யானம்.
 
விநதையின் புதல்வனான கருடனின் ஒவ்வொரு அவயமமும் வேதத்தின் பகுதி.
“ஸ்தோமம்” என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்ம ஸ்வரூபம்.
“காயத்ரம்” என்கிற ஸாமம் அவருக்கு கண்கள்.
“த்ரிவ்ருத்” என்ற ஸாமம் அவருக்கு சிரசு.
யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள்.
சந்தஸ்ஸுக்கள் அவரது திருக் கரங்கள்.
“திஷ்ண்யம்” எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள்.
“வாமதேவ்யம்” என்கிற ஸாமம் அவரது திருமேனி,
“ப்ருஹத்” , “ரதந்தரம்” என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள்.
“யஜ்ஞாயஜ்ஞியம்” என்கிற ஸாமம் அவருக்கு வால்.
இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால்
கருடனை “வேத ஸ்வரூபன்” என்கிறார்கள் பெரியோர்.
 
பெருமாள் அவ்தாரம் செய்த உக்ர ஸ்தம்பத்திலிருந்து கருடாத்ரியைப் பார்த்தால் அப்படியே
கருடன் தன் இரு சிறகுகளையும் விரித்து மத்தியில் உயர்ந்த அலகுடனும் மூன்று பகுதிகளாகவும்
அஞ்சலி ஹஸ்தத்துடன் ( கை கூப்பிய நிலையில்) நிற்பதை இன்றும் காணலாம்.
அஹோபிலத்தில் இன்று கருடாத்ரிக்கும் வேதாத்ரிக்கும் இடையே பிறவிப் பிணியை நீக்கும் பவ நாசினி ஆறு ஓடுகின்றது.
கருடாத்ரியில் தான் நவநரசிம்மரில் இன்னொரு நரசிம்மரான பாவன நரசிம்மரும்
தாயார் செஞ்சு லக்ஷ்மித் தாயாருடன் லக்ஷ்மி நரசிம்மராக சேவை சாதிக்கின்றார்.
 
அஹோபிலே கருடசைல மத்யே க்ருபா வசாத் கல்பித ஸந்நிதாநம்
லக்ஷ்ம்யா ஸமாலிங்கித வாம பாகம் லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே
 

ஆடி கருடன் – கஜேந்திர மோக்ஷம்

ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி யன்று கருட பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது

கருடன் நாகங்களை அடக்கி தனது மேனி முழுவதும் ஆபரணமாக அணிந்துள்ளான்.
பூணூல் : வாசுகி
வலது கை கங்கணம்: குளிகன்
இடது கை கங்கணம் : ஆதி சேஷன்
அரையில் அணி: தட்சகன்
மாலை: கார்கோடகன்.
வலது காது குண்டலம்: பத்மன்
இடது காது குண்டலம் : மஹா பத்மன்
திருமுடியில் : சங்க பாலன்—சங்க ஸூடன் என்றும் சொல்வர்

விடமுடைய பாம்பின் உடம்பையும் உயிரையும் உண்ணும் பறவை கருடன்.
அக்கருடனுடைய அரைக்கசையாக, கைகளில் தோள் வளைகளாக, முடி மேல், காது குண்டலங்களாக விளங்கும்
ஆபரணங்கள் எல்லாம் பாம்பு, குடையும் பாம்பு என்று பரிபாடல் கூறுகின்றது.

விடமுடை அரவின் உடலுயிர் உருங்கு உவணம் அவன்
மடிமேல் வலந்தது பாம்பு பாம்பு தொடி பாம்பு தலைமேலது பாம்பு
இறை தலையன பாம்பு படிமதம் சாய்த்தோய் பசும் பூனலை
கொடிமேலிருந்தவன் தாக்கு இரையது பாம்பு – பரிபாடல்

எல்லா கருடனிலும் அஷ்ட நாகங்கள் ஆபரணமாக விளங்கும்
ஆனால் இந்த கல் கருடனில் ஒன்பது நாகங்கள் ஆபரணமாக உள்ளன,
ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.

நாக பாசத்தால் இந்திரஜித் இளையபெருமாளை கட்ட, அவர் மயங்கி விழுந்த போது
அந்த கட்டிலிருந்து விடுவித்தவன் கருடன். அதற்காக இராம பிரானின் தழுவுதல பெற்றவன் கருடன். “
ககநகர கனககிரி கரிமதர நிகம்மய நிஜ கருட கருதநில லவகளித விஷவதநக்ர கதந” என்று
ஸ்வாமி தேசிகன் இவ் வைபவத்தை பாடுகின்றார்.

பரிஷ்கார வர்ணக–

வாமே வைகுண்ட சய்யா பணிபதி கடகோ வாஸூகி ப்ரஹ்ம ஸூத்ர
ரஷேந் நஸ்தஷ கேண க்ரதித கடி தடஸ் சாரு கார்க்கோட ஹார
பத்மம் கர்ணேஸ் ப அசேவ்யே ப்ரதிமவதி மஹா பத்ம மந்யத்ர பிப்ரத்
சூடாயாம் சங்க பாலம் குளிகமபி புஜே தஷிணே பக்ஷிமல்ல -ஸ்ரீ கருட பஞ்சாசத் —36-

ஆதி சேஷனே கையில் கங்கணம் -வாஸூகி பூணூல் -தக்ஷகன் கழுத்துக்கு ஆபரணம்
கார்க்கோடன் -ஹாரம் -பத்ம மஹா பத்ம காதுகளுக்கு ஆபரணங்கள்
சங்க பாலன் திரு முடியில் -குளிகன் தோல் வளை
இப்படி முக்கிய அஷ்ட சர்ப்பங்கள் சேவை உண்டே –

———-

திருமலையின் ஏழு மலைகள் சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், அஞ்சனாசலம், ஸ்ரீ வேங்கடாசலம், ரிஷபாசலம், அனந்தாசலம் ஆகியவை ஆகும்.

ஆதி சேஷன் ரூபத்தில் இருப்பதால் – சேஷாசலம்.
வேதங்களால் நிறைந்திருப்பதால் – வேதாசலம்.
கருடனால் வைகுண்டத்திலிருந்து பூலோகத்திற்கு கொண்டு வரப்பட்டதால் – கருடாசலம்.
விருஷாபாசுரனை சம்ஹரித்து அவனுக்கு மோக்ஷம் கொடுத்ததால் – விருஷபாத்ரி.
திரேதா யுகத்தில் அஞ்சனா தேவி தவம் இருந்து அனுமனைப் பெற்றதால் -அஞ்சனாத்ரி.
துவாபர யுகத்தில் ஆதிசேஷனையும் வாயு பகவானையும் தூண்டி அனந்த பர்வதத்திஅயும் கொண்டு வந்ததினால் – அனந்தாத்ரி.
சர்வ பாவங்களும் தஹிக்கப்பட்ட புண்ணிய ஷேத்திரமானதால் – வேங்கடாத்ரி
 
இத்தலத்தில் கருடனுக்கு இன்னுமொரு சிறப்புமுண்டு.
கோவிலின் அருகில் உள்ள கோனேரியை (திருக்குளத்தை), கருடன் தான் வைகுண்டத்து விரஜா நதியில் இருந்து உருவாக்கினான்! .
 
திருமலையில் பிரம்மோற்சவத்தின் சில சிறப்புகள்
1) முதல் நாள் கொடியேற்றம் மாலையில் நடைபெறுவது,
2)இரண்டு தடவை சேஷ வாகன சேவை,
3) தங்கத்தேர்.
4) கருட சேவையன்று மூலவராக உற்சவர் சேவைசாதிப்பது.
 
பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் மாலை கருட சேவையின் ஒரு தனி சிறப்பு கருட சேவையன்று மூலவர் வேங்கடேசருக்கு அணிவிக்கப்படும் மகர கண்டியும், லக்ஷ்மி ஹாரமும் கருட சேவையன்று மட்டும் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படுகின்றன. சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் திருமாலையை அணிந்து கொண்டு சேவை சாதிக்கின்றார் பெருமாள் . கருடசேவைக்காகவே ஒரு மாலையை அணிந்து அனுப்புகின்றாள், கூடவே தான் தாங்கியிருந்த கிளியையும் அனுப்புகிறாள் கோதை நாச்சியார்.
 
தை மாதத்தின் வளர்பிறை சப்தமி என்னும் ஏழாம் நாள் இரத சப்தமி என்றும் சூரிய ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகின்றது.
இரத சப்தமியன்று அருணன் சாரதியாக இருந்து செலுத்தும் ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய நாராயணரின் இரதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம்
சூரியன் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறும் நாள் என்பாரும் உண்டு.  இரத சப்தமி என்னும் இந்நாளில் சூரியனுக்கு விசேஷ ஓளி பிறப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
திருப்பதியில் ஏழுமலைகள் உள்ளதால், அந்த மலைகளை சூரியனின் குதிரைகளாகக் கருதி, ரதசப்தமி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய விழாவுக்கு, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்று பெயர். “அர்த்த’ என்றால், “பாதி!’ பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி பவனி வருவதால், இதை, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்கின்றனர். திருமலையில் அதிகாலையில் மலையப்பசுவாமி சூரியப் பிரபையில் சேவை சாதிக்கின்றார், பின் சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனம், நிறைவாக சூரிய அஸ்தமன காலத்தில் சந்திரப் பிரபை வாகனத்தில் சேவை சாதித்து வைர வைடுரிய நகைகள் மின்ன சர்வ அலங்காரத்தில் சேவை சாதிக்கும் நாள்.
 
பிரம்மோற்சவம் தவிர பெருமாள் கருட சேவை தந்தருளும் நாள் தை மாத இரத சப்தமி நாள். அன்று அதிகாலை சூரியப் பிரபை வாகனத்தில் சேவை சாதிக்கும் பெருமாள் மாலை சந்திரப்பிரபை வாகனத்தில் சேவை சாதிக்கின்றார். மேலும் பெரிய திருவடியாம் கருடன், சிறிய திருவடியாம் அனுமனிலும் சேவை சாதிக்கின்றார் பெருமாள்.
————-

இத்திவ்ய தேசத்தில் நெடியானாய் நின்ற கோலத்தில், சாரதிக்கு உரிய முறுக்கு மீசையுடன் வலக்கையில் சங்கமேந்தி சக்கரம் இல்லாமல் வேங்கட கிருஷ்ணன் என்று மூலவராயும், திருமுக மண்டலத்தில் பீஷ்மரின் அம்பு காயங்களுடன் பார்த்தசாரதி என்று உற்சவராயும், வால்மிகி முனிவர் வணங்கும் இராமனாய், மைதிலி மற்றும் தம்பி இலக்குவனோடும் சக்கரவர்த்தி திருமகனும், பள்ளி கொண்ட ஸ்ரீமந்நாதராய் அரங்கனாகவும், பிரகலாதனுக்கு அருள் புரிந்து யோக நிலையில் அமர்ந்த தெள்ளிய சிங்கராகவும், நித்ய கருட சேவை வழங்கும் கஜேந்திர வரதராகவும் பெருமாள் ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார்.

கஜேந்திர வரதர் சன்னதி உள் பிரகாரத்தில் தென் கிழக்கு மூலையில் தனி சன்னதியாக அமைந்துள்ளது. இவருக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் வைகாசி திருவோணத்தை ஒட்டி பத்து நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகின்றது. வைகானச ஆகமப்படி உற்சவங்கள் நடைபெறுவதால் மூன்றாம் நாள் அதிகாலை கோபுர வாசல் தரிசனத்துடன் கருட சேவை எல்லா பெருமாள்களின் பிரம்மோற்சவத்தின் போதும் நடைபெறுகின்றது. கஜேந்திர வரதர் ஹஸ்த நட்சத்திரத்தன்று் மாலை புறப்பாடு கண்டருளுகிறார். கஜேந்திர மோக்ஷ உற்சவம் ஆடி கருடன் என்று ஆடிப் பௌர்ணமியன்று நடைபெறுகின்றது. பங்குனி உற்சவ திருக்கல்யாண உற்சவத்தின் போது மாலை ஸ்ரீரங்கநாத சுவாமி கண்ணாடி கருட சேவை தந்தருளுகின்றார்

———-

சோள சிம்ம புரம் என்னும் திருக்கடிகையில் காஞ்சி வரதர் தனது அன்பரான தொட்டாச்சாரியாருக்கு வைகாசி கருட சேவை காட்சியை தக்கான் குளக்கரையை அளித்ததை அனைவரும் அறிவோம்

இவ்வாறு கச்சி வரதன் அளித்த அற்புத கருட சேவையை எப்போதும் அனைவரும் சேவிக்கும் பொருட்டு தக்கான் குளக்கரையில் வரதர் ஆலயம் உள்ளது. அங்கும் நாம் தினமும் மோட்சமளிக்கும் கருடசேவையை தரிசிக்கலாம்.

——–

புராணங்களில் மேல் கோட்டை
1. பத்மகூடா,
2. புஷ்கரா,
3. புத்மசேகரா ,
4.அனந்தமாயா ,
5. யாதவகிரி,
6. நாராயணாத்ரி,
7. வேதாத்ரி ,
8. வித்யா (ஞான) மண்டல்,
9. தக்ஷிணபத்ரி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.

மூலவர் :- திருநாராயணன் / திருநாரணன் சங்க சக்ர, கதை, முதலியவைகளுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம், சரணங்களில் பீபீ நாச்சியார் (வெள்ளி கவசத்துடன்) சரணங்களில் வணங்கிய முடி.

உத்ஸவர் :- ஸம்பத்குமாரர், இதரபெயர்கள் – ராம ப்ரியர், செல்வ பிள்ளை, செல்வ நாராயணன்.

தாயார் :- யதுகிரி நாச்சியார், மேலும் பூமி தேவி, வரநந்தினி நாச்சியார்.

தீர்த்தம் :- கல்யாணி தீர்த்தம், வேத புஷ்கரிணி, தனுஷ் கோடி தீர்த்தம், முதலிய 8 தீர்த்தங்கள்.

விமானம் :- ஆனந்தமய விமானம்

ப்ரத்யக்ஷம் :- கருட பகவான்

இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இதர மூர்த்திகள் :

வண்புகழ் நாரணன் :- ஸ்நபனபேரர், (நாராயண பகவான் பக்கத்தில்) நித்ய திருமஞ்ஜனம் கண்டருளிகிறார்.

வாழ் புகழ் நாரணன், பலி செல்வர், செல்வப் பிள்ளை ஸந்நிதியில் ஸேவை ஸாதிக்கிறார்.

———

தேவேந்திரன் ஒரு சமயம் ஒரு விமானத்தையும் வைர முடியையும் அளித்து இவற்றை எந்தெந்த பெருமாளுக்கு உகந்ததோ அங்கு சம்ர்பித்து விடு என்று பணித்தான். கருடனும் வைர முடியை கர்நாடக மாநிலத்தில் மைசூர் அருகில் உள்ள திருநாராயண புரத்தில் செல்லபிள்ளை சம்பத்குமாரரருக்கும் விமானத்தை தேரழுந்தூரில் ஆமருவியப்பனுக்கும் சமர்பித்தான். எனவே இத்தலத்தின் விமானம் கருட விமானம் ஆகும். விமானம் சாம்ர்பித்த கருடனுக்கு “ என்ன வரம் வேண்டும்? என்று வினவ , கருடனும் அர்ச்சை நிலையில் தேவரீர் இருக்க அடியேன் எதிரே நின்று எல்லா இடங்களிலும் சேவிக்கிறேன். ஆனால் அருகிலே நின்று அடியேன் தேவரீரின் பொன்னடிகளைச் சேவிக்க வேண்டும் என்று வரம் வேண்ட பெருமாளும் கருடனை அருகில் இருத்தி கொண்டதாக ஐதீகம்.

————–

மருந்து உண்ணும் போது விஷ்ணு என்றும்
உணவு உட்கொள்ளும் போது ஜனார்த்தனா என்றும்
படுக்கச் செல்லும் போது பத்மநாபா என்றும்
திருமண காலத்தில் பிரஜாபதி என்றும்
யுத்த களத்தில் சக்ரதாரி என்றும்
இறுதி காலத்தில் நாராயணா என்றும்
நண்பர்களிடம் ஸ்ரீதரா என்றும்
கெட்ட சொப்பனம் கண்ட பின் கோவிந்தா என்றும்
சங்கட காலங்களில் மதுசூதனா என்றும்
தனி வழி செல்லும் போது நரசிம்மா என்றும்
நெருப்பினால் துன்பம் உண்டாகும் போது ஜலசாயினே என்றும்
தண்ணீரில் துன்பம் உண்டாகும் போது வராஹா என்றும்
மலை ஏறும் போது ரகு நந்தனா என்றும்
வீதியில் நடக்கும் போது வாமனா என்றும்
எங்கும் எப்போதும் மாதவா என்றும்
 

ஒரே மாலையில் 18 ஸ்ரீ கருட சேவைகளின் அரிய காட்சி

சமத கும்பம் 2025 என்று அழைக்கப்படும் 3வது வருடாந்திர பிரம்மோத்சவம், 
108 திவ்ய தேசங்களால் சூழப்பட்ட பிரமாண்டமான சமத்துவ சிலையில் ( 
சுவாமி ராமானுஜாச்சாரியாரின் 216 அடி உயர சிலை )  நடைபெற்று வருகிறது . இந்த நிகழ்வு பக்தர்களுக்கு  ஒரே மாலையில் 18 கருட சேவைகளைக் காணும் அரிய வாய்ப்பை வழங்குகிறது -இது ஆன்மீக மற்றும் மன எழுச்சியின் சூழலை உருவாக்குகிறது.காலை பூஜை மற்றும் ஆராதனைக்காக பக்தர்கள் யாகசாலையில் குவிந்தனர். புனித தீர்த்த கோஷ்டி நடத்தப்பட்டு, 18 திவ்ய தேச பெருமாள்கள் திருமஞ்சனம், சம்பிரதாய ஸ்நானம் ஆகியவற்றுக்கு தயார்படுத்தப்பட்டனர்.
காலை பூஜை மற்றும் ஆராதனைக்காக பக்தர்கள் யாகசாலையில் குவிந்தனர். புனித தீர்த்த கோஷ்டி நடத்தப்பட்டு, 18 திவ்ய தேச பெருமாள்கள் திருமஞ்சனம், சம்பிரதாய ஸ்நானம் ஆகியவற்றுக்கு தயார்படுத்தப்பட்டனர்-18 பெருமாள்களுடன் திவ்ய சாகேதம் ராமச்சந்திர பகவானும் திருமஞ்சனம் பெற்றார்.இந்த சடங்கில் மூலிகை கலந்த நீர், பால், தயிர், தேன் மற்றும் பழச்சாறுகள் பயன்படுத்தப்பட்டன.தொடர்ந்து சஹஸ்ரதாரா அபிஷேகம் , ஷங்கதாரா, சக்ரதார ஸ்நானம் உள்ளிட்டவை நடந்தன. பகவத் ராமானுஜரும் புனித சேவையைப் பெற்றார்.அபிஷேக தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு, தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற்றது.
கருடன் தான் விஷ்ணுவின் வாகனன் என்று எல்லோர்க்கும் தெரியும்-விஷ்ணு கோவில்களில் துவஜஸ்தம்பம் உண்டு. அதில் கருடனின் கொடியே கட்டி இருக்கும்.-10 நாள் உற்சவத்தின் போது கொடியை ஏற்றுவது துவஜாரோஹணம்-என்பர்.-கடைசி நாள் துவஜாஅவரோகணம் நடக்கும். 3 ஆம் நாள்கருடோத்சவம் நடக்கும். இது எல்லா கோவில்களுக்கும் பொது-

-கருடனை தரிசனம் செய்யும் போது கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல சாலச்சிறந்தது.

-குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து&நஃபிஸ்தவளாய ச!விஷ்ணு வாஹந ! நமஸ்துப்யம் பஷிராஜாய தேநம:!!

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

அரிய 100 தகவல்கள்–

1-ஸ்ரீகருடன் மகாவிஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாகக் கருதுவதால் அவரை கண்டிப்பாக வணங்க வேண்டும்.

2. ஸ்ரீகருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, கதிர்ப்பச்சை (தமனகம்), சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.

3-‘யுவதிஜனப்பிரியா நம’ என ஸ்ரீகருடனை துதித்து பெண்களும் மாலையில் குங்கும அர்ச்சனை செய்யலாம்.

4-கருட சேவையை அதிகாலையில் தரிசிப்பது மிகவும் விசேஷம்.

5. கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும். அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.

6. ‘திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வத்தில் காணப்படுகிறது.

7-ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.

8. திருமாலைப் போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி – பிராகாம்யம் ஆகிய எட்டு விதமான சம்பத்துக்களாக இருந்து கொண்டு, பக்தர்களுக்கு அவற்றைத் தருபவராக ஸ்ரீ கருடன் விளங்குகிறார்.

9. கருடனுக்கு சார்பர்ணன் என்றொரு பெயருண்டு. கருடனுடைய மனைவியர் ருத்ரா, சுகீர்த்தி.

10. கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.

11. கேரள மன்னரான சுவாதி திருநாள் இசை வித்தகராக மட்டுமின்றி பல கலைகளிலும் வல்லவராக இருந்ததற்குக் கருடோபாசனையே காரணம்.

12. கொலம்பஸ் கடலில் திக்குதிசை தெரியாமல் தவித்த போது கருடன் வானத்தில் வட்டமிட்டு திசை காட்டியதாக சரித்திரம் சொல்கிறது.

13. கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும் ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.

14-வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் பல இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.

15. சிவகங்கை மாவட்டத்தில் -காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள்.-இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும். தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.

16. மௌரியர்கள் கருடனை மிகவும் அதிர்ஷ்ட தெய்வம் என்று கருதினார்கள்.

17. குப்தர் காலத்தில் குமார குப்தன், சமுத்திர குப்தன் என்ற இரண்டு அரசர்கள் தங்கள் பொன் நாணயங்களில் கருடனைப் பொறித்தார்கள். கருட முத்திரை தங்கள் நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்று அவர்கள் நம்பிக்கைப்படி குப்தர்கள் காலம் வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்ந்தது.

18-சந்திரகுப்த விக்ரமாதித்தன் முதன் முதலில் நாட்டின் நலனைக் கருதி டெல்லியில் ஒரு கருட ஸ்தம்பத்தை ஸ்தாபித்தார்.

19-உலக வல்லரசாக அமெரிக்கா திகழக் காரணமாக இருப்பது அந்த நாட்டின் சின்னமான கருடனால்தான்.

20. பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கடைசி நாள் போர் கருட வியூக யுத்தமாக நடந்தது. இதுவே பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

21. நேபாள நாட்டில் கருட நாக யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடன் இறங்கி விடும்.

22. கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைரமுடி என்கிற அணிகலன் தற்பொழுது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்து பெருமாளுக்கு சூட்டப்பட்டுள்ளது.-இந்த நிகழ்ச்சி இன்றும் ஒவ்வொரு பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

23. வானத்தில் கருடனைப் பார்க்கும் போது கைகூப்பி வணங்கக் கூடாது. கன்னத்தில் போட்டுக் கொள்ளவும் கூடாது. மங்களானி பவந்து என மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும்.

24. பிரான்ஸ் சக்ரவர்த்தி மாவீரன் நெப்போலியனுடைய கொடி கருடக் கொடியாகும். எனவேதான் அவரால் பலவெற்றிகளை அடைய முடிந்தது.

25. ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரங்க மன்னர் ஆண்டாளுடனும் கருடனுடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு. இப்படி இங்கு கருடனுக்கு தனிமரியாதை கொடுப்பதன் காரணம் கருடன் பெரியாழ்வாராக அவதரித்ததால் மாமனார் –

26. எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ் வாரைத்தான் காணமுடியும். திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும் காட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்று கூறுவார்கள்.

27. கும்பகோணத்திலிருந்து அருகில் உள்ள திருவெள்ளியங்குடி என்ற தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு சக்கரங்களும் கொண்டதாகக் காட்சி தருவது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. சங்கு சக்கரங்களைப் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய் கருடாழ்வார் இங்கு திகழ்கிறார்.

28. ஆழ்வார் திருநகரியில் நவ கருட சேவை மிக சிறப்பானது. வைகாசி விசாகம் இறுதியாக நம்மாழ்வாருக்கு பத்து நாள் திரு அவதார திருநாள் நடைபெறுகிறது. இதில் ஐந்தாவது நாள் நவதிருப்பதி எம்பெருமான்கள் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளி அபிஷேக, ஆராதனைகள் கொண்டு இரவு ஒன்பது பெருமாளுக்கும் கருடாரூடர்களாக ஆழ்வாருக்கு சேவை சாதிக்கிறார்கள்.இங்கு கருடன் சம்ஸரூபியாக இருக்கிறார்.

29. பாண்டி நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல்லில் (திருத்தண்கால்) கோவிலில் கருடாழ்வார் சர்ப்பத்துடனும், அம்ருத கலசத்துடனும் காட்சியளிக்கிறார்.

30. நம்பாடுவான் என்ற ஹரிஜன வைணவ பக்தனுக்காக கருடாழ்வாரும், கொடி மரமும் சற்று விலகி உள்ள தலம் திருக்குறுங்கடி

31-கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் வந்து நமக்கு வெற்றி வாழ்த்து சொல்வதற்கு சமம் ஆகும்.

32. நமது காரியம் வெற்றி பெறும் என்று இருந்தால் தான் மகா விஷ்ணுவாகிய ஸ்ரீ நாராயணன் கருடன் தரிசனம் கிடைக்கச் செய்வார் இல்லையெனில் கருட தரிசனம் கிட்டாது.

33-ஆயிரம் ஆயிரம் சுப சகுணங்கள் கிட்டினாலும் ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது! தன்னிகரற்றது கருட தரிசனம்!

34-கெட்ட சகுணங்கள் துர்சேட்டைகள், துர் குறிகள் போன்ற அசுபங்கள் அனைத்தும் கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடிவிடும்!

35-பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.

36. அழகிய கருட பகவானின் தரிசனத்தைக் கண்டாலே உள்ளத்தில் உற்சாகமும், ஊக்கமும் உண்டாவதை நிதர்சனமாக உணரலாம்.

37-கருடனில் இருந்து கிடைக்கப்பெறும் தெய்வீக ஒளிக்கதிர் வீச்சானது மனிதர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒருவித நேர்மறை சக்திகளை உண்டாக்குகிறது என்று அறிவியல் ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.

38-எதிரிகளை முறியடிக்கின்ற நேர்மறையான அதிர்வலைகளை கருட தரிசனம் தருகிறது.

39-கருட தரிசனம் சிறந்த சமயோகித புத்தியையும், நல்ல சிந்தனைகளையும், நல்ல எண்ணங்களையும் அளிக்கிறது.

40-நல்ல தெய்வீக சக்திகள் சூழ்ந்த சூழ்நிலைகளில் கருட வாசம் நிச்சயம் இருக்கும்.

41-எதுவும் சரியாக இல்லாத போது என்ன தான் நாம் கருட தரிசனம் காண முற்பட்டாலும், கருட தரிசனம் கிட்டாது என்பது பலரது அனுபவமாகும்.

42-நவரத்தினங்களில் ஒன்றான பச்சை நிறமுள்ள மரகதத்திற்கு கருடோத்காரம் அல்லது காருடமணி என்று பெயர்.-கருடனால் விழுங்கி துப்பப்பட்ட பலாசுரன் என்ற அசுரனின் எலும்புகளே மரகதமாக மாறின. இதை அணிவதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் துன்பம் ஏற்படாது.

43. அமிர்தக் குடத்தை எடுத்துவர தேவலோகம் சென்ற கருடன், அங்குள்ள தர்பைப் புல்லையும் பூலோகத்திற்குக் கொண்டு வந்தார். அமிர்தத்துடன் தர்ப்பையையும் கொண்டு வந்ததால் அதனை அமிர்தவீர்யம் என்ற பெயரில் அழைக்கின்றனர்.

44. ஒரு காலத்தில் சுவேதத் தீவில் இருந்த பாற்கடலின் பால் கட்டிகளை தன்னுடைய சிறகு முழுவதும் அப்பிக்கொண்டு வந்து எங்கும் உதறினார் கருட பகவான். அவற்றையே ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமண் என்று அணிந்து கொள்கின்றனர்.

45. கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் ஆகியவற்றை வாழைச்சாற்றில் கலந்து அவரது திருமேனியில் சாற்றி வேண்டிக் கொண்டால் அனைத்து இஷ்ட சித்திகளையும் எளிதில் அடையலாம்.

46. ஸ்ரீமந் நாராயணனின் அவசர காரியத்திற்காக, கருட பகவான் அவரைத் தாங்கிக்கொண்டு விரைந்து சென்று கொண்டிருப்பார். எனவே அவர் பறக்கும்போது கையெடுத்துக் கும்பிட்டால், அவரது வேகம் குறைந்து எம்பெருமானின் செயலுக்கு ஊறு நேரிடலாம் என்பதால் அப்படி சொல்லி உள்ளனர்.

47. கருடன் மட்டுமே இறக்கைகளை அசைக்காமல் பறக்கும் சக்தி உடையவர். எனவே உயர பறக்கும் போது இறக்கைகளை அசைக்காமல் இருந்தால் அது கருடன் என்று முடிவு செய்யலாம்.

48. ஜைன மதத்தினர் கருடனை சுபர்ணா என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். பவுத்தர்கள் உராசனா, பன்னகாசனா, நாகத்தகா ராஜநிர்ஹனா என்னும் பெயர்களில் கருடனை வழிபட்டு வருகின்றனர்.

49. கருடனின் நிழல்பட்ட நிலத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும். காரணம், வேத ஒலிகளுக்கு தாவரங்களை நன்கு வளர வைக்கும் சக்தி உண்டு.

50-சப்த மாதர்களில் ஸ்ரீவைஷ்ணவி கருட வாகனத்தைப் பயன்படுத்துகிறார். ஆனால் அவர் ஸ்ரீவிஷ்ணுவின் பிரிக்க முடியாத சக்தி என்பதால் அவரையும் ஸ்ரீவிஷ்ணுவாகவே கொள்ள வேண்டும்.

51-ஸ்ரீகருட பகவானை உபாசனை செய்வதே அவர் சுட்டிக்காட்டும் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளைப்ம் பற்றிக் கொள்வதற்காகத்தான்.

52-வெளியூர் பயணங்கள், சுபச்செயல்கள் துவங்குகையில் கருட ஸ்லோகம் படித்தால் இடையூறு நேராது.

53. கார்க்கோடகன் பெயரைச் சொன்னால் ஏழரைச் சனியினால் ஏற்படும் கஷ்டம் விலகும் என்கிறது நளசரித்திரம். அந்தக் கார்க்கோடகனை ஹாரமாக அணிந்திருப்பவர் கருடன்.

54. ஹோமர் எழுதிய இலியத் என்ற ரோமானிய காவியத்தில் ஒரு பெரிய பாம்பைப்பற்றியபடி கருடன் வானத்தில் வட்டமிடுவதாகக் கூறப்பட்டுள்ளது. காம்போஜத்தில் கருடனே யோக தேவதையாக இருந்திருக்கிறார்.

55-கருடன் தகர்த்த மேருமலையின் சிகரத்துண்டே சமுத்திரத்தில் விழுந்த இலங்கைத்தீவு என்று பேசப்படுகிறது.

56-திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலுள்ள ஸ்ரீகருட பகவான் ஆறேழு அடி உயரத்தில் நின்ற நிலையில் நாகங்களைப் பூண்டு சேவை தருகிறார்.

57-கருடனது பீசாட்சாரம் கம். சக்தி பீஜம் டம். கருடனுடைய பெயரிலேயே இரண்டும் இருக்கிறது. பெருமாள் சோதனை செய்து வரம் தருவார். கருடனோடு சேர்த்துத், திருமாலை பிரார்த்தித்தால் உடனே அமோகமான பலன்கள் கிடைக்கும் என்கிறது பரிவதிலீசனைப் பதிகம்

கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண்
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே
 –1-6-10–

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே 
–1-6-11-

58-கோவில் கும்பாபிஷேக நேரத்தில் வானத்தில் கருடன் வட்டமிட்டால் நாடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம்.

59=ராம ராவண யுத்தத்தில் பெருமாளையும், இளைய பெருமாளையும் நாகபாசத்தில் இருந்து விடுவித்தவர் ஸ்ரீ கருடன் தான்.

60-பாற்கடலைக் கடையும்போது திருமாலின் கட்டளைப்படி மந்திர மலையைத் தன் முதுகில் சுமந்து வந்து பாற்கடலில் வைத்தவர் கருடன் தான்.

61-கண்ணபிரான் துவார கைக்கு வெளியே இருந்த போதெல்லாம் துவாரகையைக் காத்தவர் கருடன்.

62-கருடனுக்கு பிரகஸ்பதி குலதேவதை, கன்னிப் பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடி வர குருபார்வை வேண்டும். ஆகையால் கருட பகவான் அருள் கிட்டினால் பெண்களுக்கு மனம்போல் மாங்கல்யம் அமையும்.

63. கருட புராணத்தை அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, கிரகணம், சிராத்தம் போன்ற முக்கிய தினங்களில் படிப்பது காரியத் தடைகளை அகற்றி ஜெயம் அளிக்கும்.

64. பொதுவாக வானத்தில் பறக்கும் சாதாரண கருடனும், தெய்வீகத் தன்மை வாய்ந்ததுதான். காரணம் அதுவும் கருடனின் பரம்பரை வாரிசு.

65. கருடனின் நிறம், பழுப்பு, கழுத்து வெள்ளை, இந்த வகை கருடன் மணிக்கு 105 கி.மீ. வரை பறப்பதாக பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

66. வைணவர்கள் பழுப்புநிற கருடப்பறவையைத்தான் கருட தரிசனத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். வீர வைணவர்கள் கருட தரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டார்கள்.

67. வானத்தில் கருடனைப் பார்ப்பதும் அதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனமாகும். அதிகாலையில் நமக்குக் கருட ‘ தரிசனம் கிடைத்தால் நினைத்த காரியம் கை கூடும்.

68. அமெரிக்க நாட்டுச் சின்னம் கருடன். இதனால்தான் அந்நாடு செழிப்புடன் விளங்குகிறது. அவர்கள் கருடனை கோல்டன் பறவை (தங்கப் பறவை) என்றும் அதிர்ஷ்ட பறவை என்றும் கூறுகிறார்கள்.

69. கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எவ்வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.

70-ரத்தின பரீட்சை என்னும் நூல் மரகதப் பச்சை கல்லுக்கு ‘காருடமணி’ என்றும், ‘கருடோத்காரம்’ என்றும் பெயர்கள் உண்டு.

71-கருடனுக்கு கோபம் வந்தால் சிறகுகள் உதறிப் பறக்கும்.

72-வீட்டில் கருடன் படம், பொம்மைகள் வைப்பதால் வாஸ்து குறைகள் நீங்கும்.

73. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். “காருட தர்சனம் புண்யம், ததோபித்வனிருச்யமாதோ” என்று சமஸ்கிருதத்தில் இதைச் சொல்வார்கள்.

74-கருடனின் குரல் சாமவேத த்வனி ஆகும். பறவை இனங்களின் ராஜாவாக இவர் கருதப்படுவதால் இவருக்கு பட்சி ராஜன் என்றும் பெயர்.

75. கருட் என்றால் சிறகு எனப்பொருள். இதிலிருந்து கருடன் என்ற பதம் வந்துள்ளது.

76-தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு.

77-ஸ்ரீவைகுண்டத்தில் திருமாலுக்கு எப்பொழுதும் தொண்டு செய்து கொண்டிருப்பவர்கள் நித்ய ஸூரிகள் எனப்படுவர்.-அதில் முக்கியமானவர் கருடன். இவர் திருமாலுக்கு வாகனமாக இருந்து தொண்டு செய்து வருகிறார்.

78. கருடன் பெரிய திருவடி என்றும், ஆஞ்சநேயர் சிறிய திருவடி எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறார்கள்.

79. வைணவ ஆலயங்களில் நான்கு மதில் சுவர்களின் மூலையிலும் கருடனின் உருவம் இருக்கும்.

80-கருடனை உபாசித்து வைணவ சமய ஆச்சார்யரான சுவாமி தேசிகன் கருடனால் ஹயக்ரீவர் மந்திரம் உபதேசிக்கப் பெற்று சிறந்த பக்திமானாக விளங்கினார். இவர் கருடன் மீது கருடதண்டகம், கருட பஞ்சாசத் என்ற சுலோகங்களை இயற்றியுள்ளார்.

81. கழுத்து வெள்ளை பஞ்சமுக ஆஞ்சநேயரின் பின்புறம் (மேற்கு) கருடமுகமாக அமைந்துள்ளது.

82-பவுத்தர்கள் கருடனை உராசனா, பன்னகாசனா, நாகத்தகா, ராஜநிர்ஹனா என்ற பெயர்களிலும், ஜைனர்கள் சுபர்ணா என்ற பெயரிலும் வழிபடுகின்றனர்.

83. பெண் கருட பறவையை எளிதாக வசப்படுத்த முடியாது. ஆண் பறவை வானத்தில் வட்டமிட்டு தன்னுடைய பலத்தை நிரூபித்தால் மட்டுமே பெண் பறவை வசப்படும்.

84. கருடன் கற்பு நெறியில் நிற்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இணை சேர்ந்து முட்டையிடும்.

85-அதர்வண வேதத்தில் முப்பத்திரண்டு வித்தைகளில் கருடனுக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துறவிகளின் முக்கிய தேவதை கருடனே.

86. மணவாள மாமுனிகள் வேங்கடவனைத் தரிசிப்பதற்கு முன்பாக முதலில் ராமானுஜரை சேவித்து பிறகு கருட பகவானை வணங்கி விட்டு, பின்னர் ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம்.

87. கருட பகவான் வைகுண்டத்திலிருந்து திருப்பதிக்கு சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை கொண்டு வந்ததாக புராணம் கூறுகிறது.

88. தஞ்சை நகரின் அமைப்பு கருடன் சிறகை விரித்து பறப்பது போன்ற வடிவில் உள்ளது.

89. கருடனின் பார்வை மிகக் கூர்மையானது என்று வேதம் கூறுகிறது.

90. வீட்டிற்குள் பாம்பு தென்பட்டால் கருடனை நினைத்து அபஸர்ப்ப ஸர்ப பத்ரம்தே தூரம் கச்சமஹாயசா! ஜனமே ஜயஸ்ய யக்ஞாந்தேஹ்யாஸ்தீக வசனம் ஸ்மரண்!! என்று கூறி கையைத் தட்டினால் அங்கிருந்து பாம்பு சென்று விடும்.

91. பெருமாள் கோவில்களில் கருடனிடம் அனுமதி பெற்ற பின்பே பெருமாளை தரிசிக்க வேண்டும்.

92. கருடன் பெரிய திருவடி என்று அழைக்கப்படுகிறார்

93. கருடனுக்கு வைனதேயன் என்று ஒரு பெயரும் உள்ளது.

94. திருவரங்கத்தில் கருடனுக்கு பெரிய சன்னிதி உள்ளது.

95. கருடனை பக்ஷிகளுக்கு ஒரு ராஜா என்று வேதம் கூறுகிறது.-குங்குமோங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச விஷ்ணுவாஹன நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நமஹ)

96. பெருமாள் திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்த பின்பு நமது தலையில் சுவாமியின் திருவடி பதித்த சடாரி வைப்பார்கள். சடாரி வைத்த பின்பு, கருடனுக்கு பின்பு உள்ள கொடிமரத்தின் கீழே விழுந்து சுவாமிக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது.

97. கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் என்னும் பாம்பின் மீது கிருஷ்ணன் ஆடிய நர்த்தனம்,-காளிங்க நர்த்தனம் எனப்படும் கிருஷ்ணர் காளிங்க நர்த்தனம் ஆடிய போது அவரது பாதங்கள் காளிங்கனின் தலையில் பதிந்திருந்ததால் கருடனால் எந்த ஒரு தீங்கும் ஏற்படவில்லை.

98. கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன் என்னும் விக்ரஹம் சிறப்பு வாய்ந்தது.

99. கருட புராணம் என்னும் புஸ்தகத்தில் மனிதர்கள் செய்யும் பாவத்திற்கு அவர்கள் இறந்த பின் அனுபவிக்கும் கஷ்டங்களை பற்றி விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

100-பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.

பக்ஷி ராஜாயதே நமஹ-

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading