ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
இப்பாசுரம் தொடர்ந்து ஸ்ரீ அப்பிள்ளை உரை கோசங்கள் கிடைக்க வில்லை
தலைமகள் பாசுரமாவது தோழி பாசுரமாவது கொள்ளலாம்
ஸம்ஸ்லேஷம் போதும் விஸ்லேஷம் வரும் என்று பயந்து கவலை-விஸ்லேஷித்தாலும் துன்பம்
இரவு பல வேஷங்கள்-ராவணன் சிசுபாலன் கொண்டு நலிகின்றனவே –சூழல் கிருத்ரமத்துடன் நலிகின்றவே வாழி -எதிர்மறை லக்ஷணம் –
சில காலம் சம்ச்லேஷித்த தலை மகன் பிரிந்தான் .. பிரிந்து முற்றினது என்னவாம் ..பிரிந்து பிரதம தசை என்னவுமாம் .. தோழி வார்த்தை என்னவுமாம் ..தலை மகள் வார்த்தை என்னவுமாம்–
அநேக காலம் கலந்து அல்ப காலம் பிரிந்தால் அல்ப காலமும் அநேக காலம் ஆகிற படி–
நாயகனோடு கூடி இருந்து பிறகு விதி வசத்தால் பிரிந்த நாயகி –அப்பிரிவை ஆற்ற மாட்டாதாளாய்
இராப்பொழுதைக் கடக்க மாட்டாமையைத் தோழிக்கு உரைக்கிறாள் நித்ய சம்ஸ்லேஷ அபி நிவேசத்தை வெளியிட்ட படி-
அன்றிக்கே கலந்த ஸம்ஸ்லேஷத்தின் தன்மையைத் தோழி வினவ பிரிந்த போது காலம் நெடுக்குவது போல் கூடிய பொது காலம் குறுகின படி என்னே என்று கலவியின் சிறப்பைச் சொன்னபடி –
நீங்கில் ஊழியாயிடும் -கூட்டில் நாழிகை கூறாயிடும் -என்று மாறிச் சென்று அந்வயிப்பதால் எதிர் நிரல் நிறைப் பொருள் கோள் மொழி மாற்று நிரல் நிறை மயக்க நிரல் நிறை –என்பதுவும் இதுவே –
இப்படி ஆழ்வாருடைய வை லக்ஷண்யம் கண்டு ஸம்ஸ்லிஷ்டரான பாகவதருடைய ஸம்ஸ்லேஷ தசையிலும் விஸ்லேஷ தசையிலும் காலத்தினுடைய அத்யல்பத்வாதி மஹத்வங்கள் அடியாகத் தம்முடைய ஸைதில்யத்தைத் தம்முடைய ஸூஹ் ருத்துக்களுக்கு அருளிச் செய்த பாசுரத்தை
தலைவி தன் பாங்கியருடன் வியந்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை
கலந்து பிரிந்த தலைமகன் வரவு தாழ்க்க பிரிவாற்றாத தலை மகள் அவனை ஒழியத் தனக்கு காலம் சென்றிட அரிதாகிற படியைத் தோழியைப் பார்த்து சொல்லுகிறாள் ஆதல்-அன்றிக்கே ஸம்ஸ்லேஷ அநந்தரத்திலே பாங்கிமாரும் தானுமாய் இருக்கிற இருப்பு உண்டு இறே-அதிலே இராத்ரியிலே போகம் விருத்தமான படி என் என்று கேட்க வ்ருத்தமான படியைச் சொல்லுகைக்கு போகத்துக்குக் காலம் உண்டாயிற்றோ பிரிவில் காலம் நெடுகுமா போலே இறே கூடினால் காலம் குறுகும் படி -என்கிறாள் ஆகவுமாம்–இதிலே இவை இரண்டுமே உண்டு-ஒன்றைப் பிரதானமாக்கி ஒன்றை ஆனு ஷங்கிகமாகக் கொள்ளும் அத்தனை இறே–புணர்ந்து நீங்கின தலைமகனைச் சிறைப்புறத்திலே கண்டு தோழி என்றோரு பேரையிட்டு அவனை ஒழிய தனக்கு உண்டான செல்லாமையை அவன் நெஞ்சிலே படுத்துகிறாளாய் இருக்கிறது-
இத்தால்
ஒரு நாளும் பிரிவின்றிக்கே நித்ய ஸம்ஸ்லேஷம் பண்ணுகையில் தனக்கு கருத்து என்னும்
இடம் தோற்றச் சொல்லுகிறாள் –தேஷாம் சதத யுக்தாநாம் –ததாமி புத்தி யோகம் —எப்போதும் கூடி இருக்க வேணும் என்று விரும்புவனுக்கு என்று கொள்கிறோம் –இப் பாசுரம் தோழி வார்த்தை யாகவுமாம்-இவளைக் காட்டில் இவள் தோழியானவள் அவன் படி அறிந்து இருக்கும் இறே –
அயோத்யா மக்களைக் கூட்டி வந்த பரதாழ்வானுக்கு குகப்பெருமாள் இளைய பெருமாள் சரித்ரத்தைக் கூறினான்-யாரைப்பற்றி யார் இடம் பேசுவது –-ஆச சஷே-கூறினான்-குகோ ககன கோசர-காட்டு வாழ் சாதி-மனசுக்கும் கூட அகோசரமான விஷயத்தை வாயாலே பேசினான்
அத -இதுக்கு முன்னால் முன்பு இவன் கைகேயி பெருமாளுக்கு நல்லான் என்று அறிந்த பின்பு சின்னான்-ஸத் பாவம்-லஷ்மணோ லஷ்மி வர்த்தந-பெருமாள் திருவடிகளில் அதிப்ராவண்யமே இவனுக்கு ஸத் பாவம்-லஷ்மணஸ்ய-கடலைக் கையாலே இறைக்கக் கோலுவாரைப் போல் தலைக்கட்டு-பரதாய குக-யாருக்கு யார் சொல்ல வேண்டும் என்று விவஸ்தையே இல்லையே
ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரோதா-ஸ்ரீ குகப்பெருமாள் வக்தா-அப்ரமேயா பரதா-இளைய பெருமாளை பிரகாரம் அறிந்தேன் என்று பேசத்தொடங்கினான்-இவனது பிரபாவம் புத்திக்கு எட்டாதே-காட்டிலே சுத்தி திரிந்த குகன்-பிரிந்தால் தானே சுகம் என்று சொல்லி பிரிந்த பெருமாள் –
பின்பு குகன் மரத்தில் அடியில் தலையை மடுத்து இருந்தவன் பெருமாளுக்கு நல்லான் என்றவனைக் கண்டவன் எழுந்து பேசுகிறான்-நம்பியும் நாயகனை ஒக்கின்றான்-தவம் வேடம் தலைக் கொண்டான் -பேச முடியாதே-காட்டில் உள்ளவற்றை தனித்தனியே பதார்த்தங்களை அறிநதால் போல் இளைய பெருமாள் குணம், முழுவதும் அறிந்து பேசுகிறான்-அன்றிக்கே-எங்கே பிறந்து வளர்ந்தவன் ஆறு வார்த்தை சொல்கிறான் என்று ரிஷி கொண்டாடுகிறான்-காட்டிலே பிறந்து மரங்களை அறிந்தவன்
இவனோடு ஓக்க பிறந்தவனைப் பற்றி சொல்கிறான்-இன்னார் சொல்ல இன்னார் கேட்க என்னும் நியதி இல்லையே-தேசிகர் சொல்லும் அத்தனை-கணபுரம் கைதொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரோ-மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே அன்றோ
பல பல ஊழி கள் ஆயிடும் அன்றியோர் நாழிகையை
பல பல கூறு இட்ட கூறாயிடும் கண்ணன் விண் அனையாய்
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16-தலைவனைப் பிரிந்த தலைவி தோழியை நோக்கி இருள் வியந்து உரைத்தல் –
பல பல ஊழி கள் ஆயிடும் —
அநேக காலம் கலந்து -அல்ப காலம் பிரிந்தால் -அல்ப காலமும் அநேக காலம் ஆகிற படி –அன்றி –இத்தை ஒழிய –யோர் நாழிகையை-பல பல கூறு இட்ட கூறாயிடும் – ஒரு நாழிகையை அநேக கூறு ஆக்கினால் அதில் ஒரு சிறு கூறாக நின்றது கலந்த காலம் கலக்கைக்கு இடம் இன்றியே உபோத் காதத்துக்கு போந்து இருந்த படி– போகத்துக்கு இன்றி இலே நோவு படுக்கைக்கு வேண்டும் கலவியாய் இருந்த படி-
அன்பர் நீங்கில் பல பல ஊழிகளாயிடும்-ஊரெல்லாம் துஞ்சி-அன்பர் நீங்கில் ஊழியாய் விடும் -கூடில் நாழிகை கூறாயிடும்–க்ஷணம் அணுவத் ஷிப்த பராதி காலயா -ஸ்தோத்ர ரத்னம் -44-பிரமன் ஆயுள் காலம் பரம் -அதில் பாதி பரார்த்தம்-கோழி கூவும் என்னுமால் தோழி நான் செய்கேன் ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்று கோழி கூவும் என்னுமால் -கலியன்-ஆச்சர்யமாக லீலா ரசங்களை அனுபவிக்கத் தொடங்கி விட்டால் பலகோடி நூறு சம்வத்சரங்களும் அவலீலையாகக் கழிந்து போமே
பல பல ஊழி கள் ஆயிடும் —
எண்ணிறந்த அநேக காலம் கலந்து -அல்ப காலம் பிரிந்தால் -அல்ப காலமும் அநேக காலம் ஆகிற படி –அன்றி –இத்தை ஒழிய –யோர் நாழிகையை-பல பல கூறு இட்ட கூறாயிடும் – இதனுடைய பரப்புக்கு எல்லை இல்லாதவோ பாதி ஒரு நாழிகையை அநேக கூறு ஆக்கினால் அதில் ஒரு சிறு கூறாக நின்றது கலந்த காலம் கலக்கைக்கு இடம் இன்றியே உபோத் காதத்துக்கு போந்து இருந்த படி– போகத்துக்கு இன்றி இலே நோவு படுக்கைக்கு வேண்டும் கலவியாய் இருந்த படி
பல அவாந்தர கல்பத்தை யுடைத்தான பல மஹா கல்பமாகா நிற்கும்-அந்தக் கல்பம் தான் தன் அவயவ ஏக தேசமான ஒரு நாழிகையைப் பல பலவாக கலா ரூபத்தாலும்ம காஷ்டா ரூபத்தாலுமாகக் கூறிட்ட கூற்றிலே ஏக தேசமாகா நிற்கும்-கண்ணன் விண் அனையாய்-கலா முஹுர்த்தாதி மயச்ச காலோ ந யத் விபூதே பரிணாம ஹேது என்னும்படி அகால கால்யமான கிருஷ்ணனுடைய பரமபதம் போலே நித்ய அபிமதை யானவளே
கண்ணன் விண் அனையாய்-தலை மகள் வார்த்தை ஆன போது பரம பதத்தில் இருப்பார்க்கு சம்சார வெக்காயம் தட்டாதால் போல இவ் வவசசாதத்தோடே கூடி இருக்க செய்தேயும் சத்தை கிடக்கிறது உன் சந்நிதி ஆகை அன்றோ -தோழி வார்த்தை ஆன போது பரம பதத்தில் உள்ளார்க்கு புனர் ஆவர்த்தி இல்லாதா போல , உன்னோடு கலந்தார்க்கு உன்னை பிரிகை உண்டோ ?..பிரியில் தாங்கள் உளார் ஆகை என்று ஓன்று உண்டோ ?-நீ நித்ய விபூதி போல் அன்றோ அழிய விடமாட்டான்-முக்தருக்கு லீலா விபூதி ததீயதத் ஆகாரத்தால் த்யாஜ்யமாக இருக்காது-கர்ம நிபந்தமான ஸ்ம்ருதி இல்லாமல் ததீயத்வ ஆகாரம்-தாதர்த்தம் -அவன் பிரயோஜனத்துக்காகவே அறிந்து சேஷத்வத்திலேயே அந்வயித்ததே–சம ஸுகம் துக்கம் உண்டே தோழிக்கும் சுக்ரீவர் மஹாராஜர் பெருமாள் இடம் கண்டோமே
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்-
கால தத்வம் உள்ளத்து அத்தனையும் கலக்கிலும் ,அல்ப காலம் பிரியிலும் ,-நாம் ஒரு படி இட்டு இருக்க மாட்டோம் —தன் வார்த்தை –கலக்கிற போது வாய் புகு நீரும் அரு நிலையாய் (கால் பாவாது அகாத ஸ்தலம் )ஆறி இருக்க மாட்டாது மெலிகையும் , பிரிந்தால் பிரிந்து ஆற்றாமையால்-மெலிகையும்-தோழி வார்த்தை- ,நாயகிக்கு நாயகன் உடைய சம்ஸ்லேஷ அந்தத்திலே ,விஸ்லேஷம் ஆய் இருக்கும்-அத்தாலே சம்ஸ்லேஷத்தொடு விஸ்லேஷமும் வாசி அற மெலிகிற படி –-குழி அறியாது இருக்கைக்கு தம்மை போலே அல்லாமே யாம் -சம்போகத்துக்குக் காலமே இல்லையே-நீங்கிலும்-நீங்க மாட்டான்
அப்படியே நீக்கினாலும் ஸம்ஸ்லேஷ வர்த்தகத்துக்காக பிரிந்தான் அன்றோ–இரண்டு திறத்தாரும் அங்கனே படுக்கைக்கு அடி- அன்பர் பிரிகையாலே –
பல பல நாள் அன்பர் கூடிலும் காலம் அத்யல்பமாகையாலே யாம் மெலியா நின்றோம்
பல பல நாள் அன்பர் நீங்கிலும் நாடோறும் காலம் அதி மஹத்தாகையாலே யாம் மெலியா நின்றோம்-ஆகையால்-இப்பாய் இருளே பல பல சூழல் உடைத்து-இந்தப் பாய்ந்த இருள் சிறுமைக்கும் பெருமைக்கும் பல விரல் யுடைத்தாய் இரா நின்றது
பல பல சூழல் உடைத்து-
விசித்திர சக்தன் அவன் என்று இருந்தோம்-காலத்துக்கு இப்படியா–நந்த கோபாலன் கடை தலைக்கே நள் இருள் கண் –நாச்சியார் திருமொழி 12-3-என்னுமா போலே, கலவிக்கு முன்னிலையாய் ,-விஸ்லேஷத்தில் வந்தால் –சுருங்கா இருளின் கரும் திணும்பை–திரு விருத்தம்-72-என்று-அஞ்ச வேண்டும் படி பாதகமாய் இருக்கும்-அம்ம .-அம்மே என்ற படி-வாழி–தன் வார்த்தை யான போதைக்கு — வழி பறிப்பாரை-உடன் பிறந்தீர் ! நூறு பிராயம் புகுவீர் ! என்னுமா போலே —தோழி வார்த்தை யான போது — இவ் அவசாதம் நீங்கிடுக—நீயும் வாழ்ந்து இவளையும் வாழ வைக்க மாட்டாயோ-ஆயுஷ்மன் -ஜடாயு என்றால் போல் இந்த இருளும் அனுகூலமாக இருக்க வேண்டும் என்றவாறு-இப்பாய் இருளே – பரந்த இருளே முன்னிலை யாக –கடல் கண்ணால் பார்த்தாலும் பரிச்சேதிக்க ஒண்ணாதது போல் இந்த இருளும்
இராப் பொழுதின் சாமர்த்தியம் என்ன-கலவியில் குறுகக் கற்றது-பிரிவில் நெடுகக் கற்றதே—சூழல் –
சூழ்ச்சி விரகு-நிந்திக்க வேண்டும் இடத்தில் வாழி -விபரீத லக்ஷணை –காலத்தின் தன்மையை வியந்து நொந்த படி—பாகவதரைக் கூடிய பொழுது காலம் குறுக-பிரிந்த பொழுது காலம் நெடுக தாம் படுகிற தளர்ச்சியை ஆழ்வார் அருகில் உள்ள பாகவதர்களுக்குச் சொன்னபடி—இப்பாய் இருளே-மோஹ அந்தகாரம்-கண்ணன் விண் அனையாய்-கால பரிமாணம் அல்லாத பரம பதம் போலே–உள்ள நீங்கள் என்று கொண்டாடின படி–அம்ம வாழி என்றது-தான் நினைத்த வடிவு கொள்ள வல்ல காலத்தின் தன்மையை வியந்து நொந்த படி-
அம்ம வாழி
அம்ம -இது ஒரு வாழ்வு இருந்தபடியே என்று ஆச்சர்யப்படுகிறாள்–அம்மே என்ற படி–ஒரு சொல்லாக்கிச் சொல்லலாம்–அன்றிக்கே–அம்ம-ஹிம்சிக்க பதார்த்தம் போல் வெறுத்து பேசுகிறாள்–இத்தால்-இப்பாய் இருள் என்று மோஹ அந்தகார ஜனகமான இக்காலமானது என்றபடி–
பல பல இத்யாதி
இங்கும் ஸம்ஸ்லேஷ விஸ்லேஷ தசைகளில் கால அத்யல்ப அதி மஹத்வங்களைச் சொல்லுகிறது–விண் அனையாய் -என்று-க்ஷண அணுவத் ஷிப்த பராதி காலயா -ஸ்தோத்ர ரத்னம் — அனுபவ தசையில் காலம் அத்யல்ப மாம்படியை ஸூ சிப்பிக்கிறது-
அபூர்வ நாநா ரஸ பாவ நிர்பர
ப்ரபுத்தயா முக்த விதக்த லீலயா |
க்ஷணாணுவத் க்ஷிப்தபராதி காலயா
ப்ரஹர்ஷயந்தம் மஹிஷீம் மஹாபுஜம் ||-44-தன்னுடைய அழகான மற்றும் சிறந்ததான லீலைகளால் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன் எம்பெருமான்; இப்படிப்பட்ட லீலைகளால் பிராட்டிக்கு ப்ரஹ்மாவின் ஆயுட்காலமும் ஒரு நொடிப்பொழுதில் செல்லும்படி ஒவ்வொரு க்ஷணமும் புதியதாக ரசிக்கும்படியாக இருக்கும்; பிராட்டியைத் தழுவுதற்கு ஏற்ற பெரிய திருக்கைகளை உடையவன்.
கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்-என்கையாலே-இக்காலத்தினுடைய உபய வித பரிணாமம் ஸைதில்யாவஹம் என்றபடி–அம்ம வாழி -என்று தான் நினைத்த வடிவைக் கொள்ளவற்றே என்று ஆச்சரியப்பட்டார் ஆயிற்று –
இத்தால்
ஆழ்வாருக்கு சம்சாரத்தில் இருப்பு பொருந்தாது இருக்கிற படி—காலக்ருத பரிணாமாதிகள்
வியதிரிக்தருக்கு அர்த்த காமங்களுக்கு உறுப்பாகும் ஆழ்வாருக்கு எப்போதுமே பகவத் தசையில் ஆழ்வதற்கே உறுப்பாகும் பக்தியின் சிறப்பு–தோழி வார்த்தையான போது-ஈஸ்வரன் பாகவத உத்தமர்களை விட்டுப் பிரிய மாட்டாரே எதனால் தவிக்கிறாய் என்றபடி–
ஆசையாக சுமந்திரன் நின்றானே இரண்டு நாள் நின்றாலும் பலப்பல நாள் அங்கேயே இருந்தான் என்று ஸ்லோகம்-ஐயருக்கு போர பழைய நாள் போந்தீர் ஆய்ச்சிமாரையும் அயோத்யா மக்களையும் ரக்ஷித்து போம் என்று விடை கொடுக்க நின்றான் திவசம் பஹுன் -காலம் நெடுங்கிய படி-அதே போல் இங்கும் குகப்பெருமாள் உடன் தானே நிற்கிறான் -ஆனால் காலம் நெடுக வேண்டுவான் என் பகவத் ஸம்ஸ்லேஷம் இல்லாத பாகவத ஸம்ஸ்லேஷம் மட்டுமே போதாதே–நினைவு படுத்த கூட இவர் இருக்க ஆற்றாமை தானே விஞ்சும் -பிரிவாற்றாமையால் தானே அவனும் –ஸ்ம்ருதிக்கு உத்போதகர் அவன் தானே–
ஸ்ரீ குஹப்பெருமாளோடே நின்றானாகில் இவனுக்கு காலம் நெடுகுவான் என் என்று பிள்ளை கேட்டருள ஸம்ருத்திக்கு உத்போதகர் உண்டானால் காலம் நெடுகும் அத்தனை இறே என்று ஜீயர் அருளிச் செய்தார்—ஆசயா யதி மாம் ராம புந சப்தா பயேதிதி -அயோத்யா -59-3–ஸூமந்த்ரா நீ போ என்றாகிலும் ஒரு வார்த்தை சொல்லுவாரோ என்றாகிலும் நின்றான் அன்றோ –
ஸ்ரீ பெரிய பரகாலன் ஸ்வாமி வியாக்யானம்--கீழ்ப்பட்ட காலம் எல்லாம் உன்னைப் பிரியாது இருந்தவன் இப்போது அத்யல்ப காலம் உன்னைப் பிரியவே-உன் முன்னே வந்து நிற்கப் பெற்றவனை இங்கனே சொல்லி விடவோ என்று சொன்ன உயிர்த் தோழியை கண்ணனுக்கு விண் போலே அதி ப்ரியை யானவளே என்று ஸம்போதித்து-கேளடீ பல பல நாள் அன்பர் கூடிலும் ஒரு நாழிகையை ஆயிரமாக விபஜித்தால் அதில் ஒரு பாகமாய்ப் போமடீ–அங்கன் அன்றியே-நீங்கிலும் பிரியிலும் பிரிந்த ஒரு க்ஷணமும் பல பல கல்பமாய் விடும் காண்-இது அன்புடையார் ஸ்வ பாவம் இருக்கும் படி-நாங்கள் பிரிந்த காலம் அதி மஹத்தாகையாலே மெலியா நின்றோம்-இப்படிப் பிறந்த இருள் என்னைச் சூழ்கைக்கு பல விரகு யுடைத்தாய் இருந்தது-அம்ம-சிறு பெண்ணே=என்னோடே நீயும் அவசன்னை யாகா நின்றாய்–உன் அவஸாதம்-வாழி-நீங்கி நன்றாய் இருக்க வேணும் என்கிறாள்–அவன் கீழ் களிறு வினவி நின்றதுவும் என்னைப் பிரிந்து இருக்க மாட்டாமையால் இறே-அத்தால் அவனைத் தன் போல்வனாக்கிக் கூட்டிக் கொண்டு-யாம் –என்கிறது –
தாத்பர்யம்–இப்பாசுரத்தில் ஆழ்வார்-பாகவத விஸ்லேஷத்தில் தமக்கு பிறந்த வேறுபாட்டை
நெடும்காலம் பிரிந்த தலைவன் ஒரு இரவில் வந்து கலந்து அதே இரவில் –பிரிந்த நாயகியின் வார்த்தையாக அருளிச் செய்கிறார்
ஓ தோழி இக்காலத்தின் கொடுமையைப் பார்-பிரிந்த காலத்தில் ஒரு துளி யாயே இருந்தாலும் அநேக கல்பமாய் நெருக்கி என்னைப் பாதியா நின்றது தெய்வ சங்கல்பத்தால் வந்து கூடினால் இப்போதாகிலும் எனது மநோ ரதப்படி சந்தோஷமாக இருக்க முடியாத படியே உள்ளதே
இப்படி இரவி குறுகியும் நெடுகியும் காலம் கோலோச்சும் சம்சாரம் படுத்தும் பாடு பொறுக்க அரிதாய் உள்ளதே நான் இப்படி சர்வ காலத்திலும் பாதிக்கப்பட்டே இருந்தேன் அந்த இரவே வாழட்டும்
3-7-பயிலும் சுடர் ஒளி -பிரவேசம் –
அர்ச்சாவதாரத்தின் எளிமையை அருளிச்செய்யச் செய்தேயும், நெஞ்சில் நெகிழ்ச்சியின்றியே உலகப்பொருள்களில்
ஈடுபட்டவர்களாய் இருக்கிற சமுசாரிகள் தன்மையை அநுசந்தித்தார்;
‘தேர் கடவிய பெருமான் கனைகழல் காண்பது என்று கொல் கண்கள்?’ என்ற இவர்க்கு, நிழலும் அடிதாறுமாய்-பாத ரேகை – இருக்கின்ற
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் காட்டிக்கொடுக்க, உபதேசம் இல்லாமலே பகவத் விஷயம் என்றால் நெஞ்சு பள்ளமடையாய் இருக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டார்;–சாயையும் ரேகையும் -எம்பெருமானாருக்கு –எம்பார் – முதலியாண்டான் போல –
அடிதாறு – பாத ரேகை; பாதுகையுமாம்.‘அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான் நிழலும் அடிதாறும் ஆனோம்.’
அவர்கள் பக்கலிலே திருவுள்ளம் சென்று, ‘இவர்களும் சிலரே!’ என்று அவர்களைக் கொண்டாடி,
’நான் சர்வேசுவரனுக்கு அடிமை அன்று; ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை; அதுதன்னிலும் நேர் கொடு நேர் இவர்களுக்கு
அடிமையாக வேண்டுமோ? இவர்களோடு சம்பந்தி சம்பந்திகள் அமையாதோ?’ என்று இங்ஙனே பாகவதர்களுக்கு அடிமைப்படும்
அடிமை உத்தேஸ்யமாய் அவர்களை ஆதரிக்கிறார் இத்திருவாய்மொழியில்.
சேஷித்வ எல்லையில் அவன் இருக்க -சேஷத்வ எல்லையில் இருக்க ஆசைபடுகிறார் -நமஸ் சப்த ஆந்தரார்த்தம் –
‘நன்று; ‘எம்மா வீட்டின்’ என்ற திருவாய்மொழியில் ‘தனக்கேயாக எனைக்கொள்ளும் இஃதே’ என்று பேற்றினை அறுதியிட்டார்;
இங்கே, ‘பாகவதர்களுக்கு அடிமைப்படும் அடிமை உத்தேஸ்யம்,’ என்கிறார்; பேறு இரண்டாய் இருக்கிறதோ பின்னை?’ என்னில்
, அன்று; ‘தனக்கேயாக எனைக் கொள்ளும் இஃதே.’ என்கிற அதன் உட்பொருளாய் இருக்கிறது இதுவும். ‘யாங்ஙனம்?’ எனின்,
பகவானுக்கு அடிமைப்படும் அடிமையின் எல்லையாகிறது, பாகவதர்களுக்கு அடிமைப்படும் அடிமை அளவும் வருகையே அன்றோ?
நாம் அறிய வேண்டிய அர்த்தங்களில் திருமந்திரத்திற் சொல்லாதது ஒன்று இல்லையே? அதனை அறியும் திருமங்கையாழ்வாரும்,
‘நின் திரு எட்டெழுத்தும் கற்று நான்…உற்றதும் உன்னடியார்க்கு அடிமை,’ என்று இதனை அதற்கு அர்த்தமாக அருளிச்செய்தார்.
‘திருமந்திரத்தில் பகவானுக்கு அடிமைப்படும் அடிமை ஒழியப் பாகவதர்களுக்கு அடிமைப்படும் அடிமை சொல்லும்படி என்?’ எனின்,
திருமந்திரத்திற்கு அர்த்தம், இவனுடைய அநந்யார்ஹ சேஷத்துவம் சொல்லுகை. அநந்யார்ஹ சேஷத்துவமாவது,
ததீயர்க்குக் கிரய விக்கிரயங்கட்குத் தகுதியாம்படியாகை. ‘அந்தப் பகவானுடைய பத்தியில் ஈடுபட்ட மனத்தையுடைய
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குக் கிரய விக்கிரயங்களுக்குத் தகுந்தவராய்’ என்றும், ‘எந்தம்மை விற்கவும் பெறுவார்களே’
என்றும் வருகின்ற பிரமாணங்களைக் காண்க.
சம்சாரிணாம்-ஸ்வா பாவ அனுசந்தேன-துன்பம் -நானோ ஸ்வா தந்த்ரன் -தன் சரண் தந்திலன் -தச்யாப் அலாப்யாத் —
உபய வித துக்கம் போக -ஸ்ரீ வைஷ்ணவர் காட்டிக் கொடுக்க – -பாத ரேகைகளும் சாயையும் –
க்ரய விக்ரய அர்ஹம் -விற்கவும் வாங்கவும் -கேசவா -கிளர் சோதியாய் -என்று திரு நாமம் சொல்வார் -எம் தம்மை விற்கவும் பெறுவார் -பெரியாழ்வார்
மேலும், தந்தைக்கு ஒரு தேசம் உரியதாமானால், அது புத்திரனுக்கும் கிரய விக்கிரயங்கட்குத் தகுதியாக இருக்கும்;
அப்படி இராத அன்று, தந்தையினுடைய செல்வத்திற்குக் கொத்தையாம். மேலும், ‘சமுசாரமாகிற விஷமரத்துக்கு
அமிருதத்திற்குச் சமானமான இரண்டு பழங்கள் உண்டு; அவை ஒரே காலத்தில் கிருஷ்ணனிடத்தில் பத்தியும் அவன்
அடியார்களிடத்திலேயே எப்பொழுதும் கூடியிருத்தலுமாம்,’ என்னும் பொருளையுடைய சுலோகத்தில்
‘தத்பக்தைர்வா ஸமாகம: பத்தர்களிடத்திலேயே கூடியிருத்தல் ‘என்கிற இடத்தில் ‘வா’ என்றதனை தேற்றேகாரத்திலே ஆக்கி,
‘உத்தேஸ்யந்தானே இங்கே சித்திக்குங்காண்’ என்று எம்பெருமானார் அருளிச்செய்வர். பெறத்தக்க பேற்றிக்கு முதல் எல்லை
பகவானுக்கு அடிமை என்ற அளவிலே நிற்றல்; முடிவின் எல்லை, பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமை அளவும் வருகை.
அவன் நிரந்குச ஸ்வ தந்த்ரன் -பட்டத்துக்கு உரிய அரசும் யானையும் -செய்வதை கேட்க முடியாதே –
பாகவதர்கள் தானே பார தந்த்ர்யமே வடிவு கொண்டவர்கள் –
-பயிலும் சுடர் ஒளி -சேஷத்வம் சரண்யத்வம்-இரண்டையும் சொல்லி -பிரதம மத்யம பதார்த்தம் சொல்லி –
பிரணவம் -நமஸ் அர்த்தங்கள் சொல்லி -நெடுமாற்கு அடிமை -திருதிய -புருஷார்த்தம் -நாராயணாயார்த்தம் -சொல்லி அருளுகிறார் –
கச்சதா – போகின்ற. இதற்கு எம்பெருமானார், பயிலுஞ்சுடரொளி’ என்ற திருவாய்மொழியிலும்
‘நெடுமாற்கடிமை’ என்ற திருவாய்மொழியிலும் சொல்லுகின்ற அர்த்தத்தை ஸ்ரீ சத்ருக்னாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்’ என்று அருளிச்செய்வர்.
கண்ணி நுண் சிறுத் தாம்பு -இந்த ஸ்லோகம் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் பார்த்தோம் -இங்கு நம்பிள்ளை அருளிச் செய்கிறார் –
இவ்வர்த்தத்துக்கு அடி திருமந்திரம் ஆயிற்றே; அது மூலமாக அநுஷ்டிக்கவே, இத் திருவாய்மொழியிற் சொன்னதைச் செய்தது ஆம்
ஆசாரத்தை முக்கியமாகக் கொண்ட அவதாரமாய், அதில் பெருமாள் ‘பிதா சொல்லிற்றுப் புத்திரன் செய்யக்கடவன்,’-
என்கிற மரியாதை குலையாதே அதனை நிலைநிறுத்துகைக்காகப் பித்ருவசன பரிபாலனம் முதலான சாமாந்ய தருமத்தை அநுஷ்டித்தார்
’இதுதான் செய்யத்தக்க விஷயத்தில் செய்யக்கடவது’ என்னுமிடத்தை அநுஷ்டித்துக் காட்டினார் இளையபெருமாள்;
‘அது செய்யுமிடத்தில் அவன் உகந்த அடிமை செய்யக்கடவது,’ என்னுமிடத்தை ஸ்ரீ பரதாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்;
‘அதுதான் பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமையை முடிவாகக் கொண்டு இருக்கும்,’ என்னுமிடத்தை ஸ்ரீ சத்ருக் நாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்.
பெருமாள், ‘பிதா சொல்லிற்றுச் செய்யக் கடவது’ என்னுமிடத்தை அநுஷ்டித்தார்; அதுதன்னிலும் நேரே பிதாவைப் பின்பற்றக் கடவன்
என்னுமிடத்தை இளையபெருமாள் அநுஷ்டித்தார்; அதுதன்னிலும் ‘குருஷ்வ – செய்’ என்று நிர்ப்பந்திக்கக் கடவர்அல்லர்;
‘இராச்சியத்திலே இரும்’ என்னில், அது இன்னாதாகிலும் அதிலிருந்து அடிமை செய்யக்கடவன் என்னுமிடத்தை
அநுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான்; அதன் எல்லையை அநுஷ்டித்தான் ஸ்ரீ சத்ருக்நாழ்வான்.
பல்லவிதம் -பகவத் கைங்கர்யம் -புஷ்பிதம் -பாகவத கைங்கர்யம் -பலிதம் -ஆச்சார்ய கைங்கர்யம் –
அவன் படி சொல்லுகிறது ‘கச்சதா’ என்னும் சுலோகம்.
‘மாதுல குலம் கச்சதா பரதேந நீத: –
அம்மான் வீட்டிற்குச் செல்லுகிற பரதனாலே அழைத்துச் செல்லப்பட்டான்’ – மாமன் வீடு உத்தேஸ்யமாகப் போனான் அவன்;
அவன் தான் உத்தேஸ்யமாகப் போனான் இவன். ‘இவனும் மாமன் வீடு உத்தேஸ்யமாகப் போனான் என்ன ஒண்ணாதோ?’ எனின்,
யுதாஜித்து அழைத்தது ஸ்ரீபரதாழ்வானை அன்றோ? ‘கச்சதா – போகிற’ என்கிற இந்த நிகழ்காலச் சொல்லால் முன் கணத்திலும் தன்னெஞ்சிலும் இல்லை;
பெருமாளுக்கு விண்ணப்பஞ்செய்தமையும் இல்லை; சக்கரவர்த்தியைக் கேள்வி கொண்டமையும் இல்லை என்கை.
‘பரதேந –
பரதனால்’ – பெருமாளும் போகட்டுப் போக, இளையபெருமாளும் அவரைத் தொடர்ந்து போக, சக்கரவர்த்தியும் இறக்க,
ஸ்ரீ சத்ருக்நாழ்வானும் தன்னையல்லது அறியாதே இருக்க, பெருமாளுடைய இராச்சியத்தைப் பரித்துக்கொண்டிருக்கையாலே ‘பரதன்’ என்கிறது
‘பரத இதி ராஜ்யஸ்ய பரணாத் – பரதன் என்னும் இப்பெயர் ராஜ்யத்தைத் தாங்குகையாலே.’
‘ததா – அப்படியே’ –
தானும் ராஜபுத்திரனாய் நக்ஷத்திரமும் வேறுபட்டிருந்தால், பிரிந்து தனக்குப் பொருந்தும் முகூர்த்தத்திலே செல்லுதலே முறையாம்.
அது செய்யாதே அவன் புறப்பட்டதே தனக்கும் முகூர்த்தமாகப் போனான்.
‘அநக: –
பாபம் அற்றவன்’ – அப்படை வீட்டில் அல்லாதார் எல்லாம் பாபம் கலந்த ஜீவனம் போலேகாணும். என்றது,
இராம பத்தி கலந்திருத்தலைக் குறித்தபடி. ‘ஆயின், இராம பத்தியைப் பாபம் என்னலாமோ?’ எனின்,
‘இருவினைகளில் புண்ணியம் உத்தேஸ்யமாயினும், மோக்ஷ உலகிற்கு விரோதி என்னும் முறையாலே இரு வினையும் விடத்தக்கது
என்னாநின்றதே அன்றோ? இங்கும், உத்தேஸ்ய விரோதியாகையாலே சொல்லலாம்,’ என்பது.
-கிருஷ்ண பக்தி பாபம் – வல்வினையேன் போனேன் குடக் கூத்து ஆடுவதை கான
‘ஆயின், இது உத்தேஸ்ய விரோதியோ?’ என்னில், பேற்றுக்கு முடிவின் எல்லையை நோக்க, முதற்படியில் நிலை விரோதி அன்றோ?
‘சத்ருக்ந:’ –
பிறந்த போதே ‘எதிரிகள் மண்ணுண்ணும்படி வளரும்’ என்று தோற்றியிருக்கையாலே, இப்படித் திருநாமம் சாற்றினான் வசிஷ்டன்.
‘நித்ய சத்ருக்ந:’
புறம்பேயுள்ள பகைவர்களை வெல்லுதல் அன்றியே, உட் பகைவர்களான இந்திரியங்களை வென்றிருப்பவன். என்றது,
‘பும்சாம் திருஷ்டி சித்தா பஹாரிணம் –
ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் கவரக்கூடியவன்’ என்கிற விஷயத்தில் கண் வையாமையைத் தெரிவித்தபடி.
அங்கும் ‘இவனுக்கு இனிது’ என்று இவ்வழியாலே புகுவானித்தனை.
‘‘அநக:’ என்பதற்கும், ‘நித்யசத்ருக்ந:’ என்பதற்கும் வேறுபாடு என்?’ என்னில்,
அநக: என்னும் இதனால், பரிசுத் தத்தில் ஸ்ரீ பரதாழ்வானை ஒவ்வார் பெருமாள் என்கிறது;
‘நித்ய சத்ருக்ந:’ என்னுமிதனால், இனிமையில் ஸ்ரீ பரதாழ்வானை ஒவ்வார் பெருமாள் என்கிறது.
‘நீத: – அழைத்துச் செல்லப்பட்டான்’ – ஒரு குற்றுடைவாள், நிழல் உள்ளிட்டவையைப் போன்று போனான். என்றது
‘ஒருவனோடு மற்றொருவன் சேர்ந்து செல்லுகின்ற காலத்துச் செல்லுதலாகிய அத்தொழில் செல்லுகின்ற இருவர் இடத்திலும் இருக்குமே?
தான் வேறு ஒருவனாக இருந்தும், ஜாதி குணங்களைப் போன்று பரதந்திரனாய்ப் போனான்,’ என்றபடி.
‘பிரீதி புரஸ்க்ருத: – தமையன் பின்னே தம்பி போகக் கடவன்’ என்னும் முறையாலே தேவை போன்று இருக்குமோ?’ என்னில், அங்ஙன் அன்று;
‘படைவீட்டிலே இருந்தால் ஒருவன் சோற்றைப் பகுந்து உண்ணுமாறு போன்று படை வீடாகப் பெருமாளுக்கு அடிமை செய்வார்கள்;
ஏகாந்தமான இடத்தில் நாம் எல்லா அடிமைகளையும் செய்யலாம்,’ என்று, ‘அஹம் சர்வம் கரிஷ்யாமி –
நான் எல்லா அடிமைகளையும் செய்வேன்’ என்று இளைய பெருமாள் காடேறப் போயினமை போன்று,
இவனும் ‘நாம் எல்லா அடிமைகளையும் செய்யலாம்’ என்கிற பிரீதி பிடரி தள்ளத் தள்ளப் போனான்.
எம்பெருமானார் இச்சுலோகத்துக்கு வாக்கியார்த்தமாக, ‘ஸ்ரீசத்ருக்நாழ்வான் பெருமாளுக்கு நல்லனானபடி,
பெருமாளைக் காற்கடை கொண்டு, பெருமாளுக்கு நல்லனான ஸ்ரீ பரதாழ்வானையல்லது அறியாதபடியானான்’ என்று அருளிச்செய்தார்.
இது காரணமான பின்பு, சொன்ன மிகை எல்லாம் பொறுக்கும் அன்றோ? அல்லது, ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதன்
உத்தேஸ்யன் ஆகையாவது, ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாம் அன்றோ?
‘அநந்யா – இறைவனைத் தவிர வேறொன்றனையும் விரும்பாத’ என்கிற நிலை இவர்களுக்கு உண்டானால்
இவர்களைப் பின்பற்றுகிறது அவனைப் பற்றியதாம் அன்றோ?
அமிர்தம் ஒத்த பாயாசம் கொடுத்து பிறந்த சத்ருக்னன் அன்றோ -பெருமாள் கைங்கர்யத்துக்கு இளைய பெருமாளும்
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு ஸ்ரீ சத்ருகன ஆழ்வான்
இதுதான் செய்யத்தக்க விஷயத்தில் செய்யக்கடவது’ என்னும் இவ்விடத்தில்,
நற்றா தையும்நீ; தனிநா யகன்நீ; வயிற்றில் பெற்றாயும் நீயே; பிறரில்லை: பிறர்க்கு நல்கக்
கற்றா யிதுகா ணுதிஇன் றெனக்கை மறித்தான் முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை யன்னான்.’-(கம்ப அயோத்:நகர்நீங்கு. 136)
‘முத்துருக் கொண்டுசெம் முளரி அலர்ந்தால் ஒத்திருக் கும்எழி லுடையஇவ் வொளியால்
எத்திருக் கும்கெடும் என்பதை உன்னாச் சத்துருக் கன்எனச் சார்த்தினன் நாமம்.’-கம்பர்
தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் தீவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்திற் றேக்கிப்
போயினை என்ற போது புகழினோய்! தன்மை கண்டால் ஆயிரம் இராமர் நின்கே ழாவரோ தெரியி னம்மா!’ஸ்ரீ குகப்பெருமாள்.
எண்ணில் கோடி இராமர்க ளென்னிலும் அண்ணல் நின்னரு ளுக்குஅரு காவரோ?
புண்ணி யம்எனும் நின்னுயிர் போயினால் மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?’-கௌசல்யா தேவியார்.
பிராஹ்மண சாதி ஒன்றாய் இருக்கவும், குலம் சரணம் கோத்திரம் முதலியவைகளால் பிரித்துச் சம்பந்திக்குமாறு போன்று,
வைஷ்ணவர்களுக்கு நிரூபகம், அவனுடைய குணங்கள் செயல்கள் முதலியவைகளால் ஆம். அவ்வழியாலே, அவனுடைய
வடிவழகிலே துவக்குண்டிருக்குமவர்கள், குணங்களிலே துவக்குண்டிருக்குமவர்கள், செயல்களிலே துவக்குண்டிருக்குமவர்கள் என்று
இவ்வழியாலே அவர்களைப் பிரித்து, அவர்கள் எல்லாரோடும் தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப்பட்டு, ‘அவர்கள் எல்லாரும் எனக்கு ஸ்வாமிகள்’ என்கிறார்.
ஏழாம் திருவாய் மொழியிலே –
கீழ் சேஷத்வ பிரதிசம்பந்தியினுடைய சேஷித்வம் அர்ச்சாவதார பர்யந்தம் என்று அருளிச் செய்தாராய் –
அந்த சேஷத்வ ப்ரீதி அபி வ்ருத்தியாலே சேஷத்வம் தத் விஷய மாத்திரத்திலே நில்லாதே ததீயா பர்யந்தமாக அபி வ்ருத்தமாக-
அவர்களுடைய ஜென்ம வ்ருத்தாதி நிரபேஷமான பகவத் சம்பந்த உதகர்ஷத்தையே பற்றி அந்த உதகர்ஷத்துக்கு அடியான
1-சர்வேஸ்வரனுடைய ஷீரார்ணவ ஸாயித்வத்தால் வந்த பாரம்யத்தையும்
2-அவதார விக்ரஹ வைலக்ஷண்யத்தையும்
3-அந்நிலையில் விபூதி த்வயத்துக்கும் அனுபாவ்யமான போக்யதையையும்
4-போக்யதா வர்க்கமான ஆபரண சோபையையும்
5-ஆஸ்ரித அபேக்ஷித அர்த்த பிரதத்வத்தையும்
6-அநந்ய பிரயோஜனர்க்குத் தன்னைக் கொடுக்கும் உபகாரகத்வத்தையும்
7-கொடுக்கும் இடத்தில் ஸ்வரூப ஆவிர்பாவத்தைப் பிறப்பித்து அடிமை கொள்ளும் படியையும்
8-அடிமைக்கு விஷயமான ஸ்ரீ யபதித்வத்தையும்
9-ஆஸ்ரித தோஷ நிவர்த்தகமான பாவநத்வத்தையும்
10-ஆபத் ஸகத்வத்தையும்
அனுசந்தித்து -இந்த குணங்களில் ஈடுபட்ட பாகவதருடைய சம்பந்தி பரம்பரா பர்யந்த சேஷத்வத்தை அனுபவிக்கிறார் –
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-
என்றும் ஒக்கப்புகர் விஞ்சி வாராநிற்குமாதலின், ‘பயிலும்’ என நிகழ்காலத்தால் அருளிச்செய்கிறார்.-பயிலுகை – செறிகை. சுடர் என்றும், ஒளி என்றும் தேஜஸ்ஸாய் ‘மிக்க தேஜஸ்’ என்கை. அன்றியே, ஒளி – அழகுமாம்.
அன்றியே,‘பயிலும்’ என்பதனை ‘மூர்த்திக்கு’ அடைமொழியாக்கி, என்றும் உளதாந் தன்மையைச் சொல்லிற்றாகக் கோடலுமாம்.-என்றும் உளதாவதாவது, எல்லாக்காலத்திலும் இருப்பது ஒன்று ஆகையாலே, ‘பயிலும்’ என நிகழ் காலத்தால் அருளிச்செய்கின்றார்.
பங்கயக் கண்ணனை –வடிவழகு எல்லாம் பாதியும், கண்ணழகு பாதியுமாயிருக்கும்.-
‘ராம: கமல பத்ராக்ஷ:’ என்னுமாறு போன்று, வடிவிலே துவக்கு உண்பாரை வளைத்துக் கொள்வது கண் அழகாயிற்று.-ஒரு சுடர்க்கடல் போலே ஆயிற்று வடிவு; அது பரப்பு மாறத் தாமரை பூத்தாற்போலே ஆயிற்றுக் கண் அழகு.-வடிவுதானே கவரும் தன்மையது? அதற்கு மேலே அகவாயில் வாத்சல்யம் முதலிய குணங்களுக்கும் பிரகாசகமாய் இருக்குமன்றோ திருக் கண்கள்?காணாது கண்டவனுக்கும் ‘பண்டு கண்டு விட்ட முகமோ?’ என்று தோன்றியிருக்கும்; சில நாள் பழகினால், பண்டு இவரை நாம் கண்டு அறியோமே!’ என்று தோன்றியிருக்கும்’ என்றபடி.‘ஆயின், இரண்டற்கும் சொல் ஒத்திருக்க, இப்பொருளைக் காட்டும்படி எங்ஙனே?’ என்று நான்-நம்பிள்ளை – கேட்டேன்;
‘பயில்கின்றாளால்’ என்று முதல் முன்னம் பார்த்த நிலையோடு பார்த்துப் பின்னர்க் கலங்கிய நிலையோடு வேற்றுமை அற வார்த்தை இதுவேயாய் இருந்தது கண்டீரே’ என்று நஞ்சீயர் அருளிச் செய்தார்.-வர்த்தமான பிரயோகம் —-தெரிந்த பின்பு தெரியாதது என்று அறிந்தேன் -அறிந்தேன் என்பவன் அறியாதவன் -என்று ஸ்ருதி சொல்லுமே –
பயிலும் திருவுடையார் –‘நல்ல வாய்ப்பாய் இருந்தது’ என்று முகம் காட்டுவித்துக்கொண்டு பிரயோஜனத்திற்கு மடி யேற்கை யன்றியே,-அவன் தன்னையே பிரயோஜனமாகப்பற்றி நெருங்கும் செல்வமுடையார்-அவன் இறைமைத்தன்மைக்கு எல்லையாய் முடி கவித்தாற்போலே,-இவர்கள் அடிமைக்கு எல்லையாய் முடி கவித்திருப்பவர்களாதலின், ‘திருவுடையார்’ என்கிறார்.-‘அந்தரிக்ஷ கதஸ் ஸ்ரீமான் – ‘ஸது நாகவரஸ் ஸ்ரீமான் -‘அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு’-லக்ஷ்மணோ லக்ஷ்மி சம்பந்ந:-
பயிலும் பிறப்பிடை தோறு –
மேன்மேல் என நெருங்கி வருகிற பிறவிகளில் அவகாசங்கள்தோறும். ‘நின் பன் மா மாயப் பல்பிறவியில் படிகின்றயான்’ என்று வெறுக்கத் தக்கதாகச் சொன்ன பிறவி தன்னையே விரும்புகிறார் இப்போது; பாகவதர்களுக்கு அடிமைப்படுவதற்கு உறுப்பு ஆகையாலே
. ‘மேன்மேல் எனப் பிறவிகள் உண்டாகவும் அமையும்; ஒரு பாகவதர் ஸ்ரீ பாதத்திலே வசிக்கப்பெறில்’ என்கிறார்
எம்மை ஆளும் பரமர் – என்னை அடிமை கொள்ளக்கூடிய ஸ்வாமிகள். ‘முன்பு அவனைப் ‘பரமன்’ என்றீர்; இங்கே இவர்களைப் ‘பரமர்’ என்னாநின்றீர்;-இது இருக்கும்படி என்?’ என்னில், அனுபவிக்கும் குணங்களின் மிகுதியாலே சொல்லிற்று அங்கு;
இங்கு, அக்குணங்களுக்குத் தோற்றவர்களைச் சொல்லுகிறது. ‘நன்று; ‘எவரேலும்’ எனின், அமையாதோ? ‘பயிலுந் திருவுடையார்’ எனல் வேண்டுமோ?’ எனின், அந்தச் சம்பந்தம் ஒழியச் சொல்லில் பகவானுடைய சம்பந்தம் அற்றதாம். குண க்ருத தாஸ்யம் -அவன் இடம் பாகவதர்கள் பண்ண –நான் ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம் இவர்கள் பக்கல் என்கிறார்–
————-
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னைத்
தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன் எம்மான் தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–3-7-2-
ஆளும் பரமனை- இவ் வஸ்துவை ஆளும் போது ஒப்பு இல்லாதவனை –அடியார்க்கு என்னை ஆட்படுத்தும் விமலன் -அடியாரை விரும்புவது அவன் அடியாக அன்றோ?-அஞ்சேல் என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை’-ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தங் கோவினை’-எதிர் சூழல் புக்கு ஒரு பிறவியிலே இவனை அடிமை கொள்ளுகைக்காகத் தான் பல பிறவிகளை எடுத்துத் திரிகின்றவன்’ -ஒரு கையிலே-சிந்தனையிலே- ஏறி விரோதிகளை அழியச் செய்பவன்-‘கருதும் இடம் பொருது-நினைவு அறிந்து காரியம் செய்யுமவன்-கையும் திருவாழியுமான அழகினை அடியார்கட்கு ஆக்கி அதனைக் கொண்டு விரோதியைப் போக்குவார்க்கு விரோதியைப் போக்கி அது தன்னைக் கையில் கண்டு அனுபவிப்பார்க்கு அனுபவிப்பிக்கும் உபகாரகன் ஆதலின், ‘ஆழிப்பிரான்’ என்கிறார்.-தோளும் ஓர் நான்குடை –விரோதி போக்குகைக்கும் அழகுக்கும் வேறொன்று வேண்டாதே, தோள்கள்தாமே அமைந்திருக்கை-ஆழ்வாரை அடியார்க்கு ஆட்படுத்த ஹர்ஷத்தால் நான்கு தோள்கள் ஆயினவாம் பூரித்து –-
பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருக்கும் போது அனந்தாழ்வான் கண்டு, ‘பரமபதத்தில் சர்வேசுவரன் நாற்றோளனாயோ,-இரு தோளனாயோ எழுந்தருளியிருப்பது?’ என்ன, ‘ஏகாயநர் இருதோளன் என்னாநின்றார்கள்; நம்முடையவர்கள் நாற்றோளன் என்னாநின்றார்கள்,’ என்ன,
‘இரண்டிலும் வழி யாது?’ என்ன, ‘இருதோளனாய் இருந்தானாகில் பெரிய பெருமாளைப் போலே இருக்கிறது;-நாற்றோளன் என்று தோன்றிற்றாகில் பெருமாளைப் போலே இருக்கிறது,’ என்று அருளிச்செய்தார்;
முக்த கண்டமாக பரிகரியாதே -தெளிவாக சொல்லாமல் -அனந்தாழ்வான் -கௌரவ்யர் -அவர் முன்னே சொல்லக் கூடாது சின்னப் பிள்ளை தாம் என்று – ஜ்ஞ்ஞார்க்கு இரு கைகள் -ஞானாதிகருக்கு தெளியக் கண்ட -காட்டக் கண்ட -கையினார் சுரி சங்கு -என்றாரே -சதுர் புஜம் காட்டி அருளுவார்-நம்மளவு அன்றியே தெரியக் கண்டவர்கள் ‘கையினார் சுரிசங்கு அனல் ஆழியர்’ என்றார்கள் அன்றோ பெரிய பெருமாளை?-ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவிடத்து நாற்றோளனாய் அன்றோ வந்து அவதரித்தது? ‘மறைத்துக்கொள்க’ என்ன,-மறைத்தான் மற்றைத் தோள்களை. நிலாத்துக்குறிப் பகவர், பட்டரை நோக்கி, ‘ஸ்ரீவைகுண்டத்தில் நாற்றோளனாய் இருக்கும் என்னுமிடத்துக்குப் பிரமாணம் உண்டோ?’ என்ன, ‘பிரகிருதி மண்டலத்திற்கு மேலேயுள்ள ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவர்,-சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்திருப்பவர், போஷகர்’ என்று உண்டாய் இருந்ததே?’ என்ன,-வேறு பதில் சொல்ல முடியாமையாலே வேறுபட்டவராய் இருக்க, ‘பிரமாணப் போக்கு இதுவாயிருந்தது பொறுக்கலாகாதோ?’ என்று அருளிச் செய்தார்.
தூ மணிவண்ணன் எம்மான் தன்னை – பழிப்பு அற்ற நீலமணி போலே இருக்கிற வடிவழகைக் காட்டி என்னைத் தனக்கே உரிமையாக்கினவனை.-இதனால், சிலரை அகப்படுத்துகைக்குத் தோள்கள் தாமும் மிகையாம்படி இருக்கிற வடிவழகைத் தெரிவித்தபடி.-அடியார் பக்கலிலே சென்ற மனத்தை யுடையராய்ப் போவாரை நடுவே வழி பறிக்கும் வடிவழகுடையவன் ஆதலின், ‘எம்மான்’ என்கிறார்.‘அடியாரை விரும்பும்படி செய்ததும் இவ்வடிவழகாலேயாதலின், ‘எம்மான்’ என்கிறார்’-தன்னிடம் அடிமை கொள்வதற்கும் -ததீயர் இடம் போவாரை வழி பறிக்கவும் -இதே அழ்கு-ததீயர் இடம் ஆட்செய்ய்து அருளுவதற்கும் இதே அழ்கு தான்-குண கிருத தாஷ்யத்துடன் நாம் போனோம் -வழி பறித்து ஸ்வரூபம் உணர்த்தி ஆள் படுத்தி வைக்கிறான்-இவ்வழகை அனுபவித்துத் தொழ என்றால் தாளும் தோளும் பணைத்துக் கொடுக்குமவர்கள்;
தாள் கூப்புகையாவது, அநந்யகதியாகை; கைகூப்புகையாவது, அகிஞ்சன் ஆகை.ஆக இரண்டாலும் ஒக்க ஏறின பிரயோஜனம், அபிமான பங்கமாய் -உபாயாந்தரம் கத்யந்தரம் இல்லாமல் -வான மா மலை- திருக்குடந்தை பதிகங்கள் -காட்டிய படி –
எம்மை ஆளுடை நாதரே – ‘வடிவழகாலேயாதல், குணங்களாலேயாதல், யாதேனும் ஒரு காரணத்தாலே அடிமை கொள்ள வேண்டுவது ஈசுவரனுக்காயிற்று,
ஒரு காரணமும் இன்றியே அடிமை கொள்வார் இவர்கள்,’ என்பார், ‘எம்மை ஆளுடை நாதர்’ என்கிறார்.-காரணம் இல்லை என்கிறது என்? பகவானுடைய அநுமதி முதலானவைகள் வேண்டாவோ?’ எனின், அவனதானால்,-எந்தம்மை விற்கவும் பெறுவார்களே’ என்றார் பட்டர் பிரானும்.
————–
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே.–3-7-3-
பலகால் திருவாழியைச் சொல்லுவான் என்?’ எனின்,-இராஜகுமாரர்களுக்குப் பிடிதோறும் நெய் வேண்டுமாறு போன்று, இவரும் ‘ஆழிப்பிரான்’ என்பது,-‘பொன் நெடுஞ்சக்கரத்து எந்தை பிரான்’ என்பதாய் அடிக்கடி கையும் திருவாழியுமான சேர்த்தியை அனுபவிக்கிறார்.வல்லாரைப் பணியுமவர் கண்டீர் –-ஈசுவரன் பக்கல் உட்பட அசூயை பண்ணாநின்றால் அடியார் பக்கல் சொல்ல வேண்டுமோ? இறைவன் பக்கல் அவனுடைய
பெருமையாலே வணங்கவுமாம்; ’நான் ஒருவருக்கும் உரியன் அல்லேன்,’ என்று இருக்கவுமாம்;-சோறு தண்ணீர் முதலியவற்றாலே தரிக்கிற இவர்கள் பக்கல் பணிய மனம் பொருந்தாதே அன்றோ? தோன்றுகிற உருவத்தைப் போகட்டு அடியராய் இருக்கின்ற தன்மையையே பார்த்து விரும்பும்போது அதற்குத் தக்க அளவு உடையவனாக வேண்டும்;
ஆதலின், ‘வல்லாரைப் பணியுமவர் கண்டீர்’ என்கிறார்.
‘ஆயின், அவதரித்துச் சுலபராய் இருக்கிறவர்களைத் தோன்றுகின்ற வடிவத்தை நோக்கி வெறுக்கக் கூடுமோ?’ எனின் சௌலப்யந்தானே நறுகு முறுகு -பொறாமை -என்று முடிந்து போகைக்கு உடலாயிற்று அன்றோ சிசுபாலன் முதலியோர்கட்கு?
‘பிள்ளையாத்தான் என்று போர நல்லனாய் இருப்பான் ஒருவன், நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே வந்து ‘எனக்கு ஓர் உரு திருவாய்மொழி அருளிச் செய்ய வேண்டும்,’ என்ன, ‘உனக்கு விளக்கமாகத் தெரிவது நம்பிள்ளையோடே கேட்டால் ஆயிற்று; அங்கே கேள்,’என்ன,
‘அவரைத் தண்டன் இடவேண்டுமே?’ என்ன, ‘அது ஒன்று உண்டோ? வேண்டுமாகில் செய்கிறாய்,’ என்று என்னை அழைத்து, ‘இவனுக்குப் பாங்கானபடி ஓர் உரு திருவாய்மொழி சொல்லும்,’ என்ன, இவ்வளவும் வரக் கேட்டவாறே, எனக்குத் தண்டன் இடப்புக,
நான் ஒட்டாதொழிய, சீயர் பாடே சென்று ‘இவ்வர்த்தத்தினுடைய சீர்மை அறியாமையாலே முன்பு அப்படிச் சொன்னேன்; இனி, நான் வணங்குவதற்கு இசையும்படி அருளிச் செய்ய வேண்டும்,’ என்று சீயரையிட்டு நிர்ப்பந்தித்து, அவன் வணக்கத்தை நான் ஏற்றுக் கொள்ளச் செய்தான்,’ என்று அருளிச் செய்வர்.–நம்பிள்ளை –
எம்மை ஆள் உடையார்களே– ‘அடியார்கள் குழாங்கள்’ என்றும், ‘அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை’ என்றும் ஒரு தேச விசேடத்திலே அடிமை செய்வது இவர்களுக்கே அன்றோ? அதனை இங்கே கொள்ளக் கூடியவர்கள் இவர்கள். ‘திருமகள் கேள்வன், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பொதுவான தெய்வம்,’ என்கிறபடியே, பொதுவான தலைவனாந்தன்மையே அன்றோ இறைவனுக்குஉள்ளது? மயர்வு அற மதிநலம் அருளி விசேஷ கடாக்ஷம் பெற்ற எம் போல்வார்க்குத் தலைவர்கள் இவர்களே என்பார், ‘எம்மை ஆளுடையார்கள்’ என்கிறார்.
வீரப்பிள்ளையும், பாலிகை வாளிப்பிள்ளையும் என்ற இருவர், நஞ்சீயர் ஸ்ரீபாதத்தில் விருப்பம் உள்ளாராய், தங்களிலே செறிந்து போந்தார்களாய்த் தேசாந்தரம் போனவிடத்தே வெறுப்பு உண்டாய்த் தங்களில் வார்த்தை சொல்லாதேயிருக்க, இவர்களைப் பார்த்துப்
‘பிள்ளைகாள்! பொருள் இன்பங்கள் தியாச்சியம் அல்லாமையோ, பகவத் விஷயம் அராட்டுப் பிராட்டாயோ,-அல்பம் என்றோ – ஒரு ஸ்ரீவைஷ்ணவனும் ஸ்ரீவைஷ்ணவனும் தங்களிலே வார்த்தை சொல்லாதே வெறுத்து இருக்கிறது?’ என்ன, இருவரும் எழுந்திருந்து
தெண்டனிட்டுச் சேர்ந்தவர்களாய்ப் போனார்கள்.–ததீய சேஷத்வம் புரிந்தோம் -பரஸ்பர நீச பாவம் வேண்டுமே –
————
உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே.–3-7-4-
திரு அரை மலர்ந்தது போன்று இருக்கின்ற பட்டாடை’,-படிச்சோதி ஆடையோடும் பல் கலனாய் —-கடிச்சோதி கலந்ததுவோ -இதுவே யாத்ரையாய் இருக்கும்-சாஷாத் மன்மத மன்மதன் -அவனுக்கும் மடல் எடுக்க வேண்டி இருக்குமே –கண்டிகையன் –‘கூறை யுடை அழகு மேலே எழ வீசிப் போகாநிற்க, நடுவே வழி பறித்துக்கொள்ளும் திருக்கழுத்தில் ஆபரணம்,-இவரை மடி பிடித்துக்கொண்டு போய்க் கழுத்தளவு-முழு அனுபவம்- வனப்பிலே நிறுத்திற்று’ என்றபடி.-மடி-புடைவை. கண்டிகை-கண்டத்திலே சார்த்துமவை;ஆரம். உடை நாணினன் –-அரைநூல் வடத்தை உடையவன்; கழுத்தே கட்டளையாக அனுபவியாநிற்க,-கழுத்தே கட்டளையாக -முழு அனுபவம் என்றவாறு – கண்டத்திலேயுள்ள அழகுத் திரைகள் -சௌந்தர்ய தரங்கங்கள் -கீழே போர வீச, நடுவே நின்று அனுபவிக்கிறார்.
புடையார் பொன் நூலினன் – தான் கிடந்த பக்கத்தில் வேறோர் ஆபரணம் வேண்டாதே, காளமேகத்திலே மின்னியது போன்று இருக்கின்ற பூணூலை யுடையவன்.
இந்த அழகுக் கடலின் நடுவே அலையப் புக்கவாறே, தமக்குப் பற்றுக்கோடாக ஒரு நூலைப் பற்றினார் காணும்.-பொன் முடியன் – ‘தேர் கடவிய பெருமான்’ என்கிறபடியே, அடியார்கட்கு ஆட்செய்கைக்கு முடி கவித்திருக்கின்றவன்;-ஒரு நூலைப் பற்றி நின்றவர்களை அதுதானே ஒரு தலை சேர்த்து விடுகை நிச்சயம் அன்றோ?-திரு நாரணன் – அங்குத்தைக்கு லக்ஷ்மீ சம்பந்தமும் அவ்வாபரணங்களைப் போலே காணும்; ‘உன் திருமார்வத்து மாலை நங்கை’ -10-10-2-என்பர் மேல்-இம் மிதுனமே உலகத்துக்குச் சேஷி-அடைமொழி இல்லாமல் தொண்டர் தொண்டர் -வெறும் புறத்திலே சேஷிகள் -ஸ்வரூப க்ருத தாஸ்யம் -அவர்கள், எங்களை எண்ணாதே இருந்த போதும் எமக்கு ஸ்வாமிகளே யாவர்- எமக்கு எம் பெருமக்களே’ என்கிறார்.‘எங்களுக்கே உரிய தலைவர்கள்’ என்றபடி.-அந்த ஆபரண சேர்த்திக்கும் மிதுனத்துக்கும் தோற்று அடிமை புக்கவர்கள் அன்று
அவர்கள் தோற்ற தோல்விக்கு அடிமை புக்கவர்கள் எனக்கு நிரந்தரமான ஜென்மத்தில் அவகாசம் தோறும் சேஷிகள்–தொண்டர் தொண்டர் கண்டீர் -தங்கள் அபிப்ராயத்தால் தொண்டர் -எம் நினைவால் அசாதாராண சேஷிகள் -என்கிறார் -பிரணவ அர்த்தம் –
———-
பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5-
பெருமக்கள்-நித்தியஸூரிகள்; ‘பெரியோர்’ என்றபடி. ‘பேராளன் பேர் ஓதும் பெரியோர்’ –உள்ளவர் –அசந்நேவ-சந்தமேவ ஆகாமல் நித்யர்கள்-நண்ணாத வாளவுண ரிடைப்புக்கு வானவரைப் பெண்ணாகி அமுதூட்டும் பெருமானார்’-பெரிய திருமொழி–2-6-1-அன்றோ?
அப்பன் – உபகாரகன்.- குழந்தைகட்குத் தாய் பண்ணும் உபகாரமாவது, அதன் முகம் வாடாமல் வளர்த்தலே அன்றோ?-நம்மை அளிக்கும் பிராக்கள் – நம்மை உஜ்ஜீவிக்கும் ஸ்வாமிகள். – சர்வேசுவரன் ஒரு நாள்வரையிலே தன்னிடத்தில் ஒடுக்கி வைத்து, ஒரு நாள் வரையிலே சமுசாரத்திலே தரு துயரம் தடாதே வைப்பான் அன்றோ? ஸ்ரீவைஷ்ணவர்களோடே சேர்ந்து வசிக்கப் பெறில் ‘சமுசாரந்தானே நன்று’ என்னும்படி அன்றோ அவர்கள் படி?ஆதலின், ‘அளிக்கும் பிராக்களே’ எனத் தேற்றேகாரங் கொடுத்து ஓதுகிறார்.-மேலே ‘நறு மா விரை நாண்மலர் அடிக் கீழ்ப் புகுதல் உறுமோ?’ என்றாரே அன்றோ?-
—————-
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணன் எம்மான்தன்னை
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே.–3-7-6-
அளித்தல் – காத்தலும், கொடுத்தலும்.-அளிப்பது தன்னையே அன்றோ? ‘எனக்கே தன்னைத் தந்த கற்பகம்’-தன்னோடு ஆயுதத்தோடு வாசி அற
ஆழிப்பிரான் தன்னை–‘நாயுதாநி–‘பக்தாநாம் – பக்தர்களுக்காகவே’ என்று இருக்குமவனை. இதனால், ‘ஆளும் பரமனை’ என்ற பாசுரத்தை நினைக்கிறது-துளிக்கும் நறுங்கண்ணி – அவ்வளவில் அகப்படாதாரை அகப்படுத்துகைக்கு ஈடான கண்ணி-மிருகம் வளைக்க -கண்ணி போட்டு பிடிப்பது போலே -ஆயுதத்தால் அகப்படாதவரை இத்தைக் கொண்டு அகப்படுத்த -நாதனை’ என்ற பாசுரத்தில், நறுந்துழாய்ப் போதனை’ என்ற பகுதியை நினைக்கிறது.-தூ மணி வண்ணன் எம்மான் தன்னை – பழிப்பு அற்ற நீலமணி போலே இருக்கின்ற திருநிறத்தைக் காட்டி என்னைத் தனக்கே உரியவனாம்படி செய்தவனை;-தோளும் ஓர் நான்குடைத் தூ மணி வண்ணன்’ என்ற பகுதியை நினைக்கிறது.-ஒளிக்கொண்ட சோதியை –-பயிலும் சுடர் ஒளி’ என்ற பகுதியை நினைக்கிறது.-
எம்மைச் சலிப்பு இன்றி ஆண்டு –-அடியார்கட்கு அடிமை என்னும் அளவு ஆனால் ஆயிற்று மீளாதொழிவது; ஆதலின், ‘சலிப்பின்றி ஆண்டு’ என்கிறது. ‘ஆயின், அடியார்கட்கு அடிமை என்னும் அளவு சென்றும் மீளுகின்ற பேர் உளரே?’ எனின், மீண்டார்களாகிலும், திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உருக் காண்பரித்தனையே.சன்ம சன்மாந்தரம் காப்பர் –ஜன்ம பரம்பரைகளில் புகாதபடி பாதுகாப்பார்கள். மேற் பாசுரங்களிலே ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் ஆதரத்தாலே பிறவியை ஆதரித்தார்;
இப் பாசுரத்தில் அவர்கள் செய்யும்படியைச் சொல்லுகிறார்.-
—————-
சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7-
‘மரணமானால்’ என்கிறபடியே, சரீரம் பிரியுமளவும் பொறுத்திருந்து– உயிர் உடம்பின் நீங்குங் காலத்து நினையும் நினைவையும் பத்தியையும் இவர்களுடைய பணியாக்காமல் –’அஹம் ஸ்மராமி – நானே நினைக்கிறேன்,’ என்கிறபடியே,
தானே நினைத்து, வழி தெரியாதபடி இருக்கின்ற நூற்றோராவது நாடியாலே
‘ஆர்த்தனான பரம புருஷனால் அநுக்கிரஹிக்கப்பட்டவனாய்’ என்கிறபடியே, தான் கூடக் கொண்டு புறப்பட்டு,-அச் சரீரத்தின் பிரிவு சமயத்திலே இவன் பட்ட வருத்தமெல்லாம் தீரும்படியாக அவ்வளவிலே ஒரு பரமாத்தும பிரவேசத்தைப் பண்ணுவித்து,
சிறு குழந்தைகள் நொந்தால் தாயானவள் குளிர்ந்த உபசாரம் பண்ணுமாறு போன்று அவ்வளவிலே மேல் வழி போகைக்குத் தரிப்பு உண்டாம்படி செய்து, ’உயிர்கொண்டு உடல் ஒழிய ஓடும்போது ஓடி, அயர்வென்ற தீர்ப்பான்’ என்கிறபடியே
சென்று முகங்கொடுத்து, கர்ம சம்பந்தம் அற்றிருப்பினும் வித்யா மஹாத்மியத்தாலே விரஜையளவும் சூக்ஷ்ம சரீரம் நிற்கும்படி பண்ணி அர்ச்சிராதி கணங்களோடு ஒக்க ஆள் இட்டிராமல், ‘நயாமி – அடையச்செய்கிறேன்’ என்கிறபடியே,
தானே வந்து ‘மாதவன் தன் துணையா நடந்தாள்’ என்கிற ‘கள்வன்கொல்’ என்கிற திருப்பதிகத்திலே பிராட்டியைப் போலே தன் சிறகின்கீழே கொண்டு, வழியிலுள்ளார் தலைமேல் தாங்கும்படி இவ்வருகுள்ளவற்றைக் கழித்துப் பரமபதத்திலே கொண்டு புக்கு,
’இந்த உயிர் இந்தச் சரீரத்திலிருந்து புறப்பட்டுப் பரஞ்சோதியாய் உள்ள பரம்பொருளை யடைந்து’ என்கிறபடியே தனக்கே உரியதான உருவத்தோடு விளங்கும்படியாகச் செய்து,
பின்னையும் விடாதே திருவடிகளே அணையாகத் தன் திருவடிகளின் கீழே இட்டுக்கொண்டு, இதுதான் இவனுக்கு உபகரித்தானாய் இருத்தல் அன்றிக்கே, தன் பேறாக நினைத்திருக்கும் மஹோபகாரகனை. ‘எவர் ஒருவர் மிக்க பத்தியையுடையவராய் உபாசனை செய்து எனது சாயுஜ்ய பதவியை அடைகின்றாரோ அவர் விரோதி கழிந்தவராய்
எப்பொழுதும் என்னுடைய கைங்கரிய பரர் ஆகின்றார்,’ எனப்படுதலால் ‘தன் தாளிணைக் கீழ்க்கொள்ளும்’ என்கிறார்.
‘தன்மை பெறுத்தி’ என்றது, ‘தனது சொரூபம் தோன்றும்படி செய்து’ என்றவாறு.
இதுதன்னை இவன் அறிவினை உடையவன் ஆகையாலே உபகாரமாக நினைத்திருப்பான்;
பாரதந்திரியத்தாலே அவன் தனக்காகச் செய்தானாக இருப்பான் ஆதலின், ‘அப்பனை’ என்கிறார்.
பிதற்றுமவர் கண்டீர் –‘அந்தப்புர விருத்தாந்தம் இவர்களுக்கு நிலையாவதே!’ என்று அவர்கள் விஷயத்திலே ஈடுபட்டு ஏத்துமவர்கள் தாம்.-நன்மை பெறுத்து –பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருத்தலை எல்லையாகவுடைய பகவானுக்கு அடிமைப்பட்டிருத்தல் ஆகிற செல்வத்தை உண்டாக்கி-எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே – நமக்கு அவன் திருவடிகளில் கைங்கரியத்தை உயிர் உள்ள வரையிலும் நடத்தக்கூடிய நம்பத்தக்கவர்கள்;
இனி, ‘நம்பர்’ என்பதற்கு, ‘முதலிகள்’ என்னலுமாம்.-
——–
நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8-
‘மேற்பாசுரத்திலே அடியார்களை நம்பர் என்றாரே?’ எனின், ‘மேற்சொன்னவர்களும் நம்பர் ஆகைக்கு அடியானவனை என்கிறார்’ இப்பாசுரத்தில்.-இதனால், ‘இவனை ஒழிந்த பந்துக்கள் நம்பத் தகுந்தவர்கள் அல்லர்’ என்கை;-ஞாலம் படைத்தவனை – தனக்கு, தானும் இன்றிக்கே பிறரும் இன்றிக்கே-அறிவு இல் பொருளைப் போன்று கிடக்கிற நிலையிலே பேற்றிக்கு உபயோகமான சரீரத்தை உண்டாக்கினவனை.–அது யாருக்குப் பிரியமாக?’ என்னில்,-திருமார்பனை – அவளுக்குப் பிரியமாக.
‘பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக்கொண்டு அந்த முகத்தின் குறிப்புகளைப் பின் சென்றவனாய்ப் படைத்தல் முதலான காரியங்களைச் செய்கிறான்,’ என்னக்கடவதன்றோ?-
–யஸ்யா வீஷ்யா முகம் –தத் இங்கித பராதீனன் -விதத்தே அகிலம் –ஐகரஸ்யம்–ப்ரூ பங்கமே பிரமாணம் –எத்தகைய தீவினையாளரேயாகிலும், அவ்விருப்பிலே நமக்கு அடையத்தக்கவர்.-எம் பல் பிறப்பிடை தோறு எம் தொழுகுலம் தாங்கள் – நம்முடைய பல வகைப்பட்ட பிறவிகளிலே இடங்கள்தோறும் திருநாமத்தைச் சொன்னவர்கள் மாத்திரமே அன்று எனக்கு உத்தேஸ்யர்;-அவர்கள் குலங்களாக எங்கள் குலத்துக்கு ஆசாரியர் ஆவார்கள். ‘அங்குத் துக்க அனுபவம் பண்ணாநிற்க, திருநாமத்தைச் சொல்லக்கூடுமோ?’ என்னில், ‘துன்பத்தின் மிகுதியாலே, ‘அம்மே! அப்பா!’ என்னக்கூடாதோ?’ என்று காணும் இவர்க்கு நினைவு.-இவர்க்கு நினைவு’ என்கையாலே, ‘துக்கத்தை அனுபவிக்கும் சமயத்தில் திருநாமத்தைச் சொல்லுதல் அரிது,’ என்பது கருத்து.-
———-
குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9-
விருத்தவான்கள் -வ்ருத்த வான்கள் -ஒழுக்க சீலர் -சக்கர குறி வலக்குறி-அன்றோ இவர்கள் என்று கைமேலே காட்டிக்கொடுக்கிறார்-உள்ளங்கை நெல்லிக் கனி போலே -கை மேல் உள்ள சக்கரப் பொறியே பழம் –வலம் தாங்கு சக்கரத்து மணிவண்ணன் அண்ணற்கு –
‘வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு’ என்றவர்,
‘வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு’ என்னுமாறு போன்று, இவரும் மேற் பாசுரத்திலே ‘திருமார்பனை’ என்றார்; இங்கே ‘வலந்தாங்கு சக்கரம்’ என்கிறார்.
அந்தப்புரத்துக்கு காவல் வேண்டுமே -இதனால் நம்மாழ்வார் பெரியாழ்வார் -இப்படி அருளிச் செய்கிறார்கள் –விருத்தவான் அபிமானத்திலே ஒதுங்கும் இதுவே அன்றோ வேண்டுவது? அவர்கள் அவனிலும் உத்தேஸ்யர் ஆவர்கள் அன்றோ!
இவ்வாறு ‘சண்டாள சண்டாளர்களாகிலும் – எம் அடிகளே’ என்று கூறுதல் உலக நடைக்கு மாறுகோடல் அன்றோ?’ எனின்-‘இப்படி வைஷ்ணவர்களை விரும்பினால் இது உலக மரியாதைக்குச் சேராதிருந்ததாகில், ஆழ்வார் விரும்பியதை நம்பினவர்களாகிறோம்,’ என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்.-
————
அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-7-10-
அடி ஆர்ந்த வையம் உண்டு –அமுதுசெய்ய, முன்பே அடி இட்ட படி அன்றோ இது? தன் படிக்குக் காற்கூறும் போராததை அன்றோ அமுது செய்தது?-காலால் அளந்ததை -கால் பங்கு தான் உண்டார் -திருவடிக்கு அளவான பூமியை அமுது செய்து.-ஆல் இலை அன்ன வசம் செய்யும் – அப்பொழுது தோன்றியது ஓர் ஆலந்தளிரிலே உணவுக்கு ஈடாக இடம் வலங்கொள்ளும். அமுது செய்த படி ஜீரணியாமல், வலக்கை கீழ்ப்பட ஆயிற்றுக் கிடப்பது. ‘வலக்கை கீழ்ப்படக் கிடப்பான் என்?’ எனின், தந்தாம் ஜீவனத்திற்குக் கேடு வாராமல்
பாதுகாத்தல் எல்லார்க்கும் ஒக்குமே? கூழாட்படுகை அவனுக்கும் ஒத்திருக்கிறபடி.
படி யாதும் இல் குழவிப் படி –-ஒப்பு ஒன்றுமின்றியே இருக்கின்ற பிள்ளைத்தனத்தாலே. ‘யசோதையின் முலைப்பால் உண்ணும் பிள்ளையும் ஒப்பு அன்று வடதளசாயிக்கு’ என்பார்,
‘படி யாதும் இல் குழவி’ என்கிறார். ‘தொட்டில்நின்றும் தரையிலே விழப் புகுகிறோம்’ என்று அஞ்ச அறியாத இளமையே அன்றோ அங்கு? ‘ஆல் இலையினின்றும்பிரளயத்திலே விழுகிறோம்,’ என்று அஞ்ச அறியாத மௌக்த்யம் அன்றோ இங்கு?’ என்றபடி.
எந்தை பிரான் –அகடித கடநா சாமர்த்யத்தாலே என்னைத் தோற்பித்த உபகாரகன்.இறைமைத் தன்மைக்கு அவனுக்கு அவ்வருகு இல்லாதது போன்று, அடிமையாம் தன்மைக்குத் தமக்கு-அவ்வருகு இல்லாதபடி அதன் எல்லையிலே நிற்கிறார்.தம்முடைய ருசிக்கு அவதி உண்டாய் இவ்வளவிலே நின்றார் அல்லர்;
பாசுரத்தில் இதற்கு அவ்வருகு போக ஒண்ணாமையாலே நின்றார் இத்தனையேயாம்.-
அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே.–3-7-11-
ஐவர்க்கு அருள் செய்த நெடியோனை –இரண்டு இடத்திலும் ஒக்குங்காணும் ஐவர்க்கு அருள் செய்கை.-பாண்டவர்க்கும் -ஆழ்வாருக்கு -பஞ்ச இந்த்ரியங்கள்
இங்குத் திசை திசை வலித்து எற்றுகின்ற ஐவர்க்கு அருள் செய்தான்;
அங்கு அவர்களாலே எற்று உண்ட ஐவர்க்கு அருள் செய்தான்.
ஆழ்வார் பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமையை எல்லையாகவுடைய கைங்கரியத்தை வாசிகமாகப் பண்ணுகையாலே அந்தரங்க அடிமை ஆயிற்றுச் சர்வேசுவரனுக்கு. அவனைப் பற்றி பாடினால் பஹிரங்கமாம் -தொண்டர் மேல் பாடினால் அந்தரங்கமாம் –அவன் தொண்டர்மேல் முடிவு இவை பத்து –இதில் சர்வேசுவரனைச் சொன்ன இடங்கள் உபசர்ஜ்ஜன கோடியிலே யாமித்தனை.-சன்மம் செய்யாமை முடியும் –
அடியார்கட்கு அடிமையாம் தன்மைக்கு விரோதியான பிறவியிலே சேர்தல் அறும்.
அடியார்க்கு அடிமையாகும் தன்மை கிட்டும் சொல்லாமல் -வியாதி போக்க சக்கரைப் பொங்கல் போலே அநிஷ்ட நிவ்ருத்தி – ஆனபின்பு இஷ்ட பிராப்தி -பாகவத கைங்கர்யம் பள்ள மடை தன்னடையே வரும் –
பயிலும் திருமால் பதம் தன்னில் நெஞ்சம்
தயலுண்டு நிற்கும் ததியர்க்கு -இயல்வுடனே
ஆளானார்க்குக் ஆளாகும் மாறன் அடி அதனில்
ஆளாகார் சன்மம் முடியா——–27-கீழே சௌலப்ய காஷ்டையை யுபதேசிக்க அத்தையும்
காற்கடை கொள்ளுகையான சம்சாரிகளோட்டை சஹவாசத்தால் வந்த வெக்காயம் மாறாத படி –
தனக்கு பாத ரேகை போலே பரதந்த்ரரான ஸ்ரீ வைஷ்ணவர்களை அவன் காட்டக் கண்ட அவர்கள் திருவடிகளிலே தலையை மடுத்து அவர்கள் தான் அவன் படிகளிலே பல படியாக மண்டி இருக்கிற படியைக் கொண்டாடி அவர்கள் எல்லை நிலத்திலே சென்று இனியராகிற பயிலும் சுடர் ஒளியின் தாத்பர்யத்தை பயிலும் திருமால் -இத்யாதியால் -அருளிச் செய்கிறார்-கச்சதா மாதுலகுலம் -இதிவத் –ததீய சேஷத்வத்தின் எல்லை நிலத்திலே நிற்கிற ஆழ்வார் திருவடிகளை ஆஸ்ரயிக்கவே ஜன்ம சம்சார பந்த நிவ்ருத்தி பூர்வகமாக மோஷ சித்தியாம் –
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply