ஸ்ரீ சாரீரிக மீமாம்ஸையைப் பற்றின அறுபத்திரண்டு வார்த்தா மாலை.-(ஸ்ரீகாஞ்சி-அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் )

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

அர்வாஞ்சோ யத்பதஸர ஸிஜத்வந்த்வ மாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யான்வயமுபகதா தேசிகா முக்திமாபு :
ஸோயம் ராமாநுஜமுநிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
யத்ஸம்பந்தாத் அமநு தகதம் வர்ண்யதே கூரநாத : ||

1-இவ் விருள் தரு மா ஞாலத்திற் பிறப்பது வெறுக்கத் தக்கதாயினும் * இச் சுவை தவிர யான் போய் இந்திரலோகமாளு மச்சுவை பெறினும் வேண்டேன் * என்றும் * ஸம்ஸார ஏஷ பகவந் ! அபவர்க்க ஏவ * என்றும் * வைகுண்டவாஸேபி ந மேபிலாஷ –-என்றும் அநுஸந்திக்க நேரும் போது உள்ளத்திலுண்டாகின்ற உகப்பு நமக்கு எப்போதும் குன்றாது இருக்குமாகில் மீண்டுமீண்டும் இந் நிலத்தில் பிறக்க வேணுமென்கிற குதூஹலமே நமக்கு உற்றதாகும். ஆண்டாள்*ஏற்றைக்கு மேழேழ் பிறவிக்கும் * என்றருளிச் செய்கையாலே அவள் இந் நிலத்தில் பல பிறவிகளும் பிறந்து பேரின்ப மநுபவிக்கப் பாரித்தாளென்பது தெரிய வரும்.நாமும் அவ் வாண்டாளுடைய ஆசம்ஸையின் படியே ஏழேழ் பிறப்பும் பிறந்து பரஹ்மானந்த அநு பவம் பண்ணக் குதூஹலங் கொள்வோம்.
இருள் தரு மா ஞாலத்துளினிப் பிறவி யான் வேண்டேன் * என்றும் பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பமாதலால் பிறவி வேண்டேன் * என்றும் வெறுத்துப் பேசின பேச்சு நமக்கு வேண்டா. இப்போது நாம் பிறந்து எவ்விதமான ஆனந்தத்தை யனுபவித்து வருகிறோமோ, இவ் விதமான ஆனந்தத்திற்குச் சிறிதும் லோப மில்லாமல் மேன் மேலும் எத்தனை பிறவிகளை எம்பெருமான் தந்தருளினாலும் பெரு மகிழ்ச்சியுடன்
அவற்றை வரவேற்போமாக

2-நன்மைகளுக்குதவாத த்வீபாந்தரங்களிலே நாம் பிறந்திலோம் ; ஸகல ஸ்ரேயஸ்ஸுக்களுக்கும் ஆஸ்பதமான ‘ஐம்பூத்வீபே பாரத வர்ஷே பரத கண்டே ‘ ஜனிக்கப் பெற்றோமே ; இது தன்னிலும் கிரிமி கீட பசு பக்ஷிகளாகப் பிறவாமலும் * துர்லபோ மாநுஷோ தேஹ * என்றும் மானிடப் பிறவி யந்தோ மதிக்கிலர் *-என்றும் புகழ்ப் படுகிற மானிடப் பிறவி பெற்றோம். இது தன்னிலும் வேத வேதாந்த வேதாங்கங்களை நிஸ் ஸங்கோசமாக அதிகரிப் பதற்குப் பாங்கான ஜாதியிலே ஜனிக்கப் பெற்றோம் ; அது தன்னிலும் *ஆழ்வார்களையுமருளிச் செயல்களையும் தாழ்வா நினைத்து நரகில் வீழ்வார்களது வகுப்பிலன்றிக்கே * தேவு மற்றறியேன் குருகூர் நம்பி பாவினின்னிசை பாடித் திரிவனே என்னும் வகுப்பிலும், அமானவனும் நம்மைக் கரத்தாலே தீண்டல் கடனாம்படி மணவாள மாமுனிவன் பொன்னடியாஞ் செங்கமலப் போதுகளை யுன்னிச் சிரத்தாலே தீண்டுங் குடியிலும் பிறக்கப் பெற்றோம்.-அவாங் மநஸ கோசரமென்று ஓதப்படுகிற எம்பெருமானுடைய ஆனந்தமும் நம்முடைய ஆனந்தத்திற்கு நிகராகுமோ?யெனக்கெதிரில்லை யெனக் கெதிரில்லை யெனக் கெதிரே என்று வானம் பிளக்க உத்கோஷித்து ஸஸம்பரம ந்ருத்தம் செய்ய வன்றோ நாம் பிறந்திருக்கிறோம்.

3- இத்தகைய மஹா பாக்யம் பெற்ற நமக்கு “புநரபி ஜநநம் புநரபி மரணம் புநரபி ஜநநீ ஜடரே சயநம் ” என்னும் படியான ஸம்ஸாரம் மறுவலிடாதாயினும் நாம் புநஸ் புநஸ் ஜன்மத்தையே பகவத் ஸந்நிதியில் பிரார்த்திக்கக் குதுகலிக்கின்றோம்.-திருநாட்டிலே சென்று என்ன செய்யப் போகிறோம்.அங்கு ஸ்ரீ பாஷ்ய பகவத் விஷயாதிகள் ஸேவிக்க ப்ரஸக்தி யுண்டோ? ஸ்ரீவசந பூஷண ஆசார்ய ஹ்ருதயாதிகள் அநுஸந்திக்க அவகாசமுண்டோ? * ஏதத் ஸாம காயந் நாஸ்தே * என்று உபநிஷத்து ஓதின படி ஹாவு ஹாவு ஹாவு என்று கானம் பண்ணிக் கொண்டிருக்கலாமத்தனை. இந்த கானம் யாருக்கு வேணும்? இங்கு நாம் ஓதுகிற உபய வேதங்களையும் ஸ்தோத்ரங்களையும் ரஹஸ்யங்களையும் நித்ய ஸூரிகளும் முக்தாத்மாக்களும் கேட்டு அவர்களும் எம்பெருமானுடைய நியமனம் பெற்று இங்கே வந்து பிறக்க ஆசைப்படா நிற்க, நாம் அங்கே போக நினைப்பது தகுதியோ?

4-நமக்குண்டான ஸதாசார்ய ஸம்பந்த வைபவாதிகள் காரணமாக ஒரு கால் நம்மை எம்பெருமான் அங்கே கொண்டு போக நினைத்தாலும் கொண்டு போய் விட்டாலும் ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே” என்கிற உபநிஷத்தையும், * அநாவ்ருத்திச் சப்தாதநாருத்திச் சப்தாத் என்கிற ப்ரஹ்ம ஸூத்ரத்தையும், * த்யக்த்வா தேஹம் புநர் ஐந்ம நைதி * என்ற கீதையையும் கிழித்தெறிந்து நாம் மீண்டுமிங்கே ஓடிவந்து விட வேணுமே யொழிய அங்கே தங்கி யிருக்கத் தகாதென்பது அடியேனுடைய திண்ணிய அத்யவஸாயம். நம்முடைய யஜூர் வேதத்தில் ஆறாவது காண்டத்தின் ஆரம்பத்தில்“ கோ ஹி தத் வேத யத்யமுஷ்மிந் லோகே அஸ்திவா ந வேதி” என்று ஓதப் பட்டுள்ளது. இதன் பொருள் தெரியுமோ? மேலுலகத்தில் சேமமுண்டென்று யார் கண்டார்? உண்டோ இல்லையோ என்று ஸந்தேஹிக்கும் படியாகவே யுள்ளது? என்பது இந்த வாக்யத்தின் தாற்பரியம். இதற்கு முன் வாக்யத்தில் – நாஸ்மால் லோகாத் ஸ்வேதவ்யமி வேத்யாஹு என்பதில் ) இந்த வுலகத்தை விட்டுப் போக விரும்பலாகா தென்றும் சொல்லிற்று. * ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே * என்றருளிச் செய்த திருமங்கை யாழ்வார் திருவுள்ளமுமிதுவே.

5- இவ் விபூதியில் நாம் பலவகையான இவ்விபூதியில் நாம் பலவகையான ஆனந்தங்களை யநுபவிக்கிறோம். லௌகிகமான ஆனந்தங்களை நெஞ்சாலும் நினைக்க வேண்டா.ஸ்வரூப அநு ரூபமாக நாம் அநுபவிக்கும் ஆனந்தங்கள் அபரிமிதம். வாசா மகோசரம்.* சீரார் திருவேங்கடமே திருக் கோவலூரே மதிட் கச்சி யூரகமே பேரகமே வெள்ளறையே வெஃகாவே பேராலி தண் கால் நறையூர் திருப் புலியூர் ஆராமஞ் சூழ்ந்த வரங்கமென்று-பதியே பரவித் தொழுந் தொண்டர்களாய்க் கொண்டு அனுபவிக்குமானந்தம் ஒருபுறமிருக்க நம் ஆழ்வார்களும் ஆசாரியர்களும் அரு மருந்தாக அருளிச் செய்திருக்கின்ற திவ்ய ஸுக்திகளை அப்பொழுதைக் கப் பொழுதென்னாரா வமுதமே ‘ என்னும்படி நித்யாபூர்வமான அம்ருதமாகப்பருகி நாமநுபவிக்குமானந்தம் இணை யற்றது. இவ்வானந்தத்திற்கு எந்த ஆனந்தமும் ஈடாகாதென்பது அதிசயோக்தி யன்று. அதிலும், நம் பிள்ளை தொடங்கி மணவாள மா முனிகளீறாக வுள்ள ஆசார்ய ஸார்வ பௌமர்களின் அமுதிலுமாற்ற வினிய திவ்ய ஸ்ரீஸுக்திகளை யனுபவித்து எய்துமின்பம் * நெஞ்சால் நினைப்பரிதால் என்னத் தகுமத்தனை. இதற்கு நாம் இட்டுப் பிறந்திருப்பது விலக்ஷணமான தொரு பாக்ய விசேஷ மன்றோ. அநல்பமான தபஸ்ஸின் பலனன்றோ?

6-அந்த திவ்ய ஸுக்திகளில் ஆழவிழிந்து அபூர்வார்த்தங்களை ஸதாசார்ய ஸன்னிதானத்தில் கேட்டு அவற்றை நெஞ்சில் தேக்கி வைத்துக் கொள்வது தான் நமக்கு ஜன்ம ஸாபல்யமாகும். ஆசார்ய சுச்ரூஷைகளுக்கு அவகாசம் பெறாதவர்களும் அவ் வர்த்தங்களை இழக்க வொண்ணாதென்று கருதியே அடியேனிப்போது சில வார்த்தா மாலைகளினால் அந்த அர்த்த விசேஷங்களை யெல்லாம் ஆஸ்திகர்களுக்கு அறிவிக்க விரும்பி யிருக்கின்றேன். உபய வேதாந்தங்களிலும் ஸ்ரீவசந பூஷணாதி ரஹஸ்யங்களிலும் மற்றும் ஸ்ரீராமாயண பகவத் கீதாதிகளிலும் முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னுமாக விளங்குகின்ற அர்த்த விசேஷங்களை எளிய வார்த்தைகள் மூலமாகவே வெளியிடக் குதூஹலங் கொண்டிரா நின்றேன்.-அறுபத்திரண்டு வார்த்தைகள் கொண்ட அனேக வார்த்தா மாலைகளுக்குள் இந்த வார்த்தா மாலையில் ஸம்ஸ்க்ருத வேதாந்தமாகிய (ப்ரஹ்ம ஸுத்ர மென்கிற) சாரீரக மீமாம்ஸையின் அரிய பெரிய பொருள்களைப் பற்றி யெழுதுகின்றேன். மிகக் கடினமான விஷயங்களையும் கூடுமான வரையில் எளிய நடையில் எழுதுவேன். ஆனாலும் விஷயத்தின் காடியம் நம்மால் தவிர்க்க முடியாமல் நிற்குமிடங்களுமுண்டு. அப்படிப்பட்ட விடங்களில் நாம் எவ்வளவு எளிதாக எழுதினாலுங்கூட சிலர்க்குப் பயன் படாமற் போகக் கூடும். அப்படிப்பட்ட சில விடங்களைப் பெரியார்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

7-வேதம் கர்ம காண்டமென்றும் ப்ரஹ்ம காண்டமென்றும் இரு வகுப்பாக வுள்ளது. பூர்வ பாகம் கர்ம காண்டமென்றும் உத்தர பாகம் ப்ரஹ்ம காண்டமென்றும் வழங்கப்படும். உபநிஷத்துக்களையே ப்ரஹ்ம காண்டமென்பது. பகவானுக்கு ஆராதந ரூபங்களான யஜ்ஞம் முதலிய கர்ம விசேஷங்களை விரிவாகக் கூரும் வேத பாகம் கர்ம காண்டமென்றும், அந்த கருமங்களினால் ஆராதிக்கப்படுகின்ற பகவானுடைய ஸ்வரூப ரூப குணங்களை விரிவாகக் கூறும் வேத பாகம் ப்ரஹ்ம காண்டம் (அதாவது உபநிஷத்து) என்றும் சொல்லிற்றாயிற்று.

8-கர்ம காண்டத்தில் தோன்றும் சங்கைகளைப் பரிஹரிப்பதற்காக ஜைமிநி யென்னும் மஹர்ஷி யெழுந்து பதினாறு அத்யாயங்களோடு கூடிய ஒரு சாஸ்த்ரத்தை யியற்றினார். அதற்குப் பூர்வ மீமாம்ஸை யென்று பெயர். இதில் பன்னிரண்டு அத்யாயங்களே ஜைமினி மஹர்ஷியால் இயற்றப்பட்டவை யென்றும், மேல் நான்கு அத்தியாயங்கள் காசக்ருத்ஸ்நர் என்பவரால் இயற்றப் பட்டவை யென்றும் ஒரு பக்ஷமுண்டு. இதைப் பற்றி இங்கு விசாரம் அப்ரஸக்தம். “ஜைமிநீயம் ஷோடச லக்ஷணம் * என்பது பொதுவான வார்த்தை. விருத்தி க்ரந்தத்தில்,பதினாறு அத்யாயங்களும் ஜைமிநி ப்ரோக்தமென்று கூறப் பட்டுள்ளது. (லஷணமென்று அத்யாயத்திற்குப் பெயர்.)

9-ப்ரஹ்ம காண்டமென்னும் உபநிஷத் பாகத்தில் தோன்றும் சங்கைகளைப் பரிஹரிப்பதற்காக வியாஸ மஹர்ஷி யெழுந்து நான்கு அத்யாயங்கள் கொண்ட வொரு சாஸ்த்ரத்தை இயற்றினார். அதற்கே சாரீரக மீமாம்ஸை யென்று பெயர்.உத்தர மீமாம்ஸை யென்றும் வழங்குவர். ப்ரஹ்ம ஸூத்ரம் என்பது இதனையே ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான்கு பாதங்களுள்ளன ஆகவே பதினாறு பாதங்கள் கொண்டது சாரீரக மீமாம்ஸை யென்றதாயிற்று.

10-இதில் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றி சர்ச்சை செய்து நிர்ணயிக்கும் பகுதிக்கு அதிகரண மென்று பெயரிடப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட அதிகரணங்கள் இந்த மீமாம்ஸையில் நூற்றைம்பத்தாறு உள்ளன. சில அதிகரணங்களில் ஒரே ஸுத்ரமிருக்கும். பல அதிகரணங்களில் பல ஸூத்ரங்களிருக்கும். மொத்தம் ஸூரங்களின் இலக்கம் ஐந்நூற்றுற்பத்தைந்து என்று கணக்கிடப் பட்டிருக்கின்றது.
ஆக, நான்கு அத்யாயங்களையும் பதினாறு பாதங்களையும் நூற்றைம்பத்தாறு அதி கரணங்களையும் ஐந்நூற்று நாற்பத்தைந்து ஸத்ரங்களையுங் கொண்டது ப்ரஹ்ம ஸூத்ர சாஸ்த்ர மென்றதாயிற்று

11-தத்வ ஹித புருஷார்த்தங்களை நாம் தெரிந்து கொள்வதற்கு உபநிஷத்துக்களே ஸாதனமாகும். அவ் வுபநிஷத்துக்களின் பொருள்களை ஸம்சயய விபர்யமற நிஷ்கர்ஷித்து விளக்கக் கூடியது ப்ரஹ்ம ஸூத்ர சாஸ்த்ரமே யாதலால் வேதாந்திகளுக்கு இதுவே புகலாயிற்று. ப்ரஹ்ஸுத்ரமென்கிற சாரீரக மீமாம்ஸையின் பொருளை நிஷ் கர்ஷமாகவும் நிஷ் கல்மஷமாகவும் தெரிந்து கொண்டவர்களே வேதாந்திகளென்றும் ப்ரஹ்ம ஜ்ஞானிகளென்றும் சொல்லத் தகுதி யுடையார்.

12-மஹர்ஷி ப்ரணீதங்களான ஸூத்ரங்களின் பொருளை நம் போல்வார் சிறிதும் அறிய கில்லார்களாதலால், நம் போன்ற அல்ப மதிகளிடத்தில் பரம கருணை கொண்ட பூருவர்கள் அந்த ஸுத்ரங்களின் அர்த்தத்தை விளக்கி பாஷ்யங்கள் இயற்றி யுள்ளார்கள். த்வைதம்,அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என மூன்று மதங்கள் உலக ப்ரஸித்தமாக வழங்குமவை. இம் மூன்று மதங்களிலும் பாஷயங்கள் அவதரித்துள்ளன.அத்வைத மதத்திற்காக சங்கராசாரிய ஸ்வாமிகள் பாஷ்யம் இயற்றினார். த்வைத மதத்திற்காக ஆனந்த தீர்த்த ஸ்வாமிகள் (மத்வாசார்யர்) பாஷ்யமியற்றினார். நமது விசிஷ்டாத்வைத மதத்திற்காக பகவத் ராமாநுஜாசாரய ரென்கிற ஸ்வாமி யெம் பெருமானார் ஸ்ரீ பாஷ்ய மருளிச் செய்தார். வட இந்தியாவில் அதிக ப்ரஸித்தி பெற்றுள்ள வல்லப மதம் நிம்பார்க்க மதம் முதலிய மதங்களுக்காகவும் பாஷ்யங்கள் தோன்றி யுள்ளன. சைவ மதத்திற்காக நீல கண்ட பாஷ்யம் தோன்றியுள்ளது. இப்படி மற்றும் பல பாஷ்யங்களிருந்தாலும் மத த்ரய பாஷ்யமென்று மூன்று பாஷ்யங்களே நமது நாட்டில் குலாவப் பட்டுலாவுவன.

13-விசிஷ்டாத்வைதிகளென்றும் ஸ்ரீ வைஷ்ணவர்களென்றும் பகவத் ராமாநுஜ தர்சநஸ்தர்களென்றும் வழங்கப் படுகின்ற நமக்கு ஸ்வாமியின் ஸ்ரீபாஷ்யமே ஜீவாது வென்பது சொல்லாமலே விளங்கும்.உபநிஷத்துக்களின் உண்மைப் பொருளை விளக்கி ஸூத்ரகாரருடைய உள்ளத்திற்கு அநு குணமாக நிஷ் பஷ பாதமாய் நிருமிக்கப்பட்டது ஸ்ரீராமாநுஜ பாஷ்யமே யென மேனாட்டுப் புலவர்களும் மெச்சி யுள்ளார்கள். அந்த ஸ்ரீபாஷ்யத்தின் உண்மைப் பொருளானது ஸ்ருத ப்ரகாசிகை முதலிய வியாக்கியான நூல்களின் உதவியினால் உணரப்பட வேண்டும். அதற்கு ஸாமன்ய சாஸ்த்ரங்களின் உதவி இன்றி யமையாதது. அப்படிப்பட்ட சாஸ்த்ரஜ்ஞர்கள் நெடு நாள் குருகுல வாஸம் செய்து ஸ்ரீபாஷ்யத்தை யதிகரித்து பாஷ்யாதிகாரிகளென்று பேர் பெற்றுச் சிறந்த வேதாந்திகளாகித் தத்வ ஹித புருஷார்த்தங்களைத் தெளிவாக உணர்ந்து நிரதிசய ஆனந்த சாலிகளாகின்றனர். அவ்வளவு அதிகாரம் வாய்க்கப் பெறாதவர்களையும் கைவிட மாட்டாத கருணை மிக்க நம் பூருவாசாரியர்கள் திவ்ய பிரபந்த தத் வியாக்யானங்களையும் ரஹஸ்ய தத் வியாக்யானங்களையும் மற்றும் பல திவ்ய கரந்தங்களையு மருளிச் செய்துள்ளார் களாதலால் ஸ்ரீ பாஷ்யத்தில் நேராக அவகாஹிக்க மாட்டாதவர்களும் இழவாமல் அதில் விவரிக்கப் பட்டுள்ள தத்வ ஹித புருஷார்த்தங்களை ஸதாசார்ய ஸகாசத்தில் உணரப் பெறுகின்றார்கள். அன்னவர்களது ஞானத்திலும் ஒரு குறை யில்லை குற்றமில்லை யென்பது மாத்திரமே யல்லாமல் ஸ்ரீ பாஷ்யாதிகாரிகளைக் காட்டிலும் மிக விசதமான ஞானத் தெளிவு பெற்றவர்களாகவும் விளங்குகிறார்கள்

14-ஆனாலும் ப்ரஹ்ம ஸத்திரத்தில் என்ன விஷயம் எந்த விதமாகச் சொல்லப் பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளப் பலர்க்கு அபிலாஷை யுண்டு. விஸ்தாரமாகத் தெரிந்து கொள்ளா விடினும் ஸார ஸங்க்ரஹமாக வாவது தெரிந்து கொள்ள வேணுமென்கிற விருப்ப முண்டாகி,அப்படித் தெரிவிப்பதொரு நூல் தமிழிலுண்டா வென்று பலரும் விசாரிப்பதுண்டு. ஸ்ரீபாஷ்ய மொழி பெயர்ப்பு, ஸ்ருத ப்ரகாசிகை மொழி பெயர்ப்பு என்றிப்படி சில நூல்கள் வெளி வந்தாலும் ப்ரஹ்ம ஸூத்ரத்தின் ப்ரமேயத்தை ஸாரமாகத் தெரிந்து கொள்வதற்கு உரிய நூல் ஒன்று இருக்க வேண்டியது அவசியமென்றே பல மஹான்கள் கருதுகின்றனர். அந்தக் கருத்தை நிறை வேற்றுவதற்காக மிகவும் ஊக்கங் கொண்டிருக்கிறேன்.தத் விஷாயகமான ஸுர்யோதயத்திற்கு இது அருணோதயமாக நினைக்கத் தகும்.

15-ப்ரஹ்ம ஸூத்ரத்தில் முதல் அதிகரணம் ஜிஜ்ஞாஸாதிகரணமெனப்படும்.
” அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா ” என்பது ஸுத்ரம். அத = கர்ம விசாரம் செய்து முடிந்த பிறகு, அத := கர்ம விசாரம் முடிந்த காரணத்தினாலேயே, ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா= இச்சைக்கு இலக்கான ப்ரஹ்ம் விசாரம் (செய்யத் தக்கது )என்று ஸுத்திரத்தின் மேல் பொருள் அறிக. கரம விசாரத்தைச் செய்து முடித்தவர்கள் அந்தக் கருமங்களினுடைய அற்பமும் அஸ்திரமுமான பலன்களில் நசை யொழிந்து மோக்ஷ புருஷார்த்தத்தை விரும்புவர்களாதலால் அப்படிப் பட்டவர்களுக்கு ப்ரஹ்ம விசாரம செய்யத் தக்கது என்றதாயிற்று. இதை இன்னமும் சிறிது விவரிப்போம். நன்றாக வேத மோதின் வொருவர் ஜைமினி மஹர்ஷியின் கர்ம மீமாம்ஸையில் சொல்லப் பட்ட நியாயங்களினால் ஜ்யோதிஷ்டோமம் முதலிய யஜ்ஞங்களின் (கருமங்களின்) தன்மை இன்னபடிப் பட்டது,அவற்றை யியற்ற வேண்டிய விதமின்னது, அவற்றின் பலனான ஸ்வர்க்கம் முதலியவற்றின் ஸ்வரூபம் இத்தகைத்து என்று இவ் வியைங்களை அறுதி யிடப் பெற்ற பின்பு ஸ்வர்க்கம் முதலிய அந்தப் பலன்கள் நஸ்வரங்கள் என்று தெரிந்து கொண்டதன் பலனாக அவற்றைப் பெற வேணு மென்கிற விருப்பம் தொலைந் தொழியப் பெறுகின்றார். பர ப்ரஹ்ம ப்ராப்தி யாகிற மோஷ புருஷார்த்தத்தில் மேலெழுந்த வொரு உணர்ச்சி யிருப்பதனால் இதனைப் பெற வேணு மென்கிற விருப்பமும் அவர்க்கு உண்டாகின்றது. இப்படி ப்ரஹ்ம் ப்ராப்தியில் விருப்ப முண்டானவாறே, அந்த ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் இப்படிப் பட்டது,அதனைப் பெறுதற்கு உபாய மின்னது,பெற்று அநுபவிக்கும் பலன் இன்னபடிப் பட்டது என்றித் தகைய விஷயங்களை நிர்ணயிக்க வேண்டுமாதலால் இந்த நிர்ணயம் ப்ரஹ்ம மீமாம்ஸையிற் சொல்லப் பட்டுள்ள நியாயங்களினாலேயே விளையக் கூடியது என்றதாகத் தேறி நின்றது.அதாதோ ப்ரஹ்மஜிஜ்ஞாஸ * என்கிற இந்த ஸுத்திரத்திற்கு இவ்வளவே விஷய மாயிருக்க, இங்கு ஸ்ரீ பாஷ்யம் மிக மிக வளர்ந்திருக்கின்றதே; அவ்வளவு விரிவுக்கு விஷயமென்ன? என்று பலர் அறிய விரும்பக் கூடும். கேண்மின், இந்த ஸூத்ரத்தில் மூன்றே பதங்கள் உள்ளன. (அத) என்கிற முதல் பதத்திற்கு அதற்குப் பிறகு’ என்று அர்த்தம். எதற்குப் பிறகு ? என்று கேள்வி உடனே உண்டாகின்றது. கர்ம விசாரம் செய்து முடிந்த பிறகு ‘ என்று நாம் அர்த்தம் சொன்னோம். பிறர் இங்ஙனே அர்த்தம் கொள்ளாமல் வேறு அர்த்தம் கொள்ளுகின்றனர். ஸாதந ஸம்பத்தியின் ஆநந்தாயமே அத சப்தார்த்த மென்று சங்கர பாஷ்யத்திலுள்ளது.அது பொருந்தா தென்று மறுக்க அவசியம் ஏற்பட்டது. ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தைப் பற்றிப் பிறர் கூறுவதும் அவஸ்யம் மறுக்க வேண்டியதாயிற்று. இவ் விரண்டு விஷயங்களில் ப்ரஸக்தா நுப்ரஸக்தமாகப் பல பல விஷயங்கள் பெருகின படியால் இவ்விடத்து ஸ்ரீபாஷ்யம் மிக வளர்ந்தது. அவ்விரிவு இங்கு வேண்டாவென்று விடுக்கப்பட்டது. ஸூத்ரத்தின் மேல் இங்குத் தோன்றி யுள்ள பூர்வ பக்ஷத்தையும ஸித்தாந்தத்தையும் ஸாரமாக வுணர்த்துகிறோம், உணர்க.

16- இவ் வதிகரணத்தின் பூர்வபக்ஷம் வருமாறு:-கர்ம மீமாம்ஸையில் அர்த்த வாதாதிகரணத்தில் “ஆம்நாயஸ்ய க்ரியார்த் தத்வாத் ஆநர்த்தக்யம் அததர்த்தநாம் தஸ்மாத நித்ய முச்யதே ” என்கிற வொரு ஸுத்திரத்தினால் ஒரு பூர்வ பக்ஷம் கிளப்பப் பட்டது; அதாவது- வேத ஸாமாந்யமும் ஏதேனுமொரு கார்யத்தைச் செய்ய வெண்டியதாக வுணர்த்தித் தீர வேண்டிய நிர்ப்பந்த முடையது; அதைச் செய் இதைச் செய் என்று கர்த்தவ் யார்த்தங்களை நியமே போதிப்பதே வேதங்களின் க்ருதயம். அர்த்தவாத ரூபங்களான வேறு வாக்யங்களானவை கர்த்தவ் யார்த்த மொன்றையும் போதிக்காமை யினாலே அப்படிப் பட்ட வாக்யங்களுக்கு பிராமாண்யம் ஸம்பவிக்க மாட்டாது. (இதைச் சிறிது விவரிப்போம்-) “வாயவ்யம் ச்வேத மால பேத பூதிகாம:” என்பது ஒரு வேத வாக்யம். இதில் ஒரு கருமம் கர்த்தவ்யமாக விதிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு அடுத்த வாக்யம் (வாயுர்வை க்ஷேபிஷ்டா தேவதா’ என்பது. முன் சொன்ன கருமத்தில் ஆராத்யமான வாயு தேவதையின் ஒரு பெருமையைப் புகழ்ந்து கூறுவது இந்த வாக்யும். வாயு மிகவும் சீக்கிரமாகப் பலனளிக்க வல்ல தேவதை” என்பது இந்த வாக்யத்தின் அர்த்தம். இப்படிப்பட்ட வாக்யங்களுக்கு அர்த்தவாத வாக்ய மென்று பெயர். இவற்றில் கர்ம விதி ஒன்று மில்லாமையால் இவை விதி வாக்யங்களல்ல. விதி வாக்யமாயிருந்து கொண்டே பிராமாண்யம் பெற மாட்டா- என்கிற பூர்வ பக்ஷம் –ஆம்நாயஸ்யேதி -ஸ்த்ரத்தினால் கிளப்பப்பட்டது. பிறகு “விதிநாது ஏக வாக்யத்வாத் ஸதுத்யர்த்தே விதீநாம் ஸ்யு:” என்கிற ஸூத்ரத்தினால் இதற்குப் பரிஹாரம் சொல்லப் பட்டது. எங்கன் யென்னில், அர்த்தவாத வாக்யங்கள் ஒரு காரியத்தைச் செய்யும்படி விதிக்காமற் போனாலும் ஸமீபத்திலுள்ள விதி வாக்யத்தில் விதிக்கப்பட்டதொரு க்ரியையில் அந்வயிக்கின்ற புகழ்ச்சியைத் தெரிவிப்பதனால் அந்த விதி வாக்யத்தோடு கூட ஏக வாக்யமாய்க் கொண்டு ப்ராமாண்யம் பெறத் தட்டில்லை யென்று ஸித்தாந்தம் செய்யப்பட் டது ஜைமினி மஹர்ஷியால். ஆக, விதி வாக்கியங்களுக்கோ அவற்றுக்கு சேஷ பூதங்களான வாக்யங்களுக்கோ ப்ராமாண்ய முண்டே யல்லது வேறு வகையான வாக்யங்களுக்கு ப்ராமாண்யம் கிடையாது. உலகத்திலும் முதன் முதலாகச் சிறுவர்களுக்கு வ்ருத்த வ்யவகாரத்தினாலேயே சக்தி க்ரஹண முண்டாகிறது. (சக்தி க்ரஹணமாவது -இன்ன பதத்திற்கு இன்னது அர்த்த மென்கிற வுணர்ச்சி.) வ்யுத்பந்நனான வொருவன் வேறொரு வ்யுத்பந்நனை நோக்கி ஆநய ‘ என்கிறான். அதைக் கேட்ட அவன் ஒரு கோவைக் கொண்டு போகிறான். மறுபடியும் அவன் “காம் நய, அச்வம் ஆநய ” என்கிறான். அதைக் கேட்ட அந்த வ்யுத்பந்நன் கோவைக் கொண்டு போய்க் கட்டி விட்டுக் குதிரையைக் கொண்டு வருகிறான். இவற்றைக் கண்டு கொண்டிருந்த வொரு சிறுவன் (காம்) என்றதற்கு இன்னது பொருள், (ஆநய ) என்றதற்கு இன்னது பொருள்,(நய ) என்றதற்கு இன்னது பொருள்; அச்வமென்றதற்கு இன்னது பொருளென்று அங்கு நடந்த காரியங்களினால் தெரிந்து கொள்ளுகிறான். ‘ கோ’ பதமானது கொண்டு வருதல் கொண்டு போதல் என்கிற இரண்டு க்ரியைகளில் அந்வயிக்கின்ற வஸ்துவை போதிப்பதனாலே பசுவைச் சொல்லுகின்றது, ஆநய என்கிற பதம் கொண்டு வருவதாகிற க்ரியையைச் சொல்லுமது என்றிப்படி அந்தந்த பதங்களுக்கு சக்தியை க்ரஹிக்கின்றான், எங்கும் இப்படிப்பட்ட வ்யவஹாரங்களினாலேயே அவ்வோ பதங்களுக்கு அவ்வோ அர்த்தங்களில் சக்தி க்ரஹண முண்டாகிறது. ஆகவே இப்படிப்பட்ட வ்யவஹாரங்களெல் லாம் ஏதேனுமொரு கார்யார்த்த பரங்களாகவே காணப் படுதலால் உலகில் எல்லாப் பதங்களும் யத் கிஞ்சித் கர்த்தவ் யார்த்த பரங்களே யென்று நிச்சயிக்கிறான். ஆக இப் படிப்பட்ட யுத்பத்திக்கு இணங்க எல்லாப் பதங்களும் கார்யார்த்த பரங்களே. இப்படி லௌகிக பதங்கள் கார்ய பரங்களென்று தேறினால் ய ஏவ லௌகிகா த ஏவ வைதிகா ? என்கிற ந்யாயத்தாலே வைதிக பதங்களும் கார்ய பரங்களேயாகும்.(கார்ய பரங்களான வாக்யங்களுக்கே ப்ராமாண்யமுண்டு என்றபடி.) ஏவஞ்ச,கார்ய ரூபமல்லாத பர ப்ரஹ்மத்தினிடத்தில் வேதாந்த வாக்யங்களுக்குத் தாத்பர்யமிருக்க முடியாமை யினாலே வேதாந்த விசார ரூபமான ப்ரஹ்ம விசார சாஸ்த்ரம் ஆரம்பிக்கத் தக்கதன்று- என்று பூர்வ பக்ஷம் ப்ராப்த மாயிற்று.

17-இதன் மேல் ஸித்தாந்தம் வருமாறு : சிறுவர்களுக்கு முதல் வ்யுத்பத்தி வ்ருத்த வ்யாவகாரத்தினாலேயே உண்டாகிறது என்பது பிசகு; இது எல்லாருடையவும் அநுபவத்திற்கு விருத்தமானது. உலகில் அவரவர்களுக்கு முதல் வ்யுத்பத்தி உண்டாகிற விதம் வேறு வகையாகவே அநுபவ ஸித்தமாக வுள்ளது. எங்கனே யென்னில், தந்தை தாய் முதலியவர்கள் தம் தம் சிறுவர்களுக்கு வ்யுத்பத்தியை யுண்டு பண்ண வேண்டி கண்ணிற் காணும் பல பல பொருள்களை விரலால் சுட்டிக் காட்டி இதோ சந்திரன், இதோ கிளி, இதோ குதிரை, இதோ மாமா’ என்றிப்படி பிரயோகித்து வருகிறார்கள். சிசுக்களும் பூர்வ ஜன்ம வாஸநையினால் கால க்ரமேண அவ்வோ பதங்களுக்கும் அவ்வோ அர்த்தங்களுக்குமுள்ள ஸம்பந்தத்தைத் திடமாக வுணர்ந்து வ்யுத்பத்தி பெறுகின்றன. ஒரு கார்யத்தில் அந்வயித்த வஸ்துவிலேயே முதன் முதலாக சக்தி க்ரஹண முண்டாகிற தென்றதற்கு முரணாக ஒரு கார்யத்திலும் அந்வயியாத வஸ்துவிலேயே முதன் முதலாகப் பதங்களுக்கு சக்தி க்ரஹண முண்டாகின்றதென்று மூதலிக்கப்பட்டது.

18–கார்ய பரமான வாக்கியத்திலிருந்தே சக்தி க்ரஹண முண்டாகிறதென்பதும் மிகவும் தவறு. தேவ தத்தா உனக்குப் பிள்ளை பிறந்தது. என்பதாக ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம். இது ஸித்தார்த்த பரமான வாக்கியமே யொழிய, காமாநய, காம் நய ‘ இத்யாதி வாக்யங்கள் போலே கார்ய பர வாக்கியமன்று. இந்த வாக்கியத்தினாலும் சிறுவர்களுக்கு வயுத்பத்தி விளையக் காணா நின்றோம். தேவ தத்தனுக்குப் பிள்ளை பிறந்தவுடனே வேறோரிடத்திலிருந்த அவனுக்கு இதைத் தெரிவிப்பதற்காக ஏவப்பட்ட வொருவன் தேவ த்த புத்ரஸ் தே ஜாத?’ என்கிறான்-அவ் யுத்தபந்நனான வொருவன், தேவ தத்தனுடைய க்ருஹத்தில் அவனுக்குப் பிள்ளை பிறந்ததையும் அதைத் தெரிவிப்பதற்காக வொருவன் ஏவப் பட்டதையும் அவன் கூறினதைக் கேட்டு தேவ தத்தனுக்கு முக விகாஸ முண்டானதையும் நோக்கி “புத்ரஸ்தே ஜாத ” என்ற வாக்கியத்திற்கு இன்னது பொருளென்று உணரப் பெறுகிறான். ஆகவே கார்ய பரமான வாக்கியத்திலிருந்தே சக்தி க்ரஹண மென்கிற நியதி இல்லை யென்றதாயிற்று. சில விடங்களில் ஸித்த பரமான வாக்யத்திலிருந்தும் கார்ய அநந்வித வஸ்துக்களில் சக்தி க்ரஹண முண்டாகிறது; சில விடங்களில் கார்ய பர வாக்கியத்திலிருந்தும் உண்டாகிறது என்று லோக அநு பவத்தினால் ஸித்திக்கிற படியால் ப்ராபாகரர்கள் ஸகல பதங்களும் கார்யார்த்த பரங்களென்று கூறுவது யுத்தி யற்ற தென்று தேறிற்று. ஆகவே வாக்கியங்களுக்கு ஸித்த ரூபமான ப்ரஹ்மத்தில் தாத்பர்யம் ஸம்பவிக்கலா மாகையாலே தத் விசார சாஸ்த்ரம் ஆரம்பிக்கத் தக்கதே யென்று ஸித்தாந்தமானதாக முடிந்தது.

19-இங்கு இப்படிப்பட்ட பூர்வ பக்ஷம் தோன்றி இதற்குப் பரிஹாரம் செய்வதாகிற விஷயம் அந்த ஸூத்ரத்தில் எங்ஙனம் கிடைக்கிறதென்று கேள்வி தோன்றும். கார்யத்தில் அந்வயியாத ப்ரஹ்மமாகிற ஸித்த வஸ்துவை ஜிஜ்ஞாஸ்யமாக இங்குக் கூறியிருப்பதனால் இதிலிருந்து இந்தப் பூர்வ பக்ஷ ஸித்தாந்தங்கள் நிர்ணயிக்கப் படக் குறை இல்லை – வேதாந்த வாக்கியங்களெல்லாம் கார்ய பரங்களாய்க் கொண்டு ப்ராமாண்யம் பெறுமே யல்லது ஸித்த பரங்களாய்க் கொண்டு ப்ராமாண்யம் பெற மாட்டா தென்கிற வாதம் ஸமஞ்ஜஸமா யிருந்தாலன்றோ வேதாந்த வாக்யங்களினால் ஸித்த ரூபமான ப்ரஹ்மத்தை விசாரிப்பது கூடாதென்று சொல்ல நேரும்.

20- முதலில் நாமெடுத்துக் காட்டிய பூர்வ மீமாம்ஸ ஸூத்ரங்களிரண்டினால் தேறின வர்த்தம் இப்போது விரோதிக்கிறதாக இனி நினைக்கக் கூடும். கார்ய பாரங்களல்லாத ஸித்த பர வாக்கியங்களுக்கு ஸ்வாதந்தர்யேண ப்ராமாண்யம் அஸம்பாவிதமென் றன்றோ அங்கு ஸித்தாந்தம் செய்யப் பட்டிருக்கிறது ; அதற்கு முரணாக இப்போது முடிந்ததே என்று சங்கிக்க நேரும்.இந்த சங்கை வேண்டா. எல்லா வேத வாக்கியங்களும் கார்ய பரங்களாய்க் கொண்டே பிராமாண்யம் பெறுமென்று பூர்வ பக்ஷி சொன்னதை அப்படியே ஒப்புக் கொண்டு அப்யுபகம்யவாத முறையில் பரிஹாரம் காட்டினார் ஜைமிநி மஹர்ஷி. அதுவே அவருடைய அபிப்ராயமென்பது கிடையாது. கார்ய பரமல்லாத அர்த்தவாத வாக்கியங்களும் விதி சேஷமாய்க் கொண்டு ப்ராமாண்யம் பெறுகின்றன வென்று சொன்ன வளவால் ஸித்த பர வாக்யங்களுக்கு ப்ராமாண்யமே கிடையாதென்று சொன்ன படியாகாது. ஆகவே இந்த ஸூத்ரத்தில் செய்யப் படுகிற ஸித்தாந்தமானது பூர்வ மீமாம்ஸா அர்த்தவாதாதிகரண ஸித்தாந்தத்திற்கு விருத்தமன்று என்றதாயிற்று.

21-இதில்-அத அத என்கிற இரண்டு பதங்களினால் கர்ம விசாரத்திற்குப் பிறகு கர்ம விசாரம் முடிந்த தென்கிற காரணத்தாலேயே, பர ப்ரஹ்ம விசாரம் செய்யத் தக்கதென்று கிடைப்பதனால் ப்ரஹ்ம விசாரத்தைக் குறித்துக் கர்ம விசாரம் நியமேந பூர்வ வ்ருத்தமென்று தேறுகின்றது. இதைப் பற்றியும் சிறிது விவரிக்கப்படுகிறது . வேத மோதின வொரு புருஷன் வேத வாக்யங்களில் கர்ம பலத்தைப் பற்றியும் பரஹ்ம ஞான பலத்தைப் பறறியும் ஸ்திரமென்று சில விடங்களிலும் அஸ்திரமென்று சிலவிடங் களிலும் மேலெழுந்த வாரியாக வுணர்ந்து இவற்றில் எது உண்மை யென்று நிர்ணயம் தெரிந்து கொள்ள விரும்புகிறான். அந்த விருப்பத்தினால் அதை நிர்ணயித்துத் தரக் கூடிய சாஸ்த்ரங்களில் ப்ரவர்த்திக்கிறான். கர்ம பலனைப் பற்றின வுண்மையை நிச்சயித்துத் தரவல்ல சாஸ்த்ரங்களில் முந்துற முன்னம் பிரவர்த்திக்கிறான். அநாதி வாஸநையினால் கருமங்களைச் செய்வது எளிதென்று பொதுவாகத் தோன்றி யிருக்கும். ப்ரஹ்ம ஜ்ஞானத்தில் அப்யாஸ மில்லாமையினாலே அது துஷ் கரமென்றும் தோன்றி யிருக்கும்.ஆகவே எளிதான உபாயத்தினால் அபி மதம் கை புகுவதா யிருக்க அரிதான உபாயத்தில் ப்ரவருத்தி ஸஸம்பவிக்க மாட்டா தாகையாலே ப்ரஹ்ம ஞானத்தின் பலனைப் பற்றி நிர்ணயிக்க வேணு மென்கிற விருப்பம் தடைபட்டு, கரும பலனைப் பற்றி நிர்ணயிக்க வேணு மென்கிற விருப்பமே தலை யெடுத்திருக்கும். இங்ஙனம் முன்னம் கரும விசாரம் செய்த வளவில் கரும பலன்கள் அஸ்திரம் என்கிற நிச்சய முண்டாகிறது. இப்படி நிச்சய முண்டான வளவில், கர்ம விசாரேச்சை தொலைந்ததாகிறது. இந்த கர்ம விசாரேச்சையே முன்பு ப்ரஹ்ம விசாரேச்சைக்கு இடையூறா யிருந்ததனால் இந்த ப்ரதிபந்தகம தொலையவே ப்ரஹ்ம விசாரத்தில் இச்சையும் அதில் ப்ரவ்ருத்தியும் அடுத்த படியாக உண்டாகிறது. எனவே, ப்ரஹ்ம விசாரத்தைக் குறித்து கர்ம விசாரம் நியமேந அபேக்ஷித மென்றதாகிறது. இதுவே பூர்வ வ்ருத்தமாக இருக்கத் தக்கதாதலால் (அது அத)என்ற பதங்களுக்குப் பதவுரையில் நாம் கூறிய பொருளே பொருத்த முடைத்தென்ற தாயிற்று. இஜ் ஜிஜ்ஞாஸாதிகரண அர்த்த ஸாரம் இவ்வளவு போதும்.

——

(இனி, இரண்டாவது-ஜந்மாத்யதிகரணம்.)
22-உலகில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேணுமானால் லக்ஷணத்தை முன்னிட்டே தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியே பர ப்ரஹ்மத்தைத் தெரிந்து கொள்ள வேணுமானாலும் ஒரு லக்ஷணத்தை முன்னிட்டே தெரிந்து கொள்ள வேண்டும்.நாம் கண்ணால் காணக் கூடிய பொருள்களுக்கே லஷணம் கூற முடியுமே யல்லது கண்ணுக்குப் புலப்படாத பொருளுக்கு லக்ஷணம் கூற முடியாது. பர ப்ரஹ்மமோ கண்ணுக்குப் புலப்படாததே யன்றிப் புலப்படுமதன்று. ஆகவே அதற்கு ஒரு லக்ஷணம் கூற இயலாத போது அது தெரிந்து கொள்ள முடியாதென்று தேறி விட்டபடியால் அந்த பர ப்ரஹ்மத்தைப் பற்றின விசாரம் எப்படி செய்ய பிராப்தமாகும்? என்று ஆக்ஷேபம் தோன்ற,அவ் வாக்ஷேபத்தைப் பரிஹரிக்க இந்த அதிகரணம் எழுகின்றது. இவ் வதிகரணத்தின் ஸூத்ரம் * ஜந்மாத்யஸ்ய யத : * என்பது. ஐந்மாதி,அஸ்ய,யத: என்று மூன்று பதமாகவுள்ளது இந்த ஸூத்ரம். அஸ்ய – கண்ணால் காணப்படுகிற இந்த சேதந மிச்ரமானபிரபஞ்சத்திற்கு, ஜன்மாதி – உற்பத்தி ஸ்திதி ப்ரளயங்கள், யத :– எந்த வஸ்துவினிடத்தினின்று ஆகின்றனவோ, (அது தான் பர ப்ரஹ்மம் ] என்பதாக ஸுத்திரத்தின் பொருள்.-தைத்திரயோபநிஷத்தில் ப்ருகு வல்லி யென்னும் ப்ரகரணத்திலுள்ளதான” யதோவா இமாதி பூதாநி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி, யத் ப்ரயந்த்யபி ஸம்விசந்தி, தத் விஜிஜ்ஞாஸஸ்வ, தத் ப்ரஹ்மேதி “ என்னும் வாக்கியமானது பர ப்ரஹ்மத்திற்கு ஜகஜ் ஜந்மாதி காரணத்வ ரூபமான லக்ஷணத்தைச் சொல்லி யிருக்கின்றது. உலகில் நாம் ஆடு மாடுகளுக்கு ஒவ்வொரு லக்ஷணத்தைக் கொண்டு இதர பேதத்தை எப்படி நிச்சயிக்கிறோமோ அப்படியே ப்ரஹ்மம் கண்ணுக்குப் புலப்படாததா யிருந்தாலுங் கூட ஜக ஐந்மாதி காரணத்வ ரூபமான லக்ஷணத்தைக் கொண்டு சேதநா சேதநங்களிற் காட்டில் வேறுபட்டதென்று நிச்சயிக்க முடியுமாதலால் அப்படிப்பட்ட ப்ரஹ்மத்தைப் பற்றின விசாரம் கூடும் என்றதாயிற்று.

23-இங்கே பூர்வ பக்ஷம்: -ப்ரஹ்மத்திற்கு ஐந்ம காரணத்வம் முதலானவை லஷணமாக ஸம்பவிக்க மாட்டாதென்று பூர்வ பக்ஷம் பிராப்தமாகிறது. “யத . இமாநி ஜாயந்தே” இத்தியாதியாக எடுத்துக் காட்டின உபநிஷத் வாக்யத்தில் அந்வய க்ரமம் எப்படி காண வேணும் என்றால் , “யத இமாநி பூதாநி ஜாயந்தே தத் ப்ரஹ்ம; யேந ஜாதாநி ஜீவந்தி தத் ப்ரஹ்ம; யத் ப்ரயந்தி அபிஸம்விசந்தி தத் ப்ரஹ்ம” என்று மூன்று வாக்யங்களாகப் பிரித்து அந்வயங் கொண்டு ஐந்ம காரணத்வம் ஒரு லக்ஷண மென்றும் ஸ்திதி காரணத்வம் மற்றொரு லஷண மென்றும் லய காரணத்வம் வேறொரு லக்ஷண மென்றும் ஆக வ்யாவர்த்தக லஷணங்கள் மூன்று அங்கீகரிக்க வேண்டியதாகின்றது. இப்படி யாகுமளவில், ஒரே ப்ரஹ்மம் என்றல்லாமல் பல ப்ரஹ்மங்கள் என்பதாகத் தேறும். வ்யாவர்த்தகங்கள் பலவானால் வயாவர்த்யமும் பலவாக வேண்டுகையாலே.

24- இப்படி யொரு நிர்ப்பந்த முண்டோ? தேவதத்தன் கறுத்தவனாயும் பருத்தவனாயும் யுவாவாயும் செந்தாமரைக் கண்ணனாயு மிரா நின்றான் என்று ஒருவர் சொன்னால் கறுப்பு முதலிய வியாவர்த்தகங்கள் பலவாயிருப்பது கொண்டு வயாவர்தயனான தேவதத்தனும் பல வியத்திகளாகத் தேறி விடுவனோ? பரத்யக்ஷமாக ஒரு தேவதத் தனையே நாம் காண்கிறோம். அவ்வொரு வியக்தியினிடத்தில் கருமை, பருமை முதலான பலவும் கூடியிருக்கக் காண்கிறோம். இது போல ஒரு ப்ரஹ்மத்தினிடத்திலே ஐந்ம காரணத்வம் முதலானவை பலவும் கூடி யிருக்கக் குறை யில்லையே. இவற்றால் ப்ரஹ்ம வ்யக்தியில் பஹுத்வத்தை எப்படி ஆபத்தி பண்ண முடியும்? என்று மத்யே சங்கை தோன்றும். இதற்கு ஸமாதானம். கருமை பருமை முதலிய பலவற்றால் தேவ தத்த வ்யக்தியில் பன்மை வந்துவிட மாட்டாதென்பது வாஸ்தவமே, தேவதத்தன் கண்ணுக்குப் புலப்படுமவனாதலால் அவ் விஷயம் வேறு, ப்ரஹ்மம் அப்படி பிரத்யஷமன்றே- அதுவோ அப்ரத்யஷாமாயிரா நின்றது. ஐந்ம காரணத்வமும் லய காரணத்வமும் ஒன்றிலேயே கூடுமென்று க்ரஹிப்பிக்க வல்ல பிரமாண மெதுவும் புலப்படவில்லை. லக்ஷணங்கள் எல்லாம் இதர பேதத்தை ஸாதித்துக் கொடுக்குமவை என்பது உத்ஸர்க்கத: பராப்தமாயிரா நின்றது -ஐந்ம காரணத்வம் ஸ்திதி காரணத்வம் லய காரணத்வ மென்னுமிந்த லஷணங்கள் இதர பேதத்தை வியாவ்ருத்தியை]ஸாதித்துக் கொடுக்குமளவில் இதற்குஅபவாதம் யாதொன்று மில்லாமையினாலே, ஐந்ம காரணத்வமாகிற லஷணமானது என்ன செய்யுமென்றால், தன்னைக் கொண்டு லக்ஷணீயமான ப்ரஹ்மத்திற்கு ஸ்திதி காரண பூதமான ப்ரஹ்மத்திற் காட்டிலும் லய காரண பூதமான ப்ரஹ்மத்திற் காட்டிலும் வேறுபாட்டைக் காட்டிக் கொடுத்தே தீரும். இப்படியே ஸ்திதி காரணத்வ ரூபமான லக்ஷணமும் ஸ்வ லக்ஷ்யமான ப்ரஹ்மத்திற்கு- ஐந்ம காரண பூதமான ப்ரஹ்மத்திற் காட்டிலும் லய காரண பூதமான பரஹ்மத்திற் காட்டிலும் வேறுபாட்டைக் காட்டிக் கொடுத்தே தீரும். இப்படியே லய காரணத்வ ரூபமான லக்ஷணமும் ஸ்வ லக்ஷ்யமான ப்ரஹ்மத்திற்கு ஜந்ம காரண பூதமான ப்ரஹ்மத்திற் காட்டிலும் ஸ்திதி காரண பூதமான ப்ரஹ்மத்திற் காட்டிலும் வேறுபாட்டைக் காட்டிக் கொடுத்தே தீரும். ஆக விப்படி லக்ஷண பேதங்களினால் ப்ரஹ்ம பஹுத்வம் தேறியே தீரும். இதற்காகப் பல லக்ஷணங்களைக் கொள்ளாமல் ( ஐந்ம காரணத்வே ஸதி ஸ்திதி காரணத்வே ஸதி லய காரணத்வம் ப்ரஹ்ம லக்ஷணம் “என்று கொள்ளுகிறோ மென்னில்; இவற்றுள் ஒவ் வொன்றே லக்ஷணமாகப் போருமாதலால் மற்ற விசேஷணங்கள் வ்யர்த்தமாக வேண்டி வரும். மேலும் ஐந்ம காரணத்வமும் லய காரணத்வமும். விருதங்களாகையாலே ஓரிடத்தில் இவை கூடி யிருக்கவும் மாட்டா

25-இதற்குமேல் ஒன்று சொல்லலாம். (அதோ பக்ஷி உட்கார்ந்து கொண் டிருக்கிறதே. இவ் விடந்தான் தேவ தத்தனுடைய கழனி] என்று ஒருவன் சொன்னால், தேவ தத்தனுடைய கழனிக்கு பக்ஷியின் ஸம்பந்தத்தை லக்ஷணமாகச் சொன்னதாக ஆகிறது. இப்படிப்பட்ட லக்ஷணத்தினால் பக்ஷி யுறையுமிடமான கழனியில் தேவதத்த ஸ்வாமிகத்வம் தெரிவிக்கப் படுகிறது.அது போலவே இங்கும் ஐந்ம காரணத்வம் ஸ்திதி காரணத்வம் லய காரணத்வம் ஆகிற மூன்றையும் ஜ்ஞாபக லக்ஷணங்களாகக் கொண்டு இவற்றால் ஒரே வஸ்து ப்ரஹ்ம் பதார்த்தமாக ஏற்படுகிறது- என்னலாம்.

26-இதுவும் பொருந்தாது -திருஷ்டாந்தத்தில், கழனி யென்கிற வொரு வஸ்து ஏற்கெனவே அறியப் பட்டிருந்தது. அப்படி அறியப் பட்டிருந்தவதில் பக்ஷி விசேஷத்தின் ஸம்பந்தத்தை யிட்டு தேவதத்த ஸ்வாமிகத்வம் தெரிவிக்கப் பட்டது. அது போலஇங்கு தெரிவிக்கப்பட வேண்டிய ப்ரஹ்மத்திற்கு ஏற்கெனவே அறிந்ததொரு தன்மை சொல்லித் தீர வேண்டும். அதுவோ ஓன்றும் சொல்ல முடியாததா யிருக்கின்றது.ஆகவே ஜந்ம காரணத்வம் முதலியவற்றுக்கு [பஷி விசேஷ ஸம்பந்தாதிவத்] ஜ்ஞாபகத்வமும் ஸம்பவிக்க மாட்டாது.ஏன்? ப்ரஹ்மத்திற்கு ஏற்கெனவே அறிந்ததொரு தன்மை சொல்லமுடியாதா என்ன ? நன்றாகச் சொல்லலாமே; ” ஸத்யம் ஜ்ஞாந மநந்தம் ப்ரஹ்ம -என்கிற வாக்யத்தில் சொல்லப்பட்ட ஸத்யத்வம் முதலானவையே முன்னமறிந்த தன்மைகள் என்னக் கூடாதோ வென்னில்; அங்கும் இத் தோஷம் ஸமானமே யாகும்.ஸத்யத்வாதிகள் ஜ்ஞபகமாகும் போது ஏற்கெனவே யறிந்த தன்மை யொன்று சொல்லியாக வேண்டும். ஐந்ம காரணத்வாதிகளைச் சொல்லுகிறோ மென்ன வேணும்; அதைத் தெரிந்து கொள்ளாமல் ப்ரஹ்ம பதார்த்தம் தெரிவிக்க முடியாதாதலால் அந்யோந்யாஸ்ரயம் அபரிஹார்யமாகும். ஆகவே ஜந்ம காரணத்வாதிகள் லக்ஷணமாகப் பொருந்த மாட்டா வென்று பூர்வபக்ஷம் ப்ராப்தமாகிறது.

27- பர ப்ரஹ்மம் பரத்யக்ஷத்திற்கு விஷயமல்லாமையாலே அதற்கு ஒரு லக்ஷணமும் சொல்ல முடியாதாதலாலும், லக்ஷணத்தைக் கொண்டே எந்த வஸ்துவையும் அறிய வேண்டுமாதலாலும், லக்ஷணத்தின் அஸம்பவத்தினால் அறிய முடியாத்தான இந்தப் பர ப்ரஹ்மத்தைப் பற்றி விசாரம் செய்வதெப்படி? என்கிற ஆக்ஷேபத்தைப் பரிஹரித்துக் கொண்டு ஐந்மாத்யஸ்ய யத :” என்கிற இரண்டாவது ஸூத்ரம் தோன்றி யுள்ளதென்று கூறி பூர்வ பக்ஷத்தையும் விவரித்தோம். இனி ஸித்தாந்தம் வருமாறு

28-ஒரு வஸ்துவுக்கு ஒரு லக்ஷணம் சொன்னோமானால் அந்த லக்ஷணமானது
மற்ற வஸ்துக்களிற் காட்டிலும் இந்த வஸ்து வேறுபட்டது ” என்பதை நன்கு காட்டிக் கொடுக்குமென்று சொன்னோம். அப்படி வேறுபாட்டைக் காட்டுவதென்றால் என்ன? என்பதைச் சிறிது தெளிவாகத் தெரிந்து கொள்ள வேணும். விசேஷணங்களைக் கொண்டு நாம் வேறுபாட்டை யறிய வேணும். விசேஷ்யத்தில் ஏதோ வொரு தர்மம் இருப்பதாக விசேஷணம் காட்டும் ; அந்த தர்மத்திற் காட்டிலும் வேறுபட்டதான எந்த தர்மமும் அதில் இருக்க மாட்டாதென்று அதனால் தெரிந்து கொள்ளுகிறோமா?அல்லது அந்த தர்மத்திற்கு விருத்தமான வேறெந்த தர்மமும் அதில் இருக்க மாட்டாதென்று தெரிந்து கொள்ளுகிறோமா? என்று பரிசீலிக்க வேணும்-விசேஷணத்தினாலேற்பட்ட தர்மம் தவிர வேறு எந்த தர்மமும் அதில் விசேஷயத்தில் இருக்க மாட்டாதென்று தெரிந்து கொள்ளுகிறோமென்று தேறுமாகில் முற் கூறிய பூர்வபக்ஷம் ஊர்ஜிதமாகும். உண்மையோ வென்னில் அப்படியில்லை. ஒரு விசேஷணத்தினால் விசேஷ்யத்தில் ஒரு தர்மம் காட்டப்பட்டதே யானால் அதற்கு எதிரிடையான வேறு தர்மம் அதில் இருக்க மாட்டாதென்று நாம் தெரிந்து கொள்ளலாமே யன்றி அவிருத்தமான வேறெந்த தர்மமும் அதிலிருக்கமாட்டாதென்று நாம் தெரிந்து கொள்ள இயலாது(உதாரணம்.) “நீலோ வ்ருஷப: ‘ [கறுத்த எருது என்கிறவொரு வாக்யத்தை யெடுத்துக் கொள்வோம். இதில் கருமை விசேஷணம். எருது விசேஷ்யம். நீலம் என்கிற விசேஷணமானது இதர வ்யாவ்ருத்தியை [வேறுபாட்டை]க் காட்டுவதற்காகவே பிரயோகிக்கப் பட்டது. கறுப்பு நிறத்திற்கு விருத்தமான வெளுப்பு சிவப்பு முதலிய நிறங்கள் அந்த எருதினிடத்தில் இல்லை யென்று இதனால் நாம் தெரிந்து கொள்ளலாமே யல்லது இதற்கு அவிருத்தமான த்ரவ்யத்வம் முதலிய தாமங்களும் கூட அதில் இல்லை யென்று நாம் தெரிந்து கொள்ள முடியாது. லோகாநுபவம் அப்படி யில்லை. ஒரு விசேஷ்யத்தில் பல பல தர்மங்கள் இருக்கலாம். விசேஷணத்தினால் அல்லது விசேஷணங்களினால் எந்தெந்த தய்மங்களின் ஸத் பாவம் ஏற்படுமோ அந்த தர்மங்கள் தவிர வேறு எந்த தர்மமும் அந்த விசேஷ்யத்தில் கிடையாதென்கிற பிரதிபத்தி ஒரு நாளும் ஒருவற்கும் உண்டாக மாட்டாது. அந்த தர்மங்களோடு முரண்படும் படியான தர்மம் இருக்க மாட்டா தென்கிற ப்ரதிபத்தியே விளையும். “யுவா நீலோ வாமந : பங்குச்ச தேவ தத்த:” என்றால் யுவாவாயும் கறுத்தவனாயும் குள்ளனாயும் நொண்டியாயும் தேவ தத்தனி ருக்கிறான் என்று பொருள் படுகிறது. இதில் யுவா என்கிற விசேஷணமானது யௌவன முடையவ னென்று காட்டி, ளெவன மென்கிற அந்த தர்மத்திற்கு விருத்தமான இளமையும் முதுமையு மில்லாதவன் என்று காட்டுமே யல்லது அதற்கு அவிருத்தமான நீலத்வம் வாமநத்வம் முதலிய தர்மங்களு மில்லாதவன் என்று காட்ட மாட்டா தன்றோ? இப்படி ஒவ்வொரு விசேஷணத்தையு மெடுத்துக் கொண்டு விமர்சித்தறிக.

29-விருத்தமான தர்மங்களும் ஏக காலத்தில் இருக்க முடியாதே யொழிய கால பேதத்தினால் அவையும் ஒரே வ்யக்தியினிடத்தில் இருக்கத் தடை யில்லை. “நீலவஸ்த்ர தாரீ தேவதத்த: ” என்றால் ஒரு காலத்தில் கறுப்புத் துணியை யணிந்தவனாயும் மற்றொரு காலத்தில் வெளுப்புத் துணியை யணிந்தவனாயு மிருப்பதில் விரோத மில்லாமையாலே நீல வஸ்த்ர தாரீ என்கிற இந்த விசேஷமானது காலாந்தரத்தில் (அடுத்த க்ஷணத்திலேயே] ஸம்பவிக்கக் கூடிய ஸ்வேத வஸ்த்ர தாரணத்தைத் தவிர்க்க மாட்டாதன்றே.–விசேஷணங்களைப் பற்றி இங்ஙனே தெரிந்து கொள்ளக் கூடிய விஷயங்கள் பலவுள-

30-பிரகிருதத்தில், ஜந்ம காரணத்வம் ஸ்திதி காரணத்வம் லய காரணத்வ மென் னுமிவை கால பேதத்தினால் ஒரு வியக்தியினிடத்திலேயே ஒன்று சேர்ந்திருக்கக் கூடியவை யாதலால் அவிருத்தங்களேயாகும். விலக்ஷண சக்தி யுக்தமான பர ப்ரஹ்மத்தினிடத்தில் ஏக காலத்திலேயும் இவை கூடும். ஆகவே ஜந்ம காரணத்வம் முதலிய லக்ஷணங்களினால் பர ப்ரஹ்மத்திற்கு பஹுத்வாபத்தி யென்பதில்லை. பர ப்ரஹமம் க்ஷேத்ரஜ்ஞர்களின் கருமங்களுக்குத் தக்கபடி ஸ்ருஷ்டிப்பதும் பிரளயம் செய்ய வேண்டிய காலத்தில் ஸம்ஹரிப்பதும் செய்கிறது. உலகில் உழவனானவன் விதை விதைக்க வேண்டிய காலத்தில் அதை விதைப்பதும் அறுக்க வேண்டிய காலத்தில் அறுப்பதும் செய்வது போல் இதனைக் கொள்க. அன்றியும், உத்தர நாராயணாதுவாகம் முதலானவற்றில் லக்ஷ்மீ பதித்வம் முதலிய அஸாதாரண சிஹ்னங்களினால் ப்ரதிபத்திக்கு விஷயமான வஸ்துவானது ஜன்ம காரணத்வம் முதலிய லக்ஷணங்களினால் ப்ரஹ்ம பதார்த்தமாக ஜ்ஞாபிக்கப் படுகிறதென்றும் கொள்ளக் குறை யில்லாமையாலே இரண்டாவது பக்ஷத்திலும் தோஷமில்லை. (முன்னே விவரிக்கப்பட்ட பூர்வ பக்ஷத்தை யீண்டு வாசிப்பது.)
ஏவஞ்ச, ஜகஜ் ஜந்மாதி காரணத்வமானது விசேஷணமாகவும் உப லக்ஷணமாகவும் ப்ரஹ்ம லக்ஷணமாவதற்கு யாதொரு தடையுமில்லை யென்று தேறிற்று. இன்னமும் இங்கு விரிவாகத் தெரிவிக்க வேண்டுமவை பலவுண்டு. அவை சாஸ்த்ர ஜ்ஞானிகளுக்கே க்ரஹிக்கவும் ரஸிக்கவுங் கூடியவையாதலால் இங்கு இவ்வளவோடு நிறுத்தப்படுகிறது.

31-இனி,மூன்றாவதான சாஸ்த்ர யோநித்வாதிகரணம் பற்றிப் பேசுவோம். ஐந்மாத்யதிகரண மென்கிற கீழதிகரணத்தில் பர ப்ரஹ்மத்திற்கு ஜகஜ் ஜன்மாதி காரணத்வம் லக்ஷணமென்று தேறிற்று. இப்படிப் பட்ட லக்ஷணத்தோடு கூடிய பர ப்ரஹ்மமா னது பரத்யக்ஷ பிரமாணத்தினால் தெரிந்து கொள்ளப் படாமற் போனாலும் அநுமாந பிரமாண ஸித்தமாகின்ற அந்த ப்ரஹ்மத்தை வேதாந்த வாக்யங்களினால் விசாரிக்க வேண்டிய அவஸ்யமில்லை என்றொரு ஆக்ஷேபந் தோன்ற, அதற்குப் பரிஹாரமாக இந்த அதிகரணம் அவதரிக்கின்றது. இவ் வதிகரணத்திற்கு ஸூத்ரம் சாஸ்த்ர யோநித்வாத் என்பது-சாஸ்த்ரத்தை யோநியாகக் கொண்டபடியாலே – என்பது ஸுத்ரத்தின் பொருள். யோநியாவது காரணம் ; அறிவதற்குக் காரணம் என்கிற விவஷையினால் இங்கு யோநி சப்தம் ப்ரயோகிக்கப் பட்டிருக்கின்றது. அதாவது – ப்ரமாணம் என்றபடி-சாஸ்த்ரத்தை ப்ரமாணமாகக் கொண்டபடியாலே என்றதாயிற்று-அப்பக்ஷோ வாயுபக்ஷ :* என்னுமிடங்களில் ‘தீர்த்தத்தைக் குடிப்பவன், வாயுவை பக்ஷிப்பவன் என்று சப்தார்த்தமானாலும் “அஸதி பாதகே ஸர்வம் வாக்யம் ஸாவ தாரணம்” என்கிற நியாயத்தினால் ” தீர்த்த மொன்றையே குடிப்பவன், வாயுவை மாத்திரமே பக்ஷிப்பவன் ” என்று பொருள் தேறுவது போல்,இங்கும் ” சாஸ்த்ர மொன்றையே ப்ரமாணமாகக் கொண்ட படியாலே ‘ என்றதாகப் பொருள் தேறும். ஆகவே சாஸ்த்ரமேவ யோநி: ( ப்ரமாணம்) யஸ்ய தத்-சாஸ்தர யோநி; தஸ்ய பாவ:- சாஸ்த்ர யோநித்வம் ; தஸ்மாத்- சாஸ்த்ர யோநித்வாத்”என்று ஸமாஸம் கொள்ளப் பட்டதாயிற்று. பர ப்ரஹ்ம மானது அநுமாநத்தைப் பிரமாணமாகக் கொண்டதாகாமல் சாஸ்த்ர மொன்றையே ப்ரமாணமாகக் கொண்டதாகையினால் அப்படிப்பட்ட (வேதாந்த ) சாஸ்த்ரத்தினால் பர ப்ரஹ்ம விசாரம் செய்ய வேண்டியது அவஸ்யமே என்பதாக ஸுத்ரத்தின் பொருள் முடிந்து நின்றது.

32- இங்குப் பூர்வ பக்ஷம்:-” அப்ராப்தே ஹி சாஸ்த்ரம் அர்த்தவத்” என்பர் சாஸ்த்ர வித்துக்கள். வேறு எந்த ப்ரமாணத்தினாலும் ஏற்படாத விஷயத்தில் தான் சாஸ்த்ரம் ப்ரவர்த்திக்குமென்றும், வேறு ஏதேனுமொரு ப்ரமாணத்தினால் ப்ரஹ்மம் ஸித்தித்து விட்டால் அதில் சாஸ்த்ரம் பிரவர்த்தியாது என்றும் தேறுகின்றது. பர ப்ரஹ்மமோ அநுமாந ப்ரமாணத்தினால் ஸித்திக்கக் கூடியதாக இருக்கின்றது .எங்ஙனே யென்னில்“ பூம் யங்குராதிகம் ஸ கர்த்ருகம்-கார்யத்வாத்; கடவத்” என்பது அநுமாந சரீரம். உலகத்தில் நாம் காண்கிற எல்லாப் பொருள்களும் ஒரு கர்த்தாவை யுடையன் : கர்த்தா வொருவனில்லாமல் எந்தப் பொருளும் உண்டாவதில்லை; வீடு பானை துணி முதலிய எல்லாப் பொருள்களும் ஒரு கர்த்தாவை முன்னிட்டே உண்டானவை யென்பதை அறிகிறோம்.இதனால், கர்த்தா வொருவனில்லாமல் எந்தப் பொருளு முண்டாகா தென்கிற உறுதி தோன்றுகின்றது. உடனே மற்றொன்றும் கவனிக்கிறோம் ; வீட்டைக் கட்டினவனாக ஒரு கர்த்தா நமக்குத் தெரிய வந்தாலும் அந்த வீடு எந்த நிலத்தில் கட்டப்பட்டதோ அந்த நிலத்திற்கு எவன் கர்த்தா என்பது நமக்குத் தெரியவில்லை. வீடு கட்டக் கருவியா யிருக்கின்ற மண் மணல் மரம் முதலிய பொருள்களுக்கும் கர்த்தா இன்னானென்று அறிகின்றிலோம். பானையைச் செய்பவன் குயவனென்று காண்கிறோமானாலும் அந்தப் பானைக்கு உபாதாந காரணமான மண்ணைப் படைத்தவன் இன்னானென்று அறிகின்றிலோம். துணிக்குக் கர்த்தா சேணியனென்று அறிகின்றோமானாலும் அதற்கு உபாதாந காரணமாகிய பஞ்சைப் படைத்தவன் இன்னானென்று அறிகின்றிலோம். ஆனால் கர்த்தா வொருவனில்லாமல் ஒரு காரியப் பொருளு முண்டாகாதாதலால் கீழ்ச் சொன்ன மண் மணல் மரம் முதலிய பொருள்களுக்கும் கர்த்தா வொருவன் இருந்தே தீர வேண்டும்.அவன் தான் ஈஸ்வரனென்பவன்- என்று இவ்விதமாக ஈஸ்வரனை யறிவதானது அநுமான ப்ரமாணத்தினா லறிவதாகும். ஆக, இப்படிப்பட்ட அதுமாந மென்னும் பிரமாணத்தினால் ஈஸ்வரன் ஹித்திக்கவே, இப்படி பிரமாணாந்தர பிராப்தமாய் விட்ட பர ப்ரஹ்மத்தின் விஷயத்தில் சாஸ்த்ர மென்னும் ப்ரமாணம் பரவர்த்திக்க மாட்டாதாதலால் அப்ராப்தேஹி சாஸ்த்ரம் அர்த்தவத்* என்றன்றோ நியமமுள்ளது- வேதாந்த சாஸ்த்ரமானது ஜகஜ் ஜந்மாதி காரண பூதமான ப்ரஹ்மத்தினிடத்திலே ப்ரமாணமாக முடியாதாதலால் அந்த வேதாந்த சாஸ்த்ர விசார ரூபமான ப்ரஹ்ம விசாரம் செய்யத் தக்கதன்று–என்பதாகப் பூர்வ பக்ஷம் பிராப்தமாயிற்று.

33-இதற்கு மேல் ஸித்தாந்தம் வருமாறு ; அநுமானத்தினால் ஒன்றை ஸாதிப்பதானால் அது செவ்வனே ஸித்திக்கக் கூடிய விஷயமன்று.-அநுமானத்தினால் ஈஸ்வரனே ஜகத் கர்த்தாவாக ஸித்திக்க வேணுமென்கிற நியதி யில்லை ; ஏனென்னில்: விஸ்வாமித்ர முனிவர் தவ வலிமையினால் மிகுந்த பெருமை பெற்று நூதந ஜகத் ஸ்ருஷ்டி பண்ணினா ரென்பதை நாம் ஸ்ரீ ராமாயணாதிகளில் வாசிக்கின்றோம். * அத்யமிந்த்ரம் கரிஷ்யாமி * இத்யாதி ஸ்லோகங்கள் பலர் அறிந்தனவே.அம் முனிவர் ஒரு ஜீவ வ்யக்தியே யல்லது ஈஸ்வரனல்லர். இதனால் ஜீவ கோடியிலேயே அதிசயித்த சக்தி படைத்த சிலர்க்கு விசித்ர ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ண ஆற்றலுண்டு என்பது தேறுகிற படியால், கீழே காட்டிய அநுமானத்தினால் ஈஸ்வரனே ஜகஜ் ஜந்மாதி காரண பூதனாக ஸித்திக்க வேணுமென்கிற நிர்ப்பந்த மில்லை. விலக்ஷண சக்தி யுக்தனான சேதநனே ஸ்ருஷ்டி கர்த்தாவாகத் தேறலாமாதலால் அநுமாநம் ஈஸ்வர ஸாதனத்தில் சக்தி யுடையதன்று ; ஆகவே சாஸ்த்ரமே பர ப்ரஹ்ம ஸித்தியில் பிரபல ப்ரமாணமாகக் கடவது. அப்படிப் பட்ட சாஸ்த்ரம் வேதாந்த சாஸ்த்ரமே. அதைக் கொண்டு ப்ரஹ்ம விசாரம் செய்வது நன்றாகப் பொருந்தும் என்றதாயிற்று.

34-இனி நான்காவதான ஸமந்வயாதி கரணம் பற்றிப் பேசுவோம். பர ப்ரஹ்மமானது சாஸ்த்ரம் தவிர வேறொரு பிரமாணத்தினால் பிராப்தமாகக் கூடியதன்று என்றே கொண்டாலும் அந்த ப்ரஹ்மமானது ப்ரவருத்தி நிவ்ருத்திகளுக்கு விஷய மல்லாமையினால் அப்படிப்பட்ட ப்ரஹ்மத்தை ப்ரதிபாதனம் செய்வதில் பலனொன்று மில்லாமையினால் அந்த பரஹ்மத்தினிடத்தில் சாஸ்தரத்திற்கு ப்ராமாண்யம் ஸம்பவிக்க மாட்டாதாதலால் அந்த ப்ரஹ்மம் சாஸ்த்ர ப்ரதிபாதய மாவதற்கு வழி யில்லை என்றொரு ஆக்ஷேபம் தோன்ற,அதற்குப் பரிஹாரமாக இந்த அதிகரணம் அவதரிக்கின்றது. இவ் வதிகரணத்திற்கு ஸூத்ரம் தத் து ஸமந்வயாத் என்பது. இந்த ஸுத்ரத்தில், பரஹ்மண; என்றொரு பதமும் சாஸ்த்ரேண’ என்றொரு பதமும் அத்யாஹாரம் செய்து கொள்ள வேண்டும். (அதாவது, வருவித்துக் கொள்ள வேண்டு மென்றபடி .) தத்- கீழ் ஸுத்ரத்தில் சொல்லப் பட்ட சாஸ்த்ர ப்ரமாணகத்வமானது என்றபடி.-ஸமந்வயாத்– நன்றாகப் புருஷார்த்தமாக அந்வயிக்கிறபடியினால் என்றபடி புருஷார்த் தத்வேந ஸம்பந்தமே ஸமந்வயமாவது. பர ப்ரஹ்மமானது சாஸ்தரத்தினால் புருஷார்த்தமாக பிரதி பாதிக்கப் படுகிறபடியினாலே அந்த ப்ரஹ்மத்திற்கு சாஸ்த்ர ப்ரமாணகத்வம் ஸம்பவிக்கக் குறை யில்லை என்றதாக ஸூத்ரத்தின் பொருள் தேறிற்று.

35-இங்குப் பூர்வபக்ஷம் :- பர ப்ரஹ்மத்தை சாஸ்த்ரம் ப்ரதிபாதிக்க வேண்டுமானால் அது வேறொரு ப்ரமாணத்தினால் அறியப் படாமலிருக்க வேணு மென்பது தவிர மற்றொரு தன்மையும் அதில் இருக்க வேணும். அது என்னென்னில்; தெரிந்து கொள்ள விரும்பக் கூடியதாயிருத்தல் என்கிற தன்மையாம். தெரிந்து கொள்ள வேணு மென்கிற விருப்பம் எந்த வஸ்துவில் உண்டாகின்ற தில்லையோ அந்த வஸ்துவைப் பற்றி சாஸ்த்ரம் ப்ரதி பாதநம் செய்ய மாட்டாதன்றோ. பர ப்ரஹ்மம் இதர ப்ரமாணத்தினால் தெரிந்து கொள்ள முடியாத தென்பதை ஒப்புக் கொள்வோம். தெரிந்து கொள்ள விரும்பக் கூடியதாயிருத்தல் என்கிற தன்மை ப்ரஹ்மத்தினிடத்தில் இருக்க முடியாதே, ஏனென்னில் : தெரிந்து கொள்ள வேணுமென்கிற விருப்பமானது உலகில் ப்ரயோஜநவத்தான விஷயத்தில் தான் உண்டாகும். இஷ்ட ப்ராப்தி அநிஷ்ட பரிஹாரம் என்கிற இரண்டோ இரண்டத்தி லொன்றே உலகில் ப்ரயோஜன மென்னத் தகுந்தது. இஷ்ட ப்ராப்தியானது ப்ர வ்ருத்தியினாலே விளையக் கூடியது. யாக மென்கிற காரியத்தில் ப்ரவ்ருத்தி யுண்டானால் ஸ்வர்க்க மென்கிற இஷ்டம் பிராப்மாகிறது-ப்ரவ்ருத்தியினால் இஷ்ட ப்ராபதியாவது போல், நிவ்ருத்தியினால் அநிஷ்ட பரிஹார முண்டாகிறது. மாம்ஸ பக்ஷண மென்கிற காரி யத்தில் நிவருத்தி யுண்டானால் அநிஷ்ட பரிஹரமுண்டாகிறது-ப்ரக்ருதத்தில், ப்ரஹ்மமானது ப்ரவ்ருத்திக்கோ நிவ்ருத்திக்கோ இலக்கன்றே-வஸ்துவே கண்ணுக்குத் தெரியாமையினால்-ஆகவே ப்ரயோஜநவத்த்வம் சொல்ல முடியாது. ஆதலால், தெரிந்து கொள்ள விரும்பக் கூடியதாயிருத்தல் என்கிற தன்மை பர ப்ரஹ்மத்திற்கு ஸம்பவிக்க முடியாதாகையாலே அந்த ப்ரஹ்மத்தை சாஸ்த்ரம் ப்ரதிபாதிக்க வல்லதல்ல ஆகவே சாஸ்த்ரத்தைக் கொண்டு ப்ரஹ்ம விசாரம் செய்யப் புகுவது ஒவ்வாது – என்று பூர்வ பக்ஷம் பிராப்தமாக –

36-இதன் மேல் சித்தாந்தம் வருமாறு: – பர ப்ரஹ்மத்திற்கு ப்ரயோஜநாந்தாவத்வம் ஸம்பவியாமற் போனாலும், பல பல வேதாந்த வாக்யங்களினால் அது தானே ஸ்வயம் ப்ரயோஜநம்- பரம புருஷார்த்தம் என்று அறிவிக்கப்படுகிறது. “ புத்ரஸ்தே.ஜாத: ( உனக்குப் பிள்ளை பிறந்தது) என்றும், “தவ க்ருஹே நிதிரஸ்தி” (உன் வீட்டில் நிதி யுள்ளது) என்றும் சொன்னால் இந்த வாக்யங்களானவை பரமானந்த ஹேதுவான புத்ர ஜன்மத்தையும் நிதி ஸத் பாவத்தையும் தெரிவிப்பதுபோல வேதாந்த வாக்யங்கள் பரமாநந்த ஹேது பூதமும் பரமாந்த ஸந்தோஹ ஸ்வரூபமுமான பர ப்ரஹ்மத்தை ப்ரதிபாதனம் பண்ணுவது ஸமஞ்ஜஸமே யாகும், அவை அபெளருஷேயங்களாகையாலே புருஷ புத்தி யடியாக வரக் கூடிய ப் ரமப்ரமாத விப்ர லிப்ஸைகள் அங்கு எண்ணத் தகாதவை. ஆகவே பொய் சொல்லி வஞ்சிக்கும் பேச்சுக்களல்ல வேதாந்த சாஸ்த்ரங்கள். அப்படிப் பட்டவற்றைக் கொண்டு ப்ரஹ்ம விசாரம் செய்வது பொருத்தமே யென்றதாயிற்று.இந்த அதிகரணத்தின் ப்ரமேயத்தை யுட்கொண்டு பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தர சதகத்தில்(21) * அத்ராஸ்தே நிதிரிதிவத்…ரங்கேச த்வயி ஸகலாஸ் ஸமந்வயந்தே: என்கிற ஸ்லோகத்தை யருளிச் செய்துள்ளார், அங்கு எம்முடைய வியாக்கியானம் நோக்கத் தக்கது.

அத்ர ஆஸ்தே நிதி இதி வத் புமர்த்த பூதே
சித்த அர்த்தா அபி குண ரூப வ்ருத்த வாதா
ரெங்கேச த்வயி சகலா சமன்வயந்தே ந
உபாஸா பல விதிபி விசேஷ ஏஷாம்–
22-

ஹே ரெங்கேச

சகலா-சமஸ்தமான

குண ரூப வ்ருத்த வாதா–தேவரீருடைய திருக் கல்யாண குணங்கள் -திவ்ய ஆத்ம ஸ்வரூபம் -திவ்ய சேஷ்டிதங்கள் ஆகிய இவற்றைச் சொல்லும் உபநிஷத் பாகங்கள்

சித்த அர்த்தா அபி -கார்ய பரங்கள் இன்றியே சித்த பரங்கள் ஆனாலும்

புமர்த்த பூதே த்வயி–புருஷார்த்த பூதராய் இருக்கிற தேவரீர் இடத்தில்

அத்ர ஆஸ்தே நிதி இதி வத்–இங்கே நிதி இருக்கிறது என்று சொல்லுகிற சித்த பர வாக்கியம் போலே

சமன்வயந்தே –நன்கு பொருந்துகின்றன

ஏஷாம்–கீழ்ச் சொன்ன குண ரூப வ்ருத்த வாதங்களுக்கு

உபாஸா பல விதிபி-உபாசனத்தையும் பலத்தையும் ப்ரதிபாதிக்கின்ற வாக்யங்களினால்

ந விசேஷ–ஒரு அதிசயமும் இல்லை –

பூர்வ மீமாம்சகர் தான் இவற்றை பிரமாணம் என்று கொள்ளாமல் கார்ய பர ஸ்ருதி வாக்யங்களே பிரமாணம் என்பர் –

இவையும் புருஷார்த்த போதகங்களாய்க் கொண்டு உபாசன விதி வாக்கியங்களைப் போலே ஸ்வத பிரமாணங்களே –

ஜிஜ்ஞாஸ அதிகரணம் சமன்வய அதிகரணம் இரண்டாலும் இவை ஸ்தாபிக்கப் படுகின்றன

உனது கல்யாண குணங்களை விவரிக்கும் வேதங்கள் -இங்கு பெரும் புதையல் உள்ளது போன்று–
சித்த வாக்யங்களாக பன்னி உரைக்கும்

இப்படி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிரயோஜனங்களான விதி வாக்யங்களுக்கு கார்ய ப்ரதயா ப்ரமண்யம் உண்டானாலும்
சித்த வஸ்து போதகங்களான சித்த வாக்யங்களுக்கு –
நிரதிசய புருஷார்த்த பூதரான தேவரீருடைய
ஸ்வரூபம் ரூபம் குணம் சேஷ்டித வியாபாரங்கள் இவற்றை பிரதிபாதித்து சித்த பரங்களானாலும்
இங்கே நிதி உண்டு என்கிறது போலே
உபாசன தத் பல விதாய வாக்யங்களோடே துல்ய சீலங்களாய்
அதுகளுக்கு சேஷம் அன்றிக்கே பிரமாணம் ஆகிறதுகள் என்கிறார் –

————–

37-கீழ் விளக்கப்பட்ட நான்கு அதிகரணங்களும் நான்கு ஸூத்ரங்கள்.இவையே சதுஸ் ஸூத்ரி யென்று வழங்கப் பெறும்.இவை சாஸ்த்ராரம்பா ஸமர்த்தன பரங்களென்றும், இனி மேல் தான் சாஸ்த்ராரம்பமாகிற தென்றும் நம் ஆசாரியர்களின் கொள்கை. எம்பெருமானார் திருவடிகளிலேயே ஆஸ்ரயித்தவரான ஸோமாசி யாண்டானென்பவர் முதல் ஸுத்ரமொன்று மாத்திரமே சாஸ்த்ராரம்ப ஸமர்த்தந பரமென்றும்(ஐந்மாத்யஸ்ய யத என்கிற) இரண்டாவது ஸுத்ரம் முதற் கொண்டே சாஸ்த்ராரம்பமாய் விட்டதென்றும் அபிப்ராயப்படுகிறார். சதுஸ் ஸூத்ரியும் சாஸ்த்ராரம்ப ஸமர்த்தன பரமென்பதே ஸித்தாந்தமாகக் கொள்ளத் தக்கது. சாரீரக மீமாம்ஸை யென்கிற இந்த சாஸ்த்ரம் ஆரம்பிக்க அவசியமில்லை யென்று கிளர்ந்த சங்கைகள் கீழே நான்கு ஸூத்ரங்களினாலும் பரிஹரிக்கப்பட்டன வென்றதாயிற்று. இனி மேல் ஒவ்வோரதிகரணத்தின் ப்ரமேயத்தையும் நாம் விவரித்துக் கொண்டு போக இச் சிறு நூலில் அவகாசமில்லாமையால் முக்கியமான சில அதிகரணங்களின் ப்ரமேயத்தை மாத்திரம் மூதலித்துக் கொண்டு மண்டூகப் லுதியில் செல்லுவோம்.

38-ஆனந்த மயாதிகரணத்தைப் பற்றிப் பேசுகிறோம்.இவ் வதிகரணமானது முதலத்யாயத்தின் முதற் பாதத்தில் ஆறாவது அதிகரணமாக வுள்ளது. இதற்குக் கீழே ஈக்ஷத் யதிகரணமுள்ளது. அதில் ஐகத் காரண வஸ்துவுக்கு ஸங்கல்ப விசேஷம் ஓதப் பட்டிருத்தலால் அந்த ஸங்கல்பம் கெளண மன்றிக்கே முக்கியமாகவே நிர்வஹிக்கப் பட வேண்டுதலால் அப்படிப் பட்ட ஸங்கல்பத்திற்கு ஆஸ்ரய பூதமான ஐகத் காரண வஸ்து அசேதனமான ப்ரதாநமா யிருக்க முடியாதென்று நிரூபிக்கப் பட்டது. இனி, அசேதந வஸ்து ஜகத் காரணமாக வேண்டா; ஜீவனே ஜகத் காரணமா யிருக்கட்டுமே ; அவனுக்கு ஸங்கல்பமாகிற ஈக்ஷணம் முக்யமானதே ஸம்பவிக்கு மன்றோ வென்று சங்கை யுண்டாக ; அதற்குப் பரிஹாரமாய் இந்த அதிகரணம் அவதரிக்கின்றது. இதற்குத் தலையான ஸுத்ரம் – ஆநந்தமயோப்யாஸாத்” (1-1-13) என்பது.-ஆநந்த மய: அப்யாஸாத் என்று பத விபாகம். இதற்கு மேலுள்ளதான அந்தரதிகரணத்தின் இரண்டாவது ஸூத்ரமான * பேத வ்யபதேசாச் ச அந்யா என்கிற ஸூத்ரத்திலிருந்து அந்ய என்னும் பதமொன்று இங்கே வருவித்துக் கொள்ள வேண்டும். ஆகவே,ஆநந்த மய: அந்ய: அப்யாஸாத் என்றதாயிற்று.ஆநந்த மய :-ஆநந்த மய சப்தத்தினால் குறிக்கப்பட்ட புருஷன், (அந்ய )-ஜீவாதமாவிற் காட்டிலும் வேறு பட்ட பரமாத்மாவே யாகக் கடவன் ; ஏனென்னில் ; அப்யாஸாத்- அளவு கடந்ததாக வோதப் பட்ட ஆனந்த முடைமை யானது துக்க மிஸ்ரனான ஜீவாத்மாவுக்கு இணங்க மாட்டாமல் பரமாத்மாவுக்கே இணங்குமதாகையாலே . என்பது ஸூத்ரத்தின் பொருள் தைத்திரீயோபநிஷத்தில் ஆநந்த வல்லி யென்பது ஒரு பகுதி; அதில் ஆநந்த மய வித்யா ப்ரகரணத்தில் தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஜ்ஞாந மயாத், அந்யோத்தர ஆத்மா ஆநந்த மயா* என்கிற வாக்யத்தினால் ஆநந்த மயனான ஆத்மாவை ப்ரஸ்தாவித்து, அதற்கு மேல் –ஸைஷா ஆநந்தஸ்ய மீமாம்ஸா பவதி என்று தொடங்கி தே யே சதம் ப்ரஜாபதேராநந்த , ஸ ஏகோ ப்ரஹ்மண ஆநந்த, ஸ்ரோத்ரியஸ்ய சாகா மஹதஸ்ய * என்னுமளவாக ஆனந்த மயனான ஆத்மாவுக்குள்ள ஆனந்தத்திற்கு அளவு கூறுமடைவில் (நான்முகனுக்கு யாதொரு ஆனந்தமோ, அதிற் காட்டிலும் நூறு மடங்கு அதிகமான ஆனந்தம் பர ப்ரஹ்மத்திற்கு ஓர் ஆனந்தம்’ என்று சொல்லி *ஸ்ரோத்ரியஸ்யச அகாமஹதஸ்ய * என்கிற வாக்யத்தினால் முக்தனுக்கும் அப்படிப்பட்ட ஆனந்த முடைமை சொல்லிற்று; அகா மஹத னென்றது விஷய விரக்த னென்றபடி. ஸ்ரோத்ரிய னென்றது வேதாந்த ஸ்ரவணம் பண்ணினவனென்றபடி, வேதாந்த ஸ்ரவணம் செய்து ப்ரஹ்ம உபாஸனத்தினால் முக்தி பெற்றவனென்று தேர்ந்த பொருள் நூறு மடங்காகப் பெருக்கப்பட்ட சதுர்முகாநந்தமானது முக்தனுக்கு ஒரு ஆனந்தம் என்று சொல்லிற்றாயிற்று. இங்கு முக்தனுக்குச் சொல்லப்பட்ட ஆனந்தமானது பர ப்ரஹ்மத்தின் உபாஸனத்தினால் விளைவது என்று ஸ்ரோத்ரிய பதத்தினால் சொல்லப் பட்டுள்ளது. ஆகவே முக்த ஆநந்தமானது உபாஸந ப்ரீதனான பகவானுடைய ஸங்கல்பத்தினால் உண்டு பண்ணப்பட்ட தென்னுமிடம் தேறுகின்றது . [முக்தாநந்தம் நிருபாதிகமன்று, ஸோபாதிகம் என்றதாகத் தேறுகிறது.] ஸ ஏகோ ப்ரஹ்மண ஆநந்த என்கிற விடத்திலோ வென்னில், காரண மொன்றும் சொல்லப் பட்டிராமையினால் பர ப்ரஹ்மத்தினுடைய ஆனந்த மானது வேறொருவருடைய ஸங்கல்பாதீமன்றிக்கே இயற்கையான தென்னுமிடம் நன்கு தெரிய வருகிறது. நிருபாதிகமான ஆனந்த முடைமை பர ப்ரஹ்மத்திற்கே யொழிய வேறொருவற்கு மில்லை யென்று தேறுதலால் அப்படிப்பட்ட ஆனந்தமுடைய தாக ஆனந்த மய சப்தத்தினால் நிர்தேசிக்கப் பட்டவஸ்து ஜீவனிற் காட்டிலும் வேறான பர ப்ரஹமமே என்றபடி.

39- தைத்திரீயோபநிஷத்திலுள்ள ஆனந்த வல்லியை (ஆநந்த மய வித்யா’ என்று
வேதாந்திகள் வழங்குவர்.
அந்த வித்யையில் (கோஹ்யேவாந்யாத் க ப்ராண்யாத்,யதேஷ ஆகாச ஆநந்தோ ந ஸ்யாத். ஏஷஹ்யேவாநந்தயாதி என்று ஓதப் பட்டிருக்கின்றது. இதன் பொருளாவது- கீழே சொல்லப்பட்ட ஆகாச சப்த வாஸ்யமான வஸ்துவானது நிருபாதிகமாயும் அபரிச்சிநமா யுமிருக்கிற ஆநந்தத்தை உடைய தல்லாமல் இருக்குமானால்,பிரமன் முதற் கொண்டு எறும்பு வரையிலுள்ள ஐந்து ஸமூஹங்களில், கோ வா அந்யாத்= எந்த ஐந்து தான் ப்ராக்ருதமான ஆனந்தத்தை யடைய முடியும்? கோ வா ப்ராண்யாத்= எந்த ஐந்து தான் மோக்ஷானந்தத்தை யடைய முடியும்? ஏஷ ஏவ ஹி = இந்த ஆனந்த மயனான ஆத்மாவே யன்றோ, ஆநந்தயாதி- ப்ராக்ருதமாயும் அப்ராக்ருத
மாயுமுள்ள எல்லா விதமான ஆனந்தத்தையும் விளைவிக்கின்றது. [ஆநந்த யதி என்கிற சொல் வடிவத்தில் யகாரம் நீண்டிருப்பது சாந்தஸமென்றுணர்க] இங்கே இப்படிச்
சொல்லி யிருப்பதும் தவிர, உத்தர நாராயணாநுவாகத்திலும் —தமேவம் வித்வாந் அம்ருத இஹ பவதி, நாந்ய பந்தா வித்யதே அயநாய * என்பதனாலும் இவ் வர்த்தமே நிலைநாட்டப் பட்டிருக்கின்றது. ஏவம் தம் வித்வாந் – இவ் விதமாக அந்த மஹா புருஷனை உபாஸிப்பவன், அம்ருதோ பவதி- மோக்ஷாநந்தத்தைப் பெற்றவனாகிறான், அயநாய-அந்த மோக்ஷானந்த பராப்தியின் பொருட்டு, அந்யஜ் பந்தா வித்யதே– அந்த மஹா புருஷனைத் தவிர்த்து வேறு உபாய மில்லை. என்பது இந்த ஸ்ருதி வாக்யத்தின் பொருள். ஏஷஹ் யேவாநந்தயாநி என்ற ஸ்ருதி வாக்யத்தில் அந்வயமுகேந தெரிவிக்கப்பட்ட அர்த்தமே நாந்யாபந்தா வித்யதே அயநாய * என்கிற ஸ்ருதி வாக்யத்தில் வ்யதிரேக முகேந தெரிவிக்கப் பட்டிருக்கின்றது என்னுமித்தனையே வாசி-ஆக உபய ஸ்ருதிகளும் ஏகார்த்த மாயிருக்கையினாலே, உத்தர நாராயண அநுவாக வாக்யம் லக்ஷ்மீ பதியையே விஷயமாகக் கொண்டிருப்பது போலவே ஆநந்த மய வித்யையிலும் அப் பெருமானே விஷய பூதன் என்னுமிடம் அறிய வெளிது-இன்னமும், ஆநந்த மய வித்யையில் —ஸ யச்சாயம் புருஷே, யச்சாஸாவாதித்யே. ஸ ஏக ] என்கிற வாக்யத்தினால் ஆனந்த மயனையும் ஆதித்ய மண்டலத்தினுள்ளே யுள்ள புண்டரீகாக்ஷனையும் ஒன்றாகச் சொல்லி யிருப்பதனாலே அந்த புண்டரீகாக்ஷனே ஆநந்த மயன் என்று தேறி நிற்கிறது. ஆக இப்படிப் பட்ட அடையாளங்களினால் ஆநந்த மய வித்யா வேத்யனும் புண்டரீ காக்ஷனுமானவன் பரம புருஷனே யென்று தேறிற்றாகிறது.

40-பூர்வ பக்ஷம்:- ஆனந்த வல்லியில் * [ப்ரஹ்ம விதாப்நோதி பரம்] என்று ப்ரஹ்மத்தை ப்ரஸ்தாவித்து * ஸத்யம் ஜ்ஞாந மநந்தம் ப்ரஹ்ம* என்று அந்த ப்ரஹ்மத்தின லக்ஷணங் கூறி (தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாசஸ் ஸம்பூத.] இத்யாதி வாக்யத்தினால் அந்த ப்ரஹ்மம் ஆத்மா வென்னுமிடத்தையும் அதில் நின்றும் ஆகாசாதி பதார்த்தங்களின் உத்பத்தியையுஞ் சொல்லி, * (தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஜ்ஞாந மயாத். அத்யோந்தர ஆத்மா ஆநந்தமய?] என்ற வளவால் உபக்ராந்தமான ஆத்மோபதேச பரம்பரை யானது ஆனந்த மயனில் ஸமாப்தி செய்யப் பட்டிருக்கிறது. ஆகவே உபக்ரமிக்கப் பட்ட ப்ரஹ்மம் ஆநந்த மயனான ஆத்மாவே என்று நிச்சயிக்கப் படுகிறது. அந்த ஆனந்த மய ஆத்மாவுக்கு (தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா]என்ற உத்தர வாக்யத்தில் சரீர ஸம்பந்தித்வமாகிற சாரீரத்வம் சொல்லப் பட்டிருக்கின்றது . கர்ம பர வசனான ஜீவாத்மாவுக்கே கர்ம பலாநுபவார்த்தமாக சரீர ஸம்பந்தம் ஸம்பவிக்கும் : அகர்ம வச்யனான பரம புருஷனுக்கு அது ஸம்பவிக்க நியாயமில்லை.ஆகவே சரீர ஸம்பந்த முடையவனாக ஓதப்பட்ட இந்த ஆனந்த மயனான ஆத்மா ஜீவாத்மா வென்றே நிச்சயிக்கலாகிறது.

41-என்கிற பூர்வ பக்ஷத்தின் மேல் ஸித்தாந்தம். நிருபாதிகமான ஆனந்த
முடைமை முதலிய குணங்கள் ஜீவாத்மாவுக்கு ஸம்பவிக்க மாட்டாவாகையாலும், சகல சராசரங்களையும் சரீரமாகக் கொண்டவனாக வோதப்படுகின்ற பரமாத்மாவுக்கு அப்படிப்பட்ட ஸகல சரீரகத்வமாகிற சாரீரத்வம் நன்றாக ஸம்பவிக்கக் கூடியதாதலால் நிருபாதிக ஆனந்த சாலியாகக் கடவன். ஆதந்த மய: என்ற விடத்திலுள்ள மயட் ப்ரத்யயத்திற்கு விகாரம் அர்த்தமாகையாலே விகார மற்றவனான பரமாத்மாவுக்கு ஆநந்த விகாரத்வம் பொருந்த மாட்டாதென்கிற வாதமும் அநுபபநம் ; மயட்டுக்கு விகாரமே அர்த்தம் என்கிற நிர்ப்பந்தமில்லை : “அந்ந மயோ யஜ்ஞ ” என்று சொன்னால் அந்ந விகாரமென்று பொருளன்றே; இங்கு மயட்டுக்கு ப்ராசுர்யமன்றோ பொருள். (ப்ராசுயமாவது – மலிவு) அன்னம் மலிந்த வேள்வி என்பது தானே பொருளாகிறது. இப்படியே இங்கும் ஆனந்தம் மலிந்தவன் பரமாத்மா ‘ என்றே பொருள் படக் குறை யில்லாமையாலே விகார வாதம் அப்ரஸக்தம். அடுத்தபடியாக * யதோ வாசோ நிவர்த்தந்தே, அப்ராப்ய மநஸா ஸஹ, ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந், நபிபேதி குதச்சந*என்று வாக்குக்கும் நெஞ்சுக்கு மெட்டாதபடி அப்ரமேயமான ஆனந்த முடையனாக வோதப்பட்ட பரமாத்மாவினிடத்திலேயே யன்றோ மலிந்த ஆனந்தமுடைமை தேறக் கூடியது

42-இதற்கு மேல் ஒரு வாதம் தோன்றக் கூடும்; ஆநந்த பிராசுர்யமாவது ஆனந்தத்தினுடைய ஆதிக்யமே யாகும். ஆனந்தம் அதிகமென்று சொன்னால் ஆநந்த ப்ரதி கோடியான துக்கம் சிறிது உண்டென்று தோன்றியே தீருமல்லவா? (ஆதிக்யமென்பது ப்ரதி யோகியை -அபேக்ஷித்திருக்குமகையாலே எதைக் காட்டிலும் அதிகமென்று சொல்லியாக வேண்டுமாகையாலே ஆனந்த மயன் என்றும் கொள்ளப்பட்ட பரம புருஷனிடத்தில் துக்க ஸம்பந்தம் இசையப் பட்டதாகவே யாயிற்று- என்றபடி)ஏவஞ்ச,அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாக மென்னப்படுகிற பர ப்ரஹ்மத்தினிடத்தில் சிறிதளவு கூட ஹே ஸம்பந்தம் ஸம்பவிக்க மாட்டாதாகையாலே, பிரசுராநந்த சாலித்வமென்று பரிஷ்கரிக்கப்பட்ட ஆநந்த மயத்வமும் அங்குச் சொல்லுவதற்கில்லை என்பதாக.- இதுவும் பிசகு. அந்த ஆனந்த ப்ராசுர்யத்தை விவரிக்கப் புகுந்த * ஸைஷா ஆநந்தஸ்ய மீமாம்ஸா பவதி * இத்யாதியான ஆநந்த மீமாம்ஸையில் *தே யே சதம் ப்ரஜாபதே ராநந்தா * என்கிற வளவாக ப்ரஸ்தாவிக்கப்பட்ட சதுர்முக பர்யந்த ஸகல ஜீவர்களின் ஆனந்தத்திற் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாயிருக்கையாகிற ப்ராசுர்யமே ஆநந்தமய சப்தத்தினால் விவக்ஷிதமாக விவரித்திருக்கையாலே ப்ரஸ்துதனான ஆநந்த மய ஆத்மாவில் ஆநந்த மயனென்கிற சொல்லிலிருந்து துக்க ஸம்பந்தம் ப்ரஸங்கிக்க விரகில்லை.

43-இவ் விடத்தில் ப்ராஸங்கிகமாக வொரு விஷயம் எழுத வேண்டியதாகிறது. மேலே அநுவதிக்கப்பட்டதொரு ஆஷேபத்தைப் பரிஹரிக்கையில் பரம புருஷனுக்கு ஸ்வல்ப துக்க ஸம்பந்தமும் கிடையாதென்று இங்கே நிர்வஹித்து விட்டு, அந்தப் பரம் புருஷனுடைய தயை யென்னும் குணத்தை நிரூபணம் செய்யுமிடத்து எம்பெருமான் அடியார்களின் துக்கத்தை யநுஸந்தித்துத் தானும் துக்கிப்பது தான் தயாளுத்வமென்று ஸ்வாமி பாஷ்யகாரரே அருளிச் செய்ததாகக் காணப் படுகிறதே; இது எப்படி பொருந்தும்? எம்பெருமானிடத்தில் துக்கமுமுண்டு என்று இசைந்தால் ஆநந்த மயத்வம் கொள்வதற்கு இடமில்லாமலன்றோ இருக்கிறது – என்பதாக ஒரு சங்கை தோன்றக் கூடியதுண்டு. இதற்குப் பரிஹாரம் தெரிந்து கொள்ள வேண்டியது வேதாந்திகளுக்கு மிக அவசியமே. இப்படியொரு சங்கை தோன்று மென்று ஸ்வாமி பாஷ்யகாரர் தாம திருவுள்ளம் பற்றி இவ் வதிகரண ஸ்ரீபாஷ்யத்தில் சில பங்க்திகளை யருளிச் செய்திருக்கிறார்; அவற்றை அநுவதித்துக் காட்டிப் பொருளும் விவரித்துத் தெளிவு பிறப்பிக்கின்றோம். இவ் வதிகரணத்தில் இரண்டாவது ஸூத்ரம் விகார சப்தாந் நேதி சேந் ந ப்ராசுர்யாத்- என்பது. இந்த ஸுத்ரத்தின் ஸ்ரீ பாஷ்யத்தில் மேல் வரும் ஸ்ரீ ஸுக்திகளின் தாற்பரிய மென்ன வென்றால்; பர ப்ரஹ்மத்தினிடத்தில் ஆனந்தம் அதிகமாக இருக்கிறது என்று சொல்வதனால் சிறிது துக்க மிருப்பதாகச் சொன்னதாகிறது என்கிற வாதம் பிசகு. ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தம். அபரிமிதம் என்றால் இவனுடைய ஆனந்தம் பரிமிதம் என்று இவ்வளவு தான் ஏற்படுமே யொழிய ப்ரமத்தினிடத்தில் ஸ்வல்ப துக்க மிருக்கிறது என்றும் சொன்னதாகத் தேறுவதற்கு வழியே யில்லை. துக்கம் இருக்கிறதோ இல்லையோ அது வேறு பரமாணத்தினால் ஏற்பட வேண்டுமே யொழிய ஆநந்த ப்ராசுர்யத்தைத் தெரிவிக்கிற ஆநந்த மய பதத்தினால் அது ஏற்படாது. ஆனந்தத்திற்கு ப்ரதி கோடியான வஸ்து ப்ரஹ்மத்தினிடத்தில் இல்லை யென்பது * அபஹதபாப்மா * இத்யாதியான வேறு ஸ்ருதியினால் தெரிய வருகிறது. அதைப் பற்றி இங்கென்ன ? இங்குத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இவ்வளவே- பர ப்ரஹ்மத்தின் ஆனந்தம் அளவு கடந்ததென்றால் மற்றை யோருடைய ஆனந்தம் இப்படியல்லாமல் அற்பமானது என்பதே தேறி நிற்கும்; அது ஆனந்த வல்லியில் ஸ்பஷ்டமாகவே தெரிவிக்கப்படுகிறது.- என்பதாக-இங்கு ஸ்வாமி * அபஹதபாப்மா என்கிற ஸ்ருதி வாக்கியத்தை யெடுத்துக் காட்டி யுள்ளார். அதன் கருத்தை ஸ்ருத ப்ரசாசிகாசார்யர் நன்கு விவரித்துள்ளார். அதை உப நிஷத் பாஷ்யகாரரான ரங்கராமநுஜ ஸ்வாமி, சாந்தோக்ய உபநிஷத்தில் * அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோக : * என்னுமிடத்துத் தம்முடைய பாஷயத்தில் விளக்கி யுள்ளார்.-இவரது ஸ்ரீ ஸூக்திகளின் தாத்பர்ய ஸாரமாவது – பரமாத்மாவை அபஹத பாப்மா வென்று சொல்லுவதன் கருத்து பாபம் செய்யாதவனென்பதல்ல; பாபம் செய்தாலுங் கூட அதன் பலனாக ஹேய ஸ்பர்சமுண்டாகப் பெறாதவனென்றபடி, பாபத்தைச் சொன்னது புண்யத்தையும் சொன்னபடியே. பகவான் புண்ய பாபங்களைச் செய்தாலுங்கூட அவற்றின் பலன்கள் தன் மீது ஸம்பந்திக்கப் பெறாதவன் என்பதே இங்கு விவக்ஷிதம். பாபம் செய்தால் அதன் பலன் ஸம்பந்திக்காமல் எப்படி யிருக்குமென்று கேட்கலாகாது: அது தான் பகவானுடைய விலக்ஷணமான வொரு தன்மை என்பதாம். நம் போல்வார் பாபம் செய்தால் ஹேய ஸம்பந்தமுண்டாகியே தீருகிறது. பகவானுக்கோ அப்படியில்லை. நாம் செய்கிற கருமங்கள் போன்ற கருமங்களைப் பகவானும் செய்வதுண்டு ; செய்தாலும் அதனால் அவனுக்கு ஹேய ஸம்பந்த முண்டாவதில்லை. காரணமான கர்மமிருந்தால் கார்யமான ஹேய ஸம்பந்தமில்லாமற் போகுமோவென்று சங்கிக்கக் கூடாது; இதுதான் பகவானுடைய விலக்ஷணமான வைபவம் – என்று இவ்வளவும் உபநிஷத் பாஷ்யகாரருடைய நிரூபணங்கள். இவ் விஷயத்திற்கு அந்தரதிகரண ஸ்ருத ப்ரகாசிகையையும் ஸம்வாதமாக எடுத்துக் காட்டியுள்ளார். அபஹதபாப்மா என்பது எந்த வாக்யத்திலிருக்கிறதோ அதே வாக்கியத்தில் தான் விசோக : என்பதுமிருக்கிறது. அங்கும் இதே நியாயமாகத் தான் அர்த்தமாகும். சோக முண்டானாலும் இதனால் ஹேய ஸம்பந்த முண்டாகப் பெறாதவன் என்றபடி. ஹேயமான சோகமன்றிக்கே கல்யாண குணங்களிற் சிறந்ததான சோகத்தை யுடையவன் என்றதாகத் தேறும். எப்படியானாலென்ன? சோகமுள்ளதாக ஒப்புக் கொண்டு விட்டால் அது ஆநந்த மயத்வத்திற்குக் கொத்தை தானே என்கிற விந்த வாதத்தையே சிலர் செய்து கொண்டிருக்கலாம். அவர்கள், மேலே யெடுத்துக் காட்டிய உபநிஷத் பாஷ்ய பங்க்திகளில் “ஈஸ்வரேண க்ருதாநி புண்ய பாப ஸஜாதீயாதி கர்மாணி” “க்ருதேபிபாபே” என்றுள்ள ஸ்ரீ ஸக்திகளின் மேலும் ஓயாது சோத்யங்களைச் செய்து கொண்டிருக்கலாமத்தனை. இதைப் பற்றின விரிவு இங்கு இவ்வளவு போதும்.

44-இனி இரண்டாமத்யாயத்தின் தொடக்கத்திலுள்ள ஸ்ம்ருத் யதிகரணத்தின்-ஸ்ம்ருத்ய நவகாச தோஷ ப்ரஸங்க இதி சேத் (2-1-1.) என்பது ஸூத்ரம். கீழ் முதலத்யாயத்தில் வேதாந்த பிரதி பாதிதமான ஜகத் காரண வஸ்து சேதநாசேதந விலக்ஷணமான பர ப்ரஹ்மமென்று அறுதியிடப் பட்டது. பர ப்ரஹ்மம் ஜகத் காரணமென்கிற பக்ஷத்தில் எத்தனை வகையான தோஷ சங்கைகள் தோன்றக் கூடுமோ அவற்றை யெல்லாம் எடுத்துக் கழிப்பதற்காக இரண்டாமத்யாயம் ஆரம்பிக்கப்படுகிறது. உலகில் ஓரிடத்தில் பெரிய கம்பமொன்றை நடுகிற வர்கள் நட்டு விட்டு அதை ஆட்டிப் பார்ப்பது வழ்க்கம். எதற்காக வென்னில், அது அவிசால்யமாக வேணு மென்பதற்காகவே. அது போலவே இங்கும் கொள்க. முன்னத்யாயத்தில் பர ப்ரஹ்மத்திற்குச் சொன்ன ஜகத் காரணத்வம் இவ் வத்யாயத்தில் நன்கு த்ருடீகரிக்கப்படுகிற தென்ற தாயிற்று. இதில் முதற் பாதத்தில் ஸாங்க்யர் முதலானவர்களால் கிளப்பப்படும் தோஷங்கள் பரிஹரிக்கப் படுகின்றன. முன்னத்யாயத்தில் நிரீஸ்வர ஸாங்க்யர்களும் ஸேஸ்வர ஸாங்யர்களும் நிரஸிக்கப்பட்டனர். அதில் நிரீஸ்வர ஸாங்க்யன் கபில ஸ்மருதி விரோதத்தைக் காட்டி ப்ரஹ்மம் ஐகத் காரணமன்றென்று வாதிப்ப தொன்றுண்டு; அந்த வாதத்தை நிராகரிக்க இவ்வதிகரணம் எழுகின்றது. ஸ்ம்ருத்ய நவகாச தோஷ ப்ரஸங்க இதி சேத்-சேதநாசேதந விலண மான ப்ரஹ்மம் ஐகத் காரண மென்று கொண்டால், ப்ரதாநாம் காரணமென்று சொல்லுகிற கபில ஸ்ம்ருதி அப்ரமாணமாய் விடுமே யென்னில்; நீ – அப்படி சொல்லக் கூடாது: அந்ய ம்ருத்ய நவகாச தோஷ ப்ரஸங்காத்- ப்ரஹ்ம காரணத்வத்தைச் சொல்லுகிற மற்ற ஸ்ம்ருதிகள் அப்ரமாணமாய் விடுமாதலால்- என்பது ஸூத்ரத்தின் பொருள். தங்கள் யோக மஹிமையினால் பராவர தத்வங்களை உள்ளபடி ஸாக்ஷாத் கரித்தவர்களான மநு பராசராதி மஹர்ஷிகளின் ஸ்மருதிகளை யெல்லாம் அப்ரமாணமாக்குவதிற் காட்டிலும் கபில ஸ்மருதி யொன்றை அப்ரமாணமாக்குவது தான் யுக்தம் என்பது கருத்து.இங்கே பூர்வ பக்ஷம் வருமாறு *ஸதேவ ஸேம்ய இதமக்ர ஆஸீத் என்பது முதலான வேதாந்த வாக்யங்களுக்கு ஸ்வதந்தர ப்ரதாந் காரணத்வத்தில் தாத்பரியமா? அல்லது சேதநாசேதந விலக்ஷண் ப்ரஹ்ம் காரணத்வத்தில் தாத்பர்யமா? என்று ஸந்தேஹம் வந்தால், வேதாந்த வாக்ய தாத்பரியத்தை நிர்ணயிப்பதற் கென்றே தோன்றிய கபில ஸ்மிருதியை யநுஸரித்துத் தான் தாத்பர்ய நிர்ணயம் செய்ய வேண்டும் : இல்லையாகில் அந்த ஸ்ம்ருதிக்கு ஸர்வாத்மநா அப்ராமாண்யம் சொல்ல வேண்டி வரும். அப்படிச் சொல்லு வதற்கில்லை; வேதாந்தங்களில் ஆப்தராகச் சொல்லப் பட்டிருக்கின்ற கபில மஹர்ஷி அயதார்த்த வக்தாவாக இருக்க முடியாதாகையாலே அவரியற்றிய ஸ்மருதிக்கு அப்ராமாண்யம் சொல்லவே முடியாது.ஆனால் ப்ரஹ்ம காரணத்வத்தைச் சொல்லுகின்ற மநு ஸ்ம்ருதி முதலானவற்றுக்கு மாத்திரம் அப்ராமாணயம் சொல்லி விடலாமோ வென்று கேட்கக் கூடும். கர்ம காண்டத்தில் சொல்லப்பட்ட கருமங்களையும் மந்வாதி ஸ்ம்ருதிகள் விசதீகரிப்பன வாதலால் அந்த அம்சத்திலே அவற்றுக்கு ப்ராமாண்யம் கொள்ள இடமுள்ளது.ஆகவே அவற்றுக்கு ஸர்வாத்மநா அப்ராமாண்யமில்லை: கபில ஸ்மருதியோ வென்னில், கர்ம காண்டத்தில் அடியோடு ப்ரவேசியாமல் ஜ்ஞாந காண்டத்தில் சொல்லப்பட்ட தத்துவங்களை விசதீகரிப்பதற்கென்றே தோன்றின தாகையாலே அதற்கு விருத்தமான ப்ரஹ்ம காரணத்வத்தைக் கொள்ளுமளவில் ப்ரதாந காரணத்வத்தைக் கூறுகின்ற அந்த கபில ஸ்ம்ருதிக்கு வேறு விஷயமில்லாமையாலே ஸர்வாத்மநா அப்ராமாணயம் வந்து தீரும். ஆகையாலே அதற்கு ஒருவாறு ப்ராமாண்யம் கொள்ளுவதற்காகவும் நிரவகாசத்வ ஆபத்தியைப் பரிஹரிப்பதற்காகவும் அது சொன்ன பரதான காரணத்வத்தில் தான் வேதாந்தங்களுக்குத் தாத்பர்யம் கொள்ள வேணும்.

45-என்கிற இந்த பூர்வ பக்ஷத்தின் மேல் ஸித்தாந்தம் வருமாறு : கபில ஸ்ம்ருதி யானது வேதாந்த வாக்யங்களின் தாத்பர்ய நிர்ணயத்திற் கென்றே தோன்றினதாகையாலே அதை யநு வரித்தே வேதாந்த தாத்பர்ய மறுதியிட வேணுமென்பது யுக்த மென்றாலும், தங்களுடைய யோக மஹிமையினால் பராவர தத்வங்களை உள்ள படி ஸாக்ஷாத் கரித்தவர்களான மநு மஹர்ஷி, பராசர மஹர்ஷி முதலான பல மஹர்ஷிகளி இயற்றிய ஸ்மருதிகளை உபேக்ஷிப்பது தகாது. ஒரு கபில மகர்ஷியின் உக்தியைக் கொண்டு பல மஹா யோகிகளின் உக்திகளை உபமர்திப்பது யுக்தமாகாது. கபில ஸ்ம்ருதிக்கும் மந்வாதிகளின் ஸ்மருதிகளுக்கும் பரஸ்பர விரோதம் நேர்ந்தால் மந்வாதி ஸ்மருதிகள் பலிஷ்டங்களாகையாலே அவற்றோடு முரண் படுகின்ற கபில ஸ்மருதிக்கு ப்ராந்தி மூலகத்வ நிர்ணயம் பண்ணுவதே பொருத்த மானது. மந்வாதி ஸ்மருதிகளில் பர பிரஹ்மத்திற்குத் தான் ஜகத் காரணத்வம் ஸ்பஷ்டமாகச் சொல்லப் பட்டிருக்கிறது. ஆகவே கபில ஸ்மிருதியைத் தள்ளி மநு பராசராதி ஸுக்திகளின் படியே ப்ரஹ்மமே ஜகத் காரணமென்று கொள்வது தான் யுக்தம். *ருஷிம் ப்ரஸூதம் கபிலம் என்று கபிலரை ஆப்தராகச் சொல்லி யிருக்கையாலே அவருடைய உக்தியைத் தழுவியேயாக வேணுமென்றதும் அஸங்கதம். ஸ்ருதி ஸ்மிருதிகளில் ப்ருஹஸ்பதியையும் கொண்டாடி யிருப்பதைக் காண்கிறோம். அவ்வளவால் அவரியற்றிய லோகாயதத்தைக் கொண்டு ஸ்ருதியின் பொருளை நிர்ணயிப்பாருண்டோ? இல்லையே.

46-இனி, கருத்ஸ்ந ப்ரஸக்தி யதிகரணத்தின் ப்ரமேயம் விளக்கப் படுகிறது – ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத்* என்பது ஸித்தாந்த ஸூத்ரம். ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்னும் வாதத்தில் ப்ரஹ்மமே ஜகத்தாகப் பரிணமிப்பதாய்த் தேறுகிறது. ப்ரஹ்மமோ நிரவயவமானது ; அது ஜகத்தாகப் பரிணமிக்கும் போது ப்ரஹ்மம் முழுவதுமே காரியப் பொருளாகப் பரிணமிக்க வேண்டியதாகிறது. ஏக தேசேந பரிணமிக்கிற தென்னும் பக்ஷத்தில் ப்ரஹ்மம் நிரவயவமென்று சொல்லுகிற ஸ்ருதி விரோதிக்கும். ஆகையாலே ப்ரஹ்மம் ஜகத் காரணமாக வொண்ணாது- என்கிற பூர்வ பக்ஷமே முந்தின ஸுத்ரத்தின் பொருள். (இதைச் சிறிது விவரிப்போம்.) கீழே உப ஸம்ஹாராதிகரணத்தில் ஷீர த்ருஷ்டாந்தம் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஷீர த்ருஷ்டாந்தம் பொருந்தாது. ஷீரம் ஸாவயவமாகையாலே அது போல ப்ரஹ் மமும் ஸாவயவமென்ன வேணும். அப்படி கொண்டால் நிரவயவத்வ ஸ்ருதி கோபிக்கும்; நிரவயவமாகில் ப்ரஹ்மம் க்ருத்ஸ்ந பாகத்தாலும் பரிணாம மடைந்ததாக வேணும். ஆகட்டுமே யென்னில், க்ருத்ஸ்சமமும் ஒரு காரயப் பொருளாகப் பரிணமித்த போது மற்றொரு காரியப் பொருளாகப் பரிணமிக்க ப்ரஸக்தி யில்லை. ஆகையாலே ப்ரஹ்ம காரணத்வ வாதம் ஒவ்வாது -என்பதாகப் பூர்வ பக்ஷம்.

47-இதன் மேல் ஸித்தாந்த முணர்த்தும் ஸுத்ரம்-ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத்*என்பது. து சப்தம் பூர்வ பக்ஷத்தை வ்யாவர்த்திப்பிக்க வந்தது. ப்ரஹ்மம் நிரவயவமென்பதும், அது கார்யப் பொருளாகப் பரிணமிக்கிற தென்பதும் ஆகிய இரண்டும் ஸ்ருதி ஸித்தமான அர்த்தங்கள். ப்ரஹ்மமோ சப்த ப்ரமாண மொன்றினாலேயே அறியப் படுமது : ஆகையாலே கீழே தோன்றின பூர்வ பக்ஷம் யுக்தமன்று என்பதாக ஸுத்ரார்த்தம். இதைச் சிறிது விவரிப்போம். ஸா வயவமான வஸ்து தான் ஏக தேசத்தாலே பரிணமிக்க முடியு மென்றும்,நிரவயவமான வஸ்துவானது அப்படி ஏக தேசத்தாலே பரிணமிக்க மாட்டாமல் கருத்ஸ்நாம்சத்தாலும் பரிணமித்தாக வேணுமென்றும் ஒரு நியதி சொல்லுவதானது லௌகிக பதார்த்த திருஷ்டியினால் தானே. இப்படி யொரு வ்யாப்தி கல்பிக்க வேணுமானால் பர ப்ரஹ் ம்ம் தவிர மற்ற வஸ்துக்களில் மாத்திரமே கல்பிக்கலாம் . ப்ரஹ்மத்தினிடத்திலும் இந்த வ்யாபதி கொள்ள அவசிய மில்லை. ஏனென்னில், ப்ரஹ்மத்தை நாம் சாஸ்த்ரங் கொண்டே அறிகிறோம். அந்த சாஸ்த்ரமானது ப்ரஹ்மத்திற்கு நிரவயவத்வத்தையும் பஹு பவநத்தையும் (அதாவது, நாநா வஸ்துக்களாகப் பரிணமிப்பதையும்] ஓதி யிருக்கின்றது. அது பிரஹ்மத்தினுடைய அநிர்வசநீயமான சக்தி விசேஷத்தைப் பொறுத்தது. அத்புத சக்தி யுக்தமான ப்ரஹ்மத்தினிடத்திலே நாம் லௌகிக வஸ்து த்ருஷ்ட்யா சோத்யம் செய்வது தகாது. ஒன்று பாருங்கள். கண்ணுடையவன் தான் காணமுடியும், காதுடையவன் தான் கேட்கமுடி யும் ; கண்ணிலாதான் காண்கில்லான் ; செவியிலாதான் கேட்ககில்லான்- என்று ஒரு வ்யாப்தி சொல்ல நினைத்தால் பர ப்ரஹ்மந் தவிர மற்ற பேர்களிடத்தில் தானே இப்படிச் சொல்ல முடியும் பரம புருஷனிடத்திலே இந்த வயாப்தி பயன் பெறாதன்றோ. ஆகவே உலகில் காணும் நியாயத்தைக் கொண்டு ப்ரஹ்மத்தினிடத்தில் சோத்யம் செய்வது கூடாது.

48-வேதாந்திகள் இங்கு விசேஷித்துக் குறிக்கொள்ள வேண்டிய விஷயமுண்டு: ப்ர ப்ரஹ்மத்திற்கு ஜகதாத்மநா பரிணாமம் போலவே ப்ரதி வஸ்து பூர்ணத்வமும் ஸ்ருதி ஸித்தமா யிருக்கின்றது.நிரவயவமான ப்ரஹ்மம் வஸ்து தோறும் எங்ஙனே பரிஸமாய வர்த்திக்க முடியும்? என்று சிலர் சோத்யம் செய்வதுண்டு. அந்த சோத்யமும் ” ஸ்ருதேஸ்து சப்த மூலத்வாத்” என்கிற இந்த ஸூத்ரத்தினால் சிக்ஷிக்கப் பட்ட ந்யாயத்தினாலேயே மடிந்தொழிகின்றது. இவ் விஷயத்தை ஸ்ரீமத் வேதாந்த தேசிகன் ந்யாய ஸித்தாஞ்ஜநத்தில் வெகு சதுரமாக அருளிச் செய்து முடித்திருக்கிறார். அப்படி யிருந்தும் இதில் இன்னமும் சிலர் தெளிவு பெறாமல் கலங்கி யிருக்கிறார்கள். பகவான் ஒரு வஸ்துவிலே பரி ஸமாப்ய வர்த்தித்து விட்டால் அவ்வளவோடு பகவான் உப ஷீணனாய் விடுகிறபடியால் மற்றொரு பொருளில் வியாபிக்க எப்படி முடியுமென்று இந்த சோத்யத்தையே திருப்பித் திருப்பிச் செய்து கொண்டு காலங் கழிக்கிறார்கள். அந்தோ! அன்னவர்கள் * ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் * என்கிற ஸூத்ரம் என்ன சிக்ஷிக் கிறதென்பதையும் இந்த ஸூத்ரத்தின் ஸ்ரீபாஷ்யத்தில் ஸ்வாமி என்ன அருளிச் செய்கிற
ரென்பதையும் சிறிதும் நோக்க மாட்டிற்றிலர். – ஸ்ரீபாஷ்யஸுக்தியைப் பற்றின விரிவுகளை
நம்முடைய ப்ரஹ்ம வ்யாப்தி பரிஷ்க்ரியா, அத்புத சக்தி முதலான கிரந்தங்களிலே காண்க.

49-இனி, ப்ரயோஜநவத்த்வாதி கரணத்தின் ப்ரமேயம் பற்றிப் பேசுவோம். கீழே விவரித்த அதிகரணத்திற்கு அடுத்த அதிகரணமே இது. பரம புருஷன் ஸர்வ சக்தி யுக்தனாகையாலும் ஸத்ய ஸங்கல்பனாகையாலும் அவன் ஸங்கல்ப மாத்ரத்தாலே ஜகத்தை ஸ்ருஷ்டிப்பதாகச் சொல்லப்படுகிற விஷயம் ஸம்பாவிதமன்று; ஏனென்னில்; ப்ரஹ்மம் ஜகத்தை ஸ்ருஷ்டிக்கும் போது ஏதேனுமொரு ப்ரயோஜனம் இருந்து தீர வேண்டும். உலகில் ஒருவன் ஒரு காரியத்தைச் செய்யும் போது நிஷ் ப்ரயோஜ மாகச் செய்ய மாட்டான். பரயோஜன மென்பது தன்னையுஞ் சேரும், பிறரையும் சேரும். ப்ரக்ருதத்தில் அவாப்த ஸமஸ்த காமனான பகவானுக்கு ஸ்ருஷ்டியினால் ஒரு ப்ரயோஜநமும் உண்டாக விரகில்லை.உண்டாகுமாகில் அவனை அவாப்த ஸமஸ்த காமனென்னப் போகாது. ஸ்ருஷ்டியினால் பகவானுக்கு ப்ரயோஜனமில்லை யாகிலும் நம் போன்ற ஜீவர்களுக்கு ப்ரயோஜனமாகிற தென்னவும் இடமில்லை. ஆத்யாத்மிகாதி துக்கங்களுக்கே ஹேதுவாகின்ற ஸ்ருஷ்டியானது ஜீவர்களுக்கு ப்ரயோஜநப்பட விரகில்லை யன்றோ. பகவானுக்குப் பஷபாதித்வம் நிர்தயத்வமாகிற தோஷங்களை சங்கிக்கச் செய்வதாயு முள்ளது ஜகத் ஸருஷ்டி. ஆகவே பகவான் ஸ்ருஷ்டி கர்த்தாவாக இருக்க முடியாதென்று பூர்வ பக்ஷம் செய்வதாக வுள்ளது இவ் வதிகரணத்தில் முதல் ஸூத்ரம் ந ப்ரயோஜநவத்த்வாத்* என்பது :இங்கு ஸ்ருஷ்டே: என்றொரு பதம் வருவித்துக் கொள்ள வேணும். ஸ்ருஷ்டியானது ப்ரயோஜனத்தோடு கூடியிருக்க வேண்டியதாகையாலே ப்ரஹ்மம் ஸ்ருஷ்டி கர்த்தாவாக இருக்க முடியாதென்று ஸூத்ரத்திற்குப் பொருள். இதன் மேல் ஸித்தாந்த ஸூத்ரம் லோகவத் து லீலா கைவல்யம் * என்பது. உலகில் ஸார்வ பௌமனாயிருக்கு மோரரசன் பிரயோஜநாந்தர மொன்றையும் கணிசியாமலே ‘லீலை யாகவே பந்து விளையாடல் முதலியன செய்யக் காணா நின்றோம். அதனால் அவனுடைய அவாப்த ஸமஸ்த காமத்வத்திற்குக் கொத்தை யொன்றுமில்லை. அது போலவே பரம புருஷனும் லீலார்த்தமாகவே ஜகத் ஸ்ருஷ்டி பண்ணக் குறையில்லை யென்றபடி, மன் பல்லுயிர்களுமாகிப் பல பல மாய மயக்குக்களால், இன்புறுமிவ் விளையாட்டுடையான் * என்று நம்மாழ்வாரும், நாட்டைப் படை யென்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் * என்று ஆண்டாளு மருளிச் செய்தவை இங்கே அநுஸந்தேயம். விஷம ஸ்ருஷ்டி காண்பதனாலே பகவானுக்குப் பக்ஷ பாதித்வமும் நிர்தயத்வமும் சங்கிக்க நேர்கின்றதே யென்னில், அந்த சங்கை * வைஷம்ய நைர்க்குண்யே ந ஸாபேக்ஷத்வாத் ததா ஹி தர்சயதி என்கிற அடுத்த ஸூத்ரத்தினால் பரிஹரிக்கப் படுகிறது . அந்தந்த ஜீவர்கள் செய்த கருமங்களுக்குத் தக்கபடி நீசோச்ச ஸ்ருஷ்டிகள் ஏற்படுகிறபடியாலே பரம புருஷனுக்கு வைஷம்யமோ நைர்க்ருண்யமோ ப்ரஸங்கிக்க மாட்டாதென்றபடி. இதன் மேலும் தோன்றுகிற சங்கைக்கு அடுத்த ஸுத்ரம் பரிஹார முணர்த்துகின்றமை கண்டு கொள்வது.

50-இனி இரண்டாமத்யாயத்தின் இரண்டாவது பாதத்தில் ஸர்வதாநுபபத்தி யதிகரணத்தின் ப்ரமேயம் நிரூபிக்கப் படுகிறது . ஸர்வ சூந்ய வவாதிகளான பௌத்த ஏகதேசிகளின் பக்ஷம் இங்கு நிரஸிக்கப்படுகிறது. பர ப்ரஹ்மமே ஜகத் காரண மென்று நன்கு நிலை நாட்டத் தோன்றிய இந்த அத்யாயத்தில் ஸர்வ சூந்யத்வ வாதத்தை நிரஸிக்க என்ன ப்ரஸக்தி யென்று சிலர் நினைக்கக் கூடும் ஜகத் காரண வஸ்து ப்ரதாநமா? பரமாணுவா? பரப்ரஹ்மமா? என்கிற விசாரம் எப்போது பொருந்து மென்னில்: உண்மையில் ஜகதுத்பத்தி யென்பதொன்று நிரூபிக்க முடியுமானால் அப்போது பொருந்தும்.அடியோடு இல்லாதவொரு பிள்ளைக்கு மாதா பிதாக்களைப் பற்றி விசாரம் செய்வதுண்டோ? ஜகதுத்பத்தியே நிரூபிக்க முடியாததாயிருக்க, எதுக்கு காரணம்? என்கிற சர்ச்சை ஏதுக்கு ? உத்பத்தியானது (ஸத் )பாவத்திலிருந்து அங்கீகரிக்கப் படுகிறதா அபாவத்திலிருந்து அங்கீகரிக்கப் படுகிறதா வென்று கேட்கிறோம். பாவத்திலிருந்து என்பது சேராது; மண் பிண்டத்திலிருந்து பானை முதலியன உண்டாகின்றன வென்றால் மண் பிண்டத்தை உபமர்த்தித்துக் கொண்டு தானே யுண்டாகின்றன. எந்த காரியப் பொருளும் காரணப் பொருளை உபமர்த்தியாமல் உண்டாவதில்லை யென்பதைக் காணா நின்றோம். காரணாகாரத்தின் விநாசந் தானே உபமர்த்தமாவது ; அது தான் அபாவமே.ஆக பாவத்தில் நின்றும் உத்பத்தி யில்லை யென்று தேறிற்று. அபாவத்தில் நின்றுங் கூட உத்பத்தியில்லை யென்பது அநாயாஸமாகத் தெரிய வரும். அபாவத்திலிருந்து வோத்பத்தி ஸம்பவிக்க மாட்டாதன்றோ. ஆக உத்பத்தியே நிரூபிக்க முடியாதிருப்பதால் உத்பத்திக்குப் பிற்பட்ட வான விகாரங்கள் எதுவுமே கிடையா வென்பது ஸித்தம்.லோக வியவஹார மெல்லாம் ப்ரம மூலகமே. ஆக சூன்யமே தான் தத்துவம் என்பவர்கள் இங்கு நிரஸிக்கப்படுகிறார்கள்.[ஸர்வதா நுப பத்தேச் ச ] என்பது ஸூத்ரம். ப்ரமேயங்களோ பிரமாணங்களோ எதுவும் உண்டாகிலுமாம், இல்லை யாகிலுமாம் : பூர்வ பக்ஷிக்கு அபிமதமான சூன்யத்வம் தேறாதாகையாலே மாத்யமிக தர்சநம் அஸ்மஞ்ஜஸமென்றபடி. ஸர்வம் சூன்யம் ? என்று சொல்லுபவர்கள் தங்களுக்கு அபிமதமான் இவ் வர்த்தத்தை ஸாதித்துத் தரும்படியான பிரமாணமொன்று உண்டென்று இசையும் பக்ஷத்தில் பரமாண ஸ்த் பாவத்தை யிசைந்த போதே ஸர்வ சூந்ய வாதம் தொலைந்தது பிரமாணமில்லை யென்னும் பக்ஷத்தில், பிரமாண மில்லாமையினாலேயே தங்களுக்கு அபிமதமான அர்த்தம் அஸித்தமென்று முடிந்தது. மேலும்,ஸர்வம் சூந்யம் ‘ என்கிற விந்த வார்த்தையினால் நாஸ்தித்வந்தானே விவக்ஷிதமாக வேணும். ஒரு ரூபத்தை விட்டு மற்றொரு ரூபத்தைடைவதே நாஸ்தி பதார்த்தமாகையாலே ரூபாந்தரத்தாலே அஸ்தித்வமே சொல்லப்பட்டதாக முடிகிறது. மண்ணுண்டை யொன்று இருந்தது. அது நசித்த வளவிலே ம்ருத் பிண்டோ நாஸ்தி’ என்று சொல்லுகிறான். இந்த வ்யவஹாரத்தில் பானை யென்கிற அவஸ்தை தானே விஷயமாகிறது.

51- உலகில் அஸ்தி நாஸ்தித்வங்களை வழங்குகிறவர்கள் இப்போது மண்ணுண்டை யிருக்கிறது, இப்போது மண்ணுண்டை யில்லை: இங்கு மண்ணுண்டை யிருக்கிறது, இங்கு மண்ணுண்டை யில்லை? என்றிப்படி இடத்தையும் காலத்தையும் உட்படுத்தியே வியவஹரிக்கிறார்கள். தேச காலங்களைச் சேர்க்காமல் வெறுமனே மண்ணுண்டை யில்லை என்கிற ப்ரதீதியோ விவயவஹாரமோ எங்கும் காண்பதில்லை. ‘இப்போது மருத் பிண்டமிருக்கிறது’ என்றோ இங்கு மருத் பிண்டமிருக்கிறது’ என்றோ ஒருவன் விவயவஹரித்தால் மண் என்னும் திரவ்யத்திற்கு பிண்டத்வாவஸ்தை விஷயம்.இப்போது மருத் பிண்டமில்லை என்றோ “இங்கு மருத் பிண்டமில்லை என்றோ விவயவரித்தால் பிண்டத்வாவஸ்தையின் நாசமாகிய (கட ) த்வாவஸ்தை விஷயம். நாஸ்தித்வ விவ்யவகாரம் பண்ணினாலுங் கூட வேறொரு ஆகாரத்தாலே அஸ்தித்வமே தேறி நிற்கிற தென்பதை ஸர்வாநுபவ ஸாக்ஷிகமாகக் காணலாம். இன்ன வஸ்து இங்கில்லை என்றால் மற்றோரிடத்திலுள்ளதாகத் தேறியே தீரும். இப்போதில்லை யென்றாலும் மற்றொரு போதில் உண்டென்றதாகத் தேறியே விடும்.ஆகவே ஒருபடியாலும் ஸர்வ சூந்ய வாதம் ஸித்தியாது என்றதாயிற்று. ஸுத்ரத்தின் மேல் பொருள் காண்பது எங்ஙனே யென்னில் ; ஸர்வதா -ஸர்வ ப்ரகாரத்தாலும், அநுபபத்தே :-ஸ்வாபிமதமான ஸர்வ சூந்ய வாதம் உபபந்நமாகாமையினாலே என்றபடி. ஸர்வ ப்ரகாரத்தாலும்’ என்றதை ஸ்ரீ பாஷ்யாதிகளில் ஸ்வாமி விவரித்தருளும் போது இவ்வாறு அருளிச் செய்கிறார். சங்கரபாஷ்யத்தில் இவ்விதமாக அர்த்தம் செய்யப்பட வில்லை. லௌகிகத்தில் இதற்கு எவ்விதமாகப் பொருள் கொள்கிறோமோ அவ் விதமாகவே சங்கராசாரியர் பொருள் கொண்டார். நம் ஸ்வாமி கொண்ட பொருள் தான் உண்மையில் ஸமஞ்ஜஸமானது. ஸ்வாமிக்கு இப் பொருள் தோன்றினது எதனாலென்னில் ; திருவாய்மொழியில் (1-1-9) * உள்னெனிலுளன் அவனுருவ மிவ்வுருவுகள், உளனலனெனில் அவனருவ மிவ்வருவு கள், உள்னெனவில்னெனவிவைகுண முடைமையின், உளனிந்தகைமையோ டொழி விலன் பரந்தே என்ற பாசுரங் கொண்டே இந்த ஸூத்ரத்தின் பொருளை ஸ்வாமி அறுதி யிட்டருளினாரென்பது நிஸ் ஸந்தேஹம். அப்பாசுரத்தின் ஆறாயிரப்படியை ஸேவித்தால் இஃது எளிதிற் புலனாம். அப்பாட்டிற்குத் தமிழ் மொழியாலெழுதப் பட்டுள்ள பொருள் தான் ஸ்ரீபாஷ்யத்தில் வடமொழியாலெழுதப் பட்டுள்ளதென்க.

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே 
–1-1-9-

ஸூந்யவாதியான உன்னைக் கேட்ப்போம்-ஈஸ்வரனுடைய இல்லாமையை சாதிக்கிற நீ ஈஸ்வரன் உளன் என்றோ இலன் என்றோ ப்ரதிஞ்ஜை பண்ணுவது –
இவை இரண்டு பிரகாரத்தாலும் நீ நினைக்கிற இல்லாமை சம்பவியாது -எத்தாலே என்னில்-லோகத்தில் பாவ அபாவ சப்தங்களும் பாவ அபாவ ப்ரதீதிகளும்
வித்யமாந வஸ்துவினுடைய அவஸ்தா விசேஷ கோசாரமாகக் காண்கையாலே-ஆதலால்
ஈஸ்வரன் உளன் என்னில் அஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –
ஈஸ்வரன் உளன் அலன் என்னில் நாஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –

இப்படி ஈஸ்வர வ்யதிரிக்த பதார்த்தங்களையும் உளவென்னில் இவையும் அஸ்தித்வ தர்ம விசிஷ்டங்களாய்க் கொண்டு உளவென்று சொல்லிற்றாய் வரும்
தத் வ்யதிரிக்த பதார்த்தங்களை இல்லை என்னிலும் அவை நாஸ்தித்வ தர்ம விசிஷ்டங்கள் என்று சொல்லிற்றாய் வரும்
அந்த அஸ்தித்வ நாஸ்தித்வ ரூப பதார்த்தங்களும் அவனுக்கு ரூபமாய் இருக்கும் -கீழ்ச் சொன்ன பிரமாணங்களாலே –
இப்படி அஸ்தித்வ நாஸ்தித்வங்கள் ஆகிற குணங்களை யுடையவன் என்று சொல்லுகையாலே அஸ்தி என்னிலும் உளன் -நாஸ்தி என்னிலும் உளன்
உளனாம் இடத்து சர்வாந்தராத்மாவாய்க் கொண்டு உளன் என்கிறார் -இப்படி ஸூந் யவாதியை நிரசித்தது –

52- இனி மூன்றாமதியாயத்தில் சிறிது செல்வோம். கீழ்க் கழிந்த இரண்டு அத்யாயங்களுள் முதலத்யாயத்தினால்- ஜகஜ் ஜந்மாதி காரணமாய் ஸர்வ சேஷியான வஸ்து பர ப்ரஹ்மமே யென்றும், நான்முகன் சிவன் இந்திரன் முதலானவர்கள் அப் பரம புருஷனாலேயே தன்னுடைய லீலைக்காக ஸ்ருஷ்டிக்கப் பட்டு உபஸம்ஹரிக்கப் படுகிறார்களென்றும், அந்த பரம புருஷன் ப்ரக்ருதி மண்டலத்திற்குப் புறம்பாய் நித்ய ஸூரி ஸேவிதமான ஸ்தாந விசேஷத்திலே ஸ்வேச்சையினாலே சுடரொளி மயமான திவ்ய மங்கள் விக்ரஹத்தைப் பரிக்ரஹித்து அப்ரமேயமான ஆனந்தத்தை யுடையனாய் தன்னடி பணிந்தார்க்கும் அபரிமிதமான ஆனந்தத்தை யளிப்பவனாய் ஸம்ஸார பந்தத்தில் நின்றும் விடுபட்ட முக்த புருஷர்களினால் அநுபவிக்கப் பட்டுக் கொண்டிரா நின்றா னென்றும் தெரிவிக்கும் முகத்தினால்-ஸம்ஸாரிகளுக்கு பகவதநுபவ குதூகலத்தை யுண்டாக்குவதற்காக பரம் புருஷார்த்தமான பகவத ஸ்வரூப ஸ்வபாவாதிகள் நிரூபிக்கப்பட்டன. பிறகு இரண்டாமத்யாயம் செய்தென்னென்னில் ; முதலத்யாயத்தினால் நிரூபிக்கப்பட்ட அர்த்தம் ஸர்வாத்மநா அசைக்க முடியாததென்று பரபஷ ப்ரதிஷேப பூர்வகமாக ஸாதித்ததுடன் ஸ்ரீ பாஞ்சராத்ர மென்கிற பகவத் ப்ரணீத ஸாஸ்த்ர விசேஷத்தினால் தேறிய பொருளென்றும் நிரூபித்து ஸகல சேதநாசேதநப் பொருள்களும் பரம புருஷ கார்ய பூதங்களே யென்பதை நன்கு சோதிக்கும் முகத்தால் கார்ய ஸாமான்யமும் பர ப்ரஹ்ம் கார்யமே யென்பதும் ஸ்தாபிக்கப் பட்டது. ஆக இரண்டத்யாயங்களாலும் புருஷார்த்த ஸ்வரூபம் நிச்சயிக்கப் பட்டதாகத் தேறிற்று. இப்படி புருஷார்த்த ஸ்வரூபம் நிச்சயிக்கப்பட்டாலும், அநாதி வாஸநா பலத்தாலே ஷூத்ர புருஷார்த் தங்களையே நச்சிக் கிடக்கும் ஸம்ஸாரிகளுக்குப் பரம புருஷார்த்த ப்ராப்தியில் பதற்ற முண்டா காமைக்குக் காரணம்- தாங்கள் விரும்பிய புருஷார்த்தங்கள் அல்பாஸ்திரங்களென்பதை ஆராய்ந் துணராமையே யென்று கருதிய சாஸ்த்ர காரர், அந்த ஸம்ஸாரிகளுக்கு இதர புருஷார்த்தங்களில் வைராக்யத்தையும் பரம புருஷார்த்தத்தில் மிகுந்த ருசியையு முண்டாக்குவதற்காக கர்ம பலங்களெல்லாம் க்ஷயிஷ்ணுக் களென்றும் பரம புருஷ உபாஸந பலமான அபவர்க்க மொன்றே நித்ய புருஷார்த்த மென்றும் தெரிவித்து இவ் வழியாலே பரம புருஷார்த்த பிராப்தியில் வராதிசயத்தை யுண்டாக்கவே பின்னிரண்டு அத்யாயங்களை அவதரிப்பிக்கின்றார். ஏற்கெனவே கர்ம விசாரம் செய்து அதன் பலன்களை நஸ்வரங்களென்றறிந்து வைராக்யம் பெற்றவனுக்கே ப்ரஹ்ம மீமாம்ஸையில் அதிகாரமென்று ஜிஜ்ஞாஸா ஸூத்ரத்திலேயே நிரூபிக்கப் பட்டிருப்பதனால் மறுபடியும் வைராக்யத்தை யுண்டாக்குவதற்காக இந்த ப்ரயத்னம் வீணல்லவோ வென்று சிலர் சங்கிக்கவுங் கூடும்; ஆகிலும் கேண்மின்; பஞ்சாக்நி வித்யா நிரூபணத்தினால் விஷயங்களில் எப்படிப்பட்ட வைராக்யம் உண்டாகுமோ அது கர்ம விசாரத்தினால் உண்டாக மாட்டாதென்று கருதியே இங்கு புநாரயநம் கொள்ளப்படுகிறது. ஆகவே இது நிஷப் பலமன்று, ஸபலமே. இந்த மூன்றாமத்யாயத்தின் முதற்பாதத்தில் பஞ்சாக்நி வித்யா நிரூபணம் செய்து கர்ம பலன்களெல்லாமும் நஸ்வரங்களென்றும் நரக துல்யங்களென்றும் தெரிவிக்கப் படுகிறது. மூன்றாமத்யாயமானது பரம புருஷ ப்ராப்திக்கு உபாயத்தைத் தெரிவிப்பதென்றும், நான்காமத்யாயமானது உபாய பலமான உபேயத்தைத் தெரிவிப்பதென்றும் நெஞ்சிற்கொள்க.

53-உபய லிங்காதிகரணத்தின் ப்ரமேயம் நிரூபிக்கப் படுகிறது. இது மூன்றாமத்யாயத்தின் இரண்டாவது பாதத்திலுள்ளது. ஜீவாத்மாவானவன் ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷுப்தி மூர்ச்சாதி அவஸ்தைகளுக்கு ஹேதுவான நாநா சரீரங்களை ஏற்றுக் கொண்டு அவ்வவஸ்தைகளில் ஸுக துக்கங்களை யதுபவிக்கிறா னென்னுமிடம் கீழே நிரூபிக்கப் பட்டது. அப்படிப்பட்ட ஜீவனாலே அதிஷ்டிதமான சரீரத்தில் பரமாத்மாவும் ஸம்பந்தப்பட்டிருந்தாலும் தத் பிரயுக்தமான ஸுக துக்காதி அபுருஷார்த்த லேசமும் தன்னிடத்தில் ஒட்டப் பெறாமலிருக்கிறா னென்பதையும் கல்யாண குணக் கடலாயிருக்கிறா னென்பதையும் நிரூபிக்க இவ் வதிகரணம் தோன்றியது. ந ஸ்தாந தோபி பரஸ்யோபய லிங்கம் ஸர்வத்ர ஹி- என்பது இவ் வதிகரணத்திற்குத் தலையான ஸுத்ரம். பரஸ்ய – பரம புருஷனுக்கு, ஸ்தாநத: அபி- ஜீவாதிஷ்டித நாநா சரீரங்களில் இருப்பு இருந்தாலும், அபுருஷார்த்த ஸுக துக்க ஸம்பந்தம் கிடையாது. (இதற்கு ஹேது வென்னெனில்:) ஸர்வத்ர ஹி உபய லிங்கம்- பரம புருஷன் ஸர்வ ஸ்ருதி ஸ்மிருதிகளிலும் ஹேய ப்ரத்ய நீகத்வம் கல்யாணை கதாநத்வம் என்கிற இரண்டு அஸாதாரண தர்ம்ங்களோடு கூடியவனாக ப்ரதிபாதிக்கப் படுகையாலே – என்பது ஸுத்ரத்தின் பொருள் -இதைச் சிறிது விவரிப்போம்-ஸ்ம்ருதிகளிலும் பரம புருஷன் இயற்கையாகவே ஹேய ப்ரத்யநீகனாயும் கல்யாணக குணாகரனாயு மிருக்கிறானென்று சொல்லப் படுகையாலே ஹேய ப்ரதிபடனான அப் பரம புருஷனிடத்தில் சரீர ஸம்பந்தமானது அபுருஷார்த்த ஸுக து:க்காபத்திக்கு ஹேதுவாக மாட்டாது. அவன் அபஹதபாப்மா வெனப்படுகிறான். அபஹதபாப்மத்வமாவது இன்ன தென்பதைக் கீழே ஆனந்த மயாதிகரணத்தில் விவரித்திருக்கிறோம். புண்ய பாப ரூப கருமங்களின் பலன் ஸ்பர்சிக்கப் பெறாதிருத்தலே அபஹத பாப்மத்வமாம். அதாவது, புண்ய பாப ஸஜாதீயங்களான கருமங்களைத் தான் செய்தாலும் அவை பலன் கொடுக்கும்படியான சக்தியைப் பெறாதபடி அந்த சக்தியைத் தொலைத் திடுகையேயாம்-ஹேய ப்ரத்யநீகத்வமென்பதும் இதுவே. இப்படி விலக்ஷண சக்தி யுக்தனான பரம புருஷனிடத்தில் ஹேய தேஹ ஸம்பந்த முண்டானாலும் அது அபுருஷார்த்த ஸுக துக்க ஸமுத்பாதகமாக ஆக மாட்டாது. ஹேய தேஹ ஸம்பந்தமானது கர்மாதீநமன்றிக்கே ஸ்வேச்சா க்ருதமாகையாலே. இதற்கு மேல் ஒரு சங்கை தோன்றும் : பரம புருஷனுக்கு தேஹ ஸம்பந்தம் கர்ம ப்ரயுக்த மன்றிக்கே ஸ்வேச்சா க்ருதமாகவே யிருக்கட்டும்.ஹேய ஸம்பந்தமானது வஸ்து ஸ்வபாவத்தாலே அபுருஷார்த்தா பாதகமாகியே தீருமன்றோ -மாம்ஸா ஸ்ருக்பூய விண் மூத்ர வெள்ளத்தில் ஒருவன் ஸ்வேச்சையினாலே அமிழ்ந்தாலும் ஹேய சம்பந்த முண்டாகித் தானே தீரும்- என்று சங்கிக்கக் கூடும். இங்கு உணர வேண்டிய தத்துவமாவது – ஹேயத்வமென்பது கர்ம க்ருதமே யொழிய வஸ்து ஸ்வபாவ ப்ரயுக்தமன்று.ஸம்ஸாரதசையில் எந்தவஸ்துவும் அநுகூலமாகத் தோன்றுவதும் பிரதிகூலமாகத்தோன்றுவதும் வஸ்துஸ்வபாவத்தாலன்று. அப்படியாகில் எதுவும் எவனுக்கும் அனுகூலமாகவேயோ ப்ரதிகூலமாகவேயோ இருந்து தீரவேணும். இப்படி எங்கும் காணப்படவில்லை.இன்று அநுகூலமானதே நாளைக்கு ப்ரதிகூலமாகிறது. அதுதானே மற்றொருநாள் அநுகூலமாகிறது. ஆகவே எந்த வஸ்துவும் ஸம்ஸார தசையில் அநுகூலமா யிருப்பதும் பிரதிகூலமா யிருப்பதும் கர்ம க்ருதமே யாதலால் அகர்ம வஸ்யனான பரம புருஷனுக்கு ஸர்வ வஸ்துக்களும் தன் விபூதியாய்க் கொண்டு அநுகூலமாகவே யிருக்குமென்று கொள்ளக் கடவது.ஆகவே ஹேய பூத தேஹ ஸம்பந்தம் பரம புருஷனிடத்தில் அபுருஷார்த்தா பாதகமாக தென்க. இந்த சாரீரக மீமாம்ஸையிலேயே முதலத்யாயத்தின் இரண்டாவது பாதத்தில் பரமாத்மாவுக்கு ஜீவாதிஷ்டித சரீர ஸம்பந்த மிருந்தாலும் அகர்ம வஸ்யனாகையாலே ஸு-க து:க்காதி ரூப கர்ம பல ஸ்பர்சமில்லை யென்னுமிடம் நிரூபிக்கப்பட்டே இருப்பதால் இவ் வதிகரணம் அத்தோடு புநருக்தமாகிறதே யென்று சிலர் சங்கிக்கக் கூடும்.அவ் விடத்துப் பூர்வ பக்ஷ சரீரம் வேறு, இவ் விடத்துப் பூர்வபஷ சரீரம் வேறு என்பதை ஸுஷ்மேக்ஷிகையா லுணர வேணும். இங்கு விரிவுக்கு அஞ்சி நிற்கிறோம்.

54- இனி,மூன்றாமத்யாயத்தின் கடைசி பாதத்திலுள்ள ஸர்வாந்நாநுமத்யதி கரணம் பற்றிப் பேசுவோம். இதற்கு முந்தின அதிகரணத்தில் ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு சமம் ஆவஸ்யகமென்று சொல்லிற்று.போஜந நியமமாகிற சம விசேஷம் ப்ரஹ்ம வித்துக்கு உண்டா இல்லையா என்பதை விசாரித்து நிர்ணயிக்க இவ் வதிகரணம்
தோன்றியது-(ஸர்வாந் நாநுமதிச்ச ப்ராணாத்யயே தத் தர்சநாத் ] என்பது ஸூத்ரம். சப்தமானது அவதாரணப் பொருளது. ப்ராண வித்யா நிஷ்டன் எந்த அன்னத்தையும் புஜிக்கலாமென்று அனுமதிப்பது ப்ராணாபத் தசையைப் பற்றியதேயாம் ; ப்ரஸ்ம வித்தான அதிகாரியின் விஷயத்தில் ப்ராணாபத் விஷயமாகவே காண்கையாலே- என்று ஸுத்ரார்த்தம். இங்கு பூர்வ பக்ஷம்;சாந் தோக்யத்தில் ஐந்தாவது ப்ரபாடகத்தில் ப்ராண வித்யா பிரகரணத்தில் ஓதப் பட்டிருக்கிறது. ப்ராண வித்யா நிஷ்டனுக்கு அன்னமாகாதது எதுவுமில்லை யென்று இதற்குப் பொருள். ப்ராண வித்யா நிஷ்டனுக்கு நிஷித்தாந்ந போஜனமும் ஸர்வதா கூடுமென்றும், வித்யா மாஹாத்மியத்தினால் இதில்
தவறில்லை யென்றும் சொல்லுவதாகத் தெரிகிறது.அல்ப சக்திகனான ப்ராண வித்யா நிஷ்டனுக்கே நிஷித்தாந் போஜனம் அனுமதிக்கப் படுமானால் ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு அந்த அநுமதி கைமுதிக ந்யாய ஸித்தமே – என்று பூர்வ பக்ஷம். இதன் மேல் ஸித்தாந்தம் வருமாறு :- ப்ரஷ்ம வித்யா நிஷ்டனான உஷஸ்தன் பிராணாபத் தசையில் ஒரு யானைப் பாகன் உண்டு மிகுந்த காறா மணியை புஜித்து அதனால் உயிர் தரிக்கப்
பெற்றானென்றும், பிறகு அந்த ஆனைப் பாகன் கொடுத்த பானத்தை அவன்(உஷஸ்தன்] ஏற்றுக் கொள்ள வில்லை யென்றும் சாந்தோக்யத்தில் முதல் ப்ரபாடகத்தில் (கண்டம்-9)
உஷஸ்த வ்ருத்தாந்த ப்ரகரணத்தில் காண்கிறது. இதனால், மஹா மஹிம சாலியான ப்ரஹ்ம வித்துக்கும் நிஷித்தாந்ந பஷணம் ஆபத்விஷயமென்று தெரிவதனாலும், ஆஹார சுத்தி ஆவஸ்யகமென்று தெரிவதாலும் ப்ராஹ்மண ஸாமாந்யத்திற்கும் ஆபத் காலத்தில் ஸர்வாந்நமும் அநுமதிக்கப் படுவதாகக் காண்கையாலும் ப்ரஹ்ம வித்தான அதிகாரி விசேஷத்திற்கும் ஸர்வாந்நாநுமதியானது ஆபத் கால மாத்ர விஷயகமென்று ஸித்திக்கும் போது, அல்ப சக்தியான ப்ராணோபாஸகனுக்குக் காணும் ஸர்வாந்நாதுமதியும் ஆபத் விஷய கந்தானென்பது பற்றிச் சொல்ல வேணுமோ?

55-இனி நான்காவது அத்யாயத்திற்குச் செல்வோம். பெரும்பாலும் உபாஸந பரமாகச் சென்றது மூன்றாமத்யாயம். உபாஸநத்தின் பலனை நிரூபிக்க அவதரிக்கின்றது நாலாமத்யாயம். இதில் முதலதிகரணம் ஆவ்ருத்த்யதிகரணம்– மோக்ஷத்திற்கு உபாய பூதமான பகவதுபாஸநம் அஸக்ருதா வ்ருத்தி ரூபம் (அதாவது),தைலதாராவத் அவிச்சிந்ந ஸ்மருதி ஸந்தான ரூபம் ; ஏனென்னில் ஸ்ருதிகளில் விதிக்கப்பட்ட வேதநமானது அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்தாந ரூப த்யாநத்வா வஸ்தையை யுடைய தென்று சாஸ்த்ரம் சொல்லுகையாலே – என்னும் பொருளதான ஸூத்ரம்* (ஆவ்ருத்தி ரஸக்ருதுபதேசாத் ] என்பது முதல் ஸுத்ரம். இங்கு பூர்வபக்ஷம் : ஸ்ருதி யாதி களில் ஸ்வர்க்க ஸாதனமாக விதிக்கப்பட்ட யாகாதிகள் ஸக்ருத் கரணத்தாலேயே எப்படி ஸ்வர்க்காதி பல ஸாதகமாகிறதோ அப்படி இங்கும் ப்ரஹ்மவிதாப்நோதி பரம் இத்யாதிகளில் மோஷ ஸாதநமாக விதிக்கப்பட்ட பகவச் சிந்தந ரூபமான வேதனமும் ஸக்ருதநுஷ்டாநத்தாலேயே மோக்ஷ ஸாதகமாகக் கூருமாதலால் அது ஒருகாலே செய்யப்பட வேண்டுமென்று. இப் பூர்வ பக்ஷத்தின்மேல் ஸித்தாந்தம் வருமாறு : வேதாந்த சாஸ்த்ரங்களில் மோஷ ஸாதநமானதைச் சொல்லி வருமடைவுகளில் வேதனம், உபாஸநம், தியாநம், த்ருவாஸ்ம்ருதி,ஸாக்ஷாத்காரம், பக்தி என்கிற சப்தங்கள் காணப் படுகின்றன- இவை யெல்லாம் பர்யாய பதங்களென்று நிச்சயிக்கப்படுமிடத்து தைலதாராவத் அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்தாந ரூபமானதென்றே அறுதி இட வேண்டியதாகிறது. ஸ்ரீவிஷ்ணு புராணத்தில்(6-7-91) இத்யாதி ஸ்லோகங்களும் * பக்த்யா த்வந்யயா சக்ய: அஹமேவம் விதோர் இத்யாதி கீதா ஸ்லோகங்களும் இதையே வற்புறுத்துகின்றன.மேலே ஆறாவதாக ஆப்ரயாணதி கரணமுள்ளது. ஆப்ரயாணாத் தத்ராபி ஹி திருஷ்டம் * என்பது ஸூத்ரம்.மோக்ஷ ஸாதனமான ப்ரஹமோபாஸநமானது மரணாந்தமாக அநுஷ்டிக்கப்பட வேண்டு மென்று அதில் நிகமிக்கப் படுகின்றமை யறிக.

56- இனி, தததிகமாதிகரணத்தின் ப்ரமேயம் நிரூபிக்கப் படுகிறது. தததிகம் உத்தர பூர்வாக யோரச்லேஷ விநாசெள தத் வ்யபதேசாத்-என்பது ஸூத்ரம். ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு ஸாஷாத்காராவஸ்தையை யடைந்த ப்ரஹ்ம வித்யா நிஷ்பத்தி யுண்டாகுமளவில் ப்ரஹ்ம வித்யா மஹிமையினாலே பூர்வ பாபங்களுக்கு விநாசமும் உத்தர பாபங்களுக்கு அஸ்லேஷமுமாகும்; ஸ்ருதிகளில் அப்படி சொல்லி யிருப்பதனாலே- என்பது ஸூத்ரார்த்தம். ப்ரஹ்ம ஜ்ஞானத்திற்கு முன்பு செய்த பாபங்கள் நசித்துப் போய் விடும்: பிறகு அபுத்தி பூர்வகமாக நேரும் பாபங்கள் தாமரை யிலையில் தண்ணீர் போல் ஓட்டமாட்ட என்றபடி. சாந்தோக்ய ஸ்ருதியில் உபகோஸல வித்யா ப்ரகாரணத்திலும் அவ் விடத்திலேயே வைஸ்வாநர வித்யா பிரகரணத்திலும் ப்ரஹ்ம வித்யையின் பலன் சொல்லப் பட்டிருக்கின்றது. ஆகையாலே உத்தர பாபங்களுக்கு அஸ்லேஷமும் பூர்வ பாபங்களுக்கு விநாசமும் சொல்லப்படுகிற தென்கை.இங்குப் பூர்வ பக்ஷம் –நா புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -என்று பலனை யநு பவித்தே கருமங்களைத் தொலைக்க வேணு மென்று ப்ரஹ்ம வைவர்த்தத்தில் சொல்லி யிருக்கையாலே கர்ம பலன்களை அநுபவித்தே தீர வேண்டும் ; ப்ரஹ்ம வித்யையினாலேயே கருமங்கள் தீர்ந்து போவதாகச் சொல்லுவது ப்ரசம்ஸா பரமான வார்த்தை யாமத்தனை என்று. இதன் மேல் ஸித்தாந்தம் வருமாறு; பூர்வ பாபங்களுக்கு விநாசமும் உத்தர பாபங்களுக்கு அஸ்லேஷமும் ப்ரஹ்ம வித்யா ப்ரபாவத்தாலே நேருவதாகப் பல உபநிஷத்துக்கள் கூறியிருப்பது அபலபிக்க முடியாதது. *நாபுக்தம் ஷீயதே கர்ம என்ற வசனமும் யுக்தமானதே ; அது ப்ரஹ்ம வித்துக்களல்லாத ஸாமாந்யர் விஷயமாக ஓதுக்கத் தகும். ஆகவே இவை பரஸ்பரம் அவிருத்தங்களான வசனங்களே யாம். நெருப்பு வீட்டைக் கொளுத்தியே தீரும்’ என்று ஒருவன் சொல்லுகிறான்; ‘பற்றி யெரிகிற நெருப்பைத் தண்ணீர் அணைத்தே தீரும்’ என்று மற்றொருவன் சொல்லுகிறான்.இவற்றில் பரஸ்பர விரோதம் சிறிதேனுமுண்டோ? தண்ணீர் இல்லை யானால் படர்ந்தெரிகிற நெருப்பு வீட்டைக் கொளுத்தியே தீருமென்றும், தண்ணீரை யிட்டு அணைத்தால் நெருப்பு ஓய்ந்து விடுமென்றும் அர்த்தமாக வில்லையோ. அது போல, ப்ரஹ்ம வித்யை இல்லாத வளவில் கர்மங்கள் பலனைக் கொடுத்தே தீருமென்றும், ப்ரஹ்ம வித்யை யுண்டாகில் கருமங்களின் சக்தி ப்ரதிஹதமாய் விடுமென்றும் எளிதாக அர்த்தமாகுமன்றோ.

57-இனி நிசாதிகரணத்தைப் பற்றிப் பேசுவோம்- ஒரு ஸூத்ரமே கொண்டது இவ் வதிகரணம்-இரவில் இறந்தவற்கு ப்ரஹ்ம ப்ராப்தி உண்டா இல்லையா என்று விசாரிக்கப் படுகிறது. நிசி மரணத்தைப் பற்றி சாஸ்த்ரங்களில் இழிவாகச் சொல்லப் பட்டிருப்பதனால் பரம புருஷார்த்தமான மோக்ஷமானது ஸம்பவிக்க மாட்டாது–பகலில் மரணமே சாஸ்த்ரங்களில் ப்ரசஸ்தமாகக் காண்கிறது. நிசா மரணம் இதற்கு விபரீதமானது -ஸ்பஷ்டமாக சாஸ்த்ரமிருப்பதால் நிசி மரணம் அதமகதிக்கே ஹேது வாகுமாதலால் இரவில் இறப்பவற்கு ப்ரஹ்ம ப்ராப்தி ஸம்பவிக்க மாட்டாது என்று பூர்வ பக்ஷம்
ப்ராப்தமாக, இதன் மேல் ஸித்தாந்தம் வருமாறு:-ப்ரஹ்ம வித்துக்களுக்கு கர்ம ஸம்பந்தம் தேஹமுள்ள வரைக்குமே யாதலால் நிசி மரணம் ப்ரஹ்ம வித்துக்களுக்கு பாதகமாகாது. (இதைச் சிறிது விவரிப்போம்.) பாப கருமங்சள் ஆரப்த கார்யங்களென்றும் அநாரப்த கார்யங்களென்றும் இருவகைப் படும். இன்னமும் பூர்வ பாபங்களென்றும்
உத்தர பாபங்களென்றும் இருவகைப்படும். பலன் கொடுக்கத் தொடங்கிவிட்ட
கருமங்கள் ஆரப்த கார்யங்களெனப்படும். இவையே ப்ராரப்த கர்மமென்று வழங்கப்
பெறும். பலன் கொடுக்கத் தொடங்காத தீ வினைகள் அநாரப்த கார்யங்க ளெனப்படும்-ஸஞ்சித கர்மமென்பது இதுவே. ப்ரஹ்ம வித்யையை ஸம்பாதிப்பதற்கு முன்னே செய்யப்பட்ட பாபங்கள் பூர்வ பாபங்களெனப்படும்.அதற்குப் பிறகு புத்தி பூர்வமான பாபங்கள் நேருவதற்கு ப்ரஸக்தி யில்லாமையாலே அபுத்தி பூர்வமாகவும் அகதிகமாகவும் நேருமவை உத்தர பாப மெனப்படுமென்று இதை முன்னமே சொன்னோம். இவற்றுள் அநாரப்த கார்யங்களைான கருமங்கள் ப்ரஹ்ம வித்யா ஸம்பந்த முண்டானவன்றே
தொலைந்து போயின வாதலாலும், உத்தர பாபங்கள் ப்ரஹ்ம வித்துக்களிடத்தில் ஒட்ட
மாட்டாவென்று சொல்லப் படுகையாலும் ப்ராரப்த கர்மமொன்றே சேஷித்து நிற்கிறது -அக் கருமம் சரம தேஹத்தோடு கழியுமாதலால் பந்த ஹேதுவாக மாட்டாது. ஆகவே ப்ரஹ்ம வித்துக்களுக்கு நிசி மரணம் நேர்ந்தாலும் பரம புருஷார்த்தமான ப்ரஹ்ம பிராப்திக்குக் குறை யில்லை யென்றதாயிற்று. திவா ச சுக்ல பக்ஷச் ச என்று கீழே காட்டின
வசனம் பரஹ்ம வித்துக்களல்லாதார் விஷயமென்றும் முடிந்தது-

58-இதற்கு மேலுள்ள தக்ஷிணாயநாதி கரணத்தின் ப்ரமேயமும் விவரிக்கப் படுகிறது -ஒரு ஸுத்ரமே கொண்டது இவ் வதிகரணமும். நிசி மரணமடைந்தாலும் பிரஹ்ம ப்ராப்திக்குக் குறையில்லை யென்பதற்கு, முந்தின அதிகரணத்தில் எந்த ஹேது சொல்லப் பட்டதோ, அந்த ஹேதுவினாலேயே தக்ஷிணாயநத்தில் மரணமடைந்தவற்கும் ப்ரஹ்ம ப்ராப்தியில் குறையில்லை யென்பது ஸித்தமே. ஆனாலும் இவ் வதிகரணத்தில் அதிகப் படியான சங்கை என்னவென்றால்,, தக்ஷிணாயநத்தில் மரணமடைந்தவற்கு சந்திர ப்ராபதி சொல்லப்படுகிறது; சந்த்ர பிராப்தி பெற்றவர்களுக்குப் புநராவ்ருத்தியும் சொல்லப் படுகிறது.பீஷ்மர் முதலான சில ப்ரஹ்ம வித்துக்களும் உத்தராயண ப்ரதீக்ஷை பண்ணிதாகத் தெரிய வருகிறது. ஆக இக் காரணங்களினால் தக்ஷிணாயனத்தில் இறந்தவருக்கு ப்ரஹ்ம ப்ராப்தி ஸம்பவிக்க ஒளசித்யமில்லை- என்பதாம். இதற்குப் பரிஹாரமாவது, சந்த்ர ப்ராபதியினால் புநராவ்ருத்தி யென்பது ப்ரஹ்ம வித்துக்களல்லாதார்க்கே யொழிய ப்ரஹ்ம வித்துக்களுக் கன்று. ப்ரஹ்ம வித்துக்களுக்கும் சந்த்ர ப்ராப்தி யுண்டானாலும் இடையில் இளைப்பாறும் ஸ்தானமாகுமத்தனை. பந்த ஹேதுவான கருமம் தொலைந்து விட்டதென்கிற பூர்வோக்த ஹேதுவுக்குக் கண்ணழிவில்லாமையாலே ப்ரஹ்ம ப்ராப்தி யவர்ஜநீயமாகவே தேறும்-பீஷ்மர் உத்தராயண ப்ரதீக்ஷை பண்ணினாரென்ற விஷயத்தில் அறியத் தக்க தொன்றுண்டு.அவர் மது வித்யா நிஷ்டர். மதுவித்யா பிரபாவத்தினால் ஸ்வச்சந்த மரணத்வமுள்ளது. அதனாலும், உத்தராயணத்தின் மேன்மையைக் காட்ட வேண்டியும் மரணமடைந்தவர்களுக்கு அவர் உத்தராயண ப்ரதீக்ஷை பண்ணின வளவால் தஷிணாயனத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு , ப்ரஹ்ம ப்ராப்தியில் கண்ணழிவு சொல்ல முடியாது. ஆக இவ்வளவால் ப்ரஹ்ம வித்துக்களுக்கு நிசி மரணமோ க்ருஷண பக்ஷ மரணமோ தஷிணாயன மரணமோ நேர்ந்தாலும் கூட பரம புருஷ பிராப்தியில் குறையில்லை என்றதாயிற்று –

59-இனி,சாரீரக மீமாம்ஸையில் முடிவான அதிகரணமாகிய ஜகத் வியாபார வர்ஜாதி கரணத்தின் ப்ரமேயம் தெரிவிக்கப் படுகிறது. முக்த புருஷனுக்கு ஜகத் ஸ்ருஷ்டியில் அதிகாரமில்லை யென்பதும் பரம பதத்தினின்று மீட்சியில்லை யென்பதும் இவ் வதிகரணத்தில் தெரிவிக்கப் படுகின்றன. முதல் ஸூத்ரத்தின் அர்த்தமாவது, முக்தனுடைய ஐஸ்வர்யம் ஜகந் நியமனத்தைத் தவிர்த்தேயாம். ஏனென்னில் ; பர ப்ரஹ்மத்தைக் குறித்துச் சொல்லும் பிரகரணங்களிலேயே ஜகத் ஸ்ருஷ்டி முதலானவற்றைச் சொல்லி யிருக்கிற படியாலும்,அவற்றைச் சொல்லும் ப்ரகரணங்களில் ஜீவன் ப்ரஸ்துதனாக இல்லாமையாலும் – என்பதாம். இங்கு பூர்வ பக்ஷம் வருமாறு – முண்டகோபநிஷத்தில் * முக்தனுக்குப் பர ப்ரஹ்மத்தோடு ஸாம்யம் ஓதப்பட்டுள்ளது. இன்னமும் சாந்தோக்யோபநிஷத்தில் முக்த புருஷனுக்கு ஸத்ய ஸங்கல்பத்வமும் ஓதப்படுகிறது. இவ்விரண்டும் முக்தனுக்கு ஐகந் நியாமகத்வ ரூபமான ஜகதீஸ்வரத்வ மிருந்தாலொழியப் பொருந்த மாட்டாது -முக்தனுக்கு ஈஸ்வரத்வ மில்லையானால் ப்ரஹ்மத்தோடு பரம ஸாம்ய முண்டாவதாகச் சொல்வது சேராது- ஆகையாலே முக்தனுக்கும் பர ப்ரஹ்மத்திற்குப் போலவே ஈஸ்வரத்வத்தை அவசியம் இசைந்து தீர வேண்டும். ஆனது பற்றியே முக்தனைப் பற்றி ஓதுமிடங்களில்
ஸர்வ லோக ஸஞ்சாரமும் காமாந்நித்வமும் காமரூபித்வமும் பொருந்துகின்றன மென்பது . ஸர்வலோக சஞ்சாரம் என்பது ஸர்வ லோக நியமனத்திற்காகத் தானே; அது தவிர மற்றொரு பலனும் தேறுகின்ற தில்லை யாகையாலே ஜகந் நியமனம் முக்தனுக்கு ஸித்தித்தே தீரும்.காமாந்நித்வாதிகள் சொன்ன போதே லோகங்கள் அவனுக்கு அதீன மென்பது தேறி நிற்கும். ஆனால் இதற்கு மேல் ஒன்று சொல்லாம்: முக்தனுக்கு ஸர்வ லோக ஸஞ்சார மானது ஆங்காங்கு போக்ய பதார்த்தங்களை அநுபவிப்பதற்காகவே யொழிய உலகங்களை நியமிப்பதற்காக வன்று என்று சொல்லலாம்; இதுவும் சொல்ல முடியாது : விகாராஸ் பதங்களாகையாலே ஹேயங்களா யிருக்கின்ற லோகங்களையும் அவற்றிலுள்ள பொருள்களையும் போக்யமாகக் கொள்ள ப்ரஸக்தி யில்லை யன்றோ – அவை ஹேயங்களானாலும் ஸ்வாமியான பரமபுருஷனுடைய விபூதி யாகையாலே அவற்றில் போக்யதா புத்தி ஸம்பவிக்கலாமாகையாலே அவற்றைப் புஜிக்கைக்காகவே அவ்வோ லோகங்களில் ஸஞ்சாரம் ப்ராப்தமாகிறது என்கிற வாதமும் ஒவ்வாது. சாந்தோக்யத்தில் ஸ ஸ்வராட் பவதி * என்றும் ஸ்பஷ்டமாகச் சொல்லி யிருக்கையாலே முக்தனுக்கு வேறு யாரும் அதிபதி யல்லரென்று நன்கு அறியலாகிறது. முக்தி தசையில் முக்தனைக் குறித்து பர ப்ரஹ்மம் சேஷி யன்று என்று தேறுவதால் ஸ்வாமியின் விபூதிகளை யநுபவிப்பதற்காக ஸர்வ லோக சஞ்சாரம் என்பதும் பொருந்தாது -அது நியமன அர்த்தமாகத்தான் -ஆகவே முக்தனுக்கும் ஜகத் வியாபாரமுண்டு என்பதாகப் பூர்வ பக்ஷம் ப்ராப்தமாகிறது –

60-இதன் மேல் ஸித்தாந்தம் வருமாறு – *யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே இத்யாதி யுபநிஷத் வாக்யத்தில் ஜகத் ஸ்ருஷட்யாதி ரூபமான நியாமகத்வத்தைப் பரப்ரஹ்ம லஷணமாகச் சொல்லி யிருக்கையாலே அது பர ப்ரஹ்மத்திற்கு அஸாதாரண மானதென்று விளங்குகிறது. அஸாதாரண தர்மந் தானே லக்ஷணமா யிருக்க முடியும் ஆகவே பர பரஹ்மத்திற்கு அசாதாரண தர்மமாக ஓதப்பட்ட ஜகந் நியாமகத்வ ரூபமான ஜகதீஸ்வரத்வமானது முக்தனுக்கு ஸம்பவிக்க மாட்டாது. ஸம்பவிக்குமாகில் அது பர ப்ரஹ்மத்திற்கு அசாதாரண லக்ஷணமாக வழியில்லை -இத்யாதி ஸ்ருதிகளாலும் ஜகந் நியாமகத்வம் பர ப்ரஹ்மத்திற்கே அஸாதாரணமென்று காண்கிறது -பரமாத்மாவுக்குத் தவிர மற்றை யோர்க்கு நியாமகத்வ மில்லை யென்று ஸ்பஷ்டமாகவும் சொல்லப் படுகிறது. ஆகவே முக்தனுக்கு ஜகத் நியாமகத்வ ரூபமான ஜகதீஸ்வரத்வம் ஸம்பவிக்க மாட்டாது. * பரமம் ஸாம்ய முபைதி *என்று பரம புருஷனோடு முக்தனுக்கு வெறும் ஸாம்யம் சொல்லாதே பரம ஸாம்யாபத்தி சொல்லி யிருக்கையாலே அவனுக்குள்ள தெல்லாம் இவனுக்கும் பிராப்தமானாலொழிய பரம ஸாம்யம் நிர்வஹிக்க வழி யில்லையே என்றதற்குச் சொல்கிறோம் – யாரோட எந்த அம்சத்தில் ஸாம்யமென்று விசாரிக்குமளவில், “வித் வாந் புண்ய பாபே விதூய நிரஞ்ஜந பரமம் ஸாம்யமுபைதி” என்ற சொற் செறிவால் என்ன கிடைக்கிற தென்னில், வித்யா ஸாத்யமான யாதொரு புண்ய பாப விதூநந முண்டோ,அதனாலாகும் பலனில் ஸாம்யமென்று ஏற்படுகிறது -வித்யை யென்பது ப்ரஹ்ம ப்ராப்தி ப்ரதிபந்தகமான புண்ணிய பாப ரூப கருமத்திற்கு ப்ராயச் சித்தமானது ஏவஞ்ச, புண பாப ரூப கர்ம விதூநந ஸாத்யமான பலன் பரஹ்மாநுபவமே யென்று தேறிற்று. அதில் தான் ஸாம்யம் விவக்ஷிதமாகும். முன்னே பரம புருஷ ப்ரஸ்தாவமிருக்கையாலே அவனோடு தான் ஸாம்யமென்றும் நிச்சயிக்கப்படுகிறது. இந்த ஸாம்யத்தில் பாரம்யமாவது, ப்ரஹ்மாநுபவம் செய்யுமிடத்து தத் குணங்களிலும் தத் விபூதிகளிலும் ஏக தேசத்தையும் விடாமல் பூர்த்தியாக அநுபவிப்பதே யாம். ஆக ஸமஸ்த கல்யாண குண விபூதி விஸிஷ்ட ப்ரஹ்மாநுபவத்தில் ஸாம்யமென்று தேறிற்று -இந்த ஸாம்யம் தான் ஸ்ருதியிலும் சொல்லப்படுகிறது.ஆக முக்தனுக்கு பரிபூர்ண ப்ரஹ்மாநுபவம் ஸித்தித்த போது ஆநந்த ஸாம்யமும் இந்த ஸ்ருதியினாலேயே ஸித்தம்-ஸ ஸ்வராட் பவதி என்றதும் கர்ம வஸ்யத்வமில்லாமையைச் சொல்லுகிறத்தனை. * ஏஷ ஹ்யேவா நந்தயாதி * இத்யாதி ஸ்ருதிகளாலே முக்தனுடைய ஸத்தா ஸ்திதி ப்ரவ்ருதிகளெல்லாம் பரம புருஷாதீ மென்று தேறுகையாலும், முத்தனுக்கு ஸத்ய ஸங்கல்பத்வம் இயற்கையா யிருந்தாலும் கருமங்களினால் மறைந்திருந்த வது பரம புருஷனுடைய அநுக்ரஹத்தாலேயே ஆவிர்ப்பவிப்பதாக ஓதுகையாலும் முக்த்தைஸ்வர்யம் முழுவதும் பகவதிச்சாதீந மாய்றுகையாலே பரம புருஷனுடைய அஸாதாரண தர்மமான ஜகந் நியமந ரூப ஐஸ்வர்யம் முக்தனுக்கு இல்லை யென்று முடிந்தது.

61- இப்படி முக்தனுடைய ஐஸ்வர்யம் பரம புருஷாதீநமாகில் அந்த பரம புருஷன் தான் ஸ்வதந்த்ரனாகையாலே அவன் தனது ஸங்கல்பத்தாலே ஒரு ஸமயம் முக்தனைப் பரம பதத்தில் நின்றும் இந் நிலத்திற்குத் திருப்பி யனுப்பி விடவுங் கூடுமாகை யாலே மோஷ புருஷார்த்தமும் அநித்யமாக வேண்டி வருமே என்கிற சங்கை அடுத்தபடி யாக உண்டாகக் கூடியது. அந்த சங்கைக்குப் பரிஹாரமாக —அநா வ்ருத்திச் சப்தாத் அநாவ்ருத்திச் சப்தாத்-என்கிற சரம ஸூத்ரம் அவதரிக்கிறது. சங்கா பரிஹார ப்ரகாரம் யாதெனில்; அந்யதா ஸித்தமான ஸ்ருதி வாக்கியங்களைக் கொண்டே அறியக் கடவதான பொருளை சாஸ்த்ரம் சொன்னபடியே தான் அறிய வேண்டும். பரம புருஷனொருவனுள்னென்பதை நாம் எந்த சாஸ்தரங்கொண்டு அறிகிறோமோ அந்த சாஸ்தரமே முக்தர்களுக்கு மீட்சி யில்லை யென்பதை யுமறிவிக்கின்றது;

62- முக்தர்களுக்கு மீட்சி யில்லை யென்பதை ஸூத்ரகாரர் சாஸ்த்ரத்தைக் காட்டி ஸ்தாபித்தார். பகவானே கேட்பாரற்ற ஸ்வதந்திரன். சாஸ்த்ரத்தையும் மீறிச் செய்வதற்கு அவன் அசக்தனல்லன்-ஸ்வாதந்திரியத்தாலே ஈஸ்வரன் ஒன்று செய்யப் புகுந்தால் சாஸ்த்ரம் குறுக்கே நிற்குமோ?என்று சோத்யம் பண்ணினால் இதற்கு ஸூத்ரகாரர் சொன்ன ஸமாதானம் திருப்தியை விளைக்காது.-சங்கராசார்யரும் தம்முடைய பாஷ்யத்தில் சாஸ்த்ரத்தை யெடுத்துக் காட்டினவளவோடு நின்று விட்டார். ஸ்வாமி யெம்பெருமானார் ஆழ்வாரருளிச் செயற்கடலில் ஆழ்ந்து அரும் பெரும் பொருள்களை யறிந்தவராகையாலே அவ் வருளிச் செயல் பரிமளம் கமழ இங்கு அருளிச் செய்திருக்கும் அர்த்த விசேஷம் ஸ்ரீபாஷ்யத்திற்குச் சிகரமாக விளங்குகின்றது. அவ்வர்த்த விசேஷம் கேண்மின் ; ஈஸ்வரன் ஸ்வதந்திரனே யானாலும் உன்மத்தனல்லன், மூர்க்கனல்லன், அரஸிகனல்லன். ஸத்ய ஸங்கல்பனென்று பேர் பெற்றவன். தன்னுடைய மநோரதத்திற்கு மாறுபாடாக நடந்து கொள்பவனல்லன். ஒரு சேதநனைப் பெறுவதற்கு அப் பரம புருஷன் என்ன பாடுபடுகிறான்!எவ்வளவு க்ருஷி பண்ணுகிறான்! தெரியுமோ? அவன் ஸ்ருஷ்டி பண்ணுவதும் அவதாரங்கள் பண்ணுவதும் சேதநரை லபிக்கைக்காக வன்றோ. எவ்வளவோ தவப் பயனாக ஒரு சேதநன் வந்து சேர, அவனை லபித்த பின்பும் இழப்பனோ? என்னுமபிப்ராயத்தை இன் சுவையே வடிவெடுத்த திவ்ய ஸூக்தியாலே காட்டி யருளி சங்கா பரிஹாரத்தை மிக வழகாகத் தலைக் கட்டினார். இதில் பரம புருஷ ஜ்ஞாநிநம் லப்த்வா ” என்கிற ஸ்ரீ ஸூக்தி விந்யாஸ்மானது எம்பெருமானார் திருவுள்ளத்தில் திருவாய்மொழி யமுதக் கடல் அலை யெறிகிற படியை நன்கு காட்டுகின்றது.*யானொட்டி யென்னுள் இருத்துவ மென்றிலன்,தானோட்டி வந்தென் தனி நெஞ்சை வஞ்சித்து, ஊனொட்டி நின்று என்னுயிருள் கலந்து,இயல்வானொட்டுமோ இனி யென்னை நெகிழ்க்கவே (2747) * என்றும், வாரிக் கொண்டன்னை விழுங்குவன் காணிலென்று, ஆர்வுற்ற வென்னை யொழிய என்னில் முன்னம் பாரித்து,தானென்னை முற்றப் பருகினான்,காரொக்குங் காட்கரையப்பன் கடியனே (8621) *என்றுமுள்ள திருவாய்மொழிப் பாசுரங்களின் திவ்யார்த்த லௌரபத்தோடே ஸ்ரீபாஷ்யம் தலைக்கட்டப் பட்டிருக்கின்ற தென்பதை உபய வேதாந்த ரஸிகர்களே அறிய வல்லார்.

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

One Response to “ஸ்ரீ சாரீரிக மீமாம்ஸையைப் பற்றின அறுபத்திரண்டு வார்த்தா மாலை.-(ஸ்ரீகாஞ்சி-அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் )”

  1. Bharathvajan Says:

    🙏🙏🙏

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading