திருநக்ஷத்ரம் : பங்குனி ஹஸ்தம்
அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம்
ஆசார்யன் : கூரத்தாழ்வான்
பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கே மீநஹஸ்தே ச ஜாதம் ரங்கார்யநந்தநம்
ராமாநுஜபதாஸ்கந்தம் ரங்கநாதகுரும் பஜே-தனியன்:
பூர்வத்தில் பெரிய கோயில் நம்பி என்ற திருநாமம் பூண்டிருந்த திருவரங்கத்து அமுதனார் கோயில் காப்பாளராகவும் புரோஹிதராயும் இருந்தார். பௌரோஹித்யமாவது கோயிலில் பஞ்சாங்கம், புராணம் வாசிப்பது வேத விண்ணப்பம் செய்வது முதலியன. முதலில் இவர் எம்பெருமானாரின் கோயில் சீர் திருத்த முயற்சிகளை ஆதரிக்கவில்லை. ஆனால் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையால் மனம் மாறி, அவர் அருளுக்குப் பாத்ரபூதரானார்.
பெரிய பெருமாள் எம்பெருமானாருக்கு உடையவர் எனும் திருநாமம் சூட்டி, சந்நிதி க்ரமங்களைச் சீர்படுத்தத் திருவுள்ளமானபோது, பெரிய கோயில் நம்பி எம்பெருமானார் பக்கல் சற்று உதாசீனராய் இருக்கவே, ஸ்வாமி திகைப்பூண்டு என் செய்வோம் என்று கவலை கொண்டிருந்தார். அவரை அப்பதவியிலிருந்து விலக்குவதே சரியான உபாயம் என ஸ்வாமி திருவுள்ளம் பற்றியபோது ஒருநாள் புறப்பாட்டின் போது பெருமாள் ஸ்வாமிக்குப் பெரிய கோயில் நம்பி தமது நெடுநாள் அந்தரங்கக் கைங்கர்யபரர் என உணர்த்தினார்.
எம்பெருமானார் கோயில் நம்பி பால் தமக்குள்ள வருத்தம் நீங்கி, ஆழ்வானைக் கொண்டு அவரைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளமாகி நம்பியே சீர்திருத்தங்களை ஆதரிக்குமாறு செய்தார், ஆழ்வானின் உபதேசங்களால் மனம் மாறிய நம்பி, எம்பெருமானாரிடம் சிஷ்யராக விரும்பினார். ஆழ்வானால் அவர் திருத்தப்பட்டதால், எம்பெருமானார் அவரை ஆழ்வானுடைய சிஷ்யராகவே ஆக்கினார். அவர் ஆழ்வானின் சிஷ்யரானபின் அவரது அபார கவிதா சாமர்த்யத்தைப் பற்று ஸ்வாமி தாமே அவர்க்கு அமுதனார் என்னும் திருநாமம் சாற்றினார், இதன்பின் அமுதனார் ஆழ்வானிடமும் எம்பெருமானாரிடமும் அளவிறந்த பக்தி பூண்டொழுகலானார்.
அமுதனார் பெரிய கோயில் நிர்வாகத்தை எம்பெருமானாருக்கு ஸமர்ப்பித்தல்
அமுதனாரின் தாயார் பரமபதித்தபோது, அவரது சரம கைங்கர்யங்களில் ஒரு பகுதியாகப் பதினோராம் நாள் செய்யப்படும் ஏகாஹத்தில் பங்குகொள்ள ஒரு ஸ்ரீ வைஷ்ணவரைத் தேடினர் , அந்நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர் இறந்தவரின் பிரேதமாகக் கருதப் படுவார். மேலும் ஓராண்டு காலம் அவர கோயில் கைங்கர்யம் எதுவும் செய்ய முடியாது, எம்பெருமானார் நியமனப் படி ஆழ்வான் அந்த ஏகாஹத்தில் அமர்ந்தார். அந்த ஸ்தானத்தில் அமர்பவர் த்ருபதோஸ்மி (த்ருப்தி அடைந்தேன்) என்று சொன்னாலே ச்ரார்த்தம் சம்பூர்ணமாகும் என்ற நியமமிருப்பதால், எம்பெருமானாரின் திருவாணைக்குப் பெரியகோயிலை உட்பட்டதாக்க வேணும் என்ற ஆர்ப்பத்தோடு, ஆழ்வான் நம்பியிடம் கோயில் திறவு கோல் கொண்டு சொல்வேன் என்று கூறி, கோயில் கதவுச் சாவியைப் பெற்று நேரே எம்பெருமானார் மடம் சென்று தொழுது “தேவர் நியமித்த படி ச்ராத்த கார்யம் ஆயிற்று, சாவிகள் இதோ சமர்ப்பித்தேன் இனி கோயில் கார்யங்கள் ஸ்வாமி திருவுளப்படி” என்றார். எம்பெருமானாரும், பெருமாள் திருவாக்கை நினைந்து, கோயிலில் பௌரோஹித்யம் புராண படநங்கள் ஆழ்வான் வம்சத்தார்க்கும், திவ்ய ப்ரபந்த சேவைகளை அரையர்க்கும் ஆக்கி, இயற்பாவை அமுதனார் வம்சத்தார்க்காக்கி, அவை இன்றளவும் அவ்வாறே நடக்கிறது,
இராமானுச நூற்றந்தாதி தோற்றமும் பெருமைகளும்
இதன்பின் அமுதனார் எம்பெருமானார் விஷயமாக இராமாநுச நூற்றந்தாதி எனும் 108 பாசுரங்களை இயற்றி நம்பெருமாளுக்கும் எம்பெருமானார்க்கும் சமர்ப்பிக்க, அதை உகந்த நம்பெருமாள் அன்றைய புறப்பாட்டில் எம்பெருமானாரை வாராமல் தடுத்து, அந்தாதியை சேவிக்கச் சொல்லிக் கேட்டுகந்து,அதன்பின் அதை வழக்கமாக்கி சேவிக்க நியமிக்கவும், எம்பெருமான் திருவுளமறிந்த ஸ்வாமியும், நம்மாழ்வார் விஷயமான கண்ணிநுண் சிறுத்தாம்பு பூர்வர்களால் முதலாயிரத்தில் சேர்க்கப்பட்டது போல, அதை இயற்பாவில் சேர்த்து எப்போதும் சேவிக்க நியமித்தார், இதுவே ப்ரபந்ந காயத்ரி என ப்ரஸித்தி பெற்றது. யஜ்யோபவீதம் பெற்றோர் தினமும் காயத்ரி அநுஸந்தித்தல்போல் ஸமாச்ரயணமானோர், ஸ்ரீவைஷ்ணவர், ப்ரபன்னர் எனப்படுவோர் இதை ஒரு முறையாகிலும் தினமும் அநுஸந்திக்கவேணும்,
இதில் இராமானுசர் திருநாமம் ஒவ்வொரு பாசுரத்திலும் வருவதால் இப்பெயர் பெற்றது, ஆசார்ய அபிமான நிஷ்டர் அறிய வேண்டும் அர்த்தங்கள் யாவும் இதிலுள்ளதால், ஆசார்யன் (எம்பெருமானார்) சம்பந்தமடியாக எம்பெருமான் சம்பந்தம் நமக்குண்டு என்றும் எம்பெருமானார் திருவடித் தாமரைகளே நமக்கு உத்தாரகம் என்பதை இப்ரபந்தம் உறுதிப்படுத்துகிறது.
பேறொன்று மற்றில்லை எனும் 45ம் பாசுரத்தையும், நின்றவண் கீர்த்தி எனும் 76ம் பாசுரத்தையும் வைத்து ஆசார்யர்களில் தலைவரான நடாதூரம்மாள் எம்பெருமானாரே ப்ராப்ய ப்ராபகங்கள் என்று அறுதியிட்டார், பெரியவாச்சான் பிள்ளை குமாரர் நாயனாராச்சான் பிள்ளை தம் சரமோபாய நிர்ணயத்தில் (http://ponnadi.blogspot.in/p/charamopaya-nirnayam.html) ஸ்வாமியின் வைபவங்களை விளக்க இப்ரபந்தத்தைப் பரக்க உதாஹரிக்கிறார்,
மாமுனிகள் இதற்கு ரத்தினச் சுருக்கமான ஒரு திவ்ய வ்யாக்யானம் அருளியுள்ளார். அதன் தொடக்கத்தில் அமுதனார் மற்றும் நூற்றந்தாதியின் பெருமைகளை மிக அழகாக விளக்கியுள்ளார்:
ஆசார்யனையே சார்ந்திருக்கும் சரம பர்வ நிஷ்டையே திருமந்திரம், மற்றும் அனைத்துப் பாசுரங்களின் உட்பொருள். நம்மாழ்வார் விஷயமான தம் பிரபந்தத்திலும் தம் அனுஷ்டானத்திலும் மதுரகவி ஆழ்வார் இதைக் காட்டினார், அமுதனாரும் மதுரகவி ஆழ்வார் போன்றே எம்பெருமானாரிடத்துத் தம் ப்ரதிபத்தியை வெளியிடுகிறார், ஆசார்ய நிஷ்டர்கள் தம் நிஷ்டையால் எம்பெருமானையே அடிக்கிறார்கள். இவர் எம்பெருமனாரின் நிர்ஹேதுக க்ருபையினாலும் ஆழ்வானின் கருணைமிக்க விடா முயார்சியாலும் திருத்தப்பட்டவர். எப்படி மதுரகவி ஆழ்வார் 11 பாசுரங்கள் மூலமாக தன்னுடைய ஆசார்ய நிஷ்டையை எல்லோருடைய நன்மைக்காகவும் வெளியிட்டாற்போலே, இவரும் 108 பாசுரங்கள் மூலமாக அனைவரும் ஆசார்ய நிஷ்டையைப் பற்றி அறிந்து கொண்டு அனுஷ்டிப்பதற்காக வெளியிட்டார். உபவீததாரிகளுக்கு காயத்ரிபோலே ப்ரபன்னர்களுக்கு இது என்று மாமுனிகள் திருவுள்ளம், ஆகையால் இது ப்ரபன்ன ஸாவித்ரி என்று அழைக்கப் படுகிறது,
அமுதனார் நிபுணத்வம்
அமுதனார் தென்கலையும் (தமிழ்) வடநெறியும் (ஸம்ஸ்க்ருதம்) திகழ்ந்த நாவர், அவரது அளவற்ற பாண்டித்யத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு:
திருவிருத்தம் 72ம் பாசுரத்தில் ஆழ்வார் நிலையை நம்பிள்ளை அப்பாசுரத்துக்கான தம் உரையில் விளக்குகிறார், பராங்குச நாயகி இரவில் எம்பெருமானின் பிரிவை உணர்கிறாள். நிலவில் விரகம் அதிகம், அப்போது குளிர் தென்றல் மேலும் கொடிது. இந்நிலையில் சிறு பிறை நிலா வரினும் இருள் விலகும். சேர்த்தியில் நிலவு இனிது, பிரிவில் பிறை நிலவும் கொடிது. இதை விளக்க அமுதனார் தரும் உதாரணம் சுவையானது. காட்டு வழியில் தனியே இரவில் சென்று கொண்டிருந்த ஒரு மெலிந்த பிராமணனை ஒரு கொடிய விலங்கு துரத்த, அவன் ஓடி ஒரு மரம் ஏறித் தன்னைக் காத்து கொண்டான். அப்பொழுது அவ்விலங்கை ஒரு புலி அடித்து உண்கிறது, பிராமணன் நிம்மதி அடையும் போது புலி மேலே மரத்தை நிமிர்ந்து பார்க்க அவன் அச்சம் பன்மடங்காகிறது போல், பிறை நிலவில் பராங்குச நாயகி பிரிவுத் துயர் இருளில் இருந்ததை விட மிகுந்து விட்டதாம்.
பட்டரும் அமுதனாரும்
பட்டர் தாம் ஞான வைராக்கியங்கள் மிக்க ஆழ்வான் குமாரர் என்பதில் செருக்குள்ளவர், இதை அவரே ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் வெளியிடுகிறார். அமுதனாரும் நூற்றந்தாதியுயில் “மொழியைக் கடக்கும்” பாசுரத்தில் ஆழ்வான் பெருமையைப் பரக்கத் பேசி ஸத்தை பெற்றார். ஒருக்கால் அமுதனார் வேறொரு ஸ்ரீவைஷ்ணவர் மூலம் பட்டருக்கு, “நீர் ஆழ்வானோடு தேஹ சம்பந்தமுள்ளவர், அடியேனுக்கு அவரோடு ஆத்ம சம்பந்தமுண்டு காணும்” என்று தெரிவிக்க, பட்டர், “அந்தப் பெருமையை நீரே சொல்லலாகாது” என்கிறார். நம் பூர்வாசார்யர்கள் இவ்விஷயங்களை பெரிது படுத்தார், அமுதனார் ஆழ்வான் பக்தியிலேயே ஊன்றி இருந்தார். நம் பூர்வர்கள் மிகவும் அரிய சமயங்களில் சில மனவேற்றுமைகள் கொண்டிருந்தாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் பெருந்தன்மையுடன் வாழ்ந்து காட்டியது நாம் உணர்ந்து கைக்கொள்ளத்தக்கது.
ஆர்த்தி ப்ரபந்தத்தில் மாமுனிகள் 40ம் பாசுரசத்தில் நாம் ஆசார்ய பக்தியில் இடையறாதிருந்து எம்பெருமானாரிடம் சரணடைந்து, இராமானுசரடியார்களுடன் பொழுது போக்கி, இராமானுச நூற்றந்தாதியை அநுஸந்தித்து சம்சாரக் கடலைத் தாண்டலாம் என்கிறார்.
இப்படி, நாமும் அமுதனாரின் மேன்மைமிகு சரித்திரத்தில் ஒரு சில துளிகளை அநுபவித்தோம். இவர் பாகவத நிஷ்டையில் நிலை நின்று, எம்பெருமானார் மற்றும் ஆழ்வானின் அபிமானத்தைப் பெற்றவர். நாமும் இப்படிப்பட்ட பாகவத நிஷ்டையை அடைய இவர் திருவடிகளில் ப்ரார்த்திப்போம்.
கோயிலின் நடைமுறைகளில் பழகியிருந்த பெரிய கோயில் நம்பி என்பவர் தடையாக இருப்பதாகப் பலர் ராமானுஜரிடம் சொன்னார்கள். அவரைக் கோயில் நிர்வாகத்திலிருந்து வெளியேற்றாவிட்டால், ராமானுஜரின் எண்ணம் நடக்காது என்றனர். எம்பெருமானாரும், கோயிலை நிர்வாகம் செய்து வந்த கோவில் பிள்ளையை வெளியேற்ற நினைத்தார்.
ராமானுஜர் ஒரு நாள் பெருமாள் புறப்பாட்டிற்காகக் காத்திருக்கும் போது, சற்று கண் அயர்ந்தார். அரைத்தூக்கத்தில், பெருமாள் தோன்றி “கோயில் நம்பி என்னையே நம்பி என்னுடன் இருக்கிறார். அவரை வெளியேற்றாதே’ என்று சொல்லி மறைந்தார். கூரத்தாழ்வானிடம் இதுபற்றி சொன்னார் ராமானுஜர். கூரத்தாழ்வானும், பெரிய கோயில் நம்பியிடம் உடையவரின் பெருமை பண்புகளைச் சொல்லவும், கோயில் நம்பிக்கு உடையவராகிய ராமானுஜர் மீது பிடிப்பு வந்து அதுவே பக்தியாக மாறியது.
ஒருநாள், ராமானுஜர் அவரது இலக்கிய அறிவைப் பாராட்டி”அமுதன்’ என்ற திருநாமத்தைச் சூட்டினார். அதனால் திருவரங்கத்தமுதனார் என்ற பெயர் நிலைத்தது. ராமானுஜர் மீது கொண்ட பற்றால் கூரத்தாழ்வானின் அறிவுரையின்படி “ராமானுஜ நூற்றந்தாதி‘யை அமுதனார் அருளினார்.
எல்லாப் பாசுரத்திலும் இராமானுசர் என்ற திருப்பெயர் வருவதால், இதைப் பாராயணம் செய்தாலே மாபெரும் புண்ணியம் கிட்டும்.
பெருமாள் உலாவில் உடன் செல்லும் பழக்கம் உடையவராகிய ராமானுஜருக்கு உண்டு. சித்திரை மாதம் 11
ஆம் திருநாளில், ராமானுஜர் கனவில் பெருமாள் தோன்றி, இன்று தாள வாத்தியங்கள் வேண்டாம் என்று சொல்லி மறைந்தார். அன்று பெருமாள் புறப்பாட்டின் போது தீப்பந்தங்கள் மட்டும் இருந்தன; ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவித்ததைப் பெருமாள் கேட்டுக்கொண்டு மகிழ்வுடன் சென்றார். ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்கும் போது கோஷ்டிக்கு வெகு அருகில் பெருமாள் தன்னையும் ஒருவராக ஆக்கிக் கொள்கிறார் என்பது நம்பிக்கை. இன்றும் திருவரங்கம் கோயில் ரங்கநாதர் சந்நிதியில் இயற்பா சாற்றி முடித்த பின், அதனுடன் ராமானுஜ நூற்றந்தாதியும் சேவிக்கிறார்கள்.
திருவரங்கத்தமுதனார் ராமானுஜரைக் காட்டிலும் மூத்தவர் என்ற கருத்தும், 108 ஆண்டு காலம் வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது. திருவரங்கத்தில் மட்டும் ஸ்ரீ சுதர்சனர் சந்நிதியில் இந்த ராமானுஜதாசராகிய திருவரங்கத்து அமுதனார், சிலை உருவில் இருக்கிறார்.
அமுதனாரிடமிருந்து நிர்வாகம் கைமாறிய பின், அவர் கோயில் கைங்கர்யங்களில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டது. இவர் செய்து வந்த புராண வாசித்தல் மற்றும் வேறு பணிகளை கூரத்தாழ்வான் செய்து வந்தார். அதனால் அமுதனார் கோயில் பணிகளில் அதிக ஈடுபாடுகொள்ளாமல் இருந்ததை பார்த்த ராமானுஜர் வருத்தப்பட்டு, இவருக்கு ஏதாவது பொறுப்பு தர வேண்டும் என்று எண்ணினார்.
நாதமுனிகள் காலம் தொடங்கி நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஸ்ரீரங்கத்தில் அரையர்கள் இசையோடு சேவித்து வந்தார்கள். சேவித்த பின், அரையர்களுக்கு பெருமாள் பிரசாதங்கள் மற்றும் மரியாதையையும் அவர்களுக்குக் கொடுத்து, பிறகு அவர்களைப் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு வீதி உலா வந்து. அவர்கள் வீட்டில் விட்டு விட்டு வருவதற்குப் பெயர் பிரம்மரத மரியாதை.
‘பிள்ளை திருவரங்கப்பெருமாள் அரையரிடம்’ ராமானுஜர் இயற்பா சேவிப்பதை மட்டும் பிக்ஷையாகப் பெற்று அமுதனாரை பெரிய பெருமாள் சன்னதியில் இயற்பாவைச் சேவிக்க நியமித்தார். அப்படி சேவிக்கும் நாட்களில் அமுதனாருக்கும் அதே போன்ற பிரம்மரத மரியாதையை ஏற்படுத்தி வைக்கப்பட்டது. அமுதனார் தனக்கு ஸ்ரீகோசத்தை( புத்தகம்) பார்க்காமல் சேவிக்க வராது என்று ராமானுஜரிடம் சொல்ல, அமுதனாருக்கு புத்தகத்தைப் பார்த்துச் சேவிப்பதற்கு விசேஷமாக அனுமதி வழங்கினார். இன்றும் புத்தகத்தை பார்த்து இயற்பா சேவிக்கும் முறை இருப்பதற்கு இதுதான் காரணம்.
அமுதனார் சன்னதி – ஸ்ரீரங்கம் கோயில்
அமுதனார் ராமானுஜர் மீது கொண்ட பற்றின் காரணமாக ராமானுஜரை போற்றும் விதமாக சில பிரபந்தங்களை செய்து அவற்றை எம்பெருமானார் முன் வைக்க, அதை படித்துப் பார்த்த ராமானுஜர் தன்னைப் பற்றி அதிகமாக புகழ்ந்து இருப்பது தனக்கு உவப்பானதாக இல்லை என்று கிழித்துப் போட்டுவிட்டார். பிறகு கூரத்தாழ்வான் அறிவுரைப்படி ஆழ்வார்களிடத்திலும் திவ்யதேசங்களிடத்திலும் ராமானுஜர் கொண்ட பற்றைத் தெளிவுபடுத்தி, ராமானுஜ நூற்றந்தாதியை அமுதனார்பாடி, அதை ராமானுஜர் முன் வைத்தார். இதை ப்ரபந்ந காயத்திரி என்றும் சொல்லுவர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, சித்திரை மாதம் 11ம் திருநாளில் ராமானுஜர் கனவில் பெருமாள் தோன்றி ”இன்று என்னுடன் கூட வர வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, அன்று பெருமாள் வீதி புறப்பாட்டின் போது வாத்தியங்களை நிறுத்தச் சொல்லிவிட்டு, வெறும் தீப்பந்தங்கள் மட்டும் இருக்க, இயற்பாவுடன் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்க, அதை பெருமாள் கேட்டுக்கொண்டு சென்றார். இந்த காரணத்தினால் இன்றும் இந்த வழக்கம் அங்கு இருக்கிறது. அதே போல் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்கும் போது கோஷ்டிக்கு வெகு அருகில் பெருமாள் எழுந்தருள்வார். அதற்குக் காரணம், இயல் கோஷ்டியில் தன்னையும் ஒரு அங்கத்தினராக ஆக்கிக்கொள்கிறார் என்பது. அதே போல் வாத்தியங்கள் இசைக்கப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்க அதை நம்பெருமாள் செவிசாய்க்கும் வைபவத்திற்காக.
இன்றும் பெரிய சன்னதியில்(ரங்கநாதர் சன்னதியில்) இயற்பா சேவித்த பின், அதனுடன் நூற்றந்தாதியும் சேவிக்கப்படுகிறது. அதே வழக்கம் நாச்சியார் கோயிலிலும், ஆண்டாள், ஆழ்வார் சன்னதிகளில் பின்பற்றப்படுகிறது.
திருவரங்கத்தமுதனார் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்ற குறிப்பு இல்லை. ஆனால் அவர் ராமானுஜரைக் காட்டிலும் அதிக வயதானவர் என்பதும், அவர் 105(108 என்றும் சொல்லுகிறார்கள்) ஆண்டு காலம் வாழ்ந்தார் என்பதும் தெரிகிறது.. முதலாயிரத்தில் ’கண்ணிநுண் சிறுத்தாம்பை’ப் போல,இயற்பாவோடு ராமானுஜ நூற்றந்தாதியை நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தில் சேர்த்துள்ளார்கள். ராமானுஜ நூற்றந்தாதியின் 108 பாட்டுக்களைச் சேர்த்தால் தான் நாலாயிர திவ்வியப் பிரபந்ததின் பாட்டுகள் எண்ணிக்கை மொத்தம் 4000 வரும் என்பது இன்னொரு ஆச்சரியம்.
கிபி 1965க்குப் பிறகு அமுதனார் வம்சத்தவர்கள் கோயில் கைங்கர்யங்களில் ஈடுபடுவதில்லை. திருவரங்கத்தமுதனார் வம்சத்தவர்கள் இன்று அமெரிக்காவிற்கும் வேறு இடங்களுக்கும் குடிபெயர்ந்து போய் விட்டதால், இயற்பா சேவிப்பதை அரையர்களே மீண்டும் செய்து வருகிறார்கள். ஆனால் திருவரங்கத்தமுதனாருக்கு ஏற்படுத்தப்பட்ட பிரம்மரத மரியாதையை அரையர்கள் பெற்றுக் கொள்வதில்லை.
திருவரங்கத்து அமுதனார் வாழ்ந்த திருமாளிகை (வீடு ) எங்கே என்று கண்டுபிடிக்க போன மாதம் ஸ்ரீரங்கம் சென்றிருந்தேன். சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஒருவரை விசாரித்ததில் ஸ்ரீரங்கத்தில் கிடையாது என்று அடித்து சொன்னார். பிறகு கோயிலுக்கு வெளியே வந்து சிலரிடம் விசாரித்ததில் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் நான் விசாரித்தவர்கள் தினமும் கோயிலிலும் வீட்டிலும் ராமானுஜ நூற்றந்தாதியை சேவிப்பவர்கள். தொடந்து விசாரித்ததில் வடக்கு உத்திரவீதியில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கே சென்றேன். அங்கு ஒரு வீட்டு வாசலில் தென்கலை நாமம் போட்டுக்கொண்டு பூட்டிய வீட்டு திண்ணையில் உட்கார்ந்துக்கொண்டு இருந்த ஒருவரிடம் “திருவரங்கத்தமுதனார் வீடு இங்கே எங்கே இருக்கு?” என்றுகேட்டேன்.
அவர் காதில் என்ன விழுந்ததோ
“திருவரங்கத்துக் கொத்தனாரா ? ” என்றார்.
“இல்ல மாமா, திருவரங்கத்தமுதனார்…ராமானுஜ நூற்றந்தாதி எழுதியவர். அவர் வீடு இங்கே தான் எங்கோ இருக்குன்னு..சொல்றா.” என்றேன் தயங்கியபடி.
“தெரியலை, அவ வீட்டைப் பூட்டிண்டு எங்கோயோ போய்ட்டா, அவ வர்ற்த்துக்கு நான் காத்துண்டு இருக்கேன்…” என்று செல்போனை பார்த்துக்கொண்டு தன் கதையை சொல்ல ஆரம்பித்தார்.
நான் இவரிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த எதிர்த்த வீட்டு பெண்மணி என்னிடம் தயங்கியபடி வந்தார்.
“என்ன சாமி, யாரை தேடறீங்க?” என்றாள்.
“நாமம் போட்டவருக்கே தெரியலை, இந்த அம்மாவிற்கு.. ஹும்..நோ சான்ஸ்” என்று மனதில் நினைத்துக்கொண்டு “அமுதனார் வீடு” என்று சொல்லிக் கொண்டே, பைக்கை ஸ்டார்ட் செய்த போது “அமுதனார் வீடுங்களா ? அதோ அந்த வீடு தான்” என்றாள்.
“நீங்க எந்த அமுதனாரை சொல்றீங்க .. இவர்.. ” என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க “சக்கரத்தாழ்வார் சன்னதியில் இருக்கும் அமுதனாரை தானே சொல்றீங்க, அதோ உட்கார்ந்துக்கொண்டு இருக்கிறாரே பெரியவர். அந்த வீடு தான் அமுதனார் வீடு” என்றார் அந்தப் பெண்மணி.
“அப்ப அந்த பெரியவர் யார் ?”
“அவர் அந்த வீட்டில் வாடகைக்கு இருக்கார். அமுதனார் வாழ்ந்த வீடு ரொம்ப வருஷம் முன்பே கைமாறிவிட்டது..”
எனக்கு நிறைய விஷயம் புரிந்தது. மானசீகமாக அந்த பெண்மணியை சேவித்துவிட்டு கிளம்பினேன்.
அமுதனாரை பற்றி எழுதும்படி அப்பா சொன்னதற்கு காரணம் இது தானோ என்று யோசித்தவாறு கிளம்பினேன். கொஞ்சம் தூரம் சென்று, அமுதனார் வீட்டை திரும்பிப் பார்த்தேன். மனைவி வந்து பூட்டைத் திறப்பதற்காக, அமுதனார் வீட்டு திண்ணையில் கையில் செல்போனுடன் காத்துக்கொண்டிருந்தார் அவர்.
சாமாறும் கெடுமாறும் தமர்உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்துஅலற்றும் இவைஎன்ன உலகியற்கை?
ஆமாறுஒன்று அறியேன்நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.–4-9-2-
தமர் உற்றார் – சரீர சம்பந்தம் காரணமாக வந்தவர்களாய்த் ‘தாயத்தார்’ என்றும், ‘சம்பந்திகள்’ என்றும் சிலரை உறவாக நினைத்துப் பாரம் அற்றவர்களாய் இருப்பார்கள் ஆயிற்று; இஃது ஒழியவே, வேறே ‘தமர்கள் தமர்கள் தமர்கள்’ என்று ஓர் உறவு முறை உண்டாயிற்று இவர்க்கு-இவர் கேசவன் தமர் மாதவன் தமர் என்றே கொள்ளுவார் ஏமாறிக் கிடந்து அலற்றும் – ஏ’ என்று ஏக்கமாய், மாறுகை – தவிருகையாய், ‘ஏங்காதே கூப்பிட்டு’ என்னுதல்.-அன்றிக்கே, ‘ஏமாற்றம்’ என்பதே ஒரு சொல்லாய், அதாவது, துக்கமாய், ‘துக்கித்துக் கிடந்து கூப்பிட்டு’ என்னுதல்.-ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்’ என்னக் கடவதன்றோ? அன்றிக்கே, ‘ஏ’ என்பது தெளிவு; ‘மாறுகைஏமாறிக் கிடந்து அலற்றும் –
ஏ’ என்று ஏக்கமாய், மாறுகை – தவிருகையாய், ‘ஏங்காதே கூப்பிட்டு’ என்னுதல்.
அன்றிக்கே, ‘ஏமாற்றம்’ என்பதே ஒரு சொல்லாய், அதாவது, துக்கமாய், ‘துக்கித்துக் கிடந்து கூப்பிட்டு’ என்னுதல்.
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்’ என்னக் கடவதன்றோ? அன்றிக்கே, ‘ஏ’ என்பது தெளிவு; ‘மாறுகை’ என்பது அழிகை;
அதாவது, ‘தெளிவு அழிகை’ என்று பிள்ளை அமுதனார் பணிப்பர்.பிள்ளை அமுதனார் பணிப்பர்.
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம்மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.–5-1-7-
நித்திய சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் இருந்தேன் யான்.-பிள்ளையமுதனார், ‘அம்மான் ஆழிப்பிரான்’ என்று மேலே காட்டி, ‘யான் ஆர்’ என்று குறையச் சொல்லிக் காட்டுவர்.
போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.–6-1-6-
பிள்ளை யமுதனார், திரு விருத்த வரை மார்வனை,-‘புன்னை மேல் என்னும் இப் பதங்கட்குப் பட்டர் அருளிச் செய்தது என்?’ என்ன,-‘தன் துன்ப ஒலி அவற்றின் செவியிலே படும் படி உயரச் சொல்லுகிறாள் என்று அருளிச் செய்தார்’ என்ன,
“வானார் வண் கமுகு”,
“சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல்” என்றபடியே, அங்குள்ள புன்னைகளும் உயர்ந்து ஓங்கி இருக்கும் என்கிறபடி. ‘நெய்தல் நிலத்திலே புன்னை படர்ந்தன்றோ கிடப்பது, இங்ஙனே சொல்லக் கூடுமோ?’ என்ன,
அவன் பட்டர் பாடே வந்து, ‘இங்ஙனே பணித்தார்’ என்ன,
‘இவ் வர்த்தத்துக்கு நிர்ணாயகம், இசையாயிற்று; -உச்ச ஸ்வரம் – அது, ‘போற்றி’ என்று, உயரச் சொல்லி யிருக்குமோ? தாழச் சொல்லி இருக்குமோ’ என்று அருளிச் செய்தார்.
பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-
உங்கள் நீர்மை அறியாதே, என் செல்லாமையாலே ‘அதனைக் கொள், இதனைக் கொள், என்று நலிந்தேன் அன்றோ!
உங்கள் தரத்துக்கு அது ஓர் அறுகும் தாளிப் பூவும் அன்றோ’ என்பராம் பிள்ளை யமுதனார்.
உங்களுக்கு நான் சில செய்தேனோ! வெறும் உங்கள் நீர்மையாலே செய்தது அன்றோ.
பாண்டவர்களுக்குத் தூது போன கிருஷ்ணன் படியும்,
ஆளவந்தார்க்குப் பச்சை இட்ட மணக்கால் நம்பி படியும் போலே இருந்ததே உங்கள்படி!
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply