ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -2-செழு நீர்த் தடத்துக் கயல்-கோவை வாயாள் -4-3-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

—–

அவதாரிகை –
இமையோர் தலைவா
-என்று அவனுடைய பரம பும்ஸ்வத்தை முதலிலே அனுசந்தித்து
அப்படி அவனைக் கிட்டப் பெறாமையாலே ஆண் -பெண்ணாம் படி யாயிற்று –பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணாம் -என்றும் உண்டாகையாலே இதுவும் கூடும்-ஒரு பிராட்டி தசையாம்படி எங்கனே என்னில்-சம்ஸ்லேஷத்தில் இனிமையும்-விஸ்லேஷத்தில் தரியாமையும்-ஸ்வத சித்தமான சம்பந்தமும் — அனந்யார்ஹ சேஷத்வம்ததேக நிர்வாஹ்யத்வம் -உண்டாகையாலே –அத் திரு அவனைப் பற்றும்
இத் திரு இருவரைப் பற்றும்
–தோழி தசையும் திருத் தாயார் படியும் உண்டாகிற படி எங்கனே என்னில்
கிண்ணகம் பெருகா நின்றால்-ஆறுகளும் கால்வாய்களும் குளங்களும் நிறைந்து சமுத்ரத்திலும் குறைவற்றுப் புகுமோபாதி விஷயம் அபரிச்சின்னம் ஆகையாலே-

இவருக்கு இங்கு உண்டான விரோதிகளையும் காட்டி அவற்றில் உண்டான  ருசிகளையும் தவிர்த்து
தன்னுடைய நித்ய விபூதி யோகத்தையும் காட்டிக் கொடுக்க அநந்தரம் அங்கு உள்ளாரின் ஜ்ஞானத்தையும் – அங்குத்தை பரிமாற்றத்தையும் – தேச விசேஷத்தையும் கண்டு அவ்விடத்தை பிராபித்து அல்லது நிற்க மாட்டாத த்வரையும் பிறந்தது –ஆகில் – இவர் அபேஷிதம் செய்து கொடாது ஒழிவான் என் என்னில்–சம்சாரிகளில் காட்டில் வ்யாவ்ருத்தராக்கி நம்மை அல்லாது அறியாத படியும் பண்ணி அலாப தசையில் கூப்பிடும்படி பண்ணி இவருக்கு ஸ்வரூபமான அடிமையையும் வாசிகமாக கொள்ளா நின்றோம் ஆகில் அவ்வருகில் பிராப்தியும் செய்வோம் நாம் ஆன பின்பு செய்து கொடுக்கிறோம் என்று ஆறி இருந்தான் –இவருக்கு கீழ்ச் செய்தது ஜ்ஞான லாபம் ஆகையாலே
அநந்தரம் பிராப்தி பண்ணித் தர வேண்டும் என்று த்வரிக்கிறார்–ஈஸ்வரனுக்கு இங்கனே இருப்பதொரு புடை உண்டு பிரஜைகள் பசித்திருக்க விருந்தினரைப் பேணுமா போலே
அசாதாராண பரிகரத்துக்கு தாழ்த்தும் அல்லாதார் கார்யம் தலைக் கட்டும் -எங்கனே என்னில்-கைகேயி கார்யம் தலைக் கட்டின அநந்தரம் ஸ்ரீ பரத ஆழ்வான் கார்யம் செய்கையாலும் மகா ராஜர் கார்யம் செய்து பின்னை பிராட்டி கார்யம் செய்கையாலும் – இவர்களுக்கு முற்பட செய்கிறது என் என்னில்
கார்யத்து அளவே இறே அவர்களுக்கு உள்ளது அசாதாராணருக்கு அபேஷிதம்  செய்தானோ என்னில்
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு முடியைத் தவிர்த்து கொடுக்கையாலே இவர்கள் அபேஷிதமும் செய்யும் –
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நித்ய கைங்கர்யமும் அருளினானே –

விலக்ஷண விக்ரஹ யுக்தனாய் – ஸூலபனாய் – ஸூரி போக்யனான ஈஸ்வரன் – திருவடிகளில் இவருக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தாலே வந்த கண் கலகத்தைக் கண்டு விஸ்மிதரான ஸூஹ்ருத்துக்கள் பாசுரத்தை-ஈஸ்வரனான நாயகனைப் பிரிந்து ஆற்றாளான தலைவியினுடைய
வேறுபாட்டைக் கண்டு வியந்த தோழி வார்த்தைகளால் அருளிச் செய்கிறார்–இப் பாட்டு கீழ் பாட்டில்
பிறந்தாய் என்றும்-இமையோர் தலைவா என்றும் சொன்ன பதங்களின் அர்த்தங்களை பிரகாசிக்கிறது

நாயகியும் தோழியுமாக உத்தியான வனத்திலே பூ கொய்ய என்று புறப்பட்டு ஒரு வ்யாஜ்யத்தாலே நாயகனும் அங்கே வரவும் ஒரு வ்யாஜ்யத்தாலே பிரிய தைவ யோகத்தாலே கூடி கூடின வழியே பிரியவும் பிரிவு தானும் கலவியில் ஒரு வகையோ -என்று இருந்தாள் –பிரிவின் மெய்ப்பாட்டாலே புளகித காத்ரையாய்க் கொண்டு நோவு படுகிற படியைக் கண்டு இவளுக்கு சம்ஸ்லேஷம் வ்ருத்தமாக கழிந்தது என்று அறிந்து இனி நாம் உடன்பட்டு இவள் சத்தையை உண்டாக்கிக் கொள்வோம் என்று இது ஓர் வடிவு இருந்த படி என் இவ் விருப்பு நித்யமாக வேணும் – என்று மங்களா சாசனம் பண்ணுகிறாள்  –தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-வாழியரோ
அன்பையே மாலையே ஸமர்ப்பிக்கிறாள்
-ப்ரேமமே மாலை பா மாலையையே பூ மாலையாக -சூட்டினாள்-கோவை வாயாள் -4-3-இதன் விவரணம்

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர்  முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே
—-2-தலைவியின் வேறுபாடு கண்ட தோழி வியந்து உரைத்தல் –உடன் பாடு துறை —

செழு  நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப -சேயரிக் கண் அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ –(உவமை அணி -அலங்கார சாஸ்திரம் இதில் )
ஸூத்த ஜலமாய் இருக்கிற தடாகத்திலே- ஒரு கயல் இடம் வலம் கொண்டால் போலே இருக்கை –
உபமானமே பிடித்து திருத்திக் கொண்டு சொல்ல வேண்டி இருக்கிறது – உபமேயத்தின் உடைய வைலஷண்யம்–ஒப்ப -என்றது சர்வதா சாம்யம் அன்று – ஒருவகைக்கு ஒப்பாம் இத்தனை

சேயரிக் கண் அழுநீர் துளும்ப
அஸி தேஷணை-
கண் கிடீர்-சேய் -அழகாய் –அரி -வண்டாய்
அன்றிக்கே-ஹரிக்கிற மநோ ஹாரி என்றுமாம்
அன்றிக்கே-சிவந்த அரியை உடைத்தான
அன்றிக்கே-சிவந்து மநோ ஹரிக்கும் கண்கள்-ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமி நிர்வாகம் –-கறும் கண்ணி தவிர்ந்து விஸ்லேஷத்தால் கரும் கண்ணி மாறி சிவந்து இருக்கை-அஸ்ரு பிரவஹிக்கிறது–என் கார்யம் தலைக் கட்டிற்று-இவள் கார்யம் தலைக் கட்டும் அத்தனை-பகவத் வ்யதிரேகத்தில் கண்ணும் கண்ணீருமாய் இருக்கும் இது இறே ஆத்மாவுக்கு ஸ்வரூபம்–இத்தைக் காணும் அது இறே இவர்களுக்கு உத்தேச்யம்-இவ்விருப்பை இவனும் காணப் பெற்றதில்லை – அசலிட்டுக் கேட்கும்-தோழி சொல்ல – இத்தனை இறே  –கிமர்த்தம் -இத்யாதி-ஆர் குடி வேர் பறிய இக்கண்ணும் கண்ண நீருமாய் இருக்கிறது-ஆரைச் சேதனராகக் கொண்டு -என்றுமாம் –-அவன் கண்டு உகக்கும் –
அலமருகின்றன -தடுமாறா நின்றனஅழு நீர் துளும்ப அமலருகின்றன -என்கையாலே-அபிநிவேசம் மிகுந்தமை தோற்றுகிறது

வாழியரோ –
இவ் வவசதாம் நீண்டு ஜீவித்திடுக–இந்த ஐஸ்வர்யம் நித்தியமாக வேண்டும்-பகவத் விஷயத்தில் இப்படி இருப்பது பரம போக்யமே என்பதால் வாழியரோ என்கிறார்கள்-விரக வருத்தம் நீங்கி வாழ வேணும் என்றுமாம்–இது தான் தனக்கு தர்ச நீயமாகையாலே நாயகனும் கண்டு வாழ வேணும் என்று
தோழி மங்களா ஸாஸனம் பண்ணுகிறாள்

அன்றியே இந்தப் ப்ரேமம் உள்ளதனையும் நடக்க வேணும் என்று அநுசாஸித்தாள் ஆகவுமாம் –இதில் ஏவம்வித ஸ்வாபவ பாகவதர்களுக்கு மங்களா ஸாஸனம் பண்ணுவதே பெரியோர்க்குக் கர்த்தவ்யம் என்றதாயிற்று –

முழுநீர்   முகில் வண்ணன் கண்ணன்-
இக் கடலைத் தரையாக பருகின மேகம் இருந்தபடி-( கீழே தடாகம் இங்கு கடல் )
(கடல் நீர் மேலோட்டமாக அர்த்தம் இங்கு -பராங்குச நாயகி -மணிமாமை குறைவிலமே -)
தூமஜ்யோதீஷ் சலில மாருதாம் சந்நிபாத   -என்று அன்னலும் துன்னலுமாய் -கண்டதும் கடியதும்-ஆன தூமாதிகள்  போலே -இருக்கை அன்றிக்கே ஆதார ஆதேயம் இரண்டும் தானேயாய் இருக்கை
(மேகம் நீர் -தண்ணீரால் ஆன தண்ணீர் )கடலைப் பருகிற்று என்றால் புஷ்கலா வர்த்தகம் (மேகக்கட்டம் )என்று இருக்க வேண்டாவோ-கடலைக் கலக்கிற்று என்றால் மந்தரம் என்று அறியுமா போலே
இந் நிறத்தை இங்கனே ஆக்கியவன் (கறும் கண்ணியை -இழந்து சேயரிக் கண் ஆக்கினான் )
இந்நிறம் உடையவன் இறே
–இவ் வடிவு அழகைக் கொண்டு சர்ப்ப யாகத்தில் சர்ப்பங்கள் வர இருக்குமா போலே எல்லாரும் வர இருக்கும் இத்தனையோ என்னில் இவ்வடிவு உடையானும் தானேயாய் வருவானும் தானேயாய் இருக்கிறபடி – மேகம் ஜலம் இரண்டாய்  இன்றிக்கே ஜலமாகவே இருக்கை –

இத்தால்
தடத்து மிளிர்ந்த கயலை நீர் துளும்பின கண்ணுக்கு ஒப்புமை சொல்லுகையாலே
அந் நீரோடு கண்ணுக்கு உண்டான சேர்த்தி தோற்றுதலால் ஞானத்தினுடைய ஊற்றுமை சொல்லிற்று-சேயரிக் கண் என்று ராகோத்தரமாகச் சொல்லுகையாலே அந்த ஞானம் பக்தி ரூபா பன்ன ஞானமே தோற்றுகிறது

முழுநீர்  முகில் வண்ணன்
அவனை விஸ்லேஷித்த இவள் வடிவைக் கண்டால்-ஆதார ஆதேய இரண்டுமே நீராயாயேயான மேகம் போலே இருக்கும்-இவளைப் பிரிந்த அவன் வடிவு என்று நிச்சயிக்கிறாள்-இவளைக் கண்டு அனுமானிக்கிறாள்–இது தான் முழு நீர் மேகம்-மேகத்தில் உள்ள நீர் மேகமே நீர்-அவன் இடத்தில் கறுமை -கறுமையே அவன்-கண்ணன் என்னும் கறும் தெய்வம்

முழு நீர் முகில் வண்ணன் என்று-ப்ரேம விஷயம் பூர்ணமாய் –-தர்ச நீயமாய்-உத்துங்கமாய் இருக்கும் என்றதாயிற்று-கண்ணன் என்று-இவ் விஷயம் இவருக்குக் கை புகுந்தமை தோற்றுகிறது

கண்ணன்
பவ்யதா உச்யதே-எடுக்கவும் கட்டவும் அடிக்கவும் ஆஸ்ரித பரதந்த்ரனானவன்–அம் முகில் போலே ஆகாச வர்த்தியாய் எட்டாதே இருக்கை இன்றிக்கே பூமியிலே கால் தாழ்ந்து ஸூலபனானவனுடைய-கிருபா மயனானவனுடைய

விண்ணாட்டவர் மூதுவராம்
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவா
-என்றும்-யத்ர ருஷய பிரதம ஜாயே புராணா -என்றும்
பழையராய் இருக்கிறவர்கள்(நித்யர்களை சொன்னபடி )-இவர்கள் சத்தாகாரமாக  தொழா நின்றார்கள்

தொழுநீர் –
நம இத்யேவ வாதின
-என்கிறபடியே-தொழுகையே ஸ்வ பாவமாக இருக்கும் – தொழுவித்துக் கொள்வதே அவனுக்கு ஸ்வ பாவகமாக இருக்கும்–தொழுநீர் –நீர்மை -என்பதே நீர் -பண்பு ஈறு போயிற்று-நித்ய ஸூரிகளால் தொழப் படுவதை ஸ்வ பாவமாக யுடையவன்-

இணை யடிக்கே –
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான அடிகள்-ஓர் அவயவம் நன்றாய் இருக்குமவன்  நமக்கு அவ்வருகு இல்லை என்று இருக்கும் -ஒருவனுக்கு பவ்யமாய் இருக்குமவன் நமக்கு அவ்வருகு நீர்மை உடையார் இல்லை என்று இருக்கும்-ஒருவனுக்கு நிர்வாஹகனாய் இருக்குமவன் நமக்கு அவ்வருகு நிர்வாஹகர் இல்லை என்று இருக்கும் -இம் மூன்றும் கண் அழிவு அற உண்டான பசும் கூட்டு இறே பரதத்வம் ஆகிறது-
சந்தன கற்பூர குங்கும கூட்டு போலே-இதுக்கு இறே இவள் ஈடுபட்டது-நீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவாரம் தொழும் -பத த்ரயத்துக்கும் வியாக்யானம் – (சவுந்தர்யம் ஸுலப்யம் பரத்வம் மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் )

அடிக்கே அன்பு சூட்டிய-
குண ஜிதரால் விழுவது காலில் இறே–சூட்டிய -என்பான் என் என்னில்-வாசகம் செய் மாலையே – என்னுமா போலே (சாத்தின- பாடிய- போல் இல்லாமல் சூட்டிய என்பதால் பா மாலை -அன்பு மாலை )-ஆழ்வார் அன்பு திருவடிகளுக்கு அலங்காரம் –சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன் 
மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி 
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே – 4-5 -3-

சூழ் குழற்கே –
1-சூழ்ச்சியை உடைய குழல்
2-கண்டாரைச் சூழ்த்துக் கொள்ளும் குழல்
3-சுருண்ட குழல் -என்றுமாம்–சூழ் குழற்கு வாழியரோ -என்று அந்வயம்-

அன்பு சூட்டிய சூழ் குழற்கே
ஸ்நேஹம் அவன் தானே ஆதரவு-வாசகம் செய் மாலை-ப்ரேமம் மாலை-அவனை சூழ வற்ற மயிர் முடியை யுடைய இவளுக்கு-பலாத்க்ருத்ய ஆண்டாள் மாலையால் காட்டியது போல்-சூழ்ந்து இருந்த குழல் என்றுமாம்

விண்ணாட்டவர் தொழு நீர் இணை அடிக்கே -என்கையாலே-விலக்ஷண போக்யம் என்னும் இடம் தோற்றிற்று-இணை அடிக்கே அன்பு சூட்டிய -என்கையாலே-அந்த மேகம் இவர் பக்கலிலே கால் விழுந்தமை சொல்லிற்று-அன்பு சூட்டிய என்கையாலே-இத் தலையிலே அன்பு அவன் திருவடிகளுக்கு அலங்காரம் என்று தோற்றிற்று-இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கு -என்கையாலே
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன கழலே (திருவாய் -4-3-6 )என்கிறபடியே அவன் திருவடிகள் இவர் திருமுடிக்கு அலங்காரம் என்னும் இடம் தோற்றுகிறது-வாழியரோ –என்கையாலே
இப் பிரேமம் ஈஸ்வரனுக்கும் ஆசாஸ்யமாய் இருக்கும் என்னும் இடம் தோற்றிற்று – (அவாப்த ஸமஸ்த காமன் ஆசைப்படுவதும் நமது பக்தி ஒன்றையே தானே )-இது தோழி வார்த்தை யாகையாலே
இயற்கையிலே புணர்ந்த தலைமகன் பிரிவிலாதல் அன்றியே தோழியில் கூட்டத்துப் புணர்ந்த தலைமகன் பிரிவிலாதல் பிரிவாற்றாத தலைவி வேறுபாடு கண்ட தோழி உட் கொண்டு (அனுமானித்து )வியந்து உரைத்தது –

தாத்பர்யம்-சர்வேஸ்வரனுடைய நித்ய விபூதி ஐஸ்வர்யத்தை அனுபவித்து-ஆழ்வார் அப்போதே அங்கு அடைந்து அனுபவிக்க கிட்டாமையாலே அத்யந்தம் ஆர்த்தராய்-தனது ஸ்வ பாவம் மறந்து தன்னைப் பிராட்டியாகப் பாவித்துக் கொண்டு இருக்க அங்குள்ள பாகவதர்கள் -இவரை சில பாசுரங்களாலே ஆஸ்வசிப்பிக்க அப்படி வந்தவர்களே தோழிகள் அவர்கள் சொல்லும் பாசுரம் -நாயகன் உடன் ஸம்ஸ்லேஷித்து பிரிந்து விரஹ வேதனையில் இருக்கும் தம்மை ஆஸ்வசிப்பிக்க ஆர்த்தி உடன் தவிக்க -ஆச்சார்யர் நம்மை -சேர்ப்பிப்பார்களே சீதாப் பிராட்டி திருவடி ஸ்ரீ ராமாயணம் சொல்ல சுற்றி சுற்றிப் பார்த்தால் போல் இவள் கண்கள் நீர் கொண்ட மேகம் போல் அதி ஸூந்தரமான சர்வேஸ்வரனுடைய வடிவு அழகை ஸ்ரீ வைகுண்டத்தில் நித்ய ஸூரிகள் எல்லாரும் ஆஸ்ரயித்து அனுபவிக்கிறாப் போலே இவள் தானும் அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடைக்கப் பெறாமல் வியசனமுற்று தன்னுடைய மத்ஸ்யம் போன்ற கண்களில் நின்றும் கண்ணீரை தாரை தாரையாகப் பெருகிக் கொண்டு தன்னுடைய நாயகன் எந்தத் திக்கில் நின்றும் வருவானோ என்று நாலு பக்கங்களிலும் கண்களைச் சுழற்றி விழித்துப் பார்த்துக் கொண்டு இருக்க பூர்ண தடாகத்தில் துள்ளுகிற இரண்டு மத்ஸ்யம் போன்ற இவளது கண்கள் அழகை அனுபவிக்க இப்பொழுது
இவளது கணவனுக்கு பிராப்தி இல்லையே இனி சீக்கிரத்தில் இவள் நாயகனுடன் சேர்ந்து இவ் வவஸ்த்தையைத் தவிர்ந்து ஸூகிக்கக் கடவள்

இப் பாட்டுக்கு ஸ்வாபதேசம் –பிரதம தர்சனத்திலே பிரகிருதி பிராக்ருதங்களிலே உபேஷை பிறக்கும்படி தமக்கு பகவத் விஷயத்தில் பிறந்த ப்ராவண்யத்தைக்-கண்டார் உகந்து பேசும் படியை
தாம் அனுசந்தித்து இனியர் ஆகிறார் –


4-3-கோவை வாயாள் பொருட்டு ப்ரவேஸம்-

எல்லாத் தேசத்திலும் எல்லாக் காலத்திலும் உண்டான அவன் படிகள் எல்லாம் இப்போதே பெற்று அனுபவிக்க வேண்டும் என்று விடாய்ப்பார் ஒருவரைப் பெறுகையாலே, இவர் உயிர் வாழ்வினையே இறைவனாகிய தனக்கு எல்லாமாம்படி இருக்கிற தன் காதல் குணத்தைக் காட்டிக் கொடுக்கக் கண்டு, இவரும் எல்லாம் பெற்றாராய் அனுபவிக்கிறார்.-சர்வேசுவரனுடைய ‘பாலனாய் ஏழுலகு’ இத்திருவாய்மொழி.

மந்திர லோபம் கிரியா லோபம் போக்க-நித்ய திருவாராதானம் பொழுது சொல்ல வேண்டிய திருவாய்மொழி -இதுவாகும்--‘சர்வேஸ்வரனுடைய ‘பாலனாய் ஏழுலகு’ இத்திருவாய்மொழி’ என்றது, ‘மேல் திருவாய்மொழியாகிய ‘பாலனாய் ஏழுலகில்’-ஆழ்வாருடைய காதற் குணம் சொன்னாற்போலே, இத்திருவாய்மொழியில்-ஆழ்வார் பக்கல் சர்வேஸ்வரனுக்கு உண்டான காதற் குணம் சொல்லுகிறது’ என்றபடி.-வாஸூ தேவ சர்வம் என்று இருப்பார்க்கு அவரே சர்வம் என்று இருப்பானே –ஆழ்வார் பாலனாய் -போன்ற பல நிலைகளில் சாத்திக் கொண்ட வகுள மாலை அனுபவிக்க இவன் ஆசைப் படுகிறான்-‘நெடுமாற்கடிமை, ஆழ்வாருடைய நெடுமாற்கடிமையும் எம்பெருமானுடைய நெடுமாற்கடிமையும் என இரு வகைப்படும்;-அவற்றுள் எம்பெருமானுடைய ‘நெடுமாற்கடிமை’ இத்திருவாய்மொழி,’ என்றார் முன்னும். இரண்டாம் பத்து ஏழாந்திருவாய்மொழி முன்னுரை.

இதுதனக்கு மூன்று படியாக நிர்வஹிப்பர்கள் நம் முதலிகள்;
ஒன்றை கேட்டால் -வேறு ஒன்றைக் காட்டி சமாதானம் பண்ணுவது
அத்தையே கொடுப்பதாகச் சொல்லுவது –
அத்தையே கொடுப்பது -என்ற மூன்று நிலைகளும் மூவரும் அருளுவார்கள் –

எம்பார், “அம்புலி அம்மானைப் பிடித்துத் தரவேண்டும்’ என்று அழுத குழந்தைக்குத் தேங்காயைக் –
உடைத்த தேங்காயைக்-கொடுத்து அழுகையை ஆற்றுவாரைப்போலே, வேறு ஒரு குணத்தைப் -காதற்குணத்தை.-
பிரகாசப்படுத்தி அனுபவிப்பிக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச்செய்வர்.

திருமலை நம்பி, ஒருவன் ஒன்றை விரும்பினால், அவனும் அது செய்வானாய்த் தலை துலுக்கினால், பின்பு பின்னில்
இழவு தோன்றாதே அன்றோ இருப்பது? ஆகையாலே, அவனும் ‘அப்படிச் செய்கிறோம்’ என்ன, மேல் உண்டான இழவு மறந்து,
எல்லாம் பெற்றாராய் அனுபவிக்கிறார்,’ என்று அருளிச்செய்வர்.
ஸ்ரீ கௌசல்யையார், பெருமாள் வனத்திற்கு எழுந்தருளுகிற போது, ‘ஒரே புதல்வனை யுடைய நான் உம்மைப் பிரிந்திருக்க மாட்டேன்!
கூட வருவேன் இத்தனை!’ என்ன, ‘ஆச்சி, நீர் சொல்லுகிற இது தர்மத்திற்கு விரோதம் கண்டீர்,’ என்று முகத்தைப் பார்த்து
ஒரு வார்த்தை அருளிச்செய்ய, இழவை மறந்து மங்களாசாசனம் பண்ணி மீண்டாரே அன்றோ?’
இது, பேச்சின் இனிமை விசுவாசத்திற்குக் காரணம் என்பதற்குத் திருஷ்டாந்தம்.
‘ஒரே புதல்வனையுடைய நான்’ என்று தொடங்குமிவ்விடத்தில்,
‘ஆகி னைய! அரசன்றன் ஆணையால் ஏகல் என்பது யானு முரைக்கிலென்;
சாகலா உயிர் தாங்க வல்லேனையும் போகில் நின்னொடுங் கொண்டனை போகென்றாள்.’ என்ற செய்யுளையும்,
‘ஆச்சி! நீர் சொல்லுகிற இது’ என்றுதொடங்குமிடத்தில்
‘என்னை நீங்கி இடர்க்கடல் வைகுறும் மன்னர் மன்னனை வற்புறுத் தாதுடன்
துன்னு கானம் தொடரத் துணிவதோ?அன்னை யே!அறம் பார்க்கிலை யாமென்றான்.’-என்றும்
‘வரிவில் எம்பி மண்ணர சாயவற்கு உரிமை மாநிலம் உற்றபின் கொற்றவன்
திருவின் நீங்கித் தவம்செயு நாளுடன் அருமை நோன்புகள் ஆற்றுதி யாமன்றே!’- என்ற செய்யுள்களையும் ஒப்பு நோக்கல் தகும்.
ஸ்ரீ கிருஷ்ணன், ‘மாஸூச – சோகத்தைக் கொள்ளாதே’ என்று ஒரு வார்த்தை அருளிச் செய்ய, அருச்சுனன்,
‘சந்தேகங்கள் எல்லாம் நீங்கினவனாய் நிலைத்து நிற்கிறேன்; உனது வார்த்தையின் படி செய்கிறேன்,’ என்று தரித்தானே அன்றோ?

பட்டர், ‘முக்காலத்தில் உள்ளவற்றையும் இப்போதே பெறவேண்டும் என்று விடாய்த்த இவர்க்கு அப்படியே அனுபவிக்கலாம்படி,
கால சக்கரத்தன் ஆகையாலே, கால வேறுபாட்டிற்குரிய காரணங்களைக் கழித்து, நிகழ்காலத்திற் போலே அனுபவத்திற்குத்
தகுதியாகும்படி காலத்தை ஒரு போகி ஆக்கிக்கொடுக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச் செய்வர்.

கால சக்கரத்தன்’ என்றது, ‘சக்கரம் போன்று சுழன்று வருகின்ற காலத்துக்கு நிர்வாஹகன்’ என்றபடி.
‘ஒரு போகி ஆக்கி’ என்றது, ‘நடுவில் தடையில்லாத வெளியாக்கி’ என்றபடி. அல்லது, ‘ஒரே காலத்தில் பலமாக்கி’
என்னலுமாம். பட்டர் நிர்வாகத்துக்கு நிதானம், ‘கால சக்கரத்தானுக்கே’-என்ற நாலாவது திருப்பாசுரம்.

‘மேல் திருவாய்மொழியில் விரும்பியபடியே இத் திருவாய்மொழியில் அனுபவிக்கிறார்’ என்று அருளிச்செய்யக் காரணம் வருமாறு :
‘தோளி சேர் பின்னை’ என்றதற்கு, ‘கோவை வாயாள்’ என்ற பாசுரம்.
‘கொம்பு போல்’என்ற பாசுரத்திற்கு, ‘மதிள் இலங்கைக் கோவை வீய’ என்ற பாசுரப்பகுதி.
‘பாலனாய்’ என்ற பாசுரத்திற்கு, ‘கால சக்கரத்தோடு’ என்ற பாசுரம்.
‘பாவியல் வேத நன்’ என்ற பாசுரத்திற்கு, ‘குரை கழல்கள் நீட்டி’ என்ற பாசுரம்.
மற்றைப் பாசுரங்களையும் இங்ஙனமே கண்டுகொள்க.

மூன்றாம் திருவாய் மொழியிலே
இவருடைய ஆர்த்தி தீர்க்கும்படி ஸம்ஸ்லேஷித்த சர்வேஸ்வரன் இவருடைய அபி நிவேச ஹேதுவான அநு ராக விசேஷத்தைக் கண்டு
அவனும் இவர் பக்கலிலே அத்யந்த அபி நிவிஷ்டனாம் படி அநு ரக்தனாம் படியை அநு சந்தித்த இவர்
அவனுடைய பிராப்தி பிரதிபந்தக ஸமஸ்த விரோதி நிவர்த்தகத்வத்தையும்
ரக்ஷகத்வ ப்ரயுக்த சம்பந்தத்தையும்
சர்வாத்ம பாவாதியால் வந்த நாராயணத்வத்தையும்
அநு கூல சத்ரு நிராசன சாமர்த்யத்தையும்
ஸுசீல்யாதி குண யோகத்தையும்
ரக்ஷண உபகரண வத்தையையும்
அநந்யார்ஹம் ஆக்கி அடிமை கொள்ளும் ஸ்வ பாவத்தையும்
சர்வ வ்யாபகத்வத்தையும்
பாரமார்த்திக பரத்வ உஜ்ஜ்வல்யத்தையும்
அபரிச்சேத்ய மஹாத்ம்யத்தையும்
அநுபவித்து -ஏவம்விதனான சர்வேஸ்வரன் தம்முடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் ஸ்ரக் வஸ்திர ஆபரணங்கராகாதிகளோ பாதி
தனக்கு அதிசயித போக்யமாம் படி விரும்பின பிரணயித்தவத்தை அருளிச் செய்து ஸந்துஷ்டாராகிறார்

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள்இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குலநல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.
–4-3-1-

‘நப்பின்னைப் பிராட்டி, ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் தொடக்கமானார் உனக்குத் தேவிமார்களாய் இருக்க. நீ அவர்கள் பக்கலிலே இருக்கும் இருப்பை என் பக்கலிலே இருக்கும்படி என் இருப்பே உனக்கு எல்லாமாய்விட்டது,’ என்கிறார் ஆதல்;
அன்றிக்கே, ‘அடியார்களுடைய பகைவர்களை அழிக்கிற இடங்களில் அந்த அந்தச் சமயங்களில் வந்து முகங்காட்டி அடிமை செய்யப் பெற்றிலேன் நான்; இங்ஙனே இருக்கவும், என் மனத்தினையே இனிய பொருளாகக் கொள்வதே!’ என்கிறார் ஆதல்.

இவளை அணையலாமாகில் இவற்றை முரித்தல் ஆகாதோ?’ என்று தன்னைப் பேணாதே
அவற்றின் மேல் விழுந்தான் -ஸ்ரீ கிருஷ்ணன் வந்து தோன்றினவாறே பிரீதியின் மிகுதியாலே புன்முறுவல் பூத்தாள்; அப்போது அதரத்தில் பழுப்பு இருந்தபடியைத் தெரிவிப்பார், ‘கோவை வாயாள்’ என்கிறார்

சர்வ இரட்சகனான பெருமாளை விட்டு, மதிளை இரட்சகம் என்று இருந்தானாயிற்று.
இது அன்றோ தான் தனக்குச் செய்து கொள்ளும் காவல்?

ஸ்ரீமதுரையில் உள்ள பெண்களைப் போல நின்று, ‘தரையில் உள்ள இராமனுக்கும் தேரில் உள்ள இராக்கதனுக்கும் போர் ஏற்றது அன்று,’ என்று சொல்லப் பெற்றிலேன்.எருது ஏழ் அடர்த்தல் தொடக்கமான காலங்களிலே பிறந்த சிரமம் மாற, குளிர்ந்த உபசாரம் பண்ணிற்றிலேன்

பூவை வீயாம் நின் மேனிக்கு –பூவால் அல்லது செல்லாத நின் திருமேனிக்கு.-அன்றிக்கே, ‘பூவைப்பூவோடு ஒத்த திருமேனி’-வீ என்பது பூவுக்குப் பேர்-‘வெண்ணெய் நாற்றத்திலே பழகினார் இளம் பருவமுடையார் இருவர் சாந்தின் வாசி அறிந்தபடி என்?’ என்று,
அதனால் வந்த உவகை தோன்றப் புன்முறுவல் செய்தாள்; ‘நல்ல சாந்து இடுக்கைக்காக இது ஒரு முகம் இருந்தபடி என்தான்!’ என்கிறான். ஆக, ‘நற்சரக்குப் பரிமாறுவார். அது கொண்டு பயன் கொள்ளுவார் உடம்பின் வாசி அறிய வேண்டுங்காண்;
நம் அண்ணர் உடம்புக்கும் நம் உடம்புக்கும் ஈடான சந்தனம் தா,’ என்று, இப்படித் தரம் இட்டுப் பூசப்படுகின்ற திருமேனி என்பதனைத் தெரிவிக்கும் பொருட்டு, ‘மேனி’ என வேண்டாது கூறுகிறார்.ஸூ கந்த மேதத் –-அப்படி சாந்தில் உள்மானம் புறமானம் அறியுமவனுக்கு பூசும் சாந்து என் நெஞ்சமாய் விடுவதே –

—————-

பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே
.–4-3-2-

இவர் அவனுக்கு என்று சொல்ல வேண்டா; இவர் உண்மையாகில் அவனுக்கேயாய் இருக்கும்; ஆதலின், ‘எனதுடைய’ என்கிறார்.-இவர் நெஞ்சினைக் காட்டிலும் வாக்குப் பரிமளம் விஞ்சி இருக்கும் போலே காணும்.-சாந்து மணம் கொடுப்பது பூவை அணிந்த பின்பே அன்றோ?ஆஸ்ரித கர ஸ்பர்சம் விரும்புவன் அன்றோ -இவர் அவனுக்கு என்று சொல்ல வேண்டாமே-ஆழ்வார் எனக்கு சொன்னாலும் அவனுக்கே -நாம் அவனுக்கே சொன்னாலும் நமக்கே –நான் -அஹம் -மாறாடி அன்றோ இருக்கும்-நானே அவர் தனம் ஆனபின்பு என்னுடையது எல்லாமே உன்னுடையதே-

வான் பட்டாடையும் அஃதே – பூ கட்டியே இ றே சாந்து மணம் கொடுக்கும் -நெஞ்சின் பெருமை வாசகத்தாலே தானே தெரியும் – அந்தச் சொற்கள் தாமே புருஷோத்தமனாம் தன்மைக்கு அறிகுறியான பரிவட்டமும்.-இவருடைய பா, நல்ல நூல் ஆதலின், வான் பட்டாடை ஆயிற்றுக் காணும்;-‘நல்ல நூலாக வேண்டும்’ என்று அடியிலே நோற்று நூற்றவர் அன்றோ?-“கண்ட வாற்றால் தனதே உலகென நின்றான் றன்னை வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.” (திருவாய். 4. 5 : 10.)-நூற்றல்; பிரபந்தத்தைச் செய்தல்.-தேசமான அணிகலனும் – தனக்கு ஒளியை உண்டாக்குகிற ஆபரணமும்.
என் கைகூப்புச் செய்கையே – சேரபாண்டியன் தம்பிரானைப் போன்று, அவனுக்கு ஒளியை உண்டாக்கா நின்றது இவருடைய அஞ்சலி.–ஏக மூர்த்திக்கே.– அத்விதீயமான திரு மேனியை உடையவனுக்கு-‘‘சர்வகந்த :’ என்கிற திருமேனியை உடையவனுக்குப் பூசும் சாந்து என் நெஞ்சம் ஆவதே! இது சேருமே!’ என்கிறார்.-

————-

ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே
.–4-3-3-

இத் தலையை உனக்கு ஆக்கி அத்தாலே கிருதக் கிருத்தியன் ஆனாயே!’ என்கிறார். ஏகமூர்த்தி‘படைப்புக்கு முன்னே இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது,’இரு மூர்த்தி-காரண கார்ய அவஸ்தைகள் இரண்டையும் சொன்னபடி-மூன்று மூர்த்தி -சாத்விகமாயும் இராஜசமாயும் தாமசமாயும் மூன்று விதமான அகங்காரங்களைச் சரீரமாகக் கொண்டிருக்கும் இருப்பைச் சொல்லுகிறது-பல மூர்த்தியாகி ஐந்து பூதமாய் –பதினோரிந்திரியங்களையும், குணங்களோடு கூடிய ஐம்பெரும்பூதங்களையும் சொல்லி -அவற்றைத் திருமேனியாகவுடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.-இரண்டு சுடராய் -படைத்த சூரிய சந்திரர்களைச் சொல்லுகிறது.-இவற்றைக் கூறியது, காரியமான பொருள்கள் எல்லாவற்றிற்கும் உபலக்ஷணம்.-அருவாகி –-இவற்றை உண்டாக்கி இவைகள் பொருள் ஆகைக்காகவும் பெயர் பெறுகைக்காகவும் தான் அவ்வவ் வுயிருக்குள் அந்தராத்துமாவாய் அநுப் பிரவேசித்து நிற்கும் நிலையைச் சொல்லுகிறது.

நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே –பயிரைச் செய்து செய்த்தலையிலே குடி கிடக்குமாறு போன்று, படைக்கப்பட்ட பொருள்களைப் பாதுகாத்தற்காகக் கண் வளர்ந்தருளுகின்றவனே!’-திருவருள் புரிதலையே இயல்பாக வுடையன் ஆகைக்கு அடியான சம்பந்தத்தை யுடையவன்’ என்பார், ‘நாராயணனே’ –ஆவி அல்லல் மாய்த்தது –
உன் திருவுள்ளத்தில் உண்டான துன்பம் ஒருபடி அழியப்பெற்றதே! என்றது,
‘இத்தலையை ஒருபடி கரைமரஞ் சேர்த்து நீ கிருதக்கிருத்யன் ஆனாயே!’ என்றபடி.
அன்றிக்கே, ‘என் உள்ளமானது துக்கம் இல்லாததாயிற்று,’ என்னுலுமாம்.

ஏகமூர்த்தி என்பது, பரத்துவத்தைச் சொல்லுகிறது’ என்றும், ‘இருமூர்த்தி’ என்பது, வியூகத்தைச் சொல்லுகிறது; அதாவது, ‘வாசுதேவ சங்கர்ஷணர்களைச் சொல்லுகிறது’ என்றும்,‘மூன்று மூர்த்தி என்பது, ‘வியூகத்தில் மூன்றாம் மூர்த்தியான பிரத்யும்நரைச் சொல்லுகிறது’ என்றும்,‘பல மூர்த்தி’ என்பது, அவதாரங்களைச் சொல்லுகிறது என்றும்,
‘ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!’ என்பது, இன்னார் படைப்புக்குக் கடவர், இன்னார் பாதுகாத்தலுக்குக் கடவர் என்கிற படியாலே சொல்லுகிறது’ என்றும் நிர்வஹிப்பார்கள் உளர்.
உளர்’ என்பதனாலே, இவ்வாறு பொருள் கூறுதல் தமக்குத் திருவுள்ளம் அன்று என்பது போதரும்.

—————-

மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!
பூத்தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின்
பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.–
4-3-4-

ஆழ்வார் உடைய சத்தையே-அவனுக்கு அலங்காரம் –மாய்த்தல் எண்ணி –‘இன்னாரை மாய்த்தல் எண்ணி என்னாமையாலே உலகத்தையே அழிப்பதற்காக அன்றோ
அவள் கோலி வந்தது?’ என்பதனைத் தெரிவிக்கிறார்.-கேசி வரும் பொழுது நாரதர் பயந்தாரே இப்படியே –‘சரீரியை நலிந்தால் சரீரம் தன்னடையே அழிந்துவிடும். அன்றோ?
உயிரிலே நலிந்தால் உறுப்புகள் தோறும் தனித்து நலிய வேண்டாவே அன்றோ?
உலகங்கட்கெல்லாம் ஓர் உயிரே அன்றோ அவன்?வாய் முலை தந்த – அவன் திருப்பவளத்திலே நஞ்சினைக் கொடுத்தாற் போலே இருக்கையாலே ‘தந்த’ என்கிறார். பேயாய் வருகை அன்றிக்கே, தாயாயும் வந்தாள்-உயிர் மாய்த்த – அவள் கோலி வந்ததனை அவள் தன்னோடே போக்கினபடி.-மாய ஆயனே – ஆச்சரியமான ஆற்றலையுடைய ஆயனே!
இவனும் பிள்ளையாயே முலையுண்டான்; அவளும் தாயாய் முலை கொடுத்தாள்;
பொருளின் தன்மையாலே முடிந்தாள் இத்தனை.

வாமனனே –அந்த அவதாரத்தில் பூதனை முலை கொடுத்தால் அதனை மாற்றுவதற்கு உரிய மருந்தாக முலை கொடுக்கைக்கு-ஒரு தாயாகிலும் உண்டே அன்றோ அங்கு?
அதுவும் இன்றிக்கே,-எதிரிகள் இருந்த இடத்தே தான் சென்று கிட்டுமது?-‘சீராற் பிறந்து சிறப்பால் வளராது, பேர்வாமன் ஆகாக்கால் பேராளா!’ என்று வயிறு பிடித்தார்கள்?

மாதவா –‘தீ நாள் திருவுடையார்க்கு இல்’ என்கிறபடியே, இந்த அபாயங்களில் அவன் தப்பியது அவள் நெஞ்சோடே யிருந்து நோக்குகையாலே அன்றோ? -சஹ்ருதயமாக -உளமாக-என்றுமாம் –குளிர்ந்த மாலையால் அல்லது செல்லாதபடியாய் ஆதி ராஜ்ய சூசகமான உன்னுடைய திருமுடிக்கு விரும்பிச் சார்த்தும் மாலை,-என் உயிர் –-என் சத்தையாய் விட்டது.

————-

கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!
ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்றுஎன்று,
ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும்,
கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே
.–4-3-6-

மேல் எல்லாம் அவனுடைய காதலைச் சொல்லிக் கொண்டு போந்தார்; இப்போது அவனுடைய காதலின் மிகுதி தம்மையும் காதலன் ஆக்கிற்று என்கைக்காகத் தம்முடைய காதலைச் சொல்லுகிறார்.-நீ என்னைக் கிட்டாது ஒழிந்தாயே யாகிலும் உன் சத்தையே எனக்கு தாரகாதிகள்-கால சக்கரத்தொடு வெண்சங்கம் கை ஏந்தினாய் –-இவர் கூப்பிட்ட பாசுரந்தான் இதுவாயிற்று. -மூன்று விழி சொற்கள்-என்று என்று–1- கையும் ஆழ்வார்களுமான அழகையும் –2-காலத்திற்குத் தகுதியாக ஆபத்தில் துணையாயினமையையும்,-3–இவை இல்லாவிடிலும் விட ஒண்ணாத சம்பந்தத்தையும் சொல்லி. தனித்தனியே ஆழங்காற்பட்டமையைத் தெரிவிக்கிறது.-பரமபதத்திலே இருந்தாலும் நிலை குலைந்து வரவேண்டும்படி பெருமிடறு செய்து கூப்பிடுகின்றமை போதரும்.-“வாராயாகிலும் கோலமாம்’ என்பான் என்?’ என்னில், ‘வாராது ஒழியக்கூடாது; கூடாதது கூடிலும் என் நினைவு இது,’ என்கிறார்.-என்னை அடியிலே -(திருவடிகளிலே’ என்பதும், ‘ஆதிகாலத்திலே’ என்பதும் பொருளாம்-)இப்படி ஆக்கினாயே!’ என்பது கருத்து. அடிவிடில் ‘நின்னலால் இலேன்காண்’ என்பாரே!சென்னிக்கு போக்யமுமாம் –-தாரகாதிகளுக்கும் உப லக்ஷணம்

———-

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே
.–4-3-7-

‘மேலே கூறிய அன்பும் அதற்குத் தகுதியான செயல்களும் இன்றிக்கே இருக்கிலும்
என் உயிரே உனக்கு ஜீவனத்திற்கு ஏது ஆவதே!’ என்கிறார்.மண் கொண்ட கோல வாமனா –
மண் கொண்ட பின்பும் வாமன வேஷம் இவர் திருவுள்ளத்திலே ஊற்றிருந்தபடி.ஊன்றி இருந்த படி –இந்திரனுக்கு இராச்சியம் கொடுக்கை அன்றிக்கே, தம்மை அனுபவிப்பிக்கைக்காக அவ்வடிவு கொண்டான் என்று இருக்கிறார்.இதனால்,பிராப்தியைச் சொல்லிற்று.-திருவடிதான் அஞ்சலிக்கு விஷயமுமாய் அஞ்சலியினாலே சாதிக்கப்படுகின்ற பொருளுமாய் அன்றோ இருப்பது? இந்திரனுக்கு இராச்சியம் கூறுபட்டாற்போலே இவர்க்கும் அத்திருவடிகளில் அழகு கூறுபட்டதாதலின், ‘குரை கழல்கள்’ என்கிறார்.-‘அவனுக்குச் சாதனமானது இவர்க்குச் சாத்தியம் ஆயிற்று,’ என்றபடி.
சேஷத்வ ராஜ்ஜியம் இவருக்கு -புருஷார்த்தமே திருவடியே தானே

மாயனே –‘ஓர் அஞ்சலி மாத்திரத்தாலே உன்னை அடையலாம்படி இருப்பதே! இது என்ன ஆச்சரியந்தான்!’ என்கிறார்.-‘உரை கொள் சோதித் திரு உருவம்-அது அது’ என்று வாய் புலற்றும்படி இருக்கிற சோதி மயமான திருமேனி’-பேச்சுக்கு அப்பாற்பட்ட திருமேனி’ -மாற்றும் உரையும் அற்ற திருமேனி-என்னது ஆவி மேலது – இப்படி வேறுபட்ட சிறப்பினையுடைய உன் திருமேனி என் உயிரின் மேலது. நித்தியசூரிகளுக்குப் போக்கியமான திருமேனிக்குத் தாரகம் முதலானவைகள் என் ஆத்துமா ஆவதே!

————

என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?
–4-3-8-

‘ஒருவரை ஒழிய ஒருவர்க்குச் செல்லாதபடி பிறந்த கலவி, பேச்சுக்கு நிலம் அன்று,’ என்கிறார்.

என்னது ஆவி மேலையாய் –1-‘என் ஆத்துமாவைப் பெற்று அதனால் வந்த பிரீதி பிரஹர்ஷத்தை யுடையாய்’ என்னுதல்.-அன்றிக்கே.2- ‘என்னைப் பெற வேண்டும் என்னும் ஆசையை உடையாய்’ என்னுதல். மேலையாய் – எச்சம்.-அன்றிக்கே, 3-‘என்னது ஆவி மேலையாய்!’ என்பதனை விளிப்பெயர் என்னுதல். -சம்போதனம் –‘இவரைப் பெற்ற பிரீதியாலே பரந்து நிறைந்து நிற்றலும் புதுக்கணித்தது -ஒருவனைப் பிடிக்க நினைத்து அவன் பக்கல் உண்டான ஆசையாலே ஊரை வளைவாரைப் போலே, தம்மை அகப் படுத்துகைக்காகப் பரந்து நிறைந்து இருப்பவன் ஆனான்

என்னது ஆவியும் உன்னது; உன்னது ஆவியும் என்னது – என்னுடைய ஆவி உன்னது; உன்னுடைய ஆவி என்னது. என் சொரூபம் நீ இட்ட வழக்கு; உன் சொரூபம் நான் இட்ட வழக்கு.-இவ்விடத்தை ஆளவந்தார் அருளிச் செய்கையில் இருந்த முதலிகளிற் சிலர், ‘இவ்வாத்துமாவின் சொரூபம் அவன் இட்ட வழக்கு என்பது கூடும்; அவன் சொரூபம் இவன் இட்ட வழக்காவது என்?’ என்று கேட்க,
‘இவன் தன்னை அவனுக்கு ஆக்குவான் என்ற அன்று கர்மம் தடைசெய்யவும் கூடும்;
சர்வேசுவரன் தன்னை இவன் இட்ட வழக்கு ஆக்கும் அன்று தடைசெய்பவர் இலர்; ஆன பின்பு, அதுவே நிலை நிற்பது
மேலும், ‘இவன் சொரூபம் அவன் இட்ட வழக்கு ஆகக் கூடுமோ?’ என்று இதிலே காணும்
சந்தேகிக்க வேண்டுவது,’ என்று அருளிச் செய்தார்.
நிரந்குச ஸ்வ தந்த்ரம் அடியாக கொண்ட ஆஸ்ரித பாரதந்திர கல்யாண குணம்
அரசன் தன் குழந்தை காலால் தனது கன்னம் அடித்துக் கொள்வது போலே
காளி தாசன் கதை -பொன் கழஞ்சு பண்ணிப் போடச் சொன்னானே-இப்படிப்பட்ட உன்னுடைய காதல் குணத்தை என்னால் பாசுரம் இட்டுச் சொல்லலாய் இருந்ததோ?’ என்கிறார்-

———–

உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–4
-3-9-

உன் கரை இல்லாத காதல் என்னுடைய பேச்சுக்கு நிலம் அன்று,’ என்கிறார்.உன் காதல் குணத்தை அனுபவித்துக் குமிழிநீர் உண்டு போமித்தனை போக்கிப் பேசித் தலைக்கட்ட மாட்டுகின்றிலேன்.-‘நித்தியஸூரிகள் பித்து ஏறி ஏத்தக் கண்டேன்; அத்தாலே காதல் மையல் ஏறினேன்;-என்னுடைய கலவியிலும் வடிவிற் பிறந்த ஒளியிலும் குற்றம் இன்றிக்கே இருக்கின்றவனே!-நித்திய ஸூரிகள் பரமபத்தியை உடையவர்களாய்க் கடல் கிளர்ந்தாற்போலே இரைத்துக்கொண்டு ஏத்தக் காண்கையாலே
யானும் ஏத்தினேன் அல்லது, யான் ஆற்றலுடையனாய் ஏத்தினேனோ?’ என்கிறார்.

————

யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும்
தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே
 –4-3-10-

உனது பெருமையின் எல்லை உனக்கும் உன் மணாளனுக்கும் தெரியாதே என்பர்
ஒரு மிடறாக ஏத்தினாலும் -எத்தின இடம் அளவு பட்டு ஏத்தா இடம் விஞ்சி இருக்குமே -இவன் விஷயத்தில்-சர்வரச ரச்யத்தை போக்யதை யாலும் ஏத்தினேன் பிரணயித்வம் உபகரித்த உபகாரத்தாலும் ஏத்தினேன்-ஏத்தாவிடில் பிழையேன் உஜ்ஜீவிக்க ஏத்தினேன் – கலியர் மேல் விழும் போது விவேகித்தோ இழிவது-சக்தி இல்லாவிடிலும் உஜ்ஜீவனம் பெற ஏத்தினேன்-தேச கால விப்ரக்ருஷ்டமான அவனுடைய படிகளை காண வேணும் என்று ஆசைப்பட்ட நான் உஜ்ஜீவைக்காக ஏத்தினேன் -பரிச்சேதிக்கைக்காக அன்று –

————-

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–
4-3-11-

இஃது ஒழியத் தரிக்கைக்கு உபாயம் இல்லை என்று தெளிந்து.இவர் சர்வேசுவரனுடைய காதல் குணத்தைப் பேசத் தொடங்கியது, பேசித் தலைக்கட்ட வல்லவராய் அன்று;

‘பொய்யில்’ என்பதனைத் திருவாய்மொழி எல்லாவற்றுக்கும் அடைமொழியாகக் கொள்க.
‘பொய்யில்லாத ஆயிரம்’ என்ற போதே அவ்வோபாதி இப்பத்துப் பாசுரங்கட்கும் வருமே அன்றோ?-அவாப்த சமஸ்த காமனான சர்வேசுவரன் ஒரு நித்திய சமுசாரியோடே இப்படி விரும்பி வந்து கலந்து இவருடைய உயிர் முதலானவற்றையே தனக்கு உரிய இன்பப் பொருள்களாக இருந்தான் என்கிற காதல் குணத்தில் பொய் இன்றிக்கே இருக்கிற பத்து

பூமியிலே எம்பெருமானாரைப் போலே-பர சமுர்த்தியே ஏக பிரயோஜனம் – ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே பல காலம் இருந்து.-இங்கே இருக்கச் செய்தே பரமபதம் தங்கள் சிறு முறிப்படி செல்லும்படி ஆள்வர்கள்.

‘வையம் மன்னி வீற்றிருந்து’ என்கிற இடத்தில் ‘நம்மைப் போலே வாய் புகு சோறாகப் பறி கொடாதே,–ஆழ்வார் போலே -32 வருஷம் மட்டும் –-பாவியேன் பல்லிலே பட்டு தெறிப்பதே – பல காலம் பூமியிலே ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே ‘நாட்டாரோடு இயல்வொழிந்து’ என்கிறபடியே, தங்கள் வேறுபாடு தோன்ற இருக்கப் பெறுவர்கள்,’ என்று சீயர் உருத்தோறும் அருளிச்செய்வர். இளமையிலே பட்டரைப் பறி கொடுத்தவர் அன்றோ அவர்?
தமக்கு கிட்டாத ஆச்சார்யர் இழக்க வேண்டாம் – –-முட்டாக்கு போட்டு தீட்டு காத்து கைம்பெண் போலே நஞ்சீயர் இருந்தாரே –

—————

கோவான வீசன் குறை எல்லாம் தீரவே
ஓவாத காலத் துவாதிதனை -மேவிக்
கழித்தடையக் காட்டிக் கலந்த குணம் மாறன்
வழுத்துதலால் வாழ்ந்துது இந்த மண் –33–இந்த ஜகத்தில் உள்ளார் எல்லாரும் எல்லாம் சத்தை பெற்று
வாழ்ந்தார்கள் –-வையம் மன்னி வீற்று இருந்து –என்று இறே பல சுருதி –
அன்றிக்கே-விஸ்வம் பரா புண்யவதீ-என்று ஆழ்வார் கால் தரித்து இருக்கையாலே
பூமி பாக்யவதியாகி வாழ்ந்தது ஆகவுமாம்-

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading