ஸ்ரீ திருமண்டங்குடியில் -கலி 287 -பிரபவ வருஷம் மார்கழி -கிருஷ்ண பக்ஷம் -சதுர்த்தசி -செவ்வாய் கிழமை -கேட்டை நக்ஷத்ரம் -ஸ்ரீ வைஜயந்தி மாலா வனமாலிகை அம்சமாக வேதியர் குலத்தில் திருவவதரித்தார்-அநவரதம் திருவரங்கத்து எம்பெருமான் மேல் நிலை நின்ற சிந்தையராய் ராய் அழகிய மணவாளனுக்குத் திருமாலை கட்டிச் சாத்தித் திரு நந்தவன கைங்கரியம் விடாது செய்து கொண்டு கொண்டு, 45 – பாசுரத்தால் திருமாலை யென்ற பிரபந்தத்தையும், பத்துப் பாசுரமுள்ள திருப்பள்ளி யெழுச்சியையும், திருவாய் மலர்ந்தருளி உலகத்தை வாழ்வித்தருளினார் –தீ வினைகளனைத்தையும் வேருடனறுத்துத் துடைத்து உய்வதற்கு, எம்பெருமான் தமரடிகளி லொட்டிய தூசியைத் தலை மேற் கொள்ளலே தக்க பிராயச் சித்தமென மனதில் கொண்டவராதலால், “தொண்டரடிப் பொடி” என்றதையே தமது திருநாமமாக உகந்தருளினார் –
முதலில் நித்ய விபூதியிலுள்ள பர வாசு தேவனாகிய பரப் ப்ரஹ்மமே இந்த அணி யரங்கன் பரமபுருஷாரத்த மாகிய வீட்டின் கண் ஆசை யுற்ற முமுஷுக்களாகிய யோகிகளுக்கு த்யேயனுய், பரம கதி யாய், ௮ஷரமாய் , பரஞ்சோதி ஸ்வரூபனாய் அகில உபநிஷத்துக்களிலும் பிரதி பாதிக்கப் படுமவனாயுள்ள பர வாஸூதேவனாகிற பரப் ப்ரஹ்மத்தைத் தியானித்து அடையத் தக்க சேதநர்கள் அளவிறந்து இடையறாது வரும் பிறவிக்குக் காரணமாகிய வித்தை வறுத்தழித்து, மறு படியும் திரும்புதலில்லா ஸாஸ்வத பரம பதத்தில் எஞ்ஞான்றும் வரம்பில் இன்பம் யுடையவராய் வீற்று இருப்பர் என்று கூறப்படுகிறது – அப்படிப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவமாகிய பரம பதத்தின் லக்ஷணம் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் கூறி இருக்கிறது -(1-22-47–53)-
இதன் பொருள்–ஞான மயனான விஷ்ணுவினுடைய ஞான ரூப பரம பதமானது முயற்சி வேண்டாததாயும், ஒருவராற் கற்பிக்க வேண்டாததாயும், எங்கும் ஓழிவற நிறைந்து நின்றதாயும், ஒத்திலதாயும், அபரோக்ஷமாய்த் தனக்குத் தானே விளங்கி ஸாக்ஷாத் கரிக்கத் தக்கதாயும், தன்னிலை யிற்றானே யுளதாயும், கூறற்குரிய குறிப்பற்றதாயும், ஒடுக்க முடையதாயும், ௮ச்சமிலதாயும், தூயதாயும், எவ்வித பாவனைக்கும் மெட்டா தாயும், பற்றிலதாயுமுள்ளபடி மிரா நின்றது. அப்படிப்பட்ட பரம பதத்தில் உட்பற்று புறப் பற்றனைத்தையுமறுத்து எந்த யோகிகள் ஒன்றி யொடுங்குகிறார்களோ, ௮வர்கள் பிறவியாகிற விதையைத் தீய்த்து விடுகிறார்கள், இந்தப்படி குற்ற மற்ற தாயும், என்றுமுளதாயும், முற்றவுநின்றதாயும், அழிவற்ற தாயும், எவ்வித வேறுபாடிலதாயும், இருக்கிற விஷ்ணு என்ற பெயரை யுடைய உயர்ந்த நிலையான பரப் ப்ரஹ்மத்தை யடைகிற பரம யோகி யானவன் திரும்பப் பிறவி யென்னும் பெரும் வலையுள் அகப்படமாட்டான்-
அஸ்திர பூஷண அத்யாயம்
௧) ஜீவாத்மா (புருடன்) – ஸ்ரீகெளஸ்துப மணிஸ்வரூபமாகவும்,
(௨) பிரகிருதி – ஸ்ரீவத்ஸம் (திருமறு) ஆகவும்.
(௩) புத்தி அதாவது – மஹான் – தண்டு ஆகவும்,
(௪) பூதாதி அதாவது தாமஸ அஹங்காரம் சாரங்கம் ஆகவும்,
(டு) இங்திரியாதி – ஸாத்விக அஹங்காரம் சங்கம் ஆகவும்.
(௬) மனசு -திருவாழி ஆகவும்.
(௭) சூஷ்ம பஞ்ச பூதமும் ஸ்தூல பஞ்சபூதமும்- வைஜயந்தி மாலை யாகவும்
(௮) ஞானேந்திரிய கர்மேந்தரியங்கள் பத்தும் பாணங்களாகவும்,
(௯) தெருள் (ஞானம்) நந்தகமாகிய கத்தியாகவும்.
(௧௦) மருள் (௮ஞ்ஜானம்) – ௮க் கத்தியின் உறையாகவும்
புருடன் மணி வரமாகப் பொன்றா மூலப் பிரகிருதி மறுவாக மான் தண்டாகத்
தெருள் மருள் வாள் உறையாக ஆங்கு அரங்கள் சார்ங்கம் சங்காக மனம் திகிரியாக
இருடிகங்கள் ஈரைந்தும் சரங்களாக இரு பூத மாலை வன மாலையாகக்
கருடன் உருவாம் மறையின் பொருளாம் கண்ணன் கரிகிரி மேல் நின்று அனைத்தும் காக்கின்றானே–அதிகார ஸங்க்ரஹம்-41-
தொண்டரடிப்பொடி யாழ்வார் முதலில் ஸ்வருப உபாய புருஷார்த்த சூந்யராய், தேகத்தில் ஆத்ம புத்தியைப் பண்ணி, சப்தாதி விஷயங்களில் ஸம்ஸரித்துக் கொண்டு ஸூப்தரா யிருந்தார், அதைக் கண்டு பெரிய பெருமாள் நிரவதிக கிருபையாலே அவரிடம் சென்று உணர்த்தி தன்னைக் காட் டிக் கொ டுத்து, விஷயாந்த்ரப் பிராவண்யத்தை மாற்றி , ஸ்வருபாது ரூபமான அபிநிவேசத்தைத் தன் பக்கலிலே பிறப்பித்தார், அப்போது இவ் வாழ்வாரும் ௮ஞ்ஞானம் நீங்கி சத்வந்தலையெடுத்து ”ஆதலால் பிறவி வேண்டேன்?’ என்றும்,-எம்பிராற்காட் செய்யாதே யென்செய்வான் தோன்றினேனே” என்றும்
அத்யவஸிக்கும்படியான ஞானம் பிறந்து
புன் கவிதையேனும் எம்பிராற்கு இனிய வாறே” என்று திருமாலையிற் சொல்லியபடி. பெரிய பெருமாளுக் இனிதான வாசிக கைங்கரியத்தைப் பெற்று நின்றார், இப்படிப்பட்ட ஞான விசேஷத்தை யுடையரானபடியை நினைத்து, இவரை யிப்படிப் பெறும் படியாயிற்றே யெனப் பிரீதிப் பிரகர்ஷத்தாலேயும், இவரை வென்ற தன் வைபவத்தை நினைத்தும், எல்லாரையுமிவரைப் போலே நம் பக்கலிலே பிரவணராக்கும் விரகேதோ? என்று ததேகாக்ர சித்தராய்க் கொண்டு பள்ளி கொண் டருளினார்
ஆழ்வாரும் கைங்கரியத் த்வரையாலே சென்று, பெருமாளை நிர்ப்பந்தித்துத் திருப் பள்ளி யுணர்த்துகிறார்
இப்பிரபந்தத்தின் ஸாராம்சமாவது – உன்னடியார்க்கு ஆட்படுத்தா யென்றும், தூய பர்யந்தமான காயிக கைங்கரியத்தைக் கொண்டருள வேணு மென்றும், பெரிய பெருமாளைப் பிரார்த்திக்கப் படுகிறது
இதிற் பாசுரங்கள் – ௧0,
இவைகள் எல்லாவற்றுள்ளும் மன்னரை வந்திகள் உணர்த்துமாப்போலே பிரபாத ஸூசகங்களைச் சொல்லி ஆராத யோக்யமான கலமாயிற்றென்றும், திருப்பள்ளி யுணர்ந்தால் கண்டருளும் படி. மங்கள வஸ்துக்கள் நிறைந்தபடி யையும், மங்கள வாத்யங்கள் முழங்கு படியையும் கூறி தொண்டரடிப் பொடியான அடியேனும் நான்முகன் முதலிய தேவர்கள் அனைவரும் தேவரீர் திருப் பள்ளி யுணரும் வடிவழகு கண்டு ஆனந்தித்துத் திருவடி தொழுது, மங்களா சாஸனம் செய்ய வேண்டுமென்று ௮வசரப் பிரதிஷீகராய்க் காத்து நிற்கின்றோம், ஆதலால் உணர்ந்தருளிக் கடாக்ஷித்து கைங்கரியங் கொள்ள வேணுமென் றும் பெரிய பெருமாளைத் தொண் டரடிப் பொடி ஆழ்வார் பிரார்த்திக்கிறார் -.
இத் திருப்பள்ளி யெழுச்சியாகிய பிரதம ஆராதனதை யாழ்வார் உப லக்ஷணமாகக் கூறியபடியாம்-நாம் நாள்முழமுவதும் எம்பெருமான் பக்கல் புரியத் தக்க யதோக்தமான ஷோடஸ உபசார யுக்தமான திருவார தனம் எனக்கொள்ள வேண்டும்
————–
தமேவ மத்வா பரவா ஸூ தேவம் ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்
ப்ராபோதீகீம் யோக்ருத ஸூ க்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே
திருமாலை ஆண்டான்-தனியன் அருளிச் செய்தவர்-ஸ்ரீ ராமானுஜருக்கு திரு வாய் மொழி அர்த்தங்கள் அருளியவர்
தம் – அந்த
ஏவ – (பர வாசுதேவம் என்பதோடு அந்வயம்)-பர வாஸூ தேவனே என்றபடி
மத்வா – பிரபத்தி செய்து
பர வாசுதேவம் – பரம பத நாதனாகவே
ரங்கேசயம் – திருவரங்கத்தில் பள்ளி கொண்ட
ராஜவ,த் – சககிரவர்தியைப் போல்
௮ர்ஹணியம் – பூஜ்யராய்
ப்ராபோதகீம்-திருப் பள்ளி யுணர்த்துவதான
யக் ௮க்ருத – யார் செய்தாரோ
ஸூக்திமாலாம் – நல்ல சொன் மாலையை-மாலா ஸப்தத்தாலே திருமாலை திவ்ய பிரபந்தமும் ஸூசகம்
பக்தாங்க்ரிரேணும் –தொண்டர் அடிப்பொடி என்ற
பகவந்தம் -ஆழ்வாரை
ஈடே-ஸ்துதி செய்து பணிகிறேன்
காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்
ஸ வாஸுதேவோ ரங்கேஸ: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்!
விமாநம் ப்ரணவாகாரம் வேதஸ்ருங்கம் மஹாத்புதம்
ஸ்ரீரங்கசாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாஸக:
வைகுந்தத்தில் ஓடுகின்ற விரஜை நதிதான் காவேரீ! ஸ்ரீரங்கவிமானமே வைகுந்தமாம்! வாஸுதேவனே அரங்கன்! ப்ரணவமே விமாநம்! விமானத்தின் நான்கு கலசங்கள் நான்கு வேதங்கள்! உள்ளே கண்வளரும் அரங்கனே ப்ரணவத்தினால் விவரிக்கப்படும் பரம்பொருள்!
இங்கு இருந்த வண்ணமே, “இப் புவனியும் விண்ணுலகும், அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான், செங்கோலுடைய திருவரங்கச் செல்வர்- என்றபடி, இரண்டு விபூதிகளையும் காத்தருளுகிறான்
சக்ரவர்த்தியைப்போல் பக்தியுடன் பூஜிக்கப் படத் தக்கவராய் திருவரங்கத்தில் பள்ளி கொண்ட ௮ழகிய மணவாளனை, மறைகளின் உச்சியில் விளங்கும் ஸாஷாத் பரமபத நாதனென்றே உய்த்துணர்ந்து பிரபத்தி பண்ணி, வைகறைப் பொழுதில் துயிலினின்று உணர்த்துவதான நல்ல சொன் மாலையை அருளிச் செய்தவர் யாரோ, அப்படிப்பட்ட வைபவத்தை யுடைய ஞானாதி குண பூர்ணரான தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரைத் துதித்துத் தொழுகிறேன்
—————–
மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு
திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி
வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்-திரு அரங்க பெருமாள் அரையர் அருளி செய்த தனியன்
மண்டங்குடி என்பர் –திரு மண்டங்குடி என்றும் கூறுவர்
மா மறையோர் -மிக்க வேதியர்
மன்னிய சீர்-நிலை பெற்ற புகழையுடைய
தொண்டர் அடி பொடி -தொண்டர் அடி பொடி-என்ற திருநாம கொண்ட ஆழ்வார்
தொன் நகரம் -புராதனமான நகரம்
வண்டு-பிரமங்கள்
திணர்த்த -நெருங்கி முரலும்-நீர்ப்பூக்கள் மலரும் படியாக நீர் வளத்தைச் சொன்னபடி-
வயல் -கைதைகள் சேர்ந்து
தென் -தர்சனீயமான
அரங்கத்து -திருவரங்கத்து பெரிய கோயிலிலே
அம்மானை -திருக்கண் வளர்ந்து அருளுகிற ஸர்வ ஸ்வாமியான-அழகிய மணவாளனை
பள்ளிவுணர்த்தும் பிரான் –திருப்பள்ளியின் நின்றும் துயில் நீத்தலை விண்ணப்பம் செய்யும் ஸ்வாமிகள்-உபகாரன் -பின்புள்ளவரும் அநுஸந்திக்கும் படி அபகரித்து அருளியவர்
வுதித்த ஊர்–திருவவதரித்த தேசம்
———————–
கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-1-
பதவுரை
அரங்கத்து அம்மா–திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!
கதிரவன்–ஸூர்யனானவன்
குண திசை–கிழக்குத் திக்கிலே
சிகரம்–(உதய கிரியின்) கொடு முடியிலே
வந்து அணைந்தான்–வந்து கூடினான்;
கன இருள்–(இரவில்) அடர்ந்திருந்த இருளானது
அகன்றது–நீங்கி யொழிந்தது;
அம்–அழகிய
காலைப் பொழுது ஆய்–காலைப் பொழுது வர,
மா மலர் எல்லாம்–சிறந்து புஷ்பங்களெல்லாம்
விரிந்து–விகாஸமடைய
மது ஒழுகின–தேன் வெள்ளமிடா நின்றன;
வானவர்–தேவர்களும்
அரசர்கள்–ராஜாக்களும்
வந்து வந்து–ஒருவர்க் கொருவர் முற்கோலி வந்து
ஈண்டி–திரண்டு
எதிர் திசை–திருக் கண்ணோக்கான தெற்குத் திக்கிலே
நிறைந்தனர்–நிறைந்து நின்றார்கள்;
இவரொடும் புகுந்த–இவர்களோடு கூடவந்த (இவர்களது வாஹநமாகிய)
இரு களிறு ஈட்டமும்–பெரிய ஆண் யானைத் திரள்களும்
பிடியொடு–பெண் யானைத் திரள்களும்
முரசும்–பேரி வாத்யங்களும்
அதிர்தலில்–சப்திக்கும் போது
எங்கும் எத் திசையும்
அலை–அலை யெறியா நின்ற
கடல் போன்று உளது–ஸமுத்ர கோஷத்தை ஒத்திருந்தது.
(ஆதலால்)
பள்ளி எழுந்தருளாய்–திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்.
அனைத்து உலகும் காத்தளிக்கும் அழகிய மணவாளா! இப்போது ஆதித்யன் உதய கிரியை வந்தடைந்திருக்கிறான்-ராத்திரி முழுவதும் நிபிடமாயிருந்த இருளானது விலகிப் போயிற்று-திருவாராதனஞ்செய்வதற்கு யோக்யமான நல்ல உதய காலமாயிற்று-தாமரை செங்கழுநீர் முதலிய பெரிய புஷ்பங்களெல்லாம் விகஹிதமாய்த் தேன் சொரிந்து வெள்ளமிடாநின்றன- தேவர்களும் ராஜாக்களும் ஒருவர்ஃகொருவர் முற்கோலி வந்து கூடி. உபய விபூதி யுக்தனான உனது திருக் கண்ணோக்கமான எதிர்ப் பக்கத்தில் நிறைந்து நிற்கின்றார்கள்-இவர்களோடே வந்த இவர்கள் வாகனமாகிய பெரிய ஆண் யானைத் திரள்களும், பெண் யானைத் திரள்களும் பேரிகைகளும் சப்திக்கும் போது எல்லாத் திக்குகளிலும் அலை யெறியா நின்ற சமுத்திர கோஷத்தை யொத்திருக்கின்றது-ஆத லால் திருவரங்க மேவிய செல்வனாரான தேவரீர்! திருப் பள்ளி யுணர்ந்து ௮டியோமைக் கடாக்ஷித்து ௮டிமை கொண்டருள வேணும்-
———————–
கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணை பள்ளி கொள் அன்னம்
ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய்
வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—–2-
பதவுரை
குண திசை மாருதம்–கீழ் காற்றானது
கொழு கொடி-செழுமை தங்கிய கொடியை யுடைத்தான
முல்லையின்-முல்லைச் செடியிலுண்டான
கொழு மலர்–அழகிய மலர்களை
அணலி–அளைந்து கொண்டு
இதுவோ–இதோ
கூர்ந்தது–வீசா நின்றது;
மலர் அணை–புஷ்ப சயநத்திலே
பள்ளி கொள்–உறங்குகின்ற
அன்னம்–ஹம்ஸங்களானவை
ஈன் பணி நனைந்த–(மழை போல்) சொரிகிற பனியாலே நனைந்த
தம்–தங்களுடைய
இரு சிறகு–அழகிய இறகுகளை
உதறி–உதறிக் கொண்டு
எழுந்தன–உறக்கம் விட்டெழுந்தன;
விழுங்கிய-(தன் காலை) விழுங்கின
முதலையின்–முதலையினுடைய
பிலம்புரை–பாழி போன்ற
பேழ் வாய்–பெரிய வாயிலுள்ள
வெள் எயிறு உற–வெளுத்த கோரப் பற்கள் ஊன்ற
அதன்–அம் முதலையினுடைய
விடத்தினுக்கு–பல விஷத்திற்கு
அனுங்கி அழுங்கிய–மிகவும் நோவுபட்ட
ஆனையின்–கஜேந்திராழ்வரனுடைய
அரு துயர்–பெரிய துக்கத்தை
கெடுத்த–போக்கி யருளின
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய்-.
அன்னமாயருமறை பயந்த ஆதிப் பிரானே ! தேவரீர்க்கு விண்ணப்பம்- விடியற்காலத்துக் கீழ் காற்றானது செழுமையான முல்லை மலரின் பரிமளத்தை யளைந்து கொண்டு வந்து *நீங்கள் உறங்குகிறதென்’ என்று உணர்த்துவது போல சூழ்ந்து கொண்டு முகங்களிலே வீசுகின்றன- அன்றியும் தாமரைப் பூவாகிய படுக்கையிலே உறங்கின ௮ன்ன மிதுநங்கள் இரவு முழுவதும் பனியால் நனைந்து போன தம்மழகிய சிறகுகளை யுதறிக் கொண்டு உணர்ந்தெழுந்து விட்டன, ஆகையால் திருவாராதனத்துக்கு யோக்கியமான காலமாயிற்று-விழுங்கின முதலையினுடைய பிலத் வாரத்தை யொத்த பெரிய வாயில் எயிற்றாலே நெருக்குண்டு அதன் பல் விடத்தால் நோவு பட்டுப் பயந்து கதறிக் கூவின ஸ்ரீ கஜேந்த்ர ஆழ்வானுடைய பெரிய ஆபத்தைத் தீர்த்தருளின பரமோபகாரகனாய், கோயிலில் நித்திய ஸன்னிதி பண்ணி யருளும் ஆஸ்ரித வாத்ஸல்யனான தேவரீர் அடியேங்களுடைய ஆர்த்தி யெல்லாம் தீரும்படி. யுணர்ந்தருளிக் கடாக்ஷித்தருள வேனும்-
———
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-—3 –
பதவுரை
சூழ் திசை எல்லாம்–கண்டவிடமெங்கும்
சுடர் ஒளி–ஸூர்ய கிரணங்களானவை
பரந்தன–பரவி விட்டன;
துன்னிய–(ஆகாசத்தில்) நெருங்கிய
தாரகை–நஷத்திரங்களினுடைய
மின் ஒளி–மிக்க தேஜஸ்ஸானது
சுருங்கி–குறைவுபட்டது மன்றி
படர் ஒளி–மிக்க ஒளியையுடைய
பனி மதி இவன்–இக் குளிர்ந்த சந்திரனும்
பசுத்தனன்–ஒளி மழுங்கினான்;
பாய் இருள்–பரந்த இருட்டானது
அகன்றது–நீங்கிற்று;
வைகறை மாருதம் இது–இந்த விடியற் காற்றானது
பை–பசுமை தங்கிய
பொழில்–சோலைகளிலுள்ள
கமுகின்–பாக்கு மரங்களினுடைய
மடலிடை கீறி–மடலைக் கீற
(அத்தாலே)
வண் பாளைகள் நாற–அழகிய பாளைகளானவை பரிமளிக்க
(அப்பரிமளத்தை முகந்து கொண்டு)
கூர்ந்தது–வீசுகின்றது;
அடல்–பெருத்த மிடுக்கை யுடைத்தாய்
ஒளி திகழ் தரு–தேஜஸ்ஸூ விளங்கா நின்றுள்ள
திகிரி–திருவாழி யாழ்வானை
அம் தட கை–அழகிய பெரிய திருக் கையிலே யுடைய
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாய்-.
ஸர்வ சரண்யனான ஓ ஸ்வாமீ! தேவரீர் திருவடிகளில் விண்ணப்பம்-பார்த்த விடமெங்கும் ஆதித்ய கணங்கள் பரம்பி நிற்கின்றன-இரவெல்லாம் பளிச்சுப் பளிச்சென்று ஒளி விசிக் கொண்டிருந்த நக்ஷத்தரங்கள் ஒளி மழுங்கிப் போயின- விஸ்தாரமாய் நிலவெறிக்கும் குளிர்ந்த சந்த்ரனும் பிரகாசம் குறைந்து வேற்றுருவடைந்தான்-எல்லி முழுதும் பரவி நின்ற இருளும் விலகிப் போயிற்று-பசுமையான சோலைகளிலுள்ள பாக்கு மரங்களின் பாளைகள் விகஸிதமாய் அவற்றின் மணத்தை விடிவோறைக் காற்றானது. விசேஷமாய் வாரிக் கொண்டு வருகின்றது- ஆதலால் தேஜஸ் பிரசுரமான திருவாழி யாழ்வானைத் திருக்கையில் தரித்தருளின ஒ ஸ்வாமீ! திருவரங்கத்தைக் கோயில் கொ ண்ட திருவின் மணாளா ! தேவரீருடைய திரு வடிவழகை ௮டியோம் அனுபவிக்கும்படி திருப் பள்ளி யுணர்ந்தருள வேணும்-
————–
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--4-
பதவுரை
மேடு இள மேதிகள்–உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை
தளை விடும்–(மேய்கைக்குக்) கட்டவிழ்த்து விடுகிற
ஆயர்கள்–இடையர் (ஊதுகிற)
வேய்ங்குழல் ஒசையும்–புல்லாங்குழலின் நாதமும்
விடை–எருதுகளின் (கழுத்திற் கட்டியுள்ள)
மணி–மணிகளினுடைய
குரலும்–ஓசையும் (ஆகிய)
ஈட்டிய–இவ் விரண்டும் கூடின த்வநியானது
திசை பரந்தன–திக்குக்களெங்கும் பரவி விட்டது;
வயலுள்–கழனிகளிலுள்ள
சுரும்பு இனம்–வண்டுகளின் திரள்
இரிந்தன–ஆரவாரித்துக் கொண்டு கிளம்பின;
இலங்கையர் குலத்தை–ராக்ஷஸ வர்க்கத்தை
வாட்டிய–உருவழித்த
வரி இலை–அழகிய சார்ங்கத்தை யுடைய
வானவர் ஏறெ–தேவாதி தேவனே!
மா முனி–விச்வாமித்ர மஹர்ஷியினுடைய
வேள்வியை–யாகத்தை
காத்து–நிறைவேற்றுவித்து
அவபிரதம் ஆட்டிய–அவப்ருத ஸ்நாநம் செய்வித்தருளின
அடு திறள்–(விரோதிகளை) ஒழிக்க வல்ல மிடுக்கை யுடையனாய்
அயோத்தி எம் அரசே–அயோத்தியா புரியை ஆளுகையாலே எங்களுக்கு ஸ்வாமி யானவனே!
அரங்கத்தமா! பள்ளி எழுந்தருளாயே-.
பருத்த வயிற்றை யுடைய இளம் பருவத்து எருமைகளைக் கட்டவிழ்த்து விடுகிற இடையர்களூதும் புல்லாம்குழலோசையும், எருதுகளின் கழுத்தில் கட்டி யிருக்கும் மணிகளின் ஓசையும் -இவ் விரண்டும் கூடிச் சேர்ந்த சப்தமானது திஸ்க்குகளனைத்துஞ் சென்றொலி கொண்டது–கழனிகளில் அலர்ந்த தாமரை செங்கழுகீர் முதலிய மலர்களிலுள்ள மதுவைப் பானஞ்செய்யும் வண்டுக் கூட்டங்கள் அங்கங்கு சிதறி யோடிப் போய் விட்டன-முற் காலத்தில் இலங்கையில் வாழ்ந்த அரக்கர் குலத்தை அடியுடனறுத்த அழகிய ஸ்ரீசார்ங்கத்தைத் திருக் கைகளிலேந்தியவராய், பிரமாதி வானவர்க்கும் அதிபனான ஸ்வாமியே ! விசுவாமித்திர மா முனிவருடைய யாகத்தை யாதொரு கலிவும் வாராமற் பாதுகாத்து யாக முடிவிற் செய்யும் ஸ்நாநத்தையும் செய்து வித்தவராய்ப் பகைவரைக் கொல்லும் வலிமை யுடையவராய் திருவயோத்தியை யாளும் எம் ஸ்வாமியான சக்கரவர்த்தித் திருமகனே | உபய விபூத யுக்தனான திருவரங்க மேவிய செல்வனே ! தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்து அடியோமுக்கு முகங் கொடுத்தருளி ௮டிமை கொண்டருள வேணும்-
————-
புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே—-5–
பதவுரை
பூ–பூத்திரா நின்றுள்ள
பொழில்களின் வாய்–சோலைகளிலுள்ள
புட்களும்–பறவைகளும்
புலம்பின–(உணர்ந்து) ஆரவாரஞ் செய்யா நின்றன;
போயிற்று–கழிந்தது;
புலரி–ப்ராத: காலமானது
புகுந்தது–வந்தது;
குண திசை–கீழ்த் திசையிலே
கனை–கோஷஞ்செய்கிற
கடல்–கடலினுடைய
அரவம்–ஒசையானது
கலந்தது–வியாபித்தது;
களி–தேனைப் பருகிப் களிக்கின்ற
வண்டு–வண்டுகளானவை
மிழற்றிய–சப்தியா நிற்கிற
கலம்பகன் புனைந்த–பல வகைப் பூக்களாலே தொடுக்கப் பட்ட
அம்–அழகிய
அலங்கல் தொடையல் கொண்டு–அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு
அமரர்கள்–தேவர்கள்
அடி இணை பணிவான்–(தேவரீருடைய திருவடி யிணைகளில் பணி மாறுகைக்காக
புகுந்தனர்–வந்து நின்றனர்;
ஆதலில்–ஆகையாலே,
அம்மா–ஸர்வ ஸ்வாமிந்!
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்–லங்கேச்வரனான விபீஷணாழ்வான் தாஸ வ்ருத்தி பண்ணப் பெற்ற கோயிலிலே
(கண்வளர்ந்தருளுகிற)
எம்பெருமான்!- அஸ்மத் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாயே-.
ஆஸ்ரித பராததீனரான ஸ்வாமீ! தேவரீர்க்கு விண்ணப்பம்-விகஸிதமான புஷ்பங்களை யுடைய திருச் சோலையிலுள்ள பக்ஷிக் கூட்டங்கள் உணர்ந்து ஆர வாரியா நின்றன-இருளுக்கிருப்பிடமான இராத்திரியானது விலகிற்று-ஆராதன யோக்யமான விடியற் காலமானது வந்தது-கீழ்த் திசையிலே கோஷிக்கிற ஸ்வபாவமுடைய சமுத்திரத்தின் ஒலியானது எங்கும் வியாபித்தது-மதுபானம் பண்ணிக் களிக்கிற வண்டுகள் ரீங்காரஞ் செய்து கொண்டிருக்கும் நாநா விதமான புஷ்பங்களாலே தொடுத்து சுந்தரமான ௮சைந்தாடும் மாலையைக் கைகளிலே ஏந்திக் கொண்டு அமரர்கள் மந்திர புஷ்பம் பண்ணிப் பரிமாறுகைக்காக அருளப்பாடிடுவது எப்டோதோ’ என்று அவஸரப் பிரதீக்ஷகராய் வந்து. நின்றார்கள்-ஆகையால், அனைத்துலகுக்கும் நாதனே ! ஸ்ரீவிபீஷணாழ்வான் தாஸ வ்ருத்தியைப் பண்ணுகிற திருவரங்கத்திலே திருப் பள்ளி கொண்டருளும் தேவரீர் உணர்ந்தருளி அடிமை கொண்டருள வேணும் –
———–
இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ
இறையவர் பதினொரும் விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அரு முகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—6 –
பதவுரை
மணி–விலக்ஷணமாய்
நெடு–பெரிதான
தேரோடும்–தேரோடுகூட
இரவியர்–பன்னிரண்டு ஆதித்யர்களும்
இறையவர்–ஜகத்துக்கு நிர்வாஹகர்களான
பதினொரு விடையரும்–ஏகாதச ருத்ரர்களும்
மருவிய–பொருந்திய
மயிலினன்–மயில் வாகனத்தை யுடைய
அறுமுகன்–ஸுப்ரஹ்மண்யனும்
மருதரும்–மருத் கணங்களான ஒன்பதின்மரும்
வசுக்களும்–அஷ்ட வஸுக்களும்
வந்து வந்து–ஒருவருக் கொருவர் முந்திக் கொண்டு வந்து
ஈண்டி–நெருங்கி நிற்க
இவர்களுடைய வாஹநமான
புரவியோடு தேரும்–குதிரைகண் பூண்ட ரதங்களும்
பாடலும் ஆடலும்–பாட்டும் கூத்துமாய்
குமர தண்டம் புகுந்து–தேவஸேநா ஸமூஹங்கள் வந்து புகுந்து
ஈண்டிய வெள்ளம்–நெருங்கி யிருக்கிற திரளானது
அரு வரை அனைய–பெரிய மலை போன்ற
கோயில்–கோயிலில்
நின் முன்–தேவரீர் திருக்கண்ணோக்கத்திலே (நிற்கின்றது;)
அரங்கத்தமா! பள்ளி யெழுந்தருளாயே
பராவரேசனான ஸ்வாமீ! தேவரீர்க்கு விண்ணப்பம்) அழகாய்ப் பெரியதான தேர்களை யுடைய துவாதச ஆதித்தியர்களும், ஜகத்துக்கு நிர்வாஹகரான ஏகாதச உருத்திரர்களும், எப்போதும் விட்டு இறங்காத மயில் வாஹநத்தை யுடைய சுப்பிரமணியனும், நாற்பத்தொன்பதின்மரான மருத் கணங்களும், அஷ்ட வசுக்களும் ஸபரிவாரமாய் ஒருவர்க் கொருவர் முற்கோலி வந்து நெருங்கி நிற்பதுமன்றி இவர்களுடைய வாஹநமான குதிரைகளும் இரதங்களும் மற்றும் பாட்டுகள் ஆட்டங்களுடனே தேவ ஸேநாபதியான சுப்பிரமணியனோடு வந்த நிபிடமான ஸேநா ஸமூஹமும், மாமேருவை யொத்திருந்துள்ள கோயிலில் தேவரீர் திருக் கண்ணோக்கத்துக்கு எதிரிலே, பிரதம கடாக்ஷம் பெறுகைக்காகத் திரண்டு வந்து நிற்கின்றது- ஆகையால் கோயிலின் கண் திருக் கண் வளர்ந்தருளும் தேவரீர் இவர்களைக் கடாக்ஷிப்பதற்காகத் திருப் பள்ளி யுணர்ந்தருள வேணும் –
——————–
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--7-
பதவுரை
எம்பெருமான்–எமக்கு ஸ்வாமியான
உன் கோயிலின் வாசல்–தேவரீருடைய திருக்கோயிலின் வாசலிலே
இந்திரன் தானும்–தேவேந்திரனும்
ஆனையும்-(அவனது வாஹனமான) ஐராவத யானையும்
வந்து-வந்திருப்பது மன்றி,
அந்தரத்து அமரர்கள்-அண்டத்துக்குள் இராநின்ற தேவர்களும்
கூட்டங்கள்–இவர்களுடைய பரிவாரங்களும்
அரு தவம் முனிவரும்-மஹா தபஸ்விகளான ஸநகாதி மஹர்ஷிகளும்
மருதரும்–மருத் கணங்களும்,
இயக்கரும்–யக்ஷர்களும்,
சுந்தரர் நெருக்க–கந்தர்வர் நெருக்கவும்
விச்சாதார் நூக்க–வித்யாதரர்கள் தள்ளவும்
திருவடி தொழுவான் மயங்கினர்–(தேவரீருடைய) திருவடிகளைத் தொழுவதற்காக வந்து மயங்கி நின்றனர்
அந்தரம்–ஆகாசமும்
பார்–பூமியும்
இடம் இல்லை–அவகாசமற்றிரா நின்றது;
அரங்கத்தமா! பள்ளியெழுந்தருளாய்-.
திருமறு மார்பனான ஸ்வாமீ, தேவரீர் திருவடிகளில் விண்ணப்பம்-எங்களுக்கு ஸ்வாமியான உமது திருக் கோயிலின் வாசலிலே தேவர்க் கதிபதியான இந்திரனும் அவனுடைய ஐராவதமென்ற யானையும் வந்திருப்பது மன்றி, ௮ண்டாந்தர் வர்த்திகளான தேவர்களும், இவர்களுடைய பரிவாரங்களும், ஒருவராலுஞ் செய்து முடிக்க வொண்ணாத ௮ருமையான தவத்தைப் புரிந்த ஸநகாதி மஹர்ஷிகளும், மருத் கணங்களும், சுந்தார்கள் நெருக்கவும், அவர்களுடனே யிச்சாதார்கள் தள்ளவும் யக்ஷர்களும், ஒன்றாகக் கூடி, தேவரீர் திருப் பள்ளி யுணரும் போதை ௮ழகு கண்டு திருவடி,தொழுது திருப் பல்லாண்டு பாடவேண்டும் என்ற குதூஹலத்தாலே ஒருவர்க்கொருவர் முற்கோலி வந்து இடி யுண்டு மோஹித்து, ஆகாசாவகாச மிடமடையும்படி. புகுந்து நிற்கிறார்கள், பார்த்தருளீர், ஆகையால் ஸர்வ ஸ்வாமியான தேவரீர் திருப் பள்ளி உணர்ந்தருளி இவர்களை யடிமை கொண்டருள வேணும்-
——————
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினான் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--8 –
பதவுரை
வழங்க-(தேவரீருக்கு ஸமர்ப்பிப்பதற்காக)
வம்பு அவிழ்–பரிமளம் மிகுந்த
வாயுறை–அறுகம் புல்லும்
மா–சிறந்த
நிதி–சங்க நிதி பத்ம நிதிகளும் (கையிலே யுடையாயக் கொண்டு)
வானவர்-தேவர்களும்
கபிலை–காமதேநுவும்
ஓண்–ஓளி பொருந்திய
கண்ணாடி முதலா–கண்ணாடி முதலாக,
எம்பெருமான்–ஸ்வாமியான தேவரீர்
காண்டற்கு–கண்டருளுகைக்கு
ஏற்பன ஆயின–தகுதியாயுள்ளவையான
படிமைக்கலம்–உபகரணங்களெல்லா வற்றையுங் கொண்டு
நல் முனிவர்–மஹர்ஷிகளும்
தும்புரு நாரதர்–தும்புரு நாதர்களும்
புகுந்தனர்–வந்து நின்றார்கள்
(இதுவுமின்றி,)
இரவியும்–சூரியனும்
துலங்கு ஒளி–(தனது) மிக்க தேஜஸ்ஸை
பரப்பி–எங்கும் பரவச் செய்து கொண்டு
தோன்றினன்–உதயமானான்;
இருள்–இருளானது
அம்பரதலத்தில் நின்று–ஆகாசத்தினின்றும்
போய் அகல்கின்றது–நீங்கிப் போயிற்று;
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.
வைமுக்யம் தொலைந்து –ஆபிமுக்யம்பிறந்து -அவனை -நோக்கி செல்வது
வாயுறை= அருகம் புல்- மா நிதி- சங்க பத்ம நிதி வந்து விஸ்வரூபம் -உபகரணங்கள் வந்து சேர்ந்தன –
வம்பு=-மணம் கபிலை=-காம தேனு -படி மெய்க்கலம்-சொல்லாத எல்லா உப கரணங்கள் எல்லாம் –
ஏற்ப்பன–தகுதியானவை – ஆகவே திருப் பள்ளி உணரலாம் என்றுமாம்
தோன்றினான் இரவியும்–நாலாவது தடவை இரவியொளி சொல்கிறார்-
அம்பர தலம்-ஆகாச பரப்பு–பிராத காலம் சந்நிகிதம் ஆனது –
தகுதி படைத்தன காண்டற்கு -ஏற்ப்பன வாயின -திருப் பள்ளி உணர்ந்து அருள -என்றுமாம்
ஸர்வ ரக்ஷகனான ஸ்வாமியே! தேவரீர் திருவாராதனத்துக்கு ௮நுரூபமான பிராதக் காலமானது ஸன்னிஹிதமாயிற்று-தேவரீர்க்கு ஸமர்ப்பிப்பதற்காக ஸத்ர்சமான, பரிமளமுள்ள அறுகம் புல்லும் ஸ்லாக்யமான சங்க நிதி பத்ம நிதிகளும், கையில் ஏந்திக் கொண்டும் ஸர்வ ஸ்வாமியான தேவரீர் கண்டருளுகைக்காக கபிலா சுரபிகஞம், ஒளி பொருந்திய திருக் கண்ணாடி. முதலாக மற்ற உபகரணங்களெல்லாவற்றையுங் கொண்டு, தேவர்களும் ௮நந்யப் பிர யோஜாரான ரிஷிகளும், மங்கள கீதம் பாடுகைக்குத் தும்புரு நாராதரகளும், அவசரப் பிரதீக்ஷகராய் வந்து நின்றார்கள்- இவர்களன்றியும், ஸஹஸ்ர கிரணனான சூரியனானவன் தன்னுடைய மிக்க தேஜஸ்ஸைப் பரப்பிக் கொண்டு தோன்றி விளங்குகிறான், ௮ந்தகாரமானது ஆகாசத்தினின்றும் விலகப் போயிற்று, ஆகையால் ௮ழகிய மணவாளனான தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தருளி அவற்றைக் கண்டருளி ஆஸ்ரிதரான எங்களுடைய ஆந்தரமான இருட்டைப் போக்கி யருள வேணும்
——–
ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–9-
பதவுரை
ஏதம் இல்–குற்றமற்ற
தண்ணுமை–சிறுபறையும்
எக்கம்–ஒற்றைத் தந்தியை யுடைய வாத்யமும்
மத்தளி–மத்தளமும்
யாழ்–வீணையும்
குழல்–புல்லாங்குழல்களுமாய்
திசை–திக்குக்களெங்கும்
முழவமோடு–இவற்றின் முழக்கத்தோடு
இசை கெழுமி கீதங்கள் பாடினர்–இசை மாட்டியப் பாட்டு பாடக் கடவரான
கின்னரர்-கின்னார்களும்
கருடர்–கருடர்களும்
கெந்தருவரும்–கந்தர்வர்களும்
இவர்–இதோ மற்றுள்ளவர்களும்
மா தவர்–மஹர்ஷிகளும்
வானவர்–தேவர்களும்
சாரணர்–சாரணர்களும்
இயக்கர்–யக்ஷர்களும்
சித்தரும்–ஸித்தர்களும்
திருவடி தொழுவான்–(தேவரீடைய) திருவடிகளில் வணங்குகைக்காக
கங்குலும் எல்லாம்–இரவெல்லாம்
மயங்கினர்–(நெருக்கத்தில் வருந்தி) மோஹமுற்றனர்;
ஆதலில்–ஆகையாலே
அவர்க்கு–அவர்களுக்கு
நாள் ஒலக்கம் அருள–பகலோலக்க மருளுகைக்காக
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.
————
என்தன் ஆருயிர் அனைய வெந்தாய் ! தேவரீர் திருவடிகளில் விண்ணப்பம் (தேவரீர் உணர்ந்து தருளும் போது மஙகள கானம் கேட்பதற்காக) குற்ற மற்ற சிறு பறையையும, ஒரு தந்தியை யுடைய வாக்யத்தையும், மத்தளமும் வீணையும், வேய்ங்குழல் புலலாங்குழல் முதலிய குழல்களையும் இவற்திலுண்டான நாதமானது திக்குகளெலலாம் நிறைந்து முழங்குமபடி இசையைக் கூட்டி மங்களமான கீதங்கள் பாடத் தந்த கிந்நர்களும், கருடர்களும், கந்தரவர்களும், இன்னும் மற்றுள்ளார்களும், ராத்திரி யெல்லாம் இடையறாது மாதவததைப் புரிகின்ற ரிஷிகளும், அனைத்துத் தேவர்களும், சாரணர்களும், யக்ஷர்களும், சித்தர்களும, இவர்கள் எல்லாரும் தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தரும் போதுள்ள தேவரீருடைய திருவடி வழகைக் கண்டு திருவடித் தொழ வேண்டுமென்று த்வரையாலே நெருங்கி நின்றார்கள்-ஆனதுபற்றி ஸர்வ ரக்ஷகனான தேவரீர் ௮டியேனுக்காகத் திருப் பள்ளி யுணர்ந்தருளி அழகோலக்கமாயிருந்து எல்லாரும் வாழும்படி கடாக்ஷித்து அடிமை கொண்டருள வேணும்
—————-
கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—–10-
பதவுரை
புனல் சூழ்–திருக் காவேரி தீர்த்தத்தாலே சூழப்பட்ட
அரங்கா–ஸ்ரீ ரங்கத்தில் கண் வளர்ந்தருளுமவனே!
கடி–பரிமளமுடைய
கமலம் மலர்கள்–தாமரைப் பூக்களானவை
மலர்ந்தன–(நன்றாக) மலர்ந்து விட்டன;
கதிரவன்-(தாமரையை மலர்த்தவல்ல) ஸூர்யனானவன்
கனை கடல்–கோஷஞ் செய்கையையே இயல்வாக வுடைய கடலிலே
முளைத்தனன்–உதய கிரிலே வந்து தோன்றினான்;
துடி இடையார்–உடுக்கை போன்ற (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய மாதர்
சுரி குழல்–(தமது) சுருண்ட மயிர் முடியை
பிழிந்து உதறி–(நீர்ப் பசையறப்) பிழிந்து உதறி விட்டு
துகில் உடுத்து–(தம் தம்)ஆடைகளை உடுத்துக் கொண்டு
ஏறினர்–கரையேறி விட்டார்கள்;
தொடை ஒத்த–ஒழுங்காகத் தொடுக்கப்பெற்ற
துளவமும்–திருத் துழாய் மாலையும்
கூடையும்–பூக் குடலையும்
பொலிந்து தோன்றிய–விளங்கா நிற்கப் பெற்ற
தோள்–தோளை யுடைய
தொண்டரடிப்பொடி யென்னும்–‘தொண்டரடிப் பொடி’ என்ற திருநாமமுடைய
அடியனை–தாஸனை
அளியன் என்று அருளி–‘கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்திரம்’ என்று திருவுள்ளம் பற்றி அங்கீகரித்தருளி
உன் அடியார்க்கு–தேவரீருடைய நித்ய கிங்கரர்களான பாகவதர்களுக்கு
ஆள் படுத்தாய்–ஆளாக்க வேணும்;
(அதற்காக)
பள்ளி எழுந்தருளாய்–திருப்பள்ளியை விட்டு எழுந்தருள வேணும்.
காவேரியாமல் சூழப்பட்ட கோயிலில் கண் வளர்ந்தருளும் மலர் மகள் மார்பா! தேவரீர்க்கு அடியேன் செய்யும் விண்ணப்பம்-திவ்ய பரிமளத்தை யுடைய தாமரைப் புஷ்பங்கள் அலர்ந்துவிட்டன. அம்மலர்க்குக் கேள்வனுன ஆதித்தியனும் ௮லை எறியும் சமு்திரத்தில் உதப கிரியின் மேலே வந்து தோன்றினான்-உடுக்கையைப் போன்ற இடையை யுடைய ஸ்த்ரீகள் நீராடி, தங்கள் சுருண்டமயிர் முடிகளைப் பழிந்து உதறி விட்டு தம் தம் வஸ்திரங்களைத் தரித்துக் கொண்டு கரையேறினார்கள், ஆதலால் விடியற் காலம் ஆயிற்று- தேவரீர் சாத்தி யருளுகைக்குத் தகுதியான திருத் துழாய் மாலையும் திருப் பபடலிகையுமாய்த் தோன்றின தோளை யுடையனாய் தொண்டரடிப்பொடி யென்னும் பேரை யுடைய அடியேன் எளியன் என்று கிருபை செய்து தேவரீருடைய தொண்டர்க்குத் தொண்டனாவக்குவதற்காக, உணர்ந்தருளி கிருபை செய்து அருள வேணும்-
———————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply